ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 16
கலையின் புனிதம்
உதயசங்கர்
கலை புனிதமானது. அதன் பவித்ரம் கெட்டு விடக்கூடாது.
கலையை எல்லோராலும் கற்றுக்கொள்ளவோ, படைக்கவோ முடியாது.
அதற்கென தனித்த கலைஞானம் வேண்டும். கலைத்தாயின்
அருள் வேண்டும். சரஸ்வதியின் வரம் வேண்டும்… இத்யாதி இத்யாதி.. வியாக்கியானங்களை இப்போதும் பொதுவெளியில்
கேட்கலாம். குறிப்பாகத் திரைக்கலைஞர்களை, புனிதமானவர்களாகவும் தங்களைக் காக்கவந்த ரட்சகர்களாகவும் கருதி பக்திமயமாக
வழிபடுவதும், போற்றுவதும், ஏன் ஆட்சி அதிகாரத்தில்
அமரவைப்பதும் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில்
கலை புனிதமானது தானா? புனிதம் என்ற வார்த்தைக்குப் பின்னாலுள்ள
சமூக அமைப்பென்ன? புனிதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிற வர்க்கம்
எது? புனிதம் என்ற வார்த்தைக்கு எதிர்ச்சொல் என்ன? கலையை மட்டுமல்ல, அறிவுத்துறைகளனைத்தையுமே புனிதமானது,
என்று சொல்வதற்குப் பின்னாலுள்ள
நோக்கமென்ன? என்று ஆராய்ந்து பார்த்தால் ஆளும்வர்க்கத்தின் சூழ்ச்சிகளைப்
புரிந்து கொள்ள முடியும்.
புனிதம் என்ற சொல் புனிதமற்றது அல்லது தீட்டானது
அல்லது கீழானது அல்லது தாழ்ந்தது என்ற சொல்லையும் மறைத்து வைத்திருக்கிறது. இந்தச் சொல்லின் பிறப்பிடம் நிலவுடமைச் சமூகமென்பதையும் புரிந்து
கொண்டால் இதனைப் பயன்படுத்துவதின் நோக்கத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
முதல் காரணம், நிலவுடமைச் சமூகம் கல்வி, கலை உட்பட அனைத்து அறிவுத்துறைகளுமே
வெகுமக்களிடமிருந்து வெகு தொலைவிலிருந்த து. அவற்றைக் கற்றுக்
கொள்வதற்கான அனுமதியில்லையென்பது மட்டுமல்லாமல் அப்படி மீறி யாரேனும் கற்றுக் கொண்டால்
காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது, நாக்கை அறுத்துவிடுவது,
கட்டைவிரலை வெட்டுவது ( ஏகலைவன் ) தலையை வெட்டுவது ( சம்பூகன் ) போன்ற
தண்டனைகளும் நடைமுறையில் இருந்தன. அதனால் வெகுமக்களுக்கு அறிவுத்துறைகளும்
கலைகளும் புனிதமானவையாகிவிட்டன. நிலவுடமை அரசின் உற்பத்தி உறவின்
தன்மைக்கேற்ப அன்றைய அரசுகளும் இவற்றை ஆதரித்தன.
இரண்டாவது காரணம் பிறப்பினடிப்படையில் தொழில்
என்ற வர்ணாசிரமச்சட்டம் சமூகத்தில் அமுலில் இருந்த காலத்தில் கவிஞரின் மகன் கவிஞனாக ( கம்பன், அம்பிகாபதி ) மருத்துவரின் மகன் மருத்துவனாக, ஆடலரசிகளின் குழந்தைகள்
ஆடலரசிகளாக ( தேவதாசி ) விவசாயியின் மகன்
விவசாயியாக, தச்சரின் மகன் தச்சராக, வார்க்கப்பட்டார்கள்.
இவற்றிலும் மூளையினால் செய்யக்கூடிய வேலைகள் புனிதமானதாகவும்,
உடலுழைப்பு தாழ்ந்த தாகவும் தீட்டாவும் கருதப்பட்டன. அதனால் தான் வர்ணாசிரமத் தர்மத்தில் மண்ணில் வேலை செய்பவர்களை, மண்ணுக்குக் கீழே விளைந்த பொருட்களை ( கிழங்குவகைகள்,
வெங்காயம், பூண்டு ) தீட்டாகச்
சொல்லிவைத்திருக்கிறார்கள். ஆக நிலவுடமைச் சமூகத்தில் உணவில்
தீட்டு, உடையில் தீட்டு, இருப்பிட த்தில்
தீட்டு என்று அடிப்படையான மனித ஆதாரங்களிலேயே பாகுபாடு காட்டிய போது கலை, இலக்கியம், மருத்துவம், அறிவியல்,
போன்றவற்றை விட்டுவிடுவார்களா?
ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆளும்வர்க்கம் புனிதமானதென்று அனைத்தையும் விலக்கி வைத்ததால்
வெகுமக்கள் தங்களுக்கான கலை இலக்கியத்தை உருவாக்கினார்கள். அனுபவங்களிலிருந்து
அறிவுத்துறைகளை உருவாக்கினார்கள். நாட்டுப்புறக்கலைகள்,
வாய்மொழி இலக்கியம், நாட்டு வைத்தியம் என்று சொல்லப்படும்
சித்தவைத்தியம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அவற்றை
அப்போது நிலவுடமைச் சமூக ஆளும்வர்க்கமும் சரி, இப்போதைய முதலாளித்துவச்
சமூக ஆளும் வர்க்கமும் சரி ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. உயர்வர்க்கக்
கலை இலக்கியத்தை, அறிவுத்துறைகளை வளர்ப்பதில் காட்டிய அக்கறையில்
ஒரு சதவீதம் கூட வெகுமக்களின் கலை இலக்கியம் மற்றும் அறிவுத்துறைகளுக்குக் கொடுக்கவில்லை
என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
கலை
இலக்கியம் புனிதமானது தானா?
மனிதன் தோன்றியபோதே கலை தோன்றிவிட்டது. வர்க்க சமூகம் உருவாகும்போது தான் கலையிலும் வர்க்கப்பிரிவினை
தோன்றுகிறது. வர்க்கப்பிரிவினை தான் புனிதமான கலையென்றும்,
புனிதமற்ற கலையென்றும் மேல் கீழாகப் பிரித்து வைத்த து. இப்போதும் நிலவுகிற வர்க்கசமூகம் அந்த விழுமியங்களை தொடர்ந்து காப்பாற்றி வருகிறது.
ஒரு கலையோ, இலக்கியப்படைப்பு அதன் உருவாக்கத்தின்
போதான மூளையுழைப்பில் எந்த ஏற்றதாழ்வுகளுமில்லை. ஒரு கலைஞன் அவன்
தான் வாழும் சூழலையேத் தன் படைப்பில் பிரதிபலிக்கிறான். உழைக்கும்
மக்களின் கலை இலக்கியம் அவர்களுடைய வாழ்நிலையிலிருந்து உருவாகின்றன. அத்துடன் கலை எங்கிருந்து பிறந்தாலும், யாரிடமிருந்து
பிறந்தாலும், அதன் நுகர்வோரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
அவர்களுடைய வாழ்நிலை பற்றிய விமரிசனப்பார்வையைத்
தர வேண்டும். அவர்களின் உணர்வுநிலைகளில் உயர்வையும் மனிதமாண்புகளில்
மேன்மையையும் அளிக்கவேண்டும். ஏற்ற தாழ்வுகள் மிக்க இந்த உலகை
மாற்ற வேண்டுமென்ற தூண்டுதல் தரவேண்டும்.
கலையில் புனிதமானதென்றோ. தீட்டானதென்றோ, தாழ்ந்ததென்றோ எதுவும் இல்லை.
கலை என்பது கலை தான்.
மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்பு கலை. .
நன்றி - புக் டே

0 Comments