Showing posts with label ஆத்திச்சூடி. Show all posts
Showing posts with label ஆத்திச்சூடி. Show all posts

Saturday, 18 April 2026

திருக்குறள், ஆத்திச்சூடி சிறார் இலக்கியமா?

 

திருக்குறள், ஆத்திச்சூடி சிறார் இலக்கியமா?

 

உதயசங்கர்



    

ஒவ்வொரு இனத்துக்கும் தங்களது தோற்றம், மொழி, தொன்மை குறித்து பெருமிதங்கள் இயல்பாகவே இருக்கும். அதற்கான இட்டுக்கட்டிய கதைகள், புனைவுகள் ஆகியவற்றையும் உருவாக்குவார்கள். கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி போன்ற அறிவியல் பூர்வமற்ற பெருமிதங்களைப் புனைவார்கள். இவையெல்லாம் வெறும் உணர்ச்சி ஆரவாரங்களை மட்டுமே உருவாக்கலாம். உண்மையாகிவிட முடியாது.

அப்படித்தான் தமிழ்ச்சிறார் இலக்கியம் பற்றியும் பல இட்டுக்கட்டல்கள் பொதுவாகப் பேசப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறார் இலக்கியம் தோன்றி விட்டதாகவும், ஆத்திச்சூடி, திருக்குறள், நாலடியார், வெற்றி வேற்கை, கொன்றை வேந்தன், பிள்ளைத்தமிழ், போன்ற இலக்கியங்கள் சிறார் இலக்கியங்கள் என்று இன்றும் நம்புகிறார்கள். இந்த வகை இலக்கியங்கள் எழுதப்பட்ட காலம் அதன் அவசியம் அல்லது தேவை குறித்து விமரிசனப்பார்வையுடன் அணுகுவதில்லை.

நிலவுடமைச் சமூகம் உருவாகி நிலைபெற்ற பிறகு குடிமக்களைச் சமூகவயப்படுத்துவதற்காக அரசு, நீதி, சட்டம், கல்வி, இலக்கியம், காவல், சிறை, தண்டனை என்று நிர்வாகத்தைக் கட்டமைக்கிறது. மேலே குறிப்பிட்ட சில அமைப்புகள் வெளிப்படையான பலப்பிரயோகம் செய்கின்றன. கல்வி, இலக்கியம் போன்றவை மறைமுகமாக நிலவுகின்ற சமூக அமைப்புக்குத் துணை நிற்கின்றன. ஆனால் அனைத்து அமைப்புகளும் அதிகாரத்தை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டவை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அப்படியென்றால் திருக்குறள் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேட்கை தொடங்கிய இலக்கியப்பிரதிகள்  சிறார்களுக்கான இலக்கியம் இல்லையா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ப்படியானால் அன்றை காலகட் டத்தில் சிறார் இலக்கியம் பாடல்களாகவும், நாட்டார் கதைகளாகவும் இருந்திருக்கும் வாய்ப்புகளே அதிகம். ருந்திருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

முதலாவதாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கல்வி என்பது செய்யுள் இயற்றும் இலக்கணங்களையும், முந்தைய செய்யுள் இலக்கியப்பிரதிகளை வாசிக்கச்செய்யும் பயிற்சி முறைகளாகவே இருந்தன. அதனால் வெகுமக்களிடமிருந்து இலக்கியமே வெகு தூரத்திலிருந்தது. அப்படியிருக்கும்போது இந்த இலக்கியப்பிரதிகளைக் குழந்தைகள் படித்துப் புரிந்து கொண்டார்களென்பது பொருத்தமாக இல்லை.

இரண்டாவதாக, மேலே குறிப்பிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட கருத்துகள் குழந்தைகளுக்கானதில்லை. நிலவுடமைச் சமூகத்தின் விழுமியங்களை, அறநெறிகளை, மக்கள் பின்பற்ற வேண்டிய நீதி நெறிகளைச் சொல்லும் இலக்கியமாகவே இருக்கின்றன. குழந்தைகள் புரிந்து கொள்ளமுடியாத சூட்சுமமான ஆழமான, சட்டெனப் புரிந்து கொள்ள முடியாத அறநெறிக் கருத்துகளைக் கொண்டதாக இருக்கின்றன. அத்துடன் குழந்தைகள் வாசிப்பதற்கான மொழிநடையிலும் இல்லை. பெரியவர்களே விளக்கவுரை இல்லாமல் அவற்றைப் புரிந்து கொள்ளவோ பொருள் விளங்கவோ முடியாது.

இரண்டடியில் திருக்குறள் இருப்பதாலோ, ஏழே ஏழு வார்த்தைகள் மட்டுமே இருப்பதாலோ சிறார் இலக்கியமாகி விடாது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் இவையெல்லாம் பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வாசிப்புக்கோ, அவர்களின் உளவியல் நிலைகளுக்கேற்றதோ கிடையாது. திருக்குறளின் அருமை, பெருமை, உலகப்பொதுமறையாக மதச்சார்பற்ற இலக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பதையும் குறிப்பிடவேண்டும்.

அதே போல ஔவையாரின் ஆத்திச்சூடியிலும், அதே கதை தான். ஆத்திச்சூடியில் வருகின்ற

அறம் செய விரும்பு,

ஆறுவது சினம்

ஈவது கரவேல்

போன்ற கருத்துகளும் சரி,

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

போன்ற கருத்துகளும் அன்றைய சமூகத்தில் வாழ்ந்த படித்தவர், படிக்காதவர்கள் அனைவருக்குமான எளிய மொழியில் சொல்லப்பட்ட அறக்கருத்துகளேயாகும்.

அந்தக் காலத்தில் பெண்களைப் பற்றி சமூகம் வைத்திருந்த மதிப்பீடுகளைப் பிரதிபலிக்கும்

மோகத்தை முனி

 தையல் சொல் கேளேல்’,

 மெல்லினள்ளாள் தோள் சேர்’, ’

மை விழியார் மனை அகல் 

வீடு பெற நில்

என்ற கருத்துகளெல்லாம் குழந்தைகளுக்கானதில்லை.

ஔவையாரைப் பின்பற்றி அதிவீராம பாண்டியன் எழுதிய கொன்றை வேந்தனில்

ஒருவனைபபற்றி ஓரகத்திரு’ , ’

சந்ததிக்கழகு வந்தி செய்யாமை ‘, ’

பிறன்மனைப்புகாமை அறம் எனத்தகும்’ , ’

 மைவிழியார் தம் மனை அகன்று ஒழுகு

என்ற வரிகளோ, வெற்றி வேட்கையில் வருகின்ற

விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்

என்ற வரிகளோ குழந்தைகளுக்கானதில்லை.

உலக நாத பண்டிதர் எழுதிய உலகநீதியில்,

கற்புடையமங்கையரைக்

கருத வேண்டாம்

வாழாமல் பெண்ணை வைத்துத்

திரியவேண்டாம்

மனையாளைக்குற்றம் ஒன்றும்

சொல்லவேண்டாம்

கொண்டைமேல் பூத்தேடி

முடிக்கவேண்டாம்

சொல்லப்பட்ட எதுவும் குழந்தைகளுக்கானதில்லை.

 

குழந்தைகளின் அறிவுக்கெட்டாத ஆழ்ந்த கருத்துகள் உள்ளன. அவர்களுடைய வயதுக்குப் பொருந்தாத பெரிய விஷயங்கள் இருக்கின்றன. பெண்களைக் குறித்த பல பிற்போக்கான கருத்துகள் இருக்கின்றன.

வடிவம் குழந்தை இலக்கியத்துக்குரியதாகவும் பொருள் பெரியவர்களுக்கானதாகவும் இருக்கிறதுஎன்று மு.வரதராசனார் சொல்கிறார்.

அதே போல குழந்தைகளை வர்ணித்துப் பாடும் பிள்ளைத்தமிழ் இலக்கியமும் தாய்மார்கள் பாடும் தாலாட்டுப்பாடல்களும் குழந்தை இலக்கியமல்ல என்று குழந்தை இலக்கிய முன்னோடி அழ.வள்ளியப்பா அவர்களும் தமிழறிஞர்.மு.வரதராசனார் அவர்களும் கூறுகின்றனர்.

பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியையும் அவர் இந்த வகையில் சேர்க்கிறாரென்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

மூன்றவதாக, பள்ளிப்பாடப்புத்தகங்களில் மனப்பாடப்பகுதியில் வருவதாலேயே இவையெல்லாம் குழந்தை இலக்கியம் என்று எண்ணும் போக்கு உருவாகியிருக்கிறது. வடிவத்தில் சிறியதாக இருப்பதால் பொருள் புரியாவிட்டாலும் குழந்தைகள் எளிதாக மனப்பாடம் செய்து விடுகின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு அந்த வயதில் அவர்கள் அனுபவிக்க வேண்டிய கலைஇன்பத்தைக் கொடுக்காது. எனவே குழந்தைகளின் மொழிப்பயிற்சிக்காக மட்டுமே மனப்பாடப்பகுதியே தவிர திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேட்கை, உலகநீதி, நாலடியார் போன்றவை குழந்தை இலக்கியமல்ல.

.