Monday 30 July 2012

சாஸ்திரம் சம்பிரதாயம் சடங்குகளின்உடல் – 2

சடங்குகளும் சுயபோராட்டமும்

உதயசங்கர்

emotion-chart-with-picture-reflection

சிந்தனையில், சமூகச்செயல்பாடுகளில் முற்போக்காகவும், சொந்த குடும்ப வாழ்க்கையில் பிற்போக்கான சடங்கு சாஸ்திரம் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கவுமான இரட்டைநிலை கொண்ட தோழர்களை நான் அறிவேன். இதற்கு அவர்கள் மட்டுமே குறை சொல்லிவிட முடியாது. பண்பாட்டுத் தளத்தில் நாம் புதிய செயல்பாடுகளைச் செய்யத் தவறியதே காரணம். அது மட்டுமேயல்லாமல் அரசியல் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குக் கொடுத்த அளவுக்கு சிறிதளவேனும் முக்கியத்துவம் பண்பாட்டு நடவடிக்கைகளுக்குக் கொடுக்கவில்லை என்பதும் யதார்த்தமான உண்மை. நம்முடைய படைப்பாளிகள் முற்போக்கான படைப்புகளை படைக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் காலத்திற்கேற்ற படைப்புகளாக இருக்கின்றனவா என்று நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.முதலாளித்துவ, மதவாத, பண்பாட்டு நடவடிக்கைகளை நுட்பமாகப் புரிந்து கொண்டு அதிலிருந்து அதைச் செரித்துக் கொண்டு புதிய பண்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதங்களைத் துவக்கியிருக்கிறோமா?

இல்லையெனில் எல்லாபிற்போக்கான பண்பாட்டு நடவடிக்கைகளுடனும் சமரசம் செய்து கொண்டு ஆனால் அதே நேரம் அரசியல்ரீதியாக முற்போக்காகவும் திகழ்கிற போலிக் கம்யூனிஸ்ட்கள் பெருகி விடும் ஆபத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

என் வாழ்வில் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களுக்கு எதிராக நான் நடத்திக் கொண்டிருக்கிற போராட்டம் மேடு பள்ளங்களைக் கொண்டது தான். நான் பள்ளியில் படிக்கிற காலத்திலேயே சாமி கும்பிடுவதை நிறுத்தி விட்டேன். எனக்குப் பத்தாவது வகுப்பில் தமிழாசிரியராக வந்த குருசாமி வகுப்பில் சொன்ன பகுத்தறிவுக் கருத்துகள் என்னை எதனாலோ ஈர்த்தன. வீட்டிலும் ரெம்ப பழமைவாதம் கிடையாது. ஊரோடு ஒத்துப் போவதற்காக நல்லநாள் கொண்டாடுவார்கள். மற்றபடி வீட்டிற்கு மிக அருகில் இருந்தாலும் கோவிலுக்குச் செல்லும் பழக்கமெல்லாம் வீட்டிலுள்ள யாருக்கும் கிடையாது. அதனால் பெரிய நெருக்கடி ஒன்றும் கிடையாது. அதற்கு முன்பு எட்டாம் வகுப்பு வரை மார்கழி மாதம் விடிகாலைக் குளிரில் எழுந்து குளித்து விட்டு கந்தபுராணத்தையும், விநாயகர் அகவலையும் சத்தம் போட்டு பாடிக் கொண்டே செண்பகவல்லியம்மன் கோவிலை நூற்றியெட்டு முறை சுற்றி வந்தவன் தான். ஆனால் குருசாமி வாத்தியாரின் வகுப்புகள் என்னை ஏதோ செய்தது. அது மட்டுமல்ல என்னுடைய அருமை நண்பனான நாறும்பூநாதனின் நட்பும் ஒரு காரணம். அவனுடைய அண்ணன் ஆர்.எஸ்.மணி மூலமாக அவன் நிறைய முற்போக்கான கருத்துகளைக் கற்றுக் கொண்டு எங்களிடம் வந்து கொட்டுவான். முதலில் அதை எதிர்த்துப் பேசி பின்னர் அது ஆழமாக மனசில் பதிந்து விட்டது. கல்லூரிக் காலத்தில் புத்தகவாசிப்பின் மீதான ஆர்வம் எழுத்தை நோக்கி உந்தித் தள்ள நண்பர்கள் நாங்கள் கையெழுத்துப் பத்திரிகை துவங்கி தமுஎசவில் வந்து சேர்ந்தோம். அப்போது வாசித்த நூல்கள் மதம், சாதி, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் குறித்த புரிதலைத் துவக்கி வைத்தது.

1987-ல் என் திருமணநிகழ்வினை எந்த சாஸ்திரமும் சடங்கும் இல்லாமல் நடத்த பெரும்போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அது தான் முதல்முறையாக நான் சடங்கு சாஸ்திரம் சம்பிரதாயங்களின் வலிமையை உணர்ந்த நாட்கள். வீட்டுப் பெரியவர்களின் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியதாயிற்று. அந்த விரோதம் என்னுடைய அப்பா, அம்மா, இருவரின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.ஆனால் என்னுடைய பிடிவாதம், பால்வண்ணம், பாலு, தேவப்ரகாஷ், போன்ற தோழர்களின் ஒத்துழைப்பினால் சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிரான என்னுடைய முதல் போர் வென்றது. எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தாலி எடுத்துக் கொடுக்க கைதட்டுதலோடு கலியாணம் முடிந்தது. என்ன பேசியும் தாலியைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அதையும் பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு என் துணைவியார் துறந்து ஒரு பதக்கச் சங்கிலியை அடையாளமாக அணிந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் தோழர்கள் திருமணம் பெரும்பாலும் அப்படித்தான் நடந்தது. ஆனால் இப்போது அதே தோழர்கள் அவர்கள் அவர்களுடைய திருமணத்தைத் தவிர வீட்டில் நடைபெற்ற அத்தனை விழாக்களையும் சடங்குகள் சகிதம் நடத்தியதையும் கண்டேன். இப்போது காலம் தன் சட்டையை உரித்து மீண்டும் அதே பழைய சனாதன உருவத்தோடு காட்சியளிக்கிறது.

என் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்தும் சடங்கை என்ன சொல்லியும் என்னால் தடுக்க முடியவில்லை. சலூனில் மொட்டை போடும் என் யோசனைக்கு எல்லோருமே எதிர்ப்பு தெரிவித்தார்கள். திருமணத்துக்குப் பிறகு எல்லாமே குடும்பவிஷயமாக(?) மாறிவிடுவதால் தோழர்களும் தலையிடவில்லை. கடைசியில் சாத்தூர் இருக்கண்குடி மாரியம்மன் கோவிலில் அந்தச் சடங்குகள் நடந்தன. நான் தோல்வியடைந்தாலும் அய்யர் இல்லாமல் நாட்டார்தெய்வக் கோவிலில் வைத்துத் தானே நடக்கிறது என்று மீசையில் ஒட்டிய மண்ணைப் பெருமையுடன்(!) துடைத்துக் கொண்டேன். என் பெண்குழந்தைகள் பருவமடைந்ததை நாங்கள் யாருக்கும் சொல்லவில்லை. எந்த விதமான சடங்கும் செய்யவல்லை. என் துணைவியாருக்கோ குழந்தைகளுக்கோ அதில் வருத்தமில்லை.ஆனால் உறவினர்கள் திட்டினார்கள். தோழர்களும், நண்பர்களும் கூட வருத்தப்பட்டார்கள். சடங்கு முக்கியம் என்றார்கள். பிராமணரைக் கூட்டிக் கொண்டு வந்து புண்ணியானம் என்று சொல்லப்படுகிற தீட்டுக் கழிக்கிற சடங்கைச் செய்த தோழர்கள் வீட்டுக்குக் குடும்பத்தோடு சென்று வந்தார்கள். யாரும் என் வீட்டுக்கு வரவில்லை.அப்போது என் துணைவியார் கொஞ்சம் நம்பிக்கையிழந்தார். நான் சடங்கின் வலிமையை மீண்டும் உணர்ந்தேன். ஆனால் நம்பிக்கையிழக்கவில்லை.

என் தந்தையார் இறந்தபோது உறவினர்கள் எல்லோரும் நெருக்கடி கொடுத்தார்கள். அப்போது தோழர். சக்தி கூட இருந்ததால் அதைச் சுலபமாகக் கடந்து விட்டேன்.கொள்ளிச்சட்டி தூக்கவோ, மொட்டை போடவோ வேறு எந்த சடங்கையும் செய்யவும் மறுத்து விட்டேன். எல்லோரும் என்னை வேற்றுக் கிரகமனிதனைப்போல பார்த்தார்கள். சிலர் கொள்கையெல்லாம் சரிதான் அப்பாவுக்குத் தானே செய்றீங்க என்று சொன்னார்கள். அந்த நேரம் அப்பா இறந்து போன துக்கத்தை என்னால் முழுமையாக அநுபவிக்க முடியவில்லை என்பது உண்மை தான். இந்தச் சடங்குகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற சிந்தனையே எனக்குள் ஒரு இறுக்கத்தையும், பிடிவாத உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் என் தம்பிகள் இந்தச் சடங்குகளைச் செய்வதிலிருந்து தடுக்க முடியவில்லை. என்பாடே பெரும்பாடாக இருந்தது. ஏற்கனவே கோட்டிக்காரன் என்று பெயர் எடுத்திருந்ததால் என் தாயார் இறந்தபோது யாரும் என்னை வற்புறுத்தவில்லை.

சொந்த வீடு கட்டும் போதும் சரி, கட்டி முடித்த பிறகும் சரி எந்தச் சடங்கையும் செய்ய மறுத்து விட்டேன். கிரகப்பிரவேசம் என்று சொல்லப் படுகிற சடங்கையோ, கணபதி ஹோமம் என்ற பெயரில் புது வீட்டுக்குள்ளே மாட்டைக் கூட்டிக் கொண்டு போய் சுத்திக் காண்பித்து அதன் மூத்திரத்தை வீட்டுக்குள்ளே தெளித்து அதுக்கு ஒரு விஞ்ஞானவிளக்கமும் கொடுத்து செய்கிற சடங்கையோ செய்யவில்லை. கிரகப்பிரவேசம் கணபதி ஹோமம் நடத்தி விழா எடுத்த தோழர்கள் வீட்டுக்கு எல்லோரும் போனார்கள். ஆனால் நான் அழைத்தும் யாரும் என் புது வீட்டுக்கு யாரும் வரவில்லை. நாங்கள் பல நாட்கள் எங்களுடைய புது வீட்டில் தோழர்களுக்காகக் காத்திருந்தோம். பத்திரிகை அடித்து நேரில் சென்று அழைத்து ஸ்பீக்கர் செட் அலற நான் முன்பு சொன்ன சடங்குகள் செய்து சாப்பாடு போட்டால் எல்லோரும் குதூகலமாக வந்து போகிறார்கள். எந்தச் சடங்கையும் செய்யாமல் நீங்கள் சும்மா அழைத்தால் யாரும் தோழர்கள் உட்பட யாரும் வரத்தயாரில்லை. எல்லோரிடமிருந்தும் தனிமைப் பட்ட உணர்வு வந்ததென்னவோ உண்மை தான். என் துணைவியாரும் “ என்னமோ தோழர்கள் அதையெல்லாம் பாக்கமாட்டாங்கன்னு சொன்னீங்க..” என்று வறுத்து எடுத்து விட்டார். சடங்குகளின் வலிமையை மீண்டும் உணர்ந்தேன்.

1987-லிலேயே வீட்டில் மாட்டுக்கறி எடுத்து சமைப்பதற்குப் பழகியிருந்தோம். இப்போதும் நானே போய் மாட்டுக்கறி எடுத்து வந்து சமைத்து சாப்பிடுகிறோம். அதே போல வெள்ளைப்பன்னிக்கறியும்( கறுப்பு பன்னி மீது இன்னமும் என் வீட்டிலுள்ளவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. நானும் இந்த வரைக்கும் வந்தார்களே என்று சும்மாயிருந்து விட்டேன்.) வீட்டில் சமைத்துச் சாப்பிடுகிறோம். எனக்கு என் துணைவியாரோ,என் மூத்த மகளோ தான் முடி வெட்டி விடுகிறார்கள். எந்தக் குழப்பமும் இல்லை. உண்மையில் சாதிய நடைமுறைகளை, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களை மறுத்து அதைக் கடந்து செல்லவே பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். விழுதலும் எழுதலுமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் நானறியாமல் பல சடங்கு சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களுக்குத் துணை போயிருக்கிறேன். என் தம்பிகள், தங்கைகள் விஷயத்தில் தலையிடாமல் இருந்திருக்கிறேன். நான் மட்டும் சரியாக இருந்து கொள்கிறேன் மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை என்ற சுயபெருமித உணர்வுதான் காரணம். இதெல்லாம் பெருமை பேசுவதற்காகவோ யாரையும் குற்றம் சொல்வதற்காகவோ இல்லை. தன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து முற்போக்கான அரசியலைப் பேசி, அதற்காகப் போராடிய தோழர் இறந்த பிறகு அப்படியே அவரை அவருடைய சாதியின் கையில் சடங்குகளின் கையில், சாஸ்திரங்களின் கையில், சம்பிரதாயங்களின் கையில் ஒப்படைத்துவிட்டு வாளாவிருப்பது என்ன நியாயம்?

,விரைவில் புரட்சி நடந்து விடும் புதிய கலாச்சாரம் வர்க்கபேதமற்ற, சாதி சமயங்கள் ஒழிந்த, சாஸ்திர, சம்பிரதாயங்கள், அழிந்த ஒரு புதிய சமூகம் பிறக்கும் என்று எனக்கு நம்பிக்கையளித்த இடதுசாரிகள் இப்போது மோசமாகிக் கொண்டேயிருக்கும் சாதி மத மயமாக்கப்பட்ட சூழலில் யுத்தகளத்தில் இல்லையோ என்ற அச்சம் வருகிறது.

1990-களில் அத்வானி ” ஆட்சி அதிகாரத்தை விட குடிமைச்சமூகமே எங்களுக்கு முக்கியம்.” என்று சொன்னார். அதில் பெரிய அளவுக்கு அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றே தோன்றுகிறது. வரலாற்றறிஞர் கே.என். பணிக்கர் சொன்னதைப் போல அரசியல் ரீதியாக மதவாத சக்திகளை எதிர்கொள்கிற இடது சாரிகள் பண்பாட்டு ரீதியாக வலுவாக எதுவுமே செய்யவில்லை. இதனால் நம் கண்முன்னே குடிமைச்சமூகம் மதவாத சக்திகளிடம் போய்க் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கவோ, எதிர்கொள்ளவோ, நம்மிடம் திட்டமில்லை. சாதி மத, சாஸ்திர, சடங்கு, சம்பிரதாயங்களுக்கு எதிரான எந்த முயற்சியும் இல்லை. முற்போக்கு பண்பாடு குறித்த விவாதத்தைத் துவங்கவே யில்லை. மிகுந்த உற்சாகத்துடன் என்னுடன் இணைந்து சாஸ்திர, சடங்கு, சம்பிரதாய மறுப்புகளைச் செய்து வருகிற என் துணைவியார், இப்போது சற்று சோர்ந்து போயிருக்கிறார்.

என் மூத்த மகள் சொல்கிறாள், “ நாம ஒரு சதவீதம் தானே இருக்கோம்… சுத்தி எல்லோரும் வேற மாதிரி தான இருக்காங்க ”

“ ஒரு சதவீதம் நூறு சதவீதமாகும் நாள் சீக்கிரம் வந்துரும் “ என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். ஏனென்றால் எதிர்காலச் சந்ததிகள் அவர்கள் தானே. அவர்கள் நம்பிக்கையிழக்கலாமா? ஒரு புதிய பண்பாட்டுப்போரைத் துவக்க வேண்டிய தருணம் இது. நம்முடைய முற்போக்கு பண்பாட்டு நிகழ்ச்சிநிரலை ஆரம்பிக்க வேண்டிய காலம் இது.

நன்றி - தீக்கதிர்

Sunday 29 July 2012

வசீகரம்

உதயசங்கர்

 

வசீகரம் ஒரு வானமாய் என் அறைக்குள்

உட்கார்ந்திருந்ததுblack,and,white,drawing,face,girl,art,woman-a8619ec48f601bdb6c57c8a2d15adca9_h_large

நான் ஒரு துளி நீருக்காய் நீட்டிக் கொண்டிருக்கிறேன்

என் நாவை

வசீகரம் ஒரு விருட்சமென என் வாழ்வில்

வேரோடியது

என் பசி தீர ஒரு சிறு கனிக்காகத்

தவமிருக்கிறேன்.

வசீகரம் ஒரு மலையைப் போல என் மனதில்

ஆக்கிரமித்தது

ஒரு சிறு செடியையேனும் அதில் காண

ஆவல் நான் கொண்டேன்.

வசீகரம் ஒரு பெண்ணைப் போல என் படுக்கையில்

சயனித்திருந்தது

ஒரு முத்தத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

வசீகரம் தெருமுக்கில் ஒரு மரணத்தைப் போல

காத்துக் கொண்டிருந்தது

நான் ஒரு சிகரெட் புகைக்க தெருவில் இறங்கி

நடந்து போய்க் கொண்டிருக்கிறேன்.

Saturday 28 July 2012

முற்றத்து நீர்

உதயசங்கர்

Mohan Das (76)

உமாவின் வேலை தினமும் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் அருகிலிருக்கும் அடி பம்பில் இரண்டு குடம் தண்ணீர் எடுத்து வந்து வீட்டில் ஊற்றவேண்டும். வீட்டு முற்றத்தைப் பெருக்கித் தண்ணீர் தெளிக்க வேண்டும். பின்பு பாடங்களைப் படிக்க வேண்டும். மேடும் பள்ளமுமான மண்தரை முற்றத்தில் உமா தெளித்த தண்ணீர் அங்கங்கே சின்னச் சின்னப் பள்ளங்களில் தேங்கிக் கிடந்தது.

கோடைவெயில் உக்கிரமாய் அடித்தது. உமா முற்றத்தில் தண்ணீர் தெளித்து விட்டுப் போனதும் எங்கிருந்தோ ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்தது.கீழே பள்ளங்களில் தேங்கிக் கிடந்த தண்ணீரைத் தலையைச் சாய்த்து தன் அலகால் உறிஞ்சிக் குடித்தது. இரண்டு மூன்று முறை குடித்த பிறகு தான் அதற்கு உயிர் வந்தது போல் இருந்தது. தொண்டையிலிருந்து குரலே அப்போது தான் வெளி வந்தது கீச் கீச்சென்று கத்தியபடியே உமாவின் வீட்டு வாசலை ஒரு முறை சுற்றி விட்டுப் பறந்து போய் விட்டது.

பின்பு தினமும் சாயங்காலம் சரியாக ஐந்து மணிக்கு அந்தக் குருவி வந்துவிடும். உமாவும் அதற்குள் முற்றத்தில் தண்ணீர் தெளித்திருப்பாள். வழக்கம் போல தண்ணீரைக் குடித்து விட்டு வீட்டு வாசலை ஒரு முறை சுற்றிவிட்டுப் பறந்து போய் விடும்.

சில நாட்களுக்குப் பிறகே இதைக் கவனித்தாள் உமா. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பள்ளிக்கூடத்தில் எல்லோரும் குடிக்கும் பானையில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கக் கூடாது, தனியாக பாட்டிலில் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று வாத்தியார் கண்டிப்பாய் சொல்லி விட்டார். எல்லோரும் தொட்டுப் புழங்குகிற தம்ளரை இவள் தொடக்கூடாதாம். பள்ளிக்கூடம் போகவே பிடிக்கவில்லை. ஆனால் சுபா, செண்பகவல்லி, கனகு, இவர்கள் அப்படிச் சொல்லவில்லை. இவளுடன் தொட்டுப் பிடித்து விளையாடுவார்கள். இவள் கொண்டு போகிற கேப்பைக் களியை, வெஞ்சனத்தைச் சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பாட்டை இவளும் சாப்பிடுவாள். அவர்கள் யாரும் அவளிடம் வித்தியாசம் காட்டியதேஇல்லை.

பள்ளிக்கூடம் விடும் போதும் வருத்தம் வந்து விடும். பள்ளிக்கூடம் போகும்போதும், வீட்டுக்கு வரும்போதும் ஊரைச் சுற்றி அவள் வீடு இருக்கிற காலனிக்கு வரவேண்டும். ஊருக்குள்ளே கூடி தெருக்கள் வழியே வரக்கூடாதாம். அய்யா கண்டிசனா சொல்லிட்டாரு. அதனாலே பள்ளிக்கூடம் விட்டு வரும்போது ஆள் நடமாட்டமில்லாத பொட்டல் காடு வழியே வருவாள் உமா. பயமாக இருக்கும். அங்கே நிழலுக்குக் கூட பச்சை மரங்களோ செடி கொடிகளோ கிடையாது.

அய்யாவிடம் ஏன் அவள் மட்டும் ஊரைச் சுற்றி வரவேண்டும் என்று கேட்டிருக்கிறாள். அதற்கு அய்யா ஏதேதோ மேல்சாதி கீழ்சாதி என்று புலம்பினார். உமாவுக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. தங்களை மற்றவர்கள் சரி சமமாக நடத்தவில்லை என்பதும், இழிவு படுத்துகிறார்கள் என்பதும். இதைப் பற்றி யோசித்திருக்கிறாள். இதைச் சரி செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறாள்.

அவள் வீடு இருந்த பொட்டலில் மரம் செடி கொடி இல்லாத இடத்திற்கு எங்கிருந்து வருகிறது இந்தச் சிட்டுக்குருவி? அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போதெல்லாம் பள்ளிக்கூடம் விட்டதுமே உமாவுக்கு ஒரு பரபரப்பு உண்டாகி விடும். தாமதிக்காமல் வீட்டுக்கு ஓடுவாள். அவசர அவசரமாக குடத்தை எடுத்துக் கொண்டு தண்ணீர் எடுத்து வந்து தெளித்து முடித்தவுடன் வந்துவிடும் அந்தக் குருவி. எங்கிருந்து தான் வருமோ? எப்படித் தான் அதற்குத் தெரியுமோ? சர்ரென்று பறந்து வந்து விடும்.

ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து உமா வீட்டுக்கு வருவதற்கு நேரமாகி விட்டது. வழக்கமான நேரம் தாண்டி விட்டது. பறந்து வந்த குருவி முற்றத்தில் ஈரம் இல்லாமல் இருப்பதைக் கண்டதும் திகைத்து விட்டது. ஏற்கனவே மிகவும் தாகத்துடன் பறந்து வந்த குருவிக்குச் சோர்வாக இருந்தது. ஒவ்வொரு பள்ளமாய் தத்தித் தத்திச் சென்று பார்த்தது. குரல் எழுப்பக் கூட அதற்குச் சக்தியில்லை.

அப்போது தான் பறந்து வந்தாள் உமா. வேக வேகமாக உள்ளே சென்று தண்ணீருக்காகப் பானைகளை உருட்டினாள். எதிலும் தண்ணீர் இல்லை. உடனே குடங்களை எடுத்துக் கொண்டு போய் தண்ணீர் கொண்டு வந்தாள். முதல் வேலையாய் முற்றத்தில் தண்ணீர் தெளித்தாள். அதற்குள் இருட்டி விட்டது. எந்த சத்தமும் இல்லை. இனி குருவி வரவே வராதா? இருட்டுக்குள் சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அழுகை வரும்போல இருந்தது. திடீரென கீச்சென்ற ஒரு சத்தம் கேட்டது. குனிந்து பார்த்தாள். அவளுக்கு மிக அருகில் குருவி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு சந்தோசமுன்னா சந்தோசம். குதி குதியென்று குதித்தாள். குருவிக்கும் சந்தோசம். கீச் கீச் கீச் கீச்சென்று கத்தி அவளை வாழ்த்திப் பறந்து போனது.

Mohan Das (77)புகைப்படங்கள் – மோகன் தாஸ் வடகரா

Friday 27 July 2012

ஒரு கை நீரள்ளி…

உதயசங்கர்

 

எப்போதும் கனவுகள் காண்பவன் நான். கனவுகளைச் சுவாசித்து, கனவுகளைத் தின்று, கனவுகளால் வளர்க்கப்படுபவன். கனவுகளின்றி ஒரு நாளும் நான் இருந்ததிலை. உறங்கியதில்லை. ஒரு ஐந்து நிமிடமே உறக்கம் என்றாலும் கனவுப்பூச்சி என்னைச் சுற்றி வலை பின்னத் தொடங்கி விடும். விழித்திருக்கும் போதும் கனவுகள் என்னை மொய்த்து விடும். என்ன உறங்கும்போது காணும் கனவுகளில் படைப்பூக்கத்தின் சக்தி நிரம்பி வழியும் என்றால் விழித்திருக்கும்போது அந்தப் படைப்பூக்கத்தின் செயல்பாடுகளாக முண்டியடிக்கும். நான் கனவுகள் காண்பதை விரும்புகிறேன். கனவுகளிலிருந்து என்னை யாரும் பிரித்து விடக் கூடாது என்று என்னைச் சுற்றி நானே அமைத்துக் கொண்ட ஒரு பிரத்யேகமான கூட்டில் இருப்பதையே பெரும்பாலும் விரும்புகிறவன். வாழ்க்கையே ஒரு கனவு தானோ என்று அவ்வப்போது வியந்து போகிறேன். பல சமயங்களில் நடந்து கொண்டிருப்பதெல்லாம் ஏற்கனவே கனவுகளில் நடந்து முடிந்ததான பிரமையும் வரும்.

நான் சந்தித்த மனிதர்களை ஏற்கனவே கனவுகளில் சந்தித்திருக்கிறேன். இனி சந்திக்கப் போகிறவர்கள் என் கனவுகளில் இப்போது உலவிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை ஒரு அற்புதம். எத்தனை வண்ணங்கள்! எத்தனை பேதங்கள்! எத்தனை உருவங்கள்! எத்தனை குணங்கள்! வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ருசிக்கப் பேராவல் பொங்குகிறது. இத்தனை மாறுபாடுகளும், வேறுபாடுகளும் இருப்பதால் தானே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கிறது. இயற்கை இனியது. மானுட வாழ்க்கை மகத்தானது. எத்தனை தத்துவங்கள்! எத்தனை படைப்புகள்! எத்தனை முரண்பாடுகள்! எத்தனை அதிசயங்கள்! எத்தனை அற்புதங்கள்! எத்தனை மர்மங்கள்! முடிவிலியான காலத்தின் எத்தனையோ ஜாலங்கள்! அந்த ஜாலத்தின் ஒரு கோலம் தானே இந்த பூமி, ஜீவராசிகள்,எல்லாம். நினைத்துப் பார்த்தால் காலப்பெருவெள்ளத்தின் ஒரு துளியின் துளியாக மனிதன். ஆனால் அவன் தான் காலத்தை அளக்கிறான். படைப்பே படைப்பாளியை விஞ்சும் முயற்சியை என்ன சொல்வது?

எனக்கு மனிதர்கள் மீது நம்பிக்கையிருக்கிறது. இந்தப் பூமியின் புத்திரர்கள் மானுடஅறத்தை பூமிப்பரப்பெங்கும் நிலைநிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. மீண்டும் மீண்டும் இந்த அறவுணர்வை வலியுறுத்தவே எழுத்தாளர்கள் இலக்கியம் படைக்கிறார்கள். தங்களைப் பலி கொடுத்தேனும் மானுடத்தின் மகத்துவத்தை பிரேரணை செய்கிறார்கள். விகசிக்கும் வாழ்வின் கணங்களை, அந்தக் கணங்களில் வாழும் மனிதர்களைத் தங்கள் எழுத்தில் படைக்கிறார்கள். முரண்களையும், துயரத்தையும், அழுக்கையும், அவமானத்தையும், அவலத்தையும், படைக்கும் கலைஞன் தன் சக மனிதர்களின் மனதில் வாழ்க்கை குறித்த விசாரணையைத் துவக்கி வைக்கிறான். அதன் மூலம் அறவுணர்வைத் தூண்டி விடுகிறான். இதைச் செய்கிற படைப்புகள் உன்னதமான படைப்புகளாகின்றன.Mohan Das (102)

என் கனவுகளில் உலவிய மனிதர்கள் எல்லாம் எங்கோ நினைவுகளின் ஆழத்தில் புதைமணலில் புதைந்து கிடந்தார்கள். என் வாழ்வின் கணங்கள் தோறும் என்னைச் செதுக்கிய அந்தச் சாதாரண மனிதர்கள் இன்னமும் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் செய்ததைக் குறித்து அவர்களுக்குத் தெரியாது. மற்றவர்கள் அவர்களுக்குச் செய்ததைக் குறித்தும் தெரியாது. அதனால் அவர்கள் தன்முனைப்பின்றி, சுளித்தோடும் நதியின் சுழல்கள் எப்படியெல்லாம் சுழற்றுகிறதோ அப்படியெல்லாம் சுழன்று கொண்டே வாழ்கிறார்கள். அவர்களுக்குப் பலசமயங்களில் பெயரே கிடையாது. தங்கள் வாழ்வில் இப்படி எதிர்கொண்ட சாதாரணர்களைப் பற்றி பலரும் கவலைப் படுவதில்லை. ஏனெனில் அவர்கள் முக்கியப் பிரமுகர்கள் இல்லையே. ஆனால் அந்தச் சாதாரணர்கள் இல்லாமல் தாங்கள் உருவாகவில்லை என்று உணர்வதில்லை.

மகத்தான தியாகங்களால் ஆனது சாதாரணர்களின் வாழ்க்கை. அனுதினமும் தியாகம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். தாங்கள் ஒரு தியாகவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணராமலே. ஒரு புறம் சிலரிடம் குவியும் செல்வமும், மறு புறம் அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத அவலமும் கொண்ட இந்த அசமத்துவ சமூகத்தை இந்தச் சாதாரணமக்களே இயக்குகிறார்கள். சமூகத்தின் சமத்துவத்துக்காகவும் அவர்களே போராடுகிறார்கள். அவர்கள் புகழுக்காக அல்ல. அவர்களுடைய வாழ்வின் நெருக்கடி அவர்களைப் போராடத் தூண்டுகிறது. அந்தப் போராட்டம் என்பது அவர்களுக்காக மட்டுமில்லாமல் மானுடம் முழுமைக்குமாக விடிவுக்கானப் போராட்டமாக உருமாறுகிறது. அவர்கள் தான் இந்த பூமியின் கதாநாயகர்கள். வரலாற்றை இயக்குபவர்கள். வரலாற்றை உருவாக்குபவர்கள். நான் அவர்களின் பக்கம் நிற்பதையே என்றும் விரும்புகிறேன்.

இரவின் அமைதியில் களக் களக் என்ற மெல்லிய சத்தத்துடன் இருளுக்குள் மினுக்கும் நீர்ப்பரப்பு, அவ்வப்போது நீருக்கு மேல் துள்ளிவிழும் மீன்கள், நீரின் உயிர்வாசனை, எல்லாம் என் நினைவு நதியில் பெரும் சலனங்களை ஏற்படுத்தின. மறதியின் புதைசேற்றில் ஆழ்ந்து கிடந்த அந்தச் சாதாரண மனிதர்கள் எழுந்து நதியின் நீர்ப்பரப்பில் வெள்ளிமீன்களென மின்னினார்கள். .என்றென்றும் பெருமைப்படும் என்னுடைய பிறந்த ஊரான கோவில்பட்டி என்னுடன் பேசியது. என்னுடைய பால்யகால நண்பர்கள் குதூகலத்துடன் விளையாடிக் கொண்டிருந்த காட்சிகள் தெரிந்தன. என்னுடைய தோழர்கள் கையில் செங்கொடியுடன் கோஷமிட்டார்கள். புரட்சிக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். நான் கொண்டாடுகிற எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளோடு பிரமாண்டமாய் விசுவரூபம் எடுத்து நின்றார்கள். இவர்கள் என்னோடு பேசியதை நான் புரிந்து கொண்ட விதத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். அந்த ஆசையின் விளைவே நினைவு என்னும் நீள்நதி தொடர்.

இந்தத் தொடரைச் சாத்தியமாக்கிய இரண்டு பேரை என்றென்றும் மறவேன். என் மீது அன்பும் அக்கறையும் கொண்ட என் அருமைத் தோழன் எழுத்தாளர் பவா செல்லத்துரை நான் இந்தத் தொடர் எழுத முதல் காரணம். அடுத்தது மீடியா வாய்ஸ் பத்திரிகையின் சிறப்பாசிரியர் திரு. ராவ் அவர்கள். அலைபேசிப் பேச்சிலேயே நீண்ட நாள் பழகிய நெருக்கமான நண்பராக மாறியவர். தொடரின் ஒவ்வொருபகுதியையும் படித்தவுடன் என்னைத் அலைபேசியில் தொடர்பு கொண்டு அவருடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டவர். சென்னையில் அவரை நேரில் சந்தித்த போது கண்ட அவருடைய எளிமை என்னை வியப்பிலாழ்த்தியது. அவரின்றி இந்தத் தொடர் சாத்தியமாயிருக்காது. என்னுடைய ஒவ்வொரு கட்டுரைக்கும் உயிர்த்துடிப்புடன் அற்புதமான ஓவியங்கள் வரைந்த ஓவியர் மனோகர் அவர்கள், அவ்வப்போது என்னிடம் தொடர் குறித்து உரையாடியதை மறக்க முடியாது. அவருடைய ஓவியங்கள் என்னுடைய கட்டுரைகளுக்கு மிகப் பெரிய பலம். அவருக்கு என் அன்பும் நன்றியும். ஒவ்வொரு வாரமும் தொடர் குறித்து நினைவுபடுத்தி அதை அனுப்பியவுடன் படித்து சந்தேகங்களைத் தெளிவுபடுத்திய நண்பர் பாலாவுக்கு நன்றி. இந்தத் தொடர் முழுவதும் அதன் வடிவமைப்பு குறித்து பெரிதும் பேசப்பட்டது. அழகாக வடிவமைத்த மீடியா வாய்ஸ் பத்திரிகை இதழ் வடிவமைப்புக் குழு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

மீடியா வாய்ஸ் இதழ் வந்ததும் வாங்கிப் படித்து விட்டு உடனே தங்களுடைய கருத்துகளைச் சொன்ன என் இனிய நண்பர் மீடியா வாய்ஸ் பத்திரிகையின் தலைமை நிருபர் திரு. பி.என்.எஸ்.பாண்டியன், சென்னையைச் சேர்ந்த நண்பர் சீனிவாசன், என்னுடைய எழுத்தாள நண்பர்கள் கமலாலயன், அப்பணசாமி, மாரீஸ், கவிஞர் லட்சுமிகாந்தன், நாறும்பூநாதன், கிருஷி, சு.வெங்கடேசன், பால்வண்ணம், எனது துணைவியார் திருமதி. மல்லிகா, மற்றும் மீடியா வாய்ஸ் வாசகர்கள் எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்.

எழுதித் தீராதது வாழ்க்கை வாழ்வெனும் பேராற்றில் ஒரு கை நீரையே அள்ளியிருக்கிறேன். இன்னும் மீதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அன்பின் ஊற்றாய் அருஞ்சுனையாய் எங்கும் மானுடம் நிறைந்திருக்கிறது.. வாழ்க மானுடம்!

நன்றி – மீடியா வாய்ஸ் 

புகைப்படம் – மோகன் தாஸ் வடகரா

Thursday 26 July 2012

சுயநலத்துக்கு ஒரு கடிதம்

Mohan Das (98)

உதயசங்கர்

 

அன்பே

சின்னஞ்சிறு வயதில்

ஒரு துளி ஒளியைப்போல

ஒரு கண இருளைப்போல

கவர்ச்சியான தின்பண்டம் போல

காணாத காட்சி போல

கன்னியின் முயங்கல் போல

கதிரொளியின் வெப்பம் போல

பசித்த வயிற்றுக்கு உணவைப்போல

பாழும் கிணற்றுப் புதையல் போல

கனிவின் சாரம் போல

கனவின் குழப்பம் போல

கவித்துவ ஒளியைப் போல

காதல் கருக்கொண்ட முதல் முத்தம் போல

இல்லாத ஒன்றின் நிழலே போல

பிள்ளைபிடிப்பவன் போல

பிடித்துக் கொண்டாய் என்னை

பிச்சை எடுக்க வைக்கிறாய்

பெருமை பேச வைக்கிறாய்

உன் பலிபீடத்துக்கு பூசாரியாக்குகிறாய்

எப்போதும் உன்புகழ் பாடச் சொல்கிறாய்

உன்னைக் காப்பாற்ற யாரையும்

பலிபீடத்தில் பலியிடச் செய்கிறாய்

வாழ்நாள் முழுவதும் சுரண்டச்சொல்கிறாய்

முரண்டு செய்தால் பட்டினி போடுகிறாய்

சாட்டையை வீசி வசப்படுத்துகிறாய்

துளித் துளியாய் மதுவைக் கொடுத்து

மயங்கச் செய்கிறாய்

செய்ய நினைப்பதொன்றாய்

செய்வதொன்றாய் என்னை

நிலைபிறள வைக்கிறாய்

காமத்தின் பேய்க்காற்றாய் என்னைச் சுழட்டி

ஒரே வாயில் விழுங்கிறாய்

அன்பே போதும்

என்னை விட்டு விடு

உன் போதைக்கு நான்

உணவோ, ஊறுகாயோ இல்லை

எல்லோருடனும் இணைந்து வாழ

என் உணவு உடை காற்று

எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள

எத்தனிக்கும் எளிய மானிடன் நான்Mohan Das (43)

விட்டு விடு என்னை.

 

 

புகைப்படங்கள்- மோகன்தாஸ் வடகரா

Wednesday 25 July 2012

பறவைகளுக்கு எப்படி சிறகுகள் கிடைத்தன?

Vector-mythical-creature-1 மலையாளத்தில் – மாலி

தமிழில் – உதயசங்கர்

 

முன்பு ஒரு காலத்தில் பறவைகளுக்கு சிறகுகள் கிடையாது. அவர்கள் தரையில் தான் வசித்தனர். ஆனால் மிருகங்களுக்கு சிறகுகள் இருந்தன. அவர்கள் வானத்தில் பறந்து கொண்டிருந்தனர். மிருகங்களுக்குத் தலைவன் இருந்தான். அதே போல் பறவைகளுக்கும் தலைவன் இருந்தான். அவர்களுக்கிடையில் பகை இருந்தது.

பறவைகளை அடக்கியே தீர வேண்டும்- இது மிருகத்தலைவனின் ஆசை.

“பறவைத்தலைவா! ஒழுங்கா மரியாதையா..கப்பம் கட்டணும்.. தெரியுதா..” என்று மிருகத்தலைவன் சொன்னான்.

பறவைத்தலைவன் ரொம்ப மரியாதையானவன். எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே அவனும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

“மிருகத்தலைவா! நான் கப்பம் தர மாட்டேன்..” என்று பறவைத்தலைவன் சொன்னான்.

“அப்படியா..நான் யாருன்னு காட்டுறேன்..” என்று மிருகத்தலைவன் பயமுறுத்தினான்.

“என்ன செய்வே? என்னோட அலகை உடைச்சு உப்புப் போட்டு ஊற வச்சி திம்பியா? பேசாம இரு..” என்று பறவைத்தலைவன் சூடாகப் பதில் சொன்னான்.

உடனே மிருகத்தலைவன் பறந்து அருகில் வந்தான். பறவைத்தலைவன் எதிர்த்து நின்றான். அவன் கடித்தான்.இவன் கொத்தினான். அங்கே ஒரு கலகமே நடந்தது. மிருகத்தலைவனின் சிறகு லேசாக முறிந்து விட்டது. பறவைத்தலைவனின் அலகு கொஞ்சம் உடைந்து விட்டது. அதோடு சண்டையும் முடிந்து விட்டது.

ஆனால் மிருகத்தலைவன் யோசித்துக் கொண்டேயிருந்தான். எப்படியாவது பறவைகள் மீது படையெடுத்து ஒடுக்கவேண்டும். அவன் ரகசியமாக மிருகங்களை அணி திரட்டி பறவைகளைத் திடீரென்று தாக்கினான். பறவைகள் அதை எதிர்பார்க்கவில்லை. அதனால் தயாராகவும் இல்லை. ஏராளமான பறவைகள் செத்து விட்டன. மிருகங்கள் வெற்றி பெற்றன.

பறவைத்தலைவனும் யோசித்தான்.மிருகங்கள் மறுபடியும் படையெடுக்கும். முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது நல்லது. அவன் பறவைகளை ரகசியமாக அணி திரட்டினான். அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தான். அதெல்லாம் மிருகத்தலைவனுக்குத் தெரியாது. மிருகத்தலைவன் மறுபடியும் படையெடுத்தான். இந்த முறை எல்லாம் எதிராக இருந்தது. ஏராளமான மிருகங்கள் செத்துப் போயின. வெற்றி பறவைகளுக்குக் கிடைத்தது.

இன்னும் படையெடுக்க வேண்டும்-தயாராக இருந்தான் மிருகத்தலைவன். படையெடுப்பை எதிர்க்கவேண்டும்-இதற்குத் தயாராகப் பறவைத்தலைவன். இந்தமுறை யுத்தம் பயங்கரமாக இருக்கும். இது உறுதி.

மிருகமும் இல்லாமல் பறவையும் இல்லாமல் ஒரு இனம் இருந்தது. அது பாம்பினம். பாம்புகளுக்கு விஷம் உண்டு. அவர்கள் எண்ணிக்கையும் அதிகம். மிருகத்தலைவனுக்கும், பறவைத்தலைவனுக்கும் ஒரு விசயம் உறுதியாகத் தெரிந்தது. பாம்புத்தலைவன் யார் பக்கம் சேர்கிறானோ அவருக்கே வெற்றி.

மிருகத்தலைவன் பாம்புத்தலைவனைப் பார்க்கச் சென்றது. அந்தச் சமயத்தில் பறவைத்தலைவனும் வந்து சேர்ந்தான். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.அது மட்டுமில்லை.பார்த்தவுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.

பாம்புத்தலைவனுக்கு முன்பே எல்லாம் தெரியும். இருவரும் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை யூகிக்க ஒரு சிரமமும் இல்லை.

“மிருகத்தலைவா! பறவைத்தலைவா! கவனிங்க, நான் ஒரு முடிவு செய்ஞ்சிருக்கேன்..உங்க ரெண்டு பேரில யார் அதை ஏத்துக்கலேன்னாலும்..நானும் என் கூட்டமும் எதிராளி கூடச் சேந்துருவோம்.. என்ன சம்மதமா?” என்று பாம்பு கேட்டது.

பாம்புத்தலைவன் எதிராளியுடன் சேர்ந்தால்? நம்ம சோலி முடிந்துபோகும்.இது மிருகத்தலைவனுக்கும் தெரிந்திருந்தது. பறவைத்தலைவனுக்கும் தெரிந்திருந்தது.

“எனக்குச் சம்மதம்.” என்று மிருகத்தலைவன் சொன்னான்.

“எனக்குச் சம்மதம்” என்று பறவைத்தலைவன் சொன்னான்.

“சரி..இதுதான் என் முடிவு.மிருகத்தலைவன் தான் முதலில் சண்டை போட்டது.அதுக்கு முதலில் மிருகங்கள் பரிகாரம் செய்யவேண்டும். அவர்கள் பறவைகளுக்கு சிறகுகள் தரணும்..” என்று பாம்புத்தலைவன் சொன்னான்.

மிருகங்களுக்கு வேறுவழியில்லை. அவர்கள் பறவைகளுக்கு சிறகுகளைக் கொடுத்தனர். அன்று முதல் என்னாச்சு? மிருகங்கள் நிலத்தில் வாழ்ந்தன. பறவைகள் ஆகாயத்தில் பறந்து திரிந்தன. இன்று வரை அப்படித்தானே!

Tuesday 24 July 2012

சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் உடல்- 1

Yajna_14150

 

உதயசங்கர்

 

பண்பாடு என்பதன் பொருளாக ஒரு இனக்குழுவின் பழக்கவழக்கங்கள், அந்த இனக்குழுவின் தோற்றம், வளர்ச்சி, தங்களை நிலை நிறுத்துவதற்கான போராட்டம்,பெருமை, இவற்றைப் பிரதிபலிக்கிற நடைமுறை வாழ்க்கையையும், கருத்துருவான வாழ்க்கையையும் சொல்லலாம். இதை வெளிப்படுத்தவே சடங்குகள் என்று சொல்லப் படும் பண்பாட்டு நிகழ்வுகளை வாழ்க்கை முழுவதும் உருவாக்கி வைத்திருக்கின்றனர். அறிவியல் வளராத காலகட்டத்தில் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட கருத்துருக்களுக்கு ஏற்பவும், பழைய வரலாற்றை நினைவு கூர்ந்து அதைத் திரும்பச் சொல்லும் முறையிலும் சடங்குகளின் நடைமுறை இருந்தது. ஒவ்வொரு பண்பாட்டு நிகழ்வுக்குள்ளும் சடங்குகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப் பட்டன. அது அந்த இனக்குழுவின் அடையாளமாகக் கருதப்பட்டது. இதற்குமப்பால் உளவியல் ரீதியாக அந்த இனக்குழுவின் தன்னம்பிக்கை, ஒற்றுமை, உற்பத்தி உறவுகளின் ஊடாடல், இவற்றை முன்னிலைப்படுத்துவதாகவும் இருந்தது. பண்பாட்டு, சடங்குகள், இவற்றின் அடிநாதமாக கொண்டாட்ட மனநிலை இருப்பதைக் காணலாம். அடுத்தது இனக்குழு கூடி வர்த்தமானங்களை, சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்கிற ஒரு இடமாக அந்த விழாக்கள் அமைகின்றன. தங்களுடைய பூர்வீகத்தை, மூதாதையரை நினைவு கூர்ந்து மீண்டும் ஒரு தங்கள் இனக்குழு அடையாளத்தை உறுதி செய்கிற நிகழ்வாகவும் இருக்கிறது. தங்களுக்கேயுரிய பண்பாட்டு அசைவுகளை மீளவும் ஒரு சடங்காக செய்து பார்க்கிற நிகழ்வாகவும் பண்பாட்டு நிகழ்வுகள் இருக்கின்றன.

என்று பிராமணியம் தன்னுடைய மனுதர்மசாஸ்திரத்தின் மூலம் இந்திய சமூகத்தைத் தன் ஆதிக்கத்தின் கீழே கொண்டுவந்ததோ அன்றிலிருந்து பண்பாட்டு நிகழ்வுகளில் பிராமணமதச்சடங்குகளும் இடம் பெற ஆரம்பித்தன. அவற்றை இடம் பெறச் செய்வதில் இந்து சமயமும், புராண, இதிகாசங்களும் பெரும்பங்காற்றின. அதற்கு முன்பு வரை இருந்த நாட்டார்சமய மரபின் இளகிய தன்மையை இறுகச் செய்தது பிராமணமதம் தான். பிராமண மதத்துக்கான அரசு அங்கீகாரம், ஆதரவு மற்ற நாட்டார்சமய மரபுகளையும் மேல்நிலையாக்கத்தினை நோக்கி உந்தித் தள்ள ஆரம்பித்தது. மனுதர்மசாஸ்திரத்தின் உருக்குபோன்ற விதிமுறைகளை மாற்றவோ, உடைக்கவோ முடியாததினால் பிராமண மதத்தின் சடங்குகளைப் போலச் செய்தலின் மூலம் தங்களையும் அந்தக் கண்ணிக்குள் சேர்த்துக் கொள்கிற யத்தனம் நால்வருணங்களில் உள்ள கீழ்வருணங்களிலும், அவர்களைப் பார்த்து தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் செய்தனர். அரச ஆதரவு பெற்ற மதமாக இருந்த காரணத்தினால் சாம, தான, தண்ட, பேத முறைகளில் பிராமண மதம் தன்னுடைய சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் அத்தனையையும் மொத்த சமூகத்துக்குள்ளும் மிகச் சுலபமாகத் திணித்து விட்டது.

இனக்குழுக்கள் தங்கள் சொந்த அடையாளங்களை இழந்து பிராமணீயத்தின் சூழ்ச்சியான சாதியப்படிநிலைகளை ஏற்றுக் கொண்டனர். உட்பிரிவுகளும் உருவாயின. இப்போது சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் சாதியப்படிநிலைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், , ஒவ்வொரு சாதியும் தங்களுக்குக் கீழ் உள்ள சாதியின் மீதான தங்களது மேலாண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளவுமான நினைவூட்டலாக மாறி விட்டது. அந்தந்தச் சாதியினர் தங்களது எல்லைகளைத் தாண்டாமல் பார்த்துக் கொள்கிற ஏற்பாடாகவும் ஆகி விட்டது. அப்படியே ஏதேனும் மீறல்கள் நடந்தால் அதை அரசின் ஆதரவோடு அடக்கி ஒடுக்கவும் தயாராக மேல்நிலையிலுள்ள உள்ள சாதியினர் தயாராகின்றனர். சாதியப்படி நிலையில் உள்ள தங்களது நிலையை மனதார ஏற்றுக் கொள்ளவே சமய இலக்கியங்கள் புனையப்பட்டு திரும்பத் திரும்ப பாராயாணம் செய்யப்பட்டு, மக்கள் மனதின் ஒப்புதலைப் பெற்றுள்ளனர். எனவே சாதியைப் பற்றி யார் பேசினாலும், யாரிடமும் என்ன சாதி என்று கேட்டாலும் அதைக் கேவலமானதாக கேட்பவரும் நினைப்பதில்லை.பதில் சொல்பவரும் நினைப்பதில்லை. விஷவிருட்சமாய் வேரோடிப் போயிருக்கும் இந்தச் சாதிய மனநிலைகளையும், அதைக் காப்பாற்றும் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களையும் வேரோடு வெட்டியெறிய ஜோதிபா பூலேவையும், அம்பேத்காரையும், பெரியாரையும் தவிர வேறு யாரும் தீவிரமாக முயற்சித்ததாகத் தெரியவில்லை. சமூகசீர்திருத்தவாதிகள் இந்து சமயத்தோடு சமரசமுயற்சியே செய்தனர். அவர்கள் சாஸ்திர, சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்த்த போதும் அவற்றின் உயிரான மனுதர்மசாஸ்திரத்தை எதிர்ப்பதற்கான வேலைத் திட்டம் அவர்களிடம் இல்லை. அது மட்டுமல்ல சூழ்ச்சித் திறன் மிக்க பிராமண மதம் எல்லா சமயச்சீர்திருத்தவாதிகளையும் உட்கிரகித்துக் கொண்டு தன்னைச் செழுமைப் படுத்திக் கொள்ளும் ஆற்றல் மிக்கதாக மாறிக் கொண்டேயிருக்கிறது.k.n.panikkar

முன்னெப்போதையும் விட இப்போது அடையாள அரசியலின் எழுச்சி காரணமாக எல்லாச்சாதிகளும் தங்கள் சாதிய அடையாளங்களை உயர்த்திப் பிடிக்கவும், சாதியப்பெருமைகளைப் பேசவும், தங்கள் குடும்ப விழாக்களிலும், கோவில் விழாக்களிலும், பண்பாட்டு நிகழ்வுகளிலும் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்கிற நிலைமையைக் காணலாம். பிராமணமதம் மீண்டும் ஒரு முறை தன்னை மறுமலர்ச்சி அடையச் செய்து கொண்டுள்ளது. சாஸ்திர, சம்பிரதாய , சடங்குகளின் உயிராக பிராமண மதம் இருக்கிறதென்றால் அதன் உடலாக சாதிகள் இருக்கின்றன, அவைகளே பண்பாட்டுச்சூழலைத் தீர்மானிக்கின்றன. கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. பிரதோஷம், அஷ்டமி, நவமி, என மைல் கணக்கில் கூட்டம் கோவில்களில் கியூவரிசையில் நின்று கொண்டிருக்கிறது. மக்கள் எல்லாக்கோவில்கள் மீதும் படையெடுக்கிறார்கள். முன்னெப்போதையும் விட சாமியார்கள், ஜோசியர்கள், கடல்மணலைப் போலப் பெருகியிருக்கிறார்கள். எந்த எதிர்ப்பும் இல்லாமல் ராஜபாட்டையில் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன சாதிய, மத வாத சக்திகள். இதையெல்லாம் எதிர்த்து மிகப்பெரும் போரை நடத்த வேண்டிய இடது சாரிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்காரியவாதிகளிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. அதனால் அந்தந்த அமைப்புகளுக்குள்ளேயே சாதிய, மத, சடங்கு சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களோடு சமரசம் செய்யும் போக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்குக் காரணம் பண்பாட்டுச் சூழல் குறித்து போதிய கவனமின்மை தான். இதனால் குடிமைச்சமூகத்தைக் கைப்பற்றுவதற்கு அடுத்த இருபது முப்பது ஆண்டுகளுக்கான திட்டத்தை மதவாத சக்திகள் உருவாக்கியிருக்கிற போதும் அடுத்த ஆண்டுக்கான திட்டமே இல்லாமல் இடதுசாரிகள் இருப்பது கவலைக்குரியது.

முன்னெப்போதையும் விட நமது பண்பாட்டுச் சூழல் உலகமயம், சநாதனமயம் என்று இரண்டு பக்கங்களிலிருந்தும் தாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. முதலாளித்துவம் தன்னுடைய உச்சக்கட்ட சுரண்டலான உலகமயமாக்கலின் மூலம் எல்லாநாடுகளிலிருந்தும் பொருள்வளத்தைச் சுரண்டுவது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கிற வேலையைச் செய்கிறது. அந்தந்த நாட்டு மக்களின் தனித்துவமிக்க, பன்முகக்கலாச்சாரத்தை தன் பகாசுர சக்தியினால் ஒடுக்கிவிட முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதே நேரம் இந்த மேற்கத்திய உலகமயமாக்கலின் கலாச்சாரச்சீரழிவுகளை எதிர்ப்பதான பாவனையில் சநாதனமும், பழமைவாதமும் தங்களைப் புணருத்தாரணம் செய்து கொண்டிருக்கின்றன. உலகமயமாக்கலின் விளைவுகளினால் வாழ்வின் ஆதாரங்களை இழந்து கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களை, அதே உலகமயமாக்கலின் விளவுகளினால் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டிருக்கும் சிறுபான்மை மக்களும், மதவாதசக்திகளும் சநாதனத்தின் பக்கம் திசை திருப்புகிறார்கள், இதனால் தங்கள் வாழ்வைப் பறித்தவர்களைப் பற்றியோ, காரணங்கள் பற்றியோ அவர்கள் அறியாமல் பழமையை மீட்டெடுக்கும் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயங்களை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

இத்தகையச் சூழலில் இடதுசாரிகளின் வேலை இன்னும் கடினமாகிறது. அரசியல் ரீதியில் முற்போக்காகவும், பண்பாட்டு ரீதியில் பிற்போக்காகவும் இடதுசாரி அமைப்புகளின் ஊழியர்களே ஆகி விடுகிற நிலைமை உருவாகிவிடுகிறது. இதற்கு புதிய முற்போக்குப் பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடமே காரணம்.வரலாற்றறிஞர் கே. என். பணிக்கர் சொல்வதைப் போல,

“ முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் அரசியல்-பண்பாடு இரண்டுமே சமநிலையில் இயங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக நான் கருதுகிறேன். பண்பாட்டுச் செயல்பாடுகள் மீது அரசியல் செயல்பாடுகள் ஆதிக்கம் செலுத்துமானால் பண்பாட்டின் மீது அரசியல் ஒரு சர்வாதிகாரத்தைச் செலுத்துமானால் சில முன்னாள் சோசலிச நாடுகளில் அப்படித்தான் நடந்தது என்பதை இங்கே நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்- பண்பாட்டு இயக்கத்தால் ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்த இயலாமல், தனது வரலாற்றுப் பங்களிப்பைச் செய்ய இயலாமல் போய் விடும் “

உடனடியாக பண்பாட்டுத்தளத்தில் ஏகாதிபத்தியத்தின், சாதி மத வாதத்தின் பண்பாட்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ளவும், மக்களிடையே விமர்சனக்கண்ணோட்டத்தை வளர்க்கவும், புதிய முற்போக்கு பண்பாட்டுத் தளங்களையும் உருவாக்க வேண்டிய கடமை நமக்கு முன்னால் இருக்கிறது.

நன்றி - தீக்கதிர்

Monday 23 July 2012

வாழ்க்கை

abstract-art-painting-shadesofpeace

உதயசங்கர்

 

எல்லாம் நிதானமாக நடந்தது

இல்லை

எல்லாம் அவசரமாக நடந்தது

எல்லாம் சுலபமாக முடிந்தது

இல்லை

எல்லாம் சிரமப்பட்டே முடிந்தது

எல்லாம் இன்பமாகவே மலர்ந்தது

இல்லை

எல்லாம் துன்பமாகவே விடிந்தது

எல்லாம் தெளிவாகவே இருந்தது

இல்லை  

எல்லாம் குழப்பமாகவே இருந்தது

எல்லாம் கிடைத்தது

இல்லை

எதுவும் கிடைக்கவில்லை

எல்லாம் இருந்தது

இல்லை

எதுவும் இல்லை.

Sunday 22 July 2012

என் மலையாள ஆசான் டி.என்.வி.

 

 

உதயசங்கர்

T.N.VENKITESWARAN_THRISSUR

1986-ஆம் ஆண்டு கோவில்பட்டியிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட செடியாக நான் வேளானந்தல் ஸ்டேஷனில் போய் விழுந்து கிடந்தேன். வாடி வதங்கி ஒரு துளி உயிர்நீருக்காகத் தவித்துக் கொண்டிருந்தேன். மதுரையைத் தாண்டி வெகுதூரம் போனதில்லை. திருச்சிக்கே ஸ்டேஷன் மாஸ்டர் பயிற்சிக்காகப் போனது தான். அப்போதும் யாருடனும் சகஜமாகப் பழகவில்லை. காரணம் எனக்கு அவ்வளவு சகஜமாக யாருடனும் பழகத் தெரியாது என்பது தான். பயிற்சி முடிந்து மேலும் வடக்கே போஸ்டிங் போட்ட போது இன்னும் உள்ளுக்குள் சுருங்கிப் போனேன். எப்போதும் தனிமை என்னைச் சூழ்ந்து இருளெனக் கவிந்திருந்தது. புதிய ஊர், புதிய மக்கள், புதிய மொழி என்னை மேலும் கலவரப்படுத்தியது. தமிழ் தான் என்றாலும் அந்த மக்களின் மொழியே எனக்குப் புரியவில்லை. அதைப் புரிந்து கொள்ளவே கொஞ்ச நாட்களாகியது. எல்லோரும் முரட்டுத்தனமானவர்களாக தெரிந்தார்கள். அதெல்லாம் என் மனப்பிரமை தான். அது மட்டுமல்லாமல் அன்றாடம் இலக்கியம், அரசியல், தத்துவம் என்று பேசித் திரிந்து கொண்டிருந்த நாட்கள் என் கண்ணிலேயே நின்று கொண்டிருந்தது. ஆனால் ரயில்வே ஸ்டேஷன் என்பது வேறு ஒரு உலகமாக இருந்தது.

ரயில்வே சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவிர வேறு எந்தப் பொது விஷயங்களையும் பேசுவதில்லை. நான் தாகத்தால் தவித்துப் போனேன். இப்படியே ஒரு மாதம் கழிந்து விட்டது. யாரோடும் ஒட்ட முடியாமல் நான் தனியாகவே இருந்தேன். உடன் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் என் மீது அநுதாபம் காட்டினர். அதற்கு மேல் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது தான் பக்கத்து ஸ்டேஷனான தண்டரையிலிருந்து வாராந்திர ஓய்வு தருவதற்காக டி.என்.வெங்கடேஸ்வரன் என்ற ஸ்டேஷன் மாஸ்டர் வந்தார். காலையில் விழுப்புரத்திலிருந்து காட்பாடி வரை செல்லும் வண்டி எண்.646 பாசஞ்சர் ரயிலில் வந்திறங்கி முகமன் கூறி அறிமுகப்படுத்தியவர் மேஜை மீது இருந்த கு.சின்னப்பபாரதியின் தாகம் நாவலைக் கையில் எடுத்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அதுவரை நான் எந்தப் புத்தகம் வைத்திருந்தாலும் யாரும் தொட்டுக் கூடப் பார்த்ததில்லை. அவர் தொழிற்சங்கத் தலைவர் என்று கேள்விப்பட்டிருந்தேன். கேரளாவில் திருச்சூருக்கருகில் உள்ள முள்ளூர்க்கரையிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகப் ரயில்வே நிர்வாகத்தால் பழி வாங்கப்பட்டு பனிஷ்மெண்ட் டிரான்ஸ்ஃபரில் தண்டரை வந்திருந்தார். அவருக்குத் தமிழ் தெரியும் என்பது மட்டுமில்லாமல் தமிழ் இலக்கியப்பரிச்சயமும் இருந்ததைக் கண்டு வியந்து போனேன்.

பிறகென்ன அவர் புதுமைப்பித்தனின் கதைகள், ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சிலமனிதர்கள், கு.சின்னப்பாரதியின் தாகம், டி.செல்வராஜின் மலரும் சருகும், மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகள் என்று பேச, நான் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருந்த பஷீரின் இளம் பருவத்தோழி, பாத்தும்மாவின் ஆடு, என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது, நாவல்களையும், தகழியின் செம்மீனையும், கேசவதேவின் கண்ணாடியையும், அந்தச் சமயத்தில் வெளிவந்திருந்த நவீன மலையாளச் சிறுகதைத் தொகுப்பான சமீபத்திய மலையாளச் சிறுகதைகள் புத்தகத்தைப் பற்றிப் பேச அந்த நாள் எனக்கு மறக்க முடியாத நாளாக ஆகி விட்டது. அது மட்டுமல்லாமல் ஊர் ஊராக மக்களிடமிருந்து பணம் பெற்று ’ அம்ம அறியான் “ என்ற மக்கள் சினிமா எடுத்த மகத்தான திரைப்பட இயக்குநர் ஜான் ஆபிரகாமுக்கு திருச்சூரில் பண உதவி செய்த தகவலையும் அவர் சொன்னார். தண்ணீரிலிருந்து எடுத்துப் போட்ட மீனாகத் தவித்துக் கொண்டிருந்த எனக்கு டி.என்.வி. பெருங்கடலாகத் தெரிந்தார். ஒவ்வொரு வாரமும் அவர் வேளானந்தல் வரும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கினேன். அவர் வந்து விட்டால் அவரை விட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நகர்வதில்லை. அரசியல், தொழிற்சங்கம், இலக்கியம், எல்லாவற்றிலும் ஞானமுடையவராக இருந்தார் டி.என்.வி. அவருடைய அநுபவங்களைக் கேட்டாலே ஒருவன் விவேகமும் தைரியமும் உடையவனாக ஆகி விடுவான்.

எத்தனை டிரான்ஸ்ஃபர்கள்! எத்தனை சம்பள வெட்டுகள்! எத்தனை விசாரணைகள்! 1974-ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதனால் 1978-ஆம் ஆண்டு வரை பணி நீக்கம்! கோட்டம் விட்டு கோட்டம் டிரான்ஸ்ஃபர்கள்! இன்னொருவராக இருந்தால் இதற்குள் போராடியதின் எந்தச் சுவடும் இல்லாமல் முடங்கிப் போயிருப்பார்கள். ஆனால் டி.என்.வி. அயராத போராளியாக இருந்தார். அவரிடமிருந்த தீரத்தில் கொஞ்சமாவது எனக்கு இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்கியிருக்கிறேன். அவர் என்னை விட பதினைந்து வருடங்களுக்கு மூத்தவர். ஆனால் தான் வயதிலோ, அநுபவத்திலோ, முதிர்ச்சியிலோ பெரியவன் என்று காட்டிக் கொள்ளாத அருங்குணம் கொண்டவர். என் வயதிலுள்ள இளைஞர்களுக்கு இணையாக கேலியும் கிண்டலுமாக பேசுவார். எனக்கு அவரை விட்டுப் பிரிய மனமேயில்லை. அதனால் எனக்கு ஓய்வாக இருக்கும் போது நான் தண்டரை போய் விடுவேன்.

அப்போது விழுப்புரம்- காட்பாடி செக்‌ஷனில் நிறைய மலையாளிகள் ஸ்டேஷன் மாஸ்டர்களாகப் பணி புரிந்தார்கள். அவரவர் ஓய்வு நாளில் தண்டரை ஸ்டேஷனைப் பார்த்து புற்றீசல் போல புறப்பட்டு விடுவார்கள். அன்று முழுவதும் கொண்டாட்டம் தான். குடம் நிறைய குடிக்கக் கள்ளு, வாத்துக்கறி, மீன் குழம்பு, மாட்டுக்கறி வறுவல், என்று விருந்து தயாராகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்து கொண்டே மலையாளக் கவிதைகளைப் பாடுவார்கள். அதிலும் எமர்ஜென்சி காலத்தில் மலையாளக்கவி கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் எழுதிய “ நிங்ஙள் எண்ட கருத்த மக்கள கொன்னு தின்னல்லோ..” என்ற கவிதையை அவர்கள் கோரஸாகப் பாடும்போது ஆக்ரோஷம் பொங்கும். உண்மையில் அவர்கள் வாழ்க்கையை உயிர்த்துடிப்புடன் வாழ்ந்தார்கள். எனக்குப் பொறாமையாக இருந்தது. அவர்கள் யாரும் தீவிர இலக்கிய வாசகர்கள் கிடையாது. ஆனால் அவர்கள் எல்லோருக்கும் வள்ளத்தோல், தொடங்கி பஷீர், தகழி, கேசவதேவ், பொற்றேகாட்,மலையாற்றூர் ராமகிருஷ்ணன், உரூபு, கமலாதாஸ், எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.என்.வி., முகுந்தன், காக்கநாடன், என்று அத்தனை எழுத்தாளர்களையும் சாதாரணமாக வாசித்திருந்தார்கள். அவர்களுக்கு அவர்களுடைய மொழியின் மீது உண்மையான பெருமை இருந்தது. தமிழை அரசியல் லாபத்துக்காக மட்டும் மொழியைப் பற்றிப் பேசுகிற தமிழக அரசியல்வாதிகளைப் போலவோ, மொழியைப் பற்றி எந்தப் பெருமிதமுமில்லாத தமிழ் மக்களைப் போலவோ அவர்கள் இல்லை. அநேகமாக தமிழ்மக்கள் சினிமாக்களால் மட்டுமே வளர்க்கப் படுகிறார்கள் என்று தோன்றுகிறது. கலை, இலக்கியம், அறிவியல் எல்லாம் இரண்டாம்பட்சம் தான். இங்கே சாதாரணமாக படித்தவர்களிடமே தமிழ் இலக்கியத்தைப் பற்றி, எழுத்தாளர்களைப் பற்றி அறிவியலாளர்களைப் பற்றி கேட்டால் என்ன தெரியும் என்பது கேள்விக்குறியே.

எனக்கு வந்த பொறாமையில் நான் மலையாளம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். என் ஆசையை டி.என்.வி.யிடம் சொன்ன போது உற்சாகமாக எனக்கு அட்சரம் எழுதிக் கொடுத்து உடனே என் ஆசானாகி விட்டார். மற்ற மலையாளத் தோழர்களும் அவரவருக்கு முடிந்த அளவில் எனக்குப் புத்தகங்கள் கொடுத்தும், விளக்கம் சொல்லியும், வாசிக்கச் சொல்லிக் கொடுத்தும் என்னை ஊக்குவித்தனர். அஜய்குமார், ரியாஸ் அலிகான், ராஜன் வர்கீஸ், கேசவ பணிக்கர், என்று எத்தனை நண்பர்கள்! நான் இப்போது ஒரு பத்து புத்தகங்களுக்கு மேல் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து நானும் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற தகுதியோடு இருப்பதற்கு என் ஆசான் தோழர் டி.என்.வி. தான் காரணம்.

மிகச் சிறந்த பேச்சாளரான டி.என்.வி. ரயில்வே தொழிலாளர்களின் விசாரணையில் டிஃபென்ஸ் கவுன்சிலராகவும் போவார். என்ன தான் அவர் மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் அவரைக் கண்டால் அதிகாரிகளுக்குப் பயம் தான். ஏனெனில் அவரால் யாரையும் தன் வசப்படுத்தி விடமுடியும்.யார் சொன்னாலும் கேட்காத, மூக்கய்யர் என்று புகழ் பெற்ற பரமேஸ்வர அய்யரையே வசப்படுத்தியவர் என்ற கதை தெற்கு ரயில்வே முழுவதும் பேசப்படுகிற கதை.

1974- ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட டி.என்.வி. தன் குடும்பத்தைக் கொண்டு செலுத்த ஊட்டியிலிருந்து தேயிலைத்தூளை மொத்தமாக வாங்கி திருச்சூரில் வினியோகம் செய்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் போட்டோ ஸ்டுடியோக்களில் நெகடிவ் கழுவி முடித்த ரசாயனத்தை வாங்கி அதிலிருந்து சில்வர் நைட்ரைட்டைப் பிரித்து விற்பனை செய்திருக்கிறார். எப்படியோ ஜனதா ஆட்சிக் காலத்தில் மீண்டும் வேலையில் சேர்ந்த டி.என்.வி. ஒரு வருட காலத்துக்குள்ளே அடுத்த வேலை நிறுத்தத்திலும் கலந்து கொண்டார். அப்போது முள்ளூர்க்கரை ஸ்டேஷனில் மூக்கய்யர் தான் ஸ்டேஷன் மாஸ்டர். மூக்கு நீண்டு முன்னாடி வளைந்திருந்ததால் அவர் பரமேஸ்வர அய்யர் மூக்கய்யர் ஆகி விட்டார். ஆனால் ஆளு டெர்ரர். அவருக்குக் கீழே பணி புரியும் அத்தனை பேருக்கும் அவர் ஒரு பார்வை பார்த்தாலே போதும் வயிறு கலங்க ஆரம்பித்து விடும். ஆபீசர்களையே பெயர் சொல்லித் தான் கூப்பிடுவார். அவர் ஆபீஸுக்குக் கடிதம் எழுதினார் என்றால் அதற்கு அப்பீலே கிடையாது. அதிகம் பேச மாட்டார். நிர்வாகத்தில் கில்லாடி. எப்போதும் மேலிடத்துக்குச் சாதகமாகவே நடந்து கொள்பவர் என்றெல்லாம் அவரைப் பற்றிப் பல ஒளிவட்டங்கள் சுழன்று கொண்டிருந்தன. அவருக்கு டி.என்.வி.யை பிடிக்கவில்லை என்றும் சொல்ல முடியாது. பிடித்திருந்தது என்றும் சொல்ல முடியாது. ஆனால் டி.என்.வி.யைப் பற்றி எல்லாம் விசாரித்து வைத்திருந்தார். அதனால் டி.என்.வி.யிடம் சற்று மரியாதையுடனும் நடந்து கொண்டார். 1978- ஆம் ஆண்டு ஸ்டேஷன் மாஸ்டர்களின் சங்கமான ஆல் இந்தியா ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் தங்களுடைய யூனிஃபார்ம், பணி உயர்வு, உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக கூட்ஸ் வண்டிகளை வாங்கவோ, அனுப்பவோ போவதில்லை என்று வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர். வேலை நிறுத்தத்துக்கான ஆயத்த வேலைகளை டி.என்.வி. செய்து கொண்டிருந்தார். பிரச்சாரப்பயணம், துண்டுப்பிரசுரம், போஸ்டர், என்று வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையும் அவ்வப்போது ஆபீஸுக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார் மூக்கய்யர். அந்த மாதத்தில் அவர் பணி ஓய்வு பெறப் போகிறார். அதனால் இன்னும் அதிகமான விசுவாசத்தோடு நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நினைத்தார்.

வேலை நிறுத்தத்துக்கு முதல் நாள் டி.என்.வி. டூட்டி முடியும் போது மூக்கய்யர் தான் அவரை மாற்றி விட வந்திருக்கிறார். அவரிடம் நாளைக்கு வேலை நிறுத்தம் என்பதைச் சொல்லி ஸ்டேஷன் மாஸ்டர்களின் கோரிக்கைகளின் நியாயம் பற்றி ஒரு பத்து நிமிடம் பேசியிருக்கிறார். மூக்கய்யர் கேட்டாரா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் டி.என்.வி. சொல்லி விட்டு கடைசியாக அவரும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு விட்டு நம்பிக்கையில்லாமல் வீட்டுக்குப் போய் விட்டார்.

வேலை நிறுத்தநாளன்று காலையில் டூட்டிக்கு வந்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே கூட்ஸ் வண்டியை அனுப்ப மறுத்திருக்கிறார் டி.என்.வி. ஏற்கனவே இதை எதிர்பார்த்திருந்த நிர்வாகம் உடனே அவரை சஸ்பெண்ட் செய்து விட்டு மூக்கய்யரை டூட்டியில் சேர அழைப்பு விடுத்தது. நிர்வாகத்திலிருந்து இன்ஸ்பெக்டர்கள், மூக்கய்யர் வந்து டூட்டி எடுத்து கூட்ஸ் வண்டியை அனுப்பக் காத்திருந்தார்கள்.

குவாட்டர்ஸிலிருந்து ஃபுல் யூனிஃபார்மில் தலையில் தொப்பியுடன் ஸ்டேஷனுக்கு வந்தார் மூக்கய்யர். உள்ளே நுழைந்தவுடன் இன்ஸ்பெக்டர்களிடம் பேசி அலுவலக சஸ்பெண்ட் ஆணையை டி.என்.வி.க்கு கொடுத்து விட்டு அவரை டூட்டியிலிருந்து விடுவித்தார். அதற்குள் இன்ஸ்பெக்டர்கள் சார் முதல்ல கூட்ஸை அனுப்புங்க சார்.. என்று வற்புறுத்தினார்கள். மூக்கய்யர் அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு டூட்டியில் ஜாயின் பண்ணுவதற்கான எல்லாஃபார்மாலிட்டிகளையும் முடித்து விட்டு, நாற்காலியில் உட்கார்ந்து தலையில் இருந்த தொப்பியை எடுத்து மேஜை மீது வைத்து விட்டு அந்த இன்ஸ்பெக்டர்களைப் பார்த்து நானும் கூட்ஸை அனுப்ப மாட்டேன் என்றாரே பார்க்கலாம். யாருமே மூக்கய்யரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. அந்த கூட்ஸ் வண்டியையே ரத்து செய்யவேண்டியதாயிற்று. அந்த வேலை நிறுத்தமும் வெற்றிகரமாக நடந்தது. ஆனால் டி.என்.வி.யை டிரான்ஸ்ஃபர் செய்து விட்டார்கள். அவ்வளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக இருந்தார் டி.என்.வி.

வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் டி.என்.வி. ஆனால் இப்போதும் தொழிலாளர்களுக்கு வகுப்புகள் எடுக்கவும், அவர்களுக்கு வருகிற சார்ஜ் மெமோக்களுக்குப் பதில் எழுதிக் கொடுக்கவும், விசாரணையில் தொழிலாளர் தரப்பில் ஆஜராகவுமாக இருக்கிறார். இன்னமும் இலக்கியம் வாசிக்கவும், எழுத்தாளர் வைசாகனோடு கள்ளு குடிக்கவும், கவிதைகள் பாடவும் செய்கிறார் டி.என்.வி. என் ஆசானே! என் தோழரே டி.என்.வி. உங்களோடு கழித்த அந்த நாட்களை என் நினைவிலிருந்து அழிக்கவே முடியாது. உங்களை என்றென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தோழரே!

நன்றி – மீடியா வாய்ஸ்

Saturday 21 July 2012

சிங்கமும் நாயும்

lionanddog லியோ தால்ஸ்தோய்

தமிழில் - உதயசங்கர்

லண்டனில் காட்டு மிருகங்களைப் பார்ப்பதற்கு மிருகக் காட்சி சாலை வைத்திருந்தார்கள். அவற்றைப் பார்க்க வேண்டுமானால் மக்கள் பணம் செலுத்த வேண்டும் அல்லது நாய்களையோ பூனைகளையோ கொண்டு வரவேண்டும். காட்டுமிருகங்களுக்கு அவை உணவாக வீசியெறியப் படும்.

காட்டுமிருகங்களைப் பார்க்கவேண்டும் என்பதற்காக ஒரு ஆள் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு குட்டி நாயைப் பிடித்துக் கொண்டு வந்தான்.நிர்வாகத்தினர் அவனை உள்ளே அனுமதித்து விட்டனர். அதே நேரம் அந்த குட்டிநாயை சிங்கத்தின் கூண்டுக்குள் வீசியெறிந்தனர்.

அந்தக் குட்டி நாய் வாலை மடக்கித் தன் கால்களுக்கு நடுவே வைத்துக் கொண்டு சிங்கக்கூண்டின் மூலையில் போய் ஒளிந்து கொண்டது.ஆனால் சிங்கம் வந்து மோந்து பார்த்தது.

பிறகு, அந்தக் குட்டி நாய் கால்களை உயரே தூக்கியபடி மல்லாக்கப் படுத்துக் கொண்டு வாலை ஆட்டியது.

சிங்கம் அதைத் தன் காலால் புரட்டி விட்டது.குட்டிநாய் குதித்து எழுந்து தன் பின்கால்களில் உட்கார்ந்து கொண்டது.சிங்கம் அந்தச் சிறிய மிருகத்தைப் பார்த்தது.அதன் தலையை அங்கிட்டும் இங்கிட்டும் திருப்பிப் பார்த்தது.அதற்கு மேல் அதைத் தொடவில்லை.

சிங்கத்தின் எஜமானன் அதற்கு கொஞ்சம் இறைச்சி போட்டபோது சிங்கம் அதில் ஒரு துண்டைக் கிழித்து நாய்க்குட்டிக்காக வைத்தது.

மாலையில் சிங்கம் தூங்கும் போது குட்டிநாயும் அதன் அருகில் சிங்கத்தின் கால் மீது தலை வைத்துப் படுத்துக் கொள்ளும்.

அதிலிருந்து நாயும் சிங்கமும் ஒரே கூண்டில் சேர்ந்து வாழத் தொடங்கின.சிங்கம் குட்டிநாயை ஒரு போதும் துன்புறுத்தவில்லை. அதன் உணவைப் பகிர்ந்துகொண்டது. அதனுடன் சேர்ந்து உறங்கியது.ஏன் விளையாடக் கூடச் செய்தது.

ஒரு நாள் மிருகக் காட்சி சாலைக்கு வந்த ஒரு பணக்காரர் அந்தக் குட்டிநாயை அடையாளம் கண்டு கொண்டார்.அவர் மிருகக்காட்சி சாலை முதலாளியிடம் அந்தநாய் தன்னுடையது என்றும் அதைத் திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டார்.முதலாளியும் கொடுத்துவிட முடிவு செய்தார்.ஆனால் அந்த குட்டிநாயைக் கூப்பிட்ட உடனேயே பிடறி மயிர் சிலிர்க்க சிங்கம் உறுமியது.

குட்டிநாயும் சிங்கமும் சேர்ந்து ஒரு வருடம் முழுவதும் ஒன்றாக வாழ்ந்து வந்தன. ஒரு வருடத்திற்குப் பிறகு குட்டிநாய் நோய்வாய்ப் பட்டு இறந்து விட்டது. சிங்கம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டது. இறந்து போன நாய்க்குட்டியை மோந்து பார்த்துக் கொண்டும் நக்கிக் கொடுத்துக் கொண்டும் காலை அதன் மீது போட்டபடியே இருந்தது சிங்கம்.

நாய்க்குட்டி இறந்து விட்டது தெரிந்ததும் திடீரென குதித்து எழுந்தது. அதன் பிடறிமயிர் சிலிர்த்தது.வாலால் தன்னை அடித்துக் கொண்டது.கூண்டின்சுவர்களில் மோதியது.கூண்டுக் கம்பிகளையும் தரையையும் கடித்துப் பிறாண்டியது.

கூண்டிற்குள் கர்ச்சித்துக் கொண்டே இறந்து போன குட்டிநாயின் பக்கத்திலேயே படுத்துக் கிடந்தது.முதலாளி இறந்த நாயை அப்புறப் படுத்த விரும்பினார்.ஆனால் சிங்கம் யாரையும் அருகில் வர விடவில்லை.

இன்னொரு நாய்க்குட்டியை விட்டால் சிங்கத்தின் துயரம் மறைந்து விடும் என்று முதலாளி நினைத்தார்.இரண்டாவது நாய்க்குட்டியைக் கூண்டுக்குள் விட்டார்.ஆனால் சிங்கம் உடனே அதை துண்டுதுண்டாகக் கிழித்தெறிந்து விட்டது.பிறகு இறந்துபோன அந்த குட்டிநாயைச் சுற்றி கால்களைப் போட்டுக் கொண்டு எந்த அசைவுமில்லாமல் ஐந்து நாட்களுக்கு அப்படியே கிடந்தது.

ஆறாவது நாள் சிங்கமும் இறந்துவிட்டது.

Friday 20 July 2012

அடி வாங்கினவனுக்குத் தான் வலி தெரியும்!

மலையாளத்தில் – மாலி

 

தமிழில் – உதயசங்கர்

Black-Cat-Yellow-Eye-Wallpaper

அப்பாபூனையின் நிறம் கருப்பு.உடம்பு முழுவதும் கரியைத் தேய்ச்சது மாதிரி. அம்மா பூனையின் நிறம் வெள்ளை.பாலினால் செய்தது மாதிரி. அவர்களுக்கு நான்கு குட்டிகள் இருந்தன. முதல் குட்டி அப்பாவைப் போல கருப்பு. அவன் பெயர் கருப்பன். இரண்டாவது குட்டி அம்மாவைப் போல.அவளுடைய பெயர் வெளுப்பி. மூணாவது குட்டியின் உடம்பு கருப்பு, கால்கள் வெள்ளை.அவனுடைய பெயர் வெள்ளைக் காலன். நாலாவது குட்டியின் உடம்பு வெள்ளை கால்கள் கருப்பு. அவளுடைய பெயர் கருங்காலி.

அப்பாபூனைக்கு வேலை அதிகம். அவர் எப்போதும் வெளியிலேயே இருந்தார். எப்போதாவது தான் வீட்டிற்கு வருவார். குட்டிகளை வளர்த்ததோ அம்மாதான்.

கருப்பன் பலசாலி. முன்கோபக்காரன். அவன் அவனிஷ்டம் போல தான் நடப்பான்.இளையவர்களைப் பற்றி யோசிப்பதில்லை. அம்மா பால் கொடுக்கும் போதோ கேட்கவே வேண்டாம். கருப்பன் இளையவர்களைத் தள்ளி விட்டு தான் மட்டும் தனியே பால் குடிப்பான். அது மட்டும்தான் என்றால் கூட பரவாயில்லை போகட்டும் என்று விட்டு விடலாம். அவன் அவர்களை அடிக்கவும் கடிக்கவும் செய்வான். அதனால் அவர்களுக்கு அவனைக் கண்டால் அப்படி பயம்!

ஒரு தடவை குட்டிப் பூனைகள் கரணம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். வெளுப்பி தெரியாமல் கருப்பனின் மேல் விழுந்து விட்டது. வந்ததே கோபம் கருப்பனுக்கு! அவன் வெளுப்பியின் மூக்கில் ஒரு அடி. வெளுப்பி அழுது விட்டாள்.

பின்பு ஒருதடவை பால் குடிக்கிற நேரம். முதலில் வெள்ளைக்காலன் ஓடி வந்து குடித்து விட்டான். கருப்பனுக்குக் கோபம் வந்து விட்டது. அவன் வெள்ளைக்காலனின் வாலில் ஒரு கடி. வெள்ளைக்காலன் அய்யோ என்று அலறி விட்டான்.

இன்னொருதடவை வெயில் காயப் போனார்கள் எல்லோரும். கருங்காலி தெரியாமல் என்ன செய்து விட்டாள் தெரியுமா? கருப்பன் எப்பவும் படுக்கிற இடத்தில் படுத்து விட்டான். அது போதாதா கருப்பனுக்கு. அவன் நகத்தை வைத்து கருங்காலியின் வயிற்றில் ஒரு குத்து. கருங்காலியின் வயிற்றிலிருந்து ரத்தம் துளிர்த்தது.

மூத்த மகனின் குணத்தைப் பார்த்து அம்மாபூனை வருத்தப்பட்டது. ஆனால் பாவம் அம்மாபூனை! யாரையும் தண்டிக்க மனசு வரவில்லை. அறிவுரை மட்டுமே சொன்னது ஆனால் அதெல்லாம் ஒண்ணும் பிரயோசனமில்லை. கருப்பன் மாறவேயில்லை பழைய மாதிரியே இருந்தான்.

ஒரு நாள் அப்பாபூனை வீட்டிற்கு வந்தது. அவரிடம் அம்மாபூனை,” மூத்தமகன் போக்கே சரியில்லை..கொஞ்சம் கவனிங்க..” என்று நடந்ததெல்லாவற்றையும் சொன்னாள்.

அப்பாபூனை கருப்பனை கூப்பிட்டது. “மகனே! சின்னவங்களை அடிக்கக்கூடாது.தெரியுதா?” என்று மரியாதையாகச் சொன்னார்.

அப்பாபூனை வேலைக்குப் போய் விட்டால்? கருப்பன் மறுபடியும் அடிக்கத்தொடங்கினான். தம்பிகளூம் தங்கைகளும் ரொம்பக் கஷ்டப்பட்டார்கள். வேறு என்ன செய்ய?

சில நாடகள் கழிந்தன.அப்பாபூனை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தது. அப்போது என்ன பார்த்தது தெரியுமா? வெள்ளைக்காலன் படுத்து உருண்டு கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான். அம்மாபூனை அவனை தடவிக் கொடுத்து ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தது.

அப்பாபூனை “என்ன நடந்தது?” என்று கேட்டது.

“அப்பா கருப்பண்ணன், வெள்ளைக்காலண்ணனோட காது நுனியைக் கடிச்சித் துண்டாக்கிட்டான்..” என்று கருங்காலி சொன்னாள்.

அப்பாபூனை கருப்பனின் அருகில் சென்றார்.

“டேய்.. கருப்பா..உனக்கு வலிச்சாத்தான் நீ மத்தவங்களை அடிக்காம இருப்பே..” என்று அவர் சொன்னார். சொன்னது மட்டுமில்லையே. அப்பாபூனை பாய்ந்து கருப்பனின் காதில் ஒரு கடி. கருப்பன் கூப்பாடு போட்டான். அப்பாபூனை விடவில்லை.அது மட்டுமா? கருப்பனின் காதுநுனியைக் கடித்துத் துண்டாக்கிவிட்டார். கருப்பன் வேதனையில் நடுநடுங்கிப் போனான்.

“இனி மரியாதையா இருக்கணும்..” அப்பாபூனை சொன்னார்.

அன்றிலிருந்து கருப்பன் யாரையும் அடிப்பதில்லை. கடிப்பதில்லை.

Thursday 19 July 2012

கம்யூனிஸ்ட் மாமுனிவர்

EMS-2 copy220px-Thakazhi_1

தகழி சிவசங்கரம்பிள்ளை

 

தமிழில் – உதயசங்கர்

 

எல்லாவிதங்களிலும் நான் ஆதரிக்கிற இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடினை முதலில் பார்த்தது எப்படி என்று நினைவுபடுத்தமுடியவில்லை. ஏனென்றால் நேரில் பார்ப்பதற்கு முன்பே என்னைக் கவரவும், பாதிக்கவும் செய்த ஆளுமை அவர்.

எனக்குச் சரியாக ஞாபகம் இருக்கிறது. கேஸரிசபையில் நடந்த விவாதங்களுக்கு ஊடே தான் இ.எம்.எஸ். என் வாழ்க்கையில் நுழைந்தார். நான் ப்ளீடர் பரீட்சைக்குத் திருவனந்தபுரத்தில் படித்துக் கொண்டிருந்த காலம். எங்களுக்குக் குரு கேஸரி பாலகிருஷ்ணபிள்ளை. அப்போது கேஸரிசபை புதிய சிந்தனைகளின் இலக்கியசர்ச்சைகளின் கேந்திரமாக இருந்தது. 1930 களில் என்று ஞாபகம். கேஸரி இ.எம்.எஸ்ஸினைக் குறித்து அடிக்கடிப் பேசுவார். சில நேரங்களில் விமரிசனமும் செய்வார். கேஸரியின் தலைமையில் எங்களுடைய சபையில் இ.எம்.எஸ். பல சமயம் சர்ச்சைக்குரிய விஷயமாகியிருந்தார். புரட்சிகரமான சிந்தனைகள் கொண்டவர் என்ற வகையில் புதிய சிந்தனைகளைத் தேடியடைய ஆசைப்பட்ட என்னுடைய மனசில் இ.எம்.எஸ். இடம் பிடித்தார்.

அப்போது தான் ‘ உண்ணி நம்பூதிரி ‘ பத்திரிகையைப் பற்றியும், நம்பூதிரி யுவஜன சங்கத்தைப் பற்றியும் அறிய நேர்ந்தது. புரட்சியின் சாராம்சம் பிடித்திருந்தது. என்னைப் போன்றவர்களுக்கு உண்ணி நம்பூதிரியில் பிரசுரமான கட்டுரைகள் உத்வேகமளித்தன. இந்தப் பத்திரிகையிலுள்ள பல கட்டுரைகளும் கேஸரியின் சபையில் சர்ச்சைக்குரிய விஷயமாயின. இத்தனைக்கும் பின்னால் இ.எம்.எஸ்ஸினுடைய அறிவார்ந்த தலைமை இருந்தது என்று தெரிந்தபோது, அவர் மீதுள்ள மதிப்பு பெருகியது. அன்று திருவிதாங்கூர்காரர்களாகிய எங்களுக்குக் கொச்சியோடும் மலபாரோடும் போதுமான அளவுக்குப் பழக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம் சொல்கிறேன். இ.எம்.எஸ்ஸினுடைய தலைமையிலும் வெளியீட்டிலும் ‘ முற்போக்கு ‘ என்ற பத்திரிகை வெளிவந்தது. உண்ணிநம்பூதிரியில் கிடைத்த உற்சாகத்தில் நான் ஒரு ஓரங்க நாடகம் எழுதினேன். பெயர் ஞாபகத்திலில்லை. ஆனால் உள்ளடக்கம் ஞாபகத்திலிருக்கிறது. நெருப்பை உமிழும் புரட்சி. அநாதை இல்லங்களை உருவாக்கக்கூடாது. இருப்பவைகளையும் சாம்பலாக்க வேண்டும். சமூகத்தை நேராக்க அநாதை இல்லங்களால் முடியாது. அவை மனிதனைச் சோம்பேறியாக்குகிறது. இன்றைய அத்தியாவசியத் தேவையான சமத்துவக்கொள்கைகளுக்கு அவை உபயோகப்படாது. இதே புரட்சிகர நோக்கத்தோடு தான் கேஸரியில் கதைகள் எழுதினேன். நான் மனப்பூர்வமாகச் சொல்கிறேன். இதற்கெல்லாம் ஒரு உந்துசக்தியாக அன்று நான் நேரில் கண்டிராத இ.எம்.எஸ். இருந்தார்.

மிகக் குறைந்த தடவைகளே நான் இ.எம்.எஸ்ஸை நேரில் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போது கொஞ்சம் நலம் விசாரிப்போம். தீர்க்கமான உரையாடலோ, விவாதமோ, கிடையாது. சில மீட்டிங்குகளில் வைத்துத் தான் இந்தச் சந்திப்புகளும் நிகழ்ந்தன. யதார்த்தமாய் நலம் விசாரித்துக் கொள்ளும்போதும் எனக்கு வெளிப்படையாகத் தெரியாத பாசமும் ஆதரவும் உறுதியாக இருந்தது.

முற்போக்கு இலக்கிய அமைப்போடு ஆரம்பம் முதலே நான் தொடர்பு கொண்டிருந்தேன். ஷொரனூர், திருச்சூர், கோட்டயம், கொல்லம், மாநாடுகளில் கலந்து கொண்டுமிருக்கிறேன். 1973 ல் ஷொரனூரில் நடந்த இலக்கிய மாநாட்டில் கேசவதேவோடு கலந்து கொண்ட அநுபவம் உண்டு. அன்று இளம் எழுத்தாளர்களுக்கு கதை கவிதை நாடகம் முதலான இலக்கியப்பிரிவுகளில் போட்டி நடத்தினோம். கேசவதேவும் நானும் சேர்ந்து தான் படைப்புகளைப் பரிசீலித்தோம். ஏராளமான படைப்புகள் கிடைத்தன. ஆனால் அவைகளில் இலக்கியம் இல்லை என்ற விமர்சனம் எங்களுக்கு இருந்தது. அதாவது முற்போக்கு இலக்கிய அமைப்பு உயர்த்திப் பிடித்த சில விஷயங்களோடு வேறுபாடு ஏற்பட்டது. அந்த நிலையில் இ.எம்.எஸ்ஸின் இலக்கியம் சம்பந்தமான நிலைபாடுகளோடு ஒத்துப்போக முடியவில்லை.

முண்டசேரியும் பொதுவாக எங்களோடு உடன்பட்டார். அதே நேரம் இ.எம்.எஸ்ஸினுடைய இலக்கியக் கட்டுரைகளை விருப்பத்தோடு வாசிக்கவும் செய்தோம். கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவர் படைப்புகளின் புதுமையும், யதார்த்தமும், ஆத்மார்த்தமும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. யோசித்துப் பார்க்கும்போது நெருக்கமாகவும் இருந்தது.

ஸி.வி.ராமன் பிள்ளையைப் பற்றி இ.எம்.எஸ். வெளியிட்ட கருத்துகளை அப்படியே என்னால் அங்கீகரிக்க முடியவில்லை. ஸி.வி. நாவல்களின் காலகட்டத்தைப் பரிசோதிக்கும் போது ராஜபக்தி தவறு என்று கருத முடியுமா? கொஞ்சம் தாமதமாக என்றாலும் இ.எம்.எஸ். சில மாற்றங்களை ஏற்றுக் கொண்டதாகத் தெரிந்தது. அது நல்ல விதமாகவே வெளிவந்தது சந்தோஷம்.

உலகப்புகழ் பெற்ற இரண்டு சங்கரன்கள் கேரளத்தில் பிறந்தார்கள் என்று நான் நம்புகிறேன். முதலாவது ஆதி சங்கரர் சங்கராச்சாரிய சுவாமிகள். இரண்டாவது இ.எம்.சங்கரன் நம்பூதிரிபாடு. ஆதி சங்கரன் ஆன்மீகவாதியாகவும், வேதாந்தியாகவும் இருந்தார். சமகாலச் சங்கரன் உன்னதமான அரசியல் சிந்தனையாளராக இருந்தார். மார்க்சிய அறிவிலிருந்து வெளிப்பட்ட புதிய வெளிச்சம் தான் இ.எம்.எஸ். பாரதத்திற்குக் கொடுத்த மகத்தான கொடை. எனக்கு அறிவார்ந்த தலைமையேற்ற இ.எம்.எஸ்ஸின் அறிவு சாதனை படைத்திருக்கிறது. மற்றவையெல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட, தான் நம்புகிற கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்த வாழ்க்கை அவருடைய வாழ்க்கை. இந்த விஷயத்தில் அவருக்குச் சமமாக இன்னொரு ஆளுமையை என்னால் பார்க்க முடியவில்லை. பாரதத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்குத் தெளிவான உருவம் கொடுத்தது இ.எம்.எஸ். தான் என்று நான் நம்புகிறேன். இந்தச் சித்தாந்தத்தின் ஊடே வாழ்க்கைக்கு ஒரு புதிய முகம் தந்து கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைத் தன் வயப்படுத்தியது தான் இ.எம்.எஸ்ஸினுடைய வெற்றிக்குக் காரணம். தீர்க்கதரிசனமும், உயிர்த்துடிப்பு மிக்க அறிவும் கொண்ட ஒருவருக்கே இந்த மாதிரியான தன் வயப்படுத்துதல் முடியும். இ.எம்.எஸ். ஒரு யதார்த்தவாதி. பாரதத்தின் ஆத்மாவின் உயிர்த்துடிப்பாக விளங்கியது யதார்த்தவாதம். அதனால் அவருடைய கருத்துகளை சமகால இந்தியா கவனமுடன் கேட்டது. ஏற்றுக்கொள்ளவோ, விமர்சிக்கவோ செய்தது. பாரத பாரம்பரியத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் திறந்த மனதுடன் நான் சொல்கிறேன். இந்தியாவைப் பொறுத்தவரையிலேனும் கம்யூனிஸ்ட் மாமுனிவர் அவர். லட்சக்கணக்கான இந்தியர்களுக்குப் போலவே எனக்கும் இன்று அவர் ஒரு மாபெரும் உந்துசக்தி.

நன்றி – மலையாளம் வாரிக

Wednesday 18 July 2012

படைப்பும் விமரிசனமும்

 

உதயசங்கர்

116

விமரிசனம் என்பது ஒரு படைப்பைச் சார்ந்து இயங்க வேண்டியது. படைப்பைப் போலவே உயர்ந்து நிற்கவும் கூடியது. சில சமயங்களில் அதன் ஆழ அகல விரிவினால் படைப்புக்குச் சமமாகவும் விமரிசனம் அமையும். என்றாலும் பொதுவாக விமரிசனம் படைப்பினை ஆதார சுருதியாகக் கொண்டு படைப்பிலுள்ள நுட்பதிட்பங்களை வாசகனுக்கும், சிலநேரங்களில் படைப்பாளிக்கே கூட விளக்கும். அதோடு படைப்பிலக்கியக் கொள்கைகளை ஆராய்ந்து ஒப்பிட்டு படைப்பையும் அதன் தாத்பரியங்களையும் துலங்கச் செய்யும். ஆதலால் விமரிசனம் படைப்பின் அளவுக்குச் சுயமாகவும் இயங்கும்.

அழகியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, அதன் வெளிச்சத்தில் படைப்பின் சார்பு நிலையை இனங்கண்டு படைப்பின் சூட்சுமங்களை, அது தொற்ற வைக்கும் அநுபவச்சிலிர்ப்பை தெரிவிக்கும் ஆதாரக்கருத்தினை எடுத்துரைத்து படைப்பின் உள்வெளி அழகினைச் சிலாகித்து, படைப்பின் போதாமைகளை அக்கறையோடு எடுத்துக்காட்டி படைப்பாளி தனது எழுத்துப் பயணத்தின் அடுத்த நிலைக்குச் செல்ல ஊக்குவித்தும், வாசகனுக்கு அந்தப் படைப்போடு ஒரு அந்நியோன்யமான உறவை ஏற்படுத்தும் ஒரு பாலமாகவும் விமரிசனம் அமைய வேண்டும்.

வாசகனைப் பொறுத்தவரை விமரிசனம் படைப்பை நெருங்கிச் செல்ல உதவுகிற பாலமாக மட்டுமே இருக்க வேண்டும். பாலமே பெருந்தடையாகவோ, முன் அபிப்ராயங்களை ஏற்படுத்துகிற பெருஞ்சுவராகவோ மாறி விடக் கூடாது. அப்படி மாறி விட்டால் வாசகன் படைப்பிலிருந்து அந்நியப்பட்டு விடவோ, படைப்பை முன் முடிவுகளோடு அணுகவோ நேரிடும். அப்போது படைப்பை முழுமையாக அதன் அழகோடும் அசிங்கத்தோடும் வாசகன் தரிசிக்க முடியாமல் போகலாம். அப்படி நேருமானால் வாசனுக்கும், படைப்புக்கும், படைப்பாளிக்கும் பெரும் நஷ்டம்.

விமரிசகன் ஒரு வகையில் படைப்பாளியை விடவும் அறிவார்த்தமாக மிகுந்த பலவானாக இருக்க வேண்டும். படைப்பின் நுட்பங்களான வடிவ அழகு, மொழி, நடை, உத்தி, செய்நேர்த்தி, தொழில்திறமை, குறித்த விரிந்த அறிவு வேண்டும். உலக இலக்கியங்கள், பிறமொழி இலக்கியங்கள், உலகளாவிய சமீபத்திய இலக்கியப்போக்குகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். மொழி வரலாறு, இலக்கிய வரலாறு குறித்த பொதுவான கண்ணோட்டமும், தனக்கேயுரிய பிரத்யேகக் கண்ணோட்டமும், வேண்டும். இது வரை வந்துள்ள படைப்புகளைக் குறித்த பரந்த அறிவும், விமரிசனம் செய்யும் படைப்பின் வீரியம் குறித்தும் தெளிவு வேண்டும். தனிமனித விரோதம், வெறுப்புகளினால் விமரிசனம் பாதிப்படையக் கூடாது. அப்படி தனிமனித விருப்பு வெறுப்புகளினால் பாதிக்கப்பட்டு விமரிசனம் தன் நிலை பிறழ்ந்து வெளிப்பட்டால் அது எவ்வளவு ஆதாரங்களோடு இருந்தாலும் எளிதில் சுயமுகம் காட்டிவிடும்.அதேபோல் வேண்டுமென்றே படைப்பில் அதற்கான நியாயங்கள் இல்லாதபோதும் வெறும் புகழுரைகளால் அர்ச்சனை செய்வதும் படைப்பைக் கேலிக்குரியதாக்கி விடும். ஏனென்றால் வெறும் அபிப்ராயங்களை விமரிசனம் என்ற பெயர் கொள்ள முடியாது.

படைப்பை அணுகும்போது படைப்பாளியைப் போலவே தன்னைக் கரைத்து, படைப்பைச் செரித்து, அது தரும் அநுபவ உணர்வினை பூரணமாக உணர்ந்து பின்னர் அதைத் தன் பேரறிவு கொண்டு விளக்கி, அதற்கான தர்க்கநியாயங்களை நிறுவி படைப்பிற்கு அதற்குரிய தகுதியை அளிக்க வேண்டும். விமரிசனங்களில் இரண்டு வகை உண்டு. ஆக்கபூர்வ விமரிசனம், அழிவுப் பூர்வ விமரிசனம். படைப்பாளியின் அடிப்படை நேர்மை மனித மேன்மைக்கானதாக இருக்கும்போது படைப்பு குறித்த நிறைகுறைகளை ஆக்கபூர்வமான வகையில் படைப்பாளி ஏற்றுக் கொள்ளும் வகையிலும், கற்றுக் கொள்ளும் வகையிலும், அடுத்த படைப்பினை இன்னும் சிறப்பாகச் செய்வதற்குத் தயார்படுத்தும் வகையிலும் இருக்கும்படிச் செய்யப் படுவது ஆக்கபூர்வ விமரிசனம்.

படைப்பாளியின் அடிப்படை நோக்கம் மானுட இழிவை, வக்கிரத்தைத் தன் இலக்காகக் கொண்டிருக்குமானால், அதை எவ்வளவுக்கெவ்வளவு தோலுரிக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு மறைந்திருக்கும் அதன் கோரப்பற்களை வெளிப்படுத்தும் விதமாகவும், மனிதவன்மத்தை உள்நோக்கமாகக் கொண்ட படைப்புகளை அடையாளம் காட்டும் விதமாக அழிவுப் பூர்வ விமரிசனம் அமைய வேண்டும். இருப்பதிலேயே இது தான் மிகவும் கடினமான காரியம். இந்த மாதிரியான படைப்புகளும், படைப்பாளிகளும் தான் எல்லாவித சித்து வேலைகளையும் காட்டுவார்கள். உண்மையோவென மயங்க வைக்கும் நிழல் தோற்றங்களை ஏற்படுத்துவார்கள். இவர்களின் உண்மைச் சொரூபத்தை உலகிற்கு தெரிவிக்க விமரிசகனுக்கு ஓயாத படிப்பும் தீராத தேடலும் வேண்டும்.

மனித சமூக வரலாறு குறித்த தெளிந்த ஞானம், கலையின் தோற்றம், வளர்ச்சி குறித்த அறிவு, படைப்பியக்கம் குறித்த இயங்கியல் படைப்பின் நுட்பங்கள் குறித்த கூருணர்வு, இவையெல்லாம் கொண்டு ஒரு விமரிசகன் இயங்க வேண்டும்.

ஒரே படைப்பில் கூட சில முற்போக்கான கூறுகளும், சில பிற்போக்கான கூறுகளும், இருக்கலாம். ஒரே படைப்பாளியே சில முற்போக்கான, மனிதமேன்மையை வேண்டும் படைப்புகளைப் படைத்து விட்டு, அவரே அவருடைய வேறு சில படைப்புகளை மோசமானதாகவும் படைத்திருக்கலாம். கருத்தளவில் முற்போக்காகவும் கலைரீதியில் வெறும் குப்பையாகவும் படைப்பு இருக்கலாம். வடிவத்தில் மிகச் சிறந்ததாகவும் உள்ளடக்கத்தில் மிக மோசமாகவும் இருக்கலாம். சாதாரண வாசகனை விடவும் விமரிசகன் இதனை உடனே கண்டு கொள்வான். அதற்குத் தேவையான பயிற்சியையும், உழைப்பையும் அவன் செலுத்த வேண்டும்.

எப்பேர்ப்பட்ட படைப்பையும் அதன் வேரிலிருந்து நுனிவரை இனங்கண்டு வெளிப்படுத்த வேண்டியது விமரிசகனின் வேலை. சில சமயம் இந்தக் காரியத்தினால் படைப்பின் தீ வாசக மனங்களில் பற்றிப் பிடித்து, செயல்திறன் மிக்க பௌதீக சக்தியாகவும் மாறக்கூடும். அது சமூக மாற்றத்துக்குத் துணை செய்யும் வல்லமை கொண்டதாக உருமாறும்.

Tuesday 17 July 2012

குறையொன்றுமில்லை

உதயசங்கர்

 

அறைக்குள் வளர்ந்ததொரு தொட்டிச்செடிHydrangeas

தன் தலைக்குமேல் பூசிய வெளிர்நீலநிறத்தையே

காமுற்றது வானமென

நீர்த்தெளிப்பானால் நனைந்த வேர்நாவுகளால்

முயங்கியது தொட்டியின் மண்ணை

நிதமும் வண்ணமயமாய் பூத்து

சிரிக்க வைத்தது எஜமானனை

ஏறத்தாழ மகிழ்ச்சியின் சிகரத்தில்

வீற்றிருந்தது 

ஆனால் ஒருபோதும் ஒருவண்ணத்துப்பூச்சியோ

ஒரு தேன் சிட்டோ

தன் மீதேன் அமரவில்லை

என்று மட்டும் புரியவேயில்லை

மற்றபடி குறையொன்றுமில்லை.

Monday 16 July 2012

கரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி

 

உதயசங்கர்

poomani2_thumb[4]

எண்பதுகளில் கோவில்பட்டியின் எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் அங்கே இரண்டு எழுத்தாளர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். டீக்கடைகளுக்குப் போனால் அங்கே இரண்டு எழுத்தாளர்கள் தாஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையைப் பற்றியோ, நட் ஹாம்சனின் நிலவளம் பற்றியோ, செல்மா லாகர் லவ்வின் தேவமலரைப் பற்றியோ, நதானியல் ஹாத்தனின் அவமானச்சின்னம் பற்றியோ, கார்க்கியின் தாய் பற்றியோ, ஷோலக்கோவின் டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது பற்றியோ, தால்ஸ்தோயின் அன்னாகரீனினாவைப் பற்றியோ, அனடோல் ஃப்ரான்ஸின் தாசியும் தபசியும் பற்றியோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். வாசிப்பின் தீவிரமும், விவாதங்களின் உக்கிரமும் கூடி நின்ற காலமாக அது இருந்தது.

கடுமையான வெயிலின் பொழிவு மாலை நெருங்க நெருங்க மெல்லத் தணியும். பகலில் புழுதி பறந்த தெருக்கள் அமைதியடையும். கசகசத்த வியர்வைப் புழுக்கத்தில் முகத்தைச் சுழித்தபடி அலைந்த மக்கள் தங்கள் முகங்களில் புன்னகையைச் சூடிக் கொண்டு உலாத்துகிற வேளை. பகலில் பார்த்த மனிதர்களா இவர்கள் என்று மாலைச் சூரியன் வியந்தபடியே மேற்கில் மறையத் தொடங்குவான். எப்போது சூரியன் மயங்குவான் என்று காத்திருந்தது போல மெல்லிய காற்று நகரமெங்கும் தன் சிறகுகளால் வருடத் தொடங்கும். அது வரை எங்கிருந்தார்கள் என்று வியக்கும்படி யுவன்களும் யுவதிகளும் வீதிகளில் உலா வருவார்கள். காதலர்கள் தங்களுடைய காதலிகள் வழக்கமாக வருகிற இடங்களில் நிலை கொண்டு காத்திருப்பார்கள். பகல் முழுவதும் நிழல் கிடைத்த இடங்களில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் காந்தி மைதானத்தை நோக்கி மெல்ல நடை பயிலுவார்கள். ஒவ்வொருவராக வந்து சேர்ந்து ஒரு பெரிய வட்டம் போட்டு மைதானத்தின் நடுவே உட்கார ஆரம்பிக்கும் கோவில்பட்டியின் இலக்கியக்கூட்டம். யாரும் யாருக்கும் அழைப்பு விடுப்பதில்லை. ஆனால் தினமும் கூடிப் பேசுவது என்பது ஒரு நாளும் நின்றதில்லை.

பேசும் பொருளோ, பேச்சின் திசையோ, யாருடைய தீர்மானத்திலும் இல்லை. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் துவங்கி முன்னோட விவாதம் துவங்கும். அன்றைய அரசியல், தத்துவம், பெரும்பாலும் இலக்கியம் என்று பேச்சின் வெள்ளம் காந்திமைதானத்தை மூழ்கடிக்கும். பெரும் சண்டையோவென மற்றவர்கள் பயப்பட விவாதம் பகலின் வெம்மையை மிஞ்சும். அப்படியே ஒரே கணத்தில் பேச்சு சிரிப்பாகும். கிசுகிசுப்பாகும். சிகரெட்டுகளின் கனல் பொங்கும் நுனிகள் இருளில் துலங்கும். அன்று நாவல் பற்றிய உரையாடலாக இருக்கலாம். தமிழ்ச்சிறுகதைகள் பற்றியதாக இருக்கலாம். தான் எழுதிக் கொண்டு வந்த கவிதையை ஒருவர் வாசிக்கலாம். அப்போது தான் புத்தம் புதிதாய் வந்த புத்தகம் குறித்து இருக்கலாம். அன்று வெளியூரிலிருந்து வந்த எழுத்தாளரைப் பேட்டி காணலாம். நவீன நாடகங்களைப் பற்றிய கலந்துரையாடலாக இருக்கலாம். கலைப்படங்களைக் குறித்து விவாதமாக இருக்கலாம். இசங்கள் குறித்த பார்வைகளை பகிர்ந்து கொள்வதாக இருக்கலாம். இப்படி எதைக் குறித்தும் பேசுகின்ற இடமாக அந்த இலக்கியக் கூட்டம் இருந்தது.

இலக்கியவாசகனாக. புதுமைப்பித்தன், கு.ப.ரா, கு.அழகிரிசாமி, கி.ரா.என்ற வரிசைக்குப் பின் வண்ணநிலவன், வண்ணதாசன், அசோகமித்திரன், பூமணி என்ற வரிசையில் வாசிக்க நேர்ந்தது. என் பாலிய காலத்தின் நினைவுச் சுவடுகளென திருநெல்வேலி வயற்காட்டு வாசமும் தாமிரபரணித் தண்ணீரும் இருந்ததனால் வண்ணநிலவனும், வண்ணதாசனும் என் அன்புக்குரியவர்களாக ஆகி விட்டார்கள். அவர்களுடைய மொழியும் நடையும் என் மனதில் அப்படியே சம்மணம் போட்டு உட்கார்ந்து விட்டன. எத்தனை முறை கலைக்க முடியாத ஒப்பனைகளையும், எஸ்தரையும் வாசித்திருப்பேன் என்று சொல்லமுடியாது. அவர்களைப் போலவே எழுதவும் துணிந்தேன். ஆனால் கரிசல் மண்ணின் விருவுகள் விட்ட பெருமூச்சைக் குடித்தபடியே வளர்ந்த கோவில்பட்டியில் கி.ரா. என்ற முன்னத்தி ஏருக்குப் பின்னால் புத்தம் புதிதாய் உழவுசால் போட்ட பூமணியின் எழுத்து எனக்குப் பிரமிப்பூட்டியது.

வயிறுகள், ரீதி, என்ற சிறுகதைத் தொகுப்புகளை வாசித்த பிறகு பூமணி என்ற ஆகிருதி என் மனதில் பிரமாண்டமாக எழுந்து நின்றார். கரிசல் மண்ணின் மக்களை ரத்தமும் சதையுமாக தன் எழுத்தில் பதிவு செய்திருந்தார். கரிசல் மண்ணின் ருசியை கி.ரா. எல்லோரும் சுவைக்கக் கொடுத்தாரென்றால் அந்த மண்ணின் வெக்கையை, கோபத்தை, ஆக்ரோஷத்தை, அவலத்தைப் பூமணி கண்முன்னே நிறுத்தினார். கி.ரா. ஒரு அற்புதமான கதைசொல்லியென்றால் பூமணி கதை நடக்கும் இடத்தில் நம்மைப் பார்வையாளனாக இருத்தி வைக்கிறார். நம் கண் முன்னே நடக்கின்ற கதையை நடத்துகிற பூமணியைக் காணமுடிவதில்லை. அவர் நாம் எதைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தாரோ அதைப் பார்க்கும் விதமாக தன் கலையின் வசீகரத்தால் நம்மை வசப்படுத்துகிறார். கதையின் நிகழ்வு துவங்கும் போது நாம் பூமணியை மறந்து விடுகிறோம். அவரும் தன்னடக்கத்தோடு தன்னை மறைத்துக் கொள்கிறார். வாசித்து முடியும்போது தான் தெரிகிறது பூமணி என்ற மகத்தான கலைஞனின் கலையாளுமை. தன் கலையின்கோணத்தில் தன் முற்போக்குப் பார்வையை தெளிவு படுத்துகிறார். இடையில் ஒரு சொல் சொல்வதில்லை. ஆனால் கதை நம்மை கோபம் கொள்ள வைக்கிறது. ஆவேசப்பட வைக்கிறது. சமூகவிமர்சனத்தைக் கூராக்குகிறது. சமூக மாற்றத்தைக் கோருகிறது.

கரிசலின் அந்திவானம் வர்ணங்களால் குழம்பியிருந்தது. அந்த இரவில் கோவில்பட்டி இலக்கியக்கூட்டத்தில் புதிதாய் ஒருவர் வந்து சேர்ந்திருந்தார். நான் சற்று தாமதமாகப் போய் வட்டத்தில் இணைந்திருந்தேன். மெலிந்து உயரமாக குட்டையான தலைமுடியுடன்,சிவந்த நிறத்துடன் ஒரு போலீஸ்காரரைப் போலவே தோற்றமளித்தார் அவர். மெல்லிய குரலில் அவர் பேச மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். என் அருகிலிருந்த கவிஞர் தேவதச்சனிடம் யார்? என்று கிசுகிசுத்தேன். அவர் பூமணி என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. எழுத்தின் வழியே நான் உருவகித்திருந்த பூமணி இல்லை இவர். சற்றே ஏமாற்றத்துடன் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். மெல்லிய ஆனால் உறுதியான குரலில் அவர் மார்க்சிய அழகியல் கோட்பாடுகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அவருடைய விவாதப்பாங்கு, கருத்துகளின் கூர்மை, என்னை மிகவும் ஈர்த்தது. கூட்டம் முடிவடையும் தருணம் என்னை அறிமுகம் செய்து கொண்ட போது உற்சாகத்துடன் என்னுடன் உரையாடினார். அவருடைய கதைகள் குறித்துப் பேசிய போது கவனமாகக் கேட்டார். அதுவரை நான் எழுதிய கதைகளை அவரிடம் படிக்கக் கொடுக்கலாமா என்று தயங்கியபடியே கேட்டேன். அவர் உடனே கொடுக்கும்படி சொன்னார். அதற்கடுத்த மாதத்தில் த.மு.எ.ச. வின் மாநிலமாநாடு சென்னையில் நடந்தது. அங்கு பார்வையாளராக வந்திருந்தார். அப்போது நான் கொடுத்த கையெழுத்துப் பிரதிகளை வாங்கிக் கொண்டுபோய் படித்து விட்டு மிக விரிவாக ஒரு கடிதம் எழுதினார் பூமணி. எழுத்தின் சூட்சுமங்கள் குறித்து நான் விளங்கிக் கொள்ள பல குறிப்புகள் அந்தக் கடிதத்தில் இருந்தன.

தமிழிலக்கியத்தில் தலித் இலக்கியம் என்ற வகை மாதிரி உருவாவதற்கு முன்னரே பிறகு, வெக்கை,போன்ற தமிழிலக்கியத்தின் முக்கியமான நாவல்களை எழுதியிருந்தார் பூமணி. தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் நிதியுதவியுடன் கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். நாசர், ராதிகா, சார்லி, போன்ற திரைக்கலைஞர்கள் பங்கு பெற்ற அந்தத் திரைப்படமும் கரிசல்வாழ்வின் அவலத்தைக் கூறும் படமாகவே வெளிவந்தது. பல திரைப்பட விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

யதார்த்தவாதத்தின் மகத்தான நாவல்களாக பூமணியின் ’ பிறகு ‘ ‘ ’வெக்கை’ நாவல்கள் திகழ்கின்றன. பிறகு நாவல் சுதந்திரம் பெறும்போது துவங்குகிறது.அழகிரிப்பகடையைக் கதாநாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். ஒரு கரிசல் கிராமத்தின் மாற்றம், தீப்பெட்டியாபீஸ் வருகிற போது மனித உறவுகளில் ஏற்படும் மாற்றம் என்று அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தின் வரலாறாக விரிகிறது. தமிழில் எக்காலத்தும் சிறந்த நாவல்களில் ஒன்றாக பிறகு இருக்கும். அதே போல நிலத்தை அபகரிக்க நினைக்கும் வடக்கூரானை வெட்டிச் சாய்த்து விட்டு தலைமறைவாகத் திரிந்து நீதிமன்றத்தில் சரணடையும் வரையிலான நிகழ்வுகளை விறுவிறுப்புடன் சொல்லுகிற நாவல் வெக்கை. இப்போது வெளிவந்திருக்கும் அஞ்ஞாடி என்ற பெரும்படைப்பு இருநூறு ஆண்டு கால வரலாற்றைச் சொல்கிறது. கரிசல் கிராமத்தில் ஒரு அஞ்ஞாடிப்பள்ளருக்கும், ஏகாலிக்கும் இடையில் உருவாகும் நட்பாகத் துவங்கும் நாவல் எட்டையபுரம் வரலாறு, கட்டபொம்மன் வரலாறு, ஊமைத்துரை வரலாறு, கழுகுமலை கலவரம், சிவகாசிக் கொள்ளை என்று வரலாற்றின் பக்கங்களை விரித்துக் கொண்டே செல்கிறது. மனித விகாரங்களின் வழியே வரலாறு அதன் பொருண்மையான தளத்திலிருந்து நகர்ந்து மானுட அவலத்தின் குரலாக ஒலிக்கிறது அஞ்ஞாடி..

எப்போதும் கரிசல் பூமியில் அழியும் விவசாயத்தைப் பற்றியும், தீப்பெட்டியாபீஸுகளில் வதைபடும் குழந்தைகளைப் பற்றியும், ஒடுக்கப்படும் சாமானியர்களைப் பற்றியும் கவலையே பூமணியின். படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது.

கோவில்பட்டிக்கருகிலுள்ள கரிசல் கிராமமான ஆண்டிபட்டியில் பிறந்து கல்லூரிப்படிப்பு முடித்து கூட்டுறவுத்துறையில் பதிவாளராக ஓய்வு பெற்று இப்போது கோவில்பட்டியில் வசித்து வரும் பூமணி கோவில்பட்டிக்கு வந்த புதிதில் மறுபடியும் எண்பதுகளில் சந்தித்த மாதிரி நண்பர்களைச் சந்திக்க ஆவல் கொண்டார். இப்போதும் காந்திமைதானத்தில் கூட்டம் கூட்டமாய் மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் கவிஞர் தேவதச்சன் இல்லை, எழுத்தாளர் கௌரிஷங்கர் இல்லை, கவிஞர் அப்பாஸ் இல்லை, எழுத்தாளர் கோணங்கி இல்லை, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் இல்லை, வித்யாஷங்கர் இல்லை, எழுத்தாளர் நாறும்பூநாதன் இல்லை, எழுத்தாளர் அப்பணசாமி இல்லை, எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் மதிப்பிற்குரிய எழுத்தாளர் பூமணி இல்லை. ஆனால் அவருடைய மெல்லிய உறுதியான குரல் எனக்குக் கேட்கிறது. அந்தக் குரலின் தனித்துவம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. இலக்கியத்தின் நுட்பங்கள் குறித்தும், மார்சிய அழகியல் குறித்தும், மானுட அவலம் குறித்தும் சமூகமாற்றம் குறித்தும் அமைதியாக, அதே நேரம் அழுத்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் கரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் எங்கள் அன்புக்குரிய பூமணி.

Sunday 15 July 2012

பாஞ்சானின் சிரிப்பு

உதயசங்கர்

an_untitled_portrait_modern_art

என்னுடைய பாலியகால நண்பர்களில் பலருடன் இப்போது எனக்குத் தொடர்பே இல்லை. அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று தெரியவில்லை. இப்போது யோசிக்கும் போது எத்தனையெத்தனை நண்பர்கள்! எங்கள் கன்னிவிநாயகர் கோவில் தெருவில் நாங்கள் ஆடிய ஆட்டங்கள், விளையாட்டுகள், நாடகங்கள், இருளப்பசாமி கோவிலில் தும்பைச் செடிகளைக் கொத்தாகப் பறித்துக் கொண்டு வண்ணத்துப்பூச்சிகளைப் பிடித்தது, அசங்காமல் அப்படியே தரையில் படுத்தபடியே போய் தட்டான்களைப் பிடித்தது, மழைக்காலத்தில் எப்படியோ உருவாகி அருகம்புல்லில் ஊர்ந்து கொண்டிருக்கும் பாப்பாத்திப்பூச்சியைப் பிடித்து தீப்பெட்டியில் அடைத்து வளர்ப்பது, பொன்வண்டுகளைப் பிடித்து அதற்கென்று ஒரு சிறு பெட்டி செய்து அதில் அவற்றை விட்டு, காலை, மதியம், இரவு, என்று அதைக் கவனித்துக்கொண்டிருப்பது, எருக்கம்செடிகளில் இலைகளுக்குப் பின்னால் கூட்டுப்புழுவாக இருக்கும் வண்ணத்துப்பூச்சியின் கூட்டை அப்படியே இலையோடு பிய்த்து வீட்டில் வைத்து வண்ணத்துப்பூச்சி கூட்டை உடைப்பதை, ஒரு மொட்டு மலர்வதைப் போல அதன் சிறகுகள் மெல்ல விரிவதை, பார்ப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். புழுதியில் இருக்கும் இரண்டு கொம்புகள் மாதிரி அமைப்பு இருப்பதினால் மாட்டுப்பூச்சியெனப் பெயர் பெற்ற சின்னஞ்சிறு பூச்சியினை உள்ளங்கையில் சுழலவிட்டு அது ஏற்படுத்தும் கூச்ச உணர்வினால் சிரித்து மகிழ்வது, என்று எவ்வளவு ரம்மியமாக இருந்திருக்கிறது பாலியகாலம்!

எங்கள் தெருவில் இருந்த பெரியவீட்டில் குடியிருந்த அம்பலவாணன் முதலில் சிங்கம்புணரிக்கு மாற்றலாகிப் போனான். பின்னர் அசோக், உமாசங்கர், சின்னத்தம்பி, ராக்கையா, நெல்லையப்பன், கண்ணாயிரம், மந்திரமூர்த்தி, இன்னும் ஞாபகத்தின் இடுக்குகளில் மறைந்து போன எத்தனையோ நண்பர்கள். பள்ளிப்பிராயத்தில் மிகுந்த பக்திமானாக இருந்தேன். அநேகமாக செண்பகவல்லியம்மன் கோவிலின் அத்தனை விசேஷங்களுக்கும் போய்விடுவேன். இன்று என்ன அலங்காரம், என்ன வாகனத்தில் உற்சவம், யார் மண்டகப்படி, என்று தகவல்களை விரல்நுனியில் வைத்திருந்தேன். அது மட்டுமல்ல உற்சவத்துக்கு முன்னால் தெருக்களில் முரசறைந்து கொண்டு போகும் என் வயதொத்தவர்களோடு நானும் முரசறைந்திருக்கிறேன். என்ன சாமியாடுகிற கோவில்களைக் கண்டால் மட்டும் கொஞ்சம் பயமாக இருக்கும். அதுவும் அந்தக் கோவில்களில் கொடை நடக்கும்போது பசங்க எல்லோரும் அங்கேயே கிடப்பாங்க. ஆனால் நான் கொஞ்சம் தூரமாகவே இருப்பேன். அந்த ரெண்டாங்கு மேளமும், சாமியாடுகிறவர்கள் போடுகிற சத்தங்களும், எனக்கு வயிற்றைப் பிசையும். சாமிகள் வேறு துடியானவர்களா! நான் அந்தச் சாமிகளை நேருக்கு நேர் முகம் கொடுத்து பார்ப்பதையே தவிர்ப்பேன்.

நான் சுமாராகப் படிக்கிற கோஷ்டி. ஆனால் எங்கள் தெருவிலிருந்த மந்திரமூர்த்தி ரெம்ப நல்லா படிக்கிறவன். வகுப்பில் எப்போதும் அவன் தான் ஃபர்ஸ்ட். அவன் ரெம்ப டீசெண்டாக இருப்பான். எங்களை மாதிரி புழுதிக்காட்டில் புரளமாட்டான். குண்டியில் கிழியாத டவுசர் போட்டிருப்பான். மேலே சட்டையோ, முண்டா பனியனோ இல்லாமல் அவனை வெளியே பார்க்க முடியாது. பள்ளிக்கூடம் போகும்போதும் வரும்போதும் மட்டும் தான் எங்கள் மேலில் சட்டையிருக்கும். மற்ற நேரங்களில் புழுதி தான். அதோடு மந்திரமூர்த்தியின் பேச்சும் அவன் செய்கைகளும் பெரியவர்கள் பேசுவதைப் போல செய்வதைப் போல மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கும். யாரிடமும் தயக்கமின்றிப் பேசுவான். பேசும்போது கொஞ்சம் கர்வம் கூட இருக்கும். பேச்சுப்போட்டிகளில் பரிசு வாங்குவான். கட்டுரைப்போட்டிகளில் பரிசு வாங்குவான். எனவே எங்கள் பொறாமைக்குரியவனாக ஆகிவிட்டான். சதா நேரமும் அவனைப்பற்றிப் பேசுவதும், கருவுவதுமாக இருப்போம். அவனை மாதிரி முதல் ரேங்க் எடுக்கவேண்டும் என்ற ஆவல் எனக்குள் கொழுந்து விட்டெரிந்தது. அதற்காக எல்லாக் கோவில்களுக்கும் போய் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தேன். எங்களுடைய தெருவுக்கு இரண்டு தெரு தள்ளியிருந்த பாஞ்சான் என்கூடத் தான் படித்துக் கொண்டிருந்தான். அவனும் என்னுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டான்.

பரமசிவன் என்ற அவன் பெயர் எப்படி பாஞ்சானாகியது என்று தெரியவில்லை. அவன் எப்போதும் சிரித்துக் கொண்டேயிருந்தான். சிரிப்பென்றால் புன்னகையல்ல. பல் தெரிகிற சிரிப்பு. வகுப்பில் வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிக்கும்போது சிரித்துக் கொண்டிருப்பான். அவர் அவன் சிரிப்பதைப் பார்த்து எழுப்பிக் கேள்வி கேட்கும்போதும் சிரிப்பான். அவர் அவனுடைய சிரிப்பினால் எரிச்சலுற்று அவனைப் பிரம்பினால் அடிப்பார். அப்போதும் சிரிப்பான். உடனே இன்னும் வெளம் அதிகமாகி அவன் அழும்வரை அடிப்பார். அவர் போய் மற்ற வாத்தியார்களிடம் சொல்லி வருகிற வாத்தியார்கள் எல்லாம் வகுப்புக்கு வந்ததிலிருந்து அவனையே கண் வைத்து அடிப்பதும் நடக்கும். இத்தனைக்கும் அவன் படிப்பில் மோசமில்லை. என்னைப் போல சுமாராகப் படிக்கிற பையன் தான்.. அந்தச் சிரிப்பு தான் அவனுக்கு எதிரியாக இருந்தது. எப்போதும் சிரிப்பு. எதற்கெடுத்தாலும் சிரிப்பு. விழுந்தாலும் சிரிப்பு. எழுந்தாலும் சிரிப்பு. என்ன பேசினாலும் சிரிப்பான். எதற்காகச் சிரிக்கிறான் என்று கேட்டால் அதற்கும் சிரிப்பான். சிரிக்காமல் இருக்கும் கணங்களே இல்லை என்று சொல்லி விடலாம். எல்லோரும் தன்னைக் கேலி செய்கிறான் என்றே நினைத்தார்கள். இதனால் எல்லோரும் அவன் மீது எரிச்சல் பட்டார்கள். கோபப்பட்டார்கள். அவன் கைகளினால் வாயை மூடிச் சிரிப்பை மறைக்க முயற்சி செய்வான். ஆனால் சிரிப்பு மறையாது. அந்தச் சிரிப்பு அவன் இந்த உலகத்தையே கேலி செய்கிற மாதிரியான சிரிப்பு. நிரந்தரமாக அவனுடைய முகத்தில் சிரிப்பை ஒட்டவைத்த மாதிரி இருக்கும்.

நான் கூட பலமுறை கேட்டிருக்கிறேன்.

“ எதுக்குடா எப்ப பாத்தாலும் சிரிச்சிகிட்டே இருக்கே..”

அதற்கு அவன், “ தெரியலடா..நானும் சிரிக்கக் கூடாதுன்னு தான் நெனைக்கேன்.. ஆனா தானா சிரிப்பு வருது…” என்று சிரித்துக் கொண்டே சொல்வான்.

நானும் அவனும் சேர்ந்து படிக்க ஆரம்பித்தோம். சேர்ந்து சுற்ற ஆரம்பித்தோம். அவன் படிக்கும்போதும் அவனுடைய வழக்கமான சிரிப்புடன் நெஞ்சில் தட்டிக் கொண்டே தான் மனப்பாடம் செய்வான். அவனுடைய கையெழுத்து ஊசி ஊசியாய் இருக்கும். அவன் கையில் பேனாவை எழுத்தாணியைப் பிடித்திருப்பதைப் போலவே பிடித்து எழுதுவான். அதனால் தானோ என்னவோ பரீட்சையில் எப்போதும் ஏதாவது கேள்விகளை எழுதமுடியாமல் விட்டு விட்டு வந்து விடுவான். எழுத நேரம் போதவில்லை என்று சொல்லுவான். நான் பதில் தெரியாமல் கேள்விகளை விட்டு விட்டு வருவேன். அவன் பதில் தெரிந்தும் எழுதமுடியாமல் விட்டு விட்டு வருவான். பரீட்சை முடிந்ததும் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வோம்.

ஊரில் உள்ள ஒரு கோவில் விடமாட்டான் பாஞ்சான். எத்தனை சிறிய கோவிலாக இருந்தாலும் சரி பார்த்து விட்டால் போதும் நின்று நெற்றியிலும் நெஞ்சிலும் மாறி மாறி கைகளை வைத்து வாயில் ஏதோ முணுமுணுப்பான். நெற்றியில் எப்போதும் திருநீறு பூசியிருப்பான். ஆனால் அது ஒரு நவீன ஓவியம் போலவே இருக்கும். எனக்கு அவனைப் பார்த்து ஆசை வந்து விட்டது. இயல்பாகவே எங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் அத்தனை பக்தியோ, சம்பிரதாயங்களைப் பின்பற்றுகிற பழக்கமோ கிடையாது. கோவிலுக்கும் வழக்கமாகப் போகிற பழக்கமும் கிடையாது. ஏதோ நல்லநாள், பொல்லநாளுக்குத் தான் கோவில் பக்கம் எட்டிப் பார்ப்பார்கள். இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த நானும் பாஞ்சான் அளவுக்கு பக்திமானாக இல்லாததில் வியப்பொன்றுமில்லை. பாஞ்சான் கூடப் பழக ஆரம்பித்ததிலிருந்து நானும் அவனுடன் சேர்ந்து கோவில் கோவிலாகச் சுற்ற ஆரம்பித்தேன். அதுவரை மார்கழி மாதத்தில் காலை ஏழு மணிக்கு முன்னால் எழுந்ததே கிடையாது. அந்த வருடம் பாஞ்சான் விடியற்காலை மூன்று மணிக்குப் பச்சைத் தண்ணீரில் குளித்துத் தயாராகி என் வீட்டுக்கு வந்து என்னை எழுப்புவான். நான் எழுந்து அந்தக் குளிருக்குப் பயந்து மரப்பொடி அடுப்பை அடைத்து விறகைத் திணித்து வெந்நீர் போட்டு குளித்து விட்டு செண்பகவல்லியம்மன் கோவிலுக்கு ஓடுவோம்.

சீர்காழிகோவிந்தராஜனின் கணீர்க் குரலில் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் விநாயகர் அகவல் எங்களுக்கு மனப்பாடம். ” சீதக்களப செந்தாமரைப்பூம் பாதச்சிலம்பும் பல இசை பாட பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்,” என்று சத்தமாய் பாடிக் கொண்டே தினமும் நூற்றியெட்டு முறை கோவிலைச் சுற்றி விட்டு ஊரில் உள்ள கிருஷ்ணன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில், சரமாரியம்மன் கோவில், கன்னி விநாயகர் கோவில், பழனியாண்டவர் கோவில், ரயில்வே ஸ்டேஷன் பிள்ளையார் கோவில், தட்சிணாமூர்த்தி கோவில், காளியம்மன் கோவில் மற்றும் போகும் வரும் வழியில் உள்ள குட்டிக் குட்டிச் சாமிகள் எல்லோரையும் கும்பிட்டுப் பிரசாதம் வாங்கித் தின்று விட்டு ஏழுமணி வாக்கில் வீட்டுக்கு வந்து சேருவோம். எல்லாச்சாமிகளிடமும் எங்களின் ஒரே வேண்டுகோள், விண்ணப்பம், சிபாரிசு, கோரிக்கை,பிரார்த்தனை என்னவென்றால் நாங்கள் மந்திரமூர்த்தியை விட மதிப்பெண்கள் அதிகம் வாங்க வேண்டும் என்பது தான். என்ன காரணத்தினாலோ எந்தச் சாமியும் எங்கள் விண்ணப்பத்தை நமது அரசு அலுவலகங்களைப் போல படித்தே பார்க்கவில்லை. அதனால் பள்ளியிறுதி வகுப்பு முடியும் வரை நாங்கள் ஒரு முறை கூட மந்திரமூர்த்தியை விட அதிக மதிப்பெண் எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல அவன் எடுத்த மதிப்பெண்களின் அருகில் கூட போக முடியவில்லை.

பாஞ்சானுடைய நட்பு வேறு சில அநுபவங்களையும் தந்தது. அந்தக் காலத்தில் கோவில்பட்டி சிவகாசிக்கு அடுத்த தீப்பெட்டி நகரமாக இருந்தது. ஊரெங்கும் தீப்பெட்டியாபீஸுகள். அனைத்து வீடுகளிலும் தீப்பெட்டி சம்பந்தமாக ஏதாவது ஒரு வேலை நடந்து கொண்டிருக்கும். தீப்பெட்டியின் மேல்பெட்டி, அடிப்பெட்டி, குச்சி அடுக்குதல், என்று வீட்டில் நடந்தால், தீப்பெட்டியாபீஸிலும் குச்சி அடுக்குதல், பெட்டி ஒட்டுதல், குச்சி உருவுதல், லேபிள் ஒட்டுதல், பெட்டி அடைத்தல், என்று வேலைகள் நடந்து கொண்டேயிருக்கும். காலையில் கூட்டம் கூட்டமாக பெண்களும் ஆண்களும் கையில் தூக்குவாளிகளுடன் தீப்பெட்டியாபீஸ் வேலைகளுக்குப் போவார்கள். வாரக்கடைசி சனிக்கிழமை வந்து விட்டால் கோவில்பட்டி பஜாருக்கே ஒரு தனிக்களை வந்து விடும். ஏனெனில் அன்று தான் தீப்பெட்டியாபிஸில் சம்பளநாள். சாயந்திரம் பஜாரே ஜே ஜேன்னு இருக்கும். எங்கள் வீட்டிலும் தீப்பெட்டிக் கட்டு, தீப்பெட்டிக்குச்சி அடுக்குதல் வேலை நடந்தது. குச்சி அடுக்கிய கட்டைகளை தலையில் சும்மாடு கட்டி தூக்கிக் கொண்டு போய் தீப்பெட்டிக் கம்பெனியில் கொடுத்து கணக்குப் புத்தகத்தில் வரவு வைத்து விட்டு வெறும் கட்டைகளை வாங்கிக் கொண்டு வரவேண்டும். அங்கே கணக்குப் பிள்ளைகளின் ராஜ்ஜியம் தான்.

பாஞ்சான் வேகவேகவேகமாகக் குச்சி அடுக்குவான். அந்த வேகம் இந்த வேகம் இல்லை ஜெட் வேகத்தில் அடுக்குவான். நான் ஒரு கட்டையிலுள்ள ஐம்பது சக்கைகளில் குச்சி அடுக்கி முடிக்கும் போது அவன் மூன்று கட்டைகளை முடித்திருப்பான். பாஞ்சான் குச்சிகளை சக்கைகளில் வேகமாகப் பரத்தி விட்டு ஒரு உலுப்பு உலுப்பினால் போதும் குச்சிகள் எல்லாம் எஞ்சிவனேன்னு சக்கைகளில் உள்ள பள்ளங்களில் போய் உட்கார்ந்து கொள்ளும். எனக்கு பாஞ்சான் ஏதோ மாயாஜாலம் செய்வதைப் போல இருக்கும். அவனுடைய வீடு என்னுடைய வீட்டை விட மிகவும் சிறியது. ஒரு பத்தி கொண்ட குச்சு. எப்போது போனாலும் அவனும் அவனுடைய அம்மாவும் மட்டும் தான் இருந்தார்கள். அவனுடைய அப்பாவை நான் பார்த்ததேயில்லை. அவனும் எப்போதும் அவனுடைய அம்மாவைப் பற்றித்தான் பேசுவான். அப்பாவைப் பற்றிப் பேசியதேயில்லை.

ஒருநாள் வெள்ளிக்கிழமை என்று ஞாபகம். கணக்கு வாத்தியார் பழனிமுத்து கொடுத்த வீட்டுக் கணக்குகளைப் போடாததற்காக பாஞ்சான் தலையில் குட்டு வாங்கிக் கொண்டிருந்தான். ஏண்டா போடல என்று கேட்டதுக்கு அவனுடைய அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று பதில் சொன்னான். அம்மா உடம்பு சரியில்லாததற்கும் கணக்குக்கும் என்னடா சம்பந்தம் என்று கேட்டு காதைத் திருகி தலையில் கொட்டிக் கொண்டிருந்தார். அப்போதும் பாஞ்சான் சிரித்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் பள்ளிக்கூட உதவியாளர் வந்து பழனிமுத்து சாரைக் கூப்பிட்டு ஏதோ சொல்ல பழனிமுத்து சாரின் முகம் மாறிவிட்டது. அவர் திரும்பி வகுப்புக்குள் வந்து பாஞ்சானின் தலையைத் தடவிக் கொடுத்தார். பின்பு

“ டேய் நீ வீட்டுக்குப் போ.. வீட்டிலேருந்து கூப்பிட ஆளு வந்திருக்காம்.. பையை எடுத்துட்டுப் போ…” என்று சொன்னார்.

பாஞ்சான் பைக்குள் புத்தகங்களை வைக்கும் போதும் சிரித்துக் கொண்டிருந்தான். பையை எடுத்து தோள்பட்டையில் போட்டுக் கொண்டு என்னைப் பார்த்து சிரித்தபடியே சாயந்திரம் பார்க்கலாம் என்று சைகை செய்தான். பின்னர் வகுப்பை விட்டு வெளியேறி விட்டான். அது வரை வகுப்பு அமைதியாகவே இருந்தது. பழனிமுத்து சாரும் எதுவும் பேசாமல் பாஞ்சானின் நடவடிக்கைகளையேக் கவனித்துக் கொண்டிருந்தார். அவன் வகுப்பை விட்டு வேளியே போனபிறகும் சில நிமிடங்கள் பேசாமலிருந்தார் பழனிமுத்து சார். அவர் முகம் துயருற்றிருந்தது. பின்பு அமைதியாகச் சொன்னார்.

“ பரமசிவன் அம்மா இறந்துட்டாங்க..”

கடைசியாய் பையைத் தூக்கும்போது என்னைப் பார்த்து சிரித்தானே அது தான் பாஞ்சானின் கடைசிச் சிரிப்பு.

அதன் பிறகு அவன் சிரிக்கவில்லை.

Saturday 14 July 2012

குழந்தைகளின் ஆரோக்கியம்

 

உதயசங்கர்pictures2

 

குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிற நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கிறது. சரியான உணவின்றி, மருத்துவக்கவனிப்பின்றி, சரியான சத்துணவுக்கு வழியின்றி, நோய்த்தொற்றினால், பல குழந்தைகள் ஐந்து வயதுக்குள்ளாகவே இறந்து போகநேரிடுகிறது. அரசாங்கத்தின் பைத்தியக்காரத்தனமான அறிவிப்புகள் பெரும்பாலும் ஏழை,எளிய மக்களையே அதிகம் பாதிக்கின்றன. தற்போதைய வறுமைக்கோட்டு வருமான வரம்பு ரூ.32 என்ற அறிவிப்பு ஒன்றே போதும் நமது அரசாங்கம் பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இதன் விளைவு அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு எட்டாக்கனியாகவே ஆகிவிட்டன. எதிர்கால சமுதாயத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத அரசின் மருத்துவக்கொள்கையும், மருந்துக்கொள்கையும், அரசின் சேவையாக இருக்க வேண்டிய மருத்துவத்தை வியாபாரமாக மாற்றி விட்டது. புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் வேட்டைக்களமாக இந்தியமக்களின் உடல்,மன,நலமும் மெல்ல மெல்ல மாறி வருகின்றது. மருத்துவர்களும் மக்களின் உயிர் பற்றிக் கவலைப்படாத, மனிதாபிமானம் இல்லாத வியாபாரிகளாக மாறி வருகின்றனர். மக்களின் சுரணையின்மை, அலட்சியம், மந்தைபுத்தி, அரசின் கையாலாகாத்தனம், எல்லாம் சேர்ந்து சுற்றுச்சூழல், தண்ணீர், காற்று, உணவு எல்லாவற்றையும் மாசு படுத்தி உயிர்கள் வாழத் தகுதியில்லாததாக இந்தியாவை மாற்றி வருகின்றனர்.

முதலாளித்துவத்தின் உச்சபட்ச நுகர்வின் களமாக மாறியுள்ள இந்தியாவில் மக்கள் மனங்களை வசப்படுத்துவதற்கு ஊடகங்கள் பயன்படுகின்றன. எந்த விளம்பரத்தையும் பணம் கொடுத்தால் போடுவதற்கு தயாராக இருக்கின்ற ஊடகங்கள் அந்தப் பொருட்களின் உண்மைத்தன்மை பற்றிய அறிவியலாளர்களின் ஆராய்ச்சிகளை வெளியிடத் தயங்குகின்றன. கோக், பெப்சியில் கலந்துள்ள வேதியல் பொருட்கள், டையரிமில்க் சாக்லேட்டில் கண்டெடுக்கப்பட்ட கம்பி, புழுக்கள் பற்றி, ஜங்க் புட் எனச் சொல்லப்படும் உணவுப்பொருட்களினால் ஏற்படும் உடல்நலக்கேடுகள் பற்றி, எதையும் பகிரங்கமாகச் சொல்வதில்லை அல்லது மேலோட்டமாகச் சொல்லிச் செல்கின்றன. ஏனெனில் அந்தக் கம்பெனிகளின் விளம்பரங்கள் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் தான். அத்துடன் இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் இந்திய முதலாளிகளாலேயே நடத்தப்படுகின்றன. எனவே தங்களுடைய வர்க்கத்துக்கு எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கமாட்டார்கள். லஞ்சம், ஊழல், மலிந்துள்ள இந்திய அதிகார வர்க்கத்தின் சமூகப்பொறுப்பின்மையும் இதற்குத் துணைபோகின்றன. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்ட சுமார் 1500 ஆங்கில மருந்துகள் தாராளமாகப் புழக்கத்திலிருக்கின்றன. இந்த மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளின் தீவிரம் கருதியே மேலை நாடுகளில் இந்த மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதும் இந்திய மருத்துவக்கவுன்சில் உட்பட யாவரும் அறிந்த ரகசியம்.இப்படிப்பட்ட புறவயமான சூழலில் குழந்தைகளின் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று நாமே யோசித்துக் கொள்ளலாம்.

நம்முடைய உயிரோட்டமில்லாத கல்விமுறையினால் படித்தவர்களுக்கும் கூட நோய் என்றால் என்ன? நலம் என்றால் என்ன? என்று சரியாகத் தெரிவதில்லை. நம்முடைய உடலை விட பெரிய மருத்துவர் வெளியில் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். உடலின் மொழியை நாம் தெரிந்து கொண்டோமானால் பெரும்பாலான சாதாரண உடல் உபாதைகளை நாம் நம்முடைய பழக்கவழக்கங்களின் மாற்றத்தினாலேயே சரி செய்து கொண்டு விடலாம். இதற்கு மிகப் பெரிய மருத்துவ அறிவோ மருந்துகளோ தேவையில்லை.

குழந்தை தாயின் வயிற்றிலிருக்கும் வரை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. தாயின் வலிமை மிக்க பாதுகாப்புப்படையணி வரிசை குழந்தையையும் பாதுகாக்கிறது. ஆனால் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த பிறகு, புத்தம் புதிதாய், சின்னஞ்சிறுசாய், இந்த வெளியுலகை எதிர் கொள்கிறது. அதனுடைய உடலின் பாதுகாப்புப்படையணி இன்னும் தன் பிஞ்சுப் பருவத்திலேயே இருக்கிறது. அந்தப் படையணி இந்தப் புதிய உலகத்தில் ஒவ்வொரு பாடமாகக் கற்றுக் கொள்கிறது. அதிகக்குளிர், அதிக வெப்பம், தூசு, மாசு, இவற்றை எதிர்கொள்ளுதல், அது வரை தாயிடமிருந்தே உணவைப் பெற்றுக் கொண்டிருந்த குழந்தை வெளியே வந்த பிறகு பருப்பொருளான திட மற்றும் திரவ உணவு, அதன் உடலின் செரிமானம், கழிவு வெளியேற்றம், என்று எல்லாவற்றையும் தானே நிர்வகித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. அப்போது குழந்தை தன் உடலின் தனித்துவத்துவத்தைப் புரிந்து கொள்கிறது. அதைக் கண்டுபிடிக்கச் சில பரிசோதனைகளை குழந்தையின் உடல் நடத்துகிறது. அதன் மூலம் அது தன் தனித்துவத்தைப் புரிந்து கொள்ளவும், அதை தன்னுடைய பாதுகாப்புப்படையணிக்கு உணர்த்தவும் நினைக்கிறது.

நோய் என்றால் என்ன? உடலில் ஏற்படும் மாறுமை. அல்லது மாறுபாடு. உடலில் ஏன் மாறுபாடு ஏற்படுகிறது? உடலின் இயக்கத்தில் ஒவ்வாமை ஏற்படுத்தும் புறவயமான காரணிகள் ஒரு காரணம். உதாரணத்துக்கு கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட பிறகு அதன் விஷம் உடலில் கலந்து விடாதிருக்க உடலின் மருத்துவர் தன் பாதுகாப்புப்படையணியிடம் இடும் கட்டளைக்கேற்ப வயிற்றாலை என்ற மாறுமையை உருவாக்குகிறது. தொடர்ச்சியான மலக்கழிச்சலின் மூலம் உடலில் சேரவிருந்த விஷப்பொருட்கள் வெளியேற்றப்படுகிறது. இது இயற்கையான உடல் தனக்குத் தானே செய்து கொள்ளும் மருத்துவம். இதைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. நீர்ச்சத்து உடலில் குறைந்து விடாமலிருக்க அதிக நீரும், எளிய உணவும், ஓய்வும் போதுமானது. உடலிலுள்ள விஷப்பொருட்கள் வெளியேறி விட்டதாக பாதுகாப்புப்படையணிக்குத் திருப்தி ஏற்பட்டதுமே அது வயிற்றாலையை நிறுத்தி விடும். ஆனால் இரண்டு முறைக்கு மேல் வெளியே போய் விட்டால் போதும் அவ்வளவு தான் உடனே மருத்துவமனைக்குச் சென்று மருந்துகளைக் கொடுத்து விஷப்பொருட்கள் உடலிலிருந்து வெளியேறவிடாமல் தடுத்து விடுகிறோம். அது மட்டுமல்ல கழிவு வெளியேற்ற செயல்பாட்டில் இடையூறு ஏற்படுத்தி விடுவதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மலம் வெளியேறாது. அது மட்டுமல்ல பசியிருக்காது. உடல் சோர்வாக இருக்கும். பின்னர் சில சமயம் மலம் வெளியேற மருந்து சாப்பிட வேண்டிய நிலைமைக்கு குழந்தைகளை ஆளாக்குகிறோம். 

இது மட்டுமல்ல பெரும்பாலான பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு மூக்கு ஒழுகுவதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. அது ஏதோ அவர்களுக்கு கௌரவக்குறைச்சலாகி விடுகிறது. தூசு, மாசு, அதிகக் குளிர், அதிக வெப்பம் இவற்றால் நம்முடைய உடலிலுள்ள சளிச்சவ்வுகள் உடலின் பாதுகாப்புக் கருதி அதிகமான நீரை உற்பத்தி செய்து தூசிகளை வெளியேற்றுகின்றன, உடலின் சமநிலையைப் பாதுகாக்கின்றன. அதற்காகவே சளி உருவாக்கி நம் உடலின் இயக்கம் தடைபடாமலிருக்கவும், உடலின் முக்கிய உறுப்புகளில் பாதிப்பு ஏற்படாமலிருக்கவும் நமது உடல் மருத்துவர் உருவாக்குகிற முறைகளே, தும்மல், இருமல், மூக்கு ஒழுகுதல், ஆகியன. இதன் மூலம் நம் பாதுகாப்புப்படையணிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது. காற்றில் பரவி நம் உடலில் நுழையும் கிருமி, வைரஸ், எல்லாவற்றையும் எதிர் கொள்கிற திறனைப் பெறுகிறது. இதற்கு எதிரியின் பலத்தை அறிந்து கொண்டு, அவனுடைய ஆயுதத்தின் திறனை அறிந்து கொண்டு அதற்கேற்ப எதிர்த் தாக்குதல் நடத்த வேண்டியதிருக்கிறது. ஒரு முறை ஒரு எதிரியின் தாக்குதல் முறைகளையும், ஆயுதபலத்தையும் அறிந்து கொண்டு விட்டால் உயிர் அழியும்வரை அதன் ஞாபகத்திலிருந்து மறையாது. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் ரெண்டு தும்மல் போட்டாலோ, மூக்கு ஒழுகினாலோ, லேசாக இருமி விட்டாலோ, போதும். உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி அவர்கள் தருகிற ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகளைக் கொடுத்து குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியினை முடமாக்கி விடுகிறார்கள்.

இப்படியெல்லாம் சொல்வதினால் குழந்தைகளை மருத்துவமனைக்கேக் கூட்டிக் கொண்டு போகக் கூடாதென்றில்லை. எதற்கெடுத்தாலும் மருத்துமனை என்ற மனோபாவம் மாறவேண்டும். நம் உடலின் மருத்துவரை நாம் முதலில் நம்ப வேண்டும். குழந்தைகளுக்கு ஒவ்வாதது எது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதை நீக்க முடியுமா அல்லது மாற்ற முடியுமா என்று பார்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதை உணர வேண்டும். அந்தந்தக் குழந்தையின் உடலுக்கு எது தேவையோ அதைக் கொடுக்க அதன் உடல்மொழியை, மனமொழியை அறிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளைப் பற்றி நிறையப் பெற்றோர்களின் புகார் என்னவென்றால் சரியாவே சாப்பிட மாட்டேங்குது என்பது தான். குழந்தை தனக்குத் தேவையானதை தேவையான அளவு சாப்பிடவே செய்யும். ஆனால் பெற்றோர்களுக்கு தான் கொடுப்பதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல குழந்தை தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் குழந்தைகளைப் போல கொழு கொழுவென்று இருக்க வேண்டும் என்ற ஆசையும் கூட. குழந்தையின் ஆரோக்கியம் என்பது அதன் உற்சாகமான செயல்பாடுகளே. அதே போல அதற்கு ஒவ்வாததை எதிர்க்கிற ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியே. அதை விடுத்து கொழு கொழுவென பார்ப்பதற்கு அழகாக பிராய்லர் கோழிக் குழந்தைகள் வேண்டாமே

Friday 13 July 2012

எப்படி வாழ்கிறாய்?

imagesCA20VS3S

உதயசங்கர்

 

உன் பிறந்த நாளன்று

ஒரு ரோஜாவையேனும் தந்ததில்லை

ஆனால் முட்களால் கீறியிருக்கிறேன்

உன் திருமணநாளன்று

ஒரு சாக்லேட் கூட கொடுத்ததில்லை

ஆனால் வெறுப்பின் கசப்பை

உமிழ்ந்திருக்கிறேன்

உன் ஆசைகளின் பதியன்களுக்கு

ஒரு நாளேனும் நீருற்றியதில்லை

ஆனால் மிதித்து நடந்திருக்கிறேன்

உன் கனவுகளின் வானவில்லை

கண்டு மகிழ்ந்ததில்லை

ஆனால் கலைத்து குழப்பியிருக்கிறேன்

உன் சிறகுகளின் யத்தனிப்பை

ஒரு நாளும் அவதானித்ததில்லை

ஆனால் வளரவிடாமல் வெட்டியிருக்கிறேன்

இத்தனை குரூரமான என்னுடன்

எப்படி வாழ்கிறாய் என் சகியே?

Thursday 12 July 2012

பேய், பிசாசு இருக்கா?

 

உதயசங்கர்

ghost

பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? இதென்ன கேள்வி?

கண்டிப்பா எல்லாம் இருக்கு. எங்க ஊர் கம்மாய்க்கரைக்கு மேல இருக்கிற புளியமரத்தில் பேய் இருக்கு. சுடுகாட்டுப் பக்கம் ராத்திரி நேரம் போகவே மாட்டாங்க. அங்கே கொள்ளிவாய்ப் பிசாசு அலையுமாம். ஊருக்கு தெக்காம இருக்கிற ஒத்தைப் பனை மரத்து வழியா ஒத்தையில யாரும் போக மாட்டாங்க. அதில் முனி இருக்குதாம். பஞ்சாயத்து ஆபீசுக்கு வடக்கே இருக்கிற கிணத்துப்பக்கம் நடுச்சாமத்திலே மோகினி நடமாட்டம் இருக்குதாம்.. சல்..சல்..சல்..னு சலங்கை சத்தம் கேட்குதாம். அம்மாடி நெனச்சாலே உடம்பெல்லாம் புல்லரிக்குது. பயம்மா இருக்குது. வேற ஏதாச்சும் கேளுங்க.

இப்படித்தான் சொல்வீர்கள்

அநேகமாக எல்லாக்குழந்தைகளுமே இப்படி நம்புகிறவர்கள் தான். இப்படி குழந்தைகளாக இருந்து பெரியவர்களானவர்களும் இப்படி நம்புகிறவர்கள் தான். நாம் பார்க்கும் சினிமா, தொலைக்காட்சித் தொடர், படிக்கிற பேய்க்கதைப் புத்தகங்கள் பெரியவர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்கிற திகில் கதைகளிலும் இப்படிப்பட்ட பேய் பிசாசுகள், சர்வசாதாரணமாய் வந்து போகின்றன. பழிக்குப் பழி வாங்குகின்றன. இல்லையா?

ஏன் இந்தக் கதைகளில் வரும் பேய்கள் நம்மை பயமுறுத்துகின்றன? முதலில் அவை நம்மைப் போன்ற உருவத்தில் இல்லை. அடுத்தது சாதாரணமாக மனிதர்கள் செய்ய முடியாத காரியங்களைச் செய்கின்றன. பறந்து செல்வது, நினைத்தவுடன் நினைத்த உருவத்துக்கு மாறுவது, காற்றில் மறைந்து விடுவது, வித விதமான பொருட்களை, உதாரணத்துக்கு லட்டு, பணியாரம், வடை, முறுக்கு, போன்ற அதிருசியான பண்டங்களை வரவழைப்பது, இப்படி சாதாரணமாய் நடக்க முடியாத வேலைகளையெல்லாம், திரைப்படங்களில், புத்தகங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், இந்தப் பேய்கள் செய்கின்றன இல்லையா?

இவை நம் மனதில் ஒரு பயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன.

உங்கள் ஊரிலுள்ள எல்லாப் பேய்களுக்கும் ஒரு கதை இருக்கும். கேட்டிருக்கிறீர்களா? இதுவரை கேட்டதில்லை என்றால் இனிமேல் கேட்டுப் பாருங்கள். பேய்களைப் போலவே, பிசாசு, முனி, மோகினி, ரத்தக்காட்டேரிகளுக்கும் தனித்தனியே கதை இருக்கும்.

இந்தக் கதைகளில் பொதுவாக பின்வரும் காரணங்கள் இருக்கும்.

1. கொஞ்ச வயதில் திடீரென இறந்து போனவர்கள்

2. உற்றார் உறவினர்களின் கொடுமைகளினால் தற்கொலை செய்து கொண்டவர்கள்

3. ஏதாவது ஒரு காரணத்துக்காக கொலை செய்யப் பட்டவர்கள்

4. பழிக்குப் பழி வாங்க இறந்த பிறகும் அலைபவர்கள்

5. நிறைவேறாத ஆசைகளோடு இறந்து போனவர்கள்

இன்னும் பல காரணங்களும் இருக்கலாம். சரி இருக்கட்டுமே.

இப்போது சிலகேள்விகள் நமக்குத் தோன்றுகின்றன.

பெரும்பாலும் இந்த உருப்படிகள் எல்லாம் ஏன் ராத்திரியிலேயே சுற்றுகின்றன? அதுவும் ஏன் ஊருக்கு ஒதுக்குப்புறமான, இருட்டான இடங்களிலேயே வசிக்கின்றன? ஏன் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலேயே அலைகின்றன? சர்வ வல்லமை படைத்த இந்தச் சங்கதிகள் இரும்பு, செம்பு, விளக்குமாறு, நெருப்பு, இவற்றை கண்டு மட்டும் பயந்து சாவதேன்? பேய்களே இல்லாத ஊர் இருக்கிறதா? மனிதர்களுக்கு மட்டும் தான் பேயா? விலங்குகள் பறவைகள், பூச்சிகள், எல்லா உசுப்பிராணிகளுக்கும் பேய் உண்டா?

மனிதர்களை விட வளர்ச்சியடைந்த மிருக இனம் இந்த உலகில் இல்லை. அந்த மனிதனே ஆதிகாலத்திலிருந்து இருட்டைக் கண்டு பயந்தான். கண் தெரியாத இருட்டில் பல ஆபத்துகளை எதிர்கொண்டான். அதனால் இருட்டு அவனை பயமுறுத்தியது. எனவே தாங்கள் வாழ்வதற்கு பேய்களும் இருட்டைத் தேர்ந்தெடுத்துக் கொண்டன. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை, தெருக்களில் பேய்கள் இருப்பதில்லை. அதிக ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் குடியிருப்பதாகச் சொல்வதும் நம்புவதும் எளிது.

என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று நீங்கள் கேட்கிறீர்கள் இல்லையா?

மனிதன் தான் பேய், பிசாசு, மோகினி, முனி, எல்லோரையும் உருவாக்குகிறான். மனிதர்கள் இருந்தால் தான் பேய்களும் இருக்கும். மனிதர்கள் இல்லாத ஊர்களில் பேய்களும் இருப்பதில்லை. பறவைகள், விலங்குகள், பூச்சிகள், ஆகியவற்றுக்கு பேய்களோ, பிசாசுகளோ இல்லை. ஏனெனில் மனிதனுடைய மூளையில் தான் மற்ற அனைத்து யிரினங்களையும் விட கற்பனாசக்தியும், ஞாபகசக்தியும் அதிகம். மனிதன் மட்டும்தான் திரும்ப யோசித்துச் சொல்லும்படியான கனவுகளைச் காண்கிறான். நாம் இரவில் தூங்கும்போது காணும் பல கனவுகள் மறுநாள் காலையில் ஞாபகத்துக்கு வருகிறதல்லவா? அதை நாம் நம்முடைய நண்பர்களிடம் சொல்லி மகிழ்வதில்லையா?

மனித இனத்தின் வளர்ச்சியில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த பழங்கால மனிதர்கள் உணவுப்பற்றாக்குறை காரணமாக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு இடப்பெயர்ச்சி செய்தனர். அப்படி போகும்போது ஏற்கனவே அங்கே இருந்த மனிதர்களுடன் சண்டை போட நேர்ந்தது. அந்தச் சண்டைகளில் நிறையப் பேர் செத்துப் போனார்கள். எஞ்சி உயிர் பிழைத்தவர்களுக்கு தங்களுடனே இருந்து இறந்து போனவர்களைப் பற்றிய ஞாபகங்கள் இருக்குமல்லவா? அவர்களுடைய நடையுடை பாவனைகள், குரல், முகம், அவர்களது விருப்பு வெறுப்புகள் எல்லாம் தெரிந்திருக்குமல்லவா? மனிதமூளையின் ஞாபக செல் அடுக்குகளில் பதிவான இந்த விவரங்கள் கனவுகளில் திடீர் திடீரென காட்சிகளாக வந்தன. கனவுகளைப் பற்றியும், மூளையின் செயல்பாடுகளைப் பற்றியும் அறியாத பழங்கால மனிதர்கள் அவற்றை இறந்து போன மனிதர்கள் ஆவி ரூபத்தில் வந்து பேசுவதாக நினைத்தனர். ஒருவேளை, வேறு உலகத்தில் அவர்கள் உயிருடன் இருப்பதாகக் கற்பனை செய்தனர். அறிவியல் பார்வையும், அறிவியலறிவும், சரியாக வளராத காலம் அது. எனவே இறந்து போனவர்கள் பேய்களாகச் சுற்றுவதாகச் சொன்னார்கள். சில பேருக்கு நரம்புத் தளர்ச்சி நோய் ( ஹிஸ்டீரியா ) ஏற்பட்டு இறந்தவர்களைப் போலப் பேசவும், நடக்கவும் செய்தனர்.

அறிவியல் முன்னேற்றம் இல்லாத பழைய காலகட்டத்தில் உருவான பல மூடநம்பிக்கைகளைப் போல இந்தப் பேய், பிசாசுகள், பற்றிய மூட நம்பிக்கையும் உருவாகி விட்டது. இவை கதைகள் மூலமாக பரம்பரை பரம்பரையாகக் குழந்தைகளுக்குச் சொல்லப் பட்டு வருகின்றது. குழந்தைகளைப் பயமுறுத்த அவர்களைச் சொன்னபடி கேட்க வைப்பதற்காக பெரியவர்கள் சொல்கிற இந்தக் கதைகள் பசுமரத்தாணி போல மனசில் பதிந்து விடுகிறன. பெரியவர்களான பிறகும் இருட்டிலும், ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளிலும் போகும் போது இந்தக் கதைகள் சிறு வயதில் ஏற்படுத்திய பய உனர்வுகளைத் தூண்டி விடுகின்றன. அந்த மாதிரியான நேரங்களில் இலை உதிர்ந்து விழும் சத்தம், பூச்சிகளின் கீச்சொலி, ஏன் நம்முடைய காலடிச் சத்தமே கூட பயமுறுத்துகிறது. சுற்றிலும் கேட்கிற சிறு ஒலிகளும், இருட்டும், சேர்ந்து அடிவயிற்றைப் பிசைகின்றன. பய உணர்வு தாக்குகிற முதல் உறுப்பு வயிறு என்பதால் வயிறு கலங்கி ‘ வெளிக்கி” வருவது போலவோ, ’ ஒண்ணுக்கு’ வருவது போலவோ உணர்வு தோன்றுகிறது. சிலருக்கு இந்தப் பய உணர்ச்சி காய்ச்சலை ஏற்படுத்தி விடுகிறது.

மற்றவர்களுக்கு இது போதும். அவனை பேய் அடித்து விட்டது என்று சொல்லி விடுவார்கள். அப்புறம் இது கதை கதையாகக் கண்,மூக்கு,காது, வைத்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கும். இப்படியே இந்தக் கதைகளில் பேய், பிசாசுகள், வாழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

மற்றபடி இவை இருப்பதற்கு எந்த விதமான அறிவியல் அடிப்படையும் கிடையாது. அப்படியா?

ஆமாம். பூமி தோன்றியதிலிருந்து கோடிக்கணக்கான உயிரினங்கள் பிறந்து இறந்து விட்டன. அவையெல்லாம் பேய்களாக மாறினால் என்ன ஆகும்? அனைத்து உயிரினங்களுக்கும் மரணம் என்பது இயற்கையானது. ஒவ்வொரு உயிரினமும் தங்களுடைய பரிணாம வளர்ச்சியின் வழியாக தங்களது வாழ்நாளை அதாவது ஆயுளை உருவாக்கியுள்ளன. கொசுக்களுக்கு ஒரு வாரம், ஈக்களுக்கு ஒரு மாதம், பூனைக்கு பனிரெண்டு வருடம், யானைக்கு எழுபது வருடங்கள், மனிதனுக்கு நூறு வருடங்கள், ஆமைக்கு இருநூறு வருடங்கள் இப்படி…இப்படி… இது இயற்கையான ஆயுட்காலம்.

ஆனால் விபத்திலோ, நோயிலோ, இயற்கைச் சீற்றங்களினாலோ, எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் இறந்து போகலாம். ஏன் தினசரி நம் காலடியில் நூற்றுக்கணக்கான எறும்புகள் இறந்து போகின்றன. அவையெல்லாம் பேய்களாக மாறி கடிக்க ஆரம்பித்தால்………

அப்படியெல்லாம் நடக்காது. மற்ற உயிரினங்களை விட்டு விடுவோம். குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பிறகு கோடிக்கணக்கான மனிதர்கள் இந்த பூமியில் பிறந்து வளர்ந்து இயற்கையாகவோ, அகாலமாகவோ, இறந்து போயிருக்கிறார்கள். அவர்கள் பேய்களாக மாறியிருந்தால் மக்கள் தொகை பெருக்கம் மாதிரி பேய்த்தொகைப் பெருக்கம் அதிகமாகி நாம் இருப்பதற்கே இடமிருக்காதே. நாம் இப்போது நின்று கொண்டிருக்கும் பூமிக்குக் கீழ், வசித்துக் கொண்டிருக்கும் வீடுகளுக்குக் கீழே பூமியில் நூற்றுக்கணக்கான வருடங்களாக இறந்து போன உயிரினங்களும், மனிதர்களும், மக்கி மண்ணாகிக் கிடக்கின்றனர். இது ஒரு தொடர் சங்கிலி. பிறப்பதும் இறப்பதும்.இப்போது புரிகிறதா? பேய்கள் எங்கேயிருக்கின்றன? நம்முடைய கற்பனையில் தான்.

மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியில் தான் உணர்ச்சி செல்கள் இருக்கின்றன. பயம், மகிழ்ச்சி, ஏமாற்றம், பாசம், சுகம், இப்படி உணர்ச்சிகளின் பிறப்பிடமாக ஹைபோதாலமஸ் இருக்கிறது. இந்த செல்களில் தூண்டுதல் ஏற்பட்டதும், நினைவிலிருந்து கற்பனைச் சித்திரங்கள், சினிமா, தொலைக்காட்சித் தொடர்களிலிருந்து உருவான பிம்பங்கள் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் கண்முன்னே காட்சிகளாய் விரிகின்றன. உடனே நாளமில்லாச் சுரப்பிகளின் தலைவனான பிட்யூட்டரி சுரப்பியின் ஆணையின் பேரில் அட்ரீனலின் சுரப்பி திபுதிபுவென சுரக்கிறது. உடனே உடலெங்கும் புல்லரிக்கிறது. வயிறு கலங்குகிறது. மற்றவை தொடர்கின்றன.

மனிதமனம் உருவாக்கும் பேய் தான் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது. இந்தக் கற்பனையான பேயை விரட்டுவதாகச் சொல்லி பிழைப்பு நடத்தும் பூசாரிகள், சாமியார்கள், உருவாகி எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள். இந்தப் பேய்களையும் பேயோட்டும் சாமியார்களையும் எளிதாக விரட்டி விடலாம். எப்படி? பேய்களுக்கு வெளிச்சம் என்றால் பயம். அதுவும் அறிவியல் வெளிச்சம் என்றால் அவ்வளவு தான்.

தலை தெறிக்க ஓடி விடும்.