Thursday 29 March 2012

கடைசிச் சொட்டு மதுவின் பாடல்

stock-photo-green-wine-bottle-with-drop-isolated-on-white-ground-91638920 நீலநிற இரவின் நிழற்படத்தில்
காலியான மதுக்குப்பியின்
கடைசிச் சொட்டு இசைப் பேரருவியென
தனிமைப் பாடலைப் பாடத் தொடங்கியது
மதுவின் காரலுடன் செருமலை அனுப்பி
மதுத் துளியின் சிகரத்தில்
ஏறி நின்று போருக்கழைத்தான்
மணிகண்டன்.
“ அடச் சீ சும்மா கிட சவமே”
என்றே மாரியப்பன் துப்பிய
எச்சிலில் சிரித்த காமம்
மனைவியை அழைக்க
வீட்டைத் தேடி ஊர் ஊராய் அலைந்தான்.
எப்போதும்
வீட்டை முதுகில் சுமந்த கந்தசாமி
கண்ணீர்த் துளி நக்கியே போதையேறிப்
புலம்பலின் படிக்கட்டில்
படுத்துருண்டு கொண்டிருந்தான்
முத்துச்சாமி கைவிட்ட காதலியைக்
கொலை செய்யும் திட்டத்திற்கு
கூட்டாளியாக்கினான் மதுவை.
எல்லோருக்கும் முன்னால்
அம்மணத்தைச் சுழற்றி
ஆட விட்ட நாகு
அவ்வப்போது வைதான்
யாரையென்று தெரியவில்லை
அறைக்குள்ளே நமுட்டுச் சிரிப்புடன்
மூடிய பைக்குள் முக்காடிட்டபடி
வந்த இருள்
மெல்லப் பிரிந்தது ஒவ்வொன்றாய்
தெருவெங்கும் உழுதபடி
காலியான மதுக்குப்பியில்
கடைசிச்சொட்டின் இசைக்கோர்வை
இருக்குமென
இரவு மட்டும் விடியாமல்
காத்திருந்தது
அருகில் பகலை வரவிடாமல்
விரட்டியபடி.

Wednesday 28 March 2012

பச்சை நிழல்

grassdew

எப்போதோ, யாரோ, தண்ணீர் சுமந்து கொண்டு போகும் போது சிந்திய ஒரு துளியில் அந்தப்புல் பூமிக்கு உள்ளேயிருந்து வெளியே தலையை நீட்டியது. இளம்பச்சை நிறத்தில் காற்றில் ஆடி ஒளி வீசியது. புல் மெல்லக் கண்களைத் திறந்தது.சுற்றிலும் வெட்டவெளி. ஒரு மரமோ, ஒரு செடியோ இல்லை. ஒரு ஆடோ, ஒரு மாடோ, இல்லை. ஒரு பறவையோ ஒரு பூச்சியோ இல்லை.


அது மட்டுமா? மலர்கள் இல்லை.வண்ணத்துப்பூச்சிகள் இல்லை. மனிதர்களும் இல்லை. கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை காய்ந்து போன பொட்டல்வெளி.

அந்தப் புல்லுக்கு ஒன்றும் புரியவில்லை. வேறு உலகத்தில் பிறந்து விட்டோமா? என்ன ஆச்சு எல்லோருக்கும்? எங்கே போனார்கள்? முதலில் உற்சாகமாய் இருந்தது அந்தப்புல். நேரம் ஆக ஆகத் தனிமை அதை வாட்டியது. பசியும் எடுத்தது.

மேலே சூரியன் நெருப்பாய் தகித்தான். வெப்பம் தாங்க முடியவில்லை. புல் தன்னுடைய வேரினால் பூமிக்குள் துழாவியது. ஈரப்பதமே இல்லை. தாகம் உயிரை வறட்டியது. தொண்டை அடைத்தது. புல் சுற்றும்முற்றும் பார்த்துக் கதறியது. யாராவது ஒரு சொட்டு உயிர்த் தண்ணீர் ஊற்றுங்களேன் என்று அழுதது.

நேரம் ஆக ஆக அதனால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. மேலும் மேலும் பலகீனமாகிக் கொண்டே வந்தது. உடல் குனிந்து வளைந்தது. இப்படிப் பிறந்து துன்பப் படுவதை விட  பிறக்காமலே இருந்திருக்கலாம் என்று நொந்து  கொண்டது.

என்ன ஆச்சு எல்லாவற்றுக்கும் என்று தெரியவில்லை. பெரிய வனங்கள் எங்கே  போயின? அருவிகள் எங்கே போயின?, சுனைகள் எங்கே போயின? நதிகள் எங்கே போயின?  ஆறுகள் எங்கே போயின? குளங்கள் எங்கே போயின? ஏரிகளும், கண்மாய்களும் என்ன ஆயின? புல்லுக்கு யோசிக்கவே முடியவில்லை.

இது தான் உலகத்தின் அழிவா? நான் அந்த அழிவின் ஆரம்பமா? இல்லை முடிவா? மரணம் நிச்சயம் என்று புல் உணர்ந்தது. அதன் நினைவு தவறிப் போகும் வேளையில் குழந்தைகளின் பேச்சுக்குரல் கேட்டது. அதனால் நிமிர்ந்து கூடப் பார்க்கமுடியவில்லை. குழந்தைகள் வரும் காலடியோசை கேட்டது. அருகில் வந்ததும் காலடியோசை நின்று  விட்டது.

“லட்சுமி இங்க பாரு.. இங்க பாரு..புல்லு முளைச்சிருக்கு..”

“ஆமா சுகந்தி நேத்து இந்தப் பக்கம் தண்ணி எடுத்துக்கிட்டு போகும்போது இல்லையே..”

”நாம கவனிச்சிருக்க மாட்டோம்..எவ்வளவு அழகா. பச்சைப்பசேல்னு இருக்கு பாத்தியா?”

”ஆனா வாடிப் போயிருக்கே..செத்துப் போயிரும் போல இருக்கே..”

“அய்யய்யோ…நாம இதைச் சாகவிடக் கூடாது..எப்படியாவது காப்பாத்தணும்..நாம பார்க்கிற முதல் புல் இதுதானே…இதுக்குக் கொஞ்சம் தண்ணீ ஊத்துவோம்”

“சரி ஆனா எப்படி..குடிக்கிறதுக்கே தண்ணி இல்லாம எவ்வளவு தூரம் நடந்து போய் எடுத்துட்டு வாரோம்..அதுவே காணமாட்டேங்கு..பலநாள் தண்ணியில்லாம கஷ்டப்படறோம்.”

“உண்மை தான்..எங்க தாத்தா சொல்வாரு..இங்கே ஒரு காலத்தில் பெரிய பெரிய காடுகளும் தண்ணீர் ஓடைகளும் நதிகளும் இருந்திச்சாம்…”

“அப்படியா..காடு…நதி.. அப்படின்னா என்ன?”

”அது வந்து..அது வந்து..இந்தப் புல் மாதிரி நிறையச் சேர்ந்து இருக்கிறது காடுன்னு நினைக்கிறேன்..பெரிய மரங்களும் இருக்குமாம்..அதெல்லாம் உயரமா..நிறைய இலைகளோடு இருக்குமாம்..நதின்னா தண்ணி எப்பவும் ஓடிக்கிட்டே இருக்கும்னு தாத்தா சொல்லியிருக்காரு..”

”அப்படின்னா..நாம..தினசரி தண்ணி எடுத்துட்டு வரும்போது..இந்தப் புல்லுக்குக் கொஞ்சம் தண்ணி ஊத்துவோம்..அப்ப இது வளந்து பெரிசாகி குட்டி போட்டு நிறையப் புல் முளைச்சி பெரிய காடாயிரும்ல..”

“ஆமா அந்தக் காட்டில குருவிகள் இருக்கும்..அணில்கள் இருக்கும்..பூக்கள் இருக்கும்..வண்ணத்துப்பூச்சிகள் இருக்கும்..காடு இருந்தாத்தான் மழை பெய்யும்னு நம்ம புத்தகத்தில போட்டிருக்கில்ல..மழை பெய்ஞ்சி நிறையத் தண்ணீ வரும். நாம தண்ணிக்காக இவ்வளவு தூரம் நடக்கவேண்டாம்…”

”ஆமாம்” என்று தலையாட்டினாள் சுகந்தி. உடனே தலையிலிருந்த குடத்தை இறக்கி ஒரு கை நீர் அள்ளி அந்தப் புல்லின் தலையில் ஊற்றினாள் லட்சுமி. சுகந்தியும் தன் குடத்திலிருந்து ஒரு கை நீர் அள்ளி ஊற்றினாள்.

புல்லின் உயிர் நனைந்தது. மெதுவாக நினைவு திரும்பியது. ஈரம் பட்டதும் மெல்லக் கண் விழித்தது புல். தலையாட்டிக் கொண்டே நிமிர்ந்தது.

“நாளைக்கும் மறக்காம தண்ணி ஊத்தணும் என்ன..?”

“சரி”

குழந்தைகள் சிரமத்துடன் குடங்களை மீண்டும் தலையில் வைத்துக் கொண்டு மெல்ல  நடந்தார்கள். புல்லுக்கு ஆனந்தம். அதன் ஞாபகத்தில் பழைய வனங்கள் வந்து போயின. இந்தக் குழந்தைகளின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி கொண்டது. அப்போது ஒளிர்ந்த மாலை காலத்திற்குப் வெயிலில் காலத்திற்குப் வெகு பின்பு, ஒரு புல்லின் பச்சைநிழல் ஒத்தையாய் பூமியில் நீண்டு விழுந்தது.

Tuesday 27 March 2012

குழந்தைக்கதைகள் - அய்யாச்சாமி தாத்தா

ayyasaami
அய்யாச்சாமி தாத்தாவுக்கு நீளமான மீசை உண்டு. அதே போல நீண்டு வளர்ந்த தாடியும் இருந்தது.தலைமுடியும் வளர்ந்து தொங்கியது. தலைமுடி நீளம் மட்டும் அல்ல அடர்த்தியாகவும் இருந்தது.அது வைக்கோலின் நிறத்தில் இருந்தது. எல்லாவற்றையும் மொத்தமாகப் பார்க்கும்போது அய்யாச்சாமி தாத்தா தலையில் ஒரு வைக்கோல்படப்பைச் சுமந்து கொண்டிருப்பது போல தோன்றும்.

அய்யாச்சாமி தாத்தாவுக்கு பலாப்பழம் என்றால் ரொம்பப் பிரியம். வெறுமனே பிரியம்னு மட்டும் சொல்லிர முடியாது. வெறி மாதிரி பேராசை என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். ஒரு பெரிய பலாப்பழம் கிடைத்துவிட்டாலோ? ஒரு மூச்சில் தின்று விட்டுத்தான் வேறு வேலை. சாப்பிட்ட பிறகு ஒரு பெரிய ஏப்பம் விட்டுக் கொண்டே,”சே..ரொம்பச் சின்னப்பழம்!” என்று சொல்வார்.

ஒரு தடவை அய்யாச்சாமி தாத்தா ஒரு பலாப்பழம் சாப்பிட்டார்.கொட்டையை எடுத்து சுளையை முழுங்கினார். என்ன வேகம் தெரியுமா? எப்படின்னு தெரியல ஒரு பலாக்கொட்டை அவருடைய வயிற்றுக்குள் போய்விட்டது. வயிற்றுக்குள் போன பலாக்கொட்டை செரிக்கவில்லை.அதற்குப் பதிலாக முளைக்க ஆரம்பித்தது.இலைகள் துளிர்த்தன.மரமாகி, நீண்டு வளர்ந்து பலாமரமாகி விட்டது. இடது காது வழியே வெளியே வந்து விட்டது.அதற்குப் பிறகு எவ்வளவு வேகமாக வளர்ந்தது தெரியுமா? பருமனாகவும் உயரமாகவும் எல்லாப் பலாமரங்களையும் போல வளர்ந்து கொண்டிருந்தது.அய்யாச்சாமி அந்த பலாமரத்தைப் பார்த்து கர்வம் தோன்றியது. அவர் குழந்தைகளிடம், பலாமரத்தைச் சுட்டிக் காண்பித்து,”குழந்தைகளே! உங்க காதில இத மாதிரி பலாமரம் இருக்கா?” என்று கேட்பார்.

ஊஞ்சலாட்டத்தில் பெரிய கில்லாடி அய்யாச்சாமி தாத்தா. நாள்முழுவதும் ஊஞ்சலாடிக் கொண்டேயிருப்பார். எவ்வளவு ஆடினாலும் திருப்தி வராது.இப்போது தன் சொந்த உடம்பிலேயே பலாமரம் வளர்ந்தால் சும்மா இருப்பாரா? எவ்வளவு வசதியாகப் போய் விட்டது. அவர் அந்த மரத்தின் உயரமான கிளையில் ஊஞ்சல் கட்டினார். ஊஞ்சலில் ஏறி ஆடினாரே ஆட்டம்! அப்படி ஒரு ஆட்டம்!

அய்யாச்சாமி தாத்தாவின் சேக்காளி பக்கத்து வீட்டு பழனிச்சாமி. ஒரு பெரிய பலாபழத்தைத் தலையில் தூக்கிக் கொண்டு வந்தார். அய்யாச்சாமி தாத்தா ஒரு பெரிய கயிறு வைத்திருந்தார். அவர் அந்த கயிறைக் கீழே இறக்கினார். பழனிச்சாமி பலாப்பழத்தை அந்த கயிற்றில் கட்டினார். அய்யாச்சாமி தாத்தா கயிற்றை மேலே இழுத்தார். நாலைந்து சுளைகளை பழனிச்சாமிக்காக கீழே போட்டார். மீதி எல்லாவற்றையும் தின்று தீர்த்தார். பிறகு பழனிச்சாமியிடம் ” பழனி! இன்னும் பெரிய பழமாக கிடைக்கலியா?”என்று கேட்டார்.

அய்யாச்சாமி தாத்தாவின் காதில் பலாக்காய் காய்த்தது. ஒரே ஒரு காய் தான். ஆனால் எப்படிப்பட்ட காய் தெரியுமா? பழனிச்சாமியின் உயரம் இருக்கும். காய் பழுத்து பழமானது. பழனிச்சாமிக்கு நாலைந்து சுளைகளை மட்டும் எண்ணிக் கொடுத்து விட்டு மீதி பழத்தை அய்யாச்சாமி தாத்தாவே தின்று தீர்த்தார்.பிறகு அவர்,” பழனி! என் காதில வளர்ந்த பலாப்பழத்தைப் பாத்தீல்ல.. எவ்வளவு சின்னப்பழம்!” என்று சொன்னார்.

பலாப்பழத்தைத் தின்று முடித்த பிறகு அய்யாச்சாமி தாத்தா கண்களை மூடித் தூங்கத் தொடங்கினார். “கீழே விழுந்திராதீங்க..” என்று சொல்லி விட்டு வீட்டுக்குப் போய் விட்டார் பழனிச்சாமி.

அய்யாச்சாமி ஊஞ்சலில் உட்கார்ந்தபடியே உறங்கினார். கொஞ்சநேரத்தில் ஒரு கனவு கண்டார். சொர்க்கத்தில் ஒரு பலாமரம். அதில் ஒரு பலாப்பழம். எவ்வளவு சுவையாயிருக்கும்? அவர் அதைப் பறிக்க நினைத்தார். ஊஞ்சல் கயிற்றின் பிடியை விட்டு காற்றில் கைகளை நீட்ட, ஊஞ்சலிலிருந்து ‘பொத்தடீர்’ என்று விழுந்தார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களோடு பழனிச்சாமியும் ஓடி வந்தார். உயரத்தில் இருந்த ஊஞ்சலில் அய்யாச்சாமி தாத்தா இல்லை.ஊஞ்சல் வெறுமனே ஆடிக் கொண்டிருந்தது. ஆனால் பலாமரத்தின் அடியிலோ? ஒரு வைக்கோல்படப்பு கிடந்தது. இதற்கு முன் அங்கு கிடையாது. இப்போது எப்படி அங்கே வந்தது? எல்லோரும் அருகில் சென்று பார்த்தனர். அது வைக்கோல்படப்பு இல்லை. அய்யாச்சாமி தாத்தாவின் மீசை தாடி தலைமுடிதான்! அவர்கள் வைக்கோல்படப்பை விலக்கிப் பார்த்தார்கள். அய்யாச்சாமி தாத்தா அடியில் கிடந்தார். பேச்சுமூச்சு இல்லை.

டாக்டர் வந்து பரிசோதித்தார். “அய்யாச்சாமி தாத்தா இறந்து விட்டார்” என்று டாக்டர் அறிவித்தார். பழனிச்சாமி ஆடகளை விலக்கிக் கொண்டு முன்னால் போனார்.எல்லோரும் அவரையே உற்றுப் பார்த்தார்கள். என்ன செய்யப் போகிறார்? பழனிச்சாமி குனிந்தார். அய்யாச்சாமி தாத்தாவின் காதைக் கண்டு பிடித்தார் காதுக்குள் சத்தமாய்,” அய்யாச்சாமி தாத்தா! பலாப்பழம் தரேன் பலாப்பழம்..!” என்று சொன்னார்.

இறந்து போன அய்யாச்சாமி தாத்தா குதித்து எழுந்தார். “பழனி! கொண்டு வா! பலாப்பழத்தை!” என்றாரே பார்க்கலாம்
மலையாளத்தில்- மாலி
தமிழில்-உதயசங்கர்

Monday 26 March 2012

சந்திரனின் காதலிகள்

vangoh
நாங்கள் எப்பவும் ஒன்று போலவே சுற்றிக் கொண்டிருந்தோம். நான், பாரதி, கந்தசாமி, சந்திரன், ஒன்றாகவே சினிமாவுக்குப் போனோம். ஒன்றாகவே கல்லூரிக்குப் போனோம். ஒன்றாகவே மாரியப்பா கபேயில் புரோட்டா, சால்னா, சாப்பிட்டோம். முத்தையாபிள்ளை கிளப்புக் கடையில் வடைகளைத் தின்றோம். முகைதீன்பாய் டீக்கடையில் டீ குடித்தோம். ஒன்றாகவே எங்கள் ஊரின் ஒவ்வொரு தெருவையும் அளந்தோம். எங்கள் வீடுகளும் அடுத்தடுத்த தெருக்களில் இருந்ததால் உறங்குகிற நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒருவரையொருவர் பசை மாதிரி ஒட்டிக் கொண்டே திரிந்தோம்.

சந்திரனின் அம்மா கூட, “ ஆமால..இவனுக்குப் பசிச்சா அவன் திம்பான்.. அவனுக்குக் கொல்லைக்கி வந்தா.. இவன் பேளுவான்..” என்று கேலி செய்வார்கள். அதே போலப் பேச்சு. பேச்சு அப்படியொரு பேச்சு. எப்போதும் பேசிக் கொண்டேயிருந்தோம். என்ன பேசினோம் என்று இப்போது யோசித்துப் பார்த்தால் எதுவும் ஞாபகத்தில் இல்லை. ஆனால் பேசிக் கொண்டேயிருந்திருக்கிறோம். உலக விசயங்களைப் பற்றி, உள்ளூர் விசயங்களைப் பற்றி, சொந்த விசயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். ஆனால் தெரியாத்தனமாகக்கூட பாடங்களைப் பற்றிப் பேசவில்லை. கல்லூரியில் சேர்ந்த புதிது. அந்த ஆண்டு தான் நாங்கள் படித்த கோ.வெ.நா. கல்லூரியில் பெண்களும் சேர்ந்து படிக்கிறார்கள். நாங்களும் சரி, பெண்களும் சரி, தலை நிமிர்ந்து பார்த்தது இல்லை. எப்போதும் தலை குனிந்தபடியே போய் வந்து கொண்டிருந்தோம். ஆனால் கல்லூரிக்கு வெளியே எங்களுக்கு மீசை அரும்பத் தொடங்கியிருந்தது. கண்கள் ஓரிடத்தில் நிற்காமல் அலை பாயத் தொடங்கியிருந்தது. எங்களுடைய பௌதீகக் கண்களுக்குப் பின்னால் கனவுக் கண்கள் முளைத்தது. அதுவும் தெருவில் இளம்பெண்கள் யாராவது தென்பட்டால் போதும். அந்தக் கனவுக் கண்களுக்கு றெக்கை முளைத்து விடும். இதை முதலில் நான் தான் கண்டுபிடித்தேன்.
              
ஒரு நாள் தீவிரமாக ‘ அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தில் கமலஹாசனின் நடிப்புத் திறமையைப் பற்றி நான் தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்க எனக்கு எதிரே நின்று கொண்டிருந்த மூன்று பேரும் அமைதியாய் இருந்தார்கள். வழக்கமாக அப்படி எதுவும் நடக்காது. நான் என்ன சொன்னாலும் அதை மறுத்துப் பேசுகிற சந்திரன் பேசவில்லை. பாரதி சிரித்துக் கொண்டிருந்தான். கந்தசாமி பராக்குப் பார்க்கிற மாதிரி திரும்பிக் கொண்டான். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு சிலா வரிசை கட்டி, சண்டமாருதமாய் பேசி நிறுத்திய போது, மூணு பேரும் ஒண்ணுபோல, “என்னமோ சொல்லிகிட்டிருந்தியே.. என்னது..” என்று கேட்டார்கள். எனக்கு வந்த வெளத்துக்கு அப்படியே மூணு பேரையும் அடிச்சு நொறுக்கணும் போல இருந்தது. ஆனால் அப்படி செய்யாமல் சுற்றும்முற்றும் பார்த்தேன். தூரத்தில் ஒரு சிவப்புத் தாவணி மறைந்து கொண்டிருந்தது. அதுக்கப்புறம் தான் ஒவ்வொருத்தனுக்கும் கனவுக் கண்கள் முளைத்து விட்டதை மற்றவன் கண்டுபிடித்துச் சொன்னான்.
                
அதுக்கப்புறம் பேசிக்கிட்டிருக்கும்போது எந்தப்பய கண்ணாவது அங்கிட்டு இங்கிட்டு போச்சுதுன்னா போதும் அவ்வளவுதான். உடனே பேச்சை நிறுத்தி விட்டு அப்படியே ஒண்ணுபோல அந்தப்பக்கம் பார்க்கத் தொடங்கி விடுவோம். சில நேரம் பேச்சு போரடித்தால் சந்திரன் அப்படியே கண்களைத் திருப்புவான். உடனே பேச்சு நின்று விடும். “ எல நான் சும்மால்ல அங்கிட்டுப் பார்த்தேன்…” நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம். பல நேரங்களில் இது ஒரு விளையாட்டு மாதிரி ஆகி விடும்.
           
எங்கள் நால்வரில் சந்திரன் அப்பாவி. அவன் சொல்கிற எதையும் நாங்கள் நம்புவதில்லை. காரணம் அவன் நம்புகிற மாதிரி சொல்வதுமில்லை. அவன் வீட்டில் ஒரு சுண்டெலியை முந்திய நாளிரவு அடித்ததாகச் சொல்லுவான். நாங்கள் நம்ப மாட்டோம். ஏனெனில் அவன் அடித்ததாகச் சொல்கிற சுண்டெலி ஒரு பன்னிக்குட்டி சைசுக்கு இருந்ததாகச் சொல்லுவான். நானும் பாரதியும் கூட அவ்வளவாகக் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால் கந்தசாமி விட மாட்டான். அவனை நோண்டிக் கொண்டே இருப்பான். கஷ்டம் என்னவென்றால், அவன் நோண்ட நோண்ட பன்னிக்குட்டி சைசுக்கு இருந்த சுண்டெலி காண்டாமிருகம் சைசுக்கு வளர்ந்து விடும். பாரதி தான் தலையிட்டு சுண்டெலி மேலும் வளர்ந்து விடாமல் தடுப்பான். ஆனால் இந்த மாதிரி சச்சரவுகள் எல்லாம் சந்திரனின் அதீதக் கற்பனையைத் தடைசெய்ய முடிய வில்லை.

பல நேரங்களில் நாங்கள் நாலு பேரும் ஒரு நாளும் பிரியக்கூடாது. கடைசி வரைக்கும் இதே மாதிரி இருக்கணும் என்று காதலர்களைப் போல சத்தியம் செய்து கொள்வோம். உண்மையிலேயே நாங்கள் ஒருக்காலமும் பிரிய மாட்டோமென்று மனப் பூர்வமாக நம்பினோம். அந்த நாட்களின் இனிமையின் சுவை இன்னும் நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனை அற்புதமான கனவுகள்! விந்தையான இளமைக்கால அநுபவங்கள்! யோசித்தால் நாம் தான் இப்படியெல்லாம் பேசினோமா, என்று தோன்றுகிறது. மனதில் ஏக்கம் பொங்கி அலை வீசுகிறது. இப்போது கந்தசாமி இல்லை. எங்களை விட்டும் இந்த உலகத்தை விட்டும் பிரிந்து போய் விட்டான். மற்ற மூன்று பேரும் வேறுவேறு திசைகளில் வேறுவேறு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுழித்துப் பொங்கி நுரைத்து காட்டாறாய் ஓடிய இளமைக் கால உணர்வுகளே இன்னமும் என் ரத்தத்தில் தன் தடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.
            
எங்கள் கட்டற்ற கனவுகளை ஒழுங்குபடுத்துபவனாக பாரதி இருந்தான். அவன் எங்களை வழி நடத்துபவனாகவே இருந்தான். அவன் நிறைய புத்தகங்கள் வாசிக்கிறவனாக இருந்தான். ஓவியம் வரைபவனாக இருந்தான். கல்லூரியில் கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டிகளில் பரிசுகள் வாங்குகிறவனாக இருந்தான். நாங்கள் அவன் வாசித்த புத்தகங்களை வாசித்தோம். அவன் வரைந்த படங்களை வரைந்து பார்த்தோம். அவனைப்போலவே கட்டுரைப் போட்டிகளில், பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டோம். பரிசுகளோ, பாராட்டுகளோ கிடைக்கவில்லை. கானமயிலாட அதைப் பார்த்து காப்பியடித்த வான்கோழிகளைப் போலிருந்தோம். ஆனால் அவனைப் பார்த்து பொறாமைப் படவில்லை. தகுதியுள்ள தலைவனாக அவனை ஏற்றுக் கொண்டோம்.

அவன் தான்,ஒரு மாலை நேரச்சந்திப்பில், “ எல மக்கா.. இனிமே நாம இப்படி அலையக் கூடாது.. அவ அவனுக்கு ஒரு ஆளை முடிவு செய்ஞ்சுகிட்டு அவ அவன் ஆளத் தான் பாக்கணும்..’ என்று சொன்னான். நீண்ட விவாதத்திற்குப் பின்னால் எல்லோரும் அதை ஏகமனதாக ஏற்றுக்கொண்டோம். அவனே காலக்கெடுவையும் சொன்னான். இன்னும் பதினைஞ்சு நாளைக்குள்ளே அனைவரும் முடிவைச் சொல்லிவிட வேண்டும். யாருமே அது என்ன பதினைஞ்சுநாள் டைம்? அதுக்குள்ளே எப்படி காதல் வரும்?என்று கேள்விகளே கேட்கவில்லை.

அன்று இரவு இனிய கனவுகளுடனே தூங்கினோம். மறுநாள் காலையிலிருந்து பார்க்கிற இளம்பெண்களையெல்லாம் இது நம்ம ஆளா? இது நம்ம ஆளா? என்று உத்து உத்துப் பார்த்துக் கொண்டு திரிந்தோம். எப்பவுமே செட்டு சேர்ந்து அலைந்து கொண்டிருந்தால் எப்படி ஆளைப் பிடிக்க முடியும்? என்று சந்தேகத்தைக் கிளப்பினான் கந்தசாமி.  அதோடு விட்டிருந்தால் சந்திரன் அவ்வளவு ஆவேசப் பட்டிருக்க மாட்டான். பாரதி ஏற்கனவே ஆளைப் பிடிச்ச பிறகு தான் இதைச் சொல்லியிருப்பானோ என்று வேறு கேட்டுவிட்டான். “ போடா.. வெங்கப்பயலே.. உன்னால முடியலன்னா முடியலன்னு சொல்லிட்டு போடா.. அவனைப் போய் சந்தேகப்படறியே..”

சந்திரனின் ஆவேசத்துக்குப் பதில் தருவதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். நான் இந்தப் பயல்களின் கண்ணையும், கால்களையும் ஃபாலோ பண்ணிகிட்டேயிருந்தேன். ஒண்ணும் பிடிபடலை. ஆனால் ஒவ்வொரு நாளும் நாலு பேரும் பார்த்த உடனேயே கேக்கிற முதல் கேள்வியே, “  என்ன….எதாச்சும்…”

“ம்ஹூம்..”

” இன்னும் நாலுநாள் தான் இருக்கு…”

           
எங்கள் பேச்சுகளில் இருந்த சுதந்திரம் குறைந்து போய் விட்டது. ஒருத்தரை ஒருத்தர் கள்ளத்தனமாக நோட்டம் விட்டோம். எனக்கு பெரிய அச்சலாத்தியாக இருந்தது. நான் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி விடலாமா என்று நினைத்தேன். ஆனால் தன்மானம் தடுத்தது. அதோடு சந்திரனும், கந்தசாமியும் சிரிக்கும்படியாகி விடுமே என்ற அச்சம் வேறு.

கெடுவுக்கு முந்தின நாள் இரவு உறக்கம் வராமல் யோசித்துக் கொண்டேயிருந்தேன். ஒவ்வொரு முகமாக என் மனதில் ஓடியது. மீனா, முத்துலட்சுமி, செல்வி, என்று வரிசையாக வந்தார்கள்.யாரும் என்னை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. ஆளு அத்தனை லட்சணம்! குழப்பத்துடனே தூங்கி விட்டேன்.
           
அந்த நாளும் வந்தே விட்டது. ரகசியம் காப்பதற்காக நாங்கள் கதிரேசன் கோவில் மலையிலுள்ள புலிக்குகைப் பாறை மீது ஏறி உட்கார்ந்திருந்தோம். பாரதி அவனுடன் பள்ளிக்கூடத்தில் படித்த பள்ளித்தோழி ஆனந்தியைச் சொன்னான். கந்தசாமி அவன் வீட்டு வளவுக்குள் இருக்கிற மாரியம்மாளைச் சொன்னான். நான் அந்த நேரத்தில் சற்றும் யோசிக்காமல் திருநெல்வேலியில் இருந்த என் மாமா மகள் மல்லிகாவைச் சொன்னேன். சந்திரன் எதுவுமே சொல்லவில்லை. யோசிக்கிற மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டினான். கந்தசாமி உடனே, “ என்னடா ஆளு கிடைக்கலயா.. இன்னும் பத்து நாள் டைம் வேணா எடுத்துக்கோ..” என்று அனுதாபத்துடன் சொன்னான்.

சந்திரன் காற்றில் அலைபாய்ந்த தலைமுடியை ஸ்டைலாக கோதி விட்டுக் கொண்டே கொஞ்சமும் அலட்டாமல், “ ச்சேச்சே… யாரைச் சொல்றதுன்னு யோசிச்சிகிட்டிருக்கேன்..பங்களாத்தெருவில் நூர்ஜகான், கடலைக்காரத்தெருவில் ரொசிட்டா, எங்க தெருவில உமா, ஊரில என் அத்தைமக அம்மாபொண்ணு… எல்லோரும் என்னைத் தான் காதலிப்பேன்னு ஒத்தைக் கால்ல நிக்கிறாங்க.. நான் தான் இன்னும் முடிவு பன்ணல…”

எனக்கு வந்த சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. கந்தசாமி அந்தப் பக்கமாகத் திரும்பிக் கொண்டான். அவன் உடல் குலுங்குவது தெரிந்தது. பாரதி பரிதாபமாக சந்திரனைப் பார்த்தான்.

மேற்கில் எங்கள் இளமைக் கால அறியாமையைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே கரிசல்காட்டுச் சூரியன் மறைந்து கொண்டிருந்தான். எல்லோரும் மீண்டும் ஒரு முறை வாழ்ந்து விட நினைக்கும் இளமைக் கால அறியாமையே உன்னை வணங்குகிறேன்!

Sunday 25 March 2012

சின்னப்பாண்டியின் அறம்

abstract
நான் ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பிற்குப் போனபோது அங்கே சின்னப்பாண்டி ஏற்கனவே இரண்டு வருடங்களாக இருந்தான். அதே பெஞ்சில், அதே இடத்தில். என்னுடைய வீடு இருந்த முத்தானந்தபுரம் தெருவையும், சின்னப்பாண்டியின் வீடு இருந்த கன்னிவிநாயகர் கோவில் தெருவையும் ஒரு இரண்டடிச் சந்து இணைத்தது. பள்ளிக்கூடம் எதிர்பார்த்த திறமை (!) சின்னப் பாண்டியிடம் இல்லை. அதே போல சின்னப்பாண்டியின் திறமையை எதிர்கொள்கிற வலு பள்ளிக்கூடத்துக்கு இல்லை. எனவே பள்ளிக்கூடமும் சின்னப்பாண்டியும் பரஸ்பரம் கெக்கலி கொட்டிக் கொண்டே நாட்களைக் கடத்தினர். இரண்டு பேரும் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. அநேகமாக எல்லாவகுப்புகளிலும் சின்னப்பாண்டி அடி வாங்கினான். அவனை அடிப்பதை ஆசிரியர்கள் ஒரு பொழுது போக்காகவும், அன்றாடக் கடமையாகவும் மாற்றிக் கொண்டார்களோ என்று தோன்றுகிற மாதிரி ஒவ்வொரு நாளும் கழியும். அவ்ன் ஒரு கேள்விக்கும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கிற மாதிரி சொன்னதில்லை. அப்படியே தக்கிமுக்கிச் சொன்னாலும் வார்த்தைக்கு வார்த்தை புத்தகத்தில் இருக்கிற மாதிரியே இருக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வற்புறுத்துவார்கள். அடி வாங்கும் போது “சார்..சார்” என்று கத்துவானே தவிர ஒரு சொட்டுக் கண்ணீர் வராது. வகுப்பைச் சுற்றிச் சுற்றி அவன் ஓட ஆசிரியர்களும் அசராமல் ஓடி ஓடி அடிப்பார்கள். அந்தக் கூத்தைப் பார்த்து வகுப்பே விழுந்து விழுந்து சிரிக்கும்.
           
அடி விழுந்து முடிந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சின்னப்பாண்டி வழக்கம் போல சிரிக்க ஆரம்பித்து விடுவான். இந்த அடி, உதை, நிமிட்டாம்பழம், காதுமுறுக்கு, எல்லாம் பி.ட்டி. பீரியடு வரைக்கும் தான். அந்த வகுப்பில் அவன் தான் பிஸ்தா. மற்ற பயல்கள் எல்லாம் வாயும் மெய்யும் பொத்தி நிற்பார்கள். விளையாடுவதற்கென்றே பிறந்த மாதிரி இருப்பான் சின்னப்பாண்டி. எந்த விளையாட்டு என்றாலும் அவனுடைய நெளிவுசுளிவும், நேர்த்தியும், திறமையும், வேறு யாருக்கும் வராது. வகுப்பறையில் ஏற்பட்ட அத்தனை அவமானங்களையும் அவன் அங்கே துடைத்து விடுவான். விளையாடும் போது அவன் வேறு ஒரு ஆளாய் மாறி விடுவான். நெஞ்சிலிருந்தே முளைத்த மாதிரி நீண்ட கால்கள், ஒட்டிய பாம்பு வயிறு, மெலிந்த கைகள், அவன் ஒரு எட்டு எடுத்து வைத்தால் நாங்கள் மூணு எட்டு எடுத்துவைக்க வேண்டியதிருந்தது. அப்படி ஒரு நீண்ட சரீரம்.  எப்போதும் ஒரு புன்னகை மீதமிருக்கும் முகம். விளையாடும் போது அபூர்வமான அழகோடு இருக்கும்.
           
பள்ளி விளையாட்டுகளில் அவன் தான் கேப்டன். அவன் இருக்கும் அணி ஒரு போதும் தோற்றதில்லை. பல சமயம் எங்களுடைய அழுகிணி ஆட்டம் பிடிக்காமல், எங்களோடு விளையாடாமல் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு ( பெரிய பத்து), அண்ணன்களோடு விளையாடுவான். சின்னப்பாண்டி அடி வாங்காத ஒரே வகுப்பு இது தான். அது மட்டுமல்ல, பி.ட்டி. ஆசிரியர் அவனை செல்லங்கொஞ்சுவார். குட்டைக் கத்தரிக்காய் என்ற பட்டப் பெயரோடு பள்ளிக்கூடத்தில் வலம் வந்து கொண்டிருந்த எனக்கு அவன் உடனே ஹீரோ ஆகி விட்டான்.


வாரவிடுமுறை நாட்களில் வீட்டிலேயே குட்டி போட்ட பூனை மாதிரி அம்மாவுக்குப் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த நான் எல்லை தாண்டி சின்னப்பாண்டியோடு விளையாடுவதற்காகவே அவனுடைய தெருவுக்குப் போனேன். அங்கே அவனுக்குப் பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. ஐந்து வயது பொடிப்பயல்களிலிருந்து அவனை விட மூத்த பயல்கள் வரை அவனுக்குப் பின்னால் சொக்கிப் போய்த் திரிந்தார்கள். அங்கே அவன் மகத்தான சாகசவீரனாக இருந்தான்.


குட்டிச் சுவர்களைத் தாண்டுவது, எவ்வளவு உயரமான சுவர்களிலும் ஏறி விடுவான், எவ்வளவு உயரமான சுவரிலிருந்தும் குதிப்பான். அஞ்சாறு பயல்களை குனிய வைத்து “சொர்க்” அடித்துத் தாண்டிக் குதிப்பான். எறிபந்தில் ஒரு தடவை கூட யாரும் அவனை எறிந்ததில்லை. பீட்டர் லாஸ்ட் என்ற ஓடு அடுக்கிற விளையாட்டில் அவன்தான் எப்போதும் ஜெயித்தான். கோலி விளையாட்டுகளில் எல்லாப் பயல்களின் கோலிக்குண்டுகளையும் அவனே விளையாடி ஜெயிப்பான். கடைசியில் திருப்பிக் கொடுத்து விடுவான். பம்பரக்குத்தில் ஆக்கர் வைத்தால் அவ்வளவு தான் பம்பரம் உடையாமல் தப்பிப்பது கடினம். கிட்டிப்புள் விளையாட்டில் ஒரே தடவையில் பத்து தடவை அடித்து நூறு நூறாய் எண்ணுவான். செதுக்கு முத்தில் அவன் செதுக்கினால் வட்டத்துக்குள் ஒரு முத்தும் அடுத்தவனுக்கு மிஞ்சாது. பச்சைக்குதிரை, பாண்டி, நொண்டி, ரைட்டா தப்பா, கிளியாந்தட்டு, ஆடுபுலி, கள்ளம்போலிஸ், என்று எந்த விளையாட்டிலும் அவன் சோடை போகவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் இருந்த சின்னப்பாண்டி வேறு. தெருவில் விசுவரூபம் எடுத்து நின்றான். என்னுடைய பார்வையில் இருந்த தொழுதேற்றும் உணர்வை அவன் தெரிந்து கொண்டதாலோ என்னவோ அவனுக்கும் என்னை மிகவும் பிடித்துப் போய் விட்டது. விளையாட்டுக்கு உத்தி பிரிக்கும்போது என்னை அவன் அணியிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்வான். அப்படியே எதிர்பாராவிதமாக எதிரணிக்குப் போய் விட்டால் என்னிடம் மட்டும் கொஞ்சம் மென்மையாக நடந்து கொள்வான். எறி பந்தாக இருந்தால் என் மீது எறிய மாட்டான். இப்படி எனக்கும் அவனுக்குமிடையில் மானசீகமான ஒரு பிரியம் இலை விட்டு, கிளைவிட்டு, பூப்பூவாய் பூத்துக் கொண்டிருந்தது.
           
இப்போதெல்லாம் நான் வீட்டிலேயே இருப்பதில்லை. எப்போதும் சின்னப்பாண்டியின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். அந்த நாட்களின் கட்டற்ற . சுதந்திரம்….இனி வருமா? அது வேறு காலம்.. அது வேறு உலகம்..அப்போது இந்த நாட்களும் கடந்து போய் விடும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. எத்தனை அந்நியோந்யம்! எத்தனை பிரியம்! எத்தனை சண்டை! எத்தனை சச்சரவு! எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட அந்த ஈரம் ததும்பும் மனசு எங்கே? ஒவ்வொரு நாளும் இன்பமாய் கடந்து சென்றதே. இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. குழந்தைமை…என்ன அற்புதம்.. எத்தனை இனிமை..
               
அடுத்த ஆண்டில் நான் எட்டாவது வகுப்புக்குப் போய் விட்டேன். சின்னப்பாண்டி பள்ளிக்கூடத்தோடு ஒத்துப்போக முடியாமல் நின்று விட்டான். அவனுடைய அப்பா அவனை ஒரு பலசரக்கு கடையில் வேலைக்குப் போட்டு விட்டார். அதன் பின்பு எங்களுடைய சந்திப்பு குறைந்து விட்டது. அவனுக்கு ஞாயிற்றுக்கிழமை அரை நேரம் மட்டும் தான் விடுமுறை. அந்தப் பொழுதுகளில் சந்தித்துக் கொண்டிருந்தோம். அதுவும் நாளாவட்டத்தில் குறைந்தது. அவனிடமும் சின்னச் சின்ன மாற்றங்கள் தெரிந்தன. பழைய வேகம், இயல்பு, குறைந்திருந்தது.


அடுத்து வந்த ஆண்டுகளில் என்னுடைய நண்பர்கள் வட்டம் மாறி விட்டது. நாறும்பூநாதன், சாரதி, முத்துச்சாமி, மந்திரமூர்த்தி, ராமலிங்கம், என்று எல்லாம் படிப்பாளி நண்பர்கள். அதன் பிறகு சின்னப்பாண்டியின் தெருவுக்குப் போவதே குறைந்து விட்டது. எப்போதாவது அங்கே போனால் அங்கே என்னை விட ஐந்து வயது இளையவனான என் தம்பி கணேசனோடு அவன் கபடி விளையாடிக் கொண்டிருந்தான். அடுத்து புதிதாக ஒரு ரசிகர் கூட்டம் ஒன்று அவன் பின்னால் திரண்டிருந்தது. ரசிகக் குழந்தைகள் வளர்ந்து மாறிக்கொண்டேயிருந்தார்கள். ஆனால் சின்னப்பாண்டி மாறாமல் அதே குழந்தைமையோடு இருந்தான். இப்போது தற்செயலாக எதிரெதிரெ சந்தித்தால் வெறும் ஒரு புன்னகையாக எங்கள் உறவு சுருங்கிக் கொண்டு வந்தது.


நான் கல்லூரியில் படிக்கும் போதும்சின்னப்பாண்டியைச்சுற்றி பையன்கள் இருந்தார்கள். அப்போது சின்னப்பாண்டி கருகருவென பெரிய மீசையோடு இருந்தான்.விளையாட்டின் நடுவே என்னைக் கவனித்து விட்ட சின்னப்பாண்டி மரியாதையுடன் விஷ் பண்ணினான். எனக்குச் சங்கடமாக இருந்தது. கையை மேலே தூக்கியும் தூக்காமலும் அந்த இடத்தை விட்டு வேகமாகக் கடந்து விட்டேன்.
        
அதன்பிறகு அவ்வளவாக அவனைப் பார்க்கிற சந்தர்ப்பங்கள் ஏற்படவில்லை. என்னுடைய உலகமும் தலைகீழாக மாறி விட்டது.கல்லூரிப்படிப்பு முடித்து வேலையின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது ஒரு மத்தியான வேளையில் சின்னப்பாண்டியைச் சந்தித்தேன். அவன் ஒரு பெட்டிக்கடை போட்டிருந்தான். அந்தப் பெட்டிக்கடைக்குப் போய் நான்,ரெம்ப கேஷூவலாக ,


“ ஒரு வில்ஸ் பில்டர் கொடுங்க” என்று கேட்டேன். என் முகத்தில் எந்த பாவமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் எனக்குச் சின்னப்பாண்டியுடனான பழைய நட்பின் ஞாபக ஊற்றுக்கண் தூர்ந்து போய் விட்டது. அதனால் நான் ஒரு பெட்டிக்கடைக்காரர் முன் இருப்பதாகவே நினைத்தேன். ஆனால் சின்னப்பாண்டி அப்படி நினைக்கவில்லை. நான் கேட்டதும் அவர் முகமே மாறி விட்டது. ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்ட மாதிரி முகத்தில் ஒரு இறுகிய பாவம் தோன்றியது. அவன் சிகரெட்டை எடுத்துக் கொடுக்கவில்லை. நான் நின்று கொண்டிருந்தேன். வெகு நேரமாக நிற்பதைப் போல ஒரு அசௌகரியத்தை உணர ஆரம்பித்தேன். அப்போது அவனுடைய கடைக்கு வந்த இன்னொரு ஆளிடம்,


“ அவருக்கு ஒரு சிகரெட் எடுத்துக் கொடுங்க “ என்று சிகரெட் பெட்டியை அவரிடம் எடுத்துக் கொடுத்தான். எனக்குள் ஏதோ ஒரு உணர்வு மனதைப் பிசைந்தது. நான் சில்லரையை வைத்து விட்டு நகர்ந்து விட்டேன். அந்த சிகரெட் எனக்கு ரசிக்கவில்லை.
        
அதன் பிறகு நான் சின்னப்பாண்டியின் கடைப்பக்கமே போகவில்லை. அதற்குக் காரணம் அது வரை வீட்டுக்குத் தெரியாமலிருந்த சிகரெட் விஷயம் சின்னப்பாண்டி சொல்லி என் தம்பி மூலமாக வீட்டுக்குத் தெரிந்து ஒரு வாரம் வீட்டில் ரகளையானது மட்டுமில்லை, என் தம்பியிடம் சின்னப்பாண்டி ரெம்ப வருத்தப்பட்டு என்னை ரெம்ப நல்ல பையன் என்று நினைத்திருந்ததாகவும், நான் சிகரெட் கேட்ட சம்பவம் அவனை மிகவும் பாதித்து விட்டதாகவும் புலம்பியிருக்கிறான்.


இத்தனைக்கும் சின்னப்பாண்டி ஏழாம் வகுப்பிலிருந்தே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான்.

Saturday 24 March 2012

கு.அழகிரிசாமியின் ஆவி

images (3) 
ஆளரவமற்ற அத்துவானக் காட்டுக்குள் மோனத்தவமியற்றுகிற மாதிரி தன்னந்தனியே நின்று கொண்டிருக்கிறது குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன். மெலிந்தும், விரைந்தும், சுழன்றும், கனிந்தும், இசைந்தும், வீசுகிற காற்றின் சப்தம். பறவைகள், பூச்சிகளின் ஒலிக்கலவை பின்னணி இசை போல ஒலித்துக் கொண்டிருக்கின்றது. பெருவெள்ளமாய் ஓடிக் கொண்டிருக்கும் அமைதிப் பேராற்றை அவ்வப்போது ஊடறுத்துச் செல்கின்றன ரயில்கள். தடதடவென ஓடி மறையும் ரயிலின் கடைசிச் சக்கரத்தின் வாலைப் பிடித்துக் கொண்டே வந்து நிற்கும் நிசப்தம். வெயில் முழுக்காட்டிக் கொண்டிருக்கும் கரிசல்வெளி. புதர்களாய் நிறைந்த சிறு காடு. தண்டவாளங்களின் ஓரம் சுதந்திரமாய் அலைந்து மேயும் கௌதாரிகள், தவிட்டுப் புறாக்கள், மணிப்புறாக்கள், தவிட்டுக்குருவிகள்,காடைகள், சிட்டுகள், படைகுருவிகள், காகங்கள் நடை பயின்று கொஞ்சிக் குலாவித் திரியும் காட்சி கனவாய் தெரியும். இயற்கையின் கோலாகலத்தைக் கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன்.
     
ஸ்டேஷனுக்கு வெளியே கிடக்கிறது சிமிண்ட் பெஞ்சு. வெகுகாலமாய் பயணிகளின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்த ரயிலும் நின்று செல்லாத ரயில்வே ஸ்டேஷனாக குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் மாறியதிலிருந்து பயணிகள் யாரும் வருவதில்லை.முன்பு நிலைமை இப்படியில்லை. சுத்துப்பட்டிக் கிராமங்களிலிருந்து கோவில்பட்டி செல்வதற்கு குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் தான் போக்குவரத்து மார்க்கம். விவசாய விளைபொருட்களை கோவில்பட்டி சந்தைக்குக் கொண்டு செல்வதற்கும், தூராதூரப் பயணங்களுக்கும் ரயில் தான். அப்போது ரயில் வரும் நேரமென்றால் ஸ்டேஷன் களை கட்டி விடும். காடுகளுக்குள்ளிருந்து திடீர் திடீரென மக்கள் முளைத்து வருவார்கள். மழை பெய்து ஓடும் தாம்போதிகளைப் போல சுற்றிலுமுள்ள காடுகளிலிருந்து ஒத்தையடிப் பாதைகள் ஓடி வரும். அந்தக் கோணல்மாணலான  ஒத்தையடிப்பாதைகள் சுத்துப்பட்டிகளிருந்து மக்களைக் கூட்டிவரும். கூட்டம் கூட்டமாக வந்து சேரும் மக்கள் அவசர அவசரமாக டிக்கெட் எடுத்து விட்டு ஆசுவாசமாக வேம்பின் குளிர் நிழலில் மூட்டை முடிச்சுகளோடு உட்கார்ந்து பாடு பழமைப் பேசிக் கொண்டிருப்பார்கள். தூரத்தில் கூகூகூவென ரயிலின் கூவல் கேட்டதும் குமாரபுரம் ஸ்டேஷன் பரபரப்பாகி விடும். குப் குப் எனக்கரிப்புகையைக் கக்கிக் கொண்டே இளைத்தபடி எல்லோர் கனவுகளையும் சுமந்து கொண்டு வந்து நிற்கும் ரயில்.
   
பழைய நினைவுகளின் பெருமிதத்தை அசை போட்டபடியே கண்களை மூடி மெய்ம்மறந்திருக்கிறது குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன். வெளியே ஏதோ அரவம். கண் விழித்த ஸ்டேஷன் யாரோ புதிதாய் அந்த சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறது. யாரென்று தெரிய வில்லை. இந்த அகால வேளையில் யாரது? பார்த்த சாயலாகவும் தெரிகிறது. தன் உறக்கச் சடவை உதறி விட்டுக் கண்களை அகலத்திறந்து உற்றுப் பார்க்கிறது குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன்.
     
குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனைத் தமிழிலக்கியத்தில் அழியாப் புகழ் பெற வைத்த கு.அழகிரிசாமி அங்கே உட்கார்ந்திருக்கிறார். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் முக்கியமானவர். சிறுகதைக்கலையின் எல்லைகளை விரித்தவர். குழந்தைகளின் அபூர்வமான மனோநிலைகளைக் கதைகளில் படைத்த எழுத்துச்சிற்பி. எழுத்தில் பிடிபடாத மனிதமனதின் விசித்திரங்களை இயல்பாக எழுதிப் பார்த்தவர். சாகாவரம் பெற்ற சிறுகதைகளுக்குச் சொந்தக்காரர். இடைசெவல்காரர். கரிசல் இலக்கிய பிதாமகரான எழுத்தாளர்  கி.ராஜநாராயணனுக்கு உற்ற தோழர். கோவில்பட்டி செல்வதற்கும், சென்னை போவதற்கும் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்கிற கு.அழகிரிசாமி. அந்த நாட்கள்… அந்த நாட்களின் நினைவுகள் காலத்தின் தழும்பேறிய பழுப்புநிறப் புகைப்படம் போல கண்ணில் தெரிகிறது. குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனின் மனதில் ஒரு ஏக்கம்.
images (6)
சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்த கு.அழகிரிசாமி எதிரே காற்றில் அலையடித்துக் கொண்டிருந்த சீம்புல் வெளியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். ரஷ்ய நாவல்களில் வருகிற ஸ்தெப்பிப்புல்வெளியின் ஞாபகம் வருகிறது. காற்று விரைந்து வீசுகிறது. காலம் கலைந்து குழம்பி கரைந்து கொண்டிருக்கிறது. குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனின் கதை விரிகிறது. பள்ளி விடுமுறையில் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் பணி புரியும் ஸ்டேஷன் மாஸ்டரின் விருந்தினராக வந்து தங்கியிருந்த பள்ளித் தலைமையாசிரியர் அன்று கோவில்பட்டி திரும்புகிறார். குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் அவர் கழித்த அந்த இரண்டு நாட்களும் அவருடைய மனதில் இனம் புரியாத அமைதியைத் தந்திருக்கிறது.  விடைபெறும் வேளையில் ஸ்டேஷன் மாஸ்டரிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார். ரயில் வரும் நேரம் நெருங்கி விட்டது. பயணிகள் ஒவ்வொருவராக வந்து பயணச்சீட்டு வாங்குகிறார்கள். வடக்கே போற ரயில் போயிருச்சா? என்ற பதைபதைப்புடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஸ்டேஷன் மாஸ்டர் இனிய புன்னகையுடன் ஆற்றுப் படுத்துகிறார். அவசரமில்லை. ரயில் வருவதற்கு நேரமிருக்கிறது. டிக்கெட் எடுத்துக் கொண்டு அதோ அந்த வேப்பமர நிழலில் தைப்பாறுங்கள்.
       
வேப்பமரம் தலையையும் கைகளையும் அசைத்து எல்லோரையும் கூப்பிடுகிறது. பள்ளித் தலைமையாசிரியர் விடைபெற்று நடைமேடையில் வந்து நிற்கிறார். எளிமையான மக்கள். ரயில் வருகிறது எல்லாவற்றையும் கவனித்தபடியே கு.அழகிரிசாமி நிற்கிறார். பள்ளித்தலைமையாசிரியரின் மனம் நிறைந்திருக்கிறது. ரயிலில் இடைசெவல் கிராமத்திலிருந்து பெரிய பள்ளிக்கூடம் சேருவதற்காக கோவில்பட்டிக்கு ரயிலேறும் மாணவர்கள் அவர்களை அழைத்துக் கொண்டு வரும் கிராமப் பள்ளியின் ஆசிரியர், மதுரைக்குப் போகும் ஒரு குடும்பம், அவர்களுடைய உரையாடல் என விரியும் கதை. கோவில்பட்டியில் மாணவர்கள் சேர்வதற்குச் சென்ற பள்ளியின் தலைமையாசிரியர் தாங்கள் ரயிலில் பார்த்த பெரியவர் தான் என்று அறிந்தவுடன் ஏற்படும் திகைப்பு. தலைமையாசிரியர் வைக்கிற பரீட்சையில் வெற்றி பெற்று பள்ளியில் சேர அனுமதி கிடைக்கிற மகிழ்ச்சி. எளிய மக்களின் எளிய உணர்வுகள். அலங்காரமான மொழிநடையில்லை. கு.அழகிரிசாமியின் மற்றெல்லாக் கதைகளைப் போலவே எளிய மொழியில் எழுதப்பட்ட கதை. ஆனால்  ஆழ்கடலின் ததும்புதலைப் போன்ற அநுபவம் தரக்கூடியது. குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனைப்போல இயற்கையானது. அந்த ஸ்டேஷனில் பணி புரியும் ஸ்டேஷன் மாஸ்டரைப் போல அன்பின் வழியது. அந்தக் கிராமத்து மக்களைப் போல வெள்ளந்தியானது. ஒரு நீரோடையின் அமைதியான நீரொழுக்கு போல ஓடிக் கொண்டிருக்கும் கதை. காலம் கண்ட கனவாய் விரியும் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன்.
     
இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதி, புதுமைப்பித்தனுக்கு,அடுத்த தலைமுறை எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் கு.அழகிரிசாமி. கரிசல் மண்ணின் மைந்தரான அவரே ஒரு வகையில் வட்டாரஇலக்கியத்தின் முன்னத்தி ஏர் பிடித்தவர். தம் குறைந்த வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், பத்திரிகையாசிரியர், பதிப்பாசிரியர், என்று முழு இலக்கியவாதியாகவே வாழ்ந்தவர் கு.அழகிரிசாமி.

யதார்த்தவாத எழுத்தின் மிகச் சிறந்த கொடைகளைத் தமிழ் இலக்கியத்துக்கு தந்தவர்.அவருடைய அழகம்மாள், திரிபுரம், ராஜா வந்திருக்கிறார், வெறும்நாய், பேதமை, சிரிக்கவில்லை, சுயரூபம், போன்ற அமரத்துவமான கதைகளை எழுதிச் சென்றவர் கு.அழகிரிசாமி. மனித மனதின் விசித்திரங்களை,நகைச்சுவையுணர்வுடன் சித்தரிப்பதில் வல்லவர். எளிய மக்களின் மனச்சிடுக்குகளை மிக லாவகமாக வெளிப்படுத்துகிறார். அவருடைய கதைகளை வாசிக்க வாசிக்க மனம் விசாலமடைகிறது.மேன்மையடைகிறது. அந்த மகத்தான கலைஞனைக் கைகூப்பி வணங்கச் சொல்கிறது.
     
பொழுது சாய்ந்து கொண்டிருக்கிறது. குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் குறுக்குமறுக்குமாய் ஓடிக் கொண்டேயிருக்கின்றன. கு.அழகிரிசாமி அந்த சிமிண்ட் பெஞ்சிலேயே உட்கார்ந்திருக்கிறார். ஸ்டேஷனுக்கு நேரெதிரே சூரியன் செம்பழமாய் சிவந்து ஜொலிக்கிறது. அடிவானச் சிவப்பு கரிசல் வெளியில் வேகமாய் பாய்ந்து மறைகிறது. கொஞ்சம் கொஞ்சமாய் மறையத் தொடங்குகிறது சூரியன். குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் கதையில் வருகிற ஸ்டேஷன் மாஸ்டரின் பணி நேரம் முடியப் போகிறது. அவரை மாற்ற வரும் பதிலி ஸ்டேஷன் மாஸ்டருக்காகக் காத்திருக்கிறார். அவருக்குத் தான் ஒரு கதைக்குள் வெகுகாலமாய் வாழ்ந்து கொண்டிருப்பது தெரியாது. அந்தக் கதையை எழுதிய மகத்தான எழுத்தாளர் கு.அழகிரிசாமி வெளியே சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருப்பதும் தெரியாது. நடந்து கொண்டிருப்பது கதையா என்றும் தெரியாது. வெளிச்சத்தின் ரேகைகள் மங்கத் தொடங்குகின்றன. கரும்வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கு.அழகிரிசாமி எழுந்து மெல்ல நடக்கத் தொடங்குகிறார்.
       
அன்று பௌர்ணமி. குருமலைக்குப் பின்னாலிருந்து பளீரென்று நிலா எழுந்து வருகிறது. நிலவின் அபூர்வ வெள்ளையொளியில் புதர்க்காடும், குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனும் திளைக்கிறது. மௌனப்பெருங்கடலின் அலை வந்து மோதி கால் நனைக்கிறது. இருளின் தீற்றலென வரைந்து குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிளைத்துச் செல்லும் தார்ச்சாலையில், எழுத்தாளர்கள் கோணங்கி, மாதவராஜ், கவிஞர்கள் தேவதச்சன், கிருஷி, நான்,எல்லோரும் நடந்து போய்க் கொண்டிருந்தோம். இரவின் லயத்தை மீட்டிய படியே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம் எங்களுக்கு பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. கவிஞர்கள் நிலாரசிகனும், லட்சுமிகாந்தனும்,சபரிநாதனும்,பெருந்தேவியும், நடந்து வந்து கொண்டிருந்தார்கள். நிலவின் ஒளியைப் பருகியபடியே அவர்கள் கு,அழகிரிசாமியின் கதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு வருகிறார்கள், காற்று குளிர்ந்து வருகிறது. அவர்கள் நான்கடிக்கு ஒருமுறை நின்று பேசுகிறார்கள். அவர்கள் பேசுவதை விந்தையான ஆர்வத்தோடு கரிசல்காட்டுவெளி உற்றுக் கேட்கிறது.
       
கவிஞர் தேவதச்சன் தன் கைப்பையிலிருந்து வெத்திலையை எடுத்துப் போடுகிறார். நானும், கோணங்கியும் மாதவராஜும், கிருஷியும்,சிகரெட்டைப் பற்ற வைக்கிறோம். சிறிது நேரம் பேச்சில்லை. அமைதி. பேரமைதி. பூச்சிகளின் ரீங்காரத்தைத் தவிர வேறெந்தச் சத்தமும் இல்லை.தூரத்தில் தேசியநாற்கரச் சாலையில் விரையும் வாகனங்களின் வெளிச்சப் புள்ளிகள் ஓடி மறைகின்றன.
     
எங்கள் எல்லோருக்கும் பின்னால் தனியே ஒரு காலடிச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. கோணங்கி தான் அதைக் கவனித்துச் சொன்னார். அதன் பிறகே நாங்கள் எல்லோரும் கவனித்தோம். கு.அழகிரிசாமியின் ஆவி என்றார் கோணங்கி. கு.அழகிரிசாமியின் ஆகிருதி என்றார் கிருஷி. கு.அழகிரிசாமியின் ஆளுமை என்றார் மாதவராஜ். எல்லாவற்றையும் ஆமோதித்தபடியே தலையாட்டிக் கொண்டிருந்தார் தேவதச்சன். இல்லை கு.அழகிரிசாமியே தான் அது. தான் எழுதிய கதையைத் திருப்பிப் பார்க்க பகல் முழுவதும் இங்கேயே உட்கார்ந்திருந்தார் என்றேன் நான்.
       
அந்த பௌணர்மி இரவில் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் கு.அழகிரிசாமி என்ற கலையாளுமையின் ஆவி எங்கள் எல்லோர்மீதும் இறங்கிக் கொண்டிருந்தது. எங்கள் மூதாதையை நாங்கள் வணங்கினோம். கு.அழகிரிசாமியே………

நன்றி- மீடியா வாய்ஸ்

பிக்காசாவுடன் ஒரு சந்திப்பு

images (8)
விஸ்கர்ம நடுநிலைப்பள்ளியில் என்னுடன் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே சிலேட்டில் பிள்ளயார் படத்தை அச்சு அசலாக வரைந்து காட்டி ஆச்சரியப்படுத்திய மாரீஸ் பின்னாளில் கோவில்பட்டி இலக்கியவாதிகளின் இணைப்பு மையமாகத் திகழப்போகிறார் என்று எப்படித் தெரியும் ? நானும் என் தம்பியும் சரஸ்வதி பூஜை சமயம் கொலுவைக்கும் வீடுகளுக்கு தினசரி சாயங்காலம் ஆறுமணிக்கு மேல் கிளம்பிவிடுவோம். கொலு பொம்மைகள் எங்களுக்கு லட்சியமில்லை அங்கே கிடைக்கிற சுண்டல், பொங்கல் இவைகளுக்காகவே தினசரி பத்திருபது வீடுகளுக்கு போய் வருவோம். அய்யர் தெருவில் தான். அதிகக்கொலு வீடுகள் இருக்கும் அது தவிர்த்து தெற்கு பஜாரில் மாரீஸின் வீட்டிலும் மாதாங்கோவில் தெருவில் ஒவியர் ராமலிங்கம் வீட்டிலும், கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள ஒரு வீட்டிலும் கொலு வைத்திருப்பார்கள. அந்தப் பத்து நாட்களும் நான் என் தம்பியை இழுத்துக்கொண்டே அலைவேன். அப்போது மாரீஸை அடிக்கடி பார்த்திருக்கிறேன். இந்தச் சித்திரத்திற்கப்புறம் நான் மாரீஸை சந்தித்தது என் கல்லூரிப் பருவதில் தான்.

கல்லூரியில் படிக்கும் போது தான் நான் கவிதை எழுதத் தொடங்கினேன். அப்போது மாரீஸ் கையெழுத்துப்பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தார். அவன் மூலமாகவே துரை, கெளரிஷங்கர், தேவதச்சன், அப்பாஸ், பிரதீபன் என்று இலக்கிய நண்பர்கள் அறிமுகமானார்கள். மாரீஸின் அப்பா டி.எஸ். சுப்பையா மிகச் சிறந்த காலண்டர் ஆர்ட்டிஸ்ட் பிரபல ஓவியர் கொண்டைய ராஜூவின் பிரதம சீடர் என்பதையும் அப்புறம் நான் தெரிந்து கொண்டேன். மாரீஸின் வீட்டில் அவருடைய சகோதரர்கள் அனைவருமே ஏதோவொரு வகையில் கலைத்துறையில் ஈடுபட்டிருந்தார்கள். மாரீஸின் கையெழுத்துப் பத்திரிக்கை அவ்வளவு அழகாக இருக்கும். அதில் எப்படியாவது என் கவிதை வர வேண்டும் என்று ஏங்கியிருக்கிறேன். மாரீஸ் வீடும், சாரதா ஸ்டுடியோவும், அவருடைய அப்பாவும் , அண்ணனும் வேலைபார்த்த கலைக்கூடமும் அவ்வளவு ஆச்சரியத்தை தரக்கூடியதாக இருந்தது எல்லாவற்றிலும் கலையும் அழகும் ததும்பியது. மாரீஸ் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார்.  அவர் நடத்திய ஆம்லெட், குகை, மனனி, மானசரோவர் போன்ற பத்திரிகைகள் கலை மிளிரும் சிறந்த இலக்கியப் பதிவுகள். அத்துடன் எல்லா இலக்கியவாதிகளுக்கும் இணைப்பு மையமாகவும் இருந்தார் கி.ரா வந்தாலோ, தேவதேவன் வந்தாலோ, விக்கிரமாதித்தன் வந்தாலோ, ஜோதி விநாயகம் வந்தாலோ எல்லோரும் முதலில் அவரைச் சந்தித்து விட்டு பின்னர் மற்றவர்களை சந்திப்பது எனவோ, எல்லோரும் அவருடைய வீட்டுக்கோ, ஸ்டூடியோவுக்கு வந்து கூடுவது எனவோ, சில நேரம் அவரே மற்றவர்களச் சந்திக்க அழைத்துச் செல்கிற மாதிரியோ நடக்கும் இப்படி சிறிது நாளில் தமிழகம் முழுவதுமுள்ள இலக்கியவாதிகளுக்கு மாரீஸ் என்ற பெயர் பிரபலமான பெயராக மாறிவிட்டது.

நாங்கள் தீவிர இலக்கியத்தினுள் கால் வைத்திருந்த சமயம், திடீரென ஒருநாள் மாரீஸ் என்னிடம், நாம் புதிதாய் ஒரு அமைப்பைத் துவங்கியிருக்கிறோம். கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் அண்டு லிட்டரேச்சர் லவ்வர்ஸ் ( கால்ல்) என்று பெயர் அதனுடைய முதல் நிகழ்ச்சி நவீன ஒவியர் பிக்காசோவின் நூற்றாண்டு விழா ஓவியக் கண்காட்சியுடன் ஆரம்பிக்கப் போகிறோம் என்றார். உற்சாகமாகிவிட்டது எனக்கு. அநேகமாக தமிழ்நாட்டில் கோவில்பட்டியில் மட்டும் தான் பிக்காசோவின் ஓவியக்கண்காட்சி அப்போது நடைபெற்றது என்று நினைக்கிறேன். வாசலில் ஆறடி உயரத்திற்கு சுருட்டு பிடித்தபடியே பிக்காசோ வரவேற்றுக் கொண்டிருந்தார். ஏராளமான எழுத்தாளர்கள். இலக்கியவாதிகள் வந்திருந்தனர். அஃக் பரந்தாமன் அதில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்தக் கண்காட்சி முழுவதுமே மாரீஸின் உழைப்பும் திறமையும் தான். மாரீஸ் படைப்பூக்கத்தின் உச்சகட்டத்தில் இருந்த சமயம் அது. முதல்நாள் நானும் மாரீஸிம் சேர்ந்து ஸ்கிரீன் பிரிண்டிங்கில் அடித்த போஸ்டர்களை பசை வாளியை எடுத்துக் கொண்டு கோவில்பட்டி ஊரெங்கும் ஒட்டினோம். அதற்குப்பிறகு கார்ட்டூன் கண்காட்சி உலக சமாதான கண்காட்சி, யுத்த எதிர்ப்பு கண்காட்சி, என்று நிறைய்ய கண்காட்சிகள நடத்தினோம். ஒவ்வொரு நாளுமே புதிது புதிதாய் புலர்ந்து கொண்டேயிருந்த நாட்கள் அவை.images (7)

பிக்காசோ எங்கள் அன்புக்குரிய நவீன ஒவியராகி விட்டார். அவரைப்பற்றிய சிறு குறிப்புகளயும் விடாது படித்தோம். அவருடைய அமைதிப்புறா, குல்பெர்னிகா போன்ற ஒவியங்களை வியந்து போற்றினோம். பாசிசத்தை எதிர்த்த அவருடைய தீரமும் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகக் கடைசிவரை இருந்தார் என்பதும் இன்னும் உவப்பாக இருந்தது. அவருடைய கியூபிசபாணியிலான ஒவியம் குறித்தும் இம்ப்ரஸனிஸம் கோட்டோ வியம், வாட்டர்கலர், ஆயில் பெயிண்டிங் என்று ஓவியங்களின் விதங்கள் மாரீஸ் மூலமாகத்தான் எங்களுக்கு அறிமுகமானது.

கோவில்பட்டியில் நடைபெறும் எல்லா கலைஇலக்கிய நிகழ்வுகளிலும் மாரீஸின் பங்களிப்பு இல்லாமலிருக்காது. நூற்றுக்கும்மேற்பட்ட புத்தகங்களுக்கு அட்டையும் வடிவமைப்பும் செய்திருக்கிற மாரீஸ் அதிகம் பேசாதவர். ஆனால் கூரான,  விமரிசனங்கள முன் வைப்பவர். எல்லா விஷயங்களிலும் இதுவரை யோசித்திராத கோணத்தை முன் வைப்பவர், வேலை செய்வதில் பிசாசு. லெளகீக வாழ்வில் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் தான் ஒரு மகா கலைஞன் என்பதில் உள்ளூரப் பெருமிதம் கொண்டவர். அவர் மட்டும் கோவில்பட்டியில் இருந்திராவிட்டால் கோவில்பட்டிக்கு இன்றுவரை ஏற்பட்டுள்ள இலக்கிய மதிப்பு ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.

கோவில்பட்டியின் எத்தனையோ பெருமைகளில் என் அன்பு நண்பர் மாரீஸ் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் என்பதே எனக்கு பெருமை. மாரீஸ் மகத்தான கலைஞன்!

(எனது முன்னொரு காலத்திலே என்னும் நினைவுகளின் தொகுப்பிலிருந்து..) 

அந்தோன் சேகவ்வும் அப்பணசாமியும்

chekhov.n இப்போது யோசிக்கும் போது இப்படியெல்லாமா இருந்திருக்கிறோம் என்று ஆச்சரியம் வருகிறது. பழைய நினைவுகளை அசைபோடும் போது தோன்றும் அபூர்வமான முகபாவம் தோன்றுகிறது. இதழோரத்தில் சிறு கீற்று நிரந்தரமாய் தங்கியிருக்கிறது. அடடா என்ன வாழ்க்கை! எனக்கு மட்டுமா இப்படி நேர்ந்தது. நிறைய்ய நண்பர்களுக்கு இப்படி நேர்ந்து விட்டதே. ஏதோ உன்மத்தம் பிடித்தமாதிரி அலைந்து திரிந்தோமே விட்டேத்தியான, பற்றற்ற, தீவிரமான அந்த நாட்கள் இனி வருமா? அந்த அர்ப்பணிப்பின் கதகதப்பில் ஏற்கனவே கந்தகபூமியான கோவில்பட்டி மேலும் சூடாகிப் போனதே. கடந்த காலம் கடந்த காலம் தான். ஆனால் அதன் உயிர்த்துடிப்பு மிக்க ஸ்பரிசம் இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது.


கோவில்பட்டிக்கு வந்த சிறிது நாட்களிலேயே ஜோதிவிநாயகம் நண்பர்களிடம் ஆலோசித்து தேடல் என்று ஒரு பத்திரிக்கை அவர் தங்கி வேலை பார்த்த விளாத்திகுளம் முகவரியில் தொடங்கினார். பத்திரிக்கை வேலை சம்பந்தமாக எப்போதும் யாராவது ஒருவர் விளாத்திகுளத்தில் இருப்பதாக ஆகிவிட்டது. சிலசமயம் சாயங்காலம் கோவில்பட்டி நண்பர் குழாமே விளாத்திகுளத்திற்கு வந்துவிடும். பல நேரம் நான் இருப்பது விளாத்திகுளமா கோவில்பட்டியா என்ற சந்தேகம் ஏற்படும். அதே காரசாரமான விவாதங்கள் விமரிசனங்கள், உரையாடல்கள், இடம் மட்டும் மாற்றம் கோவில்பட்டியில் காந்தி மைதானம். விளாத்திகுளத்தில் வைப்பாறு. கொஞ்ச நாட்களுக்கு விளாத்திகுளமும் அதிர்ந்தது. கோவில்பட்டிக்கு வருகிற இலக்கியவாதிகள் எல்லோருமே விளாத்திகுளத்திற்கும் போனார்கள். எனவே நான் எந்த நேரத்தில் எங்கே இருப்பேன் என்று எனக்கே தெரியாது. வீட்டில் ஒருபக்கம் வேலைக்குப் போகாமல் சுற்றுகிறானே என்ற கவலை இருந்தாலும், இன்னொரு பக்கம் பெரிய அறிவாளிகளுடனல்லவா, சுற்றுகிறான். பரவாயில்லை என்று ஆறுதலும் இருக்கும். இப்படி சுற்றிக் கொண்டிருக்கும் போது எங்கள் நண்பர் கூட்டத்தில் புதிய வரவாக அப்பணசாமி வந்து சேர்ந்தார் புதிய ஊர் சுற்றியாக. அவர் முத்துச்சாமியின் நண்பர். முத்துச்சாமியே அவரை அறிமுகப்படுத்தினார். பார்த்தவுடன் எந்தப் மனப்பதிவையும் ஏற்படுத்தாத முகமுடைய அப்பணசாமி கோவில்பட்டி மெயின் ரோட்டில் அப்பாவுடன் சேர்ந்து துணி வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிளாட்பாரக்கடை. சில நேரம் அவருடைய அப்பா இருப்பார். சில நேரம் அப்பணசாமி இருப்பார். எந்த நேரத்தில் யார் இருப்பார்கள் என்பது எங்களுக்குக் கடைசி வரைக் குழப்பம் தான். ஆனால் அவர்களுக்குள் ஒரு ஓப்பந்தம் இருந்தது போல் தான் தெரிந்தது. சிலசமயம் ஒன்றிரண்டு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலோ அப்பணசாமியின் அப்பா கடையில் இருக்கமாட்டார் அப்பணசாமியிடம் கேட்டால் தெரியாது என்பார். இரண்டு பேரும் எப்போது சந்தித்து எப்போது பிரிவார்கள் என்றும் தெரியாது. அபூர்வமாகச் சந்திக்கும் வேளை ரெண்டு பேரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ள மாட்டார்கள். அவர்களது நடவடிக்கைகள் ஒரு விசித்திரமான கணித சூத்திரம் போலவோ அல்லது ஒரு தத்துவார்த்தமான மெளன நாடகக் காட்சி போலவோ இருக்கும்.


என்ன தான் முத்துச்சாமி அப்பணசாமியை அறிமுகப்படுத்தினாலும் முதலில் எங்களில் யாரையும் அப்பணசாமியிடம் நெருங்கவிடவில்லை. காரணம் தினசரி சாயங்காலம் அல்வாவும் மிக்சரும் அப்பணசாமி வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இல்லையென்றால் இரவில் புரோட்டா சால்னா வாங்கிக் கொடுப்பார். இந்த ரகசியத்தை எப்படியோ கண்டுபிடித்து சாரதி தான் சொன்னார். அவ்வளவு தான் டீக்கும் சிகரெட்டுக்கும் அல்லாடிக்கொண்டிருந்த நாங்கள் விடுவோமா. முத்துச்சாமிக்கு முன்பாகவே அப்பணசாமியிடம் ஆஜராகி கடையில் உட்கார்ந்து இலக்கியம் பேசிக் கொண்டிருப்போம். அவரிடம் ஒரு டீயும் சிகரெட்டும் வாங்கிய பிறகே அந்த இடத்தை விட்டு அகன்று போவோம். நாளாக நாளாக எந்த நேரமாக இருந்தாலும் அப்பணசாமியைத் தேடிப்போவது என்றாகி விட்டது. அவருக்கும் அது பிடித்துப் போய் விட்டது.


ஒரு ஆறுமாசம் கழிந்திருக்கும் திடீரென அவருடைய கடை திறக்கப்படவில்லை. பலநாட்களாக திறக்காமல் போகவே நாங்கள் அப்பணசாமியைத் தேடி அவருடைய வீட்டிற்குப் போனோம். எந்த உணர்ச்சியுமில்லாத முகபாவத்தோடு எங்களாடு பேசிக்கொண்டிருந்தார். இனி கடை திறக்க முடியாது. அப்பணசாமி இருந்த நேரத்தில் துணி விற்ற பணத்தை அப்பணசாமி எடுத்து செலவு பண்ணியிருக்கிறார். அதே போல அவருடைய அப்பா இருந்த நேரத்தில் விற்ற பணத்தை அவருடைய அப்பா எடுத்துச் செலவு செய்திருக்கிறார். பிறகென்ன ? அப்பணசாமியும் எங்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டார்.


தீவிர படிப்பாளியாக திகழ்ந்த அப்பணசாமி மிகக் குறைவாகவே பேசுபவராகவும் ஆனால் எழுத்தில் அழுத்தமாக தன் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். கோவில்பட்டி யிலிருந்து சென்னை வந்து நண்பர்கள் வட்டத்தில் இணைந்தார். சென்னையின் அத்தனை நெருக்கடிகளுக்கும் ஈடுகொடுத்து தன்னை ஒரு சுதந்திரப்பத்திரிகையாளராக நிலைநிறுத்திக் கொண்டார். பின்னர் தமிழின் முதல் இணையதளப்பத்திரிக்கை ஆறாம் திணை ஆசிரியராகவும் இருந்தார். இப்போதும் சென்னையில் ஒரு வலுவான பத்திரிக்கையாளனாக நாடகாசிரியராக செயல்பட்டுக் கொண்டிருக்ககூடிய அப்பணசாமியின் தென்பரை முதல் வெண்மணி வரை என்ற நூல் தமிழ் இலக்கியத்தில் வாய்மொழி வரலாறு நூல்களில் ஒரு முக்கியமான பங்களிப்பு எனலாம். சென்னைக்குப் பஸ் ஏறிய போது நிச்சயமற்ற வாழ்க்கையை எதிர்கொள்ள அப்பணசாமியிடம் இருந்த தைரியம் எங்களுக்கில்லை.


அன்று பெளர்ணமி, விளாத்திகுளம் வைப்பாற்றுக்கு நடந்து போகிறோம். நான், ஜோதிவிநாயகம், அப்பணசாமி வைப்பாற்றின் மணல் நிலவின் வெள்ளையொளியில் மின்னுகிறது. ஏகாந்தமான வெளி, நிழலுருவங்களாக நாங்கள் வைப்பாற்றின் நடுவே மிதந்து சென்று கொண்டிருந்தோம். மணல் பரப்பின் குளர்ச்சி உடலெங்கும் பரவ அப்படியே உட்கார்ந்தோம். ஏதோ பேசிக் கொண்டு வந்தோம். எப்படியோ பேச்சு அந்தோன் சேகவ்வின் கதைகளைப் பற்றித் திரும்பிவிட்டது. எங்களுக்குள் உற்சாகம் பொங்கி விட்டது. ஒருவர் மாற்றி ஒருவர் சேகவ்வின் கதைகள சொல்லிக் கொண்டு வந்தோம். ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் (1860  1904) உலகச் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர். நாற்பத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சேகவ் தன் வாழ்நாளில் ஐநூற்று அறுபத்தியெட்டு சிறுகதைகளயும் நாடகங்களையும் எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைகளில் யதார்த்த வாழ்வினூடே தெரியும் அசாதாரணத்தை சொல்லுவார். உப்புசப்பற்ற சலிப்பான வாழ்க்கையை விவரிக்கும் போதே அதற்குள் இருக்கிற சுவாரசியத்தை சொல்கிற கலை அவருடையது. மகத்தான அந்த எழுத்துக் கலைஞனின் எழுத்துக்கள நாங்கள் கொண்டாடினோம். எங்களுக்கு மிகவும் பிரியத்திற்குரிவராக மாறியிருந்தார் அந்தோன் சேகவ்.


அப்பணசாமி சேகவ்வின் டார்லிங் என்ற கதையைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். பேசப்பேச எங்கிருந்தோ ஒரு உன்மத்த நிலை அந்த நிலவு வெளியினூடே வந்து உடலில் புகுந்தது போல சிரிக்க ஆரம்பித்தார். நாங்களும் சிரித்தோம். எங்கள் சிரிப்பின் ஒலி குறைந்து நின்ற பிறகும் அப்பணசாமியின் சிரிப்பொலி கேட்டுக் கொண்டேயிருந்தது. அது ஆந்திரேய் எபீமிச்சின் சிரிப்பாக இருந்தது. ஜோதிவிநாயகம் ஒரு கணம் பயந்து விட்டார். ஆனால் அந்த சிரிப்பின் ஒலிக் கோர்வை ஒரு இசைக் கோவையைப் போல நீண்டு கொண்டேயிருந்தது. ஆம் நாங்கள் சேகவின் ஆறாவது வார்டிலுள்ள பைத்தியங்களாக மாறியிருந்தோம். கலையின் உன்மத்தம் பிடித்த பைத்தியங்களாக அந்த இரவில் திரிந்தோம். மறக்கமுடியாத அந்த வைப்பாற்று இரவை மனம் கூடுகட்டிப் பாதுகாத்துக் கொண்டேயிருக்கிறது. அவ்வப்போது எடுத்துத்துடைத்து விளக்கிப் புதுக்கி மீண்டும் அடைகாத்துக் கொள்கிறது. மீண்டும் வருமா அந்த நாட்கள் ! பைத்தியங்களாக சுற்றிய அந்த நாட்கள் ! எங்கள் அன்புக்குரிய அப்பணசாமி அந்தோன் சேகவ்வாக மாறிய அந்த நாட்கள் ! மீண்டும் வருமா !


சேகவ் எதையும் பலத்தகுரலில் பிரகடனம் செய்வதில்லை வாசகருக்கு நேரடியாய் அறிவுறுத்த முற்படுவதில்லை. ஆனால் சேகவின் கதைகள் படிப்போரைக் கலங்கச் செய்கிறவை. துயரம் தோய்ந்த புன்னகை புரிகிறவை. மென்மையானவை. அவரது தலைசிறந்த படைப்பாக ஆறாவது வார்டை ஜோதி விநாயகம் குறிப்பிடுவார். அதன் பலபகுதிகளை வாசித்தும் காட்டுவார். ஆம் நான் நோயுற்றவன் தான். ஆனால் நூற்றுக்கணக்கான பைத்தியக்காரர்கள் சுதந்திர மனிதர்களாய் வெளியே இருந்து கொண்டிருக்கிறார்கள். சித்த சுவாதீனமுள்ளவர்களிடமிருந்து இவர்களை வேறுபடுத்தி இனங்கண்டு கொள்ளத்தெரியாத மூடர்களாய் இருக்கிறீர்கள் நீங்கள். இந்த ஒரே காரணத்தால் இவர்கள் சுதந்திரமாக வெளியே இருக்கிறார்கள். பிறகு ஏன் நானும் பரிதாபத்துக்குரிய இவர்களும் இங்கே கிடந்து அழிய வேண்டுமாம்...


எத்தனை சத்தியமான வார்த்தைகள். ஆறாவது வார்டு வேறொன்றுமில்லை நமது சமூகம் தானே என்றார் அப்பணசாமி. நான் அந்தோன் சேகவ்வை ஆராதிக்கிறேன்... என் மானசீகக் குருவாக வணங்கி மகிழ்கிறேன். பிரியத்துடன் அவர் கைகளப் பற்றிக்கொள்கிறேன். அந்தக் கைகளில் அப்பணசாமியின் சிரிப்பு அதிர்ந்து கொண்டிருந்தது.

(எனது முன்னொரு காலத்திலே என்னும் நினைவுகளின் தொகுப்பிலிருந்து..)

Friday 23 March 2012

வருக!

Josies-beach-calm-sea

அமைதியானது
ஆழமில்லாதது என் கடல்
ஆழிப்பேரலை அல்ல
ஓடிவிளையாடும் குழந்தையின்
பாதங்களைத் தொட்டுச் சிரிக்கும்
மெல்லலை வீசும் கடல்
கப்பல்கள் வரலாம் படகுகளும்
வல்லங்களும்
ஏன் தூண்டில்காரருக்கும் கூட
வேண்டிய மட்டும் கிடைக்கும் மீன்கள்
காதலர்கள் களிக்க
கவிஞர்கள் கவியெழுத
சும்மாவேனும் காற்று வாங்க
எல்லோரும் வந்தமர
இடமிருக்கிறது என் கடற்கரையில்
நீச்சல் தெரியாதவர்களும்
கடலில் இறங்கலாம்
ஆழம் பெரிதொன்றுமில்லை
அவரவர் முழங்கால் அளவேயாதலால்
தற்கொலை நிகழாக் கடல்
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பெரியவர்
கூடிக் குளிக்கும் கடல்
அமைதியானது
ஆழமில்லாதது என் கடல்
வருக யாவரும்
வாழ்வில் ஒருமுறையேனும்
அப்புறம்
அறியும் பாக்கியம் எல்லோருக்கும் இல்லை.