Monday 26 March 2012

சந்திரனின் காதலிகள்

vangoh
நாங்கள் எப்பவும் ஒன்று போலவே சுற்றிக் கொண்டிருந்தோம். நான், பாரதி, கந்தசாமி, சந்திரன், ஒன்றாகவே சினிமாவுக்குப் போனோம். ஒன்றாகவே கல்லூரிக்குப் போனோம். ஒன்றாகவே மாரியப்பா கபேயில் புரோட்டா, சால்னா, சாப்பிட்டோம். முத்தையாபிள்ளை கிளப்புக் கடையில் வடைகளைத் தின்றோம். முகைதீன்பாய் டீக்கடையில் டீ குடித்தோம். ஒன்றாகவே எங்கள் ஊரின் ஒவ்வொரு தெருவையும் அளந்தோம். எங்கள் வீடுகளும் அடுத்தடுத்த தெருக்களில் இருந்ததால் உறங்குகிற நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒருவரையொருவர் பசை மாதிரி ஒட்டிக் கொண்டே திரிந்தோம்.

சந்திரனின் அம்மா கூட, “ ஆமால..இவனுக்குப் பசிச்சா அவன் திம்பான்.. அவனுக்குக் கொல்லைக்கி வந்தா.. இவன் பேளுவான்..” என்று கேலி செய்வார்கள். அதே போலப் பேச்சு. பேச்சு அப்படியொரு பேச்சு. எப்போதும் பேசிக் கொண்டேயிருந்தோம். என்ன பேசினோம் என்று இப்போது யோசித்துப் பார்த்தால் எதுவும் ஞாபகத்தில் இல்லை. ஆனால் பேசிக் கொண்டேயிருந்திருக்கிறோம். உலக விசயங்களைப் பற்றி, உள்ளூர் விசயங்களைப் பற்றி, சொந்த விசயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். ஆனால் தெரியாத்தனமாகக்கூட பாடங்களைப் பற்றிப் பேசவில்லை. கல்லூரியில் சேர்ந்த புதிது. அந்த ஆண்டு தான் நாங்கள் படித்த கோ.வெ.நா. கல்லூரியில் பெண்களும் சேர்ந்து படிக்கிறார்கள். நாங்களும் சரி, பெண்களும் சரி, தலை நிமிர்ந்து பார்த்தது இல்லை. எப்போதும் தலை குனிந்தபடியே போய் வந்து கொண்டிருந்தோம். ஆனால் கல்லூரிக்கு வெளியே எங்களுக்கு மீசை அரும்பத் தொடங்கியிருந்தது. கண்கள் ஓரிடத்தில் நிற்காமல் அலை பாயத் தொடங்கியிருந்தது. எங்களுடைய பௌதீகக் கண்களுக்குப் பின்னால் கனவுக் கண்கள் முளைத்தது. அதுவும் தெருவில் இளம்பெண்கள் யாராவது தென்பட்டால் போதும். அந்தக் கனவுக் கண்களுக்கு றெக்கை முளைத்து விடும். இதை முதலில் நான் தான் கண்டுபிடித்தேன்.
              
ஒரு நாள் தீவிரமாக ‘ அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தில் கமலஹாசனின் நடிப்புத் திறமையைப் பற்றி நான் தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்க எனக்கு எதிரே நின்று கொண்டிருந்த மூன்று பேரும் அமைதியாய் இருந்தார்கள். வழக்கமாக அப்படி எதுவும் நடக்காது. நான் என்ன சொன்னாலும் அதை மறுத்துப் பேசுகிற சந்திரன் பேசவில்லை. பாரதி சிரித்துக் கொண்டிருந்தான். கந்தசாமி பராக்குப் பார்க்கிற மாதிரி திரும்பிக் கொண்டான். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு சிலா வரிசை கட்டி, சண்டமாருதமாய் பேசி நிறுத்திய போது, மூணு பேரும் ஒண்ணுபோல, “என்னமோ சொல்லிகிட்டிருந்தியே.. என்னது..” என்று கேட்டார்கள். எனக்கு வந்த வெளத்துக்கு அப்படியே மூணு பேரையும் அடிச்சு நொறுக்கணும் போல இருந்தது. ஆனால் அப்படி செய்யாமல் சுற்றும்முற்றும் பார்த்தேன். தூரத்தில் ஒரு சிவப்புத் தாவணி மறைந்து கொண்டிருந்தது. அதுக்கப்புறம் தான் ஒவ்வொருத்தனுக்கும் கனவுக் கண்கள் முளைத்து விட்டதை மற்றவன் கண்டுபிடித்துச் சொன்னான்.
                
அதுக்கப்புறம் பேசிக்கிட்டிருக்கும்போது எந்தப்பய கண்ணாவது அங்கிட்டு இங்கிட்டு போச்சுதுன்னா போதும் அவ்வளவுதான். உடனே பேச்சை நிறுத்தி விட்டு அப்படியே ஒண்ணுபோல அந்தப்பக்கம் பார்க்கத் தொடங்கி விடுவோம். சில நேரம் பேச்சு போரடித்தால் சந்திரன் அப்படியே கண்களைத் திருப்புவான். உடனே பேச்சு நின்று விடும். “ எல நான் சும்மால்ல அங்கிட்டுப் பார்த்தேன்…” நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம். பல நேரங்களில் இது ஒரு விளையாட்டு மாதிரி ஆகி விடும்.
           
எங்கள் நால்வரில் சந்திரன் அப்பாவி. அவன் சொல்கிற எதையும் நாங்கள் நம்புவதில்லை. காரணம் அவன் நம்புகிற மாதிரி சொல்வதுமில்லை. அவன் வீட்டில் ஒரு சுண்டெலியை முந்திய நாளிரவு அடித்ததாகச் சொல்லுவான். நாங்கள் நம்ப மாட்டோம். ஏனெனில் அவன் அடித்ததாகச் சொல்கிற சுண்டெலி ஒரு பன்னிக்குட்டி சைசுக்கு இருந்ததாகச் சொல்லுவான். நானும் பாரதியும் கூட அவ்வளவாகக் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால் கந்தசாமி விட மாட்டான். அவனை நோண்டிக் கொண்டே இருப்பான். கஷ்டம் என்னவென்றால், அவன் நோண்ட நோண்ட பன்னிக்குட்டி சைசுக்கு இருந்த சுண்டெலி காண்டாமிருகம் சைசுக்கு வளர்ந்து விடும். பாரதி தான் தலையிட்டு சுண்டெலி மேலும் வளர்ந்து விடாமல் தடுப்பான். ஆனால் இந்த மாதிரி சச்சரவுகள் எல்லாம் சந்திரனின் அதீதக் கற்பனையைத் தடைசெய்ய முடிய வில்லை.

பல நேரங்களில் நாங்கள் நாலு பேரும் ஒரு நாளும் பிரியக்கூடாது. கடைசி வரைக்கும் இதே மாதிரி இருக்கணும் என்று காதலர்களைப் போல சத்தியம் செய்து கொள்வோம். உண்மையிலேயே நாங்கள் ஒருக்காலமும் பிரிய மாட்டோமென்று மனப் பூர்வமாக நம்பினோம். அந்த நாட்களின் இனிமையின் சுவை இன்னும் நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனை அற்புதமான கனவுகள்! விந்தையான இளமைக்கால அநுபவங்கள்! யோசித்தால் நாம் தான் இப்படியெல்லாம் பேசினோமா, என்று தோன்றுகிறது. மனதில் ஏக்கம் பொங்கி அலை வீசுகிறது. இப்போது கந்தசாமி இல்லை. எங்களை விட்டும் இந்த உலகத்தை விட்டும் பிரிந்து போய் விட்டான். மற்ற மூன்று பேரும் வேறுவேறு திசைகளில் வேறுவேறு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுழித்துப் பொங்கி நுரைத்து காட்டாறாய் ஓடிய இளமைக் கால உணர்வுகளே இன்னமும் என் ரத்தத்தில் தன் தடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.
            
எங்கள் கட்டற்ற கனவுகளை ஒழுங்குபடுத்துபவனாக பாரதி இருந்தான். அவன் எங்களை வழி நடத்துபவனாகவே இருந்தான். அவன் நிறைய புத்தகங்கள் வாசிக்கிறவனாக இருந்தான். ஓவியம் வரைபவனாக இருந்தான். கல்லூரியில் கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டிகளில் பரிசுகள் வாங்குகிறவனாக இருந்தான். நாங்கள் அவன் வாசித்த புத்தகங்களை வாசித்தோம். அவன் வரைந்த படங்களை வரைந்து பார்த்தோம். அவனைப்போலவே கட்டுரைப் போட்டிகளில், பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டோம். பரிசுகளோ, பாராட்டுகளோ கிடைக்கவில்லை. கானமயிலாட அதைப் பார்த்து காப்பியடித்த வான்கோழிகளைப் போலிருந்தோம். ஆனால் அவனைப் பார்த்து பொறாமைப் படவில்லை. தகுதியுள்ள தலைவனாக அவனை ஏற்றுக் கொண்டோம்.

அவன் தான்,ஒரு மாலை நேரச்சந்திப்பில், “ எல மக்கா.. இனிமே நாம இப்படி அலையக் கூடாது.. அவ அவனுக்கு ஒரு ஆளை முடிவு செய்ஞ்சுகிட்டு அவ அவன் ஆளத் தான் பாக்கணும்..’ என்று சொன்னான். நீண்ட விவாதத்திற்குப் பின்னால் எல்லோரும் அதை ஏகமனதாக ஏற்றுக்கொண்டோம். அவனே காலக்கெடுவையும் சொன்னான். இன்னும் பதினைஞ்சு நாளைக்குள்ளே அனைவரும் முடிவைச் சொல்லிவிட வேண்டும். யாருமே அது என்ன பதினைஞ்சுநாள் டைம்? அதுக்குள்ளே எப்படி காதல் வரும்?என்று கேள்விகளே கேட்கவில்லை.

அன்று இரவு இனிய கனவுகளுடனே தூங்கினோம். மறுநாள் காலையிலிருந்து பார்க்கிற இளம்பெண்களையெல்லாம் இது நம்ம ஆளா? இது நம்ம ஆளா? என்று உத்து உத்துப் பார்த்துக் கொண்டு திரிந்தோம். எப்பவுமே செட்டு சேர்ந்து அலைந்து கொண்டிருந்தால் எப்படி ஆளைப் பிடிக்க முடியும்? என்று சந்தேகத்தைக் கிளப்பினான் கந்தசாமி.  அதோடு விட்டிருந்தால் சந்திரன் அவ்வளவு ஆவேசப் பட்டிருக்க மாட்டான். பாரதி ஏற்கனவே ஆளைப் பிடிச்ச பிறகு தான் இதைச் சொல்லியிருப்பானோ என்று வேறு கேட்டுவிட்டான். “ போடா.. வெங்கப்பயலே.. உன்னால முடியலன்னா முடியலன்னு சொல்லிட்டு போடா.. அவனைப் போய் சந்தேகப்படறியே..”

சந்திரனின் ஆவேசத்துக்குப் பதில் தருவதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். நான் இந்தப் பயல்களின் கண்ணையும், கால்களையும் ஃபாலோ பண்ணிகிட்டேயிருந்தேன். ஒண்ணும் பிடிபடலை. ஆனால் ஒவ்வொரு நாளும் நாலு பேரும் பார்த்த உடனேயே கேக்கிற முதல் கேள்வியே, “  என்ன….எதாச்சும்…”

“ம்ஹூம்..”

” இன்னும் நாலுநாள் தான் இருக்கு…”

           
எங்கள் பேச்சுகளில் இருந்த சுதந்திரம் குறைந்து போய் விட்டது. ஒருத்தரை ஒருத்தர் கள்ளத்தனமாக நோட்டம் விட்டோம். எனக்கு பெரிய அச்சலாத்தியாக இருந்தது. நான் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி விடலாமா என்று நினைத்தேன். ஆனால் தன்மானம் தடுத்தது. அதோடு சந்திரனும், கந்தசாமியும் சிரிக்கும்படியாகி விடுமே என்ற அச்சம் வேறு.

கெடுவுக்கு முந்தின நாள் இரவு உறக்கம் வராமல் யோசித்துக் கொண்டேயிருந்தேன். ஒவ்வொரு முகமாக என் மனதில் ஓடியது. மீனா, முத்துலட்சுமி, செல்வி, என்று வரிசையாக வந்தார்கள்.யாரும் என்னை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. ஆளு அத்தனை லட்சணம்! குழப்பத்துடனே தூங்கி விட்டேன்.
           
அந்த நாளும் வந்தே விட்டது. ரகசியம் காப்பதற்காக நாங்கள் கதிரேசன் கோவில் மலையிலுள்ள புலிக்குகைப் பாறை மீது ஏறி உட்கார்ந்திருந்தோம். பாரதி அவனுடன் பள்ளிக்கூடத்தில் படித்த பள்ளித்தோழி ஆனந்தியைச் சொன்னான். கந்தசாமி அவன் வீட்டு வளவுக்குள் இருக்கிற மாரியம்மாளைச் சொன்னான். நான் அந்த நேரத்தில் சற்றும் யோசிக்காமல் திருநெல்வேலியில் இருந்த என் மாமா மகள் மல்லிகாவைச் சொன்னேன். சந்திரன் எதுவுமே சொல்லவில்லை. யோசிக்கிற மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டினான். கந்தசாமி உடனே, “ என்னடா ஆளு கிடைக்கலயா.. இன்னும் பத்து நாள் டைம் வேணா எடுத்துக்கோ..” என்று அனுதாபத்துடன் சொன்னான்.

சந்திரன் காற்றில் அலைபாய்ந்த தலைமுடியை ஸ்டைலாக கோதி விட்டுக் கொண்டே கொஞ்சமும் அலட்டாமல், “ ச்சேச்சே… யாரைச் சொல்றதுன்னு யோசிச்சிகிட்டிருக்கேன்..பங்களாத்தெருவில் நூர்ஜகான், கடலைக்காரத்தெருவில் ரொசிட்டா, எங்க தெருவில உமா, ஊரில என் அத்தைமக அம்மாபொண்ணு… எல்லோரும் என்னைத் தான் காதலிப்பேன்னு ஒத்தைக் கால்ல நிக்கிறாங்க.. நான் தான் இன்னும் முடிவு பன்ணல…”

எனக்கு வந்த சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. கந்தசாமி அந்தப் பக்கமாகத் திரும்பிக் கொண்டான். அவன் உடல் குலுங்குவது தெரிந்தது. பாரதி பரிதாபமாக சந்திரனைப் பார்த்தான்.

மேற்கில் எங்கள் இளமைக் கால அறியாமையைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே கரிசல்காட்டுச் சூரியன் மறைந்து கொண்டிருந்தான். எல்லோரும் மீண்டும் ஒரு முறை வாழ்ந்து விட நினைக்கும் இளமைக் கால அறியாமையே உன்னை வணங்குகிறேன்!

1 comment:

  1. இனிமையான மலரும் நினைவுகளை அதே இனிமையுடன் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete