Monday, 2 July 2018

இந்துக்களின் புனித நூல் எது?


இந்துக்களின் புனித நூல் எது?

உதயசங்கர்

உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என்றால், இஸ்லாமுக்கு குரான், பார்சிகளுக்கு ஜெண்ட் அவஸ்தெ. அதே போல எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு கடவுள், ஒரு இறைத்தூதர், ஒரு மதத்தலைவர், ஒரு புனித ஸ்தலம் இருக்கின்றன. பிதாவின் பரிசுத்த ஆவி, யேசு, போப் ஆண்டவர், வாடிகன் நகரம், என்றோ கடவுள், அல்லா, இமாம், மெக்கா, என்றோ இருக்க, இந்துக்களுடைய கடவுள், இறைத்தூதர், மதத்தலைவர், புனித ஸ்தலம் என்ன? என்ற கேள்விக்கு விடை தேடலாம். ஆங்கிலேயேரின் வருகைக்கு முன்பு ஆதியில் ஆரியர்களின் வேதங்கள் அவர்களுக்குப் புனித நூல். ஆரியர்களின் தெய்வம் இந்திரன். வேதப்பாடல்களை இயற்றிய சப்தரிஷிகளே இறைத்தூதர்கள். கைபர்,போலன் கணவாய் வழியாக கண்ணுக்குத் தெரியாத அப்பாலை நிலங்களில் இருந்து வந்ததினால் அவர்களுடைய புனிதஸ்தலங்களை இமயமலை தாண்டி வானத்தில் வைத்தார்கள். அதுமட்டுமல்ல ஆரியர்கள் தங்களை இந்துக்கள் என்று ஆரம்பத்தில் சொன்னதுமில்லை. எழுதியதுமில்லை. வேதப்பாடல்களில் இந்து என்ற வார்த்தையும் வரவில்லை. வேதங்களை ஆரியக்குடும்பத்தில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் கற்றுக்கொள்ள அநுமதிக்கவில்லை. வேதங்கள் புனிதமானவை. காற்றிலே வந்திறங்கியவை. கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை. பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் வேதங்களைக் கற்றாலோ, கேட்டாலோ அவர்களின் நாக்கை அறுத்து, காதில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று எழுதி அதை நடைமுறைப்படுத்தியவர்கள்.
வேதங்களில் யாகங்கள் நடத்துகிற நடைமுறைகளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்ததாலே தத்துவச்சாரமாக பிரம்மத்தையும், உபநிடதங்களையும், பிரமாணங்களையும் உருவாக்கியவர்கள் ஆரியர்கள். காலப்போக்கில் வேதங்கள் காற்றில் பிறந்தவை என்று சொன்னவர்கள் ஸ்மார்த்த மரபினர்களாகவும், சிவன் அருளியது என்று சொன்னவர்கள் சைவர்களாகவும், விஷ்ணுவே சொல்லியது என்று சொன்னவர்கள் வைணவர்களாகவும் ஆனார்கள்.  இவையெல்லாம் என்னவென்றே தெரியாத பெரும்பான்மையான பௌத்த, சமண, சாங்கிய, தாந்திரீக, பூதவாத, தேகவாத, நாட்டார் தெய்வமரபினர்களும் இருந்தார்கள். பண்டைய காலத்திலிருந்தே பன்மைக்கலாச்சாரம் கொண்ட பிரதேசமாக இந்தியா என்று இன்று சொல்லப்படுகிற பிரதேசத்தில் இருந்த நாடுகளும் மக்களும் இருந்தனர். என்ன எழுதப்பட்டிருக்கிறது என்றே தெரியாத வேதங்கள் இந்துக்களின் புனிதநூலாகவோ சிவன், விஷ்ணு, பிரம்மன், போன்ற கடவுளரின் வருகைக்குப்பின் பின்வரிசைக்குப் போய்விட்ட இந்திரனை ( வேதங்களில் இவர் தான் தலைமைக்கடவுள் ) கடவுளாகவும், உயிரோடு யாராலும் போகமுடியாத வைகுண்டத்தையும் கைலாயத்தையும் புனித ஸ்தலங்களாகவும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
 பகவத்கீதை தான் இந்துக்களின் புனிதநூல் என்று புதிய கதை ஒன்று வெகுகாலமாக நிலவி வருகிறது. பகவத்கீதையில் சொல்லப்பட்டிருக்கிற அட்வைஸ்களைப் பின்பற்றி அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் ஒரு சிறந்த இந்துவாகவோ மனிதனாகவோ வாழ்ந்து விடலாம் என்றும் எல்லோராலும் சொல்லப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறது. சாமானிய இந்துக்கள் பகவத்கீதையை தங்களுடைய புனித நூலாகக் கருதுகிற போக்கும் இருக்கிறது. நிறைய வீடுகளில், கடைகளில் பகவத்கீதை வசனங்கள் என்று கடமையைச்செய் பலனை எதிர்பாராதே, என்று தொடங்கி பத்தோ பதினைந்தோ கட்டளைகள் எழுதப்பட்ட சித்திரங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
உண்மையில் பகவத்கீதை புனிதநூல் தானா? அதன் காலம் என்ன? அதில் சொல்லப்படும் பொருள் என்ன? அதன் தத்துவம் என்ன?
மகாபாரதம்
பண்டைய இந்தியாவில் இரண்டு சத்திரியகுல மன்னர்களுக்கிடையே குருஷேத்திரம் ( (இன்றைய பானிபட் நகருக்கு அருகில் ) என்ற இடத்தில் 18 நாட்கள் நடந்ததாகச் சொல்லப்படுகிற யுத்தமே மகாபாரதயுத்தம் என்று சொல்லப்படுகிறது. இந்த யுத்தத்தில் யாதவகுல சத்திரிய அரசனான கிருஷ்ணன் பாண்டவச்சகோதரரில் ஒருவனான அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக இருந்தான். போர்க்களத்தில் இருபக்கமும் நின்ற சொந்தக்காரர்களைப் பார்த்து செயலிழந்து நின்ற அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் சொன்ன அறிவுரைகளே பகவத்கீதை என நம்பப்படுகிறது.. இந்த அறிவுரைகளை மகாபாரதத்தை எழுதிய கிருஷ்ண துவைப்பாயன வியாசர் 100000 பாடல்களாக எழுதியிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த மகாபாரதத்திற்கு மூலமான ஜெயசம்ஹித எனும் நூல் கிடைக்கவில்லை.
மகாபாரதம் ஒரு மாகாவியம். உண்மையான நிகழ்வின் மீது கட்டப்பட்ட மகத்தான மிகைபுனைவு. உயர்வுநவிற்சியாகச் சொல்லப்பட்ட வீரகதை. மகாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படுகிற காலத்தில் கி.மு.10 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இரும்பு அறிமுகமாகவில்லை. அதுமட்டுமில்லை கி.மு.6 ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு தான் இரும்பின் வாசனையை இந்தியத்துணைக்கண்டம் அறிந்தது. அதேபோல மகாபாரதப்பாடால்களின்படி குருசேத்திரத்தில் நடந்த பதினெட்டு நாள் யுத்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பது லட்சமாக இருக்கவேண்டும். ஐம்பது லட்சம் வீரர்களுக்கு ஈடாக உதவியாளர்கள், களப்பணியாளர்கள், அவ்வளவுபேர்களுக்கு உணவளிக்கத் தேவையான விவசாயம், விவசாயிகள் என்று கிட்டத்தட்ட 20 கோடிபேர் இருந்தால் மட்டுமே நடந்திருக்க முடியும். ஆனால் இந்தியாவைப்பொறுத்தவரை ஆங்கிலேயேர்கள் இங்கு வரும்வரை அத்தகைய எண்ணிக்கை ஒட்டுமொத்த இந்தியாவிலேயே கிடையாது. ஒரு அல்லது பல கவிஞர்கள், நாட்டுப்புறக்கதைசொல்லிகள், பழங்கதைகள், சேர்ந்த ஒரு இலக்கியப்பிரதி. அது நாட்குறிப்போ வரலாற்று ஆவணமோ தொல்லியல் சான்றோ இல்லை.
பகவத்கீதையின் காலம்
மகாபாரதயுத்தம் கி.மு.1000-க்கும் கி.மு.850-க்கும் இடையில் நடந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால் பகவத்கீதை கி.மு.500 முதல் கி.மு.200 வரையிலான காலகட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இயற்றப்பட்டு மகாபாரதத்தில் இடைச்செருகலாகச் செருகப்பட்டது என்பது வரலாற்றாசிரியர்களின் துணிபு.  பகவத்கீதையின் பாடல்களில் காணப்படும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட மொழிநடை, சொற்றொடர் அமைப்பு, பொருள், கருத்து, தத்துவம், என்ற நோக்கில் பார்க்கும்போது குறைந்தது மூன்று பேர்களால் இயற்றப்பட்டிருக்க வேண்டும். ஆதியில் சுவேதாசவதார உபநிடதம் போன்றதோர் உபநிடதமாக இருந்து வந்தது பகவத்கீதை. குப்தர்கள் காலத்திற்கு முன்பாக எழுதப்பட்டிருப்பதற்கான வாய்ப்பில்லை. வைணவ சமயத்தைப் பரப்ப எழுதப்பட்ட தனிநூல் பகவத்கீதை என்ற பார்வையும் உண்டு.
மகாபாரதம் பதினெட்டு பருவங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். அதில் ஆறாவது பருவமான பீஷ்ம பருவத்தில் வருகிற மூன்றாவது உபபர்வமே கீதாபருவம். பீஷ்மபருவத்தில் 13 முதல் 42 வரையுள்ள அத்தியாயங்கள் இருக்கின்றன. அவற்றில் 25 முதல் 42 வரையுள்ள 18 அத்தியாயங்களே பகவத் கீதை. கர்ம காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம் என்ற மூன்று பாகங்களாகவும் ஒவ்வொரு பாகத்திலும் ஆறு அத்தியாயங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. கர்ம காண்டத்தில் 278 சுலோகங்களும் உபாசனா காண்டத்தில் 207 சுலோகங்களும், ஞான காண்டத்தில் 212 சுலோகங்களுமாக மொத்தம் 697 சுலோகங்கள் பகவத் கீதையில் உள்ளன.
கீதையின் கதை
குருசேத்திர யுத்தத்தின் பத்தாம் நாள் பீஷ்மர் காயமுற்று அம்புப்படுக்கையில் வீழ்கிறார். சஞ்சயன் இந்த விவரத்தை பிறவிக்குருடரான திருதராஷ்டிரனிடம் தெரிவிக்கிறான். அதைக்கேட்டு பதட்டத்துடன் போர் ஆரம்பம் முதல் அது வரை நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லச்சொல்கிறார் திருதராஷ்டிரன். அதிலிருந்து துவங்குகிறது கீதையின் கதை.
போரின் துவக்கத்தில் இரண்டு பக்கமும் அணிவகுத்து நிற்கிற சேனைகளின் நடுவில் நின்று கொண்டு அர்ச்சுனனின் தயக்கங்களுக்கும், ஐயங்களுக்கும், பதில் சொல்கிறான் கிருஷ்ணன். போர்க்களத்தில் நின்று கொண்டு போரைப்பற்றி மட்டுமல்ல சமூகம், நன்னெறிகள், உணவுப்பழக்கம், இறைத்தத்துவம், என்று நீண்டதொரு விவாதத்தில் கிருஷ்ணனும் அர்ச்சுனனும் இறங்குகிறார்கள் என்று இயற்றப்பட்டிருக்கும் கற்பனை யதார்த்தத்துக்கு ஒவ்வாதது.
இருபுறமும் தன்னுடைய தாயாதிகள் நிற்பதைப்பார்த்த அர்ச்சுனன் போரில் ஈடுபடத்தயங்குகிறான். அவனைப் போரில் ஈடுபடச்செய்து சொந்தங்களைக்கொல்லும் துணிவை வரவழைப்பதற்கு சாம, தான, தண்ட, பேத யுக்திகளைப் பயன்படுத்துகிறான் கிருஷ்ணன். ஆக கொலைகள் செய்யத்தயங்குகிறவனை கொலை செய்யத்தூண்டுகிற செயலையே கிருஷ்ணன் செய்கிறான். ஒரு அரசைக் கைப்பற்றுவதற்கான பெரும்போர் நடைபெறப்போகிறது என்பதையே கீதை கட்டியம் கூறுகிறது. 697 சுலோகங்களைத் தொடர்ந்து சொல்வதற்கு குறைந்தது மூன்றுமணி நேரம் ஆகும். அந்தக்காலகட்டாத்தில் யுத்தத்தில் என்னென்னவோ நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் குருசேத்திரத்தில் கிருஷ்ணன் அர்ச்சுனனின் சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்லி அவன் அப்போதும் மசியாதபோது விசுவரூபம் எடுத்து மிரட்டிப் பணிய வைத்து கீழே போட்ட காண்டீபத்தைக் கையில் எடுக்கும் வரை யுத்தகளம் அப்படியே ஸ்டில்லாக நிற்கிறது. என்ன ஒரு கற்பனைவளம்! கடைசியில் வேறுவழியில்லாமல் அர்ச்சுனன் போரில் ஈடுபடுகிறான்.
பகவத்கீதையின் உள்ளடக்கம்
பகவத்கீதையை ஆழ்ந்து கற்ற கையர் என்ற அறிஞரின் கருத்துப்படி மொத்தம் 32 விஷயங்களைப் பற்றி கீதை பேசுகிறது. அவற்றில் சில விஷயங்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. எட்டு விஷயங்கள் ஆறோ ஏழோ முறை வந்துள்ளன. அப்போது நிலவி வந்த பல்வேறு தத்துவ மார்க்கங்களை தன்னுடையது போன்று கிருஷ்ணன் சொல்கிறான். எல்லாவற்றையும் ஒன்றிணைக்க முயற்சி செய்வதால் பகவத்கீதை முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறது. கிருஷ்ணன் ஒரே நேரத்தில் மனிதனாகவும் தெய்வமாகவும் பேசுகிறான்.
அர்ச்சுனனின் தயக்கம் வேதகால அறநெறி. உறவினரைக்கொன்று அதிகாரத்தைக் கைப்பற்றி நிம்மதியுடன் இருந்து விடமுடியாது என்று கருதுகிறான் அப்போது அந்த வேதகால அறத்தை நிந்திக்கிறான் கிருஷ்ணன்.
“ வேதச்சடங்குகளைச் செய்வதன் மூலம் அதிகாரத்தையும் செல்வச்செழிப்பையும் அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையில் வேதங்களைப்பிடித்துதொங்குகிறவர்கள் அனைவரும் அறிவிலிகளே! ( ப.கீ. 2.42-44 )
அதே கிருஷ்ணன் இன்னொரு சுலோகத்தில்
பிதாஹமஸ்ய ஜகதோ மாதாதாதா பிதாமஹ
வேத்யம் பவித்ரமோங்கார ருக் ஸாம யஜூரேவச
( ப.கீ.9-17 )
இந்த உலகின் தந்தை நான், இதன் தாயும் நான், இதை உருவாக்கியவன் நான், இதன் பாட்டன் நான், இதன் அறியப்படும்பொருளும் நான், தூய்மை செய்வதும் நான், ரிக் வேதமும், சாம வேதமும், யஜூர் வேதமும் நானே.
என்றும் முரணாகக்கூறுகிறார். அதேபோல கர்ப்பகாலத்தொடக்கத்தில் பிரஜாபதி பிரஜைகளைப் படைத்தார் என்று 3-10 சுலோகத்திலும்,
குணகர்மங்களுடைய நான்கு வருணங்கள் என்னால் படைக்கப்பட்டன என்று 4-13 சுலோகத்திலும்,
நான் எனது இயற்கையை ஆதாரமாகக்கொண்ட சகலபூத சமூகத்தையும் அவைகளின் குணங்களுக்கேற்ப மீண்டும் மீண்டும் சிருஷ்டிக்கிறேன் என்று 9-8 சுலோகத்திலும்
கூறிவிட்டு இவைகளுக்கு முரணாக அன்னத்தினின்று பிராணிகள் உற்பத்தியாகின்றன. அன்னம் மழையினால் உண்டாகின்றது. மழை யாகங்கள் செய்வதினால் உண்டாகின்றது. யாகங்கள் கர்மத்தினால் உண்டாகின்றது. ( ப.கீ. 3-14 )
என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. வருணங்களைப் படைத்தது தான் தான் என்று சொல்கிற சுலோகமான 4-13 – ல் கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது.
சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்யகர்த்தாரமபிமாம் வித்யகர்த்தாரமவ்யயம்
குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வருணங்களைப் படைத்தேன். நானே இதன் கர்த்தா என்றாலும் அந்த அபிமானம் எனக்கு இல்லாததினால் நான் செய்கையற்றவனாகவும் அழிவற்றவனாகவும் இருக்கிறேன்.
ஆனால் வருணங்கள் அவரவர் பிறப்பினடிப்படையிலேயே அமைகிறது. அவரவர் சாதி தர்மத்தைக் கடைப்பிடிப்பதே சிறந்தது. தன்னுடைய கர்மங்களை விட்டு விட்டு மற்ற சாதியின் கர்மங்களைச் செய்யக்கூடாது என்று கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
பகவத்கீதை அத்தியாயம் 9 – 32 ஆவதுபாடலில்
மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய
யே பிஸ்யூ: பாபயோனய:
ஸ்த்ரீயோ வைஸ்யஸ்ததாஸூத்ர
ஸ்தேபி யாந்தி பராம்கதி
பார்த்தா! பெண்களோ, வைசியர்களோ, சூத்திரர்களோ, நீசகுலத்தில் பிறந்தவர்களே. எவரானாலும் என்னைப்பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்.
அப்படியென்றால் பகவத்கீதை யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது?  உயர்வகுப்பைச் சார்ந்த பிராமணர்களுக்காக மட்டுமே எழுதப்பட்டிருக்கிற நூல். மனிதர்கள் யாவரையும் சமமாக பாவிக்கிற நூல் இல்லை என்பது புலனாகிறது. அதுமட்டுமைல்லை மனிதர்களில் உயர்வுதாழ்வை நியாயப்படுத்துவதாக இருக்கிறது.
அதேபோல மகாபாரதக்கதையில் போகிற இடங்களில் எல்லாம் வேறு வேறு குலங்களில் இனங்களில் மனைவிகளைத் தேடிக்கொள்கிற அர்ச்சுனன் ( நாகமன்னரின் மகள் உலூபி, சித்ஹிராங்கதன் மகள் சித்திராங்கதை, கிருஷ்ணனின் தங்கை சுபத்திரா ) சொல்கிறான். யுத்தம் நடந்தால் குலங்கள் நாசமாகிவிடும். சநாதன குலதர்மங்கள் அழிந்து விடும். தர்மம் அழிவதனால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கின்றது ( ப.கீ1-40 ) என்றும் அதர்மம் சூழ்வதனால் குலப்பெண்கள் கெட்டுப்போகிறார்கள். விருஷ்ணி குலத்தோன்றலே! பெண்கள் கெடுவதால் வருணக்குழப்பம் உண்டாகின்றது ( ப.கீ.1-41 ) என்று வருணக்கலப்பு நேரும் அபாயத்தைச் சொல்வதாக கீதை எழுதப்பட்டிருக்கிறது. இதனால் இது மகாபாரதத்தின் காலத்துக்கு மிகவும் பிந்தைய இடைசெருகல் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
நிஷ்காம கர்மம் என்று பகவத்கீதையில் சொல்வதையே சாமானியர்கள் கீதாசாரம் என்று கருதுகிறார்கள். தன்னலமற்ற கடமை உணர்வைப்பேசுகிற இந்த சுலோகம் ( 2.47 _ 51 ) இன்பம், துன்பம், லாபம், நட்டம், வெற்றி, தோல்வி, இப்படி எதனாலும் பாதிக்கபடாதவனாக பற்றற்றவனாக தனது கடமையைச் செய்ய வேண்டும். என்று மீண்டும் மீண்டும் வருணங்களின் கடமையைப்பற்றிப் பேசுகிறது பகவத்கீதை. இப்படி வருணதர்மங்களைக் காப்பாற்றுகிற நன்னெறிகளை பரப்புரை செய்கிற பகவத்கீதை எப்படி சமத்துவத்தை சொல்லும்?
கீதையின் தத்துவப்போக்குகள்
பகவத்கீதை ஒரு தனித்த தத்துவ நூல் கிடையாது. ஸ்வேதாதசவதார உபநிடதமே பகவத்கீதையின் மூலமாக இருந்தாலும் பகவத்கீதை எழுதப்பட்ட காலத்தில் நிலவி வந்த பல்வேறு தத்துவப்போக்குகளும் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக சாங்கிய, புத்தமதக் கருத்துகளும் உபநிடதக்கருத்துகளும் அதில் எடுத்துக் கையாளப்பட்டிருக்கின்றன. பகவத்கீதை பக்தி என்ற புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தியது. அதோடு ஒற்றைக்கடவுள் கொள்கையை முன்னிறுத்தியதின் மூலம் அரசன் ஆண்டவனுக்கு இணையானவன் என்பதை வலியுறுத்தியது. அதனால் ஓரளவு சமத்துவம் நிலவிய பழங்குடிச்சமூகத்தின் மீது நிலப்பிரபுத்துவம் ஆதிக்கம் செலுத்த உதவி செய்தது.
கிருஷ்ணனின் அறிவுரையில் ஓங்கி ஒலிப்பது ஒற்றைக்கடவுள் நம்பிக்கை. சாங்கியமும் பௌத்தமும், லோகாயதமும் கோலோச்சிய காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல். வேதங்களின் செல்வாக்கு குறைந்த காலம். மக்களிடையே குறைந்து வந்த கடவுள் நம்பிக்கையை உயிர்ப்பிக்கும் நோக்கத்துடன் புனையப்பட்ட பாடல்கள் வருணக்கலப்பு சாதாரணமாக நடந்து கொண்டிருந்த காலத்தில் அப்படி வருணக்கலப்பு நடக்கக்கூடாது என்றும் பகுத்தறிவுக்கெதிரான வெளிப்படையான அழித்தொழிப்பை பிரகடனப்படுத்திய நூலும் இதுதான்.
 பொருள் பற்றிய அறிவை மட்டும் வலியுறுத்துகிறவர்களையும், கடவுள் நம்பிக்கையைச் சந்தேகிக்கிறவர்களையும், கடவுள் மறுப்பாளர்கள் மற்றும் பொருள்முதல்வாதிகளைப்போன்றே அழித்தொழிக்க வேண்டும் ( ப.கீ.4.40 – 42 )
பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அதிகாரப்போட்டியில் பிராமணமேலாதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தி சத்திரியர்களோடு ஒரு சமரசப்போக்கைக் கடைப்பிடிக்க முன்வைத்த யுத்தியாகவும் இந்தப்பாடல்களைப் பார்க்க முடியும். அதை ஒரு சத்திரியனான கிருண்னனைக் கொண்டு பேச வைத்திருப்பது தான் பிராமணியத்தின் உச்சபட்ச தந்திரம்.
ஒருவகையில் இந்திய வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தை பகவத்கீதை பிரதிபலிக்கிறது என்று சொல்லலாம். பழங்குடிச்சமூகமாக இருந்த இந்தோ-ஆரிய சமூகம் உயர் காட்டுமிராண்டி நிலையிலிருந்து ஆதி நாகரிக நிலைக்கு மாறிக்கொண்டிருந்த காலம். அந்தந்தக்காலகட்டத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையொட்டியே உற்பத்தி உறவுகள் நிலைபெறும். இந்த உற்பத்தி உறவுகளின் ஒட்டு மொத்த வடிவம் தான் சமூகத்தின் பொருளாதார அமைப்பாகும். மகாபாரதப்போர் நடந்த காலத்தில் ஒரு புதிய சமூகம் பிறக்கும் வேதனையிலிருந்தது. மறைந்து கொண்டிருந்த பழங்குடிச்சமூகத்தின் பொருளாதார அமைப்பு புதிய நிலப்பிரபுத்துவ அமைப்பாக மாறிக்கொண்டிருந்தது. அதாவது பழைய சமூகத்தின் குணாதிசயங்களான கூட்டு உழைப்பு, கூட்டு நுகர்வு மாறி வருணங்களின் வழியாக உழைப்புப்பிரிவினை, அடிமைத்தனம் ஆகியவற்றை தோற்றுவித்தது. மாற்றத்தின் வழியில் பழைய சமூகத்தின் அறநெறிகள் சுமையாகி விட்டன. அதை உதறித்தள்ளுகிற புதிய சிந்தனைகளின் தொகுப்பே பகவத்கீதை.
ஆக பகவத்கீதை எக்காலத்துக்குமான மானுட நன்னெறிகளுக்கான அருளுரை இல்லை. பல கவிஞர்கள் எழுதிய முரண்பாடுகள் கொண்ட தொகுப்பு. அக்காலத்தில் நிலவி வந்த எல்லாத்தத்துவங்களிலிருந்தும் தழுவப்பட்ட கோட்பாடுகளைக் கொண்டது. ஆண்டான் அடிமை என்கிற அமைப்பை  நிலை நிறுத்த எழுதப்பட்டது. வருணக்கோட்பாடுகளை கடவுளின் பெயரால் புனிதப்படுத்தும் நோக்கம் கொண்டது. அதற்கு பக்தி எனும் புதிய விஷயத்தைப் பயன்படுத்திக்கொண்டது. முடியரசுகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள உருவாக்கிய தத்துவக்கோட்பாடான பகவத்கீதை இன்றைய நவீன காலத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாதது. அது மதவெறிச்சக்திகளின் வரலாற்றுச்சக்கரத்தை பின்னுக்குத் தள்ளும் முயற்சிக்குத் துணை போகும் அபாயம் நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
துணைநூல்கள்
இந்திய வரலாற்றில் பகவத்கீதை
பகவத்கீதை ஒரு ஆய்வு
பார்த்தனும் சாரதியும்

நன்றி- செம்மலர்





2 comments:

  1. ஆழமான கருத்துக்கள். எளிய மொழி நடை. பாராட்டுக்கள் தோழர்

    ReplyDelete
  2. முரன்பாடான கருத்து காழ்புனர்வு கதை அறிவில்லாதவன் எழுத்து

    ReplyDelete