ஒரு சொட்டு தண்ணீர்
உதயசங்கர்
” நிகி! நேரமாயிடுச்சிம்மா சீக்கிரம்
பாத்ரூம்லர்ந்து வெளியே வா. கம் குயிக் .”
நிகிதாவின் அம்மா பத்து நிமிடமாகக்
கூப்பிட்டுக்கொண்டேயிருந்தார். அதற்கு நிகிதா,
“ வாரேம்மா.. இன்னும் குளிச்சி
முடியல.. “
என்று பதில் கொடுத்தாள் நிகிதா.
இன்றைக்கு அம்மா அப்பா தம்பி பிரிஜேஷ் நிகிதா எல்லோரும் ரயிலில் திருநெல்வேலி வரை போகிறார்கள்.
நிகிதாவுக்கும் பிரிஜேஷுக்கும் ஸ்கூல் யூனிபார்ம், பேக், சூஸ், என்று எல்லாம் வாங்கப்போகிறார்கள்.
ரயிலில் அதிகம் போனதில்லை. எப்போதும் காரில் தான் பயணம். இந்த முறை அப்பா தான் ரயிலில்
போகலாம். ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றார். நிகிதாவுக்கு குளிப்பது என்றால்
அப்படி பிடிக்கும். குறைந்தது அரை மணிநேரமாவது பாத்ரூமில் இருப்பாள். ஒரு நாளைக்கு
இரண்டு, மூன்று முறை கூடக் குளிப்பாள். கோடையோ குளிர்காலமோ அவர்களுடைய வீட்டில் தண்ணீர்
வற்றாமல் வரும். வீட்டிலுள்ள குழாய்களில் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்கும். யாரும்
அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.
ஒருவழியாக நிகிதா வெளியே வரும்போது
எல்லோரும் தயாராக இருந்தார்கள். அவளும் அவசர அவசரமாகப் புறப்பட்டாள்.
ரயில் பயணம் புதிய அநுபவமாக இருந்தது.
முதலில் ரயிலின் சத்தம். கடகடா படபடா சடசடா என்று சத்தமே அவளை உற்சாகப்படுத்தியது.
தம்பியும் ரயிலைப்போலவே சத்தம் கொடுத்தான். நிகிதா சன்னலுக்கு வெளியே பார்த்தாள். பின்னால்
ஓடிக்கொண்டிருந்த தரை. வீடுகள், செடிகள், கொடிகள்,
மரங்கள், மனிதர்கள். வெட்டவெளி. பொட்டல் காடு. கடுமையான வெயிலினைத் தாங்க முடியாமல்
பாளம் பாளமாக வெடித்துக் கிடந்த கருப்புமண். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்று
கொண்டிருந்த ஒன்றிரண்டு மரங்கள். நிழல் மாதிரி நடமாடும் மனிதர்கள். நிகிதாவுக்கு ஆச்சரியமாக
இருந்தது. வேறு ஒரு உலகமாக இருந்தது. அவள் உள்ளே திரும்பிப் பார்த்தாள்.
ஒரே பெட்டியில் எல்லோரும் ஒருவரை
ஒருவர் பார்த்தபடி பேசிக்கொண்டே வந்தார்கள். நிறைய வியாபாரிகள் கடலை, வெள்ளரிக்காய்,
முறுக்கு, சுண்டல், காபி, டீ, போண்டா, வடை, போளி, என்று விதவிதமான தின்பண்டங்களைக்
கொண்டு வந்தார்கள். பிரிஜேஷ் அம்மாவிடம் வடை வேண்டும் என்றான். அம்மா வாங்கவில்லை.
நிகிதாவுக்கும் போளி சாப்பிட ஆசை இருந்தது. அம்மாவின் முகத்தைப் பார்த்து பேசாமல் இருந்து
விட்டாள். ரயில் பெட்டியிலேயே டாய்லெட் இருந்தது. வெளியே ஒரு வாஷ் பேசினும் இருந்தது.
விசித்திரமாக இருந்தது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தாள் நிகிதா.
இப்படி ஒரு உலகம் இருப்பதே அவளுக்குத்
தெரியாது. அவள் இருக்கும் நகரத்தில் எல்லாம் நாகரீகம். அவள் படிக்கும் பள்ளிக்கூடம்
குளிர்சாதன வசதி கொண்டது. அவளுடைய வீட்டிலும் படுக்கையறைகள் குளிர்சாதன வசதி கொண்டது.
.வீட்டில் பள்ளியில் எல்லாம் பாதுகாக்கப்பட்ட ஓசோனைஸ்டு குடிநீர். ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள், ஹைஜீனிக் உணவு. அம்மா
எல்லாவற்றிலும் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வார்கள். வீடு விட்டால் பள்ளிக்கூடம்.
பள்ளிக்கூடம் விட்டால் வீடு என்று அவளுடைய உலகம் மிகவும் சின்னது. இப்போது பார்க்க
பார்க்க அவளுக்கு எல்லாம் புதிதாக இருந்தது.
ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றது.
உடனே வெளியிலிருந்து சத்தம் கேட்டது.
“ நீ அந்தப் பெட்டிக்குப் போ..
பெரிய குடத்தை எடுத்துக்கோ.. வாளியில பிடி… சிந்தாமப்பிடி… “ என்று குரல்கள் கேட்டது.
எல்லாப்பெட்டிகளிலும் குடங்கள், பானைகள், வாளிகளை எடுத்துக் கொண்டு ஆண்கள், பெண்கள்,
குழந்தைகள் கூட்டம் கூட்டமாக ஏறினார்கள். வாஷ் பேசின், டாய்லெட், என்று நுழைந்து அவர்கள்
கொண்டுவந்த குடங்களிலும் வாளிகளிலும் தண்ணீர் பிடித்தார்கள். நிகிதா அங்கும் இங்கும்
தண்ணீருக்காக அலைபாய்ந்து கொண்டிருந்த ஆட்களைப் பார்த்தாள். தம்பி பிரிஜேஷ் பயந்து
போய் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டான். அப்போது நிகிதாவை விட சின்னப்பிள்ளையாக
இருந்த ஒரு பெண்குழந்தை கையில் சிறிய வாளியில் தண்ணீரைப் பிடித்து குடங்களில் நிறைத்துக்
கொண்டிருந்தது. அப்படி நிறைத்த குடத்தை கீழே பிளாட்பார்மில் இருந்தவர்களிடம் கொடுத்துக்
கொண்டிருந்தது. அப்படி செய்யும்போதே அந்தக் குழந்தை நிகிதாவைக் கண்கொட்டாமல் பார்த்தது.
அவளைப் பார்த்துச் சிரிக்கவும் செய்தது.
நிகிதாவும் சிரித்தாள். அந்தப்பிள்ளை
அவளைத் தாண்டிப் போகும்போது,
“ எதுக்கு இந்தத் தண்ணியைப் பிடிக்கிறீங்க..”
என்று நிகிதா கேட்டாள். அதற்கு அந்தக்குழந்தை வேகமாக,
“ எங்கூர்ல தண்ணியே கிடையாது..
இந்தத்தண்ணி தான் குடிக்கிறதுக்கு, குளிக்கிறதுக்கு, சமைக்க, எல்லாத்துக்கும்… நாளைக்கு இந்த வண்டி வர்றவரைக்கும் இதான் எங்களுக்கு..
உன்னோட சட்டை அழகா இருக்கு “ என்று வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே சொல்லி விட்டுப்
போனாள். போகும்போது வெளியே வாசல்பக்கம் இருந்த வாஷ்பேசின் குழாயில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது.
உடனே அதை இறுக்கி அடைத்து விட்டுப் போனாள் அந்தக் குழந்தை. ரயில் கிளம்பிவிட்டது. சன்னல்
வழியே வெளியே பார்த்தாள் நிகிதா. வரிசையாக குடங்கள், வாளிகள், பானைகள், சின்ன டப்பாக்கள்,
என்று எல்லாவற்றிலும் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள் மக்கள்.
அவள் அந்தப் பெண்குழந்தையைத் தேடினாள். ரயில் வேகம் எடுத்து விட்டது. அமைதியாக யோசித்துக்
கொண்டே வந்தாள்.
மறுநாள் நிகிதா ஐந்து நிமிடத்தில்
குளித்தாள். வீட்டிலுள்ள குழாய்களில் தண்ணீர் சொட்டாமல் இறுக மூடினாள். பள்ளியிலும்
அவளுடைய நண்பர்களிடம் சொன்னாள். அந்த ரயில் அநுபவத்தை ஒரு கதையாக எழுதினால் எப்படி
இருக்கும் என்று யோசித்தாள். இரவில் அவளுடைய நோட்டை எடுத்தாள். நோட்டை விரித்ததும்
அந்தப் பெண்குழந்தையின் வெட்கம் கலந்த சிரிப்பு ஞாபகத்துக்கு வந்தது. நீர் சொட்டிக்கொண்டிருந்த
குழாய் கண்முன்னே தெரிந்தது. கதைக்கு என்ன தலைப்பு வைக்கலாம்? என்று யோசித்தாள். சிறிது
நேரத்துக்குப் பின்னர் நிகிதா எழுதினாள்.
“ ஒரு சொட்டு தண்ணீர்..”
நன்றி - வண்ணக்கதிர்