Showing posts with label udhayasankarwriter. Show all posts
Showing posts with label udhayasankarwriter. Show all posts

Sunday, 3 May 2026

அறிவின் சுடரை ஏற்றும் பதின்பருவத்தினருக்காக

 

அறிவின் சுடரை ஏற்றும் பதின்பருவத்தினருக்காக 





மனித இனத்தின் மிக அற்புதமான பருவம் குழந்தைப்பருவம் தான். குழந்தைகள் இந்த உலகைப்புரிந்து கொள்ளத் தொடங்கும் விதமே குழந்தைமையின் அதீதக்கற்பனையின் வழியாகத்தான். கற்பனையின் எல்லையற்ற வெளியில் குழந்தைகள் எப்போதும் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்கு யதார்த்தமான புற உலகம் ஒருபொருட்டேயில்லை. அவர்களால் வண்ணக்கனவுகளை நெய்ய முடியும். நூற்றுக்கணக்கான வர்ணங்களில் சிறகுகள் விரித்துப் பறக்கமுடியும். எப்போதும் கனவுகளில் மிதக்கிற கண்களோடு அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். பெரியவர்களுக்கு முக்கியம் என்று தோன்றுவதெல்லாம் குழந்தைகளுக்கு முக்கியமில்லாதவையாகத் தெரிகிறது. குழந்தைகள் கவித்துவம் பொங்கித்ததும்புகிறவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பருவத்தில் தான் குழந்தைகளின் ஆளுமைத்திறனில் உணர்வுகளின் அடித்தளம் கட்டியெழுப்பப்படுகிறது.

குழந்தைகள் தங்களுடைய பதின்பருவம் வரை எல்லாவற்றையும் நம்புகிற, ஏற்றுக்கொள்கிற, பின்பற்றுகிற, சார்ந்திருக்கிற, குழந்தைமையின் கவித்துவஅறியாமையில் இருப்பார்கள். இந்தக் கவித்துவ அறியாமை தான் விலங்குகளும் பறவைகளும் புழுக்களும் பூச்சிகளும் பேசுவதை கிஞ்சித்தும் சந்தேகப்படாமல் நம்பச்செய்யும்., மாயக்கம்பளங்களையும், பூதங்களையும் ராட்சசர்களையும் இளவரசர்களையும், இளவரசிகளையும் உண்மையே போல நம்பி உணர்ச்சியலைகளில் நீந்திக்கொண்டிருப்பார்கள். இவையெல்லாம் பதின்பருவம் தொடங்கும்போது அறிவின்மலரில் இதழ்கள் ஒவ்வொன்றாய் விரியத் தொடங்கும்போது மெல்ல மறையத் தொடங்கும். குழந்தைமை தனது மாயக்கம்பளத்தைச் சுருட்டிக்கொண்டு ஆழ்மனதுக்குள் உறையத் தொடங்கும். கேள்விகளின் அக்கினிக்குஞ்சுகள் அறியாமையின் மீது தன் வெளிச்சத்தைப் பாய்ச்ச பதின்பருவத்தின் அறிவுப்பருவம் வாழ்வின் மர்மங்களைக் கண்டறிய முயற்சிக்கும்.

வாழ்வின் மர்மங்கள் எப்போதும் கேள்விகளையே அருவியெனக் கொட்டிக்கொண்டிருக்கும். பொங்கிவரும் அந்தக் கேள்விகளை எதிர்கொண்டு மர்மங்களைக் கண்டுபிடிக்க பதின்பருவத்துக்கு வரும் அனைத்துக் குழந்தைகளுமே முயற்சிகளைச் செய்வார்கள். நான் யார்? நான் எப்படி வந்தேன்? இந்த உலகம் எப்படி வந்தது? உயிர் என்றால் என்ன? மரணம் என்றால் என்ன? கடவுள் இருக்கிறாரா? ஏன் உலகம் முழுவதும் ஏக்கச்சக்கமான கடவுள்கள் இருக்கிறார்கள்? நம்பிக்கை என்றால் என்ன? மூடநம்பிக்கை என்றால் என்ன? என் ஊர், என் நாடு, என்மொழி, என் இனம், இவையெல்லாம் என்ன? ஏன் மனிதர்களிடம் ஏற்றதாழ்வுகள் இருக்கின்றன? இப்படி எண்ணிலடங்காக்கேள்விகள் கொட்டிக் கொண்டேயிருக்கும். அப்படித் தோன்றிக்கொண்டேயிருக்கும் கேள்விகளோடு பதின்பருவத்தினர் பள்ளி, கல்லூரிகளுக்குப் போகின்றனர். சினிமாக்களுக்குப் போகின்றனர். அரசியல் கூட்டங்களுக்குப் போகின்றனர். பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், இணையம், என்று அவர்கள் சுற்றியலைந்து பெரும்பாடு பட்டே ஏதோ சில விஷயங்களில் வழிகாட்டுதல் பெறுகின்றனர். பதின்பருவத்தினரை சரியான வழிகளில் மடைமாற்ற நம்மிடம் புனைவுகள் இல்லை. அபுனைவுகள் இல்லை. திரைப்படங்கள் இல்லை. பத்திரிகைகள் இல்லை. புத்தகங்கள் இல்லை. அவர்கள் வேறுவழியில்லாமல் யார் கிடைக்கிறார்களோ அவர்கள் கையைப் பிடித்துக் கொண்டு அவர்கள் காட்டும் வழிகளில் சென்று விடுகிறார்கள். இதற்கு நாம் அனைவருமே பொறுப்பேற்க வேண்டும்.

இத்தகைய சூழலில் பதின்பருவத்தினருக்கான புனைவு மிக முக்கியமானதாகிறது. அந்த வகையில் புலிக்குகை மர்மம் என்ற இந்த நாவல் பதின்பருவத்தினருக்கான சாகசத்தை முன்வைக்கிறது. வெறும் சாகசமாக மட்டுமல்லாமல் அதில் ஒரு சமூகக்காரணத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. இதில் வரும் கேப்டன்பாலு என்ற கதாநாயகன் மிகச்சாதாரணமான பையன் தான் எப்படி அவன் கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சிபெற்று ஒரு லட்சியக்கதாநாயகனாக மாறுகிறான் என்பதை தொடர்ந்து வெளிவரப்போகும் நாவல்களில் நீங்கள் வாசிக்கலாம். இந்த நாவலில் அறிமுகமாகும் கேப்டன்பாலு தொடர் நாயகனாக வலம் வரப்போகிறான். பதின்பருவத்தினரின் பிரதிநிதியாக அவனை உலவ விட வேண்டும் என்ற எண்ணத்தில் இதில் உருவாக்கப்பட்டிருக்கிறான். அவனைச் சந்தியுங்கள். நிச்சயம் உங்களுக்கு அவனைப்பிடிக்கும். அவனுக்கும் உங்களைப் பிடிக்கும். எல்லோருக்கும் பிடிக்கும்.

புலிக்குகை தன் வாயைத் திறந்து அழைக்கிறது! அதற்குள் இருக்கும் மர்மம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்!

வெளியீடு - வானம் பதிப்பகம்

தொடர்புக்கு - 9751549992

Monday, 27 April 2026

நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் சிறார் இலக்கியமா?

 

நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் சிறார் இலக்கியமா?

உதயசங்கர்




மொழி தோன்றும் முன்பு மனிதர்கள் சைகை மொழியினால் தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்தையும் அனுபவப்பரிமாற்றத்தையும் செய்து கொண்டிருந்தார்கள். எப்போது மொழி தோன்றியதோ அப்போது அவர்கள் வாய்மொழியாக தங்களுடைய அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். முதன்முதலில் தோன்றிய இலக்கியம் வாய்மொழி இலக்கியம் தான். அப்படித் தோன்றிய இலக்கியத்தில் அவர்கள் தாங்கள் பார்த்ததை, கேட்டதை, அனுபவித்ததை சொன்னார்கள். இனக்குழு சமூகமாக இருக்கும்போது கிடைத்த அனுபவங்கள் வேறு, அந்தச் சமூகமே நிலவுடமைச் சமூகமாக மாறும்போது கிடைத்த அனுபவங்கள் வேறு. நிலவுடைமைச் சமூகம் மாறி இன்றைய முதலாளித்துவ சமூகமாக மாறியிருக்கும் போது கிடைக்கும் அனுபவங்கள் வேறு. ஏனெனில் மனிதர்கள் வாழும் காலத்தையே பிரதிபலிக்கிறார்கள்.

நாட்டார் இலக்கியமென்பது வாய்மொழியாக வழிவழியாகச் சொல்லப்பட்டு வந்த கதைகள், பாடல்கள், விளையாட்டுகள், புழங்கு பொருட்கள், அப்போது வாழ்ந்த விலங்குகள், பறவைகள் மரங்கள் உள்ளிட்ட சூழல் குறித்த அறிவு, பண்பாட்டுச்சடங்குகள், வாழ்க்கை வட்டச்சடங்குகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த மக்கள் உருவாக்கிய நாட்டார் இலக்கியத்தில் அவர்கள் வாழும்காலத்தின் சமூக அமைப்பு, சமூக உறவுகள், உற்பத்திமுறை, வாழ்க்கை குறித்த பார்வை, அறிவியல் பார்வை, வெகுமக்களிடம் செல்வாக்கு செலுத்திய தத்துவப்போக்குகள், இவையெல்லாவற்றையும் காட்சிப்படுத்தும் அருங்காட்சியமாகத் திகழும். நாம் இப்படி வாழ்ந்திருக்கிறோமென்பதற்கான ஆவணமே அருங்காட்சியகம்.

அருங்காட்சியகத்தில் இருக்கும் அத்தனை பொருட்களையும் நாம் மீண்டும் உருவாக்கிப் பயன்படுத்துவதில்லை. இப்படிப்பட்ட பொருட்களைப் பழங்காலத்து மனிதர்கள் பயன்படுத்தியிருக்கிறார்களென்று அறிந்து கொள்கிறோம். சிலவற்றை புதிய வடிவில் மாற்ற முயற்சிக்கிறோம். சில நாம் இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்வதற்கான சாட்சிகளாக இருக்கின்றன. சில நாம் இப்படியா வாழ்ந்திருக்கிறோம் என்று அதிர்ச்சியடைய வைக்கின்றன. அருங்காட்சியகத்தில் இருப்பதாலேயே அனைத்துப்பொருட்களும் அருமையானவையென்றோ அத்தனையும் புனிதமானவையென்றோ ஏற்றுக் கொள்ளமுடியாதில்லையா? அதே போல அந்தக் கதைகளில் சொல்லப்படும் கருத்துகள் அனைத்தும் முற்போக்கானவையென்றோ பிற்போக்கானவையென்றோ சொல்லிவிடவும். இரண்டும் கலந்தே இருக்கும்.

அப்படித்தான். நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் அந்தந்தப் பிரதேசத்து மக்கள் தங்களுடைய வாழ்க்கையைக் குறித்து, வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்ட அனுபவங்களிலிருந்து உருவாக்கியவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.பெரும்பாலான கதைகள் எளிய மக்களின் வாழ்க்கைப்பார்வை. அறிவியல், மானுடவியல், பண்பாடு, சமூக விழுமியங்களைப் பற்றிய அனுபவங்களை வாய்மொழியாகச் சொல்லி அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துகிறார்கள்.

காலம் காலமாக  மனிதர்கள் புலம் பெயர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவர்களுடைய புலப்பெயர்வு தொடங்கிவிட்ட து. அவர்கள் புலம்பெயரும் இடங்களிலிருந்து எதையாவது பெற்றுக் கொண்டும் எதையாவது கொடுத்துவிட்டும் செல்கிறார்கள்.

அப்படிச் செல்லுமிடங்களில் சொல்லப்பட்ட கதைகளைச் சுமந்து திரிகிறார்கள். அதில் குறிப்பிட த்தகுந்த விஷயம் அவர்கள் அவற்றை அப்படியே சொல்வதில்லை. செல்லுமிடங்களுக்கேற்ப மாற்றுகிறார்கள் அல்லது அங்கேயிருப்பவர்கள் அவர்களுடைய சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்கிறார்கள். குரங்கு இரண்டு பூனைக்குட்டிகளுக்கு அப்பத்தைப் பங்கிட்ட கதை ருஷ்யாவில் இரண்டு கரடிக்குட்டிகளுக்கு வெண்ணெய்க்கட்டியைப் பங்கிடுவதாக மாறுகிறது. வாலு போயி கத்தி வந்த து கதை வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமாகச் சொல்லப்படுகின்றன. அதுமட்டுமல்ல. பறவைகளுக்கு இறக்கைகள் முளைத்த து எப்படி? மனிதர்களின் வால் எப்போது மறைந்த து? புலிகளின் உடலில் கோடுகள் எப்படி வந்தன? மழை எப்படிப் பெய்கிறது? மின்னலை யார் கொண்டு வந்தார்கள்? என்று ஏராளமான கற்பனைக்கதைகள் உலகமுழுவதிலும் இருக்கின்றன.

இந்தக் கதைகளில் ஆதியில் மனிதர்கள் இந்த உலகை எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்பதற்கான கலைவிளக்கம் என்று வேண்டுமானால் சொல்ல லாம். இவற்றில் எந்த அறிவியல் உண்மைகளும் கிடையாது.

இப்புவியில் வாழும் மனிதகுலம் முழுமையும் ஒரே மாதிரி தான் அறிவுவளர்ச்சி பெற்றிருக்கிறார்களென்பதற்கு  இந்த நாடோடிக்கதைகளை ஆதாரமாக க் கொள்ளலாம். அந்தந்த இடத்தின் தன்மைக்கேற்ப கதைகளின் வடிவமும் கதாபாத்திரங்களும் மாறினாலும் கதையின் அடிப்படையான கருப்பொருள் மாறாது. எனவே பல நாடோடிக்கதைகள் உலகமுழுவதும் ஒன்றுபோல இருக்கின்றன.

கிராமியக்கதைகளென்பவை வட்டாரத்துக்கு வட்டாரம் மாறுபடும். ஏனெனில் ஒரே மொழிக்குள் இருக்கிற பன்மைத்துவ வாழ்க்கைமுறையே கிராமியக்கதைகளை உருவாக்குகிறது. கிராமியக்கதைகளில் அந்தந்த வட்டாரங்களில் வாழும் மக்களின் உள்ளூர்த்தன்மை வெளிப்படும். அதாவது அவர்களுடைய உணவு, ( கம்மங்கஞ்சி, கேப்பைக்களி, கேப்பைக்கூழ், நெல்லுச்சோறு ) உடை, அணிகலன்கள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் வெளிப்படும். இந்த உள்ளூர்த்தன்மையைப் பெரும்பாலும் மற்ற வட்டாரங்கள் அப்படியே பயன்படுத்த முடியாது. வறட்சியான மக்கள் வாழும்பகுதியில் கிடைக்கும் அனுபவங்களும் செழிப்பான பகுதியில் கிடைக்கும் அனுபவங்களும் வேறு வேறாகவே இருக்கும். அதனால் அந்த ந்தப்பகுதியில் உருவாகும் கதைகளும் வேறு வேறாகவே இருக்கும்.

உழைப்பாளிகளின் பார்வையிலிருந்து கதைகள் இருப்பதைப் போல பணக்கார ர்களின் பார்வையிலிருந்தும் கதைகள் இருக்கும். பொதுவாகப் பெண்களை மட்டம் தட்டுகிற இழிவு படுத்துகிற கதைகள் இருக்கும். மாறான கதைகளும் இருக்கும். அதனால் கிராமியக்கதைகளிலும் முற்போக்கான அம்சங்களும் பிற்போக்கான அம்சங்களும் கடந்த கால விழுமியங்களைச் சொல்லும் கதைகளும் இருக்குமென்பதை மறந்து விடக்கூடாது.

நாடோடிக்கதைகளுக்குக் கால்கள் உண்டு. கால தேச வர்த்தமானங்களைக் கடந்து உலகம் முழுவதும் பயணிக்கும். அதனால் அந்தக் கதைகளுக்கு உலகளாவியத் தன்மை ஏற்படும். 

கிராமியக்கதைகளின் எல்லைகள் குறுகியவை. ஆனால் தனித்துவமானவை. ஒரு வட்டாரமக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள வைப்பவை.

மிக முக்கியமான விஷயம், நாடோடிக்கதைகளோ, கிராமியக்கதைகளோ அனைத்துக் கதைகளும் குழந்தைகளுக்கானவை இல்லை. நம்முடைய சமூகத்தின் பொதுப்புத்தியில் நாடோடிக்கதைகளும், கிராமியக்கதைகளும் குழந்தைகளுக்குச் சொல்லலாமென்ற எண்ணம் வேரூன்றியிருக்கிறது.

குழந்தைகளுக்கான கதைகளும் அவற்றில் உண்டு என்றாலும் அனைத்துக் கதைகளும் குழந்தைகளுக்கானதில்லை. ஏனெனில் கிராமியக்கதைகளும் நாடோடிக்கதைகளும் உருவான காலத்தையே  பிரதிபலிக்கும். அப்படியென்றால் அந்தக் காலத்தில் அடிமைத்தனம், சாதிப்பாகுபாடு, பெண்ணடிமைத்தனம், வன்முறை, சமூகப்பிரிவினை, விதி, முன்ஜென்மம், இப்படி பல பிற்போக்கான, இன்றைய காலத்துக்கொவ்வாத, விஷயங்களும் கலந்திருக்கும். எனவே குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போதும் சரி, வாசிக்கக்கொடுக்கும்போதும் சரி கவனமாக இருக்க வேண்டும். .குழந்தைகளின் மனதில் எந்தப் பாகுபாடுகளும் விதைக்கப்பட்டுவிடக்கூடாதென்பதில் பெரியவர்கள் கவனமாக இருக்க வேண்டும். .

கடந்த காலத்தைக் கதைகளின் வழியே தெரிந்து கொள்வதற்காக வாசிக்கலாம்.

நன்றி - புக் டே