நூல் : மாரி என்னும் குட்டிப் பையன்
ஆசிரியர் : உதயசங்கர்
பதிப்பகம் : அறிவியல் வெளியீடு
விலை : 65
பக்கங்கள் : 64
வகைமை : சிறார் நாவல்
எழுத்தாளர் சரிதாஜோ
தமிழ் சிறார் இலக்கியத்தில் என்றுமே முன்னோடியாக இருப்பது அழ. வள்ளியப்பா. 1950 களில் அழ. வள்ளியப்பா அவர்களின் முன்னெடுப்பு தமிழ் சிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒன்று. இடையில் சிறார் இலக்கியம் சிறு தொய்வு கொண்டு இருந்தது.
2010க்கு மேல் சிறார் இலக்கியம் மீண்டும் சிறகடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஏராளமான எழுத்தாளர்கள் சிறார்களுக்காகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் எனது ஆசான் எழுத்தாளர் உதயசங்கர் நவீன சிறார் இலக்கியத்தின் முன்னோடி என்று கூறுவேன்.
குழந்தைகளுக்காக தொடர்ந்து புதிய வகை மையை அறிமுகப்படுத்துவதில் அதீத ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் படித்த சோசோவின் வாழ்க்கை அதற்கு ஒரு முன்னுதாரணம்.
அடுத்த படைப்பான மாரியெனும் குட்டி பையனில் அவர் என்னுரையில் கூறியிருப்பது போல சிறார் கதைகளில் எதார்த்தமான கதைகள் மிக குறைவு. அதைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த மாரியெனும் குட்டி பையன் அமைந்திருக்கிறது. எந்தக் குழந்தைக்கும் அம்மாதான் பிடித்தமான ஒருவராக இருக்கிறார். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு.
மாரி சிறு பையன் அவனுக்கு எதைப் பார்த்தாலும் பயம்.
இருட்டை பார்த்துப் பயப்படுகிறான். பல்லியைப் பார்த்து பயப்படுகிறான். தேளைப் பார்த்துப் பயப்படுகிறான். அம்மா அருகில் இல்லை என்றால் இன்னும் அதிக பயம்.
அவனுக்கு தைரியமாக இருக்க வேண்டும் என்று ஆசை .
பலசாலியாக இருக்க வேண்டும் என்று ஆசை .
ஆனால் அதெல்லாம் எப்படி நடக்கும் என்ற கேள்வி .
பொதுவாகவே சிறுவயதில் ஒவ்வொரு குழந்தையும் யாராவது ஒருவருடைய கவனம் தன்மீது இருக்க வேண்டும் அவர்களுடைய கவனத்தை தன் பால் இருக்க வேண்டும் என்று அதீத ஆர்வம் இருக்கும்.
. நண்பர்களோடு சேர்ந்து விளையாடும் பொழுது ஏதாவது ஒரு இடத்தில் அங்கீகாரம் கிடைத்து விடாதா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்த கதையிலும் அப்படியான ஒரு குழந்தையாகத்தான் மாரி இருக்கிறான்.
குழந்தைகளுக்கு கல்வி மீது ஆர்வம் ஏற்பட ஆசிரியர் மிக முக்கிய காரணமாக இருக்கிறார். மாரிக்கு கோமு டீச்சரை அவ்வளவு பிடிக்கும். யாரையும் அதட்ட மாட்டார். அடிக்க மாட்டார். சத்தம் போடாமல் படிங்க என்று அவருக்கு கேட்காத குரலில் சொல்லும் அளவிற்கான மென்மையான ஆசிரியர். அந்த டீச்சர் மீது எப்பொழுதுமே மாரிக்கு அதிக அன்பு.
கோமு டீச்சர் வராத நாட்களில் ராமலட்சுமி டீச்சர் வருவார். ராமலட்சுமி டீச்சர் கோமு டீச்சருக்கு நேர் எதிர்.
கோமு டீச்சரின் இறப்பு மாரிக்கு ஏராளமான கேள்விகளைக் கொடுக்கிறது. இறப்பு என்றால் என்ன? இறந்த பின்பு எங்கு செல்வார்கள்? மேலே செல்வார்கள் என்றால் எப்படி செல்வார்கள்? பறந்து செல்வார்களா? அங்கு சென்று என்ன செய்வார்கள்? இப்படியான கேள்விகளை தன் நண்பரிடம் கேட்கிறான் அன்றிரவு கோமு டீச்சர் கனவில் வருகிறார். கோமு டீச்சரோடு இவனும் பறந்து செல்கிறான்.
பள்ளியில் ஒரு முறை வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது. ஆனால் மாரி உனக்கு இப்பொழுது தானே இனிப்பு கொடுத்தேன் என்று இனிப்பு வழங்காமலேயே ஆசிரியர் மாரியை அனுப்பி விடுகிறார். வீட்டுக்கு வந்த மாரி தன் அம்மாவிடம் சொல்கிறான். அம்மா பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் இது பற்றி பேசி ஒரு இனிப்பு பொட்டலத்தை வாங்கி கொடுக்கிறார்.
அந்த நேரத்தில் அந்த இனிப்பு வாங்கிக் கொடுப்பதைத் தாண்டி தன் குழந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை சரி செய்ய போகும் ஒரு அம்மாவாக எத்தனை அம்மாக்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்? அந்த நேரத்தில் தவிர்க்கப்படும் பொழுது அந்த குழந்தையின் மனநிலை என்ன ஆகிறது?
இதைத்தான் யோசிக்க வைக்கிறது இந்த இடம்.
மீண்டும் இனிப்பு கைக்கு வந்த பிறகு கூட அந்தக் குழந்தை அந்த இனிப்பை தொடவில்லை.
ஒரு அவமானம் ஒரு அவமதிப்பு ஒரு குழந்தையின் மனதில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இதைவிட எப்படிச் சொல்லிவிட முடியும்.
மாரிக்கு கதை கேட்பதென்றால் கொள்ளை பிரியம் அம்மா அடிக்கடி கதைகள் கூறுவர்.
அம்மா புத்தகம் வாசிக்கும்போது அம்மாவின் முகத்தை கவனிப்பான் மாரி. அம்மாவின் முகம் சில நேரங்களில் சிரிக்கும் யோசிக்கும் வியக்கும் அப்பொழுதெல்லாம் அந்த புத்தகத்திற்குள் அப்படி என்னதான் இருக்கிறது. அம்மா இவ்வளவு நேரம் அதை வாசித்துக் கொண்டிருக்கிறார் என்று எடுத்து பார்க்க் தோன்றும் மாரிக்கு.
அப்படி ஒரு முறை எடுத்து பார்க்கும்பொழுது அந்த புத்தகத்தில் இருந்த கதையின் தலைப்பு வீட்டின் மூலையில் சமையலறை _ அம்பை என்று எழுதியிருந்தது. அந்த புத்தகத்தில் படங்களை இல்லை மாரிக்கு ஆச்சரியம். படங்களே இல்லாமல் ஒரு புத்தகம் எப்படி வாசிக்க முடியும்? வெறும் எழுத்துக்களாக இருக்கிறது என்று பார்த்தான்.
அதன் பிறகுதான் தன்னுடைய குழந்தை மாரிக்கு அவனுடைய அம்மா புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறார். தனது மடியில் அமர வைத்துக்கொண்டு ஆலிஸின் அற்புத உலகத்தை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறார். அந்தக் குழந்தைக்கு ஒரு புது உலகத்தைக் கொடுக்கிறார். எவ்வளவு அருமையான அம்மாவாக இருக்கிறார்.
மாரியின் அம்மா மட்டுமல்ல மாரியின் நண்பன் கதிரேசனும் கதைகள் கூறுவான். ஆனால் பேய் இல்லாமல் அவன் கதைகள் கூறியதில்லை. முதலிலேயே பயத்தை அதிகமாக தன் மனதில் அப்பிக் கொண்டிருக்கும் மாரிக்கு இவன் கூறும் கதைகள் இன்னும் பயத்தை அதிகப்படுத்தின.
இருட்டில் செல்லும் போதெல்லாம் அம்மாவின் கைகளை பற்றி கொள்வான் அம்மா எவ்வளவோ தைரியப்படுத்துவார். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை அந்த இருட்டின் முன் நின்று கேள் என்பார்.
அம்மா என் எல்லாமுமாக இருக்கிறார். என்று அடிக்கடி எண்ணிக் கொள்ளும் ஒரு சிறுவனாக மாரி இருந்தான்.
ஒரு நாள் மாரியும் நண்பர்களும் சேர்ந்து நாடகம் போட தயாரானார்கள் அப்பொழுது மாரிக்கு தான் கதை எழுதும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது.
அதுவரை ஆயிரம் கதைகள் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தன கேட்டவுடன் அத்தனை கதைகளும் சிறகு முளைத்து பறந்து விட்டன.
மாரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அடுத்த நாள் மாலை அனைவரும் இந்த கதை என்று கேடட்டார்கள். அந்த நிமிடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு அம்மா கூறிய கதை மனதில் தோன்றியது. அந்தக் கதையைக் கூற அனைவரும் ஒத்துக் கொள்கிறார்கள். அந்த நேரம் ஆதிமூலம் மாமா அங்கே வர அவரிடம் இந்த கதையை கூற மாரி நீ பெரிய ஆளுதாண்டா என்று கூறினார். அவருடைய வார்த்தை மாறிய என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
மாரி தனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதினான்.
எத்தனையோ இடர்பாடுகளுக்கு இடையில் விடாமுயற்சியாக நாடகத்தை நடத்தி முடித்தார்கள்.
சின்னச் சின்ன நிகழ்வுகள் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த நாடகம் நடப்பதற்காக குழந்தைகள் செய்கின்ற மெனக்கடல்களை அவ்வளவு அழகாக விளக்கி இருக்கிறார்.
யார் வந்தாலும் வராவிட்டாலும் மழை பெய்தாலும் நடத்திய தீருவது என்ற அவர்களுடைய அந்த பிடிவாதம் நிறைய இடங்களில் என்னுடைய சிறுவயதை ஞாபகப்படுத்தி இருக்கிறது. நான் எப்பொழுதுமே பிடிவாதத்தைப் பிடித்த பிடிவாதக்காரி.
நான் சிறுவயதாக இருக்கும் போது ஒரு முறை கூட்டாஞ்சோறு செய்து கொண்டிருக்கும் பொழுது மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த மழைக்கும் இடையேகூட நாங்கள் அவ்வளவு பேரும் சுத்தி நின்று அடுப்பு எரிவதற்காக பாதி வெந்தும் வேகாமலும் இருந்த அந்த கூட்டாஞ்சோற்றை ஆக்கி முடித்து கைகளில் வாங்கி சாப்பிடும் பொழுது இருந்த ருசி என்றுமே நாவில் நின்று கொண்டிருக்கிறது. இன்று வரை எவ்வளவு ருசியான பண்டங்களை சாப்பிட்டாலும் அந்த ருசிக்கு ஈடாகாது.
இந்த நினைவுகளை தான் நாம் இன்றைய காலகட்ட குழந்தைகளுக்கு கொடுக்க தவறுகிறோமோ என்று ஏராளமான இடங்களில் இந்த புத்தகம் தலையில் கொட்டிக் கொண்டே செல்கிறது.
குழந்தைகளுடைய உலகை அவர்களுக்கு நாம் அறிமுகம் செய்ய வேண்டும். நாம் வாழ்ந்த வாழ்க்கையில் சிறுவயதில் எத்தனை நினைவுகளை மனது தாங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு எந்த நினைவுகள் இருக்கும் பிற்காலத்தில் செல்போனையும் டிவியையும் தவிர.
குழந்தைகள் மனதில் ஏராளமான நினைவுகள் மலர அவர்களுடைய பால்யத்தை அவர்களிடம் ஒப்படைப்போம். அவர்களோடு சேர்ந்து கைகோர்ப்போம்.
இந்தக் கதை மாரி தன் அம்மாவின் மீது வைத்திருந்த அளப்பரிய அன்பையும் அம்மாவின் மீது வைத்திருந்த அளப்பரிய மதிப்பையும் காட்டுகிறது.
கதையின் தொடக்கத்தில் ஓரிடத்தில் முடிவுகள் எடுப்பதில் நான் கில்லாடி என்ற ஒரு வரி வருகிறது. மாரி தன்னைத்தானே கூறி கொள்வது போன்று உண்மை சிறு வயதில் ஒவ்வொரு குழந்தையும் தான் எடுக்கும் முடிவின் மீது அவ்வளவு அதிக நம்பிக்கை கொண்டிருக்கும். இந்த முடிவுகள் எந்த இடத்தில் தகர்க்கப்படுகிறது. எனக்கு சரியாக முடிவு எடுக்கத் தெரியவில்லை என்று தோன்றும் அளவிற்கு எந்த இடம் அவர்களை இட்டுச் செல்கிறது? யோசிப்போம்.
அவர்களுடைய முடிவுகளை அவர்கள் எடுக்கும் சுதந்திரத்தை பெரும்பாலான நேரங்களில் கொடுக்க தவறிவிடுகிறோம். முடிவெடுக்கும் அதிகாரத்தை விட்டுக் கொடுப்போம் அன்போடு.
முடிவெடுக்கும் ஒரு சுதந்திரத்தை அவர்களுக்குக் கொடுப்போம். அது பதின் பருவத்திலும் இருக்கலாம்.
குழந்தையின் ஒவ்வொரு பருவத்தையும் ரசிப்போம் கொண்டாடுவோம்.
வாசிக்க வேண்டிய புத்தகம்.
மாரி எனும் குட்டி பையனின் கதை.
நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையின் கதை.