Friday 28 September 2012

கழுகு

தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்

vulture

ஒரு கழுகு முக்கிய சாலையின் அருகில், கடலுக்கு வெகு தூரத்தில் ஒரு மரத்தில் ஒரு கூடு கட்டியிருந்தது. நிறைய குஞ்சுகளைப் பொரித்திருந்தது. ஒரு நாள் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதற்காக ஒரு பெரிய மீனை தன் கால் நகங்களில் பற்றிக் கொண்டு பறந்து வந்து கொண்டிருந்தது. அதன் கூடு இருந்த மரத்தின் அடியில் நிறைய ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கழுகின் கால் கால்களில் இருந்த மீனைப் பார்த்ததும் மரத்தைச் சுற்றி நின்று கொண்டு கத்தினார்கள். கற்களை எறிந்தனர்.

கழுகு மீனைக் கீழே போட்டதும் அதை எடுத்துக் கொண்டு அவர்கள் போய் விட்டார்கள். கழுகு கூட்டின் விளிம்பில் உட்கார்ந்தது. கழுகைப் பார்த்ததும் அதன் குஞ்சுகள் தங்கள் தலையை உயர்த்தி உணவுக்காகக் கத்தின.

ஆனால் கழுகு சோர்ந்து போயிருந்தது. திரும்ப கடலுக்குப் பறந்து செல்ல முடியாது.அத்ற்குப் பதிலாக அது கூட்டில் இறங்கி தன் குஞ்சுகளை சிறகுகளால் அணைத்துத் தட்டிக் கொடுத்தது.குஞ்சுகளின் மென்மையான இறகுகளைக் கோதிவிட்டது.கொஞ்சநேரம் பொறுத்துக் கொள்ளச் சொல்லியது. ஆனால் அது தட்டிக் கொடுக்க கொடுக்க குஞ்சுகள் இன்னும் சத்தமாகக் கத்திக் கூப்பாடு போட்டன.

கடைசியில் கழுகு தன் கூட்டை விட்டு மேலே உள்ள கிளைக்குத் தாவி அமர்ந்தது.ஆனால் கழுகுக்குஞ்சுகள் இன்னும் பரிதாபமாக கீச்சிட்டன.

அதன் பிறகு கழுகு ஒருபெரிய கத்தலுடன், தன் சிறகுகளை விரித்தது. கடலை நோக்கி வேகமாகப் பறந்து சென்றது.

மிகவும் தாமதமாக மாலையில் கழுகு கூட்டுக்குத் திரும்பியது. மிக மெதுவாக, தாழ்வாக பறந்து வந்தது. அதன் கால்களில் ஒரு பெரிய மீன் இருந்தது.

மரத்தின் அருகில் நெருங்கியதும் ஆட்கள் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றும்முற்றும் பார்த்தது. பின்னர் தன் சிறகுகளை சட்டென ஒடுக்கிக் கொண்டு, கூட்டின் விளிம்பில் சென்று அமர்ந்தது.

கழுகுக்குஞ்சுகள் தங்கள் திறந்த அலகுகளை மேலே தூக்கின. தாய்க்கழுகு மீனைக் கிழித்து தன் குஞ்சுகளின் பசியாற்றியது.

Thursday 27 September 2012

நெருப்போடு விளையாடினால்?

kids indian மலையாளம்- மாலி

தமிழில்- உதயசங்கர்

 

சாயங்காலம் ஆகி விட்டது. அம்மா குத்துவிளக்கு ஏற்றினாள். அதன் முன் உட்கார்ந்து நாமாவளி சொன்னாள். அவள் கூடவே மினியும் சொன்னாள்.

குத்துவிளக்கில் திரி இருந்தது. அதில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. காற்று வீசவில்லை. அதனால் தீபம் அசையாமல் நின்று எரிந்து கொண்டிருந்தது. பார்க்கும் போது எப்படி இருந்தது தெரியுமா? நெற்றியில் வைக்கிற கோபி பொட்டைப் போல இருந்தது. நிறமோ சிவந்த பவழம் போல இருந்தது. என்ன அழகு?

மினிக்கு தீயென்றால் எவ்வளவு இஷ்டம் தெரியுமா?

அம்மா நாமாவளி சொல்லி முடிந்த பிறகு எழுந்து உள்ளே போவதற்குத் தயாரானாள். மினி அங்கேயே இருந்தாள்.

“அம்மா நான் தீயைக் கொஞ்சம் தொட்டுப் பாக்கட்டா?” என்று கேட்டாள்.

“ வேண்டாம் கண்ணே! கை சுட்டுரும்..” என்று அம்மா எச்சரித்தாள்.

”அப்படின்னா என்ன?” என்று மினி யோசனையுடன் கேட்டாள்.

“கண்ணு, தோல் பொத்துப் போகும்.. ரெம்ப வலிக்கும்.. நீ உருண்டு புரண்டு அழுவே.. அதெல்லாம் வேண்டாம்..” என்று சொல்லிவிட்டு அம்மா உள்ளே போய் விட்டாள்.

மினி தீயையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஹா..என்ன அழகு! அருகில் போய் அதைப் பிடிக்க ஆசை வந்தது.

“தீயே உன்னைக் கொஞ்சம் தொட்டுக்கிடட்டுமா?” என்று மினி கேட்டாள். தீயின் சுடர் உச்சி கொஞ்சம் சிணுங்கியது.”வேண்டாம் மினி, என்னைத் தொடாதே..தொட்டால் சுடும்..” என்று தீ பதில் சொன்னது.

ஆனால் மினி கேட்கவில்லை. அவள் வலது கையை நீட்டினாள். சுண்டுவிரலை தீக்குள் நீட்டினாள். பட்டென ‘அய்யோ’ என்ற அலறல் கேட்டது. சத்தம் கேட்டு அம்மா பாய்ந்து வந்தாள்.அவள் பார்த்தது என்னதெரியுமா? மினி வலது கையை உதறுகிறாள். அங்கேயே குதிக்கிறாள். சத்தம் போட்டு அழுகிறாள்.!

”நான் அப்பவே சொன்னேன்ல..” என்று அம்மா கோபப்பட்டாள். உடனே அம்மாவின் கோபம் மாறிவிட்டது.அவள் உள்ளே ஓடினாள். தீப்புண்ணுக்கான மருந்தோடு திரும்பி வந்தாள்.

“வலது கையை நீட்டு!” என்று அவசரப்பட்டாள்.

மினி வலது கையைப் பின்னால் இழுத்தாள். அம்மா கையை இழுத்துப் பிடித்தாள். விரலில் மருந்து தேய்த்தாள். துணியைச் சுற்றிக் கட்டினாள்.

மினிக்கு இரவில் கொஞ்சம் வேதனை இருந்தது.விடியும் போது வேதனை இல்லை. ஆனால் ஒன்று மட்டும் மறக்கவில்லை. வேதனையின் ஞாபகம்.

மறுபடியும் மாலை வந்தது. அம்மா குத்துவிளக்கு ஏற்றினாள். நாமாவளி சொல்ல உட்கார்ந்தாள். மினி எங்கே இருந்தாள் தெரியுமா? குத்துவிளக்கிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி உட்கார்ந்திருந்தாள். நாமாவளி சொல்லி முடிந்தது.

“மினி இடது கையில் சுண்டுவிரல் இருக்கில்ல..? அதைத் தீயில நீட்டு. இன்ன..” என்று அம்மா சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு உள்ளே போனாள். மினி தீயையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அய்ய.ஆளைப்பாரு..எனக்கு வலிக்க வச்சில்ல..மோசமான தீ நீ!” என்று அவள் சொன்னாள். அப்போதும் தீ சொன்னது,” மினி நேத்து நான் உன்னை எச்சரிச்சேன்..நீ கேக்கலை..என்னைத் தொட்டவரை நான் காயப்படுத்துவேன்..எனக்கு அதில் விருப்பமில்லை..ஆனால் நான் அப்படி உருவாகியிருக்கிறேன்..நான் என்ன செய்யட்டும்..?”

அடுத்த நாள் மாலை அம்மா கேட்டாள்,” என்ன மினி தீயைத் தொடலையா?”

அதற்கு மினி,” இனி ஒருநாளும் நான் தீயைத் தொடமாட்டேன்.” என்றாள்.

Wednesday 26 September 2012

ராஜ்யத்தின் முடிவு

சாதத் ஹசன் மண்டோ

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்

manto2

தொலைபேசி மணியடித்தது. மன்மோகன் அதை எடுத்தான்.

“ ஹலோ..44457 ..”

“ மன்னிக்கவும் ராங் நம்பர்..”

என்று ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது. மன்மோகன் ரிசீவரைக் கீழே வைத்தான். பின்பு அவனுடைய புத்தகத்தை மறுபடியும் கையில் எடுத்தான். அவன் அதை இருபது முறைகளுக்கு மேல் படித்து விட்டான். அது அசாதாரணமான புத்தகம் என்பதினால் இல்லை. அது தான் அந்த அறையில் இருந்த ஒரே புத்தகம். அதில் கடைசி பக்கங்களும் இல்லை.

ஒரு வாரத்துக்கு மன்மோகன் மட்டும் தான் அந்த அலுவலக அறையில் குடியிருக்கப் போகிற ஒரே ஆள். அது அவனுடைய நண்பனுடையது. அந்த நண்பன் அவனுடைய தொழில் கடனுக்காக நகரத்தை விட்டு வெளியே போயிருக்கிறான். மன்மோகன் இந்தப் பெரிய நகரத்திலுள்ள ஆயிரக்கணக்கான வீடற்ற மக்களில் – இரவுகளில் நடைபாதைகளில் படுத்துறங்கும் - ஒருவன். அவனுடைய நண்பன் அவனை இங்கே அவன் இல்லாதபோது பொருட்களைக் காவல் செய்வதற்காக அழைத்திருந்தான்.

அவன் வெளியே போவதேயில்லை. அவன் நிரந்தரமாகவே வேலையின்றி இருந்தான். அவன் எல்லா வேலைகளையும் வெறுத்தான். உண்மையிலே அவன் முயற்சி செய்தால் அவனுக்கு மிகச் சுலபமாக சினிமா கம்பெனியில் டைரக்டர் வேலை கிடைத்திருக்கும். ஒரு காலத்தில் அதை விட்டு விட்டு வந்திருந்தான். அதனால் மீண்டும் அடிமையாக மாற அவனுக்கு விருப்பமில்லை. அவன் ஒரு அழகான, அமைதியான, ஆபத்தில்லாத, மனிதன். அவனுக்கென்று சொந்தச் செலவுகள் இல்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் காலையில் ஒரு கோப்பை தேநீர், இரண்டு துண்டு சுட்ட ரொட்டி,மதியம் கொஞ்சம் ரொட்டியும், தொடுகறியும், ஒரு பாக்கெட் சிகரெட் அவ்வளவு தான். அதிர்ஷ்டவசமாக அவனுடைய இந்த எளிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சியடைகிற, போதுமான நண்பர்கள் இருந்தார்கள்.

மன்மோகனுக்கு குடும்பமோ, நெருங்கிய உறவினர்களோ கிடையாது. வாழ்க்கை கடினமாகும்போது அவனால் உணர்வில்லாமல் பல நாட்கள் இருக்கமுடியும். சிறுவனாக இருந்த போதே வீட்டை விட்டு ஓடி வந்து பம்பாயின் அகன்ற பிளாட்பாரங்களில் பல வருடங்களாக வாழ்கிறான் என்பதைத் தவிர அவனைப்பற்றி அவனுடைய நண்பர்களுக்கு அதிகமாக ஒன்றும் தெரியாது. அவன் வாழ்வில் ஒன்றே ஒன்று மட்டும் இல்லை. அது பெண்கள். அவன் வழக்கமாகச் சொல்வான்.

“ ஒரு பெண் என் மீது காதல் கொண்டிருந்தால் என் வாழ்க்கையே மாறியிருக்கும்..”

உடனே நண்பர்கள் பதில் சொல்வார்கள்,

“ அப்போதும் நீ வேலை செய்ய மாட்டே..”

அதற்கு அவன்,

“ அப்போதிருந்து வேலை தான்.. வேறொன்றும் கிடையாது..”

என்று பதில் சொல்வான்.

“ அப்புறம் ஏன் ஒரு உறவை ஏற்படுத்த வேண்டியது தானே..”

“ அது என்ன நல்லாவா இருக்கு.. உறவை ஒரு ஆம்பிளை தொடங்குவது என்பது…”

இப்போது மதியநேரம். ஏறத்தாழ மதிய உணவிற்கான வேளை. திடீரென தொலைபேசி ஒலித்தது. அவன் அதை எடுத்தான்.

“ ஹலோ.. 44457..”

“ 44457?..” ஒரு பெண்குரல் கேட்டது.

“ ஆமாம்..” என்று மன்மோகன் பதிலளித்தான்.

“ யார் நீங்கள்? “ என்று அந்தக்குரல் கேட்டது.

“ நான் மன்மோகன்..”

அதற்குப் பதில் இல்லை. திரும்ப அவன்,

“ நீங்க யார்கிட்ட பேச விரும்புறீங்க…”

என்று கேட்டான்.

“ உங்க கிட்டதான்..” என்று அந்தக் குரல் சொன்னது.

“ எங்கிட்டயா..”

“ ஆமாம் உங்களுக்கு ஆட்சேபணையில்லைன்னா..”

“ இல்லை.. இல்லவே இல்லை..”

“ உங்க பெயர் மதன்மோகன்னா சொன்னீங்க..”

“ இல்லை..மன்மோகன்..”

“ மன்மோகன்..”

சற்று நேரம் அமைதி. அவன்,

“ நீங்க எங்கிட்ட பேச விரும்புறீங்கன்னு நெனச்சேன்..”

என்று சொன்னான்.

“ ஆமாம்..”

“ அப்படின்னா மேலே சொல்லுங்க..”

“ எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. ஏன் நீங்க ஏதாவது சொல்லக்கூடாது?..”

“ நல்லது.. நான் ஏற்கனவே என்னோட பேரை உங்ககிட்ட சொல்லிட்டேன்.. தற்காலிகமாக இந்த அலுவலகம் தான் என்னோட தலைமையகம்.. நான் வழக்கமாக நகரத்திலுள்ள பிளாட்பாரங்கள்ல தான் தூங்குவேன்.. ஆனால் கடந்த ஒரு வாரமா நான் இந்த அலுவகத்தின் பெரிய மேஜை மேலே படுத்து உறங்கிக்கிட்டிருக்கேன்..”

என்று மன்மோகன் சொன்னான்.

“ ராத்திரியில கொசுக்களை விரட்ட என்ன செய்வீங்க..? பிளாட்பாரத்தில கொசுவலை கட்டுவீங்களா? “

இதைக் கேட்டு மன்மோகன் சிரித்தான்.

” இதுக்குப் பதில் சொல்றதுக்கு முன்னால நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியிர்ரேன்.. நான் பொய் சொல்ல மாட்டேன். நான் பல வருடங்களாக பிளாட்பாரங்களில் தூங்கி வருகிறேன்.. இந்த அலுவலகம் என்னுடைய குடியிருப்பாக மாறிய பிறகு நான் இதில் வாழ்ந்து வருகிறேன்..”

“ எப்படி பொழுது போகுது..? “

“ என்கிட்ட ஒரு புத்தகம் இருக்கு.. அதில கடைசிப்பக்கங்கள் இல்லை.. ஆனால் அதை இருபது தடவைகள் படித்து விட்டேன்.. ஒரு நாள் இல்லாத கடைசிப் பக்கங்களில் என்னோட கைகளை வைத்துக் கொண்டிருக்கும்போது அதன் முடிவு என்ன என்று ஒரு வழியாகத் தெரிந்து கொண்டேன்.. இரண்டு காதலர்களும் சந்தித்து விடுகின்றனர்.”

“ நீங்க ரெம்ப சுவார்சியமான ஆளா இருப்பீங்க போல இருக்கே..”

என்று அந்தக் குரல் சொன்னது.

“ நீங்க அன்பா இருக்கீங்க..”

“ என்ன செய்றீங்க..?”

“ செய்றதா?”

“ நான் கேட்கிறது.. நீங்க என்ன வேலை பாக்கறீங்க..?”

“ வேலையா? எதுவுமில்லை.. வேலையே செய்யாதபோது ஒரு மனிதனுக்கு என்ன வேலை இருக்க முடியும்.. ஆனா உங்க கேள்விக்குப் பதில் சொல்லணும்னா நான் பகல் முழுவதும் சுத்திகிட்டிருப்பேன்…ராத்திரியில தூங்குவேன் ”

“ உங்க வாழ்க்கை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”

“ நில்லுங்க க.. நான் முதல் தடவையா.. அந்தக் கேள்வியை என்கிட்ட கேட்கிறேன்.. நான் வாழ்ற என்னோட வாழ்க்கையை நான் விரும்புறேனா..?”

“ சரி பதில் என்ன?”

“ அதுக்குப் பதிலே இல்லை.. ஆனா நான் இவ்வளவு நாளா என்னோட வாழ்க்கையை இந்த மாதிரி வாழ்ந்துகிட்டிருக்கேன்னா.. நான் அதை விரும்புறேன்னு நம்புறதுல நியாயம் இருக்குன்னு நினைக்கிறேன்..”

அந்தப் பக்கத்திலிருந்து சிரிப்பு.

“ நீங்க அழகா சிரிக்கிறீங்க..”

என்று மன்மோகன் சொன்னான்.

“ நன்றி “

என்று சொல்லி அந்தக் குரல் வெட்கப்பட்டது. அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. ரெம்ப நேரமாக அவன் ரீசிவரைக் கையில் பிடித்தபடி அவனுக்குள்ளே சிரித்துக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலை எட்டுமணி இருக்கும். தொலைபேசி மீண்டும் ஒலித்தது. அவன் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான். ஆனால் அந்தச் சத்தம் அவனை எழுப்பி விட்டது. அவன் கொட்டாவி விட்டுக் கொண்டே அதை எடுத்தான்.

“ ஹலோ.. இது 44457..”

“ குட்மார்னிங்.. மன்மோகன்சாகிப்..”

“ குட்மார்னிங்..ஓ..நீங்களா..குட்மார்னிங்..”

“ தூங்கிக்கிட்டிருந்தீங்களா..?”

“ ஆமா.. நான் இங்கே வந்ததிலிருந்து ரெம்பக் கெட்டுப் போயிட்டேன்.. தெரியுமா?..நான் பிளாட்பாரத்துக்குத் திரும்புற போது ரெம்பக் கஷ்டப்படப்போறேன்…”

“ ஏன்?”

“ஏன்னா.. நீங்க பிளாட்பாரத்துல தூங்கினா காலைல.. அஞ்சுமணிக்கு முன்னாலேயே எந்திக்கணும்..”

அந்தப்பக்கம் சிரிப்பு.

“ நேற்று நீங்க திடீர்னு வைச்சுட்டீங்க..”

என்று சொன்னான்.

“ சரி.. ஏன் நீங்க.. நான் அழகா சிரிக்கிறேன்னு சொன்னீங்க..”

“ இதென்ன கேள்வி..! எதாச்சும் அழகா இருந்தா அதை நாம கண்டிப்பா பாராட்டணும் இல்லையா?”

“ இல்லவே இல்லை..”

“ நீங்க நிபந்தனைகள் விதிக்கக் கூடாது.. நான் எப்போதும் நிபந்தனைகளை ஏத்துக்கிறதில்லை.. நீங்க சிரிச்சா நீங்க அழகாச் சிரிக்கிறீங்கன்னு சொல்லத்தான் போறேன்..”

“ அப்ப்டின்னா.. நான் வைச்சிருவேன்..”

“ அது உங்க இஷ்டம்..”

“ நான் அப்செட் ஆனா அதைப்பத்தி உங்களுக்குக் கவலையில்லையா?..”

“ சரியா சொல்றதா இருந்தா.. நான் முதல்ல என்னை அப்செட் பண்றதை விரும்பல.. அப்படின்னா… நீங்க சிரிக்கும்போது நீங்க அழகா சிரிக்கிறீங்கன்னு சொல்லலைன்னா.. என்னோட நல்ல ரசிப்புணர்வுக்கு நான் அநீதி செய்ஞ்ச மாதிரி ஆயிரும்..”

கொஞ்சநேரம் அமைதி. பிறகு குரல் மீண்டும் கேட்டது.

“ மன்னிக்கணும்.. நான் எங்களோட வேலைக்காரிகிட்ட பேசிக்கிட்டிருந்தேன்.. அப்படின்னா நீங்க உங்க ரசிப்புணர்வுக்கு நேர்மையா இருப்பீங்க.. வேறு என்ன உங்க நேர்மையான ரசிப்புணர்வு.?”

“ நீங்க என்ன சொல்ல வர்றீங்க..”

“ நான் சொல்ல வந்தது.. என்ன பொழுதுபோக்கு.. இல்லைன்னா.. வேலை..இல்லைன்னா..நீங்க என்னெல்லாம் செய்வீங்க..?”

அதைக் கேட்டு மன்மோகன் சிரித்தான்.

“ பெரிசா எதுவுமில்லை.. எனக்குப் போட்டோகிராபியில விருப்பம்.. கொஞ்சம்போல..”

“ அது ரெம்ப நல்ல பொழுதுபோக்கு..”

“ நான் அதை எப்பவுமே.. நல்ல அல்லது கெட்ட அப்படிங்கிற மாதிரியான வார்த்தைகள்ல யோசிக்கிறதில்ல..”

“ உங்க கிட்ட ஒரு அழகான கேமிரா இருக்கணும்..”

“ என்கிட்ட கேமிரா கிடையாது.. எப்பவாவது ஒரு நண்பர்கிட்டருந்து கடன் வாங்குவேன்.. எப்படியாவது.. நான் கொஞ்சம் பணம் சம்பாதிச்சன்னா.. கண்டிப்பா ஒரு கேமிராவை வாங்குவேன்..”

“ என்ன கேமிரா..”

“ எக்ஸாட்டா.. அது ஒரு தானியங்கி கேமிரா..எனக்கு அது ரெம்பப் பிடிக்கும்..”

அந்தப்பக்கம் அமைதி.

“ நான் வேற ஒரு விஷயத்தை யோசிச்சிக்கிட்டிருக்கேன்..”

“ என்ன? “

“ நீங்க என்னோட பேரையும் கேட்கல.. போன் நம்பரையும் கேட்கல..”

“ எனக்கு அது தேவைன்னு தோணலை..”

“ ஏன் தோணலை..”

“ உங்க பேர் என்னவாக இருந்தா என்ன.. உங்ககிட்ட என்னோட நம்பர் இருக்கு.. அது போதும்.. நான் எப்ப உங்களுக்கு போன் பண்ணனும்னு விரும்புறீங்களோ அப்ப நீங்க உங்க பேரையும் நம்பரையும் கண்டிப்பா கொடுப்பீங்கன்னு நிச்சயமாத் தெரியும்..”

“ இல்லை..மாட்டேன்..”

“ உங்க விருப்பம்..நான் அதைக் கேட்கப் போறதில்ல..”

“ நீங்க ஒரு விசித்திரமான மனிதர்..”

” உண்மை தான்..நான் அப்படித்தான்..”

மறுபடியும் அமைதி.

“ மறுபடியும் யோசிக்கிறீங்களா..”

என்று அவன் கேட்டான்.

“ ஆமா நான் யோசிச்சேன்.. ஆனா யோசிக்க வேண்டிய விஷயத்தைப் பற்றி என்னால யோசிக்க முடியல..”

“ அப்படின்னா நீங்க ஏன் போனை வைக்கல.. இன்னொரு தடவை பண்ணலாமே ”

“ நீங்க நாகரீகமில்லாத ஆள்.. நான் போனை வைக்கிறேன்..”

மன்மோகன் புன்னகைத்தான். ரீசிவரைக் கீழே வைத்தான். அவனுடைய முகத்தைக் கழுவி, உடைகளை உடுத்திக் கொண்டு வெளியேறும்போது மறுபடியும் தொலைபேசி ஒலித்தது. அவன் எடுத்தான்.

“ 44457 “

“ மிஸ்டர் மன்மோகன்?”

என்று அந்தக் குரல் கேட்டது.

“ உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? “

“ சரி.. நான் இனிமேல் கோபப்பட மாட்டேன்னு உங்ககிட்ட சொல்ல விரும்பினேன்..”

“ ரெம்ப நல்லது..”

“ உங்களுக்குத் தெரியுமா? நான் என்னோட காலையுணவை சாப்பிடும்போது உங்ககிட்ட கோபப்பட்டிருக்கக் கூடாதுன்னு எனக்குத் தோணிச்சி… நீங்க காலையுணவைச் சாப்பிட்டாச்சா? “

“ இல்ல.. நீங்க போன் பண்ணும்போது வெளியே போகக் கிளம்பிக்கிட்டிருந்தேன்..”

“ ஓ அப்படின்னா.. நான் உங்கள நிறுத்தமாட்டேன்..”

“ இன்னிக்கு எனக்கொண்ணும் அவசரமில்ல.. ஏன்னா எங்கிட்ட பணமில்ல.. இன்னிக்குக் காலைல ஏதாவது காலையுணவு சாப்பிடமுடியும்னு தோணலை..”

“ ஏன் நீங்க இப்படியெல்லாம் பேசறீங்க.. உங்களை காயப்படுத்துறதில.. நீங்க சந்தோஷப்படறீங்களா? “

“ இல்லை…நான் எப்படி இருக்கேனோ.. எப்படி வாழ்றேனோ.. அதுக்குப் பழகிட்டேன்..”

“ நான் கொஞ்சம் பணம் அனுப்பவா? “

“ நீங்க விரும்பினா.. அனுப்பலாம். அதனால என்னோட புரவலர்கள் பட்டியல்ல இன்னொரு பேர் சேரும்..”

“ அப்ப்டின்னா நான் அனுப்ப மாட்டேன்..”

“ உங்க விருப்பப்படியே செய்ங்க..”

“ நான் போனை வைக்கப் போறேன்..”

“ அப்படின்னா வைங்க..”

மன்மோகன் ரீசிவரைக் கீழே வைத்தான். அலுவலகத்தை விட்டு வெளியேறி நடந்தான். மாலையில் மிகவும் தாமதமாகத் தான் அவன் திரும்பி வந்தான். அவன் நாள் முழுவதும் அவனுடைய அழைப்பாளியைப் பற்றி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான். அவள் இளமையாகவும், படித்தவளாகவும் இருக்கவேண்டுமென்று நினைத்தான். அவள் அழகாகச் சிரித்தாள். இரவு பதினொரு மணிக்குத் தொலைபேசி ஒலித்தது.

“ ஹலோ “

“ மிஸ்டர் மன்மோகன்..”

“ அவன் தான்.”

“ நான் நாள் முழுவதும் கூப்பிட்டுக் கொண்டிருந்தேன்.. நீங்க எங்கே இருந்தீங்கன்னு தயவுசெய்து எனக்கு விளக்க முடியுமா? “

“ எனக்குன்னு வேலை இல்லாட்டாலும்.. நானாச் செய்றதுக்குன்னு சில வேலைகள் இருக்கு..”

“ என்ன வேலைகள்? “

“ சுற்றித் திரிவது..”

“ எப்ப திரும்பி வந்தீங்க..? “

“ ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி..”

“ நான் கூப்பிடும்போது என்ன செய்ஞ்சுகிட்டிருந்தீங்க..”

“ நான் மேசை மேல படுத்துகிட்டு பார்க்கறதுக்கு நீங்க எப்படி இருப்பீங்கன்னு கற்பனை செய்ஞ்சுகிட்டிருந்தேன்.. ஆனால் எனக்கு உங்க குரலைத் தவிர வேறெதுவும் தெரியாது..”

“ வெற்றி பெற முடிஞ்சிதா? “

“ இல்லை..”

“ நல்லது.. முயற்சி செய்யாதீங்க.. நான் ரெம்ப அசிங்கமா இருப்பேன்..”

“ நீங்க அசிங்கமா இருந்தா தயவு செய்ஞ்சு போனை வைங்க.. நான் அவலட்சணத்தை வெறுக்கிறேன்..”

“ அப்படின்னா நான் அழகானவள்.. நீங்க வெறுப்பை வளக்கறதை நான் விரும்பல..”

அவர்கள் சிறிது நேரத்திற்குப் பேசிக் கொள்ளவில்லை. பிறகு மன்மோகன்,

“ நீங்க.. யோசிச்சிக்கிட்டிருக்கீங்களா?”

“ இல்லை.. ஆனா நான் உங்ககிட்ட ஒண்ணு கேக்கப்போறேன்..”

“ கேக்கறதுக்கு முன்னாடி யோசிச்சிக்கோங்க..”

“ உங்களுக்காக நான் பாடறதை விரும்புவீங்களா?”

“ ஆமாம்..”

“ சரி.. கொஞ்சம் பொறுங்க”

அவளுடைய தொண்டையைச் சரி செய்வதை அவன் கேட்டான். பிறகு மிக மென்மையான தாழ்ந்த குரலில் அவள் அவனுக்காக ஒரு பாடலைப் பாடினாள்.

“ அருமையாக இருந்தது..”

“ நன்றி “

அவள் இணைப்பைத் துண்டித்தாள். இரவு முழுவதும் அவன் அவளுடைய குரலைப்பற்றியே கனவு கண்டு கொண்டிருந்தான். அவன் வழக்கத்தை விடச் சீக்கிரமே எழுந்து விட்டான். அவளுடைய அழைப்புக்காகக் காத்திருந்தான். ஆனால் தொலைபேசி ஒலிக்கவேயில்லை. அவன் அமைதியின்றி அறைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தான். பிறகு அவன் மேசை மீது படுத்துக் கொண்டு ஏற்கனவே இருபது தடவை படித்த புத்தகத்தை எடுத்தான். மறுபடியும் ஒரு தடவை அதை அவன் படித்தான். பகல் முழுவதும் கழிந்தது. மாலை ஏழு மணியளவில் தொலைபேசி ஒலித்தது. அவசரமாக அவன் அதை எடுத்தான்.

“ யாரது? “

“ நான் தான் “

“ பகல் பூரா எங்கே போயிருந்தீங்க..”

அவன் கோபத்தோடு கேட்டான்.

“ ஏன் “ அந்தக்குரல் நடுங்கியது.

“ நான் காத்துகிட்டிருந்தேன்.. என்கிட்ட பணமிருந்தும் நான் எதையும் சாப்பிடலை..”

“ நான் விரும்பும்போது தான் நான் போன் பண்ணுவேன்..நீங்க..”

மன்மோகன் அவளை இடைமறித்தான்.

“ இங்க பாரு.. ஒண்ணு இந்த வேலைக்கு முடிவு கட்டு..இல்லை நீ எப்ப கூப்பிடுவேன்னு சொல்லு.. என்னால காத்துகிட்டு இருக்க முடியாது..”

“ நான் இன்னக்கி நடந்ததுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. நாளையிலிருந்து நான் காலையிலையும்.. சாயந்திரமும் போன் பண்றேன்.. நிச்சயமா..”

“ அற்புதம்..”

“ எனக்குத் தெரியாது.. நீங்க..”

“ விஷயம் என்னன்னா..என்னால சும்மா காத்துகிட்டிருக்க முடியாது.. என்னால எதையாவது தாங்க முடியலன்னா என்னை நானே தண்டித்துக் கொள்வேன்..”

“ எப்படிச் செய்வீங்க..அதை..”

“ நீங்க இன்னிக்கு காலைல போன் பண்ணல நான் வெளியே போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை.. பகல் முழுவதும் நான் இங்கேயே எரிச்சலோடு உட்கார்ந்திருந்தேன்..”

“ நான் வேணுமின்னு தான் போன் பண்ணல..”

“ ஏன்? “

“ நீங்க என்னோட அழைப்புக்காக ஏங்கறீங்களான்னு கண்டுபிடிக்கத் தான்..”

“ உங்களுக்கு ரெம்பச் சேட்டை.. இப்போ போனை வைங்க.. நான் வெளியே போய்ச் சாப்பிடணும்..”

“ எவ்வளவு நேரமாகும் ? “

” அரைமணி நேரம்..”

அரைமணி நேரத்துக்குப் பிறகு அவன் திரும்பி வந்தான். அவள் போன் செய்தாள். அவர்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் அவளை அதே பாடலை அவனுக்காகப் பாடும்படி கேட்டான். அவள் சிரித்தாள். பின்பு அந்தப் பாடலைப் பாடினாள்.

இப்போது அவள் தினமும் காலையும் மாலையும் முறையாகக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் இது வரைக்கும் மன்மோகன் அவளுடைய பெயரையோ,அல்லது போன் நம்பரையோ கேட்கவேயில்லை. ஆரம்பத்தில் அவன் பார்ப்பதற்கு அவள் எப்படி இருப்பாள் என்று கற்பனை செய்ய முயற்சித்தான். ஆனால் இப்போது அது அவசியமில்லாததாகி விட்டது. அவளுடைய குரலே அவளுடைய முகம், அவளுடைய ஆத்மா, அவளுடைய உடல், எல்லாம். ஒரு நாள் அவள் அவனிடம்,

“ மோகன், ஏன் நீங்க என் பெயரைக் கேட்கலை?.”

என்று கேட்டாள். அவன் அதற்கு,

“ ஏன்னா.. உன்னோட குரல் தான் உன் பேர்..”

என்று சொன்னான்.

இன்னொரு நாள் அவள்,கேட்டாள்.

“ மோகன் நீங்க எப்பவாவது காதலிச்சிருக்கீங்களா?”

” இல்லை..”

“ ஏன்?”

அவன் வருத்தத்தோடு,

“ இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணும்னா நான் என்னோட வாழ்க்கையின் எல்லா இடிபாடுகளையும் சுத்தம் செய்ஞ்சு தான் பார்க்கணும்..ஆனால் எதுவும் இல்லைன்னா எனக்கு ரெம்ப வருத்தமாயிரும்..”

என்று சொன்னான்.

“ அப்படின்னா வேண்டாம்..”

ஒரு மாதம் கழிந்தது. ஒரு நாள் மோகனுக்கு அவனுடைய நண்பனிமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவன் பணத்தைத் தயார் செய்து விட்டதாகவும், பம்பாய்க்கு இன்னும் ஒரு வாரத்தில் வருவதாகவும் சொல்லியிருந்தான். அன்று மாலை அவள் போன் செய்தபோது அவன் அவளிடம்,

“ என்னோட ராஜ்யத்தின் முடிவு வரப்போகுது..”

என்று சொன்னான்.

“ ஏன்? “

“ ஏன்னா என்னோட நண்பன் திரும்பி வரப்போறான்..”

“ உங்களுக்கு போன் வைத்திருக்கும் வேறு நண்பர்கள் இருப்பார்களே..”

“ ஆமாம் எனக்குப் போன் வைத்திருக்கும் வேறு நண்பர்கள் இருக்கிறார்கள்..ஆனால் அந்த நம்பர்களை உன்னிடம் தரமாட்டேன்…”

“ ஏன்? “

“ வேறு யாரும் உன்னோட குரலை கேட்கறதை நான் விரும்பல.”

“ ஏன்?.”

“ எனக்குப் பொறாமைன்னு வைச்சிக்கலாம்..”

“ நாம என்ன செய்றது..”

“ சொல்லு..”

“ உங்களோட ராஜ்யத்தின் கடைசி நாளன்னிக்கு நான் என்னோட நம்பரை உங்களுக்குத் தாரேன்..”

அவன் உணர்ந்த வருத்தம் திடீரெனப் போய்விட்டது. அவன் மறுபடியும் அவளை உருவகிக்க முயற்சி செய்தான். ஆனால் அங்கே எந்த உருவமும் இல்லை. வெறுமனே அவளுடைய குரல் மட்டும் தான் இருந்தது. இன்றிலிருந்து சில நாட்கள் தான் என்று அவன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். அவன் அவளைப் பார்த்து விடுவான். அவனால் அந்தக் கணத்தின் அளவற்ற மகிழ்ச்சியைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.

அவள் மறுநாள் கூப்பிட்டபோது அவன் அவளிடம்,

“ நான் உன்னைப்பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்..”

என்று சொன்னான்.

“ ஏன்?”

“ நீ சொன்னியே.. என்னோட ராஜ்யத்தின் கடைசி நாளன்னிக்கு உன்னோட போன் நம்பரைத் தர்றதா..”

“ ஆமாம்.”

“ அப்படின்னா நீ எங்க இருக்கேங்கிறதையும் சொல்வேன்னு தானே அர்த்தம்.. நான் உன்னைப் பார்க்க விரும்பறேன்..”

“ நீங்க எப்ப விரும்பினாலும் என்னைப் பார்க்கலாம்.. ஏன் இன்னிக்கே கூட..”

“ இன்னிக்கு வேண்டாம்.. நான் நல்ல உடைகள் உடுத்தியிருக்கும்போது தான் உன்னைப் பார்க்க விரும்புகிறேன்..நான் என்னோட நண்பன்கிட்ட வேற உடைகள் கேட்டிருக்கேன்..”

“ நீங்க ஒரு குழந்தை மாதிரி இருக்கீங்க.. நாம சந்திக்கும்போது நான் உங்களுக்கு ஒரு பரிசு தரப்போறேன்..”

“ உன்னைச் சந்திக்கிறதை விட உயர்ந்த பரிசு இந்த உலகத்தில வேறெதுவும் இல்லை..”

“ நான் உங்களுக்காக ஒரு எக்ஸாட்டா கேமிரா வாங்கியிருக்கேன்..”

“ ஆனால் ஒரு நிபந்தனை.. நீங்க என்னைப் போட்டோ எடுக்கணும்..”

“ அதை நாம சந்திக்கிறபோது நான் முடிவு பண்றேன்..”

“ நான் இன்னும் ரெண்டு நாளைக்குப் போன் பண்ணமாட்டேன்..”

“ ஏன்?”

“ நான் என் குடும்பத்தோட வெளியூர் போறேன்.. இரண்டே நாட்கள் தான்..”

மன்மோகன் அன்று முழுவதும் அலுவலகத்தை விட்டு வெளியே போகவில்லை. அடுத்த நாள் காலை அவனுக்குக் காய்ச்சலடிக்கிற மாதிரி உணர்ந்தான். முதலில் அது சலிப்பினால் தான் என்று அவன் நினைத்தான். ஏனென்றால் அவள் போன் பண்ணவில்லையே. மத்தியானத்தில் அவனுடைய காய்ச்சல் அதிகமானது. அவனுடைய உடல் நெருப்பாய் சுட்டது. கண்கள் எரிந்தன. அவனுக்குத் தாகமாக இருந்தது. அவன் பகல் முழுவதும் தண்ணீரைக் குடித்துக் கொண்டேயிருந்தான். அவன் நெஞ்சு பாரமாக இருந்தது. அடுத்த நாள் காலை அவன் முழுவதுமாகக் களைப்படைந்து விட்டான். மூச்சு விடுவதற்குச் சிரமமாக இருந்தது. அவனுக்கு நெஞ்சு வலித்தது.

அவனுடைய காய்ச்சல் அதிகமாகிக் கொண்டே போனதில் அவனுக்கு ஜன்னி கண்டது. அவன் அவளுடன் போனில் பேசுகிறமாதிரி, அவள் குரலைக் கேட்கிற மாதிரியும் இருந்தது.மாலையில் அவனுடைய நிலைமை இன்னும் மோசமானது. அவனுடைய தலைக்குள் குரல்கள் கேட்டன. விசித்திரமான சத்தங்கள் ஆயிரக்கணக்கான தொலைபேசி மணிகள் ஒரே நேரத்தில் ஒலிப்பதைப் போல கேட்டன. அவனால் மூச்சு விட முடியவில்லை.

தொலைபேசி மணி ஒலித்தபோது அவனுக்குக் கேட்கவில்லை. ரெம்ப நேரத்துக்கு தொடர்ந்து மணி அடித்துக் கொண்டேயிருந்தது. திடீரென ஒரு கணம் அவனுக்குத் தெளிவு வந்தது. அவனால் கேட்க முடிந்தது. அவன் எழுந்தான். நிற்கமுடியாமல் தடுமாறி விழப்போனான். அநேகமாக விழுந்து விட்டான். ஆனால் சுவரில் சாய்ந்து சரிப்படுத்திக் கொண்டான். நடுங்கும் கைகளால் போனை எடுத்தான். தன்னுடைய நாக்கினால் உதடுகளை ஈரப்படுத்தினான். அவை மரக்கட்டை போல காய்ந்து போயிருந்தன.

“ ஹலோ.”

“ ஹலோ மோகன்..” என்று அவள் கூப்பிட்டாள்.

“ ஆமாம்.. மோகன் தான்..”

அவனுடைய குரல் படபடத்தது.

“ எனக்குக் கேக்கலை..”

அவன் ஏதோ சொல்வதற்கு முயற்சி செய்தான். ஆனால் அவனுடைய குரல் தொண்டையிலேயே உலர்ந்து போனது.

அவள் சொன்னாள்,

“ நான் நெனச்சதை விட நாங்க சீக்கிரம் வந்துட்டோம்.. நான் மணிக்கணக்கா உங்களைக் கூப்பிட முயற்சி செய்ஞ்சுகிட்டிருக்கேன்.. எங்கே போனீங்க..”

மன்மோகனின் தலைசுற்ற ஆரம்பித்தது.

“ ஏன் என்ன ஆச்சு..”

என்று அவள் கேட்டாள். மிகுந்த சிரமத்துடன் அவன்,

“ என்னோட ராஜ்யம் இன்னிக்கு முடிவுக்கு வந்து விட்டது..”

என்று சொன்னான். அவன் வாயிலிருந்து ரத்தம் சிந்தியது. அவனுடைய முகவாயில் மெல்லிய கோடாக வழிந்து அவனுடைய கழுத்து வழியே ஓடியது.

அவள் சொன்னாள்,

“ என் நம்பரை எழுதிக்கோங்க.. 50314..50314.. காலையில என்னைக் கூப்பிடுங்க.. நான் இப்ப வெளிய போகவேண்டியிருக்கு..”

அவள் இணைப்பைத் துண்டித்தாள். மன்மோகன் தொலைபேசி மேலேயே விழுந்தான்.

நன்றி-மலைகள் இணையதளம்

Monday 24 September 2012

அதுவும் இதுவும்

terracotta-decorative-mask-M-032 உதயசங்கர்

 

எல்லாம் நிதானமாக நடந்தது

இல்லை

எல்லாம் அவசரமாக நடந்தது

எல்லாம் சுலபமாக முடிந்தது

இல்லை

எல்லாம் சிரமப்பட்டே முடிந்தது

எல்லாம் இன்பமாகவே மலர்ந்தது 

இல்லை

எல்லாம் துன்பமாகவே விடிந்தது

எல்லாம் தெளிவாகவே இருந்தது

இல்லை

எல்லாம் குழப்பமாகவே இருந்தது

எல்லாம் கிடைத்தது

இல்லை

எதுவும் கிடைக்கவில்லை

எல்லாம் இருந்தது

இல்லை

எதுவும் இல்லை.

udhaya

Sunday 23 September 2012

பாய்ச்சல்

தால்ஸ்தோய்leo-tolstoy

தமிழில்- உதயசங்கர்

 

உலகம் முழுதும் சுற்றி வந்த கப்பல் கடைசியில் வீட்டை நோக்கி பயணப் பட்டது. காலநிலை அமைதியாக இருந்தது.எல்லோரும் கப்பலின் மேல்தளத்தில் இருந்தனர்.ஒரு பெரிய குரங்கு குட்டிக் கரணம் அடித்து எல்லோரையும் சந்தோசப் படுத்திக் கொண்டிருந்தது.வளைந்தும் நெளிந்தும் குதித்தும் அது வேடிக்கையாக முகத்தைக் கோணலாக்கவும், மற்றவர்களைப் பரிகாசம் செய்து கொண்டுமிருந்தது.எல்லோரும் தன்னைக் கவனிக்கிறார்கள் என்று தெரிந்ததும் அதனுடைய சேட்டை இன்னும் அதிகமாகிக் கொண்டே போனது.

கப்பல் கேப்டனின் பனிரெண்டு வயது மகனை நோக்கிக் குதித்தது.அவன் தலையிலிருந்த தொப்பியைப் பறித்துத் தன் தலையில் மாட்டிக் கொண்டு வேகமாக ஓடி கப்பல் கொடிமரத்தில் ஏறிக் கொண்டது. எல்லோரும் சிரித்தனர். தொப்பியில்லாத அந்தப் பையனுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. குரங்கு முதல் கொடிமரத்தூணில் நின்று கொண்டது. தன் தலையிலிருந்து தொப்பியைஎடுத்து அதைத் தன் கோரைப்பற்களாலும் நகங்களாலும் கிழிக்க ஆரம்பித்தது. அது அந்தப் பையனைப் பார்த்துக் கையை நீட்டிப் பரிகாசம் செய்தது. பையன் முஷ்டி உயர்த்திக் கத்தினான். ஆனால் குரங்கு இன்னும் தீவிரமாக கிழிக்க ஆரம்பித்தது.மாலுமிகள் சிரித்தனர்.பையனுக்கு கோபத்தில் முகம் சிவந்து விட்டது. அவனுடைய மேல்கோட்டை கழற்றி எறிந்து விட்டு அந்தக் குரங்கின் பின்னால் பாய்மரத்தூணில் ஏறத் தொடங்கினான்.ஒரு நொடியில் முதல் பாய்மரத்தூணில்த்முயற்சித்த கணத்திலேயே வேகமாக அடுத்த கம்பில் ஏறிவிட்டது.

பையனும் மேலே ஏறிக் கொண்டே”நீ எங்கிட்டருந்து தப்பிக்கமுடியாது!” என்று கத்தினான்.

குரங்கு அவனுக்கு வழி காட்டிக் கொண்டு அதற்கு மேலும் ஏறியது. அந்தவிளையாட்டில் உணர்ச்சி வசப்பட்ட பையன் குரங்கைத் தொடர்ந்தான். ஒரு நிமிடத்தில் இரண்டு பேரும் உச்சிக்குப் போய் விட்டார்கள்.உச்சியில் இருந்த பாய் மரக்கம்பில் தன் முழு உடம்பையும் நீட்டி பின்காலில் தொங்கிய படி கடைசியில் இருந்த நுனிக் கம்பில் தொப்பியைத் தொங்கவிட்டது. பின் அப்படியே ஊர்ந்து சென்று பாய்மர உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டு பல்லிளித்தது. ஒரு அடி தொலைவில் தொப்பி தொங்கினாலும் அதை எடுக்க வேண்டுமானால் கயிறையும் பாய்மரத்தையும் விட்டு அந்தரத்தில் நடக்கவேண்டும்.

ஆனால் பையனுக்கு ஆர்வம் கூடி விட்டது.பாய்மரத்தை விட்டு எந்த ஆதாரமும் இல்லாமல் நடக்க ஆரம்பித்தான்.

கப்பல்தளத்தில் கீழே எல்லோரும் நின்று குரங்கும் கேப்டனின் மகனும் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆனால் பையன் பாய் மரத்திற்கு வெளியே அந்தரத்தில் கைகளை விரித்த படி போவதைப் பார்த்தவர்கள் அப்படியே உறைந்து போனார்கள்.

ஒரு தப்பான அடி அவனை அவ்வளவு உயரத்திலிருந்து மோதிச் சிதறடித்து விடும்.அவன் அப்படியே போய் அவனுடைய தொப்பியை எடுத்து விட்டாலும் அவனால் பாய்மரத்தூணுக்குத் திரும்ப முடியாது.

எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.சிலர் பெருமூச்சு விட்டனர்.திடீரென அந்தப் பையனுக்கு தன்னுணர்வு வந்தது.கீழே பார்த்தான்.உடனே ஆட ஆரம்பித்து விட்டான்.

அந்த நேரத்தில் கேப்டன் கப்பல் தளத்திற்கு வந்தான்.கடற்புறாக்களைச் சுடுவதற்காக கையில் துப்பாக்கியுடன் வந்தான்.பாய்மரக் கம்பின் நுனியில் தன் மகன் இருப்பதைப் பார்த்தவுடன் அவனைப் பார்த்துத் துப்பாக்கியைக் குறி வைத்தான்.

“குதி! தண்ணீல குதி! இல்லை சுட்டுருவேன்..” என்று கத்தினான்.

பையன் இன்னும் அதிர்ச்சியடைந்தான் அவனால் அப்பா என்ன சொல்கிறார் என்றே புரியவில்லை.

”உடனே குதி! இல்லை சுட்டுருவேன்..ஒண்ணு..ரெண்டு..” அவணுடைய அப்பா ”மூணு” சொல்லும்போது பையன் பாய்மரக் கம்பின் நுனியிலிருந்து தலை கீழாகப் பாய்ந்தான்.பீரங்கிக் குண்டைப் போலக் கடலில் விழுந்தான்.அலைகள் அவனை விழுங்குமுன்னே இருபது மாலுமிகள் கடலில் பாய்ந்தனர்.பையன் நாப்பது வினாடிகளுக்குப் பிறகு தண்ணீருக்கு மேலே வந்தான்.கப்பல்தளத்தில் இருந்தவர்களுக்கு அந்த நாப்பது வினாடிகளும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போனது. மாலுமிகள் உடனே அவனைத் தூக்கிக் கொண்டு கப்பலுக்கு வந்தனர். பல நிமிடங்களுக்கு தண்ணீர் வாயிலிருந்தும் மூக்கிலிருந்து வந்து கொண்டேயிருந்தது. அதன் பிறகு அவன் மூச்சு விட ஆரம்பித்தான்.

தன் மகன் மூச்சு விட ஆரம்பித்ததைப் பார்த்த கேப்டன் விம்மலோடு குலுங்கி அழ ஆரம்பித்தான்.யாரோ அவனைப் பிடித்து வேகவேகமாக கேப்டனின் அறைக்கு கூட்டிச் சென்றார்கள். கேப்டன் அழுவதை யாரும் பார்த்து விடக் கூடாதில்லையா?

Friday 21 September 2012

தீண்டாமையின் உயிர்

 

உதயசங்கர்

 

தீண்டாமை என்ற நடைமுறை இருபக்கம் கூரான கத்தியைப் போன்றது. வர்ணாசிரமதர்மம் என்பதே தீண்டாமை என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது. சாதியப்படிநிலையில் உயர்ந்தவராகச் சொல்லப்படும் பிராமணரை சத்திரியர், வைசியர், சூத்திரர், யாரும் தீண்டக் கூடாது. எனவே அவர் மற்றவர்களால் தீண்டத்தகாதவராகவும் மற்றவர்களை அவர் தீண்ட முடியாதவராகவும் இருக்கிறார். பிராமணருக்குக் கீழே உள்ள சத்திரியர், வைசியர், ஆகியோரை சூத்திரர் எல்லா நேரங்களிலும் தீண்ட முடியாது. எனவே அவர்களும் சூத்திரர்களால் தீண்டத்தகாதவர்களாகவும் அவர்கள் பிராமணரையும் சூத்திரரையும் தீண்ட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். சூத்திரர்கள் அவர்களுக்கு மேலே உள்ள வர்ணங்களை தீண்டமுடியாதவராகவும், அவர்களால் தீண்டத் தகாதவராகவும் இருக்கிறார்கள். பஞ்சமர்கள் யாரையும் தீண்டக்கூடாது. பஞ்சமர்கள் அவர்களுக்கு மேலே உள்ள அனைத்து வர்ணங்களாலும் தீண்டத் தகாதவர்களாகவும், அவர்கள் யாரையும் தீண்டமுடியாதவராகவும் இருக்கிறார்கள். இதில் பிராமணரை யாரும் தீண்டக் கூடாது. அவரும் யாரையும் தீண்ட முடியாது. அதே போல பஞ்சமரையும் யாரும் தீண்டக்கூடாது அவர்களும் யாரையும் தீண்டமுடியாது.

ஒரே நேரத்தில் வர்க்கமுரண்பாடும், தீண்டாமையும் சாதியப்படிநிலையின் தத்துவார்த்தமாக செயல் படுகிறது. ஆனால் வர்க்க முரண்பாடு அதன் உடலாக இருக்கிறதென்றால் தீண்டாமை அதன் உயிராக இருக்கிறது. அதனால் தான் சமூகத்தின் படிநிலையில் ஒவ்வொரு வர்ணமும் மற்ற வர்ணங்களைத் தீண்டத் தகாதவர்களாகவே இறக்கி வைத்திருக்கிறது. ஒருவர் மற்றவரைத் தீண்டத்தகாதவராக ஒதுக்கி வைக்கும்போது அவரும் மற்றவரால் தீண்டத்தகாதவராகி விடுகிறார். பரஸ்பரம் தீண்டுதல் என்ற செயல் அவர்கள் இருவரிடமிருந்தும் விலக்கப்பட்டு விடுகிறது. தன்னை சமூகத்தில் உயர்ந்தவராகக் காண்பித்துக் கொள்ள, மற்றவர்களுக்கும் தனக்கும் இடைவெளியை ஏற்படுத்த பிராமணீயம் தீண்டாமை என்ற தத்துவத்தை உருவாக்கியது. உயர்ந்த தீண்டத்தகாதவராக பிராமணர்களும் தாழ்ந்த தீண்டத்தகாதவர்களாக சூத்திரரும் தாழ்த்தப்பட்ட மக்களும் மாற்றப்பட்டனர். பிராமணியம் மற்றவர்கள் தீண்டமுடியாத, தீண்டக்கூடாத உயரத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள தீண்டாமை எனும் தத்துவத்தைப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் வர்ணாசிரமத்தின் படிநிலையில் உள்ள மற்றசாதிகளிடமும் அதை நடைமுறைப்படுத்தியது. அதற்காகவே மனுதர்மம் எழுதப்பட்டது. அதில் சாதியப்படி நிலைகளையும், தீண்டாமையையும் உறுதிப்படுத்தியது. தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கட்டளையிடும் சட்டவிதிகளும் தண்டனை முறைகளும் எழுதப்பட்டன. அவற்றை அரசு அதிகாரத்தின் வழியாகவும், புராண இதிகாச, புனைகதைகள் வழியாகவும் மக்கள் மனதில் நிலைநிறுத்தி சிவில் சமூகத்தின் ஒப்புதலை பெற்றுக் கொண்டது.

.தீண்டாமையின் உச்சத்தில் பிராமணரும் அதன் பாதாளத்தில் சூத்திரரும், தாழ்த்தப்பட்டமக்களும் மடைமாற்றம் செய்யப் பட்டது உழைப்புக்கும் அறிவுக்கும் இடையில் ஏற்பட்ட மிகப் பெரிய பாரதூரமான ஏற்ற இறக்கங்களே. மானுடவரலாற்றில் உடல் உழைப்பிலிருந்து அறிவுழைப்பு பிரிந்த போதிலிருந்து இந்த முரண்பாடு தோன்றி விட்டது எனலாம். இது இன்னொரு வகையில் அரூபமான அறிவுக்கும், ரூபமான உடலுக்குமிடையிலான முரண்பாடு. உடல் அசுத்தமானது. தூய்மையில்லாதது. வியர்வை, மூத்திரம், மலம், சளி, வாயு, என கழிவுப்பொருட்களைச் சுமப்பது. ஆனால் அறிவு அரூபமானதால் இத்தகைய அசுத்தங்கள் இல்லை. உடல் பொருள் முதல் வாதத்தையும், அறிவு கருத்து முதல் வாதத்தையும் பிரதிபலிக்கிறது. உடல் உழைப்பு என்பது நிலத்தில்,சகதியில், மற்ற உலகளாவியப் பொருட்களின் மீது உழைப்பைச் செலுத்தி அதில் தன் ஜீவியத்தைக் கழிப்பது, எனவே அது இழிவானது. தூய்மையில்லாதது. அசுத்தமானது. அதாவது உற்பத்திசக்திகள் இழிவானது, அசுத்தமானது, தூய்மையில்லாதது. நேரடியாக உற்பத்தியில் சம்பந்தப்படாத, உடலைப் போல பருண்மையில்லாத அறிவு சுத்தமானது என்ற கருதுகோளை நிலைநிறுத்துகிறது தீண்டாமை. அதனால் வயல்வெளிகளில் வேலை செய்த உடல் உழைப்பின் வழியாக தன் வாழ்க்கையை நடத்துகிற உழைப்பாளிகள் தீண்டத்தகாதவர்களாகவும் மாற்றப் பட்டனர். இதற்கு உடல் உழைப்பின் மீது பிராமணியத்துக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வே முக்கிய காரணம்.

இயற்கையில் அடிப்படையான ஐந்து மூலகங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், இயற்கையின் படைப்புகளில் சம அளவில் கலந்தேயிருக்கின்றன. இந்த பஞ்சபூதங்களில்லாமல் எந்த உடலும் உயிரும் இயங்க முடியாது. இவையே உடலின் இயற்கையான இருத்தலுக்கு அவசியமானவை. இவை இல்லாமல் எந்த உடலும் அது பிராமண உடலாக இருந்தாலும் சரி, பஞ்சமர் உடலாக இருந்தாலும் சரி இயங்க முடியாது. சமத்துவமான உடல்களுக்கிடையில் தூய்மையின்மை என்ற வாதத்தை முன் வைத்து அசமத்துவத்துவத்தை பிராமணியம் உருவாக்குகிறது. இதனால் தான் சிறிது காலத்துக்கு முன்பு கூட காஞ்சி மடாதிபதியால் தாழ்த்தப்பட்ட மக்கள் தினமும் குளிக்க வேண்டும் என்று சொல்ல முடிந்தது. ஆக உழைப்பாளி மக்கள் அசுத்தமானவர்கள் என்ற கருதுகோளை நிலை நிறுத்துகிறது. சமூகத்தின் மேல் வர்ணத்தவர்கள் தங்கள் கைகளை மண்ணிலோ, சகதியிலோ, அசுத்தப்படுத்திக்கொள்ளக் கூடாது அது தீட்டு என்கிறது மனுதர்மம். அது மட்டுமில்லை எந்த பஞ்சபூதங்களின்றி இந்த உலகு இல்லையோ அந்த பஞ்ச பூதங்களையே தீட்டாகவும், அந்தத் தீட்டைக் கழிக்கிற அல்லது தூய்மைப்படுத்துகிற சாதனங்களாகவும் பயன்படுத்துகிறது. நிலத்தைப் போலவே, நீரும், நெருப்பும், காற்றும், தீண்டாமையெனும் கொடுமைக்குப் பயன்படும் சாதனங்களாக உருவகிக்கப்படுகிறது.

எல்லோருக்கும் பொதுவான நீரை எல்லோரும் பொதுவாகப் பயன்படுத்த முடியாது. நீர் என்ற மூலகம் ஒரே நேரத்தில் தீண்டாமையைக் கடைப்பிடிக்க உதவும் கருவியாகவும், தூய்மைப்படுத்தும் சடங்குக்கான சாதனமாகவும் பயன்படுகிறது. அதே போல நெருப்பும் தூய்மையின் சின்னமாக தலித்துகளின் குடிசைகளை எரித்து அவர்களை அகற்றுவதற்கும், (வெண்மணி, நந்தன் ) பயன்படுகிறது. காற்றும் இந்தத் தீண்டாமை நோயிலிருந்து விடுபடவில்லை. காற்று வீசும் திசையிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்விடங்கள் விலக்கி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பட்ட தீட்டான காற்று தங்கள் மீது பட்டு தாங்கள் தீட்டாகி விடக்கூடாது என்று கருதி அவர்கள் வாழ்விடங்களையே மாற்றியமைக்கிற கொடுமையும் மனுதர்மத்தில் இருக்கிறது.

இவ்வாறு பிராமணியம் சமூகத்தில் தன்னுடைய உயர்நிலையைத் தக்கவைத்துக் கொள்ள செய்த சதியே வர்ணாசிரமக் கோட்பாடு. அதை சுத்தம், அசுத்தம்; தூய்மை, தூய்மையின்மை; புனிதம், இழிவு; என்ற எதிர்வுகளை முன் வைத்து மக்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்டது. அதனால் தங்களை எதேனும் ஒரு வகையிலாவது தீண்டாமைக்குட்படுத்தும் பிராமணியத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக அடித்தட்டு உழைப்பாளி மக்கள் அப்படியே பின்பற்றுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பிராமணியத்தை பிராமணர்களை விடக் கடுமையாக நடைமுறைப்படுத்த விழைகிறார்கள். இந்தக் கேடு கெட்ட வர்ணாசிரமக்கோட்பாடு உயிர் வாழ இவர்களே காரணமாகவும் இருக்கிறார்கள். இது ஒரு விசித்திரமான மனநிலை தான். மேல்நிலையாக்கத்தின் மீதான கவர்ச்சியும் சாதிய சமூகத்தில் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் சுயபாதுகாப்புஅரசியலும் தான் காரணம். அது மட்டுமல்ல தங்களுக்கு மேல் எத்தனை பேர் இருந்தாலும் கவலையில்லை ஆனால் தங்களுக்குக் கீழ் ஒருவராவது இருக்கவேண்டுமென்கிற ஆதிக்கமனநிலையும் தான் பிராமணியத்தை அப்பழுக்கற்று பின்பற்றச் செய்யும் கருவிகள். இதனால் சடங்கு, சம்பிரதாயம், சாஸ்திரம், என்ற பிராமணியத் தந்திரங்களை பண்பாடு என்று புரிந்து கொண்டு பண்பாட்டைக் காக்கிறோம் என்ற பெயரில் மீண்டும் பிராமணியத்தை அரியணையில் ஏற்றுகிற, தீண்டாமையைக் காப்பாற்றுகிற காரியத்தை உழைப்பாளி மக்களும் சேர்ந்து செய்கிற அவலம் கண்கூடாகத் தெரிகிறது.

கிராம்ஷியின் கலாச்சார மேலாண்மை குறித்த கருத்துகள் இந்த விடயத்தில் மிகவும் பொருத்தப்பாடுடையது என்று தோன்றுகிறது. உழைப்பாளி மக்களே அவர்கள் வர்க்கத்தைச் சேர்ந்த உழைப்பாளி மக்களோடு சாதியின் பெயரால், தீண்டாமையின் பெயரால் பொருதுகிற நிலைமையை பிராமணியம் ஏற்படுத்தியுள்ளது. பிராமணியம் உயிரோடு இருக்கும்வரை வர்ணாசிரமக்கோட்பாடு உயிரோடு இருக்கும். வர்ணாசிரமக்கோட்பாடு உயிரோடு இருக்கும்வரை மனுதர்மசாஸ்திரம் உயிரோடு இருக்கும். மனுதர்மம் உயிரோடு இருக்கும்வரை தீட்டு, தீண்டாமை, உயிரோடு இருக்கும். தீண்டாமை இருக்கும்வரை முழுமையான மனிதவிடுதலை சாத்தியமில்லை. பிராமணியஒழிப்பும், சாதிஒழிப்பும் நீண்ட காலத் திட்டமாக இருந்தாலும் உடனடியாகத் துவங்க வேண்டியது அவசியம்.

dalits

Wednesday 19 September 2012

செம்போத்தின் செய்தி

உதயசங்கர்

Apophysis-110211-42_modern_art

காரணம்

அவர்களுடைய பார்வை வேறெங்கும்

பாயாமலிருக்க

கண்களில் பட்டை கட்டியிருக்கிறார்கள்

ஒரு வழி தான் தெரியும்

காரணம்

அவர்களுடைய காதுகளில் வேறெதுவும்

கேட்காமலிருக்க

இயர் ஃபோன் மாட்டியிருக்கிறார்கள்

ஒரு வார்த்தை தான் கேட்கும்

காரணம்

அவர்களுடைய வாயில் வேறெந்த சொற்களும்

வந்து விடாமலிருக்க

நுனி நாக்கில் கொக்கி மாட்டியிருக்கிறார்கள்

ஒரு சொல் மட்டுமே பேசும்

காரணம்

அவர்களுடைய கால்கள் வேறெங்கும்

போய்விடாமலிருக்க

மற்றெல்லா திசைகளையும் மறைத்து விட்டார்கள்

ஒரு திசைவழியே நடக்கும்

காரணம்

அவர்களுக்கு வேண்டுவதெல்லாம்

அதிகாரம்

இப்புவியில் ஒரு சிறு உயிரும்

அவர்கள் தயவின்றி

உயிர்வாழ முடியாமல் செய்யும்

வானளாவிய  அதிகாரம்.

ஆனால்

ஒரு அதிகாலைசெம்போத்து

அவர்களைப் பார்த்து

கூக்கூகூகூகூ என்கிறது.

Tuesday 18 September 2012

ஓநாயை ஏமாற்றிய முயல்

மலையாளம் – மாலி

தமிழில்- உதயசங்கர்

jolly jackal copy Mandy_Walden-Lunar_hare

ஒரு காட்டில் ஒரு இளைய முயல் இருந்தது. அது உருண்டு திரண்டிருந்தது. ஒரு ஓநாய் அதைப் பிடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தது. முயல் எப்போதும் காலையில் ஒரே வழியாகப் போகும். ஓநாய் அந்த வழியைக் கண்டுபிடித்தது. அந்த வழியருகில் ஒரு புதர் இருந்தது. ஓநாய் அந்த புதரில் ஒளிந்திருந்தது. அது முயலுக்குத் தெரியாது. அது புதரின் அருகில் நெருங்கியபோது என்ன நடந்தது தெரியுமா? ஓநாய் பிடித்துக்கொண்டது.

“டேய்..முயலே! நான் இப்போ உன்னைத் திங்கப் போறேன்..” என்று ஓநாய் சொல்லிச் சிரித்தது.

முயல் புத்திசாலி. அவன் ஒரு தந்திரம் யோசித்தான்.ஓநாயின் முகத்தை உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையைப் பார்த்தாலே பயந்துபோய் விட்டது தெரியும்.

“என்னடா முயலே! பயந்துபோய் பார்க்கிறே..?” என்று ஓநாய் கேட்டது.

“ஓநாயண்ணே! சொன்னா அண்ணன் தலை சுத்தி விழுந்துருவீங்க..”என்று முயல் சொன்னது.

ஓநாய்க்கு ஆர்வம் வந்துவிட்டது. “சொல்லு.. கேக்கிறேன்..” என்று அவசரப்பட்டது.

“அதுவா.. அண்ணனின் தலையில் ஒரு..ஒரு..பெரிய தேள்..” என்று முயல் சொல்லியது.

ஓநாய் “அய்யோ” என்று கூப்பாடு போட்டது! அதன் கைகள் முயலினை விட்டுவிட்டு தலையைத் தடவியது. தேளினைத் தட்டி விட வேண்டாமா? அது போதாதா முயலுக்கு..ஓடியே போய்விட்டது.

ஓநாய்க்கு வந்தது கோபம்.!. இந்த முயல் என்னை ஏமாத்திருச்சி இல்லியா? அதை இப்படியே விடமுடியாது. முயல் சாயங்காலம் தன்னுடைய இருப்பிடத்துக்குத் திரும்பியது. ஓநாய் முன்பே அந்த இருப்பிடத்தைக் கண்டு பிடித்தது. சாயங்காலத்துக்கு முன்பே இருப்பிடத்துக்கு வெளியே மல்லாந்து கிடந்தது-செத்த மாதிரி.

முயல் வந்தபோது என்ன பார்த்தது தெரியுமா? அதோ மல்லாந்து கிடக்கிற ஓநாய்.ஓநாயைத்தாண்டிப் போகணும். அப்போது தான் இருப்பிடத்துக்குள் நுழைய முடியும். முயலுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.ஓநாய் செத்துபோயிருச்சா? இல்லை செத்தமாதிரி நடிக்கிறதா? எப்படியாவது உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும். அதுக்கு என்ன வழி? முயல் யோசித்தது. வழி கிடைத்து விட்டது.

“ஓநாயண்ணே! அண்ணன் செத்துப் போயிட்டில்ல..” என்று கேட்டது. ஓநாய் பதில் சொல்லவில்லை.அப்படியே கிடந்தது. ஆனால் முயலுக்குச் சந்தேகம் தீரவில்லை. சந்தேகத்தைத் தீர்த்தே ஆக வேண்டும்.

“ஓநாயண்ணே! செத்த ஓநாய்னா சாதாரணமா காதுகளை ஆட்டும்..அண்ணன் காதுகள் ஆடவில்லையே அப்ப அண்ணன் சாகலை..இது நிச்சயம்..” என்று முயல் சொன்னது.

அப்போது ஓநாய் நினைத்தது, தான் செத்ததாக முயலை நம்ப வைக்கணும்..அதுக்கு அந்த முட்டாள் என்ன செய்தது தெரியுமா? ரெண்டு காதுகளையும் ஆட்டத் தொடங்கியது.

அதைப் பார்த்த முயலுக்கு ஒன்று உறுதியாகி விட்டது. ஓநாய் சாகவில்லை.அது செத்த மாதிரி நடிக்கிறது. முயல் சிரித்துக் கொண்டே ஒரே ஓட்டம்!

ஓநாய்க்கு கோபம் வந்தது. தன்னை ரெண்டாவது தடவையும் ஏமாற்றி விட்டதே இந்த முயல்! சரி இருக்கட்டும். முக்கா முக்கா மூணு ஆட்டை. அடுத்த தடவை தான் தப்பு செய்யமாட்டேன். ஓநாய் ரகசியமாக ஒரு விசயத்தைக் கண்டுபிடித்தது. முயல் இருப்பிடத்துக்கு வரும்முன்பு ஒரு காரியம் செய்யும். ஒரு குன்றின் மேல் ஏறி உட்கார்ந்து காற்று வாங்கும்.

குன்றின் ஒரு புறம் பெரும் பள்ளம்.ஐநூறு அடி ஆழம் இருக்கும். அதன் உச்சியில் இருந்து தான் முயல் காற்று வாங்கும்.ஓநாய் முயலின் பின்புறமாக குன்றின்மீது ஏறியது. ஒரு சத்தமில்லாமல் பின்னால் போய் முயலைப் பிடித்து விட்டது.

“டேய் முயலே! இந்தத் தடவை நீ என்னை ஏமாத்தமுடியாது.” என்று சொல்லிவிட்டு ஓநாய் உரக்கச் சிரித்தது.

“கண்டிப்பாக ஏமாத்த மாட்டேன்.ஓநாயண்ணே! வேணும்னா ஒரு உதவி செய்றேன்..கீழே நிறைய முயலிருப்பிடம் இருக்கு..அங்கே இருபதுக்கு மேலே முயல்கள் இருக்கு..என்னை விட உருண்டு திரண்ட முயல்கள் இருக்கு..அங்கே பாருங்க..!” என்று முயல் சொன்னது.

ஓநாய் முயலை விட்டுவிட்டு கீழே பார்த்தது. “ எங்கேடா முயல்கள்?” என்று ஓநாய் கேட்டது.

“நல்லா குனிஞ்சி பாருங்க..ஓநாயண்ணே..!” என்று முயல் சொன்னது.

ஓநாய் குனிந்து உற்றுப் பார்த்தது.பின்னாலிருந்து முயல் ஓநாயை ஒரு தள்ளு. ஓநாய் தலைகுப்புற கீழே பள்ளத்தில் விழுந்தது. பின்னாலிருந்து முயல் சிரித்ததை ஓநாய் கேட்கவில்லை. ஏனெனில் ஓநாய் உயிரோடு இல்லை.!

முயல் சிரித்துக்கொண்டே தன் இருப்பிடத்துக்குப் போனது.

Sunday 16 September 2012

கண்ணாமூச்சி

 

உதயசங்கர்

Photo-0071   

“ இதுக்குதாம்வே நான் யாரு கிட்டயும் கொடுக்கல் வாங்கல் வச்சிக்கிடறதிலை.. கொடுத்தா வாங்கறதுக்குள்ளே பெரும்பாடு படவேண்டியதாயிருக்கு.. இன்னும் ஒரு வாரம் தாம்வே உமக்கு டைம்.. அதுக்குள்ளே எப்படியாவது கொண்டு வந்து கொடுக்கிற வழியப் பாரும்.. அவ்வளதான் சொல்வேன்.. அப்புறம் எம்மேல வருத்தப்படாதீரும்…”

என்று செல்போனில் ராமநாதன் கத்திக் கொண்டிருந்தான். காலை நடைபயின்று கொண்டிருந்த அத்தனை பேரும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனார்கள். நீங்களும் பார்த்தீர்கள் தானே. இவ்வளவு ஆக்ரோசமாக ராமநாதன் கோபப்பட்டுப் பேசியதைக் கேட்ட ஜனசமூகம் ஏதோ லட்சரூபாய் கொடுக்கலில் உள்ள பிரச்னை என்றே யூகித்துக் கொண்டனர். நீங்களூம் அவ்வாறே யோசித்து ராமநாதனைக் கொஞ்சம் மரியாதையுடன் பார்க்கிறீர்கள். உங்கள் மரியாதையின் ராஜபாட்டை வழியே சென்று பார்த்தால் எதிர்காலத்தில் ராமநாதன் ஊருக்கே கந்துவட்டி தரும் தனவந்தனாகவோ, மக்களின் அறியாமையைப் போக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த கல்விச்சாலைகளை அமைக்கும் கல்வித்தந்தையாகவோ, மக்கள் குறை தீர்க்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவோ, குறைந்தது ஒரு அமைச்சராகவோ, ஆவதற்கான சாத்தியங்கள் இருப்பதை நீங்கள் பார்த்து விட்டீர்கள். நீங்கள் மட்டுமல்ல எல்லோரும் பார்த்துவிட்டார்கள்.

ஆனால் உங்கள் எல்லோரையும் ஏமாற்றியதற்கு ராமநாதன் மனப்பூர்வமாக வருத்தப்படுகிறான். ஏனென்றால் மேலே முழக்கமிட்ட முழக்கத்தின் பின்னணியில் லட்சரூபாய் இல்லை. அப்படியென்றால் ஏன் இவ்வளவு ஆவேசம் என்றுதானே கேட்கிறீர்கள். ஒரு சாதாரணப்புத்தகம்தான் தன் நரை விழுந்த முதிர்ந்த தோற்றத்துடன் ஒளிந்து கொண்டிருந்தது.

நீங்கள் சிரிக்கிறீர்கள்.. ப்..பூ..ஒரு புத்தகம்தானா என்று உதட்டைப் பிதுக்குகிறீர்கள். உங்கள் ஏளனச்சிரிப்பின் வழியே பிளாஷ் நியூஸாக உங்கள் அலட்சியம் பளிச்சிடுகிறது. ஆனால் ராமநாதனுக்கு அது அலட்சியப்படுத்துகிற விஷயமே கிடையாது. ராமநாதனின் சீரியஸான முகத்தைப் பார்த்தவுடன் உங்கள் முகம் சற்றே மாறுகிறது.

“ அதுக்கு எதுக்குங்க.. இவ்வளவு கோபப்படணூம்.?.” என்றகேள்வி தன் தலையைத் தூக்குகிறது. ராமநாதன் அப்படி ஒன்றும் அடாவடியான ஆளில்லை. ரோட்டில் அவன் நடந்து போகும்போது ஒரு காக்கா குறுக்கே நின்று கொண்டிருந்தால் கூட அதற்கு வழிவிட்டு அது பற்ந்து போகும்வரை காத்துக் கொண்டிருப்பான். கரப்பான் பூச்சியையெல்லாம் பார்த்து விட்டால் உலகின் மிக மூத்த உயிரினமல்லவா என்று மரியாதையுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விடுவான். அவனுடைய சகதர்மிணி வந்து கரப்பான் பூச்சியைப் பிடித்து கோடிக்கணக்கான வருடங்களாக மாறாமலேயிருக்கிற அதன் பரிணாமவளர்ச்சியின் மீது வாரியலால் நாலு சாத்து சாத்தித் தூரப்போடுவாள். அது வரை மரியாதையுடன் நின்று கொண்டிருப்பான் ராமநாதன். இப்பேர்க்கோண்ட மரியாதைக்காரனான ராமநாதன் இங்ஙனம் இப்படிக் கோபப்பட நேர்ந்தது ஒரு புத்தகத்தினால் என்பது ஆச்சரியமல்லவா? வியப்பில் உங்கள் வாய் திறக்கவேயில்லையே. அளவு கூடிய வியப்பாகி விட்டதா?

ராமநாதனுக்கு உலகமே புத்தகங்கள் தான். புத்தகங்களுக்கு வெளியே ஒரு உலகம் இயங்குவது ஏஎதோ நிழல் போல அருகலாய் தெரியும். ராமநாதன் உலகை மாற்ற சிந்தனையின் சிகரங்களை நோக்கி விடாமுயற்சியோடு ஏறிக் கொண்டேயிருக்கும் சிந்தனைப்போராளியோ என்று நீங்கள் கற்பனை செய்தால் அந்தக் கற்பனை தவறி பள்ளத்தாக்கில் விழுந்து தலைசிதறி சுக்குநூறாகி விடும் அபாயம் இருப்பதை முன்கூட்டியே எச்சரித்து விடுகிறேன். அவன் சேகரித்துல்ள புத்தகங்கள் எல்லாமே அவன் புரட்டிப்பார்க்கக் காத்துக் கொண்டிருப்பவை. ஆனாலும் புத்த்கங்களை வாங்கிக் கொண்டும் சேகரித்துக் கொண்டுமிருந்தான். புத்தகங்களைப் பார்த்துவிட்டால் போதும் வற்றி உலர்ந்து பசியிப்னால் துடித்துக் கொண்டிருப்பவன் சாப்பாட்டைப் பார்த்தவுடன் அவன் கண்களில் சுரக்குமே ஒரு ஈரம்..அப்படி ஒரு ஈரத்தினால் ராமநாதனின் கண்கள் பளபளக்கும். கண்கள் ஜொலிக்க இரையை வேட்டையாட பம்மிப் பதுங்கும் ஒரு புலியின்…ம்ம்… கொஞ்சம் ஓவராத்தான் இருக்கோ.. சரி வேண்டாம்.. ஒரு பூனையின் நாக்கு சப்புக் கொட்டிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இத்தனைக்கும் அந்தப் புத்தகம் அவனிடம் இருக்கவும் செய்யலாம். ஆனாலும் அதை வாங்கிவிட முஸ்தீபுகள் காட்டுவான். பல இடங்களில் உள்ள வாய்ப்புகளைப் பொறுத்து அவரவர் மொழிகளில் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். லவட்டிக் கொண்டு, சுட்டுக் கொண்டு, அமுக்கிக் கொண்டு, பேத்துக் கொண்டு, சுவாகா செய்து கொண்டு, வந்து விடுவான். இப்படிப் பல புத்தகங்கள் பல பிரதிகளாக அவனிடம் இருக்கிற பாக்கியத்தையும் பெற்றன.

யாராவது, ஏதாவது, ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசினாலோ, எழுதி விட்டாலோ, அதை அவன் கேட்டு விட்டாலோ, பார்த்து விட்டாலோ, போதும் உடனே அதை அவன் வேட்டையாட கிளம்பி விடுவான். ஏன் என்று கேட்க நினைக்கிறீர்கள் இல்லையா? அவனுக்கு ஒரே ஒரு ஆசை தான். அதுவும் குட்டியூண்டு ஆசை தான்.உலகில் உள்ள அத்தனைப் புத்தகங்களும் அவனிடம் இருக்க வேண்டும். யாராவது ஏதாவது ஒரு புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டால் அந்தப் புத்தகம் தன்னிடம் இருக்கிறது என்று பெருமிதம் பொங்க வேண்டும். அந்தப் பெருமிதப்பொங்கலுக்காகவே அவன் ஓடி ஓடி புத்தகங்களைச் சம்பாதித்துக் கொண்டிருந்தான்.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம். ஹாரன் அடித்துக் கொண்டே வந்து கொண்டிருப்பது தெரிகிறது. எப்படிய்யா இந்தக் கோட்டியோட அவன் பொண்டாட்டி குடும்பம் நடத்துகிறாள்? சொன்னால் தப்பாய் எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்கள மாதிரிக் கோட்டியோட உங்கள் மனைவி குடும்பம் நடத்துகிற மாதிரி தான். ஏனென்றால் மனிதர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஒரு நேரத்தில் ஒரு காலத்தில் கோட்டியின் குணாம்சங்களோடத் தான் இருக்காங்கன்னு யாரோ ஒரு உளவியல் அறிஞர் சொல்லியிருப்பதாக ராமநாதன் சொன்னான். ராமநாதனின் சகதர்மிணி இதையெல்லாம் கேட்டுக் கொண்டு சும்மா இருந்துவிடுவாளா? சாம, தான, தண்ட பேதங்களும் பலனளிக்கவில்லை. உளவியல் மருத்துவரிடம் அழைத்துப் போனாள். ஒவ்வொரு முறை போய் வரும்போதும் ஒவ்வொரு உளவியல் புத்தகமாக அவருடைய அறையிலிருந்து தப்பித்துப் போய்க் கொண்டிருந்தது. இனி ராமநாதன் அன் கோ வை கிளினிக்கிற்குள் விட வேண்டாம் என்று தன்னுடைய உதவியாளரிடம் சொல்லி வைக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப் பட்டார்.

சரி போனால் போகட்டும் என்று லேசில் விட்டு விடக் கூடியவளா ராமநாதனின் மனைவி. இரவென்றும் பாராமல் பகலென்றும் பாராமல் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக யுத்தம் நடத்தினாள். ராமநாதனைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த அளவுக்குக் கூட அவன் மனைவிக்குத் தெரியாதே. ராமநாதன் எதற்கும் அஞ்சவில்லை. யுத்தத்திற்கான சங்கொலி முழங்கியவுடன் வேகமாகப் போய் அவள் காலில் விழுந்து விடுவான் நிராயுதபாணியாக. எத்தனை அடி அடிச்சாலும் தாங்கறானே என்று அவளுக்கும் தோன்றி விட்டது. எதிராளி பணிந்து கொண்டே போகும்போது எத்தனை நாளைக்குத் தான் நமுத்துப் போன கோபத்தில் எண்ணெய்யை ஊத்தி எரித்துக் கொண்டே இருப்பது? எண்ணெயும் தீர்ந்து விடவே யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தாள்.

பின்னர் அவள் என்ன செய்தாள் என்று யூகிக்க முடிகிறதா உங்களால்? தூங்குகிற நேரம் போக மற்ற நேரம் எல்லாம் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்திருந்தாள். எல்லாமொழிகளிலும் எல்லாச் சேனல்களையும் வஞ்சனையில்லாமல் பார்த்தாள். புரிகிறது புரியவில்லை என்ற கவலையை குப்பையைக் கூட்டி வீட்டு மூலையில் ஒதுக்கி வைக்கிற மாதிரி ஒதுக்கி வைத்தாள். தொலைக்காட்சியின் சத்தத்தினூடாகவே தூங்கவும் செய்தாள். யாராவது தொலைகாட்சியை நிறுத்தி விட்டாலோ, மின்சாரம் தடைபட்டு தொலைக்காட்சி நின்று விட்டாலோ உடனே அவள் முழித்து அவள் கடைசியாகப் பார்த்துக் கொண்டிருந்த சேனல் பேசிய மொழியில் திட்டுவாள். அது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், உருது, ஸ்பானிஷ், பிரெஞ்ச் என்று எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது உபரித்தகவல். இப்படி கோட்டிக்குக் கோட்டி சரியாகி விட்டது.

சரி கதைக்கு வாருமய்யா அகோபிள்ளாய் என்று நீங்கள் கோபிப்பது தெரிகிறது. இந்த அபூர்வமான வாழ்க்கையில் ஒரு நாள் புயலெனச் சோமநாதன் நுழைந்தான். ஒரு மாலை நேரத்தில் சூரியனே தாங்கமுடியாமல் சங்கடப்பட்டுத் தன் பரிவாரங்களையும் தன் ஆடையையும் இழுத்துப் போர்த்திக் கொண்டு வேகவேகமாக மேற்கில் மறைந்து போகிற அளவுக்கு ராமநாதனைப் புகழ்ந்து கொண்டிருந்தான் சோமநாதன். அந்தப் புகழ்ச்சிக்குப் பின்னால் ஒரு சவால் கைதட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது. அந்தச் சிரிப்பில் மணக்கும் மட்டன் பிரியாணியும், சுக்கா வறுவலும், மறைந்திருந்தது. வேறு ஒன்றுமில்லை. எப்படியாவது ராமநாதனிடம் ஒரு புத்தகம் இரவல் வாங்கிக் கொண்டு வந்து விட வேண்டும். ராமநாதனுக்கு எப்போதுமே ஒன்வே டிராபிக் தான் பிடிக்கும். புத்தகங்கள் அவன் வீட்டுக்குள் போய்க் கொண்டேயிருக்கும். எதுவும் வெளியில் வராது. சோமநாதன் அனைத்து அஸ்திரங்களையும் ராமநாதன் மேல் எய்தும், கர்ணனின் கவசகுண்டலம் போல ஒரு அசட்டுப் புன்னகையைக் கேடயமாக்கி அசாத்தியமாக அனைத்து அஸ்திரங்களையும் தடுத்து வீழ்த்தினான். சோர்ந்து போன சோமநாதன் அன்றைய குருசேத்திரத்தை முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்து கடைசியாகத் தன் பலமனைத்தையும் சேர்த்து ஒரு அஸ்திரம் எய்தான்.

“ சார் உங்களைப் பத்தி ஒரு புத்தகம் எழுதலாம்னு நெனச்சிக்கிட்டுருக்கேன்.. லட்சம் புத்தகங்களின் லட்சியவாதி..ன்னு அதுக்குத் தலைப்பு.. அதுக்கு முன்னாடி உங்க கலக்‌ஷனையெல்லாம் பாக்கணும் உங்க கையால ஒரு புத்தகம் வாங்கிப் படிக்கணும்கிறது என்னோட நீண்ட நாள் பிரார்த்தனை சார் ”

இதைக் கேட்டதும் ராமநாதனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது. மனம் க்ளக்,க்ளக் என்ற சத்தத்துடன் உருக ஆரம்பித்தது. அந்த உருகல் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே வெளியே கேட்டு விட்டதால் சோமநாதன் உற்சாகமாகி விட்டான்.

“ நீங்க என்ன புத்தகம் கொடுத்தாலும் சரி நீங்க எப்பச் சொல்றீங்களோ அப்ப கொண்டு வந்து கொடுத்திருவேன்..”

என்று சோமநாதன் சொன்னதைக் கேட்ட ராமநாதனின் பெருந்தன்மை பொங்கி எழுந்தது. உடனே போய் கண்ணை மூடிக் கொண்டு ஒரு பழைய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். தொட்டாலே நொறுங்கி விடும் பழுப்பு நிறக்காகிதங்களைக் கொண்ட அந்தப் புத்தகத்தைக் கொடுக்கும் போதே,

“ பத்திரம்..ஜாக்கிரதை.. ஞாபகம்..ஒரு வாரம்..”

என்று சொல்லிக் கொண்டிருந்தான். கையில் வங்கியது தான் தாமதம் சோமநாதன் பறந்து போய் விட்டான். வாங்கியதும் அவன் போன வேகத்தைப் பார்த்து ‘ கொஞ்சம் ஏமாந்துட்டமோ’ என்று கூட ராமநாதன் நினைத்தான்.

ஒரு வாரம் வரை உலகம் அமைதியாக இருந்தது. ஏழு நாட்கள் முடிந்ததுமே ராமநாதனின் பூமியில் சிறு சிறு பூகம்பங்கள் ஒன்று, இரண்டு ரிக்டர் அளவுகோலில் வந்து போனது. பெரிதான பாதிப்பு ஒன்றுமில்லை. ஆனால் மாதம் ஒன்று முழுமையாகக் கழிந்தபோது ராமநாதனின் கடல் பொங்கி அலை வீசத் தொடங்கியது. இந்தப் பூகோள மாற்றங்கள் எதுவும் தெரியாமல் சோமநாதன் மிகச் சாதாரணமாக அந்தப் புத்தகத்தைக் கைமறதியாக எங்கோ வைத்து விட்டுச் சுற்றிக் கொண்டிருந்தான். அப்படி ஒரு விஷயம் நடந்ததாகவே அவன் நினைவிலில்லை.

ஒரு நாள் சோமநாதன் அலுவலகம் விட்டு வந்தவுடன் அவனுடைய துணைவியார்,

“ யாரோ ராமநாதனாம் புத்தகம் கடன் வாங்கியிருக்கீகளாமே.. அதை உடனே கொண்டு வந்து கொடுக்கணுமாம்.. ஏதோ லட்சரூபாயைக் கொடுத்த மாதிரி கறாராப் பேசிட்டுப் போறாரு..”

என்று சொன்னதும் நினைவுக்கு வந்து விட்டது. அன்று லேசாய் சோமநாதனின் மனசில் குறும்புயல் ஒன்று வீசிச் சென்றது. சேதாரம் ஒன்றுமில்லை. இப்போது ராமநாதனைச் சமாளிக்கிற தந்திரங்களை யோசித்துக் கொண்டிருந்தான் சோமநாதன். முதலில் தன் துணைவியாரிடம் ராமநாதன் எப்போது வந்தாலும்,

“ அவுக இல்லையே..எப்ப வருவாகன்னு தெரியவில்லையே..”

என்று கிளிப்பிள்ளை மாதிரி சொல்வதற்குப் பழக்கியிருந்தான். அவளும் ரெம்ப யதார்த்தமாக யார் வந்தாலும் அதைச் சொல்லிக் கொண்டேயிருந்தாள். காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்டதுமே அவள் சொல்லத் தொடங்கி விடுவாள். ஒரு நாள் சோமநாதனிடமே அதைச் சொல்ல அவனுக்கும் அவளுக்கும் வழிந்த அசட்டில் அவர்களிருவருமே வழுக்கி விழுந்தனர். ஒரு நாளைக்கு நான்கைந்து தடவை வந்து போய்க் கொண்டிருந்தான் ராமநாதன். ஆனாலும் ஒரு தடவை கூட அவனிடம் சிக்காமல் ஏதோ ஒரு புதிர் வழியில் ஓடி ஒளிந்து தப்பித்துக் கொண்டிருந்தான் சோமநாதன். சே..பரவாயில்லையே இப்படியே காலத்தைக் கடத்தியிரலாம் போலருக்கே..என்று நினைத்தான். ஆனால் அவன் நினைப்பில் ஒரு மின்னல் தாக்கி அது சாம்பலாகிப் போனது.

ஒரு நாள் இரவு மணி பனிரெண்டு இருக்கும். கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த மழையில் சோமநாதனின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. சோமநாதன் சற்றும் ஆபத்தை உணராமல் கதவைத் திறக்க எதிரே ராமநாதனும் அவனுடைய சகதர்மிணியும் குடையைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். பதட்டத்தில் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வாயும் வரவில்லை. திகைத்த முகத்தில் மழைச்சாரல் பட்டு உணர்வூட்ட, ராமநாதனின் குரல் அசரீரியாகக் கேட்டது.

“ புத்தகம் எங்கே? எடுத்துட்டு வாங்க..”

அந்த நேரத்தில் என்ன சொல்லி சமாளிக்க என்று தெரியவில்லை. ஆனாலும் வாய் ஏதோ முணுமுணுத்தது.

“ எந்தப் புத்தகம்?”

முதன்முதலாய் ராமநாதனின் முகத்தில் ஒரு நம்பிக்கையின்மையின் நிழல் ஆடியது. மறுபடியும் அவன்,

“ எங்கிட்ட வாங்கிட்டுப் போனீங்கல்ல.. அந்தப் புத்தகம்..”

என்று சொன்னான்.

“ அதான் எந்தப் புத்தகம்னு கேக்கேன்..”

என்று சோமநாதன் கேட்டான். இறுகிய முகத்துடன்,

“ எந்தப் புத்தகம்னு தெரியாதா?”

என்று கேட்க, சோமநாதனும் விடாமல்,

“ தெரியல.. மறந்துட்டேன்.. எந்தப் புத்தகம்னு சொல்லுங்க..எடுத்துட்டு வாரேன்..”

என்று சொன்னான். அவனுக்கு இப்போது இந்த விளையாட்டு பிடித்து போய் விட்டது. ராமநாதனின் முகத்தில் கலவரம் தன் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்க விட்டுக் கொண்டிருந்தது. புத்த்கங்களை வாங்கும்போது அதன் தலைப்பைப் பார்ப்பதோடு சரி. அதற்கப்புறம் எக்காரணம் கொண்டும் அதைப் புரட்டுகிற பழக்கமில்லையே. ஆனாலும் கெத்து விடாமல்,

“ அப்ப எந்தப் புத்தகம்னு உங்களுக்குத் தெரியாது.. இன்ன..”

என்று அதிகாரமாய் கேட்க நினைத்த ராமநாதனின் குரல் மழையில் நனைந்த பூனைக்குட்டியின் நடுங்கிய ‘மியாவ்’ வாகிப் போனது. சோமநாதனுக்கு இப்போது ராமநாதனின் மீது சற்றே பச்சாதாபம் தோன்றி விட்டது. ரெம்பத் தன்மையான குரலில்,

“ உங்க கிட்ட வாங்கின புத்தகத்தைப் படிச்சிட்டேன்.. எப்படியோ அது என்னோட கலெக்‌ஷன்ல சேந்திருச்சி.. எனக்கும் புத்தகத்தோட தலைப்பு மறந்துருச்சி.. என்ன புத்தகம்னு சொன்னீங்கன்னா நாளைகே அதைத் தேடிப் பிடிச்சி உங்க கையிலே கொண்டு வந்து கொடுத்துருதேன்..”

என்று சொன்னான். இதைச் சொல்லும்போது கள்ளத்தனத்தின் சிரிப்பொலி கண்களில் தெரியாமலிருக்க மிகுந்த பிரயாசைப் பட்டான். ராமநாதனின் தோள்கள் தொங்கின. தலைகுனிந்தான். வாய் ஏதோ முணுமுணுத்தது. ஒன்றிரண்டு முறை ஏறிட்டு சோமநாதனைப் பார்த்தான். பின்பு எதுவும் சொல்லாமல் தன் சகதர்மிணியுடன் தெருவில் இறங்கிப் போய் விட்டான்.

ஆனாலும் ராமநாதனுக்கு மனசு கேட்கவில்லை. மறுநாள் விடியற்காலையில் வந்து சோமநாதனைப் பார்த்தான். முதலில் சோமநாதனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. நடுஇரவிலிருந்தே தொடர்ச்சியாய் ராமநாதனைப் பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி விழித்தான். ராமநாதன் ஏக்கத்துடன்,

“ புத்தகத்தை எடுத்துட்டு வாங்க..”

என்று சொன்ன வார்த்தைகளைக் கேட்டவுடன் சோமநாதன் சுதாரித்துக் கொண்டான். அவன் வாய் தன்னையறியாமலே,

“ எந்தப் புத்தகம்?”

என்றது. ராமநாதன் எதுவும் பேசவில்லை. தலையைத் தொங்கவிட்டவாறே படியிறங்கிப் போய்விட்டான். மறுபடியும் சாயந்திரம் ஒரு முறை வந்து கேட்டான். அதே கேள்வி. அதே பதில். சோமநாதன் தைரியமாகிவிட்டான். இப்போது அவனிடம் ஒரு எகத்தாளமான புன்னகை கூட வாடகையில்லாமல் நிரந்தரமாய் குடியிருந்தது. ஆனால் ஒரு வாரத்தில் பத்து தடவைக்கு மேல் அலைந்த ராமநாதனின் முகம் கறுத்துச் சிறுத்துப் போனது. ஒரு வாரத்துக்குப் பிறகு அவன் வரவில்லை.

இப்போது சோமநாதனுக்கு ராமநாதனின் முகமே கண்ணுக்குள் நிழலாடிக் கொண்டிருந்தது. அவன் மனைவியும் அவனிடம் வருத்தப்பட்டாள். அதன் பிறகு சோமநாதன் மிகத் தீவிரமாக அந்தப் புத்தகத்தை அவன் போய் வந்த இடங்களிலெல்லாம் சென்று தேடினான். திடீரென ஒரு நாள் அவனுடைய பைக்கை சர்வீஸ் செய்கிற மெக்கானிக் கடையிலிருந்து அது கண்டெடுக்கப் பட்டது. புத்தகம் கிடைத்ததும் ராமநாதனின் வீட்டுக்கு உடனே ஓடினான்.

அங்கே ராமநாதன் அவனுடைய படிப்பறைக்குள் உட்கார்ந்து புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். அவனருகில் படிக்க வேண்டிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

நன்றி-செம்மலர்

Sunday 9 September 2012

சீதாயாணம்

 

மலையாளம்- கிரேஸிGracy

தமிழில்- உதயசங்கர்

வெந்து அவிந்து மாமிசப்பிண்டமாகக் கிடக்கும்போது தான் கீதாவுக்கு முற்பிறவி ஞாபகங்கள் வந்தன. உயிரின் கட்டுகள் ஒவ்வொன்றாய் சிதறித் தெறிக்கும்போது பிறவிகளுடைய இருண்ட நாட்டுப்புற வழியில் ஞாபகங்களின் வெளிச்சம் கூடிக்கொண்டே வந்தது.

அப்போது கீதா சீதாவாக இருந்தாள். வனத்தில் அபாயமான பாதைகளின் வழியே ராமனை நிழல் போலப் பின் தொடர்ந்தாள் சீதா. இலங்கையில் ஏராளமான விதவைகளின் மின்னுகிற கண்ணீரில் முங்கி எழுந்து கல்லையும் பிளந்து விடும் உறுதியினைப் பெற்றாள் சீதா. அக்னிப்பிரவேசம் செய்து சரீரப் புனிதத்தை நிரூபித்திருக்காவிட்டால் அவளை சுக்ரீவனின் வைப்பாட்டியாக்கியிருப்பார்கள். அதுவும் இல்லையென்றால் ஏதாவது ஒரு அரக்கனின் வைப்பாட்டியாக்கியிருப்பார்கள்.

அவமானத்தினால் புழுங்கினாள் சீதா. ஒவ்வொரு ரோமக்கால்களிலிருந்தும் அக்னி வெளியே தன் நாவுகளை நீட்டித் துழாவியது. பூமியில் இருக்கிற யாவும் எரிந்து சாம்பலாகி விடும். ஆனால் அக்னிரூபிணியாக நின்ற பூமியின் மகளுக்கு அவளுடைய உள்ளங்கையில் எதிர்காலம் தெரிந்தது.

குலம் அற்றுப் போகாதிருக்க லவகுசன் என்ற இரட்டைப்பிள்ளைகளைப் பெற்றுச் சீராட்ட வேண்டியதிருக்கிறது என்பதைக் கண்ட சீதா அப்போது குளிர்ந்து போனாள்.

குழந்தைகளின் முன்னால் வைத்து அவமானப்பட்ட போது பூமியின் வயிறு பிளந்து தன்னை மீண்டும் உள்வாங்கிய மண்ணின் கருணையை உணர்ந்த சீதா பின்பு குளிர்ந்து போனாள்.

ஆனால் இப்போது கீதா எப்படி குளிர்ந்து போகமுடியும்?

கீதா இரட்டைக்குழந்தைகளாகப் பெற்றது ரமாவையும் உமாவையும் அல்லவா?

ராமச்சந்திரனுக்கு அவசியம் ஏற்படும்போதெல்லாம் பணம் கொண்டு வந்து கொடுக்க கீதாவின் அப்பா பென்சன் வாங்கிக் கொண்டிருக்கிற வெறும் பள்ளிக்கூட வாத்தியார் தானே!

அதனால் அல்லவா மானேஜிங் டைரக்டருடைய படுக்கையறையைத் திறக்கிற ஒரு ரகசியக் கதவை ஸ்ரீராமச்சந்திரன் கீதாவுக்குச் சுட்டிக் காண்பித்தான்.

கீதாவின் ஞாபகங்கள் சிதறித் தெறித்தன. சுற்றிலும் வியாபித்த இருளின் வழியே உயிரின் கடைசி முடிச்சும் அவிழ்ந்து கீதா அடுத்த பிறவியின் ஆபத்தை நோக்கிப் பிரயாணமானாள்.

Saturday 8 September 2012

பிரகாசமான விளக்குடன் ஒரு அறை

சாதத் ஹசன் மண்டோ

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்manto

 

கெய்சர் கார்டனிலுள்ள ஒரு விளக்குக் கம்பத்தின் அருகில் நின்று கொண்டு பார்க்கிற இடமெல்லாம் எப்படிப் பாழாகி விட்டன என்று அவன் அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணாத வாடிக்கையாளர்களுக்காக சில குதிரை வண்டிகள் காத்துக் கொண்டிருந்தன.

சில வருடங்களுக்கு முன்பு இந்த இடம் எவ்வளவு சந்தோசம் பொங்குமிடமாக இருந்தது. முழுக்க முழுக்க சந்தோசமும், உல்லாசமும் நிறைந்த ஆண்களும் பெண்களும் அலைந்து திரிவார்கள். ஆனால் எல்லாம் மறைந்து விட்டது போலத் தோன்றியது. இப்போது அந்த இடம் முழுவதும் ரவுடிகளும், எங்கே செல்வதென்று தெரியாத நாடோடிகளும் நிறைந்திருந்தனர். பஜாரில் இப்போதும் கூட்டம் இருந்தது. ஆனால் குதூகலம் இல்லை. பாழடைந்த அசுத்தமான கடைகளும், கட்டிடங்களும் வெறுமையான கண்களுடைய விதவைகளைப் போல ஒன்றையொன்று முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

நாகரீகமிக்க கெய்சர் கார்டனை எது இப்படி சேரி போல ஆக்கியது என்ற ஆச்சரியத்துடன் அவன் நின்று கொண்டிருந்தான். அங்கே இருந்த உயிர்ப்பும் உணர்ச்சியும் எங்கே போயின? அது அத்தனை ஒப்பனைகளையும் சுரண்டி எடுத்துவிட்ட பெண்ணின் முகத்தை நினைவுபடுத்தியது.

பல வருடங்களுக்கு முன்பு அவன் கல்கத்தாவிலிருந்து பம்பாய்க்கு வேலை தேடி வந்தபோது பல வாரங்களாக இந்தப் பகுதியில் வாடகைக்கு அறை தேடியலைந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. அப்போது எதுவும் கிடைக்கவில்லை.

காலம் எப்படி மாறி விட்டது? தெருக்களில் இருக்கும் மக்களை வைத்தே சொல்லி விடலாம். யாருக்கு வேண்டுமானாலும் வாடகைக்கு இப்போது இடம் கிடைக்கும். நெசவாளர்கள், செருப்பு தைப்பவர்கள், டீக்கடைக்காரர்கள், எல்லோருக்கும்.

இன்னொருமுறை சுற்றிலும் பார்த்தான். சினிமா கம்பெனி அலுவலகங்களாகப் பயன்பட்டவையெல்லாம், இப்போது சமையலும் படுக்கையும் ஒரே அறையில் வைத்துக் கொண்டிருக்கும் வாசிகள் நிறைந்த இடமாகி விட்டது. நகரத்திலுள்ள பெரிய மனிதர்கள் மாலை வேளைகளில் கூடும் இடம், துணி வெளுப்பவர்களின் புறவாசல் மாதிரி ஆகிவிட்டது.

இது புரட்சிக்குச் சற்றும் குறைவானதில்லை. ஆனால் இந்தப் புரட்சி அழிவைக் கொண்டு வந்த புரட்சி. இடைப்பட்ட காலத்தில் அவன் இந்த நகரத்தை விட்டு வெளியே இருந்தான். ஆனால் செய்தித்தாள்கள் மூலமாகவும், இங்கே தங்கியிருந்த நண்பர்கள் மூலமாகவும் அவனில்லாத சமயத்தில் கெய்சர் கார்டனில் என்னென்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டான்.

கலவரங்களும், படுகொலைகளும், பாலியல்பலாத்காரங்களும், நடந்தன. கெய்சர் கார்டன் கண்ட வன்முறை எல்லாவற்றின் மீதும் தன்னுடைய பயங்கரமான முத்திரையை விட்டுச் சென்றிருந்தது. ஒரு காலத்தில் முக்கியமானதாக இருந்த வர்த்தகநிலையங்களும், குடியிருப்புகளும், இப்போது பரிதாபமாகவும், அசுத்தமாகவும் காட்சியளித்தன.

கலவரங்களின் போது பெண்களை நிர்வாணமாக்கி அவர்களுடைய முலைகளை அறுத்தெறிந்ததாக அவன் கேள்விப்பட்டிருந்தான். அப்படி நடந்திருந்தால் இப்போது எல்லாமும் பாழ்வெட்டவெளியாக சிதிலமடைந்திருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

சாயங்காலம் அங்கே ஒரு நண்பரைச் சந்திப்பதற்காகவே நின்று கொண்டிருந்தான். அவன் இங்கே குடியிருக்க ஒரு இடம் பார்த்துக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தான்.

கெய்சர் கார்டன்ஸில் நகரத்தின் சிறந்த டீக்கடைகளும் ஹோட்டல்களும் இருந்தன. யாருக்காவது விருப்பமென்றால் அங்கே சுற்றிக் கொண்டிருக்கும் நகரத்தின் உயர்ந்த வகுப்பு மாமாக்களின் மூலம் நகரத்தின் மிகச் சிறந்த பெண்களைக் கூட அடையலாம். அவன் அங்கே கழித்த பழைய நாட்களை நினைத்துப் பார்த்தான். அழகிய ஹோட்டல் அறைகள், மது, பெண்கள், எல்லாவற்றையும் ஆசையுடன் நினைத்துப் பார்த்தான். உலகயுத்தம் காரணமாக அப்போது ஸ்காட்ச் விஸ்கி கிடைப்பதென்பது முடியாத காரியம். ஆனால் ஒரு போதும் அவனுடைய மாலைப்பொழுதுகள், ஸ்காட்ச் விஸ்கியில்லாமல் காய்ந்ததில்லை. உங்களால் பணம் கொடுக்க முடியுமென்றால் எவ்வளவு விலையுயர்ந்த ஸ்காட்ச்சாக இருந்தாலும் நீங்கள் கேட்டவுடன் கிடைக்கும்.

அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஐந்து. பிப்ரவரி மாதத்தின் சாயங்கால நிழல்கள் நீண்டு விழ ஆரம்பித்தன. அவனைக் காக்க வைத்ததற்காக அவனுடைய நண்பனைத் திட்டினான். ஒரு கப் டீ குடிப்பதற்காக ரோட்டில் இறங்க யத்தனிக்கும்போது மிக மோசமாக உடையணிந்த அந்த மனிதன் அவனருகில் வந்து நின்றான். அவன் அந்த அந்நியனிடம் கேட்டான்.

“ உனக்கு ஏதாவது வேண்டுமா?”

“ ஆமாம்.” என்று ரகசியமான குரலில் அவன் பதில் சொன்னான். அந்த அந்நியனை கஷ்டப்படுகிற ஒரு அகதி என்று அவன் நினைத்தான். அந்நியன் ஏதாவது பணம் கேட்கலாம் என்றும் நினைத்தான்.

“ என்ன வேணும் உனக்கு? “ என்று அவன் கேட்டான்.

“ எனக்கொண்ணும் வேண்டாம்..” என்று சொன்னவன் சற்று நேரம் இடைவெளி விட்டு இன்னும் அருகில் வந்தான்.

“ உங்களுக்கு ஏதாவது தேவையா? “

” என்னது..”

“ பொண்ணு..”

“ எங்கேயிருக்கிறா அவ..”

அவனுடைய குரல் அந்த அந்நியனுக்கு அவ்வளவு நம்பிக்கையூட்டுவதாக இல்லை.

“ உங்களுக்கு உண்மையிலேயே விருப்பமில்லை போலிருக்கு..”

என்று சொல்லிக் கொண்டே நடந்து செல்ல ஆரம்பித்தான். அவன் அந்நியனை நிறுத்தினான்.

“ உனக்கெப்படி தெரியும்? நீ சொல்கிற சமாச்சாரம் மனுசனுக்குச் சிலுவையில் இருக்கும்போது கூட தேவைப்படற விஷயம். இங்க பாரு நண்பா.. ரெம்பத் தூரம் இல்லைன்னா நான் உன் கூட வரத்தயார்.. நான் இங்கே ஒருத்தருக்காகக் காத்திருக்கேன்.. அவர் இன்னும் வரல்லை..”

“ பக்கத்தில தான்.. ரெம்பப்பக்கத்தில தான்.. நான் நிச்சயமா சொல்றேன்..”

என்று அவன் முணுமுணுத்தான்.

“ எங்கே?”

“ நமக்கெதிரே இருக்கிற கட்டிடம் தான்..”

“ அந்தக் கட்டிடத்தையா சொல்றே..”

“ஆமாம்..”

“ நான் உன் கூட வரணுமா?..”

“ ஆமாம்.. ஆனால் எனக்குப் பின்னாலேயே நடந்து வாங்க..”

அவர்கள் ரோட்டைக் கடந்து சென்றார்கள். அது ஒரு பாழடைந்த கட்டிடம். சுவரிலிருந்து சுண்ணாம்புக்காரை பெயர்ந்தும் வாசலில் குப்பைகள் நிறைந்தும் இருந்தன.

அவர்கள் முதலில் முற்றத்து வழியே இறங்கி இருண்ட இடைவழியினூடாக நடந்து சென்றனர். கட்டிடவேலை முடிவதற்கு முன்பே கை விடப் பட்ட நிலையிலிருந்தது. சுவரில் செங்கற்கள் பூசப்படாமலிருந்தன. குவியல் குவியலாக சுண்ணாம்புச் சாந்துக் கலவையும் தரையில் கிடந்தன. அந்த மனிதன் உடைந்து சிதிலமான ஒரு ஏணி வழியே மேலே ஏறினான்.

“ இங்கேயே இருங்கள்.. நான் ஒரு நிமிஷத்தில் திரும்பி வருகிறேன்..”

என்று அவன் சொன்னான்.

அவன் மேலே பார்த்தபோது படிக்கட்டுகளின் கடைசியில் தரையில் பிரகாசமான வெளிச்சம் தெரிந்தது. அவன் இரண்டு நிமிடங்கள் காத்திருந்த பின்பு படிகளில் ஏறத் தொடங்கினான். அவன் ஏறிச் சமதளத்தை அடைந்த போது அவனைக்கூட்டிக் கொண்டு வந்திருந்த மனிதன் கத்திக் கொண்டிருப்பதைக் கேட்டான்.

” நீ எந்திரிக்கப் போறியா இல்லையா..?”

அதற்கு அந்தப் பெண்ணின் குரல் பதிலளித்தது.

” என்னைத் தூங்க விடு..”

அவன் மீண்டும் கத்தினான்.

” நான் சொல்றதக் கேட்டு இப்ப எந்திரிக்கப் போறியா இல்லையா.. எந்திக்கலன்னா நான் என்ன செய்வேன்னு உனக்குத் தெரியும்..”

மீண்டும் அந்தப் பெண்ணின் குரல்,

” என்னைக் கொன்னாலும் சரி..நான் எந்திரிக்கமுடியாது.. கடவுளுக்காக எம்மேலே இரக்கம் காட்டு..”

“ அன்பே.. முரண்டு பிடிக்காதே.. நீ இப்ப எந்திரிக்கலன்னா எப்படி நாம வாழப் போறோம்?சொல்லு”

“ நாசமாப் போற வாழ்க்கை..நான் பட்டினி கிடந்து செத்துப் போறேன்.. கடவுளுக்காக என்னை எழுப்பாதே..எனக்குத் தூக்கமா வருது..”

என்று அந்தப் பெண் சொன்னாள். அதற்கு அந்த மனிதன் கோபத்தோடு உறுமினான்.

” அப்படின்னா நீ எந்திரிக்கப் போறதில்ல.. இல்லையா.. பொட்டைநாயே.. அசிங்கம் பிடித்த பொட்டை நாயே..”

அவள் மறுபடியும் கத்தினாள்.

” மாட்டேன்..மாட்டேன்…மாட்டேன்..”

அந்த மனிதன் மறுபடியும் தன் குரலை மாற்றிக் கொண்டான்.

” ஊர் முழுக்க கேக்கிற மாதிரி இப்படிச் சத்தம் போடாதே.. வா..எந்திரி.. நமக்கு முப்பது..ஏன் நாப்பது ரூபாய் கூட கிடைக்கும்..”

அந்தப் பெண் பலவீனமான குரலில்,

” உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்.. என்னைப் போகச் சொல்லாதே.. நான் தூங்காம எத்தனை ராத்திரி.. எத்தனை பகல் வெளியே போயிருக்கேன்.. தயவு செய்து எம்மேலே.. இரக்கம் காட்டு..”

” ரெம்ப நேரம் ஆகாது.. ஒரு ரெண்டுமணிநேரம் தான் அப்புறம் நீ உன் இஷ்டம் போலத் தூங்கலாம்.. இங்க பாரு.. அப்புறம் என்னை வேறெதுவும் செய்யும்படி வைச்சிராதே..”

என்று அவன் சொன்னான்.

கொஞ்சநேரம் அமைதி. அவன் சமதரையைச் சத்தமில்லாமல் கடந்து பிரகாசமான வெளிச்சம் வந்த அறைக்குள் எட்டிப் பார்த்தான்.அது ஒரு அறை மாதிரியில்லை. அங்கே சில காலியான சமையல் பாத்திரங்கள் தரையில் கிடந்தன. நடுவில் ஒரு பெண் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடந்தாள். அவளருகில் குனிந்தபடி அவனைக் கூட்டிக் கொண்டு வந்த மனிதன் இருந்தான். அவன் அவளுடைய கால்களை அமுக்கிக் கொண்டே சொன்னான்,

“ நல்ல பெண்ணில்லையா..நான் சத்தியமாச் சொல்றேன்.. நாம ரெண்டு மணி நேரத்தில திரும்பி வந்துரலாம்.. அப்புறம்..நீ மனம் போல தூங்கலாம்..”

கொளுத்திய பட்டாசு போல அந்தப் பெண் விர்ரென்று எழுந்து நிற்பதை அவன் பார்த்தான்.

” சரி..நான்..வர்றேன்…”

என்றாள் அவள். அவனுக்குத் திடீரென்று பயம் வந்தது. படிகளில் இறங்கி ஓடினான். இந்த இடத்திலிருந்து வெகுதூரத்திற்கு ஓடிப் போக வேண்டுமென்று அவன் விரும்பினான். அதே போல இந்த நகரத்தை விட்டும் ஓடிப்போக வேண்டுமென்று நினைத்தான்.

தூங்க விரும்பிய அந்தப் பெண்ணைப் பற்றி நினைத்தான். யார் அவள்? ஏன் அவள் இப்படி இரக்கமில்லாமல் நடத்தப்படுகிறாள்? யார் அந்த மனிதன்? ஏன் அந்த அறை சகிக்க முடியாதபடி வெளிச்சமாக இருக்கிறது? ரெண்டு பேரும் அங்கேயே வசிக்கிறார்களா? ஏன் அவர்கள் அங்கே வசிக்கிறார்கள்?

மாடியிலுள்ள அந்தப் பயங்கர அறையிலிருந்த கண்கூசும் விளக்கினால் அவனுடைய கண்கள் பாதிக் குருடான மாதிரி இருந்தது. அவனால் நன்றாகப் பார்க்கமுடியவில்லை. குறைந்த வெளிச்சமுள்ள விளக்கை அந்த அறையில் தொங்கவிட முடியாதா? ஏன் அது இப்படி இரக்கமில்லாமல் பிரகாசமாக இருக்கிறது?

இருட்டுக்குள் ஏதோ சத்தமும் அசைவும் தெரிந்தது. அவனால் பார்க்கமுடிந்ததெல்லாம் இரண்டு கோட்டுருவங்கள். அதிலொன்று இந்தப் பயங்கரமான இடத்திற்கு அவனைக் கூட்டி வந்த மனிதன்,

“ பாத்துக்கோங்க.. ஒரு தடவை…”

என்று சொன்னான்.

“ பாத்துட்டேன்..” என்று அவன் பதிலளித்தான்.

“ சரிதானா? “

“ சரிதான்”

“ அப்ப நாப்பது ரூபாய் கொடுங்க..”

“ சரி”

“ பணத்தை நான் வாங்கிக்கலாமா?”

அவனால் அதற்கு மேல் தெளிவாக யோசிக்க முடியவில்லை. அவன் அவனுடைய பாக்கெட்டில் கையை விட்டு கை நிறைய ரூபாய் நோட்டுகளை எடுத்து அவனிடம் கொடுத்து,

“ எண்ணிக்கோ..”

என்று சொன்னான்.

“ ஐம்பது ரூபாய் இருக்கு..”

“ வைச்சிக்கோ..”

“ நன்றி..”

பெரிய பாறாங்கல்லை எடுத்து அவனுடைய தலையில் போட்டு நசுக்க வேண்டும் போல வெறி தோன்றியது.

“ அவளக் கூட்டிட்டுப் போங்க..கொஞ்சம் பதனமா நடந்துக்கோங்க.. ஒரு ரெண்டு மணி நேரத்தில இங்கேயே கூட்டிட்டு வந்துருங்க..”

“ சரி”

அவன் அந்தப் பெண்ணுடன் அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்ததும் ஒரு குதிரைவண்டி காத்திருப்பதைப் பார்த்தான். விரைவாக முன்னால் குதித்தேறிக் கொண்டான். அந்தப் பெண் பின்சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

அந்தக் குதிரைவண்டி நகரத் தொடங்கியது. அவன் வாடிக்கையாளர்களே இல்லாத ஒரு இடிந்த ஹோட்டலின் முன் நிறுத்தச் சொன்னான். அவர்கள் உள்ளே போனார்கள். அவன் அப்போது தான் அந்தப் பெண்ணை முதல் தடவையாகப் பார்த்தான். அவளுடைய கண்கள் சிவந்து வீங்கியிருந்தன. அவள் மிகவும் சோர்வாக இருந்தாள். அவள் அப்படியே குவியலாக தரையில் விழுந்து விடுவாளோ என்று அவன் பயந்தான்.

” நிமிர்ந்து பாரு..”

என்று அவன் அவளிடம் சொன்னான்.

“ என்ன?”

அவள் அதிர்ச்சியடைந்த மாதிரி கேட்டாள்.

“ ஒண்ணுமில்ல.. நிமிர்ந்து பாருன்னு சொன்னேன்..”

அவள் நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கண்கள் மிளகாய் வத்தல்கள் நிறைந்த வெறும் ஓட்டைகளாகத் தெரிந்தன.

“ உன் பெயரென்ன?”

என்று அவன் கேட்டான்.

“ அதைப் பத்தி உனக்கென்ன?” அவளுடைய குரல் அமிலம் போல எரிந்தது.

“ எங்கேயிருந்து வந்தே?”

“ இப்ப அதுக்கென்ன? “

“ ஏன் நீ முரட்டுத்தனமா இருக்கே..”

அந்தப் பெண் இப்போது நன்றாக விழித்து விட்டாள். அவள் ரத்தச் சிவப்புக் கண்களால் அவனை முறைத்துப் பார்த்தாள்.

“ உன் வேலையை சீக்கிரம் முடி..நான் போகணும்..”

“ எங்கே..?”

“ நீ எங்கேயிருந்து என்னைக் கூட்டிட்டு வந்தியோ அங்கே..”

என்று அவள் அலட்சியமாகச் சொன்னாள்.

“ நீ தாராளமா இப்பவே போகலாம்..”

“ ஏன்..நீ உன் வேலையை முடிக்க மாட்டேங்கிற.. ஏன் எனக்கு எரிச்சல் ஏற்படுத்த முயற்சிக்கிற..”

“ நான் ஒண்ணும் உனக்கு எரிச்சல் ஏற்படுத்த முயற்சிக்கல.. நான் உனக்காக வருத்தப்படுறேன்..”

என்று அவன் அநுதாபமான குரலில் சொன்னான்.

“ எனக்கு அநுதாபிகள் வேண்டாம்.. நீ எதுக்காக என்னை இங்கே கூட்டிட்டு வந்தியோ அதைச் செய்.. அதுக்கப்புறம்..தான் நான் போகணும்..”

என்று அவள் கிட்டத்தட்ட கத்தியே விட்டாள். அவன் கையை அவளுடைய தோள்மீது வைத்தான். அவள் அதை முரட்டுத்தனமாக உதறினாள்.

“ தனியா இருக்கவிடு.. நான் தூங்கி பல நாட்களாச்சு..எப்போ அந்த இடத்துக்கு வந்தேனோ அப்பயிருந்து முழிச்சிகிட்டேயிருக்கேன்..”

“ நீ இங்கேயே தூங்கலாம்..”

“ நான் இங்கே தூங்க வரலை.. இது என் வீடும் இல்லை..”

“ அப்படின்னா..அந்த அறைதான் உன் வீடா..?”

அவன் அப்படிக் கேட்டது அவளை இன்னும் ஆத்திரமூட்டியது.

“ நிறுத்து..உம்பேச்சை.. எனக்கு வீடு கிடையாது..நீ உன் வேலையைச் செய்.. இல்லைன்னா என்னையத் திரும்பக் கூட்டிட்டுப் போ உன் பணத்தைத் திரும்ப நீ வாங்கிக்கலாம் ..”

“ சரி நான் உன்னைத் திரும்பக் கூட்டிட்டுப் போறேன்..”

அடுத்த நாள் நடந்த சம்பவத்தைக் குறித்த நேரத்தில் வராத அவனுடைய நண்பனிடம் சொன்னான், அவன் உணர்ச்சி வசப்பட்டான்.

“ அவள் இளமையானவளா..”

“ எனக்குத் தெரியாது..உண்மையில் நான் அவளைச் சரியாகப் பார்க்கக் கூட இல்லை.. என்னை அந்தப் பெண்ணிடம் கூட்டிட்டுப் போனவனைக் கொல்லணும்கிற குரூர ஆசை தான் எனக்கு இருந்தது..”

அவனுடைய நண்பன் வேறு எங்கோ செல்ல வேண்டியதிருந்ததால் அவர்கள் பிரிந்தனர். அவன் மிக மோசமாக வருத்தமடைந்தான்.

அவன் கெய்சர் கார்டன்ஸை நோக்கி நடந்தான். அவனுடைய கண்கள் அந்தப் பகுதியில் அந்த மனிதனைச் சல்லடை போட்டுத் தேடின. ஆனால் அவனை எங்கேயும் பார்க்க முடியவில்லை. ஏற்கனவே சாயங்காலம் ஆகிவிட்டது. சாலையின் குறுக்கே அந்தக் கட்டிடத்தை அவனால் பார்க்க முடிந்தது. தன்னுணர்வின்றியே அவன் அதை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அவன் முற்றத்து வழியைக் கடந்து போனான். அந்தச் சிதிலமடைந்த படிக்கட்டுகளின் அடியில் வந்து நின்றான். நிமிர்ந்து உயரே பார்த்தான். மேலே சமதரையில் பிரகாசமான வெளிச்சம் தெரிந்தது. ஒவ்வொரு படியாக மேலே ஏறத் தொடங்கினான். அமைதியாக இருந்தது. எந்தச் சப்தமும் இல்லை.

கதவு திறந்து கிடந்தது. அவன் எட்டிப் பார்த்தான். விளக்கிலிருந்து வந்த கண்களைக் குருடாக்கும் வெளிச்சம் தான் முதலில் அவனைத் தாக்கியது. கூசும் ஒளியைத் தவிர்க்க சடக்கென்று முகத்தைத் திருப்பினான் அவன்.

வெளிச்சம் படாதபடி கைகளால் மறைத்துக் கொண்டு திறந்து கிடந்த கதவின் வழியே திரும்பவும் பார்த்தான். தரையில் ஒரு பெண் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய முகம் மெல்லிய துணியினால் மூடப்பட்டிருந்தது. அவளுடைய உடம்பு சீரான மூச்சுக்கேற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அவன் அறைக்குள் பாதிக்காலை வைத்தவன் கிட்டத்தட்ட அலறியே விட்டான்.

அந்தப் பெண்ணின் அருகே வெறுந்தரையில் ஒரு மனிதன் கிடந்தான். அவனுடைய தலை செங்கல்லால் நசுங்கிக் கூழாகிக் கிடந்தது.

அவன் வெளியே வேகமாக ஓடி விழுந்து மோதிப் படிக்கட்டுகளில் இறங்கினான். அவனுடைய காயங்களை நின்று பார்க்கக் கூட முடியவில்லை. ஒரு பைத்தியக்காரனைப் போல அந்த முற்றத்திலிருந்து இருண்ட தெருவுக்குள் ஓடிப்போனான்.

Thursday 6 September 2012

உடலின் சொற்கள்

உதயசங்கர்

play

உயிருள்ள ஒவ்வொரு உடலும் பேசுகிறது. எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கிறது. அதன் மொழி பலருக்குப் புரியவில்லை. புரியவில்லையே என்ற கவலையும் இல்லை. அதனால் அதன் வார்த்தைகளின் அர்த்தம் தெரியவில்லை. அதனால் அதை அலட்சியம் செய்கின்றனர். அப்படியொன்றும் யாருக்கும் புரியாத மொழியில் உடல் பேசுவதில்லை. ஆனால் நாம் அந்த மொழி மருத்துவருக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறோம். அதனால் மீண்டும் மீண்டும் நம்முடைய உடல் கதறியும் கேட்காமல் மருத்துவர் எழுதித் தரும் மருந்துகளை உட்கொண்டு உடலும், உயிரும் பாதிக்க, ஆண்டி பயாட்டிக்குகளையும், வலி நிவாரணிகளையும், ஆண்டி செப்டிக்குகளையும், இன்னும் சில சமயங்களில் ஸ்டிராய்டுகளையும் உட்கொள்கிறோம். ஏனெனில் நாம் அவசரமாக வாழ்கிறோம். அவசரத்தில் வாழ்கிறோம். அதனால் நம் உடலின் சொற்களைக் கேட்பதற்கு அவகாசமில்லை. நம்முடைய குழந்தைகளையும் அவ்வாறே பழக்குகிறோம். தூங்கியும் தூங்காமலும் காலை ஆறு மணிக்கு எழுப்பி ஏழு மணிக்குள் எல்லாகாலைக்கடன்களையும் முடித்து குளித்து சாப்பிட்டு ஏழு ஏழரை மணிக்கு ஸ்கூல் வேனுக்குள்ளோ, ஆட்டோவுக்குள்ளோ, ஸ்கூல் பஸ்ஸிலோ, திணித்து அனுப்பி விடுகிறோம். மாலையில் குழந்தை வந்ததும் ஸ்கூல் ஹோம் ஒர்க், படிப்பு, பின்னர் தூங்கிக் கொண்டே உணவு, அப்படியே உறக்கம். மறுபடியும் காலை ஆறு மணிக்கு எழுந்திரிக்க வேண்டும். இயந்திரமாய் நாமும் மாறி குழந்தைகளையும் இயந்திரமாய் மாற்றுகிறோம். பின்பு சலித்துக் கொள்ளவும் செய்கிறோம். என்ன படிச்சு என்ன செய்ய ஃபர்ஸ்ட் ரேங்க் வரமாட்டேங்கானே, எப்ப பாரு செகண்ட் ரேங்க், இல்லன்னா தேர்டு ரேங்க், காலையில ஒரு அஞ்சு மணிக்கு எந்திரிச்சிப் படிச்சான்னா அடுத்த பரீட்சையிலயாவது ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கலாம், மெமரி பிளஸ் டானிக் வாங்கிக் கொடுக்கணும், இந்த மாதிரியான உரையாடல்களை எங்கும் கேட்கலாம். இதெல்லாம் மூன்று, நான்கு வயது குழந்தைகளைப் பற்றி என்று நினைக்கும் போது நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்றே தெரியவில்லை.

மூன்று வயதுக்கு முன்னால் மட்டும் என்னவாம்? குழந்தைகளைப் பற்றி அவர்களுடைய உடல் மொழியைப் பற்றி என்ன தெரியும் நமக்கு. கொடுத்த உணவு ஒவ்வாததினால் உடல் அந்த ஒவ்வாத உணவின் ஒரு துளியும் உள்ளே தங்கி விடக்கூடாதென்று முயற்சிக்கிறது. ஏனெனில் உள்ளே தங்கி விடும் அந்த உடலுக்கு ஒவ்வாத உணவு விஷமாகி விடும் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்தே உடலும், உடலின் செயல்களை ஒருங்கிணைக்கும் உயிராற்றலும் மிக விரைவாக செயல்படுகிறது. வயிற்றைச் சுத்தம் செய்ய வயிற்றாலை என்ற அறிகுறியை உருவாக்குகிறது. இந்த வயிற்றாலை என்ற அறிகுறி தான் உடலின் எச்சரிக்கை. இனி இந்த மாதிரி கெட்டுப்போன, ஒவ்வாத உணவைச் சாப்பிடக்கூடாது என்று சொல்லும் உடல்மொழி. ஒரு நாலைந்து முறை வயிற்றாலை போனால் போதும் உடனே தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் செல்ல அவர் அவருக்குத் தெரிந்த மருத்துவமொழியில் ( அதுவும் யாருக்கும் புரியாது) மலச்சிக்கலை உருவாக்கும் மருந்தை எழுதிக் கொடுத்து வயிற்றாலையை நிறுத்துகிறார். இப்போது குழந்தையின் வயிற்றாலை நோய் சரியாகி விட்டது. பெற்றோர்களுக்குச் சந்தோஷம். ஆனால் இப்போது குழந்தை சரியாகச் சாப்பிடவில்லை. வெளியே போய் நான்கு நாட்களாகி விட்டது. குழந்தையின் சுறுசுறுப்பு குறைந்து விட்டது. தூக்கு மறுபடியும் மருத்துவரிடம். இப்போது மருத்துவர் குழந்தை வெளியே போவதற்காக மலமிளக்கியையும், பசித்துச் சாப்பிட டானிக்குகளையும் எழுதிக் கொடுக்கிறார். சிரத்தையுடன் பெற்றோர் அதை வாங்கிக் கொடுக்கிறார்கள். பெற்றோர்கள் தங்களுடைய அறியாமையினால் குழந்தைக்கு தேவையில்லாத மருந்துகளை கொடுத்து அதன் உடலியக்கத்தில் ஊறு விளைவித்து ஒவ்வாத உணவின் விஷம் உடலில் தங்கி விடும்படி செய்து விட்டார்கள். மருத்துவரும் பணம் சம்பாதித்துக் கொண்டார்.

அப்படியானால் என்ன செய்ய வேண்டும். வயிற்றாலை போவதற்கு ஒவ்வாத உணவு தான் காரணமென்றால் நாலைந்து முறை தண்ணீராய் வெளியே போவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. உடலில் நீர்ச்சத்து குறையாமலிருக்க உப்பும் சர்க்கரையும் கலந்த நீரும் எளிய உணவும் ஓய்வும் போதுமானது. உயிராற்றல் தனக்கு ஏற்பட்ட பாதிப்பைத் தானே சரி செய்து கொள்ளும். மீண்டும் உடல் முழு ஆரோக்கியத்தோடு புத்துணர்ச்சி பெற்று விடும். இல்லையெனில் ஒத்த மருந்தின் விதிப்படி நலமாக்கலை உருவாக்கும் ஹோமியோபதியில் நலம் பெறலாம். குழந்தைகளுக்கு வருகின்ற பெரும்பாலான நோய்கள், செயற்கையான டப்பா உணவுப்பொருட்கள், சாக்லேட், பிஸ்கட்டுகள், நம்முடைய சீதோஷ்ணநிலைக்கு ஒவ்வாத ஆடைகள், உடலின் வளர்ச்சிப்போக்கில் ஏற்படும் சிறு சிறு உபாதைகள், இவற்றில் பல உபாதைகள் மருத்துவமனைக்குச் செல்லாமலே குணமாகி விடக்கூடியவை தான். செயற்கையான டப்பா உணவுப்பொருட்களில் அது கெட்டுப்போய் விடாமலிருப்பதற்காக கலந்திருக்கும் வேதியல் பொருட்கள் குழந்தையின் நலத்தை பாதிக்கும். மாவுப்பொருள் மட்டுமேயான பிஸ்கெட்டுகள் மலத்தை இறுக்கும். சாக்லேட்டுகளில் உள்ள கொக்கோ அதிக அளவில் உடலில் சேரும்போது பற்களில் சொத்தையும், வயிற்றில் புழுக்களும் வளர ஏதுவாகும். அது மட்டுமல்ல அதிகமாகச் சாக்லேட் தின்னும் குழந்தைகளுக்கு பிடிவாதகுணமும் அதிகமாகும்.

பெரியவர்களுக்கும் கூட பொருந்தக்கூடியவை தான். நம்முடைய உணவுப்பழக்கவழக்கங்களில் கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட தலைகீழ் மாற்றமே இன்று சர்க்கரைநோய், புற்றுநோய், இருதயத்தாக்கு, ரத்தக்கொதிப்பு, போன்ற நோய்கள் அதிகமாகிக் கொண்டே வருவதற்குக் காரணம். லாபம் ஒன்றே குறி என்ற முதலாளித்துவ சிந்தனை விவாசாயம் தொடங்கி பரவலாக எல்லா உற்பத்திப்பொருட்களின் சூட்சுமமாகி விட்டது. பொதுநலத்தின் எல்லைகள் சுருங்கி சுயநலத்தின் வெளி விரிந்து கொண்டேயிருக்கிறது. அதனால் மருத்துவமனைகளும் ஸ்பெஷலிஸ்டுகளும் பெருகி வருகிறார்கள். உடலை ஒரு இயந்திரமாகப் பார்க்கிற ஸ்பெஷலிஸ்டுகள், ஹார்ட் ஸ்பெஷலிஸ்டுகள், ஸ்கின் ஸ்பெஷலிஸ்டுகள், கிட்னி ஸ்பெஷலிஸ்டுகள், குடல் ஸ்பெஷலிஸ்டுகள், கைகால் ஸ்பெஷலிஸ்டுகள், நரம்பு ஸ்பெஷலிஸ்டுகள், மனநல ஸ்பெஷலிஸ்டுகள், நுரையீரல் ஸ்பெஷலிஸ்டுகள், பின்னர் இருக்கவே இருக்கிறார்கள் கண், காது,மூக்கு,தொண்டை, பல் ஸ்பெஷலிஸ்டுகள், கிட்டத்தட்ட நமது உடலை ஸ்பேர்பார்ட்ஸ் கடையாக மாற்றி விட்டிருக்கிறார்கள். மனிதனை முழுமையாக உடலும், மனமும் சேர்ந்த, உயிராற்றல் மிக்க ஒரு உயிராக ஆங்கில மருத்துவம் பார்ப்பதில்லை.

ஆனால் எப்போதெல்லாம் நமது உயிராற்றல் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அது உடலின் வழியாகப் பேசுகிறது. ஒரு இடத்தில் அடி பட்டால் வலி என்ற உணர்வை ஏற்படுத்தி நம்முடைய உடலின் பாதுகாப்புமையத்துக்கு அவசர உதவி கேட்டு செய்திகள் பறக்கின்றன. அடிபட்ட இடத்தில் சிதைந்த செல்களையும், இறந்த திசுக்களையும் வெளியேற்ற வேண்டும். லேசாக ரிப்பேர் ஆன செல்களைச் சரி செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? அடி பட்ட இடம் அப்படியே எந்த மாற்றமுமின்றி இருக்க முடியுமா? அப்படி இருந்தால் நாம் ஓய்வு எடுப்போமா? அதனால் அந்த இடம் வீங்குகிறது. வலி என்ற உணர்வு நீடிப்பதன் மூலம் அடிபட்டவரை அசையாமல் இருக்க வைக்கிறது. பாதுகாப்புப்படை தங்களுடைய மருத்துவ அணியுடன் சென்று தங்களுடைய வேலை முழுமையாக நடப்பதற்காக, உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்துகிறது. அடிபட்ட இடம், அடியின் ஆழம் அடிபட்டவரின் ஆரோக்கியம் இவற்றைப் பொறுத்து காயமோ, வீக்கமோ ஆறுகிறது. இறந்த செல்களும் திசுக்களும் சீழாக வெளியேறும். அந்த இடத்த்தில் புதிய செல்களும், திசுக்களும் உருவான பிறகு முதலில் கரடு முரடான பூச்சு போல மேல் பொருக்கு உருவாகி கீழே உள்ள புண்ணைப் பாதுகாக்கும். கீழே உள்ள புண் ஆறியதும் பட்டுத்துணி போல காயம் தழும்பாக மாறி விடும். இதையெல்லாம் நம் உடலின் மருத்துவரே எந்த மருத்துவப்படிப்பும் படிக்காமலேயே செய்கிறார். அவருக்குத் தெரியும் எந்தக்காயம் அவரால் ஆற்றக் கூடியது. எதற்கு வெளியிலிருந்து உதவி தேவைப்படும் என்று. அதற்குத் தகுந்த மாதிரி அவர் உடலை இயக்குவார். அதேபோல காய்ச்சலோ தலைவலியோ நோய்களல்ல உடலின் பாதுகாப்புப்படையின் தரும் சமிக்ஞைகள். அதாவது சிக்னல்கள். அந்த சிக்னல்களைப் புரிந்து கொண்டு எதன் காரணமாகத் தலைவலி வந்ததோ அதற்கு மருத்துவம் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு வெறும் தலைவலிக்கும், காய்ச்சலுக்கும் மருந்து சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் அது தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

எல்லா உடல் உபாதைகளுக்கும் காரணம் இருக்கும். பிறவியில் ஏற்படும் நோய்களைத் தவிர தீவிர நோய்கள் என்று சொல்லக் கூடிய அவ்வப்போது வந்து போகக்கூடிய நோய்களுக்குக் காரணம் இருக்கும். உதாரணத்துக்கு நல்ல கோடைகாலத்தில் தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக காற்றோட்டமில்லாத செயற்கை நூலிழைகளில் தயாரிக்கப்பட்ட இறுக்கமான சட்டையை தாங்கள் வெளியே செல்லும்போது குழந்தைக்கு அணிவிக்கிறார்கள். குழந்தை வெப்பம் தாங்கமுடியாமல் வீரிடுகிறது. ஆனால் பெற்றோருக்குப் புரிவதில்லை. அழ அழ அந்தக் குழந்தையோடு மல்லுக்கட்டி வெளியே போய் விட்டு வீட்டிற்கு வந்து சட்டையைக் கழட்டிப் பார்த்தால் உடலெங்கும் திட்டு திட்டாய் கன்னிப் போயிருக்கிறது. உடனே மருத்துவரிடம் கொண்டு செல்கிறார்கள். அவர் கொடுக்கும் மருந்துகளை குழந்தைக்குக் கொடுக்கிறார்கள். அன்றிலிருந்து குழந்தைக்கு சிறிதளவு வெப்பத்தையும் தாள முடியாமல் உடல் உபாதையால் துன்பப்படுகிறது. ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் செல்ல நேரிடுகிறது. குழந்தையின் உடல்மொழியை பெற்றோர் அறிந்திருந்தால் குழந்தைக்கு இத்தகைய துன்பம் நேரிடுமா?

குழந்தையின் உடல் நலத்தின் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் அவர்களுக்கு அடிக்கடி மருந்துகளைக் கொடுக்காமலிருப்பது நல்லது. சின்னச் சின்ன தானாகவே சரியாகிவிடும் உடல் உபாதைகளுக்கெல்லாம் மருத்துவர், மருந்து என்று பழக்கப்படுத்துவதினால் இரண்டு விதமான பாதிப்புகள் நேரலாம். உடலின் இயற்கையான பாதுகாப்புபடையிலும், உடல் மருத்துவரையும் வெளியிலிருந்து தொடர்ந்து உடலுக்குள் வந்து கொண்டேயிருக்கும் மருந்துகள் ஊனப்படுத்திவிடும். ஊக்கமுடன் செயல்பட விடாமல் எப்போதும் வெளியிலிருந்து உதவியை எதிர்பார்க்கும் நிலைமையை உருவாக்கி விடும். அதாவது இயற்கையான நோயெதிர்ப்புசக்தி குன்றி விடும். இதனுடைய இன்னொரு விளைவு குழந்தை தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டேயிருக்கும்போது மனதளவிலும் பாதிக்கப்படும். ஒருவிதமான மருந்தடிமையாக மாறி விடும் அபாயமும் உள்ளது. தான் ஒரு நிரந்தரமான நோயாளி என்றும் எப்போதும் மருந்துகள் எடுத்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்றும் தோன்றி விடும். எந்தச் சிறிய உடல் உபாதைகளையும் தாங்கிக் கொள்ளும் மனவலிமை இல்லாமல் போகும்.

எனவே பெற்றோர்களுக்கு எது நோய்? எது நலம்? எந்த நோய்க்கு மருத்துவரை அணுக வேண்டும்? எந்த நோய்க்கு மருந்துகள் எடுக்க வேண்டும்? எந்ததெந்த உடல் உபாதைகளுக்கு மருத்துவரோ, மருந்துகளோ தேவையில்லை என்ற ஞானம் வேண்டும். அப்போது தான் எதற்கெடுத்தாலும் மருத்துவமனையை நோக்கி எடுக்கும் படையெடுப்பை நிறுத்த முடியும். குழந்தைகளும் மருந்துகளின் டானிக்குகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவார்கள். இயற்கையான நலமுள்ள குழந்தைகளாக வளருவார்கள்.

Photo-0011_e1

Tuesday 4 September 2012

அமைதியின் வாழ்க்கை

Vector-mythical-creature-1 உதயசங்கர்

ஒரு பேரமைதி சிதறி

பல சிற்றமைதிகளாக

ஒடுங்கிக் கொண்டிருக்கிறது

எந்த ஒரு அமைதிக்கும்

தான் ஏன் அமைதியாக இருக்கிறோம்

என்று தெரியவில்லை

எந்த ஒரு அமைதிக்கும்

தான் எப்படி மௌனமாக்கப்பட்டோம்

என்று தெரியவில்லை

எந்த ஒரு அமைதிக்கும்

தான் எதற்காக ஒரு குண்டூசி

முனையளவும் சப்தம் எழுப்பாமல்

இருக்கிறோம் என்று தெரியவில்லை

அமைதி தன் துயரத்தை

அமைதி தன் அழுத்தத்தை

அமைதி தன் நெருக்கடியை

நாகரீகமாகக் கைக்குட்டையில்

துடைத்து மடித்து வைத்துக் கொண்டது.

வன்முறைகளின் சித்திரவதை பொங்கி

அலையடித்து உயிரைக் காவியபோதும்

கண்ணீரைக் கண்களால் விழுங்கி

யாரும் பார்த்துவிடாமல் மறைத்துக் கொண்டது

வாயிலிருந்து ஒரு சொல் வராமல்

கவனமாக இருந்தது

அமைதி அமைதியாக இருப்பது முக்கியம்

என்று அவர்கள் நினைத்தார்கள்

எனவே

அமைதி அமைதியாக இருந்தது.

பல சிற்றமைதிகள் சேர்ந்து

ஒரு பேரமைதியாகக் கவிந்து கொண்டிருந்தது.

புத்தரின் பல்லில் ரத்தக்கறை.

Monday 3 September 2012

ஓணான் கோட்டை

cameleon உதயசங்கர்

தான் இருப்பது எந்த இடம் என்று சசிக்குப் புரியவில்லை. உள்ளே ஒரே இருட்டு. கொஞ்சநேரத்தில் அவனைச் சுற்றி ஜோடி ஜோடியாய் கண்கள் முளைத்தன. சுற்றிலும் பார்த்த அவன் பயத்தில் கத்தியே விட்டான். அவனைச் சுற்றி ஓணான்களின் கூட்டம். எல்லாம் கண்களை உருட்டிச் சுழற்றி அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. பார்த்து விட்டுத் தலையாட்டி மெல்லச் சிரித்தன. சசி எழுந்து ஓடி விடலாம் என்று நினைத்தான். ஆனால் அவன் ஓணான்களை விடச் சின்னதாக குட்டியூண்டாக மாறியிருந்தானே! அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.

எப்படி இங்கே வந்தான்? பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் ரமேசும், அவனும், சேர்ந்து ஓணான் வேட்டைக்குப் போவார்கள். ஊருக்கு வெளியே உள்ள கருவேலஞ்செடிகளில் உட்கார்ந்து தேமேன்னு கண்களை முந்நூற்று அறுபது டிகிரியும் சுழற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஓணான்களைக் கல்லை விட்டு எறிந்து கொன்று விடுவார்கள்.

சில சமயங்களில் உயிருடன் இருந்தால் அதன் வாலில் சணலைக் கட்டி இழுத்து வருவார்கள். கல்லைக் குறி பார்த்து எறிவதில் ரமேசு கெட்டிக்காரன். ஓணானைக் கண்டுபிடித்துச் சொல்வதில் சசி கில்லாடி.

“ ஏண்டா அதைப் போட்டு வதைக்கிறீங்க..”

என்று யாராவது கேட்டால் வந்தவழியாகத் திரும்பி ஓடிப் போய் விடுவார்கள்.

இப்படித்தான் சசியும் ரமேசும் விடுமுறை நாட்களில் தங்களுடைய பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார்கள்.

இன்று ரமேசு அவனுடைய அத்தை வீட்டுக்குப் போய் விட்டான். அதனால் சசி தனியாகக் கால்போன போக்கில் நடந்து அவர்கள் எப்போதும் கூடுகின்ற அந்தக் கருவேலங்காட்டுக்கு வந்து விட்டான்.

அங்கே ஒரு செடியில் ஒரு சில்லான் நின்று கொண்டிருந்தது. இவனைக் கண்டதும் அது இவனையே வைத்த கண் வாங்காமல் தனது பெரிய விழிகளை உருட்டிப் பார்த்துத் தலையசைத்துக் கொண்டிருந்தது. அது தலையசைப்பது இவனை வா வாவென்று கூப்பிடுவது போல இருந்தது.

அவன் அதற்குப் பின்புறமாகப் போய் அதைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் பதுங்கிப் பதுங்கி நடந்து போனான். அப்போது தான் அது நடந்தது. காலுக்குக் கீழே உலகமே சரிவதைப் போல இருந்தது சசிக்கு. அவ்வளவு தான் தெரியும். அதற்குப் பிறகு……..

“ ஓணான் கோட்டைக்குத் தங்களை வரவேற்கிறோம்”

என்று கரகரப்பான ஒரு குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தான். அங்கே செதில்கள் நிறைந்த மடிப்பு மடிப்பாய் சதை தொங்கிய ஒரு வயதான ஓணான் உட்கார்ந்திருந்தது.

நிமிடத்துக்கு ஒரு முறை அதன் நிறமும் மாறிக் கொண்டேயிருந்தது. இதைக் கவனித்த சசிக்குத் திகிலாக இருந்தது. கைகாலெல்லாம் உதறல் எடுத்தது. அந்த இருட்டு பழகுவதற்குச் சிறிது நேரம் பிடித்தது கண்கள் இருளுக்குப் பழகியதும் சுற்றுமுற்றும் கவனித்தான். ஒரு சில்லான் அவனைப் பார்த்துக் கையை நீட்டி,

” ஐயா.. இவரும் இவருடைய நண்பரான ரமேசும் நம்முடைய இனத்தையே அழித்துவிடப் போவதாகச் சபதம் செய்திருக்கிறார்கள் போலும். நாம் இவர்களுக்கு எந்தத் தொந்திரவும் தந்ததில்லை. எந்த மனிதர்களுக்குமே நாம் தொந்திரவு தந்ததில்லையே.. ஆனால் இவர்கள் வாரத்துக்கு ஒரு முறை நம்முடைய குடும்பத்தில் சிலரைப் பிடித்து சித்திரவதை செய்து கொன்று விடுகிறார்கள். இப்போது இவன் தான் கிடைத்தான். ஆகவே இவனுக்கு நாம் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்..”

என்று கூறியது.இதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த வயதான ஓணான் தனது தலையை ஆட்டியது. அப்போது இன்னொரு ஓணான் எழுந்து நின்றது. அதைப்பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அதன் முதுகில் இருந்த செதில்கள் சிலிர்த்தன. எழுந்து நின்று கொண்டு உரத்த குரலில்,

“ இவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.. இவன் நம் கூட்டத்துக்கு என்னென்ன கொடுமைகள் செய்தானோ அதையெல்லாம் இவனுக்கு நாமும் செய்ய வேண்டும்..”

என்று கூப்பாடு போட்டது. கோபத்தில் பேசியதால் அதன் குரல் சமயங்களில் கீச்சிட்டது. அதைப் பார்க்கவே கொடூரமாக இருந்ததால் சசி பயந்து போனான்.

சசியும் ரமேசும் சேர்ந்து சணலை ஓணான்களின் வாலில் கட்டி இழுத்திருக்கிறார்கள். ரமேசு அவனுடைய தாத்தாவிடமிருந்து மூக்குப்பொடி மட்டையைத் தூக்கிக் கொண்டு வருவான். அதை ஓணான் மூக்கில் தூவுவார்கள். காரம் தாங்காமல் அது துடிதுடித்துச் சுற்றிச் சுற்றி வருவதைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள். கல்லைக் கொண்டு எறிந்து காயப்படுத்தியிருக்கிறார்கள். இப்படிப் பலவிதமான சித்திரவதைகளைச் செய்திருக்கிறார்கள். அதெல்லாம் அப்போது விளையாட்டாகத் தெரிந்தது. அதே கொடுமைகள் தனக்கும் நேர்ந்தால் நினைக்கவே சசிக்குப் பயமாக இருந்தது. அய்யோ..

பயத்தில் அழுகை பொங்கி வந்தது. இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே என்று நடுங்கினான். வயதான அந்த ஓணான் மடிப்பு மடிப்பாகத் தனது தாடையில் தொங்கிக் கொண்டிருந்த சதையைத் தடவிக் கொண்டே யோசித்தது. அதன் வாயிலிருந்து என்ன வார்த்தை வரப்போகிறதோ என்று சசி பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் சென்றது.

“ ஏன் தம்பி அப்படிச் செய்தாய்? “ 

என்று மிகவும் பொறுமையாகக் கேட்டது அந்த வயதான ஓணான். சசியால் பதில் சொல்லவே முடியவில்லை. வாயிலிருந்து வார்த்தை வர மறுத்தது. சும்மா ஒரு விளையாட்டு தான் என்று சொல்ல மனம் வரவில்லை. அவனுக்கே தான் செய்த கொடுமைகள் புரிந்தது. என்ன சொல்லித் தப்பிக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தான். ஒன்றும் தோன்றவில்லை.

பயத்தில் இப்படியும் அப்படியுமாகத் தலையை ஆட்டினான்.வயதான ஓணான் மீண்டும் தனது கரகரத்த குரலில்,

“ தம்பி, இந்த பூமியில் இயற்கை படைத்த எல்லாஉயிர்களும் ஏதோ ஒரு வகையில் பூமியின் உயிர்ச்சங்கிலித் தொடரில் முக்கியமானவை தான். எந்தச் சிறு உயிரும் இழிவானதோ.. முக்கியமில்லாததோ கிடையாது. எப்போது இந்த உயிர்ச்சங்கிலித் தொடர் அறுந்து போகிறதோ அப்போது பெருங்குழப்பம் நேர்ந்து விடும் என்பது தெரியுமா?”

என்று சொன்னது. சசிக்கு அவனுடைய அறிவியல் ஆசிரியர் பேசுவது போலத் தோன்றியது.

“ மனிதர்கள் மட்டும் தான் இந்த பூமியில் வாழவேண்டும் என்று நினைத்தால் அது முட்டாள்த் தனம்.. பல்லி இனத்தைச் சேர்ந்த நாங்கள் எறும்புகள், பூச்சிகள், கொசுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி உயிர்ச்சமநிலைக்கு உதவுகிறோம்..என்பது உங்களுக்குத் தெரியுமா?”

என்று அதட்டலாகக் கேட்டது அந்த வயதான ஓணான். சசி பயத்துடன் பள்ளிக்கூடத்தில் தலையாட்டுவது போலத் தனது தலையை ஆட்டினான். அவனுடைய பயந்த முகத்தைப் பார்த்த அந்த வயதான ஓணான் மென்மையான குரலில்,

“ பயப்படாதே..சசி.. நாங்கள் மனிதர்களைப் போல அவ்வளவு மோசமானவர்கள் அல்ல.. உன்னை ஒன்றும் செய்யமாட்டோம்.. நீ எவ்வளவு நல்ல பையன் என்பது எங்களுக்குத் தெரியும்..”

என்று சொல்லியபடியே சசியின் தலையைத் தடவிக் கொடுத்தது. சசி விம்மினான். அவனுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியது. அதைக் கண்ட ஓணான்கள் எல்லாம் சேர்ந்து கோரஸாக,

“ சசி..அழாதே.. சியர் அப் பாய்… என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டே அவனைச் சுற்றி ஆட ஆரம்பித்தன. கோமாளித்தனமான அவற்றின் ஆட்டமும் நிறங்களை மாற்றி மாற்றிச் செய்த சேட்டைகளும் சசியைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றின. அவன் முகத்தில் மகிழ்ச்சி பூத்தது. சிரிக்க ஆரம்பித்தான். சிரித்தான்..சிரித்தான்.. அப்படிச் சிரித்தான்.

கிச்சு கிச்சு மூட்டியது போல விழுந்து விழுந்து சிரித்தான். கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. கண்ணீர் கண்களை மறைத்தது.

கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தபோது ஒரு கருவேலஞ்செடியின் நிழலில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். அருகில் ஒரு எறும்புப் புற்று இருந்தது. ஓணான்கள்.. அவற்றைக் காணவில்லை.

எறும்புப்புற்றிலிருந்து வெளியே வருவதும் போவதுமாக இருந்த எறும்புகளைப் பார்த்து சந்தோஷத்துடன் டாட்டா காட்டினான். தெளிவான மனத்துடன் வீடு திரும்பினான்.

மறுநாள் ஊரிலிருந்து வந்த ரமேசு ஓணான் அடிக்கப் போகலாம் வாடா என்று கூப்பிட்ட போது சசி மறுத்து விட்டான். அது மட்டுமில்லாமல் ரமேசையும் போகக்கூடாது என்று சொல்லி வேறு விளையாட்டு விளையாடக் கூட்டிக் கொண்டு போனான்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் ரமேசிடம் ஓணான் கோட்டையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. சொன்னால் மட்டும் ரமேசு இதையெல்லாம் நம்பவா போகிறான்?

Photo-0011_e1_u

Saturday 1 September 2012

பெருமாள்சாமியின் பேருந்துப் பயணம்

 

உதயசங்கர்

images (4)

பெருமாள்சாமிக்கு இந்த உலகமே எதிரியாகத் தோன்றியது.அப்படியும் எளிதாகச் சொல்லிவிட முடியாது. மற்றவர்களை விட பேருந்தில் பயணம் செய்கிறவர்கள் தான் முக்கியமான எதிரிகளாகத் தெரிகிறார்கள். அப்படி மொத்தமாகச் சொல்லிவிட முடியுமா என்று பெருமாள்சாமியிடம் கேட்டால் இல்லையில்லை, பேருந்தில் உறங்குபவர்கள் தான் என்று கோபத்தின் உச்சியிலிருந்து மெல்ல மெல்லக் கீழிறங்கி சமதளத்துக்கு வருவான். பெருமாள்சாமியின் துரதிருஷ்டம் அவனுடைய வீடு கோவில்பட்டியில் இருந்தது. அலுவலகம் திருநெல்வேலியில். அவன் வேலை பார்க்கிற அலுவலகத்தின் எந்தப் பிரிவும் கோவில்பட்டியில் கிடையாது. மாற்றலாகி வருவதற்குத் துளியும் வாய்ப்பில்லை. சரி. அதனாலென்ன இவன் குடும்பத்தோடு திருநெல்வேலிக்குப் போய் விடலாமே என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள். அதுவும் முடியாது. ஏனென்றால் அவன் மனைவி வேலை பார்க்கும் அலுவலகம் கோவில்பட்டியில் மட்டுமே இருக்கிறது. திருநெல்வேலியில் கிடையாது. இதென்னடா அதிசயம் என்று ஆச்சரியப்படுகிறீர்கள், இல்லையா! இதைவிட ஆச்சரியங்களாலும் அதிசயங்களாலும் இந்த உலகம் நிரப்பப்பட்டிருக்கிறதே. இதனால் வாழ்நாளில் பாதியைப் பிழைப்புக்காக பிரயாணத்திலேயே கழித்துக் கொண்டிருக்கும் ஏராளமான அலுவலர்களின் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராகி விட்டான்.

காலையில் உற்சாகமாய் எரியும் ஜோதி ஏந்தி கிளம்பி மாலையில் ஜோதி அணைந்து கரிக்கட்டையாகி எப்படா படுப்போம் என்று படுக்கையில் விழும் ஜடமாகி விடுவதைப் பற்றிக் கூட பெருமாள்சாமி அலட்டிக் கொண்டதில்லை. அப்புறம் என்ன என்று கேட்க வருகிறீர்கள். மீண்டும் இந்தக் கதையின் முதல் ஐந்து வரிகளை ஞாபகப் படுத்திக்கொள்ளுமாறு பெருமாள்சாமி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறான். சரி பேருந்து தானே பிரச்னை. ரயிலில் போக வேண்டியது தானே என்று நீங்கள் வழங்குகிற ஆலோசனைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறான் பெருமாள்சாமி. ஆனால் அவன் வீட்டிலிருந்து ரயில்நிலையம் வெகுதூரத்தில் இருந்தது அல்லது ரயில்நிலையத்திலிருந்து வெகுதூரத்தில் அவன் வீடு கட்டும்படியாகி விட்டது. அதற்கு அவன் என்ன செய்ய முடியும்? அப்படி ஒருவேளை அவன் துணிந்து அவனுடைய வீட்டிலிருந்து ரயில்நிலையம் புறப்பட்டுச் செல்வானேயானால் அதுவே ஒரு பெரும் பிரயாணமாகி விடும். அது மட்டுமல்ல, நகரங்களின் எல்லைகள் விரிவதைத் தொடர்ந்து தோன்றிய புதிய மற்றும் கூடுதல் பேருந்து நிலையத்திற்கருகில் அவன் ஏற்கனவே கட்டியிருந்த வீடு அமைந்து விட்டது. வீட்டு வாசலில் வந்து நிற்கும் பேருந்தில் ஏறாமல் ஒரு பெரும் பிரயாணம் செய்து ரயில்நிலையம் சென்று இன்னுமொரு பெரும் பிரயாணம் செய்து திருநெல்வேலிக்குச் செல்வது உசிதமல்ல என்றபடியால் பெருமாள்சாமி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தான்.

அவசரமில்லாமல் வீட்டை விட்டுப் புறப்பட்டு கோவில்பட்டியிலிருந்தே புறப்படுகிற பேருந்தில் இடம் பிடிப்பான். பேருந்தில் ஏறி நிதானமாக ஒவ்வொரு இருக்கையிலும் இருக்கக் கூடிய ஆட்களின் உயரம், எடை, பருமன், இவற்றை சூட்சுமக் கண்களால் அளந்து சராசரியாகத் தன்னைப் போலுள்ள நபரின் அருகில் இடம் இருந்தால் அதில் உட்கார்ந்து கொள்வான் பெருமாள்சாமி. சில சமயம் சன்னலோர இருக்கை கிடைத்து விட்டால் அதில் உட்கார்ந்து கொண்டு பக்கத்து இருக்கையில் தன்னுடைய அலுவலகப்பையை வைத்து இடத்தை ஆக்ரமித்துக் கொள்வான். யார் கேட்டாலும் ஆள் வருது என்பான். தனக்குப் பொருத்தமான ஜோடி நபர் வந்தால் மட்டுமே அவர் இந்த இருக்கையைக் கவனிக்காவிட்டாலும் கூட மெனக்கெட்டுக் கூப்பிடுவான்.

“ சார்..சார்.. இங்க வாங்க.. இடம் இருக்கு..”

அவர் ஒரு கணம் குழம்பிப் போவார். தெரிந்த நண்பர் தானோ என்று அவன் முகம் பார்த்து சிரிக்க முயற்சி செய்வார். முன்பின் தெரியாத நபரென்று உணர்ந்ததும் புன்னகை உறைந்த முகத்துடன் அப்படியே உட்காருவார். முன்பின் தெரியாத நபர் வலுக்கட்டாயமாகத் தன்னை அழைத்து உட்கார வைப்பதில் மர்மங்கள் ஏதும் மறைந்திருக்குமோ என்ற சந்தேகம் அவர் தலைக்குள் குடைய அடிக்கடித் திரும்பி பெருமாள்சாமியைப் பார்த்து முறைத்துக் கொண்டே எச்சரிக்கையாக வருவார். ஆனால் பெருமாள்சாமி இதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டான். அப்படியே சன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவான். அவன் முகத்தில் ஒரு ஆபத்தைத் தவிர்த்த திருப்தி தவழும்.

சிலநாட்களில் இந்த அழைப்பே ஆபத்தைக் கொண்டு வருவதும் உண்டு. பேருந்து இன்னும் முழுதாகக் கிளம்பியிருக்காது. மெல்ல அவன் தோள்பட்டையில் ஒரு தலை உரசும். திரும்பாமலேயே அவனுக்குத் தெரிந்து விடும். பேருந்து இஞ்சினின் உர்ர்…உர்ர்.. என்ற சத்தம் கேட்டதுமே உறங்கி விழுகிற ஆட்களும் இருக்கிறார்களே. பெருமாள்சாமி என்ன செய்வான்? அவனுக்கு பேருந்தில் உறக்கமே வருவதில்லை. இரவு விடிய விடிய முழித்திருந்தாலும் பயணத்தில் உறக்கம் வருவதில்லை. நீங்கள் நினைப்பதைப் போல அவனுக்கு பேருந்தில் உறங்குபவர்களின் மீது பொறாமையோ, கோபமோ, விரோதமோ, கிடையாது. அப்படி யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று பெருமாள்சாமி அன்போடு கேட்டுக் கொள்கிறான். அவன் தோளில் சாய்ந்து உறங்குபவர்களைக் கண்டு தான் அவன் பயப்படுகிறான்.

அவன் அப்படிப் பயப்படுவதற்குக் காரணமில்லாமல் இல்லை. ஒரு தடவை அவனருகில் உட்கார்ந்திருந்தவர் மெல்ல மெல்லத் தலையாட்டித் தூங்கிக் கொண்டே வந்தார். தலையாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வந்து அவன் தோளில் வந்து முட்டி ஓய்வு பெற்றது. அப்படியே தன் உடல்பாரத்தை முழுவதுமாய் பெருமாள்சாமியின் மீது சாய்த்து அயர்ந்து உறங்கி விட்டார். அவனால் அசையக் கூட முடியவில்லை. பேருந்து நிறுத்தங்களோ, சடன் பிரேக்குகளோ, அவனுடைய நெளிப்புகளோ எதுவும் அவரை எழுப்பவில்லை. அவனும் ஒன்றிரண்டு முறை விரல்களால் தொட்டுத் தட்டியெழுப்பினான். ஆனால் அவரோ அவருடைய வீட்டின்படுக்கையறையில் இரவின் இருளில் தன்னை மறந்து உறக்கத்தின் ஆழத்தில் மூழ்கிக் கிடப்பவரைப் போல உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பவே முடியாதோ என்ற பயம் அவனுக்குள் வேர் விட்டுக் கிளை பரப்பிக் கொண்டிருந்தது. ஆனால் என்ன ஆச்சரியம்!

“ தாழையூத்து.. தாழையூத்து… தாழையூத்து டிக்கெட்டெல்லாம்.. எந்திரிச்சி வாங்க..”

என்ற நடத்துநரின் குரல் கேட்டது தான். சட்டெனக் கண்களைத் திறந்து அதுவரை எதுவுமே நடக்காதது போல எழுந்தவர் பெருமாள்சாமியை ஓரக்கண்ணால் கூடப் பார்க்காமல் விறுவிறுவென்று வாசலுக்குப் போய்விட்டார். அவர் எழுந்து போனபிறகுதான் பெருமாள்சாமி கவனித்தான். தோள்பட்டையில் ஈரம் பிசுபிசுத்தது. குனிந்து பார்த்தால் தோள்பட்டை முழுவதும் நல்ல திக்காய் எண்ணெய்க்கறையும் இலவச இணைப்பாக ஜொள்ளையும் வடித்து ஒரு மேப்பை வரைந்து விட்டுப் போயிருந்தார் அந்தப் புண்ணியவான். பாருங்கள் நீங்களே முகத்தைச் சுளிக்கிறீர்கள். அப்படியென்றால் பெருமாள்சாமிக்கு எப்படியிருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்களேன்.

இது தான் இப்படியென்றால் இன்னொரு முறை வேறு இடமே கிடைக்காமல் மூன்று பேர் உட்காரும் இருக்கையின் நடுவில் மாட்டிக் கொண்டான். இரண்டு பக்கங்களிலும் கிங்கரர்கள் போல உட்கார்ந்து கொண்டு அவன் மீதே இடதும் வலதுமாக உடலைச் சாய்த்து உறங்கிக் கொண்டே வந்தார்கள். அவன் அப்படியே சப்பளிந்து போய்விட்டான். திருநெல்வேலியில் இறங்கும் போது உடம்பு அப்படி வலித்தது. அலுவலகம் சென்று விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் திரும்பிவிட்டான். இது மட்டுமில்லை. சிலருடைய தலை ஆடுகிற வேகத்தைப் பார்க்கும் போது எந்த நேரத்தில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வந்து நம்மீது மோதுமோ என்று பயமாக இருக்கும். ஒவ்வொரு கணமும் அந்தத் தாக்குதலைச் சமாளிக்கவும் தடுக்கவும்,அவன் தயாராக இருக்க வேண்டும். அதற்காகப் பிரயாணம் முழுவதும் வேறு எந்த சிந்தனையுமின்றி ஆடுகிற அவர்களது தலையையே பார்த்துக் கொண்டு வந்திருக்கிறான் பெருமாள்சாமி. எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தொடர்ந்து இப்படியே உங்களுக்கு நடந்து கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதைத்தான் பெருமாள்சாமியும் செய்தான்.

பெருமாள்சாமி சில யுத்த வியூகங்களை வகுத்தான். சராசரிக்கும் குறைவான உயரமும், சராசரிக்கும் குறைவான எடையும் சராசரியை விட மெலிந்த பூஞ்சையான உடலமைப்பும் கொண்ட அவனால் நியூட்டனின் மூன்றாவது விதியான சமமான எதிர்வினை புரிய முடியாது. ஆனால் உறக்கத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் உபாயங்களை யோசித்தான். முதலில் உட்காரும்போதே முன்னெச்சரிக்கையாக ஆட்களைத் தேர்வு செய்து உட்கார்ந்து கொள்வது ஒரு உபாயம். இதில் சில சமயங்களில் தோல்வி கிடைக்கிறது. ஏனென்றால் பேருந்து நகரும் வரை யாருடைய சுயரூபத்தையும் கண்டு பிடிக்க முடிவதில்லை. இரண்டாவது உபாயமாக அருகில் உட்கார்ந்திருப்பவர் தூங்கி மேலே சாயத்தொடங்கும் போது சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து விடுவது. அப்படி எழுந்து விட்டால் சாய்பவரின் சாய்வுப்பரப்பின் மையம் மாறி அவர் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல அப்படியே சாய்ந்து விழுந்து திடுக்கிட்டு, எழுந்து உட்கார்ந்து சுதாரிப்பதற்குள் தன் இருக்கையில் உட்கார்ந்து பாவம் போல வேறு எங்காவது பார்த்துக் கொண்டிருப்பான். விழுந்து எழுந்தவருக்கு என்ன நடந்ததென்றே புரியாது. சுற்றிச் சுற்றிப் பார்ப்பார். அவனையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வருவார். அதன் பிறகு கண்ணுக்குத் தெரியாத சதிவலையில் சிக்கி விடுவோமோ என்ற பயத்தில் உறங்கமாட்டார்கள். ஒரு வேளை திரும்பவும் அப்படி உறங்கினால் இதேமாதிரி வைத்தியத்தை ஒன்றிரண்டு முறை செய்து பார்ப்பான் பெருமாள்சாமி. ஆனால் இதிலும் ஒரு ஆபத்தைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு முறை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாய் சாய்ந்து விழுந்தவர் எழுந்திரிக்கவேயில்லை. அப்படியே உறங்கிவிட்டார். எழுப்பவே முடியவில்லை. பெருமாள்சாமி தன் இருக்கையைப் பறி கொடுத்துவிட்டு நின்று கொண்டே வந்தான்.

இப்படியில்லாமல் இரண்டு பேருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு இரண்டு பேரும் உறங்கி விழுந்தால் என்ன செய்வது என்று கேட்க நினைக்கிறீர்கள் இல்லையா? வேறென்ன ஆயுதப்பிரயோகம் தான். பயந்து விட வேண்டாம். அப்படிப் பயப்படுகிற அளவுக்கு பெருமாள்சாமி பயங்கரவாதியுமில்லை. அவனாகவே சுயமாக யோசித்துச் செயல்படுத்தும் தற்காப்புக்கலை தான் இந்த ஆயுதப்பிரயோகம். இரண்டு கட்டைவிரல் நகங்களையும் வெட்டிக் கூராக்கிக் கொள்வான். இரண்டு பக்கங்களிலும் அவனுடைய ஏரியாவின் எல்லைகளை மானசீகமாக வகுத்துக் கொள்வான். அப்புறமென்ன. அந்த எல்லைக்கோடுகளின் ஆரம்பத்தில், ஜேம்ஸ்பாண்ட் தன் இரண்டு கைகளில் துப்பாக்கிகளோடு நெஞ்சுக்குக் குறுக்கேமறுக்கேக் கைகளைக் கட்டிக் கொண்டிருப்பதைப் போல இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டிருப்பான். இதில் முக்கியமான விஷயம் ஆமை தன் ஓட்டுக்குள் தலையை மறைத்துக் கொள்வதைப் போல கட்டைவிரல் ஆயுதங்களை மற்ற நான்கு விரல்களுக்குள் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவரவர் எல்லைகளைத் தாண்டி அவனுடைய ஏரியாவில் யாராவது தலையைச் சாய்த்தால் போதும். சுளீரென்று மின்சாரம் தாக்கியதைப் போலத் துள்ளி எழுந்து விடுவார்கள். தாக்கியது எது? தாக்கியவர் யார்? என்று அவர்களால் கண்டுபிடிக்கவே முடியாது. முகத்தைத் தடவிக் கொண்டே சந்தேகத்துடன் சுற்றும்முற்றும் பார்த்தபடியே வருவார்கள்.

பெருமாள்சாமி இந்தக் கொரில்லா முறைத் தாக்குதல்களுக்குப் பின்பு செய்வதெல்லாம் எதுவுமே தெரியாதது போல முகபாவனையை மாற்றிக் கொள்வான். இத்தனை வன்முறை தேவையா என்று கேட்பவர்களிடம் பெருமாள்சாமி தன்னுடைய பதினைந்து ஆண்டுகால பேருந்து பிரயாண வரலாற்றையும் அதில் அவன் பெற்ற விழுப்புண்களைப் பற்றியும் சொல்வதற்குத் தயார் என்று தெரிவித்துக் கொள்கிறான். என்ன எழுந்து விட்டீர்கள்! பயப்படாதீர்கள். இப்போதல்ல. நீங்கள் விரும்பினால் உங்களுக்கு தொலைக்காட்சியின் மெகா தொடர்கள் மீது சலிப்பேற்பட்டாலோ, எப்.எம்.மின் தமிங்கிலிஷ் குரல்களினால் எரிச்சல் ஏற்பட்டாலோ, சினிமா செய்திகளைத் தவிர வேறு எதையும் பிரசுரிக்காத பத்திரிகைகள் மீது கோபமேற்பட்டாலோ, நடிகர்களின் முதலமைச்சர் கனவுகளினால் வருத்தம் ஏற்பட்டாலோ ஆய்ஞ்சு ஓய்ஞ்சு உட்கர்ந்திருக்கும் போது பெருமாள்சாமி அந்த வரலாற்றைச் சொல்வதற்குத் தயாராக இருக்கிறான். அதோடு அது எந்த வகையிலும் உங்களுக்குப் போராடிக்காது என்று மினிமம் கேரண்டி தருகிறான். சரி இந்த யுத்தவியூகத்திலாவது வெற்றி ஏற்பட்டதா என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறீர்கள் தானே. இல்லை என்று சொல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையில் இருக்கிறான் பெருமாள்சாமி. இதிலும் எதிர்பாராத விபத்து நடந்தது. மோதிய முகத்தின் வேகமோ, முரட்டுத்தனமோ கட்டைவிரல் நகம் பாதியாய் ஒடிந்து வலி உயிர் போய் விட்டது நகக்கண் ஓரமெல்லாம் ரத்தம் துளிர்த்து விட்டது. பேனா பிடித்து எழுதவே ஒரு வாரம் ஆகி விட்டது.

அவனும் அவனுடைய யுத்ததந்திரங்களை மாற்றிக் கொண்டேயிருந்தான். உறங்கிச் சாய்பவர்களைத் தட்டி எழுப்பித் திட்டுவது, முறைப்பது, முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்வது, என்று பலவழிகளை மாற்றி மாற்றி செய்து பார்த்தான். சில சமயங்களில் இந்த அவஸ்தையிலிருந்து தப்பிப்பதற்காக நின்று கொண்டே வந்திருக்கிறான். கால் வலிக்கும் என்றாலும் நிம்மதியாய் இருந்தது. ஆனால் நின்று கொண்டும் உறங்கிச் சாய்பவர்களை என்ன செய்ய முடியும்? அன்றாடம் பிரயாணம் ஒரு பெரிய பிரச்னையாகி விட்டது பெருமாள்சாமிக்கு. யாரிடம் சொன்னாலும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

கடைசியில் ஒரு சிறந்த வழியைக் கண்டுபிடித்தான். நடத்துநர் உட்காரும் இருவர் இருக்கை காலியாக இருக்கும் பேருந்தில் மட்டும் பிரயாணம் செய்வது என்று முடிவு செய்தான். அதற்காக எவ்வளவு நேரமானாலும் காத்திருந்தான். நடத்துநர் அமரும் இருவர் இருக்கையில் அமர்ந்து விட்டதும் பிரச்னை தீர்ந்து விட்டது. அருகில் உட்கார்ந்திருக்கும் நடத்துநரால் அவ்வளவு குறுகிய பிரயாணத்தில் உறங்கமுடியாதே. பிரயாணம் முழுதும் ஆட்களை ஏற்றி இறக்கவும், டிக்கெட் கொடுக்க, கணக்கு பார்க்க என்று வேலை சரியாக இருக்குமே. எப்படி இந்த எளிய யோசனை தன் மூளைக்கு எட்டாமல் போயிற்று என்று பெருமாள்சாமி தன்னையே திட்டிக் கொண்டான். புது உற்சாகத்துடன் ஒரு வாரகாலம் பிரயாணங்களை வெற்றிகரமாக எந்தவித யுத்தபயமுமின்றி நடத்தினான் பெருமாள்சாமி.

இன்று திங்கட்கிழமை. பள்ளிக்கூடம் போகத் தயங்குகிற பிள்ளைகளைப் போல அலுவலகம் செல்லத் தயங்கித் தயங்கி ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து நடத்துநர் அமரும் இருவர் இருக்கையில் இடம் பிடித்து உட்கார்ந்தான். டிக்கெட் போடுவிட்டு அருகில் வந்து உட்கார்ந்த நடத்துநர், கணக்குப் பார்க்க ஆரம்பித்தார். அவன் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே யோசித்தான். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருந்து விடுவதில்லை. மாற்றம் என்பது ஒன்றே மாறாதது. இப்படி யோசித்ததும் இந்தச் சிந்தனையை அவனே புதிதாகக் கண்டுபிடித்ததைப் போல சந்தோஷத்துடன் வெளியே பின்னால் ஓடிக்கொண்டிருந்த மரங்களைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

அப்போது ஒரு தலை அந்தப் புன்னகையின் மீது மெல்லச் சாய்ந்து இறங்கிக் கொண்டிருந்தது.