Tuesday 19 November 2019

ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்

ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்


தமிழில் குழந்தை ப்படைப்பாளிகள் உருவாகவில்லையே என்ற கவலை நெடுநாளாக இருந்தது. மலையாளத்தில் புகழ்பெற்ற அபிமன்யுவின் கதைகளை மொழிபெயர்த்த போது குழந்தைகளின் மாய யதார்த்த உலகத்தில் பெரியவர்களின் வறண்ட யதார்த்தப்பார்வைகளுக்கும், இலக்கணம் வழுவாத கதைகளுக்கும் அறிவுரைகளுக்குமே கொஞ்சமும் இடமில்லை என்று தோன்றியது.
அபிமன்யு வின் கதைகளில் கலையின் வித்துகள் முளைவிடத் தொடங்கியிருந்தன.
குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று தோன்றியது.
நீண்ட காலத்துக்குப் பின்பு
பஞ்சு மிட்டாய் 9 ஆவது இதழில் வெளிவந்திருக்கிற நான்கு குழந்தைப்படைப்பாளிகளின் கதைகளைப் படித்தவுடன்
அபிமன்யுவைப் படிக்கும்போது ஏற்பட்ட பரவச உணர்வு ஏற்பட்டது.
குழந்தைகளின் கட்டற்ற கற்பனைத்திறன் எப்படி யெல்லாம் ஒரு புனைவை உருவாக்குகிறது என்று வாசிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
தமிழிலும் அசலான குழந்தைப்படைப்பாளிகள் உருவாகி விட்டார்கள் என்று பெருமிதம் தோன்றியது.
1. ஆலமரமும் குயிலும்- ரியா
சூரியன் மரங்களிடம் அவர்களுடைய ஆசைகளைக் கேட்பதற்கு  குயிலை தூது அனுப்புகிறது. இந்தக்கதை முடிய வில்லை. ஆனால் கதையின் முடிவில் பல ஆயிரம் கதைகளை எழுதுவதற்கான கலையின் முடிவின்மை தரிசனம் தருகிறது.
2. தூரத்துல பெரிய காட்டுல - இசை
காட்டில் பசி வந்தால் நரி என்ன செய்யும்?
குட்டி நத்தை, குட்டி ஆமை, குட்டி யானை, இவர்கள் உணவு இருக்குமிடத்தைச் சொல்கிறார்கள். குட்டிவீட்டில் இருக்கும் உணவைச் சாப்பிடுகிறது நரி. கவனியுங்கள்! இந்தக் கதையில் எல்லாமே குட்டியாக இருக்கிறது. நரியின் பயணம் பெரிய காட்டில் நடக்கிறது. நரியை யாரும் வஞ்சிக்கவில்லை. நரியும் யாரையும் வஞ்சிக்கவில்லை. நரியை தந்திரமான மிருகம் என்று யாரும் ஒதுக்கவில்லை. நரியும் தந்திரங்களென்று எதையும் செய்வதில்லை.
 நரிக்குப் பசிக்கிறது. எல்லோரும் வழி சொல்கிறார்கள். குழந்தைமையின் களங்கமற்ற பரிசுத்தமான மனமே இந்தக்கதையில் துலங்குகிறது.
பசியினால் வாடும் நரி என் அன்புக்குரியதாகி விட்டது. இதைவிட கலை வேறு என்ன செய்ய வேண்டும்?

3.நாயின் மகிழ்ச்சி- ஸ்ரீநிதி
நம்மைச் சுற்றியிருக்கும் யதார்த்த உலகத்தை கண்ணாடி என்ற படிமமாக்கி நாய் என்ற கதாபாத்திரத்தின் வழியே சமூகத்தின் குணாதிசயத்தைச் சொல்லியிருக்கும் விதம் ஆச்சரியமூட்டுகிறது. ஏழு வயது குழந்தையின் மனதில் எப்படி இப்படி படிமங்கள் தோன்றுகின்றன?
கண்ணாடி வெறும் கண்ணாடி மட்டுமல்ல. நாய் வெறும் நாயல்ல. வாசிக்க வாசிக்க எத்தனையோ படிமங்கள் உங்களை அழைத்துக் கொண்டிருக்கும். என்ன ஆச்சரியம்?

4. யாரு தைச்ச சட்டை- ரமணி
குழந்தைகளின் உலகத்தில் பறவைகளின் நாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி தான் கதை.
இந்தக் கதையின் அதிசயமே பறவைகளின் பெயர்களை எழுதியுள்ள விதம், எந்தப் பறவை தையல் தைக்கும் என்ற ஞானம், கதையின் முடிவு.
கதை எளிய பறவையான தையல்சிட்டு செய்த உதவிக்கு இன்னும் பரிசுகள் கிடைக்கவில்லை. அதோடு இன்னமும் அது உழைத்துக் கொண்டிருக்கிறது. பரிசு கொடுக்க ராஜா மறந்து விட்டார். எந்த ராஜா தான் ஞாபகத்தில் வைத்திருப்பார்? எல்லோரும் மறதிக்காரர்கள் தானே. அவரிடம் யார் ஞாபகப்படுத்துவார்கள்?
கதை நிகழ்காலத்தில் நடக்கிறது. கதை இன்னும் முடியவில்லை. வாசிக்கிறவர்களுக்கு ஏராளமான  திறப்புகளைத் தரக்கூடிய கதை.
சமூகப்பார்வையில், சொந்தப்பார்வையில் என்று வாசிப்பு முறைகளை மாற்றினால் வேறு வேறு அர்த்தங்களைத் தரும் கதை.

என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

எங்கே இருந்தார்கள் இந்தக்குழந்தைகள்?
எப்படி எழுதினார்கள்?
மேலே சொன்ன கருத்துகளையெல்லாம் குழந்தைகள் யோசித்து எழுதினார்களா என்று கேட்டால் இல்லை என்பார்கள்.
கலையின் மகத்துவமே அதன் முடிவின்மை தான். அந்த முடிவின்மையின் ஒரு துளி இந்தப் படைப்பாளிகளிடம் இருக்கிறது.
குழந்தைகள் பிரபஞ்சத்தின் மழைத்துளிகள். அதன் பரிசுத்தம் அவர்களுடைய மனதில் என்றென்றும் இருக்கிறது. நாம் தொலைத்த குழந்தைமையின் கல்லறையிலிருந்து முகிழ்த்த பூக்கள். பூக்களுக்கு மணம் வீச
மட்டும்தான் தெரியும்.
ஒரு தீவிர அர்ப்பணிப்புணர்வோடு பஞ்சு மிட்டாய் இதழை கொண்டுவரும் ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துகள்!
ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்!

Friday 8 November 2019

துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்


துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்

உதயசங்கர்

இரண்டு தண்டவாளங்களுக்கு நடுவில் அந்தத் தலை விரிந்த கூந்தல் சுற்றிலும் விசிறிக்கிடக்க வானத்தை அண்ணாந்து பார்த்தபடி கிடந்தது. வெள்ளை வெயிலில் மேகங்கள் தங்களை அழகு பார்த்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தன. அந்த மேகங்களை வேடிக்கை பார்க்கிற மாதிரி பாதிக்கண்கள் திறந்திருக்க உதடுகளில் ஒரு வேதனை என்றோ புன்னகை என்றோ சொல்லமுடியாத ஒரு பாவத்துடன் கிடந்த அந்தத்தலையைத் தண்டவாளப்பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்த சண்முகம் தான் முதலில் பார்த்தான். முகத்தில் ரத்தத்துளிகளின் சிவப்பு சிறுகுழந்தை சாந்துப்பொட்டை முகத்தில் கன்னாபின்னாவென்று இழுவிக் கொண்டதைபோலிருந்தது. சண்முகம் சுற்றுமுற்றும் பார்த்தான். முண்டத்தைக் காணவில்லை. ஒருவேளை உடல் ஓடும் ரயிலில் சிக்கி வேறெங்காவது கிடக்கிறதோ என்னவோ. அந்த இடத்தில் ரத்தத்தின் கவிச்சி வாடையே இல்லை. நல்லதொரு சுகந்தம் வீசியது. ஒரு பூவின் வாசனை. முதலில் அது என்ன வாசனை என்று புரியாவிட்டாலும் மிகவிரைவில் ரோஜாவின் மணம் என்று சண்முகம் உணர்ந்து கொண்டான். துண்டிக்கப்பட்ட தலையிலுள்ள கூந்தலின் உச்சியில் ஒரு பெரிய ரோஜாப்பூ ஹேர்பின்னால் கோர்க்கப்பட்டிருந்தது. அதிலிருந்தா இத்தனை மணம் வருகிறது? அவன் ஆச்சரியப்பட்டான். இத்தனை ரயில் அதிர்வுகளிலும் அந்தப்பூ கூந்தலிலிருந்து கீழே விழாமலிருந்தது ஆச்சரியம் தான். சண்முகம் தண்டவாளத்திலிருந்த தலையை கூந்தலைப் பிடித்துத் தூக்கி வெளியே ஒத்தையடிப்பாதையில் வைத்தான். வைக்கும்போது எங்கே அந்தத்தலைக்கு வலித்து விடுமோ என்று மெதுவாக வைத்தான். தலையை மண் தரையில் வைத்ததும் அந்த முகம் லேசாகச் சுளித்தது. முன்பு இருந்த இடமே வசதியாக இருந்ததைப் போல அதிருப்தியில் உதடுகளை நெளித்தது.
“ த்தலக்க.. வீட்ல பிரச்னைன்னா உடனே ரயில்ல விழுந்து நம்ம உசிர எடுக்க வேண்டியது..” என்று வாய் விட்டுத் திட்டினான். கையில் அந்த கூந்தல் மயிர் ஒட்டிக்கொண்டிருப்பதைப்போல கைகளை உதறினான். கீழே கிடந்த பேப்பரில் கைகளைத் துடைத்தான். குறைந்தது மாதம் ஒரு சாவு தண்டவாளத்தில் நிகழ்ந்து விடுகிறது. இப்படி நிறைய உடல்களைப் பார்த்திருக்கிறான் சண்முகம். கைகால்கள் மட்டும் துண்டிக்கப்பட்ட பிணங்கள். உடல் இரண்டாக வெட்டப்பட்ட பிணங்கள். உடல் சிதைந்து சதைத்துண்டுகளாக தண்டவாளம் நெடுக வீசியடிக்கப்பட்ட பிணங்கள். தலை மட்டும் தனியாக வெட்டப்பட்ட பிணங்கள். எந்த வெளிக்க்காயமும் இல்லாமல் ஊமைக்காயத்தினால் இறந்து கிடக்கும் பிணங்கள். பிணங்களைப் பார்த்துக்கொண்டேயிருப்பதாலும் அதை எடுத்து வைக்க, நாய்கள் வாயை வைக்காமல் பாதுகாக்க, பிணங்களின் அருகே இருக்க வேண்டியதிருக்கும். அதனால் சண்முகம் அதிர்ச்சியடையமாட்டான். முதலில் அந்த ரத்தக்காயங்களைப் பார்த்து அருவெறுப்பு அடிவயிற்றிலிருந்து பொங்கி வரும். ஆனால் நேரம் ஆக ஆக பிணம் பழகிவிடும். மீண்டும் மீண்டும் பிணத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பான். பிணத்தின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பான்.
இங்கே தலை மட்டும் கிடக்க உடலைக் காணோம் என்பது ஒரு விவகாரமான விஷயம் தான் என்று சண்முகம் நினைத்தான். அவன் மேலும் கீழுமாய் இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பார்த்தான். தண்டவாளங்களுக்கு வெளியே இரண்டு பக்கமும் அடர்ந்திருந்த புதர்ச்செடிகளில் பார்த்தான். எதுவும் தெரியவில்லை. ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரோஜாப்பூ சூடிய தலை கிடந்த இடத்தைக் குறிப்பிட்டு கடிதம் எழுதி உடன் வேலை பார்த்த சோமுவைக் கூப்பிட்டு கொடுத்து விட்டான். தண்டவாளக்கரைக்குக் கீழே இருந்த ஒரு சிறிய வேப்பமரத்தின் நிழலில் போய் நின்றான். போலீஸ் வரும்வரை தலைக்குக் காவல் இருக்கவேண்டும். வேப்பமரம் தலையாட்டி தலையாட்டி நிழலை விட வெயிலைத்தான் அதிகமாக ஒழுக விட்டது.
இப்போது அந்தத்தலை தண்டவாளத்தின் ஓரத்தில் இருந்த ஒத்தையடிப்பாதையில் கிடந்தது. பகல் முழுவதும் வெயிலில் கிடந்ததால் முகம் கருத்துப்போயிருந்தது. அந்த வழியே தண்டவாளத்தைக் கடந்தவர்கள் கடைசி நொடியில் அந்தத் தலையைப் பார்த்து துள்ளிக்குதித்து விலகி ஓடினார்கள். யாரோ ஒருவர் அது ஒரு குப்பை என்று நினைத்து மிதிக்கவே போய்விட்டார். இன்னொருவர் அதைத் தன் வலது காலால் எத்திவிட்டார். லேசாய் அசைந்த தலையில் இருந்த கண்கள் அவரைப் பார்த்தன. ” அய்யோ “ என்று கத்தியபடி தலைதெறிக்க ஓடிவிட்டார். இதற்குள் ரயில்வே போலீஸ் வந்து பார்த்தார்கள். கொலையாக இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டார்கள். வேறெங்காவது கொலை செய்து கழுத்தையறுத்து இங்கே கொண்டு வந்து போட்டிருக்கலாமோ என்ற கோணத்தில் யோசித்தார்கள். உடலைக் காணவில்லை என்றதும் அவர்களுக்கு மேலும் மேலும் சந்தேகம் வலுத்தது. வேடிக்கை பார்த்தவர்களிடம் சொல்லி அருகில் உள்ள வீடுகளிலிருந்து ஒரு சாக்குப்பையை வாங்கச்சொன்னார்கள். சாக்குப்பையில் கூந்தலைப் பிடித்து தலையைத் தூக்கி வைத்தார்கள். அப்படி வைக்கும்போது கூந்தலின் உச்சியில் ஹேர்பின்னால் கோர்க்கப்பட்டிருந்த அந்த ரோஜாப்பூ பாதையில் கீழே விழுந்து விட்டது. அந்தப் பெண் ஒரு வயதாக இருக்கும் போது அவளுடைய அப்பா வாங்கிக் கொண்டு வந்து சூடிய பூ. ஒரு நாளும் வாடியதுமில்லை. கூந்தலிலிருந்து விழுந்ததுமில்லை.
நள்ளிரவில் நட்சத்திரங்கள் பூமியை நோக்கி இறங்கிவந்தன. அப்போது லேசான காற்றில் அசைந்த ரோஜா நட்சத்திரங்களைப் பார்த்தது. அப்படியே மேலே பறந்தது. வாடாத அதன் ஏழு இதழ்கள் ஒவ்வொன்றாய் உதிரத்தொடங்கின. அப்படி உதிரும்போது அந்த இதழ்கள் காற்றில் எழுதியெழுதிக் கொண்டே சென்றன. அவை எழுதி முடிப்பதற்காகக் காற்றும் மிக மெதுவாக அசைந்தது.
துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலரின் முதல் இதழ் சொன்ன கதை
இரவு முழுவதும் பிரசவவாதையினால் தாயை வாட்டியெடுத்து அதிகாலை மூன்று முப்பத்தியிரண்டுக்கு பிறந்த ஜெயலட்சுமி பிறக்கும்போதே கொடியை மாலையாகச் சுற்றிப் பிறந்தாள். கொடி சுற்றிப்பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாது என்ற பழைய நம்பிக்கையையும் தாண்டி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. அன்று அதிகாலையிலேயே மருத்துவமனையிலிருந்த அத்தனை பேருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். இரண்டு ஆண்பிள்ளைகளுக்குப்பின் வேண்டி விரும்பி வந்த மகள் ஜெயலட்சுமி. அவள் பிறந்த ஆண்டு அப்பா நடத்திக்கொண்டிருந்த பைனான்ஸ் தொழில் சூடு பிடித்து ஓட்டமாக ஓடியது. கணக்கு வழக்கில்லாமல் பணம் வந்தது. நிலபுலன்கள், சொத்து, வீடு, வாசல், என்று செல்வம் கரைபுரண்டோடியது. எல்லாம் ஜெயலட்சுமியின் ராசி என்று எல்லோரும் நினைத்தபடியால் அவளைக் கொண்டாடினார்கள். அவளுடைய முதல் பிறந்த நாளைக்கு ஊரோடு அழைத்து சாப்பாடு போட்டார்கள்.  பிறந்த நாளன்று அப்பா ஊட்டியிலிருந்து பூக்களைத் தருவித்திருந்தார். அந்தப் பூக்களில் பெரிய இதழ்களையுடைய ரோஜாவைத் தனியே ஜெயலட்சுமியின் தலையில் சூடி விட்டார். முடியே இல்லாத அந்தத் தலையில் ரோஜா ஒட்டிக்கொண்டு விட்டது. அன்றிலிருந்து ஜெயலட்சுமி அந்த ரோஜாவை தலையிலிருந்து எடுத்ததேயில்லை. ஒருபோதும் வாடாத அந்த ரோஜா தினமும் அவளுடைய தலையில் நறுமணத்துடன் பூத்துக்கொண்டேயிருந்தது. அப்பாவும் அம்மாவும் அண்ணன்களும் அவளைக் கொஞ்சும்போதெல்லாம் அந்த ரோஜாவின் மணம் ஊர் முழுவதும் வீசும். இருபத்திநான்கு மணிநேரமும் அந்த ஊரின் தலைக்குமேல் ரோஜாவின் சுகந்தம் மேகங்களைப் போல மிதந்து கொண்டிருந்தது.
ரோஜா காற்றின் கடைசியசைவில் கீழே இறங்கியது. மிட்டாய் வாங்க துட்டு கேட்டு அம்மாவால் பள்ளிக்கூடத்துக்கு அடித்து விரட்டப்பட்ட குழந்தையின் தலையில் போய் விழுந்தது. அழுது கொண்டேயிருந்த அந்தக்குழந்தை திடீரென தன்னைச் சுற்றி மிட்டாயின் வாசம் வீசுவதை நுகர்ந்தாள். தலையில் கை வைத்து அந்த ரோஜா இதழை எடுத்த அந்தக்குழந்தை வாயில் போட்டு மென்று தின்றாள். மிட்டாயாய் இனித்தது துண்டிக்கப்பட்ட தலையில் சூடியிருந்த ரோஜா மலரின் இதழ்.
மேகங்களுக்கிடையில் குட்டி மேகமாக பறந்து கொண்டிருந்த ரோஜா மலரின் இரண்டாவது இதழ் சொன்ன துர்க்கனவு
ஜெயா பள்ளிக்கூடம் போக வேண்டிய வயது வந்தவுடன் அவளுக்காக அப்பா ஒரு பள்ளிக்கூடம் கட்டினார். பள்ளிக்கூடம் பைனான்ஸை விட வருமானம் தந்தது. ஜெயா சுமாராகப்படித்தாலும் சூப்பராகப் படிப்பதாக எல்லோரும் சொல்வது இயற்கை தானே. ஜெயாவுக்கு அப்போதெல்லாம் ஒரு கனவு தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. அந்தக் கனவுகளில் அவள் மேகங்களூடே பறந்து கொண்டிருப்பாள். எடையற்ற தன் உடலைப் பார்க்க ஆனந்தமாக இருக்கும். மேலேயிருந்து கீழே பார்க்கும்போது தெரியும் மனிதர்கள் மரப்பாச்சிப்பொம்மைகளைப் போலத் தெரிவார்கள். ஒரு பெரிய ரோஜாப்பூ தன் இதழ்களை விரித்து பளீரெனச் சிரிப்பதைப் பார்ப்பாள். எல்லாவற்றைக் காட்டிலும் பெரியதாகத் தெரியும் அந்தப்பூ கருப்பாக மாறத்துவங்கும்போது அவளுக்கு மூச்சுத் திணற ஆரம்பிக்கும். அவ்வளவு காற்றிலும் அவளுடைய மூச்சுக்குழாயை எதுவோ அடைப்பது போல தோன்றும். ஒரு பாறாங்கல்லைப் போல அவள் வேகமாகக் கீழே விழுவாள்.
சிலசமயம் ஒரு தாமரைக்குளத்தில் நீந்திக்கொண்டிருப்பாள். மீன்கள் பேசும் அந்தக்குளத்தில் அவள் ஒரு மீனைப்போலவே நீந்திக் கொண்டிருப்பாள். ஒரு புலர்காலை வேளையில் குளத்தின் நடுவில் ஒரு ரோஜாப்பூ மிதந்து கொண்டிருந்தது. அவளை நோக்கி அலைகளை வீசி அந்த ரோஜாப்பூ அழைத்தது.  அவள் ரோஜாப்பூவைப் பார்த்து நீந்தினாள். அப்போதும் அப்படித்தான் அவளுடைய தொண்டையில் எதுவோ அடைத்துக் கொள்ள மூச்சுத்திணறும். குரல் எழும்பாது. அவள் தூக்கத்திலிருந்து துள்ளி அப்பாவின் மடியில் விழுவாள். இந்தக் கனவின் சமிக்ஞை எதுவென அவள் தோழிகளிடம் கேட்டாள். வாழ்வில் இன்னும் பெரிய அதிர்ஷ்டம் உனக்கு வரப்போகிறது என்று சொன்னார்கள். அவள் நம்பவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை.
பள்ளியிறுதி வகுப்பு முடிந்து கல்லூரியில் சேர்ந்தபோது அரவிந்த் என்ற அதிர்ஷ்டம் வந்ததாக நினைத்தாள். அந்த மூன்று ஆண்டுகள் அவளுடைய வாழ்க்கையில் முந்நூறு ஆண்டுகளாகவும் மூன்று நொடிகளாகவும் ஒரே நேரத்தில் மாறியது. உலகின் வண்ணங்கள் அனைத்தும் அவளுடலில் ஏறியது. அவள் வண்ணக்குரல்களில் பாடலிசைத்தாள். அந்தப் பாடல்களில் எல்லைகள் இல்லை. ராகங்கள் இல்லை. சுரங்கள் இல்லை. எல்லையற்ற ஓசைவெளியில் அவளுடைய குரல்கள் நடனமாடிக்கொண்டிருந்தன. அந்த நடனத்தில் ஒரு ரோஜாப்பூ பூத்துக் கொண்டேயிருந்தது. அந்தப்பூவின் மணம் அந்த ஊரையே மயக்கியபோது அந்த வீட்டையும் மயக்காதா என்ன?
கலைந்த மேகங்களிடமிருந்து கீழே இறங்கிய ரோஜாப்பூவின் இரண்டாவது இதழ் அப்போது தான் பருவம் எய்திய ஆட்டின் முன்னால் போய் விழுந்தது. காய்ந்த புற்களை கறம்பிக்கொண்டிருந்த அந்த ஆடு இதழையும் சேர்த்து தின்றது. உடனே உடலில் ஒரு கதகதப்பு ஏற கிடாயை நோங்கியது.
துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலரின் மூன்றாவது இதழின் கண்ணீர்
இதுவரை அழுதறியாத ஜெயலட்சுமி அப்பா அழுவதைப் பார்த்து அழுதாள். காலில் விழுந்த அரவிந்தையும் ஜெயலட்சுமியையும் சேர்த்து எழுப்பினார். ஐந்து நிமிடங்களில் சாதாரணமாகப் பேசத்தொடங்கிய அப்பா அவர்கள் இரண்டு பேரையும் உடனே ஊருக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். தயங்கிய அரவிந்தை ஜெயலட்சுமி தான் சமாதானப்படுத்தினாள். எப்போதெல்லாம் அவள் அப்பாவைப் பார்க்கிறாளோ அப்போதெல்லாம் அப்பா கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார். அப்பாவின் கண்களைப் பார்க்கும்போதெல்லாம் அதில் கொப்பளிக்கும் ஊற்றாகப் பொங்கிக் கொண்டிருந்த பாசத்தைப் பார்த்தாள். அன்று இரவே அவர்கள் கிளம்பினார்கள். அப்போதும் கூந்தலில் அப்பா சூடிய ரோஜாப்பூவைச் சூடியிருந்தாள் ஜெயலட்சுமி.
ஜெயலட்சுமியை அறையில் கைகளைக் கட்டிக் கிடத்தியிருந்தார்கள். அரவிந்தைக் காணவில்லை. அவளுடைய கதறல்களும் அழுகையும் அந்த அறையிலேயே சுழன்று சுழன்று ஒரு நீர்ச்சுழி போல சுற்றிக் கொண்டிருந்தன. அப்பாவும் அண்ணன்களும் வந்தார்கள். ஆனால் அப்பாவும் அண்ணன்களுமாக இல்லை. யாரோ எந்த ஜென்மத்திலும் பார்த்திராத அந்நியர்களைப் போல இருந்தார்கள். அவர்களின் கையில் பட்டாக்கத்தியும் வெட்டரிவாளும் இருந்தன. அதில் ரத்தம் தோய்ந்திருந்தது.
அப்பா வீட்டில் கோழியை அறுக்கும்போது மிக நிதானமாக ஒரு தியானம் செய்வதைப் போல முகத்தை வைத்துக்கொள்வார். அந்த முகமும் கண்களும் உலர்ந்து போயிருக்கும். கண்களில் உள்ள கோலிக்குண்டுகளில் ஈரப்பசையே இருக்காது. ஏற்கனவே கால்களைக் கட்டியிருக்கும் கோழியை அப்படியே படுக்க வைத்து ஒரு காலால் கால்களையும், ஒரு காலால் ரெக்கைகளையும் மிதித்துக்கொண்டு இடது கையினால் கோழியின் கொதவளையை நிமிர்த்திப் பிடித்துக் கொண்டு வலது கையினால் கரகரவென கழுத்தை அறுப்பார். கழுத்திலிருந்து பீச்சும் ரத்தத்தைப் பார்த்து ஒரு புன்னகை புரிவார். திமிறும் கோழியின் உடல் அதிர்வு அவருக்குக் கிளர்ச்சியைக் கொடுக்கும். முழுக்கழுத்தையும் அறுத்து கோழியின் உடல் உதறுவதை நிறுத்தும்போது தான் அவர் கால்களை எடுப்பார். அறுத்த கத்தியின் ரத்தத்தை கோழியின் உடலிலேயே துடைப்பார். அறுபட்டு அசையாமல் கிடக்கும் உடலை சில நொடிகள் உற்றுப்பார்ப்பார். பிறகு திருப்தியுடன் எழுந்து அண்ணன்களைப் பார்ப்பார். அவர்கள் வாயெல்லாம் பல்லாக நிற்பார்கள்.
ஜெயலட்சுமி தயாராகி விட்டாள். அப்பாவின் ஓங்காரக்குரல் கேட்டது.
“ ஒங்கூதிக்கு ……………..பய சுன்னி கேக்குதோ..”
துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாப்பூவின் மூன்றாவது இதழ் கருகிப் போனது. அதன் கருகிய ரத்தவாசனை அந்த ஊரின் மீது படர்ந்திருந்தது. அன்று இரவு அந்த ஊரில் படுத்துறங்கிய அனைவரும் நள்ளிரவில் தங்களுடைய கழுத்தை யாரோ அறுப்பதைப்போலக் கனவு கண்டு துள்ளி எழுந்தனர். பலருடைய கழுத்தில் ரத்தம் துளிர்த்திருந்தது. அந்த இதழ் மட்டும் கீழே இறங்காமல் ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் பறந்து சென்று தங்கியது. அது தங்கியிருந்த அந்த வீட்டில் அன்று ஏதாவது துர்ச்சகுனங்கள் ஏற்பட்டன.
துண்டிக்கப்பட்ட தலையில் சூடியிருந்த ரோஜாப்பூவின் நான்காவது இதழ் வாடி வதங்கி துண்டிக்கப்பட்ட தலை கிடந்த இடத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தூரத்திலிருந்த பெரிய தாமரைக்குளத்தில் கட்டிய கல்லுடன் நீருக்குள் கிடக்கும் ஜெயலட்சுமியின் முண்டத்தில் போய் விழுந்தது. மறுநாள் அந்தக்குளத்தில் தாமரைப்பூக்களுக்குப் பதிலாக ரோஜாப்பூக்கள் பூத்திருந்தன. மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து பறித்துச் சென்றனர்.
துண்டிக்கப்பட்ட தலையில் சூடியிருந்த ரோஜாப்பூவின் ஐந்தாவது இதழ் காற்றில் சுழன்று சுழன்று குருமலைக்காட்டில் வாயில் குறியைத்திணித்து உடலெங்கும் நூற்றியெட்டு வெட்டுக்காயங்களுடன் புதைக்கப்பட்ட அரவிந்தின் புதைகுழியின் மீது விழுந்தது. புதைக்கப்பட்டிருந்த உடல் ஒரு கணம் சிலிர்த்தடங்கியது. வெட்டுக்காயங்களிலிருந்து ரோஜாச்செடிகள் முளை விட்டன.
மறுநாள் குருமலைக்காட்டில் ரோஜாச்செடிகள் முளைக்க ஆரம்பித்தன. அதன் பிறகு அந்த நகரம் முழுவதும் தெருவோரங்களிலும், சாக்கடை ஓரங்களிலும், குப்பை மேடுகளிலும் ரோஜாச் செடிகள் முளைக்க ஆரம்பித்தன. சண்முகம் மறுநாள் தண்டவாளப்பராமரிப்புப் பணிக்காக நடந்தபோது இரண்டு தண்டவாளங்களுக்கு நடுவில் துண்டிக்கப்பட்ட தலை கிடந்த இடத்தில் ஒரு ரோஜாச்செடி முளைத்திருந்தது.
அதன்பிறகு தினம் தினம் வானத்தில் ஒரு பெரிய ரோஜாப்பூ பூத்துக்கொண்டிருப்பதை அந்த ஊர் மக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். எல்லோர் தலைமீதும் துண்டிக்கப்பட்ட தலையில் சூடியிருந்த ரோஜா மலரின் ஆறாவது இதழும் ஏழாவது இதழும் காற்றுவெளியில் சுற்றிக்கொண்டிருந்தன. இன்னும் எழுதப்படவேண்டிய கதைகளுக்கான சொற்களைத் தேடிக்கொண்டிருந்தன.

நன்றி - அம்ருதா






Saturday 2 November 2019

பிடுங்கிய செடி


பிடுங்கிய செடி

உதயசங்கர்

கிருஷ் குறும்புக்காரன். சேட்டை அதிகம். கொஞ்சம் பிடிவாதம் உண்டு. அவன் நினைத்தது நடக்க வேண்டும். கேட்டது கிடைக்க வேண்டும். இல்லை என்றால் கோபம் வந்து விடும். கோபம் என்றால் அப்படி இப்படி கிடையாது. எதையாவது போட்டு உடைப்பான். அம்மாவை அடிப்பான். புத்தகங்களைத் தூக்கி வீசுவான். அவன் விருப்பப்படி நடக்கும்வரை முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வான். அவனுடைய அப்பாவும் அம்மாவும் கவலைப்பட்டார்கள். அவர்களுக்கு ஒரே பையன். அதனால் அவன் மனம் கோணக்கூடாது. முகம் வாடக்கூடாது என்று நினைத்தார்கள். ஆரம்பத்தில் கேட்டதை எல்லாம் வாங்கியும் கொடுத்தார்கள். ஆனால் நாளாக நாளாக அவன் அவர்களால் வாங்கமுடியாத பொருட்களைக் கேட்டான். அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கவில்லை.
மூன்றாம் வகுப்பில் படிக்கும் கிருஷ் இப்போது செல்போன் வேண்டும் என்று கேட்கிறான். அதுவும் தொடுதிரை உள்ள ஸ்மார்ட் போன் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறான். அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ சொன்னார்கள்.
“ இப்போ வேண்டாண்டா கண்ணு! நல்லாப்படி! இணையத்தில ஏதாவது பார்க்கணும்னா அப்பா காட்டறேன்.. இந்த வயசில ஓடி விளையாடணும்டா.. வெளியில போ உன் பிரண்ட்ஸோட விளையாடு.. என்ன சரியா? “ என்று கொஞ்சினார்கள்.
அதைக் கேட்டதும் கையிலிருந்த பீங்கான் கோப்பையைத் தூக்கி எறிந்தான். அது சில்லுச் சில்லாக உடைந்தது. எழுந்து வராண்டாவுக்குப் போனான்.
அங்கே பூச்செடிகள் தொட்டியில் இருந்தன. இட்லிப்பூ, சாமந்தி,,ரோஜா, மல்லிகைக்கொடி, இருந்தன.
அவன் கொத்தாய் இட்லிப்பூவை பிய்த்தான்.
சாமந்திப்பூவைப் பறித்து அதன் இதழ்களை உதிர்த்தான். .
மல்லிகைப்பூ அவனுக்கு எட்டவில்லை. எனவே கொடியில் இருந்த இலைகளைப் பறித்து வீசினான்.
ரோஜாவைப் பிடுங்கியபோது அவன் விரலில் முள் குத்தி விட்டது. லேசாக ரத்தம் துளிர்த்தது. இன்னும் கோபத்துடன் ரோஜாவைக் கசக்கினான்.
அப்படியே தரையில் உட்கார்ந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உதடுகள் துடித்தன.
எதிரில் ஒரு சின்னஞ்சிறு செடி இருந்தது. அப்போது தான் மண்ணிலிருந்து வெளியே வந்திருந்தது. பச்சைப்பசேலென்று இருந்தது. இரண்டு விதையிலைகளுடன் உச்சியில் தளிரிலைகள் விரிய வியப்புடன் உலகைப் பார்த்தது. மெல்ல வீசிய காற்றில் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டியது. கிருஷ் அதைப் பார்த்தான். அவ்வளவு தான். அவனுடைய இரண்டு விரல்களால் அந்தச் செடியின் கழுத்தைப் பிடித்தான். செடி படபடத்தது. வலி தாங்க முடியாமல் துடித்தது. படாரென்று அந்தச் செடியை மண்ணிலிருந்து பிடுங்கினான் கிருஷ்.
அவ்வளவு தான். ஒரு பூகம்பம் வந்தது போல சத்தம் கேட்டது. கிருஷின் கையிலிருந்த அந்தச் செடி ஒரு பெரிய ஆலமரமாகி விட்டது. மரத்திலிருந்து விழுதுகள் மண்ணை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தன. அடர்த்தியான பச்சை இலைகளை அசைத்து காற்று சலசலத்தது. மரம் வானம்வரை முட்டிக் கொண்டு நின்றது.
கிருஷைக் காணவில்லை. எங்கே இருந்தான் தெரியுமா? அந்த ஆலமரத்தின் உச்சிக்கிளையில் இருந்தான். அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பயத்தில் கிளையை இறுகப்பிடித்துக் கொண்டிருந்தான். அழுகை வந்தது.
அவன் கீழே குனிந்து பார்த்தான். தரை கண்ணுக்கே தெரியவில்லை. நிமிர்ந்து பார்த்தான் மேகங்கள் அவனுடைய கைக்கு அருகில் மிதந்தன.
ஒரு காகம் அவனை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே கிளையில் வந்து உட்கார்ந்தது. அவன் காகத்தை அவ்வளவு பக்கத்தில் அப்போது தான் பார்க்கிறான். எங்கிருந்தோ புள்ளிக்குயிலின் சத்தம் கேட்டது. அவன் சத்தம் வந்த திசையில் தேடினான். அவன் பார்த்ததும் அது மறைந்து கொண்டது. கொத்துக் கொத்தாய் காய்த்திருந்த ஆலம்பழத்தை ஒரு நாகணவாயும் கிளியும் கொத்தித் தின்றன. இரண்டு அணில்கள் வேகமாக அவன் மீது ஏறி ஓடின. ஓடித் திரும்பி அவனைப்பார்த்து,
“ மன்னிக்கணும் கிருஷ்! “ என்று சொல்லிவிட்டு ஓடிப்போனார்கள். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அணில்களுக்கு எப்படி அவனுடைய பெயர் தெரியும்? அப்போது
“ அண்ணே கொஞ்சம் வழி விடறீங்களா..” என்று சொல்லியபடி அவனுடைய கைக்கு அருகில் கட்டெறும்புகள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. அவன் கையை அசைத்து இடம் மாறி உட்கார்ந்தான். வரிசை ஒழுங்கு தவறாமல் முண்டியடிக்காமல் கட்டெறும்புகள் போயின.
       யாரோ அவனைப் பார்ப்பது போலத் தோன்றியது. திரும்பிப்பார்த்தான். கீழே உள்ள கிளையிலிருந்து ஒரு பச்சோந்தி  கட்டெறும்புகளைப் பார்த்து வேகமாக வந்தது. கிருஷைப் பார்த்ததும் அப்படியே அசையாமல் நின்று இலைகளின் பச்சை நிறத்துக்கு மாறி விட்டது. தலையையும் உடம்பையும் தூக்கிக்கொண்டு இரண்டு கண்களை இரண்டு பக்கமும் உருட்டிக் கொண்டு நிற்பதைப் பார்த்தான் கிருஷ். அதைப் பார்க்கப் பயமாக இருந்தது.
‘ தம்பி பயப்படாதே! எனக்குப் பசிக்குது… நான் கொஞ்சம் சாப்பிடப்போறேன்.. அவ்வளவு தான்..” என்று சொல்லிக்கொண்டே தாமதமாக வந்து கொண்டிருந்த ஒரு கட்டெறும்பை டபக்கென்று நாக்கை நீட்டிப் பிடித்து விழுங்கியது.
கிருஷுக்கு அம்மாவின் நினைவு வந்து விட்டது. அவன் மரத்திலிருந்து எப்படி இறங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது மேலிருந்து ஒரு நூலிழை இறங்க அதைப் பிடித்துக் கொண்டே ஒரு சிலந்தி வந்தது.
“ நேரமாச்சு! நேரமாச்சு! சீக்கிரம் வலை பின்னணும்..”
கிருஷின் காதுக்கருகில் ஒரு தேனீ ரீங்கரித்தது. அவன் திரும்பிப்பார்த்தான். அது ஒரு  காற்றில் பெரிய வட்டமாய் நடனமாடியது. எங்கிருந்தோ மற்றொரு தேனீ அதே போல நடனமாடியது.
“ ரொம்ப தூரம் தேன் எடுக்க ரொம்ப தூரம்.போகணும்.. பக்கத்தில் பூக்களே இல்லை… மனிதர்கள் இருக்கும் இடத்தில் பூக்களோ, செடிகளோ, மரங்களோ, இல்லை.. “.
கீழே உள்ள கிளையில் தவிட்டுக்குருவிகள் காச்மூச் கீச்கீச்..என்று கத்திச் சண்டை போட்டுக் கொண்டிருந்தன.
“ எனக்குத்தான்.. நீ குறுக்கே வராதே.. நான் தானே பிடிச்சேன்.. நான் தானே பார்த்தேன்.. அபடியே பாக்கலாம்.. “ அவர்களுடைய பேச்சு குழம்பி எதுவும் புரியவில்லை.
வானம் இருட்டத்தொடங்கியது. ஆலமரத்தில் ஒரே களேபரம்! கூச்சல்! ஆரவாரம்!
கொக்குகள்! நீர்க்காகம், காகங்கள், நாகணவாய், கரிச்சான் குருவிகள், தவிட்டுக்குருவிகள், சிட்டுக்குருவிகள், கொண்டைக்குருவிகள், மரங்கொத்திகள், நீலக்காடை, என்று பறவைகள் கூட்டம் கூட்டமாய் வந்தடைந்தன.
ஒரு கொம்பேறி மூக்கன்பாம்பு கூட மரப்பொந்தில் சுருண்டு படுத்தது. மழை வரும்போல இருட்டியது. கிருஷின் தைரியம் எல்லாம் போய் விட்டது. பிடிவாதம் தகர்ந்து விட்டது. அவன் அழ ஆரம்பித்தான்.
” அழாதே! கிருஷ்.. அழாதே! “ என்ற குரல் கேட்டது. அந்தக்குரல் அம்மாவின் குரல் போல இனிமையாக இருந்தது. அவன்
“ அம்மா! “ என்றான்.
இப்போது அவன் கையில் பிடுங்கிய அந்தச் செடி இருந்தது. அவன் அவசர அவசரமாக மண்ணைத்தோண்டி அந்தச்செடியை நட்டான். அருகிலிருந்த பூவாளியிலிருந்து தண்ணீரைத் தெளித்தான். வாடியிருந்த செடியின் இலைகள் நிமிர்ந்தன. கிருஷைப் பார்த்து இலைகளை அசைத்தன.
அப்போது வீட்டுக்குள்ளிருந்து அம்மா வந்தாள்,
“ கூப்பிட்டியா கிருஷ்..” என்றாள். கிருஷ் அம்மாவைக் கட்டிக்கொண்டான்.
அம்மா கிருஷின் தலையைக் கோதி விட்டாள்.
 நன்றி - பொம்மி