பறந்து போ – தமிழ்ச்சினிமாவில் பூத்த அபூர்வமலர்
தமிழில் குழந்தைகளுக்கான சினிமா இல்லவே இல்லை என்று சொல்லிவிடலாம். என்னுடைய பாலிய காலம் தொடங்கி இன்றுவரை குழந்தைகளை
மையப்படுத்தியே சினிமாக்கள் வந்திருக்கின்றன. அந்தத் திரைப்படங்களில் வருகிற குழந்தைகளும்
குழந்தைகள் வேடத்தில் வருகிற பெரியவர்களின் கதாபாத்திரங்களாகவே இருப்பார்கள். மாஸ்டர்.சேகர்,
மாஸ்டர்.பிரபாகர், குட்டி பத்மினி, இன்னும் பெயர் ஞாபகத்துக்கு வராத நிறையக்குழந்தைகள்
நடித்திருக்கிறார்கள். பெரியவர்களுக்கான திரைப்படங்களில் வருவதைப் போல கதாநாயகன், வில்லன்,
நகைச்சுவைக்கதாபாத்திரம், கதாநாயகி, வேடங்களில் குழந்தைகள் நடித்தார்கள். பெரியவர்களே
தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்காத நீதிகளையும், நன்னெறிகளையும், ஒழுக்கவிதிகளையும்,
அறத்தையும் பக்கம் பக்கமாகக் குழந்தைகள் பேசினார்கள். எனக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.
எப்படி இவ்வளவு நீளமாய் பேச முடிகிறது? அந்தக் காலம் தொடங்கி இன்றுவரை பெரிதாய் சினிமாக்களில்
குழந்தைகளைப் பொறுத்தவரை பெரிய மாற்றமில்லை. குழந்தைகள் ஒருபோதும் இயல்பான குழந்தைமையுடன்
சித்தரிக்கப்படவேயில்லை.
அத்தி பூத்த மாதிரி சில சினிமாக்களில் குழந்தைகள் குழந்தைமையுடன் காட்டப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுடைய உளவியலுக்குள் ஊடாடி பெரியவர்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்ளும்
விதமாக இதுவரை திரைப்படங்கள் வெளிவரவில்லை.
ஈரானின் மஜீத் மஜீதின் திரைப்படங்கள், லூயி கரோலின் ஆலிஸ் இன் ஒண்டர் லேண்ட்
கதையை அடிப்படையாக்க் கொண்டு மீண்டும் மீண்டும் எடுக்கப்படும் திரைப்படங்கள், அந்துவான்
எக்ஸ்பரியின் குட்டி இளவரசனை சமகாலத்தில் உலவவிட்டு இன்றையக் குழந்தைகளின் பிரச்னைகளைப்
பேசும் திரைப்படங்கள், இப்படி உலக அளவில் குழந்தைகளுக்கானத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுக்
கொண்டேயிருந்தாலும், இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி குழந்தைகளுக்கான திரைப்படங்கள்
மிக மிக மிகக்குறைவு அல்லது இல்லவே இல்லை என்று சொல்லலாம். ஆனால் தமிழின் குறிப்பிடத்தக்க
இயக்குநர்களில் ஒருவரான ராமின் பறந்து போ குறிஞ்சி மலராய் பூத்திருக்கிறது.
பறந்து போ திரைப்படம் பல வகைகளில் முன்மாதிரியாக திகழ்கிறது. முதலில் ஒரு குழந்தையைக்
குழந்தையாகவே காட்டுகிறது. ஒரு குழந்தையின் மனநிலையில் எந்தக் கணத்தில் என்ன நிகழுமென்று
யாராலும் கணித்துவிட முடியாது! அந்தந்தக் கணத்தில் வாழ்பவர்கள் குழந்தைகள். அவர்களுடைய
படைப்பூக்கமும் அப்படித்தான். அந்தந்தக் கணத்தில் அவர்களின் மனதில் நிகழும் ரசவாதத்தை
முடிந்தவரை படத்தில் இயல்பாகக் கொண்டுவர எடுத்துக் கொண்டிருக்கிற ராமின் முயற்சி இதுவரை
இல்லாதது. ஏனெனில் ரெடிமேடான ஸ்கிரிப்டுக்குள் குழந்தைகளைத் திணிக்கிற டெய்லரிங் வேலை
மட்டும் தான் இதுவரை நடந்திருக்கிறது. குழந்தைகளுக்கு சிறிய விஷயங்கள் பெரியதாகத் தெரியும்.
பெரிய விஷயங்கள் சிறியதாகத் தெரியும். அழகென்று பெரியவர்களின் மதிப்பீட்டைக் கணநேரத்தில்
சுக்குநூறாக்கிவிடுவார்கள் குழந்தைகள். அசிங்கமென்று நினைப்பதை அழகாக்கி விடுவார்கள்.
ஏனெனில் அவர்கள் இயற்கையின் குழந்தைகள். பெற்றோர்கள் குழந்தைகள் இந்த உலகத்துக்கு வருவதற்கான
கருவிகள் மட்டுமே.
பறந்து போ இன்றையப் பெற்றோர்களுக்கான மிகச்சிறந்த கலைப்பாடம். இந்தப் படத்தைப்
பார்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் தாங்கள் எப்படிக் குழந்தைகளை வளர்க்கவேண்டுமென்று புரிந்து
கொள்ளுவார்கள். அதுவும் படம் முழுவதும் சிரித்துக் கொண்டே அவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
உணர்தல் தானே ( REALISATION) வாழ்தலின் மிகச்சிறந்த கற்பித்தலும் அதுதான். இந்தத் திரைப்படத்தில்
குழந்தைக்குக் கற்பிக்க பெற்றோர்கள் தங்களை எல்லாவிதங்களிலும் வருத்திக் கொள்கிறார்கள்.
ஆனால் படம் முழுவதும் குழந்தை பெற்றோர்களுக்குக் கற்பிக்கிறது.
தமிழ்ச்சினிமாக்களின் முக்கியமான கிளிஷே யான கதாநாயகன் வில்லன் இந்தப் படத்தில்
இல்லை. யாரும் கெட்டவர்களில்லை. அன்பு என்ற பெயருடைய அந்தக் குழந்தை மட்டுமல்ல. குழந்தையின்
பெற்றோராக வருபவர்கள், லோனுக்காக விரட்டும் வசூல்காரன், ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும்
பெண், மண்டபத்தில் படுத்திருக்கும் பிச்சைக்காரரைப் போன்ற வழிப்போக்கர், அன்புவின்
வகுப்புத்தோழியான ஜென்னாவும் அவளுடைய பெற்றோர், யாருமே கெட்டவர்களில்லை. அவரவருடைய
வழியில் நல்லவர்களாகவே அல்லது சாதாரணமானவர்களாகவே இருக்கிறார்கள். யாரும் யாருக்கும்
அறிவுரை சொல்லவில்லை. ஆனால் எல்லாருமே தங்கள் வழியில் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
அந்தப் பாடம் நம் எல்லாருக்குமானதென்று படம் முடியும்போது உணர்கிறோம்.
இந்த வாழ்க்கையின் அழகு எளிமை தான். அந்த எளிமையான அழகை பயணத்தின் தன்னுடைய
பள்ளிப்பருவத்தோழியைச் சந்திக்கும்போது கதாநாயகன் உணர்கிறான். அந்தக் குடும்பத்தலைவன்
அவர்களுடைய பாலியகால தோழமையை, அன்பை அங்கீகரிக்கிற காட்சிகளில் திரைமொழி செவ்வியலாகிறது.
பெற்றோர்களின் கனவுகளைச் சுமக்கும் பொதிகழுதையாகக் குழந்தைகளை நினைக்கக் கூடாது
என்பதை ஒரு இடத்தில் கூட உரத்துச் சொல்லவில்லை. பட்த்தில் பெரிய திருப்புமுனைகளோ, திருகல்களோ,
பதட்டமோ, பரபரப்போ இல்லை. ஆனால் படம் தெளிந்த நீரோடை நீர் போல சலசலவென சிரித்துக் கொண்டே
செல்கிறது. சிரிக்காமல் யாரும் படத்தைப் பார்க்கமுடியாது. அந்தச் சிரிப்பு நம்மைப்
பார்த்து நாமே சிரிக்கிற சிரிப்பு. நம்முடைய அறியாமையைப் பார்த்துச் சிரிக்கிற சிரிப்பு.
டோட்டோசான் ஜன்னலில் ஒரு சின்னஞ்சிறுமி, பள்ளியிலிருந்து விடுதலை, போன்ற புத்தகங்களையும்
ஞாபகப்படுத்தியது. இயற்கையின் அற்புதப்படைப்பான குழந்தைகளைப் பற்றி நாம் கடுகளவேனும்
புரிந்து கொள்ள இந்தப் படம் உதவி செய்யும். எந்தச் சிக்கலான பிரச்னைகளுக்கும் குழந்தைகளிடம்
எளிய தீர்வு இருக்கிறது என்று உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர். தாஸ்தயேவ்ஸ்கி சொல்வார்.
அப்படித்தான் இந்தப் படத்தில் வரும் குழந்தையும் எளிய தீர்வை சொல்கிறது. அதனாலேயே
பறந்து போ மிக முக்கியமான படமாகிறது. தமிழ்ச்சினிமாவின் அபூர்வமான மலராக மலர்ந்திருக்கிறது.
இயக்குநர் ராமிற்கும், தயாரிப்பாளருக்கும், திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்துப்
படக்குழுவினருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
No comments:
Post a Comment