Thursday 23 April 2020

புத்தகம் ஒரு பறவை.

புத்தகம் ஒரு பறவை.
வானில் பறந்து பாருங்கள்
புத்தகம் ஒரு மலர்
மலரும்போது மணம் வீசுவீர்கள்
புத்தகம் ஒரு விதை
விருட்சமென வளர்வீர்கள்
புத்தகம் ஒரு தளிர்
புதிய சிந்தனைகளை வளர்ப்பீர்கள்
புத்தகம் ஒரு ஆயுதம்
ஒடுக்குமுறைகளுக்கெதிராக களமாடுவீர்கள்
புத்தகம் ஒரு ஈரநிலம்
மனதை உழுது பண்படுத்துவீர்கள்
புத்தகம் ஒரு இறகு
காற்றாய் மிதப்பீர்கள்
புத்தகம் ஒரு புதையல்
அள்ளிக்கொண்டேயிருப்பீர்கள்
புத்தகம் ஒரு புன்னகை
மகிழ்ச்சியின் ஊற்றாகவிருப்பீர்கள்
புத்தகம் ஒரு வெண்புறா
சமாதானத்தின் கொடியாக இருப்பீர்கள்
புத்தகம் ஒரு சுடர்
எப்போதும் ஒளியாக இருப்பீர்கள்
புத்தகம் ஒரு அட்சயபாத்திரம்
அறிவை ஈவதில் உவப்பீர்கள்.
புத்தகம் ஒரு துப்பாக்கி
இலக்கின் குறி தப்பாது
புத்தகம் ஒரு தாவீது
கோலியாத் ஒருபோதும் தப்பிக்கமுடியாது.

Tuesday 21 April 2020

குழந்தைகளைப் புரிந்துகொள்வது எப்படி?


குழந்தைகளைப் புரிந்துகொள்வது எப்படி?

உதயசங்கர்

1.குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அவர் உயிரியல் ரீதியாக ஒரு விலங்கின் குட்டியாக இருந்தாலும், மனிதகுலத்தின் மரபணுத்தொடர்ச்சியின் சமீபத்திய கண்ணிகள். மரபணுவின் ஞாபக அடுக்குகளில் மானுட அநுபவங்களின் அத்தனை கூறுகளும் பொதிந்தே இருக்கும்.
2.குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது என்ற கோட்பாடு எவ்வளவு முட்டாள்தனமானதோ அதே போல அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதும் அறியாமையாகிவிடும். பெரும்பாலான பெற்றோர்கள் இந்த இரண்டு எதிர்துருவங்களில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறார்கள்.
3. குழந்தைகள் இந்த உலகிற்கு வந்ததிலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இடையறாது கற்கிறார்கள். விடாமுயற்சியுடன் கற்கிறார்கள். ஒவ்வொரு கணமும் கற்கிறார்கள். எல்லா உயிர்களுக்கும் இயற்கையாக உள்ள உயிரியல் பண்புநலன்கள் தான் காரணம்.
4.கற்றுக் கொள்வதை இரண்டு வழிகளில் குழந்தைகள் செய்கிறார்கள். தொடர்ந்து செய்தல், போலச்செய்தல்.
5. தொடர்ந்து செய்தல் - ஒரு காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதின் மூலமாக அந்த வேலையில் ஒரு நிபுணத்துவம் வருகிறதல்லவா. அப்படித்தான் குழந்தைகளும் ஒவ்வொரு காரியத்தையும் ஒரு ஆயிரம் தடவையாவது செய்து பார்க்கிறார்கள். அப்படிச் செய்கிற ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியில் துள்ளுகிறார்கள். பெற்றோர்கள் அவர்கள் செய்வதை அங்கீகரிக்கவும் உற்சாகப்படுத்தவும் வேண்டும்
6.போலச்செய்தல்- இதுவும் ஒரு உயிரியல் பண்புதான். ஒன்றைப் பார்த்து, ஒருவரைப்பார்த்து, ஒருவர் செய்யும் செயலைப் பார்த்து திரும்ப அதே மாதிரி செய்து பார்த்தல். குழந்தைகள் இப்படி செய்வதன் மூலம் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்கிறார்கள். அதன் சாதகபாதகம் பற்றி அவர்களுக்குத் தெரியாது. எனவே குழந்தைகளின் முன்னால் பேசும்போதும் அன்றாட நடவடிக்கைகளின் போதும் கவனமாக இருக்கவேண்டும்.
7.குழந்தைகள் எதைக் கற்கும்போதும் மிகத்தீவிரமாகக் கற்கிறார்கள். அர்ப்பணிப்புணர்வோடு தங்கள் ஒவ்வொரு நாளையும் கற்றுக் கொள்வதில் செலவழிக்கிறார்கள். எனவே ஒரு விஷயத்தில் ஈடுபாடு ஏற்பட்டுவிட்டால் அது சரி அல்லது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது. எனவே சர்யான விஷயங்களில் அவர்களின் கவனத்தைத் திசை திருப்புகிறமாதிரி பெற்றோர்கள் நடந்து கொள்ளவேண்டும்
8. குழந்தைகள் விலங்குகளல்லர். எனவே அவர்களை பழக்கப்படுத்தவேண்டும் ( Training) என்ற கொள்கை பெரும்பாலான பெற்றொர்களிடம் இருக்கிறது. குழந்தைகளுக்கு முன்னால் நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அதையே குழந்தைகளும் கற்றுக் கொள்கிறார்கள். எனவே பழக்கப்படுத்தவேண்டியது அவர்களையல்ல. நாம் பழகவேண்டும்.
9.குழந்தைகள் பிடிவாதக்காரர்கள். ஒன்றைச் செய்வதில் பிடிவாதமாக இருப்பதினால் தான் புதிய புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுடைய பிடிவாதங்களை நல்ல விஷயங்களை நோக்கி மடைமாற்றவேண்டும்.
10.குழந்தைகளிடம் மறுக்கவேண்டியதுக்கு மறுக்கவேண்டும். இல்லையென்றால் குழந்தைகளுக்கு தான் கேட்பது, நினைப்பது எல்லாம் கிடைக்கும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் உருவாகி வேர்கொண்டுவிடும். பின்னால் சிறு ஏமாற்றங்களையும் தாங்கமுடியாது.
11.குழந்தைகளின் மறுப்பை மதிக்கவேண்டும். நம்முடைய ஆசைகளை திணிக்கக்கூடாது. நிறவேறாத நம்முடைய கனவுகளை நிறைவேற்றக் கிடைத்த இன்னொரு உயிராக குழந்தைகளை நினைக்கக்கூடாது. இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் தனித்துவமானது. தனித்துவமான விருப்புவெறுப்புகள், தனித்துவமான ஆசைகள், தனித்துவமான லட்சியங்கள் கொண்டவை. அதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
12.எல்லாக்குழந்தைகளுக்கும் ஒரு காலத்தில் ஏதோ ஒன்றின் மீது கூடுதலான ஈடுபாடு ஏற்படும். அதைப் பெற்றோர் கவனிக்கவேண்டும். அந்த ஈடுபாட்டை உற்சாகப்படுத்தி வளர்த்தெடுக்கவேண்டும். அதுவே அவர்களுடைய தனித்துவமான மேதமையாக உருவாகலாம்.
13..குழந்தைகள் முதலில் தன்மைய நோக்கில் ( self centered ) தான் இருப்பார்கள். ஒவ்வொரு உயிரும் இருத்தலுக்காக பரிணாமவளர்ச்சியில் கற்றுக் கொண்ட பாடம் தான் அது.  குழந்தைகளிடம் இன்னமும் அது தூக்கலாகத் தெரியும். அதை சமூகமையமாக்குவது பெற்றோர்களின் கடமை.
14.ஆண், பெண் குழந்தைகளிடம் பேதம் காட்டுவது கூடாது. குழந்தைகள் அவர்களுடைய பச்சிளம்பருவத்திலேயே அதை உள்வாங்கிக்கொள்வார்கள். அதுவே அவர்களிடம் இயல்பான சமத்துவ உணர்வை அழித்துவிடும். குறிப்பாக பெண்குழந்தைகளிடம் காட்டப்படும் பேதம் அவர்களுடைய ஆளுமைத்திறனில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.
15.குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களின்வழி வந்த இன்னொரு தனித்துவமான உயிர். எனவே பெற்றோர்களுக்கு மட்டும் சொந்தமானவர்களென்றோ, அவர்களுடைய சொத்து என்றோ நினைப்பதைவிட, குழந்தைகள் இந்த உலகைப் புரிந்துகொள்ள உதவி செய்யவேண்டும்., சக உயிர்களின் மீது அன்பு செலுத்தக் கற்றுக் கொடுக்கவேண்டும். எந்தக்காரணத்தினாலும் ஒருவர் உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ கருதக்கூடாது. மானுட விடுதலை எல்லாவற்றையும் விட உயர்ந்தது. இவற்றுக்கான வழிகாட்டியாக மட்டுமே பெற்றோர்கள் இருக்கவேண்டும்.

Sunday 19 April 2020

மின்னணு உலகில் குழந்தைகளை எப்படி வளர்ப்பது?


மின்னணு உலகில் குழந்தைகளை எப்படி வளர்ப்பது?
உதயசங்கர்

1.   அவசரமான உலகத்தில் அவசர அவசரமாக வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தில் குழந்தைப்பேற்றைத் ( மறு உற்பத்தியைத் ) தவிர மற்ற எல்லாவற்றையும் மின்னணு சாதனங்கள் செய்கிற உச்சபட்ச நுகர்வியக் காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.

2.   குழந்தைகளையும் அந்த மின்னணு சாதனங்களின் கையில் ஒப்படைத்து விட்டு நாம் வாழ்க்கையின் அவசரச்சக்கரத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.


3.   குழந்தைகள் அப்பா அம்மா வின் குரலை விட அதிகமாக தொலைக்காட்சி மற்றும், மொபைல் ஃபோனில் வருகிற குரல்களையே அதிகம் கேட்கிறார்கள். எனவே அவர்கள் அவற்றைப் பார்ப்பதற்கு வெறி கொண்டு அடம்பிடிக்கிறார்கள்.

4.   கையில் மொபைல் ஃபோன் இல்லாத குழந்தைகளைக் காண்பது அரிது. அதுவும் நகரங்களில் சர்வ சாதாரணம். நம்முடைய குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகளாக சாமர்த்தியசாலிகளாக, வசதியானவர்களாக வாழவேண்டும் என்பது தான் எல்லாப்பெற்றோருடைய கனவு. ஆனால் அதற்காக இயல்பான வளர்ச்சியை மறுதலித்து வயதுக்கும், அறிவுக்கும் மீறிய விஷயங்களை அவர்களிடம் திணிப்பது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.


5.   குழந்தைகளுக்கு டூ வீலர் ஓட்டக்கற்றுக் கொடுப்பது, ஓட்டவைத்து அழகு பார்ப்பது, காரோட்டக் கற்றுக்கொடுப்பது, கம்ப்யூட்டரில் உட்காரவைத்து அதை இயக்கச் சொல்லிக்கொடுப்பது என்று குழந்தைகளின் மனநிலைக்கு மீறிய செயல்களை செய்யவைப்பதினால் குழந்தைகளுக்கு எந்தப்பலனுமில்லை.

6.   குழந்தைகளுக்குத் தாலாட்டு பாடுவது, கதைகள் சொல்வது, சினிமா பார்ப்பது, கார்ட்டூன் பார்ப்பது, என்று குழந்தைகளின் வளர்ப்பில் மிகமுக்கியமான மிக அடிப்படையான மனதைக் கட்டமைக்கிற வேலையை மின்னணுச்சாதங்களின் கையில் விட்டு விடுகிறோம்.


7.   மின்னணுச்சாதனங்கள் தேவையின்றியே நம்முடைய வாழ்க்கையில் பிரதான இடத்தைக்கைப்பற்றி விட்டன. அதிலும் குறிப்பாக குடிநோயாளிகளுக்கு வரும் கை நடுக்கம்போல மொபைல் ஃபோனைத் தொடவில்லையென்றால் பலருக்கு கை நடுக்கம் வந்து விடுகிறது. மின்னணுச்சாதனங்களைப் பயன்படுத்துவதில் பெரியவர்களுக்கு நிதானம் வந்தால் தான் குழந்தைகளை அதன் கோரப்பிடியிலிருந்து காப்பாற்ற முடியும்.
8.   இல்லையென்றால் குழந்தைகள் சமூகமனிதனாகாமல் சுயநலமிக்க, பிடிவாதமிக்க, தனிமனிதனாக வளர்வார்கள். சமூக இணக்கம், சகமனிதநேசம், அன்பு, காதல், பாசம், எல்லாம் குறைந்து கொண்டே போய்விடும்.

9.    எப்பேர்ப்பட்ட மின்னணுச்சாதனங்களாக இருந்தாலும் இரத்தமும் சதையுமான மனிதர்களுக்கு மாற்றாக முடியாது. அத்துடன் மனித உறவுகளின், மனித சமூகத்தின் சாரத்தை எதனாலும் ஈடு செய்யமுடியாது.


10.  குழந்தைகளின் வளர்ச்சியில் முதன்மையாக பெற்றோர், ஆசிரியர், இவர்களின் பங்கு மிக முக்கியமானது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளோடு உரையாடுவதை அத்தியாவசியமானதாக மாற்றிக்கொள்ளவேண்டும். அவர்களுடன் விளையாடவேண்டும். அவர்களுக்கு கதைகள் சொல்லவேண்டும். அவர்களுக்குப் பாடல்களைப் பாடிக்காட்ட வேண்டும். அவர்களுடைய சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லவேண்டும். தினம் ஒரு முறையாவது குழந்தைகளை அணைத்து தங்களுடைய அன்பைப் பரிமாறவேண்டும்.

11.  பெற்றோர் முதலில் மின்னணுச்சாதனங்களைப் பயன்படுத்துவதை குறிப்பாக தொலைக்காட்சியை, கணிணியை, மொபைல் ஃபோனை, குறைத்துக் கொள்ளவேண்டும். குழந்தைகள் முன்னால் பயன்படுத்தாமல் இருக்கவேண்டும். அவையெல்லாம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானவை என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும்.


12.  நம்முடைய குழந்தைப் பருவத்தில் கிடைக்காத அத்தனை வாய்ப்புகளும் வசதிகளும் நம்முடைய குழந்தைகளுக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றின் மூலம் ஒரு சிறந்த சமூக மனிதனை உருவாக்குவது தான் இந்த உலகத்துக்கும், நாட்டுக்கும், மனித சமூகத்துக்கும் செய்கிற மகத்தான உதவியாக இருக்கமுடியும்.

13.  நமக்கு எவ்வளவு தான் வசதிவாய்ப்புகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்முடைய குழந்தை இந்த உலகத்தில் தான் வாழவேண்டும் என்பதை எப்போதும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.

Friday 17 April 2020

குழந்தைகளுக்கு பாட்டுப்பாடுங்கள்


குழந்தைகளுக்கு பாட்டுப்பாடுங்கள்

உதயசங்கர்


1.   பச்சிளம் குழந்தைகள் ஒலியை உடனடியாகப் பிரித்தறியவோ, அதை மூளைச்சேகரத்தில் வகைப்படுத்தவோ முடியாது. ஆனால் ஒரே வார்த்தையை அல்லது ஒரே விதமான ஒலிக்குறிப்பைத் திரும்பதிரும்பக் கேட்பதன் மூலம் குழந்தைகளின் காதுகளும் மூளையும் பிரித்துச் சேகரித்து நினைவில் வைத்துக்கொள்கின்றன.
2.   தாலாட்டுப்பாடல்களில் வரும் ஒரே மாதிரியான சொற்களும், சந்தமும் எதுகை மோனையும் குழந்தைகளின் காதுகளில் அமைதியை ஏற்படுத்துகின்றன.
3.   ஆராரோ ஆரிரரோ என்ற ஒலிக்குறிப்பில் உள்ள இசை நெடில் குழந்தைகளின் காதுகளில் ஒரு இனிய அநுபவத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தான் குழந்தைகள் அந்த இசையில் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் மன அமைதியுடனும் உறங்கி விடுகிறார்கள்.
4.   குழந்தைகளுக்கான மொழிப்பயிற்சியில் முதல் பாடமே தாலாட்டுப்பாடல்கள் தான். திரும்பத்திரும்ப பாடல்களைக் கேட்கும் குழந்தைகள் அந்த வார்த்தைகளின் அவர்களுடைய மொழிக்கிட்டங்கியில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
5.   குழந்தைகளின் ஞாபகத்திறன் மூன்று வயதுக்கு மேல் தான் உருப்பெறும் என்றாலும் அதன் நனவிலி மனதில் வெளியில் நடக்கும் அத்தனை அநுபவங்களும் தங்களுடைய முத்திரையை சிறிதளவேனும் பதிக்காமலிருக்காது.
6.   திரும்பத் திரும்பச் செய்வதன் மூலமும் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் மட்டுமே குழந்தைகள் தங்கள் கற்றல் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். முழுமையாக அதைக் கற்கும்வரை அவர்கள் சலிப்படைவதேயில்லை. நூற்றுக்கணக்கான முறை செய்கிறார்கள். வார்த்தைகளை அல்லது ஒலிக்குறிப்புகளைச் சொல்கிறார்கள்.
7.   பெற்றோர்கள் குழந்தைகளின் இந்தச் செயல்பாடுகளைத் தடைசெய்யக்கூடாது. எத்தனை முறை கேட்டாலும் குழந்தைகளுக்காக அதைச் செய்யவேண்டும். அப்போது தான் குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல், மனம், மூளைச் செயல்பாடுகள் வலிமையடையும்.
8.    இந்தச் செயல்பாடுகள் குழந்தைகள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வந்ததுமே தொடங்கி விடுகிறது. கற்றல் உயிரியல் செயல்பாடு. வேறுவிதமான குறைபாடுகளில்லாத குழந்தைகள் ஒவ்வொரு கணமும் தாங்கள் வாழ்வதற்கான அடிப்படைக் கூறுகளைக் கற்றுக்கொண்டேயிருக்கின்றன.
9.   பச்சிளம் குழந்தைகள் பிறந்தவுடன் தன்னுடைய ஐம்புலன்களால் தான் இந்த உலகை அறிந்து கொள்கின்றார்கள். மூன்று வயது வரை மூளையின் வளர்ச்சி அணுகணமும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அதனால் தான் பெரும்பாலும் மூன்று வயதுக்கு முன்னால் நடந்த எந்த நிகழ்வும் நம் நினைவுகளில் சேகரமாவதில்லை.
10. மூன்று வயதுக்கு முன்னால் அசைவுகளும், ஓசையும், தொடுகையுமே பிரதானமான புற உலகை அறிந்து கொள்வதற்கான கருவிகளாகச் செயல்படுகின்றன. ஒரு சிறு அசைவும் குழந்தையின் கண்களின் கவனத்தை ஈர்க்கின்றது. ஒரு சிறு ஓசையும் குழந்தையின் காதுகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால் தான் இசைக்குச் செவி மடுத்து குழந்தை அமைதி கொள்கிறது.
11. தாலாட்டுப்பாடல்களில் உள்ள திரும்பத்திரும்ப வரும் ஓலி நயம் குழந்தைகளின் செவிகளை நிறைக்கிறது. செவிகளின் வழியே மூளைக்குச் செல்லும் ஓசைநயம் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தைச் சாந்தப்படுத்துகிறது. பாடல்களின் அர்த்தம் விளங்காமலேயே குழந்தைகள் இசையினால் வசீகரிக்கப்படுகிறார்கள் என்றால் தாலாட்டு தொடங்கி குழந்தைப்பாடல்களின் முக்கியத்துவம் விளங்கும்.
12. பச்சிளம் குழந்தைகளுக்கு தாலாட்டுப்பாடல்கள் என்றால், குழந்தைகள் வளர வளர குழந்தைப்பாடல்களை அவர்களுக்குச் சொல்லித்தரவேண்டும். அம்மா இங்கே வா வா என்ற பாடல்வழியே குழந்தைகள் அம்மா என்ற உறவின் பெருமையை மட்டுமல்ல அகரவரிசையையும் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களையறியாமலே தாய்மொழியைக் கற்றுக்கொள்ளும் திறனும் அதன்வழியே சிந்திக்கும் திறனும் உருக்கொள்கிறது.
.  
13.   குழந்தைகளுக்காகப் பாடும் பாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் மூன்று அசைச்சொற்களோடு இருக்கவேண்டும். சந்தநயம் வேண்டும். வரிகளின் முதலடியோ ஈற்றடியோ எதுகை மோனையோடு இருக்க வேண்டும். இசைக்கு இசைவாக ஏகாரத்தில் முடிகிற சொற்களைத் தேர்வு செய்ய வேண்டும். பாடலாகப் பாடப்படுகிற இசைக்கோர்வை வேண்டும்.
14. பாடல்கள் குழந்தைகளுக்கு இந்த உலகை அறிமுகப்படுத்தவோ, உலக நடைமுறைகளைப் பற்றிய சித்திரங்களையோ, இயற்கையைப் பற்றிய காட்சிகளையோ,அறிமுகப்படுத்தலாம்.  அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளைப்பற்றியோ, எளிய கணிதம், அறிவியல், பற்றியதாக இருக்கலாம். வேடிக்கையாகவோ, விடுகதைப்பாடல்களாக, இருக்கலாம். மானுட அறம் குறித்தோ, கதையாகவோ, உறவுகளின் மேன்மை குறித்தோ, கதைப்பாடல்களாகவோ, விளையாட்டுப்பாடல்களாகவோ, இருக்கலாம்.
15. பாடல்களில் எளிய கருத்துகள் பொதிந்திருக்க வேண்டும். மொழியை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் விதமாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைகளின் மொழியில் இருக்கவேண்டும்.
16. எளிய வார்த்தைகளை இசையுடனும் பொருளுடனும் கோர்க்கும் திறமை. ஏனெனில் குழந்தைகள் பாடல்களை விளையாட்டாய் பாடும்போதே முதலில் தாய்மொழியை தெரிந்து கொள்கிறார்கள். மொழிவளம் அவர்களுடைய மனதில் உரமாகிறது. அவர்கள் அதன் வழியே உலகை அறிந்து கொள்கிறார்கள்.
17. குறிப்பிட்ட காலம்வரை எக்காரணம் கொண்டும் திரைப்படப்பாடல்களைப் பாடவோ, கேட்கச்செய்யவோ கூடாது. இயந்திரத்திலிருந்து வரும் ஒலி என்ன நவீனமாக இருந்தாலும் அது இயந்திரம் தான். அம்மாவோ அப்பாவோ, ஆச்சியோ தாத்தாவோ, மாமாவோ அத்தையோ குழந்தையின் முகம் பார்த்துப் பாடும்போது குழந்தைகளுக்குக் கிடைக்கும் நெருக்கத்தையும் குரலில் உள்ள பாசமிக்க ஈரத்தையும் எந்த இயந்திரமும் கொடுத்து விடாது.
18. எனவே குழந்தைகளுக்கான பாடல்களைப் பாடுங்கள். குழந்தைகள் வசியமாகி விடுவார்கள்.

Thursday 9 April 2020

விகடன் படிப்பறை


விகடன் படிப்பறை

விஷ்ணுபுரம் சரவணன்.

தமிழின் குறிப்பிடத்தகுந்த சிறுகதை எழுத்தாளர் உதயசங்கரின் சமீபத்திய நூல் துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்.  தலைப்பைப் படித்ததும் நாம் அடையும் அதிர்ச்சியை அக்கதையும் அளிக்கிறது. சமகாலத்தில் நாம் அடிக்கடி கேள்விப்படும் ஆணவக்கொலை தான் மையம். ஆனால் அதனை இக்கதை சொல்லியிருக்கும் விதம் இப்பிரச்னையின் தீவிரத்தை மிக ஆழமாக வாசகர் மனதில் இறக்குகிறது.
அன்றாடம் நாம் காணும் உரையாடும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை மிக உண்மையாகப் பேசும் கதைகள். மனித மனங்களின் விசித்திர உணர்வுகளை நம்மால் பலநேரங்களில் புரிந்து கொள்ளவே முடியாது என்பதற்கு அழுத்தமான உதாரணம் கிருஷ்ணனின் அம்மா கதை. நான்கு குழந்தைகள் உள்ள வீட்டில் அப்பா ஊரை விட்டு ஓடிவிடுகிறார். மூத்தபிள்ளை கிருஷ்ணன் குழந்தைத்தொழிலாளியாகி வீட்டைத் தாங்குகிறான். தம்பி தங்கைகளைப் படிக்கவைத்து வேலைக்கு அனுப்புகிறான். அவர்களுக்கு முன்னின்று திருமணம் செய்து வைக்கும் அம்மா கிருஷ்ணனின் திருமணம் குறித்து பேசக்கூடமாட்டார். அம்மாவின் சிறு பாராட்டுக்காக ஓடி ஓடி உழைக்கும் கிருஷ்ணன் இறுதிவரை உடல் உபாதையோடு வாழ்நாளைக் கழிக்கிறான். அம்மா என்றால் அன்பு, பாரபட்சமின்மை, கருணை என்று சொல்லப்பட்டு வருபவை மீதான முக்கியமான கேள்வியை வீசிச்செல்கிறது இக்கதை.
நொண்டிநகரம் எனும் கதையில் குப்பைமேட்டில் வசிக்கும் கிழவர் அளித்த புத்தகத்தின் வழியே ஒரு கதை கிடைக்கிறது. மலையாளத்தில் உள்ள கதையை மொழிபெயர்க்க ஒருவரிடம் தருகிறார். அந்தக் கதையில் வரும் அகோர ஆதிமூலம் கதாபாத்திரம் வாசிப்பவரை அதிரச்செய்யும் செயலைச் செய்கிறது. ஆனாலும் அதை விவரிக்கையில் லேசான எள்ளலைக் கையாள்கிறார் உதயசங்கர்.
நேரடியாகக் கதைசொல்லும் முறையில் எழுதப்பட்டிருக்கும் கதைகள் தான் என்றாலும் ஒவ்வொரு கதைக்கும் கதை செல்லும் பாதையை விவரிக்கும் தன்மையில் பல வித்தியாசாங்களைக் கையாள்கிறார் உதயசங்கர். ரோஜாப்பூவின் இதழ்கள் ஒரு பெண்ணின் முன்கதையைச் சொல்வது போலவும், பாட்டில்களுக்குள் வாழும் மனிதர்களைப் பற்றியும், ஹேங் ஓவரில் ஒரே இடத்தில் சுற்றும் இளைஞனைப் பற்றியும், வெளிநாட்டு எழுத்தாளர் தன் கதையை விவரிக்கும் விதம் என வாசகருக்கு சோர்வில்லாத தன்மையில் கதைகள் எழுதப்பட்டுள்ளன.


-    துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்
-    சிறுகதைகள்
-    வெளியீடு – நூல்வனம்
-    அலைபேசி – 9176549991
-    விலை. 200
-    பக்கங்கள் – 216.
நன்றி - ஆனந்தவிகடன்

Sunday 5 April 2020

தவிட்டுக்குருவியின் ஆசை


தவிட்டுக்குருவியின் ஆசை

உதயசங்கர்

விடிந்தும் விடியாமல் சண்டை ஆரம்பித்து விட்டது. கூட்டமாய் தவிட்டுக்குருவிகள் கத்திக்கொண்டிருந்தன. அந்த இடமே ஒரே சத்தக்காடாக இருந்தது. ஒன்றை ஒன்று கொத்தவும் விரட்டவும், பறந்து சிறுவட்டம் அடித்துத் திரும்பி வந்து உட்காரவும் செய்தன. சில குருவிகள் தத்தித் தத்தி குதித்து வேடிக்கை பார்த்தன. இத்தனைக்கும் காரணம் காலையில் எழுந்ததும் ஒரு தவிட்டுக்குருவி பறந்து வந்த ஒரு வெட்டுக்கிளியைப் பிடித்தது. அருகிலிருந்த இன்னொரு தவிட்டுக்குருவி அதன் வாயிலிருந்து அந்த வெட்டுக்கிளியைப் பிடுங்கியது.
“ கீச் கீச் கீச் நான் தான் பிடிச்சேன்.. கீச் கீச் “
என்று வெட்டுக்கிளியை பிடித்த குருவி கத்தியது.
“ கீக்கீச் கிக்கீச் நான் தான் பார்த்தேன் கிக்கீச் “
என்று வெட்டுக்கிளியைப் பிடுங்கிய குருவி கத்தியது. இதற்குள் கீழே கிடந்த வெட்டுக்கிளி குதித்து புற்களுக்குள் மறைந்து விட்டது. இரண்டு தவிட்டுக்குருவிகளும் இறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு ஒன்றை ஒன்று கொத்தின.
“ கீச்ச் கீச்ச் அப்படித்தான் விடாதே போடு சண்டையை.. கீச்ச் “
என்று அருகில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தவிட்டுக்குருவி தூண்டி விட்டது. அதற்கு காலையில் நல்லபொழுதுபோக்கு கிடைத்து விட்டது என்று குஷி.
“ க்க்கீச் க்க்கீச் டேய் சண்டை போடாதீங்கடா இந்த சின்னப்பூச்சிக்காக அடிச்சிக்காதீங்கடா..”
என்று வயதில் மூத்த தவிட்டுக்குருவி சொல்லிக்கொண்டிருந்தது. அந்தக்குருவியின் பேச்சை யார் கேட்பார்கள்? எப்போதும் சண்டையும் சச்சரவும் கூப்பாடுமாக இருப்பார்கள் தவிட்டுக்குருவிகள். யாருக்காவது புழு, பூச்சி, பழம், கொட்டை, எது கிடைத்தாலும் சண்டை போடாமல் சாப்பிடமாட்டார்கள். இவ்வளவு சண்டை நடக்கிறதே என்று தனித்தனியே போகவும் மாட்டார்கள். எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். சேர்ந்தே இரை தேடுவார்கள்.
அந்தக்கூட்டத்தில் இருந்த மஞ்சள் கண்ணனுக்கு இப்படிச் சண்டைபோட்டு பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடுவது பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்? என்று யோசித்தது. அப்போது அதனுடைய நண்பனான தேன்சிட்டின் ஞாபகம் வந்தது. பூக்களின் மீது பறந்து கொண்டே எவ்வளவு லாவகமாக பூக்களில் உள்ள தேனைக் குடிக்கிறது என்று ஆச்சரியமாக இருந்தது. அதைப்போல தேன்குடிக்கத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இனிப்பான தேன். நினைத்தவுடன் நாக்கு சப்புக்கொட்டியது.
“ கீச் கீச் கீச் ஆகா! ஆகா! தேன்.. வண்ண வண்ணப்பூக்களிலிருந்து ருசியான தேன்.. “
என்று நினைத்தது. அன்று மாலை தேன்சிட்டைப் பார்த்தவுடன் மஞ்சள் கண்ணன் தன்னுடைய ஆசையைச் சொன்னது. தேன்சிட்டு சிறகுகளை அடித்துப் பறந்து கொண்டே,
“ நல்லது நண்பா! பூக்களிலிருந்து தேனை எடுக்கும்போதே நாங்கள் அந்தப்பூக்களின் மகரந்தச்சேர்க்கைக்கும் உதவுகிறோம்.. அதனால அது காயாகி கனியாகிறது… உன்னால் அந்தப்பூக்களைக் காயப்படுத்தாமல் தேனை எடுக்க முடியுமா? “
“ ஓ இது பெரிய விசயமா? எனக்கு ஒரு முறை சொல்லிக்கொடு..அப்புறம் பாரேன்.”
தேன்சிட்டுக்கு வேறு வழி தெரியவில்லை. அது மஞ்சள் கண்ணனிடம்,
“ சரி என் பின்னாலேயே வா..”
தேன்சிட்டு செம்பருத்திச்செடியில் பூத்திருந்த செக்கச்சிவந்த செம்பருத்திப்பூவுக்குள் தன் கூர்மையான அலகை நீட்டி அசங்காமல் தேனைக் குடித்தது. நான்கைந்து பூக்களில் குடித்து விட்டு,
“ நல்லா பாத்துக்கிட்டியா.. இப்ப நீ குடிச்சிப்பாரு..நண்பா..” என்று மஞ்சள் கண்ணனிடம் கூறியது. உடனே மஞ்சள் கண்ணன் செம்பருத்திப்பூவுக்கருகில் போய் அலகை நீட்டியது. குட்டையாகவும் பருமனாகவும் இருந்த அலகு பூவுக்குள்ளே போகவில்லை. வேகமாக தலையை நுழைக்க முயற்சி செய்தது மஞ்சள் கண்ணன். செம்பருத்திப்பூ கிழிந்து தொங்கியது. இன்னும் இரண்டு பூக்களையும் கிழித்து விட்டது அந்தத் தவிட்டுக்குருவி. தேன்சிட்டுக்கு வருத்தமாகி விட்டது.
“ பார்த்தியா.. நான் சந்தேகப்பட்டது சரியாப்போச்சு.. உனக்கு அதுக்கு வாகான அலகு இல்லை நண்பா..”
என்று சொன்னது. ஆனால் மஞ்சள் கண்ணனுக்கு ஆசை விடவில்லை.
“ இல்லையில்லை.. இது பெரிய பூ… அதான் இப்படி ஆயிருச்சி.. சின்னப்பூவைக் காட்டு..”
என்று சொன்னது. தேன்சிட்டு மறுபடியும் பறந்து அருகில் இருந்த மல்லிகைப்பூந்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கேயும் முதலில் தேன்சிட்டு தேனைக் குடித்துக் காட்டியது. பின்னர் மஞ்சள் கண்ணன் பறந்து போய் அலகை நீட்டியது. அலகு உள்ளேயே போகவில்லை. பூவை விட அலகு பெரியதாக இருந்தது. வாயைத் திறந்து மூடியபோது பூவை முழுதும் கொத்தி எடுத்து விட்டது. பலமுறை முயற்சி செய்தும் ஏராளமான மல்லிகைப்பூக்களைக் கொத்தி எடுக்கத்தான் முடிந்தது. மஞ்சள் கண்ணன் பரிதாபமாக தேன்சிட்டைப் பார்த்தது.
அப்போது கீழே ஈரமான தரையில் ஒரு மண்புழு ஊர்ந்து கொண்டிருப்பதை பார்த்து விட்டது தவிட்டுக்குருவி. அவ்வளவு தான். பாய்ந்து சென்று அந்த மண்புழுவை தன்னுடைய உறுதியான அலகினால் கொத்தி எடுத்துக்கொண்டு பறந்து சென்றது.
தேன்சிட்டு ” ட்வீக் ட்வீக் ட்வீக் இயற்கையன்னை அவங்கவங்களுக்குன்னு தனித்தனித் திறமைகளைக் கொடுத்திருக்காங்க உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. நண்பா..” என்று கத்தியது.
தவிட்டுக்குருவியும், “ கிக்கீச் கிகீச்ச்.. எனக்குப் புரிஞ்சிரிச்சு.. “ என்று சொல்லி முடிக்கும் முன்னால் அதன் வாயிலிருந்த மண்புழுவை இன்னொரு தவிட்டுக்குருவி பிடுங்கியது.
“ கிக்கீக்கீ நான் தான் பார்த்தேன்..கிக்கீ “
“ நான் தான் பிடிச்சேன்.. கிக்கீ ..”
என்று கத்திச்சண்டை போட்டன. எல்லாத்தவிட்டுக்குருவிகளும் அங்கே கூடி சலம்பிக்கொண்டிருந்தன.
நன்றி - துளிர் ஏப்ரல் 20


Saturday 4 April 2020

ஒரு கிரகம் ஒரு ராஜா


ஒரு கிரகம் ஒரு ராஜா

உதயசங்கர்

குட்டி இளவரசன் ஒரு பஞ்சைப் போல பறந்து போனான். அந்தப் பஞ்சை சுமந்து செல்ல ஒரு விண்கலத்தை செய்து கொடுத்தார் அந்துவான். அந்த விண்கலத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அதை இயக்குவதற்கு விசைகளும் கிடையாது. அது குட்டி இளவரசனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதற்கும் குட்டி இளவரசனைப் பிடித்திருந்தது. யாரும் யாரையும் அதிகாரம் செய்யக்கூடாது என்று நினைத்தான். கழுத்திலணிந்திருந்த அவனுடைய மப்ளர் விண்கலத்தின் வேகத்தில் பறந்து விட்டது. மப்ளர் இல்லையென்றால் தன்னை யாரும் அடையாளம் காணமுடியாதென்று குட்டி இளவரசன் நினைத்தான். எல்லோருக்கும் அடையாளம் முக்கியமில்லையா. அடையாளங்களை வைத்துத்தானே ஒருவரை அறிந்து கொள்கிறார்கள்.. மப்ளர் பறந்து போய்விட்டதே என்று கவலைப்பட்ட குட்டி இளவரசனின் மனதைப் புரிந்து கொண்டது விண்கலம். அப்படியே திரும்பி மப்ளர் விழுந்த கிரகத்தை நோக்கிப் பறந்தது.
மிகப்பிரமாண்டமான கிரகம் அது. ஆனால் யாருமே இல்லை. கீழே கிடந்த மப்ளரை எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்ட குட்டி இளவரசன் அந்தக் கிரகத்தைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினான். அவன் நடக்க நடக்க எங்கிருந்தோ ஒரு அசரீரி மாதிரி ஆணைகள் கேட்டுக் கொண்டேயிருந்தது. குனிந்து பார்த்தால் அந்தக் கிரகத்தின் தரை முழுவதும் கணிணித்திரையாகத் தெரிந்தது. அதில் முடியில்லாத மொட்டைத் தலையில் உச்சியில் மட்டும் ஒரே ஒரு மயிர் நின்று கொண்டிருக்க, நெற்றியில் மிகச்சிறிய கிரீடத்தை வைத்துக் கொண்டு, உடலுக்குப் பொருத்தமில்லாத குட்டைச்சட்டையும் கால் சட்டையுமணிந்த கால்வரை தாடி நீண்ட, முட்டைக்கண்களும், பருத்த உதடுகளும், உருண்டை மூக்கும் கொண்ட ஒரு உருவம் தோன்றியது.
“ வருக! வருக! கோ கிரகத்துக்கு வருகை புரிந்த குட்டி இளவரசனே! உன்னை கோ கிரகத்தின் சக்கரவர்த்தியான கோரா வரவேற்கிறேன். குடிமகனில்லாத இந்தக்கிரகத்தில் தனியே என்னை நானே ஆட்சி செய்வது சலிப்பாக இருக்கிறது.
இந்தக்கிரகத்தில் எல்லாம் வலது பக்கமாகவே இருக்கும். நீ வலது பக்கச்சாலையில் திரும்பி, வலது பக்கத்தெருவுக்குள் நுழைந்து வலது பக்கமாக இருக்கும் ஒரே அரண்மனையின் வலது பக்கவாசல்க் கதவில் உள்ள வலது கைப்பிடியை உன் வலது கையினால், தள்ளித் திறக்கவேண்டும். நினைவிருக்கட்டும். வலது காலை எடுத்து வைக்கவேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வருகிற என்னுடைய முதல் குடிமகனை வரவேற்கக் காத்திருக்கிறேன்.”
குட்டி இளவரசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. குடிமக்களே இல்லாத இந்தக் கோ கிரகத்தில் தனியாக இந்த கோரா ராஜா யாரை ஆட்சி செய்கிறான். யாருக்கு ஆணைகளிடுவான். யாரை வைத்து ஆணைகளை நிறைவேற்றுவான். குட்டி இளவரசனுக்கு எதுவும் புரியவில்லை.
“ நீங்கள் எப்படி ராஜாவானீர்கள்? “
“ நானே எனக்கு ராஜாவாக முடி சூட்டிக் கொண்டேன்.. நானே எனக்குச் சட்டங்களைப் போட்டுக் கொண்டேன்.. என் சட்டங்களை நானே மீறினேன். சட்டங்களை மீறியதற்காக நானே எனக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டேன்.. பிறகு தண்டனை கொடுப்ப்பதும் அதை நிறைவேற்றுவதும் நான் என்பதால் நானே என்னை மன்னித்துக் கொண்டேன்…”
“ எப்படி நீங்கள் தனியாக இருக்கிறீர்கள்? உறவினர்களோ, நண்பர்களோ, எதிரிகளோ இல்லாமல் எப்படி இருக்கிறீர்கள் ராஜா? “
“ எனக்கு உறவினர்களோ, நண்பர்களோ தேவையில்லை.. அவர்கள் இருந்தால் அன்பு, பாசம், நேசம், என்று என்னுடைய உணர்ச்சிகளைச் செலவழிக்க வேண்டும்.. எனக்கு அதில் விருப்பமில்லை.. ஆனால் எதிரிகள் வேண்டும்.. எதிரிகள் தான் நான் இருப்பதை எனக்கு உணர்த்துகிறார்கள்.. எனவே கற்பனையான எதிரிகளை உருவாக்குகிறேன்…”
“ எப்படி எதிரிகளை உருவாக்குகிறீர்கள்? “
“ முட்டாள்! உனக்குப் புரியாது. இதனால் தான் உன்னால் ராஜாவாக முடியவில்லை… தெரிந்ததா? நீ காலம் பூராவும் குடிமகனாகவே இருக்கவேண்டியது தான்.. அதோ பார்! அங்கே என்னைப் போல குண்டாக இல்லாதவர்கள் எனக்கு எதிரிகள்.. என்னை விட நீளமான உடை உடுத்துபவர்கள் எதிரிகள். என்னை விட அதிகமான முடி இருப்பவர்கள் எதிரிகள்.. என்னைவிட உயரமாக இருப்பவர்கள் எதிரிகள்.. என்னை விடக் குள்ளமாக இருப்பவர்கள் எதிரிகள்.. என்னைப் போலில்லாத எல்லோரும் எனக்கு எதிரிகள்.. ஹாஹ்ஹா..”
“ அப்படின்னா நானும் உங்களுடைய எதிரி தானா? “
என்று குட்டி இளவரசன் கேட்டான். கோரா ராஜா தன்னுடைய தலையில் இருந்த ஒற்றைமுடியைத் தடவிக்கொண்டே யோசித்தான். தலையை உலுக்கினான்.
“ இதுவரை இல்லை.. நீ என்னுடைய எதிரியா இல்லையா என்று இனிமேல் தான் சொல்லமுடியும்..” என்றார் ராஜா.
குட்டி இளவரசனுக்குக் குழப்பமாக இருந்தது. கோரா ராஜாவின் பேச்சு குட்டி இளவரசனுக்குப் பிடிக்கவில்லை. அன்புக்காகவும் நேசத்துக்காகவும் அலைந்து கொண்டிருந்த குட்டி இளவரசனுக்கு கோரா ராஜாவின் கொள்கைகள் பிடிக்கவில்லை.
“ நான் உங்களைப் போன்றவர்களுக்கு குடிமகனாகவோ, நண்பனாகவோ இருக்கமுடியாது.. நான் உங்களுக்கு எதிரியாக இருப்பதிலேயே பெருமைப்படுகிறேன்..”
என்று அவனுடைய மேலங்கி காற்றில் பறக்கச் சொன்னான் குட்டி இளவரசன். அதைக் கேட்ட ராஜாவின் தாடி துடித்தது. உச்சந்தலையில் இருந்த ஒற்றைமுடி வேகமாக ஆடியது. அந்தக் கோ கிரகமே அதிர, கோரா ராஜா கத்தினான்.
“ நீ ஒரு கிருமி. என்னுடைய கோ கிரகத்தை அழிக்கவந்த அந்நிய நாட்டுக்கிருமி. என் குடிமக்களைக் கொல்வதற்காக திருட்டுத்தனமாக என் கிரகத்துக்குள் நுழைந்த உன்னை விரட்ட என் குடிமக்கள் அனைவரும் ஆயிரம் முறை கை தட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்….”
உடனே அவனே ஆயிரம்முறை கைதட்டினான். சகிக்கமுடியவில்லை. குட்டி இளவரசன் அதைப் பார்த்துச் சிரித்தான். குட்டி இளவரசனின் சிரிப்பைப் பார்த்ததும் கோரா ராஜாவின் உடம்பு நடுங்கியது.
“ குடிமக்களே! நம்முடைய எதிரியை ஒழிக்க எல்லோரும் இருக்கும் மின்விளக்குகளை அணைத்து விட்டு இரவும் பகலும் அகல் விளக்குகளை ஏற்றுங்கள்! குறைந்த அந்த ஒளியில் நம் எதிரி கண் தெரியாமல் ஓடி விடுவான்…”
என்று சொல்லிவிட்டு அவனே எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்கை ஏற்றினான். கோ கிரகம் இருளோ இருளாகி விட்டது. குட்டி இளவரசன் நிமிர்ந்து பார்த்தான். கோரா ராஜாவின் முடியில்லாத தலையில் தனிமையில் ஆடிக்கொண்டிருந்த ஒற்றை முடியில் அந்த விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
” அதிகாரம் கோமாளித்தனத்தின் உச்சம் “
என்று ஒலித்த குட்டி இளவரசனின் குரலைத் தேடிய கோரா ராஜாவுக்கு விண்கலம் பாய்ந்து சென்றதை மட்டுமே பார்க்க முடிந்தது.



Friday 3 April 2020

குட்டி இளவரசனின் குட்டிப்பூ

குட்டி இளவரசனின் குட்டிப்பூ

குட்டி இளவரசனின் குட்டிக்கிரகத்தில் குட்டி இளவரசனும் அவனுடைய குட்டிப்பூவும் மட்டுமே இருந்தார்கள். அங்கே வேறு யாருமே கிடையாது. ஒரு புல் பூண்டு கூடக் கிடையாது. ஒரு புழு பூச்சி கூடக் கிடையாது. நண்பர்களோ, உறவினர்களோ கிடையாது. அங்கே இருந்ததெல்லாம் குட்டி இளவரசனும் இன்னும் சில நாட்களில் வாடி உதிரப்போகும் அந்தப்பூவும் மட்டும் தான்.
அந்தப்பூ ஒன்றும் அவ்வளவு அழகானதில்லை.
அந்தப்பூ ஒன்றும் அவ்வளவு மணமில்லை
அந்தப்பூவிதழ்கள் நல்ல நிறத்துடனுமில்லை
அந்தப்பூ அவ்வளவு பெரியதாகவும் இல்லை
இன்னும் சில நாட்களில் வாடி உதிர்ந்து விடப்போகும் அந்தப்பூவில் அந்த வாடல்ருசி தெரிந்தது.
குட்டி இளவரசனும் அவனுடைய பெயரைத் தவிர இளவரசனில்லை. இளவரசன் என்றால் அப்படி அழைப்பதற்கு இன்னொருவர் வேண்டுமில்லையா?  குறைந்தபட்சம் இப்போது அந்தப்பூ அப்படி அவனை அழைக்காது. இரண்டுபேருக்கும் சண்டை. குட்டி இளவரசன் என்று அழைப்பதற்கு யாருமற்ற குட்டி இளவரசன் ஒரு சாதாரணப்பையன் தான். இன்னும் ஒவ்வொருவேளையும் பசிக்கும்போது உணவு தேடி அந்தக்கிரகம் முழுதும் சுற்றித்திரியும் சாதாரணப்பையன். அவனுடைய உடைகளும் சாதாரணம் தான். குட்டி இளவரசன் எங்கே சுற்றினாலும் இரவில் அந்தப்பூவுக்கருகில் வந்து படுத்துக்கொள்வான். அந்தப்பூ அவனிடம் பேசாவிட்டாலும்கூட. அவன் அந்தப்பூவையே பார்த்துக் கொண்டிருப்பான். அவன் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தும் அந்தப்பூ அவனைப்பார்க்காமல் இருக்கும் இரண்டே திசையில் குட்டி இளவரசன் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையை நோக்கி கர்வத்துடன் திரும்பிக்கொள்ளும். அதற்குத்தெரியும் குட்டி இளவரசனுக்கு யாருமே கிடையாது. ஒரு காலத்தில் அவர்கள் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். முதன் முதல் காதல் வயப்பட்ட இளம் காதலர்களைப் போல அவர்கள் பேசிக் கொண்டேயிருந்தார்கள். உலகிலுள்ள அத்தனை வார்த்தைகளும் செலவழியும் வரை பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது குட்டி இளவரசன் அந்தப்பூ இல்லையென்றால் அவனால் உயிருடன் இருக்க முடியாதென்று நினைத்தான். அந்தப்பூவும் அவனில்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள நினைத்தது. ஆனால் சலிப்பின் சிலந்திவலை அவர்களைச் சுற்றிப் பின்னியபோது அவர்கள் மனதில் வெறுப்பின் உப்பு பூக்க ஆரம்பித்தது.
எடுத்ததெற்கெல்லாம் குட்டி இளவரசனும் அந்தப்பூவும் சண்டையிட்டனர். முன்பு எதெல்லாம் பிடித்திருந்ததோ அதெல்லாம் இப்போது பிடிக்காமல் போயிற்று. இரண்டுபேரும் ஆண்டுக்கணக்கில் பேசாமலிருந்தார்கள். குட்டி இளவரசனின் குட்டிக்கிரகத்தில் சூரியன் ஆறு மாதத்துக்கு ஒருமுறைதான் உதிப்பான். 
குட்டி இளவரசனுக்கு இன்னொரு மலரோ, தளிரோ, மரமோ, செடியோ, இருந்தால் தன்னிடம் இவ்வளவு வெறுப்பு தோன்றிருக்காது என்று நினைத்தான். குட்டிப்பூவும் குட்டி இளவரசனைப்போல இன்னொரு ஆணோ பெண்ணோ இருந்திருந்தால் இவ்வளவு கசப்பு தோன்றியிருக்காது என்று நினைத்தது. அந்தப்பூ இருப்பதினால் தானே தினம் அதற்குத் தண்ணீர் ஊற்றவும், பராமரிக்கவும் வேண்டியதிருக்கிறது. அதை இல்லாமலாக்கிவிட்டால்.. என்று குட்டி இளவரசனின் நெஞ்சில் பாம்பின் விஷம் ஊறியது. அவன் ஒரு பென்சிலை எடுத்து ஒரு ஆட்டினை வரைந்தான்.
குட்டி இளவரசன் இருப்பதினால் தானே அவனுக்காக தினம் பூத்து மணம் வீசி மகிழச்செய்ய வேண்டியதிருக்கிறது. அவன் இல்லையென்றால் இந்தக் கிரகத்தின் ஒரே அதிசயப்பூவாக இருக்கலாமென்ற எண்ணம் அந்தப்பூவைச் சுற்றி கொடும் விஷமுட்களை வளர்த்தது.
குட்டிக்கிரகத்தில் சூரியன் உதித்தபோது குட்டி இளவரசன் வரைந்த ஆடு அந்தப்பூவை நோக்கிப் பாய்ந்தது.
விஷமுட்களோடு ஆடு அந்தப்பூவை விழுங்கி மறைந்தது.
குட்டி இளவரசன் இப்போது தனிமையில் இருந்தான். நடந்தால் இருபதடி தூரமே இருக்கும் குட்டிக்கிரகம் இப்போது தொலையாத தூரமாக, நடக்க முடியாத கொடும்பாலையாக மாறியது. குட்டி இளவரசனுக்கு குட்டிப்பூவின் ஞாபகங்கள் பெருகின். நினைவின் ஊற்றுப் பொங்கி குட்டிப்பூவைத் தேடியது.
ஆனால் மனதில் ஊறிய பாம்பின் விஷம் குட்டி இளவரசனின் உடல் முழுவதும் பரவியது. அப்படியே  எந்த சத்தமுமில்லாமல் சரிந்து கீழே விழுந்த குட்டி இளவரசனின் உதடுகள் முணுமுணுத்தன.
என் குட்டிப்பூவே!

Thursday 2 April 2020

குட்டிப்பாப்பா பார்த்த குட்டிப்பாம்பு


. குட்டிப்பாப்பா பார்த்த குட்டிப்பாம்பு

உதயசங்கர்

அன்று குட்டிப்பாப்பாவுக்கு நல்ல கோபம். அவள் கோபமாக இருந்தால் நெற்றியைச் சுருக்கி புருவங்களை தூக்கிக் கொள்வாள். உதடுகளை இறுக்கி மூடிக் கொண்டு வேண்டுமென்றே அம்மாவின் முன்னால் அலைந்து திரிவாள். அவள் கோபமாக இருப்பது அம்மாவுக்குத் தெரியணுமில்லே. எதாவது சாமான்களை சத்தமாக எடுக்கவோ வைக்கவோ செய்வாள். ஆனால் அம்மா இவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவசர அவசரமாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அன்று ஞாயிற்றுக்கிழமை. என்பதால் யாராவது விருந்தினர்கள் வருவார்களாக இருக்கும். யார் அதையெல்லாம் குட்டிப்பாப்பாவிடம் சொல்லப்போகிறார்கள். சமயத்தில் அப்பா நல்லமூடில் இருந்தால் குட்டிப்பாப்பாவைத் தோட்டத்துக்குக் கூட்டிக் கொண்டு போய் நிறையச் சொல்லுவார்.
ம்ம்ம் இது என்ன வாசனை! நெய்வாசனை! ஐய்! அம்மா கேசரி கிண்டுகிறாள். குட்டிப்பாப்பாவுக்குக் கேசரி என்றால் அவ்வளவு பிடிக்கும். லபக்.. லபக்கென்று முழுங்கி விடுவாள். ஒரு துணுக்கு கூட இல்லாமல் சாப்பிட்டு விடுவாள். ஆனால் இன்று அவள் கோபமாக இருக்கிறாளே. கேசரி அவளுடைய கோபத்துக்குச் சவால் விட்டது. குட்டிப்பாப்பாவுக்கு ஏன் கோபம் வந்தது தெரியுமா?
அவளுடன் படிக்கும் விஜி அவளோட அம்மாகூடச் சேர்ந்து நிறைய தொலைக்காட்சித்தொடர் பார்ப்பாளாம். ஐயே! யாராவது பெரியவங்க அழுவுணி நாடகங்களைப் பார்ப்பாங்களா? அப்படி அவள் பார்த்த நாகமோகினி தொடர்ல பாம்பு பொம்பிளையா மாறுதாம். பால் குடிக்கிதாம்.. முட்டை சாப்பிடுதாம். ஞாபகம் வைச்சிருந்து பழிவாங்குதாம்.. கும்பிடுறவங்களை ஆசீர்வாதம் பண்ணுதாம்.. இப்படி நிறையச் சொன்னாள். அப்படிச் சொல்லும்போது அவளுக்கு ரொம்பத் தெரிஞ்சமாதிரி பெருமை வேற. குட்டிப்பாப்பா எதையும் அவ்வளவு சீக்கிரம் நம்பமாட்டாள். அவளுக்குத்தான் நிறையக் கேள்விகள் வருமே. அந்தக் கேள்விகளை அவள் அம்மாவிடம் கேட்டாள்.
“ கதைக்கு கண்ணுமூக்கு காலு கை கிடையாதும்மா.. அது எப்படி வேணுமின்னாலும் போகும்..” என்று அம்மா ரொம்ப சிம்பிளாகச் சொல்லி முடித்துவிட்டாள். மறுபடியும் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டபோது,
“ கொஞ்சம் சும்மாஇரி! அம்மாவுக்கு இப்ப நிறைய வேலை இருக்கு..அப்புறம் சொல்றேன்..”
என்று சொல்லிவிட்டு போய் விட்டாள். அதான் குட்டிப்பாப்பாவுக்குக் கோபம். கேசரியின் மணம் அவளுடைய கோபத்தை ஜெயிச்சிரும்னு தோன்றியதும் குட்டிப்பாப்பா எழுந்து தோட்டத்துக்குப் போய் விட்டாள்,
நேரே எலுமிச்சை மரம் இருந்த இடத்துக்குப் போனாள். எலுமிச்சை மரம் குடை மாதிரி விரிந்து கவிழ்ந்திருந்தது. தொடக்கூடாது. முள்ளு குத்திரும். வளைஞ்சி கொக்கி மாதிரி இருக்கும். இப்போது பூ பூத்திருக்கிறது. இத்தினியூண்டு பூ. வெள்ளைப்பூ. பூ, இலை, எல்லாமே எலுமிச்சை வாசனை அடிக்கும். குடை மாதிரி அதற்குக்கீழ் சாயங்கால நிழல். குட்டிப்பாப்பா. அதன்கீழ்   உட்கார்ந்தாள். கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து வளைஞ்சி வளைஞ்சி ஒரு கோடு போட்டாள். என்ன செய்யலாம்? அம்மா இப்போது கூப்பிட்டு கேசரி கொடுப்பாளா? கேசரியை நினைத்ததும் நாக்கில் எச்சில் ஊறியது.
மறுபடியும் குச்சியால் கோடு போடக் குனிந்தபோது பார்த்தால் அவள் போட்டிருந்த கோடு நெளிந்து கொண்டிருந்தது. ஒரு புழு மாதிரி. அவள் நன்றாக உற்றுக் கவனித்தாள். மஞ்சள் நிறத்தில் குறுக்கே கருப்பு நிறக்கோடுகளுடன் வளவளப்பாக இருந்தது. அழகு! அழகு! அவ்வளவு அழகு! அவள் போட்டிருந்த கோட்டிலிருந்து வெளியேற முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தது. குட்டிப்பாப்பா கையிலிருந்த குச்சியால் அதைத் தூக்க முயற்சித்தாள். சடக்கென்று தலையைத் தூக்கி,
“ ஏ.. குட்டிப்பாப்பா நில்லு என்ன செய்றே? கொஞ்சங்கூட பயமில்லே..”
கத்தியது. குட்டிப்பாப்பா கொஞ்சம் பயந்து தான் போனாள். ஆனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
“ ஏ புழுவே நீ பள்ளத்திலேருந்து ஏற முடியாம கஷ்டப்படறியேன்னு உதவி செய்ய நெனச்சேன்பாரு.. என்னயவே மிரட்டறியா? “
“ யாரைப்பார்த்து புழுன்னு சொன்னே! நான் பாம்பு. மஞ்சள் கட்டுவிரியன் குட்டி..”
“ ஆ.. பாம்பா.. அடிச்சிக்கொல்லணுமே..” என்று சுற்றுமுற்றும் கல் கிடக்கிறதா என்று பார்த்தாள் குட்டிப்பாப்பா. பாம்பு பள்ளத்தில் பதுங்கிக் கொண்டு,
“ நான் ஏதாச்சும் உன்னையத் தொந்திரவு செய்ஞ்சேனா.. ஏன் என்னைய கொல்லணும்கிற..” என்று பரிதாபமாகக் கேட்டது குட்டிப்பாம்பு.
“ நீ சொல்றது சரிதான்… சாரி சாரி.குட்டிப்பாம்பே! .நீ ரொம்ப அழகா இருக்கே..”
“ ஓ.. தேங்க் யூ.. நீயும் தான் ” என்றது குட்டிப்பாம்பு. வெட்கத்துடன் குட்டிப்பாப்பா குனிந்து அதைப் பார்த்து,
“ நீ பாம்பு தானே! உங்கிட்டே கேக்கிறேன்.. உன்னால பாலைக்குடிக்கமுடியுமா? முட்டையை உடைச்சுத் திங்க முடியுமா?.. பாம்புகள் பழிவாங்குமா? பாம்புக்கு நாகரத்தினம் இருக்கா? பாம்பால உருவத்தை மாத்தமுடியுமா? ம்ம்ம்..”
“ நிறுத்து நிறுத்து குட்டிப்பாப்பா.. வரிசையாக் கேட்டுக்கிட்டே போறே. என்னால ஒரு கேள்விக்கு மேலே ஞாபகம் வச்சுக்க முடியாது .” என்று தலையை உலுக்கிய குட்டிப்பாம்பு,
“ பாம்புகளோட தொண்டை அமைப்பு அப்படியே விழுங்கற அமைப்பு தான்.. உறிஞ்சி கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிற மாதிரியான தசைகள் எங்களுக்குக் கிடையாது.. எதுனாலும் நாங்க அப்படியே முழுங்கிருவோம்…”
“ எங்களுக்கு மிகவும் குறைந்த அறிவே உண்டு.. காது கேட்காது.. தரையில் உள்ள அதிர்வை வைச்சுத்தான் நாங்க கேட்போம்… நாக்கை நீட்டி காற்றில் முகர்ந்து தான் உணவைக் கண்டுபிடிக்கிறோம்.. எங்களுக்கு எப்படி ஞாபகசக்தி இருக்கும்? அப்புறம் பழிவாங்கறது மனுசங்களோட குணம்.. எங்களுக்கு சாப்பிட உணவு, தங்க வீடு, கூடி வாழத்துணை, அவ்வளவு தான் வேணும் “
குட்டிப்பாப்பா ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். குட்டிப்பாம்பு சொல்லி நிறுத்தியதும்,
 எல்லோரையும் பாம்பு கடிக்கும்னு ஏன் சொல்றாங்க.? “
குட்டிபாம்பு சிரித்தது. “ எங்களை யாரும் தொந்திரவு பண்ணாதவரைக்கும் நாங்களும் யாரையும் தொந்திரவு பண்ன மாட்டோம்.. எங்க உயிருக்கு ஆபத்துன்னா மட்டும் தான் கடிப்போம்.. எல்லாப்பாம்புக்கும் விஷம் கிடையாது தெரியுமா? குட்டிப்பாப்பா..”
” அப்புறம் ஏன் சினிமா, தொலைக்காட்சியில உங்களக் கொடூரமா காட்டுறாங்க..? “
” எனக்கும் அந்த சந்தேகம் தான் குட்டிப்பாப்பா.. நானும் எங்க தாத்தாகிட்ட கேட்டேன்.. அவருக்கும் தெரியல. இயற்கையோட சங்கிலியில நாங்க ரொம்ப முக்கியமானவங்க.. எலி, தவளை, ஓணான், மாதிரி சின்ன உயிர்கள் அதிகமாகாமல் இருக்க நாங்க உதவுறோம்.. இந்த உலகம் மனுசங்களுக்கு மட்டுமானதில்ல...”
” ஆமா இல்லை.. மனுசங்க விசித்திரமானவங்க.. எல்லாத்தையும் நம்பிருவாங்க..” என்று குட்டிப்பாப்பா ஞானியைப் போலப் பேசினாள். அப்போது அம்மாவின் குரல் கேட்டது.
“ குட்டிப்பாப்பா.. குட்டிப்பாப்பா.. இங்க வா யாரு வந்திருக்கான்னு பாரு..”
குரல் வந்த திசையை நோக்கி, தலையைத் திருப்பி “ இதோ வர்ரேன்..” என்று சொல்லிவிட்டு குனிந்து குட்டிப்பாம்பைப் பார்த்தாள்.
அங்கே குட்டிப்பாம்பு இல்லை. அவள் வளைஞ்சி வளைஞ்சி போட்டிருந்த கோடு மட்டும்தான் இருந்தது. அவள் எழுந்து திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் போனாள். அந்த அழகான மஞ்சள் கட்டுவிரியன் அவள் கண்ணுக்குள்ளேயே இருந்தது.