Showing posts with label ராஜா கதைகள். Show all posts
Showing posts with label ராஜா கதைகள். Show all posts

Wednesday, 25 December 2024

. மாயாஜாலக்காரனின் மாயம்

 

1.   மாயாஜாலக்காரனின் மாயம்

    உதயசங்கர்




ரொம்ப நாளைக்கு முன்னால் நடந்த கதை.

கெர்மானி என்ற நாட்டின் அரசன் தேவன். அவன் மக்களைக் கொடுமைப்படுத்திய அரசன். எந்த அரசன் தான் கொடுமைப்படுத்தவில்லை என்று சொல்கிறீர்களா? ஆமாம். அதுவும் சரிதான். அரசர்கள் மக்களிடம் அதிக வரிகளை வாங்கியும், மற்ற நாடுகளுடன் போரிட்டார்கள். அந்த நாட்டு செல்வங்களைக் கொள்ளையடித்தார்கள். அந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்தினார்கள். அப்படித்தான் ஆடம்பரமாக வாழ்ந்தார்கள். பெரிய பெரிய அரண்மனைகளையும், கோவில்களையும் கட்டினார்கள்.

அப்படி வந்த அரசர்களில் தேவனைக் கண்டு அவனுடைய நாட்டு மக்களே அஞ்சினார்கள். ஆனால் அவன் அரசனானது பெரிய வேடிக்கை. வேடிக்கை மட்டுமல்ல சிந்திக்க வேண்டிய சம்பவம். தேவன் தெருவில் மாயாஜாலவித்தை காட்டிக் கொண்டிருந்தான்.

அதுதான் மேஜிக்.

வெறும் பையிலிருந்து பொரிகடலை எடுப்பான். எந்தப் பொருளும் இல்லாமல் நெருப்பை உண்டுபண்ணுவான். காற்றிலிருந்து எலுமிச்சம்பழம் வரவழைப்பான். சிறிய பிள்ளையார் சிலையைக் கொண்டு வருவான்.

இப்படி ஊர் ஊராக வித்தை காட்டி மக்களிடம் பிச்சை எடுப்பான். கிடைப்பதைக் கொண்டு வாழ்ந்து வந்தான். அப்போது அவனைப் பார்த்த ஒரு பணக்காரப்பிரபுவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

அவர் அவனை அழைத்து,

“ தம்பி நீ ஏன் ஊரு ஊராகப் போய் பிச்சை எடுக்கிறே.. நான் சொல்கிற யோசனையைக் கேட்டால் நீ இருக்கும் இடத்துக்கே வந்து உனக்கு பணத்தை அள்ளியள்ளி கொடுப்பார்கள்.. “

என்று சொன்னான்.

“ சொல்லுங்கள் ஐயா.. அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ஊர் ஊராகப்போய் அலுத்து விட்டது.. இப்போது எல்லாம் மக்கள் அவ்வளவாக பிச்சை போடுவதில்லை.. ம்ம்ம் அவர்களிடம் பணம் இருந்தால் தானே..

என்றான் மாயாஜாலக்காரன் தேவன். பணக்காரன் ஒரு சிறிய கோவிலையும் ஒரு பெரிய மண்டபத்தையும் கட்டினான். சிறிய கோவிலில் ஸ்ரீஅண்டசராசர சாமி என்று பாதையில் கிடந்த ஒரு சிறிய பாறைக்கல்லை வைத்தான்.

அருகில் உள்ள மண்டபத்தில் மாயாஜாலக்காரன் தேவனுக்கு பெரிய சிம்மாசனம். ஆடைகள் அலங்காரங்கள், நகைகள், பணியாட்கள், என்று சகல வசதிகளையும் மாயாஜாலக்காரனுக்குச் செய்து கொடுத்தான் அந்தப் பணக்காரன்.

பணக்காரன் போட்ட ஒரே நிபந்தனை. தினமும் வருகிற வருமானத்தில் பாதியை அவனுக்குக் கொடுத்து விட வேண்டும். மாயாஜாலக்காரனுக்கு மகிழ்ச்சி.

பெரிய பெரிய விளம்பரப்பதாகைகளை ஊரெங்கும் வைத்தான். தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தான். பத்திரிகைகளுக்குப் பணம் கொடுத்து செய்திகளை வரவழைத்தான்.

“ அதிசயச்சாமியார்… இமயமலையிலிருந்து நேரே இறங்கிவந்து அருள் பாலிக்கிறார்.. நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும்.. இமயமலையின் பனிச்சாமியை காற்றிலே வரவழைத்துக் கொடுப்பார்.. வாருங்கள்! வாருங்கள்! முந்துபவர்களுக்கே அதிர்ஷ்டம் காத்திருக்கிறது..

இப்படி விதம் விதமான விளம்பரங்கள்.

அவ்வளவு தான். கூட்டம் அலைமோதியது. எல்லாரும் முண்டியடித்து இமயமலைச்சாமியாரைப் பார்க்கத் துடித்தார்கள். யாரைப் பார்க்க? நம்முடைய தெருவித்தைக்காரனானா மாயாஜாலக்காரனைப் பார்க்க…

அவன் காற்றிலே பனிச்சாமியை எடுத்தான். எலுமிச்சம்பழம் எடுத்தான். ஆப்பிள பழம் எடுத்தான். லட்டு எடுத்தான். சில நேரம் மோதிரம் எடுத்தான். சங்கிலி எடுத்தான். மக்கள் மயங்கினார்கள். அவன் கேட்ட பணத்தைக் கொடுத்தார்கள்.

செல்வம் குவிந்தது. பணக்காரன் இன்னும் பெரிய பணக்காரனானான்.  மாயாஜாலக்காரனான தேவனுக்குத் திடீரென விபரீதமான யோசனை வந்தது.

நாம் உழைத்து இவனுக்கு ஏன் பாதியைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தான். உடனே அவன் காற்றில் வரவழைத்த லட்டில் விஷம் கலந்து கொடுத்து அவனைக் கொன்று விட்டான்.

ஊர் மக்கள் நாட்டு மக்கள் அவனை மகான் என்று நம்பி போற்றினார்கள். அவன் அரசனாக வந்தால் நாடு வளமாகும் என்று நினைத்தார்கள்.

அடுத்த தேர்தலில் மாயாஜாலக்காரன் தேவனையே அரசனாக்கி விட்டார்கள். அரசனான பிறகு மாயாஜாலக்காரன் கொடியவனானான். அவனை எதிர்த்து யாரும் எதுவும் கேள்வி கேட்கமுடியாது. அப்படி கேட்டால் அவர்களைக் காணாமல் செய்து விடுவான்.

“ கடவுளைப் போன்றவன் நான்.. ஏன் நானே கடவுள்.. என்னைக் கேள்வி கேட்கலாமா? அதுதான் அவனை நரகத்தில் தள்ளிவிட்டேன்... போன பிறவியில் நான் செய்த புண்ணியம் தான் இப்போது     அரசனாக இருக்கிறேன்.. போன பிறவியில் நீங்கள் செய்த பாவம் தான் நீங்கள் அடிமைகளாக இருக்கிறீர்கள்… கேள்வி கேட்காமல் நான் சொல்வதைக் கேட்டு நடந்தால் உங்களுக்குச் சொர்க்கம்  கிடைக்கும்.

என்று உரத்த குரலில் முழங்கினான்.

 மக்கள் பயந்து சரி சரி என்று தலையாட்டினார்கள். கை தட்டினார்கள். அவன் காட்டும் சிறு சிறு மாயாஜாலங்களைப் பார்த்து அவனை வழிபட்டார்கள்.

மாயாஜாலக்காரனின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. மக்கள் முணுமுணுக்கத் தொடங்கினார்கள்.

எல்லாரும் அவனைக் கண்டு பயந்தார்கள் என்று சொல்லி விடமுடியாது. அந்த நாட்டில் சங்கர் என்ற பார்வை மாற்றுத்திறனாளிச் சிறுவன் இருந்தான்.   எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேட்கக் கூடிய சிறுவன். அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர்.

அவன் இந்த மாயாஜாலக்கார அரசனின் மேஜிக் வேலைகளைப் பற்றி மக்களிடம் பேசினான்.

அவர்களில் சிலர் துணிந்து மாயாஜாலக்காரனை எதிர்த்துக் கேள்வி கேட்டார்கள். அவன் அவர்களைச் சிறையில் அடைத்தான். கடுமையான தண்டனைகள் கொடுத்தான். திடீரென ஒரு நாள் நாடு முழுவதும் ஒரு விளம்பரம் வெளியானது.

“ உலகத்திலேயே மிகப்பெரிய மாயாஜால நிகழ்ச்சி நடக்கப்போகிறது.. அனைவரும் வருக! அனுமதி இலவசம்! “

விளம்பரத்தைப் பார்த்த அரசனுக்குப் பயம் வந்தது. தன்னை விட பெரிய மாயாஜாலக்காரனாக இருந்தால் மக்கள் அவனை அரசனாக்கி விடுவார்கள் என்று நினைத்தான். அவன் பதில் விளம்பரம் செய்தான்,

“ என்னுடன் போட்டியிடத் தயாரா? “ என்று கேட்டான்.

அடுத்த விளம்பரம் வந்தது,

“ தயார்..

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் பெரிய மைதானத்தில் இரண்டு பெரிய மேடைகள் இருந்தன. ஒன்றில் மாயாஜாலக்கார அரசனும் இன்னொன்றில் பார்வை மாற்றுத்திறனாளி சங்கரும் நின்றார்கள்.

வழக்கம் போல மயாஜாலக்கார அரசன் மோதிரம், பனிச்சாமி, சங்கிலி, எலுமிச்சம்பழம் எடுத்தான்..

சங்கரும் அதையெல்லாம் எடுத்துக் காட்டினான்.

எப்படி என்று யோசிக்கிறீர்களா? ஒன்றும் பெரிய ரகசியமில்லை. முழுக்கைச்சட்டை போட்டு கக்கத்தில் ஒரு பையைக் கட்டி அதில் வரிசையாக கொண்டு வர வேண்டிய பொருளைப் போட்டு கையைக் குலுக்கி குலுக்கி அதை உள்ளங்கைக்குக் கொண்டு வரவேண்டும். அவ்வளவுதான். தொடர்ந்த பயிற்சியில் எளிதாகக் கைவரும். அறிவியல் இயக்கத்தில் இதைச் சொல்லிக் கொடுத்தார்கள்.

மாயாஜால அரசனின் வித்தைகள் தீர்ந்துவிட்டன. அப்போது சங்கர் ஒரு விசிலடித்தான். அந்த விசில் சத்தம் கேட்டதும் எங்கிருந்தோ ஒரு பெரிய புறா பறந்து வந்தது. வண்ண வண்ண நிறங்களில் ஒளிவீசும் சிறகுகளுடன் வந்தது. அந்த மைதானத்தையே மூடுமளவுக்கு மிகப்பெரிய தன் சிறகுகளுடன் பறந்தது. மக்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார்கள்.

“ ஆகா இது தான் மாயாஜாலம்! அற்புத மாயாஜாலம்..!என்று கத்தினார்கள். சிலர்,

“ இனி நீ தான் எங்கள் அரசன் என்று சொன்னார்கள்.

அதைக் கேட்ட சங்கர் சொன்னான்,

“ மாயாஜாலம், மந்திரம் என்று எதுவும் கிடையாது.. தந்திரம் மட்டுமே உண்டு.. இந்த உலகத்தில் இல்லாத பொருளை உங்களால் கொண்டு வரமுடியாது.. எல்லாமே அறிவியல் தான்.. எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேளுங்கள்.. மூடநம்பிக்கைகளை விட்டொழியுங்கள். உங்களுக்காக யார் பாடுபடுகிறார்களே அவர்களை அரசனாகத் தேர்ந்தெடுங்கள்.

என்றான். அதைக் கேட்ட மக்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது ஒரு விசில் சத்தம் கேட்டது.

லேசர் கதிர் வீச்சின் மூலம் உருவான அந்தப் புறா காற்றில் மறைந்து விட்டது.

அந்த மாயாஜாலக்கார அரசனும் மறைந்து போனான். 

மக்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை அரசனாகத் தேர்ந்தெடுத்தார்கள்.

நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

 

 

Tuesday, 24 December 2024

ஓடினான் ஓடினான்

 

ஓடினான் ஓடினான்

உதயசங்கர்



காட்டூர் நாட்டு ராஜா மாளிகை ராஜா. அவனுடைய உண்மையான பெயர் எல்லாருக்கும் மறந்து விட்டது. ஏன் அவனுக்கே மறந்து விட்டது. அவன் நாடு முழுவதும் மாளிகைகளாகக் கட்டினான்.

எப்படி?

.  பளிங்கு மாளிகை, செங்கல் மாளிகை, கருங்கல் மாளிகை, தேக்கு மாளிகை, தேவதாரு மாளிகை, மூங்கில் மாளிகை, கோபுர மாளிகை, பூமிக்கடியில் ரகசிய மாளிகை, என்று அத்தனை மாளிகைகளைக் கட்டினான். இந்த மாளிகைகளைக் கட்டுவதற்காக மக்களிடம் வரிவசூல் செய்தான். விவசாயிகளிடம் தானியங்களைப் பிடுங்கினான்.

“ மாளிகைகள் நம் நாட்டின் பெருமை நாம் நம்முடைய பெருமையைக் காப்பாற்ற வேண்டாமா..”

என்று முழங்கினான். இத்தனை மாளிகைகள் கட்டி என்ன செய்யப் போகிறான் என்று தானே நினைக்கிறீர்கள்.

 அதிகாலையில் ஒரு மாளிகை,  

காலையில் ஒரு மாளிகை,

முன்மதியத்தில் ஒரு மாளிகை,

மதியத்தில் ஒரு மாளிகை,

பின்மதியத்தில் ஒரு மாளிகை,

முன் மாலையில் ஒரு மாளிகை,

மாலையில் ஒரு மாளிகை,

அந்தியில் ஒரு மாளிகை,

முன்னிரவில் ஒரு மாளிகை,

பின்னிரவில் ஒரு மாளிகை,

நள்ளிரவில் ஒரு மாளிகை

என்று ஒவ்வொரு மாளிகையாகச் சுற்றிக் கொண்டிருந்தான்.

ஆனாலும் ஆசை தீரவில்லை. உலகத்திலேயே இதுவரை யாரும் கட்டாத மாதிரி எல்லாரும் அதிசயிக்கிற மாதிரி ஒரு பிரம்மாண்டமான மாளிகையைக் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டான். தாஜ்மகாலைவிட பிரம்மாண்டமாக, ஈபிள் டவரை விட உயரமாக, உலகத்தின் எந்த மூலையிலிருந்து பார்த்தாலும் தெரிகிற மாதிரி இருக்க வேண்டும்.

அவன் மந்திரிகள், பிரபுக்கள், அதிகாரிகள், கட்டிடக்கலை வல்லுனர்கள், எல்லாரையும் கூட்டி ஆலோசனை நடத்தினான்.

காட்டூர் அடர்ந்த காடுகளும் மலைகளும் நிறைந்த நாடு. அங்கே வருடத்துக்கு  ஆறுமாதம் மழை பெய்யும். ஆறுமாதம் வெயிலடிக்கும். மிதவெப்பமண்டலக் காடாக இருந்தது. அதனால் உலகின் அத்தனை பகுதிகளிலும் இருக்கும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், பாம்புகள், பல்லிகள், மீன்கள், எல்லாம் அந்தக் காட்டில் இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி இனங்களும் அங்கே வாழ்ந்து வந்தனர். காட்டூர் நாட்டுக்கு உலகம் முழுவதும் இருந்து அறிவியலாளர்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து போனார்கள். இயற்கையின் அற்புதங்களைப் பற்றி ஆய்வுகள் நடத்தினார்கள். புத்தகங்கள் எழுதினார்கள்.

அந்தக் காட்டில் தங்கச்சுரங்கம், வைரச்சுரங்கம் கிரனைட் மலைகள் இருப்பதாகக் கதைகள் உலவின. அதனால் அந்தக் காட்டை அழித்து விட்டால் அதையெல்லாம் கொள்ளையடிக்கலாம் என்று மாளிகை ராஜாவும் மந்திரிகளும் திட்டமிட்டனர். அந்தக் காட்டை அழித்து புதிய மாளிகை கட்டுவதற்காக மறுபடியும் மக்களிடம் வரி வசூல் செய்தான் மாளிகை ராஜா.

மக்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். மாளிகை ராஜா கேடகவில்லை. காட்டூரிலுள்ள ஊர்க்காகத்திடம் மக்கள் செய்தியைச் சொன்னார்கள். ஊர்க்காகம் மற்ற காகங்களிடம் சொன்னது. உடனே காட்டுக்குள் இந்தச் செய்தியை காகங்கள் போய் எல்லா உயிரினங்களிடமும் சொல்லின.

காட்டை அழிக்க பெரிய பெரிய புல்டோசர்கள், ராட்சச மரம் அறுக்கும் இயந்திரங்கள், மலைகளை உடைக்கும் டைனமைட்டுகள் எல்லாம் கொண்டு வந்து குவிக்கப்பட்டன. காட்டூர் நாட்டு ராணுவமும், போலீசும் குவிந்தனர். மாளிகை ராஜாவே அங்கு கூடாரம் அமைத்து காட்டை அழிப்பதை மேற்பார்வை பார்க்க வந்தான்.

மறுநாள் காடழிப்பு தொடங்கப் போகிறது. விடிந்தது. வழக்கமாக விலங்குகள், பறவைகள், சத்தம் கேட்கும் காடு இப்போது அமைதியாக இருந்தது. மாளிகை ராஜாவுக்கும் மந்திரிகளுக்கும் புரியவில்லை. ராணுவ வீரர்களுக்கும் போலீசுக்கும் புரியவில்லை.

ஏன் இப்படி அமைதியாக இருக்கிறது?

” ம்ம்ம் “ என்ன எல்லாரும் வேலையைத் தொடங்குங்கள்” என்று மாளிகை ராஜா ஆணையிட்டான்.

புல்டோசர் ஓடத் தொடங்கியது. முதல் மரத்தை மரம் அறுக்கும் இயந்திரம் அறுக்கத் தொடங்கியது.

அப்போது புயலைப் போல ஒரு சத்தம் கேட்டது. காட்டிலுள்ள மிருகங்கள், பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் முழக்கமிட்ட மாதிரி காதைச் செவிடாக்கும் சத்தம் கேட்டது.

எல்லாரும் என்ன சத்தம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே காட்டுக்குள்ளிருந்து லட்சக்கணக்கான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், பாம்புகள், படை படையாக வந்தன.

” காட்டை அழிக்காதே காட்டை அழிக்காதே”

என்ற முழக்கம் காடு முழுவதும் எதிரொலித்தது.

அங்கேயிருந்த மரம் வெட்ட வந்தவர்கள், இயந்திரங்களை ஓட்டுபவர்கள், ராணுவ் வீரர்கள், போலீஸ்காரர்கள் எல்லாரும் அய்யோ அம்மா என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

அப்போது தான் தூங்கி எழுந்து கூடாரத்திலிருந்து வெளியே வந்தான் மாளிகை ராஜா. கூடாரத்தை அப்படியே முட்டித்தூக்கின விலங்குகள். விலங்குகளைப் பார்த்ததும்,

“ ஆ.. ஐயோ.. என்னை விட்டிருங்க.. இனி காட்டுப்பக்கம் வரமாட்டேன்.. “ என்று அலறினான். ஆனால் விலங்குகள் அவனை விரட்டின. அவன் ஓடினான். ஓடினான். ஓடிக் கொண்டேயிருந்தான்.

நேரே அரபிக்கடலில் போய் விழுந்தான். இப்போதும் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறான் மாளிகை ராஜா..

மந்திரிகளோ கேட்கவே வேண்டாம். இதோ இன்னும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். உங்க ஊர்ப்பக்கம் வந்தார்களா என்று பாருங்கள்.

இப்போது காட்டூர் நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மாளிகை ராஜா கட்டிய மாளிகைகளையெல்லாம் பள்ளிக்கூடங்களாகவும் கல்லூரிகளாகவும் மாற்றி அமைத்தனர்.

காட்டு விலங்குகளும் நிம்மதியாக இருந்தன.

நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

 

Monday, 23 December 2024

பெரிய பானை

 

பெரிய பானை

உதயசங்கர்

 ஆதனூர் நாட்டு ராஜா விசித்திரமானவர். இல்லாததைக் கேட்பார். நடக்க முடியாததை செய்யச் சொல்வார். முடியாததை முடிக்கச் சொல்வார். அவர் வாயைத் திறந்தாலே என்ன சொல்லப்போகிறாரோ என்று மந்திரிகளும் மக்களும் பயப்படுவார்கள்.

அவர் கேட்பதைச் செய்ய முடியாது என்று அவருக்குத் தெரியும். அவர்கள் செய்ய முடியாமல் தத்தளிப்பதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பார். அதில் ஒரு ஆனந்தம்.

ஒரு முறை புல் தின்னும் புலியைக் கொண்டு வரச்சொன்னார். உலகம் முழுவதும் தேடினாலும் புல் தின்னும் புலி கிடைக்கவில்லை. மந்திரிகள் காட்டில் பல புலிகளைப் பிடித்து நாட்கணக்கில் பட்டினி போட்டு புல்லை முன்னால் வைத்தனர்.

 புலிகள் புல்லைத் தொடக்கூட இல்லை. பட்டினியால் புலிகள் இறந்து விட்டன.

பயந்து பயந்து ராஜாவிடம் சொன்னபோது அவர் விழுந்து விழுந்து சிரித்தார்.

இன்னொரு முறை காக்காவை குயிலைப் போலப் பாட வைக்க வேண்டும் என்றார். காக்காக்களைப் பிடித்து கூண்டில் அடைத்து குயிலைப் போல கூவச் சொன்னார்கள். சில நாட்களில் அந்த நாட்டில் காக்காக்களே இல்லை. எல்லாம் வெளிநாட்டுக்குப் பறந்து போய் விட்டன.

ராஜாவிடம் சொன்னபோது உருண்டு புரண்டு சிரித்தார்.

உலகத்திலேயே மிகப்பெரிய விலங்கைக் கொண்டுவரச் சொன்னார். மந்திரிகள் யானையைக் கொண்டு வந்தனர்.

ம்ஹூம்.. இதை விடப் பெரிய விலங்கு இருக்கிறது.. நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்..என்றார். அந்த நாட்டு அறிவியலறிஞர்களிடம் கேட்டபோது அவர்கள் திமிங்கிலம் என்று சொன்னார்கள்.

அந்த நாட்டில் கடலே கிடையாது. திமிங்கிலத்தை எப்படிக் கொண்டு வர முடியும்?

பயந்து போய் ,ராஜா.. கடல் இருந்தால் தான் திமிங்கிலம் இருக்கும்.. நம்முடைய நாட்டில் கடலே இல்லையே..என்று சொன்னார்கள். அப்போதும் அரண்மனையே குலுங்கும் அளவுக்குச் சிரித்தார்.

காலையில் அரண்மனைத் தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மண்பானைகளை சுமந்து கொண்டு கலம்செய்கோ போய்க்கொண்டிருந்தார். ராஜாவுக்குத் தீடீரென்று ஒரு யோசனை வந்தது.

கலம்செய்கோவைக் கூப்பிட்டார்.

“ கலம் செய்கோவே.. உலகத்திலேயே பெரிய பானையைச் செய்து கொண்டு வந்து காட்டு.. ஒரு மாதகாலத்தில் செய்ய வேண்டும்.. அந்தப் பானை அளவுக்கு உனக்குப் பொன் தருகிறேன்.. அதன் பிறகு நான் எதுவுமே கேட்கமாட்டேன் “

“ அரசே அதற்கு நிறைய்யச் செலவாகுமே..” என்றார் கலம்செய்கோ.

” எவ்வளவு செலவானாலும் சரி.. ஆனால் செய்யவில்லை என்றால் அவ்வளவு தான்..” என்று மிரட்டினார் ராஜா.

அரண்மனையிலேயே தங்கினார் கலம்செய்கோ.

மந்திரிகளுக்கு மகிழ்ச்சி. எப்படியாவது கலம்செய்கோ பெரிய பானையாகச் செய்து காட்டி விட்டால் ராஜா பேசாமல் இருந்து விடுவாரே. அவர்கள் தினமும் கலம்செய்கோவைப் போய் பார்த்தார்கள். கலம்செய்கோ எதுவும் செய்யவில்லை. நன்றாக மூன்றுவேளையும் விருந்து சாப்பிட்டுவிட்டு படுத்துறங்கினார்.

 அவர் பெரிய பானை செய்வதைப் பார்க்க வேண்டும் என்று போன மந்திரிகளுக்கு ஏமாற்றம். கலம்செய்கோ எந்தப் பானையும் செய்யவில்லை.

அவர் ஹாயாக கட்டிலில் படுத்து ஓய்வெடுத்தார்.

ஒரு மாதம் முடிந்து விட்டது. அன்று ராஜாவின் முன்னால் உலகத்திலேயே பெரிய பானையைக் கொண்டு போய் காட்ட வேண்டும். ராஜாவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

வீசிய கையும் வெறும் கையுமாக கலம்செய்கோ ராஜாவின் முன்னால் போய் நின்றார்.

“ எங்கே பானை? “

“ இருக்கிறது ராஜா.. முதலில் அறிவியலறிஞர்களை வரச் சொல்லுங்கள்..

உடனே அறிவியலறிஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.

“ சரி இப்போது கொண்டு வா.. உலகத்திலேயே பெரிய பானையை..என்று சொன்னார் ராஜா.

கலம்செய் கோ நிதானமாகச் சொன்னார்,

“ அது ஏற்கனவே இங்கே இருக்கிறது ராஜா..

ராஜாவுக்கும் மந்திரிகளுக்கும் அறிவியலறிஞர்களுக்கும் புரியவில்லை. அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

“ என்ன சொல்கிறாய்? ஏமாற்ற நினைத்தால் உன் தலை தப்பாது..

என்று கோபத்துடன் கத்தினார் ராஜா. கலம்செய்கோ நிதானமாக,

“ பானைக்குள் இருந்து கொண்டே பானையைத் தேடுகிறீர்கள் அரசே..” என்றார்.

“ என்ன உளறுகிறாய்? “ என்று கோபத்துடன் கத்தினார் ராஜா.

“ இல்லை அரசே..இதோ நீங்கள், நான் மந்திரிகள், அறிவியறிஞர்கள், மக்கள், காடு, நாடு, ஊர் உலகம் எல்லாம் அந்தப் பெரிய பானைக்குள் தான் இருக்கிறோம்.. ”

ராஜா தலையைச் சொறிந்தார். மந்திரிகள் தலைகளைச் சொறிந்தனர். ஆனால் அறிவியலறிஞர்களுக்குப் புரிந்து விட்டது. ஆனால் எதுவும் சொல்லவில்லை.

” ஆமாம் ராஜா.. பூமியை விட பெரிய பானை இல்லை ராஜா. அதற்குள் தான் நாம் எல்லாரும் இருக்கிறோம்.என்றார் கலம்செய்கோ.

ராஜா அறிவியலறிஞர்களைப் பார்த்தார்.

அவர்கள், “ ஆமாம் ராஜா.. பூமி தான் பெரிய பானை..என்று சொன்னார்கள். ராஜாவால் பதில் எதுவும் சொல்லமுடியவில்லை.

பூமி அளவுக்கு பொன் கொடுக்கத் தன்னால் முடியாதே என்று கலம்செய் கோவிடம் கெஞ்சினார் ராஜா.

அதற்கு கலம்செய்கோ,

“ எனக்கு அவ்வளவு பேராசை கிடையாது.. என் உழைப்பினால் வரும் பொருளே போதும்.. இனிமேல் பொழுதுபோக்குக்காக எல்லாரையும் துன்புறுத்தாதீர்கள் அது போதும்..

என்று சொல்லி விட்டு கம்பீரமாக நடந்து சென்றார்.

நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்



 

 

 

Sunday, 22 December 2024

அதிசயத்திலும் அதிசயம்

 

அதிசயத்திலும் அதிசயம்

உதயசங்கர்



ஆவூர் ராஜாவின் பெயர் செல்வராஜா. ஆனால் மக்கள் அவனுக்கு சூட்டிய பெயர் அதிசய ராஜா. ஐந்துவேளை சாப்பாடு. மூன்று நேரத்தூக்கம். நினைத்த நேரம் விளையாட்டு, நடனம், பாட்டு, என்று இருந்தான் அதிசயராஜா. எல்லாம் போரடித்து விட்டது. சரி கதை கேட்கலாம் என்று கதைசொல்லிகளை வரச்சொன்னான். தினமும் கதை கேட்டான்.

கதைசொல்லிகள் திரும்பத்திரும்ப ராமாயாணம், மகாபாரதம், பஞ்சதந்திரக்கதைகள், முல்லாக்கதைகள், பைபிள கதைகள், என்று கழுத்தறுத்தார்கள். அதுவும் போரடித்தது.

ஒருநாள் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்கும்போது  ஆண் இருவாட்சிப்பறவை மரப்பொந்துக்குள் பெண் இருவாட்சிப்பறவையை வைத்து மண்ணைக்குழைத்து பூசிக் கொண்டிருந்தது. உணவு தருவதற்காக ஒரே ஒரு சின்னஞ்சிறு ஓட்டையை ஏற்படுத்தியிருந்தது.

“ என்ன டா இது அதிசயமா இருக்கு! “ என்று நினைத்தார் அதிசயராஜா. மறுநாள் அரசவைக் கூட்டினார்.

“ தினம் ஒரு அதிசயத்தைக் காட்ட வேண்டும் “ என்று ஆணையிட்டார். நாடு முழுவதும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. தினமும் ஒருவர் வந்தார். மந்திரிகளும் தினம் தினம் ஒரு அதிசயத்தை ராஜாவிடம் காட்டி பரிசுகளைப் பெற்றனர். அதில் பாதியை அதிசயத்தைக் காட்டியவருக்குக் கொடுத்தனர். அப்படி அதிசய ராஜாவுக்கு ஆச்சரியம் வரவில்லை என்றால் கொண்டு வந்தவருக்கு கசையடியும் கிடைத்தது.

பாம்பை விழுங்கும் தவளையைக் காட்டினர்

காக்கா கூட்டில் குயில் முட்டையிடும் தந்திரத்தைக் காட்டினார்கள்.

பூச்சிகளைச் சாப்பிடும் செடியைக் காட்டினார்கள்.

மனிதர்களைப் போல விவசாயம் செய்யும் இலைவெட்டி எறும்பைக் காட்டினார்கள்.

குஞ்சுகள் பொரிக்கும் கடல்குதிரையைக் காட்டினார்கள்.

கொஞ்சநாட்களில் அதிசய ராஜாவின் ஆச்சரியம் வற்றி விட்டது. எதைக் காட்டினாலும் அவர் ஆச்சரியப்படவில்லை. அதிசயப்படவில்லை.  அவருக்கு ஆச்சரியம் வராததினால் மக்களுக்குத் தண்டனையும் கிடைத்தது.

அநேகமாக கசையடி வாங்காத மக்களே இல்லை. மக்கள் கவலைப்பட்டனர். ராஜாவின் நோய்க்கு மருந்தில்லையா என்று எல்லாவைத்தியரிடமும் கேட்டார்கள். அல்லோபதி மருத்துவர் இல்லை என்றார். , ஹோமியோபதி மருத்துவர் இல்லை என்றார்., சித்தமருத்துவரும் இல்லை என்றார்., ஆயுர்வேதம், யுனானி என்று எல்லாவைத்தியருமே இல்லை என்றார்கள்.  

அந்த நாட்டின் எல்லையில் அறிவுக்கரசன் என்ற பையன் தன்னுடைய தாத்தாவுடன் வாழ்ந்து வந்தான். அவன் அரசரின் பைத்தியக்காரத்தனத்தைக் கேள்விப்பட்டான். மிகவும் வருத்தமாக இருந்தது. அப்போது அவனுடைய தாத்தா அவனிடம் ஒரு விஷயம் சொன்னார்.

அவன் அதிசய ராஜாவிடம் வந்து,

“ அதிசயராஜா.. நான் உங்களுக்கு இதுவரை யாரும் காட்டாத அதிசயத்தைக் காட்டுகிறேன்.. ஆனால் நீங்கள் என்னுடன் பயணம் செய்யவேண்டும்..

என்று சொன்னான்.

“ அதற்கு என்ன வருகிறேன்.. ஆனால் அதிசயத்தைக் காட்டவில்லை என்றால்..? “

“ நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்..

என்று தலைநிமிர்ந்து சொன்னான் அறிவுக்கரசன்.

அவர்கள் கப்பலில் பசிபிக் சமுத்திரத்துக்குப் போனாரகள். அங்கே இரண்டு தீவுகள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருந்தன. ஒன்றின் பெயர் சமோவா. இன்னொன்று ரொங்கோ. அறிவுக்கரசன் அதிசய ராஜாவை சமோவாவுக்கு அழைத்துச் சென்றான்.

அன்று புதன்கிழமை காலை பத்துமணி. அப்படியே நடந்து அருகிலிருந்த ரொங்கோ தீவுக்குப் போனார்கள். ஐந்து நிமிடத்தில் போய்ச்சேர்ந்து விட்டார்கள்.

என்ன ஆச்சரியம்! அங்கே வியாழக்கிழமை காலை பத்துமணி.

அதிசய ராஜாவுக்குப் புரியவில்லை.

“ என்னடா இது அதிசயமா இருக்கு! “

 அவர் சமோவாவுக்கு ஓடினார். அங்கே புதன்கிழமை.

ரொங்கோவுக்கு ஓடி வந்தார். இங்கே வியாழக்கிழமை. அவருடைய கண்களை  அவரால் நம்பமுடியவில்லை.

அங்கிட்டு புதன்கிழமை.

இங்கிட்டு வியாழக்கிழமை..

எப்படி ஒரு நாள் காணாமல் போனது?

அவருக்குப் புரியவில்லை.

” அங்கிட்டு புதன்கிழமை, இங்கிட்டு வியாழக்கிழமை”

என்று வாய்விட்டு கத்தினார். ஆச்சரியத்தில் திறந்த வாய் திறந்தபடியே இருந்தது.

அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கிறார் அதிசயராஜா. இன்னமும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அறிவுக்கரசன் உங்களிடம் மட்டும் அந்த ரகசியத்தைச் சொல்லச்சொன்னான்..

சமோவாவையும் ரொங்கோவையும் சர்வதேச தேதிக்கோடுகள் பிரிக்கின்றன. அதனால் இரண்டு தீவுகள் அருகருகே இருந்தாலும் இருபத்திநான்கு மணிநேரம் வித்தியாசம் இருக்கும்.

யாரிடமும் சொல்லி விடாதீர்கள். முக்கியமாக அதிசயராஜாவிடம் சொல்லவே சொல்லாதீர்கள்.

நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

Saturday, 21 December 2024

உனக்கு இடமில்லை

 

உனக்கு இடமில்லை

உதயசங்கர்

 




சோலையூர் காட்டு ராஜா டிமுக்கோ திடீரென ஒரு உத்தரவு போட்டார்.

“ தெய்வத்துக்கு படையல் போட வேண்டும். ஒரு காட்டெருமைக் கன்றுக்குட்டி வேண்டும். உங்களைக் கடவுள் சொர்க்கத்துக்குக் கூட்டிச்செல்வார் ”

யார் அந்த டிமுக்கோ என்று தானே கேட்கிறீர்கள். வரிப்புலியார் தான் டிமுக்கோ. எப்படி அவர்   ராஜாவானார் என்று தெரியுமா? அவர் இந்தக் காட்டைச் சேர்ந்தவரேயில்லை.  தொலைதூரத்திலிருந்த மேட்டூர் காட்டிலிருந்து வந்தவர். அங்கே கடும் பஞ்சம்.  உணவு கிடைக்கவில்லை. அப்படியே பொடிநடையாகக் கிளம்பி வந்தார். இந்தச் சோலையூரைப் பார்த்ததும் அப்படியே குடியேறி விட்டார். சோலையூரில் ,புள்ளிமான், கேழைமான், வரையாடு, மலை அணில், ,முயல், காட்டெருமை,  மிளா, காட்டு மாடு, கானாங்கோழி என்று ஏராளமான உணவு கிடைத்தது. அது  மட்டுமல்ல. எல்லாவிலங்குகளும் டிமுக்கோ வரிப்புலியாரைப் பார்த்து ஆச்சரியப்பட்டன.

“ அட அடடா என்ன ஒரு சிவப்பு. இந்த நிறம் யாருக்கு வரும். இவர் ஒரு அபூர்வப்பிறவி தான். தெய்வத்தின் அருள்பெற்றவர் தான் ”

என்று பாராட்டி வணங்கின. டிமுக்கோவுக்கு வசதியாகப் போய்விட்டது. காலையில் குகையிலிருந்து ஒரு கர்ச்சனை செய்யும்.

காட்டெருமைக் கூட்டம் வருத்தத்துடன் ஒரு கன்றுக்குட்டியை அனுப்பி வைக்கும். அடுத்த நாள் மான்குட்டியைக் கேட்கும். இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலங்கைப் படையல் போட்டது ராஜா டிமுக்கோ.

ஒருநாள் மதியூகி நரியார் கண்டுபிடித்து விட்டார். டிமுக்கோவின் குகையில் தெய்வமும் இல்லை. கடவுளும் இல்லை. டிமுக்கோ தின்ற விலங்குகளின் எலும்புகள் தான் குவிந்திருந்தன. மதியூகி நரியாரின் பேச்சை யாரும் நம்பவில்லை. டிமுக்கோ மாதிரி சிவப்பாக இருப்பவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று சில விலங்குகள் சொல்லின. டிமுக்கோவை எதிர்த்துக் கேள்வி கேட்டால் தெய்வம் தண்டித்து விடுமோ என்று சில விலங்குகள் பயந்தன.

கடைசியில் மதியூகி நரியாரே டிமுக்கோவிடம் கேட்டார்,

“ ஐயா.. நீங்கள் தினம் ஒருவரை சொர்க்கத்துக்கு அனுப்புவதாகச்  சொல்கிறீர்கள்.. ஆனால் உங்கள் குகையில் எந்தத் தெய்வமும் இல்லையே. ஆனால் எலும்புகள் குவிந்து கிடக்கின்றன. எங்களை ஏமாற்றுகிறீர்களா? “

என்று கேட்டது. உடனே புலி தெய்வ அருள் வந்ததைப் போல ஆட ஆரம்பித்தது.

“ என்னையே சந்தேகப்படுறியா? இனி இந்தக் காட்டில் உனக்கு இடமில்லை.. என்னைப் போலச் சிவப்பாக இல்லாதவர்கள் இந்தக் காட்டிலிருந்து விலக்கி வைக்கிறேன்.. காட்டில் தனியான முகாமில் அடைத்து வைக்கிறேன்.. இதில் யாருக்காவது ஆட்சேபணை இருக்கிறதா? “  என்று கர்ச்சித்தது. மற்ற விலங்குகள் எதுவும் பேசவில்லை. பயந்து அமைதியாக இருந்தன.

காட்டுக்கு வெளியே உருவாக்கிய சிறப்பு முகாமில் நரியைப் போல கறுப்பு சாம்பல் வண்ணமுள்ள விலங்குகள் அடைக்கப்பட்டன. மற்ற விலங்குகள் சிவப்புச் சாயத்தைப் பூசிக்கொண்டு திரிந்தன.

மதியூகி நரியாரின் நண்பனான முதலையார் நரியாரைத் தேடி வந்தார். அவர் சிறப்பு முகாமில் இருப்பதைப் பார்த்து கோபம் கொண்டார். நேரே ராஜா டிமுக்கோவிடம் போனார்.

“ நீங்கள் உங்கள் விருப்பப்படி ஆட்சி செய்யமுடியாது.. என்ன குற்றம் செய்தான் என் நண்பன்? “

என்று கேட்டது. உடனே ராஜா டிமுக்கோ,

“ என்னை எதிர்த்துக் கேள்வி கேட்கிறியா? இனி இந்தக் காட்டில் உடலில் வரிகள் இல்லாத விலங்குகள் இருக்கக்கூடாது.. அவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுவார்கள்.. இதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா? “

என்று கர்ச்சித்தது. எந்த விலங்கும் பேசவில்லை. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தன. முதலையும் தனி முகாமில் சிறை வைக்கப்பட்டது.  மற்ற விலங்குகள் உடலில் வரிகளை வரைந்து கொண்டு திரிந்தன.

இப்படி ராஜா டிமுக்கோ தனக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் தனித்தனியான முகாம்களில் அடைத்து வைத்தது. மற்ற விலங்குகளுக்குக் கோபமும் வருத்தமும் இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு பேசாமலிருந்தன.

ஒரு நாள் ஒரு குட்டி மான் ராஜா டிமுக்கோவின் குகைக்கு முன்னால் போய்,

“ ராஜா குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். ஒதுக்கக்கூடாது. இந்த காடு அனைவருக்கும் சொந்தமானது. எல்லாரும் வாழலாம்.. நீதி என்பது அனைவருக்கும் பொதுவானது..என்று கத்தியது.

குகையிலிருந்து வெளியே வந்த ராஜா டிமுக்கோவுக்குத் தன்னை எதிர்த்து ஒரு குட்டி மான் கத்துவதைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. ஒரு பாய்ச்சலில் குட்டி மானை அடித்தது. கீழே விழும்போது குட்டி மான்,

“ நீங்களே புலம் பெயர்ந்து இங்கே வந்தவர் தான் அழகும் நிறமும் இயற்கையின் தனித்துவம்.. அதில் ஏற்றதாழ்வு கற்பிக்கக்கூடாது.. உங்கள் தெய்வம் இதை உங்களுக்குச் சொல்லித் தரவில்லையா? “

என்று கத்தியது. அந்தக் குரல் காடு முழுவதும் எதிரொலித்தது. எல்லாவிலங்குகளும் ஒன்று சேர்ந்தன. பாம்பு, பல்லி, யானை, பூனை, நரி, கழுதைப்புலி, கரடி, கழுகு, வல்லூறு, சிட்டுக்குருவி, மைனா, கிளி, காகம் என்று  விலங்குகளும் பறவைகளும் ஒன்று சேர்ந்தன.

ராஜா டிமுக்கோவைச் சுற்றி வளைத்தன. ராஜா டிமுக்கோவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. விலங்குகள் எல்லாம் சேர்ந்து டிமுக்கோவைக் காட்டை விட்டே துரத்தி விட்டன.

கேள்வி கேட்ட குட்டி மானைக் கும்பிட்டு வணங்கின.

நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

 

Friday, 20 December 2024

சிடுமூஞ்சி ராஜா

 

 

சிடுமூஞ்சி ராஜா

உதயசங்கர்



காந்தளூர் நாட்டு ராஜா காந்தராஜா சிடுமூஞ்சி ராஜா. மூக்குக்கு மேலே கோபம் எப்போதும் உட்கார்ந்திருக்கும். எந்த நேரத்தில் கோபப்படுவார் என்று அவருக்கே தெரியாது. கோபம் வந்து விட்டால் என்ன ஆணையிடுவார் என்று யாருக்கும் தெரியாது. அதனால் மக்கள் சிடுமூஞ்சி ராஜா என்றே கூப்பிட்டார்கள்.

திடீரென்று ஒரு நாள், அவருக்கு வந்த கோபத்தில்,

“ எல்லாரும் கைகளால் நடக்க வேண்டும்.. அப்படி நடக்காதவர்களுக்கு ஐம்பது கசையடி கொடுங்கள்.. “ என்று ஆணையிட்டார். அவ்வளவுதான். மந்திரி கைகளால் நடந்து குப்புறவிழுந்தார். தளபதி கைகளால் நடந்து மட்ட மல்லாக்க விழுந்தார். படை வீரர்கள் கைகளால் நடந்து குண்டக்க மண்டக்க விழுந்தார்கள். மக்களும் அப்படித்தான் தலைகீழாக நடக்க முயற்சித்து தெருக்களில் விழுந்து கிடந்தார்கள்.

காலையில் படுக்கையிலிருந்து எழுந்து பல் தேய்க்க மாலையில் தான் ள் கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை தான் பள்ளிக்கூடம் போய்ச்சேர்ந்தார்கள் குழந்தைகள். அலுவலகங்கள் எல்லாம் ஆளில்லாமல் குழம்பிப் போயின. எல்லாப்போக்குவரத்தும் நின்று விட்டது.

காந்தராஜாவின் அரண்மனையில் சாப்பாட்டை கால்களில் சுமந்து     வந்த சமையல் காரர்கள் உணவைத் திரும்பத் திரும்பக் கீழே போட்டார்கள்.  காலையில் உணவுமேஜையில் உட்கார்ந்த ராஜா சாயங்காலம் தான் காலை உணவைச் சாப்பிட்டார்.

உடனே அவருடைய உத்தரவை ரத்து செய்து விட்டார். இன்னொரு நாள் அவருடைய வீட்டில் நூற்றியோராவது ராணியுடன் சண்டை. அரசவைக்கு வந்ததும்,
 “ இனி பெண்களும் ஆண்களும் சேர்ந்து இருக்கக்கூடாது.. எல்லாரும் தனித்தனியாக வீடுகட்டி இருக்கவேண்டும்.. குழந்தைகள் அவர்களுடைய விருப்பப்படி யார் கூட வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம்..

என்று ஆணை போட்டான். அவ்வளவு தான். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குய்யோ முய்யோ என்று கத்திக் கூப்பாடுபோட்டுக் கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள்.

அங்கே மந்திரியும் அழுது கொண்டிருந்தான். தளபதியும் அழுது கொண்டிருந்தான்.  படைவீரர்களும் அழுது கொண்டிருந்தார்கள். மக்கள் கூட்டமாக வந்திருப்பதை அரசரிடம் தெரிவித்தார்கள்.

காந்தராஜா,

“ யாராவது ஒருத்தர் வரட்டும்.. என்ன விசயம் என்று சொல்லட்டும்..

அரசரைப் பார்க்க ஒரு பையன் வந்தான். அவன் பெயர் மதியழகன்.

“ அரசே! உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்.. “ என்றான். அரசனும் தனியாக ஒரு அறைக்கு அழைத்துப் போய், கதவைப் பூட்டினான்.

“ யோவ்.. கொஞ்சமாச்சும் அறிவிருக்கா.. உனக்குக் கோபம் வந்தால் என்ன வேணும்னாலும் சொல்லுவியா.. இப்போது நீ கைகளால் நடந்து காட்டு.. “

என்றான். கோபத்துடன் நிமிர்ந்து பார்த்த சிடுமூஞ்சி ராஜா, மதியழகன் கையில் வாள் மின்னுவதைப் பார்த்தான். கைகளால் தலைகீழாக நிற்கமுயற்சித்தான். பொத்து பொத்துன்னு கீழே விழுந்தான். அவனால் ஒரு நொடி கூட கைகளால் நடக்கமுடியவில்லை.

“ மக்களுக்குக் கோபம் வந்தா என்ன செய்வாங்க தெரியுமா.. முட்டாளே..

என்று முழங்கினான் மதியழகன். அரசனைப் பார்த்து இப்படி யாரும் பேசியதில்லை. அதிர்ச்சியில் அப்படியே நின்றான் சிடுமூஞ்சி ராஜா. .

“ அரசே.. உங்களிடம் அதிகாரம் இருப்பதனால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. ஆனால் உங்கள் கோபம் நியாயமானது தானா? என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? கோபம் வந்தால் அதற்கான காரணம் என்ன? அது சரியானது தானா? இல்லையா என்று இப்படி ஒரு அறைக்கு வந்து யோசித்துப் பாருங்கள்.. அறைக்குள் கத்துங்கள்.. குதியுங்கள்.. கோபம் குறைந்ததும் யோசியுங்கள்..

என்று இதமாகச் சொன்னான். சிடுமூஞ்சி ராஜாவுக்கு உடம்பு எல்லாம் வலி.  யோசித்தான். மதியழகன் சொன்னதில் ஏதோ உண்மை இருப்பதைப் போலத் தெரிந்தது.

“ தம்பி.. நீ சொன்னதை யோசிக்கிறேன்.. ஆனால் இங்கே அறைக்குள் நடந்ததை நீ யாரிடமும் சொல்லிவிடாதே..

என்று சொல்லிச் சிரித்தான். மதியழகனும் சிரித்தான். சிடுமூஞ்சி ராஜா இப்போது சிரித்தமூஞ்சி ராஜாவாகி விட்டான். ஆனால் தினமும் அவன் ஒரு அரைமணிநேரம் அறைக்குள் சென்று பூட்டிக் கொள்வான். அவனுடைய கோபத்தை எல்லாம் கத்தித் தீர்த்துவிடுவான்.

மந்திரிகள் அரசன் தியானம் செய்கிறான் என்று எல்லாரிடமும் சொல்வார்கள்.


நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்



Thursday, 19 December 2024

எதையும் கேள்வி கேள்

 

எதையும் கேள்வி கேள்

உதயசங்கர்



பட்டியூர் நாட்டில் பஞ்சம். மழை பொய்த்து விட்டது. வேலையில்லை. மக்கள் சாப்பிடவே சிரமப்பட்டார்கள். எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. ஆனால் பட்டியூர் ராஜா பராக்கிரமன் எல்லாப்பொருட்களுக்கும் வரி போட்டார். வரி கட்ட முடியவில்லை என்றால் வரிக்கு வரி போட்டார். மக்கள் அவரிடம் முறையிட அரண்மனைக்குப் போனார்கள். 

 அரண்மனை தங்கத்தால் இழைக்கப்பட்டிருந்தது. வெள்ளியில் நீரூற்றுகள் கட்டப்பட்டிருந்தன. வைரங்களையும் வைடூரியங்களையும் ரத்தினங்களையும் பவளங்களையும் பாதைகளில் பதித்திருந்தார்கள். மரங்களில் முத்துக்களைத் தோரணமாகக் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். அரண்மனையில் ராஜா பராக்கிரமன் இல்லை. அவர் வெளிநாடு சுற்றுப்பயணம் போயிருப்பதாகச் சொன்னார்கள்.

எப்போது வருவார் என்று தெரியாது என்று வாயிற்காப்போன் சொன்னான். அரண்மனை வாசலில் அவருடைய சட்டையணியாத முழு உருவப்படம் சிரித்தபடி இருந்தது. ராஜா எப்போதும் எப்போதும் சட்டை அணிய மாட்டார். உடற்பயிற்சி நிலையத்திற்குப் போய் உடற்பயிற்சி செய்து உடம்பைக் கட்டுடலாக்கி வைத்திருந்தார். உருண்டு திரண்ட தோள்கள், விரிந்த மார்பு, தூண்களைப் போன்ற கால்கள் கொண்ட பயில்வானாக இருந்தார்.  நாடு முழுவதும் பளு தூக்கியபடியோ, கர்லாக்கட்டை சுழற்றியபடியோ, தண்டால் எடுத்தபடியோ, பஸ்கி எடுத்தபடியோ பெரிய பெரிய விளம்பர பதாகைகள் இருந்தன.

அவர் நாட்டில் இருக்கிறாரோ இல்லையோ தினமும் அவர் மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“ எனதருமை மக்களே நாடு இப்போது மிகவும் இக்கட்டான நிலைமையில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். இதற்குக் காரணம் நீங்கள் போனபிறவியில் செய்த பாவங்கள் தான். எனவே பாவங்களைப் போக்க இனி தினமும் பஜனைகள் செய்யுங்கள். நீங்கள் பஜனைகள் செய்வதற்காக நாடுமுழுவதும் கோயில்களை, சர்ச்சுகளை, மசூதிகளைக் கட்டுவேன்.. உங்கள் பாவம் தொலைய மனமுருகிப் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் அருள் கிடைத்து விட்டால் நாடு வளம் பெறும்… பஞ்சம் பசி, பட்டினி எல்லாம் தொலையும். நாம் அனைவருமே பெரியாணி, சின்னானி போல பணக்காரராகி விடுவோம்.. வாழ்க பட்டியூர்! “ என்று முழக்கமிட்டார்.

மறுநாளே நாடுமுழுவதும் இதுவரை பெயர் தெரியாத கடவுள்கள் உருவானார்கள். அவர்களுக்குப் பிரம்மாண்டமான வழிபாட்டுத்தலங்கள் கட்டப்பட்டன. முற்பிறவி இப்பிறவி அடுத்தபிறவி என்று கதை சொல்லும் கதைசொல்லிகள் உருவானார்கள். சொர்க்கம் நரகம் என்று புதிய கதைகளைச் சொன்னார்கள். ஜோசியர்கள், குறிசொல்பவர்கள் தோன்றினார்கள்.

அவர்கள் மக்களின் கஷ்டங்களுக்குப் பரிகாரம் சொன்னார்கள். நடுராத்திரி பனிரெண்டு மணிக்கு வீட்டுக்கு முன்னால் தகரத்தில் மேளம் தட்டு என்றார்கள். இல்லையென்றால் பகல் பனிரெண்டு மணி வெயிலில் தெருவுல் படுத்து உருளு என்றார்கள்.  

நாடு முழுவதும் புதிது புதிதாக வழிபாட்டுத்தலங்கள் நிறைந்து விட்டன. எப்போதும்  அங்கே சிறப்பு பூசை, ஆராதனை, பிரார்த்தனை, என்று நடந்து கொண்டேயிருந்தன.

மக்களும் நம்முடைய கஷ்டத்தையெல்லாம் புதிய வழிபாட்டுத்தலங்களில் உருவான தெய்வங்கள் தீர்த்து விடுவார்கள் என்று நம்பினார்கள். எனவே போட்டி போட்டுக் கொண்டு கடன் வாங்கி பூசைகள் செய்தார்கள். கொடைகளை நடத்தினார்கள். காணிக்கை போட்டார்கள். நன்கொடை அளித்தார்கள். ஆனால் எந்தப் பிரச்னையும் தீரவில்லை. எதுவும் நடக்கவில்லை.

நாட்டின் நிலைமை இன்னும் மோசமானது.  ஒரு வேளை சாப்பாடு கிடைக்காதவர்களுக்கு இப்போது இரண்டு வேளை கிடைக்கவில்லை. இரண்டு வேளை உணவில்லாதவர்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கவில்லை.

வேலையில்லை. விவசாயப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கோபப்பட்டார்கள். ராஜா பராக்கிரமன் தன்னுடைய படத்தை அனைத்து வீடுகளிலும் ஒட்டி வைக்க வேண்டும். தான் மனிதப்பிறவியில்லை. ஒரு தெய்வப்பிறவி என்று சொன்னான்.

அப்போது தென் திசையிலிருந்து ஒரு வயதான கிழவர் தன்னுடைய கைத்தடியை ஊன்றிக் கொண்டு வந்தார். மக்களிடம் அவர்களுடைய அறிவை நம்பச்சொன்னார். சிந்திக்கும்படி தூண்டினார். எதையும் ஏன்? எதற்கு என்று கேளுங்கள் என்று சொன்னார். மூடநம்பிக்கைகளை கைவிடச் சொன்னார்.

உன் அறிவை நம்பு, எதையும் கேள்வி கேள் என்று சொன்னார். அதற்காக ஊரு ஊராகச் சென்றார். சிலர் கல்லெறிந்தார்கள். சிலர் செருப்பை எறிந்தார்கள். ஆனால் அவர் இதற்கு அஞ்சாமல் மக்களிடம் பேசிக் கொண்டேயிருந்தார்.

. மக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந்தது. அவர்கள் ஒன்று சேர்ந்தனர். பட்டியூர் ராஜா பராக்கிரமனின் அரண்மனையைக் கைப்பற்றினார்கள். அதிலிருந்த விலை உயர்ந்த பொருட்களை விற்று தொழிற்சாலைகள் கட்டினார்கள்.

அரண்மனை பல்கலைக்கழகமானது. நாட்டில் இருந்த வழிபாட்டுத் தலங்களை அறிவியல் ஆராய்ச்சி கூடங்களாகவும், பள்ளிக்கூடங்களாகவும் மாற்றினார்கள்.

பெரியாணி சின்னானியின் சொத்துகளைப் பிடுங்கி அவர்களையும் எல்லாரையும் போல வேலை பார்க்கச் சொன்னார்கள்.

நம்பிக்கையாளர்களுக்காக ஊருக்கு ஒரு வழிபாட்டுத்தலத்தை மட்டும் விட்டு வைத்தார்கள். இப்போது பட்டியூர் அறிவூராக மாறிவிட்டது. அவர்கள் இப்போது அந்த வயதான தாடிக்கிழவர் வார்த்தைகளை ஊருக்கு ஊர் எழுதி வைத்தார்கள்.

” அறிவை நம்பு. எதையும் ஏன் எதற்கு என்று கேள் “

பழைய ராஜா பராக்கிரமன் என்ன ஆனான்? என்று கேட்கிறீர்களா?

அறிவை நம்பு. எதையும் ஏன் எதற்கு என்று கேள். என்று வீட்டில் உட்கார்ந்து கோடி முறை இம்போசிசன் எழுதிக் கொண்டிருக்கிறான்.

நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

Wednesday, 18 December 2024

தீராத விக்கல்

 

தீராத விக்கல்

உதயசங்கர்

 



ஆத்தூர் நாட்டு ராஜாவின் பெயர் அடி ராஜா. திடீரென்று அவனுக்கு விக்கல் வந்தது. க்வ்அடி  க்வ்அடி க்வ்அடி க்வ்அடி என்று விக்கல் வந்தது.. நிற்கவில்லை. என்னவெல்லாமோ செய்து பார்த்தான். என்ன செய்தும் விக்கல் நிற்கவில்லை. தண்ணீரைக் குடித்துப் பார்த்தான். விக்கல் நிற்கவில்லை. மூக்கைப் பிடித்து மூச்சை அடக்கிப் பார்த்தான். விக்கல் நிற்கவில்லை. மூச்சு விடாமல் கத்திப் பார்த்தான். விக்கல் நிற்கவில்லை. குதித்துப் பார்த்தான். விக்கல் நிற்கவில்லை. ஓடிப் பார்த்தான் விக்கல் நிற்கவில்லை.

விக்கல் எப்படி வந்தது?

அடிராஜாவுக்கு சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும். அது நல்ல விசயம் தானே. ஆமாம் நல்லவிசயம் தான். ஆனால் அடிராஜாவுக்கு எப்போது சிரிப்பு வரும் தெரியுமா? யாராவது அழுதால் தான் சிரிப்பு வரும். அதனால் அவன் சிரிக்க வேண்டும் என்றால் மற்றவர்கள் அழ வேண்டும். அதுவும் சும்மா கள்ள அழுகை அழக்கூடாது. உண்மையாகவே அழவேண்டும்.

மக்களுக்கு தினம் ஒரு வரி போடுவான். ஒவ்வொருவராக அரசவைக்கு வந்து அழுது கொண்டே இவ்வளவு வரிகளை கட்ட முடியாது என்று சொல்லும்போது அவன் விழுந்து விழுந்து சிரிப்பான்.

அப்படி யாரும் வரவில்லை என்றால் என்ன செய்வது?

இரண்டு ஊர்க்காரர்களை அழைத்து சண்டை போடச் சொல்வான். அப்போது சொல்வான் ” அடி அடி அடி ”

இல்லையென்றால் வேறு வேறு சாமிகளைக் கும்பிடுபவர்களிடம் சண்டை மூட்டி விடுவான்.

“ அடி அடி அடி “ என்று சொல்வான். அவர்கள் அடித்துக் கொண்டு அழும்போது சிரிப்பான். சிரிப்பான். அப்படிச் சிரிப்பான். அதுவும் நடக்கவில்லை என்றால் அவனிடம் வேலை பார்ப்பவர்களை அழைத்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளச் சொல்வான்.

“ அடி அடி அடி “

அவர்கள் அடி தாங்க முடியாமல் அழும்போது அவன் சிரிப்பான். அதனால் அடிராஜாவிடம் வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல மக்களும் பயந்து கொண்டே இருந்தார்கள்.

ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இரண்டு சமையல்காரர்களை அடித்துக் கொள்ளச் சொன்னான். அப்போது வாயில் கோழிக்கறியைத் திணித்துக் கொண்டே,

“ அடி அடி க்க்க்வ் அடி க்க்வ் அடி க்வ் அடி ” சொன்னான். அப்போதிருந்து இந்த விக்கல் நோய் அடிராஜாவுக்கு வந்து விட்டது.

உடனே வைத்தியர்கள் வந்தார்கள். அவர்களும் தெரிந்த வித்தைகளை எல்லாம் காட்டினார்கள். ம்ஹூம்.. சில நிமிடங்கள் நிற்பதைப் போலத் தெரியும். மறுபடியும் வந்து விடும். ” க்வ்அடி க்வ்அடி க்வ்அடி “

ராஜாவால் பேசமுடியவில்லை. சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை. முக்கியமாக சிரிக்கமுடியவில்லை.

” க்வ்அடி  க்வ்அடி க்வ்அடி க்வ்அடி ”

ஒவ்வொரு முறை அடிராஜா விக்கும்போது அடிக்கத்தான் சொல்கிறான் என்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பக்கத்து நாடுகளில் இருந்து வைத்தியர்கள் வந்தார்கள். அவர்களாலும் விக்கலை நிறுத்த முடியவில்லை.

அடிராஜா ஆத்தூர் நாட்டில் முரசறையச் சொன்னான்.

“ நாட்டு மக்களுக்கு நற்செய்தி.. நல்லதோர் வாய்ப்பு. இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்ன என்றால் ராஜாவின் விக்கல் நோயை என்ன செய்தாவது குணப்படுத்த வேண்டும். அப்படி குணப்படுத்துபவர்களுக்கு அவர்கள் கேட்பதைக் கொடுக்கிறேன் என்று அறிவிக்கிறார் அடி ராஜா…

ஆனால் யாருமே அரண்மனைப் பக்கம் போகவே இல்லை.

போய் யார் அடி வாங்குவது?

அப்போது ஆத்தூர் நாட்டின் கிழக்கு திசையிலிருந்து ஆதவன் என்ற  இளைஞன் அரண்மனைக்கு வந்தான்.

“ அரசனை நான் குணப்படுத்துகிறேன்.. “ என்றான். அவனை அரசனிடம் அழைத்துச் சென்றனர். அவன் அடிராஜாவிடம்,

“ அரசே.. நான் இரண்டு நிமிடத்தில் உங்கள் நோயைக் குணப்படுத்தி விடுவேன்.. ஆனால் அதற்கு முன்னால் நீங்கள் இரண்டு உறுதி மொழிகளைத் தரவேண்டும்..என்று சொன்னான்.

க்வ்அடி க்வ்அடி க்வ்அடி சீக் க்வ்அடி கிரம் க்வ் அடி சொ க்வ்அடி ல்லு க்வ்அடி.. எது க்வ்அடி  ஆனாலும் க்வ்அடி  சரி..என்று சொன்னான் அரசன்.

“ முதலாவது நான் கொடுக்கும் மருந்துகளைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது…

க்வ்அடி க்வ்அடி  சரி.. அடுத்தது..க்வ்அடி க்வ்அடி “

“ மருத்துவம் முடிந்ததும் சொல்கிறேன்..என்றான் ஆதவன்.

ஆதவன் ஒரு இருட்டறைக்கு அரசனை அழைத்துச் சென்றான். அவனுடைய கைகளையும் கால்களையும் சங்கிலியால் பிணைத்தான்.

அவன் என்ன செய்யப்போகிறான் என்று புரியாமல் அடிராஜா முழித்தான். என்ன செய்தாலும் சரி விக்கல் நின்றால் சரி.

வெளியில் மந்திரிகள், தளபதிகள் எல்லாரும் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆதவன் நிதானமாக தன்னுடைய இடுப்பில் சுருட்டி வைத்திருந்த புளியவிளாரை எடுத்தான்.

அடித்தான். அடின்னா.. அடி.. அப்படி ஒரு அடி..

அடிராஜாவின் முதுகிலும் கால்களிலும் அடி வெளுத்து வாங்கினான். அடிராஜா வலி தாங்க முடியாமல்,

“ அய்யோ அம்மா அய்யோ அம்மா… “ என்று அலறினான் அடிராஜா. கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. உடம்பு முழுவதும் தீயாய் எரிந்தது. பல இடங்களில் தோல் உரிந்து விட்டது.

 ஆனால் என்ன ஆச்சரியம்!

விக்கல் நின்று விட்டது. அடிராஜா உடைகளை அணிந்து கொண்டு வெளியில் வந்தான். யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. மந்திரிகள்,

“ எப்படி இருந்தது மருத்துவம் ராஜாவே..

என்று கேட்டார்கள். அடி ராஜா அழுது கொண்டே,

“ ஆகா ஓகோ பேஷ் பேஷ்..என்றான்.

“ ஏன் அழுகிறீர்கள் ராஜாவே..?

அதுவா ஆனந்தக்கண்ணீர்..என்றான் அடி ராஜா. பிறகு ஆதவனைப் பார்த்து,

“ இரண்டாவது உறுதி மொழி என்ன தம்பி? “

என்று கேட்டான். ஆதவன் சிரித்துக் கொண்டே,

“ உங்களுக்கே தெரியுமே.. ராஜாவே..

என்று சொன்னான். அதைக் கேட்டதும்,

“ ஆமா ஆமா எனக்குத் தெரியும்..என்று சொன்னான் அடிராஜா.

 மந்திரிகளிடம்,

“ இனி ஆத்தூர் நாட்டில் யாரும் யாரையும் அடிக்கக்கூடாது.. இதைச் சட்டமாக்கி விடுங்கள் என்றான்.

மந்திரிகள் ஆச்சரியத்துடன் அரசனைப் பார்த்தார்கள். அடிராஜா அழுது கொண்டே சிரித்தான்.

தீராத அவனுடைய விக்கல் தீர்ந்து விட்டதே.


நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்