நூல் மதிப்புரை
உதயசங்கர் எழுதிய
தூரம் அதிகமில்லை
சிறுகதைகள்
பேரா.பெ.விஜயகுமார்
தமிழ்ச்சிறுகதை ஜாம்பவான்கள் கி.ராஜநாராயணன்,
கு.அழகிரிசாமி, தொடங்கி இன்று அதன் தொடர்ச்சியாக உதயசங்கர் வரை எழுத்தாளர்களுக்கு பஞ்சமில்லாத
ஊர் கோவில்பட்டி. அதிலும் உதயசங்கர் தமிழ்ச்சிறுகதை மரபை அதன் உச்சத்திற்கே கொண்டு
செல்கிறார். சிறுகதைகள் மட்டுமின்றி உதயசங்கரின் கட்டுரைகளும் வாசகர்களை வாஞ்சையுடன்
ஈர்க்கக்கூடியன. ” முன்னொரு காலத்திலே…” மற்றும் ” நினைவு எனும் நீள்நதி “ ஆகிய இரு
கட்டுரைத் தொகுப்புகளும் அவரின் காத்திரமான படைப்புகள். நிறைய மலையாளப் படைப்புகளையும்
உருது எழுத்தாளர் சதத் ஹசன் மண்ட்டோவின் கதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.
நகைச்சுவை உதயசங்கருக்கு மிகவும்
இயல்பாக கைவரப்பெற்ற வரம். எப்போதுமே உதயசங்கரின் படைப்புகளில் அவருக்கும் அவர் வாசகர்களுக்கும்
இடைவெளி இருப்பதில்லை. ஆங்கில இலக்கியத்தில் சார்லஸ் லாம்ப் ( Charles lamb ) இவ்வாறு
இடைவெளியின்றி எழுதிச் செல்பவர். எலியா என்ற புனைபெயரில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளில்
வாசகர்களுடன் மிகுந்த நட்புடன் தோளில் கைபோட்டுக் கொண்டு பேசிச் செல்வார். கட்டுரைகளைப்
படிக்கும்போது ஏதோ அவர் நம்முடன் பேசிக்கொண்டே வருவது போல் இருக்கும். இத்தகு அநுபவமே
உதயசங்கரின் கதைகளையும் கட்டுரைகளையும் படிக்கும்போது ஏற்படுகிறது.
“ தூரம் அதிகமில்லை “ உதயசங்கரின்
சமீபத்தியச் சிறுகதைத் தொகுப்பு. தொகுப்பில் உள்ள பதிமூன்று கதைகளிலும் பளிச்சென்று
மிளிர்வது நகைச்சுவை. நடுத்தரவர்க்க மக்களின் அன்றாடப்பிரச்னைகளே கதைகளின் கருப்பொருள்.
அவர்களின் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள், இவைகளுக்கிடையே உள்ளார்ந்திருக்கும்
அன்பு, அறம், வெகுளித்தனம், என அனைத்தையும் எழுதி நிறைவு செய்கிறார்.
வீடு கட்டுதல் என்பது நடுத்தரவர்க்கத்தினரின்
மிகப்பெரும் கனவு. இந்தக் கனவை நனவாக்க அவர்கள் படும்பாடு சொல்லித்தீராதது. இவர்களின்
இந்த ஆசையை வளர்த்துக் கொள்ளை லாபம் அடித்து குபேரர்கள் ஆகும் ரியால்டர்கள் எனப்படும்
புதுவகை வியாபாரிகள் பெருநகரங்களில் பெருகியுள்ளனர். “ நகரின் மையமான பகுதியில் வீட்டுமனை
“ அல்லது “ ”நகரப்பேரூந்து நிலையத்திற்கு மிக அருகில் அடுக்குமாடிக் குடியிருப்பு
“ என்ற இவர்களின் பகட்டான விளம்பரங்களில் ஏமாந்துபோய் மனைகளையும், குடியிருப்புகளையும்
வாங்கித் தவிப்பவர்கள் ஏராளம். இத் தொகுப்பில் நான்கு கதைகள் இந்த அவலத்தைப் படம் பிடித்துக்
காட்டுகின்றன. கஷ்டப்பட்டு கட்டிய வீட்டையே காணாது தவிக்கிறார் “ தொலைந்தது “ கதையின்
நாயகன். போதாததற்கு அவர் மனைவியும் இந்த வேதனை தாங்காது தன் தாய் வீட்டிற்குச் சென்று
விடுகிறார். ஒரே வீட்டு மனையை ஈவு இரக்கமின்றி இருவருக்கு விற்று பணம் சம்பாதிக்கும்
கும்பலால் பாதிக்கப்படும் தம்பதியரை இக்கதையில் காட்சிப்படுத்துகிறார் உதயசங்கர்.
“ தூரம் அதிகமில்லை “ கதையில் கருணையானந்தம் சொந்த வீடு கட்டுவதில் அதிக லாபம் இல்லை
அதில் பிரச்னைகள் தான் மிஞ்சும் என்ற எண்ணம் கொண்டவன். நண்பர்களிடம் எல்லாம் “ வீடு
கட்டுவதைப்போல ஒரு டெட் இன்வெஸ்ட்மெண்ட் வேறு ஏதும் கிடையாது..” என்று சொல்லி வந்தவன்
தான். இருப்பினும் அவன் மனைவி சாந்தலெட்சுமி விடுவதாக இல்லை. இருவரும் ஊரெல்லாம் அலைந்து
திரிந்து வீட்டுமனை வாங்குகிறார்கள். வாங்கிய மனையில் வீடு கட்டலாம் என்ற ஆசையில் இஞ்சினியர்
நண்பனைக் கூட்டிக் கொண்டு போகும்போது தான் தெரிகிறது “ தூரம் அதிகமில்லை “ என்று விளம்பரப்படுத்தப்பட்டு
வாங்கிய மனை வெகுதூரத்தில் இருப்பது. அந்த மனையில் வீடு கட்டுவதே சாத்தியமில்லை என்று
சொல்லி அடுத்த இடியையும் இறக்குகிறான் இஞ்சினியர் நண்பன். பாவம் நடுங்கி ஒடுங்குகிறார்கள்
தம்பதியர்கள்.
இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளின்
படிப்பு அனுபவம் அலாதியானது.
வெளியீடு – கலைஞன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை,
தி.நகர்.,
சென்னை-600 017
விலை – 120/-
தொடர்புக்கு – 044-24345641