குபீர்ராஜாவின்
திட்டம்
உதயசங்கர்
குப்பையூர் நாட்டு ராஜா படுக்கையில்
இருந்து எழுந்து உட்கார்ந்தார். கண்களைக் கசக்கிவிட்டுத் திறந்தார். ஒரு பெரிய கொட்டாவி
விட்டார். அந்த கொட்டாவி வழியே இரவில் அவர் தின்று முடித்த ஸ்விட்சர்லாந்து காளைக்கன்று
வெளியே குதித்தது. அதோடு சேர்த்துத் தின்ற இங்கிலாந்து புறாக்களும், பின்லாந்து குறும்பை
ஆடுகளும் வெளியேறி விடக்கூடாதே என்று நினைத்த குபீர்ராஜா படக்கென்று வாயை மூடிக் கொண்டார்.
கண்களைத் திறந்ததும் அவர் பார்த்தது ஒரு சிலந்தி. அவர் படுத்து உறங்கிய சப்பரமஞ்சத்திலிருந்து
எதிரே இருந்த இரவு விளக்குக்கு வலை பின்னிக் கொண்டிருந்தது. சற்று நேரம் அதை ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தார். அடடா.. என்ன அழகாய் வலை பின்னுகிறது. நாமும் அப்படி வலைபின்னி
அந்தரத்தில் தொங்கினால் எப்படி இருக்கும்? அப்போது ஒரு ஏடிஸ் கொசு அவருடைய பரந்த முதுகில்
உட்கார்ந்து கடித்தது. குபீர்ராஜா கைகளை அங்கும் இங்கும் வீசினார். முதுகைத் தொடக்கூட
முடியவில்லை. கைகளை வீசியதால் சோர்ந்து போய் வலியைப் பொறுத்துக் கொண்டு அப்படியே இருந்தார்.
அவருடைய உடம்பிலிருந்து பி பாசிட்டிவ்
ரத்தத்தை வயிறு முட்டக்குடித்த ஏடிஸ் கொசு அப்படியே கிறங்கிப்போய் மேலே பறந்தது. அப்படியே
மேலே பறந்து பறந்து…. டக்.. சிலந்தி வலையில் போய் மாட்டிக்கொண்டது. அதைப்பார்த்த குபீர்ராஜாவுக்கு
மகிழ்ச்சி. கைகளைத் தட்டி கெக்க்கெக்க்கே… என்று சிரித்தார். அவருடைய கைதட்டல் சத்தம்
கேட்டு வேலைக்காரர்கள் ஓடிவந்தார்கள். குபீர்ராஜா கைகளைத் தட்டிச் சிரித்துக் கொண்டிருப்பதைப்
பார்த்தார்கள். அவர்களுக்கு ராஜா ஏன் சிரிக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் ராஜா சிரிக்கிறாரே.
உடனே அவர்களும் கைகளைத் தட்டிச் சிரித்தனர். சிரிப்பாணி முடிந்து கட்டிலிலிருந்து கீழே
இறங்கினார் ராஜா. தரையில் நெறுநெறுவென்று சத்தம். சன்னல் வழியே உள்ளே வந்து விழுந்த
இலைகள் பழுத்துச் சருகாகிக் கிடந்தன. படுத்துப்போர்த்திய போர்வை கசங்கிக் கிடந்தது.
அவருடைய படுக்கையில் ஒரே புழுதிக்காடு. வேலைக்காரர்கள் சுத்தம் செய்யப்போனால் குபீர்ராஜாவுக்குக்
கோபம் வந்து விடும். அவருக்கு சுத்தமாக இருப்பது பிடிக்காது. யாரும் அவருடைய அறைக்குள்
நுழையக்கூடாது என்று உத்தரவே போட்டுவிட்டார்.
அன்று அரண்மனைக்கு வெளியே ஒரே
சத்தக்காடு. குப்பையூர் நாட்டின் எல்லாப்பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களுடைய குறைகளைச்
சொல்வதற்காக வந்திருந்தார்கள். விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய முடியவில்லை. மழைவரி!
மண்வரி! விதை வரி! உரவரி! பூச்சிக்கொல்லி வரி! செடி வரி, பூ வரி, காய் வரி, என்று விதம்
விதமாக வரிகள்! விவசாயிகளால் அவ்வளவு வரிகளைக் கொடுக்க முடியவில்லை. இளைஞர்களுக்கு
வேலை கிடைக்கவில்லை. அரசாங்க வேலைகளில் எல்லாம் வெளிநாட்டினருக்கு வேலை கொடுக்கப்பட்டது.
தொழிலாளர்களுக்கு கொடுக்கும் சம்பளம் பத்தவில்லை. ராஜாவே கடன் கொடுத்தார். பின்னர்
கந்து வட்டி வசூலித்தார். கல்வி சரியில்லை என்று மாணவர்களும் ஆசிரியர்களும் வந்திருந்தார்கள்.
பள்ளி, கல்லூரிகளை அந்த நாட்டு வியாபாரிகளிடம்
விற்று விட்டார். வியாபாரிகள் கல்வியைக் கூவிக் கூவி விற்றார்கள். பணம் இருப்பவர்கள்
மட்டுமே படிக்க முடியும். எல்லோரும் குரல் கொடுத்தனர். அரண்மனையின் சுவர்கள் அதிர்ந்தன.
ராஜாவால் அரண்மனையில் இருக்க முடியவில்லை.
குபீர்ராஜா உடனே மந்திரிசபையைக்
கூட்டினார்.
” என்னய்யா இப்படி தினமும் கூப்பாடா
இருக்கு..”
“ அரசே! மக்கள் அப்படித்தான் எதையாச்சும்
கேட்டுக் கொண்டேயிருப்பார்கள்…. நாம் தான் சமாளிக்க வேண்டும்…”
“ என்ன செய்யலாம் என்று ராஜகுருவிடம்
கேட்டீர்களா? “
“ இல்லை அரசே!..”
“ உடனே அந்த ஐ ஃபோனை எடுத்து அவரை
அழையுங்கள்..”
மந்திரிகள் ஐ ஃபோனில் ராஜகுருவிடம்
பேசினார்கள். பின்பு வாய் எல்லாம் பல்லாக இளித்துக்கொண்டே குபீர்ராஜாவிடம் வந்தார்கள்.
“ நம்முடைய நாட்டிலுள்ள பிரச்னைகளுக்குக்
காரணம் குப்பை, தூசு, புழுதி.. “
குபீர்ராஜாவுக்கு முதலில் ஒன்றும்
புரியவில்லை. அப்போது மதிமந்திரி அரசரிடம்,
“ நாட்டில் குப்பைகள் அதிகமாகி
விட்டதால் தான் விவசாயம் நடக்கவில்லை, நாட்டில் குப்பைகள் அதிகமாகி விட்டதால் இளைஞர்களுக்கு
வேலை கிடைக்கவில்லை.. நாட்டில் குப்பைகள் அதிகமாகி விட்டதால் சம்பளம் கொடுக்க முடியவில்லை…”
என்று பாட்டு படித்தார். அதைக்
கேட்ட குபீர்ராஜா ஆச்சரியத்துடன் கைகளால் தன்னுடைய பெரிய முகத்தைத் தாங்கிப் பிடித்து,
“ அப்படியா மந்திரியாரே..”
“ அப்படித்தான் சொல்ல வேண்டும்
அரசே..”
குபீர்ராஜாவுக்குப் புரிந்து விட்டது.
அவ்வளவு தான். மறுநாள் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள், எல்லாவற்றிலும்
” குப்பையூரை மாற்றுவோம். சுத்தவூர் ஆக்குவோம் ”
என்ற தலைப்பு செய்திகளுடன் குபீர்ராஜாவின்
அறிக்கை வெளிவந்தது. நாட்டிலுள்ள எல்லாத்தெருக்களிலும் தண்டோரா போடப்பட்டது.
“ இனி யாரும் குப்பையைத் தெருவில்
கொட்டக்கூடாது. எல்லோரும் தினமும் அரண்மணையில் உள்ள சேமிப்புக்கிடங்கில் கொண்டு வந்து
கொட்ட வேண்டும்.”
குபீர்ராஜாவும் அரண்மனைக்கு முன்னால்
குப்பை பொறுக்குகிற மாதிரி சில நிமிடங்கள் நடித்தார். பத்திரிகைகளும் தொலைக்காட்சி
சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு அதை ஒளிபரப்பினார்கள். மந்திரிகள் எல்லோரும் எல்லா
நகரங்களிலும் போய் குப்பை பொறுக்கிய மாதிரியே நடித்தார்கள். ஆனால் மக்கள் உண்மையாகவே
குப்பைகளை அள்ளினார்கள். அரண்மனை சேமிப்புக்கிடங்கில் கொண்டுபோய் கொட்டினார்கள். சில
நாட்களிலே குப்பையூர் நாட்டில் குப்பைகள் இல்லை. எல்லாக்குப்பைகளும் அரண்மனையில் தான்
குமிந்து கிடந்தது. மக்கள் மறுபடியும் குபீர்ராஜாவின் அரண்மனைக்கு வந்து தங்களது தேவைகளைச்
சொல்லிக் கூப்பாடு போட்டார்கள்.
உடனே குபீர்ராஜா ஆணையிட்டார்.
தினமும் அரண்மனைக்குப்பைக்கிடங்கிலிருந்து
குப்பைகளை அள்ளிக் கொண்டு போய் எல்லா ஊர்களிலும் போட வேண்டும். அதை மக்கள் அள்ளிக்கொண்டு
வந்து அரண்மனையில் சேர்க்க வேண்டும்.
மக்களால் வேறு எந்த வேலையும் செய்யமுடியவில்லை.
நாள் முழுவதும் குப்பைகளை அள்ளிக்கொண்டே இருக்கும்படி ஆயிற்று. மக்களுக்குக் கோபம்
வந்தது. குபீர்ராஜாவிடம் போய் முறையிட்டனர். குபீர்ராஜா அவர்களை விரட்டி அடித்தார்.
ஊருக்கு வெளியே இருந்த குப்பைதேவதையிடம்
சென்று முறையிட்டார்கள். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த குப்பை தேவதைக்குக்
கோபம் வந்தது. குப்பைதேவதை ஒரு மந்திரம் சொன்னாள்.
என்ன ஆச்சு தெரியுமா?
குப்பையூர் நாட்டில் உள்ள அத்தனை
நகரங்களில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் குப்பைகள் பறந்து வந்து குப்பைராஜாவின்
அரண்மனையில் விழுந்தன. குப்பைகள் மலைபோல் குமிந்து அரண்மனையை மூடி விட்டன. அந்தக்குப்பைஅரண்மனைக்குள்ளே
குபீர்ராஜாவும் மந்திரிகளும் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அதற்குப்பிறகு எழுந்திரிக்கவே
இல்லை.
குப்பையூர் நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அவர்கள் எல்லோரும் கூடி ஒரு புதிய ராஜாவைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.
குப்பைதேவதை மக்களின் மகிழ்ச்சியைப் பார்த்துச் சிரித்தாள்.