உதயசங்கர்
அரை நாடோடிக்கூட்டமான வேதகால ஆரியர்கள் வடமேற்கு இந்தியா வழியாக சிந்துசமவெளிப்பிரதேசத்துக்குள் நுழைந்து சில காலம் நாடோடிகளாகவே சுற்றித்திரிந்தனர். கடைசியில் கங்கையின் மேற்குப்பகுதிக்கும் யமுனைக்கும் இடையில் குடியேறினர். குடியேறிய பிறகு அவர்களுக்கு முன்பாகவே இந்திய சமவெளிகளில் குடியிருந்த இந்திய பூர்வகுடிகளுக்கும் இடையிலான எல்லையை, உறவை வரையறுத்துக் கொள்ள விரும்பினார்கள். கலாச்சார ரீதியாக தங்களுடன் ஏற்கனவே கொண்டு வந்திருந்த வேதங்களையே தங்களையும் இந்திய பூர்வ குடிகளையும் பிரித்துக் கொள்ள முதன்மைப் படுத்தினர். எனவே வேதங்களுக்கு புனிதத்தை ஏற்றும் கைங்கர்யத்தைச் செய்தனர். முதலில் வேதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல காற்றில் வந்தது, கேட்கப்பட்டது,( ஸ்ருதி ) என்ற பொருள் படும் ” அபௌருஷ்ய “ என்ற சொல்லால் சுட்டினர். அபௌருஷ்ய என்றால் அமானுஷ்ய என்று பொருள்..அதாவது வேதங்கள் தெய்வத்தன்மை கொண்டவை. வேதங்கள் ஆரியர்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து அடையாளம் காட்டவே முதன்மைப் படுத்தப்பட்டது. அதோடு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சடங்கியல் முறைகளுக்கு அத்தியாவசியமான யக்ஞம், அக்னி, மந்திரங்கள் இவற்றை பாதுகாக்க நடைமுறைப்படுத்த ஆரியர்களில் ஒரு பிரிவினராக பிராமணர் தோன்றினர்.
வேதங்களுக்கு ஏற்றப்பட்ட புனிதத்தன்மை காரணமாக அவற்றை பிற மக்கள் தெரிந்து கொள்வதிலிருந்து தடை செய்ய முடிந்தது. வேதங்களின் புனிதம், யக்ஞங்களின் புனிதம், வேள்வித்தீயின் புனிதம், மந்திரங்களின் இவற்றைப் பாதுகாத்த பிராமணரின் புனிதம் என்று எல்லாவற்றையும் யாரும் கேள்வி கேட்க முடியாத உயர்ந்த நிலையில் வைத்தனர். சார்பியல் தத்துவத்தின் படி ஒன்றை இன்னொன்றுடன் தொடர்பு படுத்தியே கருத்துகள் உருவாகின்றன. எனவே புனிதம் என்ற ஒன்றை உருவாக்கும்போது புனிதமற்றது என்பதும் வருகிறது. வேதங்களைப் புனிதமாகவும் அதற்கு முன்பு இருந்த பூர்வகுடிகளின் கலாச்சார, வழிபாட்டு முறைகளை புனிதமற்றவை என்றும் உருவகிக்கப்பட்டது. வேதகால ஆரியர்கள் தங்களுடைய அடையாளக்கலப்பையும், ரத்தக்கலப்பையும் தடை செய்த முயற்சிகளே இவை.
வேதகாலத்திலேயே அங்கு அவர்களுக்கு முன்னால் இருந்த பூர்வகுடிகளிடம் பல்வேறு வழிபாட்டு முறைகளும், தத்துவச்சிந்தனைகளும் இருந்தன. அவை நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டவை. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்த தாய்த்தெய்வ வழிபாடு, அத்துடன் தொடர்புடைய தாந்திரிக வழிபாட்டு முறைகள், பிரகிருதி என்னும் இயற்கையை வணங்கும் சாங்கிய வழிபாட்டு முறை, சாங்கியத்தோடு தொடர்புடைய யோக தத்துவ மரபு, யோக தத்துவ மரபில் யோகாசனங்கள் பற்றிய குறிப்புகள், அதாவது சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே உடலில் மறைந்து கிடக்கும் ஆற்றல்களைத் திரட்டவும், மிக நுட்பமான உடல், சுவாசம், மனப்பயிற்சிகளை கொண்டது யோக மரபு., தேகவாதம், பூதவாதம், காலவாதம், எதேச்சாவாதம் எனப்பலவகையான ஆதிப்பொருள்முதல்வாதத்துவங்களின் சேர்க்கையில் பிறந்த சாருவாக தத்துவம், ஆசிவகம்-சமணம் என்று பலவகையான தத்துவ மரபுகளும், வழிபாட்டு மரபுகளும் இருந்தன. வேதங்களில் எந்த தத்துவச்சாரமும் இருந்ததில்லை. வேதங்களுக்கு வெளியில் இருந்த தத்துவ மரபுகளின் தாக்கத்தால் தங்களுக்கும் தத்துவ ரீதியாக ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளவே உருவானது உபநிடதங்கள் எனலாம்.
வேதங்களுக்குப் பின்பு முதலில் இயற்றப்பட்டது பிராமணங்கள், ஆரண்யகங்கள், என்ற இரண்டு வகை இலக்கியங்கள் தான். இவற்றிலும் சடங்கியல் முறைகளே சொல்லப்பட்டன என்றாலும் சில வித்தியாசங்கள் இருந்தன. பிராமணங்களில் பிரம்மன், பிரம்மம், பிராமணன், என்ற சொற்களை புனிதமானதாக அதன் முழு அர்த்தத்தில் உருவாக்கின. ஆரண்யகங்கள் கானகங்களில் வாழ்ந்த வேத ரிஷிகள் இயற்றியவை. ஆரியரிஷிகள் இங்கிருந்த பூர்வ குடி மக்களிடம் இருந்த தவம், தியானம், யோகம், பூசை போன்ற சமயவழிபாடுகள், தத்துவநெறிமுறைகள், ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு அவற்றை தங்களுடைய சமய, தத்துவ நெறிமுறைகளோடு இணைத்து உருவாக்கியவை ஆரண்யகங்கள். இதற்குப் பின்பே உபநிடதங்கள் உருவாகின்றன.
வேதகாலத்திற்கு மிகவும் பின்னால் உருவானதே பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் .எனவே தான் வேதாந்தம் என்று அழைக்கப்படுகின்றன. வேதாந்தம் என்பதற்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உள்ளது. வேதங்களின் அந்தம் அதாவது இறுதி என்றும் வேதங்களின் சாரம் என்றும் கூறலாம். இன்னொரு வகையில் உபநிஷத் என்றால் ” கீழே அருகில் அமர்க “ என்று அர்த்தமாகிறது. அதாவது அருகில் உட்கார்ந்து உபதேசங்களைக் கேள் என்று பொருள். ஆனால் மாக்ஸ் முல்லர் கோட்பாடு, ரகசியக்கோட்பாடு என்று பொருள் படும் விதமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார். என்றாலும் காலப்போக்கில் வேதங்களின் சாரம் என்ற அர்த்தபாவத்திலேயே உபநிடதங்கள் கருதப்பட்டன. வேதாந்தம் என்ற சொல் தத்துவ ஞானம் என்ற அர்த்தத்தில் தைத்திரீய ஆரண்யகத்திலும், முண்டக உபநிடதத்திலும் கூறப்படுகிறது.
உபநிடதங்கள் வேத இலக்கியத்தின் பகுதியாகவோ, அதன் தொடர்ச்சியாகவோ கருதப்படவில்லை. முண்டக உபநிடதத்தில்
“ …………………………………… தாழ்ந்ததில் ருக்வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், உச்சாரணம், இலக்கணம், விளக்கவுரை, யாப்பு, வானநூல் ஆகியவை அடங்கும், உயர்ந்த விஞ்ஞானமாவது என்றும் அழியாததை அறிவதாகும்..”,
உபநிடதங்கள் வேதங்களைத் தாழ்ந்தவையாக கருதின என்பதற்கான மேலும் ஒரு சான்றாக, சாந்தோக்கிய உபநிடதம் சொல்வதைப் பாருங்கள். நாரதர் சனத்குமாரரை அணுகி தனக்கு கற்பிக்குமாறு கேட்க சனத்குமாரர் உமக்கு என்ன தெரியும் என்று கேட்கிறார். அதற்கு நாரதர், “ நான் ருக் வேதம், சாம வேதம், யஜூர் வேதம், அதர்வண வேதம், இதிகாசங்கள், ஐந்தாவது வேதமான புராணங்கள், பிதுர் கிரியைகள், கணிதம், சகுனம், தர்க்கம், அறநெறி, தேவர்களைப் பற்றிய விஞ்ஞானம், மதநூல் அறிவு, பேய், பிசாசுகள், பற்றிய நூல்கள், போர்க்கலை, நடத்திரங்களைப் பற்றிய அறிவு, பாம்புகளையும், தெய்வங்களையும் பற்றிய விஞ்ஞானங்கள் ஆகியவற்றைப் பயின்றிருக்கிறேன். மரியாதைக்குரியவரே, நான் மந்திரங்களைப் பற்றி மட்டுமே அறிந்திருக்கிறேன்.. ஆன்மாவைப் பற்றி அறியாமலிருக்கிறேன், ஆனால் ஆன்மாவை அறிந்தவன் துன்பத்தை வெல்கிறான் என்று தங்களைப் போன்ற பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்….” என்று சொல்ல அதற்கு சனத்குமாரர், “ நீர் கற்றதெல்லாம் வெறும் பெயர்களேயன்றி வேறொன்றுமில்லை. ருக் வேதம் என்பது வெறும் பெயரே, அவ்வாறே தான் யஜூர் வேதம், சாம வேதம் ,அதர்வண வேதம், இதிகாசங்கள்….”
ஆக உபநிடதங்களை வேதங்களை அலட்சியப்படுத்தின. அதே போல வேதங்களை முன்வைத்த பிராமணர்கள் உபநிடதங்களை புறந்தள்ளினர். அவற்றை அனுலோமப்பிரதிகள் என்று சொல்லினர். இவற்றிலிருந்து சிராமண மதப்பிரிவுகள் மேலோங்கி வளர்ந்த காலத்தில் அவற்றின் சாரத்தையும், பூர்வகுடிகளின் தத்துவசாரத்தையும் இணைத்து உருவாக்கிய உபநிடதங்களை முதலில் சடங்கியல் முறைகளை புறந்தள்ளினர். ஆனால் காலப்போக்கில் உபநிடதங்கள் வேத, பிராமண, ஆரண்யகங்களுக்கு அடுத்ததாக, அவற்றின் வாரிசாக மாற்றப்பட்டன. வேத, பிராமண, ஆரண்யகங்களை சடங்குகள் செய்வதற்கான நூல்கள் என்ற அர்த்தத்தில் கர்ம காண்டங்கள் என்றும், உபநிடதங்களை தத்துவ அறிவு குறித்த நூல்கள் என்ற முறையில் ஞான காண்டம் என்றும் குறிப்பிட்டார்கள். ஆனால் வேதங்கள் கூறும் சடங்குகளுக்கும், உபநிடதங்கள் கூறும் தத்துவ விசாரணைகளுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி, மாறுபாடு இருக்கிறது. இந்த இடைவெளிக்கான காரணம் என்ன?
வேத கால ஆரியர்கள் இந்திய பூர்வ குடிகளை எதிகொண்ட போது தங்களுடைய வேதச்சடங்கியல் அடையாளங்களின் மூலமும் அகமண முறையின் மூலமும் தங்களை வேறுபடுத்திக் காட்ட முடிவு செய்தார்கள். அதை இன்று வரை நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள். இப்போதும் நடைமுறையில் வேதங்களின் புனிதம், மந்திரங்களின் புனிதம், பிராமணர்களின் புனிதம், என்று தொடர்கிறது. பின்னால் வந்த உபநிடதகால சிந்தனையாளர்கள் தங்களுடைய வைதீகத்தைக் காப்பாற்றிக் கொள்ள புனிதத்தை நிலைநிறுத்த, மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட சடங்கியல்களைத் தாண்டி தத்துவக்காப்பும் தேவை என்று கருதியிருக்கிறார்கள். அது அந்தக் காலகட்டத்தின் அவசியமாகவும் இருந்திருக்கிறது. நாடோடிச் சமூக பொருளாதார அமைப்பில் உருவான சடங்கியல் முறைகள் மாறிக்கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ காலப்பொருளாதாரச் சூழலுக்குப் பொருத்தமற்றதாக இருந்ததினால் மக்கள் மத்தியில் பௌத்தமும், சமணமும், வேறு சமய மரபுகளும் வளரத்தொடங்கின.ஆக வேதகால புனிதத்தைக் காப்பதற்கு உபநிடதங்கள் தோன்றின. அவை தோன்றிய போது சடங்கியல் முறைகளை மறுப்பது போலத் தோற்றம் காட்டினாலும் மேலே குறிப்பிட்டதைப் போல கர்ம காண்டமாகவும் ஞான காண்டமாகவும் தங்களுடைய கலாச்சார அரசியலை செய்து வருகின்றன.
வேதங்களில் சொல்லப்படுகிற சடங்கியல் முறைகளுக்கும் உபநிடதங்களில் சொல்லப்படுகிற பிரம்மம் குறித்த தத்துவத்தேடலுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. வேதங்களும் உபநிடதங்களும் ஒன்றுகொன்று எதிரானதாகவே தோன்றியிருக்கின்றன. வேதங்களின் சாரமாக உபநிடதங்கள் இல்லை.
துணை நூல்கள் – 1. வேதாந்தத்தின் கலாச்சார அரசியல்- ந.முத்துமோகன்
2. அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்