Sunday 13 January 2019

தமிழிலக்கியத்தின் தனிக்குரல்


தமிழிலக்கியத்தின் தனிக்குரல்

உதயசங்கர்

1980 – களில் தான் பிரபஞ்சன் முதன்முதலாக எனக்கு அறிமுகமானார். வானம்பாடி பத்திரிகைகளில் வாசித்த ஏராளமான கவிஞர்களில் அவரும் ஒருவராக இருந்தார். அதில் எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்தியவராக நினைவில்லை. ஆனால் அதன்பிறகு வெளிவந்த அவருடைய ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் என்ற கதை என்னைப் புரட்டிப்போட்டது. அதுவரை வாசித்த கதைகளிலிருந்து வேறொரு புதிய குரலாக ஒலித்தது. கிருஷ்ணமூர்த்தி, கோபாலு, ரெங்கசாமி, மூன்றே கதாபாத்திரங்களை வைத்து அவர் தீட்டிய வாழ்க்கைச்சித்திரம் அழியாத இலக்கியப்படைப்பாக நின்று நிலைத்து விட்டது. பிரபஞ்சன் என்ற பெயரோடு அந்தக்கதையும் ஒட்டிக்கொண்டது. கிட்டத்தட்ட அந்தக்கதை தான் பிரபஞ்சனின் மையம் என்று சொல்லலாம். கிருஷ்ணமூர்த்தி அரிசிக்கடை நடத்தி நஷ்டத்தினால் கடையை மூடியவன். கடை நடந்தபோது அவனிடம் அரிசி கடனாக வாங்கிய கோபாலு கடனைக்கொடுக்காமல் ஏமாற்றிக்கொண்டே போகிறான். கிருஷ்ணமூர்த்தி அவன் கடையில் முன்னால் வேலைபார்த்த ரெங்கசாமியிடம் சொல்லி அவனிடம் கேட்கச்சொல்கிறான். அவன் கோபாலுவிடம் சினிமா தியேட்டரில் வைத்து கடுமையான வார்த்தைகளில் கேட்டு விடுகிறான். அதை ரெங்கசாமி சொல்லும்போதே கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்லும்போதே கிருஷ்ணமூர்த்தி அவனிடம் அவ்வளவு கடுமையாகப்பேசியிருக்க வேண்டியதில்லை என்று வருத்தப்படுகிறான். ஆனால் கோபால் அதன் பிறகும் அவனைப்பார்த்தால் கண்டுகொள்ளாமல் போவது, முடிந்த போது தான் கொடுப்பேன் என்று அலட்சியமாகப்பேசுவது என்று நடந்து கொள்கிறான். கிருஷ்ணமூர்த்தி எவ்வளவோ சுமூகமாகக் கேட்டும் கோபாலு கிருஷ்ணமூர்த்தியைத் திட்டுகிறான். திடீரென ஒருநாள் கிருணமூர்த்தி கோபாலுவின் வீட்டுக்குப் போய் அடாவடியான வார்த்தைகளால் திட்டி மிரட்டுகிறான். அப்போது கோபாலுவின் மனைவி நிறைசூலியாக இருப்பதையும் பார்க்கிறான் கிருஷ்ணமூர்த்தி. அதற்கு இரண்டு நாட்களுக்குப்பின்னால் கோபாலு கொடுக்க வேண்டிய நூற்றெண்பது ரூபாயில் நூறு ரூபாயைக் கிருஷ்ணமூர்த்த்தியின் வீடு தேடி வந்து கொடுக்கிறான். அப்போது இதமாகப்பேசிய கிருஷ்ணமூர்த்தி அவன் இன்னும் கொடுக்கவேண்டிய எண்பது ரூபாயில் முப்பது ரூபாயைக் கழித்து ஐம்பது ரூபாய் கொடுத்தால் போதும் என்கிறான். அதற்குப்பின் இன்னும் சிலநாட்கள் கழித்து வந்து முப்பது ரூபாயைக் கொடுத்து அவ்வளவு தான் புரட்டமுடிந்தது மனைவிக்குப் பிரசவச்செலவாகி விட்டது என்று கோபாலு கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்கிறான். கிருஷ்ணமூர்த்தி கனிவுடன் மீதிப்பணத்தைக் கொடுக்க வேண்டாம். அந்த ரூபாயில் அவன் பெயரைச் சொல்லி ஒரு சட்டைத்துணி எடுத்துப்போடச் சொல்கிறான்.
மனிதர்களிடம் மீந்திருக்கும் அன்பின் ஒளிச்சுடரைத் தன் இருகைகளாலும் பொத்திப்பாதுகாத்து நம்மிடம் அளித்திருப்பார் பிரபஞ்சன். வாழ்க்கை தன் கொடும்பற்களால் எத்தனை துன்பங்களைக் கொடுத்தாலும் மனிதன் அவற்றைப் புறம்தள்ளி அன்பெனும் பேராற்றிலிருந்து ஒருகை நீரேனும் அள்ளிக்கொண்டிருக்கிறான் என்பதை தன்னுடைய படைப்புகளில் உரத்துச் சொன்னவர் பிரபஞ்சன்.
மிக மிகத்தாமதமாகத்தான் அவருடனான நேர் அறிமுகம் கிடைத்தது. அவருடைய ஆளுமையின் வசீகரம் எல்லோரையும் ஈர்க்கும். அவருடைய குரல் கம்பீரமானது. ஆனால் அந்த கம்பீரம் ஈரப்பதத்துடன் நம்மை வருடிச் செல்லும். எப்போதாவது விழாக்களில் மட்டுமே அவரைச்சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது ”உதயசங்கர் எப்படி இருக்கீங்க?..” என்ற அந்தக்குரலில் இருக்கும் நெருக்கமும் உரிமையும் எனக்கு அப்படிப்பிடித்திருந்தது. அவருடன் எப்போதும் நண்பர்கள் கூடியிருப்பார்கள். அதுவே அவர் எப்பேர்ப்பட்ட உரையாடல்காரர் என்பதை உணர்த்தி விடும். மேடைப்பேச்சிலும் அவர் கேட்பவர்களை வசியப்படுத்தி விடுவார். அவரிடம் நூல்வனம் பதிப்பகத்தில் வெளியான பிறிதொரு மரணம் என்ற சிறுகதை நூலை சென்னைப்புத்தகக்கண்காட்சியில் வைத்துக் கொடுத்தேன். புத்தகத்தின் தயாரிப்பில் மிகவும் லயித்துப் போய் புத்தகத்தயரிப்பாளர் மணிகண்டனைப் பாராட்டிக்கொண்டேயிருந்தார்.
எழுத்தை முழுநேரவாழ்க்கையாகக் கொண்ட அநேக எழுத்தாளர்களைப்போல அன்றாடத்தின் துயரங்களில் சிக்குண்டவர் பிரபஞ்சன். அந்தத்துயரத்தின் சிறு சாயல் கூட அவருடைய படைப்புகளில் தென்படாது.
பிரபஞ்சன் அவருடைய சிறுகதைகளில் மிகப்பெரிய சோதனை முயற்சிகளையோ, வடிவப்பரிசோதனைகளையோ, அதிகமாகச் செய்தவரில்லை. ஆனால் அள்ள அள்ளக்குறையாத வாழ்க்கையிலிருந்து தன்னுடைய கதைகளைத் தேர்ந்து கொண்டவர். அவருடைய கதையுலகம் கீழ் நடுத்தரவர்க்கமாக, நடுத்தர வர்க்கமாக இருந்தது என்று சொல்லாம். யாரையும் முன்மாதிரியாகக் கொள்ளாத அவருடைய எழுத்து தனித்துவமிக்கது. எளிமையும், அடர்த்தியும் கொண்ட நேரடியான நடையில் தன் படைப்புகளைக் கலையாக மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார் பிரபஞ்சன். வாழ்வின் நெருக்கடிகளுக்கானக் காரணங்களைக் குறித்து அவர் தன்னுடைய படைப்புகளில் கவலை கொள்வதில்லை. அதைப்பற்றிய குறிப்புகள் கூட அதிகம் இருக்காது. ஆனால் வாழ்வின் அத்தனை வண்ணங்களையும் அப்படியே உள்ளது உள்ளபடியே தீட்டியவர். அதில் தான் அவருடைய படைப்புகளின் வெற்றி நிலைகொண்டிருக்கிறது. அவருடைய கதைகளில் சிறந்த கதைகள் என்று தனித்துக்குறிப்பிட்டுச் சொல்வதை விட அவருடைய அத்தனை சிறுகதைகளிலும் மானுடநேயம் மாபெரும் சமுத்திரமாக அலையடித்துக் கொண்டேயிருப்பதை வாசிக்கும்போது உணரமுடியும். அந்த சமுத்திரத்தின் அலை ஒருநேரம் சுனாமியாக நம்மை மூழ்கடிக்கும், ஒரு நேரம் மெல்லலையாக வந்து காலை வருடும். எந்த அலையாக இருந்தாலும் அது மனிதநேயத்தை உரத்து முழங்கிக்கொண்டிருக்கும்.
பிரபஞ்சன் என்ற மகத்தான, தனித்துவமிக்க படைப்பாளியின் குரல் அது. அவருடைய ஒவ்வொரு கதையிலும் அது ஒலித்துக்கொண்டேயிருக்கும். அந்தப்படைப்புகளில் அவர் என்றென்றும் உயிர்த்துடிப்புடன் அதே நெருக்கத்துடனும் கம்பீரத்துடனும் உரையாடிக்கொண்டேயிருப்பார். ஒரு ஊரில் இரண்டு மனிதர்களில் வருகிற கிருஷ்ணமூர்த்தியின் அந்தக்குரலில் நீங்கள் வாழ்கிறீர்கள் பிரபஞ்சன்!. நீங்கள் போற்றிப்பாதுகாத்த அன்பெனும் ஒளிச்சுடர் இன்னும் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
போய் வாருங்கள் தோழர் பிரபஞ்சன்.

நன்றி - செம்மலர்




Wednesday 9 January 2019

சுற்றுலா போன சுண்டைக்காய்


சுற்றுலா போன சுண்டைக்காய்

உதயசங்கர்
ஒருநாள் ஒரு ஊரில் ஒரு பாட்டி சமைப்பதற்காக கடையில் சுண்டைக்காய் வாங்கினாள். வீட்டில் சுண்டைக்காய் எடுக்கும்போது ஒரு சுண்டைக்காய் உருண்டு சோற்றுப்பானைக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டது. விறகு அடுப்பில் பொங்கிய அந்தச் சோற்றுப்பானையை அப்போது தான் அந்தப்பாட்டி கீழே இறக்கி வைத்திருந்தாள். பானை சூடாக இருந்தது. ஒளிந்திருந்த சுண்டைக்காய்
“ ஐய்யய்யோ சுடுதே..
அம்மம்மா சுடுதே..
அப்பப்பா சுடுதே..
அக்கக்கா சுடுதே..
அண்ணண்ணே சுடுதே.. “
என்று கத்தியபடி உருண்டு ஓடியது. கண்ணைத்திறந்து பார்த்தால் அரிவாள்மனை முன்னால் இருந்தது. அரிவாள்மனை சுண்டைக்காயைப் பார்த்ததும்
 “ வா ராஜா வா..
சீக்கிரமா வா..
கூராக இருக்கேன்
கூறு போட்டு தாரேன்.
வா ராஜா வா..
சீக்கிரமா வா .”
என்று தன்னுடைய பளபளப்பான பல்லைக்காட்டிச் சிரித்தது. சுண்டைக்காய் உடனே அங்கிருந்து உருண்டு தண்ணிர் வைத்திருந்த செப்புப்பானைக்குக் கீழே போய் நின்றது. செப்புப்பானை,
 “ குளிருது ஐயா
குளிருது..
பனிக்கட்டி போல குளிருது
காப்பாத்துங்க ஐயா
காய்ச்சல் வரும் ஐயா..”
 என்று நடுங்கிக்கொண்டிருந்தது. சுண்டைக்காய்க்கும் குளிர ஆரம்பித்தது. செப்புப்பானையிலிருந்து கொஞ்சம் தூரம் நடந்து அங்கே இருந்த வெண்கல உருளியின் அருகில் போய் நின்றது. உடனே வெண்கல உருளி உருண்டு தன் வாயைக் காட்டியது. ஐயோ… உள்ளே ஒரே இருட்டு. ஈயம் பூசின கருத்த வாயைப் பார்த்த சுண்டைக்காய் பயந்து விட்டது. எதுக்கு வம்பு? என்று தள்ளி இருந்த தம்ளருக்குப் பின்னால் போய் ஒளிந்தது. தம்ளர், முகத்தைச் சுளித்து
“ எங்கூடச் சேராதே..பொடியா..
எங்கிட்டே பேசாதே…பொடியா..
எம்பக்கம் நிக்காதே பொடியா..”
சுண்டைக்காய்க்குக் கோபம் வந்து விட்டது. அங்கிருந்து உருண்டு ஒருபடி உழக்குக்குள் போய் ஒளிந்து கொண்டது. ஒருபடி உழக்கு அப்போது தான் தூங்கி முழித்திருந்தது. அது
 “ இடமில்லை..
இடமில்லை
எனக்கே இடமில்லை
என் தம்பி வீட்டுக்குப் போ..”
என்று விரட்டியது. இரண்டு அடி எடுத்து வைத்தது சுண்டைக்காய். அரைப்படி உழக்கு நின்று கொண்டிருந்தது. அது சுண்டைக்காயைப் பார்க்காமலேயே
“ இடமில்லை.
இடமில்லை
எனக்கே இடமில்லை
என் தம்பி வீட்டுக்குப் போ.” என்று சொன்னது.
” அடக்கோட்டிக்காரா.. நிமிந்து கூட பார்க்கல..” என்று நினைத்துக் கொண்டே சுண்டைக்காய் கொஞ்சம் நடந்தது. கால்படி உழக்கு நிறைய கம்பு தானியம் இருந்தது. அது சுண்டைக்காயைப் பார்த்து,
  இடமிருக்கு..
இடமிருக்கு – மனசில
ஆனால் இடமில்லை.
இடமில்லை வீட்டிலே.”
என்று வருத்தத்துடன் சொன்னது. அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் அரைக்கால்படி உழக்கு,
“ ஐயா நீங்க யாரோ எவரோ தெரியாது.. தெரியாத ஆளுக்கு இடம் தரக்கூடாதுன்னு எங்க பெரியப்பா சொல்லியிருக்காரு..”
என்று சொல்லவும் சுண்டைக்காய்க்கு சலிப்பாகி விட்டது. அடச்சே! என்று முனகியபடி தரையைப் பார்த்துக் கொண்டே நடந்தது. நடந்து நடந்து அது மாண்பிடி உழக்குக்குள் போய் விட்டது. மாண்பிடி உழக்கு,
“ ஐயா உங்கள் வரவு நல்வரவாகுக! நீங்கள் விரும்பும்வரை இங்கே தங்கியிருக்கலாம்..” என்று வரவேற்றது. சுண்டைக்காய்க்கு ஆச்சரியம். மாண்பிடி வீட்டில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தது. உடம்பு கொஞ்சம் கச்சிதமான பிறகு எழுந்து,
“ உங்கள் விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி.” என்று சொல்லி விட்டு இரண்டு அடி எடுத்து வைத்திருக்காது. கண் அகப்பை அதைத் தூக்கிக் கொண்டது. சுண்டைக்காயால் நிற்க முடியவில்லை. உருண்டு கொண்டே வந்தது.
“ யாரப்பா நீ..
கூறப்பா பேரு..  
ஏது…ஊரப்பா நீ.. “
என்று கண் அகப்பை கேட்டது. சுண்டைக்காய்க்குச் சிரிப்பாய் வந்தது. அப்போது பாட்டி கண் அகப்பையை எடுப்பதற்காகக் கையை நீட்டினாள்.  அதைப்பார்த்ததும் சுண்டைக்காய் விருட்டென்று பாய்ந்து குத்துப்போணிக்குள் நுழைந்து விட்டது. குகை மாதிரி இருட்டாய் இருந்த குத்துப்போணிக்குள் காற்று விர்ரென்று வீசியது. சுண்டைக்காய்க்குப் பயமாக இருந்தது. அங்கேயிருந்து பித்தளைக்கொப்பரைக்குள் பாய்ந்தது. பித்தளைக்கொப்பரையிலும் எதுவும் இல்லை. ஆனால் பெரிய விளையாட்டு மைதானம் மாதிரி இருந்தது. அதில் மேலும் கீழும் சறுக்கி விளையாடியது சுண்டைக்காய்.
“ ஓடி ஆட வாங்க
பாடி ஆட வாங்க..
கூடிச் சாட வாங்க
கூட்டாக வாங்க..”
என்று பாடியபடியே சறுக்கு விளையாடியது. அப்படி விளையாடியபடியே துள்ளி இட்லிக்கொப்பரையில் இருந்த இட்லித்தட்டில் விழுந்து விட்டது. நல்லவேளை பாட்டி காலையிலேயே இட்லி அவித்து முடித்து விட்டாள். மெல்ல இடலித்தட்டிலிருந்து ஏறி வெளியே வைத்திருந்த சட்டக அகப்பை வழியே சறுக்கி ஓடியது.
சுண்டைக்காய்க்கு ஜாலியாக இருந்தது.
எண்ணெய்ச்சட்டியில் விழுந்து எண்ணெயில் குளித்து எழுந்தது. அப்படியே குழம்புச்சட்டிக்குள் ஏறி இறங்கியது. பாட்டி சமையலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். காய்கறிகளை நறுக்கி ஒரு தட்டில் வைத்து அடுப்பை எரிக்கத்தொடங்கினாள். விறகுகளையும் சுள்ளிகளையும், மரச்சிராய்களையும் அடுப்பில் திணித்தாள். அடுப்பைப் பற்றவைத்தாள். எண்ணெய்ச்சட்டியை அடுப்பில் வைத்தாள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் நறுக்கி வைத்திருந்த சுண்டைக்காய்களைப் போட்டாள். அப்போது தான் கவனித்தாள். ஒரே ஒரு சுண்டைக்காயைக் காணவில்லை.
எங்கே போயிருக்கும்? 
பாட்டி அங்கும் இங்கும் தேடினாள். சுண்டைக்காயின் அடுக்களைச் சுற்றுலா இன்னும் முடியவில்லையே. அது இப்போது தான் பாட்டியின் அஞ்சறைப்பெட்டியைப் பார்க்கப்போயிருக்கிறது.
மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடிக் குதித்துக்கொண்டே போகிறது சுண்டைக்காய். அதன் மகிழ்ச்சியை கெடுக்க வேண்டாம். பாட்டியின் கண்ணில் சுண்டைக்காய் பட்டு விடாமல் இருக்கட்டும்.
என்ன சரிதானே!


.நன்றி - தமிழ் இந்து