Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, 10 August 2026

அய்யம்பெருமாள் என்றொரு மனிதர்

அய்யம்பெருமாள் என்றொரு மனிதர் – மனிதனான கதை

 

ம.மணிமாறன்

 

மனிதர்கள் விசித்திரமானவர்கள். அவரவர்களுக்கான ஆசைகளை சுமந்தலையும் விசித்திர மனம் கொண்டலையும் தனித்த உயிரிகள் மனிதர்கள். அன்பு, கருணை,இரக்கம் போன்ற கல்யாண குணங்களோடு மட்டும் அலைபவன் இல்லை மனிதன். நித்தமும் எதிர்படும் தன் சக மனிதர்களின் மீது வெறுப்பை உமிழ்கிற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்போதாவது பளிச்சென வெளிப்படும் இந்த காரிருள், பலசமயங்களில் மனம் எனும் இருட்குகைகக்குள் பதுங்கித்தான் கிடக்கிறது. அவனுக்கோ அல்லது அவளுக்கோ இருண்ட மனதின் பக்கம் என ஒன்று நிச்சயம் இருக்கும். அந்த இருள் பக்கங்களைப் பொதுவெளியில் பளிச்சென திறந்து காட்டிடும் துணிச்சல்தான் அவர்களுக்கு இருக்காது. மனதை இறுக்கிப் பிடித்து வெளித்தெரியாமல் காட்டிட விதவிதமான திறைமறைவுச் சட்டைகளை அவர்கள் போட்டுக் கொள்கிறார்கள்.

 

நேர்கண் கொண்டு பார்க்கிறபோது புரிதலுக்குள்ளாக சாத்தியமற்றது மனித மனம். ஏன் தெரியுமா?. இங்கு சரிபாதிக்கும் மேலானோர் இருட்டறைக்குள் பூட்டி வைத்திருக்கிறார்கள் தன்னையும் தன் மனதையும். வெகுசிலர் இதுதாண்டா நான். இப்படித்தான் நான் இருந்தேன். இனிமேலும் இப்படித்தான் இருப்பேன் என தன்னை மிக மிக வெளிப்படையாக காட்டிக் கொள்கிறார்கள். இப்படியானவர்களை இந்த உலகம் நேர்மறையாக எதிர்கொள்வதில்லை. ‘அவனை அகங்காரம் பிடித்தவன் என்றோ,கொழுப்பெடுத்தவ, என்ன பேச்சு பேசுறா பாரு எனவோ,இவந்திமிர அடக்க எங்கிருந்தாவது ஒரு ஆள் வராமலா போயிரும்’ என்றோ பொறுமுகிறார்கள். இப்பிடி சகலரின் வெறுப்பிற்கும் ஆளான பூஞ்சை மனிதனின் கதையே அய்யம்பெருமாள் என்றொரு மனிதர். இவர் மிக வெளிப்படையானவர். தோற்றத்திலும் நடவடிக்கையிலும் பூச்சற்று இருந்த மனிதன். அதனாலேயே அவரை அறிந்த எல்லோரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானவர். அவருடைய வாழ்வின் பக்கங்களை எழுத்தாளர் உதயசங்கர் அவருடையா பெயரிலேயே அய்யம்பெருமாள் என்றொரு மனிதர் எனும் சிறுகதையாக எழுதியிருக்கிறார்.

 

எழுத்தாளர் உதயசங்கர் தமிழகத்தின் நவீன இலக்கியத்தின் தனித்த அடையாளமாக எல்லோராலும் பார்க்கப்படுகிற கோவில்பட்டியைச் சேர்ந்தவர். கோவில்பட்டிக்கு சாகித்ய அகாடமி விருதினைக் கொடுவந்து சேர்த்த எழுத்தாளர்கள் படைவரிசையைச் சேர்ந்தவர். அவர் பின்னாளில் தீவிரமாக கவனிக்கத் துவங்கிய சிறுவர் இலக்கியத்திற்காக சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றவர். இளையோர் நாவல் எனும் வகையில் எப்போதும் எழுத்தாளர் உதயசங்கரின் ‘ஆதனின் பொம்மை’ எனும் நூலுக்குத் தனித்த இடமுண்டு. அந்த புத்தகத்திற்காகவே அவர் சாகித்ய விருதினையும் பெற்றார். கவிதைகள், மொழிபெயர்ப்புகள், தமிழில் தற்காலத்தில் கவனம் பெறத் துவங்கியிருக்கும் குறுங்கதைகள், கலாச்சார பண்பாட்டு உள்ளடக்கங்களைக் கொண்ட கட்டுரைகள் என இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் கவனம் செலுத்துபவர் எழுத்தாளர் உதயசங்கர் ,என்றபோதும் அவருடைய இலக்கிய பங்களிப்புகளில் மிக மிக தனித்தவை அவருடைய சிறுகதைகள்.



யாவர் வீட்டிலும், மறதியின் புதைசேறு துவங்கி புத்தாயிரத்தில் அவர் எழுதிய துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர் வரையிலுமாக நூற்றி மூன்று சிறுகதைகளை எழுதியிருக்கிறார். தமிழ் கிளாசிக்கல் சிறுகதைகளின் வரிசையில் இடம் பிடிக்கத் தகுதிபெற்ற பல சிறுகதைகளை எழுத்தாளர் உதயசங்கர் எழுதியிருக்கிறார். டேவிட் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல், மறதியின் புதைசேறு, பால்ய சிநேகிதி, தூரம், அடி, பயணம், ஆனைக்கிணறு தெரு, மீனிளின் நீல நிறப்பூ, அப்பாவின் கைத்தடி, கிருஷ்ணனின் அம்மா என பல கதைகளை தமிழ்ச்சிறுகதைத் துறைக்கு கொடையென வழங்கியவர் எழுத்தாளர் உதயசங்கர். அவருடைய ஆகச்சிறந்த கதைகளில் தனித்தது அய்யம் பெருமாள் என்றொரு மனிதர் எனும் சிறுகதை.

எழுத்தாளரும் அவருடைய நண்பருமாக பேசிக்கொள்ளும் தன்மையில் கதையை வடிவமைத்திருக்கிறார். அவரும், அவருடைய நண்பரும் இலக்கியம், அரசியல்,ஊர் நடப்பு என சகலவற்றையும் பேசிக் கழிக்கும் பேச்சு சேக்காளிகள். அப்படியான பேச்சு வெளியினில்தான் அய்யம் பெருமாளை சந்திக்கிறார்கள் இருவரும். அதிலும் எப்படித் தெரியுமா? பிணமாக. அதிலும் குறிப்பாக அநாதைப்பிணமாக. ஒலைப் பாயில் சுருட்டி எடுத்து நால்வர் பிணமாக அய்யம்பெருமாளை சுமந்து செல்லும் காட்சி கதையை வாசித்துக் கடக்கும் ஒவ்வொரு நொடியிலும் வாசகனுடனே வருகிறது. அத்தனை அழுத்தமாக அந்தக் காட்சி வாசக வசமாகிறது. ஏன் தெரியுமா. அநாதைப் பிணமாகப் போகிறாரே அய்யம்பெருமாள் இவர் யார் தெரியுமா, என்றே கதை விரிவு கொள்கிறது. பார்ப்பதற்கு தோற்றத்தில் எந்த வசீகரமும் அற்றவர் அந்த மனிதன். நெடு நெடுவென வளர்ந்து கருத்துக்கிடக்கும் தோல்பொம்மை போலானவர். எப்போதும் திறந்த வாயை மூடமுடியாத அளவிற்கு பல் எத்திக்கிடக்கும் அவருக்கு. தன்னுடைய போதாமைகள் இவை என புரிந்து கொண்ட பலரும் எல்லோரையும் தனக்கு எதிரிகளாக்கி விடுகின்றனர்.

 

ஆனால், அவருடைய மனைவியோ அதற்கு நேர் எதிராக அழகே வடிவாக அமைந்தவர்..இருவருக்கும் கல்யாணமாகி எட்டு வருசமாக குழந்தையும் இல்லை. பிறகென்ன வாயத் திறந்தாலே வசவுதான். தெருவில் ஒரு ஆம்பளைப் பையனையும் நடக்க விடமாட்டாரு அய்யம் பெருமாள். ஒரே கெட்ட கெட்ட வார்த்தையில வசவுதான். ஆனா அந்த அம்மா அய்யம் பெருமாளைப் போல இல்லை. எல்லோரிடமும் அன்பும் பிரியமுமாகப் பழகுவார். சின்னப் பையன்கள் அய்யம்பெருமாள் இல்லாத நேரத்தில் அந்த டீக்கடையைச் சுற்றி விளையாடிக் கொண்டிருப்பார்கள். கதையைப் பேசிக் கொண்டிருக்கும் இருவரும் அங்கே விளையாடிக் கொண்டலைந்தவர்களே. அய்யம்பெருமாள் கோபக்காரர் மட்டுமல்ல, கருமியும்கூட. பத்து பைசா யாருக்கும் ஈய்ய மாட்டாரு. அதற்கு எழுத்தாளர் கண்டுபிடிக்கும் காரணமும்கூட முக்கியமானது.

 

 அய்யம்பெருமாள் அவருடைய குடும்பத்தில் மூன்று அண்ணன்களுக்குப் பிறகு நாண்காவது பிள்ளை. அதிலும் அண்ணன்களால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டவர். புறக்கணிப்பின் வலி எளிதில் ஆறுமா?. புறக்கணிப்பது மட்டுமல்ல, அய்யம்பெருமாளை அவமானப்படுத்துவதையும் குறைவில்லாமல் செய்து வந்தார்கள் அவருடைய அண்ணன்கள். எதுவெல்லாம் மனதின் பக்கங்களில் தடுப்பேறி,தடுப்பேறி அவரை இப்படி ஆக்கியிருக்கிறது என்பதும் புரிதலுக்குள்ளாகிறது. புறக்கணித்த உறவுகளை, சமூகத்தை போட்டி போட்டு தோற்கடிக்கவே சொத்துக்களைச் சேர்க்கத் துவங்கினார்.

 

எழுத்தாளரின் நண்பர் தான் அய்யம்பெருமாளை இருபது வருடம் கழித்து ஊர்க்கோவிலில் பார்த்த காட்சியைச் சொல்கிறார். அதைக் கேட்பதற்கே கவலையாகத்தான் இருக்கிறது. கோவில் வாசலில் தேங்காய் விடலையைப் பொறுக்கித் திங்க அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் சிறுவர்களோடு போட்டி போட்டு தெருப் புழுதியில் புரண்டு எழுந்திருக்கிறார் அவர். அத்தோடு அந்த சிறுவர்களை காதால் கேட்க முடியாத வசவுகளால் திட்டவும் செய்திருக்கிறார். அந்த வசவுகள்தான் நண்பருக்கு அது அய்யம்பெருமாள் என்பதைக் காட்டியிருக்கிறது. எப்பிடி வைராக்கியமா வாழ்ந்த மனுஷன் இப்பிடி கோட்டிக்காரனா போயிட்டாரே என வருத்தப்பட்டு இருவரும் கலைகின்றனர். கதை இத்துடன் முடியவில்லை. இனிமேல்தான் கதையே துவங்குகிறது.

 

என்னதான் நடந்திருக்கும் என நண்பர்கள் இருவரோடு கதை வாசித்துக் கொண்டிருக்கும் எல்லோருமே யோசிக்கிறோம். எழுத்தாளர் கதையின் முடிச்சை நண்பரின் துணை கொண்டு மெதுவாக அவிழ்க்கிறார். அய்யம்பெருமாளின் மனைவி அவருடைய டீக்கடைக்கு பால் ஊத்த வந்த பால்க்காரனோடு தலைமறைவாகியிருக்கிறார். போகும் போது அந்த அம்மா தனியாகப் போகவில்லை. அதுவரையிலும் அய்யம்பெருமாள் சேர்த்து வைத்திருந்த பணம் நகை என எல்லாவற்றையும் கையோடு எடுத்துக்கொண்டு போய்விட்டார்.

 

அய்யம் பெருமாளுக்கு புத்தியும், காலும் நிலை கொள்ளவில்லை. ஊர் ஊராக நாடோடியைப் போல அலைகிறார். நித்தமும் தேடி அலைவதும், எங்கும் தட்டுப்படவில்லை என திரும்பி வருவதும் தொடர் கதையாகவே நீடிக்கிறது. கீகாட்டில் ரெண்டுபேரும் டீக்கடை நடத்துகிறார்கள் எனும் செய்தி அவருக்கு கிடைக்கிறது. அவளிடம் எதுக்காக இப்பிடி செஞ்ச நீ என ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும். அந்த ஒரு கேள்வியை நேருக்கு நேராக பார்த்து கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்பிடி அலையோ அலை என அலைந்து கொண்டேயிருக்கிறார் அய்யம்பெருமாள்.

 

காலையிலேயே கிளம்பியவரின் மனதிற்குள் இருவரும் தனக்கிழைத்த துரோகத்தின் காட்சிகள் படமாக ஓடிக்கொண்டேயிருக்கிறது. ஊரை நெருங்கி அவர்களுடைய இருப்பிடத்திற்கு மிக அருகில் வந்துவிட்டார். தூரத்தில் இருந்து பார்க்கிறார். இவருடைய டீக்கடைக்கு பால் ஊற்றிய பால்க்காரன் அங்கே டீ ஆத்திக் கொண்டிருக்கிறான்.பத்து வருசமா தேடி அலைஞ்ச துக்கம் அய்யம்பெருமாளுக்கு தொண்டைய அடைக்குது. விடக்கூடாது இவுங்க ரெண்டு பேரையும் எனும் வைராக்கியம் அவருக்கு மேலேறி வருகிறது. கடையை நெருங்கி விட்டார். ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என எல்லோரும் திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டிற்குள் இருந்து எட்டு வயது சின்னப்பெண் வெளியே வருகிறாள். இவரும் அந்தப் பெண் குழந்தையைத்தான் பார்க்கிறார்.

 

இவருக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அச்சு அசலாக அவருடைய மனைவியைப் போலான தோற்றம் குழந்தைக்கு. கையில் அந்தப்பெண் கர்சீப்பில் எதையோ பொதிந்து கொண்டு வருகிறாள். வந்தவள் அந்தப் பொதிமூட்டையை அய்யம்பெருமாளின் முன் திறக்கிறாள். அவருடைய வீட்டில் இருந்து எடுத்துப் போன பணமும் நகையுமே அந்த விரிப்பில் கிடக்கின்றன. அய்யம்பெருமாள் எதுவும் சொல்லவில்லை. எதுவும் கேட்கவில்லை. அந்த குழந்தையின் தலையில் கைவைத்து ஆசீர்வதிக்கிறார். ‘நல்லா இரு மகளே’ என வாழ்த்திய மறுநொடியிலேயே அங்கிருந்து கிளம்பியும் விட்டார். அந்த வீட்டின் சன்னலோரத்தில் இருந்து அழுது விசும்பும் சத்தம் கேட்கிறது. அய்யம்பெருமாள் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டேயிருக்கிறார். மனிதன் மகத்தானவன் என்று கதையை முடிக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர்.

 

மனிதன் மனிதனாக வாழ்வதற்கான நொடித்துளிகளை வாழ்க்கை எப்போதும் அவன்முன் திறந்து வைத்துக்கொண்டேதான் இருக்கிறது. தருமியாக வாழ்ந்தவன். துரோகத்தை எதிர்கொண்டே தீர்வது என உறுதியாக இருந்தவனின் மனதிற்குள்தான் அன்பும் வற்றாத கருணையும் முகிழ்த்து வந்திருக்கிறது.

மனிதன் மகத்தானவன்தான். அவனுடைய கீழ்மையான குணக்கேடுகளையும் சேர்த்தே.

  நன்றி - மதுரைச்செய்தி

Tuesday, 3 June 2025

பேசாப்பொருளைப் பேசும் கதைகள்

 

பேசாப்பொருளைப் பேசும் கதைகள்

உதயசங்கர்



காலமும் சமூகமும் தான் தனக்கான படைப்பாளிகளை உருவாக்குகிறது. படைப்பாளிகள் இந்தச் சமூகத்தின் அசைவியக்கத்தை அதன் இயங்கியலைச் சரியாக முன்னுணரும்போது அவர்களது படைப்புகளில் சமூகயதார்த்தம் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. சமூக யதார்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட படைப்பாளிகளே சமூகம் எத்திசையில் செல்கிறதென்பதையும் எத்திசையில் செல்லவேண்டுமென்பதையும் தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறார்கள். யதார்த்ததை  தங்களுடைய பகுத்தறிவின் மூலம் கட்டுப்படுத்தி வழிகாட்டுகிறார்கள். சமூகயதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத படைப்பாளிகள் சமூகத்தின் சமன்குலைந்த நிலையையே சமன்நிலையென்று மயங்கி விடுகிறார்கள். அதையே தங்களுடைய படைப்புகளிலும் பிரதிபலிக்கிறார்கள். ஆனால் சமூக அக்கறையுள்ள படைப்பாளி தன் சமூகத்தை உற்று நோக்குகிறார். படைப்புகளில் இதுவரை கவனிக்காத இருள்வெளிகளின் மீதும், சாம்பல்நிறப்பகுதிகளின் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறார். புனைவின் வலிமையான மாயாஜாலத்தினால் தன்னுடைய படைப்புகளில் கவனப்படுத்துகிறார். கூருணர்வுள்ள சமூகம் அந்தப் படைப்புகளின் வழியே தன்னை சுயபரிசோதனை செய்து கொள்கிறது.

சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் வாழ்க்கையை பெண்கள் எழுதியதைவிட ஆண்களே அதிகம் எழுதியிருக்கிறார்கள். அவர்களுடைய படைப்புகளில் பெண்கள் துயர்மிகு வாழ்வினை வாழ்ந்து தீர்ப்பவர்களாக, அவலத்தினால் அனுதாபம் கோருபவர்களாக, கையறுநிலையில் கதறுபவர்களாகவே அன்பே உருவானவர்களாக, தியாகதீபங்களாக, சிறு சலனங்களையும் பெரும்பூகம்பமாக உணர்பவர்களாக, சில சமயம் உறுதிமிக்கவர்களாக, பிரச்னைகளைச் சமாளித்து எழுந்து நிறகும் வல்லமை கொண்டவர்களாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் பெண்வாழ்வை ஒரு பெண் எழுதும்போது இதுவரை தெரிந்த மொத்தச்சித்திரமும் தலைகீழாக மாறுகிறது.

இதுவரை ஆண்களின் கண்கள்வழியே பெண்வாழ்வைப் பார்த்த பெண்களுக்கே கூட புதியதொரு தரிசனம் கிடைக்குமென்று சொல்லலாம்.

ஆகாத தீதார் என்ற முதல் சிறுகதைத்தொகுப்பின் வழியே தமிழ்ச்சிறுகதையுலகில் தன்னுடைய இலக்கிய இடத்தை வலுவாகப் பதிவு செய்த ஆமீனா முகம்மத் அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான நிஹாடு மூலம் புதியதொரு உயரத்திற்குச் சென்றிருக்கிறார். தமிழில் பொதுவாகவே பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் மிகவும் குறைவு. அதிலும் இஸ்லாமியப்பெண் எழுத்தாளர்கள் அரிதினும் அரிது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்போதும் இப்போதுமாக ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் மின்னுவதைப் போல மின்னி மறைந்து விடுவார்கள். சித்தி ஜூனைதா பேகம், ரொக்கியா பேகம் என்ற பெயர்களுக்கப்புறம், சமீபகாலமாகத் தான் இஸ்லாமியப்பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பார்க்கமுடிகிறது. அவர்களில் ஒளிவீசும் புதிய வண்ணங்களோடு எழுந்து வந்திருக்கிறார் ஆமினா முகம்மத்.

பொதுவாக சமூகத்தில் வாழும் பெண்களின் நிலைமை அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி எப்படி இருக்கிறதென்பதைச் சாதாரணமாகச் செய்தித்தாள் வாசிக்கிற எல்லாருக்கும் தெரியும். சொல்லித்தீராதது பெண்களின் பாடுகள். பிறந்ததிலிருந்து இறப்புவரை எந்தச் சுதந்திரமுமின்றி, எந்தச் சுயசிந்தனையுமின்றி, யாரையாவது சார்ந்து, யாராவதொருவரின் பாதுகாப்பில், எல்லாரையும் எல்லாவற்றையும் அனுசரித்து வாழ்ந்து மடிந்து விடும் பெண்களின் வாழ்க்கை, என்ற கருத்தியலில் மிகப்பெரும் உடைப்பை ஏற்படுத்தும் கதைகளாக நிஹாடு தொகுப்பிலுள்ள கதைகளிருக்கின்றன.

வைகையால் உறிஞ்சப்படாத உயிர் அல்லது தற்கொலையின் நாட்குறிப்பு என்ற கதையில், வெளிநாடு சென்ற கணவனின் துரோகம் தெரிந்த கனியம்மா கரைபுரண்டுவரும் வெள்ளத்தில் தற்கொலை செய்து கொள்ளத் துணிகிறார். ஆனால் ஆமினா முகம்மதின் கலையுணர்வு அவரை ஆண்கள் மட்டுமே நியாயம் வழங்குகிற பஞ்சாயத்தில் அத்தனை பேரையும் சமாளிக்கிற வலிமையுள்ள பெண்ணாக மாற்றுகிறது.

உசுரு கருப்பட்டி கதையில் வரும் கச்சம்மா கதையில் ஆமினா முகம்மதின் மொழிநடை புதிய உச்சத்தைத் தொடுகிறது. கூட்டுவண்டியில் சாமான்களுடன், குரோதம், வஞ்சம், எல்லாம் பயணப்பட்டு வந்ததாகச் சொல்வதாகட்டும், தற்கொலை செய்ய நினைக்கும் கச்சம்மாவிடம் சிட்டம்மா தண்ணியை அழுக்காக்கிறாதே என்று சொல்லி ஞானம் போதிப்பதாகட்டும், கச்சம்மா கடைசிவரை தான் சாபம்விட்டவர்களின் வீட்டில் ஒருவாய்த்தண்ணீர் குடிக்கவில்லை என்ற முடிவுவரை இதுவரை சொல்லப்படாத கதையாக இருக்கிறது.

வாழவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் ஆயிரம் வழி இருக்கிறது என்ற வார்த்தைகளில் தான் பிடாரியம்மாளில் வரும் தங்கம்மாளின் மூர்க்கம் இருக்கிறது. எல்லாரையும் வந்துபாரு என்கிற அவருக்குத் துணையாக நாகூர் அனிபா தன்னுடைய பாடல்களின் வழியே ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தாரென்ற விவரிப்பின் எள்ளல் தொனி தங்கம்மாள் என்ற கதாபாத்திரத்துக்கு வலுவூட்டுகிறது.

காதலினால் மதம் மாறித் திருமணம் முடிந்த பெண் புகுந்த வீட்டில் தன்னை நிரூபிக்கப் போராடும் வாழ்க்கையைப் பற்றிய கதை அம்மு. இதுவரை யாரும் பேசாத கதை இது. இந்தக் கதையில் வரும் அமுதவள்ளி என்ற அமீராவின் போராட்டங்கள் மனம் உருகும் வண்ணம் ஓவியமாகத் தீட்டியிருக்கிறார் ஆமீனா முகம்மத்.

ஒவ்வொரு கதை குறித்தும் விரிவாக எழுதிவிட மனம் துடித்தாலும் முன்னுரையில் அதற்கு இடம் கொடுக்கக்கூடாதென்ற நடைமுறையை நினைத்து சுருக்கமாகச் சொல்ல நினைக்கிறேன்.

சாஜிதா மாமி கேஸ் மனதை உருக்கும் கதை. கதையை வாசித்தவுடன் சாஜிதா மாமி ஒரு செவ்வியல் கதாபாத்திரமாக மாறியிருப்பதை நாம் உணரமுடியும். மாமனாரின் ஆவி கதையில் வரும் ராசாத்தி செய்யும் பழிவாங்கல், அசனம்மாளின் தற்கொலைக் குறிப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றும்  அசனம்மாளின் தந்திரம், இரகசிய அறை கதையில் கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் இரட்டை நடைமுறை, கடைசிவரியில் ஒரு பெண்வாழ்வின் சுமையை நம் மீது ஏற்றிவிடும் வல்லமை கொண்ட கதையாகத் திகழ்கிறது. மகனுக்காகத் தன்னைப் பலிகொடுத்த தாயைப் பழிவாங்கும் பெண்ணின் சாதுரியம் என்று தொகுப்பு முழுவதும் பெண்களே நிறைந்து நிற்கிறார்கள்.

.ஆமீனா முகம்மத்தின் கதைகளில் வரும் பெண்கள் பழி வாங்குகிறார்கள், தந்திரம் செய்கிறார்கள், தன் சொந்தங்களின் மீதே சாபம் விடுகிறார்கள். வன்மத்தைப் போற்றி வளர்க்கிறார்கள், நாடகம் ஆடுகிறார்கள், அதிகாரம் செய்கிறார்கள், பிறழ்மனநிலை கொண்டவர்களைப் போல நடிக்கிறார்கள், அடிக்கடி தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள், பிடிவாதம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இருத்தலைத் தக்கவைத்துக் கொள்ள என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையையும் செய்பவர்களாக, ரத்தமும் சதையுமாக நம் முன்னால் உலவித்திரிபவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வின் அவலங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமாக ஆண்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெளிவாக்குகிறார் ஆமீனா முகம்மத்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் இயங்கியல்ரீதியாக தனித்துவமாகவும் முழுமையாகவும் கதைக்குள்ளே பரிணாமவளர்ச்சி பெறுபவர்களாகவும் வருகிறார்கள். பெண்ணெழுத்துகளில் நகைச்சுவையும் எள்ளலும் கேலியும் கிணடலும் மிக அரிது. ஆமீனா முகம்மத் மிக இலகுவாக தன்னுடைய மொழிநடையில் அதைக் கொண்டு வருகிறார். வாழ்க்கையை விலகி நின்று பார்க்கும்போது மட்டுமே கிடைக்கிற அபூர்வமான நோக்கு. புதுமைப்பித்தனிடம், வைக்கம் முகமது பஷீரிடம் அத்தகையை எழுத்து முறையைப் பார்க்கலாம்.  ஆமீனா முகம்மது இயல்பாக எழுதிச் செல்கிறார். இதில் தான் அவருடைய  கலை வெற்றியடைகிறது. .

ஒரு புதிய காட்சி தெரிகிறது. புதிய உணர்வுகள் தோன்றுகின்றன. புதிய கோணத்தில் இந்த வாழ்வு துலங்குகிறது. பெண்களின் வாழ்க்கை குறித்த பழமையான சிந்தனைகள் தகர்கின்றன. பெண்கள் இப்படித்தான் சிந்திப்பார்களென்ற ஆண்களின் அனுமானங்கள் வெடிவைத்துத் தகர்க்கப்படுகின்றன. பெண்கள் பேராளுமையாக, பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறார்கள். அவர்கள் நீங்களாகவும் இருக்கலாம். உங்கள் வீட்டிலும் இருக்கலாம்!

தமிழ்ச்சிறுகதைக்கு புத்தம் புதிய காற்றாய், பேசாப்பொருளைப் பேசத் துணிந்தவராய், அபூர்வமான கதைகளுடன் மீண்டும் வந்திருக்கிற ஆமீனா முகம்மத் மிக விரைவில் இன்னும் சிறந்த படைப்புகளைத் தருவார். தமிழின் சிறந்த படைப்பாளிகளிலொருவராக மாறுவார்.