குழந்தைகள் எழுதுவது குழந்தை இலக்கியமா?
உதயசங்கர்
குழந்தை இலக்கியத்தைப்
பொறுத்தவரை பல்வேறு கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை வலியுறுத்தப்படுகின்றன. உரையாடல்களும் விவாதங்களும் நடக்கின்றன. முதலில் இப்படியான கருத்துகளை வெளிப்படுத்தவும் குழந்தை இலக்கியத்தைப் பொருட்படுத்தவும் கூடிய சூழல் உருவாகியிருப்பது மிக முக்கியம்.
குழந்தைகளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? இந்த பூமியில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு எதுவுமே தெரியாது. நாம் தான் அதற்கு அனைத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அறிவூட்ட வேண்டும். சமூகப்பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கவேண்டும். அறநெறிகளைக் கற்றுத்தரவேண்டும். விழுமியங்களைப் போதிக்க வேண்டும். சமூக மனிதனாக மாற்ற வேண்டுமென்ற அசைக்க முடியாத நம்பிக்கை பொதுச்சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. அதிலிருந்து தான் குழந்தைகள் எழுதுவதெல்லாம் குழந்தை இலக்கியம் அல்ல என்ற எண்ணமும் உருவாகிறது.
மற்ற விலங்கினங்களைப் போலவே ஹோமோசேப்பியன்ஸ் என்ற நவீன மனிதன் உருவானபிறகு மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் பரம்பரை பரம்பரையாகக் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதனால் புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் வெறும் விலங்குக் குட்டிகளாக மட்டும் பிறப்பதில்லை. அவற்றிற்குப் பயிற்சிகளைக் கொடுத்து பகுத்தறிவுள்ள மனிதனாக மாற்றவேண்டுமென்ற அவசியமில்லை. குழந்தை பிறக்கும்போதே ஹோமோசேப்பியன்ஸாகவே பிறக்கிறது. அதாவது குட்டி மனிதனாகவே பிறக்கிறது. எனவே அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்தே கற்றுக் கொண்டேயிருக்கிறது. சிந்திக்கத் தொடங்குகிறது. தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
தன்னை வெளிப்படுத்துவது தான் கலையின் முதன்மையான நோக்கம் எனும் போது குழந்தைகள் சூழலை உள்வாங்கி வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த வெளிப்பாடுகளின் வழியே தங்களை வளர்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். எனவே தான் குழந்தைகள்
பேசும் முன்பே பாடுகிறார்கள், நடக்கும்
முன்பே ஆடுகிறார்கள் எழுதும் முன்பே வரைகிறார்கள் என்று குழந்தை உளவியலாளர்
பிலிசியா ராத் சொல்கிறார். எத்தனை வருடங்கள் வளர்த்தாலும் சொல்லிக் கொடுத்தாலும் ஒரு குரங்குக் குட்டி மனிதக்குழந்தை போலச் சிந்திக்காது. அப்படியென்றால் குழந்தைக்கு எதுவுமே தெரியாதென்ற வாதத்திலிருக்கும் உண்மைத்தன்மையில் குறைவு ஏற்படுகிறதல்லவா? அதற்காக குழந்தைகளுக்கு எல்லாம் தெரியும் என்ற இன்னொரு முடிவுக்கும் போய் விடக்கூடாது. இரண்டாவது வகுப்பு படிக்கும்போது அபிமன்யு.வி. என்ற குழந்தை எழுதுகிறான்,
“ ஒரு பூ இருந்தது. எந்த நாட்டிலுமில்லாத பூ அது. திருடர்களுடைய பூ அது. ஒரு போலீஸ்காரன் அந்தப் பூவைத் திருடிக்கொண்டு போய்விட்டான். அப்போது திருடர்கள் அங்கு இல்லை. அவர்கள் போலீஸ்காரர்களின் டிரஸைத் திருடப் போய் இருந்தார்கள். “
இந்தக் கதையை வாசிக்கும்போது இன்றைய சமூகத்தின் நிலைமையைத் துல்லியமாகப் படம்பிடிப்பதைப் போல இருக்கிறதல்லவா? அதுமட்டுமல்ல. இந்த வரிகளுக்குள் ஒரு த த்துவச்சிந்தனையும் இருப்பதைப் போலத் தெரிகிறதல்லவா? யார் திருடன்? யார் போலீஸ்? பூ எதைக் குறிக்கிறது? இப்படி யோசித்துக் கொண்டே போகலாம். இதையெல்லாம் அந்தக் குழந்தை சிந்தித்து உருவாக்கியிருக்குமா? திட்டமிட்டு இந்தக் கருப்பொருளைத் தேர்வு செய்திருக்குமா? என்று யோசித்தால் நிச்சயமாக இல்லை. ஆனால் இது குழந்தை இலக்கியமா என்றால் குழந்தை இலக்கியம் தானென்று உறுதியாகச் சொல்லலாம்.
பெரியவர்களைப் போலத் திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்து அதற்கான உழைப்பைக் கொடுத்து ஒரு படைப்பை குழந்தைகள் உருவாக்குவதில்லை. குழந்தைகள் அந்தந்தக் கணத்தில் வாழ்கிறார்கள். அதனால் தான் சில குறிப்பிட்ட விஷயங்களைத் தவிர மற்றதெல்லாம் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது மறந்து விடுகிறார்கள். குழந்தைமையில் அவர்கள் வெளிப்படுத்தும் கலை என்பது உடனடிப்படைப்பூக்கம். ( Spontaneous Creativity ) உடனடிப்படைப்பூக்கத்துக்கு நோக்கம் கிடையாது. இலக்கு கிடையாது. திட்டம் கிடையாது. அதன் ஒரே நோக்கம் தன்னை வெளிப்படுத்துவது மட்டுமே.
அதே நேரம் தன்னை வெளிப்படுத்தும்போதே குழந்தை தான் அனுபவித்த, பார்த்த, கேட்ட விஷயங்களை வெளிப்படுத்துகிறதென்பதையும் கவனிக்க வேண்டும். அவை சமூகம் சார்ந்ததாக இருக்கிறது. எனவே அதை வாசிக்கும் பெரியவர்களுக்கு வேறு ஒரு அனுபவத்தைக் கொடுக்கிறது. குழந்தைகளுக்கு வேறு ஒரு அனுபவத்தைக் கொடுக்கிறது. வெவ்வேறு அனுபவங்களை ஒரு பிரதியால் கொடுக்க முடிகிறது. அதுமட்டுமல்ல
உலகம் முழுவதும் குழந்தைகளெழுதும் இலக்கியம் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் உலகத்தின் மிகச் சிறிய வயது எழுத்தாளர் என்ற விருது வழங்கப்படுகிறது. அந்தக் குழந்தைகள் எழுதும் நூல்களை பன்னாட்டுப்பதிப்பகங்கள் வெளியிடுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கலைச் செயல்பாடென்பது போலச் செய்தல் தானென்றால் குழந்தைப் பருவத்திலேயே குழந்தைகள் செய்யத் தொடங்கி விடுகிறார்கள். இந்தப் போலச்செய்தலை குழந்தை உண்மையாக நம்புகிறது. இதில் எங்கெல்லாம் எதையெல்லாம் யதார்த்தமாய் செய்யமுடியாதோ
அங்கெல்லாம் அதை ஃபேண்டஸியாக மாற்றுகிறது குழந்தை. இரண்டடி இடத்திலேயே வீடு, பள்ளிக்கூடம், ஆசுபத்திரி, கார், பைக், என்று நொடிக்கு நொடி எல்லாவற்றையும் மாற்றுகிறது.
கைக்குக் கிடைக்கிற
பொருட்களின் வழியே தன் கற்பனையின் எல்லைகளை விரிப்பதில் குழந்தமைக்கு எந்த தடையுமில்லை. அது தான் குழந்தைமையின் மாயாஜாலம். அது தான் குழந்தைகளின் கலை.
குழந்தைகள்
குட்டி மனிதர்கள். கவித்துவமும் கற்பனையும் பொங்கித்ததும்பும்
அந்தக்குட்டி மனிதர்களின் உலகம் விநோதப்பூக்கள் பூக்கின்ற காடு. நம் குழந்தைகள் எழுதட்டும். கதைகளைச் சொல்லட்டும். ஓவியங்கள் வரையட்டும். பாடல் புனையட்டும். நடனம் ஆடட்டும்.
கலை மனிதனை மனிதனாக்கும். உய்விக்கும்.
நன்றி - புக் டே

குழந்தைகள் எழுதும் இலக்கியம் பற்றிய ஒரு நல்ல புரிதல் தரும் கட்டுரை.
ReplyDelete