Wednesday 8 October 2014

காட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை

உதயசங்கர்

pichamurthy

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தன் அழகு குறையாமல் கால மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டே இன்னமும் இளமை குன்றாத தமிழ்க்கவிதை மரபின் தொடர்ச்சியாக புதுக்கவிதையாக பரிணமித்தது ந.பிச்சமூர்த்தி என்ற கவிஞரால். கவிதைக்கென்று இறுக்கமான இலக்கண வரையறைகள் இருந்த காலம் ஒன்று இருந்தது. சொல்லும் பொருளை விட சொல்லும் விதத்திற்கென கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. தளைகள் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்துக்குத் தடையாக இருந்தன. மேற்கத்திய இலக்கியப் பரிச்சயம் புதிய வடிவங்களை நோக்கிய தேடலைத் தூண்டியது. எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வம் கொண்டு வந்து சேர்க்க புதிய படித்த மத்திய தர வர்க்கம் முனைந்தது. புலவர்களும், பண்டிதர்களும் பாதுகாப்பாக இலக்கணக்கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்த கவிதைக்கு இந்த புதிய மத்திய தர வர்க்கம் சுதந்திரம் தந்து விரிந்த வான்வெளியில் பறக்க விட்டது. இன்றைக்கும் தன் சிறகுகளை விரித்து பறந்து கொண்டிருக்கும் நவீன கவிதையின் பிதாமகன் என்று கவிஞர். ந.பிச்சமூர்த்தியைச் சொல்லலாம்.

ஒன்றை இன்னொன்றாக மாற்றிச் சொல்வது கவிதை. ஒன்றில் மற்றொன்றை ஏற்றிச் சொல்வது கவிதை. ஒன்றைச் சொல்லி இன்னொன்றைச் சுட்டிச் செல்வது கவிதை. ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்து வருவது கவிதை. ஆகக் கவிதையின் அழகே அதன் மறைபொருள் தான். எந்த மொழியில் கவிதைகள் அதிகம் எழுதப் படுகின்றனவோ அந்த மொழி இன்னும் வளமுடனும் இளமையுடனும் வாழ்கிறது என்று பொருள். மொழியின் நுட்பமும் அழகும் கவிதையில் தன் உச்சத்தை எட்டுகின்றன. சுருக்கமாகச் சொல்லப்போனால் மொழி தன் அழகைத் தானே வியந்து அழகு பார்க்கவே கவிதையைப் படைக்கிறது என்று சொல்லலாம்.

ந.பிச்சமூர்த்தி காட்டு வாத்தின் வழியாக நம் வாழ்வை உருவகப்படுத்துகிறார்.

பூட்டியிருந்தால்

பேர்த்தெறிய முயலாதே

குடைக்கம்பி தேடாதே

கட்டிடம் கட்ட வரும் கடப்பாரையை

ஆயுதமாக்காதே

ரத்தத்துளியைப்

போர்க்கொடியின்

ஊடும் பாவுமாய் ஆக்காதே

புரட்டி எறியும் வெறும் வேலை

உனக்கில்லை

உலகைத் திருத்தும் உத்தமச்செய்கை

உனக்கேனப்பா?

என்று தொடரும் கவிதையில் லட்சிய வாதத்தின் பொய்மை கேலி செய்யப்படுகிறது. வாழ்வின் முரண்களான பொய், சூது, கபடம், நயவஞ்சகம், பழி, என்ற அனைத்தையும் சமூக நலன் என்று மயக்கு மொழிகள் கூறி வாழ்வை பாழாக்கும் வஞ்சகரைப் பழிக்கிறது.

உழைப்பாளியின் கையில் காசிருக்கும்

எனில் வயிறு கொடியில் உலரும்

பட்டினிச் சலிப்பின்

குறை தீர்க்கும் குளத்தில்

பெற்றோர்கள் குழந்தைகளுடன்

விழுந்து மிதந்த கதை

பத்திரிகை பேய்ப்பசிக்கு

பொரியாகிப் பெருமை தரும்

என்று சமூக நிகழ்வுகளைப் படம் பிடிக்கும் கவிதை

அன்றொரு நாள் வேடந்தாங்கலில்

அந்தி விழும் நேரம்

கடலலை போல நீர்ப்பரப்பு

நாற்கரையும் கவிந்த மரம்

நடுவில் மரத்தலைகள்

எண்திசையும் சிரிப்பது போல

சிறகடிக்கும் சத்தம்

………………………………………………………………..

………………………………………………………………

வேடந்தாங்கலில்

தண்ணீரில் மூழ்கிய தலைமயிர்

போல் விரிந்திருக்கும்

ஏரி நடு மரத்தில்

கூடு கட்டி வீடு கண்டு

முட்டை இட்டு குஞ்சு கண்டு

உயிரின் இயக்கத்தை

விண்டு வைக்கும் காவியத்தைக்

கண்டபின்னும் உன் வழியைக் காணாயோ?

என்று சைபீரியக் காட்டு வாத்தின் வலசை வரும் உள்ளுணர்வை வியந்து எல்லாவற்றையும் விட்டு விட்டு காட்டு வாத்தாகிச் சிறகை விரி. வாழ்வு வேடந்தாங்கலாகும். என்று முடியும் கவிதையில் கவிஞர். காட்டு வாத்தின் இயற்கையான உள்ளுணர்வை ஏற்று மனிதர்களின் சிறகுகளை விரிக்கச்சொல்கிறார். இந்தக் கவிதை தான் நவீன கவிதையின் சர்வ லட்சணங்களுடன் வெளியான முதல் கவிதை எனலாம். அந்த வகையில் கவிஞர். ந.பிச்சமூர்த்தி தமிழ்க்கவிதை வரலாற்றில் தனியிடம் பிடித்து விட்டார். பிச்சமூர்த்தி தொடங்கி வைத்த புதுக்கவிதை இயக்கம் இன்று ஆல் போல் பரவி விருட்சமாகி இந்தியாவின் அனைத்து மொழிக்கவிதைகளுக்கும் ஈடாக கவிதைகள் படைக்கும் பெருங்கவிஞர் குழாமை உருவாக்கி விட்டது என்றால் மிகையில்லை. கவிதை காட்டு வாத்தாகி இலக்கிய வானில் சிறகுகளை விரிக்கிறதே…நவீன கவிதையின் பிதாமகரே பிச்சமூர்த்தியே உங்களுக்கு வந்தனம்..

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

3 comments:

  1. ஐயா இடது புறத்தில் தோன்றும் Click and discover Imageshack தங்கள் எழுத்துக்களைச் சுவாசிப்பதற்கு தடையாக இருக்கிறது ஐயா, எப்படி அதை நீக்கிவிட்டுப் படிப்பது என்பது புரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அது எப்படி வந்தது என்று தெரியவில்லை. நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். விரைவில் சரி செய்கிறேன். நன்றி.

      Delete