Sunday, 22 February 2026

வசீகரமும், பகடியும், உண்மையும், புனைவும்

 

வசீகரமும், பகடியும், உண்மையும், புனைவும் என்றுமுள இசையும்

-    கமலாலயன்


 


 

இசையைப் போன்றே எங்கும் பரவிப்படர்ந்து காற்றிலும் தவழ்ந்து மனித மனங்களை நிறைக்கும் வல்லமை பெற்றிருப்பது கதை. நெடுங்கதையோ, சிறுகதையோ – ஒரு கதையின் அளவு அல்ல, முதன்மையிடம் பெறுகிற அம்சம். ஒரு நிகழ்வை, வரலாற்றை, உணர்வெழுச்சியை, மானிடத்தின் நடுவே பொங்கிப் பரவும் - பரப்பும் நேசத்தை நறுக்கென வெளிப்படுத்தும் சின்னஞ் சிறு நடைச்சித்திரமே ஒரு கதையெனப்படுவதற்குப் போதுமானது.

அப்படியான வெளிப்பாடுகளைக் குறுங்கதைகள் என்கிற வகைமையில் அடக்குகிறார்கள் எழுத்தாளர்கள்.

 “கவிதைக்கு நெருக்கமாக, புதிர்வழியின் வாசலாக, ஜென் தியானமாக, ஒரு கைக் கடலாக, பலூனில் சிறைப்பட்ட காற்றாக, இரு கரங்களின் கூட்டுக்குள் ஒளிரும் சுடராக, வரலாற்றின் நினைவாக, வாழ்வின் முரணை உணர்த்தும் எறும்பின் கடியாக” க் குறுங்கதைகள் இருக்கலாம் என்கிறார் உதயசங்கர். இந்த எல்லாவித அனுபவத்தெறிப்புகளையும், இவற்றுக்கு அப்பால், வாசிக்கும் வாசகரின் மனோலயங்களுக்கு இசைய இன்னும் பல அனுபவங்களைத் தரும் சாத்தியங்களும் அவரின் ‘என்றுமுள இசை’ தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

கோவில்பட்டிக்காரரான உதயசங்கர், கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழி பெயர்ப்பு, சிறார் இலக்கியம், குறுநாவல் –போன்ற பன்முக வடிவங்களில் 200 –க்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர் எனும் தகவல் நூலின் உள் அட்டையில் இடம் பெற்று பிரமிப்பூட்டுகிறது. ‘எண்ணிக்கையில் என்ன இருக்கு?’ என யாரும் ஒதுக்கித்தள்ளி விட முடியாத விரிவும்,ஆழமும் கொண்ட கதைகளை ஏராளமாக எழுதியிருப்பவர் உதயசங்கர். சிறார் இலக்கியத்திற்கென ‘பால சாகித்திய புரஸ்கார்’ விருதும் பெற்றவர்.  

ஆலாபனையில் எழுந்து காற்றில் எங்கும் பரவிக் காதுகளையும், கேட்போரின் மனங்களையும் நிறைக்கும் இசையை ஒரு கோட்டுச் சித்திரமாகத் தந்திருக்கிறார் டாக்டர் உ. நவீனா. அது நூலின் அட்டைப் படமாக இடம் பெற்றிருக்கிறது. 

‘தெறிப்புகளின் கலை’ எனும் தலைப்பில் உதயசங்கர் எழுதியுள்ள முன்னுரை பொருள் பொதிந்தது. நூலினுள் பயணிப்பவர்களுக்குக் கை விளக்கு அது. குறுங்கதை என்பது சின்னஞ்சிறு தீவைப் போன்றது எனக் கூறும் ஓர் ஆங்கில மேற்கோளும் தொடக்கத்திலேயே இடம் பெற்றுள்ளது.   பூமியின் கடினமான மேற்பரப்பினுள் அறியவியலாத அல்லது இதுவரை அறியப்படாத பெருவெடிப்பிலிருந்து உருவாக்கப்பட்டு, அதனைச் சூழ்ந்து பரவிப் பெருகும் பெருங்கடல்களால் மேலும் விரிவும்,ஆழமும் பெறும் கலை வடிவமே குறுங்கதை எனச்சொல்லும் அந்த மேற்கோள், நமது வாசிப்பின் எல்லைகளை விரிவாக்குகிறது.

‘எட்டிப்பார்த்த மரணம்’ எனும் முதற்கதையின் முடிவில் கிடைக்கும் வெளிச்சம், ஒரு பேரொளியாய்ப் பரவுகிறது. ‘துப்பாக்கிக்குண்டின் துக்கப் பாடல்’ –இரண்டாவது கதை. படிக்கும் போதே மனதை உலுக்கி, நம்மையும் ‘ஹே ராம்!’ என அரற்றச்செய்து விடும். இன்றைய ‘கோட்சே’க்களின் செவுளில் அறையும் போர்க்குரல் அது!

லாகூரின் சிறை அறைக்குள் மனதினுள் ஒருவர் வாசிக்கும் சொற்கள், நிதானமாகச் சிறை வாராந்தாவில் நடந்து சென்று, தூக்குமேடையில் தொங்கும் கயிற்றை முத்தமிடுகின்றன! அவை (பகத்சிங் மறைந்து)  பல்லாண்டுகள் கடந்த பின்னும் நட்சத்திரங்களைப் போல நிரந்தரமாய் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றன என முடியும் கதை, சுதந்திர வேட்கை நிரம்பிய சொற்களின் வல்லமையை நமக்கு உணர்த்துகின்றன. 

உலகம் முழுவதிலும் புரட்சியை நடத்த வேண்டுமெனப் புறப்பட்டவன், ஒரு பாழடைந்த பழைய பள்ளியின் உளுத்துப்போன பெஞ்சின் மீது கிடத்தப்பட்டிருந்தான். சாயம் போன கரும்பலகையில் என்றைக்கோ யாரோ எழுதிப்போயிருந்த எழுத்துகள் மங்கலாகத் தெரிந்தன. பொலிவியா நாட்டின் ஒரு மூலை அது. அங்குப் பள்ளிகள் திறந்தே வெகு நாள்களாகி விட்டிருந்தன. குழந்தைகளின் கல்வி நின்று போயிருந்தது. புரட்சிக்குப் பின்பு பள்ளிகளைச் சீர் செய்வோம் என்று அவன் முணுமுணுத்தான். அந்த முணுமுணுப்பைக் கிழித்துக் கொண்டு ஒரு குண்டு அவனின் மார்பைத் துளைத்தது. குழந்தைகளின் சிரிப்பொலி முழங்கும் ஓர் எதிர்காலப்பள்ளி அவனுடைய கண்களில் கனவுப்புன்னகையாய் மீந்திருந்தது..

கனல் பூக்கள், என்றுமுள இசை, நோக்கம், பொடுலிடினம், இறுதியுணவு, செத்த எலி, பார்வை, தேவதைக்கதை, அலறிய கடவுளர், ஊர், காலாதீதம், வீடு, இமைப்பொழுது தூரம், பூப்பதும், நடை, தொடுகை, மரணத்தின் நற்செய்தி, கதையின் கதை, மாற்றம், குரல், அறியாத தேவதை, சந்தை – ஆகிய கதைகளை நாம் வாசிக்கும் போதே வரலாறும், காதலும், நடப்புலகின் அநீதிகளும், எதிர்க்குரல்களும், குழந்தைமையும் இவற்றில் பின்னிப்பிணைந்து இழையோடிக் கொண்டிருக்கின்றன என்பதை உணர முடியும். இக்கதைகளின் உலகம் வசீகரமும், பகடியும், உண்மையும், புனைவும் கலந்து உருக்கொண்ட ஒன்று.

வடிவில் சிறிய, ஆனால் அவை சொல்லும் செய்திகளில் பெரும் பரிமாணங்கள் நிறைந்தவை. கவிதைகளில் சொல்லாமல் விடப்பட்டிருக்கும் செய்திகள், நவீனாவின் கோட்டோவியங்களில் மறைபொருளாய்க் கண்சிமிட்டுகின்றன. மிக அழகான வடிவமைப்பு. இசைக்கோர்வையும், உயிர்ச்சங்கிலியும் மிளிரும் அட்டைப்படம், மனதை வருடும் மெல்லிசையின் சித்திர வடிவம்.

என்றுமுள இசை= குறுங்கதைகள்

உதயசங்கர்

பக்கங்கள்: 88  விலை ரூ. 150/ 

செவ்வியல் பதிப்பகம்

தொடர்புக்கு: 9488406868    

நன்றி - இந்து தமிழ் திசை                                   

-     

No comments:

Post a Comment