Saturday, 7 February 2026

புல்லின் கண்ணீர்

 

புல்லின் கண்ணீர்

உதயசங்கர்






அடர்ந்த காட்டின் நடுவே ஒரு மனிதன். ஆம். மனிதன் தான். இயற்கையை ரசிப்பதற்காகச் சுற்றுலா வந்தான். இயற்கையின் அழகைப் பார்த்தவன் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். பிறகு எரிந்து கொண்டிருந்த அந்தத் தீக்குச்சியைத் தூக்கி வீசினான்.

சிவந்த குட்டியான நெருப்புடன் பறந்து சென்ற அந்தத் தீக்குச்சி கீழே அப்போது தான் பூமியிலிருந்து மெல்லத் தலைகாட்டியது ஒரு புதிய உயிர். ஒரு குட்டிப்புல். மெல்லத் தலையை நீட்டி மலங்க மலங்க முழித்தது. கொஞ்சம் பயம். கொஞ்சம் தயக்கம்.

பளீரென்று ஒரு ஒளி.

அட! சூரியன். .

ஆகா! என்ன அழகு!

இளம்பச்சை நிறத்தில் இருந்த தன்னுடைய தலையைக் குனிந்து சூரியனுக்கு வணக்கம் சொன்னது.

சூரியனுக்கு ஆனந்தம்!

மகிழ்ச்சி! என்றது சூரியன்

குட்டிப்புல் சுற்றும் முற்றும் பார்த்தது.

சுற்றிலும் அந்தக் குட்டிப்புல்லின் சொந்தங்கள். பச்சைப்பசேலென்று சிரித்தனர்.  பூச்சிகள், வண்டுகள் வண்ணத்துப்பூச்சிகள், எல்லாரும் தலையாட்டி குலவையிட்டு அந்தக் குட்டிப்புல்லை வரவேற்றனர்.

வருக! வருக! இளம் தளிரே! பூமியின் அரும்பொக்கிஷமே! இந்த பூமியின் செல்லமே! இயற்கையின் உன்னதமே வருக! வருக!

என்று பாடல் பாடினர். குட்டிப்புல்லுக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த உலகம் இனியது. இந்த இயற்கை இனியது. இந்த வாழ்க்கை இனியது.

குட்டிப்புல் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தது. அப்போது தான் நடந்தது அது. எங்கிருந்தோ பறந்து வந்த து அந்தக் குட்டி நெருப்பு.

அந்தச் சிரிப்பின் மீது விழுந்த து அந்த நெருப்பு. குளிர்ச்சியுடன் தன் பச்சையாடையைப் போர்த்திய அந்தக் குட்டிப்புல்லின் மீது சிவந்து கனன்ற நெருப்பு விழுந்து சுட்டது.

திடீரென்று தன்னைத் தாக்கியது யார் ? தன் மீது நெருப்பைப் போட்ட து யார்? என்று குட்டிப்புல்லுக்குப் புரியவில்லை. சுதாரிப்பத ற்குள் அந்தக் குட்டிப்புல் கருகத் தொடங்கியது.

வேதனை தாங்காமல் அழத் தொடங்கியது.

குட்டிப்புல்லின் கண்ணீர் பூமியில் விழுந்தது.. சுற்றிலிருமிருந்த புற்கள் அழுதன. பூச்சிகள் அழுதன. வண்டுகள் அழுதன. வண்ணத்துப்பூச்சிகள் அழுதன. இயற்கை அழுத து.

.குட்டிப்புல்லின் கண்ணீர்த்துளி பூமிப்பந்தின் உள்ளே ஆழத்தில் சென்றது. பூமியின் மையத்திலிருந்த இரும்புக்கடலில் விழுந்தது. குட்டிப்புல்லின் ஒரு துளிக்கண்ணீர் விழுந்த உடன் இரும்புக்கடல் கொந்தளித்தது.

பூமியின் இன்னொரு பக்கத்தில் பூகம்பம் வெடித்தது.

அடர்ந்த காட்டுக்குள் வந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்த அந்த மனிதனுக்கு அது எதுவும் தெரியாது.

நன்றி - விஞ்ஞானத்துளிர்

No comments:

Post a Comment