Sunday 19 February 2017

புதையல் தீவு-கருணைத்தீவு

புதையல் தீவு-கருணைத்தீவு
தமிழில்-சுகுமாரன்


உலக செவ்வியல் கதைகளை நம்முடைய சிறார்களுக்கு அறிமுகப்படுத்தும் காரியம் முன்பே நடந்திருக்கிறது. ஆனால் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய இளம் வாசகர்கள் வாசிக்க அவை மீண்டும் மீண்டும் பதிப்பிக்கப்பட வேண்டியது அவசியம். சிறார் இலக்கியத்தின் முன்னோடியும், தமிழ்க்குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமரிசனங்களும் என்ற குறிப்பிடத்தகுந்த நூலை எழுதியவருமான எழுத்தாளர் சுகுமாரன் அவர்களின் சுருக்க மொழிபெயர்ப்பில் இரண்டு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
TREASURE ISLAND - புதையல் தீவு, மற்றும் SWISS FAMILY ROBINSON- கருணைத்தீவு என்ற இரண்டும் சிறார் மொழிபெயர்ப்பு இலக்கி்யத்தில் முக்கியமான நூல்கள். சாகசமும், மர்மங்களும் தீரமும் நிறைந்த புதையல் தீவு கையில் எடுத்தவுடன் விறுவிறுப்பாக வாசிக்க வைக்கிறது. கடலும் கப்பலும் கொலையும் சேர்ந்து நாவலை சூடாக்கிவிடுகிறது.
கருணைத்தீவு
ஆள் நடமாட்டமில்லாத தீவில் கரையொதுங்கும் ராபின்சன் குடும்பம் எப்படி அங்கே இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக் கொள்கிறார்கள். என்பதை சுவாரசியமாகச் சொல்கிற நாவல். காடும் காடு சார்ந்த வாழ்க்கை அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களின் வாசிப்பு உலகத்தை விரிவுபடுத்தும் நூல்கள் இவை இரண்டும் என்பதில் ஐயமில்லை
வெளியீடு- வானம் பதிப்பகம்

Friday 17 February 2017

தானேகாவும் தங்கமலையும்

தானேகாவும் தங்கமலையும்

உலக நாடோடிக் கதைகள்
முத்து
உலகம் முழுவதிலுமுள்ள சிறார் இலக்கியம் எங்ஙனம் இருக்கிறது என்பதைச் சொல்லும் நூல்.பத்து நாடுகளைச்சேர்ந்த நாடோடிக்கதைகளை அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். தமிழின் முன்னணி ஓவியரும் எழுத்தாளருமான முத்து. ஒவ்வொரு கதையிலும் ஒரு பிரச்னையும் அந்தப் பிரச்னைக்கான தீர்வும் ஆர்வமூட்டும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. அநேகமாக ராஜா, ராணி, இளவரசன், இளவரசி, பூதம், சூனியக்காரி, போன்ற கதாபாத்திரங்கள் உலவுகிற கதைகள் . எளிமையான மொழியும் விறுவிறுப்பான நடையும் கையில் எடுத்தவுடன் வாசித்து முடிக்க வைக்கிறது. சுட்டி விகடனில் தொடர்ந்து வெளிவந்து குழந்தைகளின் வரவேற்பைப் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. சிறார்கள் வாசிப்பதன் மூலம் இன்னும் விசாலமான உலகத்தை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். சிறார் இலக்கிய மொழிபெயர்ப்பு நூற்றுக்கணக்கில் நமது மொழிக்கு வரவேண்டும். அப்போது தான் நமது இலக்கியம் வளம் பெறும். ஏற்கனவே அந்த வழியில் கவிஞர் யூமாவாசுகி கோ.மா.கோ.இளங்கோ இருவரும் அளப்பரிய கொடைகளைத் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கிறா்கள்.
அந்த வரிசையில் முத்துவும் தன்னுடைய காத்திரமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்.
வாழ்த்துக்கள் முத்து!
வெளியீடு-வானம் பதிப்பகம்
விலை-ரூ50/

அநுபவங்களில் எழும் சலனங்களின் கலை


அநுபவங்களில் எழும் சலனங்களின் கலை
உதயசங்கர்
வாழ்க்கை அநுபவங்களை ஒவ்வொரு மனிதனும் தன் பிறப்பிலிருந்து இறப்பு வரை எதிர்கொள்ளவே செய்கிறான். அந்த அநுபவங்கள் அவனுக்குத்தரும் உணர்வுகளின் வழியாக அவனுடைய மனம் என்ற அபூர்வமான ஒரு பொருள் உருவாகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக, தனித்துவத்தோடு, மனம் விகசிக்கிறது. இந்த விகசிப்பின் வண்ணபேதங்களின் வழியே மனிதக்கதாபாத்திரங்கள் தங்களை வெளிப்படுத்துகின்றன. அந்தக் கதாபாத்திரங்களின் உணர்ச்சிமயமான வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும், அர்த்தமற்றதாகவும், நிரந்தரமானதாகவும், நிரந்தரமின்மையோடும், உத்தரவாதத்தோடும், உத்தரவாதமில்லாமலும், சந்திர சூரியரைப்போல சந்தோஷஒளி வீசுவதாகவும், நீர்க்குமிழிகள் போல கணத்தில் தோன்றி கணத்தில் மறையும் துக்கத்துடனும் மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வாழ்வின் ஓட்டத்தோடு அதன் ஏற்ற இறக்கங்களோடு, எல்லோரும் ஓடிக் கொண்டிருக்க கலைஞனும், விஞ்ஞானியும் மட்டுமே இந்த வாழ்வின் புதிரை விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். விஞ்ஞானி இந்தப் பிரபஞ்சத்தின், மானுட வாழ்வின் அனைத்து ஒழுங்குகளையும் புறவயமாக சோதனைகள் மூலம் ஆராய்ந்து உண்மையைக் கண்டுகொள்ள முயற்சிக்கிறார் என்றால் பிரபஞ்சத்தின் , மானுடவாழ்வின் ஒழுங்குகளை அகவயமாக கலையின் மூலமாக ஆராய்ந்து  அதே உண்மையை கண்டுகொள்ள கலைஞன் முயற்சிக்கிறான். வாழ்வின் அர்த்தம் தேடும் இந்த முடிவிலாப்பயணம் தீராத தேடலோடு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
கலைஞன் வாழ்வின் அநுபவங்களை தன் கலையின் தீட்சண்யத்தில் விளங்கிக் கொள்ளும் முயற்சிகளில் தனக்கான கலை வடிவங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். கலைஞனின்  கலைக்கோட்பாடு, தத்துவார்த்த அரசியல் நிலைபாடு, கலை அர்ப்பணிப்புணர்வு, கலைஞனின் உளவியல் நிலை, சூழல், எல்லாமும் அவனுடைய கலைப்படைப்புகளில் தங்கள் செல்வாக்கைச் செலுத்தும். இதனாலேயே விதவிதமான மனிதர்களைப் போல விதவிதமான கலைப்படைப்புகள் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லாக்கலைப்படைப்புகளும் உண்மையை நோக்கிய பயணம்தான். தீராத பயணம்……
எழுத்தாளர் கமலாலயனின் தட்டுப்படாத காலடி என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில் பதினாறு சிறுகதைகளும், ஒரு நீண்ட சிறுகதை/ குறுநாவலும் நிறைந்து ததும்பும் மென்னலை போல நம்மை வருடிக் கொண்டேயிருக்கின்றன.  வாழ்வின் உண்மைகளை ஆக்ரோஷமாய், அழுத்தமாய் சொல்ல முனைவதில்லை கமலாலயனின் கதைகள். அதற்குப் பதில் ஒரு நெருங்கிய நண்பரின் தோள் மீது வாஞ்சையுடன் கையைப் போட்டுக் கொண்டோ, மனதுக்கினிய காதலியின் அருகில் உட்கார்ந்து அவளுடைய கையை உள்ளங்கையில் வைத்தபடி பேசிக் கொண்டிருக்கிற உணர்வையேத் தருகின்றன. கு.ப.ரா.வின் மென்மை இவருடைய கதைகளில் உள்ளார்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. மிகப் பெரிய உண்மைகளையும் மிக எளிமையாகக் கண்டு சொல்லும் கலை கமலாலயனுக்குக் கை வந்திருக்கிறது.
தலைப்புக் கதையான தட்டுப்படாத காலடி யில் கைக்கருகில் சொர்க்கம் இருந்தாலும் அதை உணர முடிவதில்லை. ஆனால் அதே அநுபவத்தை பதினாறு பதினேழு மணி நேரம் பிரயாணம் செய்தே எதிர்கொள்ள நேர்கிறது. அதையும் அந்தக் கதையில் வருகிற நந்தினியே உணரவைக்கிறாள் என்பது எதேச்சையானதில்லை. பெண்களுக்குத் திருமணநாள் என்பது உணர்வு ரீதியாக அவர்களுக்கு மிக முக்கியமான நாள். அன்று கணவனோடு இருப்பது, விஷேசமான சமையல், பரிசுப்பொருட்களைப் பகிர்ந்து கொள்ளல், என்று பெண்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளில் ஒரு சிறப்புத்தன்மையை உருவாக்கிக்கொள்கிறார்கள். புரிதல் கதையில் முதல் திருமணநாளன்றே தாமதமாக வருகிற கணவன் தருகிற பரிசுப்பொருள் தருகிற கணநேர மகிழ்ச்சி, அடுத்தடுத்த திருமண நாட்களில் மங்கிய ஒளி வீசுகிறது. அதைப் பற்றி சாந்திக்குப் புகார் இருக்கிறது. ஆனால் வெளியே சொல்லவில்லை. அமைதியாக இருக்கிறாள். கணவனுக்கு இதைப் பற்றிய சுரணையில்லையோ என்று கூட நினைக்கிறாள். ஏழாவது திருமணநாளன்று கணவன் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தை வாசிப்பதன் மூலம் அவனுடைய மனதைப் புரிய வைக்கிறான். அவள் இளகிப் போகிறாள். ஏக்கம், இயலாமை, பரிவு, அன்பு எல்லாம் கலந்த உணர்ச்சி அவர்களைத் ததும்பச்செய்கிறது.
பற்றிக் கொள்ள கதையில், பேருந்தில் பிரயாணிக்கும்போது கூட்ட நெரிசலில் ஏறி நிற்க இடமில்லாமல் வாசலுக்கருகில் நிற்கும் சிறுமி எங்கே கீழே விழுந்து விடுவாளோ என்ற பதைபதைப்புடன் உட்கார்ந்திருக்கிற அவன், ஒரு சமயத்தில் அந்த அவஸ்தை தாளாமல் எழுந்து போய் அந்தச் சிறுமியை அழைத்து உள்ளே பாதுகாப்பான இடத்தில் நிறுத்துகிறான். அவனுடைய பதைபதைப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. கதை முடிவில் அவனுடைய ஆசுவாசம் அந்தச் சிறுமிக்குத் தெரிவதில்லை. அவள் விழித்துக் கொண்டே போகிறாள்.
குருவி மீது பச்சாதாபம் கொள்ளும் அவன், குழந்தையை அடித்து விட்டு கண்ணாடியில் பூச்சாண்டியாய் தன்னையே உணரும் அவன், ஃபேக்டரியில் ஃபைலிங்கினால் ஓட்டையான பேண்ட், சட்டைக்குப் பதில் போஸ்ட்மேன் யூனிஃபார்ம் உடையைப் போட்டுக் கொண்டு போக அவனை போஸ்டலில் வேலை பார்ப்பதாக நினைத்து மகிழ்ச்சியுடன்  பேசும் போஸ்ட்மேனைப் பார்த்துச் சிரிக்கும் அவன், எங்கோ பார்த்த ஒரு பெண் படும் துயரத்தைப் பற்றி கதை எழுதும் எழுத்தாளருக்கு வீட்டில் தன் மனைவி படும் துயரம் தெரியவில்லை என்று உணரும் எழுத்தாளர், வேறு வழியில்லாமல் ஓசிக்கு வாத்தியார் வேலை பார்க்கும் தியாகராஜனின் துயரம், என்ன முற்போக்காய் பேசினாலும் திருமணத்தில் சாதி பார்க்கும் தந்தை, என்று மிக மிகச் சாதாரண மனிதர்களின் வாழ்வில் நிகழும் மிகச் சாதாரண அநுபவங்களை தன் கலையால் அபூர்வமானதாக மாற்றியிருக்கிறார் கமலாலயன்.
.
பொதுவாக, கமலாலயனின் கதாபாத்திரங்கள் வாழ்வின் நெருக்கடியில் நசுங்கி, எதிர்ப்பார்ப்பில் ஏமாந்து, ஏமாற்றத்தில் மனம் வாடி,  கணநேர உணர்ச்சிகளின் சுழலில் தங்களை இழக்கிறார்கள். ஆனால் எல்லோருமே அந்தந்த நிலையிலிருந்து மீண்டு விடத் தயாராகவே இருக்கிறார்கள். அனைவருமே மென்மையான உள்ளம் கொண்டவர்கள் தான். தாங்கள் இப்படி மாறி விட்டோமே என்று உடனே உணர்ந்து கொள்பவர்கள் தான். வெறுமனே வாழ்க்கை மீது மட்டும் பழி போடாமல் தங்களை மீளவும் உணர்கிறார்கள். அந்த வகையில் இந்தச் சாதாரண மனிதர்கள் அசாதாரணமான உயர்ந்தவர்களாகிறார்கள்.
கமலாலயனின் கதை உலகில், குடும்பத்தில், பெரும்பாலும் பெண்கள், ஆண்களை விட அதிகமாகப் பேசுகிறார்கள். கோபப்படுகிறார்கள், சிரிக்கிறார்கள், பரிவு கொள்கிறார்கள், குடும்ப பாரத்தைச் சுமக்கிறார்கள், கணவன், குழந்தைகள், மீது அன்பு செலுத்துகிறார்கள். நந்தினி, சாந்தி, ஜெயா,மரகதம், கோமதி, சரோ, நீலா, சாரதா, என்று எல்லோரும் வாழ்வின் பிரவாகத்தில் அதன் சுழிப்புகளில் சுழன்று மிதந்து செல்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள், அமைதியான பார்வையாளராக, தாங்கள் நினைப்பதை, சொல்ல வருவதை, சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே மருகிக் கொண்டிருப்பவர்களாக, மனதின் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்பவர்களாக வருகிறார்கள். தட்டுப்படாத காலடியில் வருகிற குமரன், அரவிந்தன், குருவியில் வருகிற ஆக்ரோஷமான கிருஷ்ணன், பார்வைகள் மாறும் கதையில் வருகிற போராட்டத்தைக் கண்டு பயந்து தெரியாத்தனமாக ஜெயிலுக்குப் போகிற பேராசிரியர். கிருஷ்ணமூர்த்தி, தொழிற்சங்கத்தலைவர் கே.சி.எஸ். ரசனையில் வருகிற குரூர மனம் கொண்ட கணவனான விஜயன், வீட்டிலும் ஒரு ஜீவனில் வருகிற எழுத்தாளர் ரமணன், வேஸ்ட் கதையில் வருகிற மணி, ராஜன், துணைகளில் வருகிற டெம்போ டிரைவர் நடராஜன், குருவிக்கூடுகளில் வருகிற கேசவன், வேலை கதையில் வருகிற தியாகராஜன், ஓய்ந்தவர்களில் வருகிற ஓய்வு பெற்ற கோபால், சங்கரன், இவர்கள் எல்லோரும் மிக அமைதியாக வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்பவர்களாகவே இருக்கிறார்கள்.  நகரப்பருந்துகளில் வருகிற பெரீவர், மாரிமுத்து, முரளிதரன், விக்டர், சம்பந்தன்,  போன்றவர்கள் மட்டுமே சற்று முனைப்புடன் வாழ்க்கையுடன் மல்லுக்கட்டுபவர்களாக, எதிர்வினை புரிபவர்களாக இருக்கிறார்கள்.
நகரப்பருந்துகள் கதையில் பேருந்துத்தொழிலாளர்களின் வாழ்க்கை அவர்களுடைய வேலைக்களம், அவர்களுடைய போராட்டம் என்று மிக வித்தியாசமான அதே நேரம் அழகாக, அவர்களுடைய மனவுலகைச் சித்தரிப்பதில் மன அவசங்களை அப்படியே வரைந்து தன்னை ஒரு மகத்தான எழுத்தாளராக பதிவு செய்திருக்கிறார் கமலாலயன்.
இந்தத் தொகுப்பில் வரும் உலகத்தை மூன்றுவிதமாகப் பிரிக்கலாம் என்று தோன்றுகிறது. நீண்ட சிறுகதை அல்லது குறுநாவல் போல எழுதப்பட்டிருக்கும் நகரப்பருந்துகளில் காண்கிற பேருந்து தொழிலாளர்களின் வேலைக்களமும், வாழ்க்கையும் அழுத்தமான சித்திரமாக அபூர்வமான வண்ணங்களோடு வந்துள்ளது. அடுத்ததாக தொழிற்கல்வி முடித்து ஃபேக்டரிகளில் வெல்டராக, ஃபிட்டராக, வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வேலைக்களமும் அவர்களுடைய வாழ்க்கையும், இதுவரை பெரிய அளவில் எழுதப்படவில்லை என்று தோன்றுகிறது. அடுத்ததாக வீடுகளின் உலகம் அதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் உயிர்த்துடிப்புடன் நம் கண்முன்னே புழங்குகிறார்கள். இந்த மூன்று உலகங்களில் வருகிற மனிதர்கள் மிக மிக உணர்ச்சிக் கொந்தளிப்புடனும், ஆவேசத்துடனும், அக்கறையுடனும், பேரன்புடனும், வாழ்கிறார்கள். உயிர்த்துடிப்புடன் இவர்களை சித்தரிப்பதில், கமலாலயன் பெரும் வெற்றியடைந்திருக்கிறார்.
காட்சிச்சித்தரிப்பில் கமலாலயனின் கதைகள் தனிக்கவனம் பெறுகின்றன. இவ்வளவு அற்புதமாக மனதின் உணர்ச்சிநிலைகளுக்கேற்ப காட்சிகளைச் சித்தரிப்பது ஒரு கலை. இயற்கைக் காட்சிகளாகட்டும், பிரம்மச்சாரியின் அறையாகட்டும், வீடும் வெளியுமாகட்டும், வேலைக்களமாகட்டும் எல்லா இடங்களையும் அதன் சுயம் மாறாமல் சித்தரிப்பதில் கமலாலயனின் கலைத்திறன் மிகுந்த அபூர்வமானதாக இருக்கிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள பதினேழு கதைகளும் எளிமையான உண்மைகளை வலிமையாகச் சொல்கிற கதைகள். மொழிபெயர்ப்பாளராக தமிழிலக்கியத்தில் முத்திரை பதித்து தமிழகத்தில் தேவதாசிகள் என்ற ஆங்கில நூலை மொழிபெயர்த்ததற்காக திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது பெற்றவர் கமலாலயன். விவாதங்களை எழுப்புகிற, சிந்தனைகளைக் கிளறச் செய்கிற, கட்டுரைகளையும், நேர்காணல்களையும் எழுதியவர். அறிவொளி இயக்கம், அறிவியல் இயக்கம் என்று களங்களில் நேரடியாக இயங்கிக் கொண்டிருப்பவர், அவருடைய இந்தத் தொகுப்பு தமிழிலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெறும். முக்கியமான, குறிப்பிடத்தக்க சிறுகதை நூலாகத் தன்னை நிலை நிறுத்தும். அதற்கான அத்தனை தகுதிகளைக் கொண்டிருக்கிறது தட்டுப்படாத காலடி.
அத்தனைக்கும் பின்னால் மானுட இனம் அன்பெனும் பெருஞ்சரடால் கட்டப்பட்டிருக்கிறது. எல்லாக்கலைகளும் கண்ணுக்குத் தெரியாத அந்தச் சரடினை மானுடம் காண ஒளியூட்டுகிறது. இதோ இந்தக் கதைகளும் கூட தன்னளவில் ஒளி வீசுகிறது. அந்த ஒளியின் வெளிச்சத்தில் மனிதர்கள் துலங்குகிறார்கள். மானுடம் நேசத்தின் மலர் சூடி… முன்னேறுகிறது. முன்னேறுகிறது. முன்னேறுகிறது….முன்னேறிக்கொண்டேயிருக்கிறது.

வெளியீடு - கலைஞன் பதிப்பகம்Thursday 16 February 2017

ஒல்லி மல்லி குண்டு கில்லி

  சிறார் இலக்கியம்

ஒல்லி மல்லி குண்டு கில்லி

மு.முருகேஷ்

சிறார் இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கி வரும் மு.முருகேஷின் புதிய நூல் ஒல்லி மல்லி குண்டு கில்லி. சிறார் இலக்கியத்தின் அவசியமான புனைவும், அதீதமும் கலந்து கதைகள் வாசிப்பின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. பதினைந்து கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளது. அதிகமும் மிருகங்கள், பறவைகள், பூச்சிகள், மீன்கள், என்று கதாபாத்திரங்கள் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. நிறையக்கதைகளில் தேன் தடவிய மருந்தைப்போல வாழ்வின் மதிப்பீடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சிறார் இலக்கியத்தில் மற்றுமொரு காத்திரமான வரவு.
வாழ்த்துக்கள் மு.முருகேஷ்!
வெளியீடு- வானம் பதிப்பகம்
விலை- ரூ80/

Wednesday 15 February 2017

பூச்சிகள் ஒர் அறிமுகம்

பூச்சிகள் ஒர் அறிமுகம்
சூழலியல் சிறுவர் நூல்
தமிழில் சிறார்களுக்கான சூழலியல் நூல்கள் மிகவும் குறைவு. இயற்கையின் முக்கியத்துவம், பல்லுயிர் பெருக்கம், உயிர்ச்சங்கிலியில் எல்லா உயிர்களுக்கும் உள்ள பங்கு, எல்லோருக்கும் ஒரு இடம், என்று குழந்தைப்பருவத்திலிருந்தே அறிமுகப்படுத்தவேண்டிய விஷயங்கள் ஏராளமாய் இருக்கின்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், இந்த அமைப்புகளைத் தாண்டி பெரிய அளவுக்கு யாரும், எதுவும் இவற்றில் கவனம் செலுத்தவில்லை. இந்த விஷயங்களைக் குறித்து இப்போது தான் ஒரு விழிப்புணர்வு வந்து கொண்டிருக்கிறது.
உயிர்ச்சங்கிலியில் அலட்சியப்படுத்தப்பட்ட அருவருப்படைந்த பூச்சிகளைப் பற்றி பெரியவர்களான நமக்கே அவ்வளவாகத் தெரியாதபோது சிறார்களுக்கு என்ன தெரியும்?
சூழலியல்-காட்டுயிர் புகைப்படக்கலைஞர் சண்முகானந்தம் எழுதியுள்ள பூச்சிகள் ஒரு அறிமுகம் என்ற புத்தகம் சிறார்களுக்கு மிகச்சிறந்த அறிமுகமாகும். பூச்சிகளின் புகைப்படங்களுடன் அவற்றின் உருவம், நிறம், வாழ்விடம், சூழலியலில் அதன் பங்கு என்று ரத்தினச்சுருக்கமாக, எளிய மொழியில் சொல்லியிருக்கிறார். குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோரும் வாசிக்க வேண்டிய நூல்.
சமூகத்தில் மட்டுமல்ல இயற்கையிலும் பன்மைத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்க கோரும் நூல்.
இந்த நூலுக்குக்கிடைக்கும் வரவேற்பு நாம் சூழலியல் குறித்து எவ்வளவு அக்கறையோடு இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும். மேலும் மேலும் இது மாதிரியான நூல்கள் வெளிவர உதவியாக இருக்கும்.
வாழ்த்துக்கள் சண்முகானந்தம்!
வெளியீடு வானம் பதிப்பகம்
விலை-ரூ60/

சுண்டைக்காய் இளவரசன்

 சுண்டைக்காய் இளவரசன்


சிறார் இலக்கியம்

 பதிப்பக வெளியீடான யெஸ்.பாலபாரதியின் சுண்டைக்காய் இளவரசன் வாசித்தேன். என் பாலியகாலத்தில் அம்புலிமாமா வாசித்த உணர்வு ஏற்பட்டது. புனைவின் சாத்தியங்களை குழந்தைகளின் மனங்கவரும் வண்ணம் பழமையும் புதுமையும் இணைந்த கதை சொல்லலில் அழகாகப்பின்னியிருக்கிறார் யெஸ்.பாலபாரதி. கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அவ்வளவு விறுவிறுப்பு. கதையோட்டத்தில் வாழ்வின் விழுமியங்களை சிறார் மனதில் பதியும் வண்ணம் அழகாக நெய்திருக்கிறார். கண்கவரும் ஓவியங்களும், புத்தகத்தயாரிப்பும் மனதைக் கொள்ளை கொள்கிறது. தமிழில் சிறார் இலக்கியத்தில் மிக முக்கியமான இடத்தை சுண்டைக்காய் இளவரசன் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் யெஸ்.பாலபாரதி!
வெளியீடு - வானம் பதிப்பகம்
விலை-ரூ60/

காணாமல் போன சிப்பாய்

சிறார் இலக்கியம்
காணாமல் போன சிப்பாய்
சிறார் இலக்கியக்கதையாடல்கள் பெரும்பாலும் ஒரே ஒரு ஊரிலே என்கிற பாணியில் இருக்கும். அதுவும் படர்க்கையிலேயே கதைகள் சொல்லப்படும். இதற்குள் பலவகைமைகள் உண்டு என்றாலும் முதல் முறையாக சிறார் இலக்கியக் கதையாடல் ஒரு புதிய வகைமையை எதிர்கொள்கிறது. அருகில் அமர்ந்து ஒரு குழந்தையிடம் பேசுகிற பாணியிலான கதை சொல்லும் முறை வாசிப்பவர்களிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. விஜயபாஸ்கர் விஜய் தன் மகளுக்குச் சொன்ன கதைகள்.
எளிமையான மொழி என்றாலும் கதைகளில் சிக்கலான பல விஷயங்களைக் கையாள்கிறார். அவர் முக்கியமான அறமதிப்பீடுகளை அதுவும் அறிவியல்பூர்வமான பகுத்தறிவு பூர்வமான நவீன உலகத்தின் மதிப்பீடுகளை அழகாக எல்லோருக்கும் புரிகிறமாதிரி சொல்கிறார். சொல்கிற கதைகளின் பன்முகத்தன்மை வாசிக்கும்போது ஒரு புதிய அநுபவத்தைக் கொடுக்கிறது. இந்த நூலை வாசிக்கும் பெற்றோர்கள் இதைப்போன்ற கதைகளை தங்கள் குழந்தைகளுக்கும் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. அது தான் இந்த நூலின் வெற்றி.
காணாமல் போன சிப்பாய் சிறார் இலக்கியத்துக்கு புதிய அணிகலன். விஜயபாஸ்கர் விஜய் மிக முக்கியமான வரவு. வாழ்த்துக்கள்!
வெளியீடு- வானம்
விலை ரூ50/

Tuesday 14 February 2017

வாழ்வுத்தருணங்களின் ரசவாதக்கலை

வாழ்வுத்தருணங்களின் ரசவாதக்கலை
உதயசங்கர்
கலை புனைவின் வண்ணங்களால் தீட்டப்படுகிற ஓவியம். புனைவோ வாழ்க்கை நதியில் அடியில் உருண்டோடிக்கொண்டிருக்கும் கூழாங்கற்களைப் போல உருவங்களையும் வண்ணங்களையும் விதவிதமாய் மாற்றிக் கொள்ளும் வல்லமை கொண்டது. கலைஞன் சதாஅலையடிக்கும் வாழ்வின் கரையிலிருந்து கொண்டு உருண்டு வரும் புனைவின் வழி கலையை உருவாக்கத் தன்னையே அர்ப்பணிப்பவன். எல்லாக்கலைகளுக்கும் வாழ்க்கை தான் உயிரூட்டுகிறது. வாழ்வின் பிம்பங்களை வைத்து பொம்மலாட்டக்கலைஞனைப் போலவோ, தோற்பாவைக்கூத்துக் கலைஞனைப் போலவோ வாசகன் முன்னால் விளையாடுகிறான். பல நேரங்களில் கலைஞன் வெற்றி பெறுகிறான். சில நேரங்களில் தோல்வியும் அடைகிறான். கலை அத்தனை எளிதானதல்ல. உருட்டுகிற தாயக்கட்டைகளில் எப்போது தாயம் விழுமென்றோ எப்போது விருத்தம் விழுமென்றோ யாரால் சொல்ல முடியும் சகுனியைத் தவிர? சூதாட்டத்தில் அடுத்து வரப்போகிற சீட்டை வைத்துத் தான் வெற்றி அல்லது தோல்வி என்னும்போது வருகிற சீட்டை உங்களால் முன்னுணர முடியுமா? அப்படித்தான் கலையும். கலையின் விதிகள் அனைத்தும் அறிந்தவராக இருந்தாலும் கலையின் துடிப்பு அந்தந்தக் கணத்திற்கானது. அந்தக்கணத்தின் உயிர்த்துடிப்பை கலைஞன் உணரும்போதே கலை மெல்ல உயிர்க்கத் தொடங்குகிறது.
வாழ்க்கை தருணங்களால் ஆனது. தருணங்களோ மனிதர்களின் உணர்ச்சிகளால் நெய்யப்படுகின்றவை. உணர்ச்சிகளைத் தீர்மானிக்க மனிதர்களின் வாழ்நிலை முன்னால் வருகிறது. வாழ்நிலையோ சமத்துவமற்றதாக, சமவாய்ப்புகளற்றதாக, இருக்கிறது. இத்தகைய சூழலில் ஒரு கலைஞன் தன்னைச்சுற்றிலும் நடக்கின்ற சம்பவங்கள், அநுபவங்கள், கேள்விப்பட்டவைகள், என்று எல்லாவற்றினூடும் தன் கலைப்பார்வையை ஊடுருவச் செய்கிறான். அந்த ஊடுருவலிலிருந்து நம்முன்னால் சில காட்சிச்சித்திரங்களைச் செதுக்கி முன்னால் வைக்கிறான். நாம் அதை வாசிக்கும்போது அந்த அநுபவங்கள் தங்களின் மீதே மாயஒளியை வீசி துலங்கச் செய்கின்றன. கலையின் ஒளிபட்டதுமே வாழ்வின் முழுமை நம்முன்னால் விசுவரூபம் கொள்கிறது. வாசகன் தன்னை அறிகிறான். வாழ்வை அறிகிறான்.
தமிழின் மிகச்சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான ம.காமுத்துரையின் கதைகள் தனித்துவமானவை. வாழ்வை அதன் போக்கில் யதார்த்தமாக காட்டுபவை. இந்தத் தொகுப்பில் உள்ள பதினைந்து கதைகளில் வருகிற காமுத்துரையின் கதைமாந்தர்கள் சாதாரண எளிய மனிதர்கள். சிக்குப்பிடித்த வாழ்க்கையில் சண்டையும் சச்சரவுமாய், கண்டும் காணாமலும், உண்டும் உண்ணாமலும், அன்றாடங்களைக் கடத்துகிற சாமானியர்கள். அவர்களுடைய வாழ்வில் உன்னதங்களைத் தேடி அலைபவர்களில்லை. அதற்கு நேரமுமில்லை.. விடிந்தும் அடைந்தும் சச்சரவிட்டுக் கொண்டே வாழும் வாழ்க்கையில் எங்கே போய் தேட முடியும்? ஆனால் அவர்களே இந்த அவலமான வாழ்க்கையில் உன்னதமானவர்களாக சில கணங்களேனும் மாறி விடுகிறார்கள். அந்தக் கணங்களையே காமுத்துரை எனும் கலைஞன் கச்சிதமாகக் கைப்பற்றி தன் கலையின் ரசவாதத்தால் மெருகேற்றி நம்முன் வைக்கிறார்.
” அந்தராத்மாவின் ஆட்டத்தில் “ வயிற்றுப்பிழைப்புக்காக அந்தரத்தில் கயிற்றில் நடக்கும் கழைகூத்தாடி சிறுமியைப் பார்க்கும் பெருசு தன் வாழ்க்கையை, பேரன் பேத்திகளை நினைத்துப்பார்க்கிறார் என்பதோடு கதை முடிந்திருந்தால் சாதாரணக்கதையாகிருக்கும். கயிற்றில் நடந்த சிறுமி தாத்தா என்று தட்டேந்தி வந்து நின்றபோது அந்தக் குழந்தையை தன் பேத்தியாக நினைத்துத் தூக்கிக் கொண்டாடுகிறாரே. வாழ்க்கை கசடுகளை மட்டுமல்ல கவிதைகளையும் வைத்திருக்கிறது. ” ஆறோட்டம் ” மனைவி இறந்தபிறகு வயதான ஆண்கள் வாழ்கின்ற தனிமைவாழ்க்கையை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறது. யேளா என்ற அந்த ஒற்றைச் சொல்லில் இருவரின் தாம்பத்திய வாழ்க்கை விரிகிறது. தமிழ்ச்சிறுகதைகளில் இந்தக் கதை தனித்துவமானது. ஒரு தெருவில் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் பைத்தியக்காரனின் உடல்மொழி, தெருக்காரர்களின் அன்றாட வாழ்க்கையில் அவன் வலுக்கட்டாயமாக நுழைகிற விசித்திரம். ஒருவகையில் இந்தக்கதை வேறொரு கதையாகவும் வாசிப்பில் மாறும் என்றே தோன்றுகிறது. இருள்விலக்கத்தில் வருகிற கிழவி மருமகள் விட்டு விட்டுப்போன குழந்தைகளை வைத்துக் கொண்டு குடிகாரமகனோடு மல்லுக்கட்டுகிறாள். எப்படியாவது தன்னுடைய மகனை பேரக்குழந்தைகளை கடைத்தேற்றிவிட அவள் படுகிற பிரயத்தனம் எளிய மக்களின் பிடிவாதமான போராட்டத்திற்கு நல்ல எடுத்துக்காட்டான கதை. கடை கதையில் அன்றாட கடை வியாபாரம் செய்கிற சாதாரண மனிதர்களின் பாடு எத்தகையது எப்படியெல்லாம் நயந்து, மிரட்டி உருட்டி நடக்க வேண்டியுள்ளது. எல்லாம் பிழைப்புக்காக அதுவும் கடைக்காரர் கடைசியில் குரல் உடையும்போது நமக்கு மனம் நெகிழ்கிறது. வாழ்ந்து கெட்ட குடும்பத்துப்பெண் நகரத்தில்போய் ஆண்களோடு சமமாக வேலை பார்க்கக் கூச்சப்பட்டு கிராமத்திலிருக்கும் சிறிய தேநீர்க்கடையில் வேலை கேட்டு நிற்பதுவும் மறுநாள் வேலைகிடைக்குமா கிடைக்காதா என்ற நிச்சயமில்லாமல் அவள் நிற்பதுவுமாக கருப்புக்காப்பி கதை பூரணமடைகிறது.
சின்ன விசயங்கள் பெரிய சங்கதிகள் என்ற கதையிலும் யாரும் பேசாப்பொருளைப் பேசியிருக்கிறார் காமுத்துரை. வயதானால் காமம் இருக்கக்கூடாது என்ற சிந்தனை மலிந்த சமூகத்தில் வயதானவர்கள் இரண்டுபேர் ஓடிப்போய் விடுகிற சம்பவத்தின் மூலம் விவாதத்திற்குள்ளாக்குகிறார். இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கதையாக உருவாகியிருக்கிறது. வீட்டிலேயே சிறுகடை போட்டு முன்னேறி விடலாம் என்று முனைகிற குடும்பத்தின் கதை தான் தீராக்கடன். உரையாடலிலேயே கதையை நகர்த்துகிறார் காமுத்துரை. மட்டன் பிரியாணியும் மாட்னி ஷோவும் என்ற கதை சமகால இளைய சமுதாயத்தின் ஒரு பக்கத்தைக் காட்டுகிறது. மாறிவரும் மதிப்பீடுகள் குறித்த அதிர்ச்சியை இந்தக் கதையளிக்கிறது.
எல்லாக்கதைகளைப் பற்றியும் பேசுவதை விட காமுத்துரையின் கலை பற்றி பேசுவது உகந்ததாக இருக்கும். வாழ்வின் ஓட்டத்திலிருந்து ஒரு துண்டை எடுத்து நம்முன் வைக்கிறார் காமுத்துரை. அதில் அவர் தலையீடு செய்வதில்லை அல்லது அவருடைய தலையீடு நமக்குத் தெரியாமலிருக்க மாயாஜாலம் செய்கிறார். பக்கம் பக்கமாக விவரணைகளின் மூலம் கதை சொல்லும் காலத்தில் உரையாடல் மூலமாக மட்டுமே கதை சொல்கிறார். தேவைப்படும் இடங்களில் மட்டுமே விவரணை செய்கிறார். உரையாடல் மூலமாக கதையை நகர்த்திச் செல்வதில் சமீபகாலத்தில் மிகச்சிறந்த சிறுகதையாளராக காமுத்துரையே திகழ்கிறார். அனைத்துக் கதாபாத்திரங்களும் உரையாடல்வழி வெளிச்சம் பெறுகிறார்கள். தங்களுடைய தனித்துவமான அடையாளங்களை உரையாடல்கள் மூலமாகவே பெறுகிறார்கள். உரையாடல்கள் மிக இயல்பாக இருக்கின்றன. இப்படித்தான் பேசியிருக்க முடியும் என்பது போல. நிறையப் பேசுகிறார்கள். பேச்சின் மூலம் எல்லாப்பிரச்னைகளையும் தீர்த்து விடலாம் என்பது போல பேசுகிறார்கள். பேச்சின் மூலம் தங்களுடைய வாழ்க்கையை மாற்றிவிட யத்தனம் கொண்டவர்களைப் போலப் பேசுகிறார்கள். சாரமாகச் சொல்வதானால் காமுத்துரை இந்த வாழ்வின் நீடித்த கணங்களை அல்லது தருணங்களைக் விவரிக்கிறார். காட்சிப்படுத்துகிறார்  அப்படிக் காட்சிப்படுத்தும்போது அவர் எங்கும் தன்னைக் காட்டிக் கொள்வதில்லை. எதிர் எதிரான கருத்துக்களையும் பேச வைக்கிறார். திரைக்குப் பின்னால் இருக்கிறாரோ என்று தேடிப் போனால் அங்கும் இல்லை. கதாபாத்திரங்கள் சுயமாக இயங்குவது போலத்தான் தெரிகிறது. அப்படியானால் காமுத்துரை எங்கே? அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவர் முன்வைக்கும் கோணத்தில், கதாபாத்திரங்களில், உரையாடல்களில், கதைகளின் தொடக்க வரிகளில், முத்தாய்ப்பான முடிவு வரிகளில் என எங்கும் நிறைந்திருக்கிறார். யாரும் அவ்வளவு சுலபமாய் கண்டு பிடிக்க முடியாதபடி. ஒளிந்து கொண்டிருக்கிறார்.
கலையின் விசித்திரங்களை கண்டு வியந்தபடி… மீண்டும் மீண்டும் கதாசாகரத்தில் முத்துக்குளித்தபடி…. மகத்தான கலைஞன் காமுத்துரை..இந்தக் கதைகளை வாசிக்கும் நீங்களும் உணர்வீர்கள்!
……..

தீபாவளிக்கடவுளின் அருள்

தீபாவளிக்கடவுளின் அருள்

உதயசங்கர்
60-70 களில் கோவில்பட்டி ஒரு சிறிய நகரம். கோவில்பட்டியில் இரண்டு பெரிய ஸ்பின்னிங் மில்கள் இருந்தன. என்னுடைய அப்பா ஒரு மில்லில் வேலை பார்த்தார். இரண்டிலும் குறைந்தது ஒரு ஐயாயிரம் தொழிலாளிகள் வேலை பார்த்தனர். செப்டம்பர் மாதம் முடிந்தவுடனேயே ஊருக்குள் மில்வேலைக்காரர்களை யார் பார்த்தாலும் என்ன தீபாவளி போனஸ் எப்போ? என்பது மட்டும் தான் கேள்வியாக இருக்கும். போதாத குறைக்கு சிவகாசிக்கு அடுத்தபடியாக தீப்பெட்டியாபீசுகளும், வேட்டாபீசுகளும் அதிகமாக இருந்த காலம். மில் போனசைத்தான் பஜாரில் இருக்கிற பெரிய கடைக்காரர்கள் எதிர்பார்த்திருப்பார்கள். தீப்பெட்டியாபீசு, வேட்டாபீசு போனஸ் எல்லாம் நடுத்தர, பிளாட்பாரக்கடைக்காரர்களுக்கு விட்டு விடுவார்கள். அமந்து அங்கொன்றும் இங்கொன்றும் ஆளரவத்துடன் வெறிச்சோடிப்போய் இருக்கும் கடைவீதி மில்லில் போனஸ் போட்டாச்சு என்ற மூன்று வார்த்தைகளில் ஏதோ மாயாஜாலம் நடந்த மாதிரி மாறிவிடும். கூட்டம்கூட்டமாக மக்கள் அலைமோதுவார்கள். சிறிசுகள், பெரிசுகள், குமருகள், அவுகளைப்பாக்கதுக்கு குமரன்கள் என்று கடைவீதி மக்கள் திரளாகிவிடும். மகிழ்ச்சி, கோபம், வசவு, வெட்கம், சிரிப்பு, அழுகை, பரிதவிப்பு, என்று மனித உணர்வுகளின் அத்தனை கலவையும் பஜாரில் கொட்டிக்கிடக்கும்.
தீபாவளி, பொங்கல், என்றால் மட்டும் தான் புதுச்சட்டை, டவுசர், பெரும்பாலும் அந்தப்புதுச்சட்டையும், டவுசரும், பள்ளிக்கூட சீருடையாகவே தான் வீட்டில் எடுப்பார்கள். ஏற்கனவே இருக்கிற சீருடை கந்தலாகி தன் உயிரை விடுகிறாப்பில் இருக்கிற போது தான் அடுத்த புதுத்துணி கிடைக்கும். அதுவரை இரண்டு பக்கமும் குண்டியில் கிழிந்த பித்தான் இல்லாத சாயம்போன அரணாக்கயித்தில் தொங்கிக்கொண்டு மானத்தைக் காப்பாத்திக் கொண்டிருக்கிற டவுசரும், சட்டைப்பை கிழிந்து, வெள்ளைநிறம் தன் குணத்தை மாற்றி அழுக்கு நிறத்தில் ஜொலிக்க பித்தான்கள் இல்லாமல் சட்டையில் ஏதோ ஒரு இடத்தில் குத்தியிருந்த ஊக்கு உடம்பையே கண்காட்சியாகக் காட்டும் சட்டையும் தான். பத்து நாளுக்கு ஒருமுறை காதியில் வாங்கிய மஞ்சள்நிற பார்சோப்பினால் சட்டைக்கும் டவுசருக்கும் ஸ்னானம் நடக்கும். வேறுவழி கிடையாது. அவ்வளவு தண்ணீர் கஷ்டம். எட்டாவது வகுப்பு தாண்டுகிறவரை நாங்கள் யாரும் சட்டை, டவுசரைப்பத்தி கவலைப்படுவதில்லை.
எட்டாவது வகுப்பு தாண்டிய பிறகு தான் துணி எடுத்து தைக்கக்கொடுக்கிற வழக்கம் வந்தது. முதலில் அப்பா வழக்கமாக தன்னுடைய சட்டைகளை அவருடைய நண்பரான  கம்யூனிஸ்ட்தையல்காரரிடம் தான் கொடுப்பார். தோழர் எத்தனை மாதம் கழித்துக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். முதலில் நானும் அவரிடமே கொடுத்தேன். அவர் அளவு எல்லாம் எனக்கு எடுத்ததில்லை. சீத்தக்குஞ்சி மாதிரி இருந்த எனக்கு எதுக்கு அளவு என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அது எனக்கு கௌரவக்குறைச்சலாக இருந்தது. பின்னே புதுத்துணியை தையல்காரர் மஞ்சள்பையிலிருந்து எடுத்து அவர் வைத்திருக்கும் இஞ்ச் டேப்பினால் அளந்து நம்மை ஒரு பார்வை மேலும் கீழும் பார்த்து, டேப்பினால் சட்டைக்கும் டவுசருக்கும் அளவு எடுத்து சட்டைப்பை ஒண்ணு போதுமா? இரண்டு வேணுமா? என்று கேட்க வேண்டும். உடனே இரண்டு பை, தோள்பட்டையில் இரண்டுபக்கமும் பிளாப்புகள் சட்டை பின்னால் ரவுண்டாய் வரணும். டவுசரும் கொஞ்ச டைட்டாய் இடுப்பில் பெல்ட் லூப்புகள் வைக்க வேண்டும். இப்படி இல்லாத நொரநாட்டியம் எல்லாம் சொல்லிட்டு வந்தால் தான் திருப்தி.
அதனால் அழுது புரண்டு என்னுடைய சட்டை, டவுசரை மட்டும் கிருஷ்ணன் கோவில் சத்திரத்து வளாகத்திலிருந்த ராஜ் டெய்லர்ஸ் கடையில் கொடுத்தேன். ஓனர் கம் டெய்லர் இளைஞர். எப்போதும் சிரித்தமுகம். என்னைச் சுத்திச் சுத்தி வந்து சட்டை, டவுசருக்கு அளவு எடுத்தார். ஒரு கொயர் நோட்டில் என்னவோ நம்பர்களை எழுதினார். பெயரைக் கேட்டு எழுதிக்கொண்டார். ரெம்பப்பெருமையாக இருந்தது. அப்புறம் போட்டாரே ஒரு குண்டை. ” தம்பி..தீவாளிக்கு முதநா ராத்திரி எட்டு மணிக்கு வந்து வாங்கிக்கோ “ அதுவரை இருந்த கம்பீரம் போய்விட்டது. “ அண்ணே..அண்ணே.. சீக்கிரம் கொடுங்கண்ணே.. தீபாவளிக்கு ஊருக்கு போய்ருவம்ணே..” என்று வாய்க்கு வந்ததைச் சொல்லிப்பார்த்தேன். அவர் தெளிவாய் சொல்லி விட்டார். “ துணி ஏகப்பட்டது கெடக்கு.. எப்படி முடிக்கப்போறேன்னு தெரியல.. தம்பி தெரிஞ்ச பையனா இருக்கேன்னு தான் வாங்குறேன்…” என்று பிகு பண்ணினார். என்ன செய்ய முடியும்? ஒருவேளை முடியாதுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டால்? “ அண்ணே தீவாளி முதநா கரெக்டா எட்டு மணிக்கு வந்திருவேன்..ரெடியா வைச்சிருங்கண்ணே..” என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். தீபாவளி வர இருந்த ஒரு வாரமும் இதே சிந்தனை தான்.
அங்கே போவதற்கு எந்த முகாந்திரமும் இல்லையென்றாலும் சும்மா கிருஷ்ணன் கோவில் சத்திரத்து வளாகத்தின் வழியாகப்போவேன். ராஜ் டெய்லர்ஸில் வேலை ரெம்பப்பிசியாக நடந்து கொண்டிருக்கும். அந்தக்கடை ஓனர் என்னைப்பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அவருடைய வேலையிலேயே கவனமாக இருப்பார். அப்படியே ஏகதேசமாக என்னைப் பார்த்தாலும் சிரித்த முகத்தினால் சிரித்தார். எனக்கு அப்பாடா ஞாபகம் வந்துரும் என்று நினைத்துக் கொண்டேன். இப்படியே தீபாவளிக்கு முதல்நாள் மதியத்துக்கு மேல் ஒரு பரபரப்பு வந்து விட்டது. எடுத்துக் கொடுத்த துணி எப்படி சட்டையாக, டவுசராக மாறுது? அப்படி மாறிய துணியின் கௌரவமே உயர்ந்து விடுமே. எப்பேர்ப்பட்ட கலை! எனக்கு என்னுடைய துணிகளின் உருமாற்றத்தை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஏழு,ஏழரைக்கெல்லாம் கிருஷ்ணன் கோவில் சத்திரத்து வளாகத்துக்கு அருகில் போய்விட்டேன். கோவிலுக்கு முன்னால் தெருவிளக்கு வெளிச்சத்தில் பம்பரக்குத்து விளையாடிக் கொண்டிருந்த பையன்களை வேடிக்கை பார்த்தேன். பின்னர் நானாக காலத்தைக் கணித்து கடைக்கு முன்னால் போய் நின்றேன். பார்த்தால் என்னை மாதிரி ஒரு பத்துப்பேர் கடையை அடைச்ச மாதிரி அங்கே நின்று கொண்டிருந்தார்கள். தையல் மெஷின்களின் சத்தம் வேகமாகக் கேட்டது. நான் முண்டி முன்னால் போய் டெய்லர் கண்ணில் படுகிற மாதிரி நின்றேன். ஆளாளுக்கு கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர் தையல் மிஷினில் வேலை செய்து கொண்டே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டைம் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அப்போதே நம்பிக்கை குறைந்து விட்டது. என்றாலும் முற்றிலும் போய்விடவில்லை. எப்படியும் நமக்கு தைச்சி வச்சிருப்பார், நாம தான் ஒரு வாரத்துக்கு முன்னால் கொடுத்திருக்கிறோமே என்ற என் எண்ணத்தை நசுக்கிக் கொண்டு ஒரு குரல் கேட்டது. பதினைஞ்சி நாளைக்கு முன்னால கொடுத்தது… ” அப்பவே முடியாதுன்னு சொல்லியிருந்தா வேற டெய்லரைப்பாத்திருப்பம்ல. “ அவ்வளவு தான் எனக்கு அழுகை வந்துவிடும் போல இருந்தது. நான் அழுகிற குரலில், “ அண்ணே என்னோட துணி தைச்சாச்சா? “ என்று கேட்டேன். அவர் “ என்ன துணி? “ என்றார். “ சுமதி என் சுந்தரி ஆரஞ்சு கலர் கட்டம்போட்ட சட்டை, ஊதாக்கலர் டவுசர்,..” என்று அவசர அவசரமாகச் சொன்னேன். அவர் காஜா போட்டுக்கொண்டிருந்த பையனிடம், “ டேய் தம்பி சொல்ற துணியைப் பார்ரா..” என்று சொன்னார். சில நிமிடங்களில் அப்படியே அலுங்காம குலுங்காம என் துணியைத் தூக்கிக்கிட்டு வந்து எங்கிட்டே காண்பித்து ” இதா “ என்றான். நான் தலையாட்டினேன். எனக்கு அழுகை வரத்தொடங்கியது.
” எப்பண்ணே கிடைக்கும் ? “ என்று கேட்டேன். அப்போது அவர் எனக்கு கடவுளாகத்தெரிந்தார். அவருடைய ஒரு வார்த்தையில் தான் என்னுடைய எதிர்காலம் இருக்கப்போவதைப்போல அவர் முகத்தையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் இறுக்கமான முகத்திலிருந்த வாயைத் திறந்து, “ காலையில் ஆறு மணிக்கு வந்து வாங்கிக்கோ “ என்று சொன்னார். நான் எதுவும் பேசாமல் அழுகையை அடக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து என் அம்மாவிடம் சொன்னேன். அவ்வளவு தான் என்னுடைய என்னை வசவுக்காடு உரித்து விட்டார்கள். அத்துடன் என்னைக் கூட்டிக்கொண்டு ராஜ் டெய்லர்ஸ் கடைக்குப் போய் அந்த டெய்லருக்கு வசவு. அவ்வளவு தான். டெய்லர் அண்ணன் பயந்து விட்டார். எல்லாவேலையையும் நிறுத்தி விட்டு என் துணியை எடுத்து வெட்ட ஆரம்பித்தார். அப்படியே,” எக்கா நீங்க வீட்டுக்குப்போங்க..தம்பி இருக்கட்டும்..கொடுத்து விடுதேன்..” என்று சொல்லி என்னுடைய அம்மாவை அனுப்பி வைத்தார். அதன் பிறகு இரண்டு மணிநேரம் இருந்து வாங்கிட்டு தான் வந்தேன்.. புது சட்டை டவுசரை வாங்கிட்டு வீட்டுக்கு வரும்போது அம்மா பலகாரம் சுட அடுப்பில் சட்டியைப் போட்டிருந்தாள். சும்மா சொல்லக்கூடாது. அவசர அவசரமாகத் தைத்திருந்தாலும் அம்சமாக தைத்திருந்தார் அந்த அண்ணன். அதற்குப் பிறகு கல்லூரி முடியும் வரை அவரிடம் தான் என்னுடைய துணிகளைத் தைத்தேன். என்றாலும் அந்தத் தீபாவளிக்கு நான் அடைந்த பதட்டமும் கிடைத்தபிறகு நான் அடைந்த மகிழ்ச்சியும் இன்று வரை அடைந்ததில்லை.

இது ஆயத்த ஆடைகளின் காலம். மொத்த மனிதர்களையே அளவுகளால் பிரித்து ஏற்கனவே தைக்கப்பட்ட துணிகளுக்குள் மனிதர்கள் புகுந்து கொள்கிற காலம். ஆனால் ஒவ்வொருவருடைய தனித்துவமான உடல் அளவுகளுக்கு ஏற்ப அளந்து அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி ஸ்டைலில் தைத்து கொடுக்கிற தையல் கலைஞர்களை மட்டுமல்ல..அவர்களுக்கும் சமூகத்துக்கும் இடையில் இருந்த உறவையும் கூட ஆயத்த ஆடைகள் அருகிப்போகச் செய்து விட்டன. இப்போதும் ராஜ் அண்ணன் இருக்கிறார். பழைய கிழிசல்களைத் தைத்துக் கொண்டு..பழைய துணிகளை ஆல்டர் செய்து கொண்டிருக்கிறார். அவர் கண்களில் பழைய கனவுகளின் சாயம் நிறமிழந்து விட்டது. அவரும் ஒரு காலத்தில் கலைஞனாக இருந்திருக்கிறார் என்ற சாயல் அவர் பழைய துணிகளிலும் செய்கிற ஜாலங்களில் தெரியும்.
நன்றி- அந்திமழை

வசீகரிக்கும் வனத்தின் அழகு

வசீகரிக்கும் வனத்தின் அழகு ……..உதயசங்கர் 
வாழ்வின் அர்த்தபோதம் கவிதையைப் போல அத்தனை செறிவாக வேறெந்த
படைப்புகளிலும் வெளிப்படுவதில்லை. மொழி தன்னை அலங்கரித்துக்கொள்ளவும்
அம்மணமாகவும் ஒரே நேரத்தில் கவிதைகளில் மட்டுமே காட்சியளிக்கிறது.
கவிதையில் ஒரு சொல் வெறும் ஒரு சொல்லல்ல. அது மனிதகுலத்தின் பண்பாட்டு
வரலாறு. மனிதகுலத்தின் ஞானச்செருக்கு. மனிதகுலத்தின் அழகியல் செயல்பாடு.
மனிதகுலத்தின் அரசியல் இயக்கம். அதனால் கவிதையில் மொழி தன் அர்த்தங்களின்
உச்சத்திற்கும் அரத்தமின்மையின் அதலபாதாளத்திற்கும் இடையே ஊஞ்சல்
ஆடுகிறது. அந்த பயங்கர ஊஞ்சலில் கவிஞன் தன் வாழ்வநுபவங்களை, அதன்
தரிசனங்களை, கவிதைகளால் ஆட்டிவிக்கிறான்.


ஈராயிரம் வருடங்களுக்கு மேலாக தமிழ் கவிதைகள்  காலதேச வர்த்தமானங்களுக்கு
ஏற்பவும், அரசியல், பொருளாதார பண்பாட்டுச் சூழல் மாற்றங்களுக்கு ஏற்பவும்
 
தன்னை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது.   நவநவமான கவிதைகள். புதிய புதிய
கவிஞர்கள்  தமிழ்மொழியைப் புதுக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். மொழியின்
பண்பாட்டு மரபையும் நவீன மரபையும் சமூக விமரிசன மரபையும் இணைத்து ஒரு
புதியகவிதை மொழியை உருவாக்குகிறார்கள். அந்த அணிவரிசையில் ஆனந்தனின்
யுகங்களின் புளிப்பு நாவுகள் பொருத்தமாக இணந்து கொள்கிறது. 
இத்தொகுப்பு  நமது மண்ணின்  வாழ்க்கையான  விவசாய  வாழ்க்கையின்
பலமுகங்களை மிகத் தீவிரமாகப்  பேசுகிறது. அக் கவிதைகளில்
உள்ளடங்கியிருக்கிற  நோஸ்டால்ஜியா  வில்  நீள்கிற ஏக்கம் நம்மையும்
பீடிக்கிறதுகொழுவு எருத்து கவிதையில் மரபு நவீனத்தோடு முரண்படுகிற
புள்ளி கூராகக் குத்துகிறது. மின்னிக்காய்களும் மினுக்காட்டான்களும்
கவிதையில் விவசாய விழுமியங்கள் நவீனத்தின் தொடையிடுக்குகளில்
வழிந்தோடுகிற அவலம்.   அம்மாவின் மருந்துச்சீட்டில் நீர்க்கருவைகள்
இயற்கையைத் தின்று தீர்க்கிறது. பல்லுயிர்ப் பெருக்கத்தை சிதைக்கும்
மனிதப் பெருங்காமத்தை விசாரணைக்கு உட்படுத்துகிறது  லேகிய வாய்.
யானைவால் மோதிரத்திற்குள்ளிருந்து பிளிறுகிறது ஒற்றையானையின் அவலக்குரல்.
அனைத்தும் மனித குலத் துயரத்தின் குரல்கள். எச்சரிக்கையின் குரல்கள்.


இயற்கையின் மீதான அவருடைய நேசமே அத்தனை வகையான மரங்களையும், செடிகளையும்
பூக்களையும், பறவைகளையும் கவிதைகளில் வாழ வைத்து கவிதைகளுக்கு சங்ககாலச்
சாயலைக் கொடுக்கிறது.


ஆனந்தனின் மொழிவளம் அதிசயப்பட வைக்கிறது. நான் கவிதை - அவள் வாசகி,
அம்மாக்களின் செவிப்பூக்கள், பிரபஞ்சி முலையூட்டுகிறாள், யுகங்களின்
புளிப்பு நாவுகள்  போன்ற பல கவிதைகளின் மொழிச்செறிவும் புனைவும்
படிமங்களும் அற்புதமானது.படிமங்களின் சுழல்பாதைக்குள் வாசகனைக் கைப்பிடித்துக் கூட்டிச்செல்லும்
கவிஞர்  சிறிது தூரத்திற்குப் பின் கையை விடுவது தெரியாமல் விட்டு
விடுகிறார். வரிகள் தோறும் முன்னேறி வாசிக்கிற நமக்கு படிமங்கள்
துலங்குகின்றன. கவித்துவத்தின் தரிசனம் தெரிகிறது. வேறு வேறு மாதிரியும்
வாசிக்க முடிகிறது. அந்தப் படிமச்சுழலிலிருந்து வெளியேறலாம் அல்லது
மீண்டும் மீண்டும் புதிய புதிய பாதைகளைக் கண்டுபிடித்துக்
கொண்டேயிருக்கலாம். மு.ஆனந்தன் இதை மிக லாவகமாகக் கையாள்கிறார்.திருமஞ்சனநீராட கவிதையில் வருகிற திரு மூன்று நான்கு வரிகளுக்குப்
பின்னால் த்வனி மாறிவிடுகிறது. ஆற்றில் இறங்கி  சிறுதேர் பருவத்து
சிறுவர்கள் கழித்த சிறுநீராக ஓடுகிற ஆற்றைக் கண்டு அதிர்ச்சியடைவது
தெய்வம் மட்டுமல்லமனிதப்பொங்கல் கவிதையில் மாட்டையும் மனிதர்களையும்
மாற்றிப்போட்டு சூது விளையாடுகிறார்.   இவரது சூது
விளையாட்டு/மேஜிக்/மாயாஜாலம் தீக்கூடு, கடவுளின் பத்தாம் அவதாரம்,
வேறென்ன வேண்டும், பகலதிகாரம், சொர்க்க ரத ஓட்டுனரின் பிரயத்தனம், நான்
சொல்வதெல்லாம் பொய் போன்ற கவிதைகளில் உச்சம் தொடுகிறது.


பல கவிதைகள் தமிழ்க் கவிதைவெளியில் புதிய தரிசனம். கபாலங்கள் எழுதச்சொன்ன
கவிதைகள், ஒரு உடலை வெண் துணியில் பொதிந்தளித்தல், ஆஞ்சியோ, பிரபஞ்சி
முலையூட்டுகிறாள், அப்பாக்களின் முலைகள், என் மகள் பெரியவளாகி போன்றவை
தமிழ்க் கவிதையின் புதிய குரல், புதிய பாடுபொருள், புதிய படிமங்கள். பால்
சுரக்காத அப்பாகளின் முலைகள், ஒரு சடலத்தைப் பொதிந்தளிக்கும் பிரேதப்
பரிசோதனை , ஆணுறை பாதுகாப்பற்ற பாலியல் தொழிலின் அவலம், ஆஞ்சியோ இருதய
சிகிச்சை குறித்தெல்லாம் இதுவரை தமிழ்க் கவிதை வந்துள்ளதா என்பது ஐயமே !


கவிதைகளில் உள்ள எள்ளல் கவிதைகளின் வாசிப்புத்தளத்தை உயர்த்துகின்றன.
சமூகத்தின் நோய்ப் படிமங்களை விமர்சிக்கிற  கவிதைகளும் வலிமை குன்றாமல்
எழுதப்பட்டிருக்கின்றனபொணந்தூக்கி சாமி, நாங்கள் பாராட்டப்படாத
குழந்தைகள், பதவிக்காய்ச்சல், மாறாத காரணமாய், மற்றவை நேரில்,
கன்னிமேரியின் தீட்டுத்துணிகள் போன்ற கவிதைகளின் குரல் நம் மனதை
அறுக்கும் கூராயுதங்கள்.


அப்பா என்றொரு மாவீரன்மாவீரனாக மட்டுமே வாழ்ந்து அப்பாவாக வாழமறந்த
சோகத்தைப் பேசுகிறது. முகமூடிகளை மாற்றி மாற்றி மாட்டித்திரிந்து இரவு
வீடு திரும்பும்  ஒருவன் தன் குழந்தைகளுக்கு அப்பாவாக வாழ இயலாத அப்பா
என்கிற முகமூடியின் துயரத்தை தூங்கு மூஞ்சி மரத்தில் அனாதையாய் தொங்க
விட்டுள்ளார்.   அப்பாவைப் பற்றிய பல கவிதைகளில் அப்பாவின் படிமங்கள்
வேறு வேறு மாதிரியாக புலப்படுகின்றனவேறு வேறு கவிதைகளில் வருகின்ற
அப்பாக்கள் வேறு வேறு உணர்வுகளைத் தாங்கி வேறு வேறு அப்பாக்களாக
வாழ்கிறார்கள்.   அதேபோல் ன்னுக்குட்டியும். அப்பாவின் மார்புகளில்
பாப்பி கிடைக்காமல் கிணுங்கும் ன்னுக்குட்டி வேறு கவிதையில்  அப்பாவின்
ஆயுட்கரம் பற்றி மார்கண்டேய நந்தவனத்திற்குள் ஆதுரமாய் அழைத்துச்
செல்கிறாள். தொகுப்பு முழுவதும் வாசகனையும்  வேறு வேறு  நந்தவனங்களுக்கு
அழைத்துச் சென்று கண்ணாமூச்சி விளையாடுகிறாள்ஆயாக்கடை ஓர்மையில்
பாலியகாலத்தின் ஊஞ்சல் ஆடிக்கொண்டேயிருக்கிறது.
எல்லாக்கவிதைகளைப் பற்றிய என்னுடைய ஊடாடல், வாசகர்களுக்கு இடையூறாக
இருக்கலாம் என்று அஞ்சுகிறேன். நல்ல, சிறந்த, மிகச்சிறந்த, கவிதைகள் என்ற
சான்றிதழ்கள் கவிதை குறித்த உங்கள் பார்வையை குறுக்கி விடக்கூடும்.
ஆனந்தனின் கவிதைகள் அனைத்துமே தன்னளவில் முழுமை பெற்ற, வாசகனின்
அக்கறையான வாசிப்பைக் கோருகின்ற கவிதைகள். அதோடு கவிதை என்னும் பிரதியின்
சிறப்பே அதன் பன்முக வாசிப்பு தான். உங்களுடைய அவதானத்தை நீங்கள்
கண்டுபிடிக்க நான் வழி விடலாம் என்று நினைக்கிறேன்.


கவிஞர். ஆனந்தனின்  யுகங்களின் புளிப்பு நாவுகள்  நூலிலுள்ள கவிதைகள்
மிகச்சிறந்த கவிதைக்காரனை அடையாளம் காட்டுகின்றன. கவிதை என்பது இயக்கம்.
முயற்சியில் தளர்ந்து கவிதை வேதாளத்தைத் தூக்கி எறிந்து விட்டு
ஓடிப்போகிறவர்களும் நிறைந்தது நமது கவிதையுலகம். ஆனந்தன் கவிதையை
இயக்கமாக மாற்றும்போது தமிழுக்கு இன்னுமொரு முக்கியமான கவிஞன் கிடைப்பான்
என்பதில் ஐயமில்லை.


முக்குளித்து இருளின் ஊடே மூச்சடக்கி மூழ்கி மூழ்கிமூழ்கிமு.ஆனந்தன்
இன்னும் வலிய முத்துக்களை எடுக்க வாழ்த்துக்கள் !