அநுபவங்களில் எழும்
சலனங்களின் கலை
உதயசங்கர்
வாழ்க்கை அநுபவங்களை ஒவ்வொரு மனிதனும் தன் பிறப்பிலிருந்து இறப்பு
வரை எதிர்கொள்ளவே செய்கிறான். அந்த அநுபவங்கள் அவனுக்குத்தரும் உணர்வுகளின் வழியாக
அவனுடைய மனம் என்ற அபூர்வமான ஒரு பொருள் உருவாகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக,
தனித்துவத்தோடு, மனம் விகசிக்கிறது. இந்த விகசிப்பின் வண்ணபேதங்களின் வழியே மனிதக்கதாபாத்திரங்கள்
தங்களை வெளிப்படுத்துகின்றன. அந்தக் கதாபாத்திரங்களின் உணர்ச்சிமயமான வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும்,
அர்த்தமற்றதாகவும், நிரந்தரமானதாகவும், நிரந்தரமின்மையோடும், உத்தரவாதத்தோடும், உத்தரவாதமில்லாமலும்,
சந்திர சூரியரைப்போல சந்தோஷஒளி வீசுவதாகவும், நீர்க்குமிழிகள் போல கணத்தில் தோன்றி
கணத்தில் மறையும் துக்கத்துடனும் மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
வாழ்வின் ஓட்டத்தோடு அதன் ஏற்ற இறக்கங்களோடு, எல்லோரும் ஓடிக் கொண்டிருக்க கலைஞனும்,
விஞ்ஞானியும் மட்டுமே இந்த வாழ்வின் புதிரை விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். விஞ்ஞானி
இந்தப் பிரபஞ்சத்தின், மானுட வாழ்வின் அனைத்து ஒழுங்குகளையும் புறவயமாக சோதனைகள் மூலம்
ஆராய்ந்து உண்மையைக் கண்டுகொள்ள முயற்சிக்கிறார் என்றால் பிரபஞ்சத்தின் , மானுடவாழ்வின்
ஒழுங்குகளை அகவயமாக கலையின் மூலமாக ஆராய்ந்து அதே உண்மையை கண்டுகொள்ள கலைஞன் முயற்சிக்கிறான்.
வாழ்வின் அர்த்தம் தேடும் இந்த முடிவிலாப்பயணம் தீராத தேடலோடு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
கலைஞன் வாழ்வின் அநுபவங்களை தன் கலையின் தீட்சண்யத்தில் விளங்கிக்
கொள்ளும் முயற்சிகளில் தனக்கான கலை வடிவங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். கலைஞனின் கலைக்கோட்பாடு, தத்துவார்த்த அரசியல் நிலைபாடு, கலை
அர்ப்பணிப்புணர்வு, கலைஞனின் உளவியல் நிலை, சூழல், எல்லாமும் அவனுடைய கலைப்படைப்புகளில்
தங்கள் செல்வாக்கைச் செலுத்தும். இதனாலேயே விதவிதமான மனிதர்களைப் போல விதவிதமான கலைப்படைப்புகள்
படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லாக்கலைப்படைப்புகளும் உண்மையை நோக்கிய பயணம்தான்.
தீராத பயணம்……
எழுத்தாளர் கமலாலயனின் தட்டுப்படாத காலடி என்ற இந்தச் சிறுகதைத்
தொகுப்பில் பதினாறு சிறுகதைகளும், ஒரு நீண்ட சிறுகதை/ குறுநாவலும் நிறைந்து ததும்பும்
மென்னலை போல நம்மை வருடிக் கொண்டேயிருக்கின்றன. வாழ்வின் உண்மைகளை ஆக்ரோஷமாய், அழுத்தமாய் சொல்ல
முனைவதில்லை கமலாலயனின் கதைகள். அதற்குப் பதில் ஒரு நெருங்கிய நண்பரின் தோள் மீது வாஞ்சையுடன்
கையைப் போட்டுக் கொண்டோ, மனதுக்கினிய காதலியின் அருகில் உட்கார்ந்து அவளுடைய கையை உள்ளங்கையில்
வைத்தபடி பேசிக் கொண்டிருக்கிற உணர்வையேத் தருகின்றன. கு.ப.ரா.வின் மென்மை இவருடைய
கதைகளில் உள்ளார்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. மிகப் பெரிய உண்மைகளையும்
மிக எளிமையாகக் கண்டு சொல்லும் கலை கமலாலயனுக்குக் கை வந்திருக்கிறது.
தலைப்புக் கதையான தட்டுப்படாத காலடி யில் கைக்கருகில் சொர்க்கம்
இருந்தாலும் அதை உணர முடிவதில்லை. ஆனால் அதே அநுபவத்தை பதினாறு பதினேழு மணி நேரம் பிரயாணம்
செய்தே எதிர்கொள்ள நேர்கிறது. அதையும் அந்தக் கதையில் வருகிற நந்தினியே உணரவைக்கிறாள்
என்பது எதேச்சையானதில்லை. பெண்களுக்குத் திருமணநாள் என்பது உணர்வு ரீதியாக அவர்களுக்கு
மிக முக்கியமான நாள். அன்று கணவனோடு இருப்பது, விஷேசமான சமையல், பரிசுப்பொருட்களைப்
பகிர்ந்து கொள்ளல், என்று பெண்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளில் ஒரு சிறப்புத்தன்மையை
உருவாக்கிக்கொள்கிறார்கள். புரிதல் கதையில் முதல் திருமணநாளன்றே தாமதமாக வருகிற கணவன்
தருகிற பரிசுப்பொருள் தருகிற கணநேர மகிழ்ச்சி, அடுத்தடுத்த திருமண நாட்களில் மங்கிய
ஒளி வீசுகிறது. அதைப் பற்றி சாந்திக்குப் புகார் இருக்கிறது. ஆனால் வெளியே சொல்லவில்லை.
அமைதியாக இருக்கிறாள். கணவனுக்கு இதைப் பற்றிய சுரணையில்லையோ என்று கூட நினைக்கிறாள்.
ஏழாவது திருமணநாளன்று கணவன் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தை வாசிப்பதன் மூலம் அவனுடைய
மனதைப் புரிய வைக்கிறான். அவள் இளகிப் போகிறாள். ஏக்கம், இயலாமை, பரிவு, அன்பு எல்லாம்
கலந்த உணர்ச்சி அவர்களைத் ததும்பச்செய்கிறது.
பற்றிக் கொள்ள கதையில், பேருந்தில்
பிரயாணிக்கும்போது கூட்ட நெரிசலில் ஏறி நிற்க இடமில்லாமல் வாசலுக்கருகில் நிற்கும்
சிறுமி எங்கே கீழே விழுந்து விடுவாளோ என்ற பதைபதைப்புடன் உட்கார்ந்திருக்கிற அவன்,
ஒரு சமயத்தில் அந்த அவஸ்தை தாளாமல் எழுந்து போய் அந்தச் சிறுமியை அழைத்து உள்ளே பாதுகாப்பான
இடத்தில் நிறுத்துகிறான். அவனுடைய பதைபதைப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. கதை முடிவில்
அவனுடைய ஆசுவாசம் அந்தச் சிறுமிக்குத் தெரிவதில்லை. அவள் விழித்துக் கொண்டே போகிறாள்.
குருவி மீது பச்சாதாபம் கொள்ளும்
அவன், குழந்தையை அடித்து விட்டு கண்ணாடியில் பூச்சாண்டியாய் தன்னையே உணரும் அவன், ஃபேக்டரியில்
ஃபைலிங்கினால் ஓட்டையான பேண்ட், சட்டைக்குப் பதில் போஸ்ட்மேன் யூனிஃபார்ம் உடையைப்
போட்டுக் கொண்டு போக அவனை போஸ்டலில் வேலை பார்ப்பதாக நினைத்து மகிழ்ச்சியுடன் பேசும் போஸ்ட்மேனைப் பார்த்துச் சிரிக்கும் அவன்,
எங்கோ பார்த்த ஒரு பெண் படும் துயரத்தைப் பற்றி கதை எழுதும் எழுத்தாளருக்கு வீட்டில்
தன் மனைவி படும் துயரம் தெரியவில்லை என்று உணரும் எழுத்தாளர், வேறு வழியில்லாமல் ஓசிக்கு
வாத்தியார் வேலை பார்க்கும் தியாகராஜனின் துயரம், என்ன முற்போக்காய் பேசினாலும் திருமணத்தில்
சாதி பார்க்கும் தந்தை, என்று மிக மிகச் சாதாரண மனிதர்களின் வாழ்வில் நிகழும் மிகச்
சாதாரண அநுபவங்களை தன் கலையால் அபூர்வமானதாக மாற்றியிருக்கிறார் கமலாலயன்.
.
பொதுவாக, கமலாலயனின் கதாபாத்திரங்கள்
வாழ்வின் நெருக்கடியில் நசுங்கி, எதிர்ப்பார்ப்பில் ஏமாந்து, ஏமாற்றத்தில் மனம் வாடி,
கணநேர உணர்ச்சிகளின் சுழலில் தங்களை இழக்கிறார்கள்.
ஆனால் எல்லோருமே அந்தந்த நிலையிலிருந்து மீண்டு விடத் தயாராகவே இருக்கிறார்கள். அனைவருமே
மென்மையான உள்ளம் கொண்டவர்கள் தான். தாங்கள் இப்படி மாறி விட்டோமே என்று உடனே உணர்ந்து
கொள்பவர்கள் தான். வெறுமனே வாழ்க்கை மீது மட்டும் பழி போடாமல் தங்களை மீளவும் உணர்கிறார்கள்.
அந்த வகையில் இந்தச் சாதாரண மனிதர்கள் அசாதாரணமான உயர்ந்தவர்களாகிறார்கள்.
கமலாலயனின் கதை உலகில், குடும்பத்தில்,
பெரும்பாலும் பெண்கள், ஆண்களை விட அதிகமாகப் பேசுகிறார்கள். கோபப்படுகிறார்கள், சிரிக்கிறார்கள்,
பரிவு கொள்கிறார்கள், குடும்ப பாரத்தைச் சுமக்கிறார்கள், கணவன், குழந்தைகள், மீது அன்பு
செலுத்துகிறார்கள். நந்தினி, சாந்தி, ஜெயா,மரகதம், கோமதி, சரோ, நீலா, சாரதா, என்று
எல்லோரும் வாழ்வின் பிரவாகத்தில் அதன் சுழிப்புகளில் சுழன்று மிதந்து செல்பவர்களாகவே
இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள், அமைதியான பார்வையாளராக, தாங்கள் நினைப்பதை, சொல்ல வருவதை,
சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே மருகிக் கொண்டிருப்பவர்களாக, மனதின் உணர்ச்சிகளை அடக்கிக்
கொள்பவர்களாக வருகிறார்கள். தட்டுப்படாத காலடியில் வருகிற குமரன், அரவிந்தன், குருவியில்
வருகிற ஆக்ரோஷமான கிருஷ்ணன், பார்வைகள் மாறும் கதையில் வருகிற போராட்டத்தைக் கண்டு
பயந்து தெரியாத்தனமாக ஜெயிலுக்குப் போகிற பேராசிரியர். கிருஷ்ணமூர்த்தி, தொழிற்சங்கத்தலைவர்
கே.சி.எஸ். ரசனையில் வருகிற குரூர மனம் கொண்ட கணவனான விஜயன், வீட்டிலும் ஒரு ஜீவனில்
வருகிற எழுத்தாளர் ரமணன், வேஸ்ட் கதையில் வருகிற மணி, ராஜன், துணைகளில் வருகிற டெம்போ
டிரைவர் நடராஜன், குருவிக்கூடுகளில் வருகிற கேசவன், வேலை கதையில் வருகிற தியாகராஜன்,
ஓய்ந்தவர்களில் வருகிற ஓய்வு பெற்ற கோபால், சங்கரன், இவர்கள் எல்லோரும் மிக அமைதியாக
வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். நகரப்பருந்துகளில் வருகிற பெரீவர், மாரிமுத்து, முரளிதரன்,
விக்டர், சம்பந்தன், போன்றவர்கள் மட்டுமே சற்று
முனைப்புடன் வாழ்க்கையுடன் மல்லுக்கட்டுபவர்களாக, எதிர்வினை புரிபவர்களாக இருக்கிறார்கள்.
நகரப்பருந்துகள் கதையில் பேருந்துத்தொழிலாளர்களின்
வாழ்க்கை அவர்களுடைய வேலைக்களம், அவர்களுடைய போராட்டம் என்று மிக வித்தியாசமான அதே
நேரம் அழகாக, அவர்களுடைய மனவுலகைச் சித்தரிப்பதில் மன அவசங்களை அப்படியே வரைந்து தன்னை
ஒரு மகத்தான எழுத்தாளராக பதிவு செய்திருக்கிறார் கமலாலயன்.
இந்தத் தொகுப்பில் வரும் உலகத்தை
மூன்றுவிதமாகப் பிரிக்கலாம் என்று தோன்றுகிறது. நீண்ட சிறுகதை அல்லது குறுநாவல் போல
எழுதப்பட்டிருக்கும் நகரப்பருந்துகளில் காண்கிற பேருந்து தொழிலாளர்களின் வேலைக்களமும்,
வாழ்க்கையும் அழுத்தமான சித்திரமாக அபூர்வமான வண்ணங்களோடு வந்துள்ளது. அடுத்ததாக தொழிற்கல்வி
முடித்து ஃபேக்டரிகளில் வெல்டராக, ஃபிட்டராக, வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வேலைக்களமும்
அவர்களுடைய வாழ்க்கையும், இதுவரை பெரிய அளவில் எழுதப்படவில்லை என்று தோன்றுகிறது. அடுத்ததாக
வீடுகளின் உலகம் அதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் உயிர்த்துடிப்புடன்
நம் கண்முன்னே புழங்குகிறார்கள். இந்த மூன்று உலகங்களில் வருகிற மனிதர்கள் மிக மிக
உணர்ச்சிக் கொந்தளிப்புடனும், ஆவேசத்துடனும், அக்கறையுடனும், பேரன்புடனும், வாழ்கிறார்கள்.
உயிர்த்துடிப்புடன் இவர்களை சித்தரிப்பதில், கமலாலயன் பெரும் வெற்றியடைந்திருக்கிறார்.
காட்சிச்சித்தரிப்பில் கமலாலயனின்
கதைகள் தனிக்கவனம் பெறுகின்றன. இவ்வளவு அற்புதமாக மனதின் உணர்ச்சிநிலைகளுக்கேற்ப காட்சிகளைச்
சித்தரிப்பது ஒரு கலை. இயற்கைக் காட்சிகளாகட்டும், பிரம்மச்சாரியின் அறையாகட்டும்,
வீடும் வெளியுமாகட்டும், வேலைக்களமாகட்டும் எல்லா இடங்களையும் அதன் சுயம் மாறாமல் சித்தரிப்பதில்
கமலாலயனின் கலைத்திறன் மிகுந்த அபூர்வமானதாக இருக்கிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள பதினேழு
கதைகளும் எளிமையான உண்மைகளை வலிமையாகச் சொல்கிற கதைகள். மொழிபெயர்ப்பாளராக தமிழிலக்கியத்தில்
முத்திரை பதித்து தமிழகத்தில் தேவதாசிகள் என்ற ஆங்கில நூலை மொழிபெயர்த்ததற்காக திசை
எட்டும் மொழிபெயர்ப்பு விருது பெற்றவர் கமலாலயன். விவாதங்களை எழுப்புகிற, சிந்தனைகளைக்
கிளறச் செய்கிற, கட்டுரைகளையும், நேர்காணல்களையும் எழுதியவர். அறிவொளி இயக்கம், அறிவியல்
இயக்கம் என்று களங்களில் நேரடியாக இயங்கிக் கொண்டிருப்பவர், அவருடைய இந்தத் தொகுப்பு
தமிழிலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெறும். முக்கியமான, குறிப்பிடத்தக்க சிறுகதை நூலாகத்
தன்னை நிலை நிறுத்தும். அதற்கான அத்தனை தகுதிகளைக் கொண்டிருக்கிறது தட்டுப்படாத காலடி.
அத்தனைக்கும் பின்னால் மானுட இனம்
அன்பெனும் பெருஞ்சரடால் கட்டப்பட்டிருக்கிறது. எல்லாக்கலைகளும் கண்ணுக்குத் தெரியாத
அந்தச் சரடினை மானுடம் காண ஒளியூட்டுகிறது. இதோ இந்தக் கதைகளும் கூட தன்னளவில் ஒளி
வீசுகிறது. அந்த ஒளியின் வெளிச்சத்தில் மனிதர்கள் துலங்குகிறார்கள். மானுடம் நேசத்தின்
மலர் சூடி… முன்னேறுகிறது. முன்னேறுகிறது. முன்னேறுகிறது….முன்னேறிக்கொண்டேயிருக்கிறது.
வெளியீடு - கலைஞன் பதிப்பகம்
No comments:
Post a Comment