Friday 7 June 2013

அரசு, பதிப்புலகம் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் - சில குறிப்புகள்

 

உதயசங்கர்books2

சமீபகாலமாக அரசாங்கத்தின் நூலக ஆணை கிடைக்காததினால் விரக்தியடைந்திருக்கும் பதிப்பகத்துறை அதற்காகக் குரல் கொடுத்திருக்கிறது. அதற்குக் கொஞ்சம் பலனும் கிடைத்திருக்கிறது. ஆனால் அறிவுசார் வளர்ச்சி எந்த அரசாங்கத்துக்கும் உவப்பானதில்லை. அது மட்டுமல்லாமல் அரசு நூலகங்கள் மூலமாக கிராமங்கள் வரை சமகாலத் தமிழ் அறிவுலகச் செயல்பாடுகள் சென்று விடும் அபாயம் இருப்பதை எல்லா அரசாங்கங்களும் உணர்ந்திருக்கின்றன. அதனால் தான் வாசிப்பு வாசனையே இல்லாதவர்களையே நூலகத்துறை அதிகாரிகளாக வைத்திருக்கின்றனர். அப்படியே நூலக ஆணைக்கான விதிமுறைகளையும் பழைய பாடாவதியாகவே வைத்துக் காப்பாற்றுகின்றனர். பழையபுத்தகக்கடையில் எடைக்குப் புத்தகங்கள் போடுவதைப் போன்ற நடைமுறையினால் புத்தகத்தயாரிப்பு பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாரத்துக்கு இவ்வளவு என்ற அடிமாட்டு ரேட்டுக்குப் புத்தகங்கள் நூலகத்துறையால் வாங்கப்படுகின்றன. அதனால் பதிப்பகங்களும் சில தகிடுதத்த வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர். இல்லையென்றால் முதலுக்கே வந்து விடும் மோசம் என்று எல்லோருக்கும் தெரியும். இது ஊரறிந்த ரகசியம். இப்பேர்க்கொண்ட நூலக ஆணை வாங்குவதற்கு அரசு அலுவலகங்களில் வழக்கமாக நடைபெறும் ரெம்ப ” நேர்மையான “ நடைமுறைகளின் வழியைத் தான் அநேகமாக எல்லாப்பதிப்பகங்களும் கடைப்பிடிக்கின்றன. தமிழர்களை இலவசங்கள்மூலம் கடைத்தேற்றி உலக அரங்கில் தமிழனின் கலை இலக்கிய அரசியல் தத்துவப்பெருமையை காற்றில் பறக்கவிடவே இந்தப்பிறவி எடுத்த திராவிடஅரசாங்கங்கள் இப்படி பதிப்பகங்கள் பிச்சைக்காரர்களைப் போலக் கையேந்தி நிற்பதையே விரும்புகின்றன.  இத்தனை ஆண்டுகளாகியும் இதற்கொரு ஒழுங்கோ முறையோ அரசாங்கம் கொண்டுவர விரும்பவில்லை. மக்களின் வரிப்பணத்தில் நூலக வரிப்பணம் எவ்வளவோ கோடி பயன்படுத்தப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கொருமுறை இப்படிக் குரல் பதிப்பகங்களிடமிருந்து எழும். உடனே கொஞ்சம் ஆர்டர் கிடைக்கும். அப்புறம் மறுபடியும் அதே கதை தான்.  மக்களின் அறியாமையும் சினிமாவை மட்டுமே மூலதனமாகக் கொண்டு மக்களைச் சுரண்டிப்பிழைக்கும் வணிகப்பத்திரிகைகளும், மின்னணு ஊடகங்களும் ஒரு காரணமென்றால், அது ஏதோ புலவர்கள் சமாச்சாரம் என்று மக்களும் நம்பி இன்று புதிதாக நடிக்க வந்த திரைப்பட நடிகையின் நேர்காணலைக் காண்பதில் காட்டுகிற ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கைக்கூட தமிழ்அறிவுலகம் சார்ந்து, நூலுலகம் சார்ந்து செலுத்துவதில்லை. அது ஏதோ, எங்கோ, யாருக்கோ நடக்கிற மாதிரி இருக்கிறார்கள். தமிழ்அரசியல்வாதிகள், திரைப்படநடிகர்கள், மின்னணுநிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், என்று எழுத்தாளர்களைத் தவிர எல்லோரும் இலக்கியவாதிகளாகி விடுகின்றனர். எனவே மக்களுக்கும் உண்மையான எழுத்தாளர்களைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை. எழுத்தாளர்களும் தாங்களே எழுதி, தாங்களே அச்சடித்து, தாங்களே வாசித்து கொள்கிற பத்திரிகைகளில் தங்களுடைய உலக இலக்கியங்களைப் படைத்து அதைத் தங்களுக்குள்ளே உச்சிமுகர்ந்து பாராட்டிக் கொண்டு, உலக இலக்கியத்துக்குச் சற்றும் குறைவில்லாத படைப்புகளைத் தமிழ் எழுத்தாளர்கள் படைக்கிறார்கள் என்று யாருமில்லாத சூன்ய வெளியில் கத்திச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.? இப்படி ஒரு நிலைமையில் இருக்கும் தமிழனை தமிழ்நாட்டை யாராவது காப்பாற்றி விட முடியுமா?

தமிழ்நாட்டை விட குறைந்த மக்கள்தொகை கொண்ட கேரளாவில் மலையாளப் பதிப்புலகம் கொடி கட்டிப் பறக்கிறது. பதிப்பகங்கள் சாதாரணமாக எந்தவொரு நூலாக இருந்தாலும் குறைந்தது இரண்டாயிரம் பிரதிகள் அச்சடிக்கிறார்கள். ஆண்டுதோறும் முக்கிய நகரங்களில் அரசாங்கமே தன்னுடைய செலவில் புத்தகக்கண்காட்சி நடத்துகிறது. உலகப்புத்தகக்கண்காட்சியும் நடத்துகிறது. அங்கே வாசிப்பவர்கள் அதிகமாக இருப்பதினால் பதிப்பகங்கள் அரசு நூலக ஆணைகளுக்காகக் காத்திருப்பதில்லை. அரசு நூலக ஆணையினால் மட்டுமே ஜீவித்திருக்க வேண்டிய அவசியத்தில் இல்லை. ஆனால் எந்த அரசாங்கமும் அது இடதுசாரி அரசாங்கமாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் அரசாங்கமாக இருந்தாலும் சரி நூலக ஆணைகளை நிறுத்தி வைப்பதில்லை. கேரள மக்களின் அரசியல்,சமூக உணர்வின் தளம் அதனுடைய ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை அப்படியில்லை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால் நிலைமை மிக மோசம் என்றும் சொல்லி விட முடியாது. ஏனெனில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் பெருநகரங்களிலும், சிறுநகரங்களிலும் கூட புத்தகக்கண்காட்சி நடைபெற்று வருகிற காலமாக மாற்றம் உருவாகியிருக்கிறது. புத்தகசந்தைக்கான புதிய வெளி திறந்து விடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல உலகமெங்கிலும் ஏதிலிகளாக தஞ்சமடைந்திருக்கும் இலங்கைத் தமிழர்களும் தமிழ்ப்புத்தகச்சந்தைக்கான பரந்த வெளியை உருவாக்கியிருக்கிறார்கள். இவ்வளவு வாய்ப்புகளிருந்தும் தமிழ்ப்பதிப்புலகம் நூலக ஆணைகள் நிறுத்தி வைக்கப்படுவதால் பெரிய அளவுக்கு நஷ்டம் என்றும் எழுத்தாளர்களுக்கு காப்புரிமைத் தொகை வழங்க முடிய வில்லை என்றும் கூக்குரல் எழுப்புகின்றன. இதன் உண்மைத்தன்மை என்ன?

தமிழ்ப்பதிப்பகங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை வணிக ரீதியிலான பதிப்பகங்கள், இவர்கள் ஆண்டு முழுவதும் எல்லாவகையான புத்தகங்களையும் வெளியிட்டுக் கொண்டேயிருப்பவர்கள். இவர்களுடைய இலக்கு விரிந்து பரந்த புதிய, பழைய, எளிய வாசகர்கள். அவர்கள் தமிழ்நாடெங்கும் தங்களுக்கென ஒரு வியாபார வலைப்பின்னலை உருவாக்கி வைத்திருப்பவர்கள். கிட்டத்தட்ட தொழில்முறையிலான நடைமுறைகளைப் பின்பற்றுபவர்கள். அடுத்த வகையிலான பதிப்பகங்கள் தேர்ந்தெடுத்த சமூக இலக்கிய அரசியல் தத்துவப்புத்தகங்களை மட்டும் தேர்ந்தெடுத்த வாசகப்பரப்பிற்காக வெளியிடுபவர்கள் இவர்கள் தொழில்முறையிலும் தொழில்முறைஅல்லாமலும் தங்கள் பதிப்பகங்களை நடத்தி வருபவர்கள். இவர்கள் ஆண்டு முழுவதும் புத்தகங்களை வெளியிடுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் சென்னைப்புத்தகக்கண்காட்சியை ஒட்டி நூல்களை மொத்தமாக வெளியிடுவார்கள், மற்ற காலங்களில் ஒன்றிரண்டாய் நூல்வெளியிடுவார்கள். இவர்களில் இடதுசாரி அமைப்புகள் சார்ந்த பதிப்பகங்களும், அமைப்பல்லாத இடதுசாரி உணர்வுள்ள பதிப்பகங்களும், முழுமையாக சமூக இலக்கிய நூல்களை வெளியிடும் பதிப்பகங்களும் அடங்குவார்கள். மூன்றாவதாக குடிசைத்தொழில் மாதிரி பதிப்பகம் நடத்துபவர்கள். இவர்களுக்கு எந்த வியாபார வலைப்பின்னலும் கிடையாது. அதைப்பற்றிக் கவலைப்படுவதுமில்லை. இவர்களில் ஏராளமான வகை மாதிரிகள் இருக்கிறார்கள். தான் எழுதிய புத்தகத்தைத் தன் மனைவி, குழந்தை, பேரில் ஒரு பதிப்பகம், அதற்கு வீட்டுமுகவரியைப் போட்டு உள்ளூர் அச்சகத்தில் அச்சடித்து உள்ளூர் பிரமுகர்களை வைத்து ஒரு வெளியீட்டு விழா நடத்தி நானும் ஒரு கவிஞர் தான், நானும் ஒரு எழுத்தாளன் தான் என்று உலகத்துக்கு அறிவித்து விட்டு வெளியீட்டுவிழாவில் விற்ற சில புத்தகங்கள் போக மீதிப் புத்தகங்களைக் கட்டி பரணில் ஏற்றி வைத்திருப்பார். அவ்வப்போது திருமணவைபவங்களுக்கு பரிசுப்பொதியாகக் கொண்டுபோய் கொடுத்து பயமுறுத்துவார். அப்படியெல்லாம் கொடுத்தும் ஏன் கட்டி வைத்த புத்தகங்கள் குறையவே மாட்டேங்குறதுன்னு புரியாமலேயே தன்னுடைய பதிப்பகத்தின் அடுத்த புத்தகத்துக்கான சப்ஜெக்ட்டை யோசித்துக் கொண்டிருப்பார். இன்னொரு வகைப் பதிப்பகங்கள், இப்படி புதிதாக எழுதுகிற எழுத்தாளர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு அவர்களுடைய பணத்தின் மதிப்புக்கேற்ப நூறோ, இருநூறோ புத்தகங்களை அச்சடித்து அவர்கள் தலையிலேயே கட்டி விடுவது அவர்களும் மேலே சொன்ன மாதிரி நானும் ஒரு எழுத்தாளன் தான் என்ற அடையாளத்துடனும் தன்னுடைய புத்தகங்கள் தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதான கற்பனையில் மிதக்க அந்தப் புத்தகமும் அந்த எழுத்தாளரிடம் தவிர வேறெங்கும் கிடைக்காமலிருப்பதன் மர்மம் புரியாமலேயே தன்னுடைய இலக்கியப்பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கவும் நேரும். இதில் அந்தப் புத்தகம் அவருக்கே தெரியாமல் நூலக ஆணை பெற்று நூலகத்தில் சென்று சேர்ந்திருக்கும். இன்னும் சில பதிப்பகங்கள் இருக்கின்றன. அவை எந்தப்புத்தகமாயிருந்தாலும் இரண்டே இரண்டு பிரதிகள் மட்டுமே கம்ப்யூட்டர் பிரதி எடுத்து அதற்கு கலர் ஜெராக்ஸ் அட்டை போட்டு நூலக ஆணையை மட்டுமே நம்பி மேற்கொண்டு புத்தகங்களை அச்சடிக்கும் குணாதிசயம் கொண்ட பதிப்பகங்கள். இவர்கள் எதற்காக பதிப்பகம் நடத்துகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. புத்தகத்தின் தயாரிப்புச் செலவு பற்றி எந்த அறிவுமில்லாமல் ஒரு புத்தகத்துக்கான தொகை மதிப்பை அடிமாட்டுவிலையாக அறிவிக்கும் நூலகத்துறையின் ஆணை பெற்று அச்சடித்து என்ன தொழில் செய்து விடமுடியும் என்பது அவர்களுக்கே தெரிந்த தங்கமலை ரகசியம். இதற்கூடாகவும் சிலபல வகைகளில் பதிப்பகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இந்த எல்லாவகையான பதிப்பகங்களும் சேர்ந்து தான் நூலக ஆணைக்கான குரலை ஓங்கி ஒலித்திருக்கின்றன. அதன் விளைவான நூலக ஆணையில் டார்வினின் வலிமையுள்ளது வெல்லும் என்ற கோட்பாட்டின்படி பல பெரிய பதிப்பகங்கள் மொத்தமான ஆணைகளை வாங்கியிருப்பதும் நடந்திருக்கிறது. பதிப்பகங்களின் கூட்டமைப்பான பாபாசி இந்த எல்லாவகையான பதிப்பகங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான எந்தத் திட்டமும் வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. அதே போல எந்த அரசாங்கமாக இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நூலகத்துறையும் நூலக ஆணைகளும் ஒழுங்கான வெளிப்படையான ஒரு நடைமுறையைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி ஏதாவது இயக்கத்தை நடத்தியிருக்கிறதா என்றும் தெரியவில்லை. அந்தந்த ஆட்சியாளர்களை, அவர்களுக்கு வேண்டியவர்களை காக்கா பிடித்தே நூலக ஆணை வாங்க வேண்டிய அவலத்தைத் தீர்க்க ஏதேனும் வழிமுறைகளைக் கண்டிருக்கிறதா என்றும் தெரியவில்லை. புத்தகத்தயாரிப்புச் செலவைக் குறைக்க அரசிடம் ஏதாவது புதிய திட்டங்களை பிரேரிபித்திருக்கிறதா என்றும் தெரியவில்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க பதிப்பகங்களின் ஆதங்கமான நூலக ஆணை கிடைக்காததினால் தான் எழுத்தாளர்களுக்குக் காப்புரிமைத் தொகை வழங்க முடியவில்லை என்ற விஷயத்துக்குள் சற்றே எட்டிப்பார்த்தோமானால் பதிப்பகங்கள் எப்படி தமிழ்எழுத்தாளர்களை எப்படிக் காமெடி பீஸாக வைத்திருக்கிறார்கள் என்று புரியும். அநேகமாக பெரும்பாலான பதிப்பகங்களுக்கு எழுத்தாளர்களுக்குக் காப்புரிமை என்று ஒரு உரிமை இருக்கிறது என்றே தெரியுமா என்று அச்சப்பட வேண்டியதிருக்கிறது. இதில் இடதுசாரி, வலதுசாரி என்ற பேதமில்லை. இதில் இன்னுமொரு முரண்நகை என்னவென்றால் எந்த எழுத்தாளருக்குமே காப்புரிமைத்தொகை வழங்காத பதிப்பகங்கள் பதிப்புரிமை பற்றியும், காப்புரிமை பற்றியும் செமினார்களை நடத்துவதும், தாங்கள் நடத்தும் பத்திரிகைகளில் அது பற்றி வல்லுநர்களின் கருத்துக்களை வெளியிடுவதும் நடக்கிறது. முதலில் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சில பதிப்பகங்களே எழுத்தாளருடன் காப்புரிமை ஒப்பந்தம் போடுகிறார்கள். மற்ற பதிப்பகங்கள் அப்படின்னா என்ன? என்று கேட்பார்கள். பல பதிப்பகங்களுக்கு மட்டுமல்ல நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது சதவீத எழுத்தாளர்களுக்கு அந்தக் காப்புரிமை ஒப்பந்தம் எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாது. எல்லாம் வாய்மொழி வார்த்தைகள் தான். அதுவும் ஏதோ ஒப்பந்தம் என்று யாரும் நினைத்து விடாதீர்கள். என்ன சார் என் கதைத்தொகுப்பை போடலாமா? சரி போடுவோம். இவ்வளவு தான். இது தான் அந்த வாய்மொழி வார்த்தைகள். சமூகத்தின் நிகழ்வுகளில் அறச்சீற்றம் பொங்க எழுதி செயல்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளரும் தன்னுடைய காப்புரிமை பற்றியோ காப்புரிமைத் தொகை பற்றியோ பேசுவதில்லை. ( ஏன்னா புத்தகம் போடறதே பெரிசு என்று அவர் நினைக்கிறார்.) பதிப்பகமும் அதைப்பற்றி அப்போது மட்டுமல்ல எப்போதும் வாய் திறப்பதில்லை. புத்தகம் வெளிவந்து எத்தனை வருடங்கள் ஆன பின்னும் சரி எப்போதாவது யாராவது ஒரு எழுத்தாளர் தெரியாத்தனமாக காப்புரிமைத்தொகை பற்றி கேட்டால் உடனே பதிப்பகம் ஒரு பதிலை ரெடிமேடாக வைத்திருக்கும். உங்க புஸ்தகம் கொஞ்சம் கூட போகலையே..சார்.. எல்லாம் அப்படியே கட்டிக் கிடக்கு. இப்படி ஒரு பதில். இதற்குள் நீங்கள் எல்லாவற்றையும் அடக்கி விடலாம். புத்தகம் போடும்போதும் எத்தனை புத்தகம் போடுகிறோம் என்று சொல்வதுமில்லை. எழுத்துபூர்வ ஒப்பந்தம் இல்லாததினால் தெரிவதுமில்லை. இத்தனை ஆண்டுகளில் இத்தனை புத்தகங்கள் தான் விற்றிருக்கிறது என்றும் சொல்வதில்லை. அதற்குமேல் நம் எழுத்தாளப்பெருமகனாருக்கு இதைப்பற்றிக்கேட்பதற்கு தைரியமும் இல்லை. அதனால் பதிப்பகம் சொல்கிற புத்தகம் போகல சார் என்று கேட்ட எழுத்தாளர் மனம் சோர்ந்து போவார். இனி ஒருபோதும் காப்புரிமைத்தொகை பற்றி வாயைத் திறப்பதில்லை என்று முடிவு செய்து விடுவார். இன்னும் சில பதிப்பகங்கள் எழுத்தாளரின் சமூக அந்தஸ்தை வைத்து காப்புரிமைத்தொகை கொடுப்பதா என்று தீர்மானிக்கின்றன. ஐயோ பாவம் அவர் கஷ்டப்படறார் அவருக்குக் கொடுத்துருவோம் என்றும் அவருக்கென்ன நல்ல ஜாப்பில இருக்கார் அவருக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? என்றும் பாகுபாடு பார்க்கின்றன. இதுவும் அப்படியே என்றும் சொல்ல முடியாது. மார்க்கெட்டில் டிமாண்ட் இருக்கிற எழுத்தாளரென்றால் அவர் எந்த அந்தஸ்திலிருந்தாலும் காப்புரிமைத்தொகையை பக்காவாக வருடந்தோறும் ஸ்டேட்மெண்ட் போட்டு அனுப்பி விடுகிறதும் உண்டு. மார்க்கெட் டிமாண்ட் என்கிற பரவலாக வாசிக்கப்படுகிற அங்கீகாரம் எழுத்தாளர்கள் பல உபாயங்களைச் செய்வதால் வந்தடைகிறது. அந்த உபாயங்களைச் செய்யத்தெரியாத அப்பாவிகள் புத்தகங்களைக் கொடுத்து விட்டு அங்கீகாரமும் இல்லாமல் காப்புரிமைத்தொகையும் கிடைக்காமல், அதை மறைக்க எழுத்தாளன் சமூகத்தின் மனசாட்சி அவனுக்கு இதெல்லாம் கால்தூசி. பாரதியைப்பார். புதுமைப்பித்தனைப்பார். என்று ஜம்பம் பேசிக் கொண்டு திரிவார்கள்.

இதில் மொழிபெயர்ப்பு புத்தகங்களென்றால் பதிப்பகங்களுக்கு அல்வா திங்கிற மாதிரி. ஏன் திடீரென்று எல்லாபதிப்பகங்களும் மொழிபெயர்ப்பு நூல்களின் மீது அபரிமிதமான ஆர்வத்தை கடந்த சில வருடங்களாகச் செலுத்தி வருகின்றன தெரியுமா? பிற நாட்டு நல்லறிஞர் நூல்களைத் தமிழில் கொண்டுவந்து தமிழ் மொழியை வளப்படுத்தவா என்ற சந்தேகம் சிலருக்கு வந்தது. முக்கியமான காரணம் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு காப்புரிமைத்தொகை வழங்க வேண்டியதில்லை. அதுவும் ஆங்கிலமென்றால் அவுட்ரேட்டாக மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுத்துவிட்டு போட்டுக் கொண்டேயிருக்கலாம். மலையாளம் போன்ற கொஞ்சம் விழிப்புணர்வு மிக்க எழுத்தாளர்களைக் கொண்ட மொழியாக இருந்தால் மட்டும் அந்த மூல ஆசிரியருக்கு மட்டும் காப்புரிமைத்தொகை ஐந்து சதவீதம் தருவது. அதையும் மொழிபெயர்ப்புக்கு நூலைத் தேர்ந்தெடுத்து மூல ஆசிரியரிடம் அனுமதி பெற்று மொழிபெயர்த்து பதிப்பகத்தாரிடம் கொடுத்து அது வெளிவந்ததும் நூலை மூல ஆசிரியருக்கு அனுப்பி வைத்து அவருக்குக் காப்புரிமைத்தொகையையும் பதிப்பகத்தை நச்சரித்து வாங்கி அனுப்பி வைத்த பிறகு அவ்வளவு உழைப்புக்கும் தனக்குக் கிடைக்கும் மொழிபெயர்ப்பாளர்பிரதிகள் ஐந்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் தியாகி தான் மொழிபெயர்ப்பாளர். அவருடைய உழைப்பை பதிப்பகங்கள் மதிப்பதேயில்லை. உழைப்பையே மதிக்காத போது அவருக்கான காப்புரிமை பற்றி என்ன பேசமுடியும்?

சில பதிப்பகங்கள் தங்கள் பதிப்பகத்திலேயே வெளிவந்த புத்தகங்களில் சில எழுத்தாளர்களுக்கு காப்புரிமைத் தொகை வழங்குவதும் சில எழுத்தாளர்களுக்கு அது பற்றிய மூச்சே காட்டாமல் இருப்பதும் நடக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் எதில் ஒற்றுமையாக இருக்கிறார்களோ இல்லையோ தங்களுக்கு காப்புரிமைத்தொகை கிடைக்கவில்லை என்பதைப் பற்றியோ பதிப்பகங்கள் அறவுணர்வுடன் அதைக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியோ எங்கும் பேசுவதில்லை. ஒருவேளை அதைப்பற்றி பேசினால் பதிப்பகங்கள் ஒன்று சேர்ந்து தீர்மானம் போட்டு தங்கள் புத்தகங்களைப் போடாமல் போய் விடுவார்களோ என்ற அச்சமோ என்னவோ.

காப்புரிமை என்பது ஒரு படைப்பாளியின் படைப்பைச் சந்தைப்படுத்தும் போது அவருக்குச் சேரவேண்டிய மதிப்பூதியம். அந்தப் படைப்பாளியின் படைப்பை சந்தையில் விற்பனை செய்து வருகின்ற மொத்தத்தொகையில் பத்தோ, பதினைந்தோ, இருபதோ சதவீதம் அந்த படைப்பாளியின் சந்தை மதிப்பை வைத்து கொடுக்கப்படுவது. இப்படிப் பதிப்பகங்கள் எழுத்தாளர்களின் படைப்பை விற்றுத் தாங்கள் வருவாய் அடையும்போது அந்த வருவாய்க்கான மூலகாரணகர்த்தாவாகிய படைப்பாளிக்கு அவருக்கு உரிய காப்புரிமைத்தொகை கொடுப்பதில் என்ன தயக்கம் என்றும் தெரியவில்லை. ஒரு புத்தகத்தைப் வெளியிடுவதற்கும் வெளியிட மறுப்பதற்கும் ஏன் அந்தப் படைப்பைத் திருத்தி எழுதச்சொல்லிக் கேட்பதற்கும் ஒரு பதிப்பகத்துக்கு எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால் ஒரு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிட்ட பிறகு அந்தப் புத்தகத்தை விற்பனை செய்கிற பொறுப்பு அந்தப் பதிப்பகம் சார்ந்தது. அந்த நூலுக்கான வெளியீட்டு நிகழ்வு, அந்த நூலைப் பற்றிய மதிப்புரைகள், அதை புரோமோட் பண்ணுவதற்கான விளம்பரங்கள், எல்லாம் பதிப்பகங்கள் செய்ய வேண்டிய வேலை. ஆனால் இங்கே என்ன நடக்கிறது? எழுத்தாளரே தன் கைகாசை செலவு செய்து வெளியீட்டு விழா நடத்துகிறார். புத்தகங்களை நண்பர்களுக்கு ஓசிக்கு அனுப்புகிறார். அவர்களைப் பலமுறை நச்சரித்து மதிப்புரை வாங்கி பத்திரிகைகளில் வரவழைக்கிறார். இதில் எந்த வேலையையும் பெரும்பாலான பதிப்பகங்கள் செய்வதில்லை. புத்த்கங்களை விற்பனை செய்வதற்காக தமிழகமெங்கும் நூல்களை அனுப்புவதிலாகட்டும், விற்பனையான நூல்களுக்கான தொகையை வசூலிப்பதிலாகட்டும், எந்தப்பதிப்பகமும் தொழில்முறையில் செய்வதில்லை. அப்படித் தொழில்முறையில் செயல்பட்ட பதிப்பகங்கள் மகத்தான வெற்றி பெற்றிருக்கின்றன என்பதற்கு நம் கண்முன்னே உதாரணங்கள் இருக்கின்றன.

  ஒரு வேளை எல்லா எழுத்தாளர்களுக்கும் லட்சக்கணக்கில் காப்புரிமைத்தொகை கொடுக்க வேண்டியதிருக்குமோ என்றால் அதுவுமில்லை. ஆயிரக்கணக்கு என்பது கூட சில சமயம் அதிகம் தான். ஆனால் அதை கொடுப்பதற்கும் மனமில்லாத பதிப்பகங்கள் தான் ஏராளம். இதற்கும் கேரளாவையே உதாரணம் சொல்ல வேண்டியதிருக்கிறது. என்ன செய்ய? நல்ல அரசு உத்தியோகத்திலிருந்து முழுநேர எழுத்தாளராக மாறிய எழுத்தாளர்கள்  கேரளத்தில் அதிகம். காரணம் எழுத்தின் மூலமாக தங்களுக்குக் கிடைக்கும் வருவாய் போதுமானதாக இருந்தது தான் காரணம். அதற்கு அங்குள்ள பதிப்பகங்கள் எழுத்தாளர்களை மதிக்கின்றன. மக்கள் மதிக்கின்றனர். அரசியல்வாதிகள் மதிக்கின்றனர். அங்கே நீங்க என்ன செய்யறீங்க என்ற கேள்விக்கு அப்போது தான் எழுதத்தொடங்கியிருக்கும் ஒருவர்கூட நான் எழுத்தாளர் என்று தலை நிமிர்ந்து சொல்ல முடியும். ஆனால் இங்கே பிரபலமான எழுத்தாளர்கள் கூட அப்படிச் சொவதற்கு கொஞ்சம் யோசிப்பார்கள்.  இங்கே எழுத்தாளர் என்றால் எந்தப் போலீஸ் ஸ்டேஷனில் என்றோ, பத்திர எழுத்தாளர் என்றோ புரிந்து கொள்பவர்களை அதிகமாகக் கொண்ட நாட்டில் வாழநேர்ந்து விட்டது. இதில் பதிப்பகங்களும் நம்நாட்டு விவசாயிகளை ஏமாற்றும் வியாபாரிகளைப் போல எழுத்தாளர்களிடம் நடந்து கொண்டால் நஷ்டம் பதிப்பகங்களுக்கு மட்டுமல்ல. நாட்டின் கலை இலக்கிய, பண்பாட்டு, அறிவுலகப் பாரம்பரியத்துக்கும் தான்.

நன்றி- புதியபார்வை