Friday, 6 May 2016

தமிழ் எழுத்தாளர்களின் கோலாகல கோலாலம்பூர் மாநாடு

தமிழ் எழுத்தாளர்களின் கோலாகல கோலாலம்பூர் மாநாடு
உதயசங்கர்
சற்றே உயரமான பஸ்ஸில் இடுக்குப் பிடித்த சீட்டுகளில் கால்களை ஒடுக்கிக் கொண்டு  உட்கார்ந்திருந்த மாதிரிதான் விமானத்தில் இருந்தது. உள்ளே எரிந்த மஞ்சள், வெள்ளை விளக்குகள், மலாய் விமானப்பணிப்பெண்கள், ஆண்கள் அதை ஒரு நாடக அரங்கு போலவோ, திரைப்பட செட்டிங் போலவோ உணர வைத்தார்கள்.  ஓடுதளத்தில் ஏர் ஏசியா விமானம் புறப்பட்டபோது ஒரு பெரிய அதிர்வு ஏற்பட்டது. வேகமாக ஓடி திடீரென மேலெழும்பிய கணத்தில் வயிற்றில் லேசாய் புளியைக் கரைத்த மாதிரி ரங்கராட்டினத்தில் சுற்றும் போது மேலே போகும்போது குடல் மேலே எழும்புமே அந்த மாதிரி இருந்தது. எழும்பிய வேகத்தில் அப்படியே கீழே இறங்கியது. இப்பவும் வயிறு தான் குதித்தது. காதில் இரைச்சல் கூடி வலிக்க ஆரம்பித்தது. சன்னல் வழியே வெளியே பார்த்தால் திருச்சிக்கு மேல் பறந்து கொண்டிருக்கிறோம். ஒரு குதூகல உணர்வு. பெருமிதம். நானும் வெளிநாடு செல்கிறேன். அதுவும் ஒரு எழுத்தாளன் என்ற அங்கீகாரத்தோடு மாநாட்டில் கலந்து கொள்ளப் போகிறேன். நினைக்கும்போது ஆச்சரியமாகவும் இருந்தது.
பயணங்களில் விமானப்பயணம் தான் எல்லா மனிதர்களின் ஆசையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஊரில் மேலே வானத்தில் விமானம் பறக்கிற சத்தம் கேட்டதும் அண்ணாந்து பார்க்காத மனிதர்கள் உண்டா? மனிதனின் பறக்கிற ஆசையை பூர்த்தி செய்தது விமானக்கண்டுபிடிப்பு தானே. விமானம் மேகங்களிலிருந்த எல்லாவிதமான மேடுபள்ளங்களிலும் ஏறி இறங்கி ஒரு நிதானத்துக்கு வந்தது. எனக்கு எதிர்பக்கத்தில் எழுத்தாளர் காமுத்துரை. முன்னால் எழுத்தாளர் கமலாலயன். இந்தப்பயணத்துக்கு மூலகாரணம் எழுத்தாளர் கமலாலயன். அதற்கான திட்டம் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தவர்கள் சென்னையிலுள்ள கலைஞன் பதிப்பகமும், மலேசியாவிலுள்ள இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப்பிரிவும், இந்தியவியல் துறை மலேயா பல்கலைக்கழகமும் தான். சென்னை-கோலாலம்பூர் இரட்டை நகர தமிழ்-மலேசிய எழுத்தாளர்களின் மாநாடும், புத்தகவெளியீடுகளும் என இரண்டு நாள் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. வெளிநாடு ஒன்றில் அறுபது தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டு மாநாடும் நடத்தியது என்பது தமிழிலக்கியச்சூழலில் மிக முக்கியமான நிகழ்வு. கலைஞன் பதிப்பக உரிமையாளர் திரு.நந்தன்மாசிலாமணி அவர்களும் மலேசியாவிலுள்ள இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கத்துறை அதிகாரி முனைவர் கிருஷ்ணன்மணியம் அவர்களும் கோலாலம்பூர் விமானநிலையத்தில் சென்று இறங்கியதிலிருந்து மறுபடியும் விமானநிலையத்தில் ஏற்றி விடும்வரை கூடவே இருந்து சின்னச்சின்ன விஷயங்களையும் கவனித்துக் கொண்டார்கள்.
முழுவதும் குளிரூட்டப்பட்ட அனைத்துலக இளைஞர் மையத்தில் தான் மாநாடும், கருத்தரங்கும், புத்தகவெளியீடும் நடந்தேறின. மாநாட்டைத் துவக்கிவைக்க மலேய இளைஞர் நலத்துறை துணையமைச்சர் டத்தோ சரவணனும், மலேய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் சாலே அகமத், மலேய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் மன்னர் மன்னனும் வந்திருந்தார்கள். அமைச்சர் டத்தோ சரவணன் வெளியிட சாலே அகமத் பெற்றுக் கொண்டார். அமைச்சர் என்ற பந்தா சிறிதளவும் இல்லாத டத்தோ சரவணன் அவர்களின் பேச்சு பழந்தமிழ்இலக்கியம் சார்ந்ததாக இருந்ததும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. மலேசிய தமிழர்களின் வாழ்நிலை சமூகநிலை பற்றி முனைவர் கிருஷ்ணன்மணியத்தின் உரை வெளிச்சம் தருவதாக இருந்தது.
கிட்டத்தட்ட மலேசிய மக்கள் தொகை மூன்று கோடி என்றால் மலேய, சீன, மக்களுக்கு அடுத்தபடியாக 24 லட்சம் பேரைக்கொண்ட தமிழ்ப்பெருங்குடி இருக்கிறது. தமிழகத்தைப்பூர்விகமாக கொண்ட தமிழர்கள், இலங்கையிலிருந்து குடியேறிய தமிழர்கள், வேலைக்காக இந்தியாவிலிருந்து சென்று வரும் தமிழர்கள் என்று வேறு வேறு வகைப்பாடில் இருக்கிறார்கள். 524 தமிழ்ப்பள்ளிக்கூடங்களும் அவற்றில் ஒரு லட்சம் மாணவர்களும் படித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இஸ்லாமிய நாடான மலேசியாவில் 2500க்கும் மேற்பட்ட  பெரிய இந்துக்கோவில்களை அரசு பராமரித்து வருகிறது. மலேசியக்காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் கேபினட் மந்திரியும், துணையமைச்சர்களும் தமிழர்கள் இருக்கிறார்கள். நூற்றாண்டுகளாய் கூடி வாழ்வதால் தமிழ்-மலேயப்பண்பாடு கலந்திருக்கிறது.
சிங்கப்பூரிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் ஐந்து எழுத்தாளர்கள் மாநாட்டில் பங்கேற்று தங்களுடைய எழுத்தநுபவங்கள் குறித்து உரையாற்றினர். தமிழகத்திலிருந்து சென்றிருந்த அனைவரும் உரையாற்றினார்கள். எழுத்தாளர்கள் சுப்ரபாரதி மணியன், கௌதமசித்தார்த்தன், எஸ்.சங்கரநாராயணன், ம.காமுத்துரை, கமலாலயன், உதயசங்கர், உமர்பாரூக், கன்னிக்கோவில் ராஜா, குமுதம் மணா, பிரபு சங்கர், சாருகேசி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரவில் நடந்த மலேய நடனக்கலைஞர்களின் நடனமும், மலேயக்கவிஞர்களின் கவிதை வாசிப்பு நிகழ்வும் புதிய அநுபவமாக இருந்தது. சமீபமாக எழுத்துருக்களைக் கண்டடைந்திருக்கிற மலேயக்கவிதைகள் மற்ற மொழிக்கவிதைகளின் தரத்தை நெருங்கியிருக்கின்றன.
இரண்டு நாள் மாநாடு முடிந்ததும் சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம்.
தமிழ்-மலேயப்பண்பாட்டுக் கலப்பின் உதாரணமாக காம்பங் செட்டி என்ற ஒரு இனம் இருக்கிறது. வியாபாரத்துக்காக மலேசியா சென்ற தமிழக வம்சாவளியினர் அங்கு மலேயப்பெண்களைத் திருமணம் முடித்து தமிழ் இந்துப்பண்பாட்டையும் மலேய மொழியையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த மக்கள் மாரியம்மன் கோவிலில் மலேய மொழியில் தங்கள் வேண்டுதல்களை அங்குள்ள தமிழ்ப்பூசாரியிடம் சொல்கிறார்கள். அந்தத் தமிழ்ப்பூசாரி தமிழில் பூஜை செய்கிறார். அனைத்து தமிழ் இந்து பண்பாட்டு விழாக்களையும் கொண்டாடும் அவர்களின் பெயர்கள் நடராஜன், வெண்ணிலா என்பதாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மலேசிய தொன்மைத் தலைநகரமான மலாக்கா சென்றோம். சர்வதேச மானுடத்தை அங்கே காணமுடிந்தது. எங்கும் தமிழர்களைக் காண முடிந்தது. மறுநாள் மலேசியாவின் பத்துக்குகை முருகன் கோவிலுக்குச் சென்றோம். கோவில் நிர்வாகம் தமிழர்களிடமே இருக்கிறது. இயறகையான சுண்ணாம்பு பாறையால் உருவான அந்த மலையும் குகைகளும் உண்மையில் அதிசயம் தான். மலேசியாவின் நிர்வாகத் நகரான புத்ரஜெயா, சைபர்ஜெயா இரண்டு இடங்களையும் பார்த்துவிட்டு அவசர அவசரமாக விமானத்தில் ஏறினோம். எதிர்காலத்தில் இரண்டு நாடுகளின் கலாச்சாரப்பரிவர்த்தனைக்கு இது ஒரு துவக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கையை இந்தப்பயணம் ஏற்படுத்தியது.
இப்போது அசைபோடும்போது மிகவும் வளமான நாடான மலேசியாவில் மக்கள் தொகை குறைவு என்பதால் எங்கும் நெருக்கடி இல்லை. கார்கள் அதிகம். இருசக்கர வாகனங்கள் மிகவும் குறைவு. இருபத்திநாலு மணிநேரமும் திறந்திருக்கும் சாப்பாட்டுக்கடை. சாலைகளின் சுத்தம், ஹார்ன் சத்தமே இல்லாத போக்குவரத்து. சாலைகளில் மக்கள் கடக்க நிற்கிறார்கள் என்றால் கார்களை நிறுத்தி வழி விடுகிறார்கள். தமிழர்கள் அங்கே ஆங்கிலக் கலப்பின்றி தமிழை அழகாகப் பேசுகிறார்கள். போய் இறங்கியவுடன் எங்களை வரவேற்ற பேராசிரியர் கிருஷ்ணன்மணியம் கேட்டார்,” பசியாறிட்டீங்களா? “

தமிழ் தான். ஒருகணம் ஏதோ வேற்றுமொழியைக் கேட்ட மாதிரி முழித்தோம்.

2 comments:

 1. என் வலைப்பூவில் இணைந்திருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் என் வணக்கங்கள்

  தமிழில் தட்டச்சு செய்வதற்கு மிக எளிமையாக மேன்பலகையினை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளேன். தமிழ் மட்டுமல்ல. உலக மொழிகள் அனைத்திற்கும்..

  உங்கள் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  விவரங்களுக்கு

  http://easyhappylifemaker.blogspot.in/2016/04/umask-2015-easy-tamil-keyboard-layout.html

  ReplyDelete
 2. அனுபவ பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete