Sunday 26 October 2014

காற்றில் கரைந்த பூதம்

உதயசங்கர்

raja 1

மண்டியா தேசத்து ராஜா மத்தியானம் தன் யானை வயிறு நிறைய பலகாரங்களும் பட்சணங்களும் சாப்பிட்டு முடித்து இரண்டு மணி ஆலைச் சங்கு போல பெரிய ஏப்பத்தை வெளியிட்டார். அந்த ஏப்பக்காற்று அவர் என்னென்ன பலகாரங்களைச் சாப்பிட்டார் என்று நாட்டு மக்கள் அனைவரிடமும் சொல்லிக் கொண்டே சென்றது. பின்னர் ஒரு கவுளி வெத்திலையை ஆடு தழையை மென்று தள்ளுவதைப்போல அரைத்துத் தள்ளினார். அதன்பிறகு அரண்மனை அதிர குறட்டை விட்டபடி தூங்குவார். தூங்குவது, சாப்பிடுவது, திரும்பவும் தூங்குவது, சாப்பிடுவது என்று விடாமல் செய்து கொண்டிருந்ததால் ராஜா குண்டாகி விட்டார்.

அதோடு ராஜா படு சோம்பேறி வேறு. அவர் நடக்க வேண்டுமென்றால் அவருடைய வலது காலைத் தூக்கி வைக்க ரெண்டு பேர் வலது பக்கம் இருப்பார்கள். அதேபோல இடது காலை தூக்கி வைக்க இடது பக்கம் ரெண்டு பேர் இருப்பார்கள். சிம்மாசனத்தில் உட்கார வேண்டுமென்றால் நாலு பேர் அவரைத் தூக்கி சிம்மாசனத்தில் உட்கார வைப்பார்கள். உடலுழைப்பு இல்லாததினால் உடலில் கொழுப்பு சேர்ந்து கொழுப்பு கட்டிகள் அங்கங்கே உண்டாகி விட்டன. ராஜா அரண்மனை வைத்தியர்களை அழைத்து உடனே இந்தக் கட்டிகள் கரைய மருந்துகள் கண்டு பிடிக்கும்படி ஆணையிட்டார்.

அரண்மனை வைத்தியர்களுக்குத் தெரிந்து விட்டது. ராஜா ஒரு உணவுப்பிரியர். அவரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்ல முடியாது. எனவே ஒரு வாரகாலம் ஆலோசித்தனர். பின்னர் ராஜாவிடம் வந்து,

“ மன்னர்மன்னா… உங்கள் உடலில் வந்துள்ள இந்தக் கட்டிகள் கொழுப்புபூதம் உங்கள் உடலில் புகுந்திருப்பதினால் தான் வந்திருக்கின்றன. எனவே இந்தப் பூதத்தை விரட்ட ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. சாப்பாட்டின் வழியே உங்கள் உடலுக்குள்ளே புகுந்துள்ள இந்தப் பூதத்தை சாப்பாட்டின் வழியே தான் விரட்ட முடியும்… நீங்கள் ஒரு மூன்று மாதங்களுக்கு தினம் மூன்று வேளையும் நீராகாரமும், பழங்களும் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன் நாங்கள் தருகிற இந்த மருந்தை தினம் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும் பிரபோ..”

இதைக் கேட்டதும் ராஜாவுக்கு திடுக்கென்றது.

“ என்ன.. நெய்யில் பொரித்த ஜாங்கிரியும், லட்டு, சிலேபி, பலகாரங்கள், சாப்பிடக்கூடாதா… கோழியும், ஆடும்.. சாப்பிடாமல் எப்படி என்னால் இருக்க முடியும்..? இல்லை வைத்தியர்களே.. வேறு ஏதாவது வைத்தியம் சொல்லுங்கள்…”

” இல்லை மன்னா.. இன்னொரு வைத்தியம் இருக்கிறது.. அதை நீங்கள் செய்ய முடியுமா என்று எங்களுக்குச் சந்தேகம்…”

“ என்ன அது..”

“ தூங்கி எழுந்தவுடன் பல் விளக்காமல் நாங்கள் தரும் மருந்தைச் சாப்பிட்டு விட்டு ஒரு பத்து மைல் தூரம் ஓடிப் போய் வர வேண்டும்…..அவ்வளவு தான் மன்னா..”

“ என்னது.. பத்து மைலா…என்னால முடியாது.. என்னால முடியாது…எதுவும் வேண்டாம் நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேன் ”

“ இல்லை மன்னா இப்போது உங்கள் உடலில் புகுந்துள்ள கொழுப்பு பூதம் வளர்ந்து வளர்ந்து உங்களையேச் சாப்பிட்டு விடும்……இப்போதே இதை விரட்டி விடுவது நல்லது…”

ராஜா யோசித்தார். யோசித்தார். யோசித்தார்.

நடப்பதற்கே சோம்பேறியான ராஜாவா பத்து மைல் ஓட முடியும்..கடைசியில் ராஜா முதலில் சொன்ன வைத்திய முறைக்கே ஒத்துக் கொண்டார். மறுநாளிலிருந்து அரண்மனை முழுவதும் மூன்று வேளையும் நீராகாரமும் பழங்களும் தான் எல்லோருக்கும் சாப்பாடு. அது போக கொள்ளுப்பயறும் கருப்பட்டியும் சேர்த்து செய்த மருந்தையும் கொடுத்தார்கள் அரண்மனை வைத்தியர்கள்.

மூன்று மாதங்களில் ராஜாவின் உடலில் இருந்த கொழுப்பு பூதம் காற்றில் கரைந்து விட்டது. இப்போதும் ராஜா நடப்பதில்லை. ஆனால் ஓடுகிறார். எல்லோரும் அவர் பின்னால் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.

Saturday 25 October 2014

தோற்றப்பிழை

 Neem உதயசங்கர்

ஜன்னல் வழியே பார்க்கும்போது காற்றில் வேப்பமரத்தின் கிளையிலுள்ள இலைகள் நடனமாடிக்கொண்டிருக்கின்றன.

பார்க்கும்போது காற்றில் வேப்பமரத்தின் கிளையிலுள்ள இலைகள் நடனமாடிக்கொண்டிருக்கின்றன.

காற்றில் வேப்பமரத்தின் கிளையிலுள்ள இலைகள் நடனமாடிக் கொண்டிருக்கின்றன.

வேப்பமரத்தின் கிளையிலுள்ள இலைகள் நடனமாடிக் கொண்டிருக்கின்றன.

கிளையிலுள்ள இலைகள் நடனமாடிக் கொண்டிருக்கின்றன.

இலைகள் நடனமாடிக் கொண்டிருக்கின்றன.

நடனமாடிக் கொண்டிருக்கின்றன

ஆடிக் கொண்டிருக்கின்றன

Friday 24 October 2014

அன்றாடங்களின் முகவிலாசம் மாற்றிய கவிஞன் கலாப்ரியா

உதயசங்கர்kalapriya

இது கவிஞர் கலாப்ரியாவின் நாள். இதோ இனிமையாய் காலைப்பொழுது விடிகிறது. கிணிங் கிணிங் என்று மணியடித்தபடி பால்க்கார அண்ணாச்சியோ உப்போய் உப்பு என்று கூவிக் கொண்டு போகும் உப்பு விற்பவரோ, ஒரு லாவகத்துடன் தினசரி நாளிதழை வீட்டுக்குள் வீசி விட்டுப் போகும் பேப்பர் போடும் பையனோ கீரை வாங்கலியோ கீரை என்ற சத்தத்துடன் செல்லும்கீரைக்கார அம்மாவோ, தான் இந்தக் காலைப்பொழுதைத் துவக்கி வைக்கிறார்கள். அதுவரை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வீடுகள் முழித்துக் கொள்கின்றன. ஒரு புதிய நாளுக்கான சக்தியைச் சேகரித்துக் கொண்ட பெண்கள், அடுக்களையில் பாத்திரங்களைப் புழங்கும் சத்தம் கேட்கத் துவங்குகிறது. பெண்களும், ஆண்களும், குழந்தைகளும், இந்த நாளை, இந்த உலகத்தை இயக்கத் தொடங்குகிறார்கள். இனிமை, கசப்பு, வெறுப்பு, அன்பு, காதல், கருணை, அதிகாரம், நேசம், என்று எல்லாச்சுவைகளோடும் இந்த நாள் கழிகிறது. மாலையில் சூரியன் மங்கத்தொடங்கும் போது எல்லோரும் அப்பாடா இன்னும் ஒரு நாள் கழிந்தது என்று ஆனந்தமும் பெருமூச்சும் விடுகிறார்கள். இந்த நாளில் என்ன விசேசம்? எல்லா நாளையும் போல இன்னுமொரு நாள். அப்படியா? அப்படித்தானா? நேற்றைப் போலவா எல்லாம் நடந்தது! இல்லையே. நேற்றின் சாயல் இருப்பதினால் மட்டும் நேற்றும் இன்றும் ஒன்றாகி விடுமா? நேற்றை விட இன்று எவ்வளவு அழகு? எவ்வளவு உயிர்த்துடிப்பு? நேற்று இந்த வேம்பு பூக்கத்தொடங்கவில்லை. இன்றானால் கொத்துக் கொத்தாய் வெள்ளைச் சிரிப்புடன் மரமே மலராய் மலர்ந்து நிற்பதைப் பாருங்கள்! நேற்று இந்த நாய் குட்டிகளுடன் இல்லை. இன்று தாய்மையின் பூரிப்புடன் தன் குட்டிகளை அணைத்துக் கொண்டு கிடப்பதை பாருங்கள்! நேற்று பள்ளிக்கூடம் செல்ல அழுது அடம் பிடித்த குழந்தை இன்று சிரித்துக் கொண்டே அம்மைக்கு டாட்டா சொல்வதைப் பாருங்கள்! இப்போது சொல்லுங்கள்! எல்லா நாளும் ஒன்றா?

கவிதை என்றால் தனிமையில் உட்கார்ந்து கொண்டு ஆழ்ந்த மோனத்தில் மூழ்கி கற்பனை உலகத்திலிருந்து காவியமாக சொற்களைத் தேர்ந்தெடுத்து அழகான மாலையாகத் தொடுத்து கொடுப்பதல்ல. மிகச் சாதாரணமான நம் அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் கவித்துவமான தருணங்களே கண்டுகொள்ளும் கவி மனம் வேண்டும். கவி மனம் என்றால் வேறொன்றுமில்லை. குழந்தையின் மனம் வேண்டும்.. அந்த மனம் தான் கவிஞர்களின் மனம். அந்தச் சாதாரண சம்பவங்களின் கவித்துவமான தருணங்களை தன் மொழியால் கவிதையாக்கி அசாதாரணமான ஒரு உண்மையை, ஒரு உணர்வை, ஒரு அழகை, ஒரு அநுபவத்தை, தருகிற கவிஞர். கலாப்ரியா. கலாப்ரியாவின் கவிதைகளில் தினசரி சம்பவங்களே கவிதை உருக்கொள்கின்றன என்றாலும் அது வாசித்ததும் மறந்து போகும் செய்தியாக இல்லை. அன்றாட சம்பவங்களிலிருந்து ஒரு ஆச்சரியத்தை, ஒரு அழகைக் கண்டுபிடிக்கிறார் கவிஞர்.கலாப்ரியா. வாழ்வின் ஆனந்தத்தையும் அழகையும், அற்புதத்தையும், நகை முரணையும் துயரத்தையும் நம் மனம் விம்மச் சொல்கிறார்.

கொலு வைக்கும்

வீடுகளில்

ஒரு குத்து சுண்டல்

அதிகம் கிடைக்குமென்று

தங்கையைத்

தூக்க முடியாமல்

தூக்கி வரும்

அக்காக்குழந்தைகள்

யதார்த்த உலகில் நடக்கும் சம்பவம் கவிஞரின் பார்வையில் வேறொன்றாகத் தெரிகிறது. குழந்தைகளின் மனதை கவிஞர்களன்றி யாரால் புரிந்து கொள்ள முடியும்? அதனால் தான் சினிமா தியேட்டரில் ஒரு டிக்கெட்டில் இரண்டு பேரை எப்போதாவது அனுமதிக்கும் அண்ணாச்சி இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு போகிறான். எதற்கு?

தம்பிக்கு

அப்பா தந்த

நாலணாவைப்

பத்திரமாய்

தான் வாங்கி

வைத்துக் கொண்டு

அண்ணன்கள்.

அப்படி அநுமதித்து விட்டால் அந்த நாலணாவில் வாங்கித் திங்கலாமே என்ற ஆசை. எளிய மனிதர்களின் எளிய ஆசைகள். இளம்பருவக் காதலை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் கவிஞர் கலாப்ரியா பாருங்கள்;

பேனாவும்

நோட்டுகளும் என்னைப்

பெரியவனாக்கிய போது

சிலேட்டுகளை

நெஞ்சில் அணைத்து

கழுத்தைச் சாய்த்து

மூக்கையுறிஞ்சி

உன்னருகே நின்று

மனக்கணக்குப் போடுகிற

சுகமொன்று மறுக்கப்பட்டது

பூக்களின் காதல்

நினைத்துதிர்கிற புண்ணியங்கள்

இலைகளுக்கன்றி

மரங்களுக்கில்லை..சசி

தமிழ்க்கவிதையுலகின் மிக முக்கியமான கவிஞரான கலாப்ரியா பலதலைமுறைக் கவிஞர்களைத் தன் கவிதைகளால் பாதித்திருக்கிறார் என்றால் மிகையில்லை. அவருடைய கவிதைகளுக்குள் ஒரு கதை இருக்கும். காட்சிச்சித்திரங்களின் வழியே நம் வாழ்வின் யதார்த்தத்தை வலிமையாகச் சொல்வதில் கலாப்ரியாவுக்கு ஈடு இணை கிடையாது எனலாம்.

அழுது தொலைச்சிராதள்ளா

மானம் போயிரும்

நொடிக்கொரு தரம்

மகளை ( சத்தம் வெளிவராமல் )

அடக்கிக் கொண்டு

தானும் அழுகையை

ஜெயித்துக் கொண்டு

செத்துப்போன சிசுவைத் துணியில்

சுற்றி

கழுத்து தொங்கவிடாமல்

கவனமாக

வற்றிப்போன

மார்போடு அணைத்துக் கொண்டு

ஜெனரல் ஆஸ்பத்திரி

வாசலில்

டவுன் பஸ்ஸுக்காக

அம்மாவும்

அம்மாவும்.

கவிஞர் கலாப்ரியாவின் கலை மேதைமையைச் சொல்ல இதை விட வேறென்ன வேண்டும்?

நன்றி-அகில இந்திய வானொலி நிலையம்

Wednesday 22 October 2014

என்றும் வாழ்க்கையை நேசிக்கும் கவிஞன்

உதயசங்கர்SAMAYAVEL_thumb[7]

சதா வாழ்க்கை என்னும் பேராறு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் பேராற்றில் முங்காச்சி போட்டு எந்திரிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அநுபவம். சிலருக்கு ஜீவ அமுதமாய் ஆறு உடலிலும், மனதிலும் ஒரு பேரானந்தத்தை உண்டுபண்ணுகிறது. சிலருக்கு அது ஒரு தியானம். மூச்சடக்கி ஒவ்வொரு கணத்தையும் இந்தப் பிரபஞ்சத்தின் காலவெளியில் கலந்து விடுகிற தியானம். சிலருக்கு நீர் உடலில் பட்டதும் அதுவரை உறங்கிக் கொண்டிருந்த புலன்கள் சட்டென கண்களைத் திறக்கும் தருணம். சிலருக்கு இத்தனை காலமும் யார் யாரோ முங்கி எழுந்த ஆற்றில் தானும் முங்கி எழும்போது ஏற்படும் எளிய உணர்வு. சிலருக்கு இந்தப் பேராற்றில் அள்ளிய ஒரு துளி நீர் தான் தன்னுடைய வாழ்க்கை என்ற அடக்கம். சிலருக்கு இந்த முங்காச்சி வெறுமனே ஒரு அன்றாடக்கடமை. சிலருக்கு தாங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கக் கிடைத்த ஒரு இடைவெளி. சிலருக்கு மனமும் உடலும் ஒடுங்கி பேரமைதியில் கலந்து விடும் காலத்துளி. சிலருக்கு அன்றாடச் சில்லரைப்பிரச்னைகளை செலவிடக்கிடைத்த பெட்டிக்கடை. சிலருக்கு வெஞ்சினத்தை கூர் தீட்ட கிடைத்த சாணைக்கல். சிலருக்கு நேசம் வளர்க்கும் பூந்தோட்டம். சிலருக்கு தங்கள் ஆத்தாமையைச் சொல்லி மனசாறக் கிடைத்த நட்பு. சிலருக்கு எப்போதும் யார் மீதாவது புகார் சொல்லிக் கொண்டேயிருக்க ஒரு புகார் பெட்டி. யார் யாருக்கு எப்படியெப்படி அநுபவங்கள் கிடைத்தாலும் வாழ்க்கை தன்பாட்டில் ஓடிக் கொண்டேயிருக்கிறது.

இந்த வாழ்வெனும் பேராற்றில் தான் சமயவேல் என்ற கவிஞரும் முங்காச்சி போட்டு எந்திரிக்கிறார். ஆனால் அவர் வாழ்க்கையை ஒரு தோல்வியாகவோ, அவநம்பிக்கையாகவோ, தடையாகவோ , பாவமாகவோ, பார்க்கவில்லை.

வாழ்வின் ஒவ்வொரு கிளையிலும்

உன்னதம் தேடுவதை

ஒரு போதும் நிறுத்தேன்

உண்மையை மேலும் மேலும்

காதலிப்பேன்

நேசம் விதைத்த காட்டில்

நெருப்பு முளைத்தாலும்

பிடுங்கி எறிந்து விட்டு

உழுது விதை விதைப்பேன்

இதோ இந்த வாழ்க்கை எல்லாவிதமான அற்புதங்கள் நிறைந்ததே. இந்த வாழ்க்கை ஒரு அதிசயச் சுரங்கம் , இந்தச் சுரங்கத்தில் அபூர்வமான வைரங்களும் வைடூரியங்களும் தங்கமும் கொட்டிக்கிடக்கின்றன. கூடவே குப்பை கூளங்களும். யார் எவ்வளவுக்கெவ்வளவு சுரங்கத்தைத் தோண்டுகிறார்களோ அவர்களுக்கு வாழ்க்கை அவ்வளவுக்கவ்வளவு வெகுமதிகள் கொடுக்கத் தயாராக உள்ளது. ஆனால் நாம் தயாராக வேண்டுமே. இந்த வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஒளிந்து ஓடாமல் எதிர் கொள்ள வேண்டுமே. கவிஞர் சமயவேலும் நம்மை வாழ்க்கையை எதிர் கொள்ளச் சொல்கிறார். தன்னுடைய எளிய கவிதைக்காட்சியின் வழியாக.

என்றும்..

கூரை முகட்டுப்பட்சிகளின் கரைதல்களுடன்

இமைகளைப் பிரித்து வாழ்த்துச் சொல்லும்

இளங்காலை

ஒரு உடம்பு முறுக்கலில் மெல்லமே பிரியும்

நேற்றின் அயர்வுகள்

வாசலைத் தாண்டி

உப்புக்காரனின் குரலோடு

ஒரு மாபெரும் இயக்கம் தொடங்கி விட்டது

குளிக்க, சாப்பிட, வேலைக்கென

கலகத்துக்கு அழைக்கும் வாழ்க்கையை

இன்றும் நேசிப்பேன்.

நேசம் ஒன்று தான் இந்த வாழ்வினை அர்த்தப்படுத்துவது. இந்த பூமிப்பந்திலுள்ள ஒவ்வொரு உயிரையும் நேசியுங்கள். உங்கள் வாழ்க்கையையும் நேசியுங்கள். நேசத்தின் வழியாகவே நம்முடைய அனைத்து அயர்ச்சிகளையும் போக்க முடியும். இத்தகைய மகத்தான ஞானத்தை தன் எளிய கவிதை வரிகளில் சொல்லியிருக்கிறார் கவிஞர் சமயவேல். காற்றின் பாடல், அகாலம், என்ற கவிதை நூல்களின் மூலம் தமிழ்க்கவிதையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றுள்ள கவிஞர் சமயவேல் தன்னுடைய எளிய, நம்பிக்கையூட்டும் கவிதை வரிகளால் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இவருடைய கவிதைகளை வாசிக்கும் தோறும் நம் மனதில் ஒளி பெருகும். ஒவ்வொரு நாள் காலையும் புத்தம் புதிதாக புலரும். இன்றும் அப்படிப் புலரட்டும்.

 

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Sunday 19 October 2014

கவிஞர்களின் கவிஞர் பிரமிள்

piramil உதயசங்கர்

நவீன தமிழ் இல க்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை தருமு சிவராமு என்ற பிரமிள்.ஆவார். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்த பட்சத்தை எட்டியுள்ளது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமையானவராக இருந்தார். இவரது ஆன்மீக ஈடுபாடு இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. படிமக்கவிஞர் என்று சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம் இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க்கவிதை வரலாற்றில் தனித்துவம் மிக்கதாகும்.

பழங்கவிதைகளில் உருவம், உருவகம், உவமை, எதுகை, மோனை, என்ற அலகுகளைப் போல நவீன கவிதைகளில் படிமம் என்பது கவிதையில் சொல்ல வருகிற பொருளை பன்முகத்தோற்றத்துடன் வாசகனின் சிந்தனைகளைத் தூண்டி விடவும், அவனுக்கு, கவித்துவ இன்பளிக்கவும் படைக்கப்படுகிறது. அப்படி நவீன கவிதைகளில் படிமத்தை பிரமிள் பயன்படுத்திய அளவுக்கு வேறெந்த கவிஞரும் பயன்படுத்தியதில்லை என்று உறுதியாகக் கூற முடியும். ஒரு விடியலைப் பற்றி எப்படியெல்லாம் கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்.

விடிவு

பூமித்தோலில்

அழகுத்தேமல்

பரிதி புணர்ந்து

படரும் விந்து

கதிர்கள் கமழ்ந்து

விரியும் பூ

இருளின் சிறகை

தின்னும் கிருமி

வெளிச்சச் சிறகில்

மிதக்கும் குருவி.

அதே போல மின்னலை அவர் படிமமாக்கி மகிழ்வதைப் பாருங்கள்.

மின்னல்

ககனப்பறவை

நீட்டும் அலகு

கதிரோன் நிலத்தில்

எறியும் பார்வை

கடலுள் வழியும்

அமிர்தத்தாரை

கடவுள் ஊன்றும்

செங்கோல்.

அடடா என்ன அழகாய் படிமங்களை அடுக்குகிறார் கவிஞர். எல்லாக்கலைகளும், தத்துவங்களும், மனித வாழ்வின் அர்த்தத்தையே தேடி ஆராய்கின்றன. இந்த வாழ்வெனும் பெருங்கடலில் மிதக்கும் சிறு துரும்பான நான் யார்? எதற்காக இந்த புவியில் பிறந்தேன்? நான் பிறந்ததற்கு ஏதேனும் அர்த்தம் உண்டா? என்று சாதாரண மனிதர்களிலிருந்து ஞானிகள் வரை கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தக் கேள்விகளைப் பின் தொடர்ந்து போகிறவர்கள் அவரவர் கண்ட ரகசியங்களை சமூகத்திடம் பகிர்ந்து கொள்கிறார்கள். பிரமிளுக்கும் அந்தத் தேடல் தீவிரமாக இருந்திருக்கிறது.

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின்

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது.

என்ற கவிதையிலாகட்டும்,

குமிழிகள்

இன்னும் உடையாத ஒரு

நீர்க்குமிழி

நதியில் ஜீவிக்க

நழுவுகிறது

கைப்பிடியளவுக் கடலாய்

இதழ்விரிய

உடைகிறது

மலர்மொக்கு.

வாழ்வின் இறுதி நிகழ்வான மரணத்தைப் பற்றிய கவிதையிலும் சரி வாழ்க்கை பற்றிய இவருடைய விசாரம் வாழ்வின் மீதான நம்பிக்கையை, பிடிப்பை நமக்குத் தெரிவிக்கிறது.

இறப்பு

சிறிதில் பெரிதின் பளு

பாழின் இருளைத் தொட்டுன்

நுதலில் இட்ட பொட்டு

பார்வைக் கயிறு அறுந்து

இமையுள் மோதும் குருடு

ஒன்றும் ஏதுமின்றி

இன்மை நிலவி விரிதல்

வண்டியை விழுங்கும் பாலம்

மஞ்சம் கழித்த பஞ்சு

கூட்டை அழிக்கும் புயல்

புயலில் தவிக்கும் புள்

வாழ்வின் சூழலைத் துறந்து

என்றோ இழந்த வாசக்காற்றுள்

வீழும் ரோஜா

துணியே நைந்து இழையாய்

பஞ்சாய் பருத்தித் திரளாய்

பின்னே திருகும் செய்தி

காற்றை விழுங்கும் சுடர்

சுடரை உறிஞ்சும் திரி

வினையில் விளைவின் விடிவு

விளையாவிடிவின் முடிவு

தொடங்காக் கதையின் இறுதி

நிறுத்தப்புள்ளிகளிடையே

அச்சுப்பிழைத்து

அழித்த வசனம்

வெறும் வெண் தாள் சூன்யம்.

கற்பனையின் எல்லையிலிருந்து காட்சி ரூபங்களை படைத்து அதில் வாழ்வின் அநுபவச்சாற்றைப் பிழிந்து சூத்திரம் போல் கவிதை படைக்கும் பிரமிள் கவிஞர்களின் கவிஞர் என்பதில் வியப்பேது?

நன்றி-அகில இந்திய வானொலி நிலையம்

Saturday 18 October 2014

புதுமைகளின் முதல் குரல்

உதயசங்கர்

pudumaippithan

நவீன தமிழிலக்கியத்தினை உலக இலக்கியத்துக்கு இணையாகப் பேச வைத்த படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் புதுமைப்பித்தன். இலக்கியத்துக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த கலை ஆளுமை. தமிழ்ச்சிறுகதைகளின் போக்கையே மாற்றியமைத்தவர். யாரோடும் ஒப்பிட முடியாத சுயம்புவான படைப்பாளி புதுமைப்பித்தன். அவருடைய எழுத்தின் வேகத்திலும் அறச்சீற்றத்திலும் உண்மை சுடர் விடும். அவர் முழுமையுமாய் ஒரு கலைஞனாக இருந்தார். இலக்கியத்தைத் தன் வாழ்வென நினைத்து வாழ்ந்து மறைந்தவர்.

காலத்தைக் கண்ணாடியெனக் கலைஞனே காட்டுகிறான். கலையின் வழியே காலம் மீண்டும் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறது. அடிமுடியில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் காலப்பேரருவியில் கலைஞன் அள்ளும் கை நீரே அவனுடைய படைப்புகள். படைப்பை வாசிக்கும்போது கண்முன்னே ஆடும் காட்சித் தோற்றங்கள், மனித மனதில் வாழ்க்கை மதிப்பீடுகளை, சமூக உணர்வை ஏற்படுத்துகிறது.

சோகை பிடித்திருந்த தமிழ்ச்சிறுகதைகளுக்குப் புது ரத்தமும் புது வேகமும் கொடுத்தவர் புதுமைப்பித்தன். எல்லோரும் எழுதத் தயங்கிய விஷயங்களைத் துணிச்சலாக எழுதி அந்தக்காலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். அவருடைய பொன்னகரம், சங்குத்தேவன் தர்மம், மகாமசானம், கயிற்றரவு, கபாடபுரம், சித்தி, செல்லம்மாள், துன்பக்கேணி, இன்னும் பல கதைகளும் புதுமைப்பித்தனை இன்றளவும் தமிழ்ச்சிறுகதை மேதை என்று கொண்டாட வைப்பவை. தமிழ்ச்சிறுகதைகளில் மட்டுமின்றி கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரைகள், என்று எல்லாத்துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் புதுமைப்பித்தன்.

புதுமைப்பித்தனின் காலம் சுதந்திரப்போராட்ட காலம். உணர்ச்சிக் கொந்தளிப்பான காலம். ஆனால் உண்மையும் பொய்மையும் கலந்து மாயமான் தோற்றம் கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தையே புதுமைப்பித்தன் தன் கூரான எழுத்துகளால் பகிடி செய்தார். பொய்மையின் முகத்திரையைக் கிழித்தெறிய தன்னுடைய எழுத்தைப் பயன்படுத்தினார். முக தாட்சண்யம் சற்றுமில்லாமல் அவர் காட்டிய வேகத்தைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள். கதை, கவிதை, கட்டுரை, என்று எல்லாவற்றிலும் அவருடைய மேதமை ஒளி வீசியது.

உணர்ச்சியும் , வேகமும், கருத்தும் கொண்ட அவருடைய ” ஓடாதீர் “ கவிதையைக் கேளுங்கள்.

ஓகோ உலகத்தீர் ஓடாதீர்

சாகா வரம் பெற்ற

சரஸ்வதியார் அருள் பெற்ற

வன்னக்கவிராயன் நானல்ல

உன்னிப்பாய் கேளுங்கள்

ஓடாதீர்

வானக்கனவுகளை

வக்கணையாகச் சொல்லும்

உண்மைக் கவிராயன்

நானல்ல

சத்தியமாய் சொல்லுகிறேன்

சரஸ்வதியார் நாவினிலே

வந்து நடம் புரியும்

வளமை கிடையாது

உம்மைப்போல் நானும்

ஒருவன் காண்

உம்மைப்போல் நானும்

ஊக்கம் குறையாமல்

பொய்கள் புனைந்திடுவேன்

புளுகுகளைக் கொண்டும்மை

கட்டி வைத்துக் காசை

ஏமாந்தால்

கறந்திடுவேன்

என்று கவிஞனையும், கவிதையையும், வாசகனையும் பகிடி செய்யும் கவிதை கடைசியில் சமூகத்தின் பொய்மை முகமூடியை கிழிக்கிறது.

இத்தனைக்கும் மேலே

இனி ஒன்று

ஐயா நான்

செத்ததற்குப் பின்னால்

நிதிகள் திரட்டாதீர்

நினைவை விளிம்பு கட்டி

கல்லில் வடித்து

வையாதீர்

வானத்து அமரன்

வந்தான் காண்

வந்தது போல்

போனான் காண்

என்று புலம்பாதீர்

அத்தனையும் வேண்டாம்

அடியேனை விட்டு விடும்

………………………………………………………………………..

……………………………………………………………………………..

சொல்லுக்குச் சோர்வேது

சோகக்கதை என்றால்

சோடி இரண்டு ரூபா

காதல் கதை என்றால்

கை நிறையத் தரவேணும்

ஆசாரக் கதை என்றால்

ஆளுக்கு ஏற்றாற் போல்

பேரம் குறையாது

பேச்சுக்கு மாறில்லை

ஆசை வைத்துப் பேசி எமை

ஆட்டி வைக்க முடியாது

காசை வையும் கீழே

பின் கனவு தமை வாங்கும்

இந்தா

காலத்தால் சாகாது

காலத்தின்

ஏலத்தால் மலியாது

ஏங்காணும்

ஓடுகிறீர்

ஓடாதீர்

உமைப்போல நானும்

ஒருவன் காண்

ஓடாதீர்!

சமூகத்தின் பொய்மைகளை புதுமைப்பித்தன் அளவுக்கு சாடியவர்கள் உண்டா என்பது சந்தேகம். அவருடைய கவிதை வரிகள் ஒவ்வொன்றும் பளீரென மின்னலைப் போல ஒளிர்கிறது. வாசிக்க வாசிக்க வேகம் எடுக்கிறது. போலித்தனத்தைச் சாடி கேலி பேசுகிறார் .தமிழிலக்கியத்தில் சாகாவரம் பெற்ற கலைஞர்களின் வரிசையில் புதுமைப்பித்தனுக்கு தனி இடம் உண்டு.

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Friday 17 October 2014

அன்பின் பெருங்காட்டினுள் ஒரு கவிஞன்

vannadasan உதயசங்கர்

 

சைக்கிளில் வந்த

தக்காளிக்கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்துத் திசைகளில்

பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கிப் போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை.

தமிழிலக்கிய வாசகப்பரப்பில் தன்னுடைய கதைகளாலும், கவிதைகளாலும் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள கல்யாண்ஜி என்ற வண்ணதாசன், தன் இலக்கியக் கோட்பாடாக சகமனித நேசத்தையே முன்வைக்கிறார். சமூகமாக வாழ்வதற்கு விதிக்கப்பட்ட மனிதர்கள் ஏன் தனித்தனித் தீவுகளாக மாறுகிறார்கள். சகமனித துயரம் கண்டு இரங்காமல், கை தூக்கி விடாமல், உதவி செய்யாமல், மனிதர்கள் எப்படி சுயநல மூட்டையாக மாறிப்போனார்கள்? சகமனித சகவாழ்வு மறந்து போனதற்குக் காரணம் என்ன? சாதாரணக்காட்சியிலிருந்து அசாதாரணமான உண்மையை கவிதை மூலம் வெளிப்படுத்துகிறார் கல்யாண்ஜி.

வாழ்வின் நெருக்கடிகள் தான் கவிஞர்களைத் தூண்டுகின்றன. எல்லாக்கவிஞர்களுமே அதை வேறு வேறு விதமாகச் சொல்லிப் பார்க்கிறார்கள். வாழ்வின் சிடுக்குகளைப் புரிந்து கொள்ளவும், அவிழ்த்து விடவும் முயற்சிக்கிறார்கள். கல்யாண்ஜியின் கவிதையுலகு யதார்த்தமான வாழ்க்கைச் சித்திரங்களின் வழியே தன்னையும் வாழ்வையும் விசாரிக்க முயல்கிறது.

அலைச்சல்

இக்கரைக்கும் அக்கரைக்கும்

பரிசல் ஓட்டிப்

பரிசல் ஓட்டி

எக்கரை

என்கரை என்று

மறக்கும்

இடையோடும் நதி மெல்லச்

சிரிக்கும்.

வாழ்நாள் முழுவதும் எதைத் தேடி? எதற்காக? எங்கே ? என்று தெரியாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் நம்மைப் பார்த்து வாழ்வெனும் பெருநதி சிரிக்காமல் என்ன செய்யும்?

பேசும் பாரென் கிளியென்றான்

கூண்டைக் காட்டி வாலில்லை

வீசிப் பறக்கச் சிறகில்லை

வானம் கைப்பட வழியில்லை

பேசும் இப்போது பேசுமென

மீண்டும் மீண்டும் அவன் சொல்ல

பறவையென்றால் பறப்பதெனும்

பாடம் முதலில் படியென்றேன்.

கவி மனதின் கவிதை வெளிப்பாடுகள் ஒரு வாசகருக்கு வாழ்வின் வெம்பரப்பில் நம்பிக்கை தருகின்றன. விருட்சத்தின் நிழல் போல, தீராத தாகத்தின் போது கிடைத்த சுனை நீர் போல, அவரை ஆசுவாசப்படுத்துகிறது. அவரை யோசிக்க வைக்கின்றன. வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ஆராயவும் அதை எதிர்கொள்ளும் மனதினைப் புரிந்து கொள்ளவும் தூண்டுகின்றன. கவிதை நேரடியான செய்தியாக இல்லாமல் பூடகமான, உருவகமான, மறைமுகமான, அநுபவங்களைச் சொல்லி விளங்க வைக்கின்றன. இதோ கல்யாண்ஜியின் இந்தக் கவிதையைக் கேளுங்கள்:

இந்த நுனியும் இன்னொரு நுனியும்

எனக்குள் ஒரு காடு இருந்தது

சில மிருகங்களூம் இருந்தன

வேட்டையாடத் தெரியவில்லை

அதற்குப் பதிலாகக்

காட்டையே அழிக்க வேண்டியதாயிற்று

காற்றுக் காலங்களில் இப்போது

என்மீது மகரந்தம் படிவதில்லை

இனப்பெருக்கப் பெயர்ச்சியில்

வெளிப்பறவைகள் முட்டையிட

எனக்குள் ஊடுருவிச் சிறகடிப்பதில்லை

கலவிக்கால அழைப்புடன் திரியும்

புலிகளின் மோக உறுமல்கள்

காதில் விழுவதில்லை

கிளர்ச்சியுற்ற இரவுகளில்

உச்சிநிலா வெளிச்சத்தில் வாசிக்கும்படி

கானகத்தின் கவிதை எழுதப்பட்ட சருகுகள்

காலருகில் நகர்ந்து வருவதில்லை

வனப்பூ சூடிய கூந்தலுடன்

தாண்டிச் செல்ல யாருமில்லை

மண்புழுக்கள் துளைத்து துளைத்து

மனதில் செம்மண் பூப்பதில்லை

மழைக்காலம் முடிந்ததும்

ஆதி விதைகள் பூமி கீறி எழும்

அநுபவத்தின் பரவசம் வாய்ப்பதில்லை

மூங்கில் தீ தொலைந்து விட்டது

முற்றிலுமாக.

இன்னொரு நுனியில் காடு இல்லாமல்

இந்த நுனியில் வீடு மட்டும் இருந்து

என்னசெய்ய?

மனமெனும் காட்டில் இயற்கையெனும் காட்டையே அழித்து விட்ட பின்பு எப்படி வாழ்வு சிறக்கும்? கவிதையின் ஒவ்வொரு வரிகளும் தருகின்ற பரவச அநுபவம் நம்மை நெகிழ வைக்கிறது. ஆற்றாமை கொள்கிறது. சிந்திக்க வைக்கிறது. வாழ்வைப் புரிந்து கொள்ளவும், அதை மேன்மைப்படுத்தவும் நம்மைத் தூண்டுகிறது அத்துடன் இத்தகையக் கவிதைகளை எழுதிய கவிஞர் கல்யாண்ஜியை மனமார வாழ்த்துகிறது.

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Thursday 16 October 2014

மரங்களும் மனிதர்களும்

உதயசங்கர்sundararamasamy

நமது வாழ்க்கை அநுபங்களால் கட்டமைக்கப்பட்டது. அநுபவங்கள் மூலமாக நமது அறிவு வளமை பெறுகிறது. நமது அறிவு வளத்தினால் வாழ்வில் எதிர்கொள்ளும் புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்வது எளிதாகிறது. ஒவ்வொருவரும் அவரவர் அநுபங்களை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்போது கவிஞர் மட்டுமே அதைப் பொதுவானதாக்கி உலகத்தீரே என்று விளித்துச் சொல்கிறான். அதை கவிதை மொழியில் சொல்கிறான். கண்ணுக்குப் புலனாகாக் கிருமி எப்படி நுண்பெருக்கிக் கண்ணாடி வழியே பார்க்கும் போது எப்படிப் புலப்படுகிறதோ அப்படி இந்த வாழ்வின் அநுபவங்களின் வழியே வாழ்க்கையின் சாராம்சத்தைச் சொல்ல முயற்சிக்கிறான். எத்தனையோ தருணங்கள் கவித்துவத் தருணங்களாக எல்லோருக்கும் வாய்க்கின்றன. நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கும் லட்சியங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் மனதில் ஏற்படுத்துகின்ற சலனங்கள் அலைஅலையாய் முட்டி மோதுகின்றன.

இந்தச் சலனங்களை வெளிப்படுத்தவியலாத ஒரு கணத்தின் துளியில் மனம் நிறைகிற ஒரு ததும்பல். ததும்பி வழிகிற நிறைவை மொழியில் உருவகப்படுத்திப் பகிர்ந்து கொள்ள விழைகிற ஆவல். இந்த ஆவலின் வெளிப்பாடே கலையாக, கவிதையாகப் பரிணமிக்கிறது.

இயற்கையின் கொடையான மனிதன் அந்த இயற்கையினை தன் பேராசையெனும் கரண்டியினால் சுரண்ட ஆரம்பித்து விட்டான். இயகையின் அங்கமான மனிதனும் இயற்கையே. இதை உணராததால் இயற்கையை விட தான் உயர்ந்தவன் என்ற அகங்காரம் மேலோங்கி பூமிப்பந்தில் காயங்களை ஏற்படுத்துகிறான். இயற்கை விம்முகிறது. படைப்பே படைப்பாளியை அவமதிக்கிற செயலை எப்படிப் பொறுத்துக் கொள்ளும்?

தன் கவிதைகளாலும், கதைகளாலும், நாவல்களாலும், சிந்தனைத் தெறிப்பு மிக்க கட்டுரைகளாலும் தமிழிலக்கியத்தின் திசையைத் தீர்மானிப்பவராக இருந்த பசுவய்யா என்ற சுந்தரராமசாமி இயற்கை போலும் மனிதன் வாழ்வது பேரானந்தம் என்கிறார். அவருடைய கவிமனம் மரங்களோடு மனிதர்களை ஒப்பிடுகிறது. ” ஏண்டா மரம் மாதிரி நிற்கிறே “ என்ற உண்மைக்குப் புறம்பான நடைமுறையை மாற்றுகிறார் மரம் மாதிரி நிற்க முடியவில்லையே என்ற ஏக்கம் வரும் கவிதை இதோ:

விருட்ச மனிதர்கள்

மரங்கள் போல வாழ்வு என்று கிடைக்கும்?

மோனமும் அழகும் அங்கு கூடி நிற்கின்றன

கவலை இல்லை

விபத்தும் நோயும் வறுமையும் உண்டு

கவலை இல்லை

செடிகளின் வறுமை பற்றி யோசித்திருக்கிறோமா?

மிருகங்கள், பறவைகள், புழுக்கள், பூச்சிகள், செடிகள்

இவற்றின் துக்கங்களைப் பற்றி யோசித்திருக்கிறோமா?

இவற்றையும் சேர்ந்து யோசிக்கும்போது

நம் கஷ்டங்கள் தீரும்

மனிதனுக்காக ஜீவன்கள் அழிந்து கொண்டிருக்கும்

வரையிலும்

என்னை சந்தோஷமாக வை என்று

மனிதன் எப்படி யாரிடம் கேட்க முடியும்?

மரங்கள் உன்னதமானவை

கம்பீரமான எளிமை

நிர்மலமான இதயம்

மேலே மேலே செல்லும் அவா

சூரியக்கிரணங்களில் குளிப்பதில் மோகம்

மண்ணை எப்போதும் மறக்காத தன்மை

மௌனம்.

மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்.

கவிஞரின் மெல்லிதயம் செடிகளின் வறுமையைப் பற்றி, மிருகங்கள், பறவைகள், புழுக்கள், பூச்சிகள், செடிகள் இவற்றின் துக்கங்களை யோசிக்கச் சொல்கிறார். மனிதர்கள் தங்கள் கஷ்டங்களைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு மற்றெல்லா உயிர்களின் கஷ்டத்தையும் சேர்த்து யோசிக்க வேண்டுகிறார். அதோடு மரங்களை மனிதர்களின் லட்சியமாக மாற்றி உருவகப்படுத்துகிறார். மனிதர்களை விருட்சமாக மாறத் தூண்டுகிறார். கவிதையை வாசித்து முடிக்கும் போது மரங்களின் மீது மரியாதை தோன்றுகிறது. மதிக்க வேண்டும் என்ற ஆவலும் அவற்றின் மீது அன்பும் பிறக்கிறது. அந்த அன்பு இயற்கையின் மீதான பேரன்பாக மாறி இந்த பூமிப்பந்தை நேசிக்கத்தூண்டுகிறது. நேசம். நேசம் மட்டும் தான். ஆம். நேசத்தை தவிர இந்த உலகில் எது மிஞ்சப்போகிறது?

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Wednesday 8 October 2014

காட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை

உதயசங்கர்

pichamurthy

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தன் அழகு குறையாமல் கால மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டே இன்னமும் இளமை குன்றாத தமிழ்க்கவிதை மரபின் தொடர்ச்சியாக புதுக்கவிதையாக பரிணமித்தது ந.பிச்சமூர்த்தி என்ற கவிஞரால். கவிதைக்கென்று இறுக்கமான இலக்கண வரையறைகள் இருந்த காலம் ஒன்று இருந்தது. சொல்லும் பொருளை விட சொல்லும் விதத்திற்கென கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. தளைகள் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்துக்குத் தடையாக இருந்தன. மேற்கத்திய இலக்கியப் பரிச்சயம் புதிய வடிவங்களை நோக்கிய தேடலைத் தூண்டியது. எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வம் கொண்டு வந்து சேர்க்க புதிய படித்த மத்திய தர வர்க்கம் முனைந்தது. புலவர்களும், பண்டிதர்களும் பாதுகாப்பாக இலக்கணக்கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்த கவிதைக்கு இந்த புதிய மத்திய தர வர்க்கம் சுதந்திரம் தந்து விரிந்த வான்வெளியில் பறக்க விட்டது. இன்றைக்கும் தன் சிறகுகளை விரித்து பறந்து கொண்டிருக்கும் நவீன கவிதையின் பிதாமகன் என்று கவிஞர். ந.பிச்சமூர்த்தியைச் சொல்லலாம்.

ஒன்றை இன்னொன்றாக மாற்றிச் சொல்வது கவிதை. ஒன்றில் மற்றொன்றை ஏற்றிச் சொல்வது கவிதை. ஒன்றைச் சொல்லி இன்னொன்றைச் சுட்டிச் செல்வது கவிதை. ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்து வருவது கவிதை. ஆகக் கவிதையின் அழகே அதன் மறைபொருள் தான். எந்த மொழியில் கவிதைகள் அதிகம் எழுதப் படுகின்றனவோ அந்த மொழி இன்னும் வளமுடனும் இளமையுடனும் வாழ்கிறது என்று பொருள். மொழியின் நுட்பமும் அழகும் கவிதையில் தன் உச்சத்தை எட்டுகின்றன. சுருக்கமாகச் சொல்லப்போனால் மொழி தன் அழகைத் தானே வியந்து அழகு பார்க்கவே கவிதையைப் படைக்கிறது என்று சொல்லலாம்.

ந.பிச்சமூர்த்தி காட்டு வாத்தின் வழியாக நம் வாழ்வை உருவகப்படுத்துகிறார்.

பூட்டியிருந்தால்

பேர்த்தெறிய முயலாதே

குடைக்கம்பி தேடாதே

கட்டிடம் கட்ட வரும் கடப்பாரையை

ஆயுதமாக்காதே

ரத்தத்துளியைப்

போர்க்கொடியின்

ஊடும் பாவுமாய் ஆக்காதே

புரட்டி எறியும் வெறும் வேலை

உனக்கில்லை

உலகைத் திருத்தும் உத்தமச்செய்கை

உனக்கேனப்பா?

என்று தொடரும் கவிதையில் லட்சிய வாதத்தின் பொய்மை கேலி செய்யப்படுகிறது. வாழ்வின் முரண்களான பொய், சூது, கபடம், நயவஞ்சகம், பழி, என்ற அனைத்தையும் சமூக நலன் என்று மயக்கு மொழிகள் கூறி வாழ்வை பாழாக்கும் வஞ்சகரைப் பழிக்கிறது.

உழைப்பாளியின் கையில் காசிருக்கும்

எனில் வயிறு கொடியில் உலரும்

பட்டினிச் சலிப்பின்

குறை தீர்க்கும் குளத்தில்

பெற்றோர்கள் குழந்தைகளுடன்

விழுந்து மிதந்த கதை

பத்திரிகை பேய்ப்பசிக்கு

பொரியாகிப் பெருமை தரும்

என்று சமூக நிகழ்வுகளைப் படம் பிடிக்கும் கவிதை

அன்றொரு நாள் வேடந்தாங்கலில்

அந்தி விழும் நேரம்

கடலலை போல நீர்ப்பரப்பு

நாற்கரையும் கவிந்த மரம்

நடுவில் மரத்தலைகள்

எண்திசையும் சிரிப்பது போல

சிறகடிக்கும் சத்தம்

………………………………………………………………..

………………………………………………………………

வேடந்தாங்கலில்

தண்ணீரில் மூழ்கிய தலைமயிர்

போல் விரிந்திருக்கும்

ஏரி நடு மரத்தில்

கூடு கட்டி வீடு கண்டு

முட்டை இட்டு குஞ்சு கண்டு

உயிரின் இயக்கத்தை

விண்டு வைக்கும் காவியத்தைக்

கண்டபின்னும் உன் வழியைக் காணாயோ?

என்று சைபீரியக் காட்டு வாத்தின் வலசை வரும் உள்ளுணர்வை வியந்து எல்லாவற்றையும் விட்டு விட்டு காட்டு வாத்தாகிச் சிறகை விரி. வாழ்வு வேடந்தாங்கலாகும். என்று முடியும் கவிதையில் கவிஞர். காட்டு வாத்தின் இயற்கையான உள்ளுணர்வை ஏற்று மனிதர்களின் சிறகுகளை விரிக்கச்சொல்கிறார். இந்தக் கவிதை தான் நவீன கவிதையின் சர்வ லட்சணங்களுடன் வெளியான முதல் கவிதை எனலாம். அந்த வகையில் கவிஞர். ந.பிச்சமூர்த்தி தமிழ்க்கவிதை வரலாற்றில் தனியிடம் பிடித்து விட்டார். பிச்சமூர்த்தி தொடங்கி வைத்த புதுக்கவிதை இயக்கம் இன்று ஆல் போல் பரவி விருட்சமாகி இந்தியாவின் அனைத்து மொழிக்கவிதைகளுக்கும் ஈடாக கவிதைகள் படைக்கும் பெருங்கவிஞர் குழாமை உருவாக்கி விட்டது என்றால் மிகையில்லை. கவிதை காட்டு வாத்தாகி இலக்கிய வானில் சிறகுகளை விரிக்கிறதே…நவீன கவிதையின் பிதாமகரே பிச்சமூர்த்தியே உங்களுக்கு வந்தனம்..

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Monday 6 October 2014

நவீன கவிதையின் முன்னோடி நம் முண்டாசுக் கவிஞன்

 barathi உதயசங்கர்

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோரும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்.

தமிழிலக்கியத்தின் நவீன காலத்தை கவிதை, கதை, வசன கவிதை, பத்திரிகை, கேலிச்சித்திரம், நாடகம், என்று எல்லாத்துறைகளிலும் கட்டியம் கூறி வரவேற்ற எட்டையபுரத்து மகாகவி தான் பாஞ்சாலி சபதம் முன்னுரையில் மேற்கண்டவாறு எழுதியிருக்கிறார். புலவர்களின் இலக்கணச் சிறையிலிருந்து கவிதையுணர்ச்சியை விடுதலை செய்து சுதந்திரமாக மனச்சிறகுகளை விரித்து கவிதை வானில் முதன்முதலில் பறக்கவிட்டவர் நம்முடைய பாரதி. தமிழின் வாழ்வுள்ள வரைக்கும் பாரதியின் கவிதைகள் தமிழர்களின் வீடுகள் தோறும் முழங்கும்.

ஒருமுறை பாரதி எட்டையபுரம் மன்னருடன் மதுரை சென்றிருந்த போது மன்னர் அவருக்கு வேண்டிய பொருள் வாங்குவதற்கு ஐநூறு ரூபாய் கொடுத்திருக்கிறார். பாரதி எட்டையபுரம் திரும்புகிறார். அவருடைய துணைவியார் செல்லம்மாள்பாரதி காண வீட்டுக்கு முன்னால் வண்டியிலிருந்து மூட்டை மூட்டையாய் சாமான்கள் இறங்குகின்றன. துணையாருக்கோ மகிழ்ச்சி. நிறைய துணிமணிகளும் வெள்ளிப்பாத்திரங்களும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் என்று பூரிக்கிறார். பாரதி உள்ளே வந்து மூட்டைகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கிறார். அத்தனை மூட்டைகளிலும் புத்தகங்கள்! புத்தகங்கள்! புத்தகங்கள்! ஆங்கிலம் தமிழ், சமஸ்கிருதம் தமிழ் என்று புத்தகங்களைக் குவிக்கிறார். செல்லம்மாளின் முகம் வாடுகிறது. உடனே ஒரு சேலையை எடுத்து அவரிடம் நீட்டுகிறார் பாரதி. செல்லம்மாளின் முகம் மலர்கிறது. புத்தகங்கள் நமது அறிவை விசாலப்படுத்துகின்றன. புத்தகங்களே நமது மனதை விரிவுபடுத்துகின்றன. புத்தகங்களே நம்மை ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய மனிதர்களாக்குகின்றன.

இதோ பாரதியின் கவிதையைக் கேளுங்கள். இயற்கையை எளியபதங்களால் எப்படி வர்ணிக்கிறான். அதில் வாழ்வின் அர்த்தத்தையும் ஏற்றுகிறான் என்று பாருங்கள்.எதிரே நிற்கும் காற்றுடனான அவருடைய உரையாடலைக் கேளுங்கள்.

காற்றே வா, மெதுவாக வா

ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே

காயிதங்களையெல்லாம் எடுத்து விசிறி எறியாதே

அலமாரிப்புத்தகங்களைக் கீழே தள்ளி விடாதே

பார்த்தாயா இதோ தள்ளி விட்டாய்

புத்தகத்தின் ஏடுகளைக் கிழித்து விட்டாய்

மறுபடி மழையைக் கொண்டு வந்து சேர்த்தாய்

வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை

பார்ப்பதிலே நீ மகாசமர்த்தன்

நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை

நொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர்

நொய்ந்த உள்ளம் இவற்றைக் காற்றுத்தேவன் புடைத்து

நொறுக்கி விடுவான்

சொன்னாலும் கேட்க மாட்டான்

ஆதலால் மானிடரே வாருங்கள்

வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்

கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம்

உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்

உயிரை வலிமையுற நிறுத்துவோம்

உள்ளத்தை உறுதி செய்வோம்

இங்ஙனம் செய்தால், காற்று நமக்குத் தோழனாகி விடுவான்

காற்று மெலிய தீயை அவித்து விடுவான்

வலிய தீயை வளர்ப்பான்

அவன் தோழமை நன்று

அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.

ஞாயிறு, தீ, காற்று, காட்சி, சக்தி, என்று உலகத்தின் அத்தனை காட்சிகளையும், வாழ்வின் எல்லா அர்த்தங்களையும் தன்னுடைய கவிதைகளில் எப்படியெல்லாம் ஏற்றிச் சொல்கிறான். ஒவ்வொரு வரியிலும் வாசிப்பவனின் மன விசாலத்திற்கேற்ப எத்தனை ஆழம்! எத்தனை அகலம்! பாரதியை வாசிக்கும் தோறும் நம் தமிழ்மொழியின் வளம் நம்மைத் திக்குமுக்காடச்செய்கிறது. வாசியுங்கள் பாரதியை! நேசியுங்கள் நம் தாய்மொழித்தமிழை!

வாழ்க பாரதி எங்கள் முன்னத்தி ஏரே! வாழ்க! உம்புகழ்!

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Thursday 2 October 2014

நானும் பூச்சியும்

உதயசங்கர்

insects

நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்

என் கவிதையை ஒரு பூச்சி வாசித்துக் கொண்டிருந்தது

எச்சரித்தும் அது விடாமல் என் கவிதையை

பிரித்து மேய்ந்து கொண்டிருந்தது

கைகளால் தட்டி விட்டும்

வாயினால் ஊதித்தள்ளியும்

விரட்டி விட யத்தனித்தேன்

என் கவிதையில் என்ன கண்டதோ தெரியவில்லை

மீண்டும் மீண்டும் வந்து எழுத்துகளின் மீது விழுந்தது

என் கவிதை பிடிக்காமல்

திடீரென அது என்னை வந்து கடித்து விட்டால்

உடனே கைகளால் தட்டி

காலினால் மிதித்து நசுக்கி விட்டேன்

நான் நசுக்கும்போது அதுவும்

கால்களினால் என்னை நசுக்கி விட்டது

இப்போது சாகாவரம் பெற்றது என் கவிதை.