Sunday 30 July 2017

காட்டிலே விநோதம்

காட்டிலே விநோதம்

உதயசங்கர்

முயலூரில் மிகப்பெரியக் காடு இருந்தது. அந்தக்காட்டில் எக்கச்சக்கமான முயல்களும் மான்களும் இருந்தன. முயல்களும் மான்களும் அதிகமாக இருந்ததால் அவற்றைத் உணவாகச் சாப்பிடும் சிங்கம், புலி, நரி, ஓநாய், குள்ளநரி, செந்நாய், போன்ற மிருகங்களும் இருந்தன. அந்தக்காட்டில் ஒவ்வொரு வருடமும் முயலூர்க்காட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கும். எப்போதும் சிங்கம் அல்லது புலி அந்தத் தேர்தலில் நிற்கும். அப்பாவி முயல்களும், மான்களும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பார்கள். ஒரு தடவை சிங்கத்தைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள். இன்னொரு தடவை புலியைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள். தலைவர் யாராக இருந்தாலும் தினசரி தலைவர் குடியிருக்கும் குகைவீட்டுக்கு இரண்டு முயல்களும், ஒரு மானும் உணவாகப் போய் விடவேண்டும். இது தான் முயலூர்க்காட்டில் எழுதப்படுகிற முதல் சட்டம்.
இந்தச்சட்டத்தை சிங்கமும், புலியும், தலைவர் பதவி ஏற்றவுடன் போட்டு விடுவார்கள். சில முயல்களும், சில மான்களும், இந்தச்சட்டத்தை எதிர்த்தன. எதிர்த்த முயல்களும், மான்களும் மறுநாள் காணாமல் போய்விட்டன. அதனால் மற்ற சின்னப்பிராணிகள் வாயைத் திறக்கவில்லை. முயலூர்க்காட்டில் முயல்களும் மான்களும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததினால் தினம் ஒன்றோ இரண்டோ பேர் சிங்கத்துக்கோ, புலிக்கோ உணவாகச் செல்வதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
இயற்கையில் எந்தத்தாவரமோ, பறவையோ, மிருகமோ, புழுவோ, பூச்சியோ, எல்லாவற்றின் உற்பத்திப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இயற்கையே செய்த ஏற்பாடு தானே. இந்த ஆண்டு நரிக்கு தலைவர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. உடனே முயல்கள் மான்கள் மாநாடு ஒன்றை நடத்தியது. நரி அழைக்கும் கூட்டம் என்பதால் மான்களும் முயல்களும் நம்பிக்கையில்லாமல் தான் வந்தன.
கூட்டத்தில் நரி முழங்கியது.
“ சகோதர சகோதரிகளே! இன்னும் எத்தனை நாளுக்கு சிங்கத்துக்கும் புலிக்கும் உணவாகிக் கொண்டிருப்பீர்கள்! நான் ஆட்சிக்கு வந்தால் முதல் சட்டமே இனி யாரும் முயல்களையோ மான்களையோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சாப்பிடக்கூடாது. இயற்கை மரணம் அடைந்தாலும் சாப்பிடக்கூடாது. மிகவிரைவில் முயல் கோவிலும், மான் கோவிலும் கட்டப்படும். அந்தக்கோவில்களை சிங்கமும் புலியும் சேர்ந்து கட்டி முடிக்க வேண்டும். என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தால் உங்களில் ஒருவரைக்கூட யாரும் சாப்பிட விடமாட்டேன்….”
நரியின் இந்தப்பேச்சைக் கேட்டதும் முயல்களும் மான்களும் குழம்பின. உண்மையில் இப்படி நடக்குமா? குசுகுசுவென தங்களுக்குள் பேசிக்கொண்டன. சந்தேகத்துடன் பார்த்தபோது நரி கை கூப்பிச் சிரித்துக் கொண்டிருந்தது. கைகளை மேலே தூக்கி இரண்டு விரல்களைக் காட்டியது.
“ ஊஊஊஊஊஊஊஊஊஊ……..வளர்ச்சி! வளர்ச்சி! இன்னும் வளர்ச்சி! முயல்களின் வளர்ச்சி! மான்களின் வளர்ச்சி! வளர்ச்சி ஒன்றே என் தாரகமந்திரம்!.ஊஊஊஊஊஊஊஊஊஊ.”
என்று பாட்டுப்பாடியது. நரியின் ஊளைப்பாட்டு மான்களின் முயல்களின் காதுகளைக் கிழித்தது. அவைகள் எல்லாம் சேர்ந்து,
“ ஐய்யோ… நிறுத்து..நிறுத்து.. நாங்க..உனக்கே ஓட்டுப்போடுறோம்.. தயவு செய்து பாடாதே..”
கெஞ்சின. அதைக் கேட்ட நரிக்குப் பெருமை பிடிபடவில்லை. பாட்டை நிறுத்தியது.
தேர்தல் நடந்தது. முயல்களும் மான்களும் நரிக்கு வாக்குக் கொடுத்தமாதிரியே ஓட்டுப்போட்டன. தேர்தல் முடிவு வந்தது. முடிவைக் கேட்டதும் சிங்கமும் புலியும் அதிர்ச்சியடைந்தன.
நரி ஆட்சிப்பொறுப்பு ஏற்றது. முதல் சட்டமாக மான் முயல் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டம் சரியாக அமுல்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க செந்நாய்களின் காவல்படையை நியமித்தது.
அன்றிலிருந்து சிங்கம், புலி, போன்ற மாமிச உண்ணிகள் பட்டினி கிடந்தன. காட்டு எலிகளைத் தின்று தங்கள் உயிரைக் காப்பாற்றின. சில மாதங்களில் முயலூர்க்காட்டில் முயல்களின் எண்ணிக்கை கூடி விட்டது. முயல்களின் உணவான புல்வெளி குறைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் முயல்கள். மரம், செடி, கொடி, பொந்து, பொடவு, குழி, குகை, எங்கும் முயல்கள் குடும்பம் குடும்பமாக இருந்தன. அதே நேரத்தில் திடீர் திடீரென்று நரி ராஜா அழைக்கிறார் என்று பல குடும்பங்களை செந்நாய்க்காவலர்கள் கூட்டிக் கொண்டு போவார்கள். அதன்பிறகு அந்த முயல் குடும்பங்களை அங்கே பார்க்க முடியாது. யாராவது கேட்டால் அவர்கள் வெளிநாடு போய்விட்டார்கள் என்று செந்நாய்க்காவலர்கள் சொன்னார்கள்.
சுட்டிமுயல் மூஜாவுக்கு நரியின் மீது முதலில் இருந்தே சந்தேகம் இருந்தது. ஒரு நாள் அமாவாசை இரவில் சுட்டிமுயல் மூஜாவின் நண்பனான கீஜோவின் குடும்பத்தை செந்நாய்க்காவலர்கள் அழைத்துக் கொண்டு போவதைப் பார்த்தது. இருளில் யாருக்கும் தெரியாமல் பின் தொடர்ந்தது.
நரியின் அரண்மனையின் பின்வாசலில் இரண்டு காட்டெருமைகள் பூட்டிய வண்டி நின்று கொண்டிருந்தது. அந்த வண்டிகளில் செந்நாய்க்காவலர்கள் கூட்டம் கூட்டமாகக் கூட்டிக்கொண்டு வருகிற முயல்களையும் மான்களையும் ஏற்றினர். அந்த வண்டிகளில் மேலூர்க்காடு, கீழூர்க்காடு என்று எழுதப்பட்டிருந்தது. அப்போது சுட்டிமுயல் மூஜாவுக்கு அருகில் வந்த இரண்டு செந்நாய்கள் கையில் கொண்டு வந்திருந்த ஒரு குட்டி முயலைக் கடித்துத் தின்றன. ஒரு செந்நாய் கேட்டது,
“ சட்டம் நமக்குக் கிடையாதா? நீ நினைச்சப்பல்லாம் ஒரு முயலைத் திங்கிறீயே..!”
“ ஹாஹாஹா எப்பவுமே சட்டம் மத்தவங்களுத்தான்.. இந்தா நரிராஜா என்ன செய்றாரு.. இந்த முயல்களையும் மான்களையும் வெளியூர்க்காடுகளுக்கு திங்கறதுக்கு விக்கிறாரு… அவருடைய அரண்மனையில் பாதாள அறைக்குள்ளே ஏராளமான முயல்களும் மான்களும் இருக்குது… அவருக்கு எப்ப வேண்டுமானாலும் திங்கலாம் இல்லையா?..எப்படி? சட்டம் அரசாங்கத்துக்கு இல்லை. நாம எல்லாம் அரசாங்க ஊழியர்கள்…ஹ்ஹாஹ்ஹா..”
என்று சிரித்தது. அதைக்கேட்ட சுட்டிமுயல் மூஜாவுக்கு வியர்த்தது. மெல்ல இருளில் நழுவித் தப்பித்து விட்டது.
மறுநாளிலிருந்து சுட்டிமுயல் மூஜா மற்ற முயல்களிடமும், மான்களிடமும் நடந்து கொண்டிருப்பதைச் சொன்னது. முதலில் யாரும் நம்பவில்லை. ஆனால் நாளாக நாளாக குடும்பம் குடும்பமாகக் காணாமல் போகும் முயல்களையும் மான்களையும் பார்த்த மற்ற முயல்களும் மான்களும் நம்பத்தொடங்கினர். அடிக்கடி முயல்களும், மான்களும் செந்நாய்களோடு சண்டை போடவும் செய்தன.
அடுத்த தேர்தலும் வந்தது. மறுபடியும் நரி சிரித்துக் கொண்டே வந்தது. முன்பு சொன்னதைப்போலவே உறுதிமொழி கொடுத்தது. நரி சொன்னதை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை. ஆனால் இந்த முறை முயல்களும் மான்களும் சேர்ந்து சுட்டிமுயல் மூஜோவை தேர்தலில் நிற்க வைத்தன.
அப்புறம் என்ன?
சுட்டிமுயல் மூஜோ தேர்தலில் வெற்றி பெற்றது. உடனே மான்களும் முயல்களும் சேர்ந்து சிங்கம், புலி, நரி, செந்நாய் எல்லோரையும் முயலூர்க்காட்டை விட்டுத் துரத்திவிட்டன.

நன்றி - வண்ணக்கதிர்




Friday 21 July 2017

சூரியனை மறையுங்கள்

சூரியனை மறையுங்கள்

உதயசங்கர்

பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்த கோடையூர் நாட்டு ராஜாவுக்கு குப்புறராஜா என்று பெயர் வந்து விட்டது. எப்படி அந்தப்பெயர் வந்தது என்று செந்நாப்புலவர் ஒரு புராணமே எழுதிவிட்டார். அவருடைய பெயர் மாறியதுக்கு என்ன காரணம்? எல்லாம் அந்தச் சூரியனுக்குத் தான் வெளிச்சம்.
கோடையூர் நாட்டில் கோடைகாலம் தொடங்கி விட்டது. வெயில் சுட்டெரித்தது. நாடு முழுவதும் மரங்களே இல்லை. அதோடு ஏரி, குளங்கள், கண்மாய், குட்டை, கிணறு, ஆறு, என்று எதுவும் இல்லை. ஒரு காலத்தில் அந்த நாட்டில் மரங்கள் நிறைய இருந்தன. ஏராளமான ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும், குட்டைகளும் கிணறுகளும் இருந்தன. எவ்வளவு வெயிலாக இருந்தாலும் குடிக்கத் தண்ணீர் கிடைத்து வந்தது. ஆற்றில் தண்ணீர் வற்றாமல் ஓடிக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீட்டிற்கு முன்னால் மரங்கள் இருந்தன. வீட்டில் புழங்குகிற தண்ணீர் அந்த மரங்களுக்குச் சென்று விடும். ஒவ்வொரு தெருவிலும் ஒரு குட்டையோ, குளமோ இருந்தது.  காடுகளில் தாம்போதி என்று சொல்லக்கூடிய நீர்வழிகள் ஒவ்வொரு குட்டைக்கோ, கண்மாய்க்கோ, குளத்துக்கோ, மழைக்காலங்களில் தண்ணீரைக் கொண்டு சேர்க்கும். எனவே மழைக்காலத்தில் நீர்நிலைகள் நிறைந்து ததும்பும். அதனால் மக்கள் கஷ்டப்படவில்லை.
திடீரென குப்புறராஜாவின் கஜானாவில் பணம் இல்லை. பணம் இல்லை என்றால் ராஜாவால் ஆடம்பரமாக வாழமுடியுமா? எனவே நாட்டிலுள்ள அரசாங்க நிலங்களை பணக்காரர்களுக்கு விற்றார். அதில் ஏரிகள் விற்கப்பட்டன. குளங்கள் விற்கப்பட்டன. கண்மாய்கள் விற்கப்பட்டன. குட்டைகள் விற்கப்பட்டன. மரங்கள் நிறைந்திருந்த மலைகள் விற்கப்பட்டன. அதில் எல்லாம் பெரிய பெரிய காங்கிரிட் கட்டிடங்கள் தோன்றின. வற்றாத ஜீவநதியாக இருந்த கோடையாற்றை பக்கத்து நாட்டு குளிர்பானக்கம்பெனிக்கு விற்றார். இது எல்லாம் போக மீதி இருந்த அரசு நிலங்களை ராஜா வெயிலோனும் மந்திரிகளும் பங்கு போட்டு எடுத்துக் கொண்டனர். மக்கள் பாவம்! என்ன செய்வது என்று தெரியவில்லை.
எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள். மருந்துக்குக்கூட மரங்களில்லை. எங்கும் தார்ச்சாலைகள் வெயிலில் உருகி பளபளத்தன. மண்ணைக் கண்ணால் பார்க்க முடியவில்லை. கோடைமழை கூட சாலைகளில் ஓடி சாக்கடையில் கலந்து வீணாகப் போனது. நாட்டில் குடிநீருக்குப் பஞ்சம் வந்தது. வெயிலின் தாக்கத்தினால் நோய்கள் பரவின. குப்புறராஜாவுக்கு வேனல்கட்டி வந்து விட்டது. அதுவும் உட்காருகிற இடத்தில் வந்துவிட்டது. அதனால் எப்போதும் குப்புறப்படுத்துக் கொண்டே எல்லா வேலைகளையும் பார்த்தான். குப்புறப்படுத்துக் கொண்டே சாப்பிட்டான். குப்புறப்படுத்துக்கொண்டே தூங்கினான். குப்புறப்படுத்துக்கொண்டே குளித்தான். அரசவைக்குக்கூட கட்டிலில் குப்புறப்படுத்துக்கொண்டே வந்து அரசவைக்கூட்டங்களை நடத்தினான்.
ராஜா குப்புறபடுத்தால் மக்கள் என்ன ஆவது? மந்திரிகள், புலவர்கள், சேனாதிபதிகள், சேவகர்கள், மக்கள் என்று எல்லோரும் தவழ்ந்து சென்று ராஜாவின் முகத்துக்குப் பக்கத்தில் போய் பேசினார்கள். நாட்டுமக்கள் அதுவரை வெயிலோன் என்று பெயர் பெற்றிருந்த ராஜாவுக்கு குப்புறராஜா என்று பட்டப்பெயர் வைத்து விட்டார்கள். வேனல்கட்டிகள் எந்த மருந்துக்கும் குணமாகவில்லை. ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டேயிருந்தது. குப்புறராஜா அரண்மனை வைத்தியர்கள் அனைவரையும் அழைத்தார். ஆங்கில வைத்தியர், சித்தவைத்தியர், ஆயுர்வேத வைத்தியர், ஹோமியோபதி வைத்தியர், யுனானி வைத்தியர், என எல்லோரிடமும் ஆலோசனை கேட்டார்.
எல்லோரும் ஒரே குரலில் சூரியனின் வெப்பம் குறைந்தால் தான் வேனல்கட்டி குணமாகும் என்று சொல்லிவிட்டார்கள். மந்திரிசபையைக் கூட்டினான். எல்லாமந்திரிகளும் குப்புறப்படுத்துக் கொண்டே வந்தார்கள். எல்லோருக்குமே வேனல்கட்டி. அரசவைக் கூட்டம் குப்புறப்படுத்துக்கொண்டே நடந்தது. சூரியனின் வெப்பத்தைக் குறைக்க என்ன வழி? யோசித்தார்கள்.யோசித்தார்கள். யோசித்தார்கள். ஏழுபகல், ஏழு இரவு யோசித்தார்கள். அப்போது அறிவியல்துறை அமைச்சர் ஒரு ஆலோசனை சொன்னார்.
“ பேசாமல் சூரியனை மறைத்து விட்டால்!”
” எப்படி? எப்படி? எப்படி? ” என்று குப்புறராஜா ஆவலுடன் கேட்டார்.
“ நாடு முழுவதும் ஒரு இடம் பாக்கி விடாமல் பெரிய பந்தல் போட்டு விட்டால் சூரிய ஒளி எப்படி வரும்? அதுவும் தெர்மாக்கோல் அட்டைகளை வாங்கி ஒட்டி ஒட்டிப் பந்தல் போட்டு விட்டால் சூரியன் நுழைவானா? வெயில் குறைந்து விடும். வேனல்கட்டிகளும் ஆறிவிடும்.” என்று அறிவியல்துறை அமைச்சர் சொன்னார். குப்புறராஜாவுக்கு மகிழ்ச்சி. இன்னும் ஒரு வாரத்துக்குள் நாடு முழுவதும் பந்தல் போட உத்தரவு பிறப்பித்தார். கஜானாவில் இருந்து பணத்தை வாரி இறைத்து அரசு அதிகாரிகள் பந்தல் போட்டனர். ஒருபக்கம் ஒட்டியபோது மற்றொரு பக்கம் பிய்த்துக்கொண்டு போனது. நாடுமுழுவதும் தெர்மாக்கோல் அட்டைகள் பறந்து மழை மாதிரி விழுந்தன. அதைப் பார்த்து மக்கள் சிரித்தனர்.
குப்புறராஜாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. தான் செய்த தவறு புரிந்தது. அவர் உடனே. சூரியனை மறைப்பதற்கு யார் நல்ல ஆலோசனை சொல்கிறார்களோ அவர்களுக்கு தலைமை அமைச்சர் பதவி அளிப்பதாக நாடு முழுவதும் தண்டோரா போடச்சொன்னார்  கோடையூர் நாட்டு எல்லையில் இருந்த குடிசையில் செல்லையாத்தாத்தா வசித்து வந்தார். அவர் தண்டோரா அறிவிப்பைக் கேட்டார்.
 அவர் அரசவைக்குச் சென்றார். குப்புறராஜாவிடம் இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்த நாட்டு வரைபடத்தைக் கொண்டுவரச்சொன்னார். அந்த வரைபடத்தில் இருந்த மாதிரி ஏரிகள், குளங்கள், குட்டைகள், கண்மாய்கள், கிணறுகளை உண்டாக்கச்சொன்னார். புதிதாக குட்டைகளை வெட்ட உத்தரவு இடவேண்டும் என்று சொன்னார். எல்லாவீடுகளிலும் மழைநீர் மண்ணில் இறங்க ஏற்பாடுகள் செய்யச்சொன்னார். எல்லோர் வீடுகளிலும் குறைந்தது இரண்டு மரங்கள் வைத்து வளர்க்கச் சொன்னார். ஆற்றிலிருந்து யாருக்கும் ஒரு சொட்டு நீர் விற்கக்கூடாது என்று சொன்னார். குப்புறராஜா அவர் சொன்னதையெல்லாம் கேட்டான். மக்களும் செல்லையாத்தாத்தா சொன்னபடிக் கேட்டார்கள்.
அடுத்த ஐந்து வருடங்களில் கோடையூர் நாட்டில் சூரிய ஒளியே உள்ளே புக முடியாத அளவுக்கு மரங்கள், அடர்ந்திருந்தன. நீர்நிலைகள் எப்போதும் நிறைந்திருந்தன. குப்புறராஜா இப்போது நிமிர்ந்தராஜாவாகி விட்டார். அவர் சொன்னமாதிரி செல்லையாத்தாத்தா தலைமை அமைச்சர் ஆகிவிட்டார். கோடையூர் நாடு குளிரூர் ஆகி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
நன்றி - பட்டம்




Monday 17 July 2017

நிழல்

நிழல்


உதயசங்கர்

இப்போது இரண்டு மூன்று நாட்களாகவே அந்த கரிச்சான்குருவிகளைக் காணவில்லை. எங்கே போயிருக்கும்? காலையில் அதன் பேச்சுச்சத்தம் தான் பெரும்பாலும் சுகவனம் விழிப்பதற்குக் காரணமாக இருக்கும். அவன் படுத்துக்கொண்டே அந்தச் சத்தங்களைக் கேட்டுக்கொண்டிருப்பான். கீச்ச்கீச்ச்ச் என்றோ கிகிகீகீ என்றோ இருந்தாலும் உற்றுக்கவனித்தால் அதில் பலவேறுபாடுகள் தெரியும். அவைகளும் தங்கள் பாடுகளைப் பேசிக் கொள்கிறது. சுகவனத்தின் பாடுகளைப் பேசிக்கொள்ள முருகேஸ்வரி இங்கில்லை. அவள் அவனுடன் கோவித்துக்கொண்டு போய் ஆறுமாதம் ஆகிவிட்டது. எத்தனையோ முறை போய் கூப்பிட்டான். அவள் வருவதாக இல்லை. அவளுடைய ஊர்ப்பக்கமாக மாற்றல் வாங்கிக்கொண்டு வரச்சொல்லி விட்டாள். அப்படியெல்லாம் நினைத்தவுடன் மாற்றல் கிடைக்கும் டிபார்ட்மெண்டிலா அவன் வேலை பார்க்கிறான். வெளியே காக்கைகளின் கரைச்சல் கேட்க ஆரம்பித்தது. வானம் தன் உறக்கம் கலைத்து சோம்பல் முறித்து எழுந்திரிக்கப் பிரயத்தனப்பட்டது.
சுகவனம் குவாட்டர்ஸை விட்டு வெளியில் வந்தான். எதிரே இருந்த பெரிய வாகைமரத்தின் இலைகளூடே சூரியனின் ஒளி சில்லரைகளை சிதற விட்டிருந்தது. லேசான குளிர் உடலுக்கு இதமாக இருந்தது. அப்படியே நேரே முக்குக்குப் போய் ஒரு டீ குடித்து கணேஷ் பீடியை இழுத்தால் சுகமாக இருக்கும். இந்த நினைப்பு வந்தவுடன் வாய் நமநமத்தது. எழுந்து பின்வாசல் கதவைத் திறந்து கக்கூஸ் போனான். ஒண்ணுக்குப்போய்விட்டு வந்து தொட்டியில் பிடித்து வைத்திருந்த தண்ணீரைக் கைகளில் அள்ளி அப்படியே முகத்தில் அடித்தான். ஜிவுஜிவுன்னு முகத்தில் குளிர் பரவியது. மூக்குக்குள் நமைச்சல் எடுத்தது. அவன் உள்ளே போய் துண்டை எடுத்து முகத்தைத் துடைப்பதற்குள் அடுத்தடுத்து நான்கைந்து தும்மல்கள். அவனுடைய தும்மல்கள் ஊரைக்கூட்டி விடும். அவனுடைய உருவத்துக்கும் தும்மலின் சத்தத்திற்கும் பொருத்தமே இருக்காது. முருகு கூட அவன் தும்மல் சத்தம் கேட்டுப் பலமுறை பதறியிருக்கிறாள்.
“ மெல்லத்தும்மத் தெரியாதா… ஆளு இருக்கறது நரைங்கான் போல போடற சத்தமோ பீரங்கி போல.. “ என்று பாதி உண்மைக் கோபத்துடனும், பாதி செல்லக்கோபத்துடனும் சொல்லுவாள். அதைக் கேட்டதும் சுகவனம் சோகமாகி விடுவான். அவனுடைய தும்மல் சத்தத்தை அவனால் கட்டுப்படுத்தவே முடியாது. ஆனால் முருகேஸ்வரி அவனை நரைங்கான் என்று சொல்வதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியாது. உண்மையில் அவன் அவளை விட உயரம் குறைவாக, அவளை விட மெலிந்து ஒல்லியாக இருந்தான். அதை அவள் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக் காட்டினாள். வெளியில் எங்கே போனாலும் சின்னப்பிள்ளையைக் கையில் பிடித்துக் கூட்டிக்கொண்டு போகிற மாதிரி அவனைக் கையில் பிடித்துக் கொண்டு போவாள். நிற்க, நடக்க, ரோடு கிராஸ் செய்ய, கடையில் என்ன பொருட்களை வாங்க வேண்டும் என்று எல்லாவற்றையும் அவளே சொல்லிக்கொடுப்பாள்.  அவனாக எதுவும் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அதை ஏற்றுக் கொள்ளமாட்டாள். குறை சொல்லிக்கொண்டே இருப்பாள். இதனால் எத்தனையோ முறை அவளைத் தனியே போய் எதுவானாலும் வாங்கிக்கொள் என்று சுகவனம் சொன்னாலும் கேட்க மாட்டாள். அவன் கூட வர வேண்டும். ஒவ்வொரு முறை வெளியே போய் விட்டு வரும்போதும் சண்டை போட்டுக்கொண்டே வருவது வழக்கம். சுகவனத்துக்கு ஏண்டா இவளைக் கலியாணம் முடித்தோம் என்றிருக்கும்.
இதெல்லாவற்றையும் விட இரவில் அவனை அவள் அவமானப்படுத்துகிற போது அவனுக்குச் செத்துவிடலாம் போல இருக்கும். தீவிரமாக அவன் முயங்கிக் கொண்டிருக்கும்போது
“ உன்னைப் பாத்தா ஒரு ஆம்பிளை மாதிரியே தெரியலைய்யா… ஏதோ வெளாட்டுப் பையனை மாரி இருக்கே…”  என்று சொல்லிச் சிரிப்பாள்.
சுகவனத்துக்குப் பொங்கிவந்த உணர்வெல்லாம் வடிந்து போய்விடும்.  உணர்ச்சியின் உச்சத்தில் அவள் இறுக்கிப்பிடித்தால் சுகவனத்தால் அசையக்கூட முடியாது. அவளாக பிடியைத் தளர்த்தினால் தான் உண்டு. இதற்காக அவன்  என்னவெல்லாமோ செய்து பார்த்தான். மீசையைப் பெரிதாக வைத்தான். கறி, மீன், பழம், காய்கறி, என்று கண்டமானிக்குத் தின்றான். ம்ஹூம்.. உடம்பு மட்டும் தேறவில்லை. ஆனால் முருகேஸ்வரி இன்னும் தடித்துப்பெருத்து விட்டாள். இப்போது இன்னும் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே போனது. அதற்குப் பல காரணங்கள் முளைத்தன. அவனுடைய தங்கையின் திருமணத்திற்கு உதவி செய்தான். அவனுடைய அம்மாவுக்கு ஆஸ்பத்திரி செலவு செய்தான். அவனுடைய தம்பிக்கு பள்ளிக்கூட ஃபீஸ் கட்டினான். என்று ஒவ்வொரு காரணங்களாக முளைத்து வளர்ந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக கலியாணம் முடிந்து நான்கு வருடங்களாகியும் முருகேஸ்வரிக்கு குழந்தை இல்லை. பொழுதுக்கும் சண்டை போட்டுக்கொண்டிருந்தவள் திடீரென்று ஒரு நாள் அவளுடைய அம்மா வீட்டுக்குப் போய் விட்டாள்.
கொஞ்ச நாள் சுகவனத்துக்கு நன்றாகத்தான் இருந்தது. அவன் இஷ்டப்படி எல்லாம் செய்து கொண்டு தூங்கி எழுந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். எப்போதாவது அவனுடன் வேலை பார்க்கிற மனோகரன் தருகிற நீலப்படக்குறுந்தகடுகளை இரவு நேரத்தில் சைலண்ட் மோடில் பார்த்துக் கொண்டு புரண்டு கொண்டிருந்தான். ஆனால் நாளாக நாளாக முருகேஸ்வரி இல்லாமல் வாழ்க்கை போரடித்தது. என்ன சொன்னாலும் அவளுடைய சத்தமோ, சண்டையோ இல்லாமல் வீட்டை வெறுமை சூழ்ந்திருந்தது. அவளுடைய ஞாபகம் வரும் நாட்களில் இரவில் வீட்டிற்கு வரும் போது ஒரு குவாட்டர்பாட்டிலோடு வந்தான். முருகேஸ்வரியைப்போலவே குவாட்டர் பாட்டிலும் புன்னகைப்பதாக இரண்டு பெக் உள்ளே போனதும் நினைத்துக் கொண்டான். பலமுறை ஊருக்குப் போய் அவளைக் கூப்பிட்டுப்பார்த்தான். எத்தனையோ தடவை எப்படியெல்லாமோ சொல்லி அழைத்தும் அவள் வருவதாக இல்லை. அவன் கேட்ட அத்தனைக் கேள்விகளுக்கும் அவள் சொன்ன ஒரே பதில் அந்த வீடு ராசியில்லை… அந்த ஊரும் ராசியில்லை.. அதான் புள்ள தங்க மாட்டேங்குது. என்பது தான்.
கடைசியில் அவன் ஊர் மாற்றலாகி வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தான். அவனுடைய மேலதிகாரிகாரி சிவகுமார் சிபாரிசுக் கடிதம் கொடுப்பதாகச் சொல்லி விட்டார். ஆனால் அவருக்கு ஒரு காரியம் செய்து தர வேண்டும் என்று கேட்டார். அவரிடம் கடன் வாங்கியிருந்த ஒருத்தரிடமிருந்து கடனைத் திரும்ப வாங்கித் தர வேண்டும். அவனுக்குப் புரியவில்லை.
“ ஏன் சார்.. நீங்க கேட்டீங்களா? இல்லையா? “
“ சுகவனம் நானும் மறைமுகமாகக் கேட்டுட்டேன்.. அவன் ரூபாயைப் பத்தி பேச மாட்டேங்கிறான்… நமக்கு கடுத்தமா பேசிப் பழக்கமில்லை… அவன்கிட்டேருந்து நீ பணத்தை மட்டும் வாங்கிக் கொடுத்தீட்டின்னா..நானே ஹெட்குவாட்டர்ஸ்ல பேசி டிரான்ஸ்ஃபர் வாங்கித்தாரேன்… “
சுகவனம் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை.
“ இவ்வளவு தானே சார்… நான் வாங்கித்தாரேன்.. நாளைக்கிப் போவோம்..நீங்க ஆள மட்டும் காட்டுங்க…போதும்..”
சிவகுமார் நம்பவில்லை. சுகவனத்தைப்பார்த்துக்கொண்டே சில விநாடிகள் அப்படியே இருந்தார். ஏதோ சொல்லக்கூடாத விஷயத்தைச் சொல்லக்கூடாத ஆளிடம் சொல்லி விட்ட மாதிரியான அவஸ்தையில் இருந்தார். சுகவனம் அவரையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் கொஞ்சமும் சலனம் இல்லை. இதெல்லாம் சர்வ சாதாரணம் என்கிற மாதிரியான பாவனை அவன் முகத்தில் இருந்தது. அதைப்பார்த்த பிறகு தான் சிவகுமாருக்கு இன்னும் நம்பிக்கையின்மை கூடியது.
“ வேணாம் பரவாயில்ல சுகவனம்… நான் லெட்டர் தாரேன்.. ஹெட்குவாட்டர்ஸ்ல கொண்டு போய் கொடு.. வேலை நடக்கும்…”
என்று விட்டேத்தியாகச் சொன்னார். ஆனால் சுகவனம் விடவில்லை.
“ சார் கண்டிப்பாக பணத்தை வாங்கிரலாம்… நீங்க கவலையே படாதீங்க…. ஆள மட்டும் காட்டுங்க..”
என்று அழுத்தமாகச் சொன்ன சுகவனத்தைப் பார்த்த சிவகுமார் மெல்லத் தலையாட்டினார்.
“ சரி சார் நாளைக்கி சாயந்திரம் நாலுமணிக்குப் போயிருவோம்…. “
என்று உற்சாகமாகச் சொல்லிவிட்டு வெளியேறினான் சுகவனம். அவன் மனதில் ஏகப்பட்ட திட்டங்கள் உருவாகிக்கொண்டிருந்தன. ஒவ்வொன்றாய் மனதிற்குள் கற்பனை செய்து பார்த்தான். இரவில் தூங்கினானா இல்லை விழித்திருந்தானா என்று அவனுக்கே தெரியாது. நிறைய்ய கனவுகள். அதில் முருகேஸ்வரியும் வந்தாள்.
காலையில் கரிச்சான்குருவிகளின் சத்தம் கேட்டே முழித்தான். சில நாட்களாகக் காணாமல் போயிருந்த குருவிகள் அன்று வாகை மரத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு சுகவனத்துக்கு எல்லாம் நல்லபடியாய் முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
மாலையில் சிவகுமார் அவருடைய பைக்கில் கூட்டிப்போனார். நகரத்தின் எல்லையில் இருந்த ஒரு மோட்டலின் முன்னால் போய் நிறுத்தினார். அவனையும் அழைத்துக் கொண்டு மோட்டலுக்குள் போனார். ஒரு எந்த பஸ்ஸோ, காரோ, இல்லாததால் மோட்டல் வெறிச்சோடியிருந்தது. ஒரு புழுங்கல் வாடை அடித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு கரம்மசாலா வாடை பின்புறத்திலிருந்து கிளம்பி வந்து நாசியை அடைத்தது. சிவகுமார் ஒரு டேபிளின் முன்னால் இருந்த சேரை இழுத்து போட்டு உட்கார்ந்தார். பின்னாலேயே போன சுகவனம் அவருடைய சைகைக்காகக் காத்திருந்தான். அவர் உட்கார்ந்தபிறகு அவனைப்பார்த்து கையைக் காட்டினார். அவன் உட்கார்வதற்கான சமிக்ஞை. சுகவனம் அவருக்கு எதிரில் உட்கார்ந்தான். அவர்கள் உள்ளே நுழையும்போது யாருமே இல்லை. ஆனால் அவர்கள் உட்கார்ந்த சில நொடிகளில் மோப்பம் பிடித்த மாதிரி இரண்டு பேர் எங்கிருந்தோ வந்தார்கள். நிழலுருவங்கள் போல இருந்த அவர்களில் ஒருவன் அவர்கள் இருந்த டேபிளுக்கு வந்தான். மற்றவன் அவர்கள் தலை மீது இருந்த காற்றாடியைச் சுழல விட்டான். சிவகுமார் அருகில் வந்தவனிடம் என்ன சொன்னார் என்று தெரியாது. அவன் உள்ளே போய் விட்டான்.
காற்றாடி சுழலுகிற சத்தம் மட்டும் கேட்டது. மோட்டலின் இருளடைந்த பின்புறத்திருலிருந்து ஒரு உருவம் அவர்களைப் பார்த்து நடந்து வந்து கொண்டிருந்தது. சுகவனம் அந்த உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் வர வர சுகவனத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. வந்தவன் அவனைப்போலவே இருந்தான். சிறுத்து மெலிந்து அவனை மாதிரியே நரைங்கானாக இருந்தான். சிவகுமாரைப்பார்த்ததும் அவன் குனிந்து கும்பிட்டான். வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான். சுகவனம் அவன் பற்கள் முன்னும்பின்னும் தெத்தலும் கொத்தலுமாய் இருந்ததைக் கவனித்தான். பற்களில் லேசாக கருப்பு காரை படிந்திருந்தது. அரக்குக்கலரில் சட்டையும் ஊதாக்கலரில் பேண்டும் போட்டிருந்தான். இரண்டிலுமே திட்டு திட்டாக அழுக்கு படர்ந்திருந்தன. தோளில் ஒரு சிட்டித்துண்டை நான்காக மடித்துப் போட்டிருந்தான்.
“ சார் வாங்க..வாங்க… என்ன சார் சாப்பிடுறீங்க.. “
“ என்னப்பா ராஜா… உன்னையப் பாக்கத்தான் வந்தேன்..”
“ அதுக்கென்ன சார்.. ஒரு காபி சாப்பிட்டுட்டு போங்க…”
அந்த ராஜா திரும்பிப்போவதற்குள் சுகவனம் கூப்பிட்டான்.
“ நீங்க சாருக்கு ரூபாய் தரணுமா?  “
“ ஆமாம் சார்…”
“ சொன்ன மாதிரி கொடுக்க வேண்டாமாய்யா.. நானும் வட்டிகொட வாங்கல் நடத்துறவன்தான்.. கிட்டத்தட்ட அஞ்சு லட்ச ரூபாய் வெளில நடமாடிட்டு இருக்கு… நமக்கு நாணயம் முக்கியம்… நாணயமா இருக்கிற ஆளுக்கு எவ்வளவுன்னாலும் கொடுப்பேன்… ரெண்டு வட்டி தான்.. அநியாயத்துக்கு ஆசைப்படறவன் இல்லை… நம்மள பத்தி சாருக்கு எல்லாம் தெரியும்.. வேணா கேட்டுப்பாருங்க…”
அந்த ராஜாவிடம் இப்போது இன்னும் பணிவு தெரிந்தது. தோளில் கிடந்த துண்டை எடுத்து கையில் போட்டுக் கொண்டான். சிவகுமார் சுகவனத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். சுகவனம் அப்படியே எல்லாவற்றையும் நிலாவட்டமாகப் பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தான். அப்போது அவனைப்பார்த்தால் நாடகத்தில் கந்துவட்டிக்காரன் வேஷம் போட்டிருக்கும் பள்ளிக்கூடப்பையன் மாதிரி இருந்தான். அவன் நினைத்துப்பார்த்திராத வார்த்தைகள் அப்படியே சரளமாக வந்தன. சுகவனம் மூச்சு வாங்குவதற்காகக் காத்திருந்த மாதிரி அந்த ராஜா,
“ இல்ல சார் செலவுக்கு மேலே செலவு சார்.. தங்கச்சிக்கு சீமந்தம், தம்பிங்க படிப்புசெலவு, அம்மாவுக்கு ஆஸ்பத்திரி செலவு, போதாதாதுக்கு என் வூட்டுக்காரி நீ உன் குடும்பத்தையே கட்டி அழுன்னு சொல்லிட்டு அவ அம்மாவீட்டுக்குப் போயிட்டா.. என்ன பண்றது சொல்லுங்க… இப்பக்கூட நீங்க தாரேன்னு சொன்னீங்கன்னா.. நான் அப்படியே சாருக்குக் கொடுத்திருவேன்…”
அந்த ராஜாவின் குரலைக்கேட்கும்போது கிட்டத்தட்ட சுகவனத்தின் குரல் மாதிரியே இருந்தது.
“ பார்க்கலாம்… முதல்ல வேற எங்கியாவது வாங்கி சாருக்கு செட்டில் பண்ணுங்க.. அவர் ரெம்ப ஃபீல் பண்றாரு..  அவருக்கு ஒரு நெருக்கடி வந்தா யாருகிட்ட போயி கேப்பாரு..அதை யோசிக்க வேணாமா…நம்மள மாதிரி தொழில் பண்றவங்கன்னா வேற மாதிரி.. சாரு பாவம்.. எங்கிட்ட சொன்னாரு.. வாங்க சார் ஆளைப்பாப்போம்… நம்பிக்கையான ஆளாருந்தா கொடுக்கலாம்னு சொன்னேன்…. எனக்கும் உங்க நாணயம் தெரியணும்ல…. சீக்கிரம் கொடுக்க வழியப்பாருங்க…”
கொஞ்சம் கெத்தாகவே சொன்னான் சுகவனம். குரல் கனத்திருந்தது. சிவகுமார் சுகவனத்தின் பேச்சைக்கேட்டு நம்பமுடியாமல் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார். அந்த ராஜா கொஞ்சம் தயங்கி,
“ சாருக்கு நான் எப்படியாவது புரட்டி இன்னும் ஒரு வாரத்துக்குள்ள கொடுத்துர்ரேன்.. எனக்கு நீங்க கொஞ்சம் தயவு பண்ணினா மாசாமாசம் டாண்ணு வட்டியைக் கொண்டு வந்து கொடுத்துருவேன்… சார்..”
“ ம்ம்ம்.. பார்ப்போம்… முதல்ல சாருக்கு செட்டில் பண்ணுங்க…”
“ கண்டிப்பா.. சார்.. உங்களை நம்பித்தான் இருக்கிறேன்…”
என்று சொன்ன ராஜா வேக வேகமாக உள்ளே போனான். சில நிமிடங்களில் இரண்டு காபியுடன் வந்தான். காபி ஸ்பெஷலாக இருந்தது. அவர்கள் வெளியேறிய போது சுகவனத்தின் பின்னாலேயே வந்து மாறி மாறி வணக்கம் சொல்லி வழியனுப்பினான்.
       முருகேஸ்வரியிடம் எப்படியும் இன்னும் ஒரு மாதத்திற்குள் மாற்றலாகி வந்துவிடுவதாகச் சொன்னான். அவள் சந்தோசப்பட்டதாகத் தெரியவில்லை. சுகவனம் தான் முருகேஸ்வரியை நினைத்து தினமும் இரவில் கிளர்ச்சியடைந்தான்.
       ஒருவாரம் கழிந்திருக்கும். சிவகுமார் அவருடைய அலுவலகத்திற்கு அவனைக் கூப்பிட்டனுப்பினார். அவன் போயிருந்தான். அவருடைய முகத்தில் மகிழ்ச்சி அலையடித்துக்கொண்டிருந்தது. அந்த ராஜா பணத்தைக் கொண்டு வந்து நேற்று கொடுத்ததாகவும், சுகவனத்தின் வீட்டு முகவரி கேட்டு வாங்கியதாகவும், நாளை அல்லது மறுநாள் அவனுடைய வீட்டுக்கு வரலாம் என்றும் சொன்னார்.
“ ஏன் சார் அட்ரஸ் கொடுத்தீங்க… அதான் ரூபா வந்துருச்சில்ல.. ஊருக்குப் போயிருக்கிறான் அது இதுன்னு எதாச்சிம் சொல்லி அனுப்பிருக்க வேண்டியதானே.. ”
“ எனக்கு அந்த நேரத்தில எதுவும் தோணல சுகவனம்…. கேட்டான் ..கொடுத்துட்டேன்.. நீ சமாளிச்சிக்கோ…”
சுகவனத்துக்குக் கோபம் வந்தது. அவர் காரியம் முடிந்தது. இன்னும் அவனுடைய காரியம் இருக்கே.
“ சரி சார்  நம்ம டிரான்ஸ்பர் விஷயத்தைச் சீக்கிரம் முடிச்சிக் கொடுங்க.. சார்..”
“ ம்ம்ம்ம் ..இப்ப வந்திருக்கிற ஏடிஎம் ஒரு சிடுமூஞ்சிங்கிறாங்க… பார்ப்போம் சமயம் பார்த்து விஷயத்தை சொல்றேன்…”
சுகவனம் எதுவும் பேசவில்லை. அமைதியாக நின்றான். கோப்புகளைத் திருப்பிக்கொண்டிருந்தவர் எந்த சத்தமும் இல்லை என்றதும் போய்விட்டானா என்று நிமிர்ந்து பார்த்தார். அவன் நின்று கொண்டிருப்பதைப்பார்த்ததும் சிரிக்க முயற்சி செய்தவர் சட்டென்று தலையைக் குனிந்து கொண்டார். சுகவனம் மெல்லத்திரும்பி அறையை விட்டு வெளியேறினான்.
மறுநாள் மாலை அவன் அலுவலகம் முடிந்து குவாட்டர்ஸுக்கு வந்த போது வாசலில் அந்த ராஜா நின்று கொண்டிருந்தான். சுகவனத்துக்குத் திடுக்கென்றிருந்தது. ஆனால் சமாளித்துக் கொண்டு முன்பின் பார்த்திராத மாதிரி யாரு என்று தலையாட்டினான். ராஜா பணிவாக,
“ சார் நான் ராஜா அன்னக்கி சிவகுமார் சாரோட வந்திருந்தீங்கல்ல.. “ என்று இரண்டு கைகளையும் வீசி சைகைகள் செய்து ஞாபகப்படுத்தினான். சுகவனம் அப்போது தான் ஞாபகம் வந்தது போல,
“ ஆங்… ஞாபகம் வந்திருச்சி… சரி.. சரி.. என்ன விஷயம்? “
“ சாருக்கு நான் சொன்ன மாதிரியே ஒரு வாரத்திலே ரூபா கொடுத்திட்டேன் சார்..”
“ அப்படியா சரி… சந்தோசம்..”
“ சார்.. நீங்க ரூபா கொடுக்கறதா சொன்னீங்க… அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன்..”
“ அடடா.. இப்ப எனக்கு டிரான்ஸ்ஃபர் வரப்போகுது…. அதனால நானே கொடுத்திருக்கிற பார்ட்டிககிட்டே திரும்ப வசூல் பண்ணிகிட்டிருக்கேன்.. புதுசா யாருக்கும் கொடுக்கிற மாதிரி இல்லயே..”
சுகவனம் சொல்லி முடிக்குமுன்னால் இடைமறித்தான் ராஜா.
“ சார் அப்படிச் சொல்லாதீங்க.. சார் எங்க டிரான்ஸ்ஃபர்ல போனாலும் நான் கொண்டு வந்து வட்டியைக் கொடுக்கிறேன்… எங்க அம்மா மேலே சத்தியம்..சார்..தங்கச்சிக்குப் பிரசவச்செலவு சார்.. குடும்பத்துல மூத்தபையனாப் பொறந்தா இந்தப்பாடுதான்.. கொஞ்சம் மனசு வைய்ங்க சார்…”
“ இதுக்கு எதுக்கு அம்மா மேல சத்தியம்… நான் கொடுக்கிறதா இருந்தாத்தான் கேட்டதும் கொடுத்திர மாட்டேனா… என்னய ஏமாத்திட்டு எவனும் எங்கியும் போயிர முடியாது… ஆனா என்ன செய்றது நீங்க கேக்கிற நேரம் என் நிலைமை இப்படி இருக்கே..”
“ ஐய்யோ சார் ஏற்கனவே பத்துவட்டிக்கு வாங்கித்தான் நான் சாருக்குக் கொடுத்திருக்கேன்.. உங்ககிட்ட வாங்கித்தான் அதைக் கொடுக்கணும்.. கொஞ்சம் மனசு வைய்ங்க சார்.. நீங்க நினைச்சா கொடுக்கலாம்..”
சுகவனம் கொஞ்சநேரம் பேசாமல் இருந்தான். அப்புறம் இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டான்.
“ ராஜா இங்க பாருப்பா.. கொடுக்கறதுன்னா உடனே கொடுத்துருவேன்.. சும்மா நின்னுகிட்டு புலம்பிகிட்டிருக்கக்கூடாது.. போய் வேற ஆளப்பாரு.. நானே கொடுத்ததை  சீக்கிரம் வசூல் பண்ணனுமேங்கிற கவலையில இருக்கேன்…”
“ சார்.. கொஞ்சம் பார்த்துச் செய்ங்க..சார்..” இப்போது ராஜாவின் குரல் தழுதழுத்திருந்தது.
“ சரி போய்ட்டு வாப்பா ராஜா.. உங்கிட்ட பேசிட்டிருந்தா நான் வேற வேல பாக்க முடியாது..”
என்று கோபப்படுகிற மாதிரி குரலை உயர்த்திச் சொல்லி விட்டு குவாட்டர்ஸுக்குள் நுழைந்து கதவைச் சாத்தினான். உள்ளே போகிறமாதிரி இரண்டு அடி எடுத்து வைத்தவன் அப்படியே திரும்பி கதவிலுள்ள சாவித்துவாரத்தின் வழியே பார்த்தான். ராஜா மூடிய கதவைப் பார்த்தபடியே அப்படியே நின்று கொண்டிருந்தான். சுகவனம் உள்ளே போய் கைலியைக் கட்டிக் கொண்டு திரும்பிவந்து பார்த்தான். ராஜா இல்லை. மெல்லக் கதவைத் திறந்தான். வெளியே வந்து பார்த்தான். அந்தத்தெரு முக்கில் சோர்ந்த நடையுடன் ராஜா திரும்பிப் போய்க் கொண்டிருந்தான். சுகவனத்துக்கு அவன் நடந்து போவதைப்போல இருந்தது. ஒரு கணம் தன் மீது, முருகேஸ்வரி மீது, ஏன் ராஜாவின் மீது கோபம் கூட வந்தது. காறித்துப்பினான். வாயிலிருந்து ஒலியில்லாமல் ஒரு கெட்டவார்த்தையை யார் மீதோ வீசினான். எதிரே இருந்த வாகைமரம் சிறு அசைவும் இன்றி அமைதியாக நின்று கொண்டிருந்தது. இப்போது கரிச்சான்கள் எந்தக்கிளையில் உட்கார்ந்திருக்கும். மரத்தின் கிளைகளூடே கண்களால் துழாவினான். எதுவும் தெரியவில்லை. ஏதேதோ சிந்தனைகள் கோர்வையில்லாமல் மனதில் ஓடின. எதற்காக நிற்கிறோம் என்று தெரியாமல் நெடுநேரம் அங்கே நின்று கொண்டிருந்தான். திடுமென நீண்ட பெருமூச்சு விட்டான். திரும்பிப் பார்த்தான். தெரு முக்கில் ஒரு பெண் போய்க்கொண்டிருந்தாள். அசப்பில் முருகேஸ்வரி மாதிரியே இருந்தது. 

நன்றி - நான்காவது கோணம் 
புகைப்படம் - மோகன் தாஸ் வடகரா





Tuesday 11 July 2017

தாத்தாவுக்குத் தாத்தா

தாத்தாவுக்குத் தாத்தா

உதயசங்கர்

நள்ளிரவு நேரம். தூங்கிக்கொண்டிருந்த கயல் உசும்பினாள். மெல்ல எழுந்து கழிப்பறைக்குப் போனாள். கழிப்பறை விளக்கைப் போட்டாள். உள்ளே நுழைந்தாள். உடனே அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தாள். அப்பாவும் அம்மாவும் அலறியடித்துக் கொண்டு எழுந்தார்கள். அப்பா ஓடி வந்து
“ என்னம்மா..கயல்..என்ன? என்ன? என்னாச்சி? “ என்று பரபரப்புடன் கேட்டார். கயல் பயந்த முகத்துடன்,
“ பாத்ரூம்ல பூச்சி…பூச்சி..” என்று சொல்லிக்கொண்டே கண்களை மூடிக்கொண்டாள். கயலின் அப்பா பாத்ரூமிற்குள் எட்டிப்பார்த்தார். சுவரில் உயரே ஒரு கரப்பான்பூச்சி நின்று கொண்டிருந்தது. தன்னுடைய உணர்கொம்புகளை அங்கும் இங்கும் ஆட்டியபடி தலையை உருட்டிக் கொண்டிருந்தது. உணர்கொம்புகளால் எதையோ மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தது. அப்பா அதைப்பார்த்தார். உடனே திரும்பி,
“ என்னடா கயல்! இதுக்குப் போய் கத்தலாமா? கரப்பான்பூச்சி சுவத்தில தானே இருக்கு..”
“ எனக்குப் பயமாருக்கு.. அத விரட்டுங்கப்பா… “
” கயல்குட்டி… பூச்சி நம்மைவிட ரொம்பச் சின்னது.. அது தான் நம்பளப் பார்த்துப் பயப்படணும்… நாம் பயப்படலாமா? “
கயல் அழுகிற மாதிரி நின்றிருந்தாள். படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்த கயலின் அம்மா ,
“ ஏங்க அந்தக்கரப்பானை விரட்டுங்க… உங்க விளக்கத்தைக் காலைல வைச்சிங்கோங்க..”
என்று சொன்னாள். அப்பா உடனே கழிப்பறைக்குள்ளே போய் அங்கேயிருந்த வாரியலை எடுத்து ஓங்கினார். சுவரில் இருந்த கரப்பான்பூச்சிக்கு வரக்கூடிய ஆபத்து தெரிந்து விட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி ஒளிந்து கொண்டது. அப்பா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வெளியே வந்தார்.
“ பூச்சியை விரட்டியாச்சி…”
கயல் பயந்தபடியே கழிப்பறைக்குள்ளே போனாள். திரும்பி வந்து ரொம்ப நேரத்துக்குத் தூக்கம் வரவில்லை. அந்தக்கரப்பான் பூச்சியே கண்ணுக்குள் தெரிந்தது. ச்சே! இந்தப்பூச்சிகளை எல்லாம் ஏன் தான் இயற்கை படைச்சதோ? இதனாலே என்ன பயன்? பார்க்கவே அருவெறுப்பாய்…ஐயே.. இப்படியே யோசித்துக் கொண்டிருந்த கயல் எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை.
கயல் கண்விழிக்கும்போது அவளுடைய உருவம் மாறியிருந்தது. அவள் இப்போது ஒரு சிறுபூச்சியாக மாறியிருந்தாள். அதுவும் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காத வெங்காயப்பாச்சாவாக மாறியிருந்தாள். அவளுக்கு முன்னால் சமையலறை மசாலா சாமான்கள் இருந்த கண்ணாடி பாட்டில்கள் இருந்தன. அவள் தன்னுடைய பின்னங்கால்கள் ஒரு உந்து உந்தி தவ்விக்குதித்தாள். கேஸ் சிலிண்டருக்குப் பின்னால் போய் விழுந்தாள். அங்கே பழைய நூலாம்படை இருந்தது. முன்னால் இருந்த சின்னக்கால்களால் முகத்தைத் துடைத்தாள். கண்களையும், தலையையும் உருட்டிப் பார்த்தாள். சற்றுத்தள்ளி ஏதோ ஈரமாய் இருப்பதைப்போல இருந்தது. அந்த ஈரத்தை நோக்கி மெல்ல நடந்தாள். அது அந்த வீட்டில் இருந்த கயல் என்ற சின்னப்பிள்ளை சிந்திய பால் துளி. அதன் அருகில் போனதும் பாலை தன்னுடைய சிறிய வாயினால் உறிஞ்சினாள். இத்தூணூண்டு சாப்பிட்டதும் வயிறு நிறைந்து விட்டத்து. சின்ன வயிறு தானே. அப்படியே திரும்பி அந்தக்கேஸ் சிலிண்டர் அடியில் இருட்டுக்குள் போய் உட்கார்ந்து கொண்டாள்.
திடீரென அவளை யாரோ உசுப்பினார்கள். அவளுக்கு இருட்டிலும் பார்வை தெரிந்தது. அவளுக்கு அருகில் நீண்ட உணர்கொம்புகளை நீட்டிக்கொண்டு அங்கும் இங்கும் பரபரப்பாய்  அலைந்தது ஒரு கரப்பான் தாத்தா. வெங்காயப்பாச்சா அதைப்பார்த்து
“ ஏந்தாத்தா.. அங்கிட்டும் இங்கிட்டும் அலையறே.. சும்மா ஒரு இடத்தில கிடக்க முடியாதா..”
“ இந்த வீட்டில கயல்னு ஒரு பொண்ணு இருக்கா அவளுக்குப் பூச்சின்னாலே பிடிக்கமாட்டேங்கு… என்னைய அவள் பார்த்துட்டு ஒரே கூப்பாடு.. அவளோட அப்பா வேற விளக்குமாத்தை எடுத்துகிட்டு வந்துட்டாரு… தலை தப்பிச்சதே பெரிய பாடு..”
“ உனக்கு எவ்வளவு வயசாவுது தாத்தா?  “
என்று கயல் பாச்சா கேட்டாள். கரப்பான் தாத்தா முன்னங்கால்களால் தலையைச் சொறிந்தது. பின்னர் கரகரத்த குரலில்,
“ பூமி தோன்றிய பிறகு பூமியில தோன்றிய மூத்த உயிரினங்களில் நாங்களும் ஒண்ணு.. அதாவது சுமார் மூணு கோடி வருடத்துக்கு முன்னாடியே என்னோட மூதாதையர்கள் பூமியில பிறந்துட்டாங்க… இந்த உலகத்தில நாங்க இல்லாத இடமே இல்லை… நாலாயிரத்து அறுநூறு வகையான கரப்பான் பூச்சிகள் இருக்கோம். அதில முப்பது வகையான கரப்பான் பூச்சிகள் மட்டும் தான் மனிதர்களோட சேர்ந்து வாழப்பழகியிருக்கோம்… எங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப காலத்துக்குப் பின்னால தான் மனுசங்க தோன்றினாங்க.. இயற்கை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு மாதிரி உருவாக்கியிருக்கு…. “
என்று பெரிய விஞ்ஞானி மாதிரி மீசைகளை நீட்டி நீட்டி முழக்கியது.
“ அதெல்லாம் சரி தாத்தா… பூச்சிகளினால என்ன பயன்னு கயல்பாப்பா கேக்குறா? “ என்று கயல் பாச்சா கேட்டாள். அதைக்கேட்டவுடன் கரப்பான் தாத்தாவின் மீசை துடித்தது. சிலிண்டரின் கீழேயே வட்டமாய் சுற்றிச்சுற்றி வந்து வீரநடை போட்டது. பிறகு கயல்பாச்சாவை கோபமாய் ஒரு பார்வை பார்த்தது.
“ சரி சரி.. போதும் பதில் சொல்லுங்க தாத்தா? “
“ சொல்றேன்… இந்த உலகம் என்ன மனிதர்களுக்காக மட்டுமா உருவானது? மனிதர்களுக்கு பயன்படாத எல்லாமே அழிந்து விட வேண்டியதுதானா? எந்த உயிரும் மனிதர்களுக்காக உருவாகவில்லை… மனிதன் தான் எல்லா உயிர்களையும் அவனுடைய தேவைக்காகப் பயன்படுத்துகிறான்… இயற்கை தன்னை சமநிலைப்படுத்தவே எல்லாஉயிர்களையும் படைக்கிறது… எந்த உயிரும் கீழானதோ இல்லை மேலானதோ கிடையாது.. ஒவ்வொருத்தருக்கும் அவர் அவருக்கான வேலை இருக்கிறது…. தெரியுமா? “
என்று கீச்சிட்டது. கயல் பாச்சா காதுகளைப் பொத்திக் கொண்டது.
“ இன்னொரு விசயமும் இருக்கு..கயல் பாப்பா..எங்களப்பார்க்கும்போது அருவெறுப்பாப்பார்த்தாலும் எங்களை வச்சி என்ன என்னல்லாம் பண்ணுறாங்க தெரியுமா?  எங்களால எல்லா தட்பவெப்ப நிலையிலும் உயிர்வாழமுடியும்… அது மட்டுமல்ல அணுகுண்டு கதிரியக்கம் கூட எங்களைப் பாதிக்காது… அது எப்படின்னு ஆராய்ச்சி பண்ணுறாங்க.. உலகம் பூரா இருக்கிற அறிவியல் மாணவர்கள் எங்களை வைச்சி பாடம் படிக்கிறாங்க.. மருந்துகள் கண்டுபிடிக்கிறாங்க.. பல நாடுகளில் எங்களை உணவாச் சாப்பிடுறாங்க.. ஆனாலும் பார்த்த உடனே கொல்லணும்னு ஓடி வராங்க…”
என்று கரப்பான் தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும்போதே சிலிண்டரை நகர்த்துகிற சத்தம் கேட்டது. பளீரென வெளிச்சம். வெளிச்சத்தைப் பார்த்ததும் கரப்பான் தாத்தா விருட்டென்று ஓடி விட்டது. கயல் பச்சா தவ்விக்குதித்தது. அரையடி தூரம் தான் போக முடிந்தது. அதற்குள் கயல் கையில் வாரியலோடு நின்றாள். அதைப் பார்த்த கயல் பாச்சாவுக்கு குலை நடுங்கியது. கயல் வாரியலை ஓங்கினாள்.
“ வேண்டாம்.. வேண்டாம் கயல்.. நான் தான்.. நீ..தான்.. நான்..நீ..”
என்று கயல் பாச்சா உளறியது. கண்விழித்த கயல் சுற்றும்முற்றும் பார்த்தாள். எதிரே இருந்த சுவரில் ஒரு கரப்பான்பூச்சி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
கயல் பாப்பா இப்போது கத்தவில்லை.

நன்றி - வண்ணக்கதிர்


.






Monday 10 July 2017

காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா



காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா

உதயசங்கர்


மேற்கத்திய சிந்தனையாளர்கள் இந்து மதத்தை ஒருமைவாதமதமாக, இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த மதமாகவும், சித்தரித்திருந்த வரலாற்றை இந்து மத அடிப்படைவாதம் அப்படியே எந்த விமரிசனமுமின்றி ஏற்றுக் கொண்டது. அதாவது வேதகாலத்தில் சொர்க்கமாக இருந்தது…என்கிற நேர்கோட்டு கற்பனாவாதச் சிந்தனை அதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல இந்துத்வாவின் இந்து மதம் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதில்லை. அது கற்பனாவாதவரலாற்றையும் இறுகிய தன்மையையும் கொண்டிருந்தது. அதன்மீது புனிதத்தை ஏற்றி ஒளி மிக்கதாக புனைவுகளை உருவாக்கி கதைகளின் மூலம் மீண்டும் பிராமணிய அதிகாரத்தை நிலைநிறுத்துவதையே முக்கியக் குறிக்கோளாக கொண்டிருந்தது. இந்தியா முழுவதுமுள்ள இந்துக்கள் அத்வைதவாதிகள் என்று வெளிப்படுத்த நினைத்தது. இந்தியாவின் பன்மைத்தன்மையை மறுதலித்து இந்தியர்களையெல்லாம் இந்துக்களாக ஒன்று திரட்ட முயற்சித்தது. ஆரியப்பெருமையையும், பார்ப்பனப்பெருமையையும் மீட்டெடுப்பது தான் இந்துக்களின் குறிக்கோள் என்று இந்துமத அடிப்படைவாதம் முன்வைத்தது. இந்துக்கலாச்சாரத்தேசியத்தை மீட்டெடுக்க ஒவ்வொரு இந்துவும் தன்னுடைய உயிரையே கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று முழக்கமிட்டது. இதற்கு சாதகமாக புராண, இதிகாசக்கதைகளை மீண்டும் புனைந்தது. இந்துத்வவாதிகள் தங்களை இந்து மதத்தின் ஏகப்பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டனர். மனுவின் சநாதன இந்து தர்மத்தைக் கடைப்பிடித்ததினால் பெண்களை அவமதிக்கவும் உதாசீனப்படுத்தவும், செய்தனர். வர்ணாசிரமக்கோட்பாட்டை தீவிரமாகப் பின்பற்றவும் அதை நிலைநிறுத்த முயற்சித்ததன் மூலம் தங்களுடைய மேலாண்மையை உறுதிப்படுத்த நினைத்தனர். அதன் மூலம் தீண்டாமை நிலைத்திருக்கச் செய்தனர்.

வெளியீடு - நூல்வனம் பதிப்பகம்

தொடர்பு எண் - 9176549991

Sunday 9 July 2017

பேய் பிசாசு இருக்கா? - நூல் வெளியீடு

கேள்விகள் கேளு

கேள்வி கேட்பது என்பது மனித இயல்பு. அதனால் தான் அறிவியல் வளர்ந்தது. அறிவியல் மட்டும் அல்ல. வரலாறு, புவியியல், உயிரியல், என்று ஏராளமான துறைகள் உருவாகவும், வளரவும் காரணமாக இருந்தது கேள்விகள் தான். எல்லாவற்றையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டான் மனிதன். பகுத்தறிவின் விதைகள் இவைதான்.
தாய் மொழி பேசப்படித்தவுடனேயே குழந்தைகள் அது என்ன? இது என்ன? என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுகின்றன. அந்தக் கேள்விகளுக்கான பதில் புரியாவிட்டாலும் கேட்டுக்கொள்கின்றனர். ஆனாலும் புரியவில்லை என்று பெரிதாகக் கவலைப்படுவதில்லை. கேள்விகள் வெள்ளம் என சீறி வந்து கொண்டே இருக்கின்றன.
பத்து வயதுக்கு மேல் குழந்தைகள் தங்கள் கேள்விகளுக்குப் பதில்களை எதிர்பார்க்கின்றனர். அதுவும் பொறுப்பான பதில்களை எதிர்பார்க்கின்றனர். உண்மையான பதில்களை எதிர்பார்க்கின்றனர். சின்னஞ்சிறு பிராயத்தில் பெரியவர்களால் உண்டான பயம், சந்தேகங்களை விளங்கிக் கொள்ள நினைக்கின்றனர்.
மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை அவனுக்குச் சில சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.
நாம் வாழும் இந்த உலகம் எப்படி உண்டானது?
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?
பேய் பிசாசு இருக்கா?
மனிதனுக்கும் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கும் என்ன தொடர்பு?
பல்லி பலன் சொல்லுமா?
பூனை குறுக்கே போனால் போகிற காரியம் கெட்டுப்போகுமா?
இப்படி நிறையக் கேள்விகள் பதில்களைத் தேடிக் கொண்டே இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கான எளிய பதில்களே இந்தக் கட்டுரைகள். இந்தப்பதில்கள் உண்மையில் பதில்கள் இல்லை. ஒரு மாற்று சிந்தனை முறையின் அறிமுகம். அறிவியல்பூர்வமான அணுகுமுறை, பகுத்தறிவின் துவக்கம்.

வெளியீடு - வானம் பதிப்பகம்

தொடர்பு எண் - 9176549991



Saturday 8 July 2017

ராஜாவைக் காணோம்…..

ராஜாவைக் காணோம்…..
உதயசங்கர்

பழைய பழைய காலத்தில் வங்காளவிரிகுடா கடலில் ஒரு தீவு இருந்தது. அந்தத்தீவில் ஒரு பத்தாயிரம் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அதற்கு ஒரு ராஜாவும் மந்திரிப்பிரதானிகளும் இருந்தார்கள். அந்தத் தீவுக்குப் பெயர் வேண்டாமா? ஆமாம். அந்தத்தீவுக்கு ஒரு பெயர் இருந்தது. ஆனால் அதைப் பெயர் என்று சொல்ல முடியாது. அந்தத்தீவுக்கு எண் 420 என்று பெயரிட்டிருந்தார்கள். அந்தத்தீவின் ராஜாவுக்கு எண் 421 என்று பெயர். மந்திரிகளுக்கு 370, 371, 372, 373, என்று வரிசையாக பெயர் வைத்திருந்தார்கள். அப்படியானால் மக்களுக்கு சுழியத்திலிருந்து ஒன்று இரண்டு மூன்று என்று பத்தாயிரம் வரையிலான எண்களை சூட்டியிருந்தார்கள். எல்லோரும் அவர்களுடைய எண்களை மறந்து விடக்கூடாது என்று அந்த எண்களை கொட்டை எழுத்தில் ஒரு அட்டையில் அச்சிட்டு கழுத்தில் தொங்க விட்டிருந்தார்கள். எல்லோரும் அந்த எண்களைக் கொண்டே அழைத்தார்கள்.
“ ஏய் பதினெட்டு சாப்பிட்டுட்டு சீக்கிரம் பள்ளிக்கூடம் போ..”
என்று அம்மா காலையில் கத்தினார். அம்மா போட்ட சத்தத்தில் திடுக்கிட்டு கையில் இருந்த பையைக் கீழே தவற விட்டார் அப்பா. உடனே
“ பதினைஞ்சு…. பதினைஞ்சு… உனக்கு எத்தனை தடவை சொல்லியிரு்க்கேன்.. இப்படிக் கத்தாதேன்னு..”
என்று கத்தினார். அப்போது அந்த வீட்டின் கடைக்குட்டிப்பாப்பாவான பத்தொன்பது தண்ணீரை வீட்டில் கொட்டி மொழுகிக் கொண்டிருந்தாள். அம்மா அப்பாவைப் பார்த்து,
“ வரும்போது டாக்டர். இரண்டாயிரத்தைப் பார்த்து மருந்து வாங்கிட்டு வந்திருங்க..” என்றார்.
இப்படி அந்த நாடு முழுவதும் எண்களை வைத்தே எல்லா மக்களும் அறியப்பட்டார்கள். எங்கே போனாலும் கழுத்தில் தொங்க விட்டிருக்கும் அட்டையிலுள்ள எண்ணைப் பதிய வேண்டும். அவரவர் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்றாலும் அந்த எண்ணை வாசலில் இருக்கும் கணிணியில் பதிந்து விட்டு காத்திருக்க வேண்டும். அனுமதி கிடைத்த பிறகே உள்ளே நுழைய முடியும். அலுவலகம் சென்றாலும் அப்படித்தான். கடைகளில் போய் உணவுப்பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் அப்படித்தான். அரசாங்க அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து, ரயில், விமானம், என்று எல்லாக்காரியங்களுக்கும் எண்ணைப் பதிய வேண்டும். அவ்வளவு ஏன்? பள்ளிக்கூடத்தில் போடுகிற மதிய உணவு கூட அந்த எண் இருந்தால் தான் கிடைக்கும். இப்படி எல்லாம் எண்கள். எங்கும் எண்கள்.
அந்த எண்கள் எல்லாம் அரண்மனையில் உள்ள மகாக்கணிணியில் ஏற்கனவே பதிந்து வைக்கப்பட்டிருந்தது. அதனால் யார் எங்கே போனாலும், என்ன செய்தாலும் அரண்மனைக்குத் தெரிந்து விடும். எல்லோரிடமும் உள்ள பணம், பொருட்கள், அவர்கள் பார்க்கும் திரைப்படங்கள், இசை, படிக்கும் புத்தகங்கள், என்று எண் 420 தீவில் வசிக்கும் அத்தனைபேரின் முழுவிவரமும் அரண்மனையில் இருந்தது. யாரும் அரண்மனைக்குத் தெரியாமல் எதுவும் செய்ய முடியாது. இதையெல்லாம் தெரிந்து கொள்ள எண் 420 தீவு ராஜா 421 ஒரு பெரிய தொடுதிரை வைத்திருந்தார். அந்தத் தொடுதிரையை முடுக்கிவிட்டால் போதும்.
“ எண் 253 இப்போது குளிக்கிறார் “
“ எண் 565 இப்போது கக்கூஸ் போகிறார்..”
” எண் 679 இப்போது ராஜாவுக்கு எதிராகப் பேசுகிறார்..”
“ எண் 1088 புத்தகம் வாசிக்கிறார்..”
” எண் 9877 இப்போது வீட்டுப்பாடங்கள் எழுதுகிறார்…”
“ எண் 6455 யாருக்கும் தெரியாமல் பணத்தைத் திருடுகிறார்..”
” எண் 8888 மிட்டாயை  ஒளித்துவைக்கிறார்..”
என்று எல்லோருடைய நடவடிக்கைகளும் ராஜாவுக்குத் தெரிந்து விடும். சரி. அதனால் என்ன? ராஜா 421 அரசாங்கத்துக்கு எதிராகவோ, ராஜாவுக்கு எதிராகவோ யாராவது யோசிக்கிறார்கள் என்றாலே அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து விடுவார். அவர்களுடைய எண்ணையும் பிடுங்கிவிடுவார். அவர்களுக்கு எண் இல்லாததால் அவர்களைப் பற்றி யாருக்கும் தெரியாது.
என்ன நடந்தாலும் அவரவர் எண் அட்டையை மட்டும் தொலைத்து விடக்கூடாது. அப்படித் தொலைத்து விட்டால் என்ன ஆகும்? எதிர்பாராத விதமாக சிலர் அவர்களுடைய எண் அட்டையைத் தொலைத்து விட்டார்கள். அவ்வளவு தான். அவர்களால் அவர்களுடைய வீட்டிற்குள் நுழைய முடியவில்லை. அலுவலகமோ பள்ளிக்கூடமோ செல்ல முடியவில்லை. கடைகளில் உணவுப்பொருட்கள் வாங்க முடியவில்லை. பையில் பணம் இருந்தாலும் ஹோட்டல்களில் சாப்பிட முடியவில்லை. அப்படியே தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான்.
” எப்போதும் இந்தத்தீவு இப்படியே தான் இருந்ததா? ”
என்று எண் 155 அவனுடைய தாத்தா 1119-இடம் கேட்டான். அப்போது தாத்தா 1119 சொன்னார்.
“ இல்லடா கண்ணா! ஒரு காலத்தில் எல்லோருக்கும் பெயர் இருந்தது. இந்தத் தீவின் பெயர் ஐந்திணை. என்னோட பெயர் சந்தனமாறன். உன்னோட அப்பாவோட பேரு தமிழழகன், உன்னோட அம்மாவோட பேரு அழகி, எல்லாம் இந்த ராஜா வந்தபிறகு அவருக்குத் தெரியாம எதுவும் நடந்திரக்கூடாது என்ற பயத்தில் இப்படிப் பண்ணிட்டாரு…அறிவியலை தவறாப்பயன்படுத்திட்டாரு “
இதைக்கேட்ட எண் 155-க்கு வருத்தமாக இருந்தது. எண் 155 க்கு இரண்டு கிளிகள் நண்பர்களாக இருந்தனர். தினமும் வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் சாயங்காலம் பறந்து வரும் கிளிகள். அந்தக் கிளிகளிடம் எண்155 தினமும் நடக்கிற விசயங்களைச் சொல்வான். அப்படித்தான் அன்றும் எண்களினால் வருகிற குழப்பங்களையும் பிரச்சினைகளையும் சொன்னான். எப்போதும் யாரோ தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதினால் யாரும் சுதந்திரமாக இருக்க முடியவில்லை.அவனுடைய வருத்தத்தைக் கேட்ட கிளிகள் ஒன்றும் சொல்லாமல் பறந்து போய் விட்டன. எண்155 சோகத்துடன் வீட்டுக்கு வந்து படுத்து விட்டான்.
அடுத்த நாள் தொலைக்காட்சியில் பிரேக்கிங் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. ராஜா 421 காணாமல் போய் விட்டார். அரண்மனையிலிருந்து காலையில் நடைப்பயிற்சி செய்ய பூங்காவுக்குச் சென்றவரைக் காணவில்லை. அவருடைய அடையாளஎண் அட்டை செயல் இழந்து விட்டது என்ற அறிவிப்பு ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் உண்மையில் ராஜா தெருக்களில்  அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அவருடைய கழுத்தில் அடையாளஎண் அட்டை இல்லாததால் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ராஜா தெருத்தெருவாக,
“ நான் தான் ராஜா…நான் தான் ராஜா…”
என்று கூவிக்கொண்டே போனார். யாரும் அவரைக் கவனிக்கவில்லை. ஏன் எண் 155 கூட அவரைப் பார்த்தான். யாரோ அடையாளஎண் அட்டை தொலைத்தவர் என்று பேசாமல் போய் விட்டான். மாலையில் வீட்டுக்குப் போனதும் வேப்பமரத்தடிக்குப் போனான். அங்கே அவனுடைய நண்பர்களான அந்த இரண்டு கிளிகள் உட்கார்ந்திருந்தன. ஒரு கிளியின் வாயில் ராஜாவின் அடையாளஎண் அட்டை கயிறுடன் இருந்தது.
மறுநாள் காலை நாடே அல்லோலப்பட்டது. ஆம். நாடு முழுவதும் அடையாளஎண் திட்டம் நீக்கப்பட்டது. இனி அவரவர் விருப்பம் போல பெயர்களை வைத்துக் கொள்ளலாம். இந்தத் தீவின் பெயர் இனி ஐந்திணை. தேவைக்கு அதிகமான தகவல்கள் கணிணியில் இருந்து நிரந்தமாக அழிக்கப்பட்டது. மக்கள் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ்ந்தார்கள்.
அடையாளஎண் அட்டை தொலைந்து தெருக்களில் திரிந்த ராஜாவை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? என்ற கதைகள் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஓடிக்கொண்டிருந்தது.
தொலைந்து போன ராஜா421 அடையாளஎண் அட்டை செந்தமிழ்ச்செல்வனின் மேசை இழுப்பறையில் கிடந்தது.
என்ன விழிக்கிறீர்கள்? செந்தமிழ்ச்செல்வன் தான் பழைய  எண் 155 ஐயையும் அவனது நண்பர்களையும் மறந்துட்டீங்களா?
கீக்க்கீகீகீகீ! கிக்கீக்கீ..!



Friday 7 July 2017

பீட்டர்ஸ்பர்க்கின் கோவில்பட்டிக்கிளை

பீட்டர்ஸ்பர்க்கின் கோவில்பட்டிக்கிளை

உதயசங்கர்

1970-80-களில் புரட்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்தது கோவில்பட்டி. அன்றாடம் ஊரின் தெருக்களில், காந்தி மைதானத்தில் முக்குக்கு முக்கு இருந்த டீக்கடைகளில் தோழர்கள், தொழிற்சங்கவாதிகள், எழுத்தாளர்கள், இளைஞர்கள், அறிவுஜீவிகள் கூடி நின்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள். தத்துவம் சார்ந்த வாதங்களும், இலக்கியம் சார்ந்த வாதங்களும், நடைமுறை அரசியல் சார்ந்த வாதங்களும் புழுதியில் சிந்திக் கொண்டேயிருந்தன. அந்த வாதங்களை கால்களில் அளைந்து கொண்டே மக்கள் அலைந்து திரிந்தார்கள். இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்.சோ.அழகிரிசாமி இருந்தார். எளிமையின் அர்த்தமாக இருந்த அந்தத்தோழர் கோவில்பட்டியின் அடையாளம். நாங்கள் புத்தம்புதிதாக இலக்கிய உலகத்திற்குள் நுழைந்த போது எங்களை இருகரம் நீட்டி அரவணைத்தவர்கள் இடதுசாரி அமைப்பைச்சார்ந்த தோழர்களே. அநேகமாக தமிழகத்தின் எல்லாப்பகுதிகளிலும் இப்படித்தான் நிகழ்ந்திருக்கும். அரவணைத்த இரண்டு கரங்களில் ஒன்றில் மாக்சிம் கார்க்கியின் தாய் இருந்தது, .மற்றொன்றில் நிகலொய் ஒஸ்திராவ்ஸ்கியின் வீரம் விளைந்தது இருந்தது.
அன்று ஒரு புதிய உலகத்திற்குள் நுழைந்தோம். அது ஒரு கோடை இரவு. கரிசல் நகரமான கோவில்பட்டியின் வெயில் அன்று பெய்து தீர்த்திருந்தது. நாங்கள் எப்போதும் கூடிப்பேசும் காந்திமைதானத்து  மண்ணிலிருந்து இன்னமும் ஆவி கிளம்பிக்கொண்டிருந்தது. அமைதியாக நாங்கள் உட்கார்ந்தோம். யாரோ தாய் நாவலைப் பற்றி பேச்செடுத்தார்கள். அப்போது தான் கவனித்தேன். எங்கள் வட்டத்துக்கு வெளிவட்டத்தில் அந்த மீசைக்கார முரட்டுத்தனமான எழுத்தாளன் தன்னுடைய சுருட்டைப் புகைத்தபடி உட்கார்ந்திருந்தார். எங்கள் இயல்பான தெனாவெட்டோடு தான் அவருடைய தாய் நாவலைப் பற்றிப் பேசினோம். அவர் மீசையைத் தடவிக்கொண்டே ” பார்த்தீங்களா தோழர்கள் எப்படிப் பேசுகிறார்கள்? “ என்று சொல்லித் திரும்பிப்பார்த்து சிரித்தார். அவருடைய முதுகுக்குப் பின்னால் தன்னுடைய கீற்றுக்கண்களால் எங்களைப் பார்த்துச் சிரித்தபடி விளாடிமீர் இலியீச் லெனின் உட்கார்ந்திருந்தார். அவர் தன்னுடைய உறுதியான குரலில் எங்களிடம் ” வீரம் விளைந்தது வாசித்தீர்களா தோழர்?” என்றார். இரண்டு பாவெல்களை எங்களால் மறக்கமுடியவில்லை. தாய் நாவலில் வரக்கூடிய பாவெல் புரட்சிக்குக் கட்டியம் கூறினான். வீரம்விளைந்தது நாவலில் வரக்கூடிய பாவெல் புரட்சியை நிலை நிறுத்தினான். நாங்கள் புரட்சியின் நாயகர்களான பாவெல்களை எங்களுக்குள் வரித்துக் கொண்டோம்.
மிகயீல் ஷொலகோவின் அவன் விதி, பரீஸ் வசீலியேவின் அதிகாலையின் அமைதியில், பரீஸ் பொலயோவின் உண்மை மனிதனின் கதை, மண் கட்டியை காற்று அடித்துக் கொண்டு போகாது, சக்கரவர்த்தி மகாபீட்டர், என்று தோழர்கள் கொடுத்த புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தோம். அப்போது கோவில்பட்டிக்குப் புதிதாக வந்து இணைந்து கொண்ட எழுத்தாளர் ஜோதிவிநாயகம், இன்னொரு ருஷ்யாவைக் காட்டினார். அதுவரை புரட்சியின் கனல் வீசிக்கொண்டிருந்தது காந்தி மைதானம். துப்பாக்கி முழக்கங்களும், போர்ப்பாடல்களும், வெற்றி முழக்கங்களும், யுத்தவியூகங்களுமாய் நாளும் ஒரு நாவலைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்த எங்களுடைய இறுகிய முகங்கள் சட்டென்று பூ மலர்ந்தமாதிரி மர்மமான புன்னகையுடன் விரிந்தன.
இப்போது காந்திமைதானத்தில் பனி பொழிந்து கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. உடல் நடுக்கியது. என்ன குளிர்! என்று சொல்லியபடியே செய்யது பீடியைச் சுண்ட இழுத்தார் கவிஞர் கிருஷி. நாங்கள் உடம்பைக் குறுக்கிக் கொண்டோம். எங்களிடமிருந்து சற்றுத்தள்ளி உட்கார்ந்திருந்தவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. நீண்ட தாடியும் மெலிந்த உடலும், ஏறிய நெற்றியும் தாஸ்தயேவ்ஸ்கியின் சாடையைக் காட்டியது. லேசாக இருமினார். அப்படியே பனி பொழிந்து கொண்டிருக்கும் வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதிரி இருந்தது. தூரத்தில் ஒரு பெண். வெண்ணிற இரவுகளில் வந்த நாஸ்தென்கா தான் அது. தலையில் கைக்குட்டையைக் கட்டியிருந்தாள். தாஸ்தயேவ்ஸ்கியின் அருகில் வந்து உட்கார்ந்தாள். நாங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். இப்போது தாஸ்தயேவ்ஸ்கி நாஸ்தென்காவைப் பார்த்து ஏக்கப்பெருமூச்சை விட்டார். எழுந்து அங்கும் இங்கும் நான்கடிகள் நடந்தார். அப்படியே சில கணங்கள் நின்றார். போய்விடப்போவதைப்போல திரும்பி சில தப்படிகள் நடந்தார். பின்னர் யாரும் எதிர்பாராதவண்ணம் நாஸ்தென்காவின் முன்னால் போய் மண்டியிட்டார். நாஸ்தென்காவின் வலது கையைப் பிடித்தபடி பேச ஆரம்பித்தார். அவர் பேசப்பேச அந்தக்குரல் அந்தக்குரல்…. என்னுடைய குரலாக மாறியது. வெண்ணிற இரவுகளின் கனவுலக வாசியாக நானே மாறியிருந்தேன். ஆனால் என்னுடைய நாஸ்தென்கா..? இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். நாஸ்தென்கா!
கோவில்பட்டியின் மற்றுமொரு இலக்கியச்சந்திப்பு மையமாக கதிரேசன் கோவில் மலை இருந்தது. ஒரு அந்திப்பொழுதில் சூரியனின் கதிர்கள் சாய்ந்து விழுந்து கொண்டிருந்த வேளை மலையின் மடியெங்கும் விரிந்து பரந்திருந்த கோரைப்புற்கள் காற்றில் ஆடின. ஆடிக்கொண்டிருந்த அந்தப்புல்வெளி எப்போது ருஷ்யாவின் ஸ்தெப்பி புல்வெளியாக மாறியது? உங்களுக்குத் தெரியுமா? அன்று நாங்கள் சிங்கிஸ் ஐத்மாத்தவின் ஜமீலாவை வாசித்திருந்தோம். எங்களுக்கு முன்னால் விரிந்திருந்த அந்த ஸ்தெப்பிப்புல்வெளியில் தானியாரின் குதிரை வண்டி ஓடிக்கொண்டிருந்தது. அந்த வண்டியின் பின்னால் ஜமீலாவின் வண்டியும் ஓடியது. காற்றின் கீதத்தில் காதல் கனிந்திருந்தது. ஜமீலாவின் வண்டியில் அவளையே பார்த்துக் கொண்டு அவளுடைய மைத்துனான கிச்சினே பாலா நின்று கொண்டிருந்தான். அவனுடைய அண்ணனின் மனைவியான ஜமீலா போர்முனையில் காயம் பட்டு திரும்பிவந்த யாருமற்ற அநாதையான தானியாரைக் காதலிக்கிறாள். அவனால் நம்பவே முடியவில்லை. முரடனான, அழகற்ற தானியாரின் மீது ஜமீலா காதல் கொள்வதற்கு எது காரணமாக இருக்கும்? கிச்சினேபாலா யோசிக்கிறான். தானியாரும் ஜமீலாவைக் காதலிக்கிறான். ஸ்தெப்பியின் புல்பரப்பில் தானியாரின் பாடல் துடிக்கிறது. அதைக் கேட்ட பிறகே ஜமீலா தானியாரின் வண்டியில் ஏறி மலைக்கு அப்பால் போய்க் கொண்டிருக்கிறாள். கிச்சினே பாலா வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய அருமையான ஜமீலா போய்க் கொண்டிருப்பதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறான். காதலின் உன்னதம் பொங்கும் அந்த ஸ்தெப்பிப்புல்வெளியில் நான் கிச்சினேபாலா…இல்லையில்லை தானியார்..என்னுடைய ஜமீலா..போய்க்கொண்டிருக்கிறாள். ஆனாலும் நான் அமைதியாக இருக்கிறேன்..சிங்கிஸ் ஐத்மாத்தவ் என்னுடைய தவிப்பைப்பார்த்துச் சிரிக்கிறார்.
கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அலாதியான தனிமையில் தனியே உட்கார்ந்திருந்தது. ஓவியம் போல அசையாமல் இருக்கும் வேப்பமரங்களில் எப்போதாவது வந்து உட்காரும் ஒன்றிரண்டு காகம். அதுவும் அசையாமல் இருந்திருந்து பார்த்து விட்டு தான் உய்ரோடு இருப்பதைத் தானே உறுதிப்படுத்திக் கொள்வதைப் போல கா..கா..கா.. என்று கரைந்து விட்டுப் பறந்து போய் விடும். ஒரு அதிகாலை நான் ரயில்வே ஸ்டேஷனின் தவத்தைக் கலைக்காமல் அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். ரயில் வருவதற்கு வெகுநேரம் இருந்தது. நீண்ட அங்கியும், பணக்காரத்தோற்றமும், நீளமான தாடியும் கொண்ட தளர்ந்த வயதான லியோ டால்ஸ்டாய் சற்று தூரத்தில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தார். அவர் முகம் துயருற்றிருந்தது. அவருடைய முடிவை அவரே பார்க்கப்போவது போல விரக்தியுடன் கைகளை நெட்டி முறித்தார். அங்கியின் பையிலிருந்து காகிதத்தை எடுத்து ஏதோ எழுதினார். அவர் எழுதியதை மீண்டும் பைக்குள் வைத்து விட்டு நிமிர்ந்து பார்க்கும்போது பிளாட்பாரத்தில் அன்னாகரீனா நடந்து வந்து கொண்டிருந்தாள். இன்னும் சற்று நேரத்தில் வரப்போகிற ரயிலின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்யப்போகிறாள்.
குடும்ப உறவைத் தாண்டி விரான்ஸ்கியுடனான அவளுடைய காதலே அவளை இந்த முடிவுக்குத்தள்ளுகிறது. ஆனால் அன்னா தான் லெவின், கிட்டி இருவரின் கருத்து வேறுபாட்டைத் தீர்த்து வைக்கிறாள். குடும்பம், என்ற அமைப்பின்  உன்னதத்தை அவர்களுக்குப் புரிய வைக்கிறாள். சுதந்திரமான பெண்ணான அன்னாவின் வாழ்வில் ஏதோ ஒரு வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தில் விரான்ஸ்கி வந்தமர்கிறான். அன்பே நிறைந்த அன்னாவின் உள்ளம் அலைக்கழிகிறது. ஒரே நேரத்தில் அளவுகடந்த காதலும், அளவு கடந்த வெறுப்பும் விரான்ஸ்கியின் மீது உண்டாகிறது. தத்தளிக்கும் அன்னா எடுக்கும் முடிவை டால்ஸ்டாயே விரும்பவில்லை. அவர் அன்னாவிடம் எவ்வளவோ சொல்லிப்பார்க்கிறார். அன்னா எதையும் கேட்கவில்லை. அவருடைய முடிவே போலும் அவர் உணர்ச்சிக்கொந்தளிப்பில் அந்த சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார். அன்னாவை என் லட்சியக்காதலியாகக் கொண்டிருந்த என்னால் அதற்கு மேல் அங்கிருக்கப்பிடிக்கவில்லை. டால்ஸ்டாயிடம் சொல்லிக்கொள்ளக்கூடத் தோன்றவில்லை. எப்படியும் இரவில் காந்தி மைதானத்துக்கு வருவார். அவருடைய புத்துயிர்ப்பு பற்றியோ, கிரேஸ்சர் சோனட்டா பற்றியோ, போரும் வாழ்வும் பற்றியோ நாங்கள் பேசும்போது வந்து அருகில் அமர்ந்து கேட்பார். அப்போது பேசிக்கொள்ளலாம்.
இவான் துர்கனேவின் ஆஸ்யாவும், முதல்காதலும், ஆச்சரியமளித்தன. அவருடைய  தந்தையரும் தனயரும் வாசித்து விட்டு நாங்கள் கொண்டிருந்த கம்பீரமான துர்கனேவ் மூன்று காதல்கதைகளில் தன்னுடைய மெல்லுணர்வுகளை எல்லாம் கொட்டித்தீர்த்திருந்தார். நாங்களும் முணுமுணுத்தோம். காதல் ஒரு வசீகரமான மர்மம்.
வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் ஒரு விட்டேத்தியான மனநிலை இருந்தது. அப்போது தான் நான் தான் உங்கள் கதாநாயகன் என்று சொல்லிக்கொண்டு லெர்மென் தேவ் வந்தார். நம் காலத்து நாயகன் நாவலை நாங்கள் நம்முடைய சமூகச்சூழலோடு ஒப்பிட்டோம். செகாவின் ஆறாவது வார்டில் பைத்தியக்காரத்தனத்துக்கு சற்றும் குறைவில்லாமல் நம்முடைய சமூகம் இருந்ததைக் கண்டோம். அலெக்சாண்டர் குப்ரின் மாணிக்கக்கங்கணம் என்ற மகத்தான காதல் கதையை எழுதினார்.
ருஷ்யா கோவில்பட்டியில் இருந்தது. பீட்டர்ஸ்பர்க்கின் பனிபொழியும் தெருக்களில் நடந்து திரிந்தோம். லெனின்கிராட் மைதானத்தில் அமர்ந்து உலக அரசியலைப் பற்றி விவாதித்தோம். ருஷ்ய, சோவியத் இலக்கியங்களில் வந்த நடாஷாவையும், ஆஸ்யாவையும், அன்னாவையும், ஜமீலாவையும், நாய்க்காரச்சீமாட்டியையும், காதலித்துக்கொண்டிருந்தோம்.  சோவியத் புத்தகங்கள் இல்லாத வீடுகளே இல்லை. குழந்தைகள் பத்திரிகை, சினிமா பத்திரிகை, அறிவியல் பத்திரிகை என்று பத்திரிகைகள் வீடுகளுக்கு வந்து கொண்டிருந்தது. வாசிப்பின் வழியே எங்களுக்கான ஒரு உலகைப் படைத்துக்கொண்டோம்.
இந்த ஆண்டும் வெயில் கொளுத்துகிறது. ஆவி பறக்கிறது. ஆனால் பனி பொழியவில்லை. பீட்டர்ஸ்பர்க் நகரமாக மாறுகிற மாயாஜாலம் நடக்கவில்லை. இப்போதும் கதிரேசன் கோவில் மலை இருக்கிறது. கீழே ஸ்தெப்பிப்புல்வெளி இல்லை. காற்றில் நிறைந்து வரும் காதலின் கீதம் இல்லை. காங்கிரிட் காடுகள் முளைத்து புகை விடுகின்றன. இப்போதும் தோழர்கள் இருக்கிறார்கள். புரட்சி பற்றிய கனவின் சுவடு கூட அவர்களிடம் இல்லை. ஆனால் புஷ்கினும், டால்ஸ்டாயும், தாஸ்தயேவ்ஸ்கியும், செகாவும், கார்க்கியும், லெர்மன் தேவும், குப்ரினும், ஷொலகோவும்,, அலக்சி டால்ஸ்டாயும், சிங்கிஸ் ஐத்மாத்தவும், வசீலியும், அமானுஷ்யமாய் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒரு இளம் வாசகன் அவர்களுடைய படைப்புகளை வாசிக்கும்போது அருகில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இளம் வாசகனின் முகத்தில் தெரியும் உணர்ச்சி மாற்றங்களைக் கண்டு புன்னகை பூக்கிறார்கள். காலத்தால் அழியாத தங்களுடைய படைப்புகளின் மீதான நம்பிக்கையோடு சற்று கர்வத்துடன் என்னைப்பார்த்துச் சிரிக்கிறார்கள்.

காலமும் சிரிக்கிறது நம்பிக்கையுடன்.

நன்றி - அந்திமழை

Thursday 6 July 2017

இடாலோ கால்வினோ சிறுகதைகள்

இடாலோ கால்வினோ
சிறுகதைகளைப் பற்றிய ஒரு சுருக்கமான மதிப்பீடு

தமிழில் - உதயசங்கர்

( இடாலோ கால்வினோ தலை சுற்றவைக்கும் குறிக்கோளைக் கொண்ட எழுத்தாளர்.  பலவகையான கதைகளை எழுதியுள்ள  அவருடைய ஒவ்வொரு கதையும் புனைவின் சாத்தியங்களுக்குள் நிகழ்த்தப்படும் ஒரு புதிய சாகசம்.)
1983 – ஆம் ஆண்டு இளவேனிற்காலத்து நியூயார்க் நகரத்தில் அவர் பேசும்போது,
“ நான் எழுதியுள்ள பெரும்பாலான புத்தகங்களும், இனி எழுதப்போகிற புத்தகங்களும் என்னால் அப்படி ஒரு புத்தகத்தை ஒரு போதும் எழுதமுடியாது என்ற எண்ணத்திலிருந்து உருவானவையே. எப்போது அப்படி ஒரு புத்தகம் எழுதுவது என்பது என்னுடைய உணர்திறன்களுக்கும் அல்லது செயல்திறன்களுக்கும் அப்பாற்பட்டது என்று எனக்குள்ளேயே முடிவு செய்கிறேனோ அப்போது நான் உட்கார்ந்து அந்தப்புத்தகத்தை எழுத ஆரம்பித்து விடுவேன்.”
என்று குறிப்பிடுகிறார்.
கால்வினோ பெரும்பாலான படைப்புகளைப்போலவே இந்த அறிவிப்பும் உடனடியான முரண்நகையாகவும் மிகத்தீவிரமானதாகவும் ஆனது. அந்த வாக்கியத்தை அவருடைய புத்தகப்பட்டியல் முழுமையாக நியாயப்படுத்தவும் செய்கிறது. 1940-களின் இறுதியிலிருந்து 61 வயதில் ஒப்பீட்டளவில் சீக்கிரமாக அவர் மரணமடைந்த 1985- வரை அவர் தனித்துவமிக்க பலதிறப்பட்ட படைப்புகளை நவீன காலத்தின் அனைத்து எழுத்தாளர்களைப்போலவே படைத்தவர். அதாவது இரண்டாவது உலக யுத்த காலத்திலும், யுத்தகாலத்திற்குப்பின்பும் நியோரியலிசக் கதைகளை எழுதியவர். ( இளம் கால்வினோ கலகக்காரராக இருந்திருக்கிறார். 1956 –ஆண்டில் ஹங்கேரியின் மீதான சோவியத்தின் படையெடுப்புக்கு கொஞ்சம் முன்புவரை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ) பழங்கதைகள், அரசியல் உருவக்கதைகள், வரலாற்று நாவல்கள், அறிவியல் கோட்பாடுகளால் உத்வேகம் பெற்ற கதைகள், சிந்தனைப்பரிசோதனைகள், பழைய காலச்சீட்டுக்கட்டைப்பயன்படுத்தி விவரணைகளை எழுதுதல், கம்ப்யூட்டரின் வழி விவரணைகளை எழுதுதல் என்று எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து பார்த்தவர். 1970 – களின் இரு முனைகளிலும், அவர் வெளியிட்ட புலப்படாத நகரங்கள், ( Invisible cities ) ஒருவேளை பனிக்கால இரவின் மீது ஒரு பயணி, ( If on a winters night a traveler ) என்ற இரண்டு நாவல்களும் ஃபேண்டசியைப் பயன்படுத்தி யதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிற மிகச்சிறந்த முன்மாதிரிகள் என்று சொல்லலாம். கட்டமைப்பு ரீதியாக இந்தப்புத்தகங்கள் அவருக்கு ஆரம்பத்தின் மீது இருக்கும் பெருவிருப்பும், முடிவின் மீது இருக்கும் நம்பிக்கையின்மையையும் காட்டுகிறது. இந்த நிலைமை தான் அவரை வழக்கமாக ஒரு ஆவேசநிலையிலிருந்து மற்றொன்றிற்கு அதாவது அடுத்து எழுதவே முடியாத ஒன்றை நோக்கிப்போகச்செய்கிறது. 1959 – ஆம் ஆண்டு எழுதிய அவருடைய “ இல்லாத படைவீரனின் இரங்கல் ( THE NONEXISTENT KNIGHT MOURNS ) என்ற நாவலில்  உணர்ச்சிக்கொந்தளிப்பை எப்படி அவநம்பிக்கை எதிர்நிலையில் சமன் செய்கிறது என்று கதைசொல்லியாக வெளிப்படுத்துவார்.
“ ஒருவர் ஒரு வித உற்சாகத்தோடு எழுத ஆரம்பிப்பார். ஆனால் ஒரு நேரத்தில் பேனா வெறுமனே தூசிபடிந்த மையோடு உராய்ந்து கொண்டிருக்கும். ஒரு சொட்டு வாழ்க்கைகூட காகிதத்தில் சிந்தாது. வாழ்க்கை வெளியே இருக்கும். ஜன்னலுக்கு வெளியே, ஒருவருக்கு வெளியே இருக்கும். அதைப்பார்க்கும் போது ஒருபோதும் ஒருவரால் எழுதிக்கொண்டிருக்கும் அந்தப்பக்கத்துக்குள் நுழைந்து இன்னொரு உலகத்தை திறந்தோ, இடைவெளியைத் தாண்டிக்குதித்தோ தப்பித்து விடமுடியாது. “
1940-களின் இறுதியில் கால்வினோ அவருடைய யுத்தகால அநுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான ஹெமிங்வேயக்கதைகளை  எழுதினார். எப்படியோ ஏற்கனவே சில கதைகளில் தேவதைக்கதைத்தன்மை புகுந்து விட்டிருந்தது. உதாரணத்திற்கு விலங்குக்காடு ( ANIMAL WOOD )  இந்தத்திசை வழியே தான் 1950-களில் அவருடைய படைப்புகள் இருந்தன. வாசகர்கள் எதிர்பார்த்திருந்த இத்தாலிய சமூகத்தின் நியோரியலிச நாவல் தோன்றவில்லை. பின்னால் அவர் விளக்கமளித்தார்:
“ நான் எந்தப்புத்தகத்தை எழுத வேண்டுமோ எந்தப்புத்தகத்தை என்னிடமிருந்து எதிர்பார்த்தார்களோ அதை எழுதுவதற்குப்பதில் நான் புத்தகத்தில் மாயஜாலம் செய்து கொண்டிருந்தேன். நானே வேறு ஒரு காலத்திலிருந்து வேறு ஒரு நாட்டிலிருந்து யாரோ ஒரு எழுத்தாளர் எழுதிய அந்த மாதிரியான புத்தகங்களை வாசிக்க, மேன்மையான ஒன்றை கண்டுபிடிக்க நினைத்திருந்தேன்..”
அந்தப்புத்தகம், வரலாற்று ஃபேண்டஸியான துர்க்குணப்பிரபு, ( THE CILOVEN VISCOUNT 1951) அதே மாதிரியான பாணியிலான இரண்டு புத்தகங்கள் மரங்களின் சீமான் ( THE BARON IN THE TREES ), இல்லாத வீரன் ( THE NONEXISTANT KNIGHT ) வெளிவந்தன. அதே காலகட்டத்தில் ( 1956) இத்தாலிய நாட்டுப்புற கதைகளை கால்வினோ தொகுத்துக்கொண்டிருந்தார். இத்தாலிய தீபகற்பத்திலுள்ள கதைகளைப் பற்றி கறாரான ஒரு மதிப்பீட்டுக்கு வருவதற்கான அறிவார்ந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்தத் திட்டம் அவருடைய விருப்பார்ந்த “ ஃபேண்டஸியாக வெடித்துக்கிளம்பும் யதார்த்தத்தின் சக்தி “ கருதுகோளை இறுக மூடிவிட்டது. அதற்குப்பின்னால் வந்த அவருடைய படைப்புகளில் சில விதிவிலக்குகளைத் தவிர  அபராதம்1963 கதை ( THE FINE 1963 STORY ) 1953 –ல் நடந்த தேர்தலைப்பற்றிய கதையான காவல்காரர் ( WATCHER ) அவர் முயற்சித்திருந்தார். அதன் பிறகு அவர் யதார்த்தவாதத்தை கைவிட்டுவிட்டார்.
1960-களிலிருந்து கால்வினோவின் எழுத்துமுறை அடிக்கடி வேறொரு வடிவத்தை அடைந்தது. அவருக்கும் வாசகனுக்கும் இடையில் அல்லது அவருக்கும் ஒரு கோட்பாட்டுக்கும் இடையிலான ஒரு விளையாட்டுபோல ஆனது. அதிசயத்தக்க வகையில் டி ஜீரோ மற்றும் இரவு ஓட்டுநர் ( 1967 ) ஆகிய கதைகளில் கதாபாத்திரங்களே இல்லாமலே கூட கதை சொல்லும் சுவாரசியத்தைத் தக்கவைக்க முடிந்தது. இந்தக்கதைகள் கால்வினோவை OULIPO குழுவுடன் அணி சேரவைத்தது. OULIPO பாரீசிலிருந்த ஒரு குழு. அதில் ரேமண்ட் க்யுனிவா, ஜார்ஜஸ் பெரெக் போன்றவர்கள் இருந்தார்கள். அவர்கள் கணிதத்திலிருந்த இறுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் இலக்கியத்தில் உள்ள சுதந்திரத்தையும் இருண்மையையும் ஊடுபாவச்செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் இந்தப்பயணங்களில் விருப்பமுள்ள பயணியாக இல்லை. என்றாலும் கோரே விடால் 1974-ல் எழுதிய ஒரு புகழ் பெற்ற கட்டுரையில்- நியுயார்க் ரிவ்யூ ஆப் புக்ஸ் ஆங்கிலம் பேசும் உலகில் வெற்றிகரமாக கால்வினோவை அறிமுகம் செய்திருந்தது. – அதிருப்தியுடன் “ டி ஜீரோ ஃபோர்ஹேவால் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கக்கூடும். இந்தப்போட்டி அவருக்கு ராப்பே-க்ரில்லெட்டை ஞாபகப்படுத்தினாலும் இதை பாராட்டுக்காகச் சொல்லவில்லை என்று தெளிவுபடுத்திருப்பார்.
அந்தக்கதைகள் அவருடைய காஸ்மிகாமிக்ஸ் தொகுப்பில் வெளிவந்தன. அந்ததொடர் 1964-க்கும் 1968-க்கும் இடையில் எழுதப்பட்ட கால்வினோவின் மிகச்சிறந்த படைப்புகள். பின்னால் அந்தத் தொகுப்பில் 1980-களின் பின்பகுதியில் புதிதாகச் சிலவற்றை சேர்த்தாலும் ஆசிரியரே சொல்வதைப்போல அவையெல்லாம் பப்பாயி காமிக்ஸை எழுதிய லியோபார்டி, சாமுவல் பெக்கட், ஜியோர்டனோ புருனோ, லெவிஸ் கரோல், மாட்டாவின் சில ஓவியங்கள், லாண்டோல்ஃபி, இம்மானுவேல் காண்ட், ஃபோர்ஹே, ஆகியோரின் சில படைப்புகள், கிராண்ட்வில்லேயின் சித்திரங்கள் இவையெல்லாவற்றுக்கும் கடன்பட்டிருக்கிறது. பெரும்பாலும் உச்சரிக்க முடியாத பெயருடைய  Qfwfq கூடுவிட்டு கூடு பாய்கிற கதாபாத்திரத்தால் கதை சொல்லப்படுகிறது. ( எனக்கு ராபெர்ட் கூவர்ஸினுடைய kwoofk –கோடு செல்வது மகிழ்ச்சியைத்தரும்.) ஒவ்வொரு கதையும் ஒரு அறிவியல் அறிக்கையைத் துவக்கமாகக் கொண்டிருக்கும். அதிலிருந்து புனைவின் வழியாக யதார்த்தம், கற்பனாவாதம், இருத்தலியல், வானியல், பூமியியல், பரிணாம உயிரியல், என்று Qfwfq பெரும்வெடிப்பு ( BIGBANG ) காலத்திலிருந்து சுற்றிக்கொண்டிருப்பான். அவனை நாம் ஆழ்வெளியின் கழிவுகளூடே, ஆதிமுன்னோர்களுடன், இனப்பெருக்க அலைக்குளத்தில், பூமியின் ஆழடுக்குகளில் பின் தொடர்ந்து கொண்டிருப்போம். மார்ட்டின் மெக்லாலின் குறிப்பிடுவதைப்போல கால்வினோவின் நிரந்தமான குறிக்கோள் என்பது இப்போது இருக்கும் இடத்திலிருந்து இலக்கியத்தின் குறிக்கோளை உயர்த்துவது தான். அவர் விளக்கமுடியாததை விளக்கும்படி இலக்கியத்துக்கு சவால் விட்டார். அண்டத்திலிருந்து பிண்டம், பெரும்வெடிப்பிலிருந்து அணுக்கள் உடைந்துபிரிவது வரை இலக்கியத்தில் கொண்டுவர விரும்பினார். இதற்காக அவர் பயன்படுத்திய மொழி அதிரடியானது. இறுக்கமான விவரணைகளின் வழி பிரபஞ்சத்தின் தோற்றக்கோட்பாடுகளான அண்டவியல் கொள்கையோடு நிரந்தரநிலை கொள்கையை இணைத்து எழுதினார்.
“ எங்கும் வெளி வளைந்தே இருக்கிறது. ஆனால் சில இடங்களில் மற்ற இடங்களை விட நன்றாக வளைந்திருக்கிறது. பைகளைப்போல, பாட்டில்கழுத்துவளைவு போல, பிறைகளைப்போல வளைந்திருக்கிறது. அங்கே சூனியம் நசுக்கப்படுகிறது. ஒவ்வொரு இருநூற்றைம்பது மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை இந்த பிறைவளைவுகள் இருக்கின்றன. அங்கே ஒரு மெல்லிய மணியோசை கேட்கும். உடனே பளபளக்கும் ஹைட்ரஜன் அணு உருவாகும். முத்துச்சிப்பிகளின் ஓடுகளுக்கிடையில் முத்து உருவாவதைப்போல..”
நான் அறிந்தவரையில் மற்ற எழுத்தாளர்களை விட கால்வினோவின் கதையை வாசிக்கத்தொடங்குவது என்பது யாருமறியாத பூமியை நோக்கிப் பயணம் மேற்கொள்வதைப் போலாகும். அதில் எதிர்பார்ப்பின் ஆனந்தத்தை கால்வினோ உள்பொதிந்து வைத்திருப்பார்.ஆனால் அதே நேரத்தில் அவருடைய படைப்பில் சோகமும், கூடிக்கொண்டே வரும் அவநம்பிக்கையும் சாரமாக இருக்கும். உலகத்தின் முடிவைப்பற்றிய சித்திரங்களை ஒரு ஆவேசவெறியுடன் தொடர்ந்து சித்தரிப்பதை அவரது படைப்புகளில் பார்க்கலாம். ஏன் அவரது படைப்புகளில் மிகக்குறைந்த முக்கியத்துவத்துடனே பயங்கரம் இடம் பெற்றிருக்கும். இதற்கு நல்ல உதாரணமாக அர்ஜெண்டைனா எறும்பு ( 1953 ) என்ற் கதையில் ஒரு கணவன், மனைவி, குழந்தை, ஒரு புதிய கிராமத்துக்கு ஒரு புதிய வாழ்வைத் தொடங்குவதற்கு மிகுந்த நம்பிக்கையோடு ( இது தான் கால்வினோவின் நிரந்தரக்கரு ) செல்வார்கள். ஆனால் அங்கே வீடுகள், ஏன் அந்தப்பிரதேசம் முழுவதும் எறும்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். உண்மையில் இந்தக்கதை கோரே விடால் சொல்வதைப்போல, அச்சுறுத்துகிற, விசித்திரமான காஃப்கா எழுதுவதைப் போன்ற ஒன்று. அது காற்றில் பயத்தையும் மர்மத்தையும் நேரடியான அலங்காரமற்ற மொழியில் கட்டி எழுப்புகிறது. காஃப்காவைப் பற்றி கால்வினோவின் குறிப்பான ” வெளிப்படையான மொழியைப் ஒரு உருவெளித்தோற்றம் உருவாகும் வரை பயன்படுத்திக்கொண்டேயிருப்பது.” என்று சொல்லலாம்.
” என்னுடைய ஆசான் காஃப்கா “  என்று ஒரு நேர்காணலில் கால்வினோவின் மீது தாக்கம் செலுத்தியவர்களைப் பற்றி கேட்டபோது கால்வினோ சொன்னார். காஃப்காவின் இருப்பு கால்வினோவின் படைப்புகளில் எல்லாம் இருந்தது. அர்ஜெண்டைனா எறும்பு தொடங்கி 1984-ல் எழுதிய உருக்குலைதல் ( IMPLOSION) வரை எல்லாக்கதைகளிலும் காஃப்காவின் தாக்கம் இருக்கிறது. அடக்கம் கதையில் கால்வினோ இலக்கியத்தின் மிக முக்கியமான உள்முகச்சிந்தனைக் கதாபாத்திரங்களான தண்டனைபெற்ற ஹேம்லட்டையும், ( அந்தக்கதை “ வெடித்துச்சிதறு அல்லது உருக்குலைந்து போ “ இது தான் இப்போது கேள்வி என்று Qfwfq சொல்கிறான். )  காஃப்காவின் வளை என்ற கதையில் வருகிற மூஞ்சூறு போன்ற உயிரினத்தையும் அழகாக, இணைத்து கருந்துளைகளைப் பற்றி பிரபஞ்சத்தின் மரணத்தைப் பற்றி ஆழ்ந்த சோகமான சிந்தனைகளை எழுதுகிறார். அழிவைப் பற்றி ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஒளிந்திருக்கும் அந்தப்பயம்:
“ நிச்சயமில்லாத எல்லைகளைக் கொண்ட பிரபஞ்சத்தில் அநுமானமான அரைகுறை விண்பொருட்களின் பொறுப்பற்ற நடவடிக்கையை நீங்களாக அதியற்புத கற்பனை செய்து திசை திரும்பாதீர்கள். இங்கே உங்கள் கவனத்தை பால்வெளியின் மையத்தை நோக்கித் திருப்புங்கள். நம்முடைய எல்லாகணக்குகளும், சாதனங்களும் பிரபஞ்சத்தின் உள்ளே கண்ணுக்குத்தெரியாத ஒரு பெரிய உட்கரு இருப்பதைச் சொல்கின்றன. கதிரியக்கத்தின் வலைகளும், வாயுக்களும் கடைசியாக உருக்குலைந்த காலத்திலிருந்தே அங்கே  சிறைப்பட்டிருக்கின்றன. அவைகள் எதைக்காட்டுகிறதென்றால், மையத்தில் இருக்கும் காலியான துளைகள்  ஒரு பழைய எரிந்தடங்கிய எரிமலையாக இருக்கலாம். சுற்றியிருப்பதெல்லாம் கிரகங்களின் வட்ட ஒழுங்கு, நட்சத்திரக்கூட்டம், பால்வெளியின் துணைநிலைகள். நமது பால்வீதியில் உருக்குலைதலின் மையம் தனக்குள் மூழ்கிக்  கொள்வதிலேயே இருக்கிறது.”
கடைசி காஸ்மிகாமிக்ஸின் இறுதி வரி,இது “ நான் என்னுடைய மூஞ்சுறு வளையில்  தோண்டிக்கொண்டே இருப்பேன்”  காஃப்காவின் வளை என்ற கதையோடு ஒரு உறவை ஏற்படுத்துகிறது. காஃப்கா அந்தக்கதையை முடிக்காமலேயே இறந்து போனார் அல்லது அப்படித் தெரிகிறது. கையெழுத்துப்பிரதியின் கடைசிப்பக்கம் முழுவதும் நிறுத்தல் குறியே இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறது என்ன பொருத்தம்! கால்வினோ தன்னுடைய கடைசிக்கதைகளில் ஒன்றான துணுக்குகளின் தொகுப்பு அது தான் என்னுடைய எழுத்து. அப்படித்தான் அவர் அழைத்தார். அந்தக்கதை முடியவில்லை. நின்று விட்டது. கால்வினோவின் வாழ்க்கையும் கூட ஒரு முடிவுக்கு வந்து சேரவில்லை. மூளையிலுள்ள ரத்தக்குழாய் வெடிப்பினால் திடீரென உடைந்து போய்விட்டது; அடுத்த சாத்தியமில்லாத புத்தகம் இன்னும் எழுதப்படாமல் காத்துக்கொண்டிருக்கிறது.

நன்றி - உன்னதம்