ராஜாவைக் காணோம்…..
உதயசங்கர்
பழைய பழைய காலத்தில் வங்காளவிரிகுடா
கடலில் ஒரு தீவு இருந்தது. அந்தத்தீவில் ஒரு பத்தாயிரம் மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.
அதற்கு ஒரு ராஜாவும் மந்திரிப்பிரதானிகளும் இருந்தார்கள். அந்தத் தீவுக்குப் பெயர்
வேண்டாமா? ஆமாம். அந்தத்தீவுக்கு ஒரு பெயர் இருந்தது. ஆனால் அதைப் பெயர் என்று சொல்ல
முடியாது. அந்தத்தீவுக்கு எண் 420 என்று பெயரிட்டிருந்தார்கள். அந்தத்தீவின் ராஜாவுக்கு
எண் 421 என்று பெயர். மந்திரிகளுக்கு 370, 371, 372, 373, என்று வரிசையாக பெயர் வைத்திருந்தார்கள்.
அப்படியானால் மக்களுக்கு சுழியத்திலிருந்து ஒன்று இரண்டு மூன்று என்று பத்தாயிரம் வரையிலான
எண்களை சூட்டியிருந்தார்கள். எல்லோரும் அவர்களுடைய எண்களை மறந்து விடக்கூடாது என்று
அந்த எண்களை கொட்டை எழுத்தில் ஒரு அட்டையில் அச்சிட்டு கழுத்தில் தொங்க விட்டிருந்தார்கள்.
எல்லோரும் அந்த எண்களைக் கொண்டே அழைத்தார்கள்.
“ ஏய் பதினெட்டு சாப்பிட்டுட்டு
சீக்கிரம் பள்ளிக்கூடம் போ..”
என்று அம்மா காலையில் கத்தினார்.
அம்மா போட்ட சத்தத்தில் திடுக்கிட்டு கையில் இருந்த பையைக் கீழே தவற விட்டார் அப்பா.
உடனே
“ பதினைஞ்சு…. பதினைஞ்சு… உனக்கு
எத்தனை தடவை சொல்லியிரு்க்கேன்.. இப்படிக் கத்தாதேன்னு..”
என்று கத்தினார். அப்போது அந்த
வீட்டின் கடைக்குட்டிப்பாப்பாவான பத்தொன்பது தண்ணீரை வீட்டில் கொட்டி மொழுகிக் கொண்டிருந்தாள்.
அம்மா அப்பாவைப் பார்த்து,
“ வரும்போது டாக்டர். இரண்டாயிரத்தைப்
பார்த்து மருந்து வாங்கிட்டு வந்திருங்க..” என்றார்.
இப்படி அந்த நாடு முழுவதும் எண்களை
வைத்தே எல்லா மக்களும் அறியப்பட்டார்கள். எங்கே போனாலும் கழுத்தில் தொங்க விட்டிருக்கும்
அட்டையிலுள்ள எண்ணைப் பதிய வேண்டும். அவரவர் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்றாலும்
அந்த எண்ணை வாசலில் இருக்கும் கணிணியில் பதிந்து விட்டு காத்திருக்க வேண்டும். அனுமதி
கிடைத்த பிறகே உள்ளே நுழைய முடியும். அலுவலகம் சென்றாலும் அப்படித்தான். கடைகளில் போய்
உணவுப்பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் அப்படித்தான். அரசாங்க அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள்,
பேருந்து, ரயில், விமானம், என்று எல்லாக்காரியங்களுக்கும் எண்ணைப் பதிய வேண்டும். அவ்வளவு
ஏன்? பள்ளிக்கூடத்தில் போடுகிற மதிய உணவு கூட அந்த எண் இருந்தால் தான் கிடைக்கும்.
இப்படி எல்லாம் எண்கள். எங்கும் எண்கள்.
அந்த எண்கள் எல்லாம் அரண்மனையில்
உள்ள மகாக்கணிணியில் ஏற்கனவே பதிந்து வைக்கப்பட்டிருந்தது. அதனால் யார் எங்கே போனாலும்,
என்ன செய்தாலும் அரண்மனைக்குத் தெரிந்து விடும். எல்லோரிடமும் உள்ள பணம், பொருட்கள்,
அவர்கள் பார்க்கும் திரைப்படங்கள், இசை, படிக்கும் புத்தகங்கள், என்று எண் 420 தீவில்
வசிக்கும் அத்தனைபேரின் முழுவிவரமும் அரண்மனையில் இருந்தது. யாரும் அரண்மனைக்குத் தெரியாமல்
எதுவும் செய்ய முடியாது. இதையெல்லாம் தெரிந்து கொள்ள எண் 420 தீவு ராஜா 421 ஒரு பெரிய
தொடுதிரை வைத்திருந்தார். அந்தத் தொடுதிரையை முடுக்கிவிட்டால் போதும்.
“ எண் 253 இப்போது குளிக்கிறார்
“
“ எண் 565 இப்போது கக்கூஸ் போகிறார்..”
” எண் 679 இப்போது ராஜாவுக்கு
எதிராகப் பேசுகிறார்..”
“ எண் 1088 புத்தகம் வாசிக்கிறார்..”
” எண் 9877 இப்போது வீட்டுப்பாடங்கள்
எழுதுகிறார்…”
“ எண் 6455 யாருக்கும் தெரியாமல்
பணத்தைத் திருடுகிறார்..”
” எண் 8888 மிட்டாயை ஒளித்துவைக்கிறார்..”
என்று எல்லோருடைய நடவடிக்கைகளும்
ராஜாவுக்குத் தெரிந்து விடும். சரி. அதனால் என்ன? ராஜா 421 அரசாங்கத்துக்கு எதிராகவோ,
ராஜாவுக்கு எதிராகவோ யாராவது யோசிக்கிறார்கள் என்றாலே அவர்களைக் கைது செய்து சிறையில்
அடைத்து விடுவார். அவர்களுடைய எண்ணையும் பிடுங்கிவிடுவார். அவர்களுக்கு எண் இல்லாததால்
அவர்களைப் பற்றி யாருக்கும் தெரியாது.
என்ன நடந்தாலும் அவரவர் எண் அட்டையை
மட்டும் தொலைத்து விடக்கூடாது. அப்படித் தொலைத்து விட்டால் என்ன ஆகும்? எதிர்பாராத
விதமாக சிலர் அவர்களுடைய எண் அட்டையைத் தொலைத்து விட்டார்கள். அவ்வளவு தான். அவர்களால்
அவர்களுடைய வீட்டிற்குள் நுழைய முடியவில்லை. அலுவலகமோ பள்ளிக்கூடமோ செல்ல முடியவில்லை.
கடைகளில் உணவுப்பொருட்கள் வாங்க முடியவில்லை. பையில் பணம் இருந்தாலும் ஹோட்டல்களில்
சாப்பிட முடியவில்லை. அப்படியே தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான்.
” எப்போதும் இந்தத்தீவு இப்படியே
தான் இருந்ததா? ”
என்று எண் 155 அவனுடைய தாத்தா
1119-இடம் கேட்டான். அப்போது தாத்தா 1119 சொன்னார்.
“ இல்லடா கண்ணா! ஒரு காலத்தில்
எல்லோருக்கும் பெயர் இருந்தது. இந்தத் தீவின் பெயர் ஐந்திணை. என்னோட பெயர் சந்தனமாறன்.
உன்னோட அப்பாவோட பேரு தமிழழகன், உன்னோட அம்மாவோட பேரு அழகி, எல்லாம் இந்த ராஜா வந்தபிறகு
அவருக்குத் தெரியாம எதுவும் நடந்திரக்கூடாது என்ற பயத்தில் இப்படிப் பண்ணிட்டாரு…அறிவியலை
தவறாப்பயன்படுத்திட்டாரு “
இதைக்கேட்ட எண் 155-க்கு வருத்தமாக
இருந்தது. எண் 155 க்கு இரண்டு கிளிகள் நண்பர்களாக இருந்தனர். தினமும் வீட்டின் பின்புறம்
உள்ள வேப்ப மரத்தில் சாயங்காலம் பறந்து வரும் கிளிகள். அந்தக் கிளிகளிடம் எண்155 தினமும்
நடக்கிற விசயங்களைச் சொல்வான். அப்படித்தான் அன்றும் எண்களினால் வருகிற குழப்பங்களையும்
பிரச்சினைகளையும் சொன்னான். எப்போதும் யாரோ தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதினால் யாரும்
சுதந்திரமாக இருக்க முடியவில்லை.அவனுடைய வருத்தத்தைக் கேட்ட கிளிகள் ஒன்றும் சொல்லாமல்
பறந்து போய் விட்டன. எண்155 சோகத்துடன் வீட்டுக்கு வந்து படுத்து விட்டான்.
அடுத்த நாள் தொலைக்காட்சியில்
பிரேக்கிங் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. ராஜா 421 காணாமல் போய் விட்டார். அரண்மனையிலிருந்து
காலையில் நடைப்பயிற்சி செய்ய பூங்காவுக்குச் சென்றவரைக் காணவில்லை. அவருடைய அடையாளஎண்
அட்டை செயல் இழந்து விட்டது என்ற அறிவிப்பு ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் உண்மையில் ராஜா தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அவருடைய கழுத்தில்
அடையாளஎண் அட்டை இல்லாததால் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ராஜா தெருத்தெருவாக,
“ நான் தான் ராஜா…நான் தான் ராஜா…”
என்று கூவிக்கொண்டே போனார். யாரும்
அவரைக் கவனிக்கவில்லை. ஏன் எண் 155 கூட அவரைப் பார்த்தான். யாரோ அடையாளஎண் அட்டை தொலைத்தவர்
என்று பேசாமல் போய் விட்டான். மாலையில் வீட்டுக்குப் போனதும் வேப்பமரத்தடிக்குப் போனான்.
அங்கே அவனுடைய நண்பர்களான அந்த இரண்டு கிளிகள் உட்கார்ந்திருந்தன. ஒரு கிளியின் வாயில்
ராஜாவின் அடையாளஎண் அட்டை கயிறுடன் இருந்தது.
மறுநாள் காலை நாடே அல்லோலப்பட்டது.
ஆம். நாடு முழுவதும் அடையாளஎண் திட்டம் நீக்கப்பட்டது. இனி அவரவர் விருப்பம் போல பெயர்களை
வைத்துக் கொள்ளலாம். இந்தத் தீவின் பெயர் இனி ஐந்திணை. தேவைக்கு அதிகமான தகவல்கள் கணிணியில்
இருந்து நிரந்தமாக அழிக்கப்பட்டது. மக்கள் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ்ந்தார்கள்.
அடையாளஎண் அட்டை தொலைந்து தெருக்களில்
திரிந்த ராஜாவை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? என்ற கதைகள் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும்
ஓடிக்கொண்டிருந்தது.
தொலைந்து போன ராஜா421 அடையாளஎண்
அட்டை செந்தமிழ்ச்செல்வனின் மேசை இழுப்பறையில் கிடந்தது.
என்ன விழிக்கிறீர்கள்? செந்தமிழ்ச்செல்வன்
தான் பழைய எண் 155 ஐயையும் அவனது நண்பர்களையும்
மறந்துட்டீங்களா?
கீக்க்கீகீகீகீ! கிக்கீக்கீ..!
No comments:
Post a Comment