கி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக
தூரமில்லை…...
உதயசங்கர்
கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று
ஒரு அரைமணிநேரம் மழை பெய்தது. காய்ந்து, கருகி, வெட்டை வெட்டையாய் விருவுகள் தெரிய
நிதங்குலைந்து சுடுகாடு போல கொடூரமான அமைதி நிலை கொண்டிருந்த கரிசலில் உயிர்கள் துடிக்கத்
தொடங்கின. வெயிலின் இசை முடிந்து விட்டது. ஒரே மாதிரி ராகம், தாளம், சுருதி, எதுவும்
இல்லாத இசை. உடலையும் மனசையும் உருக்கும் இசை. கரிசல் காட்டு விவசாயி காட்டை உழுது
காத்திருக்கிறான். உப்பு படிந்த வியர்வை அவனுடைய வீட்டின் தரையெங்கும் அவனுடைய உழைப்பைப்
பற்றி ஓவியம் வரைந்து கொண்டிருந்தது. இன்று மழை. இடி. மின்னல். அவன் உடலும் உள்ளமும்
குளிர்ந்தது. இனி காதுகளைக்கிழிக்கும் அந்த வெயிலின் இசை முடிவுக்கு வரும். அவன் உழுது
போட்டிருக்கிற நிலத்திலிருந்து புதிய புதிய உயிர்கள் தோன்றும்.
ராத்திரி ஒரே சத்தக்காடு. இரவு ஒரு இசைக்கச்சேரிக்குத்
தயாராகிறது. கருமை கூடியிருக்கிற இந்த இரவில் நான் குமாரபுரம் ஸ்டேஷனில் நின்று எதிரே
தெரியும் கரிசல் வெளியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இத்தனை நாள் தியானத்திலிருந்த
உயிர்கள் மழையின் ஈரம் பட்டதும் உறக்கம் கலைந்து எழுந்தது போல ஒன்று போல மழலைக்குரலில்
பேசுகின்றன. விதம் விதமான ஏற்ற இறக்கங்களோடு
பூச்சிகள் இசைக்கும். சிம்பனி இசை கரிசலின் மகத்துவத்தைச் சொல்கிறது. அந்த இசையின்
ஸ்வரத்தில் நான் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கிறேன். என் எதிரே தூரத்தில்
விளக்கின் வெளிச்சம் மினுக்குகிறது. அது இடைசெவலில் புறப்பட்டு தமிழிலக்கியத்தில் பாய்ச்சிய
புதிய வெளிச்சம் என்று நம்புகிறேன்.
இடைசெவலிலிருந்து தமிழ் இலக்கியவெளியில்
பரவிய புதிய வெளிச்சம் தமிழிலக்கியத்தைத் தலைகீழாய் புரட்டிப்போட்டது. புதிய பாதைகளை உருவாக்கியது. அதுவரை மடிசஞ்சியான
மத்திய தரவர்க்கத்தின் சடவுகளையே பாடுபொருளாகக் கொண்டிருந்த இலக்கியம் முதன்முதலாக
கிராமங்களின் உயிர்வெளியைக் காட்டியது. சிறுகீறலாக ஷண்முகசுந்தரம் துவங்கிய அந்தக்கொழுமுனை
இடைசெவலில் கி.ராவின் கைகளின்வழியே ஆழமாகவும் அகலமாகவும் உழுது ஏராளமான புதையல்களை
வெளிக்கொண்டுவந்தது. யாரும் சென்றிராத தாம்போதிகளின் வழியே சென்று நாட்டார் இலக்கியத்தை,
வட்டாரச்சொல் அகராதியை, பாலியல் கதையாடல்களை, சிறுவர் கதைகளை, சேகரித்து பண்பாட்டுக்களத்தில்
புதிய காற்றாய் வீசிய அந்தப்புயல் இடைசெவலில் மையம் கொண்டிருந்தது. ஒரு பல்கலைக்கழகத்தின்
ஒட்டு மொத்தப்பணிகளை தன் தோள்களில் சுமந்த கி.ரா. என்ற கி.ராஜநாராயணன் தமிழ் மொழிக்கும்
தமிழ் இலக்கியத்துக்கும் ஏராளமான கொடைகளைத் தந்துள்ளார்.
வட்டார வழக்குகளை, விளையாட்டுகளை,
சொற்பிரயோகங்களை, நாட்டார் கதைகளை, சிறுவர் கதைகளை, பெண் கதைகளை, நவீனக்கதைகளை, வேளாண்
சமூக வரலாற்றை, களஞ்சியத்தை, தமிழுக்கு அளித்துள்ள மகத்தான ஆளுமை கி.ரா.
2.
1980- ஆம் ஆண்டு. கல்லூரியில்
இளங்கலை இறுதியாண்டு பரீட்சை எழுதி முடித்திருந்த சமயம். அதுவரை வீட்டுக்கு அருகில்
இருந்த காந்திமைதானத்தில் நடக்கும் அரசியல் கூட்டங்களையும், இலக்கியப் பட்டிமன்றங்களையும்,
கவியரங்கங்களையும் ஆச்சரியத்துடன் வாய்பார்த்து கொண்டிருந்த எனக்குள்ளும் எழுத வேண்டும்
என்ற பேராசைப்பேய் பிடித்தது. எல்லோருக்கும் போல கலாமோகினி கவிதையரசியை என்னிடம் அனுப்பி
வைத்தாள். அவளுடைய கடைக்கண் பார்வை ஏற்படுத்திய ஹார்மோன்களின் துடிப்பினால் ஆழம் தெரியாமல்
தமிழின் கரைகாண கடலுக்குள் குதித்தேன். நீச்சலும் தெரியாது. உயிரைத் தக்கவைக்க தத்தக்கா
பித்தக்கா என்று கையையும் காலையும் அடித்துக் கொண்டிருந்தபோது தான் நண்பர் மாரீஸ் பள்ளிப்பிராயத்துக்குப்
பிறகான நீண்ட இடைவெளியைக் கடந்து வந்து என்னைச் சந்தித்தார்.
அவர் தான் கோவில்பட்டி எழுத்தாளர்களை
அறிமுகப்படுத்தினார். தேவதச்சன், கௌரிஷங்கர், பிரதீபன், வித்யாஷங்கர், அப்பாஸ், ராமு,
முருகன், நாடக நடிகர் மனோகர், பசப்பல் ராஜகோபால், என்று ஒரு குழாமை அறிமுகப்படுத்தினார்.
நிறைய புத்தகங்களையும் சிற்றிதழ்களையும், கையெழுத்துப்பத்திரிகைகளையும் வாசிப்பதற்கான
சூழ்ந்லை கிடைத்தது. அப்போது நயினாவின் வேட்டி சிறுகதைத் தொகுப்பும், வாசகர் வட்டம்
வெளியிட்ட கோபல்லகிராமம் நாவலும் வாசித்தேன். என்னால் நம்பமுடியவில்லை. அந்த மொழி,
நடை, உத்தி, எல்லாம் புதுமையாக இருந்தது. மூளையின் அணுக்களில் ஒரு புதிய உணர்வு தோன்றியது.
நான் அதைப்பற்றி என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த மாரீஸ்
“ நாளைக்கி இடைசெவல் போவோம்…
“ என்றான். மறுநாள் காலை நானும் அவனும் இடைசெவலுக்குப்
போனோம். நயினாவைச் சந்திக்கும்வரை எனக்கு எழுத்தாளர்களைப் பற்றி இருந்த சித்திரம் மிக
மிக விசித்திரமானது. ஒழுங்கற்ற, விட்டேத்தியான, அசாதாரண நடைமுறை வாழ்க்கையும், பழக்கவழக்கங்களும்
கொண்டவர்கள் என்று நினைத்திருந்தேன். அதில் பெருமளவு உண்மை இருந்ததை யதார்த்தத்திலும்
கண்டேன். ஆனால் நயினாவின் வீட்டில் என்னுடைய
கற்பனைக்கு மாறான ஒழுங்கும் நேர்த்தியும் இருந்தது. புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
கடிதங்கள் தேதிவாரியாக இருந்தன. நயினாவின் சாய்வு நாற்காலித்துணி சுத்தமாக இருந்தது.
வீட்டின் உள்ளே முற்றத்தில் இருந்த தொழுவம் சுத்தமாக இருந்தது. அமைதியும் சுத்தமும்
அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தது.
ஈரிழைத்துண்டை மார்பில் போட்டமானிக்கு
நயினா வந்து எங்களை வரவேற்றார். வெளியே பார்த்த சன்னலுக்கு எதிரே இருந்த சாய்வு நாற்காலியில்
நயினா உட்கார்ந்தார். சன்னலில் இருந்து செய்யது பீடிக்கட்டை எடுத்தார். ஒவ்வொரு பீடியாக
உருட்டிப்பார்த்து சில பீடிகளை ஒதுக்கினார். தேர்வு செய்த பீடிகளிலிருந்து ஒரு பீடியை
எடுத்து அந்தப்பீடிக்கட்டுக்கு அருகிலேயே இருந்த கத்தரிப்பானால் அதன் சுருண்டு மடங்கியிருந்த
நுனியைக் கத்தரித்தார். பின்னர் பீடியைப் பற்ற வைத்து இழுத்தார். அவருடைய இந்தச் செய்கைகள்
எல்லாம் ஒரு தியானம் போல நடந்தது. நான் திறந்த வாய் மூடாமல் அவருடைய ஒரு அணக்கத்தையும்
கவனித்துக் கொண்டிருந்தேன்.
மாரீஸ் மிக சகஜமாக நயினாவிடம்
பேசினான். அடுக்களைக்குப் போனான். கணவதியம்மாவிடமிருந்து மோர் வாங்கி வந்தான். நாங்கள்
குடித்தோம். நயினா மெல்லியகுரலில் நிறைய சங்கதிகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒன்றிலிருந்து
ஒன்றாக தொட்டுத் தொட்டு பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அப்போது அவர் பேசியதில் கொஞ்சமாவது
புரிந்ததா என்று தெரியவில்லை. அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அப்போது தான் கரிசல் வழக்குச்சொல்
அகராதியைத் தொகுத்து வருவதாகச் சொன்னார். கிளிப் வைத்த பரீட்சை அட்டையில் நிறையக் காகிதங்களில்
கரிசல் வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.
“ அகர வரிசைப்படி எழுதறது பெரிய
வேலையா இருக்கு.. நீங்க அதைச் செய்ய முடியுமா?..”
என்று கேட்டார். எங்களுக்குத்
தலைகால் புரியவில்லை. மறுநாளிலிருந்து ஒருபத்து நாட்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
மாரீஸ், முருகன், நான், முன்றுபேரும் காலையில் பத்துமணிக்குப் போய்விடுவோம். போனதும்
ஒரு கடுங்காப்பி அல்லது மோர், மதியம் நல்ல சாப்பாடு, சாயந்திரம் கருப்பட்டிக்காப்பியும்
காராச்சேவும் சாப்பிடுவோம். நாலு ஐந்து மணி வரைக்கும் உட்கார்ந்து எழுதிக்கொடுப்போம்.
எழுதியது கொஞ்சம் தான் பேசிக்கொண்டிருந்தது தான் அதிகம் என்று நினைக்கிறேன்.
கோவில்பட்டியில் கௌரிஷங்கர், தேவதச்சன்,
மனோகர், வித்யாஷங்கர், மாரீஸ், உதயசங்கர், நாறும்பூநாதன், சாரதி, முத்துச்சாமி, அப்பணசாமி,
முருகன், எல்லோரும் சேர்ந்து சிருஷ்டி என்று ஒரு வீதி நாடகக்குழுவை உருவாக்கினோம்.
அதில் மௌனநாடகமாக பேரா.ராமனுஜத்தின் இசைநாற்காலி, தேவதச்சனின் பத்துரூபாய், பூமணியின்
வலி, என்று நாடகங்களை உருவாக்கியிருந்தோம். தமிழ்நாட்டில் அப்போது தான் வீதி நாடகக்குழுக்கள்
அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் உருவாகிக்கொண்டிருந்த நேரம். சிருஷ்டி கலைக்குழுவின் நாடகங்களின்
முதல் அரங்கேற்றம் இடைசெவலில் தான் நிகழ்ந்தது. ஒரு மாலைவேளை நயினா தன்னுடைய மெல்லிய
குரலில் சத்தமாக
“ கோவில்பட்டியிலிருந்து நாடகம்
போட வந்திருக்காங்க… வாங்க..வாங்க… “ என்று ஊர் அழைப்பு செய்ய கோவிலுக்கு முன்னால்
இருந்த மந்தைத்திடலில் கூட்டம் கூடிவிட்டது. அங்கே பேண்ட், சட்டை, ஸ்டெப் கட்டிங்,
ஹீல்ஸ் செருப்பு, போட்டிருந்த இளைஞர்கள் நாங்கள் நாடகங்களை அரங்கேற்றினோம். நாடகநிகழ்வுக்குப்பின்னால்
நாடகவிமரிசனமும் நடந்தது. அதே போல சமீபத்தில் அமரரான கவிஞர், ஓவியர், அஃக் பரந்தாமனை
அழைத்து பிக்காசோ நூற்றாண்டு ஓவியக்கண்காட்சி நடத்தினோம். கார்ட்டூன் கண்காட்சி ஒன்றும்
நடத்தினோம். கோவில்பட்டியில் கலை, இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து
கொண்டேயிருந்தன. கரிசல் இலக்கியத்தின் காத்திரமான படைப்பாளிகளாக உருவாகிக் கொண்டிருந்தோம்.
நயினா எல்லோரிடமும் மிகப்பெருமிதமாக கரிசல் இலக்கியப்படை பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்.
பூமணி தன்னுடைய நாவலில் அவரை தன்னுடைய முன்னத்தி ஏர் என்றார். நாங்கள் நயினாவை எங்கள்
பிதாமகராகப் போற்றினோம்.
கோவில்பட்டியில் மிகப்பெரிய எழுத்தாளர்குழாம்
உருவாகவும் எல்லாவிதகலை முயற்சிகளைச் செய்து பார்க்கவும் நயினா பின்னணியில் எங்களுக்கு
ஊக்கசக்தியாக இருந்தார் என்பதில் எள்ளளவும் மிகையில்லை.
3.
குமாரபுரம் ஸ்டேஷனுக்கு வெளியே
வேம்பின் அடியில் கிடக்கும் சிமெண்ட் பெஞ்ச் காலத்தின் கரையேறிக் கிடக்கிறது. காலத்தின்
பழுப்பு நிறத்தின் சிதறல்களில் கு.அழகிரிசாமியும் அவருடைய அத்யந்த நண்பரான கி.ரா.வும்
சிறுவர்களாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். காற்றில் வேம்பின் மஞ்சள் நிறப்பழங்கள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன. எதிரே விரிந்து வானத்தை அண்ணாந்து பார்த்து குடைபிடித்துக்
கொண்டிருக்கும் கருவை மரத்தில் ஒரு கொண்டைக்குருவி கீச்சிட்டுக் கொண்டிருக்கிறது. கி.ரா.
அந்தக்குருவியை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறார். பூஞ்சிட்டுகள் அருகிலிருந்த பன்னீர்
மரத்தில் கிளைகளில் தவ்விக் கொண்டிருந்தன. கு.அழகிரிசாமியின் தொண்டையிலிருந்து ஏதோ
ஒரு ராக ஆலாபனை மெல்ல எட்டிப்பார்க்கிறது. விளாமரத்தின் கிளையில் ஒரு குயில் கூவிக்கொண்டிருக்கிறது.
கி.ரா. என்ற வெங்கடேசுக்கு பறவைகளின் மீது அலாதி ஆர்வம் தோன்றுகிறது. எதிரே இருக்கும்
புதரிலிருந்து எட்டிப்பார்க்கும் கௌதாரியை அதன் குஞ்சுகளை ஆச்சரியத்துடன் விழிகள் விரியப்
பார்க்கிறான். இந்நேரம் அவனுடைய மாமா திருவேதி நாயக்கர் இருந்தால் கவணால் அந்தக்குயிலை
அடித்து வீழ்த்தியிருப்பார். இன்று மதியம் கம்பங்கஞ்சிக்கு வெஞ்சனமாயிருக்கும் அந்தக்குயில்.
அவன் சிரித்தான். அந்தக்குயிலும் சிரித்தது.
தினமும் இடைசெவல் பள்ளிக்கூடம்
விட்டதும் தெக்கேயிருந்து வருகிற மெயில் வண்டியைப் பார்ப்பதற்கு இடைசெவலிலிருந்து குறுக்கே
காட்டுவழியாக வெங்கடேசும், அசோக்கும் ஓடி வருவார்கள். தண்டவாளத்திலிருந்து தூரமாய்
நின்று கொண்டு மெயில் வண்டியில் போகிற பயணிகளுக்கு கையை ஆட்டி டாட்டா காட்டுவார்கள்.
பதிலுக்கு பயணிகள் காட்டுகிறார்களோ இல்லையோ ரயில் டிரைவரும், கார்டும் பச்சைக் கொடியை
அசைத்து அவர்களுக்கு டாட்டா காட்டுவார்கள். பொசல் வண்டியில் போகிற சட்டைக்காரடிரைவர்
இப்போதும் அவர்களுக்கு ரொட்டியும் பிஸ்கெட்டும்போடுகிறார். அவர்கள் நீண்ட கம்பின் நுனியில்
மல்லித்தழையைக் கட்டி நீட்டுகிறார்கள். அவர்கள் இருவருக்கும் பொசல்வண்டி பார்த்து விட்டால்
ஆச்சரியமாக இருக்கும். எம்மாம் நீளம்! டொடக் டொடக் டொடக்.. என்று போய்க்கொண்டேயிருக்கும்.
அசோக் ஆளே இல்லாத அதற்கும் டாட்டா காட்டுவான்.
பள்ளிக்கூட லீவு நாட்களில் ஆடுமேய்க்கும்
வடிவேலுவுடன் சேர்ந்து காடோ செடியோ என்று அலைவார்கள். வடிவேலு காட்டில் அலைந்து திரியும்போது
மட்டும் தான் பாடுவான். அந்தப்பாட்டு அவனே கட்டியது. அவன் பாட்டுக்கட்டும் அழகே தனீ
அழகு. கையில் வைத்திருக்கும் குச்சியால் தரையில் தோண்டிக்கொண்டேயிருப்பான். அப்படித்தோண்டத்
தோண்ட அவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் அடுத்தடுத்து வந்து கொண்டேயிருக்கும். அப்படியே
ராகத்தை இழுத்து வளைத்துப் பாடுவான்.
வெத்திலை வெத்திலை வெத்திலையோ
கொழுந்து வெத்திலையோ
கோவில்பட்டிக் கொழுந்து வெத்திலையோ
எப்படி அவன் பாடுகிறான்? எப்படி
ராகம் அவனுடைய தொண்டையிலிருந்து இழைகிறது என்று ஆச்சரியத்துடன் வடிவேலின் வாயையே பார்த்துக்
கொண்டிருப்பான். அசோக். கலை எப்படி எங்கே ஏன்
தோன்றுகிறது என்று யாரால் சொல்ல முடியும்? ஆடுகள் கரிசலில் பச்சையைத் தேடி அலைந்து
கொண்டிருக்கும்.
திடீரென்று காட்டுக்குள் காணாமல்
போகும் வடிவேலு எங்கே போவான்? என்ன செய்வான்? இருட்டு அவனுக்குப் பயமாக இருக்காதா?
என்ன சாப்பிடுவான்? எப்படித்தூங்குவான்? வெங்கடேசு யோசித்தான். ஒருவேளை காட்டின் இருட்டிலிருந்து
தான் அவன் வார்த்தைகளை, பாடல்களை, ராகங்களை எடுத்துக் கோர்த்து வைத்திருக்கிறானோ? கலையும்
கலைஞர்களும் உன்மத்தம் கொண்டவர்கள் தானோ? தனிமையின் சிகரத்திலிருந்தே கலைஞன் தன் பாடல்களைப்பாடுகிறான்.
குமாரபுரம் ஸ்டேசனுக்கு தண்ணீர்
குடிக்க வருகிற வடிவேலுவை நானும் பார்க்கிறேன். அவனிடம் கி.ரா.வைப் பற்றிக் கேட்கிறேன்.
இடைசெவல் கண்மாய்க்கரையில் நிற்கும் ஆலமத்தின் அடியில் தூரத்தில் தெரியும் குருமலையைப்
பார்த்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார் என்கிறான். அவனுடைய பாடல்கள் எல்லாம்
அவர் சொல்லித்தந்தது என்கிறான்.
இப்போதும் செந்திவேல் அம்மனைக்குளிப்பாட்டும்போது
கி.ரா.வைத்தேடுகிறான். கோவில் நைவேத்தியத்தை உருளியின் கைப்பிடியில் கரண்டிக்காம்பைக்
கொடுத்து தூக்கிக் கொண்டு வருகிறான். வெங்கடேசு எத்தனை பறவைகளைப் பார்க்கிறான்! அத்தனை
பறவை முட்டைகளையும் சேகரித்து வைத்திருக்கிறான். காடை, கௌதாரி, கிளி, பருந்து, மயில்,
தவிட்டுக்குருவி, கொண்டைக்குருவி, கருங்குருவி, வாலாட்டிக்குருவி, பூஞ்சிட்டு, தேன்சிட்டு,
நீலச்சிட்டு, என்று அத்தனை முட்டைகளையும் சேகரித்து வைத்திருக்கிறான்.
என் கனவில் திருவேதி நாயக்கரும்,
அசோக்கும், செந்திவேலும், வெங்கடேசும், வடிவேலுவும் திக்கம்மாளூம் வருகிறார்கள். அவர்கள்
என்னிடம் கி.ரா.வைப் பார்த்தீர்களா? என்று கேட்கிறார்கள். அவர் புதுச்சேரியில் சௌக்கியமாக
இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். காகங்கள் கலைந்து கலவரம் அடைகின்றன. திருவேதி
நாயக்கர் வெங்கடேசு.. என்று வேப்பமரத்தைப் பார்த்து சிரிப்புடன் அழைத்துக் கொண்டிருக்கிறார்.
நள்ளிரவு. கரிசல் பூச்சிகளின் இசை அடங்கி விட்டது. எப்போதாவது ஒரு குரல் எழுந்து
அடங்குகிறது. அமைதியின் போர்வை எல்லாவற்றையும் போர்த்தி விட்டது. குருமலை கணவாய்க்காற்று
குளிர்ந்து வீசுகிறது. நான் பொசல்வண்டியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.
அந்த வண்டி வந்தால் தான் வெங்கடேசும் அசோக்கும் வருவார்கள். அவர்கள் வந்தால் தான் எங்கள்
அன்புக்குரிய கி.ரா. வருவார். ரயில்வே கேட்டின் மீது கைகளை வைத்துக் கொண்டு ஓடுகிற
ரயிலின் ஒளிநிழல் விளையாட்டுகளை ரசித்துக் கொண்டிருப்பார். இன்னும் என்னென்ன வகைமையில்
எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பார். நீண்ட தார்ச்சாலையின் ஓரத்தில் வளர்ந்துள்ள
சீம்புல் அவருக்குத் தலையாட்டி வணக்கத்தைச் சொல்கிறது. அவர் நடந்து கொண்டிருக்கிறார்.
நடக்க நடக்க பூக்கிறது இலக்கியம். நானும் வணங்குகிறேன். என்னுடைய பிதாமகனை.
என் எதிரே இடைசெவல்.
உண்மையில் இடைசெவலுக்கும் குமாரபுரம்
ஸ்டேஷனுக்கும் இடையில் தூரம் அதிகமில்லை.
நன்றி - ஓவியம் உ.நவீனா
கி.ரா. என்னும் மானுடம் கி.ரா.95 தொகுப்பு நூல்.