Sunday, 8 July 2018

ஒரு புரட்டின் வரலாறு



ஒரு புரட்டின் வரலாறு

உதயசங்கர்

வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பிறகுதான் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் வந்ததாக இந்துத்துவவாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். கிட்டத்தட்ட முஸ்லீம் சமூகத்தின் அடையாளமாகவே மாட்டிறைச்சியைச் சொல்கிறார்கள். அதோடு மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கீழானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் ஒருபடி தாழ்ந்தவர்கள் என்ற மதிப்பீட்டையும் உருவாக்குகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கோசாலை, பசு பாதுகாப்பு இயக்கம், என்று என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள். செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக கொலை செய்தல், மாட்டிறைச்சியை வீட்டில் வைத்திருந்தார் ( அது ஆட்டிறைச்சி என்று பின்னர் தெரிந்தது ) என்பதற்காகக் கொலை செய்தல், என்று இன்றைய வலதுசாரி அரசாங்கத்தின் ஆதரவோடு பசுவையும், மாடுகளையும் புனித விலங்குகளாக மாற்றுகிற திட்டத்தை குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான பகையாக மாற்றுகிற நிகழ்ச்சிநிரலாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் வேதகால ஆரியர்கள் பசு இறைச்சியைச் சாப்பிட்டார்களா? மாட்டிறைச்சி இஸ்லாமியர்களோடு மட்டும் தான் தொடர்புடையதா? இதைப் பற்றி வேதங்கள் என்ன சொல்லுகின்றன?
ஆதியிலிருந்தே மனிதன் மாமிசபட்சணி தான். வேட்டைச்சமூகமாகத்தான் அவனுடைய ஆதிகால கம்யூன் வாழ்க்கை இருந்தது. கூட்டமாகச்சென்று கண்ணில் படுகிற விலங்குகளைக் கொன்று கூடிப்பகிர்ந்து உண்பது தான் அன்றாட வாழ்க்கை. இந்த வேட்டைச்சமூகத்திலிருந்து தான் கலை தோன்றியது. வேட்டைச்சமூக அநுபவங்களைப்பகிர்ந்து கொள்ள மொழி உருக்கொள்ள ஆரம்பித்தது. அப்படி விலங்குகளை வேட்டையாடுகிறபோது விதிவிலக்கில்லாமல் எல்லாவிலங்குகளையும் தான் அவர்கள் வேட்டையாடினார்கள். இது உலகம் முழுவதும் நிகழ்ந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆடு, மாடு, கோழி, போன்ற மிருகங்களை வளர்ப்பவர்கள் உணவுக்காக அவற்றைச் சாப்பிட்டுவது இயல்பும் கூட. இறைச்சியுணவு மிகச்சுலமாக மனிதர்களுக்குத் தேவையான புரதச்சத்தை அளித்தது. அதனாலேயே அவனுடைய மூளையும் உடலும் முழுமையான வளர்ச்சியடைந்தது என்பது அறிவியலாளர்களின் கருத்தும் கூட. எனவே ஆதியில் அனைவரும் மாமிசம் தின்றவர்கள் தான்.
பண்டைய காலத்தில் பாரசீகத்தில் ( ஈரான் ) இருந்த ஜொராஸ்துஸ்டிரா சமயத்தைச்சேர்ந்த ஆரியக்கூட்டம் இந்தியாவுக்குள் நுழைந்தபோது அவெஸ்தா என்ற அவர்களுடைய புனிதநூலில் இருந்த பிரார்த்தனைப் பாடல்களையும் தெய்வங்களையும் யாகங்களையும் கூடவே அழைத்து வந்தனர். ஆரியர்கள் அரைநாடோடிகளாக, ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு மேய்ச்சல் நிலங்களைத் தேடிக்கொண்டு புராதன விவசாயம், விலங்குகளையும் கால்நடைகளையும் பலி கொடுக்கும் சமயச்சடங்குகளைக் கொண்ட இந்தோ அய்ரோப்பியர்கள். மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு காலகட்டங்களில் வந்தவர்கள். இனக்குழுச்சமூகமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இங்கே அவர்களை விட நாகரிகத்தில் மிக உயர்ந்த காலகட்டத்தில் இருந்த மக்களைக் கண்டு அஞ்சினார்கள். நிலையான சமூகப்பொருளாதாரக்கட்டமைப்பு கொண்ட சமூகத்தின் மேல் பொறாமை கொண்டனர். ஆரியர்கள் கலாச்சாரரீதியிலான வேறுபாட்டையே முதன்மைப்படுத்தினர். எனவே தான் அந்நியர் என்றும் தாசர் என்றும் தஸ்யூ என்றும் அசுரன் என்றும் இங்கிருந்த மக்களை கீழ்மைப்படுத்தினர். குறிப்பாக வேதங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள், யாகங்களை மறுப்பவர்கள், இந்திரன், அக்னி, சோமன், போன்ற ஆரியர்களுடைய தெய்வங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை வெல்லுவதற்கான வலிமையை வேண்டியே வேதப்பாடல்கள் பாடப்பட்டன. கி.மு. 1500 – கி.மு.600 க்கும் இடைப்பட்ட காலங்களில் ஆரியர்களின் சமயம், சடங்குகள், யாகங்கள், குறித்த பாடல்களும் கொண்டது தான் ஆதிகால ரிக் வேதம். நான்கு வேதங்கள், பிராமணங்கள், சம்கிதைகள், ஆபஸ்தம்ப சூத்திரங்கள் எல்லாவற்றிலும் பசு, எருது, காளை, முள்ளம்பன்றி, காண்டாமிருகம் இவற்றைப் பலியிடுகிற சடங்குகளைப் பற்றிப்பேசுகின்றன.
 யாகச்சடங்குகளில் மிருகங்களைப் பலி கொடுத்தல் தவிர்க்க முடியாத ஒரு அம்சம். ரிக்வேதப்பாடல்களில் பசுவைக்குறிக்கும் சொல் 176 முறை வருகிறது. காலநடைகள் தொடர்பான சொற்கள் கிட்டத்தட்ட 700 முறையாவது வருகிறது. கால்நடைகளை பலி கொடுக்கும் பசுபந்தா என்ற வேதகாலச்சடங்கு பற்றிக் குறிப்பிடப்படுகிறது. வேதகாலக்கடவுளர்களான இந்திரன், அக்னி, சோமன் ஆகிய மூவருமே மாட்டிறைச்சி மீது பேராசை கொண்டவர்கள் என்று வேதப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.
ரிக் வேதப்பாடல் –( 10-86 -14 ) வேதகாலக்கடவுளான இந்திரன் “ அவர்கள் எனக்காக பதினைந்து இருபது எருதுகளைச் சமைத்தார்கள் “ என்று சொல்கிறான்.
ரிக்வேதப்பாடல் ( 5-29.7 ) இந்திரன் தீயினால் சுடப்பட்ட முன்னூறு அல்லது ஆயிரம் எருமைகளைச் சாப்பிட்டதாகச் சொல்கிறது.
ரிக் வேதப்பாடல் ( 8 – 43.11 ) அக்னிக்கு எருதும் மலட்டுப்பசுவும் தான் விருப்பமான உணவாக இருந்தன என்று கூறப்பட்டுள்ளது.
அஸ்வம்,( குதிரை )  ரிஷபம், ( காளை ) உக்‌ஷன் ( எருது ) வசு ( மலட்டுப்பசு ) மேஷம் ( ஆட்டுக்கிடா ) போன்றவை அக்னி தேவனுக்குப் பலியிடப்பட்டிருக்கின்றன.
அஸ்வமேதயாகத்தில் முதன்மையானது குதிரையைப் பலியிடுதல் பின்னர் 600 மிருகங்களை பசு, காளை, எருமை, ஆடு, காட்டுப்பன்றிகள், பறவைகள், பலியிடப்பட்டன. யாகத்தின் இறுதிக்கட்டத்தில் 21 மலட்டுப்பசுக்களைப் பலியிட்டனர். ( மகாபாரதம், ராமாயணம் நினைவு கொள்க )
கோமேத யாகத்தில் பசுவைப்பலி கொடுத்து கொல்லப்பட்ட பசுவின் நெய்யை இறந்து போன முன்னோர்களுக்காக படைப்பார்கள். யாகத்தில் கொல்லப்பட்ட பசு இறைச்சியை அந்த யாகத்தில் பங்கு பெற்றவர்களுக்குக் கொடுப்பார்கள்.
அதேபோல வாஜபேயம் யாகச்சடங்குகளில் மதுவும் மாமிசமும் ராஜசூயம் யாகச்சடங்கில் சூதாட்டமும், முக்கியமானது. ( மகாபாரதத்தை நினைவு கொள்க ) அந்தச்சடங்கின்போது பசுவைப்பலியிடும் யாகச் சடங்கான கோசவா தவிர்க்க முடியாதது.
யாகங்களில் பலியிடப்படும் விலங்குகளை எப்படி வெட்ட வேண்டும் என்பதைப்பற்றியும், அவற்றின் இறைச்சியை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் ஆத்ரேய பிராமணத்தில்,
“ யாகத்தில் பலியிடும் விலங்கை புரோகிதர்களுக்கிடையில் பங்கிடுவது பின்வரும் முறையிலாகும். தாடை எலும்புகளையும், நாக்கையும் பிரஸ்தோருக்குக் கொடுக்க வேண்டும். கழுகின் வடிவிலுள்ள இதயத்தை உத்கதாவுக்குக் கொடுக்க வேண்டும். கழுத்தும் உள்நாக்கும் பிரதிகர்த்தாவுக்கு, வலது இடுப்பின் கீழ்ப்பாகம் ஹோதாவுக்கு, இடது பாகம் பிரம்மாவுக்கு, வலது தொடை மைத்ரவருணனுக்கு, இடது தொடை பிராமணச்சாம்ஸிக்கும், தோளின் வலது பாகம் அத்வர்யூவுக்கும், இடது பாகம் மந்திரங்கள் சொல்ல உதவுபவர்களுக்கு.. “ என்று 36 பாகங்களாக யாக விலங்கை பகிர்ந்து உண்டனர் என்று விளக்கப்பட்டிருக்கிறது.
ஆபஸ்தம்ப சூத்திரத்தில், கறவைப்பசுவுடைய காளையுடைய மாமிசம் பார்ப்பனர்கள் உண்பதற்குரியது என்றும்
உடும்பு, ஆமை, பன்றி, முள்ளம்பன்றி, காண்டாமிருகம், முயல், போன்ற மிருகங்களை பார்ப்பனர்கள் உண்ணலாம். என்றும் கூறப்பட்டிருக்கிறது.
விருந்தினர்களை கௌரவிக்க மதுவர்கம் அல்லது அர்கியம் என்ற சடங்கு பின்பற்றப்பட்டதை பிற்கால வேதநூல்கள் குறிப்பிடுகின்றன. இந்தச்சடங்கானது விருந்தினர்களுக்கு விருந்தளிக்க விருந்துக்குப் பொருத்தமான பசுக்கள் என்று பொருள் தரும் அதிதினிர் என்ற வார்த்தை ரிக்வேதப்பாடலில் ( 10-68-3 ) குறிப்பிடப்படுகிறது. மதுபர்கத்தின் முக்கிய அம்சங்களாக தேனும் தயிரும் மாட்டிறைச்சியும் இருந்தன. விருந்தினர்களுக்காக பசுவைக் கொல்பவர்களுக்கு அதிதிக்வா என்ற பெயரும், விருந்தினர் வந்தால் விருந்துக்காக பசு கொல்லப்படவேண்டும் என்பதினால் விருந்தினர்களை கோக்னா ( பசுவைக் கொல்பவன் ) என்ற சொல் வழங்கப்பட்டு வந்தது.
சீமந்தம், உபநயனம், சிரார்த்தம், போன்ற அன்றாட வாழ்வியல் சடங்குகளிலும் கூட மாடுகள் பலியிடப்பட்டிருக்கின்றன.
ஆக வேதகாலத்தில் பசு புனிதமானதாக இல்லை. வேதகால ஆரியர்கள் பசு உள்ளிட்ட அனைத்து மிருகங்களையும் பலியிட்டு சாப்பிட்டிருக்கிறார்கள்.
வேதகாலத்தின் பிற்பகுதியில் கால்நடைப்பொருளாதார முறையிலிருந்து நிலையான விவசாயப்பொருளாதார முறைக்கு ஆரியர்கள் மாறிய போது நூற்றுக்கணக்கில் விலங்குகளைப் பலியிடும் வழக்கத்துக்கு மாற்றுச்சிந்தனை தோன்றியது. விலங்குகளுக்குப் பதிலாக பாயாசம் விலங்குகளைப்போன்ற உருவபொம்மைகள், அரிசி, பார்லி, போன்ற வேறு வேறு பொருட்கள் யாகச்சடங்குகளில் படையலாகப் பயன்படுத்தப்பட்டன.
மனு சாஸ்திரத்தில் எவையெல்லாம் சாப்பிடத்தகுந்தவை எவையெல்லாம் சாப்பிடத்தகாதவை என்று விரிவாகக்குறிப்பிடுகிறது. முள்ளம்பன்றி, முள்ளெலி, உடும்பு, காண்டாமிருகம், ஆமை, முயல், ஒட்டகம், மற்றும் தாடையில் பல் இருக்கும் வீட்டு விலங்குகள் அனைத்தையும் சாப்பிடலாம். அதேபோல வேள்விச்சடங்குகளில் மாமிசம் சாப்பிடுவது தெய்வக்கட்டளை என்றும் மற்ற சமயங்களில் அது ராட்சசக்காரியம் என்றும் மனு கூறுகிறார்.
சிரார்த்தத்தின் போது முயல், வெள்ளாடு, பன்றி, மறிமான், மான் செம்மறியாடு, ஆகிய விலங்குகளின் இறைச்சியைப் படையல் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று விஷ்ணு புராணம் சொல்கிறது. திருவிழாவ்ன் போது எருமைகளைப்பலியிடும்படி தேவி புராணம், கருட புராணம், ஸ்கந்த புராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்கள் பரிந்துரை செய்கின்றன.
பௌத்தம் தழைத்தோங்கியிருந்த மௌரியர் காலத்துக்குப்பின்பு பார்ப்பனீயம் மீண்டு எழுந்த குப்தர் காலத்தில் மகாபாரதமும் ராமாயணமும் ஒழுங்கமைப்பட்டன. இரண்டு இதிகாசங்களிலும் மாட்டிறைச்சி பற்றிய குறிப்புகள் ஏராளமாய் வருகின்றன. மகாபாரத்தத்தில் ஆதிபர்வத்தில் பார்ப்பனர்களுக்கு உணவளிப்பதற்காக காட்டில் மிருகங்களை வேட்டையாடியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
மாட்டிறைச்சியையும் உணவு தானியங்களையும் பார்ப்பனர்களுக்குக்கொடுத்து ஈடு இணையற்ற புகழைச் சேர்த்துக்கொண்ட மன்னனான ரந்திதேவரின் அரண்மணையில் தினம் இரண்டாயிரம் பசுக்கள் கொல்லப்பட்டதாக வனபருவத்தில் கூறப்பட்டிருக்கிறது. கொல்லப்பட்ட பசுக்களின் ரத்தம் கர்மாவதி ஆறாகப் பெருக்கெடுத்தாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ராமாயணத்தில் தனக்கு குழந்தைப்பேறு வேண்டும் என்பதற்காக தசரதன் நடத்திய வேள்வியில் அனைத்து மிருகங்களையும் பலியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமனும் லட்சுமணனும் காட்டு மிருகங்களை வேட்டையாடியதான செய்திகள் ஏராளமாக வருகின்றன. இறைச்சி மீது சீதை கொண்ட ஆர்வம் தான் மானை வேட்டையாடச்சொல்லி ராமனைத் தூண்டுகிறாள்.
வேதச்சடங்குகளை மறுத்து அகிம்சையைப் போதித்த பௌத்தமும் சமணமும் கூட மாட்டிறைச்சியையோ, மற்ற விலங்குகளின் இறைச்சியையோ முற்றிலும் மறுத்து ஒதுக்கவில்லை. ஏன் புத்தரே கூட கெட்டுப்போன பன்றி இறைச்சியைச் சாப்பிட்டதால் புட்பாய்சன் ஆகி இறந்து போனார். மகாபரிநிப்பான சுத்தாவிலும், அங்குத்தர நிகாயத்திலும், சூசுரா நிகாயத்திலும் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. புத்தருக்குப்பின்னால் பௌத்தம் மகாயானம், ஹீனயானம் இரண்டு பிரிவுகளாகப்பிரிந்த போது ஹீனயானம் மாட்டிறைச்சி உட்பட அனைத்து இறைச்சியுணவையும் சாப்பிடுவதை அநுமதித்தது.
சமணத்திலும் கூட இறைச்சியுணவை சமணர்கள் சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் ஆகாரங்க சூத்திரத்திலும் தாசவைகாலிக சூத்திரத்திலும், விபாக சூத்திரத்திலும், சூத்திர கிருதாங்க சூத்திரத்திலும் காணமுடிகிறது.
கி.பி. 500 ஆம் ஆண்டுகளுக்குப் பின்பு தான் பார்ப்பனர்கள் பசுக்களைப் பலியிடும் சடங்குகளை கண்டனம் செய்யும் கலிவர்ஜியா என்ற விலக்க வேண்டிய சடங்குகள் என்ற கருதுகோள் உருவாகி வந்தது. பிற்கால தர்மசாஸ்திரங்களில் தான் பசு புனித விலங்காகவும், அதன் மூத்திரம், சாணி, பால் தயிர், நெய், ஆகிய ஐந்து பொருட்களும் பஞ்சகவ்யா புனிதமானதாகவும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டது. வரலாற்றின் மிகச்சமீபகாலம் வரை பசு எல்லாவீட்டு வளப்பு விலங்குகளைப் போலவே பாவிக்கப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் மாட்டிறைச்சி உண்பதை முற்றிலும் விலக்கிக்கொள்ள முடியவில்லை. 1874- ஆம் ஆண்டு வரையிலும் கூட வேள்விச்சடங்குகளில் பசுக்களையும் எருமைகளையும் பலியிடுகிற வழக்கம் ராஜஸ்தானில் இருந்திருக்கிறது.
இஸ்லாமியர்கள் வந்தபிறகுதான் மாட்டிறைச்சி இந்தியாவுக்குள் வந்தது என்பது எத்தகைய வரலாற்று பிழை என்று தெரிகிறது. பார்ப்பனீயம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளச் செய்யும் ஆபத்தான தந்திரங்களில் இதுவும் ஒன்று. உணவுக்கான அவரவர் உரிமையில் யாரும் தலையிடக்கூடாது என்று உரத்து முழங்க வேண்டிய காலம் இது.

நன்றி - வண்ணக்கதிர்


8 comments:

  1. எப்போதும் ஒரு குழுவிற்குள் ஒரு நபர் உள்ளே நுழைந்தவுடன், தான் உங்களிடமிருந்து வேறுபட்டவன் அதாவது உயர்ந்தவன் என்ற சிந்தனையை விதைப்பதால், அந்த குழுவின் உள்கட்டமைப்பு சீர்குலையும். அதுதான் அவர்களது எண்ணமும் செயலும்.

    ReplyDelete
    Replies
    1. இது போன்ற உண்மைகளை அறிந்து ஆராய்ந்து பதிவு செய்தால் மட்டுமே வரலாறு திருத்தி கொள்ளும். அருமையான கட்டுரை பாராட்டுகள் தோழர்

      Delete
  2. Very good research! I want to see d reply from them...

    ReplyDelete
  3. அருமையான ஆய்வு கட்டுரை தோழர்....உண்மையை எழுத்தால் கூறியமைக்கு நன்றி. ..

    ReplyDelete
  4. Very good please kannada language r english

    ReplyDelete