பறவைகள் பலவிதம்
உதயசங்கர்
குட்டிப்பாப்பா காலையில் சீக்கிரம்
எழுந்து விடுவாள். இல்லையில்லை. தோட்டத்திலிருந்து கூவும் புள்ளிக்குயில் தான் எழுப்பிவிடும்.
கூக்கூகூகூகூ குக்கூகூ என்ற சத்தத்தைக் கேட்டு துள்ளிக்குதித்து எழுந்து விடுவாள்.
இது ஒரு பழக்கம். எப்போது தூங்கி எழுந்தாலும் துள்ளிக்குதித்து எழுந்திரிப்பது குட்டிப்பாப்பாவுக்கு
வழக்கம். அதே மாதிரி எழும்போதே சிரித்துக் கொண்டே எழுந்திரிப்பாள். இப்போதும் அப்படித்தான்
குயிலின் குரலைக் கேட்டதும் சிரித்துக்கொண்டே எழுந்த குட்டிப்பாப்பா
“ அடடா அதுக்குள்ளே விடிஞ்சிருச்சா..இரு
இதோ வாரேன்.. “ என்று சொல்லியபடியே எழுந்து வீட்டின் பின்னால் இருக்கும் தோட்டத்துக்குப்
போனாள். மாமரத்திலிருந்து தான் குயிலின் சத்தம் கேட்கும். ஆனால் இது வரை குட்டிப்பாப்பா
அதை முழுசா பார்த்ததில்லை. வாலைப் பார்த்திருக்கிறாள். சிறகுகளைப் பார்த்திருக்கிறாள்.
அது இலைகளுக்கு நடுவில் ஒளிந்துகொள்ளும். குட்டிப்பாப்பாவைப் பார்க்க வெட்கப்பட்டு
ஒளிந்து கொள்கிறதோ. குட்டிப்பாப்பா க்ளுக் என்று சிரித்தாள்.
குயில் கூவும்போதே ஒரு காகத்தின்
குரல் கேட்டது.
” கா காகா கா காக்க்கா….” உடனே
இன்னொரு காகத்தின் குரல் கேட்டது. அதைத்தொடர்ந்து மற்றொரு காகத்தின் குரல்.. இப்போது
நாலைந்து காகங்கள் சேர்ந்து கத்தின. குட்டிப்பாப்பாவின் அப்பா சொல்லியிருக்கிறார்.
காலையில் எழுந்தவுடன் காகங்கள் எல்லாம் வரிசையாக உட்கார்ந்து காக்காப்பள்ளிக்கூடம்
நடத்தும். அவளுடய பள்ளிக்கூடத்திலும் வனிதா மிஸ் சொல்லுவதை பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து
கோரசாகச் சொல்லுவார்கள். குட்டிப்பாப்பாவுக்கு வேடிக்கையாக இருந்தது. காக்காவைப் பார்த்து
தான் பள்ளிக்கூடம் வந்திருக்குமோ? உடனே அதை அப்பாவிடம் சொல்லவேண்டும். குட்டிப்பாப்பா
என்ன சொன்னாலும் அப்பா அவளைப் பாராட்டுவார். அப்பா நல்ல அப்பா.
” கீச் கீச் கீச் கீச் க்கீச்
க்க்கீச்கீச்ச்ச்ச்“ ஒரே சத்தம். குட்டிப்பாப்பா திரும்பிப்பார்த்தாள். வேப்பமரத்திலிருந்து
கூட்டமாய் தவிட்டுக்குருவிகள் கீழே இறங்கின. ஈரமாக இருந்த மண்ணைக் கிளறி புழுக்களைத்
தேடின. ரொம்ப கோபக்காரக்குருவிகள். எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும். கிக்க்கீச்
க்கீச்ச் ஐயோ மறுபடியும் சண்டை ஆரம்பித்து விட்டது.
“ எப்பயும் சண்டை போட்டுகிட்டிருக்கீங்களே
உங்களுக்குப் போரடிக்கலையா? “ என்று அவற்றை கண்டித்தாள் குட்டிப்பாப்பா. திரும்பும்போது
அவளுடைய கண்ணில் செம்பருத்திச்செடிக்குக் கீழே ஓடிக் கொண்டிருந்த வாய்க்காலில் செம்பழுப்பு
நிறத்தில் ஏதோ தெரிந்தது. அவள் மெல்ல அடியெடுத்து வைத்துப் பின்னால் போனாள்.
அங்கே ஒரு செம்போத்து வாய்க்காலில்
இரை தேடிக்கொண்டிருந்தது. என்ன அழகு! அது நிமிர்ந்து பார்த்தபோது கண்கள் ரத்தச்சிவப்பாக
இருந்தன. குட்டிப்பாப்பாவுக்கு பயமாக இருந்தன. ஆனால் பாவம் செம்போத்து. குட்டிப்பாப்பாவின்
காலடிச்சத்தம் கேட்டதுமே சடசடவென பறந்து போய் விட்டது. இன்னும் மெதுவாக வந்திருக்கவேண்டும்
என்று குட்டிப்பாப்பா நினைத்துக் கொண்டாள்.
செம்பருத்திப்பூவில் விர்ர்ர்ர்ரென
சிறகுகள் அடிக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். குட்டியாய் கருநீல நிறத்தில்
இரண்டு தேன்சிட்டுகள் செம்பருத்திப்பூவுக்குள் தங்களுடைய நீண்ட அலகுகளை நுழைத்து தேன்
குடித்துக் கொண்டிருந்தன. அவள் கண்கொட்டாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதே
மாதிரி இன்னொரு சத்தம் பக்கத்திலிருந்த தேக்கு மரத்திலும் கேட்டது. இது யார்றாது? குட்டிப்பாப்பா
அண்ணாந்து பார்த்தாள். அட! தையல் சிட்டு. தேக்கிலையை ஒரு பொட்டலம் மாதிரி சுருட்டி
தைத்துக் கொண்டிருந்தது. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சிவப்புக்கொண்டைக் குருவி ட்ட்வீக்
ட்ட்வீக் ட்வீக் என்று சத்தம் கொடுத்து தான் இருப்பதைச் சொன்னது. குட்டிப்பாப்பா தினம்
அதைப் பார்த்து விடுவாள். அதுவும் அவளைப் பார்த்து “ இன்னிக்கும் வந்துட்டியா? “ என்று
கேட்கும். குட்டிப்பாப்பா ஆமாம் என்று தலையாட்டுவாள்.
நாலைந்து சிட்டுக்குருவிகள் தரையில்
அங்குமிங்கும் தாவித் தாவிக் குதித்துக் கொண்டிருந்தன. க்யா கிய்ய் க்யா கிய்ய் என்று
கோழிக்குஞ்சுகளைப் போலவே சத்தமிட்டுக்கொண்டு திரிந்தன.
உடனே குட்டிப்பாப்பாவுக்கு கோழிக்குஞ்சுகளின்
ஞாபகம் வந்து விட்டது. தோட்டத்துமூலையில் வைத்திருந்த கோழிக்கூண்டைத் திறந்து விட்டாள்.
அம்மாக்கோழியும் ஐந்து கோழிக்குஞ்சுகளும் வெளியே வந்தன. கருப்புவெள்ளைப் புள்ளிகளுடன்
அம்மாக்கோழி கெக்க்கேக்க்கே என்று கேறிக் கொண்டு குஞ்சுகளைக் கவனமாகப் பார்த்தது. செவலைக்குஞ்சு,
கருப்புக்குஞ்சு,வெள்ளைக்குஞ்சு, கரும்புள்ளிக்குஞ்சு, செம்புள்ளிக்குஞ்சு எல்லாம்
அம்மாவின் ஒவ்வொரு சத்தத்தையும் கவனித்து அதற்கு ஏற்றபடி நடந்து கொண்டன. சமர்த்துக்குஞ்சுகள்!
குட்டிப்பாப்பா மாதிரி! குட்டிப்பாப்பா அவளை அவளே பாராட்டிக் கொண்டாள். உடனே ஒரு கர்வம்
முகத்தில் வந்து விட்டது. அருகில் இருந்த பஞ்சாரத்தைத் திறந்து சேவலைத் திறந்து விட்டாள்.
வண்ணவண்ணமாய் இற்குகளும் சிவப்பு நிறத்தில் பூக்கொண்டையும், தாடியும் வைத்திருந்த அந்தச்
சேவல் வெளியே வந்ததும் கொக்கரக்கோ கோ என்று கொக்கரித்தது.
அட அசடு! விடிந்து ரொம்ப நேரமாயிருச்சு
தெரியலையா உனக்கு? என்று செல்லமாய் கோபித்தாள் குட்டிப்பாப்பா. இன்னொரு முறை கூவலாமா
என்று நினைத்த கொண்டைச்சேவல் குட்டிப்பாப்பாவின் முகத்தைப் பார்த்ததும் தலையைக் குனிந்து
கொண்டு இரை தேட நடைபோட்டது.
நம் வீட்டில் எத்தனை பறவைகள்!
என்று ஆச்சரியப்பட்டாள். இன்று அவள் பார்த்த பறவைகளைப் பற்றி அப்பாவிடமும் அம்மாவிடமும்
சொல்லவேண்டும் என்று நினைத்தாள். அவளுக்கு பறந்து பார்த்தால் என்ன என்று தோன்றியது.
இறக்கைகளைப் போல கைகளை விரித்து வேகமாக வீட்டுக்குள் ஓடினாள்.
“ ஸ்கூலுக்கு நேரமாகலையா? “ என்று
அம்மாவின் சத்தம் கேட்டது.
“ நான் பறந்து போயிருவேன்..” என்று
குட்டிப்பாப்பா சிரித்துக் கொண்டே சொன்னாள்.