அஞ்சு வண்ணம்
உதயசங்கர்
குட்டிப்பாப்பாவுக்கு
வானத்தில்
பறக்கவேண்டும். யோசித்தாள். என்ன
செய்யலாம்? யாரிடமாவது கேட்டால் என்ன? வீட்டின் பின்புறம்
போனாள். அங்கே இருந்த
மாமரத்தில் உட்கார்ந்திருந்த கிளியிடம் கேட்டாள்.
‘ கிளியக்கா கிளியக்கா எனக்குப் பறக்கணும்.. அதுக்கு ஒரு வழி சொல்லேன்..’
‘ கீ கீ
கீ கிக்கீ குட்டிப்பாப்பா நீ பறக்கணும்னா
நீ தான் முயற்சிக்கணும்.. வேணுமின்னா
நான் என்னோட ஒரு இறகைத் தாரேன்..’
என்று
சொல்லி விட்டு தன்னுடைய சிறகிலிருந்து நீளமான ஒரு பச்சை நிற இறகை எடுத்து குட்டிப்பாப்பாவிடம் கொடுத்தது.
குட்டிப்பாப்பா
கிளி கொடுத்த பச்சை இறகைப் பார்த்துக் கொண்டே அருகில் இருந்த வேப்பமரத்திற்குப்
போனாள். வேப்பமரத்தில் உட்கார்ந்து தலையைச் சாய்த்து குட்டிப்பாப்பாவை குர்ரென்று பார்த்துக் கொண்டிருந்த காகத்திடம் கேட்டாள்,
‘ காக்கையண்ணே காக்கையண்ணே.. எனக்குப் பறக்கணும்.. அதுக்கு ஒரு வழி சொல்லேன்..’
‘ கா கா
கா க்ர்ர்
எனக்குத் தெரியாது பாப்பா வேணும்னா நான் என்னோட இறகு ஒண்ணு தாரேன்…’ என்று சொல்லி தன்னுடைய சிறகிலிருந்து ஒரு இறகை எடுத்து குட்டிப்பாப்பாவிடம் கொடுத்தது.
குட்டிப்பாப்பா
தோட்டத்தில்
வேலிக்கு அருகில்
இருந்த இலந்தை மரப்புதரில் தன்னுடைய சிவந்த கண்களை உருட்டி உருட்டிப் பார்த்துக்கொண்டிருந்த செம்போத்து பறவையிடம் போனாள்.
‘ செம்போத்தே செம்போத்தே நான் பறப்பதற்கு ஒரு வழி சொல்லேன்..’
‘ கூ கூகூகூ
எனக்குத் தெரியாது.. வேணும்னா நான் ஒரு இறகைத் தாரேன்..’ என்று சொல்லி தன் சிறகிலிருந்து ஒரு சிவப்பு இறகை எடுத்து கொடுத்தது.
குட்டிப்பாப்பா
தோட்டத்தில் பறந்து கொண்டிருந்த மைனாவைப் பார்த்து கை தட்டினாள். மைனா உடனே குட்டிப்பாப்பாவின் முன்னால் இறங்கியது. உடனே
குட்டிபாப்பா,
‘ மைனா.. மைனா.. எனக்கு பறக்கணும் ஒரு வழி சொல்லேன்..’
என்று
கேட்டாள். மைனா
குட்டிப்பாப்பாவைப் பார்த்தது.
‘ கீ க்வ்
க்ளவ்.. கீச் கீச் அய்ய்ய்யோ அதெல்லாம் எனக்குத் தெரியாதுப்பா.. வேணும்னா என்னோட சிறகு ஒண்ணு தாரேன்..’
என்று
சொல்லி அதன் சிறகிலிருந்து வெள்ளை இறகை எடுத்துக் கொடுத்தது… குட்டிபாப்பா
குப்பையில் மேய்ந்து கொண்டிருந்த கொண்டைச்சேவலின் அருகில் போனாள். சேவல்
அவளைக் கவனிக்காமல் குனிந்து இரை எடுத்துக் கொண்டிருந்தது. குட்டிப்பாப்பா கொக்கரக்கோ என்று கத்தினாள். கோபத்துடன்
நிமிர்ந்து பார்த்த சேவல், அங்கே
குட்டிப்பாப்பாவைப் பார்த்ததும் சாந்தமானது. ஏனென்றால்
குட்டிப்பாப்பா தான் அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டிலிருந்து ஒரு குத்து அரிசியை எடுத்துக் கொண்டு வந்து சேவலின் குடும்பத்துக்குப் போடுவாள். அவளிடம்
கோபப்பட முடியுமா?
‘ க்கொ க்கோ என்ன குட்டிப்பாப்பா ? ‘
‘ சேவல் மாமா சேவல் மாமா எனக்குப் பறக்கணும்.. ஒரு வழி சொல்லேன்..’
‘ எனக்கே கூரைக்கு மேலே பறக்க முடியாது… எங்கிட்டே
கேக்கிறீயே.. வேணும்னா என்னோட வாலிலிருந்து ஒரு இறகைத் தாரேன்…’ என்று சொல்லி வாலில் இருந்து பலவண்ண இறகை எடுத்துக் கொடுத்தது.
குட்டிப்பாப்பா
கையில் ஐந்து இறகுகள் இருந்தன. கிளியின்
பச்சைச்சிறகு, காகத்தின் கருப்புச் சிறகு, மைனாவின்
வெள்ளைச் சிறகு, செம்போத்தின்
சிவப்பு இறகு, சேவலின்
கருஞ்சிவப்பு இறகு. எல்லா
இறகுகளையும் ஒரு நூலில் கட்டினாள் குட்டிப்பாப்பா. அதை முதுகில் கட்டிக் கொண்டு,
‘ நான் பறக்கிறேன்… நான்
பறக்கிறேன்.. ‘ என்று மகிழ்ச்சியாகக் கூவிக் கொண்டு தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி ஓடினாள். கிளியும், காகமும், செம்போத்தும், மைனாவும், சேவலும்
அதைப் பார்த்து சிறகுகளடித்து கூவின.
No comments:
Post a Comment