Showing posts with label கதை. childrens story. Show all posts
Showing posts with label கதை. childrens story. Show all posts

Thursday, 17 December 2020

ராத்திரி எனக்குப்பிடிக்கும்

 

ராத்திரி எனக்குப்பிடிக்கும்


உதயசங்கர்

ராத்திரி வந்துவிட்டாலே அவ்வளவுதான். குட்டித்தம்பி அதிரனுக்கு என்னவோ ஆகிவிடும். அம்மாவை விடாமல் சேலையைப் பிடித்துக் கொண்டே திரிவான். அம்மா உட்கார்ந்தால் அவனும் உட்கார்வான். அம்மா சமையல் செய்யும்போது அவனும் கூட நிற்பான். அம்மா தையல் மிஷனில் தையல் தைக்கும்போது அவனும் மடியில் உட்காரவேண்டும் என்று அடம்பிடிப்பான். அம்மா புத்தகம் வாசிக்கும்போது படிக்கவிடாமல் புத்தகத்துக்குள் தலையை நீட்டுவான். அம்மாவை அங்கும் இங்கும் அசைய விடமாட்டான்.

. ஒன்பாத்ரூம் போகவேண்டும் என்றாலும் அம்மா கூட வரவேண்டும். இதெல்லாம் போதாது என்று அம்மாவைத் தூக்கிவைத்துக்கொள்ளச் சொல்லி அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பான் ஐந்து வயது பையனைத் தூக்கிக்கொண்டே அலைய முடியுமா? அதிரன் ஏன் தூக்கி வைத்துக்கொள்ளச் சொல்கிறான் தெரியுமா? பயம்!. இருட்டைக்கண்டு பயம்!.

ராத்திரியானால் இருட்டி விடுகிறது. இருட்டி விட்டால் விளக்கு வெளிச்சம் வேண்டும். இல்லையென்றால் கண் தெரிய மாட்டேங்குது. இருட்டில் ஏதேதோ சத்தம்வேறு கேட்கிறது. அதுவும் அந்த சத்தமும் பெரிதாகக் கேட்கிறது.

” டம் “

“ டமார்..”

” கீச்கீச்கீச் “

” கீ கீ கீ கீ “

“ கூகூகூகூவ்..”

“ குர்ர்ர்ர்ர்..”

“ கெக் கெக் கெக் “

இன்னும் என்னென்னவோ சத்தங்கள்! அதிரனுக்கு ராத்திரி நெருங்க நெருங்கப் பயம் வந்து விடும். தூங்கும்போதும் விளக்கு எரியவேண்டும் என்று அழுவான்.

“ அம்மா ராத்திரி வேண்டாம்.. போகச்சொல்லு… ம்ம்ம் போகச்சொல்லு..” என்று சிணுங்கிக்கொண்டே இருப்பான். அதிரன் சொல்வதைக் கேட்டு அம்மாவுக்குச் சிரிப்பு வரும். ஆனால் சிரிக்காமல் பொறுமையாக,

“ குட்டித்தம்பி! இரவும் பகலும் மாறி மாறி வர்றது இயற்கை.. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுத்துது.. அப்ப சூரிய வெளிச்சம் பூமிமேலே படும்போது பகலாக இருக்கும்.. சூரியவெளிச்சம் படாதபோது ராத்திரியா இருக்கும்.. என்ன தெரிஞ்சிதா? பகலில் சூரியன் வர்றது மாதிரி.. ராத்திரியிலே நிலா வரும்… பயப்படகூடாது.. எதுக்கும் பயப்படக்கூடாது.. ”

விளக்கமாகச் சொல்லுவார். அவன் அம்மாச் சொல்வதைக் கேட்பான். எதுவும் புரியாது. ஆனால் முழுவதும் கேட்பான். கேட்டு முடிந்ததும்,

“ அம்மா பயமாருக்கும்மா.. ராத்திரி வேண்டாம்மா..”

என்று சொல்ல ஆரம்பித்து விடுவான். அம்மா எப்படி எப்படியோ சொல்லிப் பார்த்து விட்டு கடைசியில்,

“ அதிரா! நான் ராத்திரிகிட்டே இனிமே நீ வராதே எங்க வீட்டுக்குட்டித்தம்பிக்குப் பிடிக்கலன்னு சொல்லிடறேன்.. இன்ன சரியா? “

என்று சொன்னார். அதன்பிறகு தான் அதிரன் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்கினான். அப்போது அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த  இரவுத்தேவதை அதைக் கேட்டுவிட்டார். உடனே அவர் அதிரன் இருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். அதிரன் அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தான். இரவுத்தேவதை அவனைப் பூப்போலத் தூக்கிக்கொண்டு பறந்தார். குட்டித்தம்பி அப்படியே இரவுத்தேவதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

“ அதிரா! ஏன் பயப்படுகிறாய்? “

“ என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை..”

“அப்படியா? இருள் என்பது குறைந்த ஒளி! அவ்வளவுதான்.. இப்போது பார்..”

அதிரன் முழுவதுமாகக் கண்களைத் திறக்கவில்லை. லேசாகத் திறந்து பார்த்தான். முதலில் எதுவும் தெரியவில்லை. ஆனால் கொஞ்சநேரத்திலேயே எல்லாம் தெரிந்தன. அவனுடைய வீடு, வீட்டுக்கு முன்னால் இருந்த தோட்டம், அவனுடைய நண்பன் பாரியின் வீடு, அவர்களுடைய தெரு, அவன் மாலையில் விளையாடப்போகும் பூங்கா, எல்லாம் தெரிந்தன. உயரத்தில் இருந்து பார்க்கும்போது ஊரே அழகாகத் தெரிந்தது. கருப்பாக இல்லை. கரு நீலநிற வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டின. அவனுக்கு இப்போது பயம் குறைந்து விட்டது. அதிரன் கண்களை நன்றாகத் திறந்தான்.

ஆகா என்ன அழகு!

அப்போது தான் அந்த சத்தம் கேட்டது.

” டம் “  மறுபடியும் அதிரன் கண்களை மூடி இரவுத்தேவதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான். பயம் அடித்துப்புரண்டு கொண்டு வந்தது. இரவுத்தேவதையிடமிருந்து வந்த அம்மாவின் வாசனை அவனை அமைதிப்படுத்தியது.

இரவுத்தேவதை புன்னகையுடன் அதிரனை அவனுடைய வீட்டுக்கூரை மேல் பறக்கவைத்தார். என்ன ஆச்சரியம்! அவனுக்குச் சிறகுகள் முளைத்திருந்தன. அவன் கண்களைத் திறந்தான். அப்போது, அவனுடைய வீட்டின் அருகில் இருந்த மாமரத்திலிருந்து ஒரு பழுத்த இலை கிளையை விட்டுப் பிரிந்து மெல்ல காற்றில் இறங்கி தகரக்கூரையில் விழுந்தது. டம்மென்று சத்தம் கேட்டது.

இன்னொரு வேப்பமரத்திலிருந்து ஒரு காய்ந்த குச்சி டமார் என்று விழுந்தது.

தரையில் காய்ந்து கிடந்த சருகுகளின் மீது ஓடிக்கொண்டிருந்த எலி சின்னச்சின்னப் பூச்சிகளைப் பிடிக்கும் போது மகிழ்ச்சியில் கீச் கீச் கீச்கீச் என்று கீச்சிட்டுக் கொண்டிருந்தது. எலியைப் பார்த்த பூச்சிகள் கீகீகீகீ என்று இரைந்தன. கூகூகூகூவ் என்று புளியமரப்பொந்திலிருந்த ஆந்தை கண்களை உருட்டி அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டே கத்திக் கொண்டிருந்தது.

அதிரனின் வீட்டுக்கு அருகில் ஓடிய சாக்கடையில் தவளைகள் குர்குர்குர் என்று முனகிக் கொண்டிருந்தன. வீட்டுக்கு முன்னால் இருந்த கோழிக்கூட்டிலிருந்து செவலைச்சேவல் அவ்வப்போது கெக்கெக்கெக் என்று கத்திக்கொண்டிருந்தது.

இப்போது அதிரனுக்குப் புரிந்து விட்டது. அவனுடைய முகத்தில் வெட்கம் வந்தது. இதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம் செய்தோம். அம்மாவை எவ்வளவு தொந்திரவு செய்து விட்டோம் என்று நினைத்தான்.

இரவுத்தேவதை அவனை அப்படியே பூப்போல அம்மாவுக்கு அருகில் படுக்கவைத்து விட்டு பறந்து போனாள். அதிரனுக்கு அப்போது ஒன்பாத்ரூம் வந்தது.

அவன் எழுந்து கழிப்பறை விளக்கைப்போடாமல் அம்மாவை எழுப்பாமல் போய் விட்டு வந்து படுத்துக் கொண்டான். காலையில் அம்மா எழுந்ததும் அதிரனிடம் கேட்டாள்,

“ என்னடா குட்டித்தம்பி! ராத்திரி அம்மாவை எழுப்பலை...” என்று கேட்டார். அதிரன் சிரித்துக் கொண்டே,

“ இனிமே ராத்திரின்னா எனக்கு பயமில்லம்மா! “ என்றான். அம்மா ஆச்சரியத்துடன்,

“ எப்படித்தம்பி! ஒரே ராத்திரியில மாறிட்டே..”

என்று கேட்டாள். அதைக் கேட்ட குட்டித்தம்பி அதிரன்,

“ தெரியலம்மா..” என்று சொல்லிச்சிரித்தான். அவனுக்குத் தூக்கத்தில் எல்லாம் மறந்து போய்விட்டதே…

கெக்க்கே கெக்கேக்க்க்கே..

Friday, 13 November 2020

சிரிப்பின் அழகு

 

சிரிப்பின் அழகு

உதயசங்கர்


காவூர் காட்டில் ஏராளமான சிறு விலங்குகள் வாழ்ந்து வந்தன. முயல், அணில், ஓணான், சில்லான், பச்சோந்தி, குள்ள நரி, உடும்பு, கீரி, நல்லபாம்பு, சாரைப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், கொம்பேறிமூக்கன், மண்ணுள்ளிப்பாம்பு, கட்டெறும்பு, தையல் எறும்பு, தீயெறும்பு, கருப்பு எறும்பு, பறக்கும் எறும்பு, இலைவெட்டி எறும்பு, என்று எல்லா உயிரனங்களும் சேர்ந்து வாழ்ந்தனர்.

அங்கே இருந்த கருவை மரத்தின் அடியில் குத்துச்செடிகள் அடர்ந்த புதர் இருந்தது. அந்தப்புதரின்கீழ் ஒரு முயல்வளை இருந்தது. அந்த வளை இலைதழைகளால் மூடப்பட்டிருந்தது. அந்த வளைக்குள் இரண்டு முயல்குட்டிகள் பேசிக்கொண்டிருந்தன.

“ ம்ம்ம்ஹூஹூம்.. அம்மா இன்னும் வரலை…. ஹூம் ஹூம்..”

என்று தம்பிமுயல் அழுது கொண்டு இருந்தது.

“ அம்மா இப்ப வந்துருவாங்கடா.. அழாத.. அம்மா வரும்போது உனக்கு இனிப்புக்காரட்டு கொண்டு வருவாங்க.. இன்ன.. அழக்கூடாது…சிரிடா தம்பி.. எங்க சிரி..”

என்று அண்ணன் முயல் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் தம்பிமுயல் சிரிக்கவே இல்லை. தம்பியின் அழுகை அதிகமாகிக் கொண்டே போனது.

உண்மையில் அம்மா போய் வெகு நேரமாகி விட்டது. எப்போதும் இவ்வளவு நேரம் ஆகாது. அம்மாவுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமா? அண்ணன் முயல் ஒரு கணம் அப்படி யோசித்தது. ஆனால் மறுகணமே அதன் முகத்தில் சிரிப்பு வந்து விட்டது. ச்சேச்சே… அம்மா எவ்வளவு புத்திசாலி! எந்த ஆபத்திலிருந்தும் தப்பித்து விடுவாள். ஆகா! அம்மான்னா அம்மா தான். ஆனால் தம்பிப்பயல் அழுகையை நிறுத்தமாட்டேன் என்று அடம் பிடிக்கிறானே. என்ன செய்யலாம்? என்று யோசித்த அண்ணன் முயல் வெளியே எட்டிப்பார்த்தது.

ஒரு சுடுகுஞ்சி இல்லை. வெயில் சுள்ளென்று அடித்தது.

உள்ளே திரும்பி,

“ வா தம்பி! நாம போய் அம்மாவைத் தேடலாம்..என்று அழைத்தது. தம்பிமுயலும் அழுதுகொண்டே

“ எனக்குப் பயமாருக்கு..என்று திக்கித் திக்கிச் சொன்னது. அதற்கு அண்ணன் முயல்,

“ எதுக்குப் பயப்படணும்?… இந்த உலகம் நம் எல்லோருக்குமானது.. எறும்புக்கு மட்டுமோ, இல்லை சிங்கத்துக்கு மட்டுமோ சொந்தமானதில்லை.. நாம தைரியமா இருக்கணும்.. இன்ன.. “

என்று தைரியம் சொல்லியது.  இரண்டுபேரும் வளையிலிருந்து இரண்டடி குதித்திருப்பார்கள்.

“ ம்ம் நில்லுங்கள்..என்று ஒரு குரல் கேட்டது. அண்ணன் முயலும் தம்பி முயலும் சுற்றிச் சுற்றிப்பார்த்தார்கள். யாரையும் தெரியவில்லை.

ஒரு பச்சை வெட்டுக்கிளி மட்டும் கொளஞ்சிச்செடியின் உச்சியில் நின்று கொண்டிருந்தது. தம்பிமுயல் பயந்து போய் மறுபடியும் அழுதது. அண்ணன் முயல் சிரித்துக் கொண்டே அந்த பச்சைவெட்டுக்கிளியின் முன்னால்போய்

“ அண்ணே! நீங்களா கூப்பிட்டீங்க? “

பச்சைவெட்டுக்கிளி முன்கால்களை அசைத்து,

“ என்ன விசயம்! வெளியே சுத்துறீங்க? உங்கம்மா என்கிட்டதான் உங்களைக் கவனிக்கச் சொல்லிட்டு போயிருக்கா? “ என்று முன்காலை நீட்டி ஆட்டி எச்சரித்தது. அண்ணன் முயல் சிரித்துக்கொண்டே,

“ அம்மா இன்னும் வரலை.. அதான்.. வாராளான்னு பார்க்கோம்..”

“ அப்படியா? இந்தக்காட்டில கவனமா இருக்கணும் கண்ணுகளா.. ரொம்பமோசமான காடு..”

என்று சொல்லி முடிக்குமுன்னே பின்னாலிருந்து ஒரு பச்சோந்தி தன்னுடைய நீண்ட நாக்கை நீட்டி அந்த வெட்டுக்கிளியைப் பிடித்து விழுங்கிவிட்டது.

அதைப்பார்த்த தம்பிமுயல் இன்னும் அழுதான். அண்ணன்முயல் பயந்தாலும் சிரித்துக் கொண்டே,

“ தம்பி அது ஓணான்.. நம்மை ஒன்னும் செய்யாது.. இல்லையாண்ணே..

என்று கேட்டது. பச்சை வெட்டுக்கிளியை விழுங்கிய மகிழ்ச்சியில் பச்சோந்தி மேலும் கீழும் முதுகை ஆட்டியது. கண்களை உருட்டிக்கொண்டே,

“ பயப்படாதே தம்பி! காலையிலிருந்து ஒரே பசி! நான் உங்களை ஒண்ணும் செய்யமாட்டேன்..

என்று கரகரத்த குரலில் சொன்ன பச்சோந்தி தன்னுடைய நிறத்தை பச்சையாக மாற்றிக் கொண்டே சிரித்தது.

அண்ணன் முயலும் தம்பிமுயலும் இன்னும் கொஞ்சதூரம் குதித்து ஓடின.  ஒரு பச்சைத்தவளை அவர்களுக்கு முன்னால் வந்து குதித்தது. அதைப் பார்த்ததும் தம்பிமுயல் மறுபடியும் அழுதான். அண்ணன் முயல் சிரித்துக் கொண்டே,

“ என்ன தவளையண்ணே! எங்கே கிளம்பிட்டீங்க? “

“ நான் போறது இருக்கட்டும்.. நீங்க எங்க கிளம்பிட்டீங்க? உங்கம்மா என்கிட்டே  உங்களப்பார்த்துக்கிட சொல்லிட்டு போயிருக்கா? “

என்று அது சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு குட்டிச்சாரைப்பாம்பு பின்னால்வந்து அந்தப் பச்சைத்தவளையைப் பிடித்தது. அது பிடித்தவுடன் பச்சைத்தவளையின் தோலில் ஒரு திரவம் சுரந்தது. அவ்வளவுதான். பிடித்தவேகத்தில் தூ தூ தூவென்று துப்பிவிட்டது.

 ச்சே! என்ன துர்நாற்றம்! நாத்தம் பிடிச்சபயல்..என்று கத்தியது.

பச்சைத்தவளை சிரித்துக் கொண்டே தவ்வித்தவ்விப் அருகிலிருந்த புளியமரத்தின் அடியில் மறைந்து கொண்டது. ஆனால் குட்டிச்சாரைப்பாம்பு இரண்டு முயல் குட்டிகளைப் பார்த்து வாயைத் திறந்து கொண்டே வேகமாக வந்தது. அதைப் பார்த்த தம்பிமுயல் மறுபடியும் அழுதது. அண்ணன் முயல் சிரித்துக் கொண்டே,

“ குட்டிச்சாரையே! எங்களைச் சாப்பிடுவியா? “ என்று கேட்டது. அதற்கு குட்டிச்சாரைப்பாம்பு திறந்த தன் குட்டிவாயை மூடிக்கொண்டே,

“ ச்ச்சேச்சே.. என்னால முடியாதுப்பா.. நீங்க பெரிசா இருக்கீங்க.. எங்கம்மாவைக் கூட்டிட்டு வாரேன்..என்று திரும்பிப்போய் விட்டது. அதைக்கேட்ட தம்பிமுயல் இன்னும் அழுதான். அண்ணன் முயல் சிரித்துக் கொண்டே,

 தம்பி அவன் போயி.. அவங்கம்மாவைத் தேடி.. கூட்டிட்டு வர்றவரைக்கும் நாம இங்க நின்னுக்கிட்டா இருப்போம்.. “

இரண்டு முயல்களும் இன்னும் கொஞ்ச தூரம் குதித்து ஓடின. பார்த்தால் முன்னால் ஒரு குள்ளநரி சிவீர்னு சிவப்பு நிறத்தில் நின்று கொண்டிருந்தது. அவ்வளவு தான். இரண்டுபேருக்கும் வெலவெலத்து விட்டது. தம்பிமுயலின் அழுகை இன்னும் சத்தமாய் கேட்டது. ஆனால் அண்ணன்முயல் சிரித்துக்கொண்டே,

“ ஐயா! குள்ளநரி ஐயா நாங்க எங்கம்மாவைத் தேடிப்போறோம்..தம்பிக்கு ரொம்ப பசிக்குதாம்.. சாப்பிட்டுட்டு வாரோம்..

என்று தைரியமாகச் சொன்னது. அதன் தைரியத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட குள்ளநரி,

“ தம்பிகளா! பயப்படாதீங்க.. நான் இப்பதான் நாலு காட்டு எலிகளைச் சாப்பிட்டிருக்கேன்.. இப்ப பசியில்ல.. பசிச்சாதான் நாங்க வேட்டையாடுவோம்.. நீங்க போய் உங்கம்மாவைத் தேடுங்க..

என்று சொல்லிவிட்டு வாயை அகலத்திறந்து நீண்ட கொட்டாவி விட்டது. அப்புறம் படுத்துறங்க ஒரு புதரைத்தேடிப் போனது. மறுபடியும் இரண்டு முயல்களும் குதித்து குதித்து ஓடின.

அங்கே பச்சைப்பசேல் என்று ஒரு பரந்த புல்வெளி இருந்தது. அந்தப்புல்வெளியில் குறுந்தளிர்கள் நிறைந்திருந்தன. இரண்டு குட்டிமுயல்களும் அந்தத் தளிர்புல்லைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. சாப்பிட்டுக்கொண்டே அழுதது தம்பி முயல்.

“ அம்மா.. அம்மா..

அழாதே தம்பி! அழுதால் நம்முடைய அறிவு வேலை செய்யாது.. கண்களைத் திறந்து சிரித்துப்பார்.. நமக்கு நம்பிக்கை வரும்.. தைரியம் அதிகமாகும்… சிரிச்சுப்பாரேன்.. அம்மாவும் வந்து விடுவாள்..

என்று அண்ணன் முயல் சொன்னதைக் கேட்ட தம்பிமுயல் சிரிக்க முயற்சி செய்தது.

 ஹ்ஹ்ஹ்ஹா ஹா ஹா ஹா…

தம்பிமுயல் சிரித்ததும் அதன் உடலும் சிரித்தது. கண்களை மூடித் திறந்தபோது, வாயில் கேரட் செடிகளுடன் அம்மா வந்து கொண்டிருப்பதைப் பார்த்தது. உடனே தம்பிமுயல் அண்ணன்முயலிடம்,

“ அண்ணா! நான் இனி அழவே மாட்டேன்..

என்று சொல்லிச் சிரித்தது. அண்ணன் முயலும் சிரித்தது. அருகில் வந்து விட்ட அம்மாவும்,

“ ம்ம் அப்படித்தான் வாழ்க்கையைத் தைரியமா நம்பிக்கையோட சிரிச்சிக்கிட்டே எதிர்கொள்ளணும்.. சரியா எங்கே சிரிங்க “ என்று கூறியது.

ஹ்ஹ்ஹ்ஹா ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா

அங்கே ஒரே சிரிப்புச்சத்தம் தான். 

நன்றி - பொம்மி தீபாவளி மலர்

 

 

Monday, 30 March 2020

அஞ்சு வண்ணம்


அஞ்சு வண்ணம்

உதயசங்கர்

குட்டிப்பாப்பாவுக்கு வானத்தில் பறக்கவேண்டும். யோசித்தாள். என்ன செய்யலாம்? யாரிடமாவது கேட்டால் என்ன? வீட்டின் பின்புறம் போனாள். அங்கே இருந்த மாமரத்தில் உட்கார்ந்திருந்த கிளியிடம் கேட்டாள்.
கிளியக்கா கிளியக்கா எனக்குப் பறக்கணும்.. அதுக்கு ஒரு வழி சொல்லேன்..’
கீ கீ கீ கிக்கீ குட்டிப்பாப்பா நீ பறக்கணும்னா நீ தான் முயற்சிக்கணும்.. வேணுமின்னா நான் என்னோட ஒரு இறகைத் தாரேன்..’
என்று சொல்லி விட்டு தன்னுடைய சிறகிலிருந்து நீளமான ஒரு பச்சை நிற இறகை எடுத்து குட்டிப்பாப்பாவிடம் கொடுத்தது.
குட்டிப்பாப்பா கிளி கொடுத்த பச்சை இறகைப் பார்த்துக் கொண்டே அருகில் இருந்த வேப்பமரத்திற்குப் போனாள்.  வேப்பமரத்தில் உட்கார்ந்து தலையைச் சாய்த்து குட்டிப்பாப்பாவை குர்ரென்று பார்த்துக் கொண்டிருந்த காகத்திடம் கேட்டாள்,
காக்கையண்ணே காக்கையண்ணே.. எனக்குப் பறக்கணும்.. அதுக்கு ஒரு வழி சொல்லேன்..’
கா கா கா க்ர்ர் எனக்குத் தெரியாது பாப்பா வேணும்னா நான் என்னோட இறகு ஒண்ணு தாரேன்…’ என்று சொல்லி தன்னுடைய சிறகிலிருந்து ஒரு இறகை எடுத்து குட்டிப்பாப்பாவிடம் கொடுத்தது.
குட்டிப்பாப்பா தோட்டத்தில் வேலிக்கு அருகில் இருந்த இலந்தை மரப்புதரில் தன்னுடைய சிவந்த கண்களை உருட்டி உருட்டிப் பார்த்துக்கொண்டிருந்த செம்போத்து பறவையிடம் போனாள்.
செம்போத்தே செம்போத்தே நான் பறப்பதற்கு ஒரு வழி சொல்லேன்..’
கூ கூகூகூ எனக்குத் தெரியாது.. வேணும்னா நான் ஒரு இறகைத் தாரேன்..’ என்று சொல்லி தன் சிறகிலிருந்து ஒரு சிவப்பு இறகை எடுத்து கொடுத்தது.
குட்டிப்பாப்பா தோட்டத்தில் பறந்து கொண்டிருந்த மைனாவைப் பார்த்து கை தட்டினாள். மைனா உடனே குட்டிப்பாப்பாவின் முன்னால் இறங்கியது. உடனே குட்டிபாப்பா,
மைனா.. மைனா.. எனக்கு பறக்கணும் ஒரு வழி சொல்லேன்..’
என்று கேட்டாள். மைனா குட்டிப்பாப்பாவைப் பார்த்தது.
கீ க்வ் க்ளவ்.. கீச் கீச் அய்ய்ய்யோ அதெல்லாம் எனக்குத் தெரியாதுப்பா.. வேணும்னா என்னோட சிறகு ஒண்ணு தாரேன்..’
என்று சொல்லி அதன் சிறகிலிருந்து வெள்ளை இறகை எடுத்துக் கொடுத்ததுகுட்டிபாப்பா குப்பையில் மேய்ந்து கொண்டிருந்த கொண்டைச்சேவலின் அருகில் போனாள். சேவல் அவளைக் கவனிக்காமல் குனிந்து இரை எடுத்துக் கொண்டிருந்தது. குட்டிப்பாப்பா கொக்கரக்கோ என்று கத்தினாள். கோபத்துடன் நிமிர்ந்து பார்த்த சேவல், அங்கே குட்டிப்பாப்பாவைப் பார்த்ததும் சாந்தமானது. ஏனென்றால் குட்டிப்பாப்பா தான் அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டிலிருந்து ஒரு குத்து அரிசியை எடுத்துக் கொண்டு வந்து சேவலின் குடும்பத்துக்குப் போடுவாள். அவளிடம் கோபப்பட முடியுமா?
க்கொ க்கோ என்ன குட்டிப்பாப்பா ? ‘
சேவல் மாமா சேவல் மாமா எனக்குப் பறக்கணும்.. ஒரு வழி சொல்லேன்..’
எனக்கே கூரைக்கு மேலே பறக்க முடியாதுஎங்கிட்டே கேக்கிறீயே.. வேணும்னா என்னோட வாலிலிருந்து ஒரு இறகைத் தாரேன்…’ என்று சொல்லி வாலில் இருந்து பலவண்ண இறகை எடுத்துக் கொடுத்தது.
குட்டிப்பாப்பா கையில் ஐந்து இறகுகள் இருந்தன. கிளியின் பச்சைச்சிறகு, காகத்தின் கருப்புச் சிறகு, மைனாவின் வெள்ளைச் சிறகு, செம்போத்தின் சிவப்பு இறகு, சேவலின் கருஞ்சிவப்பு இறகு. எல்லா இறகுகளையும் ஒரு நூலில் கட்டினாள் குட்டிப்பாப்பா. அதை முதுகில் கட்டிக் கொண்டு,
நான் பறக்கிறேன்நான் பறக்கிறேன்.. ‘ என்று மகிழ்ச்சியாகக் கூவிக் கொண்டு தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி ஓடினாள். கிளியும், காகமும், செம்போத்தும், மைனாவும், சேவலும் அதைப் பார்த்து சிறகுகளடித்து கூவின.