Tuesday 27 November 2012

திருடன் கொண்டு போன நாய்க்குட்டி

மலையாளம்- மாலிMohan Das (3)

தமிழில்-உதயசங்கர்

ராமுவுக்கு ஒரு நாய்க்குட்டி கிடைத்தது.நாய்க்குட்டியின் தலையும் வாலும் கருப்பு. உடம்பும் கால்களும் வெள்ளை. அழகான நாய்க்குட்டி. அதே சமயம், உஷாரான நாய்க்குட்டி.

நாய்க்குட்டி இரவில் வராந்தாவில் படுத்து உறங்கும். ராமுவின் அறைக்கு வெளியே தான் வராந்தா இருந்தது. ராமு அறைக்கதவைத் திறந்தே வைத்திருப்பான்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பனிரெண்டு ஆனது. ஒரு மணிச்சத்தம் கேட்டது. அதைக் கேட்டு ராமு விழித்து விட்டான். நாய்க் குட்டியும் விழித்து விட்டது. மணிச்சத்தம் அருகில் வந்து கொண்டேயிருந்தது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் தூரத்தில் கேட்காமலே போய் விட்டது.

” நாய்க்குட்டியே! இந்த மணிச்சத்தம் எதுக்குன்னு தெரியுமா?” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது- தெரியாது என்ற அர்த்தத்தில்.

“எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ராத்திரி பனிரெண்டு மணி ஆயிருச்சின்னா ஒரு திருடன் ரோட்டு வழியே நடந்துபோவான். திருடி விட்டு மணியடித்துக் கொண்டே வீட்டுக்குப் போவான். திருடன் போகிறான் என்று எல்லோருக்கும் தெரியணுமாம்..அதுக்குத் தான் மணியடித்துக் கொண்டு போகிறான்..என்ன உனக்குப் பயமாருக்கா நாய்க்குட்டி?” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது- பயம் இல்லை என்ற அர்த்தத்தில்.

அடுத்த ஞாயிறு வந்தது.இரவு மணி பதினொன்றரை ஆகி விட்டது. நாய்க்குட்டி என்ன செய்தது தெரியுமா? சத்தம் போடாமல் எழுந்து கேட்டிற்கு அடியில் நுழைந்து ரோட்டில் போய் உட்கார்ந்து கொண்டது. அவனுக்கு திருடன் எப்படி இருப்பான்னு கொஞ்சம் பார்க்கணும்!

மணி பனிரெண்டு அடித்தது. அதோ வருகிறான் திருடன் மணியை அடித்துக் கொண்டு. திருடனைப் பார்த்தபோது நாய்க்குட்டி பயத்தில் நடுங்கியது. அரிவாள்மீசை, முட்டைக்கண்கள்,கருப்பு நிறம்,பயங்கரமான ஆள்!

நாய்க்குட்டிக்கு வீட்டிற்குப் போனால் போதும் என்று தோன்றியது. அவன் கேட்டின் அடியில் நுழைய முயற்சித்தான். திருடன் பாய்ந்து ஒரே பிடி. உடனே நூலை வைத்து வாயில் ஒரு கட்டு. நாய்க்குட்டிக்குக் கடிக்கவும் முடியாது, குரைக்கவும் முடியாது. திருடன் நாய்க்குட்டியைக் கையில் எடுத்தான்.மணியை அடித்துக் கொண்டு ஒரே நடை.

முதலில் நாய்க்குட்டி மிகவும் பயந்து போய்விட்டது. பின்பு பயம் இல்லாமல் போய் விட்டது. அவன் யோசித்தான். வாயை மட்டும் தானே கட்டியிருக்கிறார்கள். மூக்கை கட்டவில்லை. கண்ணைக் கட்டவில்லை. அவன் மூக்கைத் திறந்து வைத்தான்.கண்ணைத் திறந்து வைத்தான்.எல்லாமணங்களயும் முகர்ந்து உள்வாங்கினான்.எல்லாகாட்சிகளையும் பார்த்தான். எல்லா மணங்களையும், எல்லாக்காட்சிகளையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டான்.

பத்து மைல் தூரத்திலிருந்தது திருடனின் வீடு. திருடன் வீட்டிற்கு போய்ச் சேர்ந்தான். திருடனின் மனைவி திருடி கதவைத் திறந்தாள். திருடன் நாய்க்குட்டியோடு வீட்டிற்குள் சென்றான். திருடி பத்திரமாய் கதவை அடைத்தாள்.

“திருடி இந்த நாய்க்குட்டி நல்லாருக்கா?” என்று திருடன் கேட்டான்.

“திருடா ரொம்ப நல்லாருக்கு..” என்று திருடி சொன்னாள்.

திருடி நாய்க்குட்டியை சங்கிலியால் கட்டிப் போட்டாள். சோறும் பாலும் கொடுத்தாள். பின்பு படுத்து உறங்கினாள்.

நாலைந்து நாள் கழிந்த பிறகு என்ன நடந்தது தெரியுமா? திருடி யோசித்தாள். எவ்வளவு நல்ல நாய்க்குட்டி! நாய்க்குட்டி திருடி சொன்னபடியெல்லாம் கேட்கிறது. கடிப்பதில்லை. குரைப்பதில்லை.திருடி அதை அவிழ்த்து விட்டாலோ வாசல்படி கூட தாண்டுவதில்லை!

ஆனால் இதெல்லாம் வெறும் நாடகம் என்று அவளுக்குத் தெரியாது. அவளை எப்படியாவது ஏமாற்றி விட்டு ஓடிப் போகணும். அதுதான் நாய்க்குட்டியின் திட்டம்.

ஒரு ராத்திரி. மணி ரெண்டு இருக்கும். திருடியும் திருடனும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். நாய்க்குட்டி பதுங்கிப் பதுங்கி ரோட்டில் இறங்கியது.பின்பு ஒரே ஓட்டம்! முன்பு திருடன் தூக்கிக் கொண்டு வரும்போது முகர்ந்த மணங்கள், பார்த்த காட்சிகள், எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திக் கொண்டே சென்றது.அது பத்து மைல் ஓடி ராமுவின் வீட்டை அடைந்தது. கேட்டின் கீழே நுழைந்து உள்ளே சென்றது. நாய்க்குட்டி இல்லாததினால் ராமு வாசலை பூட்டியிருந்தான். நாய்க்குட்டி சன்னல் வழியே எட்டிப் பார்த்தது. சத்தமாய் நாலைந்து குரைப்பு!

ராமு எழுந்து விட்டான். குரைப்பொலியை உற்றுக் கேட்டான். வேறு நாயோ? இல்லை. நம்மோட நாய் தான். ராமு வாசல் கதவைத் திறந்தான். நாய்க்குட்டி ராமுவின் மேல் ஒரே பாய்ச்சல். பின்னர் நக்கோ நக்கென்று நக்கிக் கொஞ்சியது.

அடுத்த ஞாயிறு ராத்திரி வந்தது. பனிரெண்டு மணி ஆனது. அதோ கேட்கிறது மணிச்சத்தம். திருடன் திருடி விட்டு வீட்டுக்குப் போகிறான்.

“நாய்க்குட்டி! ரோட்டிற்குப் போக வேண்டாமா?” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது- வேண்டாம் என்ற அர்த்தத்தில்.

காலையில் ராமு கேட்டைத் திறந்தான்.

“போறியா.. நாய்க்குட்டி!” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது-இல்லை என்ற அர்த்தத்தில்!

புகைப்படம்-மோகன் தாஸ்வடகரா

Monday 26 November 2012

கலாமோகினியின் கடைக்கண்பார்வை

Impressionism-Oil-Painting-001-  

உதயசங்கர்

 

80 களின் துவக்கத்தில் இலக்கியக்கோட்டி பிடித்து எழுத்தாளராவதைத் தவிர வேறு மார்க்கமேயில்லை என்று நாங்கள், நான், நாறும்பூநாதன், சாரதி, திடவைபொன்னுச்சாமி, அப்பணசாமி, கோவில்பட்டி காந்திமைதானத்து பொட்டல்வெயிலில் சத்தியம் செய்திருந்தோம். காணாததைக் கண்ட மாதிரி அவதி அவதியாய் புத்தகங்களைத் தின்று தீர்த்தோம். அதுவரை தெரிந்த உலகமே இப்போது வேறொன்றாய் தெரிந்தது. உலக, இந்திய, தமிழ், எழுத்தாளர்களோடு ஏற்பட்ட பரிச்சயம் எங்கள் நடையையே மாற்றி விட்டது. தரையில் கால் பாவியதாக நினைவில்லை. நாங்கள் வேறு பிறவிகள் என்ற நினைப்பு. பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, கு.அழகிரிசாமி, கு.பரா., சுந்தரராமசாமி, கு.சி.பா, டி.செல்வராஜ், கி.ரா, வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, என்று வாசித்து வாசித்துத் தீரவில்லை. வாசிக்கும்போதும் வாசித்து முடித்தபிறகும் எங்களுக்கு தோன்றும் முதல் கேள்வி “ எப்படிரா எழுதறாங்க..? “ என்பது தான். அப்படியே அழுவதற்கும், சிரிப்பதற்கும், கோபப்படுவதற்கும், காதலிப்பதற்கும் வைக்கிறதே எழுத்து. எழுத்தாளர்கள் தான் இந்த உலகத்தை ஆளமுடியும் என்று அப்பாவியாய் நினைத்திருந்தோம். எங்கள் கனவுகளில் எழுத்தாளர்கள் வந்தார்கள்.எனவே எழுத்தாளர்களைச் சந்திப்பதில் பேராவல் கொண்டிருந்தோம். ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்துகளையும் படிக்கும்போது ஒரு சித்திரம் அந்த எழுத்தாளரைப் பற்றி உருவாகும். எழுத்தாளர்களை இந்த பூமியில் பிறந்த அதிசயப்பிறவிகளாக எண்ணி மணிக்கணக்காக அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம்.

யாரையேனும் எழுத்தாளர்களைச் சந்திக்க நேர்ந்தால் கண்களில் பக்தியுணர்வு தோன்றிவிடும். அவர்களுடைய நடையுடை பாவனைகளை, அவர்கள் பேசும் முறையை, அவர்கள் சிரிப்பதை, அவர்கள் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் மிகக் கவனமாகக் கவனிப்போம். அவர்களுடன் இருக்கும் நேரம் முழுவதும் ஒரு பணிவு எங்களிடம் இருக்கும். எல்லா எழுத்தாளர்களிடமும் தவறாமல் கேட்கிற கேள்வி “ நீங்க எப்ப சார் எழுதுவீங்க? ராத்திரியிலா காலையிலா எந்த நேரம் வேணும்னாலும் எழுத உட்கார்ந்திருவீங்களா? “ அவர்கள் சொல்கிற பதிலில் தான் எங்கள் எதிர்கால எழுத்துலகமே இருப்பதைப் போல அவர்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்போம். மாக்சிம் கார்க்கியின் எப்படி எழுதுவது? அலக்ஸி டால்ஸ்டாயின் எழுதும் கலை என்று எழுதுவதைப் பற்றிய வியாக்கியானங்களை வேறு படித்திருந்தோமா. எங்களைப் பாடாய்ப்படுத்தியது சந்தேகங்கள். நாங்கள் சந்தித்த எழுத்தாளர்களையும் அந்தச் சந்தேகங்களின் கொடுக்குகளால் கொட்டிக் கொண்டிருந்தோம். அவர்கள் என்ன சொன்னாலும் எங்களுக்குத் திருப்தியில்லை. எதையோ மறைக்கிறார்கள். அந்த சூக்குமத்தைச் சொல்லிக் கொடுக்க மறுக்கிறார்கள் என்று பின்னர் பேசிக் கொண்டிருப்போம். ஏனெனில் நாங்கள் அப்போது வேலையின்றிச் சுற்றிக் கொண்டிருந்ததால் எப்போது வேண்டுமானாலும் எழுதிப்பார்க்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால் எழுதினால் எழுத்து தான் எழுத்து..எழுத்து.. வரவில்லை. அதனால் தான் எழுத்தாளர்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனித்து ரகசியத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம்.

இடைசெவல் போய் கி.ரா.வைப் பார்த்தால் அப்படி ஒரு ஒழுங்கு. சுத்தம். நறுவிசு. குடிக்கிற செய்யது பீடியைக் கூட தேர்வு செய்து அதன் முனையை, அருகிலேயே வைத்திருக்கும் கத்தரிக்கோலை வைத்து கத்தரித்து பற்றவைப்பார். அவருடைய நடையுடை பாவனைகளில் இருக்கும் நேர்த்தி யாவரையும் கவர்ந்து விடும். பூமணியிடம் பேசிக் கொண்டிருந்தால் தினமும் அதிகாலை எழுந்து எழுதுவேன் என்று சொல்லுவார். சுந்தரராமசாமி டைப்ரைட்டரில் தான் கதை எழுதுவார் என்று கேள்விப்பட்டிருந்தோம். இப்படி ஒவ்வொரு எழுத்தாளர்களிடமும் கேட்டாலும் எங்களுக்கு ஒரு கருத்து உருவாகிக் கொண்டிருந்தது. அது கோவில்பட்டி இலக்கியவட்டத்தின் கருத்து. அப்படியெல்லாம் தினசரியோ, காலையோ, மதியமோ, இரவோ, நள்ளிரவோ, எழுத முடியாது. கலைஎழுச்சி வரவேண்டும். அருள் வந்த மாதிரி, காய்ச்சல் வந்த மாதிரி உடம்பு சூடு ஏற வேண்டும். கைகளில் ஒரு நடுக்கம். இனி எழுதாமலிருக்க முடியாது என்கிற மாதிரி ஒரு வெறி, இடம், பொருள், காலம், பற்றிய பிரக்ஞை ( அப்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தாத இலக்கிய உரையாடல்களே கிடையாது. அதான் அந்த வார்த்தையே ஓடி ஒளிஞ்சிருச்சி போல ) இருக்கக் கூடாது. என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்போம். என்ன வேப்பிலையடிச்சாலும் எங்களுக்கு அருள் வரவில்லை என்பது வேறு விஷயம்.

ஆனால் நாங்கள் விட்டுவிடுவோமா? தினசரி ஒரு கதை எழுதிக் கொண்டு வரவேண்டும் என்று எங்கள் சபையில் முடிவு செய்தோம். ஒரு பக்கமாக இருந்தாலும் சரி. எழுதவேண்டும். எப்படியாவது கலாமோகினியின் கடைக்கண்பார்வையை எங்கள் பக்கம் திருப்பி விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டோம். கலைஎழுச்சி அல்லது கலைஅருள் வருவதற்கு வேறு வெளி உபகரணங்களைப் பயன்படுத்தவும் யோசித்தோம். மற்ற எழுத்தாளர்கள் என்னென்ன உபகரணங்களை பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய்ச்சி செய்தோம். நிறைய டீக்களைக் குடித்தோம். பீடி பிடித்துப் பார்த்தோம். காசு இருந்தால் அல்லது ஓசியென்றால் வில்ஸ்பில்டர் வாங்கிக் குடித்தோம். பாரதி கஞ்சா அடித்து விட்டுத்தான் கவிதை எழுதுவானாமே என்று ஒரு நண்பர் சொல்ல எப்படியோ கஷ்டப்பட்டு கஞ்சாவைச் சம்பாதித்து அதை சிகரெட்டிலோ பீடியிலோ அடைக்கத் தெரியாததினால் சூடான டீயில் கலந்து குடித்துப் பார்த்தோம். சிரிசிரியென்று சிரித்து உருண்டதும், நடை நடையென்று ஒரே தெருவில் நடந்து கொண்டேயிருந்ததும் தான் மிச்சம். கலாமோகினி எங்கே போனாள் என்றே தெரியவில்லை. நாங்கள் இருந்த திசைப்பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.

இதற்கிடையில் தினமும் எழுதிக் கொண்டுவரவேண்டும் என்ற எங்கள் முடிவு ஒரு வாரத்தில் காலமாகி விட்டது. மறுபடியும் “ எப்படிரா எழுதறாங்க..? “ என்ற முதல்கேள்வியில் வந்து நின்றோம். சிலசமயம் வண்ணதாசனின் கலைக்கமுடியாத ஒப்பனைகளைப் படித்து விட்டு அதன் அதிர்வுகளிலிருந்து மீளுமுன்னே கதை எழுதிப் பார்ப்பதுண்டு. அப்படியே வண்ணதாசன் கதை மாதிரியே இருக்கும். வண்ணநிலவனின் எஸ்தர் படித்து விட்டு அதன் உணர்ச்சி வேகம் அடங்குமுன்னே கதை எழுதுவோம். அப்படியே வண்ணநிலவன் கதை மாதிரியே இருக்கும். ஒருவருக்கொருவர் வாசித்து விட்டு “ எலேய் வண்ணதாசன் இதை விட நல்லா எழுதியிருக்காருடா..” என்றோ “ டேய் காப்பியடிக்காதே வண்ணநிலவனைக் காப்பியடிக்காதே..” என்றோ திட்டிக் கொள்வோம். அப்புறம் என்ன கதையெழுதினாலும் இது கு.அழகிரிசாமி கதை மாதிரி இருக்கோ, பூமணி கதை மாதிரி இருக்கோ, மௌனி கதை மாதிரி இருக்கோ, ஜானகிராமன் கதை மாதிரி இருக்கோ என்ற பயம் வந்து விடும். பாதியில் எழுத்து நின்று விடும்.

பலசமயம் எழுதிக் கையெழுத்துப்பிரதியாக நண்பர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி அவர்கள் படித்து முடிக்கும்வரை இருக்குமே பாருங்க ஒரு அமைதி ஆளையேக் காலி பண்ணிரும். அதிலேயும் படித்து முடித்ததும் நண்பர் ஒரு பார்வை மேலும் கீழும் பார்ப்பார். பின்னர் திரும்ப ஒரு தடவை எழுதிய தாள்களை புரட்டுவார். ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு இடத்தைத் திரும்ப வாசிப்பதைப் போல அவர் பாவனை இருக்கும். பேச ஆரம்பிக்கப் போகிற மாதிரி லேசாக தொண்டையைச் செருமிக் கொள்வார். அவர் வயையே பார்த்துக் கொண்டிருக்கும்போது பொன்னம்போல மெல்ல உதடுகளை அசைப்பார். அவர் கதையைப் பத்தித்தான் ஏதோ சொல்லப் போறார் போல என்று ஆவலின் மீது “ ஒரு டீ சொல்லேன்..அப்படியே ஒரு வில்ஸ்பில்டரும் வாங்கிரு..” என்ற வார்த்தைகளைச் சிந்தி அடக்குவார். எல்லாம் நேரம்டா நேரம்.. நீயும் கதை எழுதிட்டு வராமலா போயிரப்போறே பாத்துக்குகிறேன் என்று மனசுக்குள் கறுவிக் கொண்டே அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்தபிறகும் நீண்ட புகைமேகங்களை அனுப்பிக் கொண்டே ஏராளமான வெளிநாட்டு உள்நாட்டு, தமிழ்நாட்டு, உள்ளூர் எழுத்தாளர்களின் கதைகளைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை யெல்லாம் வாசிப்பார். அதில் இல்லாதது பொல்லாததும் இருக்கும். மற்ற நேரமாக இருந்தால் வந்து பாருன்னு சொல்லிரலாம். ஆனால் இப்போது வாயைத் திறக்க முடியாதே. அவர்கிட்டே கதை இருக்கே. எனவே பல்லைக் கடித்துக் கொண்டு அவர் சொல்றதையெல்லாம் பொறுமையின் சிகரத்தில் ஏறியபடியே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்படியே ஒரு இரண்டுமணி நேரம் கழியும். பொறுமையின் உச்சியில் நின்று கொண்டு இனி பொறுக்க முடியாது தற்கொலை தான் வழி. விழும்போது அவரையும் சேர்த்துத் தள்ளிர வேண்டியதான் என்ற முடிவின் வாசல்கதவைத் திறக்கும்போது “ உன்னோட இந்தக் கதை..” என்று ஆரம்பித்து உலகச்சிறுகதைகளை ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்து சுற்றி வளைத்து கடைசியில்” கதை சரியில்லை ” என்ற இரண்டு வார்த்தையைத் தான் இவ்வளவு நேரமாகச் சொல்லியிருப்பார்.

எப்படியிருக்கும்? ஏதோ இந்த ஒரு கதையிலதான் என்னோட உயிரே இருக்கிற மாதிரி துடிக்கிற துடிப்பு கடைசியில் அடங்கி விடும். முகம் தொங்கிப்போக சரி தான் நமக்கு எழுத வராது போல என்ற எண்ணம் தோன்றி விடும். இது வரை நான் எழுதி கையெழுத்துப் பிரதியில் படிக்கக் கொடுத்த கதைகளில் ஒரு கதையைக் கூட நல்லாருக்குன்னு ஒருத்தர் கூடச் சொன்னதில்லை. எல்லோருக்கும் அதுவும் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு உள்ளுக்குள் ஒரு பொறாமை நதி ஓடிக் கொண்டிருக்கும் போல. மற்றவர்கள் பிரதிகளைப் படிக்கும்போது அந்த நதியில் முங்கி முங்கி எழுந்திரிப்பார்கள் போல. ஆனால் இப்படி பொத்தாம் பொதுவாய் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. பல சமயம் இந்த மாதிரி விமர்சனங்கள் நம்மைப் புடம் போடவும் செய்யும். நம்மைச் செப்பனிட, செழுமைப்படுத்த, இன்னும் தீவிரமாய் எழுதத் தூண்டும். நான் அப்படியே எடுத்துக் கொண்டேன். கதை சரியில்லை என்று சொல்கிற சமயங்களில் வருத்தம் வந்தாலும் அந்த வருத்தத்தின் மீது இன்னும் நாலு கதைகளை எழுதிப் போட்டு அமுக்கிவிடுவேன்.

இப்பவும் அந்தக் கேள்வி இருக்கத்தான் செய்கிறது. அதுவும் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் முக்கியமான எழுத்தாளர்களான வண்ணதாசன் , கோணங்கி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜாகிர்ராஜா, இன்னும் பலரிடமும் இப்பவும் கேட்க நினைக்கிற கேள்வி இது தான் “ எப்படி எழுதுறீங்க? “ “ இதென்ன கேள்வி பேனாட்டு தான்..” ( டேய் எந்தக் காலத்தில் இருக்கே எல்லாம் கணிணியில் தான் என்று நாறும்பூநாதன் சொல்கிறான்.) என்று சொல்லிவிடாதீர்கள். அருள் வந்தோ, கலாமோகினியின் கடைக்கண் பார்வை பட்டோ, தியானம் செய்தோ, பிரக்ஞை விழிப்பு நிலையினாலோ, பிறவித்திறமையாலோ, கடின உழைப்பாலோ, கடுமையான முயற்சியாலோ, தீவிரப்பயிற்சியாலோ எப்படியோ எழுத்தாளராகி விட வேண்டும் என்று நாங்கள் செய்த, யோசித்த, மேற்சொன்ன விஷயங்களால் நான் அல்லது நாங்கள் எழுத்தாளராகவில்லை, அது வேறு விஷயம். ஆனால் அந்த வேறு விஷயம் தான் என்னவென்று தெரியவில்லை. மறுபடியும் முதல்லருந்தா..ஐயோ சாமி ஆள விடுடா என்று நீங்கள் ஓடத் துவங்குவதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

நன்றி- சொல்வனம் இணைய இதழ்

Saturday 24 November 2012

புல்புல்தாரா பாட்டு

 

Mohan Das (186)

உதயசங்கர்

 

என்னுடைய சித்தப்பா சண்முகநாதனின் வீட்டுக்குப் போயிருந்தேன். வீடு அமைதியாகக் கிடந்தது. போன மாதம் தான் சித்தப்பா தவறிப் போய்விட்டார். ரோட்டில் போய்க்கொண்டிருந்த மாடு கலைந்து அவரை முட்டித் தள்ளி விட்டது. தடுமாறிக் கீழே விழுந்ததில் பிட்டியில் நல்ல அடி. வெளியே காயம் எதுவும் இல்லை. ஆனால் பத்து நாட்களுக்குள் சிறுநீரகச் செயலிழப்பு, கைகால்களில் விரைப்பு, என்று ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக வந்து அவரை மரணத்துக்கு இட்டுச் சென்று விட்டது. எனக்குத் தொலைபேசியில் தகவல் வரும்போது நான் மும்பையில் எங்கள் கம்பெனி வேலை விஷயமாகப் போயிருந்தேன். போனவாரம் தான் அங்கேயிருந்து திரும்பி வந்தேன். இந்த ஒரு மாதமாகச் சித்தப்பாவின் ஞாபகங்கள் மனதில் அலையடித்துக் கொண்டேயிருந்தது. எதிர்பாராத தருணங்களில் மனிதர்களை வீழ்த்துவதில் மரணத்துக்குத் தான் எத்தனை குரூர திருப்தி.

லீவுக்காக மன்றாடிக் கேட்டு வாங்கி கோவில்பட்டிக்கு வந்து இறங்கியதிலிருந்தே மனம் நிலை கொள்ளவில்லை. மனம் இறுகி பாறை மாதிரி கனத்துப் போனது. எல்லாஊர்களையும் போல கோவில்பட்டியும் மாறியிருக்கிறது. ஆனால் என் சித்தப்பா குடியிருந்ததெருவும் வளவும் இந்த மாற்றத்திற்கு சவால் விட்டுக் கொண்டு மாறாமல் அப்படியே இருந்தன. சுற்றிலும் சாக்கடைகள் சூழ்ந்திருக்க அதில் கால்களை அளைந்தபடி பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தன. அந்த வளவில் இருந்த ஆறு வீடுகளில் மூன்றாவது வீட்டில் – அதாவது ஒரேஒரு பத்தி உள்ள குச்சில் என் சித்தப்பா குடியிருந்தார். வீடு நெருங்க நெருங்க மனம் இளகியது. சித்தியைப் பார்த்தவுடன் அழுது விடுவேனோ என்று பயந்தேன்.

எப்போதும் வெளித்தெரியும் எத்துப்பல் சிரிப்புடன் என் கைகளை ஆவலுடன் பற்றிக் கொள்ளும் என் சித்தப்பா இப்போது இல்லை. அந்தக் கைகளின் காய்ப்பையும் மீறி அன்பின் துடிப்பை நான் உணர்வேன். என் மீது ஒரு அலாதிப் பிரியத்தை வைத்திருந்தார் என் சித்தப்பா அல்லது அப்படி வைத்திருப்பதாக நினைப்பதில் நான் பெருமைப்பட்டேன்.

ஆனால் எதிர்பார்த்ததைவிட சித்தி தைரியமாக இருந்தாள். துக்கத்தை அடக்கிக் கொள்கிற பக்குவம் சித்திக்கு இருந்ததைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். சாதாரணமாய் என் வேலையைப் பற்றி, அம்மாஅப்பாவைப் பற்றி, தம்பி தங்கையைப் பற்றி விசாரித்தாள். ஒவ்வொரு விசாரிப்புக்கும் நடுவே ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டாள். எனக்குச் சங்கடமாக இருந்தது. எப்பவுமே இந்த மாதிரி துக்கம் விசாரிக்கும் தருணங்களில் என்ன மாதிரியான வார்த்தைகளைப் பேச வேண்டும் என்று எனக்குத் தெரியாது. பாவமாய் முழித்துக் கொண்டிருப்பேன். பரிதாபமான என் முகத்தைப் பார்த்து துக்கவீட்டுக்காரர்கள் எனக்கு ஆறுதல் சொல்லி அனுப்புவார்கள். அப்படித்தான் இப்போதும் முழித்துக் கொண்டிருந்தேன்.

குத்துவிளக்கின் அருகில் கதம்பமாலை சூடிய போட்டோவுக்குள்ளிருந்து என் சித்தப்பா என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். சித்தி தரையை விரலால் தேய்த்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் தானோ என்னவோ என்மீது மிகுந்த பிரியம் வைத்திருந்தார் என் சித்தப்பா. பாலிய காலத்தில் பெரும்பகுதி நேரத்தை என் சித்தப்பாவுடனேயே கழித்திருக்கிறேன். என்னைத் தூக்கி வைத்துக் கொண்டு அவருடைய எத்துப்பல் உதடுகளால் சும்மா முத்திக் கொண்டேயிருப்பார். எனக்கு வெட்கமாகவும், சந்தோஷமாகவும், இருக்கும். என் அப்பாவுக்கு மாறுதல் கிடைத்து மதுரை செல்லும்வரை என் சித்தப்பா என்னைத் தூக்கிக் கொண்டே திரிந்தார். இதனால் சித்திக்கும் அவருக்கும் சண்டைகூட வந்திருக்கிறது.

“ ராமநாதா..மேலே அட்டாலையில் இருக்கிற அவுக டிரங்குப்பெட்டியை இறக்கணும்.. அந்த ஸ்டூலைப் போட்டுக்கோ.. எனக்கு ஸ்டூல் மேலே ஏறணும்னால பயமாருக்கு…எங்க..அவுகள மாதிரி விழுந்துருவேனோன்னு…”

சித்தி என்னைப்பார்த்து விரக்தியுடன் சிரித்தாள். நான் எழுந்து ஸ்டூலைப் போட்டு அட்டாலையிலிருந்து அந்தப் பழைய டிரங்குப்பெட்டியை இறக்கினேன்.

” வேற ஏதும் எடுக்கணுமா..சித்தி..”

”வேற என்ன இருக்குன்னு பாரு..”

என்றாள் சித்தி. நான் மறுபடியும் ஸ்டூலில் ஏறிப்பார்த்தேன். நீள்சதுரமாய் துணியினால் மூடப்பட்ட ஒரு பார்சல் இருந்தது. பிறகு குட்டிச்சாக்குகளில் கட்டப்பட்டிருந்த பாத்திரமூட்டைகள். நான் அந்த நீள்சதுரப்பார்சலை இழுத்து இறக்கினேன். டைப்ரைட்டர் மிஷின் மாதிரி தெரிந்தது. ஒரே தூசி. அப்படியே அசங்காமல் மேலே சுற்றியிருந்த துணியைச் சுருட்டி எடுத்தேன். வித்தியாசமான ஒரு இசைக்கருவி என் முன்னால் இருந்தது.

” இது என்னது சித்தி..”

ஒரு கணம் அதையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சித்தி. பின் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு,

” இதுவா தம்பி.. புல்புல்தாரா.. உஞ்சித்தப்பாவுக்கு உசிரு.. எப்பவும் இதில உட்காந்து வாசிச்சிக்கிட்டே இருப்பாரு.. ரூப்பு தேரா மஸ்தானா அப்ப ரெம்ப பேமஸ் யார் கேட்டாலும் உடனே அந்த இடத்திலே உட்கார்ந்து இதை வச்சி வாசிக்க ஆரம்பிச்சிருவாரு.. நான் சின்னப்பிள்ளையா இருக்கறப்ப எவ்வளவு பாட்டு கேட்டிருக்கென்.. அதுக்காகவே இவரைக் கலியாணம் செய்ஞ்சிக்கிடணும்னு நெனச்சேன்.. ஆனா எல்லாம் உங்கம்மா கலியாணத்தோட போச்சு.. அதுக்கு மறுநாள் மூட்டை கட்டி வைச்சவர் தான்.. ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள்னு எடுத்து வைச்சு ஒரே ஒரு பாட்டை மட்டும் திரும்பத் திரும்ப வாசிச்சிக்கிட்டேயிருப்பாரு.. ஏன் வேற பாட்டை வாசிக்கறதானேன்னு கேட்டா ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான். எப்பேர்க்கொண்ட குணவான்.. எனக்கு ஒரு குறை உண்டுமா.. என்னமா வைச்சிருந்தாக.. இப்படித் தனியாத் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டாகளே..”

என்று அழுகையும் புலம்பலுமாகச் சொன்னாள் சித்தி. எனக்கு எதுவும் பேசத்தோணவில்லை. நான் புல்புல்தாராவின் பொத்தான்களை அமுக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். நீண்ட நாட்களானதால் பொத்தான்கள் கிறீச்சிட்டன. ஓரத்திலிருந்த சிறு பெட்டியில் கம்பிகளை மீட்டுகிற கார்டுகள் கிடந்தன. அதில் ஒன்றை எடுத்து கம்பிகளை மீட்டிக் கொண்டே பொத்தான்களை அமுக்கிப் பார்த்தேன். திடீரென “ டொய்ங்ங்ங்…” என்று கம்பி அதிர்ந்தது. அந்த சத்தம் நாராசமாய் இருந்தது. எப்படி சித்தப்பா இதை வசப்படுத்தினார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அதன்பிறகு எழுந்து சித்தி சமைக்கப்போனாள். நான் கொஞ்சநேரம் அந்தப் புல்புல்தாராவுடன் போராடினேன். பின்னர் நாலுக்குநாலு குச்சுக்குள்ளேயே அங்குலம் அங்குலமாக நடந்தும் உட்கார்ந்தும் பொழுதை நகர்த்திக் கொண்டிருந்தேன். சாப்பிட்டுவிட்டு கிளம்பப்போன என்னை சித்திதான்,

” ஏண்டா.. கொஞ்சம் வெயில்தாழ போயேன்..”

என்று சொன்னாள். எனக்கும் அசதியாகத் தான் இருந்தது. படுத்த உடனேயே தூக்கம் சுழலாய் என்னைச் சுருட்டி விழுங்கியது.

திடீரென புல்புல்தாராவின் இசையொலி கேட்டது. கண்களைத் திறக்க நினைத்தாலும் திறக்க முடியவில்லை. ஆனால் அந்த இசை ஒரு பழைய தமிழ்த்திரைப்படப்பாடலாக மாறிக்கொண்டேயிருந்தது. கூடவே கலியாணவீட்டு ஆரவாரம். கலகலப்பு.

திருமணத்துக்கு முதல் நாளிரவாக இருந்தது அந்தக்காட்சி. ஊரிலிருந்து ஒவ்வொருத்தராக வந்து கொண்டேயிருந்தார்கள் ஒவ்வொரு குடும்பமாய் வர வர அறிவிப்புகளும் வந்து கொண்டேயிருந்தன.

சங்கரங்கோயில் கோமதி மயினி வந்தாச்சி.. புதூர் வேலம்மையாச்சி வந்தாச்சி.. திருநெவேலி நெல்லையப்பன் வந்துட்டான்..

உடனே ஒரு அலை போல குசலங்களும், கேலியும், சிரிப்பும், கும்மாளமும் எழுந்து அடங்கும். இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் வாடகைக்கு எடுத்திருந்த ஜமுக்காளத்தில் இளவட்டங்கள் உட்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அது போரடித்தபோது பாட்டுப்பாடினார்கள். சிலர் இராச்சாப்பாட்டை முடித்துவிட்டு இரண்டாம்பிளே சினிமாவுக்குப் போனார்கள். சிலர் இங்கும் அங்கும் உட்கார்ந்துகொண்டோ நின்று கொண்டோ குடும்பப்பிரச்னைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். பொடிசுகள் ஒவ்வொருவர் கால்மாட்டுக்குள்ளும் நுழைந்து ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர்.

இரவு பந்தி பலுமாறலில் இருந்த சம்முகநாதன் அப்போது தான் முன்னால் வந்து முற்றத்திற்கு வந்து யாரையோ எதிர்பார்த்த மாதிரி சுற்றும் முற்றும் பார்த்தான். அவனைப் பார்த்தவுடன் செல்லையா,

“ சம்முகண்ணே.. வாங்க ஒரு கை போடலாம்..”

என்று கூப்பிட்டான்.

” இல்லடே சோலி கிடக்கு.. அடிக்கடி என்னயத்தான் கூப்பிடுவாக..”

என்று பெருமையுடன் சொன்னான். அப்போது செல்லையாவுக்குப் பக்கத்திலிருந்த வேலுமாமா,

” ஏல சம்முகம்.. உனக்கு யோகமில்லேயடா.. என்ன ஒழைச்சி என்ன செய்ய.. எல்லாம் மிஸ்ஸாயிருச்சேடா..”

என்று சொல்லவும் சம்முகநாதனின் முகம் இருண்டுபோய் விட்டது. நிலைமையை சங்கரநாராயணன் தான் சமாளித்தான்.

” சும்மா இரிங்க….மாமா.. எந்த நேரத்தில என்ன பேசுதுன்னே தெரியாது.. சம்முகம் நீ போய் உன்னோட புல்புல்தாராவ எடுத்துட்டு வந்து ரெண்டு பாட்ட அவுத்துவிடுடே..”

என்று சொன்னவுடன் சம்முகநாதனின் முகம் பிரகாசமாகிவிட்டது. உடனே உள்ளே போய் புல்புல்தாராவை எடுத்துக் கொண்டு வந்தான். அவன் எடுத்து வருவதைப் பார்த்த கோவிந்தமாமா ” எந்த நேரத்தில என்ன வேல பாக்கல தலைக்கு மேல சோலி கிடக்கு “ என்று சொன்னதைப் பொருட்படுத்தவில்லை சம்முகநாதன். சபைக்கு நடுவில் அதை வைத்து கம்பிகளை முறுக்கி கார்டை எடுத்தான். செல்லையா உடனே,

” சம்முகண்ணே.. ரூப்பு தேரா மஸ்தானா?”

என்று கேட்டான். அதைக்கேட்டதும் சங்கரநாரயணன்,

” என்னா அழகுடா அந்தப்பய ராஜேஷ்கன்னா..”

என்று சொல்ல, அதை இடைமறித்து வேலுமாமா,

” ஏல சர்மிளாடாகுர் அந்தப்பிள்ளைக்கென்ன கொறச்சலா..”

என்று தன்னுடைய ஓட்டைப்பல்லைக் காட்டிச் சிரித்தார். சம்முகநாதன் ஒரு கணம் கண்களை மூடினான். கைவிரல்கள் பொத்தான்களில் வேகவேகமாகத் தாளமிட பாட்டு அந்த முரட்டுக்கம்பிகளிலிருந்து கசிந்து பரவியது. எந்தப் பாட்டை வாசித்தாலும் அந்தப் பாட்டின் அத்தனை நெளிவுசுளிவுகளையும் வாசித்தான். மனம் ஒன்றி ஒருவித லயத்துடன் தலையாட்டிக் கொண்டே அவன் வாசித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் அசையாமல் உட்கார்ந்திருந்தனர். அந்த இரவின் அமைதியில் அவர்கள் எல்லோருடைய மனங்களும் ததும்பிக் கொண்டிருந்தன.

அந்தத் ததும்பலின் உச்சகட்டமாக ஒரு சோகமான இசைப்பனுவல் வந்தது. யாருக்கும் அது என்ன பாட்டு என்றே புரியவில்லை. ஆனால் செல்லையா மகாபளுவன். மெதுவாகப் பக்கத்திலிருந்த சங்கரநாராயணனிடம் முணுமுணுத்தான். மன்னாதி மன்னன் படத்தில் வருகிற கண்களிரண்டும் உன்னை எங்கே என்று தேடுமோ என்ற பாட்டு. அதை ஒருவருக்கொருவர் சொல்லித் தெரிந்து கொண்டபோதும் சம்முகநாதன் கண்களைத் திறக்காமல் மெய்ம்மறந்து வாசித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கும்போது வேறு ஒரு லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததைப் போல இருந்தது. அவன் முகபாவம் கணத்துக்குக் கணம் மாறிக் கொண்டேயிருந்தது. கண்களும் புருவமும் சுருங்கின. வாய்கூட லேசாய் கோணியது. ஒரு அபூர்வமான பாவம் அவன் முகத்தில் கூடி வந்தது. எல்லோரும் வைச்சகண் வாங்காமல் சம்முகநாதனையே பார்த்துக் கொண்டிருக்க கடையநல்லூர்கலியாணம் பெரியப்பாவின் குரல் கேட்டது,

” ஏல சம்முகம் போதும்ல..காலைல..ஆறுமணிக்கு கோயில்ல இருக்கணும் பாத்துக்க.. போய்த்தூங்குங்க..”

கர்ணகடூரமாய் ஒலித்த அந்தச் சத்தத்தில் ஒருகணம் சம்முகநாதன் உடல் நடுங்கி விட்டது. இசையின் கடைசித்துணுக்கோடு ஒரு விம்மலும் கேட்டது. கேட்டது என்று சங்கரநாராயணனும், ச்சே..ச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்லை.. என்று செல்லையாவும் பேசிக் கொண்டனர். அவர்கள் திரும்பிப் பார்க்கும்போது சம்முகநாதன் புல்புல்தாராவைக் கையில் எடுத்துக் கொண்டு உள்ளே போய்க் கொண்டிருந்தான்.

என் காதுக்குள் யாரோ கிசுகிசுப்பாய் சொல்லிக்கொண்டேயிருந்த மாதிரி இருந்தது. கண்களைத் திறக்க முடியாமல் திறந்தேன். இருட்டத் தொடங்கியிருந்தது. சித்தி அடுக்களையிலிருந்தாள். சித்திதான் கதை சொல்லிக் கொண்டிருந்தாளா? ஆனால் நேரில் பார்த்த மாதிரியே இருந்ததே. சித்தப்பாவின் அந்த முகம். அதில் தெரிந்த உணர்ச்சிகள். எல்லாவற்றுக்கும் மேல் அந்த விம்மல். குழப்பத்துடன் எழுந்து கைகால் முகம் கழுவினேன். சித்தி கொடுத்த காப்பியைக் குடித்துவிட்டு புறப்படத்தயாரானேன்.

சித்தி, குத்துவிளக்குக்கு அருகில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சித்தப்பாவின் புகைப்படத்தைக் கயில் எடுத்து முந்தானையால் துடைத்து மீண்டும் கீழே வைத்தாள். பின்னர் மெலிந்து நீண்ட கரங்களால் குத்துவிளக்கை ஏற்றினாள். அப்படியே சித்தப்பாவின் படத்துக்கு முன்னால் மண்டியிட்டு வணங்கினாள். எழுந்து நிமிரும்போது,

” அவுகளுக்கு உங்கம்மாவைக் கட்டணும்னுதான் ஆசை..உங்கம்மாவுக்கும் அந்த நெனப்பு இருந்திருக்கு..உங்க சித்தப்பாவை யாருக்குத்தான் பிடிக்காது! என்ன செய்ய? உங்கம்மாவக் கட்டியிருந்தா இன்னும் கொஞ்சநாள் இருந்திருப்பாரோ என்னமோ? எல்லாம் எந்தலையெழுத்து அவரைக் கூட்டிட்டுப்போயிட்டு…”

என்று முணுமுணுத்தாள். அது ஏதோ அசரீரி மாதிரி எனக்குள் இறங்கியது. நான் உள்ளுக்குள் நடுநடுங்கிப் போனேன். அதற்குப் பிறகு எனக்கு வந்த யோசனையெல்லாம் என் அம்மாவை எப்படி நான் எதிர்கொள்ளப்போகிறேன் என்பது தான்.

நன்றி- கணையாழி அக்டோபர்2012

புகைப்படம்- மோகன் தாஸ்வடகரா SketchGuru_20121121212036

Thursday 22 November 2012

வர்ணாசிரமத்தின் உடலரசியல்

 

உதயசங்கர்Mohan Das (52)

 

வேட்டைச்சமூகம் மறைந்து வேளாண்சமூகம் உருவாகத்துவங்கும் போது குடிமைச்சமூகத்தில் வேலைப்பிரிவினைகள் தோன்றின. இந்த வேலைப்பிரிவினைகள் தான் முதன்முதலில் மனிதர்களை மேல் கீழ் அடுக்குகளில் பிரித்து வைத்த ஆதிப்பிரிவினை எனலாம். ஆனால் இந்த அடுக்குகளில் இருந்த மனிதர்களுக்கு அந்த அடுக்கில் தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லை. ஒரு அடுக்கிலிருந்து இன்னொரு அடுக்கிற்கு மாறுவதில் எந்தக் குழப்பமும் இல்லை. வேலைப்பிரிவினையின் அடிப்படையில் நீர்மையாக அமைந்த ஒரு பிரிவினை மட்டுமே அப்போதைய குடிமைச்சமூகத்தில் இருந்தது. உதாரணத்துக்கு வேளாண்மை செய்தவர் மருத்துவராகவும், மருத்துவராக இருந்தவர் தச்சுவேலை செய்யவும் அதனடிப்படையில் அந்தந்தத் தலைமுறை மனிதர்கள் வேலைப்பிரிவினையின் அடுக்குகளில் பிரித்து வைக்கப்பட்டனர். இதே மாதிரி பிளட்டோவின் உலோகத்தத்துவமாகவும் கிரேக்கத்தில் பிறந்தது. மனிதர்களை தங்கமாகவும், வெள்ளியாகவும், தாமிரமாகவும், இரும்பாகவும் பிரித்திருந்தது அந்தத் தத்துவம். ஆனால் எந்த உலோகமும் எந்த உலோகமாகவும் உருமாற்றம் அடையும்படியான நீர்மையான விதிமுறைகள் அதில் இருந்தன. அதனால் ஸ்பார்ட்டகஸ் என்ற அடிமை அரசனாகவும் முடிந்தது. இந்த நீர்மையான அமைப்பில் ஒரு ஜனநாயக உணர்வு இருந்தது. குடிமைச்சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் எந்த அடுக்கிலிருந்தும் எந்த அடுக்கிலும் மாறுவதற்கான வாய்ப்புகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. பிராமணீயம் முதலில் இதைத் தகர்த்தது. நீர்மையான இந்த வேலைப்பிரிவினைகளை தாங்கள் கைப்பற்றிய ஆன்மிக அதிகாரத்தின் துணையோடு இறுகச் செய்தது. வேலைப்பிரிவினைகளை பிறப்பின் அடிப்படையில் வர்ணாசிரமம் கொண்டு வந்தது. அதன் மூலம் ஒரு புதிய உடல் எந்த சாதியில் பிறக்கிறதோ அந்த உடல் அந்தச் சாதியினரின் தொழிலைச் செய்யவேண்டும். அந்த உடல் கருப்போ, சிவப்போ, முட்டாளோ, புத்திசாலியோ, பலவானோ, பலகீனனோ, எப்படியிருந்தாலும் அந்த உடல் அது பிறந்த சாதிக்குரிய தொழிலைச் செய்யவேண்டும். வர்ணாசிரமக்கோட்பாட்டின்படி அந்தச் சாதிக்குரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

குடிமைச்சமூகத்தில் உடலுழைப்பு, மூளையுழைப்பு என்று வேலைப்பிரிவினைகளைச் செய்து கொண்டிருந்த உடல்களை சுத்தம்/அசுத்தம் என்ற அடிப்படையிலேயே மனுஸ்மிருதி பிரித்தது. உடலுழைப்பை அசுத்தமானதாகவும் மூளையுழைப்பு சுத்தமானதாகவும் நிலை நிறுத்தியது. சாதியப்படிநிலைகளில் பிராமணரைத் தவிர சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர், எல்லோரையும் சுத்த/அசுத்தத்தின் படிநிலையில் வரிசைப்படுத்தியது. அந்த வரிசையின் உயர்ந்த அல்லது மேல் படியில் பிராமணர்கள் தங்களை இருத்திக் கொண்டனர். அதற்கு அவர்கள் கைப்பற்றிய ஆன்மீக அதிகாரம் பயன்பட்டது. வர்ணாசிரமத்தின் அடுத்தடுத்த படிநிலைகளில் அடுத்தடுத்த சாதிகளை இருத்தி வைத்தனர். எந்தப்படிநிலைகளிலும் இல்லாமல் கீழே சேற்றில் பஞ்சமர்களை வீழ்த்தினர். ஒப்பீட்டளவில் சுத்தமும் அசுத்தமும் தீண்டாமைத் தத்துவத்தின் அளவுகோலாகப் பயன்பட்டது. அதாவது தற்காலிகத் தீண்டாமை தீட்டு என வரையறுக்கப்பட்டு அதனைக் கழிப்பதற்கென ( சுத்தப்படுத்துவதற்கென ) சடங்குகள் உருவாக்கப்பட்டு அதைப் பிராமணர்கள் செய்வதன் மூலம் தீட்டான மனிதர்கள், இடம், பொருள், மீண்டும் தங்கள் பழைய நிலைமையை அடைவார்கள். பிறப்பிலிருந்து இறப்பு வரை (பிள்ளை பிறந்த வீடு, பூப்படைந்த வீடு, இறந்தவீடு, )தற்காலிகத் தீண்டாமை என்கிற தீட்டுகளை ஒவ்வொரு சாதியினரும் சடங்குகள் மூலமாக கழிக்கின்றனர். அதனால் அவர்களை தீண்டாமை என்ற தத்துவத்தை அவர்களுடைய முழுவாழ்வில் கடைப்பிடிக்கச் செய்திருக்கிறது அதனால் தான் எல்லாச்சாதியினர் மனதிலும் தீட்டு, தீண்டாமை ஒரு தவறாகவோ, அபத்தமாகவோ, அருவெறுப்பாகவோ தோன்றவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தீண்டாமையின் உச்சத்தில் பிராமணர்கள் தங்களை இருத்திக் கொண்டார்கள். அதன் அதலபாதாளத்தில் தலித்துகளை வைத்தது. அதாவது இன்னொரு வகையில் வியாக்கியானம் செய்தோமானால் தீண்டாமையின் உச்சத்தில் இருக்கிற பிராமணர்கள் யாரையும் தீண்டக்கூடாது, அதே போல அவர்களையும் யாரும் தீண்டக்கூடாது. பிராமணர்களைத் தீண்டியவர்கள் தீட்டாவதில்லை. அவர்கள் பிராமணரைத் தொட்டதினால் ஏற்பட்ட தீட்டைப் போக்கக் குளித்துச் சுத்தம் செய்து கொள்வதில்லை. ஆனால் மற்றவர்களைத் தீண்டிய அல்லது மற்றவர்களால் தீண்டப்பட்ட பிராமணர் தீட்டாகி விடுகிறார். அவர் மற்றவர்கள்தீண்டியதால் அல்லது தீண்டப்பட்டதால் ஏற்பட்ட தீட்டை சடங்குகள் மூலமோ குளித்துச் சுத்தம் செய்தோ தன்னைப் புனிதப்படுத்திக் கொள்கிறார். இப்படியே தீண்டாமையின் கீழ்நிலையில் இருக்கும் தலித்துகளின் நிலைமை தலைகீழாக இருக்கிறது. அவர்கள் மற்றவர்களைத் தீண்டியதால் அல்லது தீண்டப்படுவதால் அவர்கள் தீட்டாவதில்லை. அதற்காக அவர்கள் தீட்டுக் கழிப்பதில்லை. ஆனால் அவர்களைத் தீண்டியவர்கள் அல்லது அவர்களால் தீண்டப்பட்டவர்கள் தீட்டாகி விடுகிறார்கள். அவர்கள் தீட்டுக் கழிக்கிறார்கள். ஆக ஒரே செயல் வர்ணாசிரமக்கோட்பாட்டின் உச்சத்தில் இருக்கிற பிராமணர்களுக்கு மேன்மையாகவும் அதன் அடிமட்டத்தில் இருக்கிற தலித்துகளுக்கு கீழ்மையாகவும் மாறியது. ஆன்மீக அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த தன் இருத்தலுக்கான அத்தியாவசியத் தேவையாக தீண்டாமையை உருவாக்கி அதை நிலைநிறுத்தியது. அது மட்டுமல்ல மற்ற சாதியினருக்கும் அதை மடைமாற்றம் செய்தது. தீண்டாமை என்பது பிராமணியம் உடலுழைப்பின் மீது கொண்ட வெறுப்புணர்வு. அந்த வெறுப்புணர்வை உடல்களின் மீது விதித்தது. இந்த சாதியில் பிறந்த உடல் தூய்மையானது என்றோ தூய்மையற்றது என்றோ பிறப்பின் அடிப்படையில் உறுதிப்படுத்தியது. அதற்கு தூய்மை/ தூய்மையின்மை என்ற தத்துவார்த்த விளக்கத்தைக் கொடுத்தது. அதற்கு பஞ்சபூதத்தத்துவத்தைப் பயன்படுத்தியது தான் விநோதம்.

இந்த உலகம் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றால் ஆனது. பஞ்சபூதங்கள் இல்லையெனில் உலகம் இல்லை. இவை அனைத்தும் சமமானவை. தூய்மையானவை. பரிசுத்தமானவை. தூய்மை செய்பவை. தன்னைத்தானே தூய்மை செய்து கொள்பவை. இந்த பஞ்சபூதங்களில் ஒன்று இல்லையெனினும் உலகம் இல்லை. இந்த உலகம் நிலைத்திருக்க பஞ்சபூதங்கள் அவசியமானவை. இயற்கையின் அங்கமான மனித உடல்களிலும் இந்த பஞ்சபூதங்கள் இருப்பது இயற்கையே. வியர்வை, மலம், மூத்திரம், சளி, வாயுக்கள், என்ற ஐந்து தூய்மையின்மைகள் உடலின் இயங்கியலில் வெளிப்படுவது இயல்பு. இந்தத் தூய்மையின்மைகளை வைத்து உடலுழைப்பு செய்யும் உடல்களை தூய்மையற்ற உடல்கள் என்றும் எனவே தீண்டத்தகாத உடல்கள் என்றும் வரையறுத்தது பிராமணியம். தீண்டத்தகுந்தவர்கள் தங்கள் அசுத்தங்களைக் கொட்டும் கிட்டங்கியாக தீண்டத்தகாதவர்களை வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

பஞ்சபூதங்களின் நேர்மறையான அர்த்தத்தை மாற்றி அதற்கு எதிர்மறையான அர்த்தத்தைக் கொடுத்து தங்களுடைய அதிகாரப்படிநிலையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது பிராமணியம். தீண்டத்தகாதவர்களை அந்த நிலையிலேயே வைத்திருப்பதற்கு இந்த பஞ்சபூதங்களையே பயன்படுத்தவும் செய்கிறது. நிலமே தீட்டானதாக மனுஸ்மிருதி சொல்கிறது. நிலத்தில் உழைப்பைச் செலுத்துவதைத் தவிர அவர்களை நிலத்தை விட்டு விலக்கி வைத்திருக்கிறது. நீர் அவர்களுக்கு விலக்கப் பட்டிருக்கிறது. காற்று வீசும் திசையிலிருந்தும் அவர்கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். நெருப்பையும் அவர்கள் தன்னிச்சையாகப் பயன்படுத்தமுடியாது. ஆனால் நெருப்பினால் அவர்களை புடம் போடுவார்கள் ( நந்தன் ) வெளியிலிருந்தும் அவர்கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி அவர்களுக்கு பஞ்சபூதங்களையும் விலக்கிவைத்து அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக, அசுத்தமானவர்களாக காட்டுவதில் தந்திரமாக செயல்பட்டிருகிறது பிராமணியம்.

இயற்கையின் அங்கம் தான் உடல் என்பதால் பஞ்சபூதங்கள் எல்லாஉடல்களிலும் இருக்கின்றன. அப்படியென்றால் எல்லாஉடல்களும் அது மூளையுழைப்பு உடலாக இருந்தாலும் சரி, உடலுழைப்பு உடல்களாக இருந்தாலும் சரி, சமமான மதிப்புடையவையே. சமமான மதிப்புடைய உடல்களுக்கிடையில் சமத்துவம் வேண்டும். இதற்கு பஞ்சபூதங்களின் நேர்மறையான அர்த்தத்தை மீட்டெடுக்க வேண்டும். எல்லாமூலகங்களும் முக்கியமானவை. எந்த ஒரு மூலகமும் எந்த ஒரு மூலகத்தை விட குறைந்ததில்லை. அதே போல யாரும் யாருக்கும் குறைந்தவரில்லை. இந்த சமத்துவம் வருவதற்குத் தீண்டாமை ஒழிப்பு என்ற மேலோட்டமான கருத்து போதாது. ஏனெனில் ஏற்கனவே சொன்ன மாதிரி எல்லாசாதியினரும் இந்தத் தீண்டாமையை தீட்டு என்ற தற்காலிக வடிவத்திலேனும் தொடர்ந்து தங்கள் வாழ்வில் எதிர்கொண்டு வருகிறார்கள். அதற்கு அவர்களுடைய மனம் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய மனதை வசப்படுத்துவதற்காகவே சடங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே சடங்குகள் இருக்கும் வரை தீட்டு, தீண்டாமை இருக்கும். சாதிகள் இருக்கும் வரை தீண்டாமை இருக்கும். எனவே அம்பேத்கார் சொன்ன மாதிரி சாதிகள் ஒழிந்தால் தான் பிராமணியம் ஒழியும். பிராமணியம் ஒழிந்தால் தான் மானுட சமத்துவம் மலரும்.

நன்றி- மலைகள் இணைய இதழ்

புகைப்படம்- மோகன்தாஸ்வடகரா

Monday 19 November 2012

ஊசிப்போன முத்தம்

உதயசங்கர்Mohan Das (79)

 

ஊசிப்போன முத்தமொன்று

என் வாசல் கதவைத் தட்டியது

கதவைத் திறக்குமுன்னே

வாசனை துளைத்தது

தயக்கம் என் கைகளைக்

கட்டிவிட முயற்சித்தது

எச்சரிக்கை என் கால்களில்

விலங்கினைப் பூட்டியது

பயம் என் கண்களில்

இருளைப் பூசியது

முத்தப்பசியினால்

உயிர்வாடிக் கிடந்தாலும்

கதவைத் திறக்கவில்லை

ஊசிப்போன முத்தமேயானாலும்

சுயமரியாதையுள்ளதல்லவா?

என்னைப் புறக்கணித்து  ஊசிப்போன முத்தம் 

சென்ற பாதையெங்கும்

மோப்பம் பிடித்துத் திரிகிறேன்.

கிடைக்காதா ஊசிப்போன முத்தத்தின்

  சிறுருசியேனும்?

புகைப்படம்- மோகன்தாஸ் வடகரா

Tuesday 13 November 2012

தத்துவத்தின் வறுமை

6a00e54fd47339883401675ef208c3970b-320wi

 

மனிதநலம் காக்கும் ஹோமியோபதி –7

உதயசங்கர்

 

நாகரீகமடைந்த மனிதகுலத்தின் எல்லாச்செயல்பாடுகளுக்குப் பின்னால் ஒரு தத்துவப்பின்புலமும் அரசியலும் இருக்கிறது. அந்தந்தக் காலகட்டத்தின் ஆளும்வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் விதமாக, அல்லது அதற்கு தொந்தரவில்லாத விதமாக தத்துவம் உருவாக்கப்படும். அந்தத் தத்துவத்தின் செயல்முறைத் திட்டமாக அரசியலும், அறிவியலும், இலக்கியமும், கலாச்சாரமும் உருவாக்கப்படும். ஆக அறிவியல் அது மருத்துவத்துறையாக இருந்தாலும் சரி, அணுசக்தித்துறையாக இருந்தாலும் சரி, அதற்குப் பின்னால் ஒரு தத்துவமும் அரசியலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

இன்றைய முதலாளித்துவ தத்துவத்தின் கூறுகளே இன்றைய மருத்துவத்திலும் இருக்கிறது. லாபவெறி கொண்ட மருந்துக் கம்பெனிகள், சேவையை மறந்த மருத்துவர்கள், பணம் பறிக்கும் நோக்கத்துடனேயே நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர். அன்றாடம் நாம் செய்தித்தாள்களில் பல மருத்துவச்சிகிச்சைக் கோளாறுகளைப் பார்க்கிறோம். ஆனால் என்ன செய்வது சார்? அந்த மருத்துவ சிகிச்சை தானே மிகப்பிரபலமாக இருக்கிறது. நவீன சோதனைச்சாலைகளின் துல்லியமான முடிவுகள் கிடைக்கின்றன. உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்ய முடிகிறது. அவசரச்சிகிச்சை செய்ய முடிகிறது. எல்லாவற்றையும் விட அறிவியல் பூர்வமாக இருக்கிறது. என்று பல குழப்பங்கள் நமக்கு வருகிறது.

ஆங்கில மருத்துவத்துக்கென்று உள்ள தத்துவம் என்ன? ஏற்றத் தாழ்வு மிக்க இன்றைய சமூகத்தில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு தேர்தலின் போதும் வறுமையை ஒழிப்போம் என்றே வாக்குறுதிகள் தருகிறார்கள். ஆனால் சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து வறுமை ஒழியவில்லை. ஒழியவில்லை என்பது மட்டுமல்ல அதிகமாகிக் கொண்டே போகிறது. வறுமைக்கான காரணம் என்ன என்று தெரிந்திருந்தாலும் தெரியாத மாதிரி இலவசங்களை அள்ளித் தெளிக்கிறார்கள். இந்த இலவசங்களால் வறுமை ஒழியாது என்று ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? செல்வம் ஒரு சிலரிடம் சேர்வதற்கானக் காரணம் என்ன? அந்தக்காரணத்தின் வேர் மூலமான தனியுடைமையைக் களைந்து செலவத்தை சமூகமயமாக்கினால் இந்த ஏழ்மையை ஒழித்து விட முடியும். ஆனால் முதலாளிகளுக்குச் சார்பான இன்னும் சொல்லப்போனால் முதலாளிகளால் நடத்தப்படுகிற இந்த அரசாங்கங்கள் காரணங்களை விட்டு விட்டு அதன் விளைவுகளான வேலையின்மை, வேலை இழப்பு, வறுமை இவற்றை ஒழித்து விடப் போவதாக முழக்கமிட்டுக் கொண்டே இருப்பது எத்தனை மோசடியோ அத்தனை மோசடியை ஆங்கில மருத்துவம் நோயாளிகளுக்குச் செய்கிறது.

மழையில் நனைகிறீர்கள். வீட்டுக்குப் போனதும் முதலில் தும்மல் வருகிறது. மூக்கிலிருந்து நீர் ஒழுகுகிறது. உடல் சூடு அதிகரித்து காய்ச்சல் வருகிறது. மருத்துவரிடம் போகிறோம். அவர் அனால்ஜசிக், ஆண்டி பயொடிக்ஸ், இருமல் இருந்தால் காஃப் சிரப் எழுதிக் கொடுக்கிறார். தும்மல், இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு அவர் மருந்துகள் கொடுக்கிறார். ஆனால் இவை உண்மையில் நோய்களா? நோயின் அறிகுறிகளா? அல்லது நோயின் விளைவுகளா? ஆனால் இந்த விளைவுகளுக்கான காரணம் என்ன? திடீரென்று தானாக எந்த முகாந்திரமுமின்றி தும்மலும் காய்ச்சலும் வருமா? ஆக தும்மல், இருமல், காய்ச்சலுக்கான காரணம் மழையில் நனைந்ததினால் உடலில் ஏற்பட்ட ஒவ்வாமை. இந்த மழை ஒவ்வாமை தான் நோய். மற்றபடி தும்மல் இருமல் காய்ச்சல் எல்லாம் விளைவுகள். ஆங்கில மருத்துவம் விளைவுகளை மட்டுமே பார்க்கிறது. விளைவுகளை மட்டுமே சோதனைச்சாலைக் கருவிகளால் அளக்கிறது. விளைவுகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்கிறது. அதையும் சரியாகச் செய்கிறதா என்றால் அதுவும் இல்லை.

கொசுக்களை ஒழித்து விட்டால் கொசுக்களினால் பரவும் நோய்கள் ஒழிந்து விடும். டெங்குவோ, மலேரியாவோ, சிக்கன்குனியாவோ விளைவுகள் தானே. காரணம் எது? நமது அரசாங்கங்கள் என்ன செய்கின்றன? கொசுக்களை ஒழிப்பதற்கான எந்தத் திட்டமும் போடாமல் அதன் விளைவுகளைக் கட்டுப்படுத்தப் போராடிக் கொண்டிருக்கின்றன. இதனால் கொசு விரட்டிக் கம்பெனிகளும், கொசுக்கொல்லிக் கம்பெனிகளும் பெருகி விஷத்தன்மையுள்ள வேதியல் பொருட்களின் கலவையினால் அட்வான்ஸ்டு.. அட்வான்ஸ்டாக கொசுவைத் தேடிப்பிடித்து கொல்லும் விளம்பரங்களின் மூலம் புதிய சுவாசநோய்களை உருவாக்கி வருவது வேறுகதை. ஆக இது தான் ஆங்கிலமருத்துவத்தின் தத்துவ வறுமை. நோய் நாடி, நோய் முதல் நாடி நோக்காமல் நோயின் விளைவுகளை மட்டும் நோக்கி மருந்துகளைக் கொடுக்கும் அல்லது அந்த நோய் விளைவுகளுக்கு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் செயல்பாட்டினால் முழு மனித நலத்தை அதனால் ஒரு போதும் மீட்க முடியாது.

அதே போலச் சோதனைச்சாலை முடிவுகள். அதுவும் நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் அதனால் கண்டுபிடிக்கவும் முடியாது. ஏற்கனவே சொல்லியிருந்ததைப் போல தனித்துவமிக்க மனிதனை எந்த காமன் டினாமினேட்டராலும் வகுத்து விடை சொல்ல முடியாது. ஆனால் சோதனைச்சாலையோ, மருத்துவ உபகரணங்களோ அதைத்தான் செய்கின்றன. அதாவது நாடித்துடிப்பு எழுபத்தியிரண்டு, ரத்த அழுத்தம் 120/80, சர்க்கரை அளவு 80/120 என்று பொதுமைப்படுத்துகின்றன.அதிலும் வித்தியாசங்கள் வேறு. ஒவ்வொரு மருத்துவரும் ஒரு மார்ஜின் வைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு சோதனைச்சாலை முடிவுகளும் ஒவ்வொரு மாதிரி, ஒவ்வொரு மருத்துவ உபகரணங்களும் முன்னப்பின்ன, என்று எந்த தர்க்க நியாயமும் இல்லாத முடிவுகளை நவீனமாக நினைத்து அதன் அடிப்படையில் மருந்துகளைக் கொடுப்பதும் அதன் தத்துவ வறுமையைக் காட்டுகிறது.

மனித உடலியக்கத்தை ஒருங்கிணைந்த இயங்கியல் பூர்வமான இயக்கமாகக் கருதாமல் அதைச் சடப்பொருள் போலக் கருதி அறுவைச் சிகிச்சைகளை எந்தத் தார்மீக நெறிமுறையுமின்றி பயன்படுத்துவது. இதய அறுவைச்சிகிச்சை, பிரசவம், டான்சில், தைராய்டு, மூலம், கர்ப்பப்பை, சிறுநீரகக்கல், பித்தப்பைக் கல், குடல்புண், என்று சகலத்தையும் அறுத்து எறிந்து விட்டு தாங்கள் நோயைக் குணப்படுத்திவிட்டதாக பெருமைப் பட்டுக்கொள்கிறது ஆங்கில மருத்துவ முறை.

மொத்தத்தில் எந்த அறநெறிமுறையுமின்றி நோயாளரின் உயிரைப் பகடைக்காயாக்கி பயமுறுத்தி, மிரட்டி, உயிர்ப்பயத்தை உருவாக்கி, வழிப்பறி செய்து வாழ்கிற ஆங்கில மருத்துவம் அப்படியே முதலாளித்துவ தத்துவத்தின் வறுமையைச் சுவீகரித்துள்ளது. மனிதசமூக சாரம் இல்லாத, மானுடமயமில்லாத எந்த மருத்துவ முறையையும் நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அதுவும் அதன் அடிப்படைத் தத்துவத்திலேயே கோளாறு உள்ள ஆங்கில மருத்துவ முறை குறித்து மிகுந்த எச்சரிக்கை வேண்டும்.

நலம்….காக்க…தொடர்வோம்

Monday 12 November 2012

மருத்துவத்தின் தத்துவம்

 

மனித நலம் காக்கும் ஹோமியோபதி- 6

உதயசங்கர்Medicines-are-obtained-from-animals

 

மருத்துவம் என்பது எல்லா உயிர்களின் உள்ளுணர்வின் ஞாபக அடுக்குகளில் உறைந்துள்ள செயல்பாடு தான். நாய், பூனை, போன்ற மிருகங்களைக் கவனித்துப்பார்த்தால் தெரியும். தனக்கு உடல்நிலை சரியில்லையென்றால் உணவெடுக்காது. அதோடு நாய் அருகம்புல்லைக் கடித்துத் தின்னும். சிறிது நேரத்திலேயே வயிற்றில் செரிக்காமல் தங்கி விட்ட விஷப்பொருளை கக்கி விடும். நாய்க்கு எப்படி அருகம்புல் தெரியும்? அதன் உள்ளுணர்வில் பதியப்பட்டுள்ள மருத்துவக்குறிப்பு ஞாபகத்தின் மேலாக அலையடித்து அதற்கு வழிகாட்டுகிறது. மனிதன் சமூகவயமாகும் போது கொஞ்சம் கொஞ்சமாக தன் உள்ளுணர்வின் பதிவுகளை அழித்து விட்டான். வேலைப்பிரிவினைகள் உருவாகும் போது மருத்துவம், மந்திரம், சடங்குகளோடு இணைந்து விட்டது. மருத்துவம் மிக உன்னதமான சேவையாகக் கருதப்பட்டது. மருத்துவத்துக்கு ஈடாகப் பொருள் பெறுவதே பாவம் என்று நம்பிய காலம் ஒன்றிருந்தது. மருத்துவர் என்று ஒரு சாதியே உருவானது, ஆனால் எல்லா நோய்களுக்கும் மருத்துவர்களைத் தேடிப்போவதில்லை. பெரும்பாலும் கை வைத்தியமாக வீடுகளில் சாதாரண நோய்களைக் குணமாக்கி விடுவார்கள். காய்ச்சல், சளி, தலைவலி, என்று அடிக்கடி வரக்கூடிய நோய்களுக்கு, உணவுப்பத்தியம், பச்சிலைச்சாறு, கஷாயம், சூரணம், என்று கொடுத்துக் குணப்படுத்தி விடுவார்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்று இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலங்கள் இருக்கத்தான் செய்தது. சித்தர்களின் தாக்கம் எப்படி நம்முடைய வாழ்விலும் உணவு முறைகளிலும் இருக்கிறது என்பது தனியாக ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று.

ஆனால் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆங்கில மருத்துவம் தவிர வேறு மருத்துவம் இருக்கிறதா என்று கூடத் தெரியாது. பலருக்கு ஆங்கில மருத்துவம் தவிர மற்ற மருத்துவமுறைகள் எல்லாம் நாட்டு வைத்தியம் தான். ஆங்கிலவைத்தியம் மட்டும் தான் நவீன மருத்துவம். மற்றதெல்லாம் கண்ட்ரி மெடிசின். நோயுற்ற மனிதனை நம்பாமல் சோதனைச்சாலை முடிவுகளின் அடிப்படையிலே மருத்துவம் செய்யும் ஆங்கிலமருத்துவம் நவீன மருத்துவம் என்று பெயர் பெற்றிருக்கிறது. என்ன சொல்ல? அதைப் பற்றி வேறொரு கட்டுரையில் பேசுவோம்.

எந்த மருத்துவமுறையாக இருந்தாலும் நமது உயிரையும், உடலையும் தன்னிச்சையாக கையாளுவதற்கு உரிமை கிடையாது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள், பற்றி அறிந்து கொள்ள நமக்கு முழு உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால் நமக்குத் தரப்படும் மருந்துகள் அதன் விளைவுகள், பக்கவிளைவுகள், எல்லாவற்றைப் பற்றியும் சொல்லுவதற்குக் கடமைப்பட்டவர்கள் மருத்துவர்கள். எந்த மருத்துவரும் கடவுள் அல்ல. எல்லாத்துறைகளைப் போல மருத்துவத்துறையை அவர் படித்திருக்கிறார். அவ்வளவு தான். அதே போல எந்த மருத்துவமும் இயற்கையின் விதிகளுக்கு மாறாக நமது உடலில் செயல்பட முடியாது.

தத்துவம் என்றால் என்ன? மிக எளிமையாகச் சொல்வதென்றால் வாழ்க்கை பற்றிய விளக்கம். கண்ணோட்டம். உதாரணத்துக்கு இந்த வாழ்க்கையில் நாம் பட்டுக் கொண்டிருக்கும் கஷ்டநஷ்டங்களுக்கு நம்முடைய தலைவிதி என்று பெரும்பாலானோர்கள் நினைக்கிறார்களே அது ஒரு தத்துவவெளிப்பாடு. இப்படி வாழ்வின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு தத்துவநோக்கு பின்னிப் பிணைந்துள்ளது. நம்முடைய உணவுப்பழக்கம், உடை, இருப்பிடம், என்று எல்லாம் மாறியதற்குப் பின்னால் ஒரு தத்துவம் இருக்கிறது. அந்தத் தத்துவமே அந்த அரசு நிர்வாகத்தை நிர்மாணிக்கிறது. அதைச் செயல்படுத்துகிறது. தத்துவத்தின் பார்வையைப் பொறுத்தே அந்தத் தத்துவம் யாருக்கானது? அதன் நோக்கம் என்ன? என்று தெரிந்து கொள்ள முடியும். முதலாளித்துவ தத்துவம் முதலாளிகளுக்குச் சார்பான அரசியல், சட்டம், நீதி, கல்வி, இவற்றைத் தான் செயல்படுத்தும். போலியான ஜனநாயக நடைமுறைகள் மூலம் எல்லோரையும் ஏமாற்றும். ஆனால் சாமானியர்கள் இந்த முதலாளித்துவத்தின் அசுர நிதிமூலதனப் பசிக்கு இரையாவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. ஆனால் எல்லாத்தத்துவங்களும் தங்கள் கருவுக்குள்ளேயே அதற்கு மாற்றான தத்துவத்தின் விதைகளைக் கொண்டிருக்கும். எல்லாவற்றிலும் இருப்பதைப் போல மருத்துவத்திலும் ஒரு தத்துவப்பார்வை இருக்கிறது. அது தான் அந்த மருத்துவ முறையைத் தீர்மானிக்கிறது.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவமுறைகள் நிலப்பிரபுத்துவத் தத்துவப்பார்வை கொண்டவை என்றால் ஆங்கில மருத்துவமுறை முதலாளித்துவ தத்துவப்பார்வை கொண்டது. நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் மருத்துவம் புனிதமானதாகக் கருதப்பட்டது. அது மந்திரத்தன்மை கொண்டதாகவும், ரகசியமாய் செய்ய வேண்டியதாகவும் கருதப்பட்டது. அந்த மருத்துவ ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அப்படி பகிர்ந்து கொண்டால் அது பலிக்காது என்றும் நம்பப் பட்டது. மருத்துவம் நிலப்பிரபுத்துவத்தின் உற்பத்தி உறவுகளைப் போல மதிப்பு மிக்கதாக இருந்தது. மனிதர்களின் தனித்துவத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தது.

ஆங்கில மருத்துவமுறை முதலாளித்துவ தத்துவப்பார்வை கொண்டது. அதற்குச் சந்தை தான் முக்கியம். எல்லாவற்றையும் விற்கவோ, வாங்கவோ முதலாளித்துவம் முயலும். மைதாஸின் மனநிலை கொண்ட அதன் லாபவெறிக்கு எதுவும் பொருட்டல்ல. அதன் உற்பத்தி உறவுகள் சந்தையோடு தொடர்புடையது என்பதால் அது எதையும் மதிக்காது. எந்த விழுமியங்களையும் ஏற்காது. அப்படியே தன்னுடைய சந்தை தேவைகளுக்கேற்ப மதிப்பீடுகளை மாற்றிக் கொண்டேயிருக்கும். அதற்கு எல்லாமே எல்லாருமே பண்டங்கள் தான். எப்படி மனிதர்களுக்காக பொருட்களையும் பொருட்களுக்காக மனிதர்களையும் உருவாக்குகிறதோ அதே போல நோய்களுக்காக மருந்துகளையும் மருந்துகளுக்காக நோய்களையும் உற்பத்தி செய்யும்.

உதாரணத்துக்கு, இப்போது பிரசவம் என்றாலே அது சிசேரியன் தான் என்றாகி விட்டது. இது திட்டமிட்டு பணம் பறிப்பதற்கான செயலாக மாறி விட்டது. நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களில் பாதிக்குப் பாதிப்பேருக்கு கர்ப்பப்பையை எடுத்து தூரப் போட்டாயிற்று. சமப்ந்தமில்லாமல் கூட்டம் கூட்டமாக தடுப்பூசிகளைப் போடச் செய்வது, இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். மனிதன் ஒரு முழுமையான இயங்கியல் உயிரினம் என்பதை மறுத்து அவனை ஒரு இயந்திரமாகப் பாவித்து எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்து வேலை பார்க்கிறது. எதிர்காலத்தில் ஒரு சமூகத்தையே ஊனமுள்ளதாக்குகிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. சிலர் மட்டும் செல்வம் கொழிக்க பெரும்பான்மை மக்கள் தங்கள் உயிர், பொருள், ஆவி, அனைத்தையும் இழக்கின்றனர். இது அதன் தத்துவப்பார்வையின் அடிப்படையில் உருவான நடைமுறை.

ஆனால் ஹோமியோபதியின் தத்துவப்பார்வை சமூகவயமானது. தெளிவான தத்துவநோக்கம் கொண்டது. எந்த மர்மங்களுமற்றது. இயற்கையின் விதிகளுக்கேற்ப செயல்படுவது, எளிமையானது, இனிமையானது, முழுமையான நலத்தை மீட்டுத் தருவது. பக்கவிளைவுகளற்றது. எனவே தான் ஹோமியோபதி மருத்துவம் புரட்சிகரமான மக்கள் மருத்துவமாக விளங்குகிறது. அது எப்படி என்று பின்னால் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

நலம் காக்க…தொடர்வோம்

Sunday 11 November 2012

தலைமைச் செயலாளர்

 

மனித நலம் காக்கும் ஹோமியோபதி –5medicine

உதயசங்கர்

 

நம்முடைய உயிராற்றல் என்ற தலைமைச் செயலாளர் அல்லது மேற்பார்வையாளர் இருபத்திநான்கு மணிநேரமும் உடலைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். உடலின் மாறுபாடுகளுக்கேற்ப அவ்வப்போது உத்திரவுகளைப் பிறப்பிக்கிறார். உடலிலுள்ள மற்ற உறுப்புகளின் சொற்களைக் கேட்கிறார். அவற்றின் நலம் அல்லது துயரைக் கவனித்து அதற்கேற்ப தன் உத்திரவுகளைப் பிறப்பிக்கிறார். அதே போல உடலின் உறுப்புகள் தரும் சமிக்ஞைகளுக்குக் கட்டுப்பட்டு தன் உத்திரவுகளை மாற்றவும் செய்கிறார். கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் சமிக்ஞைகள், உத்திரவுகள், எதிர்வினைகள், செயல்கள் என்று மிகுந்த ஜனநாயக உணர்வுடன் நமது உயிராற்றலும் உடலும் இயங்குகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர நடவடிக்கைகள் அனைத்தும் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஜனநாயக ( CENTRALISED DEMOCRACY ) முறையிலேயே நடக்கும். தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு நடவடிக்கைகளை மேலிருந்து கீழாகவும் கீழிலிருந்து மேலாகவும் ஜனநாயகபூர்வமான கருத்தொற்றுமை மூலம் தீர்மானிக்கிறார்கள். இது இயற்கையோடு இயைந்த நடைமுறை.

உயிராற்றலை மையம் என்று கொண்டால் அதற்கு அடுத்த வட்டத்தில் மனமும், அதற்கடுத்த வட்டத்தில் உடலின் முக்கியமான ஜீவாதாரமான உறுப்புகளும், அதற்கடுத்த வட்டத்தில் அவ்வளவாக முக்கியமில்லாத உறுப்புகளும் அதற்கடுத்த கடைசி வெளிவட்டத்தில் தோல் போன்ற மிகவும் முக்கியத்துவம் குறைந்த உறுப்புகளும் வரிசைப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதனால் உயிராற்றலில் ஏற்படும் பாதிப்பு உயிரியக்கத்தை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாதென்பதால் அதன் அதிர்வுகளை உயிராற்றல் மையத்திற்கு வெகு தூரத்திலுள்ள உயிரியக்கநோக்கில் மிகவும் முக்கியத்துமில்லாத தோலுக்குக் கடத்துகிறது.

சரி உயிராற்றல் ஏன் பாதிப்புக்குள்ளாகிறது?. நமது சீரில்லாத ஆரோக்கியக்கேடான, பல்வேறு நடவடிக்கைகளாலும், முறையற்ற, தீமையான மருந்துகளாலும், ஏற்றத்தாழ்வுமிக்க சமூகக் காரணிகளாலும், ( உணவு, நீர், காற்று, சுற்றுச்சூழல், குடும்பம், சமூகம், அரசியல் ) பாதிப்புக்குள்ளாகிறது. இந்தப் பாதிப்பை அப்படியே உயிராற்றல் வைத்துக் கொள்வதில்லை. ஏனெனில் அப்படியே வைத்துக் கொண்டிருந்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும். அதனால் உயிராற்றலின் கடைசி வட்டத்திலுள்ள தோலுக்கு அந்தப் பாதிப்பைத் தள்ளி விடுகிறது. தோலில் சில பாதிப்புகள் ( கொப்புளங்கள், பருக்கள், கட்டிகள், நிறமாற்றம், அரிப்பு, ஊறல், காந்தல் ) ஏற்படுகின்றன. இவை உயிராற்றல் வெளித்தள்ளும் பாதிப்புகள் என்று நமக்குத் தெரியாததனால் நாம் தோல்நோய் நிபுணரைச் சென்றுச் சந்திக்கிறோம். அவர் கொடுக்கும் மருந்து, ஆயிண்மெண்ட், களிம்பு, என்று பல்வேறு வேதியல் கலவைகளைத் தடவி உயிராற்றல் வெளித்தள்ளிய பாதிப்பை, மீண்டும் உள்ளே தள்ளுகிறோம்.

சில காலம் கழித்து மூட்டுகளில் வலியோ, ஆஸ்த்மா துயரோ வருகிறது. இருக்கவே இருக்கிறார்கள் ஸ்பெஷலிஸ்டுகள். ஆர்த்தோ அல்லது நுரையீரல் நிபுணர்கள். அவர்களைச் சென்று பார்க்கிறோம். அவர்களும் நமக்கு வந்த தோல் வியாதியைப் பற்றிக் கவலைப்படாமல் ( ஏனென்றால் அது அவர்கள் வேலையில்லையே அதற்குத் தான் தோல் நோய் நிபுணர் இருக்கிறாரே ) இப்போதுள்ள ஆஸ்த்மாவுக்கோ, மூட்டு வலிக்கோ, மருந்துகள் தருகிறார். அதைச் சாப்பிட்ட சிறிது காலத்துக்குப் பிறகு இதயத்தில் வலி வருகிறது. இப்போது இதயநோய் நிபுணரைப் பார்க்கிறோம். அவர் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து நம்மை எப்படியோ உயிரோடு (!) விட்டு விடுகிறார். யோசித்துப்பாருங்கள். உயிராற்றல் வெளித்தள்ளிய பாதிப்பை தவறான சிகிச்சைமுறையினால் உயிருக்கே ஆபத்தாக்கிக் கொண்டோம். அதில் இன்னொரு வேடிக்கை இப்படிப்பட்ட அறிவியல்பூர்வமற்ற மருத்துவமுறையை நாமெல்லோரும் ரெம்ப அறிவியல்பூர்வமான மருத்துவமுறையென்று கொண்டாடுகிறோம்.

நமது நாட்டில் உடல்நலமின்மையால் இறப்பவர்களில் ஐம்பது சதவீதமானவர்கள் தவறான மருத்துவச் சிகிச்சையினால் இறப்பவர்கள் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா இல்லையா? இதற்கு முக்கியமான காரணம் நம்முடைய அறியாமை. மருத்துவம் நமது பிறப்புரிமை என்ற ஞானம் இல்லாததால் அதை யாரோ விற்பன்னர்கள் சமாச்சாரமாக நினைத்து, அவர்களை கடவுளாக வழிபட்டு அவர்கள் கையில் நமது உடலையும் உயிரையும் ஒப்படைத்து விட்டு கையறு நிலையில் காசையும் தொலைத்து விட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறோமே.

ஆதியிலிருந்தே இந்த மண்ணில் இருந்து வரும் மருத்துவ முறைகளை மாற்று மருத்துவமுறைகள் என்றும், பாதியில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட ஏகாதிபத்திய ஆங்கில மருத்துவத்தை முதல் மருத்துவமாகவும் போற்றுகிறோமே. விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் ஆங்கிலேய மோகம் இன்னும் மறையவில்லை. அதற்குள் மறுபடியும் நம்மை அடிமை கொள்ள அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்?

நலம் காக்க…..தொடர்வோம்.

Saturday 10 November 2012

நோயின் மூலம் எது?

 

மனிதநலம் காக்கும் ஹோமியோபதி-4

உதயசங்கர்joisel-2

 

இப்போது டெங்கு காய்ச்சல் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னால் பன்றிக்காய்ச்சல், அதற்கு முன்னால் எலிக்காய்ச்சல், கோழிக்காய்ச்சல், ஒரு நாலைந்து வருடங்களுக்கு முன்னால் சிக்கன்குனியா காய்ச்சல், மழை பெய்து விட்டால் வைரஸ் காய்ச்சல், என்று புதிதாய் காய்ச்சல்கள், உருவாகியிருக்கின்றன. இந்த மாதிரியான எல்லாநோய்களுக்கும் மூலகாரணம் என்ன? பாக்டீரியாக்கள், வைரஸ்கள், கொசுக்கள், ஈக்கள், கோழிகள், பன்றிகள், எலிகள் என்று எல்லாஉயிர்களையும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? நமது உடல் தான் நோய்களுக்கு மூலகாரணம் என்று சொன்னால் நம்பமுடிகிறதா! எப்படி எப்படி என்று கேட்கத் தூண்டுகிறதல்லவா!

ரெம்ப சிம்பிள். பத்துபேர் மழையில் நனைந்தால் யாரோ ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. நான்கு பேர் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டால் யாரோ ஒருவருக்கு வயிற்றாலை போகிறது. நமது இந்தியத் திருநாட்டில் சாக்கடை அருகிலும் வாழ்கிறார்கள், பிளாட்பாரத்திலும் வாழ்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் எல்லாநோய்களும் வருவதில்லை. அவர்களையெல்லாம் கொசுக்கள் கடிப்பதில்லையா? நம்முடைய சுற்றுச்சூழலைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உலகத்திலுள்ள அத்தனை வைரஸ்களும், பாக்டீரியாக்களும் காற்றில், நீரில், சாக்கடையில், மாசுவில், தூசுவில், இருக்கின்றன. அத்தனையிலிருந்தும் தப்பித்து நாம் ஆரோக்கியத்தோடு இருக்கிறோம் என்றால் அதற்கு நம் உடலே காரணம் இல்லையா?

எந்த உடல் ஆரோக்கியத்துக்குக் காரணமோ, அதே உடல் தான் நோய்க்கும் காரணமாக இருக்க முடியும்!.

இங்கு உடல் என்று சொல்வது மனதையும் சேர்த்துத் தான் என்று புரிந்து கொள்வோம். பிறந்ததிலிருந்து உடல் தானாகவே உயிர் வாழ்வதற்கான அடிப்படைச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறது. தன்னுடைய செயல்களைச் செய்வதற்கு நம்முடைய அனுமதியைக் கேட்பதில்லை. அதாவது இதயம் துடிப்பதற்கோ, நுரையீரல் சுருங்கி விரிவதற்கோ, சிறுநீரகங்கள் ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கோ கல்லீரல் ரத்தஅணுக்களை உற்பத்தி செய்வதற்கோ, நிணநீர்சுரப்பிகள் பாதுகாப்பு படைவீரர்களை உருவாக்குவதற்கோ, உணர்ச்சிகளைக் கடத்தும் நரம்புமண்டலம் தன் மின்காந்த அலைகளை உருவாக்குவதற்கோ, நம்முடைய மேலான அநுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? எல்லாம் தானாக ஆனால் ஒழுங்கமைதியுடன் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவர்களையெல்லாம் யாரோ மேற்பார்வை பார்க்கிறார் இல்லையா? அவருடைய ஒருங்கிணைந்த மேற்பார்வையில் தான் உடல் தன் ஆரோக்கியத்தை பேணிக் கொள்கிறது. தனக்கு எது தேவை என்று சொல்கிறது. தேவையில்லாததை நாம் செய்யும் போது எச்சரிக்கிறது. ஒரு முறையல்ல பல முறை. நாம் விடாப்பிடியாக அதைச் செய்யும் போது பலத்த குரலில் உடலின் மூலமாக நம் செவிட்டுக் காதுகளில் அலறுகிறது. இதையெல்லாம் ஒரு ஒழுங்குடன் செய்வதற்குக் கற்றுக் கொண்டுள்ளது. நாம் தான் நமது உடலைப் பற்றிய அறியாமையால் உடலைப் பாழ்படுத்துகிறோம்.

மேற்பார்வை பார்க்கிற மேற்பார்வையாளரை அல்லது தலைமைச் செயலாளரை நாம் உயிராற்றல் என்று சொல்லுவோம். இந்த உயிராற்றல் தான் நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம். உயிராற்றல் என்ற இந்த மேற்பார்வையாளர் தான் நமது உடலின் எல்லா இயக்கங்களையும் ஒருங்கிணைத்து எல்லாச்செயல்களும் செவ்வனே நடைபெற உதவுகிறார். இந்த உயிராற்றலில் எப்போது பலவீனம் ஏற்படுகிறதோ அப்போது நோய் உடலைத் தாக்குவதற்கு ஏதுவான சூழலில் உடல் பாதுகாப்பற்று இருக்கிறது. அப்போது புறவயமாக எப்போதும் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், லொட்டு லொசுக்கெல்லாம் உடலைப் போட்டுத் தாக்குகிறது. உடல் நோய்வாய்ப் படுகிறது.

ஆக நம்முடைய உடல் நோய்வாய்ப்படுவதற்கு நம்முடைய உயிராற்றலில் ஏற்படும் பலவீனமே காரணம். இந்த பலவீனம் நமது உடலின் நோய் ஏதிர்ப்புத் திறனைக் குறைத்து விடுகிறது. நோய் ஏற்புத்திறன் அதிகரித்து விடுகிறது. இதனால் உடல் எளிதில் மாற்றங்கள் தோன்றுகிறது. நாம் நோயால் பாதிக்கப்படுகிறோம். உயிராற்றல் முழுச் சக்தியோடு இருக்கும் வரை நாம் பாக்டீரியா, வைரஸ், எலி, கோழி, பன்றி, என்று எதைக்கண்டும் அஞ்ச வேண்டியதில்லை.

நலம் காக்க……..தொடர்வோம்.

Friday 9 November 2012

கேள்விகளில்லா உலகம்

குழந்தைகளின் அற்புத உலகில் little-boy-reading

 

உதயசங்கர்

 

 

ஏன்? எதற்கு? எப்படி? இந்தக் கேள்விகள் தான் மனிதகுலத்தின் அறிவு வளர்ச்சிக்கு ஆதாரம். குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய வரலாற்றில் உழைப்புக்கு பெரும் பாத்திரம் இருக்கிறது. நான்கு கால்களால் நடந்து கொண்டிருந்த மனிதக்குரங்குகள் எப்போது தன் கைகளை உயர்த்தி விரல்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததோ அப்போதிருந்து மூளையின் வளர்ச்சியில் ஒரு பெரும்பாய்ச்சல் நிகழ்ந்து விட்டது. இதெல்லாம் ஒன்றிரண்டு வரிகளில் சொல்லி விடுவதைப் போல நிகழவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சின்னச் சின்ன மாற்றங்களினால் உருவாகியது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். சின்னச் சின்னதான அந்த ஒவ்வொரு மாற்றத்துக்கும் பின்னால் ஏன்? எதற்கு? எப்படி? இருக்கிறது. இந்தக் கேள்விகள் தான் இன்று மனிதகுலம் அறிவியல், இலக்கியம், கலை, தத்துவம், அரசியல், தொழில்நுட்பம், என்று சகலவிதமான துறைகளிலும் பிரம்மாண்டமான வளர்ச்சியடைய அடிப்படைக் காரணம். ஆனால் எல்லாக் காலங்களிலும் ஆளுகின்ற வர்க்கத்துக்கு எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் பிடிக்காத மூன்று வார்த்தைகள் ஏன்? எதற்கு? எப்படி?.

ஆதிப்பொதுவுடைமைச் சமூகம் துவங்கி இன்றைய முதலாளித்துவகாலம் வரை சமூக மாற்றங்களைத் தூண்டியதும், மாற்றங்களைக் கொண்டு வந்ததும் இந்தக் கேள்விகள் தான். எனவே தான் அடிப்படை மாற்றத்தை எப்போதும் விரும்பாத ஆளும் வர்க்கம் இந்தக் கேள்விகளையும் விரும்புவதில்லை. எனவே பெரும்பான்மை மக்கள் இந்தக் கேள்விகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். இந்தக் கேள்விகள் அவர்கள் மனதில் தோன்றாதபடி மதம், கடவுள்கொள்கை, விதி, ஜோதிடம், என்று மயக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். மக்கள் மனதை வசப்படுத்துவதற்காக எல்லாவித தந்திரங்களையும் சாம, தான, தண்ட, பேதங்களையும் பயன்படுத்தத் தயங்கமாட்டார்கள். அதாவது சட்டம், ராணுவம், போலீஸ், என்று அரசின் வன்முறை அமைப்புகளுக்கு ஈடாக கல்வி, மதம், நீதி, ஊடகங்கள், ( பத்திரிகை, சினிமா, தொலைக்காட்சி ) சூட்சுமமாக மக்கள் மனதை வசப்படுத்தும் கருவிகளை ஆளும் வர்க்கம் பயன்படுத்துகிறது. இதில் கற்பிக்கும் முறை இளம் வயதிலேயே கேள்வி கேட்கும் தீராத ஆவலை முளையிலேயே கிள்ளியெறிகிறது.

குழந்தைகள் வளர, வளர, அவர்கள் இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அவர்களுடைய புரிகிற இந்த முயற்சி தான் கேள்விகள். அநேகமாக மூன்று வயதிலிருந்தே குழந்தைகள் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆமாம். முதலில் தாயிடம், தந்தையிடம், பின்னர் எல்லோரிடமும் கேள்விகள் கேள்விகள் லட்சக்கணக்கான கேள்விகளைக் கேட்கத் துவங்குகிறார்கள். அது என்ன? இது என்ன? சூரியன்னா என்ன? நட்சத்திரம் ஏன் ராத்திரி வருது? சாமி யார்? ஏன் கும்பிடணும்? எப்படி மூச்சா போகுது? ஏன் சாப்பிடணும்? இப்படி கேள்விகளால் திணறடிக்கிறார்கள் குழந்தைகள். இவைகள் எல்லாம் அவர்கள் திட்டமிட்டு கேட்பதில்லை. இயற்கையின் உந்துதலால் உள்ளுணர்வின் வெளிப்பாடாக இந்தக் கேள்விகள் அவர்களிடமிருந்து ஊற்றெடுக்கின்றன. கேள்வி கேட்பதையே மறந்து போய் விட்ட மரத்துப் போன பெரியவர்களின் மூளை இத்தகைய கேள்விகளைக் கண்டு திகைத்து விடுகிறது. முதலில் நம்முடைய குழந்தை இப்படிக் கேள்வி கேட்கிறானே என்று ஆனந்தப் படுகிறார்கள். பெரிய அறிவாளியாய் வருவான் என்று ஊரிலுள்ள எல்லோரிடமும் சொல்லி மகிழ்கிறார்கள். ஆனால் குழந்தைகளின் கேள்விகளுக்கு அவர்களுக்குச் சரியான பதில் சொல்லத் தெரியாது. இல்லையென்றால் மூடத்தனமான பதில்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் குழந்தைகளின் ஆர்வத்தை மட்டுப்படுத்துவார்கள். சிலர் குழந்தைகளை அவர்களுடைய கேள்விகளினால் சலிப்புற்று திட்டவும் செய்வார்கள். ஏனெனில் பெரியவர்களின் அறியாமையை குழந்தைகள் அறிந்து கொள்ளக் கூடாது என்று வரட்டுக் கௌரவம் தான். ஆனால் குழந்தைகள் அவர்களுடைய கேள்விகளை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள்? அதற்கு என்ன மாதிரியான பதில்களைத் தருகிறீர்கள் ? என்று உன்னிப்பாகக் கவனிக்கவும் செய்கிறார்கள். உங்கள் பதில்களை அவர்கள் உடனே புரிந்து கொண்டு விடுவார்கள் என்று அர்த்தமில்லை. ஆனால் அந்தப் பதில்களின் உள்ளார்ந்த உணர்வுகள் அவர்களைப் பாதிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

நான் என் குழந்தைகளிடம் அவர்கள் சிறு பிராயத்தில் கேட்ட கேள்விகளுக்கு முறையான விஞ்ஞானபூர்வமான விளக்கங்களைக் கொடுத்தேன். பூமி எப்படி உருவானது? உயிர்கள் எப்படி உருவானது? மனிதன் எப்படி உருவானான்? கடவுள் எப்போது , எதனால், ஏன் மனிதனால் படைக்கப்பட்டார்? என்றெல்லாம் எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அவர்களுக்கு அது புரியுமா? புரியாதா? என்றெல்லாம் யோசிக்கவில்லை. அதற்காக அவர்களை வலுக்கட்டாயமாக உட்காரவைத்துச் சொல்லவுமில்லை. அவர்கள் கேள்விகள் கேட்கும் போது அவற்றைப் பற்றியெல்லாம் சொன்னேன். அரைமணி நேரம் ஒருமணிநேர வகுப்பெல்லாம் இல்லை. ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், அவ்வளவு தான். குழந்தைகள் அடுத்த கேள்விக்குத் தாவி விடுவார்கள். அதைப்பற்றிக் கவலைப்படக்கூடாது. ஆனால் நான் சொன்ன பதில்கள், என்னுடைய நடைமுறை வாழ்க்கையெல்லாம் பார்த்து, என் குழந்தைகள் சாதிய, மத, தெய்வநம்பிக்கை இல்லாத குழந்தைகளாக வளர்ந்தார்கள்.

பல குடும்பங்களில் குழந்தைகள் கேள்விகள் கேட்கும் போதல்ல.. பேச ஆரம்பித்தவுடனேயே நர்சரியில் கொண்டு போய் விட்டு விடுவார்கள். எப்போதும் ஓட்டமும் சாட்டமும் பேச்சும் கேள்விகளுமாய் இருக்கிற குழந்தைகளை அங்கே கையில் அடிஸ்கேலுடன் அடக்கி ஒடுக்கி உட்காரவைத்து கையைக் கட்டி வாயைப் பொத்தி ஒழுங்கு படுத்தி சர்க்கஸில் மிருகங்களைப் பழக்குவதைப் போல குழந்தைகளை வசக்குகிறார்கள். அதில் இருண்டு ஒளியிழந்து போகிற குழந்தைகள் கடைசி வரை அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதில்லை. ஒரே நேரத்தில் அடி, உதை, என்ற தண்டனைகளாலும், ஆசிரியர்கள் சொல்லித் தருவதைத் திரும்பச் சொல்கிற கிளிப்பிள்ளைகளாகவும் பள்ளி என்றாலே பயந்து நடுங்குகிற அளவுக்கு நம்முடைய கல்வி முறை அமைந்துள்ளது. ஒருவழிப்பாதையாகவே கற்பிக்கும்முறை இருக்கிறது. அதில் எப்போதும் ஆசிரியர் தான் சின்னஞ்சிறு குழந்தைகளின் மீது எல்லாவிதமான அதிகாரங்களையும் செலுத்துகிற சர்வாதிகாரியாக விளங்குகிறார். அந்த சர்வாதிகாரியிடமிருந்து தப்பிப்பதற்கு குழந்தைகளுக்கு மார்க்கமேயில்லை. ஏனென்றால் அவர் தான் மார்க்கும் போடுபவராக இருக்கிறார். கல்வி மனப்பாடக்கல்வியாக, பரீட்சைகள், மதிப்பெண்கள் வழியாக ஒரு குழந்தையின் திறமையைத் தீர்மானிக்கிற கல்வியாக இருக்கிறது. இப்போது சில பாரதூரமான மாற்றங்கள் வந்திருக்கின்றன என்ற போதிலும் இன்னும் முழுமையான ஜனநாயகபூர்வ இனிமையான சமத்துவக்கல்விமுறை மலரவில்லை. அதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம். தங்கள் குழந்தை பெரிய அறிவாளியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காக பெரிய பள்ளிக்கூடத்தில் பெரிய சிபாரிசுடன், நிறையப் பணம் கட்டி சேர்க்கிறார்கள். அந்தப் பள்ளிக்கூடங்கள் குழந்தைகளை வசக்குகிற கொடுஞ்சித்திரவதைக்கூடங்களாகின்றன. பெற்றோர்களுக்கு நம்முடைய கல்விமுறை குறித்த எந்த சிந்தனையும் இல்லை. அது ஏதோ அரசாங்கத்தின் வேலை என்றோ, அல்லது கல்வியாளர்களின் வேலை என்றோ நினைத்து கை கழுவி விடுகிறார்கள். உண்மையில் பெற்றோர்களின் செயலூக்கமான பங்கேற்பு கற்பிக்கும்முறை குறித்து இருந்தால் நிலைமை வெகு தூரத்துக்கு முன்னேறியிருக்கும். ஆனால் இன்னமும் பள்ளிக்கூடங்கள் அதிகார மையமாகவே செயல்படுகின்றன. வியாபாரநோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, அதிகாரமையமாக பள்ளிக்கூடங்கள் மாறி வருவதற்கு அரசின் ஆதரவும் ஒரு காரணம். குடிமக்களின் அடிப்படை உரிமையான கல்வியை அரசு கை விட்டு விடுவதற்கான முயற்சிகளே இத்தகைய தனியார்மயம்.

குழந்தைகள் கேள்விகள் கேட்பதை ஆசிரியர்கள் விரும்புவதில்லை. அவர்கள் சொல்லிக் கொடுப்பதை, அல்லது நோட்ஸில் உள்ளதை அப்படியே சொல்பவன் அல்லது எழுதுபவன் சிறந்த மாணவன்/ மாணவி. ஆசிரியர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. பெற்றோர்கள் பயப்படுவார்கள். குழந்தைகளை டார்ச்சர் செய்வார்களோ என்று பயந்து எதுவும் பேச மாட்டார்கள். அதை மீறி ஏதாவது புகார் செய்து நடவடிக்கை எடுத்து விட்டால் அவர்களுக்குச் சங்கம் இருக்கிறது. ஆனால் பெற்றோர்களுக்குச் சங்கம் இல்லை. முக்கியமாகக் குழந்தைகளுக்குச் சங்கம் இல்லை. தாங்கள் பேரன்பும் பெரும் மரியாதையும் வைத்திருக்கிற பெற்றோர்களும் கைவிட்டு, ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் போது பாவம் குழந்தைகள் என்ன செய்வார்கள்! எல்லாக்கொடுமைகளையும் தாங்கிக் கொள்கிறார்கள். மனதளவில் பாதிக்கப் படுகிறார்கள். அந்தப் பாதிப்புடனே அவர்கள் வளர்கிறார்கள். அவர்கள் தான் எதிர்காலத் தலைமுறையென்றால் எப்படியிருக்கும்? நாம் அவர்களுக்கு என்ன கொடுத்தோமோ அதைத் தானே அவர்களும் திருப்பி இந்தச் சமூகத்துக்குக் கொடுப்பார்கள். நாம் என்னென்ன நம்முடைய குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு முறை எல்லோரும் தங்களுடைய மனதுக்குள் ஆராய்ந்து பாருங்கள்! மற்றெல்லாவற்றையும் விட முக்கியமாகக் குழந்தைகளிடமிருந்து கேள்விகளைப் பிடுங்கி விட்டோம். கேள்விகளில்லா உலகத்தில் அவர்களை ஊமைகளாக்கி விட்டோம். கேள்விகளின்றி வாழ்க்கையா?

Wednesday 7 November 2012

எது நோய் ?

மனிதநலம் காக்கும் ஹோமியோபதி- 3

உதயசங்கர்Homeopathic Medicine: Calendula officinalis, Chamomile

 

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நோய் எது ? என்று தெரிவதில்லை. லட்சக்கணக்கான ஆண்டுகளாக உருவான உயிரியக்கத்தின் பரிணாமவளர்ச்சியில் நமது உடலுக்குள் ஒரு மருத்துவர் உருவாகியிருக்கிறார். அவர் எப்போதும் அதாவது இருபத்திநாலுமணி நேரமும் நமது உடலியக்கத்தைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறார். நாம் நமது உடலுக்குச் செய்யும் நல்லது பொல்லதுகளை உற்றுக்கவனிக்கிறார். எங்கே கோளாறு ஏற்பட்டாலும் உடனே அடுத்த கணமே அப்படிக்கூடச் சொல்லமுடியாது கணத்தின் பின்னநேரத்தில் அந்த இடத்துக்கு தன் அத்தனை படைபட்டாளத்தோடு கிளம்பி விடுகிறார். உடனடியாக அந்தக் கோளாறைச் சரி செய்வதற்காக என்ன விதமான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை எடுத்து விடுகிறார். இது எதையும் நாம் சொல்லிச் செய்வதில்லை அல்லது நம்மிடம் கேட்டுச் செய்வதில்லை. இதற்காக அவர் நம்மிடம் எந்த ஃபீஸும் கேட்பதில்லை. எந்தச் சோதனைச்சாலை பரிசோதனைகளையும் செய்யச் சொலவதில்லை. ஆனால் தானாகவே நம்முடைய உடலியக்கம் இடையறாது நடப்பதற்கு அவரால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கிறார். அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் ஒன்று தான். அவர் செய்து கொண்டிருக்கும் நலமாக்கல் முயற்சிகளைத் தடுக்காதீர்கள். குழப்பாதீர்கள். வெளியிலிருந்து அந்நியக்குண்டர்களைக் ( MEDICINES ) கொண்டு வந்து தன்னுடைய நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்காதீர்கள்.

சரி. அப்படியானால் என்ன செய்ய வேண்டும் ?

முடிந்தவரை உடலின் மருத்துவர் செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்யுங்கள். ஒத்துழைப்பு தாருங்கள். அதற்கு முதலாவதாக எது நோய் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். எது நம்முடைய உடல் நோயிலிருந்து நலமாவதற்கு செய்யும் முயற்சிகள் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

நாம் நம்முடைய சமூகப்பழக்கவழக்கம், பிழைப்பு, ஆர்வக்கோளாறு, நம் உடல் மீதுள்ள அதீதநம்பிக்கை இவற்றால் பல உடலுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்கிறோம். நாம் மனமுவந்து செய்கிற காரியங்களைச் செய்யுமுன்னால் உடலால் தடுக்க முடியாது. சிலநேரம் தடுக்க முயற்சிக்கவும் செய்யும். புகை பிடிக்கப் பழக ஆரம்பிக்கும் போது இருமல், நெஞ்செரிச்சல், சளி கட்டுதல் வரும். மதுவருந்த பழகும் போது ஒமட்டல், வாந்தி, வயிற்றாலை, உணவுப்பாதையில் காந்தல், தலைவலி, உடல்சூடு, நீர்ச்சத்து குறைவதால் உடல் உலர்தல், என்று பல வழிகளில் பேசிப்பார்க்கிறது. மன்றாடுகிறது. ஆனால் நாம் அப்படியெல்லாம் விட்டு விடுகிறவர்களா? விடாமல் பழகி உடலியக்கத்தின் ஆதாரங்களான கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல், நரம்புமண்டலம், எல்லாவற்றையும் அரசின் ஆதரவோடு பாழ்படுத்தி விடுகிறோம். இது ஒரு பக்கம் என்றால், இரவு பனிரெண்டு மணிக்கு ரோட்டோரக்கடையில் புரோட்டாச் சால்னாவை வளைத்துப் பிடிக்கிறோம். கெட்டுப்போனச் சால்னா உடலுக்குள் விஷமாக மாறி உடல் நலத்துக்கு நிரந்தரமாக தீமை செய்து விடக்கூடாதென்று உடலின் மருத்துவர் உடனடியாக நடவடிக்கையில் இறங்குகிறார். அதிகமான நீர்ச்சத்தை சிறுகுடல், பெருங்குடலுக்கு அனுப்புகிறார். கெட்டுப்போன அந்த விஷத்தை குடல் உறிஞ்சி விடுமுன்பு எச்சரிக்கை செய்கிறார். வயிற்றில் வலி ஏற்படுத்துகிறார். வயிறு கடமுடா என்று இரைகிறது. காலையிலேயே எழுப்பி விடுகிறது. நீராய் பீச்சியடிக்கிறது. வயிற்றாலை என்ற உபாதையினால் உடலின் நீர்ச்சத்து குறைகிறது. தாகம் எடுக்கிறது. உடல் சோர்வாய் இருக்கிறது. ஓய்வெடுக்கச் சொல்கிறது. மிகமிக எளிய உணவைச் சாப்பிடச் சொல்கிறது. உடலுக்கு முழுவிஷத்தையும் வெளியேற்றிய திருப்தி வரும்வரை வயிற்றாலை போகிறது. ஆக வயிற்றாலை என்பது நோயல்ல. உடல் தன்னைத் தற்காத்துக் கொள்ள எடுக்கும் முயற்சி.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? உடனே மருத்துவரைப் பார்க்கிறோம். அவர் மலச்சிக்கலை உருவாக்கும் மருந்துகளைக் கொடுக்கிறார். அதைச் சாப்பிட்டதும் வயிற்றாலை நின்று விடுகிறது. நமக்குத் திருப்தி. ஆனால் அதற்கடுத்த இரண்டு நாளைக்கு மலம் போக மாட்டேனென்கிறது. வயிறு கனமாக பசியின்றி மந்தமாக இருக்கிறது. மறுபடியும் மருத்துவரிடம் சென்று மலச்சிக்கலுக்கு மருந்து வாங்கிச் சாப்பிட்டு மலம் கழிக்கிறோம். இதற்குள் உணவு விஷத்தை வெளியேற்றுவதற்கு உடலின் மருத்துவர் செய்த அத்தனை முயற்சிகளையும் நாம் சாப்பிட்ட மருந்துகள் முறியடித்து விட விஷம் உடலில் தங்கிவிடுகிறது. சரி இரைப்பையில் போகும்போதே உடலுக்கு ஒவ்வாதது என்று தெரிந்து விட்டால் வயிற்றுத்தசைகளை முறுக்கி வாந்தியை ஏற்படுத்துகிறது. இப்படி உடல் எல்லாவழிகளிலும் நம் நலத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறது.

அடிபட்ட இடத்தில் முதலில் ரத்தக்கசிவை உறையவைக்கும் பிளேட்லெட்டுகளுக்கு கட்டளையைக் கொடுத்து உறைய வைக்கிறது. சிதைந்த செல்களைச் சுற்றி வீக்கம், வலி, இவற்றை ஏற்படுத்துகிறது. உடல் சூட்டை அதிகப்படுத்துகிறது. அதிகமான உடல் சூட்டில் வெளியிலிருந்து உடலுக்குள் அந்நிய பாக்டீரியாக்கள், வைரஸ்கள், லொட்டு லொசுக்கெல்லாம் நுழையாது. அதற்கு பொருத்தமான சீதோஷ்ணநிலையில் தான் நம் உடலில் நுழையும். உடனடியாக தன் படைவீரர்களுடன் வந்து அந்த இடத்தில் சிதைந்த செல்களை வெளியேற்ற சீழை உருவாக்கி, வெளியேற்றுகிறது. காயத்தின் தன்மையைப் பொறுத்து புதிய செல்களால் அந்தக் காயத்தை பாவு போல நெய்து மூடி விடுகிறது. இந்தக் காரியங்களைச் செய்வதற்கு நம்முடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதற்காகவே நெறிகட்டுதல், காய்ச்சல் போன்ற குறிகளை ஏற்படுத்துகிறது.

எனவே முதலில் நமக்கு எது நோய் என்று தெரிய வேண்டும். புறவயமான காரணிகளால் உணவு, காற்று, நீர், குளிர், வெப்பம், மழை, பூச்சிகள், மிருகங்கள், ஆகியவற்றின் கடிகள், காயங்கள், ஆகியவற்றால் உடலில் ஏற்படும் மாறுமைகளுக்கு உடல் உடனடியாக எதிர்வினை புரிந்து விடும். பெரும்பாலான மாறுமைகளை நம்முடைய உடல் மருத்துவரே நலமாக்கிவிடுவார். சிலவற்றுக்கு மட்டும் வெளியிலிருந்து மருந்துப்பொருட்களின் அவசியத்தைக் கோருகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலோனார் நமது உடலின் மருத்துவர் நலமாக்கும் முயற்சிகளின் போதே தலையிட்டு விடுகிறோம். நாம் நமது உடலைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. அதனை ஒரு யந்திரமாக நினைத்து அலட்சியம் செய்கிறோம். ஆனால் நமது உடலும் அதன் இயக்கமும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக உயிர் பெற்ற அற்புத இயங்கியல் வளர்ச்சி. அதை நாம் அலட்சியப்படுத்தலாமா?

நலம் காக்க…….தொடர்வோம்.

Tuesday 6 November 2012

மனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2

 

நோய் என்றால் என்ன?.

உதயசங்கர்

health

நோய் என்றால் என்ன? நம்முடைய வழக்கமான வேலைகளைச் செய்ய விடாமல் உடல் தரும் தொந்திரவுகள் எல்லாமே நமக்கு நோய் தான். எல்லோருக்குமே தங்களுடைய வழக்கம் பாதிக்கப்படும் போது டென்ஷன் வந்து விடுகிறது. உடனே மருத்துவரைப் பார்த்து மருந்துகளை, ஊசிகளைப் போட்டு உடனே குணமாகி உடனே நம்முடைய ரொட்டீனுக்குத் திரும்பி விட வேண்டும். இது தான் அநேகமாக எல்லோரும் நினைப்பது.

நோய் என்றால் நம்முடைய மன, உடலியக்கத்தில் ஏற்படுகின்ற மாறுதல் அல்லது மாறுமை. உதாரணத்துக்கு புகை, தூசு, மாசு, மிகுந்த இடங்களில் நாம் இருக்க நேரிடும் போது நம்முடைய உடலுக்கு ஒவ்வாத இந்த புகை, மாசு, தூசு, இவற்றினால் சுவாசக்கோளங்களில் அரிப்பும், எரிச்சலும் ஏற்படுகிறது. நுரையீரலில் இவை சேர்ந்து விடாமலிருக்க நுரையீரல் ஒரு கணம் தன் முழுசக்தியையும் திரட்டி தும்மலாக வெளியேற்றுகிறது. அப்படியும் சுவாசத்தில் நுழையும் ஒவ்வாத இந்த அந்நியப்பொருட்களை சளிச்சவ்வுகளைத் தூண்டி விட்டு அதிகமான சளிநீரைச் சுரக்கச் செய்து மூக்கின் வழியாக வெளியேற்றுகிறது. இதன் மூலம் உடலுக்குள் அந்நிய விஷப்பொருள் நுழைவதைத் தடுக்க முயற்சிக்கிறது. மனநிலையிலும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அநேகமாக ஜலதோஷம் பிடித்த எல்லோருக்கும் இந்த உணர்வு வரும். இது ஆரம்பகட்டம். இதுவே சுவாசகோசங்களினால் சமாளிக்க முடியாத அளவுக்கு அந்நியப்பொருள் உள்ளே நுழைந்து விட்டால் அதை அந்தந்த இடத்திலேயே சளிநீர் மூலமாக அரெஸ்ட் செய்து சிறைப்படுத்துகிறது. பின்பு சிறைப்பட்ட அந்த அந்நியனை பிடதியைப் பிடித்து வெளித்தள்ள இருமலை உண்டு பண்ணுகிறது. இருமலுடன் சளி வெளியேறுகிறது கூடவே சிறைப்பட்ட அந்த அந்நியனும். நாம் நம்முடைய உடலுக்குச் செய்த தீங்கு தெரியாமல் உடனே ” மூக்கால தண்ணியா ஒழுகுது டாக்டர்..” என்றோ ” ஒரே சளி, இருமல் டாக்டர் “ என்றோ மருத்துவரிடம் செல்கிறோம்.

இன்னொருவகை ஒவ்வாமையென்பது நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல தனித்துவமான ஒவ்வொரு மனிதனையும் தனித்துவப்படுத்துவதில் அவனுடைய தனிவெப்பநிலை ( THERMOSTAT ) முக்கிய பங்கு வகிக்கிறது. அவனுடைய தனிவெப்பநிலை குளிர் என்றால் அவனுக்குக் குளிர், குளிர்ந்த தட்பவெப்பம் ஒவ்வாது. அதேபோல அவனுடைய தனி வெப்பநிலை சூடு என்றால் வெப்பம், வெப்பமான சீதோஷ்ணம் ஒவ்வாது. குளிர், சூடு, இரண்டுமே ஒவ்வாதவர்களும் இருக்கிறார்கள். இந்த ஒவ்வாமையினாலும் ஜலதோஷம், சளி, இருமல், ஆகியவை தோன்றலாம். இந்த ஒவ்வாமை கூடும்போது ஈளை ( ASTHMA ) நோயாக மாற வாய்ப்புகள் உண்டு.

முதலில் சொன்ன ஒவ்வாமை உடனடி தீவிர ( ACUTE ) நோய் என்றால் பின்னால் சொல்லப்பட்ட ஒவ்வாமை என்பது நீண்ட கால ( CHRONIC ) நோயாக மாறும் வாய்ப்புள்ள ஒவ்வாமை.

ஆக நோய் என்பது ஒருவர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், பாதிப்படைந்து அதனால் புறவயத்தில் அவருடைய இயல்பு மாறித் தோன்றும் தோற்றம், அடையாளம், செயல், நடவடிக்கை.

ஆக நோய் என்பது ஒரு மனிதனின் உடல், மன, இயக்கத்தை ஒருங்கிணைக்கும் உயிராற்றலில் ஏற்படும் பாதிப்பும் அதன் விளைவாக வெளியே தோன்றும் அறிகுறிகளும் கொண்ட தொகுப்பு.

ஆக நோய் என்பது ஒருவரது இயல்பான சுபாவத்தில், ( உடல்செயல்பாட்டில், உடலின் பாதிப்பினால் மனமோ, மனதின் பாதிப்பினால் உடலோ அடைகின்ற ) ஏற்படுகின்ற மாற்றங்களின் தொகுப்பு.

நலம் காக்க தொடர்வோம்..

Sunday 4 November 2012

வரலாற்றை ஊடறுத்துச் செல்லும் வாழ்வின் பக்கங்கள் –அஞ்ஞாடி நாவலை முன் வைத்துச் சில குறிப்புகள்

Poomani3  

உதயசங்கர்

 

வரலாற்றாசிரியர்கள் கடந்த காலச் சம்பவங்களையே கோர்க்கிறார்கள். அந்தக் கோர்வையின் வழியே தங்களுக்குச் சாதகமான தரவுகளை மட்டும் முன் வைத்து தர்க்கரீதியான முடிவுகளை நோக்கிப் போகிறார்கள். பின்னர் அந்த முடிவுகளின் வழியே வரலாற்றை வியாக்கியானம் செய்கிறார்கள். தகவல்களும், ஆண்டுகளும், நாட்களும், நிகழ்ச்சிகளும், சம்பவங்களும், அரசாணைகளும், போர்களும், கலகமும், ஆட்சி மாற்றங்களும் மட்டும் வரலாறல்லவே. வரலாறு என்பது கடந்த காலத்தில் மானுடம் ரத்தமும், சதையுமாக வாழ்ந்து முடிந்த கதை. வாழ்வின் தகிக்கும் வெக்கையை மனிதர்கள் எதிர்கொண்ட விதம், ஒவ்வொரு அங்குலமாக மானுடம் முன்னேறிய பாதை, அந்த முன்னேற்றத்தின் போது அவர்கள் இழந்த உயிர்கள், உடமைகள், நிலம், ஏதிலிகளாக அலைந்து திரிந்து பற்றுக்கோடாக கிடைத்த ஒரு சிறு நூலைப்பற்றி வாழ்வின் துடிதுடிப்போடு அவர்கள் உயிர்த்தண்ணீரைப் பருகி உயிரை வளர்த்த விதம், இத்தனைக்கும் நடுவிலான அவர்களுடைய சந்தோஷம், துக்கம், மகிழ்ச்சி, கேலி, கிண்டல், நையாண்டி, குடும்பம், குழந்தைகள், என்று எல்லாம் நிறைந்து ததும்பி நிற்கிற முழுமையான சித்திரமல்லவா வரலாறு. பகுதியில் முழுமையையும், முழுமையில் பகுதியையும் தரிசிக்க வல்லவன் கலைஞன் மட்டும் தானே.

70 – களில் தமிழிலக்கியத்தில் ஒருபுதிய மறுமலர்ச்சி தோன்றியது. கரிசல் காட்டு இலக்கியத்தை முன்னெடுத்த கி.ராஜநாராயணனை முன்னத்தி ஏராகக் கொண்டு கரிசல் குக்கிராமங்களின் வெக்கையை அதன் சூடு ஆறாமல் வாசகர்களின் கையில் கொடுத்து அவர்களை அதிர வைத்தவர் எழுத்தாளர் பூமணி. அவருடைய சிறுகதைகள் யாரையும் முன்மாதிரியாகக் கொண்டவையல்ல. வயிறுகள், ரீதி, அநேகமாக பலருடைய மனதில் பாடமாகவே ஆகியிருந்தது. பின்னர் வெளிவந்த பிறகு நாவல் தமிழிக்கியத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை. தொடர்ந்து அவர் எழுதி வெளிவந்த வெக்கை, நைவேத்தியம், நாவல்கள் எழுத்தாளர் பூமணியின் கலை உச்சத்தை பறைசாற்றுபவை. இப்போது அவருடைய இருபத்தைந்து ஆண்டு கால ஆராய்ச்சி, உழைப்பினால் வெளிவந்துள்ள அஞ்ஞாடி என்ற பிரம்மாண்டமான நாவல் வாழ்வையும் வரலாற்றையும் ஊடறுத்துச் சென்று துடிதுடிக்கும் மானுடவாழ்வின் அவலங்களையும், உன்னதங்களையும், காட்சிப்படிமங்களாக முன் வைக்கிறது.

கலிங்கல் கிராமத்தின் ஆண்டி என்கிற ஒரு மானுடப்புள்ளியிலிருந்து துவங்குகிறது நாவல். ஆண்டிக்கும் மாரிக்குமான நட்பில் ஒரு காவியநேசம் வெளிப்படுகிறது. அவர்கள் இருவரின் பார்வை வழியே கிராமம் நம் கண்கொள்ளாக்காட்சிகளாக விரிந்து மலர்கிறது. இளம்பருவத்தின் துள்ளல், விளையாட்டு, கேலி, கிண்டல், ஏகடியம், என்று படிக்கப் படிக்கத் தெவிட்டாத பக்கங்களாக நம்மை ஈர்க்கிறது. தமிழிலக்கியத்தில் இத்தகைய ஒரு காவிய நட்பு இதற்கு முன் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. அதே போல ஆண்டி என்ற கதாபாத்திரம் நாவலின் 1066 பக்கங்களிலும் ஊடும் பாவுமாக விசுவரூபமாக நிறைந்து நிற்கிறார். ஆதரவற்றவர்களை ஆதரிப்பதிலாகட்டும், மாரியின் குடும்பத்தின் மீதான கவனிப்பாகட்டும், அனாதைகளுக்கு உதவி செய்வதிலாகட்டும், அகதிகளுக்கு வாழ்வளிப்பதிலாகட்டும், ஆண்டி, கருப்பி, என்ற அபூர்வமனிதர்கள் இந்த வாழ்வை அர்த்தப்படுத்துகிறார்கள். வாழ்வை நிறைவாக வாழ்வதற்கு அவர்களுக்கு அரசியல், தத்துவ கோட்பாடுகள் தேவையாக இல்லை. எளிமையான அன்பு, சகமனிதர்களின் மீதானநேசம் போதும்.

இந்த வாழ்வினூடாகத் தான் பூமணி என்ற மகத்தான கலைஞன் வரலாற்றின் பேராற்றில் மூழ்கி எழுகிறான். எட்டையபுரம் சமஸ்தான வரலாறும், மதுரையை ஆண்ட நாயக்கர்களின் வரலாறும் இதுவரை சொல்லப்படாத கோணங்களில் சொல்லப்படுகிறது. பஞ்சகாலத்தைப் பற்றி ஒரு உணர்ச்சிகரமான சித்திரம் நம் மனதை பதைபதைக்க வைக்கிறது. ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு இனம் வணிகத்தைக் கைப்பற்றி வாழ்வில் முன்னேறுகிறது. முன்னேற்றத்துக்கு சாதி ஒரு தடைக்கல்லாய் இருக்கும்போது மதம் மாறுகிறார்கள். வணிகத்தின் மூலம் தங்கள் நிலையை மாற்றப் போராடிக் கொண்டிருக்கும் அந்த இனத்தின் மீது ஆதிக்கசாதியினரின் பொறாமைத்தீ பற்றியெறிகிறது. கழுகுமலையில் கலவரம். சிவகாசிக் கொள்ளை, என்று அர்த்தமற்ற வன்முறை அர்த்தமுள்ள வாழ்வினை அழிக்கிறது. இந்த வன்முறைக்காட்சிகள் அப்படியே கண்முன்னே நடப்பதைப்போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பூமணி என்ற எழுத்துக்கலைஞனை இந்தப்பக்கங்களில் நாம் தரிசிக்க முடிகிறது. இதற்கெல்லாம் ஆதாரமான ஆவணங்களும், வழக்கு விபரங்களும், விசாரணைக் குறிப்புகளும், தீர்ப்புகளும் நாவலிலே சொல்லப்பட்டு நாவலின் நம்பகத்தன்மையைஉறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்து முஸ்லீம் கலவரங்களும், சுதந்திரப்போரின் இறுதி நாட்களும் காட்சிகளாய் விரிகிறது. ஒரு நூற்றாண்டு கால வரலாறு மிகத் துல்லியமாக புனைவின் விசித்திரமான பெருவெளியில் நம்மை நிறுத்தி சுற்றிலும் நடந்து கொண்டேயிருக்கிறது. காலத்தின் ஊடாக பயணம் செய்து அன்றைய மக்களின் பண்பாடு, கலாச்சாரம், உணவுப்பழக்கவழக்கங்கள், மரபுகளை, மொழியை, சொல்கதைகளை, நாட்டார் வழக்காற்றை கரிசல் பூமியின் வெப்பமிக்க வாழ்வை, உறவுகளை எல்லாம் நாவலின் வழியே வாசகன் அறிந்து கொள்ளும் வாய்ப்பை பூமணி வழங்கியுள்ளார்.

இருபத்தைந்து ஆண்டுகால உழைப்பில் அஞ்ஞாடி புனைவு வரலாறாகவும், வரலாற்றுப்புனைவாகவும், தமிழின் மிக முக்கியமான நாவலாக பரிணமித்துள்ளது. ஒரு நூற்றாண்டு கால மானுட வாழ்வில் மானுட உறவுகளில் நிகழும் அனைத்து மாற்றங்களையும் பதிவு செய்துள்ள நாவல் அஞ்ஞாடி. நம் காலத்தின் பெருமைமிக்க கரிசல்காட்டு கலைஞன் பூமணி. அஞ்ஞாடி அந்த மகத்தான கலைஞனின் மகத்தான படைப்பு அஞ்ஞாடி.

அஞ்ஞாடி- பூமணி

விலை- ரூ.925

வெளியீடு- க்ரியாபதிப்பகம், சென்னை Anjaadi-Thinner

நன்றி- சண்டே இண்டியன்

Saturday 3 November 2012

மனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம் - 1

உதயசங்கர்juneteenth-synthia-saint-james

 

உயிர் வாழ்வதின் நோக்கம் என்ன? பணம் சம்பாதிப்பதா? ஏழேழு தலைமுறைக்கும் தேவையான சொத்துக்களைச் சேர்த்து வைப்பதா? நன்றாக உணவுண்டு, நன்றாக உறங்கி, நன்றாக வேலை செய்து கிழப்பருவம் எய்தி நொந்து உயிர்விடுதலா? இல்லை தன் பெண்டு, தன் பிள்ளை என்று தன் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாக்கி யந்திரமாய் வாழ்ந்து செத்து மடிவதா? தேடிச் சேகரித்த புகழ் தரும் போதையில் தலைசுற்றிக் கொண்டே திரிவதா? வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்காகவே வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருப்பதா? தன் இலக்கு எது என்று தெரியாமலே வாழ்நாள் முழுவதும் அம்புகளை எல்லாத்திசைகளிலும் எறிந்து கொண்டு திரிவதா?

வாழ்வதின் நோக்கம் தான் என்ன?

வாழ்வதன் நோக்கம் இன்பமாக இருத்தல் தான். ஒவ்வொரு உயிரும் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை இன்பமாக இருக்கவே விரும்புகிறது. எந்த ஒரு உயிரும் துன்பத்தை விரும்புவதில்லை. இன்பமாக இருப்பதற்காகவே எல்லாஉயிர்களும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டேயிருக்கின்றன.

சரி. இன்பம் என்றால் எப்படிப்பட்ட இன்பம்? உண்பது, உறங்குவது, எப்போதும் ஏதாவதொரு போதையிலிருப்பது, இப்படிப்பட்ட இன்பங்கள் எல்லாம் புலன்களின் வழியே கிடைக்கிற தற்காலிகஇன்பங்கள். இந்தத் தற்காலிக இன்பங்கள் எல்லாம் நிபந்தனைகளுக்கு உட்பட்டே இருக்கிறது. நல்ல உணவு, காற்று, நீர், உறக்கம் , கலவி, எல்லாவற்றுக்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. தற்காலிக புலனின்பங்களில் உச்சபட்சமானது கலவியின்பம். இயற்கை இனவிருத்தியோடு அதைப் பிணைத்து இடையறாமல் உயிர் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்கிறது. மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு இந்த அனைத்து இன்பங்களும் இயற்கையின் சுழற்சிக்கு உட்பட்டவை. எனவே இயற்கையின் நியதிகளுக்கேற்ப உயிரினங்கள் தங்கள் வாழ்வைத் தகவமைத்துக் கொள்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் இயற்கையோடு இயைந்தும் இயற்கையின் மீது ஆளுகை செலுத்தியும் தன் புலனின்பங்களைத் தக்க வைத்துக் கொள்கிறான்.

இந்தத் தற்காலிக புலனின்பங்கள் சீராக இருப்பதற்கு மிக முக்கியமானது உடல்நலம். சரி. உடல்நலம் என்றால் என்ன? உடல்நலம் என்பது மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கணையம், எலும்புகள், தசைகள், நரம்புகள் என்று சைக்கிள் ஸ்பேர்பார்ட்ஸ் போலத் தனித் தனியாக நட்டுபோல்ட்டாக இயங்குகிற இயக்கமல்ல. நுரையீரல் நன்றாக இருக்கிறது மற்றவை சரியில்லை ஆனால் உடல் நலமாக இருக்கிறது என்றோ, இதயம் நன்றாக இருக்கிறது மற்றவை சரியில்லை ஆனால் உடல் நலமாக இருக்கிறது என்றோ சொல்லிவிடமுடியுமா. நாம் அப்படிச் சொல்வதுமில்லை. எல்லாஉறுப்புகளும் ஒன்றிணைந்து இயங்குகிற சமச்சீரான இயக்கத்தையே நாம் உடல்நலம் என்று சொல்கிறோம். உயிர் என்பது மனதும் உடலும் இணைந்தது. உடலும் மனமும் இணைந்தும், மனதின் ஆளுகையின் கீழ் ஒருங்கிணைந்தும் உயிர் தன் இருத்தலை நிச்சயித்துக்கொள்கிறது. எனவே உடல்நலம் என்பது உடலை மட்டுமல்ல மனதையும் நலமாக வைத்துக் கொள்வது என்று புரிந்து கொள்ளலாம். இதைப் பொதுவான வரையறையாகக் கொள்ளலாம்.

மரம் என்ற ஒன்று இருக்கிறதா என்ன? யோசித்துப்பாருங்கள். வெறுமனே மரம் என்ற வார்த்தையைக் கேட்டதும் நமக்கு என்ன தோன்றுகிறது. வேப்பமரம், புளியமரம், ஆலமரம், அரசமரம், இப்படிக் குறிப்பிட்ட மரங்களே நமக்குத் தோன்றும். ஏனெனில் மரம் என்ற ஒன்று கிடையாது. அதே போல எல்லாவேப்பமரங்களும் ஒன்றுபோலவா இருக்கின்றன? ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் குட்டையாய், பருமனாய், உயரமாய், முண்டுகள் நிறைந்து, விரிந்து பரந்ததாய், இப்படி எத்தனை விதமான வேப்பமரங்கள்! சரி அந்த விதவிதமான வேப்பமரத்தின் இலைகள் எல்லாம் ஒன்றுபோலவா இருக்கின்றன? ஒவ்வொரு தனித்தனி இலையும் ஒவ்வொரு விதமாய் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அது தான் இயற்கையின் மாயாஜாலம். அற்புதம். எந்த ஒரு சிறு உயிரையும் ஜெராக்ஸ் பிரதிகள் எடுப்பதைப் போல எடுக்கவில்லை. ஒவ்வொன்றும் தன்னுடைய தனித்துவமான உயிரியக்கத்தைக் கொண்டிருக்கின்றன. உயிரின் உள்ளுணர்வு, மரபணுக்களின் ஞாபகச்சேகரிப்பினால் உருவாகிறது. இந்த உள்ளுணர்வும், சூழலும் இணைந்து தனித்துவமிக்க உயிர்களை உருவாக்குகிறது.

இப்படி உயிர்கள் அனைத்தும் தனித்துவமிக்கதாக உருமாற லட்சக்கணக்கான வருடங்கள் ஆகியிருக்கலாம். சூரியனிலிருந்து தெறித்து விழுந்த இந்தப் பூமியில் உயிர்கள் தோன்ற கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆயின என்றால் உயிர்களின் பரிணாமவளர்ச்சிக்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. இந்தப் பரிணாமவளர்ச்சியில் தான் ஒவ்வொரு உயிரும் தான் உயிர்வாழ்வதற்கான தனித்துவமிக்க உடல் உயிரியக்கத்தைப் பெற்றன. சுமார் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன்னால் தான் மனிதகுலத்தின் மூதாதை தோன்றியிருக்கிறாள். இந்தக் கதையெல்லாம் எதற்கென்றால் பூமியிலுள்ள உயிர்கள் அனைத்தும் மனிதன் உட்பட தனித்துவமிக்கவை. எனவே இந்தத் தனித்துவமிக்க உயிர்களின் தனித்துவமிக்க நோய்களுக்குத் தனித்துவமிக்க மருத்துவமுறை வேண்டும்.

தனித்துவமிக்க மனிதனின் தனித்துவமிக்க உடல் உயிரியக்கம் தனித்துவமிக்க நோய்களையே உருவாக்கும். இந்தத் தனித்துவத்தைப் புரிந்து கொண்டு மருத்துவம் செய்யும்போது அந்தத் தனித்துவமிக்க நோய் விரைவாகக் குணமாகிறது. அந்தத் தனித்துவமிக்க மனிதனின் நலம் மீட்கப்படுகிறது. ஆக குமாருக்கும் ஆனந்துக்கும் காய்ச்சல் வந்ததென்றால் இரண்டுபேரின் நோயும் ஒன்றல்ல. அதாவது குமாருக்கு வந்த காய்ச்சல் குமார் என்ற தனித்துவமிக்க மனிதனின் காய்ச்சல். அதேபோல ஆனந்துக்கு வந்த காய்ச்சல் ஆனந்த் என்ற தனித்துவமிக்க மனிதனின் காய்ச்சல். எப்படி இரண்டும் ஒன்றாக முடியும்?

குமாருக்குக் குளிரும் உடல்வலியும் அதனால் அசையமுடியாமையும் தாகமின்மையும் உடல்முழுவதும் சூடாகவும் இருக்கிறது. ஆனால் ஆனந்துக்கு தலையும் கால்களும் சூடாக இருக்க, உடல்வலியினால் புரண்டுகொண்டே இருக்கிறார் தண்ணீர் தாகமும் அடிக்கடி எடுக்கிறது. அப்படியானால் இரண்டு காய்ச்சலும் ஒன்றாகுமா? நாம் இருவருக்கும் ஒரே மருந்தைக் கொடுக்கலாமா?

இப்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

நலம் காக்க… மீண்டும் தொடர்வோம்.