Saturday 3 November 2012

மனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம் - 1

உதயசங்கர்juneteenth-synthia-saint-james

 

உயிர் வாழ்வதின் நோக்கம் என்ன? பணம் சம்பாதிப்பதா? ஏழேழு தலைமுறைக்கும் தேவையான சொத்துக்களைச் சேர்த்து வைப்பதா? நன்றாக உணவுண்டு, நன்றாக உறங்கி, நன்றாக வேலை செய்து கிழப்பருவம் எய்தி நொந்து உயிர்விடுதலா? இல்லை தன் பெண்டு, தன் பிள்ளை என்று தன் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாக்கி யந்திரமாய் வாழ்ந்து செத்து மடிவதா? தேடிச் சேகரித்த புகழ் தரும் போதையில் தலைசுற்றிக் கொண்டே திரிவதா? வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்காகவே வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருப்பதா? தன் இலக்கு எது என்று தெரியாமலே வாழ்நாள் முழுவதும் அம்புகளை எல்லாத்திசைகளிலும் எறிந்து கொண்டு திரிவதா?

வாழ்வதின் நோக்கம் தான் என்ன?

வாழ்வதன் நோக்கம் இன்பமாக இருத்தல் தான். ஒவ்வொரு உயிரும் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை இன்பமாக இருக்கவே விரும்புகிறது. எந்த ஒரு உயிரும் துன்பத்தை விரும்புவதில்லை. இன்பமாக இருப்பதற்காகவே எல்லாஉயிர்களும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டேயிருக்கின்றன.

சரி. இன்பம் என்றால் எப்படிப்பட்ட இன்பம்? உண்பது, உறங்குவது, எப்போதும் ஏதாவதொரு போதையிலிருப்பது, இப்படிப்பட்ட இன்பங்கள் எல்லாம் புலன்களின் வழியே கிடைக்கிற தற்காலிகஇன்பங்கள். இந்தத் தற்காலிக இன்பங்கள் எல்லாம் நிபந்தனைகளுக்கு உட்பட்டே இருக்கிறது. நல்ல உணவு, காற்று, நீர், உறக்கம் , கலவி, எல்லாவற்றுக்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. தற்காலிக புலனின்பங்களில் உச்சபட்சமானது கலவியின்பம். இயற்கை இனவிருத்தியோடு அதைப் பிணைத்து இடையறாமல் உயிர் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்கிறது. மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு இந்த அனைத்து இன்பங்களும் இயற்கையின் சுழற்சிக்கு உட்பட்டவை. எனவே இயற்கையின் நியதிகளுக்கேற்ப உயிரினங்கள் தங்கள் வாழ்வைத் தகவமைத்துக் கொள்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் இயற்கையோடு இயைந்தும் இயற்கையின் மீது ஆளுகை செலுத்தியும் தன் புலனின்பங்களைத் தக்க வைத்துக் கொள்கிறான்.

இந்தத் தற்காலிக புலனின்பங்கள் சீராக இருப்பதற்கு மிக முக்கியமானது உடல்நலம். சரி. உடல்நலம் என்றால் என்ன? உடல்நலம் என்பது மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கணையம், எலும்புகள், தசைகள், நரம்புகள் என்று சைக்கிள் ஸ்பேர்பார்ட்ஸ் போலத் தனித் தனியாக நட்டுபோல்ட்டாக இயங்குகிற இயக்கமல்ல. நுரையீரல் நன்றாக இருக்கிறது மற்றவை சரியில்லை ஆனால் உடல் நலமாக இருக்கிறது என்றோ, இதயம் நன்றாக இருக்கிறது மற்றவை சரியில்லை ஆனால் உடல் நலமாக இருக்கிறது என்றோ சொல்லிவிடமுடியுமா. நாம் அப்படிச் சொல்வதுமில்லை. எல்லாஉறுப்புகளும் ஒன்றிணைந்து இயங்குகிற சமச்சீரான இயக்கத்தையே நாம் உடல்நலம் என்று சொல்கிறோம். உயிர் என்பது மனதும் உடலும் இணைந்தது. உடலும் மனமும் இணைந்தும், மனதின் ஆளுகையின் கீழ் ஒருங்கிணைந்தும் உயிர் தன் இருத்தலை நிச்சயித்துக்கொள்கிறது. எனவே உடல்நலம் என்பது உடலை மட்டுமல்ல மனதையும் நலமாக வைத்துக் கொள்வது என்று புரிந்து கொள்ளலாம். இதைப் பொதுவான வரையறையாகக் கொள்ளலாம்.

மரம் என்ற ஒன்று இருக்கிறதா என்ன? யோசித்துப்பாருங்கள். வெறுமனே மரம் என்ற வார்த்தையைக் கேட்டதும் நமக்கு என்ன தோன்றுகிறது. வேப்பமரம், புளியமரம், ஆலமரம், அரசமரம், இப்படிக் குறிப்பிட்ட மரங்களே நமக்குத் தோன்றும். ஏனெனில் மரம் என்ற ஒன்று கிடையாது. அதே போல எல்லாவேப்பமரங்களும் ஒன்றுபோலவா இருக்கின்றன? ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் குட்டையாய், பருமனாய், உயரமாய், முண்டுகள் நிறைந்து, விரிந்து பரந்ததாய், இப்படி எத்தனை விதமான வேப்பமரங்கள்! சரி அந்த விதவிதமான வேப்பமரத்தின் இலைகள் எல்லாம் ஒன்றுபோலவா இருக்கின்றன? ஒவ்வொரு தனித்தனி இலையும் ஒவ்வொரு விதமாய் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அது தான் இயற்கையின் மாயாஜாலம். அற்புதம். எந்த ஒரு சிறு உயிரையும் ஜெராக்ஸ் பிரதிகள் எடுப்பதைப் போல எடுக்கவில்லை. ஒவ்வொன்றும் தன்னுடைய தனித்துவமான உயிரியக்கத்தைக் கொண்டிருக்கின்றன. உயிரின் உள்ளுணர்வு, மரபணுக்களின் ஞாபகச்சேகரிப்பினால் உருவாகிறது. இந்த உள்ளுணர்வும், சூழலும் இணைந்து தனித்துவமிக்க உயிர்களை உருவாக்குகிறது.

இப்படி உயிர்கள் அனைத்தும் தனித்துவமிக்கதாக உருமாற லட்சக்கணக்கான வருடங்கள் ஆகியிருக்கலாம். சூரியனிலிருந்து தெறித்து விழுந்த இந்தப் பூமியில் உயிர்கள் தோன்ற கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆயின என்றால் உயிர்களின் பரிணாமவளர்ச்சிக்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. இந்தப் பரிணாமவளர்ச்சியில் தான் ஒவ்வொரு உயிரும் தான் உயிர்வாழ்வதற்கான தனித்துவமிக்க உடல் உயிரியக்கத்தைப் பெற்றன. சுமார் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன்னால் தான் மனிதகுலத்தின் மூதாதை தோன்றியிருக்கிறாள். இந்தக் கதையெல்லாம் எதற்கென்றால் பூமியிலுள்ள உயிர்கள் அனைத்தும் மனிதன் உட்பட தனித்துவமிக்கவை. எனவே இந்தத் தனித்துவமிக்க உயிர்களின் தனித்துவமிக்க நோய்களுக்குத் தனித்துவமிக்க மருத்துவமுறை வேண்டும்.

தனித்துவமிக்க மனிதனின் தனித்துவமிக்க உடல் உயிரியக்கம் தனித்துவமிக்க நோய்களையே உருவாக்கும். இந்தத் தனித்துவத்தைப் புரிந்து கொண்டு மருத்துவம் செய்யும்போது அந்தத் தனித்துவமிக்க நோய் விரைவாகக் குணமாகிறது. அந்தத் தனித்துவமிக்க மனிதனின் நலம் மீட்கப்படுகிறது. ஆக குமாருக்கும் ஆனந்துக்கும் காய்ச்சல் வந்ததென்றால் இரண்டுபேரின் நோயும் ஒன்றல்ல. அதாவது குமாருக்கு வந்த காய்ச்சல் குமார் என்ற தனித்துவமிக்க மனிதனின் காய்ச்சல். அதேபோல ஆனந்துக்கு வந்த காய்ச்சல் ஆனந்த் என்ற தனித்துவமிக்க மனிதனின் காய்ச்சல். எப்படி இரண்டும் ஒன்றாக முடியும்?

குமாருக்குக் குளிரும் உடல்வலியும் அதனால் அசையமுடியாமையும் தாகமின்மையும் உடல்முழுவதும் சூடாகவும் இருக்கிறது. ஆனால் ஆனந்துக்கு தலையும் கால்களும் சூடாக இருக்க, உடல்வலியினால் புரண்டுகொண்டே இருக்கிறார் தண்ணீர் தாகமும் அடிக்கடி எடுக்கிறது. அப்படியானால் இரண்டு காய்ச்சலும் ஒன்றாகுமா? நாம் இருவருக்கும் ஒரே மருந்தைக் கொடுக்கலாமா?

இப்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

நலம் காக்க… மீண்டும் தொடர்வோம்.

1 comment: