Saturday 24 March 2012

கு.அழகிரிசாமியின் ஆவி

images (3) 
ஆளரவமற்ற அத்துவானக் காட்டுக்குள் மோனத்தவமியற்றுகிற மாதிரி தன்னந்தனியே நின்று கொண்டிருக்கிறது குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன். மெலிந்தும், விரைந்தும், சுழன்றும், கனிந்தும், இசைந்தும், வீசுகிற காற்றின் சப்தம். பறவைகள், பூச்சிகளின் ஒலிக்கலவை பின்னணி இசை போல ஒலித்துக் கொண்டிருக்கின்றது. பெருவெள்ளமாய் ஓடிக் கொண்டிருக்கும் அமைதிப் பேராற்றை அவ்வப்போது ஊடறுத்துச் செல்கின்றன ரயில்கள். தடதடவென ஓடி மறையும் ரயிலின் கடைசிச் சக்கரத்தின் வாலைப் பிடித்துக் கொண்டே வந்து நிற்கும் நிசப்தம். வெயில் முழுக்காட்டிக் கொண்டிருக்கும் கரிசல்வெளி. புதர்களாய் நிறைந்த சிறு காடு. தண்டவாளங்களின் ஓரம் சுதந்திரமாய் அலைந்து மேயும் கௌதாரிகள், தவிட்டுப் புறாக்கள், மணிப்புறாக்கள், தவிட்டுக்குருவிகள்,காடைகள், சிட்டுகள், படைகுருவிகள், காகங்கள் நடை பயின்று கொஞ்சிக் குலாவித் திரியும் காட்சி கனவாய் தெரியும். இயற்கையின் கோலாகலத்தைக் கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன்.
     
ஸ்டேஷனுக்கு வெளியே கிடக்கிறது சிமிண்ட் பெஞ்சு. வெகுகாலமாய் பயணிகளின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்த ரயிலும் நின்று செல்லாத ரயில்வே ஸ்டேஷனாக குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் மாறியதிலிருந்து பயணிகள் யாரும் வருவதில்லை.முன்பு நிலைமை இப்படியில்லை. சுத்துப்பட்டிக் கிராமங்களிலிருந்து கோவில்பட்டி செல்வதற்கு குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் தான் போக்குவரத்து மார்க்கம். விவசாய விளைபொருட்களை கோவில்பட்டி சந்தைக்குக் கொண்டு செல்வதற்கும், தூராதூரப் பயணங்களுக்கும் ரயில் தான். அப்போது ரயில் வரும் நேரமென்றால் ஸ்டேஷன் களை கட்டி விடும். காடுகளுக்குள்ளிருந்து திடீர் திடீரென மக்கள் முளைத்து வருவார்கள். மழை பெய்து ஓடும் தாம்போதிகளைப் போல சுற்றிலுமுள்ள காடுகளிலிருந்து ஒத்தையடிப் பாதைகள் ஓடி வரும். அந்தக் கோணல்மாணலான  ஒத்தையடிப்பாதைகள் சுத்துப்பட்டிகளிருந்து மக்களைக் கூட்டிவரும். கூட்டம் கூட்டமாக வந்து சேரும் மக்கள் அவசர அவசரமாக டிக்கெட் எடுத்து விட்டு ஆசுவாசமாக வேம்பின் குளிர் நிழலில் மூட்டை முடிச்சுகளோடு உட்கார்ந்து பாடு பழமைப் பேசிக் கொண்டிருப்பார்கள். தூரத்தில் கூகூகூவென ரயிலின் கூவல் கேட்டதும் குமாரபுரம் ஸ்டேஷன் பரபரப்பாகி விடும். குப் குப் எனக்கரிப்புகையைக் கக்கிக் கொண்டே இளைத்தபடி எல்லோர் கனவுகளையும் சுமந்து கொண்டு வந்து நிற்கும் ரயில்.
   
பழைய நினைவுகளின் பெருமிதத்தை அசை போட்டபடியே கண்களை மூடி மெய்ம்மறந்திருக்கிறது குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன். வெளியே ஏதோ அரவம். கண் விழித்த ஸ்டேஷன் யாரோ புதிதாய் அந்த சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறது. யாரென்று தெரிய வில்லை. இந்த அகால வேளையில் யாரது? பார்த்த சாயலாகவும் தெரிகிறது. தன் உறக்கச் சடவை உதறி விட்டுக் கண்களை அகலத்திறந்து உற்றுப் பார்க்கிறது குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன்.
     
குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனைத் தமிழிலக்கியத்தில் அழியாப் புகழ் பெற வைத்த கு.அழகிரிசாமி அங்கே உட்கார்ந்திருக்கிறார். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் முக்கியமானவர். சிறுகதைக்கலையின் எல்லைகளை விரித்தவர். குழந்தைகளின் அபூர்வமான மனோநிலைகளைக் கதைகளில் படைத்த எழுத்துச்சிற்பி. எழுத்தில் பிடிபடாத மனிதமனதின் விசித்திரங்களை இயல்பாக எழுதிப் பார்த்தவர். சாகாவரம் பெற்ற சிறுகதைகளுக்குச் சொந்தக்காரர். இடைசெவல்காரர். கரிசல் இலக்கிய பிதாமகரான எழுத்தாளர்  கி.ராஜநாராயணனுக்கு உற்ற தோழர். கோவில்பட்டி செல்வதற்கும், சென்னை போவதற்கும் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்கிற கு.அழகிரிசாமி. அந்த நாட்கள்… அந்த நாட்களின் நினைவுகள் காலத்தின் தழும்பேறிய பழுப்புநிறப் புகைப்படம் போல கண்ணில் தெரிகிறது. குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனின் மனதில் ஒரு ஏக்கம்.
images (6)
சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்த கு.அழகிரிசாமி எதிரே காற்றில் அலையடித்துக் கொண்டிருந்த சீம்புல் வெளியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். ரஷ்ய நாவல்களில் வருகிற ஸ்தெப்பிப்புல்வெளியின் ஞாபகம் வருகிறது. காற்று விரைந்து வீசுகிறது. காலம் கலைந்து குழம்பி கரைந்து கொண்டிருக்கிறது. குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனின் கதை விரிகிறது. பள்ளி விடுமுறையில் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் பணி புரியும் ஸ்டேஷன் மாஸ்டரின் விருந்தினராக வந்து தங்கியிருந்த பள்ளித் தலைமையாசிரியர் அன்று கோவில்பட்டி திரும்புகிறார். குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் அவர் கழித்த அந்த இரண்டு நாட்களும் அவருடைய மனதில் இனம் புரியாத அமைதியைத் தந்திருக்கிறது.  விடைபெறும் வேளையில் ஸ்டேஷன் மாஸ்டரிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார். ரயில் வரும் நேரம் நெருங்கி விட்டது. பயணிகள் ஒவ்வொருவராக வந்து பயணச்சீட்டு வாங்குகிறார்கள். வடக்கே போற ரயில் போயிருச்சா? என்ற பதைபதைப்புடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஸ்டேஷன் மாஸ்டர் இனிய புன்னகையுடன் ஆற்றுப் படுத்துகிறார். அவசரமில்லை. ரயில் வருவதற்கு நேரமிருக்கிறது. டிக்கெட் எடுத்துக் கொண்டு அதோ அந்த வேப்பமர நிழலில் தைப்பாறுங்கள்.
       
வேப்பமரம் தலையையும் கைகளையும் அசைத்து எல்லோரையும் கூப்பிடுகிறது. பள்ளித் தலைமையாசிரியர் விடைபெற்று நடைமேடையில் வந்து நிற்கிறார். எளிமையான மக்கள். ரயில் வருகிறது எல்லாவற்றையும் கவனித்தபடியே கு.அழகிரிசாமி நிற்கிறார். பள்ளித்தலைமையாசிரியரின் மனம் நிறைந்திருக்கிறது. ரயிலில் இடைசெவல் கிராமத்திலிருந்து பெரிய பள்ளிக்கூடம் சேருவதற்காக கோவில்பட்டிக்கு ரயிலேறும் மாணவர்கள் அவர்களை அழைத்துக் கொண்டு வரும் கிராமப் பள்ளியின் ஆசிரியர், மதுரைக்குப் போகும் ஒரு குடும்பம், அவர்களுடைய உரையாடல் என விரியும் கதை. கோவில்பட்டியில் மாணவர்கள் சேர்வதற்குச் சென்ற பள்ளியின் தலைமையாசிரியர் தாங்கள் ரயிலில் பார்த்த பெரியவர் தான் என்று அறிந்தவுடன் ஏற்படும் திகைப்பு. தலைமையாசிரியர் வைக்கிற பரீட்சையில் வெற்றி பெற்று பள்ளியில் சேர அனுமதி கிடைக்கிற மகிழ்ச்சி. எளிய மக்களின் எளிய உணர்வுகள். அலங்காரமான மொழிநடையில்லை. கு.அழகிரிசாமியின் மற்றெல்லாக் கதைகளைப் போலவே எளிய மொழியில் எழுதப்பட்ட கதை. ஆனால்  ஆழ்கடலின் ததும்புதலைப் போன்ற அநுபவம் தரக்கூடியது. குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனைப்போல இயற்கையானது. அந்த ஸ்டேஷனில் பணி புரியும் ஸ்டேஷன் மாஸ்டரைப் போல அன்பின் வழியது. அந்தக் கிராமத்து மக்களைப் போல வெள்ளந்தியானது. ஒரு நீரோடையின் அமைதியான நீரொழுக்கு போல ஓடிக் கொண்டிருக்கும் கதை. காலம் கண்ட கனவாய் விரியும் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன்.
     
இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதி, புதுமைப்பித்தனுக்கு,அடுத்த தலைமுறை எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் கு.அழகிரிசாமி. கரிசல் மண்ணின் மைந்தரான அவரே ஒரு வகையில் வட்டாரஇலக்கியத்தின் முன்னத்தி ஏர் பிடித்தவர். தம் குறைந்த வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், பத்திரிகையாசிரியர், பதிப்பாசிரியர், என்று முழு இலக்கியவாதியாகவே வாழ்ந்தவர் கு.அழகிரிசாமி.

யதார்த்தவாத எழுத்தின் மிகச் சிறந்த கொடைகளைத் தமிழ் இலக்கியத்துக்கு தந்தவர்.அவருடைய அழகம்மாள், திரிபுரம், ராஜா வந்திருக்கிறார், வெறும்நாய், பேதமை, சிரிக்கவில்லை, சுயரூபம், போன்ற அமரத்துவமான கதைகளை எழுதிச் சென்றவர் கு.அழகிரிசாமி. மனித மனதின் விசித்திரங்களை,நகைச்சுவையுணர்வுடன் சித்தரிப்பதில் வல்லவர். எளிய மக்களின் மனச்சிடுக்குகளை மிக லாவகமாக வெளிப்படுத்துகிறார். அவருடைய கதைகளை வாசிக்க வாசிக்க மனம் விசாலமடைகிறது.மேன்மையடைகிறது. அந்த மகத்தான கலைஞனைக் கைகூப்பி வணங்கச் சொல்கிறது.
     
பொழுது சாய்ந்து கொண்டிருக்கிறது. குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் குறுக்குமறுக்குமாய் ஓடிக் கொண்டேயிருக்கின்றன. கு.அழகிரிசாமி அந்த சிமிண்ட் பெஞ்சிலேயே உட்கார்ந்திருக்கிறார். ஸ்டேஷனுக்கு நேரெதிரே சூரியன் செம்பழமாய் சிவந்து ஜொலிக்கிறது. அடிவானச் சிவப்பு கரிசல் வெளியில் வேகமாய் பாய்ந்து மறைகிறது. கொஞ்சம் கொஞ்சமாய் மறையத் தொடங்குகிறது சூரியன். குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் கதையில் வருகிற ஸ்டேஷன் மாஸ்டரின் பணி நேரம் முடியப் போகிறது. அவரை மாற்ற வரும் பதிலி ஸ்டேஷன் மாஸ்டருக்காகக் காத்திருக்கிறார். அவருக்குத் தான் ஒரு கதைக்குள் வெகுகாலமாய் வாழ்ந்து கொண்டிருப்பது தெரியாது. அந்தக் கதையை எழுதிய மகத்தான எழுத்தாளர் கு.அழகிரிசாமி வெளியே சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருப்பதும் தெரியாது. நடந்து கொண்டிருப்பது கதையா என்றும் தெரியாது. வெளிச்சத்தின் ரேகைகள் மங்கத் தொடங்குகின்றன. கரும்வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கு.அழகிரிசாமி எழுந்து மெல்ல நடக்கத் தொடங்குகிறார்.
       
அன்று பௌர்ணமி. குருமலைக்குப் பின்னாலிருந்து பளீரென்று நிலா எழுந்து வருகிறது. நிலவின் அபூர்வ வெள்ளையொளியில் புதர்க்காடும், குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனும் திளைக்கிறது. மௌனப்பெருங்கடலின் அலை வந்து மோதி கால் நனைக்கிறது. இருளின் தீற்றலென வரைந்து குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிளைத்துச் செல்லும் தார்ச்சாலையில், எழுத்தாளர்கள் கோணங்கி, மாதவராஜ், கவிஞர்கள் தேவதச்சன், கிருஷி, நான்,எல்லோரும் நடந்து போய்க் கொண்டிருந்தோம். இரவின் லயத்தை மீட்டிய படியே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம் எங்களுக்கு பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. கவிஞர்கள் நிலாரசிகனும், லட்சுமிகாந்தனும்,சபரிநாதனும்,பெருந்தேவியும், நடந்து வந்து கொண்டிருந்தார்கள். நிலவின் ஒளியைப் பருகியபடியே அவர்கள் கு,அழகிரிசாமியின் கதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு வருகிறார்கள், காற்று குளிர்ந்து வருகிறது. அவர்கள் நான்கடிக்கு ஒருமுறை நின்று பேசுகிறார்கள். அவர்கள் பேசுவதை விந்தையான ஆர்வத்தோடு கரிசல்காட்டுவெளி உற்றுக் கேட்கிறது.
       
கவிஞர் தேவதச்சன் தன் கைப்பையிலிருந்து வெத்திலையை எடுத்துப் போடுகிறார். நானும், கோணங்கியும் மாதவராஜும், கிருஷியும்,சிகரெட்டைப் பற்ற வைக்கிறோம். சிறிது நேரம் பேச்சில்லை. அமைதி. பேரமைதி. பூச்சிகளின் ரீங்காரத்தைத் தவிர வேறெந்தச் சத்தமும் இல்லை.தூரத்தில் தேசியநாற்கரச் சாலையில் விரையும் வாகனங்களின் வெளிச்சப் புள்ளிகள் ஓடி மறைகின்றன.
     
எங்கள் எல்லோருக்கும் பின்னால் தனியே ஒரு காலடிச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. கோணங்கி தான் அதைக் கவனித்துச் சொன்னார். அதன் பிறகே நாங்கள் எல்லோரும் கவனித்தோம். கு.அழகிரிசாமியின் ஆவி என்றார் கோணங்கி. கு.அழகிரிசாமியின் ஆகிருதி என்றார் கிருஷி. கு.அழகிரிசாமியின் ஆளுமை என்றார் மாதவராஜ். எல்லாவற்றையும் ஆமோதித்தபடியே தலையாட்டிக் கொண்டிருந்தார் தேவதச்சன். இல்லை கு.அழகிரிசாமியே தான் அது. தான் எழுதிய கதையைத் திருப்பிப் பார்க்க பகல் முழுவதும் இங்கேயே உட்கார்ந்திருந்தார் என்றேன் நான்.
       
அந்த பௌணர்மி இரவில் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் கு.அழகிரிசாமி என்ற கலையாளுமையின் ஆவி எங்கள் எல்லோர்மீதும் இறங்கிக் கொண்டிருந்தது. எங்கள் மூதாதையை நாங்கள் வணங்கினோம். கு.அழகிரிசாமியே………

நன்றி- மீடியா வாய்ஸ்

12 comments:

  1. உங்க எழுத்தை வாசித்ததில்லை, உங்களப்பத்தி மாதவராஜ் வலைப்பூவில் இடுகை இட்டிருந்தார். ஒரு பெளர்ணமியில் குமாரபுரம் ரயில்வே ஸ்டேசன் சந்திப்பு. எனக்கு பிடித்த ரயில்நிலையங்களில் அதுவும் ஒன்று. அத்துவானக் காட்டில் இருப்பதால் என்னவோ. அது மாதிரி இன்னும் குருமலை, இளவேலங்கால் மணியாச்சி என்ற ஸ்டேசன்கள் இருந்தன சிலஸ்டேசன்கள் இல்லாமல் போய்விட்டன.

    ரயில்வே டெவலப்மெண்ட ஆகிறது, சில கிராமத்து ஸ்டேசன்களை மூடிவிட்டு....

    ReplyDelete
    Replies
    1. வளர்ச்சி சில சமயங்களில் பல இனிய அனுபவங்களை மறுத்தே வளர்கிறது. இப்போது குருமலை, இளவேலங்கால்,நாலாட்டின்புத்தூர், இல்லை. நீங்கள் இந்தப் பக்கத்துக்காரரா? நன்றி நண்பரே!

      Delete
  2. அற்புதமான எழுத்து... எப்படியான வாசிப்பணுபவத்தை தருகிறது... கடைசிப்பெட்டியினை பிடித்துக் கொண்டு வரும் நிசப்தம்... கவிமனம்...

    எல்லோருடனும்... நானும் நடந்து வரமுடிந்தது...அப்போதைக்கான ஒரு சுககணத்தைப் பிடித்துக் கொண்டு, நானும் ஆசுவாசமாய் உங்களுடன், என் விரலிடை முளைத்த ஆறாம் விரலை எரித்துக் கொண்டு சரளைக்கற்களை எட்டி எட்டி உதைத்தபடி வரமுடிந்தது... கு.அழகிரிசாமியின் கதைகள் அற்புதமானவை... அந்த இடத்தை யாரும் இன்னும் நிரப்பமுடியாமல் கிடக்கிறது என்று யாராவது சொன்னால், கு.அழகிரிசாமியின் ஆளுமை அதில் உயர்ந்து நிற்கிறது...அந்த இடம் வெற்றிடமாய் இல்லை... என்று காட்டமுடிகிறது அவரைத் திரும்ப வாசிக்குமிடத்தை...அந்த கணத்தை... அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
    Replies
    1. அதிகமும் கொண்டாடப் படாத கு.அழகிரிசாமியை நாமெல்லோரும் சேர்ந்து கொண்டாட வேண்டிய தருணம். நன்றி நண்பரே!

      Delete
    2. நானும் உங்களோடு வந்திருந்த அனுபவத்தைக் கொடுத்தது உங்கள் எழுத்து. இப்படி புத்தகத்தைப் பற்றி, எழுத்தைப் பற்றி பௌர்ணமி இரவில் பேச முடிந்த உங்களையெல்லாம் பார்த்து பொறாமை கூட எழுகிறது!

      Delete
  3. மிக நல்ல பதிவு. உங்களை அடிக்கடி சந்தித்திருக்கிறேன். எனக்கும் கோவில்பட்டி தான். உங்கள் 'கரிசல்' புத்தகக் கடையில் பல புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். இத்தனை நல்ல எழுத்துக்கு சொந்தக்காரர் தாங்கள் என்பது அப்போது தெரியாமல் போனது எனது துரதிர்ஷ்டமே

    ReplyDelete
  4. தங்கள் எழுத்தின் நடை மிகவும் என்னை கவர்ந்தது.குறிப்பாக " கோவில்பட்டி சந்தைக்குக் கொண்டு செல்வதற்கும், தூராதூரப் பயணங்களுக்கும் ரயில் தான். அப்போது ரயில் வரும் நேரமென்றால் ஸ்டேஷன் களை கட்டி விடும். காடுகளுக்குள்ளிருந்து திடீர் திடீரென மக்கள் முளைத்து வருவார்கள். மழை பெய்து ஓடும் தாம்போதிகளைப் போல சுற்றிலுமுள்ள காடுகளிலிருந்து ஒத்தையடிப் பாதைகள் ஓடி வரும்.
    குப் குப் எனக்கரிப்புகையைக் கக்கிக் கொண்டே இளைத்தபடி எல்லோர் கனவுகளையும் சுமந்து கொண்டு வந்து நிற்கும் ரயில்."
    மிகவும் யதர்த்தமான வர்ணனை.உங்களுக்கும் உங்களை அறிமுகபடுத்திய மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கும் நன்றி.
    அன்புடன்,
    அ.சேஷகிரி,
    ஆழ்வார்திருநகரி.

    ReplyDelete
  5. அருமை தோழர்

    ReplyDelete
  6. இன்றுதான் வாசித்தேன். அருமை :)
    உங்கள் புனைவில் நான் திரிவது மகிழ்ச்சி :)

    ReplyDelete
  7. Please change the Tamil font to some other wide one.
    Current font looks very congestive !.
    Sorry for typing in english.
    I like to read your blog continuously ....

    ReplyDelete