Tuesday 9 March 2021

அலாவுதீனின் சாகசங்கள்


 அலாவுதீனின் சாகசஙகள்

சென்னை புத்தகக் கண்காட்சி 2021- ல் கவனிக்கப்பட வேண்டிய சிறுவர் இலக்கிய புத்தகங்கள். "அலாவுதீனின் சாகசங்கள்-எழுத்தாளர் உதயசங்கர்- பாரதி புத்தகாலயம்" (இளையோருக்கான நாவல்)

அலாவுதீனால் விடுதலை பெற்ற ஜீனி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கின்றனர். ஆனால் என்ன..? அவர்கள் சந்தித்த காலம் - கொரோனா பேரிடர் காலம். பேரிடர் காலத்தின் போக்குகளை அலாவுதீனுக்கு மட்டுமல்ல வாசகர்களுக்கு புரிய வைக்கிறது ஜீனி. பேரிடர் காலத்தைப் பற்றி மட்டுமல்ல, பல நூற்றாண்டாக நமது சமூகத்தில் இருக்கும் பல இக்கட்டான விசயங்களையும் ஜீனி அலாவுதினிடம் பேசுகிறது. தினமும் இரவில் அவர்களுக்கு எங்கிருந்தோ ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது, அந்தக் குரலை தேடி "மந்திர சொல்" லின் துணையோடு அவர்கள் இருவரும் பயணிக்கின்றனர்..

அந்தச் சொல் என்ன தெரியுமா ? "டியோப்"...

இந்த மந்திர சொல் அவர்களுக்கு புதிய உருவத்தை தருகிறது. மணற் உலகிற்கு செல்லும் போது எறும்பாக மாறுகிறார்கள், சித்திர குள்ளர்களின் உலகிற்கு செல்லும் போது சித்திரகுள்ளர்களாக மாறுகின்றனர். நினைத்த நேரத்தில் பெரிய உருவத்தை எடுக்கின்றனர், பறக்கின்றனர், ஏன் கொரோனா வைரசையும் சந்திக்கின்றனர்..அதுமட்டுமல்லை கொரோனா வைரஸ் கடத்திச் சென்றவர்களை கூட தேடி செல்கின்றனர்...இவ்வாறு எண்ணற்ற சாகச பயணமாக செல்கிறது நாவல்...

அந்தச் சாகச பயணத்தில் அவர்கள் செல்லும் ஒவ்வொரு இடமும், சந்திக்கும் ஒவ்வொரு அழுகுரலும், அதற்கு பின்னால் இருக்கும் சிக்கல்களும் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விசயங்கள் தான். ஓர் ஊரில், சமையல் அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் பெண்களின் அழுகுரல் கேட்டு செல்கிறார்கள் ஜீனியும் அலாவுதினும்..அதை வாசிக்கும் போது சமீபத்தில் வெளியான "The Great indian kitchen" ஏற்படுத்திய அதிர்வலைகளை இந்தப் புத்தகமும் நமது இளையோர் மனதில் ஏற்படுத்தும் என்ற நம்பிகை எழுகிறது. சாதி, மதம், சடங்கு என இங்கு பரவிக்கிடக்கும் மூடநம்பிகைகளை எந்த எல்லைக்குள் பேச வேண்டுமோ அந்த எல்லைக்குள் அழகாக பேசி இருக்கிறார் உதயசங்கர் அவர்கள்.

இந்த விசயங்கள் எல்லாம் வாசித்ததும் நேரடியாக வாசகரின் மனதினுள் கேள்விகளை தூண்டி விடுமா என்ற நிலையில் இருந்து..கட்டாயம் இனி அவர்கள் அந்த விசயங்களை அல்லது யாரோ ஒருவர் ஒடுக்கப்படும் போது கட்டாயம் இந்த நாவலின் காட்சிகள் அவர்களின் மனதில் விரிவடையும் என்று உறுதியாக சொல்ல முடியும்...தமிழ் சிறார் இலக்கியத்தில் நேரடியாக இம்மண்ணில் உள்ள சிக்கல்களை பேசும் புதிய முயற்சி தான் இந்த நாவல். துணிச்சலாக இறங்கி விளையாடும் எழுத்தாளர் உதயசங்கள் ஐயா அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்.

- பஞ்சு மிட்டாய் பிரபு

Thursday 4 March 2021

பேசும் கிளிகள்

 

பேசும் கிளிகள்

உதயசங்கர்


செம்பூரில் கிளிப்பொம்மைகள் செய்யும் தொழில் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அந்த ஊரில் இருந்த எல்லோரும் விதவிதமான கிளிப்பொம்மைகளைச் செய்து வேறு ஊர்களுக்கு அனுப்பினார்கள். அந்த ஊர் கிளிப்பொம்மைகள் அவ்வளவு அழகாக இருந்தன. அச்சு அசல் உயிருள்ள கிளி மாதிரியே இருந்தன. அந்த பொம்மைகளின் முதுகில் தடவிக்கொடுத்தால் கீகீகீகீக்க்கீ என்று கத்தின. எனவே குழந்தைகள் எல்லாருக்கும் கிளிப்பொம்மைகளை மிகவும் பிடித்துப்போய்விட்டது. எல்லாரும் தங்களுடைய கிளிப்பொம்மை தான் அழகானது என்று போட்டி போட்டு பெருமைப்பட்டுக்கொண்டனர்.

அங்கே அறிவழகன், அன்பழகன் என்று இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள். அந்த நண்பர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒன்றாகவே விளையாடுவார்கள். ஒன்றாகவே படிப்பார்கள். அறிவழகனின் அப்பா பொற்கொல்லர். மூக்குத்தி, கம்மல், தோடு, புல்லாக்கு, நெத்திச்சூடி, காசுமாலை, சங்கிலி, பதக்கம், மோதிரம், நெளிவு, வங்கி, காதணி, பாம்படம், தலைச்சூடி, ஒட்டியாணம், கொலுசு, மெட்டி, தண்டட்டி, என்று விதவிதமான தங்கநகைகளைச் செய்து கொடுப்பவர். அன்பழகனின் அப்பா இரும்புக்கொல்லர். வாளி, போணி, சட்டி, ஏர்க்கொழுமுனை, கருக்கரிவாள், வெட்டரிவாள், லாடம், மண்வெட்டி, களைக்கொத்தி, கைக்கரண்டி, குடம், பானை, கொப்பரை, குண்டான், என்று இரும்பினால் பொருட்கள் செய்து கொடுப்பவர்.

ஒரு நாள் அன்பழகனின் அப்பா இரும்பினால் ஒரு தகரக்கிளி செய்து கொடுத்தார். அந்தக்கிளி சிறகுகளை விரிக்கும். கால்களை எட்டு எடுத்து வைத்து இரண்டடி நடக்கும். ஒட்ட வைக்கப்பட்ட கோலிக்குண்டு கண்களை உருட்டும். கீ கீ கீ என்று கத்தவும் செய்யும். பள்ளிக்கூடத்தில் இருந்த அத்தனை பேரும் அன்பழகனின் கிளியைப் பார்க்கக் கூட்டமாய் கூடி விட்டனர். அன்பழகனும் அது எப்படி வேலை செய்கிறது என்று எல்லோருக்கும் சொல்லிக்கொடுத்தான். ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட கம்பிகளை இயக்கினால் அந்தக்கிளி நடக்கும்., கத்தும், கண்களை உருட்டும். அறிவழகனுக்கு தகரக்கிளியைப் பிடிக்கவில்லை. அதைத்தொடவில்லை. அன்பழகன் அதைக் கொடுத்தபோது,

“ வேண்டாம்.. வேண்டாம்.. தகரத்தில என்ன அழகு இருக்கு.. பார்த்தாலே எனக்குப் பிடிக்கல..”

என்று சொன்னான். அதுமட்டுமல்ல. அதுவரை நட்பாக இருந்தவன், திடீரென அன்பழகனைக் கண்டால் விலகிப்போனான். எத்தனையோ தடவை அன்பழகன் நெருங்கி வந்தாலும் அறிவழகன் கண்டு கொள்ளவில்லை.

ஒருநாள் அறிவழகன் ஒரு தங்கக்கிளியைக் கொண்டு வந்தான். குட்டியாய், அழகாக, இருந்தது. நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் பார்த்துக்கொண்டேயிருக்கலாம் போல இருந்தது. ஆனால் அது சிறகுகளை விரிக்கவில்லை. கண்களை உருட்டவில்லை. காலடி எடுத்து வைக்கவில்லை. கீ என்று பேசவில்லை. அசையாமல் ஒரே இடத்தில் நின்றது. அறிவழகன் அதை யார் கையிலும் கொடுக்கவில்லை. யாரையும் தொடவிடவில்லை. தங்கக்கிளியாச்சே! அவனுடைய கையிலேயே வைத்துக்கொண்டு எல்லோருக்கும் காட்டினான். அன்பழகன்

“ டேய் ரொம்ப அழகா இருக்குடா.. அப்படியே அச்சு அசலா கிளி மாதிரியே இருக்கு…. “ என்று சொல்லிக்கொண்டே அதைத் தொடுவதற்கு முயற்சி செய்தான். அறிவழகன் திட்டினான்.

“ டேய்! இது என்ன தகரம்னு நினைச்சீங்களா? தங்கம்! தங்கக்கிளி..” முதலில் ஆர்வமாக இருந்த நண்பர்கள் பின்னர் அவனை விட்டு விலகிப்போய் விட்டார்கள்.

இப்போது தங்கக்கிளியைப் பார்ப்பதற்கு ஆளில்லை. அன்றிரவு அறிவழகன் உறங்கும்போது ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் அவனுடைய தங்கக்கிளி சிறகுகளை விரித்துப் பறந்து சென்றது. ஒரு காய்ந்த பனைமரத்தில் இருந்த ஒரு பொந்தில் சென்று உட்கார்ந்தது. அங்கே அந்தத் தகரக்கிளியும் இருந்தது. உள்ளே இரண்டு கிளிக்குஞ்சுகளின் சத்தமும் கேட்டது. அந்தக்கிளிக்குஞ்சுகளிடம் தங்கக்கிளி,

“ அறிவழகன் வருத்தமாக இருக்கிறான்.. அவனிடமிருந்த கலகலப்பு போய் விட்டது.. தங்கத்தில் என்னைச் செய்து  சிலையாக்கி விட்டான். அதனால் யாரையும் தொட விடவில்லை... எப்போதும் பாதுகாப்பாய் இருக்க வேண்டியிருக்கிறது..  யாராவது திருடி விடுவார்களோ என்று அறிவழகன் பயந்து கொண்டேயிருக்கிறான்… எல்லோரையும் சந்தேகப்படுகிறான்.. அவனுடைய இயல்பான குணங்களான அன்பும் நட்பும் மாறி விட்டது.. தங்கமோ தகரமோ கிளி கிளி தான்..இல்லையா?…”

என்று சொல்லிக்கொண்டிருந்தது. தகரத்திலிருந்த கிளிக்குஞ்சுகள் வாயை வாயைத் திறந்தபடி “ ஆமாம்.. ஆமாம்..” என்று கத்தின. அப்போது தகரக்கிளி,

“ இப்போது கூட அறிவழகன் நாம் பேசுவதைக் கனவில் நடப்பதாக நினைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.. பாவம் நல்லபையன். அவனைப் பற்றி தினமும் அன்பழகன் நினைத்துக் கவலைப்படுவது இவனுக்குத் தெரியாது....”

என்று சொன்னதைக் கேட்ட அறிவழகன் திடுக்கிட்டு விழித்தான். அருகில் தங்கக்கிளி இருக்கிறதா என்று தடவிப்பார்த்தான். தங்கக்கிளி உட்கார்ந்திருந்தது. அதன் உடலில் சூடு இருந்தது. எங்கோ வெகு தூரம் பறந்து சென்று வந்ததைப் போல லேசாக அதன் சிறகுகளில் துடிப்பு தெரிந்தது. அறிவழகன் தங்கக்கிளியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

மறுநாள் பள்ளிக்கூடம் போனதும் முதல் வேலையாக அறிவழகன் அன்பழகனைத் தேடிக்கொண்டு போனான். தங்கக்கிளியை அவன் கையில் கொடுத்தான். அவனுடைய தகரக்கிளியைக் கையில் வாங்கிக் கொஞ்சினான். தகரக்கிளியும் கீகீகீகீகீ என்று அவனைக் கொஞ்சியது. அதைப் பார்த்த தங்கக்கிளியும் முதல்முறையாக மகிழ்ச்சி பொங்க, கீகீகீகீ என்று சத்தம் கொடுத்தது.

அன்பழகனும் அறிவழகனும் சிரித்தனர்.

நன்றி - பொம்மி