உதயசங்கர்
அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதர்களின் வாழ்க்கையில் அளப்பரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், போக்குவரத்து, என்று சகல தேவைகளிலும் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பசுமைப்புரட்சிக்கு முன்பு அரிசி உணவு ஆடம்பரமான உணவாக இருந்தது. மேல்சாதியினரின் அன்றாட உணவாக, அரசு அலுவலர்களின் அல்லது மாதச்சம்பளம் வாங்குபவர்களின் அன்றாட உணவாகவும் இருந்த காலமும் இருந்தது. பெரும்பாலான மக்கள் வீடுகளில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில், தீபாவளி, பொங்கல், பண்டிகைகளில் மட்டும், இட்லி, தோசையும், அரிசி சாப்பாடும் கிடைத்தது. அப்போது இட்லி தோசை பற்றியும் அரிசிச்சோறு பற்றியும் வந்த கதைகள் ஏராளம். அரிதாக ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசியே எல்லோர் வீடுகளிலும் உணவு. அதனாலேயே ஒரு ரூபாய்க்கு ஒருபடி அரிசி என்ற வாக்குறுதி சாமானியமக்களிடம் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது என்பதையும் நினைவு படுத்திக் கொள்ளலாம். அப்படியானால் பெரும்பாலான மக்களின் அன்றாட உணவாக இன்று சிறு தானியங்கள் என்று பதவிசாக சொல்லப்படுகிற கம்பு, கேப்பை, குதிரைவாலி, சாமை, தினை, போன்ற தானியங்களும், கீரை வகைகளும், இறைச்சி வகைகளும் கிழங்கு வகைகளும், உணவாக இருந்தன. காய்கறிகள் இப்போது போல எக்காலமும் தாராளமாக கிடைத்ததில்லை. பசுமைப்புரட்சி வந்த பிறகு இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. புதிய குறுகிய கால நெல் வகைகளும், எக்காலமும் விளையும் காய்கறிகளும் உற்பத்தி செய்யப்பட்டன. அதற்கான இரசாயன உரங்கள் தயாரிக்கப்பட்டன. மக்களுக்கு எல்லாமும் எக்காலமும் கிடைத்தது.
வருடத்தில் பெரும்பாலான காலம் வெப்பமாக இருப்பதினால் விவசாயிகள் காடுகரைகளில் விவசாய வேலைகள் செய்யும் போது கோவணமோ, லங்கோடோ, ( இன்றைய ஜட்டி மாதிரியான துணியை டிசைன் செய்த ஒரு அரையாடை ) உடுத்தியிருப்பார்கள். மற்ற நேரங்களில் இடுப்பில் நாலுமுழ கைத்தறி வேட்டியும் தோளில் துண்டும் அணிந்திருப்பார்கள். பெண்களும் கைத்தறிச் சேலை மட்டுமே உடுத்தியிருப்பார்கள். அப்போதும் அரசு அலுவலர்கள், மேல்சாதியினர் மட்டுமே சட்டை, போட்டிருந்தார்கள். வெள்ளைக்காரர்களின் உபயத்தால் பேண்டும் போட ஆரம்பித்தார்கள். கைத்தறியாக இருந்த தொழில் மிஷின் தறியாக மாறியது. துணி உற்பத்தி செய்யும் மில்கள் அதிகமாயின. விதவிதமான துணிகளும் வந்தன. டெரிலின், டெரிகாட்டன், புல்வாயில், நைலக்ஸ், நைலான், பாலிஸ்டர், ஸ்பன்பாலிஸ்டர், என்று இயற்கை நூலிழைகளாலும், செயற்கை நூலிழைகளாலும் செய்யப்பட்ட விதவிதமான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. எல்லோரும் சட்டை போட்டனர். எல்லோரும் பேண்ட் அணிந்தனர். கோவணமும், லங்கோடும் போய் ஜட்டிகள் வந்தன. இப்போது தான் மக்கள் நாகரிகமடைந்திருப்பதாக எல்லோரும் பேசிக்கொண்டனர். வேட்டி கட்டியிருப்பவரை ஏளனமாகப் பார்க்கிற மனோபாவமும் வளர்ந்தது. ஆக நாம் உடையிலும் தன்னிறைவு பெற்றோம்.
ஒட்டு வீடுகளே நகரங்களில் அதிகம். காரை வீடுகள் பெரும்பணக்காரர்களுக்கு மட்டும். கூரை வீடுகள் தான் கிராமங்களிலும் நகரங்களின் எல்லைப்பகுதிகளிலும் இருந்தன. மழைக்கு ஒழுகும் வீடுகள்,. வெயிலுக்கு அனல் கக்கும் வீடுகள். மரங்கள், சத்திரங்கள், மக்களின் புகலிடமாக இருந்தன. சிமெண்ட் ஆலைகள் வந்தன. செங்கல் சூளைகள் அதிகமாயின காங்கிரிட் வீடுகள், மாடி வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வாஸ்துவின் ஸ்டிரிக்டான விதிமுறைகளின் படியே கட்டப்படுகின்றன. அக்னி மூலை, வாயுமூலை, ஈசானமூலை, என்று மூலைகள் பெருகி வாசலில் கக்கூஸோ, நடு ஹாலில் செப்டிக் டேங்கும் வைக்கிற கோமாளித்தனங்களையும் செய்கிறோம். இதற்கெல்லாம் அறிவியல்பூர்வமான விளக்கம் தர விற்பன்னர்கள் வந்து விட்டார்கள். இப்போதும் ஓட்டு வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் தெரியத்தான் செய்கின்றன. கூரை வீடுகள் அருகியே விட்டது. மரங்களும் நிழலும் குறைந்து விட்டன. வீடுகளில் குளிர்சாதன வசதிகள் வந்து விட்டன. வீடுகளில் தொலைக்காட்சி, ஃபிரிட்ஜ், கேஸ் அடுப்பு, சோஃபாக்கள், கம்ப்யூட்டர், லேப்டாப்புகள், ஒன்றுக்கு நாலு செல்ஃபோன்கள், மிக்சி, கிரைண்டர், குக்கர், சாப்பர், டப்பர்வேர், என்று நவீன சாதனங்களால் வீடுகள் திணறிக்கொண்டிருக்கிருக்கிறன. தண்ணீர் மிக அரிதான ஒரு பொருள். ஒருவாளித்தண்ணீரில் குளியல். அல்லது குளம் குட்டை, கண்மாயில்,குளியல், கிணற்று நீர், குளத்து நீர், அடிபைப்பு தண்ணீர் தான் குடிப்பதற்கு, மண்பானை, பித்தளைப்பானைகள், தகரக்குடங்கள், குடி தண்ணீருக்காக பெரிய வரிசைகளில் காத்திருந்த காலம் இருந்தது. தண்ணீருக்காக நடந்த சண்டைகள், வழக்குகள், தாக்குதல்கள் ஏராளம். அப்போது நிலத்தடி நீருக்காக போர் போடுவது அரசாங்கத்தால் மட்டுமே முடியும். நாம் முன்னேறினோம். சொந்த வீடுகள் கட்டிய யாவரும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை விட ஒருவர் ஆழமாக, அகலமாக, போர் போட்டோம். பக்கத்து வீட்டுக்காரர் ஐநூறு அடி போட்டால், நாம் எழுநூற்றம்பது அடி போட்டோம். நிலத்தடி நீரை எக்குத்தப்பாய் செலவு செய்தோம். மழைநீர் ஒரு சொட்டு கூட மண்ணில் இறங்கி விடக்கூடாதென வீடெங்கும் தளம் போட்டோம். மரமோ, செடியோ, வளர்த்தால் தரையைப் பெயர்த்து விடும் என்று குரோட்டன்ஸ் செடிகளை தொட்டிகளில் வளர்த்தோம். நிலத்தடி நீர் உவர்ப்பாக இருந்ததால் ஆர்.ஓ. எனப்படும் உப்புநீர் சுத்திகரிப்பு சாதனத்தையும், குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தையும் வீட்டில் வைத்தோம். நிலத்தடி நீர் வற்றி, கார்ப்பொரேஷன், முனிசிபாலிடி, பஞ்சாயத்து தண்ணீர் பிடிக்காத போது மினரல் வாட்டர் கேன்களை வாங்கிக் குடித்தோம். வெளியே எங்கு போனாலும் பொதுக்குடிநீரைக் குடித்துக் கொண்டிருந்த நாம் சுகாதார விழிப்புணர்வு அடைந்த பிறகு கோக்கோ கோலா கம்பெனியின் கின்லே வாட்டர் பாட்டிலோடு அலைந்து கொண்டிருக்கிறோம். அரசாங்கமும் தன்பங்குக்கு குடி தண்ணீரை விற்று லாபம் பார்க்கிறது.
சைக்கிள் வாங்குவது பிரம்மபிரயத்தனமாக இருந்த காலமும் ஒன்றிருந்தது. சைக்கிள் கடைக்காரர் பையன்களுக்கு தெய்வமாகத் தெரிந்தார். சைக்கிள் ஓசிக்கு ஓட்டுவதற்கு கொடுப்பவனே உண்மையான நண்பன், உறவினர், உற்றார் என்றெல்லாம் பேசப்பட்டது. சைக்கிளில் முக்காப்பெடல், அரைப்பெடல், பாரில் உடகார்ந்து ஸ்டைலாக செல்வது, ஒரு கையை விட்டு ஓட்டுவது, இரண்டு கைகளையும் விட்டு ஓட்டுவது, கேரியரில் உட்கார்ந்து செல்வது, ஊர் விட்டு ஊர் சைக்கிள் பிரயாணம் என்று சைக்கிளில் ஒரு கனவின் பல வண்ணமாக மிளிர்ந்த காலம் அது. மற்றபடி ஒரு கிலோ மீட்டரோ, பத்து கிலோ மீட்டரோ எல்லோரும் நடை தான். நடப்பதற்கு சளைப்பதில்லை யாரும். கிராமத்து மக்களும் நகரத்து மக்களும் சரி அத்தனை தலைச்சுமைகளும் சுமந்து கொண்டு நடையாய் நடந்து தேசமெங்கும் திரிந்தார்கள், அறிவியல் வளர்ச்சியால் மொபெட்டுகளும், மோட்டார் சைக்கிள்களும், கார்களும், பெருகி விட்டன. அனைத்து மத்திய தர வர்க்கத்தினரிடமும் குறைந்தது இரண்டு டூ வீலர்கள் எனப்படும் ( இந்தக்கணக்கில் சைக்கிள் வராது என்பதைக் கவனத்தில் கொள்க ) வண்டிகள் இருக்கும். அடுத்த கட்டமாக கார் வாங்குவதற்கான முயற்சியும் இருக்கும். இப்போதெல்லாம் ஊருக்குள் ஆடு, மாடு மந்தைகள் ஊர்ந்து செல்வதைப் போல இந்த மொபெட்டுகளும், மோட்டார்சைக்கிள்களும், கார்களும், செல்வதை காலை மாலை வேளைகளில் பார்க்கலாம். நடந்து செல்பவர்களை எண்ணி விடலாம். சைக்கிள் கண்ணிலேயே தெரியாது. எல்லோரும் அவசரம் அவசரமாக ஒரு எமர்ஜென்சிக்காக செல்வதைப் போல ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு, ஒரு நிமிடம் கூட நிற்கப் பொறுமையில்லாமல் பறந்து கொண்டிருக்கிறோம்.
தொலைக்காட்சியும், கம்ப்யூட்டரும் இன்று அத்தியாவசியப் பொருட்களாகி விட்டது. வீட்டில் உள்ள பெண்களின் மன அழுத்தத்தை தொலைக்காட்சி சீரியல்கள் அதிகப்படுத்துகிற பொறுப்பை எடுத்துக் கொள்ள, குழந்தைகளின் மனதை கெடுக்கிற அத்தனை சாதனங்களும் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு கம்யூட்டர் உதவி செய்ய சமூக அறம் சார்ந்த அனைத்து நடைமுறைகளையும் கை கழுவிக்கொண்டிருக்கிறோம். நம்மை நல்வழிப்படுத்த எப்போதும் எல்லாத்துறைகளிலும் தேவதூதர்கள் அவதரித்து வர வேண்டுமென்றும் அதுவரை நாம் அனைவரும் இப்படி இருப்பது இயல்பு தான் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
நம்மை இதுவரை யார் வழி நடத்தியிருக்கிறார்கள் என்று ஒரு கணமேனும் யோசித்ததில்லை. இப்போதும் நம்மை யார் வழி நடத்துகிறார்கள் என்றும் யோசிக்க வில்லை. ஆனால் கண்களை விற்று சித்திரம் வாங்கும் விநோதத்தைச் செய்து கொண்டிருக்கிறோம். நோய்களுக்காக நடைப்பயிற்சி செய்வது எப்படி எவ்வளவு நேரம், எவ்வளவு தூரம் என்று ஃபீஸ் கட்டி ஆலோசனைகள் கேட்கிறோம். நோய்கள் வந்த பிறகு உணவு குறித்து அக்கறைப்படுகிறோம். இயற்கை வேளாண்மை உற்பத்தி பொருட்களை, சிறுதானியங்களை, காய்கறிகளைத் தேடுகிறோம். ஊரெங்கும் புகை கக்கி நம் ஒவ்வொருவர் பங்குக்கும் ஒரு மி.மி. அளவாவது ஓசோனை ஓட்டை போட்டு விட்டு சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படுகிறோம். சகமனிதர்களோடு போட்டி போடுவதையே வாழ்வின் லட்சியமாக வைத்துக் கொண்டு ஊருக்கு அறம் பற்றி உபதேசிக்கிறோம். அளவுக்கு மீறிய பேராசையால் நம்மை மறந்து நம் சமூகத்தை மறந்த நாம் ஒழுக்கம், அறம், சமூகம் என்று பூஜ்யஸ்ரீயிடமோ, ஓஷோ, ஈசோ விடமோ யார் யாரிடமோ பணத்தையும் அறிவையும் இழக்கிறோம். யார் என்ன சொன்னாலும் நம்புகிறோம். விளம்பரங்களையே உண்மையாக நினைக்கிறோம். சினிமா கலைஞர்களை இன்னமும் கடவுளாக பாவிக்கிறோம். அவர்களை நம்மை ஆள்பவர்களாகத் தேர்ந்தெடுக்கத் தயாராக இருக்கிறோம். ஈராயிரம் வருடங்களுக்கு முன்னால் பிரித்தாள கையாண்ட பிராமணிய தந்திரமான சாதியத்தை இன்னமும் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறோம். சமாதான வாழ்வைச் சீர்குலைக்கிறார்கள் என்று தெரிந்தே மதவெறிச் சக்திகளுக்கு ஆதரவளிக்கிறோம். நம்மிடம் எங்கோ கோளாறு இருக்கிறதா?
என்ன செய்யப் போகிறோம் நாம்?
ஏன் இப்படி இருக்கிறோம்?
ஒரு கணமேனும் நாம் சிந்திக்கிறோமா?
சிந்திப்போமா?