மருத்துவத்தின் அரசியல்
உதயசங்கர்
மனிதன் எப்போதும் நோயின்றி வாழவே
விரும்புகிறான். சிறு தும்மல் வந்தாலும் தன் உடல்நலத்தைப் பற்றிச் சந்தேகம் வந்து விடுகிறது.
உடனே மருத்துவரைத் தேடி ஓடுகிறான். தன் உடல்நலத்தைப் பேணுவதற்காக எவ்வளவு பணமும் செலவழிக்கத்
தயாராக இருக்கிறான். ஆதியில் மருத்துவம் என்பது சேவைத்தொழிலாக இருந்தது. காலனிய ஆட்சியில்
கொஞ்சம் கொஞ்சமாக அது பணத்தொழிலாக உருப்பெற்றது. இன்று கொஞ்சநஞ்சம் இருந்த சேவை என்ற
குணாதிசயம் முற்றிலும் முற்றிலும் பணம் கொழிக்கும் தொழிற்சாலையாக மாறியிருக்கிறது.
இந்த மருத்துவத்தொழிற்சாலையின் முதலாளிகள் மருந்துக் கம்பெனிகள் தான். அதன் ஊழியர்களாக
நவீன மருத்துவர்கள், தொழிற்சாலை கருவிகளாக புதிய புதிய மருந்துகள், அந்த கருவிகளில்
பயன்படுத்துகிற கச்சாபொருட்களாக அப்பாவி நோயாளிகள். நோய்களைக் குறித்தும் ஆரோக்கியம்
குறித்தும் பதட்டத்தை நோயாளிகளிடம் ஏற்படுத்தி அவர்களிடம் மருந்துகளைப் பயன்படுத்தி
ஏற்படும் விளைவாக கொள்ளை லாபம் பன்னாட்டு உள்நாட்டு மருந்துக்கம்பெனிகளுக்குப் போகிறது.
திறமையாக மருந்துகளைக் கையாண்டு மருந்துக்கம்பெனிகள் லாபம் கொழிக்க உதவிய அதன் ஊழியர்களான
நவீன மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை, போனஸ், பரிசு, என்று ஏராளமான சலுகைகள். ஆக நோயாளிகள்
அவருடைய நோயைக் கண்டுபிடிக்கிற ( இப்போதெல்லாம் பெரும்பாலும் மருத்துவ உபகரணங்கள் தானே
நோயைக் கண்டுபிடிக்கின்றன? ) மருத்துவருக்கும் அவர் பரிந்துரைக்கிற மருந்துகளுக்கும்
சேர்த்து பணம் செலவழிக்கிறார்.
நோய்க்கான காரணிகள் என்னென்ன?
பொதுச்சுகாதாரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நோய் விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்று
அரசு சார்ந்தும், தனிமனித பழக்கவழக்கங்கள், சுகாதாரவிழிப்புணர்வின்மை, என்று தனிமனிதர்கள்
சார்ந்தும் சொல்லலாம். இந்திய மக்களில் சரிபாதிக்கு மேல் கிட்டத்தட்ட 60 கோடிபேருக்கு
மேல் கழிப்பறைவசதி கிடையாது. இவர்கள் திறந்த வெளியில் மலம்கழிக்கும் பழக்கத்தினால்
சுகாதாரச்சீர்கேடு ஏற்படுகிறது. அதனால் நிமோனியா, வயிற்றாலை ( டையோரியா )போன்ற நோய்களினாலும்
ஊட்டச்சத்துக்குறைபாட்டினாலும் தினம் 5000 குழந்தைகள் இறந்து போகிறார்கள். இதில் பாதிக்கும்
மேற்பட்ட மரணங்கள் தடுக்கக்கூடியது.
அதே போல ஊட்டச்சத்துக்குறைபாட்டினால்
ஏற்படும் இரத்தசோகை நோயினால் இந்தியப்பெண்களில் 20 முதல் 40 சதவீதம் வரை குழந்தைபேற்றில்
இறந்து போகிறார்கள். அது மட்டுமல்ல உலகளவில்
இரத்தசோகையினால் ஏற்படும் இறப்புகளில் 50 சதவீதத்துக்கும் மேல் இந்தியாவில்
நிகழ்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் சமீப
ஆய்வறிக்கையில் இதய நோய்கள், நீண்டகால சுவாச மண்டல நோய்கள், சர்க்கரை நோய், புற்று
நோய் ஆகிய தொற்று அல்லாத நோய்களினால் 60 சதவீதம் மக்கள் இறக்க நேரிடுகிறது. இத்துடன்
சேர்த்து யு.என்.டி.பி. ( UNITED NATION DEVELOPMENT PROGRAMME ) யின் 2014 ஆம் ஆண்டு
அறிக்கையின்படி மனித நலவாழ்வு குறியீட்டில் உள்ள 187 நாடுகளில் இந்தியா 137 ஆவது இடத்தில்
இருக்கிறது என்பது பெருமைக்குரியதில்லையே.
இந்தியாவில் வறுமை காரணமாக கிராமங்களில்
சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை 1995 ல் 15 சதவீதம் என்றால் 2014 ல்
30 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதே போல தங்களுடைய நோய்களுக்கு சிகிச்சை எடுக்க மருத்துவமனைகளில்
சேர நகரப்புறங்களில் 31 சதவீதம் பேரும் கிராமப்புறங்களில் 47 சதவீதம் பேரும் கடன் வாங்குகிறார்கள்
அல்லது தங்களுடைய சொத்துகளை விற்கிறார்கள். இதற்கான முக்கியமான காரணம் என்ன?
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு
உலக சுகாதார நிறுவனம், மற்றும் யுனிசெப் உதவியுடன் தொடங்கப்பட்ட ஹிந்துஸ்தான் ஆண்டி
பயோடிக்ஸ், மகராஷ்டிரா ஆண்டி பயோடிக்ஸ், கர்நாடகா ஆண்டிபயோடிக்ஸ், இந்தியன் டிரக்ஸ்
அண்டு பார்மசூட்டிகல்ஸ், பெங்கால் கெமிக்கல்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ், கேரளா ஸ்டேட்
டிரக்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ், நோய்த்தடுப்பு மருந்து நிறுவனங்களாக செண்டிரல் ரிசர்ச்
இன்ஸ்ட்டிடியூட், பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா , சென்னை பி.சி.ஜி தடுப்பு மருந்து
லேபோரட்டரி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இந்திய மக்களுக்குத் தேவையான
மருந்துகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் கொடுத்தன. 1978 ல் இந்திய மருந்துக்கொள்கையும்
1979 ல் இந்திய மருந்து விலைக்கட்டுப்பாட்டுக் கொள்கையும் அறிவிக்கப்பட்டது. இதனால்
உலகிலேயே மிகக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைத்தன. உலகமயமாக்கலுக்குப் பின்னால்
இந்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களைச் செயலிழக்கச்
செய்தன. இந்தியாவின் மருந்துக் கொள்கைகளும், மருந்து விலைக்கட்டுப்பாட்டுக் கொள்கைகளும்
கூட செயலிழந்து வருகின்றன. இதனால் மருந்துகளின் விலை பலமடங்கு உயர்ந்து விட்டன. அரசின்
கைவசமிருந்த மருத்துவக்கல்வியும் தனியார் வசம் போய்விட்டது. அதோடு சேவையும் போயே விட்டது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனிநபரும்
தங்களுக்கு ஆகும் மருத்துவச்செலவில் 78 சதவீதம் எதிர்கொள்கிறார்கள். இதுவே இலங்கையில்
53 சதவீதம், தாய்லாந்தில் 31 சதவீதம் பூடானில் 29 சதவீதம், மாலத்தீவில் 14 சதவீதம்
மட்டுமே செலவழிக்க நேர்கிறது. மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச்செலவில் உலகிலேயே மிகக்குறைந்த
பங்களிப்பு செய்யும் கடைசி மூன்று நாடுகள், இந்தியா, ஹைத்தி, சியாராலியோ. அதே போல நாட்டின்
ஒட்டு மொத்த சுகாதாரச்செலவில் அரசின் பங்காக செலவழிக்கப்படும் தொகையில் இங்கிலாந்து
96 சதவீதம் எத்தியோப்பியா 36 சதவீதம், பாகிஸ்தான் 23 சதவீதம் செலவு செய்கின்றன. ஆனால்
இந்தியா வெறும் 16 சதவீதம் தான் செலவு செய்கிறது. தூய்மை இந்தியா மூலம் சுகாதாரம்,
ஆரோக்கியம், மக்கள் நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் திட்டமிட்டிருக்கிற நமது இந்திய
அரசு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் குறைவாக பொதுச்சுகாதாரநிதி
ஒதுக்கியிருப்பது ஒரு முரண்நகை..
இந்தியாவில் உள்ள பாரம்பரியமான
மருத்துவமுறைகளும் மாற்று மருத்துவ முறைகளும் அரசினால் பாராமுகமாக நடத்தப்படும் நிலையில்
சாமானிய இந்தியனின் உயிர் இன்று பன்னாட்டு மருந்துக்கம்பெனிகளின் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
அந்த மருந்துக்கம்பெனிகள் தயாரிக்கும் புதிய மருந்துகளை சோதனை செய்யும் சோதனைச்சாலையாக
இந்தியா உருவாகியிருக்கிறது. இந்திய மருந்துக்கொள்கைகள் குறித்தும், மருந்து விலைக்கட்டுப்பாடுக்கொள்கைகள்
குறித்தும், பொதுச்சுகாதாரம் குறித்தும் அதில் அரசின் பங்கேற்பு குறித்தும் உரத்துப்
பேச வேண்டிய நேரம் இது. ஏனெனில் இது மக்களின் உயிர்ப்பிரச்னை.
No comments:
Post a Comment