Monday 22 May 2017
கரிசக்காடு: ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்ப...
கரிசக்காடு: ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்ப...: ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்பனும் உதயசங்கர் நீல நிற வானத்திலிருந்து நேரே சரிந்து இறங்கியது போலிருந்த பூங்கா...
Sunday 21 May 2017
ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்பனும்
ஏஞ்சலும் அவளது
தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்பனும்
உதயசங்கர்
நீல நிற வானத்திலிருந்து நேரே
சரிந்து இறங்கியது போலிருந்த பூங்கா சாலையின் துவக்கத்தில் ஏஞ்சல் தோன்றிவிட்டாள்.
வழியெங்கும் குல்மொகர் மரங்கள் ரத்தச்சிவப்பாய் பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்தன. தர்ச்சாலை
தெரியாதபடிக்கு தரையில் பூக்கள் சிதறிக்கிடந்தன. மஞ்சள் கலந்த சிவப்பு தரையில் பளீரிட்டது.
மரத்திலும் சிவப்பின் நிழல் அடர்ந்து பார்ப்பதற்கு சாலை முழுவதும் சிவப்புக்கம்பளம்
விரித்தது போல இருந்தது. மகேஷ் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தச்சாலையின்
கீழ்புறத்தில் பூங்காசாலை நகரின் முக்கியச்சாலையோடு இணைகிற இடத்தில் ஒரு ஆலமரம் விருட்சமாய் படர்ந்திருந்தது.
அந்த ஆலமரத்தின் கீழே தான் மகேஷூம் அவனது நண்பனும் பைக்கை நிறுத்தி அதில் சாய்ந்துக்கொண்டு
ஒரு காலை பைக்கின் பெடலிலும் இன்னொரு காலை தரையிலும் ஊன்றி நின்று கொண்டிருந்தார்கள்.
ஆள் நடமாட்டம் உள்ள சாலை தான். ஆனால் மகேஷுக்கு மட்டும் எப்படி என்றே தெரியாது, ஏஞ்சலின்
தலை சாலைமேட்டில் தோன்றும்போதே மகேஷ் பார்த்து விடுவான். மகேஷ் அவளைப்பார்த்தவுடன்,
“ டேய் மக்கா…மக்கா… அங்க பார்டா… என்னமா ஜொலிக்கிறா!
பின்னாடி அந்த சூரியஒளி அவ மேலே பட்டுத்தெறிக்கிறத பாருடா…”
என்று அவனுடைய நண்பனிடம் பரவசமாய்
புலம்புவான். மகேஷின் நண்பன் சிரிப்பான். அவன் சிரிப்பில் ஒரு கைப்பு இருக்கும். ஆனால்
அந்த பரவசமனநிலையை மகேஷ் கைவிடுவதாக இல்லை. இருநூறு மீட்டர் தூரத்தில் இறங்கி வந்து
கொண்டிருக்கும் அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். ஏஞ்சல் அன்று நீல நிறத்தில்
புடவை உடுத்தியிருந்தாள். எப்போதும் போல் முந்தானையைப் பறக்க விட்டிருந்தாள். சிறகுகள்
அடிக்க மெல்ல இறங்கிய மயில்போல ஒயிலாக நடந்து வந்து கொண்டிருந்தாள் ஏஞ்சல். மஞ்சள்கலந்த
கோதுமை நிறத்தில் இருந்த அவள் ஒரு போதும் கண்ணைப்பறிக்கும் நிறத்தில் உடை உடுத்துவதில்லை.
மென்மையான நிறங்களில் அவள் உடுத்திய உடைகள் அவளைப்பளிச்சென்று காட்டியது. பின்னியும்
பின்னாமலும் ஈரம் ததும்பி நிற்கும் அவளுடைய தலைமுடி பின்னால் இடுப்புக்குக்கீழே இறங்கியிருந்தது.
அவள் அருகில் வரவர மகேஷூக்கு ரத்தஓட்டம் அதிகரிக்கும். உடம்பெங்கும் ஒரு படபடப்பும்
நடுக்கமும் தொற்றிக்கொள்ளும். அவளுக்கும் இது தெரியும் அவனைக்கடந்து செல்லும்போது தலையைத்
திருப்பாமலே ஒருபார்வை பார்ப்பாள். மகேஷின் ஈரக்குலையைக் கவ்வும். அவன் முகத்தில் ரத்தம்
ஊறுவதை உணர்வான். அந்த உணர்வோடு திரும்பி அவனது நண்பனைப் பார்ப்பான். அவன் முகத்தில்
வெறுப்பு கடலென பொங்கிக்கொண்டிருக்கும். அப்படியே காறித்துப்புவான்.
” என்னடா ஆச்சு..? ஏண்டா இப்படி பண்றே..”
“ எலேய் உனக்குத்தெரியலையா…? அவகூட
ஒருத்தி வாரா பாருடா.. அவளும் அவள் முகரக்கட்டையும்…பாக்கச்சகிக்கல..”
“ எங்கடா வாரா… அவ மட்டும் தானே
வாரா..”
“ கண்ணைத்திறந்து நல்லாப்பாரு…”
“ எனக்கு ஒண்ணுமே தெரியல..”
“ தெரியாதுடா..தெரியாதுடா… இப்ப
உங்கண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது…”
தூரத்தில் ஏஞ்சல் மட்டுமே தெரிய
அருகில் வர வர ஏஞ்சலின் முதுகிலிருந்து பிறந்தவள் மாதிரி அவளுடைய தோழி வருவாள். கட்டையான
பரட்டைத் தலைமுடியும், பெரிய தடித்த உதடுகளும் சப்பையான மூக்கும், அகன்று விரிந்த இடுப்பும்,
எப்போதும் சிடுசிடுத்தமுகமும் கொண்ட ஏஞ்சலின் தோழி எப்போதும் அடர்ந்த நிறத்திலேயே சுடிதார்
அணிந்திருப்பாள். இன்று கரும்பச்சை நிறத்தில் அவள் அணிந்திருந்த சுடிதார் கண்களில்
எரிச்சலை ஏற்படுத்தியது. அவள் பார்வையில் ஒரு சந்தேகத்தேள் கொட்டுவதற்குத் தயாராக எப்போதும்
தன் கொடுக்கைத் தூக்கி வைத்திருக்கும். ஒருபோதும் சிரித்திராத அந்த முகம் பாறையைப்
போல இறுகிப் போயிருக்கும். நடந்து வரும்போதோ அல்லது போகும்போதோ ஏஞ்சலும் அவளது தோழியும்
ஒரு பொழுதும் பேசிக்கொண்டதாகப் பார்த்ததில்லை. ஆனால் அவளின் ஒவ்வொரு பார்வையையும் ஏஞ்சல்
உணர்ந்திருந்தாள்.
ஏஞ்சலின் தோழி ஒரு போதும் மகேஷையோ,
அவனது நண்பனையோ சிநேகமாக இல்லையில்லை சுமூகமாகக்கூடப் பார்த்ததில்லை. அவள் பேசுகிற
மாதிரி தெரியாது. தடித்த உதடுகள் அசையும். அவ்வளவு தான் ஏஞ்சல் மகேஷின் நண்பனைப் பார்ப்பாள்.
அதுவரை இருந்த வெளிச்சம் மறைந்து முகம் இருண்டு விடும். லேசான நடுக்கம் உடலில் பரவியது.
மகேஷ் கூட அவனது நண்பனை விட்டு விட்டு வர நினைத்தான். அது என்ன அவ்வளவு எளிதான காரியமா?
மகேஷின் தைரியமே அவன் தானே.
ஏஞ்சல் முக்கியசாலையில் திரும்பும்போது
மகேஷைப்பார்த்து ஒரு சிரிப்பைச் சிந்துவாள். அதுபோதும். மகேஷும் அவனுடைய நண்பனும் பைக்கை
எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். மறுபடியும் மறுநாள் காலையில் அந்த பூங்காசாலையில்
ஆலமரவிருட்சத்தினடியில் காத்திருப்பார்கள். மகேஷின் நண்பனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை
என்றாலும் பாலியகாலத்திலிருந்தே அவனுடைய நெருங்கிய நண்பன் மகேஷ். இருவரும் ஒன்றாகவே
படித்தார்கள். ஒரே மார்க் வாங்கினார்கள். மகேஷ் கொஞ்சம் குட்டை. சற்று ஒல்லி. பயந்தாங்கொள்ளி.
ஆனால் வசீகரமான முகம். மகேஷின் நண்பன் கருப்பாக இருந்தாலும் உயரமாக ஜிம்பாடியுடன் இருந்தான்.
மகேஷின் நண்பனின் முரட்டுத்தனம் அவனுடைய உடல்மொழியில் தெரியும். முகத்தில் யாரையும்
மதிக்காத ஒரு அலட்சியபாவம். மகேஷோடோ இல்லை அவனோடோ யாராவது எதிர்த்துப்பேசினால் கூடப்
பிடிக்காது. உடனே கையை ஓங்கி விடுவான். எந்த வம்புச்சண்டைக்கும் தயாராக இருப்பவன்.
ஏஞ்சல் வேலைபார்க்கிற கம்ப்யூட்டர்
செண்டருக்கு அடிக்கடி மகேஷும் அவனது நண்பனும் அவனுடைய வேலைக்காக ரெசியூம் பிரிண்ட்
அவுட் எடுக்கப்போவார்கள். மகேஷ் அப்போது தான் ஏஞ்சலைப்பார்த்தான். கண்டதும் காதல் தான்.
ஆனால் ஏஞ்சல் அவ்வளவு எளிதாக பிடி கொடுக்கவில்லை. அவள் யாரைக்கண்டோ பயந்தாள். மகேஷின்
நண்பன் தான்
“ அவ அந்தக் குட்டச்சியைப்பார்த்து
பயப்படுதா… பரட்டைத்தலைக்கு இருக்கிற திமிரப்பாரேன்..”
என்று திட்டினான். மகேஷ் இல்லையில்லை
என்று தலையாட்டினான். ஆனால் அவனுக்கும் அந்த அச்சம் இருந்தது. யார் இந்தத்தோழி? கரிய
நிழல்போல எப்போதும் கூடவே வருகிறாள்? ஏஞ்சல் அந்தத்தோழி இல்லாமல் தனியே வருவதே இல்லை.
அப்போது மகேஷின் நண்பன் சொன்னான்.
“ ஏன் நீ கூடத்தான் நான் இல்லாமல்
தனியா எங்கேயும் போறதில்லை..”
அதைக்கேட்டதும் மகேஷ் முகம் சுளித்தான்.
ஞாயிற்றுக்கிழமை கம்ப்யூட்டர் செண்டர் லீவு. அன்று ஏஞ்சலைப்பார்க்க முடியாது. பார்க்க
முடியாத அந்த நாளில் மகேஷ் ஏங்கிப்போவான். அன்று முழுவதும் அவனுடைய நண்பனிடம் அவளைப்பற்றிப்
பேசிக்கொண்டேயிருப்பான். மகேஷின் நண்பனும் அவன் பேசுவதை தலைகுனிந்தவாறு கேட்டுக்கொண்டேயிருப்பான்.
எப்போதாவது,
“ கூட அவ ஃபிரெண்டும் இருக்கா
பாத்துக்கோ…” என்று எச்சரிப்பான்.
அதற்கு மகேஷ் சிரித்தவாறே
“ அவ இருந்தா அவபாட்டுக்கு இருந்துட்டுப்போறா…”
என்று அலட்சியமாகச் சிரிப்பான்.
“ நீ எப்பயுமே வெளிச்சத்தை மட்டுமே
பாக்கே… பக்கத்திலேயே இருட்டும் இருக்கு.. பாத்துக்க..”
என்று கட்டைக்குரலில் சொன்னான்
மகேஷின் நண்பன்.
ஒரு ஞாயிறு காலைப்பொழுதில் பூங்காசாலையில் சும்மா
அந்த ஆலமரத்தடியில் வந்து நின்றிருந்தான். அன்று அபூர்வமாக அவன் மட்டுமே தனியாக வந்திருந்தான்.
சூரியன் அப்போது தான் எழுந்து சுதாரித்துக்கொண்டிருந்த வேளை. குல்மொகர் மரங்களின் சிவந்த
பூக்களில் சூரியனின் காலைக்கிரணங்கள் பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. மஞ்சள் வெயில்
தார்ச்சாலையை மென்மையாக மாற்றிவிட்டிருந்தது. கூட்டம் கூட்டமாய் மேகங்கள் தங்கச்சரிகை
விளிம்பிட்டு மெல்ல ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன. அந்த வேளையில் தந்தத்தின் நிறத்தில்
சுடிதார் அணிந்து மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தாள் ஏஞ்சல். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவளும் தனியாக அவளுடைய தோழி இல்லாமல் வந்து கொண்டிருந்தாள்.
இடது பக்கம் லேசாகச் சாய்ந்த அவளுடைய
நடையில் ஒரு பாந்தம் இருந்தது. அவளும் அவனைப்பார்த்து விட்டாள். அவள் திடுக்கிட்டது
தெரிந்தது. இடது கையால் அவளுடைய துப்பட்டாவின் முனையைப் பிடித்துக்கொண்டு வலது கையில்
மார்போடு பைபிளை அணைத்துக் கொண்டே மெல்ல நடந்து வந்தாள். அவளுடைய மெலிந்த விரல்களிலிருந்து
வெளிப்பட்ட அன்பினால் பைபிள் துடித்துக்கொண்டிருந்தது. மகேஷ் அந்தக்கணத்தில் இயேசுவைத்
தன் ஜீவனாக ஏற்றுக்கொள்ளத் தயாரானான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில் நடமாட்டம்
அதிகம் இல்லை.
மகேஷின் இதயம் துடிக்கிற சத்தம்
அவனுக்கு வெளியில் கேட்டது. அவளை நிறுத்திச் சொல்லிவிடவேண்டும் என்று ஆசைப்பட்டான்.
அவள் அருகில் வந்தபோது ஓரடி அவளைப்பார்த்து நெருங்கியும் விட்டாள். படபடப்புடன் அவள்
அவனை ஏறிட்டுப்பார்த்தாள். அந்தக்கண்களில் அன்பின்ஓளியைப் பார்த்தான். சூரியனின் கதிர்கள்
விளிம்பிட்ட அவளைப்பார்க்கும்போது அவனுக்குள் தீராத தாகம் எழுந்தது. நா வறண்டது. எச்சிலை
ஊற வைத்து விழுங்கினான். அவள் உண்மையில் அந்த ஓளியில் தேவதை போலவேத் தோன்றினாள். மகேஷுக்கு
நடந்து கொண்டிருப்பது கனவா என்று கூடச் சந்தேகம் வந்தது. முன்னால் நிழல் விழுந்த அவள்
உருவத்தின் அழகு அவனை மெய்மறக்கச்செய்தது. அந்தக்கணத்தில் அவன் ஏஞ்சலின் பரிபூர்ண அன்பை
உணர்ந்தான். இது போதும். அந்தக்கணம் இனி வாழ்வில் என்றாவது வருமா?
அன்று மகேஷ் முடிவெடுத்தான். வாழ்ந்தால்
இனி ஏஞ்சலோடு தான் வாழவேண்டும். அதைக்கேட்ட மகேஷின் நண்பன் கோபப்பட்டான்.
“ நீ அவளோட வாழ்றதுக்காக நான்
அவ ஃப்ரெண்ட் …அதான்..அந்தப்பரட்டைத்தலை பிசாசோட வாழணுமா? “
என்று கேட்டான். மகேஷுக்கு அவன்
என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. மலங்க மலங்க விழித்தான். ஆனால் அவனுக்கு நம்பிக்கை
இருந்தது. மகேஷின் நண்பன் அவனை விட்டு எங்கேயும் போகமாட்டான். போகவும் முடியாது.
மகேஷுக்கு சென்னை ஐ.டி. கம்பெனியில்
சுமாரான சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆரம்பத்தில் குறைவான சம்பளமாக இருந்தாலும் போகப்போக
சம்பளம் அதிகமாகும் வேலைப்பாதுகாப்பும் உண்டு என்ற தைரியத்தில் சேர்ந்து விட்டான்.
ஆறுமாதம் கழிந்த பிறகு ஊருக்குச் சென்றான். அவனுடைய நண்பனுடன் ஏஞ்சலின் வீட்டுக்குச்
சென்றான். ஏஞ்சலின் அம்மா கார்மெண்ட்ஸிலும், அப்பா ஜவுளிக்கடையிலும் வேலை பார்த்தார்கள்.
ஒரு தம்பி ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அங்கே ஏஞ்சலும் அவளது தோழியும்
இருந்தார்கள். கொஞ்சம் தயங்கினாலும் அவர்களுக்குச் சம்மதம். மகேஷும் வீட்டில் பேசி
வற்புறுத்தித் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.
ஒரு வழியாகத் திருமணம் முடிந்து
சென்னைக்கு தனிக்குடித்தனம் போனார்கள். புதுமணத்தம்பதிகளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு
வர சம்பந்திகளும் போயிருந்தார்கள். ஏஞ்சலின் தோழியும், மகேஷின் நண்பனும் இல்லாமலா.
அவர்களும் உடன் போயிருந்தார்கள். எல்லோரும் திரும்பி விட்டார்கள். ஏஞ்சலின் தோழி ஏஞ்சலோடேயே
தங்கி விட்டாள். மகேஷின் நண்பனும் மகேஷோடு தங்கி விட்டான்.
எப்படி நான்குபேரும் ஒரே வீட்டில்
ஒரே படுக்கையறையில் இருக்கமுடியும் என்று சந்தேகப்படும் வாசகர்களுக்கு ஏஞ்சலும், மகேஷும்,
சேர்ந்து ஒரே குரலில்
“ எப்போது நாங்கள் தனியாக இருந்தோம்?
“ என்று கேட்கிறார்கள்.
நன்றி - மலைகள்.காம்
Thursday 18 May 2017
ஆறுகால் பூச்சியும் ஆயிரங்கால் புழுவும்
ஆறுகால் பூச்சியும்
ஆயிரங்கால் புழுவும்
உதயசங்கர்
மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது.
வராந்தாவில் நின்று கொண்டு மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் வந்தனா. அப்போது
வீட்டு வாசலில் கருப்புசிவப்பு நிறத்தில் ஒரு பூச்சி ஊர்ந்து கொண்டிருந்தது. அந்தப்பூச்சியைப்
பார்த்த வந்தனா கத்தினாள்.
“ அப்பா பூச்சி..பூச்சி…
“ அவளுடைய சத்தத்தைக் கேட்டுவிட்டு வீட்டுக்குள்ளிருந்து
வெளியே வந்த அப்பா
“ எங்க இருக்கு பூச்சி..”
வந்தனா சுட்டிக்காட்டினாள். அதைப்பார்த்த
அப்பா,
“ ஓ இது ரயில்ப்பூச்சி “ என்று
சொன்னார்.
“ ரயில்ப்பூச்சியா? “
“ ஆமாண்டா செல்லம்… அப்படித்தான்
நாங்க சின்னப்பிள்ளைகளாக இருக்கும்போது கூப்பிடுவோம்….”
என்றார் அப்பா. அதைக்கேட்ட வந்தனா,
“ அப்பா ரயில்ப்பூச்சி கதை சொல்லுங்களேன்…”
என்று சொன்னாள். அப்பா உடனே,
“ கதை வேணுமா?… சயின்ஸ்…வேணுமா?..”
என்று கேட்டார் அப்பா.
“ முதல்ல கதை…” என்று வந்தனா சொன்னதைக்
கேட்ட அப்பா சிரித்தார். வராந்தாவில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து வந்தனாவைத் தூக்கி
மடியில் வைத்துக் கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தார். ரயில்ப்பூச்சியின் கதை.
பூமியில் அப்போது தான் ஒவ்வொரு
உயிராகத் தோன்றிக்கொண்டிருந்தன. இயற்கையன்னை தன் படைப்புகள் ஒவ்வொன்றாய் படைத்துக்
கொண்டிருந்தாள். முதலில் ஒரு செல் உயிரியான அமீபாவைப் படைத்தாள். ஒரு செல் உயிரியான
அமீபாவிலிருந்து இரண்டு செல் உயிரியான ஆமீபா தோன்றியது. இரண்டு செல் ஆமீபாவிலிருந்து
நாலு செல் உயிரியான இமீபா தோன்றியது. இமீபாவிலிருந்து எட்டுசெல் உயிரியான ஈமீபா தோன்றியது.
இப்படியே புழுக்கள் தோன்றின. கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் தோன்றின. எந்த எந்த இடத்தில்
உருவானதோ அந்த அந்த இடத்தின் நிறம் புழுக்களுக்குக் கிடைத்தது. மண்ணுக்குள் தோன்றியதால்
மண்ணின் நிறம் மண்புழுக்களுக்குக் கிடைத்தது. பூக்களில் தோன்றிய புழுக்களுக்கு பூக்களின்
வண்ணவண்ண நிறம். இலைகளில் தோன்றிய புழுக்களுக்கு இலைகளின் பச்சை நிறம். மரங்களில் தோன்றிய
புழுக்களுக்கு மரத்தின் நிறம். எல்லாப்புழுக்களும் தங்களுடைய உடலை தள்ளிக்கொண்டு ஊர்ந்தன.
அப்படித்தள்ளி தள்ளிப்பழகியதில் அவைகளின் உடம்பு சுருங்கி விரிய ஆரம்பித்தது. வேகமாகப்
போக முடியவில்லை. ஓரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து போய்க்கிடலாம். அவ்வளவுதான்.
இப்படி விதவிதமான புழுக்கள் தோன்றி மண்ணில் ஊர்ந்தன.
அதன் பிறகு பூச்சிகள் தோன்றின.
கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் தோன்றின. பின்னர் சிறிதுபெரிதாய் ஏராளமான பூச்சிகள்
தோன்றின. ஒவ்வொரு பூச்சியும் ஒவ்வொரு நிறம். இயற்கையன்னை தன் திறமைகளைப் பயன்படுத்தி
வண்ணங்களைத் தீட்டினாள். கூடுதலாக ஒவ்வொரு பூச்சிக்கும் சிறகுகளைப் படைத்தாள். சிறகுகளோடு
ஆறு கால்களையும் கொடுத்தாள். தன்னுடைய ஒரு படைப்பு இன்னொரு படைப்பு மாதிரி இருக்கக்கூடாது
என்று கவனமுடன் புதிது புதிதாகப் படைத்துக் கொண்டிருந்தாள். உலகம் பூச்சிகளால் நிறைந்தது.
பூச்சிகள் பறந்து திரிந்து கொண்டேயிருந்தன. விதம் விதமான பூச்சிகள் பறந்து அலைவதைப்
பார்த்த இயற்கையன்னைக்கு மகிழ்ச்சி.
கீழே மண்ணில் ஊர்ந்து கொண்டிருந்த
புழுக்கள் தலையைத் தூக்கிப் பார்த்தன. பூச்சிகள் அங்கிட்டும் இங்கிட்டும் பறந்தன. தன்னுடைய
கால்களினால் வேகமாக நடந்தன. பூச்சிகள் சிரமப்பட்டு ஒரு மணி நேரத்தில் கடக்கும் தூரத்தை
பூச்சிகள் ஒரு நொடியில் பறந்து கடந்தன. மேலே பறக்கும் பூச்சிகள் கீழே ஊர்ந்து கொண்டிருக்கும்
புழுக்களைத் தாழ்வாக நினைத்தன. சில பூச்சிகள் புழுக்களைச் சுற்றி வந்து கும்மியடித்தன.
கேலி பேசின. புழுக்களுக்கு அவமானமாக இருந்தது. இயற்கையன்னை தங்களை ஏமாற்றி விட்டாள்
என்று நினைத்தன.
ஒரு சமயம் இத்தினூண்டு கடுகு மாதிரி
இருந்த பூச்சி மரத்தில் மரப்பட்டைகளுக்குக் கீழே பேசாமல் படுத்து உறங்கிக் கொண்டிருந்த
கருப்பு, சிவப்பு வரிசையாகக் கோடு போட்ட புழுவை தன் சிறகுகளால் விர்ர்ர்ர்…..விர்ரென்று
அடித்து எழுப்பியது.
“ பார்த்தியா… எப்பூடி.. நான்
நினைச்சா பறப்பேன்… இல்லைன்னா நடப்பேன்…எனக்குப் பெருமையா இருக்கு நல்லவேளை உங்களைப்போல
மூட்டை மாதிரி உடம்பை இழுத்து இழுத்து தேய்ச்சிக்கிட்டே போக வேண்டியதில்லை ஹா…ஹா…ஹா..”
என்று வக்கணை வழித்தது. அந்தக்கருப்புசிவப்புப்
புழுவுக்கு வருத்தமாகி விட்டது.
“ டேய் நாம்பாட்டுக்குப் பேசாம
என் வேலையைப் பாத்துக்கிட்டிருக்கேன்…. நீ ஏன் வந்து வம்பு பண்றே….”
“ டேய் உடம்புதேய்ச்சி… நம்ம ரேஞ்சே
வேறே…. உனக்குத் தெரியணும்ல….”
இதைக்கேட்ட கருப்புசிவப்புப்புழுவுக்குக்
கோபம் வந்து விட்டது. அவ்வளவு தான். உடனே தன்னுடைய உடம்பைத் தேய்த்து தேய்த்து அந்த
மரத்தின் உச்சிக்குச் சென்றது. உச்சியில் நின்று தலையைத் தூக்கியது.
“ ஏ..இயற்கையன்னையே! எங்களை நீ
ஏமாத்திட்ட… உன்னோட குழந்தைகள்ல ஒருத்தர நல்லாக்கவனிச்சி ஒருத்தர கவனிக்காம விட்டுட்டியே…
இதுக்கு ஒரு பதில் சொல்லு..”
என்று சொல்லியது. அதோடு வானத்தைப்
பார்த்தபடியே அன்னந்தண்ணி குடிக்காமல் பட்டினி கிடந்து இயற்கையன்னையை வேண்டி தவம் இருந்தது.
ஏழுபகல், ஏழு இரவு கழிந்தது. கருப்புசிவப்புப்புழு மெலிந்து துரும்பாகிவிட்டது. எட்டாவதுநாள்
காலையில் கருப்புசிவப்புப்புழுவுக்கு முன்னால் ஒரு ஒளி தோன்றியது. பச்சிலைசெடிகொடிகளை
ஆடைகளாய் உடுத்திய இயற்கையன்னை கருப்புசிவப்புப்புழுவின் முன்னால் தோன்றினாள்.
“ நான் யாரையும் குறைவாகவோ மிகையாகவோ
படைக்கவில்லை. இந்த பூமியில் இன்னும் படைக்கவேண்டிய படைப்புகள் ஏராளமாக இருக்கின்றன.
எந்த ஒரு படைப்பும் மற்றொன்றைப் போல இருக்கக்கூடாது அப்போது தான் இயற்கையின் சமநிலை
எப்போதும் நிலைத்திருக்கும்… எல்லா உயிர்களும் எனக்குச் சமமானவை தான்….”
என்று அன்பாகச் சொன்னாள். அதைக்
கேட்ட கருப்புசிவப்புப்புழு கண்களில் கண்ணீர் வழிந்தது.
“ இல்லை அன்னையே! எங்களால் வெகுதூரம்
போகமுடியவில்லை…. எங்களுக்கு சிறகுகள் அல்லது கால்கள் வேண்டும்…. தயை புரியுங்கள்…”
அதைக்கேட்ட இயற்கையன்னை கலகலவென்று
சிரித்தாள். அவ்வளவு தான் கருப்புசிவப்புப்புழுவுக்கு கால்கள் முளைத்தன. உடலில் ஒரு
இடம் விடாமல் கால்கள். ஆயிரங்கால்கள் முளைத்தன. கருப்புசிவப்புப்புழுவுக்குச் சந்தோசம்.
தன்னுடைய பின்னங்கால்களில் நின்று உடலைத்தூக்கி இயற்கையன்னைக்கு நன்றி சொன்னது. இயற்கையன்னை
புழுவிடம் விடைபெற்று மறைந்தாள்.
கருப்புசிவப்புப்புழு இப்போது
முன்னாலும் வேகமாக ஊர்ந்தது. பின்னாலும் வேகமாக ஊர்ந்தது. எப்படி வேண்டுமானாலும் திரும்ப
முடிந்தது. சுருண்டு படுத்துக்கொள்ள முடிந்தது. மரத்தின் உச்சியிலிருந்து அமைதியாகத்
திரும்பியது. மெல்ல கீழே இறங்கி தன்னுடைய இருப்பிடமான மரப்பட்டையின் பின்னால் போய்
படுத்துக் கொண்டது.
இப்போது இயற்கையன்னையிடம் தவமாகப்
பெற்ற ஆயிரங்கால் பூச்சியை மரவட்டைப்பூச்சி என்றும் ரயில்ப்பூச்சி என்றும் குழந்தைகள்
அழைத்தார்கள். குழந்தைகள் எப்படி அழைத்தாலும் அழகு தானே!
நன்றி - வண்ணக்கதிர்
ரகசியக்கோழி 001
ரகசியக்கோழி
001
உதயசங்கர்
கரும்பூரில் முத்தம்மா என்ற அம்மாள்
தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தாள். பெரிய பெண்ணின் பெயர் பெரியமாரி.
அடுத்த பையனின் பெயர் சின்னமாரி. இரண்டு குழந்தைகளும் பள்ளியில் நன்றாகப்படித்து வந்தார்கள்.
அவர்களுடைய அப்பா கட்டிட வேலை செய்து வந்தார். ஒரு நாள் சாரத்திலிருந்து தவறி விழுந்து
இறந்து போனார். அதன்பிறகு முத்தம்மா வீட்டுவேலை, காட்டு வேலை என்று எல்லாவேலைகளையும்
செய்து வந்தாள். எப்படியாவது பிள்ளைகளைப்படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
அவர்கள் வீட்டில் ஒரு சேவலும் நான்கு கோழிகளும் இருந்தன. கோழிகள் இடும் முட்டைகளை அருகில்
இருந்த பெட்டிக்கடையில் கொடுத்து சமையலுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொள்வாள்.
சிலசமயம் அவளுடைய பையன் சின்னமாரிக்கும் அவித்தோ, பொரித்தோ கொடுப்பாள். சின்னமாரி என்ன
சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருந்தான். ஆனால் அறிவாளி. பள்ளிக்கூடத்தில் நன்றாகப்படிப்பான்.
கணக்குப்பாடம் என்றால் அவனுக்கு இனிக்கும். துப்பறியும் கதைகள், காமிக்ஸ் கதைகள், எல்லாவற்றையும்
விழுந்து விழுந்து படிப்பான். அவனுக்கு துப்பறியும் நிபுணர் ஆக வேண்டும் என்பது தான்
ஆசை.
அதனால் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டேயிருப்பான்.
ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வந்த சின்னமாரி அம்மா கவலையோடு குடிசை வாசலில் உட்கார்ந்திருப்பதைப்
பார்த்தான். அம்மா வளர்க்கும் செவலைக்கோழி மட்டும் தினசரி காலையில் திறந்து விட்டதும்
காணாமல் போய் விடுகிறது. ஆனால் சாயங்காலம் அடைகிற நேரம் வந்து சேர்ந்து விடும். முத்தம்மாவுக்கு
இது தான் கவலை. அது மட்டுமல்லாமல் முட்டை இடுவதுமில்லை. திறந்து விடும்போது முட்டை
இருப்பதைப் பார்த்துத் தான் மேயவிடுவாள். மற்றகோழிகள் முட்டையிடும் நேரம் எங்கே மேய்ந்து
கொண்டிருந்தாலும் நேரே வீட்டுக்கு வந்துவிடும். ஆனால் செவலைக்கோழி மட்டும் வரவில்லை.
அன்று இரவு சின்னமாரியிடம் முத்தம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.
சின்னமாரியின் துப்பறியும் மூளை வேலை செய்தது. நாளைக்குப் பள்ளிக்கூடம் கிடையாது. அந்தச்
செவலைக்கோழி எப்படி காணாமல் போய் திரும்பி வருகிறது என்று துப்பறிந்து பார்க்கலாம்.
உடனே அம்மாவிடம் ரகசியமான குரலில் ( துப்பறியும் நிபுணர்கள் சத்தமாய் பேசக்கூடாதில்லையா!
) தன்னுடைய திட்டத்தைச் சொன்னான்.
அம்மா காலையில் கோழிகளை அடைத்து
வைத்திருக்கும் பஞ்சாரத்தைத் தூக்கி கோழிகளைத் திறந்து விட்டாள். கோழிகள் கேக்க்க்கேக்க்கேக்க்க்க்கே
என்று மாறி மாறிக் குரல் கொடுத்தன. உறக்கம் கலைந்து இறக்கைகளை விரித்து நீட்டி சோம்பல்
முறித்தன. கருப்புவெள்ளைக் கோழி, வெள்ளைக்கருப்புக்கோழி, சாம்பல்கோழி, செவலைக்கோழி,
எல்லாம் முற்றத்தில் அம்மா விசிறியிருந்த குருணை அரிசியை அவசர அவசரமாக கொத்தின. செவலைக்கோழி
மட்டும் ரெண்டு வாய் சாப்பிட்டு விட்டு மெல்ல முற்றத்தை விட்டு இறங்கியது. அப்படியே
தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே எதிரே இருந்த குப்பை மேட்டைப்பார்த்து
போனது.
இப்போது சின்னமாரி குடிசை வாசலில்
வந்து நின்று செவலைக்கோழி போவதையே பார்த்துக் கொண்டு நின்றான். குப்பை மேட்டின் உச்சியில்
நின்று திரும்பிப்பார்த்தது செவலைக்கோழி. சின்னமாரியைப் பார்த்ததும் அப்படியே அப்பாவி
மாதிரி கீழே குனிந்து இரையைக் கொத்துவது போல சும்மா கொத்திக் கொத்திப் போட்டது. அப்படியே
கண்ணை உருட்டி உருட்டி சின்னமாரி நிற்கிறானா என்று பார்த்தது. சின்னமாரி செவலைக்கோழியைப்
பார்க்காத மாதிரி நின்றான். அப்படியே பராக்கு பார்ப்பது மாதிரி குப்பை மேட்டை நோக்கி
நடந்தான். செவலைக்கோழி அவன் வருவதைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்டது. குப்பை மேட்டிலிருந்து
இறங்கி குடிசை முற்றத்துக்கே வந்தது. இப்போது சின்னமாரி குப்பை மேட்டிலிருந்து வீட்டு
முற்றத்தில் தனியே மேய்ந்து கொண்டிருக்கும் செவலைக்கோழியைக் கவனித்தான். செவலைக்கோழி
ஒரு நொடிக்கொருமுறை தலையைக் குனிவதும் நிமிர்ந்து சின்னமாரியைப் பார்ப்பதுமாக இருந்தது.
அப்போது சின்னமாரியின் பின்னாலிருந்து இரண்டு கைகள் அவனுடைய கண்களைப் பொத்தின.
“ யாருன்னு சொல்லு பாக்கலாம்..”
என்று தகரக்குரலில் பரமசிவன் கத்தினான். மற்றநேரம் என்றால் சின்னமாரியும் தெரியாத மாதிரி கணேசன் தானே… ரமேஷு… இல்லையில்லை.. குண்டு ரமணி…
என்று விளையாட்டு காட்டுவான். ஆனால் இப்போது அவன் துப்பறிந்து கொண்டிருக்கும்போது அதை
இடைஞ்சலாகவே நினைத்தான்.
“ சரி.. சரி.. விடுறா..பரமா..”
என்று கத்தினான். அதைக்கேட்ட பரமசிவனுக்கு ஏமாற்றமாகி விட்டது. ஆனால் கைகளை எடுக்காமல்
“ இல்லை..பரமசிவன் இல்லை..” என்று
அடம் பிடித்தான். சின்னமாரிக்குக் கோபம் வந்தது. உடனே அவனுடைய கைகளைத் தட்டி விட்டான்.
திரும்பிப்பார்த்தால் செவலைக்கோழியைக் காணவில்லை. வீட்டைச்சுற்றி ஓடிப் போய்ப் பார்த்தான்.
காணவில்லை. தெருவுக்கு ஓடிப் போய்ப் பார்த்தான். காணவில்லை. எப்படி மாயமாக மறைஞ்சது?
என்று யோசித்தான்.
குப்பைமேட்டிலிருந்து பார்த்தால்
தெருவில் நாலைந்து வீடுகள் தான். தெரியும். பரமசிவன் வீட்டில் மாடு வளர்க்கிறார்கள்.
அவனுடைய வீட்டில் வைக்கோல்படப்பு இருக்கும். வீட்டைச்சுற்றி கோட்டைச்சுவர் கட்டியிருப்பார்கள். அதைத் தவிர ஒளியவோ, மறையவோ இடம் கிடையாது. சின்னமாரி
அப்படியே தெருவுக்குள் மேலும் கீழும் நடந்தான். மற்ற வீடுகளை நோட்டம் விட்டான். எங்கும்
காணவில்லை.
பரமசிவன் வீட்டிற்குப் போனான்.
அவன் இல்லை. கடைக்குப் போயிருந்தான். அவன் வரட்டும் என்று வீட்டு வாசலில் காத்திருந்தான்.
கருப்புவெள்ளைக்கோழி, வெள்ளைக்கருப்புக்கோழி ,சாம்பல்கோழி, எல்லாம் தெருவில் உள்ள சாக்கடையில்
கிண்டி மேய்ந்து கொண்டிருந்தன. செவலைக்கோழியை மட்டும் தான் காணவில்லை. இன்னிக்குக்
கண்டுபிடிக்காமல் விடக்கூடாது என்று நாலாபக்கமும் பார்த்துக் கொண்டிருந்தான். பரமசிவன்
வீட்டு வாசலில் ஒரு சின்ன இறகு கிடந்தது. அதைக் கையில் எடுத்தான். அது செவலைக்கோழி
இறகுதான். இங்கேதான் பக்கத்தில் எங்கேயோ இருக்கிறது.
அப்போது பரமசிவன் வீட்டு வைக்கோல்படப்பிலிருந்து
சிறகடிக்கும் சத்தம் மெல்லக் கேட்டது. சின்னதாக க்கெ என்ற கோழியின் சத்தமும் கேட்டது.
சின்னமாரிக்குச் சந்தேகம். எல்லாக்கோழியும் மேய்ந்து கொண்டிருக்கும்போது இது மட்டும்
ஏன் தனியாக அலைகிறது? ஆனால் கோழி இருக்கும்போது போய் கலவரப்படுத்தக்கூடாது என்று நினைத்தான்.
மாலை வரை காத்திருக்கலாம் என்று நினைத்தபடியே வீட்டுக்கு வந்து மறுநாள் படிக்க வேண்டிய
பாடங்களைப் படித்தான். அம்மா கேட்டதுக்கு “ பொறு..பொறு.. சாயங்காலம் வரை பொறு..” என்று
சொன்னான்.
மாலையில் சின்னமாரி, பரமசிவன்
வீட்டுக்கு முன்னாடி எல்லோரையும் கூட்டி வைத்து விளையாடினான். வழக்கமாக கோழிகள் அடைகிற
நேரம் வந்து விட்டது. அப்போதும் செவலைக்கோழி வரவில்லை. மற்ற கோழிகள் எல்லாம் வீட்டைப்
பார்த்து போய்க் கொண்டிருந்தன. இனியும் தாமதித்தால் இருட்டி விடும். இது தான் சரியான
சமயம் என்று சின்னமாரி நினைத்தான். பரமசிவனிடம் சொன்னான். இரண்டுபேரும் உள்ளே வைக்கோல்படப்பு
இருந்த இடத்திற்குப் போனார்கள். ஒரு சத்தமும் இல்லை. அமைதியாக இருந்தது. வைக்கோல்படப்பின்
தெற்குமூலையில் ஒரு சிறிய பொந்து மாதிரி இருந்தது. சின்னமாரி உற்றுப்பார்த்தான். ஒரு
கோழியின் கால்தடம் தெரிந்தது. அந்த இடத்திற்கு அருகில் போய் நின்றான். பரமசிவன் வாயைத்
திறந்தான். அப்படியே அவன் வாயில் கையை வைத்து பொத்தினான். இருவரும் அமைதியாக நின்றார்கள்.
என்ன ஆச்சரியம்?
அந்தப்பொந்திலிருந்து கிய்யா கிய்யா
என்ற சத்தம் கேட்டது. சின்னமாரி உட்கார்ந்து குனிந்து பார்த்தான். அந்தப் பொந்தின்
நுழைவாயில் தாண்டி செவலைக்கோழி உட்கார்ந்திருந்தது. அதைச் சுற்றி அன்று தான் பொரித்திருந்த
ஏழு கோழிக்குஞ்சுகள் நின்று கொண்டிருந்தன. சின்னமாரிக்குச் சந்தோசமாக இருந்தது. ஓடிப்போய்
அம்மாவைக்கூட்டிக் கொண்டு வந்தான். அம்மாவுக்கு ஏகத்துக்கு மகிழ்ச்சி.
“ அட திருட்டுக்கள்ளி குஞ்சு பொரிக்கதுக்குத்தான்
இப்படி ஒளிஞ்சி ஒளிஞ்சி போனியாக்கும்.. “ என்று செவலைக்கோழி கழுத்தைத் தடவிக்கொண்டு
கொஞ்சினாள். செவலைக்கோழி ‘ கெக்க்கேக்க்கேக்கே
“ என்று சொல்லி ஒத்துக்கொண்டது. அன்று செவலைக்கோழிக்கு ரகசியக்கோழி 001 என்று
சின்னமாரி பெயர் சூட்டு விழா நடத்தினான். எல்லோருக்கும் குருணை அரிசியும், கூடவே தவிடும்
கஞ்சித்தண்ணியும் விருந்தாக அளித்தான். எல்லாக்கோழிகளும் போட்டி போட்டுக்கொண்டு விருந்தைச்
சாப்பிட்டன. மகிழ்ச்சியில் கெக்கெக்க்கேக்க்கே என்று மாறி மாறி செவலைக்கோழியை வாழ்த்தின.
நன்றி - தமிழ் இந்து மாயாபஜார்
Subscribe to:
Posts (Atom)