Wednesday 30 January 2013

க.நா.சு.வும் சி.ஐ.ஏ.வும்

உதயசங்கர்ka-na-su

இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாமல் தான் எழுத ஆரம்பித்தேன் என்று சொன்னால் சிரிக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். இலக்கியம் என்பது தமிழாசிரியர்களின் டிபார்ட்மெண்ட் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் காரணம் இருந்தது. எங்கள் வீடு இருந்த கன்னி விநாயகர் கோவில் தெருவிலிருந்து காந்திமைதானம் ஐம்பதடி தூரத்தில் தான் இருந்தது. கோவில்பட்டியில் நடைபெறும் அத்தனை முக்கியமான அரசியல் கூட்டங்கள், இலக்கிய கூட்டங்கள் எல்லாம் அங்கே தான் நடைபெறும். எல்லாக்கூட்டங்களிலும் மேடைக்கு முன்னால் புழுதி பரப்பியபடி சிறுவர்கள் நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். பலசமயம் கூட்டம் ஆரம்பித்த பிறகும் கூட எங்கள் அட்டகாசம் தொடரும். யாராவது பெரியவர்கள் வந்து சத்தம் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். நாங்கள் அசரணுமே. மிரட்டல்களும், சிலசமயம் அடிகளும் கூட கிடைக்கும்.

இலக்கியக்கூட்டங்கள் என்றால் பட்டிமன்றங்கள் தான். புலவர்கள், பேராசிரியர்கள் என்று பழந்தமிழ் இலக்கியப்பாடல்களை செந்தமிழில் பாடவும், பேசவும் செய்வார்கள். அவர்கள் பேசுகிற மொழியே எங்களுக்குப் புதியதாக இருக்கும். அப்படியே வாயைப் பிளந்தபடியே பேசுகிறவர்களின் வாயை ஆச்சரியத்துடன் பார்த்தபடியே உட்கார்ந்திருப்போம். ஆக இலக்கியம் என்றால் அது வேறு மொழியில் இருக்கும் போல என்று தான் நினைத்திருந்தேன். ஏனெனில் நான் மற்ற பயல்களுடன் பேசுகிற மொழியில் அது இல்லை. ஆனால் அந்த மேடைப்பேச்சு கவர்ச்சியாக இருந்தது. அதைப்போல தெருவில் பேசி பகடி செய்திருக்கிறேன். பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரியில் படிக்கும்போது கூட எதுகை மோனையோடு எழுதப்படாத கவிதைகளைக் கவிதைகள் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. எனவே நானும் எதுகைமோனையோடு கவிதைகளை எழுதி கவிதாதேவியை அர்ச்சனை செய்து வந்தேன். நல்லவேளை மாரீஸ் கவிதாதேவியைக் காப்பாற்றினான். எப்படித்தெரியுமா?

நீலக்குயில் என்று ஒரு இலக்கியப்பத்திரிகை நான் சிறுபையனாக இருந்தபோது திரு.அண்ணாமலை என்னும் பெரியவரால் நடத்தப்பட்டு முக்தியடைந்த பிறகு மாரீஸின் வடிவமைப்பில் ( அப்போது டெடில் பிரஸ் தான் ) வித்யாஷங்கரை ஆசிரியராக கொண்டு எண்ணங்கள் என்ற பத்திரிகை வெளிவந்தது. அந்தப் பத்திரிகைக்கு என்னுடன் கூடப்படித்த பாவத்துக்காக என்னிடம் கவிதை தரும்படி கேட்டான் மாரீஸ். கவிதைகளால் நோட்டுகளை சிறுகாலியிடம் கூட விடாமல் நிரப்பிக் கொண்டிருந்த நான் உடனே எதுகை மோனை உருவகம், உவமை, உவமேயம் என்று வார்த்தைகளை நெருக்கி அடுக்கி எண்ணங்கள் வாழ்க வண்ணங்கள் எழுக என்கிற மாதிரி ஒரு மகத்தான கவிதையை அடித்தல் திருத்தல் இல்லாமல் நாலு பேப்பரை வேஸ்ட்டாக்கி எழுதிக் கொண்டு போய் கவிஞனுக்கேயுரிய கம்பீரத்துடன் நீட்டினேன். மாரீஸ் வாங்கிப் படித்துவிட்டு ஒரு மர்மப்புன்னகையுடன் சரி ஆசிரியரிடம் கொடுக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டான். எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். கவிதையைப்படித்தவுடன் கண்டேன் கவிதையை என்று என்னைக் கட்டித்தழுவிப் பாராட்டி ( கொஞ்சம் ஓவரா இருக்கோ ) முதல்பக்கத்தில் பிரசுரித்து விடுவோம் என்று சொல்வான் என்று எதிர்பார்த்திருந்தேன். சரி. பரவாயில்லை. அவனுக்குத் தெரியாவிட்டால் போகட்டும். எப்படியும் ஆசிரியர் படித்துவிட்டு என்னைத் தேடி வருவார் என்று நினைத்தபடி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன்.

இரண்டு நாட்களுக்குப்பிறகு எண்ணங்கள் ஆசிரியர் என்னைப் பார்க்கவிரும்புவதாக மாரீஸ் சொன்னான். உற்சாகமாக தெரு முக்கிலிருந்த டீக்கடைக்குப் போனேன். அங்கே வித்யாஷங்கர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி என் தோளில் கையைப் போட்டு மென்மையாக தம்பி நீ எழுதியிருக்கறது கவிதையில்லையே என்றார். எனக்கு அப்போதே கவிதைகள் நிரம்பிய என்னுடைய நோட்டுகள் என்னைச் சுற்றிக் கும்மியடிக்க ஆரம்பித்துவிட்டன. அவர் கவிதையைப்பற்றி நிறையச் சொன்னார். எனக்கு அவர் பேசியது ஒரு அட்சரம் கூடப்புரியவில்லை. கடைசியில் அவர் கையில் வைத்திருந்த அபியின் மௌனத்தின் நாவுகள் என்ற கவிதைப்புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அதற்குப் பிறகுதான் கலைகளின் அரசியான கவிதாதேவியை எவ்வளவு புண்ணாக்கியிருக்கிறேன் என்று எனக்குப் புரிந்தது. அந்தச் சமயத்தில் மட்டும் மாரீஸ் என்னிடம் கவிதை கேட்காமலோ, வித்யாஷங்கர் என்னைத் தேடிவந்து அபியின் கவிதை நூலைத் தராமலோ போயிருந்தால் என்னவாயிருக்கும் என்று ஒரு கணம் யோசித்துப் பார்க்கிறேன். உடல் நடுங்குகிறது. என் வீடு முழுவதும் நோட்டுகளில் நிரம்பிய கவிதைகள் நெருக்கடி தாளாமல் மூச்சுத்திணறி கூட்டம் கூட்டமாக செத்துப்போயிருக்கும். நானும் அவைகள் செத்தது தெரியாமல் புத்தகங்களாக அச்சிட்டு தமிழ்கூறு நல்லுலகத்தில் ஊர்வலம் போகச்செய்திருப்பேன். நல்லவேளையென்று நீங்கள் பெருமூச்சு விடுவது எனக்குத் தெரிகிறது.

இப்படி ஆரம்பித்த இலக்கியப்பெரும்பயணத்தின் துவக்கத்திலிருந்து என்னை அரவணைத்தது இடதுசாரிகள் தான். எமர்ஜென்சிக்குப் பிறகு எழுந்த ஜனநாயக எழுச்சியினால் இடதுசாரிகள் புத்துணர்ச்சி பெற்றிருந்த தருணம். மீண்டும் லட்சியவாதம் தன் பதாகையை உயர்த்திக் கொண்டிருந்தது. புரட்சிக்கு அணுவும் குறையாத கனவு இடதுசாரிகளிடம் தினசரி பூத்துக் கொண்டிருந்தது. நாங்கள் ருஷ்ய இலக்கியங்களையும், சீன இலக்கியங்களையும், வாசித்தோம். சோவியத்தின் சோசலிச இலக்கியக்கோட்பாடுகளைப் பற்றி விவாதித்தோம். தமிழில் முற்போக்கு இலக்கியப்படைப்புகளைப் படித்தோம். அந்தக்காலகட்டத்தில் தான் இலக்கியத்தில் இருக்கிற அரசியல் பற்றி எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத்தொடங்கியது. கோவில்பட்டியிலேயே வேறு ஒரு இலக்கிய அணியும் இருப்பது தெரியவந்தது. அவர்கள் தான் முதன்முதலில் க.நா.சு. என்ற பெயரை உச்சரித்தார்கள். உலகத்துச்சிறந்த நாவல்கள் குறித்த க.நா.சு.வின் புத்தகம் வாசிக்கக்கிடைத்தது. அந்த நாவல்களின் அறிமுகத்தில் வேறொரு உலகம் விரிந்தது.

நான் பழகிக் கொண்டிருந்த இடதுசாரிகளிடம் க.நா.சு.வைப்பற்றிக் கேட்டன். அவர்கள் க.நா.சு. கலை கலைக்காக என்ற கொள்கைவாதி. அவர் ஒரு சி.ஐ.ஏ. ஏஜெண்ட். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். நான் முதலில் நம்பினேன். பிறகும் நம்பினேன். ஆனால் இடதுசாரிகள் புதுமைப்பித்தனை அவநம்பிக்கைவாதியென்றும், , பூமணியை போலீஸ் இன்பார்மர் என்றும், கிராம்ஷியை ஐரோப்பிய குறுங்குழுவாதகம்யூனிஸ்ட் என்றும், புதுக்கவிதையை பெட்டிபூர்ஷ்வாக்களின் கலை வடிவமென்றும் வீதி நாடகங்களை தீவிரவாத வடிவமென்றும் ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொருவருக்கும் ஒரு முத்திரை குத்தியபோது சந்தேகப்பட்டேன். இடதுசாரிகளின் தியாக உணர்வும், அர்ப்பணிப்பும், போராட்டகுணமும் மகத்தானது. இன்றும் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை அவர்கள் தான். அவர்கள் அரசியல், பொருளாதாரக்காரணிகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை கலை, இலக்கிய,பண்பாட்டுக்காரணிகளுக்குக் கொடுக்காததினால் வந்த விளைவு என்று நினைத்தேன். அதனால் மாற்றுக்கருத்துகளிடமிருந்து தங்களையும் தங்கள் ஆதரவாளர்களையும் பாதுகாத்துக் கொள்ள இந்த முத்திரைகளைப் பயன்படுத்தினர். இதைத் தங்களுடைய சொந்தத் தோழர்களிடமும் பயன்படுத்தினர் என்பது இன்னும் பெரிய சோகம்.

ஆனால் இதற்கு எதிராக உள்ளிருந்து பெரும்போராட்டம் நடந்தது என்பதும், உலகச்சூழல் மாறியதும் இடதுசாரிகளின் வறண்டபார்வை மாறுவதற்கு உதவின என்று சொன்னால் மிகையாகாது என்று தான் நினைக்கிறேன்.

க.நா.சு. என்ற தனிமனிதர் இல்லையென்றால் தமிழ் இலக்கிய உலகத்துக்கு நிலவளம் எழுதிய நட் ஹாம்சனைத் தெரிந்திருக்காது. அவமானச்சின்னம் எழுதிய நதானியல் ஹாதர்னைத் தெரிந்திருக்காது. தாசியும் தபசியும் எழுதிய அனடோல் பிரான்ஸைத் தெரிந்திருக்காது. மந்திரமலை எழுதிய தாமஸ் மன்னைத் தெரிந்திருக்காது. சித்தார்த்தனை எழுதிய ஹெர்மன் ஹெஸையைத் தெரிந்திருக்காது. விலங்குப்பண்ணை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல்லைத் தெரிந்திருக்காது. தேவமலர் எழுதிய செல்மா லாகர் லவ்வைத் தெரிந்திருக்காது. இன்னும் எட்கர் ஆலன்போவை, காஃப்காவை, சோல்ஜெனித்சனை, என்று உலக இலக்கியங்களை தமிழ் இலக்கியப்பரப்பில் பார்வைக்கு வைத்தவர். உலக இலக்கியவாதிகளை தமிழ்நாட்டில் உலவ விட்டவர். நாங்கள் அவருடைய உலக இலக்கிய வரிசை நூல்களைத் தேடித்தேடிப் போட்டி போட்டுக் கொண்டு படித்தோம். ( உபயம் – கோணங்கி ) மிகப்பரந்த வாசிப்பும், மிகச்சிறந்த ரசனையும் கொண்ட, இலக்கியத்துக்காகவே வாழ்ந்து தீர்த்த க.நா.சு.வை எது இங்ஙனம் செய்யும்படி எது இயக்கியது? கடைசிக்காலம் வரை அவருடைய ஒரே துணையான அந்த டைப்ரைட்டர் அவரிடம் என்ன சொல்லியிருக்கும்?. தன்னை விளம்பரப்படுத்தும் கலைநுட்பம் மலிந்த இன்றைய இலக்கிய உலகில் அவருடைய படைப்புகளின் மதிப்பீடு என்ன? காற்றில் அலையும் கேள்விகள்!

பொய்த்தேவு என்ற அவருடைய நாவல் அன்று நான் முதலில் படித்த க.நா.சு.வின் படைப்பு. இப்போது யோசித்துப்பார்க்கும்போது தமிழில் அது முதல் இருத்தலியல் நாவலாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சோமு என்ற மேட்டுத்தெரு ஜீவனின் வாழ்க்கைச் சித்திரம் தான் அந்த நாவல். சோமுவின் பரிணாம வளர்ச்சி எப்படியெல்லாம் அந்தந்த காலநேர சமய சந்தர்ப்பங்களுக்கேற்றபடியெல்லாம் மாறுகிறது என்பதை கவனிக்கும் போது அவன் வாழ்வில் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் பின்னால் எந்த தர்க்கநியாயமும் இல்லை என்றும் புரிகிறது. நாவலின் வளரும்போது சோமுவின் வளர்ச்சியும் வாசகன் எதிர்பாராத திசைகளில் வளர்ந்து கொண்டே போகிறது. சோமு, அவனுடைய அம்மா, ராயர், ராயரின் மகள், தாசி சகோதரிகள், என்று க.நா.சு.என்னும் கதைசொல்லியின் கதாபாத்திரங்கள் யதார்த்தத்தோடு இயைந்தும், யதார்த்தத்தை மீறியும், வளர்கின்றனர். தமிழிலக்கியத்தில் சோமுவுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் க.நா.சு. படைப்பிலக்கியத்தில் தனக்கும் ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் என்று சொல்லலாம்.

சி.ஐ.ஏ. ஏஜெண்ட் தான் என்று நான் நம்பிய க.நா.சு, அமெரிக்காவின் டைம்ஸ் ஆப் இண்டியா பத்திரிகையில் எழுதிய க.நா.சு., அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களை மட்டுமே உயர்த்திப்பிடித்த க.நா.சு, ருஷ்ய, சோவியத் இலக்கியங்களைப் பற்றிப் பேசாத க.நா.சு, முற்போக்கு இலக்கியங்களை கலைவறட்சி மிகுந்த பிரச்சாரம் என்று ஒதுக்கித் தள்ளிய க.நா.சு, எனக்கு நேரிடையாகவே ஒரு அதிர்ச்சியைத் தந்தார். 1988 – ஆம் ஆண்டு என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதியான ‘ யாவர் வீட்டிலும் ’ வெளியானது. வெளியான ஒரு மாதத்திற்குள்ளாகவே தினமணியில் தமிழ்ச்சிறுகதை வளம் என்ற தலைப்பில் க.நா.சு. என்னுடைய சிறுகதைத்தொகுதி பற்றியும், கௌதமசித்தார்த்தன் எழுதிய மூன்றாவது சிருஷ்டி என்ற சிறுகதைத்தொகுதி பற்றியும் பாராட்டி எழுதியிருந்தார். எப்படியிருக்கும் பாருங்கள்! என்னால் இன்னமும் நம்பவே முடியவில்லை. க.நா.சு. பற்றிய என்னுடைய பழைய மதிப்பீடுகள் தகர்ந்த தருணம் அது. தமிழிலக்கியத்தில் க.நா.சு. என்ற ஆளுமை மட்டும் இல்லாதிருந்தால் என்ன நடந்திருக்கும்? என்ற கேள்விக்கு ஒரு நண்பர் பதில் சொன்னார். ஒரு ஐம்பது வருடங்கள் பின் தங்கியிருக்கும்.

நான் ஒரு தோழரிடம் க.நா.சு. எழுதிய கட்டுரையைப் படிக்கக் கொடுத்திருந்தேன். படித்து முடித்த அவர் தீவிரமான முகபாவத்துடன் அருகில் வந்தார்.

” தோழர் ஜாக்கிரதையா இருங்க.. சி.ஐ.ஏ. ஒங்கள குறி வைச்சிட்டாங்க ” என்று சொல்லி விட்டுப்போனார்.

க.நா.சு. வின் சிரிப்புச் சத்தம் கேட்கிறதா உங்களூக்கு?.

நன்றி- சொல்வனம் இணைய இதழ்

Tuesday 1 January 2013

கற்பது கற்கண்டா? கசப்பா?

1345537051_430813134_1-play-school-stickers-hydrabad உதயசங்கர்

மனிதன் தன்னுடைய வாழ்நாளிலே குழந்தைப்பருவத்தில் தான் மிக வேகமாகவும், மிக அதிகமாகவும் கற்கிறான். கற்றுக்கொள்வதில் இருக்கும் அவனுடைய ஆர்வம் எல்லையில்லாதது. நம்மில் பெரும்பாலோருக்கு பள்ளிக்கூடத்திற்குச் சென்று புத்தகங்களில் உள்ள விஷயங்களைக் கற்றுக் கொள்வது மட்டும் தான் கற்றல் என்ற எண்ணம் இருக்கிறது. இல்லை. பிறந்ததிலிருந்தே குழந்தை கற்றுக் கொண்டுதானிருக்கிறது. தன் அநுபவங்கள் மூலம் தான் கற்றுக் கொண்டதிலிருந்து தனக்கு விருப்பமானதில் ஆர்வமாய் இருக்கவும், விருப்பமில்லாததை ஓரங்கட்டவும் பழகுகிறது. சுயமாக, சுதந்திரமாகக் கற்றுக் கொண்டுவரும் குழந்தைகளைப் பள்ளிக்கூடமென்னும் கட்டமைக்கப்பட்ட, கட்டாயக்கீழ்ப்படிதலை மட்டுமே தன் ஒழுங்குநடவடிக்கையாகக் கொண்ட பள்ளிக்கூடங்கள் ஒருபோதும் தங்களுடைய கற்பித்தல் முறைமையைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. பள்ளிக்கூடங்கள் குழந்தைகளை இயந்திரங்களாகவே பாவிக்கின்றன. அடக்குமுறைக்கல்வியின் மூலம் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவே முயற்சிக்கின்றன. இதனால் குழந்தைகள் மனம் வெதும்பிக் கல்வியின் மீதே வெறுப்படைந்து விடுகின்றனர். எந்தக் குழந்தையும் குதூகலமாக பள்ளிக்கூடத்துக்குச் செல்வதில்லை. இது இப்போது மட்டுமல்ல. எப்போதும் இப்படியே. சிலர் நினைப்பது போல ”அந்தக்காலத்திலே” என்றெல்லாம் இல்லை. இப்போதுள்ள சிறு சிறு மாற்றங்களுக்கே பெரும் போராட்டம் நடந்திருக்கிறது. நடந்துக் கொண்டிருக்கிறது. காரணம் நம்முடைய குடிமைச்சமூகத்துக்குக் கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான கடவுச்சீட்டு என்ற அளவிலேயே புரிதல் இருக்கிறது. அதனால் அதன் ஒரு அங்கமாக இருக்கும் ஆசிரியர்களூம் அப்படியே நினைக்கிறார்கள். ஆனால் சுமார் தொண்ணூறு வருடங்களுக்கு முன்பு நமது கல்வி முறை குறித்து விமர்சனம் செய்தவர், கற்றல் கற்கண்டாக இனிக்க புதிய புதிய செயல்முறைக் கல்வியை ஆய்வு செய்து அதை நடைமுறைப்படுத்தியவர், காந்தியின் சமகாலத்தவர், ஒருவர் இருந்திருக்கிறார். அவர் கிஜூபாய் பகேக.

கற்றலின் இனிமை என்ற செயல்முறைக்கல்விமுறைக்கு முன்னோடி கிஜூபாய் பகேக. இன்றும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இந்த முறை உவப்பானதாகத் தெரியவில்லை. கையில் பிரம்பு இல்லாமல் குழந்தைகளுடன் சமமாக உட்கார்ந்து விளையாட்டாகக் கல்வி போதிக்கும் முறை அவர்களுக்கு அச்சலாத்தியாக இருக்கிறது. ஆசிரியர் என்றால் ஒரு பயம் வேண்டாமா? என்ற எண்ணம் அவர்கள் மனதில் வேரோடியிருக்கிறது. குழந்தைகளைப் பயமுறுத்தியே தாங்கள் அவர்களை விட உயர்ந்தவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள், என்ற அதிகாரத்தை நிலைநிறுத்த நினைக்கிறார்கள். அன்பே உருவான குழந்தைகள் தாய், தந்தைக்குப்பிறகு ஆசிரியர்களிடமே அதிக அன்பு செலுத்துகிறார்கள். பரிசுத்தமான, எதிர்பார்ப்பில்லாத அந்த அன்பை ஆசிரியர்கள் தங்களுடைய கடுமையான அடக்குமுறையினால் அலட்சியம் செய்கிறார்கள். குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குப்பதில் தாழ்வுமனப்பான்மையை விதைக்கின்றனர். இதையெல்லாம் மாற்றவேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் கிஜூபாய் பகேக. 1885-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ஆம் தேதி குஜராத்தில் பிறந்த கிஜூபாய் பகேக முதலில் ஒரு வழக்கறிஞராகத் தொழில் செய்தார். பின்னர் வழக்கறிஞர் தொழிலைத் துறந்து தொண்டுள்ளம் நிறைந்த ஆசியராகப் பணியாற்றினார். குழந்தைகளுக்குக் கல்விகற்கும் முறைமை குறித்து இந்த அளவுக்கு ஆழமாகச் சிந்தித்துச் செயல்பட்டவர் இந்தியாவிலேயே கிஜூபாய் பகேக ஒருவர் தான்.கல்விமுறைமை குறித்து அவருடைய புரட்சிகரமான அணுகுமுறை காரணமாக குழந்தைகளின் காந்தி என்று அன்பாக அழைக்கப்பட்டவர். தனியாகவும் மற்ற கல்வியாளர்களுடன் சேர்ந்தும் இருநூறுக்கும் மேற்பட்ட கல்வி நூல்களை எழுதியுள்ளார். 1939-ஆம் ஆண்டு தனது ஐம்பத்திநாலாவது வயதில் இயற்கை எய்தினார் கிஜூபாய் பகேக. அவருடைய “ பகல் கனவு” என்ற நூல் எல்லோரும் படிக்கவேண்டிய புத்தகம்.

பகல் கனவு ஒரு கதை தான். ஆனால் அந்தக் கதையின் வழியே கிஜூபாய் தன் செயல்வழிக்கல்வி முறையை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ஆம். லட்சுமிசங்கர் என்ற ஆசிரியர் கல்வி அதிகாரியிடம் அநுமதி வாங்கி ஒரு பள்ளிக்கூடத்தின் ஒரு வகுப்பை தன்னுடைய பரிசோதனை முயற்சிக்காக எடுத்துக் கொள்கிறார். அந்தப்பள்ளிக்கூடத்தில் பிரம்பின் ஆட்சியே நடந்து கொண்டிருக்கிறது. அவர் எடுத்துக் கொண்டிருந்த வகுப்பில் இருந்த மாணவர்கள் முதல் நாள் அவரை ஏமாற்றி விடுகிறார்கள். அந்தக் குழந்தைகளை வசியப்படுத்தும் கலையை மறுநாள் கண்டுபிடித்து விடுகிறார் ஆசிரியர் லட்சுமிசங்கர். கதை பிடிக்காத குழந்தைகள் இருக்கமுடியுமா? குழந்தைகள் அவருடைய கதை சொல்லும் கலையில் மயங்கிவிடுகிறார்கள். அதிலிருந்து துவங்குகிறது அவருடைய பரிசோதனை முயற்சி. வெறும் பாடப்புத்தகங்களை மட்டுமே மனனம் செய்து கொண்டிருந்த குழந்தைகள் விளையாட்டாய் எழுத்துகளைக் கற்றுக் கொள்கிறார்கள். விளையாட்டாய் வாக்கியங்களை அமைப்பதற்குக் கற்றுக் கொள்கிறார்கள். கதைப்புத்தகங்களை வாசிக்கிறார்கள். தாங்கள் சுத்தமாக இருப்பதற்குக் கற்றுக்கொள்கிறார்கள்.பாடல்கள் பாடுவதற்குக் கற்றுக்கொள்கிறார்கள். படம் வரைவதற்குக் கற்றுக் கொள்கிறார்கள். நாடகம் போடுவதற்குக் கற்றுக்கொள்கிறார்கள். மரம் ஏறக்கற்றுக்கொள்கிறார்கள். கவிதையையும் கற்றுக்கொள்கிறார்கள். தம்மையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்யக்கொள்கிறார்கள். பொம்மைகள் செய்யக் கற்றுக் கொள்கிறார்கள்.கவிதை எழுதக் கற்றுக்கொள்கிறார்கள். எல்லாவற்றையும் விளையாட்டாகவே கற்றுக் கொள்கிறார்கள்.

இத்துடன் மொழிப்பயிற்சி, இலக்கணம், வரலாறு, பூகோளம், கணிதம், என்று எல்லாப்பாடங்களையும் கற்றுக் கொள்கிறார்கள். வழக்கமான மனனக்கல்வி முறையில் அல்லாமல் குழந்தைகளே மனம் ஒன்றி ஈடுபாட்டுடன் விளையாட்டாய் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். ரேங்க் இல்லை. கெட்டிக்காரன் என்றோ மோசமானவன் என்றோ யாரும் இல்லை. எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறார்கள். எனவே போட்டி, பொறாமை, இல்லை. தேர்வில் வகுப்பே பாஸாகிறது. ஒரு இனிய கனவைப் போல இந்தக் கதை விரிந்து செல்கிறது. எத்தனை முறை படித்தாலும் ஆர்வம் குன்றாத இந்தப்புத்தகம் குழந்தைகளின் கல்விமுறை குறித்த நம்முடைய எண்ணங்களை அப்படியே புரட்டிப் போடுகிறது. வாசித்து முடிக்கும்போது இப்படி ஒரு பள்ளி, இப்படி ஒரு வகுப்பு, இப்படி ஒரு ஆசிரியர் நமக்குக் கிடைத்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் வரும். சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் கிஜூபாய் கண்ட கனவு இன்னும் பகல் கனவாகவே இருக்கிறது. மேலோட்டமான சிறு சீர்திருத்தங்களுக்கே பெரும்போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. அதுவும் கல்வியை அரசாங்கம் கைகழுவ முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், கல்வியைக் கொள்ளை லாபம் அடிக்கும் உற்பத்திசாதனமாக தனியார் பள்ளிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில், கிஜூபாயின் பகல் கனவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. எல்லோரும் வாசித்து நமது கல்விமுறை குறித்து ஆழ்ந்த பரிசீலனை செய்யவேண்டும். அதற்கான திசைவழியில் எல்லோரும் நடந்து செல்லவேண்டும். அப்போது தான் எதிர்காலக்குழந்தைகளாவது நம்மைச் சபிக்காமலிருப்பார்கள்

நன்றி-இளைஞர் முழக்கம்