Monday 27 April 2015

வேத காலத்துக்குத் திரும்ப முடியுமா?

 

உதயசங்கர்vedas

 

வேதகாலம் பொற்காலம் என்றும் வேதகாலத்துக்குத் திரும்புவோம் என்றும் பழமைவாதிகளும் இந்து மதவெறியர்களும் இன்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலே வேதகாலம் பொற்காலமாக இருந்ததா? இப்போது வேதகாலத்துக்கு திரும்பினால் எப்படி இருக்கும்? ஆனால் வேதகாலம் எனப்படுவது என்ன? வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சமுதாயம் எப்படிப் பட்டது? அந்த சமூகவிழுமியங்களை இன்று நடைமுறைப்படுத்த முடியுமா? இப்படி ஏராளமான கேள்விகள் நம் முன்னே வரிசை கட்டுகின்றன. வேதங்களின் பெயர்களைக் கூட உச்சரிக்கக்கூடாது; அப்படி உச்சரித்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தரவேண்டும் என்று மனு தர்ம சாஸ்திரத்தில் எழுதப்பட்டு அதை நடைமுறைப்படுத்தவும் செய்திருக்கிறார்கள். அந்தப்படி வேதங்களிலிருந்து விலக்கப்பட்ட பெரும்பான்மையான உழைப்பாளி மக்களான சூத்திரர்கள் இன்று சநாதனவாதிகளின் முழக்கங்களை உண்மையென நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வேதங்களைப் படிக்க மாட்டார்கள் என்ற துணிச்சலில் தானே இப்படியெல்லாம் சொல்ல முடிகிறது.

வேதகாலம்

வேதங்களில் மிக முக்கியமானதாக கருதுவது ரிக் வேதம். இதுவே காலத்திற்கு முற்பட்டது. அதாவது கி.மு.2500 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஆரியர்கள் கி.மு. 1500 வாக்கில் இங்கே இருந்த தஸ்யூக்களை வென்று கி.மு. 1200-1000 ஆண்டுகள் வாக்கில் ரிக் வேதத்தின் ஆரம்ப கால ஸ்தோத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்தோத்திரங்கள் கி.மு.1000- 800 க்குமிடையில் திருத்தி எழுதப்பட்டது. கி.மு.600 வாக்கில் புதுப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டங்களில் அதாவது கி.மு.1000-800 களுக்குமிடையிலேயே சாம, யஜூர் அதர்வ வேதங்களும் உருவாக்கப்பட்டன எனலாம். இந்த வேதங்கள் வந்தேறிகளான ஆரியர்களின் நம்பிக்கைகள், சமூக நிலை, புனைவுகள், கடவுள்கள், உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் போன்றவை பற்றிய தொகுப்பு. ஆனால் ஆரியர்கள் நாகரிகத்தில் அதிக முன்னேற்றம் பெற்றிராத இடையர் குலத்தவர். நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்கள் குடியேறிய பகுதியான ஹரப்பா மொகஞ்சோதரா மக்களோ நாகரிகத்தில் மிகவும் முன்னேறியவர்களாகவும், நகர வாசிகளாகவும் இருந்தனர் செப்புக் கருவிகளை பயன்படுத்தினர், என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களை சாம, தான, தண்ட, பேதங்களால் வெற்றி கொண்ட ஆரியர்கள் இயற்றியதே இந்த வேதங்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

காலத்தில் முற்பட்ட ரிக் வேதத்தை அடிப்ப்டையாகக் கொண்டே மற்ற மூன்று வேதங்களின் பல பகுதிகள் இயற்றப்பட்டிருக்கின்றன. என்றாலும் சாம, யஜூர், அதர்வ வேதங்களின் கால சமூக வாழ்க்கையிலிருந்து ரிக் வேத கால மக்களது சமூகவாழ்க்கை வேறு பட்டிருந்தது. ஆடு, மாடு, மேய்க்கும் நாடோடி வாழ்க்கையிலிருந்து பயிர்த்தொழில் செய்யும் வாழ்க்கைக்கும் நகர வாழ்க்கைக்கும் முன்னேறிக் கொண்டிருந்ததை சாம, யஜூர், அதர்வ வேதங்கள் தெரிவிக்கின்றன. வாய்மொழியாகவே கற்பிக்கப்பட்டு நினைவிலிருத்தப்பட்ட இந்த வேதங்களை கி.பி. 400 ஆம் ஆண்டுகள் வாக்கில் வாழ்ந்த ஸாயணாச்சாரியார் என்பவரே எழுதியவர்களில் முக்கியமானவர். யாகம் முதலிய சடங்குகளுக்காக பல சமயங்களில் இயற்றப்பட்டு திருத்தி எழுதப்பட்ட சூக்தங்களின் ( ஸ்லோகங்கள் ) தொகுப்பே இன்றைய வேதங்கள்.

மொத்தமாக நான்கு வேதங்களிலும் சேர்த்து 20358 ஸ்லோகங்கள் இருக்கின்றன. ரிக் வேதத்தில் 10,522, யஜூர் வேதத்தில் 1984, சாம வேதத்தில் 1875, அதர்வ வேதத்தில் 5977 உள்ளன. ரிக் வேதத்தில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்களும் உண்டு. குறிப்பாக வருணம் பற்றிய சுலோகம். மூல புருஷனைப் பலி கொடுத்ததன் மூலம் வருணம் உருவானதாக ஒரு இடத்தில் மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. நெற்றிலிருந்து பிராமணரும், தோள்களிலிருந்து ஷத்திரியரும், தொடைகளிலிருந்து வைசியரும், பாதங்களிலிருந்து சூத்திரரும் உருவாக்கப்பட்டனர் என்ற சுலோகம் காலத்தால் பிற்பட்டது என்று மொழியியல் ஆய்வாளார்கள் கூறுகின்றனர். பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட வருணத்தத்துவத்துக்கு ஒரு பழமையான கருதுகோளை உருவாக்கப் புனைந்த தொன்மப்புனைவு தான் இந்த மூலபுருஷன் கதையும் வருணங்களின் தோற்றம் பற்றிய ஸ்லோகம். அதே போல நாடோடிகளான ஆரியர்கள் சிந்து சமவெளிப்பிரதேசத்தில் நுழைந்ததும் ஏற்பட்ட ஆச்சரியமான அதிசயமான உணர்வுகளும் பல ஸ்லோகங்களில் பதிவாகியுள்ளன. அங்கே ஏற்கனவே இருந்த தஸ்யூக்களை வெற்றி கொள்ள இந்திரனை உதவி செய்யுமாறு வேண்டி அழைக்கும் துதிப்பாடல்களின் தொகுப்பே ரிக் வேதம்

யாகச்சடங்குகளுக்கான மந்திரங்கள் அடங்கிய வேதமே யஜூர் வேதம். சொன்னதையைத் திரும்பத் திரும்பச்சொல்வதும் அர்த்தமில்லாத ஒலிக்குறிப்புகள் கொண்டதும் ஆகும். யஜூர் வேதத்தில் உள்ள மந்திரங்களில் நான்கில் ஒரு பகுதி ரிக் வேதத்திலிருந்து பிறந்ததாகும்.

சாம வேதமும் புரோகிதர்கள் வேள்வி நேரத்தில் உச்சரிப்பதற்காக இயற்றப்பட்ட மந்திரங்களே நிறைந்தது. அவற்றில் ஆறுக்கும் குறைவான ஸ்லோகங்களைத் தவிர மற்றவை அப்படியே ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

அதர்வ வேதத்தில் மாந்த்ரீகம் சம்பந்தப்பட்டது. பேய், பிசாசு, நோய் நொடி, வனவிலங்குகளைப் பற்றிய அச்சம் இவைகளைக் கட்டுப்படுத்தவற்காக இயற்றப்பட்ட மந்திரங்கள். அதுமட்டுமல்லாமல் பகைவரை அழிக்க மந்திரம், போர் வெற்றிக்கு மந்திரம், நோய் சாந்திக்கு, குழந்தைப்பேறுக்கு, நீண்ட ஆயுளுக்கு, செல்வம் குவிய என்று பல்வேறு மந்திரங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இன்று அரசியல்வாதிகள், பணக்காரர்கள், தொடங்கி சாமானியர் வரை செய்யும் பெரும்பாலான வேள்விகளில் இந்த மந்திரங்களே ஓதப்படுகின்றன.

இத்தகைய தன்மையுள்ள வேதங்கள் இன்றைய அறிவியல் யுகத்துக்குப் பொருத்தமானது தானா என்று சிந்தியுங்கள்?

வேதகால நாகரிகம்

நாம் முன்னரே குறிப்பிட்ட மாதிரி, ஆரியர்கள் நாடோடிகள். ஆடு மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தவர்கள். நாகரிகத்தில் பின்தங்கியவர்கள் அவர்களுடைய உற்பத்தி உறவுகள் எப்படி பட்டதாக இருக்கும்? அவர்களுடைய சமூக மதிப்பீடுகள் அவர்களுடைய உற்பத்தி சக்திகளான ஆடு, மாடுகள், நாடோடி வாழ்க்கை இவற்றின் அடிப்படையிலேயே இருப்பது இயற்கை தான். எனவே அவர்கள் வாழ்க்கையில் சோம பானம்( கஞ்சா ) என்கிற போதையூட்டுகிற பானம் மிக முக்கியமானதகிறது. அந்த சோம பானத்தை அவர்களுடைய முக்கியக் கடவுளான இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கு கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்துகிற ஸ்லோகங்களும், அப்படி குடித்து திருப்தியடைந்த தேவர்களும் ஆரியர்களுக்கு அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்கிறவர்களாகவும் மாறுவதைப் பற்றி 120 க்கும் மேற்பட்ட ஸ்லோகங்கள் ரிக் வேதத்தில் இருக்கின்றன. அதே போல சுரா பானமும் தானியங்களிலிருந்து பெறப்படும் ஒரு வகை மதுவாகும். இதைத் தவிர பிராமணர்கள் வேறு மது வகைகளைக் குடிக்கக்கூடாது என்று போதாயன தர்ம சூத்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு பானங்களும் அனுபூதியும், மரணமற்ற சாகாநிலையையும் அளிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இனக்குழு வாழ்க்கையிலிருந்து அரசுகள் உருவாகிக்கொண்டிருந்தது. நிலப்பிரபுத்துவக்கால கட்டம் நிலை பெற்றுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், அரசு என்ற இயந்திரம் உருவாகிக் கொண்டிருந்த போது அரசர்கள் தங்களுடைய நாட்டு எல்லையை விரிவு படுத்த, அருகிலிருக்கும் நாட்டு அரசர்களிடம் அங்கீகாரம் பெறுவதற்கும் நடத்தப்படும் அசுவமேதயாகம். கருநிறஅசுவம் ( குதிரை ) ஒன்றை அவிழ்த்து விட்டு அதை நாடுகளெங்கும் சுற்றி வரச்செய்து அதை யாகவேள்வியில் பலி கொடுத்து, அப்படி பலி கொடுக்கப்பட்ட குதிரையோடு அரசனின் மனைவி புணர்ந்து எழுவதான சடங்குகள் கொண்டது. இந்த மாதிரியான யாகத்தை சில பதிலிகளை வைத்து இப்போதும் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தது கோமேத யாகம். பசுவைக் கொன்று, கொல்லப்பட்ட பசுவின் கொழுப்பை இறந்து போன முன்னோர்களுக்கு யாகவேள்வியில் அர்ப்பணிப்பத்தும், பசுவின் இறைச்சியை யாகத்தில் பங்கு பெற்றவர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பது உண்டு. இன்னும் யஜூர் வேதத்தில் எத்தகைய லட்சணமுள்ள பசுக்களையும் காளைகளையும் எந்தெந்த கடவுள்களுக்கு யாகத்தில் பலி கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

யஜூர் வேதத்தில் புருஷமேதம் என்று சொல்லப்படுகிற யாகத்தில் நரபலி எப்படிக் கொடுப்பது என்பதைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இதன் நடைமுறைகள் அசுவமேதயாகத்திலுள்ள நடைமுறைகளை ஒத்திருக்கும். சர்வ மேதம் என்ற யாகத்தில் விசுவகர்மா யாகம் வளர்த்து ஆத்மவதை செய்து கொள்வதைப் பற்றி விவரிக்கிறது. வாஜபேய யாகத்தில் விலங்குகளைப் பலி கொடுப்பதைப் பற்றியும், எந்தெந்த மிருகங்களை, மிருகங்களின் எந்தெந்தப் பாகங்களை யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதே போல ராஜசூய யாகத்தின் முக்கியமான சடங்கே சூதாட்டம் தான். மகாபாரதம் நினைவுக்கு வருகிறதா?

சமூக உறவுகளைப் பொறுத்த வரை புராதன கால மனித குலத்தின் மதிப்பீடுகளையே கொண்டிருந்தனர். மிருகங்களுடன் ( பெண் ஆடு, கிடா, காளை ) புணர்ச்சியில் ஈடுபவது நல்லது என்று யஜூர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அதே போல அதர்வ வேதத்திலே சகோதர சகோதரிகளுடன் உறவு கொள்வது, தந்தை மகளுக்கிடையேயான உறவு, பாலியல் வீரியத்தை வேண்டியும், பாலியல் சுகத்தை வேண்டியும், பல ஸ்லோகங்கள் யஜூர்,, அதர்வ வேதங்களில் இருக்கின்றன.

வேதகாலத்தில் பெண்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் இல்லை. அதோடு அவர்கள் சுயசொத்தாகக் கருதப்பட்டார்கள். பெண் ஆணின் அடிமையாகவே கருதப்பட்டாள். வரதட்சணை கொடுக்கும் வழக்கமும் இருந்தது.பெண்கள் அறிவில் குறைந்தவர்களாகவும் கருதப்பட்டனர். எனவே பெண்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை.

உடைகளைப் பொறுத்தவரை கோவணமும், துண்டும் உடுத்தியதாகவும் மீசை, தாடி, குடுமி உடையவர்களாகவும் இருந்தனர் என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆரியர்கள் அசைவர்கள். பசு, குதிரை, ஆடு, எருமை உடும்பு, ஆமை, பன்றி, முள்ளம்பன்றி, முயல், கண்டாமிருகம், போன்ற மிருகங்களைக் கொன்று சாப்பிட்டனர். பால் தயிர், பால், நெய், போன்ற பொருட்களைப் பயன்படுத்தினர். கோதுமையும், பார்லியும் முக்கிய உணவுப் பொருட்களாக இருந்தன.

ஆரம்ப காலகட்டத்தில் விவசாயம் அறியாத ஆரியர்கள் அவர்கள் வெற்றி கொண்ட ஹரப்பா வாசிகளான தஸ்யூக்களைடமிருந்தே விவசாயத்தைக் கற்றிருக்கலாம் என்று கருதுகிற ஆராயச்சியாளர்கள் இருக்கிறார்கள் என்றாலும் ரிக் வேதத்தில் விவசாயத்தோடு தொடர்புடைய சடங்குகள் விரிவாகச் சொல்லப்படுகின்றன.

அனைத்து நோய்களையும் வேள்விகள் மூலம் குணமாக்கி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. இப்படி வாழ்க்கையின் எல்லா சமூகவிஷயங்களிலும், மதிப்பீடுகளிலும் மனித குல நாகரிகத்தின் ஆரம்ப காலத்தில் மனிதசிந்தனையின் தொடக்க கால கற்பனைகளில் உருவானவையே வேதங்கள்.

எனவே வேதகாலம் என்பது அனைவருக்குமான பொற்காலமாக இல்லை. ஆக்கிரமிப்பாளர்களுக்கு வேண்டுமானால் அது பொற்காலமாக இருந்திருக்கலாம். மனித குலம் அந்த வேதகாலத்திலிருந்து எவ்வளவோ தூரம் கடந்து வந்து விட்டது. தொழில், அறிவியல், பகுத்தறிவு, வாழ்க்கை மதிப்பீடுகள் என்று என்று வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் உலகளாவிய சிந்தனைப்போக்குகளோடு கலந்து உறவாடி புதிய பரிமாணங்களைப் பெற்றிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. வரலாற்றை பின்னோக்கி சுற்றுவது அறிவுடைமை ஆகாது. அதிலும் புராதன நாகரிக கால கட்டத்தை நோக்கி வரலாற்று சக்கரம் சுற்றவும் சுற்றாது. வேதகாலம் திரும்பவும் திரும்பாது. திரும்பவும் கூடாது.

துணை நூல்கள்- 1. வரலாறும் வக்கிரங்களும் –ரொமிலா தப்பர்

2. வேதங்கள் ஓர் ஆய்வு-சனல் இடமருகு

நன்றி- தீக்கதிர்

Sunday 26 April 2015

மந்திரச்சடங்குகளும் பண்பாட்டு அசைவுகளும்

 

உதயசங்கர்

mulaippaari

ஆதியில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக மந்தைகளாக வாழ்ந்தனர். கைகளின் உழைப்பின் வழியே மூளை வளர்ச்சி பெற பகுத்தறிவு பிறந்தது. பகுத்தறிவு வளர இனக்குழுவாக மாறினர். மந்தைகளாக இருந்த போது இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த ஆதிமனிதர்கள் இனக்குழுவாக மாறிய போது இயற்கையுடன் போராடி தங்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மாற்றத்தொடங்கினர். குகைகளிலிருந்தும் மரப்பொந்துகளிலிருந்தும் வெளியேறி குடியிருப்புகளைக் கட்டிப்பார்த்தனர். விவசாயம், மீன் பிடித்தல், துணி நெய்தல், கால்நடைகளை வளர்த்தல், போன்ற தொழில்களை செய்யத் தொடங்கினர். இயற்கையின் மீதான அவர்களுடைய தலையீடு எப்போதும் சாதகமாக இல்லை. இயற்கையின் இயக்கவியலைப் புரிந்து கொள்கிற அளவுக்கு அவர்களுடைய பகுத்தறிவோ, அறிவியலறிவோ முதிர்ச்சி பெற வில்லை. எனவே அவர்கள் இயற்கையில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற இறந்து போன அனைத்துப்பொருட்களிலும் ஆவி இருப்பதாக கற்பனை செய்தனர். அந்த ஆவிகள் தான் தங்களின் மீது வினை புரிகிறது என்று நம்பினர். அதனால் அந்த ஆவிகளை வழிபடுவதன் மூலம் தங்களுக்கு தேவையான நல்ல விளைவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதே போல தங்களுக்குத் தீமை செய்யும் கெட்ட விளைவுகளைக் கட்டுபடுத்தலாம் என்று நினைத்தனர். அதற்காக கற்பனைச்சித்திரங்களை உருவாக்கி அதன் மூலம் புறவயமான யதார்த்தத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று கருதினர்.

இந்த வழிபாட்டு முறையே மந்திரச்சடங்குகளாக மாறியது. மொழி தோன்றுவதற்கு முன்னால் இந்த ஆதி மந்திரங்கள் வெறும் பாவனையாக மட்டுமே இருந்தது. மந்திரங்களை உருவாக்கியதற்கு ஆன்மீக அல்லது கடவுள் நம்பிக்கை காரணமல்ல. பொருளாதாரக்காரணங்கள் தான். ஆரம்ப காலத்தில் உற்பத்திக்கருவிகளும் திட்ட மிட்ட விளைவுகளை உருவாக்குகிற அளவுக்கு சிறப்பாகவோ, போதுமானதாகவோ இல்லை. எனவே இந்த மந்திரச்சடங்குகள் மனிதர்களின் உளவியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதனால் உழைப்புச்சக்தி அதிகமானது. அதாவது உற்பத்திக்கருவிகளின் போதாமையை இந்த மந்திரச்சடங்குகள் ஈடுகட்டியது. இந்த வகையில் அப்போது மந்திரச்சடங்குகள் உற்பத்திக்கருவிகளின் ஒரு அங்கமாகவே திகழ்ந்தது. மனிதனுடைய பொருளாதார , வாழ்வாதார செயல்பாடுகள் அனைத்திலும் மந்திரச்சடங்குகள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன.

குழந்தைப்பருவத்தில் இருந்த மனித குலம் காலப்போக்கில் வழிபட்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துப் பொருட்களுக்கும் மனித உருவங்களைக் கற்பனை செய்தது. மனிதன்..குலமரபுச்சின்னங்களை உருவாக்கினான். தொன்மங்களை உருவாக்கினான். அறிவியலறிவின் ஆதிப்பருவத்தில் இருந்த மனிதன் இந்தக் கற்பனையான உருவங்கள் அதீத ஆற்றல் கொண்டவையென நமபத் தொடங்கினான். ஆக ஆரம்பத்தில் மந்திரச்சடங்குகள் உற்பத்திக்கருவிகளோடு உற்பத்திக்கருவியாகவே செயல்பட்டிருக்கிறது.

உற்பத்திக்கருவியாகச் செயல்பட்ட மந்திரச்சடங்குகள் உற்பத்தி சக்திகளைக் ( இயற்கை) கட்டுப்படுத்தி தங்களுக்குத் தேவையான உற்பத்தியைப் பெருக்க முயற்சித்தன. எனவே தான் இத்தகைய மந்திரச்சடங்குகளில் இயற்கையின் செயல்களை ஒத்த செயல்களையே பாவனையாக செய்து வழிபட்டனர். கனடாவில் உருளைக்கிழங்கு வளர்வதற்காக உருளைக்கிழங்குச் செடி எப்படி செழிப்பாக வளர வேண்டும் என்று பாவனை நடனம் ஆடினர். .பிரேசிலில் மழை வேண்டி வாயில் தண்ணீரை வைத்து மழை பொழியும் சத்தம் போல ஒலியெழுப்பவர். பின்னர் கையில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து வானில் எறிந்து இதோ பார்.. இது போலவே செய்.. என்று சத்தமிடுவார்கள். நமது ஊர்களில் பயிர்கள் செழித்து வளர்வதற்கு நவதானியங்களை விதைத்து முளைப்பாரி வளர்த்து அம்மனை வழிபாடு நடத்துவது, உரக்குழி அம்மன் வழிபாடு, என்று பெரும்பாலும் விவசாய வேலைகள் சார்ந்தே சடங்குகள் இருக்கின்றன. அம்மனை வழிபடுவதற்கான காரணம் புராதன சமூகத்தில் பெண்களே விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் ஆவர். அதுமட்டுமில்லாமல் மனிதகுல உற்ப்பத்திக்கும் காரணமாக இருக்கும் பெண்களைச் செழிப்பின் அடையாளமாகவே புராதன சமூகம் கண்டது. அதே போல தானியங்களைப் பெண்களாக உருவகிப்பதும் பல நாடுகளில் இருக்கிறது.

உழைப்பினோடு இயைந்த மந்திரசடங்குகளில் உடலசைவுகள், அருள் வந்து ஆடுதல், பொங்கலிடுதல், போன்ற சடங்குகளில் ஒத்தது ஒத்ததை உருவாக்கும் என்ற நம்பிக்கையே தொழிற்படுகிறது. இறந்தவர்களுக்குச் செய்யப்படும் சடங்குகளில் கூட வேளாண்சமூகத்தின் செயல்பாடுகளே பாவனையாகச் செய்யப்படுகின்றன. தீயாற்றுகிற சடங்கின் போது இறந்தவரின் எலும்புகளை எடுத்து வைத்து நவதானியங்களை விதைத்து பயிரிட்டு அவை முளைத்து செழிப்பாக வளர்வதை ஒத்த சடங்குகளை நாம் பார்க்கலாம். உற்பத்திக்கருவிகளைக் கும்பிடுதல், இயற்கையை வழிபடுதல், படையல் வைத்தல் பலியிடுதல், போன்ற செயல்கள் உற்பத்தி சக்திகளை திருப்திப்படுத்துவதாகவும், வேண்டுவதாகவும், கட்டளையிடுவதாகவும் அமைகின்றன. இத்தகையச் சடங்குகள் வேட்டைச்சமூகத்தில் தோன்றி வேளாண்மை சமூகத்தில் வளர்ந்து நிலை பெற்றிருக்கின்றன. இனக்குழுக்கள் தங்களுக்குத் தேவையான உற்பத்தியை அதிகரிக்கவே இத்தகைய மந்திரச்சடங்குகளை உருவாக்கியுள்ளன. இவற்றில் ஒவ்வொரு இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகளும், பண்பாட்டு சேகரங்களும் கலந்திருக்கும். இந்தச் சடங்குகளை நிகழ்த்த தனியான மந்திரங்கள் பொதுவாக இல்லை. அந்தந்த இனக்குழுவிலுள்ள ஒருவரே இந்தச் சடங்குகளை நிகழ்த்துபவராக இருப்பார். இந்தச் சடங்குகள் நிகழும் காலம் தவிர மற்ற காலங்களில் அவரும் இனக்குழுவில் ஒரு அங்கத்தினராக உழைப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பார். இந்த மந்திரச்சடங்குகளில் கூட்டான உளவியல் சக்தி ஓருமுகப்படுத்தப்பட்டு புறவயமான யதார்த்தத்தின் மீது வினை புரிந்து அதை மாற்றுகிறது.

புரோகிதச்சடங்குகள்

இதற்கு மாறாக புரோகிதச்சடங்குகள் எல்லாம் வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை. குறிப்பாக ரிக் வேதத்திலும், யஜூர், அதர்வ வேதங்களிலும் ஏராளமான யாகவேள்விகள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 400 யாகவேள்விகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வேதங்கள் ஆரியர்களின் ஆக்கிரமிப்பின் போது இயற்றப்பட்டவை. நாடோடிகளாக, ஆடுமாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இனம் சிந்து சமவெளியை ஆக்கிரமித்து அங்கிருந்த தஸ்யூக்களோடு சணடையிட்டு நிலைபெறத்தொடங்கிய காலத்தில் தங்களுடைய போர்வெற்றி, பகைவர் அழிவு, பாபச்செயல்கள், நோய் சாந்தி, கருவுறுதல், கருப்பாதுகாப்பு, அன்ன சித்தி, ஐஸ்வரியம், இதையே அஸ்வமேத யாகம், ( ராஜீய அதிகரிக்க நடத்தப்படும் யாகம். இதில் குதிரையைப் பலி கொடுப்பர் ) ராஜசூய யாகம்,( அரசர்கள் தங்கள் மேலாண்மையை சிற்றரசர்களுக்கு அறிவிக்க நடத்தப்படும் யாகம். இந்த யாகத்தில் சூதாட்டம் ஒரு முக்கியமான சடங்கு ) புருஷமேதம்,( நரபலி கொடுக்கும் யாகம்) கோமேத யாகம்,( பசுவைப் பலியிட்டு அதன் பாகங்களை பிராமணர்கள் பங்கிட்டுக் கொள்கிற யாகம்) சர்வ மேதம்,( தானாக முன்வந்து அக்னியில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் யாகம் ) சுதர்சன யாகம் ( எதிரிகளை அழிக்கச்செய்யப்படும் யாகம் ) என்று எல்லாயாகங்களிலும் தீ வளர்த்து அதில் பலி பொருட்களை ஆகுதியாக்கி, பால் நெய் போன்ற பொருட்களை தீயிலிட்டு, புரியாத மந்திரங்களை ஓதி தங்களுடைய ஆன்மீகமேலாண்மையை நிலை நாட்டிக் கொண்ட புரோகிதர்களின் காலம் அது. இன்றும் புரோகிதச்சடங்குகள் இன்று பரவலாகி விட்டன. புதுமனைப்புகுவிழாவுக்கு கணபதி ஹோமம், திருமணச்சடங்கு, பெண் பூப்பெய்த தீட்டுக்கழிக்கும் சடங்கு, குழந்தைக்குப் பெயரிடும் சடங்கு, இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கு என்று வாழ்நாள் முழுவதும் புரோகிதச்சடங்குகள் எல்லோர் குடும்பங்களிலும் நடந்து கொண்டேயிருக்கின்றன. புரோகிதச்சடங்குகளில் எல்லாம் மாடு மிகுந்த முக்கியத்துவம் பெறும். மாட்டு மூத்திரம் இல்லாமல் எந்தச் சடங்கும் இருக்காது. காரணம் அவர்களுடைய வேள்விகளிலெல்லாம் ஆடு, மாடு, குதிரை போன்ற மிருகங்கள் பலி கொடுக்கப்பட்டு உணவாக்கப்பட்டன. ரிக் வேதப்பாடல்களில் பலியிடப்படும் மாடுகளின் எந்தெந்தப் பகுதிகள் எப்படிப்பட்ட சுவையுடன் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இப்போது நடத்தப்படும் எல்லாச்சடங்குகளிலும் பலிப்பொருட்கள், உயிர்களின் பெயர்களைச் சொல்லும் மந்திரங்கள் இருக்கும். ஆனால் அதற்கு மாற்றாக வேறு பொருட்களை வேள்வியில் இட்டுக் கொள்வார்கள்.

தீ வளர்த்து செய்யப்படும் புரோகிதச்சடங்குகள் எந்த உற்பத்தியோடு தொடர்புடையவை? உற்பத்தியோடு எந்தத் தொடர்புமில்லாத யாருக்கும் புரியாத சமஸ்கிருத மொழியில் உச்சரிக்கப்படுகின்ற வேத மந்திரங்களின் உண்மையான அர்த்தமே ஆரியர்களின் போரும் அதன் வெற்றியும் ஆக்கிரமிப்பும், பகைவர் அழிப்பும் அவர்களுடைய செழிப்பும் தான். தந்தைவழிச்சமூகமான ஆரியர்கள் தங்களுடைய சடங்கு முறைகளை ரிஷிகோத்திரம் என்று சொல்லப்படுகிற தந்தைவழி கோத்திரம் சார்ந்தே நடத்துகின்றனர். ஆனால் தாய் வழிச்சமூகமாகவே வெகுகாலம் இருந்த உழைப்பாளி மக்களுக்கு அந்தக் கோத்திரம் கிடையாது.. ஏழு ரிஷிகளின் கோத்திரத்தில் வந்த பிராமணர்களைத் தவிர மற்ற எல்லோருக்கும் ஒரே கோத்திரம் சிவகோத்திரம் தான். இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட புரோகிதச்சடங்குகளை நடத்துவதில் எந்த அர்த்தமும் கிடையாது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் ஆரியர்கள் இயற்றிய இந்த வேதங்கள் இன்றும் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருப்பதற்கான அடிப்படையான காரணம் மநு தர்மம். மநு தர்மத்தில் வேதங்களைப் பகுத்தறிய முயலக்கூடாது. அவை கடவுளுடைய வார்த்தைகள். அதை ஓதுகிற புரோகிதர்களும் கடவுளுக்கு நிகரானவர். வேதங்களைக் கேள்வி கேட்கவோ, ஆராயவோ கூடாது என்று ஆன்மீக அதிகாரத்தை வேதங்களுக்கு ஏற்றி வைத்ததன் காரணமே இன்றும் அவை செல்வாக்கோடு இருக்கிறது..

எல்லாவற்றையும் தன்வயப்படுத்துவதின் மூலம் தன்னை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் பிராமணியம் இப்போது இந்த இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகளையும் கபளீகரம் செய்து அதற்கு சமஸ்கிருதத்தன்மையை ஏற்றுகிறது. உதாரணத்துக்கு அறுவடைத்திருநாளான பொங்கல் மகர சங்கராந்தியாக மாற்றப்படுகிறது. உழைப்பாளிகள் தங்களுடைய உற்பத்திக்கருவிகளைக் கும்பிடும் நாள் இன்று சரஸ்வதி பூஜையாகி விட்டது. கார்த்திகைத்திருவிழா தீபாவளிக்கு முன்னால் ஒளி மங்கி விட்டது. இது போக பௌணர்மி, அமாவாசை, பிரதோஷம், பாட்டிமை, அஷ்டமி, நவமி, ராகு, குளிகை, எம கண்டம், சூலம், பரிகாரம் என்று வாழ்க்கை முழுவதும் பிராமணியமாக்கல் நடக்கிறது. எல்லோர் வீடுகளிலும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்குச் சற்றும் புரியாத புரோகிதச்சடங்குகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. வீடு கட்டினால் கணபதி ஹோமம், குழந்தை பிறந்தால் பெயரிடும் சடங்கு, பெண் பெரியவளானால் புண்ணியானம் என்று சொல்லப்படுகிற தீட்டுக்கழிக்கும் சடங்கு, திருமணச்சடங்கு, இறந்தவருக்கு திதி கொடுக்கும் சடங்கு, சந்தானப்பாக்கியத்துக்குச் சடங்கு, என்று பெரும்பாலும் புரோகிதச்சடங்குகள் நடைபெறாத வீடுகளே இல்லை எனலாம். இதற்கு முக்கியமான உளவியல் காரணம் பிராமணியத்தின் மேல்நிலையாக்கம் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் தான். பிராமணரைக் கூட்டிக் கொண்டு வந்து சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லி நடத்தப்படும் சடங்குகள் சமூகத்தில் மதிப்பு மிக்கவையாக இருப்பதனால் முன்பை விட இப்போது பிராமணப்புரோகிதர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

புராதன சமூகத்தில் தோன்றி நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் நிலைபெற்ற இந்த மந்திரச்சடங்குகள் இன்றைய நவீன முதலாளித்துவ காலத்தில் பொருளற்றவை தானே. அறிவியல் வளர்ச்சியையும் நவீன விஞ்ஞான சாதனங்களின் கண்டுபிடிப்பையும் முதலாளித்துவம் தன்னுடைய லாபவேட்டைக்குப் பயன்படுத்துவதற்காக நிலப்பிரபுத்தோடு செய்துகொண்ட சமரசத்தினால் மீண்டும் பழமைவாதமும், சநாதனவாதமும், மதவெறியும் முன்னுக்கு வந்திருக்கின்றன. உலக நிதி மூலதனத்தின் நெருக்கடிகளைத் தற்காலிகமாகத் திசை திருப்ப இவை உதவக்கூடும். மக்களிடம் அறிவியல் நோக்கோடு கூடிய சமூகப்பார்வையை வளர்ப்பதும்தான் மநுவையும், புரோகிதச்சடங்குகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழிப்பதற்கு உதவும்.

துணை நூல்கள்- 1) மந்திரமும் சடங்குகளும்-ஆ.சிவசுப்பிரமணியன்

2) வேதங்கள் ஒரு ஆய்வு—சனல் இடமருகு

நன்றி-வண்ணக்கதிர்

yagam

Sunday 19 April 2015

பெயரில் என்ன இருக்கிறது?

 

உதயசங்கர்

jothidam

பெயரில் என்ன இருக்கிறது? பெயர் என்பது ஒரு அடையாளம் அவ்வளவு தானே என்று சில அறிவுஜீவிகள் சொல்லலாம். பெயரினால் தான் தன் கடந்த காலவாழ்க்கை இப்படியானது. நிகழ்கால வாழ்க்கை இப்படியிருக்கிறது. எதிர்கால வாழ்க்கையும் எப்படியோ ஆகி விடும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். பலருக்கு அவர்களுடைய பெற்றோர் வைத்த பெயர் பிடிப்பதில்லை. ரெம்ப பழைய பேராக இருக்கிறது என்றோ, ரெம்ப சாதாரணமாக இருக்கிறது என்றோ, கொஞ்சம் கேவலமாக இருக்கிறது என்றோ நினைப்பவர்கள் இருக்கிறார்கள். சிலர் அப்பா அம்மா வைத்த பேரை மாற்றவும் செய்கிறார்கள். இதற்காகவே நிறைய பெயரியல் நிபுணர்கள், எண் கணித சோதிடர்கள் குவிந்து கிடக்கிறார்கள். அவர்களிடம் சென்று உங்கள் பெயரில் ஒரு எழுத்தையோ, இரண்டு எழுத்துகளையோ கூட்டிக் குறைத்து கணித்து வாங்கி அதை கெஜட்டியரிலும், பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்து தங்களுடைய பெயரை மாற்றுவதின் மூலம் தங்களுடைய வாழ்க்கை மாறி விடும் என்று நம்பிக்கை கொள்கிறார்கள். சிலர் முழுப்பெயரையுமே தங்களுடைய சோதிடரிடம் கேட்டு மாற்றிக் கொள்கிறார்கள்.

இப்போது குடும்ப டாக்டர்கள் மாதிரி குடும்ப சோதிடர்களும் உருவாகி விட்டார்கள். தங்கள் வாழ்க்கை, தங்களுடைய குடும்பத்தினரின் வாழ்க்கை, எல்லாமே அந்த ஒன்பது கட்டத்தில் தான் இருக்கிறது என்று அப்பாவியாய் நம்புகிறவர்கள் தான் அதிகம். பிறந்ததிலிருந்து இறக்கும்வரை ஒருவருடைய தனிப்பட்ட,மற்றும் குடும்ப வாழ்க்கையில் எல்லாநிகழ்ச்சிகளிலும் சோதிடம் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதிலும் பெண்கள் சோதிடம் பார்ப்பதில் பிடிவாதமாய் இருக்கிறார்கள். முற்போக்கான எண்ணம் கொண்டவர்களும் கூட நான் சோசியம் பார்க்க மாட்டேன்.. என்று பொத்தாம் பொதுவாய் சொல்வார்கள். ஆனால் அவர்களுடைய வீட்டு விசேசங்களிலிருந்து அனைத்து நிகழ்வுகளும் காலண்டரில் குறிப்பிட்ட நாள், கிழமை, நட்சத்திரம், லக்கினம், பாட்டிமை, பிரதிமை, ராகு, குளிகை, எமகண்டம் எல்லாம் பார்த்துத் தான் நடக்கிறது. கேட்டால் வீட்டில பொம்பிளக சொன்னா கேக்க மாட்டேங்காக.. என்று அங்கலாய்ப்பதும் நடக்கிறது.

அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது கட்டாயமாக சோதிடரைக் கலந்து ஆலோசிக்காமல் நடப்பதில்லை. சிலர் தங்களுடைய தாய்,தந்தையரின் பெயர்கள், அல்லது அதன் கலவை, சிலர் தாத்தா, பாட்டி, அல்லது முப்பாட்டன், முப்பாட்டி இவர்களின் பெயர்கள், சிலர் குலசாமிகளின் பெயர்களை நவீனமாக்கி வைத்துக் கொள்வது, சிலர் தங்களுக்குப் பிடித்த தலைவர்களின் பெயர்கள், சிலர் தங்களுக்குப்பிடித்த சினிமா நடிக, நடிகையரின் பெயர்கள், என்று வித விதமாக யோசித்து பெயர் வைப்பார்கள் என்றாலும் இவையெல்லாம் சோதிடர் சொல்லிலிருந்து தான் புறப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். விதி விலக்குகள் இருக்கலாம். முன்பெல்லாம் முதலெழுத்து அ, இ, க, ச, என்று தமிழ் எழுத்துருக்களைச் சொல்லிக் கொண்டிருந்த சோதிடர்கள் இப்போது மாறி வரும் சமூகத்தின் மனநிலைக்கேற்ப ஆங்கில எழுத்துக்களை முதல் எழுத்துக்களாகச் சொல்கிறார்கள். A, B, R, H, என்று சொல்லி விடுகிறார்கள். இளைய தலைமுறையும் தங்களுடைய குழந்தைகளுக்குப் பெயர்கள் சாதாரணமாக இருக்கக்கூடாது என்ற தீர்மானத்தில் இருப்பதுவும், யாரும் வைக்காத பெயரை தன்னுடைய குழந்தைக்குச் சூட்ட வேண்டும் என்ற ஆவலிலும் பெயர்களைத் தமிழில் தேடுவதோ யோசிப்பதோ இல்லை. அதற்குப் பதில் சமஸ்கிருதப்பெயர்களைத் தேடுகிறார்கள். சமஸ்கிருதத்தில் அந்தப் பெயர்கள் அறுதப்பழசாக இருந்தாலும் சரி, அர்த்தம் தெரியாமலோ, அர்த்தம் புரியாமலோ இருந்தாலும் சரி அந்தப் பெயர்களைச் சூட்டி மகிழ்கிறார்கள். உதாரணத்துக்கு, அபராஜித், ஹர்சத், ருட்வி, அபிநவ், அபிஜித், ரிஷிகா, க்ருஷிகா, ஸஜீவி, ஸாகர்ஷ், ப்ரவஸ்தி, ஷன்ஷிதா ஸ்பூர்த்தி, விரதேஷ், வினாஷ், மகிதா, என்று வாய்க்குள் நுழையாத பெயர்களை வைப்பதில் பேரானந்தம் கொள்கிறார்கள். அதற்கென்று இப்போது ஏராளமான புத்தகங்களும், இணையதளங்களும், வந்து விட்டன. அதனால் என்ன? அவரவர்களுக்குப் பிடித்த பெயர்களை தங்களுக்கோ தங்கள் குழந்தைகளுக்கோ வைத்துக் கொள்வதில் என்ன தவறு என்று கேட்கிறீர்கள் தானே.

இப்போது கட்டுரையின் தலைப்புக்கு மீண்டும் வருவோம். பெயரில் என்ன இருக்கிறது? ஒரு பெயரில் மனித குல வரலாற்றின் அரசியல், பண்பாடு, பொருளாதாரம், சமூகப்படிநிலை, சாதியப்படிநிலை, பாலினப்பாகுபாடு, சடங்கியல், இறையியல், என்று பல்வேறு தகவல்கள் இருக்கின்றன. எயினன், நன்னன், பாடினி, பாணன், போன்ற பெயர்கள் சுட்டும் சங்ககாலம் இந்தப் பெயர்களின் வழியே அன்றிருந்த தமிழ்ச்சமூகத்தினைப் பற்றிய அவற்றின் பல தகவல்களைத் தருகிறது. அதற்குப்பின்னர் வரலாற்றில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெயர்களும் சமண மதம் இங்கு செல்வாக்குப் பெற்றிருந்ததைப் பற்றி, சைவம் வெற்றி கொண்ட பின் இடப்பட்ட பெயர்கள், கிறித்துவம் நுழைந்த காலகட்டத்தைப் பற்றிப் பதிவு செய்யும் பெயர்கள், நிலப்பிரபுத்துவம் கோலோச்சிய காலகட்டம், வர்ணாசிரமத்தின் இரும்புப்பிடியில் சமூகம் மாட்டிக் கொண்டிருந்த காலகட்டம், ( அது இப்போதும் தொடர்கிறது ) இந்திய சுதந்திரப்போராட்ட காலகட்டம், விடுதலைக்குப் பின்னான நவீன இந்தியாவின் காலகட்டம், இடதுசாரிகள் வலுவாக இருந்த காலகட்டம், பகுத்தறிவாளர்கள் செல்வாக்கு பெற்ற காலகட்டம், மீண்டும் சநாதன இந்து மதம் மறுமலர்ச்சி அடைந்து கொண்டிருக்கிற காலகட்டம், என்று எல்லாப்பெயர்களின் வழியே நாம் வரலாற்றின் ஒரு துணுக்கை தரிசித்து விடலாம்.

உதாரணத்துக்கு அனுபாலன், மலிம்ருச்கர், சூர்க்குவின், கோகன், பலிஜகன், பப்ரிவாஸன், ப்ரமிலன், இந்திரன், அஸ்வினி, மித்ரா, சோமன், போன்ற பெயர்கள் வேதகாலத்தைக் குறிக்கின்றன. கௌதமன், ஆனந்த், வைசாலி, சித்தார்த்தன், போன்ற பெயர்கள் பௌத்த காலத்தைக் குறிக்கின்றன. எயினன், நன்னன், பாடினி, பாணன், போன்ற பெயர்கள் சங்ககாலத்தைக் குறிக்கின்றன. நடராஜன், சிவன், திருநாவுக்கரசு, தேவாரம், சுந்தரம், சங்கரன், பார்வதி, பரமேசுவரி, காந்திமதி, மீனாட்சி, சொக்கநாதன், போன்ற பெயர்களில் சைவ மதகாலத்தைக் குறிக்கின்றன. மாடசாமி, கருப்பசாமி, அய்யனார், சுடலை, முண்டன், காத்தவராயன், சின்னத்தம்பி, இருளப்பன், மாரி,, பேச்சி, ராக்காச்சி, காளி, போன்ற பெயர்கள் நாட்டார் தெய்வ வழிப்பாட்டின் செல்வாக்கையும், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது, வெள்ளையன், தானாபதி, காந்தி, நேரு, பாரதி, சிதம்பரம், சிவா, வாஞ்சி, சுதந்திரம், வந்தேமாதரம், மோகன்தாஸ், ஜவகர், என்ற பெயர்களின் வழியே சுதந்திரப்போராட்ட கால வரலாற்றையும் நமக்குத் தெரிவிக்கின்றன. மதம் மாற்றம் அடைந்தவர்களை அவர்கள் கிறித்துவ மதமாக இருந்தால் முழுமையான கிறித்துவப்பெயர்களாக அதாவது ஜோசஃப், ஜெலஸ்டின், அண்டன், இருந்தால் அவர்களுடைய முன்னோர்கள் ஏற்கனவே கிறித்துவ மதத்தில் இருப்பவர்கள் அதுமட்டுமில்லாமல் கத்தோலிக்க மதத்தில் இருப்பவர்கள் என்றும் புரிந்து கொள்ள முடியும். அதே போல டேவிட் செல்லையா, டேனியல் பெரியநாயகம், ஆல்பர்ட் சச்சிதானந்தம், போன்ற பெயர்களிலிருந்து அவர்களோ அவர்களுடைய முன்னோர்களோ மிகச்சமீப காலத்தில் மதம் மாறியவர்கள் என்றும் புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியும். இதையே இஸ்லாமியப்பெயர்களில் தமிழ் முஸ்லீம்களின் பெயர்களையும், அரபு, உருது, தெரிந்த இஸ்லாமியர்களின் பெயர்களையும் வேறுபடுத்தி பார்க்க முடியும். மார்க்ஸ், லெனின், மாசேதுங், ஸ்டாலின், வால்கா, ஜமீலா, செம்மலர், வெண்மணி, இன்குலாப், செங்கொடி, ராமமூர்த்தி, பாலவிநாயகம், நல்லசிவன், நெருதா, பிரகாஷ், உமாநாத், என்ற பெயர்களின் வழியே இடது சாரிகளின் செல்வாக்கை அறியலாம். ராமசாமி, ஈ.வெ.ரா. அறிவழகன், அன்பழகன், மதியழகன், அன்பரசன், தமிழ்ச்செல்வன், தமிழழகன், இனியவன், பூங்கொடி, மலர்விழி, கயல்விழி, என்ற பெயர்களின் வழியே திராவிட இயக்கத்தின் செல்வாக்கை உணரலாம்.

இதுவல்லாமல் சாதிப்படிநிலைகளில் கீழே இருந்த சூத்திரர்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் உயர்சாதியினர் வைக்கும் பெயர்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு சமூகத்தில் எந்த மரியாதையும் இல்லை அல்லது கொடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில் மண்ணாங்கட்டி, பிச்சை, பாவாடை, கருப்பன், சுப்பன், மாடன், சுடலை, மாரி, போன்ற பெயர்களை மட்டுமே வைக்க அநுமதித்தினர். இதிலும் பெரிய கொடுமை சூத்திரர்கள் சற்று மேல்நிலைக்கு வந்த போது அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை தாழ்த்தப்பட்டவர்களுக்கும் விதித்தனர். பொதுச்சமூகவெளியில் பெயர்களை வைத்தே சாதியைக் கண்டுபிடிக்கவும் செய்தனர். சில பெயர்களை அந்தந்த மதத்தினர் சாதியினர் தவிர மற்றவர்கள் வைத்துக்கொள்வதில்லை. வைணவர்கள் எக்காரணம் கொண்டும் சைவப்பெயர்களை வைப்பதில்லை. அதே போல சைவர்கள் வைணவப்பெயர்களை வைப்பதில்லை. இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. கண்ணன் என்ற பெயர் சமயம் தாண்டிய செல்லப்பெயராகி விட்டது. அதே போல கணேசன், விநாயகம், போன்ற பெயர்களும் பொதுப்பெயர்களாகி விட்டன. ஆனால் நவஇந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான அம்பேத்காரின் பெயரை எந்தச்சாதியினரும் வைத்துக் கொள்வதில்லை. அதை சாதியடையாளமாக மாற்றி விட்டனர். அதே போல புராண இதிகாசங்களில் வரும் வில்லன்கள் பெயரையும் எந்த சாதியினரும் வைத்துக் கொள்வதில்லை.உதாரணத்துக்கு ராவணன், துரியோதனன், துச்சாதனன், பொன்ற பெயர்கள். ஆக பெயர்களிலும் கூட தீண்டாமை இருக்கிறது. விலக்குதல் இருக்கிறது.

இவ்வளவுக்கு அப்புறமும் இப்போது நம்மால் பெயரில் என்ன இருக்கிறது என்று அலட்சியப்படுத்தி விட்டு போய் விட முடியுமா? பின்னொரு காலத்தில் 2000 மாவது ஆண்டுகளில் வாழ்ந்த தமிழர்களைப் பற்றி ஆய்வு நடந்தால் அதில் இப்போது புழங்கிக் கொண்டிருக்கும் பெயர்களிலிருந்து என்ன முடிவுகளுக்கு வந்து சேருவார்கள்? யோசித்துப்பாருங்கள். தமிழ் என்ற அடையாளமே இல்லாத ஒரு சமூகம் வாழ்ந்ததாகவும், சமஸ்கிருதமே பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், இருந்ததெனவும் கருத வாய்ப்பிருக்கிறதா இல்லையா?

இறந்து போன ஒரு மொழியை நாம் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் மூவாயிரம் ஆண்டுகளாக உயிரோடு, அழகோடு, இளமையோடு சர்வதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழைக் கொன்று கொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் உணர்வோமா? தமிழில் ஐந்து லட்சம் வார்த்தைகள் இருந்தாலும் புழக்கத்தில் அதிகபட்சமாக ஒன்றிரண்டு ஆயிரங்களே இருக்கின்றன என்பதையும் நாம் உணர்வோமா? இன்றைய நிலைமையைக் கண்டால் பாரதியும் பாரதிதாசனும் எப்படி மனம் நொந்திருப்பார்கள்? தமிழன் என்றொரு இனமுண்டா? தனியே அவர்க்கு ஒரு குணமுண்டா

Tuesday 7 April 2015

நீங்கள் இல்லையென்றால் பின் வேறு யார்? இப்போது இல்லையென்றால் பின் எப்போது?

 

வி.என்.முரளி

( கேரள புரோகமன கலா சாகித்ய சங்கட்னா )

 

தமிழில்-உதயசங்கர்revolution 3

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13 வது மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பளித்தமைக்கு எங்களுடைய கேரள புரோகமன கலா சாகித்ய சங்கட்னாவின் சார்பில் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல தலைவர்கள் கேரளாவில் புரோகமன கலா சாகித்ய சங்கட்னாவின் பல கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் வந்து கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள். அது எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் தந்தது. அதற்காகவும் இந்தத் தருணத்தில் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வர்க்கவிரோதிகளுக்கும், மதவெறிச்சக்திகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக மாநில அளவிலான ஒரு பிரச்சாரப்பயணத்திற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மார்ச் மாதம் 27 ஆம் தேதி காசர்கோட்டில் துவங்கி கேரளாவின் 16 மாவட்டங்களின் வழியாக வந்து தமிழ்நாட்டின் எல்லையான பாறசாலையில் நிறைவு அடைகிறது. திராவிட மொழிகளில் தமிழும் மலையாளமும் மிகுந்த நெருக்கமும் தொடர்பும் கொண்டது. மொழிரீதியாக மட்டுமல்லாமல் இலக்கிய ரீதியாகவும் மிகுந்த நெருக்கமும் கொடுக்கல் வாங்கலும் தமிழுக்கும் மலையாளத்துக்குமிடையில் இருக்கிறது. இரண்டு மொழிகளுக்குமிடையிலான உறவு இரண்டாயிரம் வருடங்கள் பழமையானது. சங்க இலக்கியத்தின் பெரும்பகுதியில் கேரளாவின் வாழ்க்கை எழுதப்பட்டிருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அது மட்டுமில்லை. சிலப்பதிகாரத்திலும் சேரநாட்டு வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது. சுந்தரம்பிள்ளையின் மனோன்மணியமும் கேரளவாழ்க்கையோடு தொடர்புடையது.

நவீன இலக்கியத்திலும் தமிழ் எழுத்தாளர்களான நகுலன், நீல பத்மநாபன், மாதவன் போன்றோர் தமிழுக்கும் மலையாளத்துக்கும் இடையிலுள்ள உறவை வலுப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல கேரளாவிலுள்ள தமிழ்ச்சங்கங்கள் கேரளாவில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக திருவனந்தபுரத்திலுள்ள தமிழ் எழுத்தாளர் சங்கத்தோடு புரோகமன கலா சாகித்ய சங்கத்திற்கு நல்ல உறவும் நட்பும் உண்டு. ஆனால் இரண்டு மொழிகளுக்குமிடையிலான இலக்கியப்பரிவர்த்தனை மிகவும் குறைவு என்று நான் நினைக்கிறேன். அத்தகைய பரிவர்த்தனைக்கு நம்முடைய இரண்டு சங்கங்களுக்கிடையில் ஒரு ஒருங்கிணைப்பு தேவை. அப்படி ஒரு ஒருங்கிணைப்புக்குழு ஒன்றை இந்த மாநாட்டில் நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். அதன் மூலம் முற்போக்கு இலக்கியத்தை இன்னும் வளர்க்க முடியும்.

பெரிதும் சவால்கள் நிறைந்த காலம் இது. இதில் தமிழ்நாடு என்றோ கேரளா என்றோ வேறுபாடில்லை. மக்களை சாதிமதக்கூறுகளாகப் பிரிக்கிற வேலை இப்போது அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதற்கென்றே 1930-களில் அகில உலக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மாக்சிம் கார்க்கியின் தலைமையில் துவங்கப்பட்டது. அப்போது மனித குலத்தின் பாதுகாவலன் யார்? என்ற கேள்வியே முன்னுக்கு வந்தது.

இப்போது இந்தியாவில் அதே பாசிசத்திற்கு நிகரான சூழல் நிலவுகிறது. சங்பரிவாரங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையில் ஆட்சியைப் பிடித்தபிறகு மதவாதம், இனவாதம், தேசிய வாதம் போன்ற வெறிகளை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்கிற சூழ்நிலைமை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதிமதத்துவேஷங்களை இந்தியாவில் சட்டமாக்குகிற முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பகுத்தறிவையும், விமரிசன உணர்வையும் கொண்ட ஜனநாயகத்தைத் தகர்க்கிற வேலையை சங்பரிவாரங்கள் செய்து கொண்டிருக்கின்றன. பாசிசத்தை எதிர்க்காமல் இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவரான மோகன் பகவத் இந்தியாவில் ஐந்து M-களை தங்களுடைய எதிரிகளாகச் சொல்கிறார். MARXISM, MUSLIM, MISSIONARIES, MACALEY EDUCATION, MATERIALISM இந்த ஐந்து M-களை இந்தியாவிலிருந்து முற்றிலும் துடைத்தெறிய வேண்டும். அதைத் தான் அவர்கள் சுச் பாரத் அதாவது தூய்மை இந்தியா என்று சொல்கிறார்கள். வரலாற்றில் இதற்கும் கூட ஒரு ஒப்புமை இருக்கிறது. ஜெர்மனியின் ஹிட்லர் கம்யூனிஸ்டுகளையும், யூதர்களையும் அழித்து ஒழிப்பதற்கு ஒரு திட்டம் கொண்டு வந்தான். அதற்கு அவன் இறுதித்தீர்வு ( FINAL SOLUTION ) என்று பெயரிட்டிருந்தான்.

இந்தியாவில் மோடி அரசாங்கத்தைப் பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருப்பது கார்ப்பரேட்டுகள் தான். இந்தியாவில் இப்போது உருவாகியுள்ள பாசிச முன்னணியில், கார்ப்பரேட்டுகள், ஊடகங்கள், ஏகாதிபத்தியம், மற்றும் சாமியார்கள் இருக்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பிறகு நடந்து கொண்டிருக்கிற காரியங்களை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. கடந்த விஜய தசமி நாளில் இந்திய வரலாற்றில் இது வரை நடந்திராத வகையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவரான மோகன்பகவத் அரசுத்தொலைக்காட்சியில் ஒரு மணிநேரம் உரையாற்றினார். ஆனால் அதற்குப்பின்னால் வந்த பக்ரீத்திலோ, கிறிஸ்மஸ் தினத்திலோ எந்த உரையும் யாரும் நிகழ்த்தவில்லை. இந்தியாவின் பன்மைத்துவத்துக்கு ஆர்.எஸ்.எஸ். மிகப்பெரிய எதிரி.

சங் பரிவாரங்கள் ஊடகங்களின் வழியே மறைமுகமான சூட்சும அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேசியவாதத்தையும் கலாச்சார அரசியலையும் அவர்கள் முகமூடிகளாக அணிந்து கொண்டிருக்கிறார்கள். ஆம் நண்பர்களே! மகாத்மா காந்தி சுடப்பட்ட நாளை கோட்சே வீரச்செயல் புரிந்த நாளாக பிரச்சாரம் செய்கிறார்கள்.. கோட்சே காந்தியைச் சுட்டது சரிதான் என்றும் சொல்கிறார்கள். அதுமட்டுமில்லை. காந்தியைக் கொலை செய்த கோட்சேவுக்கு கோவில் கட்டவும் சிலை வைக்கவும் முயற்சி செய்கிறார்கள்.

இந்தியாவில் பாசிசம் வளர சூட்சும அரசியல் தளங்களையும் பயன்படுத்துகிறது. கல்வித்திட்டத்தை மாற்றியமைக்கிறார்கள். வரலாற்றை திருத்துகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள். I.C.R.H. –ல் நடந்ததை நாம் அறிவோம். கேரளாவில் நேஷனல் புக் டிரஸ்டின் தலைவராக இருந்த எழுத்தாளர் சேதுவை மாற்றி ஒரு ஆர்.எஸ்.எஸ். காரரை அந்தப் பதவியில் உட்காரவைத்திருக்கிறார்கள்.

சங் பரிவாரம் இப்போது நடத்திக் கொண்டிருக்கிற நிகழ்ச்சி நிரலான கர்வாபசி ( தாய் வீடு திரும்புதல் ) என்பது ஒரு சொல் அல்ல. ஒரு இயக்கம் அல்ல. அது ஒரு கொலைக்கருவி. இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிராக நீட்டப்படுகிற துப்பாக்கி. ஏனெனில் இந்தியாவில் நாலாயிரத்துக்கும் மேல் மாறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட இனங்கள் உண்டு. முந்நூற்றிருபத்தியைந்து மொழிகள் இருக்கின்றன. ஏராளமான மதங்களும் அதில் உட்பிரிவுகளும் உண்டு. மத மறுப்பாளர்களும், கடவுள் மறுப்பாளர்களும் உண்டு. இந்த மாறுபட்ட அனைத்து மக்களையும் ஒற்றைக் கலாச்சார அடையாளமாக, இந்துக்களாக மாற்ற வேண்டும் பி.ஜே.பி. துடிக்கிறது. அதன் மூலம் ஒரு மகத்தான பன்முக சமூகத்தை முடிவுக்குக் கொண்டு வர நினைக்கிறது.

கர்வாபசி என்றால் தாய்வீடு திரும்புதல் என்று சொல்ல முடியாது. மாற்று மதத்தவர்களை, மாற்றுக் கருத்துடையவர்களை நாட்டை விட்டு விரட்டியடித்தல் ஆகும். ஒரு ஜனநாயக நாட்டில் எந்த மதத்தைப் பின்பற்றவும், மதமே வேண்டாம் என்று சொல்வதற்கும் உரிமை இருக்கிறது. என்றென்றும் அந்த உரிமை நிலைத்திருக்க வேண்டும். ஏனெனில் இந்திய ஒற்றுமையில் தீ வைக்கிற முயற்சி தான் கர்வாபசி. இந்தியாவில் வீடற்ற எண்ணற்ற மக்களுக்கு சொந்தமாக வீடு வழங்க முடியாத அரசு கர்வாபசி என்பது கேலிக்குரியது. அப்படி கர்வாபசி மூலம் திரும்பி வருபவர்களுக்கு எந்த வீட்டைக் கொடுப்பார்கள்? நம்பூதிரியின் வீட்டையா? நாயரின் வீட்டையா? இல்லையென்றால் பிராமண வீட்டையா? சத்திரிய வீட்டையா? அல்லது சூத்திரர் வீட்டையா?

2000 ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனின் வார்த்தைகளைத் தமிழிலிருந்தே கேட்டோம். இத்தகைய ஒரு நாட்டில் மக்களைப் பிரித்தாளுகிற சூழ்ச்சி நடக்கிறது. இந்தச்சூழலில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பங்களிப்பு முன்னுக்கு வருகிறது. வரலாற்றில் கலை இலக்கியத்துறையில் இன்னொரு விடுதலைப்போர். முற்போக்கு கலை இலக்கியம் பாரம்பரியமான முற்போக்கு அழகியலை மேலும் பொலிவாக்குகிறது. எல்லாவித பிற்போக்குத்தனங்களையும் எதிர்க்கிறது. பழமையின் பிற்போக்கு மரபுகளை எதிர்கொண்டு புதிய முற்போக்கான மக்கள் மரபுகளை உருவாக்குகிறது.

இந்த செஞ்சுடர் பாரம்பரியத்தை நாம் உயர்த்திப்பிடிக்க வேண்டும். இன்று தமிழில் எழுத்தாளர்களின் கைகளுக்கும் சிந்தனைகளுக்கும் விலங்கிடும் வேலை நடக்கிறது. இதை நாம் அநுமதிக்க முடியாது. இந்தத்தருணத்தில் சொந்த மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட பெருமாள் முருகனுக்கு ஆதரவாக கேரளா முழுவதும் ஆதரவும் ஒற்றுமைக்குரலும் ஓங்கி ஒலித்தது என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.பெரியாரின் மண்ணில் இத்தகைய பிற்போக்கான செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது.

இந்தத் தருணத்தில் அமைதி காப்பதும் கூடாது. இப்போது இல்லையென்றால் பின் எப்போது நாம் களத்தில் இறங்கப் போகிறோம்? இப்போது செய்யாமல் பின் வேறு எப்போது செய்யப்போகிறோம்?

IF NOT YOU WHO? IF NOT NOW WHEN?

எந்த சவாலையும் எதிர்கொள்வதற்கான ஒரு ஐக்கிய முன்னணியை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். காலத்தின், வரலாற்றின் குரலுக்கு நாம் செவி கொடுப்போம். உங்களோடு தோளோடு தோளாய் நாங்களும் நிற்கிறோம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இந்த மாநாடு வெற்றி பெற புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

( தமுஎகச 13 வது மாநில மாநாட்டில் ஆற்றிய உரையின் சுருக்கம் )

நன்றி-செம்மலர் ஏப்ரல் 2015