Showing posts with label மலையாளம். Show all posts
Showing posts with label மலையாளம். Show all posts

Wednesday, 19 March 2025

நீலகண்டன் குள்ளநரியின் கதை

 

நீலகண்டன் குள்ளநரியின் கதை

உதயசங்கர்



 

ஒரு நாள் நீலகண்டன் குள்ளநரி நொண்டி நொண்டிக் கதைப்பாட்டியும், நண்பர்களும் கூடியிருக்கிற ஆலமரத்தடிக்கு பணிவுடன் தலையைக் குனிந்தபடி வந்தது. அதைப் பார்த்தால் சாதாரணக் குள்ளநரியைப் போல தெரியவில்லை. உடல் முழுவதும் நீலநிறத்தில் இருந்தது. குள்ளநரியைப் பார்த்தது மெகர்பா கோழி கதைப்பாட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டாள். குள்ளநரி மெகர்பா கோழியின் மீதே கண் வைத்திருந்தது.

கோழி என்ன ஒரு அழகு!அதைப் பொரித்துச் சாப்பிட்டால் எவ்வளவு ருசியாக இருக்கும்!

எப்படியாவது கதைப்பாட்டியையும் நண்பர்களையும் ஏமாற்றி இன்று மெகர்பா கோழியைக் கொண்டு போய் விடணும். குள்ளநரியின் மனதில் அதுதான் திட்டம்.

குள்ளநரியைப் பார்த்ததும் நாய்க்குட்டி கேட்டது,

“ குள்ளநரியே குள்ளநரியே.. இங்கே என்ன வேலை உனக்கு? “

“ கறுமுறுன்னுச் சாப்பிட்டேன்.. குர்ர்ர் குர்ர்ர்னு தூங்கணும்..” என்று குள்ளநரி சொன்னது.

பூனைக்குட்டி கேட்டது,

“ என்ன குள்ளநரியண்ணே.. ஒரே நீலநிறத்தில் இருக்கிறே? “

குள்ளநரி,

“ நேற்று இரவு காட்டில் வனதேவன் என்னை நீலநிற ஒளியில் முக்கியெடுத்தார். தெய்வத்துக்கு மிகவும் பிடித்த நிறம் நீலநிறம் தான் என்று சொன்னார்..”

அதைக் கேட்டுக் கொண்டே வாயைத் திறந்தபடியே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது கல்யாணிப்பசு.

“ அதனால் நான் இன்று முதல் துறவறம் பூண்டு விட்டேன்..மாமிசத்தைத் தொடக்கூட மாட்டேன்.. ஒரு உயிரையும் மனதாலோ, வார்த்தையாலோ கூட துன்புறுத்த மாட்டேன்..”

என்றது குள்ளநரி.

“ உண்மையாகவா குள்ளநரியே!” என்று நாய்க்குட்டி கேட்டது.

“ மெகர்பா கோழி மீது சத்தியம்.. வருகிற வழியில் என்னுடைய காலில் ஒரு முள்ளு குத்திவிட்டது.. என்னை யாராவது காட்டுக்குக் கூட்டிக் கொண்டு போகவேண்டும்..”

என்று குள்ளநரி பரிதாபமாய்க் கேட்டது.

“ நான் வர்ரேன்..” என்று கல்யாணிப்பசு எழுந்தது.

“ ஐய்யய்யோ, பால் கறப்பதற்கு ஆல்பெர்ட் சார் வரும்போது நீ இல்லையென்றால் பெரிய குழப்பமாகிவிடும்..குழந்தைகள் பால் குடிக்கவேண்டாமா?”

என்று குள்ளநரி கேட்டது.

“ நான் வர்ரேன் “ என்று பூனைக்குட்டி சொன்னது.

“ ஐய்யய்யோ.. ஆற்றில் நீந்தணுமே.. உன்னால முடியாது பூனைச்செல்லம்..”

என்று குள்ளநரி சொன்னது.

“ அப்படியென்றால் நான் வருகிறேன்..” என்று நாய்க்குட்டி சொன்னது.

“ ஐய்யய்யோ.. உன்னைப் பார்த்தால் செந்நாய்க்கூட்டம் பாய்ந்து வந்துவிடும்.. வேண்டாம் கண்ணா..”

என்று சொல்லிய குள்ளநரி ஆசையோடு மெகர்பாவைப் பார்த்தது. மெகர்பா மெல்ல எழுந்து நின்று,

“ அப்படி என்றால் நான் வர்ரேன்..”

என்றது.

குள்ளநரி மகிழ்ச்சியுடன்,

“ அது போதும்.. உன்னை ஆற்றின் அக்கரைக்கு என் முதுகில் வைத்து நீந்துகிறேன்.. கொஞ்சநாள் அங்கே தங்கியிருந்த பிறகு நானே உன்னைக் கூட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்..”

என்று சொன்னது.

இவ்வளவும் நடக்கும்போது கதைப்பாட்டி சொன்னார்,

“ கொஞ்சம் பொறுங்கள்.. செல்லங்களா.. கசுமலா காக்கா வருகிறது. அதுகிட்டேயும் கேட்கலாம்..”

கசுமலா காக்கா மூச்சிரைத்தபடியே,

“ சின்னுவின் அம்மா நீலம் முக்குவதற்காக கலக்கி வைத்திருந்த தொட்டியில் குளிச்சிட்டு வந்திருக்கு இந்தக் குள்ளநரி..” என்று சொன்னது.

கதைப்பாட்டி கையிலிருந்த கம்பினால் குள்ளநரிக்கு ஒரு அடி கொடுத்தாள். குள்ளநரியின் காலில் அடி பட்டது. தாங்கமுடியாத வலியினால் ஊளையிட்டுக் கொண்டே குள்ளநரி ஒரே ஓட்டம்.

அப்ப்டி ஓடும்போதே மெகர்பா கோழியைக் கவ்விக் கொண்டு போய் விடலாம் என்று ஒரு பாய்ச்சல் பாய்ந்தது குள்ளநரி.

அப்போதும் கிடைத்தது ஒரு அடி, கதைப்பாட்டியிடமிருந்து..

நன்றி - புக் டே

 

Thursday, 13 March 2025

சூசனாவுக்கு என்ன நடந்தது?

 

சூசனாவுக்கு என்ன நடந்தது?

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்

ஒரு நாள் சின்னு நாய்க்குட்டிக்கும் நாய்க்குட்டி பூனைக்குட்டிக்கும்  பூனைக்குட்டி காக்காவுக்கும் காக்கா கல்யாணிப்பசுவுக்கும் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது,

 கதைப்பாட்டி! கதைப்பாட்டி! ” என்று அழைத்தபடி சூசனா என்ற ஆட்டுக்குட்டி ஓடி வந்தது. நல்ல உச்சிப்பொழுது. கதைப்பாட்டி துள்ளி எழுந்தார்.

“ என்னாச்சு சூசனா..” என்று கதைப்பாட்டி பரபரப்புடன் கேட்டார். நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் காக்காவும் சூசனாவைச் சுற்றி நின்றார்கள். சூசனா மூச்சிரைத்தபடி,

“ நான் சிங்கத்தின் வாயிலிருந்து கஷ்டப்பட்டு தப்பித்து வருகிறேன்..”

என்றது.

“” நீ எப்படி சிங்கத்தின் வாயில் போய் விழப்போனே? “ என்று பூனைக்குட்டி கேட்டது.

“ நானாய் போய் விழலை.. ஆல்பெர்ட் எல்லா ஆடுகளையும் ஆற்றங்கரையில் மேய்ப்பதற்காகக் கொண்டு போனான்.. நான் ஆற்றில் தவறி விழுந்து விட்டேன்.. ஆல்பெர்ட் கவனிக்கவில்லை..”

“ பிறகு? “ கசுமலா காக்காவுக்குப் பரபரப்பை அடக்கமுடியவில்லை.

“ முதலில் மூழ்கி எழுந்தபோது ஒரு உழக்கு கிடைத்தது.. இரண்டாவது தடவை மூழ்கி எழுந்த போது ஒரு தொரட்டி கிடைத்தது. மூன்றாவது தடவை மூழ்கி எழுந்த போது ஒரு கொட்டு கிடைத்தது. நான்காவது தடவை மூழ்கி எழுந்தபோது ஒரு நீர்க்கோழி கிடைத்தது.

அப்படியே ஆற்றின் அக்கரைக்குப் போய் விட்டேன். இதை எல்லாம் எடுத்துக் கொண்டு நான் ஒரு குகைக்குள் போய் விட்டேன். குளிரைப் போக்குவதற்காக தீ மூட்டிக் காய்ந்து கொண்டிருக்கும் போது வெளியிலிருந்து ஒரு சத்தம்.

“ உள்ளே யாரு? “

“ அப்புறம் ? “ என்று நாய்க்குட்டி கேட்டது.

“ யார் வெளியே? ” என்று நானும் கேட்டேன்.

அப்போது சிங்கம் வெளியிலிருந்து முழங்கியது,

“ நான் சிங்கராஜா..”

நான் சொன்னேன்,

“ அப்படியா.. நான் சூசனா ராணி..”

“ எங்கே உன்னுடைய கையைக் காட்டு..” என்று சிங்கம் வெளியிலிருந்து கேட்டது. நான் தொரட்டியை நீட்டினேன்.

“ உன் வயிறைக் காட்டு..”  என்ரது சிங்கம். நான் கொட்டை வெளியில் காட்டினேன்.

“ உன் குரலைக் கேட்கட்டும்..” என்றது சிங்கம். நான் நீர்க்கோழியின் கழுத்தைப் பிடித்து இறுக்கினேன்.

அது “ க்வா க்வா க்வா க்வா..” என்று அலறியது.

சிங்கம் பயந்து ஒரே ஓட்டமாய் ஓடி விட்டது. நான் அந்த நேரத்தில் ஆற்றின் இக்கரைக்கு நீந்தி வந்தேன். மூச்சிரைத்துக் கொண்ட சூசனாவை சின்னு கட்டிப்பிடித்தாள். நாய்க்குட்டி சின்னுவைக் கட்டிப்பிடித்தது. நாய்க்குட்டியை பூனைக்குட்டி கட்டிப்பிடித்தது.

பிறகு எல்லாரும் வட்டமாக நின்று ரிங்கா ரிங்கா ரோசஸ் பாடி விளையாடினார்கள்.

நன்றி - புக் டே

Sunday, 9 March 2025

மனிதனின் இயல்பு

 

மனிதனின் இயல்பு

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்

சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டியின் கிராமத்தில் ஆல்பெர்ட் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். ஆல்பெர்ட்டுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். ஞாயிறு தோறும் குடும்பத்தோடு சர்ச்சுக்கு போகும்போது நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சர்ச்சின் முற்றம் வரை போகும்.

ஒரு நாள் ஆல்பெர்ட் ஓடி வந்தான். அவனுக்குப் பின்னால் ஒரு மலைப்பாம்பும் விரட்டிக் கொண்டு வந்தது. மலைப்பாம்பைப் பார்த்தவுடன் சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் பாய்ந்து கதைப்பாட்டியின் பின்னால் போய் ஒளிந்து கொண்டார்கள். நய்க்குட்டியின் வாலில் தொங்கியபடி பூனைக்குட்டியும் ஓடியது.

நாய்க்குட்டி,

“ க்க்க்க்ர்ர்ர்ர் “ என்று உறுமியது. கதைப்பாட்டிக்குப் பயந்து பெரிய சண்டை எதுவும் வரவில்லை. ஆல்பெர்ட் சொன்னான்,

“ கிராமத்து மக்கள் தீ வைத்துக் கொளுத்திய போது, பாம்பைக் காப்பாற்றியது நான் தான் கதைப்பாட்டி.. இப்போது இது என்னையே விழுங்க வருகிறது... இது சரிதானா? சொல்லுங்கள்..”

மலைப்பாம்பு சொன்னது,

“ பசித்ததனால் தான் கதைப்பாட்டி.. வயதான காலத்தில் கவலைப்பட வேண்டாம்.. இந்த ஆலமரத்திடமும், அந்த ஆற்றிடமும், கல்யாணிப்பசுவிடமும் கேட்டால் போதும்.. மனிதர்கள் மனிதர்களுக்குச் சாதகமாகவே சொல்வார்கள்.. அதனால் கதைப்பாட்டி நீங்கள் எதுவும் சொல்லவேண்டாம்..”

ஆல்பெர்ட் ஆலமரத்திடம் கேட்டான். கம்பீரமான காற்றின் சத்தத்தில் ஆலமரம் தீர்ப்பு சொன்னது,

“ மனிதன் தானே. அப்படித்தான் செய்வான்.. மனிதனை விழுங்கினால் போதாது.. கடித்து சவைத்து சாப்பிட வேண்டும்.. சோர்வைப் போக்கும் நிழல் தரும் மரத்தையே வெட்டி எறிகிற கெட்டவன்..”

 கல்யாணிப்பசு மேய்ந்து கொண்டிருந்த இடத்திலிருந்தபடி தலையைக்கூட உயர்த்திப் பார்க்காமல் சொன்னது,

“ பாலையெல்லாம் ஒட்டக்கறந்து அதில் தண்ணீர் கலந்து விற்கிறவர்கள் மனிதர்கள்.. விழுங்கிவிடு.. மனித வர்க்கத்தை அப்படியே விழுங்கணும்.. தெரிஞ்சுதா? “

ஆற்றிடம் கேட்டபோது, ஆறு மகிழ்ச்சியுடன் கடகடவெனச் சிரித்து,

“ தாகத்துக்குக் குடிக்கும் தண்ணீரில் அத்தனை குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டி மோசமாக்குவது மனிதர்கள் தான்.. நன்றியில்லாதவர்கள்.. விழுங்கிவிடு.. பாம்பே..”

என்று சொன்னது.

அப்போதுஆல்பெர்ட்டின் மனைவி கதறி அழுது கொண்டே ஓடி வந்தார். அவர் பாம்பிடம்,

“ கணவரில்லாமல் நான் எப்படி வாழமுடியும்? என்னை முதலில் விழுங்கி விடு..”

என்று சொன்னார்.

பாம்புக்குப் பரிதாபம் தோன்றியது. என்ன ஆனாலும் பெண்ணல்லவா? பாவம். பாம்பு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தது. அதைச் சொல்லி ஒரு துளி மண்ணை வாரிப்போட்டால் யாராக இருந்தாலும் இறந்து விடுவார்கள். இரண்டாவது மந்திரத்தைச் சொல்லி மண்ணைப் போட்டால் அவர்கள் உயிர் பெற்று விடுவார்கள்.

ஆல்பெர்ட்டின் மனைவி மந்திரம் சொல்லி மண்ணையள்ளி பாம்பின் மீது போட்டார்.

 பாம்பு செத்துப் போய் விட்டது.

கதைப்பாட்டி இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் மூக்கில் விரலை வைத்தபடி அப்படியே இருந்தார்.

 நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

 

Monday, 3 March 2025

நெய்யப்பத்தின் கதை

 

நெய்யப்பத்தின் கதை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில்- உதயசங்கர்



கசுமலா காக்கா, சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி வசிக்கிற கிராமத்தில் அய்யப்பன் என்ற பெயருடைய ஒரு சிறுவனும் இருந்தான். அவன் எப்போதும் சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டியுடன் சச்சரவு செய்து கொண்டேயிருப்பான். அடிபிடி சண்டை போடுவான். சின்னுவிடம் கோவிப்பான். நாய்க்குட்டியின் மீது கல்லெறிவான். பூனைக்குட்டியின் மீது தண்ணீரை ஊற்றுவான்.

ஒருநாள் அய்யப்பனின் அம்மா நெய்யப்பம் செய்தார். நெய்யப்பம் என்ன மணம்! ஆலமரத்தின் கிளையிலிருந்து பறந்து சென்றது கசுமலா காக்கா. அடுக்களைப் பக்கமாக வாசலில் நின்று நெய்யப்பம் தின்று கொண்டிருந்தான் அய்யப்பன். அவன் கையிலிருந்த நெய்யப்பத்தைக் கொத்திப் பிடுங்கிக் கொண்டு பறந்தது.

அப்படியே சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி எல்லாரும் விளையாடிக் கொண்டிருந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது. கசுமலா காக்கா பறந்து வருவதைப் பார்த்ததும் மூன்று பேரும் விளையாட்டை நிறுத்தினார்கள். அவர்களுக்கு ஆசை வரவேண்டுமென்று வாயில் நெய்யப்பத்துடன் கீழே தாழ்வாகப் பறந்தது கசுமலா காக்கா.

ஒரு குதி குதித்து பூனை அதைத் தட்டிப்பறித்தது.

மின்னல் வேகத்தில் நாய்க்குட்டி அதைப் பிடிங்கிவிட்டது.

அடுத்த நிமிடம் சின்னு அதை விழுங்கி விட்டாள்.

கசுமலா காக்காவுக்கு வேதனையாகி விட்டது. இப்போதும் அந்த கிராமத்தில் குழந்தைகள் பாடுவார்கள்,

“ அய்யப்பன் அம்மா நெய்யப்பம் சுட்டார்

காக்கா கொத்திப் பறந்து போனது

பூனைக்குட்டி பாய்ந்து பறித்தெடுத்தது

நாய்க்குட்டி தாவி பிடுங்கியெடுத்தது

சின்னுக்குட்டி அதை விழுங்கி விட்டாள். “

நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

Saturday, 22 February 2025

பெதோஸ்யா, எங்கள் மதிப்புக்குரியவரே,

 

 

பெதோஸ்யா, எங்கள் மதிப்புக்குரியவரே, இன்னும் கெட்டியான கருப்புத் தேநீரைத் தயாரியுங்கள்!

உதயசங்கர்



இன்று அன்னாவிடம் தன்னுடைய காதலைத் தெரிவித்து விட்டார் எங்கள் பிரியத்துக்குரிய தாஸ்தயேவ்ஸ்கி.

பெதோஸ்யா! எங்கள் மதிப்புக்குரியவரே! சீக்கிரம்.. சமையலறைக்குச் சென்று தாஸ்தயேவ்ஸ்கிக்கு மிகவும் பிடித்த கெட்டியான கருப்புத் தேநீரைத் தயாரியுங்கள்! நாம் எல்லோரும் அருந்துவோம்.

சற்றுப் பொறுங்கள்! என்று சைகை செய்வது புரிகிறது. அந்தக் காட்சியிலிருந்து இன்னும் நீங்கள் வெளியே வரவில்லை. உங்களுடைய சொந்த மகனின் வாழ்வில் போல கிடைத்த நற்பேறான கணங்களைத் தரிசிக்க விரும்பினீர்கள் இல்லையா? புரிந்து கொள்கிறேன்.

தாஸ்தயேவ்ஸ்கி எப்போதும் உட்கார்ந்து எழுதும் நாற்காலியில் அன்னா உட்கார்ந்திருந்தார். தாஸ்தயேவ்ஸ்கி அன்னாவின் முகத்தைப் பார்க்கவில்லை. முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தார். அவருடைய கையில் அன்னா அறைக்குள் வந்ததிலிருந்து புகைக்கும் ஐந்தாவது சிகரெட். அன்னா வருவதற்கு முன்பு அவர் புகைத்துப் போட்ட சிகரெட்டுத் துண்டுகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அறைக்குள் சிகரெட் புகையிலை நாற்றம். பொதுவாக தீவிர்மாக எழுதும்போது மட்டும் தான் தாஸ்தயேவ்ஸ்கி அவ்வளவு சிகரெட்டுகளைப் புகைப்பார். அவர் எழுதும் நாவலின் சம்பங்களிலும் கதாபாத்திரங்களிலும் ஆழ்ந்து போய் விடுவார். சில நேரம் கோபமாகப் பேசுவார். அழுவதைப் போல முகம் கோணும். உறுமுவார். யாரையோ திட்டித்தீர்ப்ப்பார். சிரிப்பார்.

1866 – ஆம் ஆண்டு எழுத்தாளர்களைச் சுரண்டிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் எல்லாப்பதிப்பாளர்களையும் போல டெல்லோவ்ஸ்கி என்ற வஞ்சகமான பதிப்பாளரும் தாஸ்தயேவ்ஸ்கியின் அவரசத்தைத் தெரிந்து கொண்டு அவருக்குப் பண உதவிச் செய்வது போல செய்து வேண்டுமென்றே சாதாரணமாகச் செய்யமுடியாத சில நிபந்தனைகளை விதித்தான். ஒரு மாத காலத்துக்குள் ஒரு நாவலை எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்க முடியாவிட்டால் அந்த நாவலுக்கான உரிமை மட்டுமல்ல: அவருடைய மொத்தப்படைப்புகளின் உரிமையையும் அவனுக்கு எழுதித் தரவேண்டும்.

பாவம்! தாஸ்தயேவ்ஸ்கி.. என்ன செய்வார்? அந்த ஏற்பாட்டுக்கு சம்மதித்தார்.

நாவல் எழுதும்பணிக்காகத் தான் சுருக்கெழுத்து தெரிந்த அன்னாவை அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி முதல் முறையாகச் சந்திக்கிறார். அப்போதெல்லாம் அவருடைய மனதில் வேறெந்த சிந்தனைகளுமில்லை. நாவலை முடித்துக் கொடுத்து அவருடைய படைப்புகளைக் காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

அக் 4 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிவரை இருபத்தியாறு நாட்களில் சூதாடி நாவல் முடிந்தது. அதன் பிறகு அன்னாவை நவம்பர் மூன்றாம் தேதி தான் சந்திக்கிறார். இப்போது அறை ஒழுங்கில்லாமல் கலைந்து கிடந்தது. படுக்கையிலுறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த அடையாளங்கள் தெரிந்தன. தாஸ்தயேவ்ஸ்கியின் முகத்தைப் பார்க்க்க வேண்டுமே. நாற்பந்தைந்து வயது மனிதரைப் போலவா தெரிந்தார். வாழ்க்கையில் மரணத்தின் விளிம்புவரை சென்று, வாழ்வின் அனைத்துத் துயரங்களையும் அனுபவித்த, ஆன்மாவில் காயங்களினால் ஏற்பட்ட தளர்ந்த பலவீனமான இதயத்தைக் கொண்டவராகவா தெரிந்தார். இருபந்தைந்து வயதில் வாழ்வின் வசந்தத்தை அள்ளியள்ளைப் பருகத்துடிக்கும் ஒரு வலிமை மிக்க இளைஞனாக அல்லவா தெரிந்தார்.

அந்த அறையில் அவரையும் அன்னாவையும் தவிர வேறு யாரும் இல்லை என்று தாஸ்தயேவ்ஸ்கி நினைத்திருந்தாரில்லையா? காதலிக்கும் போது எல்லோருக்கும் அப்படித்தானே எண்ணத்தோன்றும். அவர்களிருவரையும் தவிர இந்த உலகத்தில் யாருமே இல்லை. ஏன் உலகமே இல்லை என்று கூடத் தொன்றும். அப்படித்தான் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் எத்தனையோ காதல்களைச் சந்தித்துக் கடந்திருந்தாலும், ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்வதென்பது லேசான காரியமா? அப்போது தோன்றும் உணர்ச்சிச்சுழிப்புகளை எந்த எழுத்தாளராலும் எழுதி விட முடியுமா? முகத்தில் ரத்தம் பாய்ந்து சிவந்து எதிர்கொள்ளப்போவது ஆனந்தத்தையா அவமானத்தையா என்று தெரியாமல் மரணத்தின் முன்னால் கையாலாகாமல் நிற்பதைப் போன்றல்லவா நின்று கொண்டிருந்தார் எங்கள் அருமை தாஸ்தயேவ்ஸ்கி.

 முகத்தில் வழியும் அசட்டுத்தனத்தை மறைக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தும் முடியவில்லை. எத்தனையோ பெண்களைச் சந்தித்தவர் தான். சூதாடியில் வரும் பொலீனாவுக்காக சூதாட்டவெறியில் ஒரு போதும் மீளமுடியாதபடி வீழ்ந்தவர் தான். ஆனால் இப்போது அந்தச் சின்னஞ்சிறுபெண், அவரை விட இருபத்தைந்து வயது குறைந்த, வசந்தத்தின் வாசலில் நின்று கொண்ட ஒளிவீசும் எதிர்காலத்தைக் கனவு கண்டு கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் சொல்லும்போது ஏன் இந்தத் தடுமாற்றம்? ஏன் இந்தத் தயக்கம்? குரலில் ஏன் நடுக்கம்?

“ தைரியமாகச் சொல்லுங்கள் தாஸ்தயேவ்ஸ்கி! இது தான் சமயம்.. இவள் தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கண்ட உண்மையான காதல்.. தைரியமாகச் சொல்லுங்கள் தாஸ்தயேவ்ஸ்கி “ என்று அறையின் வாசலில் ஓரமாக இப்படித்தான் நடக்கும் என்று முன்னுணர்ந்தவராக தாஸ்தயேவ்ஸ்கியை உள்ளும்புறமும் அறிந்த பெதோஸ்யா நின்று மானசீகமாக வேண்டிக் கொண்டிருந்தார். அவர் அப்படி நின்று கொண்டிருப்பது தாஸ்தயேவ்ஸ்கிக்குத் தெரியாது. அன்னாவுக்கும் தெரியாது.

உங்களுக்கு மட்டும் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். ஆமாம. பெதோஸ்யாவுக்குப் பின்னால் நிழலாய் ஒரு உருவத்தைப் பார்த்தீர்களா? இந்த அமர கணத்தை எதிர்காலத்தில் ஒரு சங்கீர்த்தனம் போல என்ற நாவலாக எழுதி மலையாள இலக்கியத்தில் சாதனை படைக்கப்போகும் பெரும்படவம் ஸ்ரீதரன் தான் அது.

ஏன் பெதோஸ்யாவின் கண்களில் கண்ணீர் கரை புரண்ட ஓடுகிறது? தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஏதாவது அற்புதம் நிகழ்ந்து விடாதா என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கும் பெதோஸ்யாவுக்கு இதை விட ஆனந்தம் இருக்கிறதா என்ன? எப்போதும் கெட்டியான தேநீர் தயாரித்துக் கொடுக்கும் வேலைக்காரி மட்டுமல்ல. சமையல்காரி மட்டுமல்ல. தாஸ்தயேவ்ஸ்கியின் ஒவ்வொரு அசைவுக்கும் தெரிந்தவர். அவருடைய இருமலுக்கும் செருமலுக்கும் கோபத்துக்கும், மகிழ்ச்சிக்கும், என்ன காரணம் என்று தெரியும்.

அவ்வளவு ஏன் ? சிறுவயது முதலே தாஸ்தயேவ்ஸ்கியைத் துன்புறுத்தும் அந்தப் பரவச வலிப்பு நோய் எப்போது வரும்? என்பதைக் கூட அறிந்தவர் தான் பெதோஸ்யா. தாஸ்தயேவ்ஸ்கி நேரிடையாகச் சொல்லவில்லை. அடுத்த நாவலுக்கான கதைச்சுருக்கத்தைச் சொல்வதைப் போலச் சொன்னார். அவர் சொன்ன கதையைக் கேட்டதும் உள்ளுக்குள் அன்னாவின் இதயம் துடித்தது. உணர்ச்சியால் கொந்தளித்தது. உடலில் ஒரு பரவசம் தோன்றி மறைந்தது. ஆனாலும் அன்னா தாஸ்தயேவ்ஸ்கியைப் போல உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவரல்ல. அமைதியாக இருந்தார். இன்று இப்போது இந்த அறையில் நடக்கும் ஒவ்வொரு அசைவுக்கும் அவருக்கு அர்த்தம் தெரிந்தாலும் தாஸ்தயேவ்ஸ்கியின் வாயினால் அதைச் சொல்லவேண்டுமென்று நினைத்தார். அந்த வார்த்தைகளுக்காகவே அமைதி காத்தார்.

தாஸ்தயேவ்ஸ்கி சொல்லியே விட்டார்.

“ அந்த ஓவியன் நான் தான் என்று நினைத்துக் கொள். நான் உன்னிடம் என் காதலைச் சொல்லவும் செய்கிறேன். நீ வாழ்வு முழுவதும் என்னுடன் இருப்பாயா? சொல். உன் பதில் என்னவாக இருக்கும்? “

“ என் பதில் இதுவாக இருக்கும். நான் உங்களை நேசிப்பேன். அந்த நேசம் வாழ்வின் முடிவு வரை நிலைத்திருக்கும்..”

அதன்பிறகு என்ன நடந்திருக்குமென்பதைச் சொல்ல முடியுமா? தாஸ்தயேவ்ஸ்கியின் கண்கள் கசிந்தன. அன்னா தன் மகிழ்ச்சியை மறைக்க முகத்தை மூடிக் கொண்டாள். அறை வாசலில் நின்ற பெதோஸ்யாவுக்குத் தன் கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைக்கத் தோன்றவில்லை. பின்னால் இலக்கியச்சாட்சியாக நின்ற பெரும்படவம் ஸ்ரீதரன்.

அட! அவர் கண்களிலும் கண்ணீர் ஒடுகிறது.

அந்தக் கணத்தில் ஒரு சங்கீர்த்தனம் போல என்ற நாவலின் களம் முடிவாகி விட்டது. மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுக் கொண்டிருக்கும் அந்தப் புகழ்பெற்ற நாவலை எழுத முடிவு செய்கிறார். அதற்கு அன்னா தன்னுடைய நாட்குறிப்புகளின் வழியே வழி நடத்துகிறார். இது தான் இலக்கியத்தின் அற்புதம்!

அன்னாவும் தாஸ்தயேவ்ஸ்கியும் சந்தித்த முதல்நாள் முதல் அவர்கள் தங்களுக்குள் காதலைப் பரிமாறிக் கொண்ட கடைசிநாள் வரையிலான கதையைச் சொல்வதென்று முடிவு செய்கிறார் பெரும்படவம். எழுதத்தொடங்கிய நாள் முதல் நாவல் முடியும்வரை ஏதோ தாஸ்தயேவ்ஸ்கியின் ஆவி உள்ளே புகுந்ததைப் போல எழுதுகிறார். தாஸ்தயேவ்ஸ்கியின் நடை, உடை, பாவனை, அவருடைய பழக்கவழக்கங்கள், அவருடைய கடந்தகால வாழ்க்கை, நிகழ்காலவாழ்க்கை, அவரது முரண்பட்ட சிந்தனைகள், முரண்பட்ட ஆளுமையின் உள்ளுரு, எல்லாவற்றையும் அப்படியே கலையாக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 130 வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வை, அந்தக் காலச்சூழலை, கதாபாத்திரங்களை அப்படியே கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிற மகத்தான கலைஞனாகியிருக்கிறார் பெரும்படவம்.

பதினாறு அத்தியாயங்களில் ஒரு காதல் காவியத்தைப் படைத்திருக்கிறாரென்றால், அதுவும் தாஸ்தயேவ்ஸ்கி போன்ற உணர்ச்சிக்கொந்தளிப்பு மிகுந்த எழுத்தாளரின் வாழ்க்கையிலிருந்து முக்கியமான பகுதியை எழுதுவதென்பது எவ்வளவு பெரிய சவால்? தாஸ்தயேவ்ஸ்கியின் அனைத்து நூல்களையும் வாசித்து அவரைப் பற்றியே யோசித்து, அவரைப் பற்றியே சிந்தித்து, அவராகவே மாறியிருக்கிறார் என்று சொல்வது மிகையில்லை. பல அதிசயங்களைக் கொண்ட கேரளாவில் தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை மட்டுமே பதிப்பிக்கும் பதிப்பகம் இருப்பதும் ஆச்சரியமில்லை.

கடவுள் கையொப்பமிட்ட இதயத்துக்குச் சொந்தக்காரரான தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கையில் இந்த நாட்கள் மிக முக்கியமானவை. EVIL GENIUS என்று மாகிசிம் கார்க்கியால் அழைக்கப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி தன் படைப்புகளில் மனித மனதின் இருண்ட பகுதிகளை வெளிச்சமாக்கிக் காட்டியவர்.  தன்னையே வாழ்வுக்கும் இலக்கியத்துக்கும் ஒப்புக் கொடுத்து பரிசோதனை செய்தவரென்று கூடச் சொல்லலாம். எப்போதும் அதீத உணர்ச்சிகளிலெயே உழன்று கொண்டிருந்த தாஸ்தயேவ்ஸ்கியை வறுமையும், துரோகங்களும், தோல்விகளும், உறவினர்களின் சுரண்டலும் சேர்ந்து உழட்டின. அத்தனைக்கும் தன்னை ஒப்புக்கொடுத்து மேதைமை தாஸ்தயேவ்ஸ்கிக்கு அன்னாவின் காதல் ஒன்று கடைசிவரை கிடைத்த ஒரே ஆறுதல். தாஸ்தயேவ்ஸ்கி நிலைதடுமாறி நிற்கும்போது தன்னுடைய கைப்பணத்தைக் கொடுத்து அவரைச் சூதாட அனுப்புகிற அந்தக் காட்சி உண்மையில் நெகிழவைப்பது. ஏனெனில் சூதாட்டம் அவரைச் சமநிலைப் படுத்துகிறதென்பதை மிகக்குறைந்த நாள் பழக்கத்திலேயே தெரிந்து கொண்டவர் அன்னா.

உண்மையில் அன்னா உலக இலக்கியத்தில் சித்தரிக்கப்பட்ட எந்தக் கதாபாத்திரத்தையும் விட அற்புதமான மனுஷி..

தன்னைவிட இரண்டு மடங்கு வயதுடைய எப்போதும் அதீதங்களிலியே வாழ்ந்து கொண்டிருக்கும் தாஸ்தயேவ்ஸ்கியைக் காதலித்து மணம்முடித்து அவரையும் அவரது படைப்பு மனதையும் காப்பாற்றிய அன்னாவுக்கு மிகச்சிறந்த இலக்கியவெகுமதியைக் கொடுத்திருக்கிறார் ஒரு சங்கீர்த்தனம் போல நாவலில் பெரும்படவம்..

இந்தப் புகழ்பெற்ற நாவலை அதன் உணர்ச்சிவெள்ளத்தைச் சிந்தாமல் சிதறாமல் அப்படியே அழகாகத் தமிழில் தந்திருக்கிறார் கவிஞர் சிற்பி.

அதோ.. பாருங்கள்! தாஸ்தயேவ்ஸ்கியின் சமையலறையில் பெதோஸ்யா அவருடைய இளமையில் அவர் காதலித்த அந்த முரடனை நினைத்து ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே கெட்டியான கருப்புத் தேநீரைத் தயாரிக்கிறார். இனி தினமும் தாஸ்தயேவ்ஸ்கிக்கு மட்டுமல்ல, அன்னாவுக்க்கும் சேர்த்துத் தேநீர் தயாரிக்கவேண்டும். அதை நினைக்கும்போதே பெதோஸ்யாவுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றுகிறது. ஏதோ ஒரு நிம்மதி. எப்போதும் கனவில் எதையோ தேடிக் கொண்டிருப்பார் தாஸ்தயேவ்ஸ்கி. ஆனால் இதுவரை கிடைத்ததில்லை. ஆனால் இப்போது அவர் தேடியது கிடைத்து விட்டது. அந்தச் சிறிய வைரம் தான் அன்னா.

இனி தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் வசந்தம் வீசும். அந்தப்பாவப்பட்ட ஆத்மா கொஞ்சமேனும் உண்மையான அன்பில் திளைக்குமென்று நினைத்த பெதோஸ்யாவுக்கு ஏனோ தன்னுடைய தாயின் நினைவுகள் பொங்கி வந்தன.

கெட்டியான கருப்புத்தேநீரைத் தயாரித்து முடித்து விட்டாள் பெதோஸ்யா. நான்கு கோப்பைகளில் ஊற்றினாள். இரண்டு கோப்பைகளை அன்புக்குரிய அன்னாவுக்கும், தாஸ்தயேவ்ஸ்கிக்கும் கொடுத்தாள்.

ஒரு கோப்பை கெட்டியான கருப்புத் தேநீரை நிழலாய் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த பெரும்படவம் ஸ்ரீதரனிடம் கொடுத்தாள்.

மீதமிருக்கும் இன்னொரு கோப்பையை எடுத்து நீட்டுகிறாள் பெதோஸ்யா..

வாங்கி அருந்துங்கள்!

எங்கள் தாஸ்தயேவ்ஸ்கியையும் அன்னாவையும் வாழ்த்துங்கள்!

 

ஒரு சங்கீர்த்தனம் போல

மலையாளத்தில் – பெரும்படவம் ஸ்ரீதரன்

தமிழில் – சிற்பி

வெளியீடு – அருட்செல்வர்.நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்

தொடர்புக்கு – 9976144451

நன்றி - புக் டே

.

Saturday, 15 February 2025

கல்லின் கதை

 

கல்லின் கதை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



ஒரு நாள் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் விளையாட வரவில்லை. நாய்க்குட்டி காட்டில் குள்ளநரி வீட்டுக்கு விருந்துக்குப் போய் விட்டது. குள்ளநரியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

பூனைக்குட்டிக்கு பாலும் சோறும் சாப்பிட்டு சலித்துவிட்டது. அதனால் ஏதாவது மாமிசம் சாப்பிட வேண்டுமென்ற ஆசையில் எலியைப் பிடிக்கப் போயிருந்தது.

சின்னுவுக்கும் போரடித்தது. தட்டாங்கல் விளையாடலாம் என்று கற்களைப் பொறுக்கினாள். ஒரு கல் நல்ல முல்லைப்பூ மணம் வீசியது. சின்னு அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு கதைப்ப்பாட்டியிடம் போனாள்.

கதைப் பாட்டி கதைப்பாட்டி..இந்தக் கல்லுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு மணம்.. முல்லைப்பூ மணம் வீசுது? “ என்று கேட்டாள்.

கதைப்பாட்டி சொன்னாள்,

“ சின்னுக்குட்டி.. இவ்வளவு நாளும் இந்தக் கல் முல்லைப்பூச் செடிக்குக் கீழே கிடந்தது.. முல்லைப்பூக்கள் பூத்து கீழே உதிரும்போது இந்தக் கல்லின் மீது விழுந்து மூடிக் கொள்ளும்.. அதனால் தான் முல்லைப் பூ மணம் கல்லில் வீசுகிறது..”

“ முல்லைப் பூ மணத்துடன் கிடக்கும்

கல்லுக்கும் கிடைக்கும் புகழ்மாலை “

என்று கதைப்பாட்டி பாடினாள்.

“ என்ன அர்த்தம் ? “ என்று சின்னு கேட்டாள்.

“ நல்ல மனிதர்களுடன் நட்பாக இருந்தால் நாமும் நல்லவர்களாக இருப்போம் என்று அர்த்தம். அதனால் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..தெரிஞ்சுதா? “ என்று கதைப்பாட்டி சொன்னாள்.

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

 

7.

Tuesday, 11 February 2025

சின்னுவும் சிங்கமும்

 சின்னுவும் சிங்கமும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்




சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஆலமரத்தடியில் விளையாடுவார்கள். அந்த ஆலமரத்திற்குச் சற்று தூரத்தில் ஒரு ஆறு ஓடுகிறது.  ஆறு ஓடுகிற சத்தம் கேட்டுக்கொண்டே கதைப்பாட்டியின் மடியில் தலை வைத்து சின்னு படுத்திருப்பாள். அவளுடைய காலில் தலை வைத்து நாய்க்குட்டி படுத்திருக்கும். நாய்க்குட்டியில் வயிற்றில் தலை வைத்து பூனைக்குட்டி படுத்திருக்கும். ஆற்றின் பாடலைக் கேட்டுக் கொண்டே மூன்று பேரும் உறங்குவார்கள்.

அவர்கள் ஆற்றை ஆறம்மா என்று அழைப்பார்கள். ஆறம்மாவின் கரையில் போய் விளையாடலாமா? என்று கேட்டாள் சின்னு. நாய்க்குட்டி பௌ என்றது. பூனைக்குட்டி மியாவ் என்றது. ஆற்றின் அக்கரையில் ஒரு பெரிய காடு இருந்தது. பெரிய பெரிய மரங்கள் நிறைந்த இருண்ட காடு.

ஒரு நாள் ஆறம்மாவின் கரையில் மூன்று பேரும் பாட்டுப்பாடி ஆடிக் கொண்டிருந்தார்கள். சின்னு ஆ ஆ ஆ ஆ என்று பாடினாள். நாய்க்குட்டி பௌ பௌ பௌ என்றும் பூனைக்குட்டி மியாய் மியாவ் மியாவ் என்றும் பாடி ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“ ஹேய்.. நிறுத்து..” என்று ஒரு கர்ச்சனை ஆற்றின் அக்கரையில் இருந்து கேட்டது.  மூன்று பேரும் துள்ளிக்குதித்து பார்த்தால் மறுகரையில் ஒரு சிங்கம். காட்டுக்குள் இருந்து வந்த வயதான சிங்கம் ஆற்றில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. தண்ணீரைக் குடித்தபிறகு அந்த வயதான சிங்கம், சிரித்துக்கொண்டே,

“ யார் நீங்கள்? “ என்று கேட்டது. நாய்க்குட்டி வாலை கால்களுக்கு அடியில் வைத்துக் கொண்டு சின்னுவின் பின்னால் ஒளிந்து கொண்டது. பூனைக்குட்டி நாய்க்குட்டியின் பின்னால் ஒளிந்தது.

“ நாங்கள் இங்கே தண்ணீர் குடிக்க வந்தோம்..” என்று சின்னு சொன்னாள்.

“ நீங்கள் இந்தப்பக்கம் காட்டுக்குள் வாருங்கள்.. நானும் விளையாட வாரேன்..”

என்று சிங்கம் சொன்னது.

” வேண்டாம் வேண்டாம்.. உப்பும் மிளகும் சேர்த்து எங்களைத் தின்பதற்கா? “ என்றாள் சின்னு. வயதான சிங்கம் சிரித்தது. பிறகு கேட்டது,

“ யாரு சொன்னார்கள்..”

“” இந்த ஆற்றைக் கலக்கியது நீ இல்லாமல் இருக்கலாம்.. உன்னுடைய தாத்தா கலக்கினார் என்று சொல்லி ஆட்டினைக் கொன்று தின்ற கதை எங்களுக்குத் தெரியும்..அங்கிருந்தே பேசினால் போதும்..”

 என்று சொன்னது பூனைக்குட்டி.

“ இந்தக் கதை எல்லாம் உங்களுக்குச் சொன்னது யார்? “

“ கதைப் பாட்டி..” என்று மூன்று பேரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

சிங்கத்தின் முகம் சிவந்து விட்டது. மீசை முடி சிலிர்த்தது.

“ உங்களுடைய கதைப்பாட்டியினால் ஒரு விலங்கையும் வேட்டையாடிச் சாப்பிட முடியவில்லை..” என்று சொல்லிக்கொண்டே மெல்ல மெல்ல காட்டுக்குள் சென்றது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கசுமலா காக்கா பறந்து சென்று சிங்கத்தின் தலையில் ஒரு கொத்து கொத்தியது

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

Tuesday, 7 April 2015

நீங்கள் இல்லையென்றால் பின் வேறு யார்? இப்போது இல்லையென்றால் பின் எப்போது?

 

வி.என்.முரளி

( கேரள புரோகமன கலா சாகித்ய சங்கட்னா )

 

தமிழில்-உதயசங்கர்revolution 3

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13 வது மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பளித்தமைக்கு எங்களுடைய கேரள புரோகமன கலா சாகித்ய சங்கட்னாவின் சார்பில் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல தலைவர்கள் கேரளாவில் புரோகமன கலா சாகித்ய சங்கட்னாவின் பல கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் வந்து கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள். அது எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் தந்தது. அதற்காகவும் இந்தத் தருணத்தில் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வர்க்கவிரோதிகளுக்கும், மதவெறிச்சக்திகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக மாநில அளவிலான ஒரு பிரச்சாரப்பயணத்திற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மார்ச் மாதம் 27 ஆம் தேதி காசர்கோட்டில் துவங்கி கேரளாவின் 16 மாவட்டங்களின் வழியாக வந்து தமிழ்நாட்டின் எல்லையான பாறசாலையில் நிறைவு அடைகிறது. திராவிட மொழிகளில் தமிழும் மலையாளமும் மிகுந்த நெருக்கமும் தொடர்பும் கொண்டது. மொழிரீதியாக மட்டுமல்லாமல் இலக்கிய ரீதியாகவும் மிகுந்த நெருக்கமும் கொடுக்கல் வாங்கலும் தமிழுக்கும் மலையாளத்துக்குமிடையில் இருக்கிறது. இரண்டு மொழிகளுக்குமிடையிலான உறவு இரண்டாயிரம் வருடங்கள் பழமையானது. சங்க இலக்கியத்தின் பெரும்பகுதியில் கேரளாவின் வாழ்க்கை எழுதப்பட்டிருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அது மட்டுமில்லை. சிலப்பதிகாரத்திலும் சேரநாட்டு வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது. சுந்தரம்பிள்ளையின் மனோன்மணியமும் கேரளவாழ்க்கையோடு தொடர்புடையது.

நவீன இலக்கியத்திலும் தமிழ் எழுத்தாளர்களான நகுலன், நீல பத்மநாபன், மாதவன் போன்றோர் தமிழுக்கும் மலையாளத்துக்கும் இடையிலுள்ள உறவை வலுப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல கேரளாவிலுள்ள தமிழ்ச்சங்கங்கள் கேரளாவில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக திருவனந்தபுரத்திலுள்ள தமிழ் எழுத்தாளர் சங்கத்தோடு புரோகமன கலா சாகித்ய சங்கத்திற்கு நல்ல உறவும் நட்பும் உண்டு. ஆனால் இரண்டு மொழிகளுக்குமிடையிலான இலக்கியப்பரிவர்த்தனை மிகவும் குறைவு என்று நான் நினைக்கிறேன். அத்தகைய பரிவர்த்தனைக்கு நம்முடைய இரண்டு சங்கங்களுக்கிடையில் ஒரு ஒருங்கிணைப்பு தேவை. அப்படி ஒரு ஒருங்கிணைப்புக்குழு ஒன்றை இந்த மாநாட்டில் நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். அதன் மூலம் முற்போக்கு இலக்கியத்தை இன்னும் வளர்க்க முடியும்.

பெரிதும் சவால்கள் நிறைந்த காலம் இது. இதில் தமிழ்நாடு என்றோ கேரளா என்றோ வேறுபாடில்லை. மக்களை சாதிமதக்கூறுகளாகப் பிரிக்கிற வேலை இப்போது அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதற்கென்றே 1930-களில் அகில உலக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மாக்சிம் கார்க்கியின் தலைமையில் துவங்கப்பட்டது. அப்போது மனித குலத்தின் பாதுகாவலன் யார்? என்ற கேள்வியே முன்னுக்கு வந்தது.

இப்போது இந்தியாவில் அதே பாசிசத்திற்கு நிகரான சூழல் நிலவுகிறது. சங்பரிவாரங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையில் ஆட்சியைப் பிடித்தபிறகு மதவாதம், இனவாதம், தேசிய வாதம் போன்ற வெறிகளை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்கிற சூழ்நிலைமை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதிமதத்துவேஷங்களை இந்தியாவில் சட்டமாக்குகிற முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பகுத்தறிவையும், விமரிசன உணர்வையும் கொண்ட ஜனநாயகத்தைத் தகர்க்கிற வேலையை சங்பரிவாரங்கள் செய்து கொண்டிருக்கின்றன. பாசிசத்தை எதிர்க்காமல் இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவரான மோகன் பகவத் இந்தியாவில் ஐந்து M-களை தங்களுடைய எதிரிகளாகச் சொல்கிறார். MARXISM, MUSLIM, MISSIONARIES, MACALEY EDUCATION, MATERIALISM இந்த ஐந்து M-களை இந்தியாவிலிருந்து முற்றிலும் துடைத்தெறிய வேண்டும். அதைத் தான் அவர்கள் சுச் பாரத் அதாவது தூய்மை இந்தியா என்று சொல்கிறார்கள். வரலாற்றில் இதற்கும் கூட ஒரு ஒப்புமை இருக்கிறது. ஜெர்மனியின் ஹிட்லர் கம்யூனிஸ்டுகளையும், யூதர்களையும் அழித்து ஒழிப்பதற்கு ஒரு திட்டம் கொண்டு வந்தான். அதற்கு அவன் இறுதித்தீர்வு ( FINAL SOLUTION ) என்று பெயரிட்டிருந்தான்.

இந்தியாவில் மோடி அரசாங்கத்தைப் பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருப்பது கார்ப்பரேட்டுகள் தான். இந்தியாவில் இப்போது உருவாகியுள்ள பாசிச முன்னணியில், கார்ப்பரேட்டுகள், ஊடகங்கள், ஏகாதிபத்தியம், மற்றும் சாமியார்கள் இருக்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பிறகு நடந்து கொண்டிருக்கிற காரியங்களை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. கடந்த விஜய தசமி நாளில் இந்திய வரலாற்றில் இது வரை நடந்திராத வகையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவரான மோகன்பகவத் அரசுத்தொலைக்காட்சியில் ஒரு மணிநேரம் உரையாற்றினார். ஆனால் அதற்குப்பின்னால் வந்த பக்ரீத்திலோ, கிறிஸ்மஸ் தினத்திலோ எந்த உரையும் யாரும் நிகழ்த்தவில்லை. இந்தியாவின் பன்மைத்துவத்துக்கு ஆர்.எஸ்.எஸ். மிகப்பெரிய எதிரி.

சங் பரிவாரங்கள் ஊடகங்களின் வழியே மறைமுகமான சூட்சும அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேசியவாதத்தையும் கலாச்சார அரசியலையும் அவர்கள் முகமூடிகளாக அணிந்து கொண்டிருக்கிறார்கள். ஆம் நண்பர்களே! மகாத்மா காந்தி சுடப்பட்ட நாளை கோட்சே வீரச்செயல் புரிந்த நாளாக பிரச்சாரம் செய்கிறார்கள்.. கோட்சே காந்தியைச் சுட்டது சரிதான் என்றும் சொல்கிறார்கள். அதுமட்டுமில்லை. காந்தியைக் கொலை செய்த கோட்சேவுக்கு கோவில் கட்டவும் சிலை வைக்கவும் முயற்சி செய்கிறார்கள்.

இந்தியாவில் பாசிசம் வளர சூட்சும அரசியல் தளங்களையும் பயன்படுத்துகிறது. கல்வித்திட்டத்தை மாற்றியமைக்கிறார்கள். வரலாற்றை திருத்துகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள். I.C.R.H. –ல் நடந்ததை நாம் அறிவோம். கேரளாவில் நேஷனல் புக் டிரஸ்டின் தலைவராக இருந்த எழுத்தாளர் சேதுவை மாற்றி ஒரு ஆர்.எஸ்.எஸ். காரரை அந்தப் பதவியில் உட்காரவைத்திருக்கிறார்கள்.

சங் பரிவாரம் இப்போது நடத்திக் கொண்டிருக்கிற நிகழ்ச்சி நிரலான கர்வாபசி ( தாய் வீடு திரும்புதல் ) என்பது ஒரு சொல் அல்ல. ஒரு இயக்கம் அல்ல. அது ஒரு கொலைக்கருவி. இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிராக நீட்டப்படுகிற துப்பாக்கி. ஏனெனில் இந்தியாவில் நாலாயிரத்துக்கும் மேல் மாறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட இனங்கள் உண்டு. முந்நூற்றிருபத்தியைந்து மொழிகள் இருக்கின்றன. ஏராளமான மதங்களும் அதில் உட்பிரிவுகளும் உண்டு. மத மறுப்பாளர்களும், கடவுள் மறுப்பாளர்களும் உண்டு. இந்த மாறுபட்ட அனைத்து மக்களையும் ஒற்றைக் கலாச்சார அடையாளமாக, இந்துக்களாக மாற்ற வேண்டும் பி.ஜே.பி. துடிக்கிறது. அதன் மூலம் ஒரு மகத்தான பன்முக சமூகத்தை முடிவுக்குக் கொண்டு வர நினைக்கிறது.

கர்வாபசி என்றால் தாய்வீடு திரும்புதல் என்று சொல்ல முடியாது. மாற்று மதத்தவர்களை, மாற்றுக் கருத்துடையவர்களை நாட்டை விட்டு விரட்டியடித்தல் ஆகும். ஒரு ஜனநாயக நாட்டில் எந்த மதத்தைப் பின்பற்றவும், மதமே வேண்டாம் என்று சொல்வதற்கும் உரிமை இருக்கிறது. என்றென்றும் அந்த உரிமை நிலைத்திருக்க வேண்டும். ஏனெனில் இந்திய ஒற்றுமையில் தீ வைக்கிற முயற்சி தான் கர்வாபசி. இந்தியாவில் வீடற்ற எண்ணற்ற மக்களுக்கு சொந்தமாக வீடு வழங்க முடியாத அரசு கர்வாபசி என்பது கேலிக்குரியது. அப்படி கர்வாபசி மூலம் திரும்பி வருபவர்களுக்கு எந்த வீட்டைக் கொடுப்பார்கள்? நம்பூதிரியின் வீட்டையா? நாயரின் வீட்டையா? இல்லையென்றால் பிராமண வீட்டையா? சத்திரிய வீட்டையா? அல்லது சூத்திரர் வீட்டையா?

2000 ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனின் வார்த்தைகளைத் தமிழிலிருந்தே கேட்டோம். இத்தகைய ஒரு நாட்டில் மக்களைப் பிரித்தாளுகிற சூழ்ச்சி நடக்கிறது. இந்தச்சூழலில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பங்களிப்பு முன்னுக்கு வருகிறது. வரலாற்றில் கலை இலக்கியத்துறையில் இன்னொரு விடுதலைப்போர். முற்போக்கு கலை இலக்கியம் பாரம்பரியமான முற்போக்கு அழகியலை மேலும் பொலிவாக்குகிறது. எல்லாவித பிற்போக்குத்தனங்களையும் எதிர்க்கிறது. பழமையின் பிற்போக்கு மரபுகளை எதிர்கொண்டு புதிய முற்போக்கான மக்கள் மரபுகளை உருவாக்குகிறது.

இந்த செஞ்சுடர் பாரம்பரியத்தை நாம் உயர்த்திப்பிடிக்க வேண்டும். இன்று தமிழில் எழுத்தாளர்களின் கைகளுக்கும் சிந்தனைகளுக்கும் விலங்கிடும் வேலை நடக்கிறது. இதை நாம் அநுமதிக்க முடியாது. இந்தத்தருணத்தில் சொந்த மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட பெருமாள் முருகனுக்கு ஆதரவாக கேரளா முழுவதும் ஆதரவும் ஒற்றுமைக்குரலும் ஓங்கி ஒலித்தது என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.பெரியாரின் மண்ணில் இத்தகைய பிற்போக்கான செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது.

இந்தத் தருணத்தில் அமைதி காப்பதும் கூடாது. இப்போது இல்லையென்றால் பின் எப்போது நாம் களத்தில் இறங்கப் போகிறோம்? இப்போது செய்யாமல் பின் வேறு எப்போது செய்யப்போகிறோம்?

IF NOT YOU WHO? IF NOT NOW WHEN?

எந்த சவாலையும் எதிர்கொள்வதற்கான ஒரு ஐக்கிய முன்னணியை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். காலத்தின், வரலாற்றின் குரலுக்கு நாம் செவி கொடுப்போம். உங்களோடு தோளோடு தோளாய் நாங்களும் நிற்கிறோம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இந்த மாநாடு வெற்றி பெற புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

( தமுஎகச 13 வது மாநில மாநாட்டில் ஆற்றிய உரையின் சுருக்கம் )

நன்றி-செம்மலர் ஏப்ரல் 2015

Thursday, 12 February 2015

மீன் காய்க்கும் மரம்

 

மலையாளத்தில்- வைசாகன்

தமிழில்- உதயசங்கர்inthu__2307007g

இந்து பயந்து போனாள். வழியில் ஒரு பிள்ளையைக்கூட காணலியே. ரெம்ப நேரம் ஆயிருச்சோ?. பள்ளிக்கூடத்தில் மணி அடிச்சிருப்பாங்களோ? புதிதாக வந்திருக்கிற வாத்தியார் சும்மா விடமாட்டாரே!

நேற்றே தாமதமாய் வருபவர்களுக்கு என்ன தண்டனை என்று சொல்லியிருந்தார். “ புத்தகங்களைத் தலையில் வைத்துக் கொண்டு ரெம்ப நேரம் நிக்கணும்..”

அதை நினைத்தபோது இந்துவுக்கு வெட்கமாயிருந்தது. இன்று அப்படி நிற்க வேண்டியது வருமோ? வேகமாக நடந்தால் மட்டும் போதாது. ஓடணும். இந்து ஓடத் தொடங்கினாள். ஓட்டத்தில் என்ன வேகம்? ஓடுகிற வண்டியில் போகும்போது பின்னால் பாய்ந்து போகிற மரங்களைப் பற்றி யோசித்தாள். அதை மாதிரி இப்போது சாலையின் அருகில் உள்ள மரங்கள் எல்லாம் பின்னால் பாய்ந்து சென்றன. திடிரென ஒரு மரத்திலிருந்து ஏதோ ஒரு கிளியின் சத்தம்.

“ இந்துக்குட்டி…நிலாக்குட்டி…”

இந்துவுக்கு ஆச்சரியம். அந்தக் கிளியின் குரல் அம்மாவின் குரலைப் போலவே இருந்ததே! இதென்ன ஒரு மாயாஜாலம்! பறவைகளால் பேச முடியுமா?

தார்ச்சாலையில் குழந்தைகள் யாரையும் பார்க்க முடியவில்லை என்பது மட்டுமல்ல. ஒரு ஜீவராசியையும் பார்க்க முடியவில்லை. ஒரு வாகனமும் சாலையிலில்லை. ஆட்களுக்கும் வாகனங்களுக்கும் என்ன ஆச்சு? திடிரென ஞாபகம் வந்தது. இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிற நேரமா இது? சீக்கிரமாக பள்ளிக்கூடம் போய்ச் சேரணும்.

ஓட்டத்தின் வேகம் கூடியது. இன்னிக்கு என்ன இப்படி? ஓடுவது கஷ்டமாகத் தெரியவில்லை. காற்றில் பறக்கிற தாத்தாப்பூச்சியைப் போல அப்படியே பறந்து போனாள். இந்து திடுக்கிட்டுப் போனாள். திடீரென கருத்த தார்ச்சாலை மறைந்து போய்விட்டது. இப்போது அவளுக்கு முன்னால் ரெம்ப தூரத்துக்கு மணல் மட்டுமே விரிந்து கிடந்தது

சீனியைப் போல வெள்ளைமணல். தார்ச்சாலை மணலுக்குள் தலையை நுழைத்து கலந்து சேர்ந்து மறைந்திருக்கிறது. இந்து திகைத்து சுற்றிலும் பார்த்தாள். சுற்றிலும் மணல் மட்டும் தான்.இன்னொரு சமயமாய் இருந்தால் இந்த வெள்ளைமணலில் உருண்டு புரண்டு விளையாடியிருப்பாள். இப்போது விளையாட்டைப் பற்றி நினைக்கக் கூட முடியவில்லை. உள்ளுக்குள் துக்கம் அதிகரித்தது.

யாராவது மனிதர்களை பார்த்தால் நல்லது! மனிதர்களைப் பார்க்காவிட்டால் கூடப் பரவாயில்லை. ஒரு ஆட்டுக்குட்டியையாவது பார்த்தால் என்ன? இந்து யாராவது ஒரு சேக்காளிக்காக சுற்றும் முற்றும் பார்த்தாள்.

கொஞ்ச தூரத்தில் ஒரு மரம் நின்று கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் இன்னும் தூரத்தில் இலைகளில்லாத இன்னொரு மரத்தையும் பார்க்க முடிந்தது. கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. எந்த வழியில் போனால் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியும்? வழியை யாரிடம் கேட்பது? அவள் கொஞ்ச தூரத்திலிருந்த மரத்தை நிராதரவாய்ப் பார்த்தாள். மரம் வழி சொல்லாது என்று அவளுக்குத் தெரியும். ஆனாலும்…

இந்து மரத்தை நோக்கி நடந்தாள். புது மணலில் கால் புதைந்தது. சூடு தாங்க முடியவில்லை. இனி ஓரு அடி வைக்க முடியாது என்று தோன்றியது. அவள் மரத்திற்கடியில் போய் நின்றாள். அப்பாடா… நிழல் கொஞ்சம் ஆசுவாசமளித்தது. நிழலில் நின்று கொண்டு இந்து தூரமாய்ப் பார்த்தாள். அங்கே ஆகாயம் பூமியைத் தொடுகிற இடத்தில் உயரமாய் தெரிவது என்னவாக இருக்கும்?

மணலிலிருந்து தீப்பொறிகள் போல புழுதி பறந்து மேலே வந்தது. வானத்தில் சூரியன் ஒளிப்பிழம்பாய் ஜொலித்தது. இந்து தூரமாய் பார்த்த அந்த பொருளை உற்றுப் பார்த்தாள். அதிசயம்! அது பள்ளிக்கூடமல்லவா? மின்னுகின்ற மணலில் ஒத்தையாய் நிற்கிற ஒரேஒரு கட்டிடம். இப்படியில்லையே பள்ளிக்கூடம்? பள்ளிக்கூடத்துக்குப் போகிற வழியும் இப்படியில்லையே?

சாலைக்கருகில் படர்ந்து நின்ற மாமரங்கள் எங்கே போச்சு? ஏதோ ஒரு பிரச்னை. வழி தவறி வேறு எங்கேயோ வந்து விட்டோமா? இந்து மிகவும் பயந்து போனாள். அழுகை வந்தது. வீட்டுக்குத் திரும்பிப் போகும் ஆசை கூடிக் கொண்டே வந்தது. அப்படி நடக்கத் தொடங்கும்போது……

தலைக்கு மேலேயிருந்து விசித்திரமான சிரிப்பொலிகள் கேட்டன. இந்து மரத்தின் கிளைகளைப் பார்த்தாள். அதில் இலைகளாகத் தொங்கிக் கொண்டிருந்தது இலைகளில்லை. மீன்கள்! இலைகளைப் போல மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டு ஆயிரமாயிரம் மீன்கள்! மீன் காய்க்கிற மரமோ இது? இந்து திகைத்து அதைப் பார்த்துக் கொண்டு நிற்கும்போது மீன்கள் கூட்டமாய் சிரித்தன. சிரிப்பு நின்ற போது ஒரு மீன் பேசத் தொடங்கியது.

“ உனக்கு ஆச்சரியமாயிருக்கும். நாங்கள் எங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த மரத்தில் ஏறித் தொங்குகிறோம். உன்னுடைய பள்ளிக்கூடத்துக்குப் பின்னால் ஒரு ஆறு ஓடுதுல்ல..அந்த ஆத்திலுள்ள மீன்கள் தான் நாங்க…ஆத்தில வெள்ளம் இப்போ கரைபுரண்டு ஓடுது…யாருக்கும் பாதுகாப்பில்ல…அந்தா பாரு தூரத்தில உன்னோட பள்ளிக்கூடம். அதுவும் இடிஞ்சி விழுந்துகிட்டிருக்கு…”

இடி முழங்குவதைப்போல ஒரு சத்தம் தூரத்தில் கேட்டது. பள்ளிக்கூடக்கட்டிடம் இடிந்து விழுவதை இந்து பார்த்தாள். எதையும் யோசிக்க முடியவில்லை. தோளில் தொங்கிக் கொண்டிருந்த புத்தகப்பையை விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டு அவள் ஓடத்தொடங்கினாள். எப்படியாவது வீட்டிற்குப் போய்ச் சேர வேண்டும்.

ரெம்ப தூரம் ஓடியிருக்க மாட்டாள். அப்போதே அவள் வந்த பாதையில் மணல் மூடியிருப்பதைப் பார்த்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் அவள் ஸ்தம்பித்து நின்றாள். ஆகாயத்திலிருந்து ஒரு முழக்கம். ஆயிரம் ரயில்கள் ஒன்று போல ஓடி வருவதைப் போல… ஒரு பெரிய சப்தம்.. கண்களை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது…. பார்ப்பது என்ன.. கண்ணுக்கெட்டாத உயரத்தில் பொங்கிப் பாய்ந்து வரும் கடலலைகள்! கடல் பொங்கி பூமியை விழுங்குகிறதோ? இனி எங்கே ஓடுவது? இதோ….முழங்கும் கடலலை அருகில் வந்து விட்டது…!

இந்து தன்னால் முடிகிற உச்சத்தில் கூப்பாடு போட்டாள். சத்தம் வெளியே வரவில்லை.

“ இந்துக்குட்டி…கண்ணு இந்துக்குட்டி..”

கண்களைத் திறந்தபோது அப்பாவின் முகம் தெரிந்தது. கடலலைகள் மறைந்த இடத்தில் அப்பாவின் சிரித்த முகம். இந்து வியர்வையில் குளித்திருந்தாள். அவளுடைய அப்பா மடித்த செய்தித்தாளினால் அவளுக்கு விசிறிக்கொண்டிருந்தார். இந்துவுக்கு மூச்சு முட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் அவள் சிரிக்க முயற்சித்தாள். உதடுகள் காய்ந்து வறண்டிருந்தன.

இப்படியும் ஒரு கனவு வருமோ? மத்தியானம் சாப்பிட்டு விட்டுத் தூங்காதேன்னு அப்பா சொல்லியிருந்தார். இந்துவுக்குக் குற்ற உணர்ச்சி தோன்றியது. அவள் கண்ட பயங்கரக்கனவை அப்பாவிடம் விவரமாகச் சொல்லி முடித்த போது வெட்கம் தோன்றியது. அப்பா சிரித்தார்.

“ சமர்த்து… வெட்கப்படறதுக்கு ஒண்ணுமில்ல..கனவு காணாதவர்கள் யார்? சொல்லு..அதுவும் குழந்தைகள் விசேசமாய் கனவு காண்பார்கள். பெரியவர்களை விட கற்பனைத்திறன் குழந்தைகளுக்கு அதிகமல்லவா? “

திரும்பத்திரும்ப இந்து கேட்டாள், “ கனவில பாம்பு வந்தா சர்ப்பதோஷம்னு பாட்டி சொல்லுவாங்க….யானை கனவுல வந்தா கணபதிக்குக் கோபம்னு சொல்லுவாங்க… நான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்க அப்பா! “

“ அதெல்லாம் சும்மா சொல்றது இந்து..மூட நம்பிக்கைகள்…அது பாட்டியோட தப்பில்லை..புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் பாட்டிக்குத் தெரியாதில்லையா?...”

அப்பா இந்துவை எழுப்பி விட்டார். சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவளைத் தனக்கருகில் பிடித்து நிறுத்தினார். அப்போது தான் இந்துவின் மனதில் கனவு விதைத்த பயத்தின் முட்கள் மறையத் தொடங்கியது. அறைக்குள் அம்மா வந்தாள்.

“ அப்பாவோட செல்லக்குட்டி ஏன் கூப்பாடு போட்டா? “

என்று கேட்டாள். இந்து அம்மாவைப் பார்த்து விழித்தாள். அதற்குள் அப்பா,

“ அவள் சமர்த்தில்லையோ அதான்..” என்று துணைக்கு வந்தார். அதற்கு அம்மா,

“ ஆமா இப்படிக் கொஞ்சிகிட்டிருங்க…மத்தியானத்துக்கு மீன்குழம்பு வைக்கலன்னு கோவிச்சிகிட்டு படுத்தவ.. அது தெரியுமா உங்களுக்கு…?

இந்து தலை குனிந்தாள். ஏதோ ரகசியத்தைக் கண்டுபிடித்தவர் போல அப்பா,

“ அப்படிச் சொல்லு… இப்ப தெரிஞ்சிபோச்சி…அவ்வளவு விலை குறைச்சி மீன்களை அவர்கள் விக்கிறதுக்கான காரணத்தை அப்பா இந்துவுக்குச் சொன்னேனில்லையா? தொழிற்சாலையிலிருந்து வருகிற விஷம் கலந்ததினால் செத்து மிதந்த மீன்கள் தான் அது. அதைச் சாப்பிடக்கூடாதுன்னு சொன்னேனில்லையா…அது தான் இந்துவின் கனவோட ஆணிவேர்.. அதாவது மீன்கோபம்…”

என்று சொல்லிவிட்டு அப்பா வாய்விட்டுச் சிரித்தார். சிரித்து முடித்தபிறகு அவளுடைய தலையைத் தடவிக்கொடுத்துக் கொண்டே சொன்னார்.

“ இந்து.. அப்பாவுக்கு அவ்வளவு பெரிசா ஒண்ணும் தெரியாது... நாலு விஷயங்களையும் சொல்வேன்..அறிந்தும் அறியாமலும் எவ்வளவோ விஷயங்கள் நம்முடைய மனசுக்குள் வந்து சேரும். நாம் தூங்கும்போது தூங்காமலிருக்கும் ஒரு பகுதிமனம் உண்டு. அது செய்கிற வேலை தான் கனவு… இந்து பெரியவளாகும்போது இன்னும் விபரமாய் படித்துத் தெரிந்து கொள்ளலாம்…..”

என்று சொன்ன அப்பா மீண்டும் தொடர்ந்து,

“ இன்னிக்கு மீன்குழம்பு கிடைக்கலங்கிற வருத்தம் உன் மனசில வந்திச்சில்ல அப்படி பல விஷயங்களும் தான். செத்து மிதந்த மீன்கள், அதற்கான காரணங்களைப் பற்றி அப்பா சொன்னது, நேற்று தாமதமாக வகுப்புக்குப் போனபோது வாத்தியார் சொன்ன தண்டனை..இதெல்லாம் சேர்ந்து உருவானது தான் அந்தக் கனவு…வனங்கள் அழிந்தால் மழை பொய்த்து எல்லா இடமும் சுடுகாடாகும்..என்று அப்பா சொன்னேனில்லையா…ஒரு வேளை உன்னோட கனவில வந்த சீனி மணலுக்கு அதுதான் காரணமாயிருக்கும்…”

இந்துவும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். அப்பா அவளுடைய முதுகில் மெல்லத் தட்டிக் கொடுத்துக் கொண்டே,

“ கனவு வருவதற்குக் காரணம் பாம்பும் கணபதியும், பூதமும் இல்லை…ஆனால் பூதத்தின் வேலை கொஞ்சம் இருக்கு... அதாவது கடந்த காலத்தில் நடந்தது..எதுவாக இருந்தாலும் அது பூதத்தோட காரியமில்லாம வேறு என்ன ? ஆனால் என்னோடச் செல்லக்குட்டி இந்து இப்படியொரு கனவு கண்டதுக்கு அவளுடைய கற்பனை சக்தி தான் காரணம் தெரியுமா? “

அம்மா சிரித்துக் கொண்டே,

“ இந்து இனிமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுற மாதிரி கனவு காண்பாள்..”

என்று சொன்னாள்.

நன்றி- மாயாபஜார், தமிழ் இந்து

inthu_2307008g

Sunday, 18 January 2015

இரண்டு நூல்கள் வெளியீடு

பச்சை நிழல் ( குழந்தைக்கதைகள் )

உதயசங்கர்

முன்காலத்தைப் போல குழந்தைகளுக்கு சொல்லக் கதைகள் இல்லை எனும் மேம்போக்குக் கருத்துகளை மறுக்கும் விதமாக குழந்தைகளுக்கான நல்ல பல கதைகளை இப்புத்தகம் தாங்கி வந்துள்ளது. இந்தக் கதைகளை வாசிக்கும் குழந்தைகளின் கற்பனை உலகத்தைத் தாங்களாகவே மென்மேலும் விரித்துச் செல்லும் சாத்தியங்களை இக்கதைகள் உருவாக்கித் தருகின்றன. வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமே குழந்தைகளை வளர்த்தெடுத்துவிடும் என்ற மூடத்தனத்திலிருந்து விடுவித்து குழந்தைகளின் நிஜ உலகத்தை குழந்தைகளுக்குத் தெளிவாக உணர்த்துவதோடு பெற்றோருக்கும் சமூகத்துக்கும் அக்கறையோடு தெளிவுறுத்தத் தலைப்படுகிறது இப்புத்தகம்.

வெளியீடு – என்.சி.பி.ஹெச்

விலை- ரூ.60/

 

லால் சலாம் காம்ரேட் இ.எம்.எஸ். ( இ.எம்.எஸ். நினைவுக்கட்டுரைகள் )

தொகுப்பும் மொழிபெயர்ப்பும் – உதயசங்கர்/உத்ரகுமாரன்

இ.எம்.எஸ். என்ற ஆளுமையைப் புரிந்து கொள்வதற்கு ஒரு மனித ஆயுட்காலம் முழுவதும் போதாது என்று கூடச் சொல்லலாம். அரசியலில் இ.எம்.எஸ்ஸினுடைய மிகப்பெரிய வெற்றி என்பது அவர் முதல் மந்திரியானதிலோ, கட்சியினுடைய பொதுச்செயலாளரானதிலோ இல்லை. தன்னுடைய ஆதரவாளர்களையும் எதிராளிகளையும் ஒரு நிமிடம் கூட உறங்க அநுமதிக்காமல் என்றென்றும் அவர்களைக் கேள்விகளிலும் விசாரணைகளிலும் ஈடுபடச்செய்து இந்திய அரசியலை பெரிதும் அறிவுப்பூர்வமாக மாற்றியது தான் என்று நான் நம்புகிறேன்.

மலையாள எழுத்தாளர்- சுகுமார் அழிக்கோடு

வெளியீடு- என்.சி.பி.ஹெச்.

விலை – ரூ60/