Showing posts with label சிங்கம். Show all posts
Showing posts with label சிங்கம். Show all posts

Friday, 28 February 2025

சிங்கமும் வரிக்குதிரையும்

 

சிங்கமும் வரிக்குதிரையும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



ஒரு நாள் காட்டில் ஒரு வயதான சிங்கம் அப்படியே நடந்து போய்க் கொண்டிருந்தது. வழியில் ஒரு வரிக்குதிரையும் சேர்ந்து நடந்தது. வரிக்குதிரை வயதான சிங்கத்திடம்,

“ எங்கே அப்படியே பொடி நடையாகப் புறப்பட்டாச்சு மாமா? “

என்று கேட்டது. அதற்கு சிங்கம்,

“ ஆற்றங்கரை போனால் ஒரு நாய்க்குட்டியும் ஒரு பூனைக்குட்டியும், குண்டான அழகுப்பாப்பாவும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள் அல்லது கள்ளன் போலீஸ் விளையாடுவார்கள். அவர்கள் மூணு பேரில் ஒருத்தரைப் பிடித்தால் போதும் இன்றைய இரவு சாப்பாடு கழிந்து விடும்.. பசியினால் கண் தெரியவில்லை..”

என்று சொன்னது.

“ பசியினால் இல்லை மாமா வயதானால் கண்ணு தெரியாது..” என்று வரிக்குதிரை சொன்னது. அது சிங்கத்துக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் எதுவும் பேசவில்லை. பேசாமல் வந்தது.

ஆற்றின் அந்தக்கரையில் சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து,

“ ஹோய் ஹோய் குழந்தைகளே! “ என்று கத்தியது. அவர்கள் மூன்றுபேரும் விளையாட்டை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

“ எனக்குப் பயங்கரப்பசி.. ஏதாவது உணவு இருந்தால் பொட்டலம் கட்டிக் கொண்டு வரலாமா? “

என்று சிங்கம் கேட்டது.

“ ஒவ்வொருத்தராக வந்தால் போதும்.. நான் காட்டுக்குள் போய்ச் சாப்பிட்டுக் கொள்வேன்.. பசியினால் கண்ணு தெரியவில்லை.. குழந்தைகளே..”

என்று மறுபடியும் சொன்னது. அப்போது வரிக்குதிரை விழுந்து விழுந்து சிரித்தபடி சொன்னது,

“ பசியினால் இல்லை கேட்டீர்களா? வயதாகி விட்டதில்லையா? “

என்று சொன்னது. சிங்கத்துக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது. ஒரே அடியில் வரிக்குதிரை கொன்றது. காட்டுக்குள் இழுத்துக் கொண்டு போய் விட்டது. அதைப் பார்த்துப் பயந்து நின்ற சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் கதைப்பாட்டியைத் தேடி ஒரே ஓட்டமாக ஓடினார்கள்.

நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

 

Thursday, 20 February 2025

குள்ளநரியின் தந்திரம்

 

குள்ளநரியின் தந்திரம்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்


ஒரு நாள் ஆலமரத்தடியில் சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது குள்ளநரி மூச்சுவாங்க வேகமாக ஓடி வந்து தலைகுப்புற விழுந்தது. மூன்று பேரும் விளையாட்டை நிறுத்தினார்கள். குள்ளநரியிடம் கேட்டார்கள்,

“ என்னாச்சு? ஏன் இப்படி மூச்சு வாங்க ஓடி வாரே..”

குள்ளநரி எழுந்து, உட்கார்ந்துகொண்டு சொன்னது.

“ என்ன சொல்றது நண்பர்களே! காலையில் நண்டைப்பிடிக்க காத்திருந்தபோது பின்னாலே ஒரு சிங்கம் பாய்ந்து பிடித்து விட்டது. என்னைச் சுத்தப்படுத்தி பொரித்துச் சாப்பிடுவதற்காக இழுத்துக் கொண்டு போனது.  அங்கே சிங்கத்தி பெரிய சைனாப்பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி மசாலா அரைத்து ரெடியாக்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தபோது நான் சிங்கத்தியிடம் சொன்னேன்.

“ என்னைக் கடவுள் தான் காட்டுக்கு ராஜாவாக்கினார்.. சும்மா கடவுளோடு விளையாட வேண்டாம்.. நம்பிக்கை இல்லை என்றால் என் கூட சும்மா ஒரு உலா வா.. அதைக் காட்டுறேன்..”

சிங்கம் எண்ணெயை கையில் எடுத்துக் கொண்டு குள்லநரியுடன் நடந்தது. எல்லாவிலங்குகளும் வழியிலிருந்து ஒதுங்கிப் போவதைக் கண்டது. பறவைகள் பயத்தில் அலறின. எல்லாவற்றையும் சிங்கம் பார்த்தது.

சிங்கத்தைப் பார்த்துத் தான் அவர்கள் பயந்தார்கள் என்பது முட்டாள் சிங்கத்துக்குப் புரியவில்லை.

கடைசியில் யானையும் அலறிக்கூப்பாடு போட்டு திரும்பி ஓடுவதைப் பார்த்தது சிங்கம். உடனே அப்படியே நிலத்தில் விழுந்து என்னிடம் மன்னிப்பு கேட்டது.

நான் என் உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு ஓட்டமாக ஓடி வந்து விட்டேன்.

நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

 

Tuesday, 11 February 2025

சின்னுவும் சிங்கமும்

 சின்னுவும் சிங்கமும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்




சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஆலமரத்தடியில் விளையாடுவார்கள். அந்த ஆலமரத்திற்குச் சற்று தூரத்தில் ஒரு ஆறு ஓடுகிறது.  ஆறு ஓடுகிற சத்தம் கேட்டுக்கொண்டே கதைப்பாட்டியின் மடியில் தலை வைத்து சின்னு படுத்திருப்பாள். அவளுடைய காலில் தலை வைத்து நாய்க்குட்டி படுத்திருக்கும். நாய்க்குட்டியில் வயிற்றில் தலை வைத்து பூனைக்குட்டி படுத்திருக்கும். ஆற்றின் பாடலைக் கேட்டுக் கொண்டே மூன்று பேரும் உறங்குவார்கள்.

அவர்கள் ஆற்றை ஆறம்மா என்று அழைப்பார்கள். ஆறம்மாவின் கரையில் போய் விளையாடலாமா? என்று கேட்டாள் சின்னு. நாய்க்குட்டி பௌ என்றது. பூனைக்குட்டி மியாவ் என்றது. ஆற்றின் அக்கரையில் ஒரு பெரிய காடு இருந்தது. பெரிய பெரிய மரங்கள் நிறைந்த இருண்ட காடு.

ஒரு நாள் ஆறம்மாவின் கரையில் மூன்று பேரும் பாட்டுப்பாடி ஆடிக் கொண்டிருந்தார்கள். சின்னு ஆ ஆ ஆ ஆ என்று பாடினாள். நாய்க்குட்டி பௌ பௌ பௌ என்றும் பூனைக்குட்டி மியாய் மியாவ் மியாவ் என்றும் பாடி ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“ ஹேய்.. நிறுத்து..” என்று ஒரு கர்ச்சனை ஆற்றின் அக்கரையில் இருந்து கேட்டது.  மூன்று பேரும் துள்ளிக்குதித்து பார்த்தால் மறுகரையில் ஒரு சிங்கம். காட்டுக்குள் இருந்து வந்த வயதான சிங்கம் ஆற்றில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. தண்ணீரைக் குடித்தபிறகு அந்த வயதான சிங்கம், சிரித்துக்கொண்டே,

“ யார் நீங்கள்? “ என்று கேட்டது. நாய்க்குட்டி வாலை கால்களுக்கு அடியில் வைத்துக் கொண்டு சின்னுவின் பின்னால் ஒளிந்து கொண்டது. பூனைக்குட்டி நாய்க்குட்டியின் பின்னால் ஒளிந்தது.

“ நாங்கள் இங்கே தண்ணீர் குடிக்க வந்தோம்..” என்று சின்னு சொன்னாள்.

“ நீங்கள் இந்தப்பக்கம் காட்டுக்குள் வாருங்கள்.. நானும் விளையாட வாரேன்..”

என்று சிங்கம் சொன்னது.

” வேண்டாம் வேண்டாம்.. உப்பும் மிளகும் சேர்த்து எங்களைத் தின்பதற்கா? “ என்றாள் சின்னு. வயதான சிங்கம் சிரித்தது. பிறகு கேட்டது,

“ யாரு சொன்னார்கள்..”

“” இந்த ஆற்றைக் கலக்கியது நீ இல்லாமல் இருக்கலாம்.. உன்னுடைய தாத்தா கலக்கினார் என்று சொல்லி ஆட்டினைக் கொன்று தின்ற கதை எங்களுக்குத் தெரியும்..அங்கிருந்தே பேசினால் போதும்..”

 என்று சொன்னது பூனைக்குட்டி.

“ இந்தக் கதை எல்லாம் உங்களுக்குச் சொன்னது யார்? “

“ கதைப் பாட்டி..” என்று மூன்று பேரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

சிங்கத்தின் முகம் சிவந்து விட்டது. மீசை முடி சிலிர்த்தது.

“ உங்களுடைய கதைப்பாட்டியினால் ஒரு விலங்கையும் வேட்டையாடிச் சாப்பிட முடியவில்லை..” என்று சொல்லிக்கொண்டே மெல்ல மெல்ல காட்டுக்குள் சென்றது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கசுமலா காக்கா பறந்து சென்று சிங்கத்தின் தலையில் ஒரு கொத்து கொத்தியது

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

Saturday, 4 January 2025

மரணத்தை விரட்டிய சிங்கம்

 

மரணத்தை விரட்டிய சிங்கம்

உதயசங்கர்



சிங்கத்துக்கு வயதாகி விட்டது. 

முன்பு போல ஓடவோ, பாய்ந்து வேட்டையாடவோ முடியவில்லை. கால்களில் சக்தியில்லை. கடைவாய்ப்பற்கள் விழுந்து விட்டன. பிடதியில் இருந்த முடியும் உதிரத் தொடங்கி விட்டது. கண்பார்வை வேறு மங்கி விட்டது. எழுந்து நடக்க முடியவில்லை. தள்ளாடித் தள்ளாடித்தான் நடந்தது. 

ஒரு பெரிய கலைமானை வேட்டையாடித் தின்ற காலம் முடிந்து விட்டது. இப்போது அருகில் செல்லும் காட்டெலி கூட நின்று வக்கணை வழித்துக் கொண்டு போகிறது. ஏதோ சிங்கத்தின் வாரிசுகள் வேட்டையாடித் தின்று விட்டு மீதமாய்க் கிடக்கிற வேட்டைக்கறியை அப்படியே முழுங்கி விடும். பல சமயங்களில் அது செரிப்பதுமில்லை.

“ சீக்கிரம் மரணம் வந்தால் நல்லது..என்று நினைத்தது கிழட்டுச்சிங்கம். அடுத்தநொடி மங்கலான கண்களுக்கு முன்னால் ஒரு கம்பீரமான சிங்கம் தெரிந்தது. கிழட்டுச்சிங்கம் இளமையாக இருந்த போது இருந்த மாதிரியே இருந்தது அந்தச் சிங்கம்.

“ கர்ர்ர் யாருப்பா.. நீ? “ என்று கேட்டது கிழட்டுச்சிங்கம்.

“ நானா.. நீங்கள் இப்போது அழைத்தீர்களே.. மரணம்.. அது நான் தான்..

அப்படியா என்ன விஷயம்? எதுக்கு வந்தே? “ என்று கிழட்டுச்சிங்கம் கேட்டது.

“ அட, நீங்க தனே இப்ப மரணம் வந்தா நல்லாருக்கும்னு சொன்னீங்க.. அதான் கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்..என்று சொன்னது மரணம்.

“ எனக்கென்ன நான் நல்லாதான் இருக்கேன்.. இப்ப பாரு.. நடக்கேன்.. ஓடுதேன்..போ போ இன்னும் பத்து வருஷம் கழிச்சி வா.. வந்துட்டான்..எப்படா யாருடா சொல்வாங்கன்னு காத்துக்கிட்டிருக்கான் என்று கிழட்டுச்சிங்கம் சொல்லிக் கொண்டே நடந்தது. 

லேசாக காலை நொண்டியபடியே ஓடியது.  குறுக்கே ஓடிய ஒரு குட்டி முயலை முன்காலால் அடித்துச் சாப்பிட்டது.

ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மரணம் மெல்ல நடந்தது. போகும்போது திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போன மரணத்தைப் பார்த்த கிழட்டுச்சிங்கம்,

“ இங்கே என்ன பார்வை? ம்ம் போ போ “ என்று கர்ச்சித்தது. 

 மரணம் பயந்து காட்டுக்குள் ஓடியே போய் விட்டது.

நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

 

Thursday, 2 January 2025

தங்கக்குயில்

 

தங்கக்குயில்

உதயசங்கர்



தினமும் காலையில் அந்தப் பாட்டு தான் சிங்கத்தை எழுப்பி விடும். இனிமையான பாட்டு. அப்படியே காற்றையே இசையாக மீட்டியது போன்ற குரல். காதுகளுக்குள் தேன் மாதிரி பாய்ந்து செல்லும் குரல். அந்தக் குரலைக் கேட்டுத் தான் அந்தக் தங்கக்காடே விழித்துக் கொள்ளும். எல்லா மிருகங்களும் பறவைகளும் அந்தக் குரலுக்காகக் காத்திருந்ததைப் போல அதைக் கேட்டபிறகு அவர்கள் குரல் கொடுப்பார்கள். ஆனால் யார் அந்தப் பாட்டைப் பாடுகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இதுவரை யாரும் பார்த்ததில்லை. குரலைக் கேட்பதோடு சரி.

சிங்கம் தன்னுடைய நண்பர்களிடம்,

“ யார் இவ்வளவு அழகாகப் பாடுகிறார்கள் என்று எனக்குத் தெரியவேண்டும்.. யாராவது சீக்கிரம் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்..என்று கேட்டுக் கொண்டது. உடனே காட்டில் எட்டு திசைகளிலும் செய்தி அறிவிக்கப்பட்டது.

இரண்டு நாட்களாயிற்று. மூன்று நாட்களாயிற்று. எந்தத் தகவலும் வரவில்லை. நான்காவது நாள் ஒரு காட்டு அணில் செய்தி கொண்டு வந்தது.

“ தலைவரே! அந்தப் பாடலை ஒரு அழகான பறவை பாடுகிறது.. அதைக் குயில் என்று சொல்கிறார்கள்.. “

உடனே சிங்கம்,

“ தங்க நிறத்தில் தானே இருக்கும் இப்படியான குரல் அப்படிப்பட்ட பறவைகளுக்குத் தான் இருக்கும்..என்று சொல்லி முடித்தது. அணிலுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வெறுமனே தலையாட்டியது.

“ உடனே அந்தத் தங்கக்குயிலை இங்கே வரச்சொல்.. இங்கே தினமும் என் குகையில் இருந்து பாடட்டும்..

என்று முழங்கியது. காட்டு அணில்,

“ அப்படியே தலைவரே..என்று சொல்லி விட்டு ஓடி விட்டது. அதன் பிறகு அந்தப் பாடல் கேட்கவில்லை. சிங்கத்துக்குப் பாடலைக் கேட்காமல் உடல்நிலை சரியில்லை. காட்டில் எதுவுமே சரியாக நடக்கவில்லை.

ஒரு   வாரமாயிற்று. பத்து நாட்களானது. தங்கக்குயில் வரவில்லை. உடனே சிங்கம்,

“ காட்டில் உள்ள பறவைகள் எல்லாம் என் முன்னால் பாட வேண்டும்.. அந்தத் தங்கக்குயிலை நான் கண்டுபிடிக்க வேண்டும்.. “ என்று கர்ச்சனை செய்தது. உடனே எல்லாப்பறவைகளுக்கும் செய்தி போய் விட்டது.

மறுநாள் காலை எல்லாப்பறவைகளும் கூடின. ஆனால் முதலில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம், சாம்பல், ஆரஞ்சு, பிங்க், அரக்கு, என்று பளிச்சென்ற நிறமுடைய பறவைகளை மட்டும் வரிசையாக அனுப்பியது நரி.

குயிலைக் கடைசியாக நிற்க வைத்திருந்த்து நரி. பறவைகள் ஒவ்வொன்றாய் குகைக்குள்ளே போனது. போன பறவைகள் எல்லாம் தலையைக் குனிந்தபடியே வெளியே வந்தன. நரி,

“ எல்லாரும் போங்க..தலைவர் ரொம்ப டயர்டாயிட்டார்.. “ என்று விரட்டி விட்டது. குயிலும் திரும்பிப் பறப்பதற்குத் தயாரானது. அப்போது குகை வாசலுக்கு வந்த சிங்கம்,

“ ஏய் நில்லு.. “ என்று அழைத்தது. குயில் பயத்துடன் நின்றது. நரி குயிலின் கருப்பு நிறத்தைப் பார்த்து, தலைவரோ தங்கக்குயிலைத் தேடுகிறார்.. இதுவோ கன்னங்கரேரென்று இருக்கிறது என்று ஏளனமாகப் பார்த்தது.

“ எங்கே நீ பாடு..என்று சிங்கம் சொன்னது. குயில் தயங்கியது. பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நீண்ட குரலெடுத்தது.

அவ்வளவு தான்.

சிங்கம் வாய் பிளந்தவாறு நின்று விட்டது. நரி வாலை ஆட்டக்கூட மறந்து விட்டது. பறந்து போய்க் கொண்டிருந்த பறவைகள் அப்படியே வானில் வட்டமிட்டுக் கொண்டே இருந்தன.

. சிங்கம் கேட்டதற்காகப் பாடவில்லை

குயில் பாடியது. அதே குரல். மனதை மயக்கும் இனிய குரல். தன்னுடைய கருப்பு நிறத்தை உருக்கிப் பாடியது. தனக்காகப் பாடியது. தன்னுடைய இணைக்காகப் பாடியது. தன்னை ஒதுக்கிய நரிக்காகப் பாடியது. தன்னுடைய சகோதரப்பறவைகளுக்காகப் பாடியது. இயற்கைக்காகப் பாடியது. எல்லாருக்காகவும் பாடியது. வாழ்வதற்குக் கிடைத்த வாய்ப்புக்காகப் பாடியது.

சிங்கத்துக்கு இப்போது எல்லாம் புரிந்தது.


நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

Saturday, 21 July 2012

சிங்கமும் நாயும்

lionanddog லியோ தால்ஸ்தோய்

தமிழில் - உதயசங்கர்

லண்டனில் காட்டு மிருகங்களைப் பார்ப்பதற்கு மிருகக் காட்சி சாலை வைத்திருந்தார்கள். அவற்றைப் பார்க்க வேண்டுமானால் மக்கள் பணம் செலுத்த வேண்டும் அல்லது நாய்களையோ பூனைகளையோ கொண்டு வரவேண்டும். காட்டுமிருகங்களுக்கு அவை உணவாக வீசியெறியப் படும்.

காட்டுமிருகங்களைப் பார்க்கவேண்டும் என்பதற்காக ஒரு ஆள் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு குட்டி நாயைப் பிடித்துக் கொண்டு வந்தான்.நிர்வாகத்தினர் அவனை உள்ளே அனுமதித்து விட்டனர். அதே நேரம் அந்த குட்டிநாயை சிங்கத்தின் கூண்டுக்குள் வீசியெறிந்தனர்.

அந்தக் குட்டி நாய் வாலை மடக்கித் தன் கால்களுக்கு நடுவே வைத்துக் கொண்டு சிங்கக்கூண்டின் மூலையில் போய் ஒளிந்து கொண்டது.ஆனால் சிங்கம் வந்து மோந்து பார்த்தது.

பிறகு, அந்தக் குட்டி நாய் கால்களை உயரே தூக்கியபடி மல்லாக்கப் படுத்துக் கொண்டு வாலை ஆட்டியது.

சிங்கம் அதைத் தன் காலால் புரட்டி விட்டது.குட்டிநாய் குதித்து எழுந்து தன் பின்கால்களில் உட்கார்ந்து கொண்டது.சிங்கம் அந்தச் சிறிய மிருகத்தைப் பார்த்தது.அதன் தலையை அங்கிட்டும் இங்கிட்டும் திருப்பிப் பார்த்தது.அதற்கு மேல் அதைத் தொடவில்லை.

சிங்கத்தின் எஜமானன் அதற்கு கொஞ்சம் இறைச்சி போட்டபோது சிங்கம் அதில் ஒரு துண்டைக் கிழித்து நாய்க்குட்டிக்காக வைத்தது.

மாலையில் சிங்கம் தூங்கும் போது குட்டிநாயும் அதன் அருகில் சிங்கத்தின் கால் மீது தலை வைத்துப் படுத்துக் கொள்ளும்.

அதிலிருந்து நாயும் சிங்கமும் ஒரே கூண்டில் சேர்ந்து வாழத் தொடங்கின.சிங்கம் குட்டிநாயை ஒரு போதும் துன்புறுத்தவில்லை. அதன் உணவைப் பகிர்ந்துகொண்டது. அதனுடன் சேர்ந்து உறங்கியது.ஏன் விளையாடக் கூடச் செய்தது.

ஒரு நாள் மிருகக் காட்சி சாலைக்கு வந்த ஒரு பணக்காரர் அந்தக் குட்டிநாயை அடையாளம் கண்டு கொண்டார்.அவர் மிருகக்காட்சி சாலை முதலாளியிடம் அந்தநாய் தன்னுடையது என்றும் அதைத் திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டார்.முதலாளியும் கொடுத்துவிட முடிவு செய்தார்.ஆனால் அந்த குட்டிநாயைக் கூப்பிட்ட உடனேயே பிடறி மயிர் சிலிர்க்க சிங்கம் உறுமியது.

குட்டிநாயும் சிங்கமும் சேர்ந்து ஒரு வருடம் முழுவதும் ஒன்றாக வாழ்ந்து வந்தன. ஒரு வருடத்திற்குப் பிறகு குட்டிநாய் நோய்வாய்ப் பட்டு இறந்து விட்டது. சிங்கம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டது. இறந்து போன நாய்க்குட்டியை மோந்து பார்த்துக் கொண்டும் நக்கிக் கொடுத்துக் கொண்டும் காலை அதன் மீது போட்டபடியே இருந்தது சிங்கம்.

நாய்க்குட்டி இறந்து விட்டது தெரிந்ததும் திடீரென குதித்து எழுந்தது. அதன் பிடறிமயிர் சிலிர்த்தது.வாலால் தன்னை அடித்துக் கொண்டது.கூண்டின்சுவர்களில் மோதியது.கூண்டுக் கம்பிகளையும் தரையையும் கடித்துப் பிறாண்டியது.

கூண்டிற்குள் கர்ச்சித்துக் கொண்டே இறந்து போன குட்டிநாயின் பக்கத்திலேயே படுத்துக் கிடந்தது.முதலாளி இறந்த நாயை அப்புறப் படுத்த விரும்பினார்.ஆனால் சிங்கம் யாரையும் அருகில் வர விடவில்லை.

இன்னொரு நாய்க்குட்டியை விட்டால் சிங்கத்தின் துயரம் மறைந்து விடும் என்று முதலாளி நினைத்தார்.இரண்டாவது நாய்க்குட்டியைக் கூண்டுக்குள் விட்டார்.ஆனால் சிங்கம் உடனே அதை துண்டுதுண்டாகக் கிழித்தெறிந்து விட்டது.பிறகு இறந்துபோன அந்த குட்டிநாயைச் சுற்றி கால்களைப் போட்டுக் கொண்டு எந்த அசைவுமில்லாமல் ஐந்து நாட்களுக்கு அப்படியே கிடந்தது.

ஆறாவது நாள் சிங்கமும் இறந்துவிட்டது.