Showing posts with label குயில். Show all posts
Showing posts with label குயில். Show all posts

Tuesday, 18 February 2025

குயிலிடம் சொன்ன கதை

 

குயிலிடம் சொன்ன கதை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்




      நல்ல கோடைகாலம். மாமரத்தில் இலைகள் துளிர்த்து நிறைந்திருந்தன. மாமரத்தின் அடியில் கதைப்பாட்டியும், சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் உட்கார்ந்திருந்தார்கள். இளம் மாவிலைகளின் சிவப்பு நிறத்தில் பார்வதி இருந்தாள் என்று கதைப்பாட்டி சொன்னாள். அப்போது மாமரத்தின் கிளையில் ஒரு குயில் வந்து அமர்ந்தது. அது பாடத்தொடங்கியது.

என்ன ஒரு இனிமையான குரல்! எப்படியான இசை!

யாரும் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். குயிலின் பாட்டுக்குப் பதிலாக சின்னுவும் பாடினாள். குயில் கதைப்பாட்டியின் முன்னால் வந்து உட்கார்ந்தது.

“ பாடு குயிலக்கா! “ என்று நாய்க்குட்டி கெஞ்சியது.

“ நான் பாடுவதால் என்ன பயன்? “ என்று குயில் வருத்தத்துடன் சொன்னது.

“ ஏன்? என்னாச்சு? “ என்று கதைப்பாட்டி கேட்டார்.

“ எல்லாருக்கும் என்னுடைய பாட்டு மட்டும் தான் பிடிச்சிருக்கு.. என்னை யாருக்கும் பிடிக்கவில்லை.. என்னுடைய நிறத்தைப் பாருங்கள் கதைப்பாட்டி.. இயற்கை என்னை கருப்பு நிறத்தில் முக்கியெடுத்து விட்டது என்று தோன்றுகிறது.. சின்னுவைப் பார்த்தீர்களா? என்ன அழகான நிறம்! பழுத்த மாம்பழம்போல, குட்டி முயலைப் பாருங்கள்..என்ன அழகு..” என்று சொன்னது குயில்.

பூனைக்குட்டி இரண்டு கால்களில் எழுந்து நின்று,

“ என்னுடைய கண்கள் கூட பளிங்குக்கல் மாதிரி இருக்கும் பாரு..”

என்று சொன்னது.

குயில் குமுறி அழுதது.

அப்போது கதைப்பாட்டி சொன்னாள்,

“ குயிலே.. இயற்கை உனக்குக் கொடுத்த நிறத்தைப் பற்றிக் கவலைப்படாதே.. உனக்கு நல்ல இசை, மயிலுக்கு அழகு, யானைக்கு அறிவு, கதைப்பாட்டிக்குக் கதை, இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு கொடுத்திருக்கிறது.. அதை நினைத்து மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்..”

நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

Thursday, 2 January 2025

தங்கக்குயில்

 

தங்கக்குயில்

உதயசங்கர்



தினமும் காலையில் அந்தப் பாட்டு தான் சிங்கத்தை எழுப்பி விடும். இனிமையான பாட்டு. அப்படியே காற்றையே இசையாக மீட்டியது போன்ற குரல். காதுகளுக்குள் தேன் மாதிரி பாய்ந்து செல்லும் குரல். அந்தக் குரலைக் கேட்டுத் தான் அந்தக் தங்கக்காடே விழித்துக் கொள்ளும். எல்லா மிருகங்களும் பறவைகளும் அந்தக் குரலுக்காகக் காத்திருந்ததைப் போல அதைக் கேட்டபிறகு அவர்கள் குரல் கொடுப்பார்கள். ஆனால் யார் அந்தப் பாட்டைப் பாடுகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இதுவரை யாரும் பார்த்ததில்லை. குரலைக் கேட்பதோடு சரி.

சிங்கம் தன்னுடைய நண்பர்களிடம்,

“ யார் இவ்வளவு அழகாகப் பாடுகிறார்கள் என்று எனக்குத் தெரியவேண்டும்.. யாராவது சீக்கிரம் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்..” என்று கேட்டுக் கொண்டது. உடனே காட்டில் எட்டு திசைகளிலும் செய்தி அறிவிக்கப்பட்டது.

இரண்டு நாட்களாயிற்று. மூன்று நாட்களாயிற்று. எந்தத் தகவலும் வரவில்லை. நான்காவது நாள் ஒரு காட்டு அணில் செய்தி கொண்டு வந்தது.

“ தலைவரே! அந்தப் பாடலை ஒரு அழகான பறவை பாடுகிறது.. அதைக் குயில் என்று சொல்கிறார்கள்.. “

உடனே சிங்கம்,

“ தங்க நிறத்தில் தானே இருக்கும் இப்படியான குரல் அப்படிப்பட்ட பறவைகளுக்குத் தான் இருக்கும்..” என்று சொல்லி முடித்தது. அணிலுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வெறுமனே தலையாட்டியது.

“ உடனே அந்தத் தங்கக்குயிலை இங்கே வரச்சொல்.. இங்கே தினமும் என் குகையில் இருந்து பாடட்டும்..”

என்று முழங்கியது. காட்டு அணில்,

“ அப்படியே தலைவரே..” என்று சொல்லி விட்டு ஓடி விட்டது. அதன் பிறகு அந்தப் பாடல் கேட்கவில்லை. சிங்கத்துக்குப் பாடலைக் கேட்காமல் உடல்நிலை சரியில்லை. காட்டில் எதுவுமே சரியாக நடக்கவில்லை.

ஒரு   வாரமாயிற்று. பத்து நாட்களானது. தங்கக்குயில் வரவில்லை. உடனே சிங்கம்,

“ காட்டில் உள்ள பறவைகள் எல்லாம் என் முன்னால் பாட வேண்டும்.. அந்தத் தங்கக்குயிலை நான் கண்டுபிடிக்க வேண்டும்.. “ என்று கர்ச்சனை செய்தது. உடனே எல்லாப்பறவைகளுக்கும் செய்தி போய் விட்டது.

மறுநாள் காலை எல்லாப்பறவைகளும் கூடின. ஆனால் முதலில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம், சாம்பல், ஆரஞ்சு, பிங்க், அரக்கு, என்று பளிச்சென்ற நிறமுடைய பறவைகளை மட்டும் வரிசையாக அனுப்பியது நரி.

குயிலைக் கடைசியாக நிற்க வைத்திருந்த்து நரி. பறவைகள் ஒவ்வொன்றாய் குகைக்குள்ளே போனது. போன பறவைகள் எல்லாம் தலையைக் குனிந்தபடியே வெளியே வந்தன. நரி,

“ எல்லாரும் போங்க..தலைவர் ரொம்ப டயர்டாயிட்டார்.. “ என்று விரட்டி விட்டது. குயிலும் திரும்பிப் பறப்பதற்குத் தயாரானது. அப்போது குகை வாசலுக்கு வந்த சிங்கம்,

“ ஏய் நில்லு.. “ என்று அழைத்தது. குயில் பயத்துடன் நின்றது. நரி குயிலின் கருப்பு நிறத்தைப் பார்த்து, தலைவரோ தங்கக்குயிலைத் தேடுகிறார்.. இதுவோ கன்னங்கரேரென்று இருக்கிறது என்று ஏளனமாகப் பார்த்தது.

“ எங்கே நீ பாடு..” என்று சிங்கம் சொன்னது. குயில் தயங்கியது. பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நீண்ட குரலெடுத்தது.

அவ்வளவு தான்.

சிங்கம் வாய் பிளந்தவாறு நின்று விட்டது. நரி வாலை ஆட்டக்கூட மறந்து விட்டது. பறந்து போய்க் கொண்டிருந்த பறவைகள் அப்படியே வானில் வட்டமிட்டுக் கொண்டே இருந்தன.

. சிங்கம் கேட்டதற்காகப் பாடவில்லை

குயில் பாடியது. அதே குரல். மனதை மயக்கும் இனிய குரல். தன்னுடைய கருப்பு நிறத்தை உருக்கிப் பாடியது. தனக்காகப் பாடியது. தன்னுடைய இணைக்காகப் பாடியது. தன்னை ஒதுக்கிய நரிக்காகப் பாடியது. தன்னுடைய சகோதரப்பறவைகளுக்காகப் பாடியது. இயற்கைக்காகப் பாடியது. எல்லாருக்காகவும் பாடியது. வாழ்வதற்குக் கிடைத்த வாய்ப்புக்காகப் பாடியது.

சிங்கத்துக்கு இப்போது எல்லாம் புரிந்தது.


நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

Monday, 24 December 2012

குயிலக்கா

உதயசங்கர்indian_cuckoo_0008

குயிலக்கா குயிலக்கா

எங்கே போனீங்க?

உங்க குரலைக்கேட்க

நானுந்தான் ஏங்கிப் போனேங்க!

குட்டிப்பாப்பா குட்டிப்பாப்பா

கெட்டிக்காரக் குட்டிப்பாப்பா

தங்கி வாழ மரமில்லாமல்

தவித்துப்போனேனே

தங்கமான உன் நினைவு வந்து

பார்க்க வந்தேனே!

குயிலக்கா, குயிலக்கா

குக்கூக்கூ குயிலக்கா

குட்டியான செடியொண்ணு

நான் வளக்கேனே

அது மரமான பின்னாலே

உனக்குத் தருவேனே!

குட்டிப்பாப்பா குட்டிப்பாப்பா

பொன்னான குட்டிப்பாப்பா

நல்ல வார்த்தை நீயும் சொன்னாய்

நம்பிக்கை மலர வைத்தாய்

குக்கூக்கூ குயில்கள் எல்லாம்

உன் மரத்திலே நாளை

ஒன்று சேர்ந்து கூடி வாழுமே!