குளத்தில் இருந்த நட்சத்திரங்கள்
மலையாளத்தில் - அப்துல்லா பேரம்பரா
தமிழில் - உதயசங்கர்
பழைய, பழைய காலத்தில் ஒரு நாட்டில்
மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். அதில் மூத்தவனின் பெயர் தன்யன், இரண்டாமாவனின்
பெயர் சோசு, மூன்றாது மகனின் பெயர் பென்கன். மூத்தவன் தன்யன் நல்லவன். கடின உழைப்பாளி.
மற்ற இரண்டு பேரும் படுசோம்பேறிகள். அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் எப்பொழுதும் உறங்கிக்
கொண்டும், விளையாடிக்கொண்டும் பொழுதைப்போக்கினார்கள்.
ஒரு நாள் தன்யன் தன்னுடைய சகோதரர்களிடம்,
“ பிரியமுள்ள சகோதரர்களே நாம்
இப்படி கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பது சரியில்லை. நம்முடைய குடும்பத்தையும் காப்பாற்ற
வேண்டும். அதனால் நான் ஒரு பயணம் போகப்போகிறேன். நல்வாய்ப்பு கிடைத்தால் உழைத்து நான்
சம்பாதித்துக் கொண்டு வருவேன்..””
என்று சொன்னான். ஆனால் அது மற்ற
இரண்டு சகோதரர்களுக்கும் பிடிக்கவில்லை. அவர்கள்,
“ ஏன் அண்ணன் மட்டும் செல்வந்தனாக
வேண்டும்? நாமும் பணம் சம்பாதிக்க வேண்டாமா? அதனால் நாமும் பயணம் போகலாம்..”
என்று யோசித்தார்கள். அவர்கள்
அதை அண்ணனிடம் சொன்னார்கள். தன்யன் பதில் எதுவும் சொல்லவில்லை.
அப்படி மூன்றுபேரும் பயணம் போனார்கள்.
சோசு ஒரு கிராமத்தில் கிலோமீட்டர் கிலோமீட்டராக நடந்து கொண்டிருந்தான். அப்படி நடந்து
நடந்து ஒரு வயல்காட்டை அடைந்தான். அப்போது சோசுவுக்கு பசியும் தாகமும் ஏற்பட்டது. அவன்
அருகில் தெரிந்த ஒரு குடிசையின் வாசல்கதவைத் தட்டினான். உள்ளேயிருந்து ஒரு வயதானகுரல்
,
“ வெளியில யாரு? “ என்று கேட்டது.
“ நான் ஒரு பிரயாணி.நான் இன்னிக்கு
ராத்திரி இங்கே தங்கிக்கலாமா?.” என்று சோசு கேட்டான்.
“ இருந்துட்டுப் போகலாம்.. ஆனால்
என்னுடைய குடிசையின்.பின்புறம் ஒரு குளம் இருக்கு.. அந்தக்குளத்திலுள்ள நட்சத்திரங்களை
எல்லாம் சுத்தப்படுத்தித் தரணும்..முடியுமா?..”
அதெப்படி முடியும்? சோசு யோசித்தான்.
குளத்தில் தெரிவது வானத்தில் தெரிகிற நடத்திரங்களின் பிம்பம் தானே. அவற்றை எப்படி குளத்திலிருந்து
சுத்தப்படுத்த முடியும்? தோல்வியை ஒப்புக்கொண்டு அங்கேயிருந்து திரும்பி ஊருக்கு வந்து
விட்டான். தன்னுடைய சகோதரர்களிடம் வருத்தத்துடன்,
“ எனக்கு எங்கேயும் நல்வாய்ப்பு
கிடைக்கவில்லை. அதனால நான் திரும்பி வந்துட்டேன்..”
என்று சொன்னான். அப்போது தன்யனும்
பென்கனும் வீட்டிலிருந்தார்கள். அடுத்தமுறை பென்கனுடையதாக இருந்தது. பல இடங்களுக்கும்
அலைந்து திரிந்து கடைசியில் அவன் அந்தப் பழைய குடிசைக்குப் போனான். சோசு கேட்டதைப்போல
அவனும் அதே கேள்வியைக் கேட்டான். சோசுவிடம் சொன்ன காரியத்தையே கிழவி பென்கனிடமும் சொன்னாள்.
சோசுவைப்போல எதுவும் செய்யாமல் பென்கனும் வீட்டிற்குத் திரும்பினான்.
“ எனக்கு எந்த இடத்திலும் நல்வாய்ப்பு
கிடைக்கவில்லை..”
அவன் வேதனையோடு சொன்னான்.
கடைசியில் நல்வாய்ப்பைத் தேடி
தன்யன் புறப்பட்டான். பல மைல் தூரம் கடந்து அவனும் அந்தக்கிழவியின் குடிசைக்குப் போய்ச்சேர்ந்தான்.
அப்போதும் கிழவி அந்தப் பழைய வேலையைச் செய்யச் சொன்னாள். ஒரு நிமிடம் யோசித்த தன்யன்
பின்பு கிழவியிடம் ஒரு வாளியைக் கேட்டு வாங்கினான். வாளி கையில் கிடைத்த உடனே தன்யன்
குளத்தில் இறங்கி தண்ணீரை வெளியில் எடுத்து ஊற்றினான். குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதையும்
வெளியில் எடுத்து ஊற்ற அவன் கடுமையாக உழைத்தான். ஆனாலும் வேலை முழுவதும் முடிந்தபிறகே
அவன் ஓய்வெடுத்தான். இரவு முழுவதும் அவன் தன்னுடைய வேலையில் மூழ்கியிருந்தான்.
பொழுது விடிவதற்கு முன்பு கிழவி
குடிசையிலிருந்து வெளியில் வந்தாள். தன்யன் மக்ழ்ச்சியோடு குளத்தைக் காட்டினான். ஒரு
நட்சத்திரம் கூட குளத்தில் இல்லை.
“ நான் குளத்தில் இருந்த நட்சத்திரங்களை
எல்லாம் வெளியே எடுத்து விட்டேன். இனி ஒரு ராத்திரியிலும் ஒரு நட்சத்திரம் கூட குளத்தில்
இருக்காது. “
கிழவிக்கு மகிழ்ச்சி. அவள் முன்னால்
வந்து தன்யனைக் கட்டிப்பிடித்தாள். பின்பு,
“ உனக்கு முன்னால பலரும் இங்கே
வந்திருக்கிறார்கள். இந்தப்போட்டியில் கலந்து கொள்ள முயற்சி கூடச் செய்யாமல் திரும்பிப்
போயிருக்கிறார்கள். உழைப்பதற்கான உறுதியோ, சிந்திப்பதற்கான புத்தியோ, இல்லாத கழுதைகள்.
நீ தான் உத்தமன்..”
கொஞ்சநேரம் கிழவி மௌனமாக இருந்தாள்.
அதன்பிறகு தன்யனை உற்று நோக்கினாள்.
“ இனிமேல் இந்த நிலம் முழுவதும்
உனக்குத் தான். இங்கே நீ உன்விருப்பம் போல் விவசாயம் செய்து பணம் சம்பாதிக்கலாம்..”
என்று சொன்னாள்.
அந்த மகிழ்ச்சியான செய்தியைச்
சகோதரர்களிடம் சொல்வதற்காக தன்யன் வீட்டிற்கு ஓடினான்.
“ நான் என்னுடைய நல்வாய்ப்பைக்
கண்டுபிடித்து விட்டேன்..”
“ எங்கே? “
அவர்கள் திகைத்து நின்றனர். தன்யன்
அவனுடைய கையை உயர்த்தி அவர்களைச் சுட்டிக் காட்டினான். எதுவும் புரியாமல் அவர்கள் முழித்தார்கள்.
சகோதரர்களிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். கதையைக் கேட்ட அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
அன்று முதல் சோம்பலை மறந்து உழைத்துப்
பிழைக்கவேண்டும் என்று அவர்கள் முடிவு எடுத்தார்கள்.
நன்றி - மாயாபஜார்