Thursday 28 May 2020

கொரோனாவும் ஹோமியோபதியும்


கொரோனாவும் ஹோமியோபதியும்

உதயசங்கர்
இன்று ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும், ஒட்டுமொத்த சமூகவாழ்விலும் மிகப்பெரும் பாதிப்புகளை உருவாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலி வாங்கிக்கொண்டிருக்கிற கொரோனா உலகத்தையே கையறு நிலையில் தள்ளியிருக்கிறது. ஆங்கில மருத்துவமுறையில் கொரோனா கோவிட்19 நோய்க்கான மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் அது ஒன்று தான் உண்மையான மருத்துவமுறை என்று நம்பியிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் பீதியில் உறைந்து போயிருக்கிறார்கள். இதற்கு முன்பு வந்த சார்ஸ் பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், டெங்குக்காய்ச்சல், சிக்கன்குனியா, போன்ற நோய்களுக்கும் சரியான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. இத்தகைய மருத்துவச் சூழலில் இந்த மாதிரியான கொள்ளை நோய்கள் உருவாவதற்கு இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை மனிதர்கள் வாழத்தவறியதும் இயற்கையைச் சூறையாடி பல்லுயிர்ப்பெருக்கத்தை அழித்ததும் மிக முக்கியமான காரணங்கள். மாற்றுமருத்துவமுறைகள் என்று சொல்லப்படுகிற மரபுவழி அல்லது பாரம்பரிய மருத்துவமுறைகள் எப்படி கொள்ளை நோய்களை எதிர்கொள்கின்றன என்று பார்க்கலாம்.
மாற்று மருத்துவமுறைகளான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோ, யுனானி, மருத்துவமுறைகளில் புதிது புதிதாக தோன்றிக்கொண்டேயிருக்கும் நோய்களுக்கு புதிதுபுதிதாக மருந்துகளைக் கண்டுபிடிப்பதில்லை. ஏனெனில் இந்த மருத்துவமுறைகள் நோய்களைப் பற்றியோ, பரிசோதனைச்சாலை முடிவுகளைப் பற்றியோ மட்டுமே கவலைப்படுவதில்லை. நோய் பாதித்த மனிதனைப் பற்றியே கவனம் கொள்கின்றன. எல்லாமருத்துவமுறைகளிலும் நோயைப் பற்றிய தத்துவப்பார்வை உணடு. அந்தத் தத்துவப்பார்வையே அந்த மருத்துவமுறையின் அடிப்படையைத் தீர்மானிக்கிறது.
மாற்றுமருத்துவமுறைகளில் நோய் பற்றிய தத்துவம் மனிதனை முதன்மைப்படுத்துகிறது. நோய் என்றால் என்ன? ஆரோக்கியமான மனிதனின் உடலியல், உளவியல் நடவடிக்கைகளில் ஏற்படும் அசாதாரணமான மாற்றம் அல்லது மாறுமை. இந்த மாற்றத்திற்கு புறவயமான காரணிகளாக, விபத்து, விஷம், பாக்டீரியா, வைரஸ், பாதிப்புகளாக இருக்கலாம். அகவயமான காரணங்களாக அதீத உணர்வுநிலைகள், அதிர்ச்சி, துக்கம், துன்பம், அவமானம், கோபம், மகிழ்ச்சி, அழுகை, பிரிவுகளாக இருக்கலாம்.
 புறவயமான காரணிகளில் விபத்து, விஷம், போன்றவை நோய்களல்ல. எதிர்பாராமல் உடலுக்கு ஏற்படும் தீங்குகள். ஆனால் மற்ற காரணிகளான ,கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா, வைரஸ், போன்ற நுண்ணுயிரிகள் உடலியங்கியலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் தான் நோய்களாக மாறுகின்றன. உடலியங்கியல் நோயின் மூலம் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சொல்கிறது. அதற்கான மொழியே நோய்க்குறிகள். ஆயிரக்கணக்கான நோய்க்குறிகளை உடலியங்கியல் உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது. வலி, வீக்கம், காய்ச்சல், இருமல் தும்மல், பசியின்மை, தூக்கமின்மை, இந்த நோய்க்குறிகளின் அல்லது நோய்மொழியின் மூலம் மனித உடலுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களை மருத்துவர்கள் அறிகிறார்கள்.
பாக்டீரியா, வைரஸை விட மனிதன் உயிரியல்ரீதியில் மிக முன்னேறிய.உயிரினம். மனித உடலின் பாதுகாப்பு அமைப்பு நவீனமானது. தன்னைப் புதுப்பித்துக்கொண்டேயிருப்பது. உடலில் நுழையும் தீய நுண்ணுயிரியைப் பற்றிய அத்தனை விவரங்களையும் உடனே தெரிந்து கொண்டு அதற்கு எதிராக தன்னுடைய பாதுகாப்பு அமைப்பையும் வியூகங்களையும் அமைத்துக் கொள்கிறது. அதையும் தாண்டி மனிதன் நோயுறுகிறானென்றால் அதற்குக் காரணம் பாதுகாப்பு அமைப்பின் பலவீனம் அல்லது நோயெதிர்ப்பு சக்தியின் பலவீனம்.
மாற்று மருத்துவமுறைகள் இந்தப்புள்ளியில் தான் தங்களுடைய கவனத்தைக் குவிக்கின்றன. புதிது புதிதாக எத்தனை வைரஸ்கள், பாக்டீரியாக்கள் வந்தாலும் மாற்றுமருத்துவமுறைகள் அவற்றின் தோற்றம், வளர்ச்சி, வடிவம், குணம், இவற்றைப் பற்றிக் கவலைப்படுவதை விட மனிதனின் பாதுகாப்பு அரண்களைப் பலப்படுத்துகின்றன. அதனால் உலகம் முழுவதும் எத்தகைய கொள்ளை நோய்கள் வந்தபோதும் மாற்று மருத்துவமுறைகள் தங்களுடைய அடிப்படையான நோயுற்ற மனிதனுக்கு மருந்து என்ற கொள்கையிலிருந்து விலகுவதில்லை.
பொதுவாகவே கொள்ளைநோய்க்காலத்தில் நுண்ணியிரிகள் மிகுந்த பலத்துடன் இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு நோயாளரிடமிருந்து மற்றொரு நோயாளரைத் தொற்றும்போது அவற்றின் வீரியம் அதிகரித்துக் கொண்டே போகும். அதனால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் கொள்ளைநோய்களின் நோய்க்குறிகள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பதால் மாற்றுமருத்துவத்தில் அந்த நோய்க்குறிகளின் தன்மைக்கேற்ப மருந்துகளை தடுப்பு மருந்தாகவும், நோய் பாதித்தவர்களுக்கு துயர் தீர்க்கும் மருந்தாகவும் கொடுக்கின்றனர்.
ஹோமியோபதி ஒத்தது ஒத்ததை நலமாக்கும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஹோமியோ மருந்துகள் மனிதர்களிடம் நிரூபணம் செய்யப்பட்டவை என்பதால் எந்தப் பக்கவிளைவுகளும் இல்லாதவை. நோய்க்குறியியலையே நோயறியும் முறையாகக் கொண்டதால் சோதனைச்சாலை முடிவுகளை மட்டுமே நம்பி மருந்துகளை பரிந்துரைப்பதில்லை. 1796 – ஆம் ஆண்டு ஹோமியாபதியைக் கண்டுபிடித்த சாமுவேல் ஹனிமன் ( 1755 – 1843 ) காலத்திலேயே அதாவது 1800-களில் ஸ்கார்லெட் காய்ச்சல் என்ற கொள்ளைநோய்க்கு மருந்து கொடுத்து குணமாக்கியுள்ளார். பின்னர் தொடர்ந்து 19-ஆம் நூற்றாண்டில் உலகமுழுவதுமுள்ள மக்களைத் தாக்கிய கொடிய கொள்ளை நோய்களான, காலரா, ப்ளேக், மஞ்சள் காய்ச்சல், டிப்தீரியா, இன்புளூயன்சா நோய்களுக்கு தடுப்பு மருந்துகளும், நோய் பாதித்தவர்களுக்கு மருந்துகளும் கொடுத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ஹோமியோபதி மருந்துகளை சாப்பிட்ட நோயாளர்கள் மிகவிரைவாக குணமாகியிருக்கிறார்கள். உயிரிழப்புகள் மிக மிகக்குறைவு.
1813 – ஆண்டில் வந்த டைபஸ் காய்ச்சலில் ஹோமியோபதி மருந்து சாப்பிட்ட 180 பேரில் இரண்டுபேர் மட்டுமே மரணமடைந்திருக்கிறார்கள்.
1830, மற்றும் 1854 ஆம் ஆண்டுகளில் வந்த காலரா நோயில் ஹோமியோமருந்துகளைச் சாப்பிட்டு முறையே 91% -மும், 93%-மும் குணமடைந்திருக்கிறார்கள். இதைக் குறிப்பிடுவதற்குக் காரணமென்னவென்றால் அப்போது வழக்கத்திலிருந்த மருத்துவமுறையில் 60% முதல் 70% வரை மட்டுமே குணமடைந்தார்கள்.
1850 களில் வந்த மஞ்சள் காய்ச்சலிலும் டிப்தீரியா நோயிலும் ஹோமியோபதி குறிப்பிடத்தகுந்த அளவுக்கு நலமாக்கலை நிகழ்த்தியுள்ளது.
1918 – ஆண்டு உலகைக் குலுக்கிய ஸ்பானிஷ் ப்ளூ என்ற காய்ச்சலில் ஹோமியோபதி மருந்து சாப்பிட்ட 26000 பேரில் 1% பேரே மரணமடைந்தனர்.
சமீபத்தில் மக்களைத் தாக்கிய சார்ஸ் பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல், சிக்கன்குனியா, போன்ற நோய்களிலும் ஹோமியோ மருந்துகள் மிகவிரைவாகவும் நிரந்தரமாகவும் குணப்படுத்தியதை அனைவரும் அறிவார்கள். பல மாநில அரசுகள் ஹோமியோமருந்துகளை மேற்சொன்ன நோய்களுக்குத் தடுப்புமருந்தாக பரிந்துரை செய்தது.
ஹோமியோ மருந்துகள் உடலின் நோயெதிர்ப்புத்திறனைப் பலப்படுத்துவதால் நோய்த்தொற்று ஏற்படுதில்லை. அப்படியே நோய் வந்தாலும் அதன் பாதிப்பு குறைந்தேயிருக்கிறது. இதனால் கொரோனா என்றில்லை எந்த வைரஸாக இருந்தாலும் அவற்றின் வீரியமும் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.
எனவே கொரோனா நோய்க்கு  ஆர்சனிக் ஆல்பம் – 30 என்ற ஹோமியோமருந்தை வாங்கி எல்லோரும் பயன்படுத்துவதின் மூலம் இனிவரும் காலங்களில் கொரோனோவுடன் வாழப்பழக முடியும். கொரோனோவை வீட்டை விட்டு மட்டுமில்லை நாட்டை விட்டும் விரட்டமுடியும்.  

Tuesday 26 May 2020

ஒரு சமரின் பாடல் – மணல் நாவலை முன்வைத்து


ஒரு சமரின் பாடல் – மணல் நாவலை முன்வைத்து
உதயசங்கர்

கடந்துபோன வரலாற்றை இதிகாச புராணங்களை புனைவின் சிகரத்தில் நின்று மீண்டும் கட்டியெழுப்பும்போது எழுத்தாளர்களுக்கு அதை ஏன் எழுதவேண்டும் என்று எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் அதில் இருக்கும் உண்மைத்தன்மையைக் கூட எழுத்தாளர்கள் தங்கள் நோக்கிற்கேற்ப வளைத்துக் கொள்ள முடியும். மீண்டும் பழைய சநாதனக்கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் புனிதமென கட்டியெழுப்பவும் முடியும் அல்லது பழையனவெல்லாம் மதிப்புமிக்கவையென்றும் நிலைநாட்டமுடியும். அவற்றை வாசகர்கள் கொண்டாடவும் செய்வார்கள். ஏனெனில் அந்தப் படைப்புகள் வாசகர்களிடம் எந்தத் தொந்திரவையும் ஏற்படுத்தப்போவதில்லை. மனிதமனதின் பழமைபோற்றும் ( நோஸ்டால்ஜியா ) அறியாமைக்குத் தீனி போடவும் செய்யும். முன்னாடியெல்லாம் நன்றாகத்தான் இருந்தது என்ற மயிலிறகுபுளகிதத்தை உருவாக்கவும் முடியும். கெடுவாய்ப்பாக பழைய காலத்தின் பாடல்களெல்லாம் மன்னர்களைப்பற்றி உயர்குலவள்ளல்களைப் பற்றி மட்டும் தான் என்பதை மறந்து விடச்செய்யமுடியும். சாமானியர்களின் வாழ்வாதாரப்பேரோலத்தைக் கூட ஆரவாரக்கூச்சலில் அமிழ்ந்து போகச் செய்கிற காலத்தில் ஒரு படைப்பு சமகால அரசியலைப் பேசுகிறது.
சமகால அரசியல் என்றால் கட்சிகளின் அரசியலல்ல. மக்கள் வாழ்வின் அரசியல். இயற்கையின் அரசியல், சுயநலத்தின் அரசியல், தியாகத்தின் அரசியல், காதலின் அரசியல், சாதியின் அரசியல், பெண்ணரசியல், ஆவணங்களின் அரசியல், என்று உண்மையான அரசியலைப் பேசுகிற ஒரு நாவலாக மணல் வெளிவந்திருக்கிறது. தமிழிலக்கியத்தின் பல்வேறு வகைமைகளான கவிதை, சிறுகதை, நாவல், உரைநடையிலும் அரசியல்களம், பேச்சாளர், என்று எல்லாப்பரப்பிலும் காத்திரமான பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கும், இளையோர்களுக்கு இன்றும் வழிகாட்டியாகத் திகழும் பா.செயப்பிரகாசம் எழுதி வெளிவந்த நாவலான மணல் பல காரணங்களால் காலத்தின் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
மணல் என்ற எளிமையான தலைப்பே அதன் கதையையும் அரசியலையும் சொல்லிவிடும். இயற்கையின் சமீபத்திய படைப்பான மனிதன் எப்படி தன்னுடைய சுயநல உறுபசிக்கு பெற்ற அன்னையைப் பிய்த்துத் தின்கிறான். உலகெங்கும் உள்ள இயற்கையின் அடிப்படை ஆதாரங்களை அழிப்பதில் மனிதன் எவ்வளவு வேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறான். முதலாளிகளின் கொள்ளைலாபவேட்டைக் களமாக மக்களின் உழைப்பு மட்டுமல்ல, இயற்கையின் மார்பில் ரத்தம்வரும்வரை உறிஞ்சிக்குடிக்கிற வெறித்தனத்தைப் பேசுகிற படைப்புகள் தமிழில் மிகக்குறைவு. மணல் அந்தக் குறைவை நிறைவு செய்ய முயற்சிக்கிறது.
அம்மன் கோவில்பட்டி, வேடபட்டி, ஆத்தாங்கரை, விளாத்திகுளம், போன்ற கிராமங்களின் உயிர்நாடியாக ஓடிக்கொண்டிருக்கும் வைப்பாற்றின் கதையாக மணல் விரிகிறது. ஒரு ஆறு தோன்றி தன் பாதையை உருவாக்கிக்கொள்ள ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகிறது. மனிதநாகரீகத்தின் சாட்சியமாக விளங்குகிற அந்த ஆற்றின் மணல்துகள் ஒவ்வொன்றிலும் வரலாற்றின் பல பக்கங்கள் எழுதப்பட்டிருக்கும். ஆறு ஓடும் பாதையெங்கும் உள்ள கிராமங்களின் முத்துலாபுரம் ஆறு, ஆத்தாங்கரை ஆறு, விளாத்திகுளம் ஆறு, என்று பெயர்களைச் சூடிக்கொள்ளும் வைப்பாறு விவசாயம், குடிநீர் ஆதாரமாக விளங்கிக் கொண்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் காட்டாறான வைப்பாறு வெள்ளைத்தங்கமான மணல் திருட்டால் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக இறந்து போவதைச் சொல்லும் கதை மணல். அரசியல்வாதிகளாலும் முதலாளிகளாலும், அதிகாரிகளாலும் சூழ்ச்சிக்குப் பலியாகி அதன் ஆயிரமாண்டு வாழ்க்கை பத்து ஆண்டுகளுக்குள் முடிந்து போவதைச் சொல்கிற கதை மணல்.  
செண்பகமும் பால்வண்ணனும் சேர்ந்து மேடும்பள்ளமுமாக சிதைந்த முகத்தோடு காணாமல்போன வைப்பாற்றைத் தேடிச்செல்கிறார்கள். வயதின் ரேகை படியாத துரைக்கண்ணுவின் மூலம் இந்தப்பயண வரலாற்றுக்கதை தொடங்குகிறது. இந்த வரலாற்றுக்குள் துரைக்கண்ணுவோடு வேறுபாடின்றி ஒன்றாய் பழகிய நல்லவரான ஆத்தங்கரை ஜமீன் தேவேந்திரன் வருகிறார். அம்மன் கோயில்பட்டி துரைக்கண்ணுவைச் சந்தித்தால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம் என்கிறார். துரைக்கண்ணு மணல் சுரண்டல்வரலாற்றை மட்டும் சொல்லவில்லை. மனித உறவுகளையும், போராட்டங்களையும் சொல்கிறார். அவருக்கும் கனகவள்ளிக்குமான காதலின் கனிவு கவிதையாகத் தொடர்கிறது. அதிலிருந்து துவங்குகிறது மணல் அள்ளுவதற்கு எதிரான போராட்டவரலாறு. விவசாயிகள் ஒற்றுமை முன்னணி தோழர்களான செல்வராசு, காளி, கனகராசு, சேதுராகவன், மாறன், என்று முன்னணிப்படைவீரர்கள் முன்நின்று மக்களை ஒன்றிணைக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் முகங்கள் கிழிபடுகின்றன. அதிகாரிகளின் சுயநலம் வெளிப்படுகிறது. முதலில் அறிந்தும் அறியாமலும் நடந்த மணல்கொள்ளை பின்னர் அரசு உத்திரவோடு அதிகாரப்பூர்வமாக நடந்தது தான் வைப்பாற்றுக்கு நிகழ்ந்த சோகம்.
நாவலில் வரலாறு முந்தினநாளுக்கும் இன்றைய நாளுக்கும் முந்திய வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும், அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னாலும் பின்னாலும் ஊஞ்சலாடிக் கொண்டேயிருக்கிறது. அந்த ஊஞ்சலில் இசைச்சாகரமான விளாத்திகுளம் சாமிகள் என்ற நல்லப்பசுவாமிகள் வருகிறார். அவருடைய காலத்திலேயே துறைவழியே போவோரை நின்று கேட்டுப்போகச்செய்யும் இசையைப் பாடிய துணிவெளுக்கும் தொழிலாளியான குருசாமியைப் பற்றியும் குறிப்பு வருகிறது. அந்த ஊஞ்சலில் தான் மாறன் பாண்டியம்மாவின் காதல் வளர்கிறது. மாறனின் போராட்டகுணத்தை அவனைக் கொல்வதின் மூலம் வீழ்த்துகிறார்கள் மணல்வியாபாரிகள். சிங்கிலிபட்டி மக்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து ஆற்றைப் பங்குபோடுகிற மணல் வியாபாரிகளும் ஊஞ்சலில் ஆடுகிறார்கள். நல்லது செய்ய நினைத்தாலும் அரசியல்நெருக்கடிகளால் இக்கட்டில் மாட்டிக்கொள்கிற கலெக்டர்களும்கூட முன்பின்னாடும் காலஊஞ்சலில் ஏறிவருகிறார்கள்..
சாதிமீறிய காதலாக மாறனும் பாண்டியம்மாளும் தங்கள் காதலைப்பாடும் தருணங்களின் கவித்துவமும் வருகிறது ஊஞ்சலில். அதேபோல. சாதி ஆணவப்படுகொலைகளாக கொம்பன்பகடையும், வள்ளியும், கொடூரமான சாட்சிகளாக வருகிறார்கள். அதில் உயர்சாதி வள்ளி தெய்வமாக, கொம்பன்பகடை இன்னமும் ஓடைக்காட்டிலேயே காத்துக் கொண்டிருக்கிற கதையும் ஊஞ்சலாடுகிறது. செல்லத்தாயிக்கும் வேல்ராசுவுக்கும் மெல்ல முகிழ்க்கும் காதலின் இதழ்களை மணல்வியாபாரிகள் குவாரிப்பள்ளம் தன் கொடுங்கரங்களால் நசுக்குகிற சோகமும் ஆடுகிறது. வஞ்சகத்தின் வரலாறாக நீலமேகம் குவாரிக்காரர்களுக்கு ஏஜெண்டாக ஒன்றுபட்ட மக்களின் ஒற்றுமையைப் பிரித்தாள்கிற வரலாறும் ஊஞ்சலில் ஆடுகிறது.
நாவல்நெடுக அசலான கரிசல் கிராமத்து மனிதர்களின் கரிசல் வழக்காறு, சொலவடைகள், கதை, கேலி, கிண்டல், ஏகடியம் கோபம், தாவரங்கள்,என்று வாழ்க்கையின் துடிதுடிப்பு மழைக்கால வைப்பாறாக ஓடுகிறது.. மக்கள் போராட்டங்களின் வீச்சும் அதை அடக்க, திசைதிருப்ப,, மடைமாற்ற, அரசும், அதிகாரவர்க்கமும் செய்கிற மாய்மாலங்களும் கூட விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பா.செயப்பிரகாசத்தின் தனித்துவமான பாதையில் வாசிப்பதற்கு சுவாரசியமாகவும், நிறைய அர்த்தங்களை உட்பொதிந்ததாகவும் நாவலின் மொழிநடை அமைந்திருப்பது சிறப்பானது.
மணல் நாவல் பேசும் சுற்றுச்சூழல் அரசியல் மிக முக்கியமானது. அதைக் கலையாக மாற்றி தமிழின் முக்கியமான நாவலாக எழுதியிருப்பதில் பா.செயப்பிரகாசம் வெற்றி பெற்றிருக்கிறார். நாவலில் வரும் இன்னாசிக்கிழவரின் ரேகையின் குரலில் பா.செ. சொல்கிறார்.
பூமி மனிதர்களுக்குச் சொந்தமானதில்லை.. மனிதன் தான் பூமிக்குச் சொந்தமானவன்
இதுதான் மணல் நாவலை வாசித்து முடிக்கும்போது ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் செய்தி. அதுதான் நாவலின் வெற்றி.
நன்றி – தமிழ் இந்து

மணல் - நாவல்
பா.செயப்பிரகாசம்
வெளியீடு - நூல்வனம்
எம்.22, ஆறாவது அவினியூ
அழகாபுரி நகர்
ராமாபுரம்
சென்னை-89
தொடர்புக்கு- 9176549991


.


Sunday 24 May 2020

கேப்பைக்கூழும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிட்ட புலி


கேப்பைக்கூழும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிட்ட புலி
உதயசங்கர்
காட்டூர் மக்கள் எல்லோரும் பயந்து கொண்டிருந்தனர். நேற்று இரவு ஒரு புலி காட்டூருக்குள் வந்து ஒரு ஆட்டைக் கொன்று இழுத்துக் கொண்டு போய்விட்டது. இரவில் புலியின் உறுமல் சத்தத்தையும் ஆட்டின் கூப்பாட்டையும் எல்லோரும் கேட்டார்கள். யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. காலையில் தான் கொஞ்சம் தைரியமாக வெளியே வந்தார்கள். ஊர் எல்லையில் குடிசையில் உறங்கிக்கொண்டிருந்த லட்சுமியும் அந்தச் சத்தத்தைக் கேட்டாள். அவளுடைய அப்பா அருகிலிருந்த கரும்புத்தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சப்போயிருந்தார். அவள் முழித்தபோது அம்மா எழுந்து சன்னல்வழியே இருட்டுக்குள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. இந்தப் புலிகளை எல்லாம் கொன்றுவிட்டால் என்ன? எப்படியும் ஒவ்வொருவருடமும் கோடைகாலத்தில் புலியோ, சிறுத்தையோ, யானையோ, இறங்கி ஊருக்குள் வந்து விடுகிறது. ஆடு, மாடு, கோழி, என்று அடித்துத் தின்று விடுகிறது. தப்பித்தவறி மனிதர்கள் தென்பட்டால் அவ்வளவுதான்.
யானையோ வயல்களில் இறங்கி பயிர்களை நாசப்படுத்தி விடுகிறது. பேசாமல் காட்டையே அழித்து எல்லாவிலங்குகளையும் அழித்து விட்டால் மனிதர்கள் நிம்மதியாக இருக்கலாமே என்று நினைத்தாள் லட்சுமி. அவளுக்கு இப்போது அப்பா பத்திரமாய் வீடு திரும்பி வரவேண்டுமே என்று கவலைப்பட்டாள்.
மறுநாள் காலையில் வனவூரில் வனத்துறை அலுவலர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் வந்திறங்கிவிட்டன. புலியைப் பிடிக்கக் கூண்டு கொண்டுவரப்பட்டு தயாரானது. அன்று இரவு புலி வரவில்லை. மறுநாளும் வரவில்லை. அதற்கடுத்த நாளும் வரவில்லை. ஒரு வாரம் கழித்து புலி இறங்கிவந்தது. புலி இறங்கி லட்சுமியின் குடிசை இருந்த வழியாக வந்தது.
அம்மாவும் அப்பாவும் இன்னும் கரும்புத்தோட்டத்திலிருந்து வரவில்லை. லட்சுமி காடாவிளக்கு வெளிச்சத்தில் பாடம் படித்துக் கொண்டிருந்தாள். வெளியே பௌர்ணமி நிலவின் வெளிச்சம் பளீரென்று வீசியது. வெள்ளிமலையிலிருந்து காற்று விர்விர்ரென வீசியது. லட்சுமி சன்னல் வழியே வந்த காற்றுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு படித்துக் கொண்டிருந்தாள். அப்போது சன்னலில் ஏதோ நிழல் தெரிந்தது. திரும்பிப்பார்த்தாள். எதுவும் தெரியவில்லை. சில நிமிடம் கழித்து வாசல் கதவை யாரோ பிறாண்டுவது போலக் கேட்டது. லட்சுமி பயத்துடன் வாசல் கதவின் அருகில் போய் அதிலிருந்த ஓட்டையின்வழியே பார்த்தாள். ஒரு பூனை உட்கார்ந்து கதவையே பார்த்துக்கொண்டிருந்தது.
லட்சுமி கதவைத் திறந்தாள். அதற்குள் பூனை மாயமாய் மறைந்து விட்டது. வெளியே வந்து நின்று சுற்றிச் சுற்றிபார்த்தாள். பின்னர் வெள்ளிமலையைப் பார்த்தாள். மலையின் உச்சியில் மட்டுமே காடு இருந்தது. மற்ற இடங்கள் எல்லாம் வயல்களாகி விட்டன. பல இடங்களில் விளக்குகளின் வெளிச்சம் புள்ளிகளாய் தெரிந்தன. புலியின் உறுமல் சத்தம் கேட்கிறதா என்று கூர்மையாகக் கேட்டாள். எதுவும் இல்லை. மறுபடியும் வீட்டுக்குள் வந்து கதவைச் சாத்தி விட்டு விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்து படிக்கத்தொடங்கினாள்.
திடிரென நிமிர்ந்து பார்த்த லட்சுமி நடுநடுங்கி விட்டாள். எதிரே புலி பின்னங்கால்களில் உட்கார்ந்திருந்தது. லட்சுமியின் வாயிலிருந்து அலறல் வெளிவரும் முன்பாக,
“ பயப்படாதே.. குழந்தை.. எனக்கு ரொம்பப்பசிக்குது.. சாப்பிட ஏதாச்சும் கொடே.ன்..”
என்று பரிதாபமாக ஒரு குழந்தையைப் போல புலி கேட்டது. புலி பேசுமா? என்ற ஆச்சரியம் லட்சுமிக்கு வந்தது. ஆனால் பசியால் வாடிய அதன் உடலும், மூடி மூடித் திறந்த பஞ்சடைந்த அதன் கண்களும் அவளுக்குள் பரிதாபத்தை உண்டுபண்ணின. பயம் போய் விட்டது.
“ நீ கறி தானே சாப்பிடுவே? “
“ ஆமா அது ஒரு காலம்..ஆனால் இப்போ எது கிடைச்சாலும் சாப்பிடுவேன்.. உங்கவீட்டுல  இன்னிக்கு மத்தியானம் கருவாட்டுக்குழம்பு தானே..”
“ ஆமா எப்படித் தெரியும் உனக்கு? “
“ நான் இங்கேயே தான் சுத்திக்கிட்டிருக்கேன். எனக்குப் பசி கண்ணை அடைக்குது ப்ளீஸ் எதாச்சும் சாப்பிடக்கொடேன்...”
லட்சுமி உடனே எழுந்து போய் கேப்பைகூழை உருட்டி அதில் கருவாட்டுக்குழம்பை ஊற்றி அதில் நாலு துண்டு நெத்திலியைப் போட்டுக் கொண்டு வந்தாள். புலியின் முன்னால் தட்டை வைப்பதற்கு முன்னால் அது நாக்கை நீட்டி ஒரே விழுங்கு விழுங்கி விட்டது. பிறகு மறுபடியும்
“ ப்ளீஸ்..” என்றது. லட்சுமி பானையிலிருந்த அவ்வளவு கேப்பைக்கூழையும் கருவாட்டுக்குழம்பையும் ஊற்றிக் கொண்டு வந்தாள். புலி நாக்கைச் சப்புக்கொட்டி சப்புக்கொட்டி சாப்பிட்டது. சாப்பிட்டபிறகு சின்னதாக ஒரு ஏப்பம் விட்டது. லட்சுமியைப் பார்த்து “ ரொம்ப தேங்க்ஸ்..” என்றது.
” நீ ஏன் காட்டை விட்டு ஓடி கீழே வாரே? “
“ சாப்பாட்டுக்காகத்தான் குழந்தை.. நான் நல்லாச்சாப்பிட்டு ஒரு மாதம் ஆகப்போகுது..”
“ காட்டிலே சாப்பாடு இல்லையா? “
“ காடே இல்லையே..அப்புறம் ஏது சாப்பாடு..? “
” ஏன் அப்படி? “
” சொல்றேன் கேளு..”
வெள்ளிமலை முழுதும் ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது. அந்தக்காட்டில் புலி, சிறுத்தை, யானை, புள்ளிமான், மிளா,, முயல், காட்டெலி, காட்டு அணில், சிங்கவால் குரங்குகள், காட்டுப்பன்றி போன்ற மிருகங்களும், காட்டுப்புறா, பருந்து, வல்லூறு, மயில், கொம்பு ஆந்தை, சிலம்பன், சிட்டுக்குருவி, தேன்சிட்டு, குயில், கொண்டலாத்தி, பனங்காடை, மரங்கொத்தி போன்ற பறவைகளும் நல்லபாம்பு, ராஜநாகம், சாரைப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மரமேறிப்பாம்பு, பச்சைப்பாம்பு, போன்ற பாம்புவகைகளும், எல்லாவகையான பூச்சிகளும், வண்ணத்துப்பூச்சிகளும், தேனீக்களும், குளவிகளும் எறும்புகளும், எல்லாம் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அருவிகளும் நீரோடைகளும் ஆறுகளும் ஓடிக்கொண்டிருந்தன. கடுங்கோடையிலும் அந்தக்காட்டில் தண்ணீருக்குப் பஞ்சம் வந்ததில்லை. இயற்கையின் விதிப்படி எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம்.
அப்போது மனிதர்கள் வந்தார்கள். காட்டை அழித்தார்கள். காட்டை அழிக்கும்போது மரங்கள், செடிகள், கொடிகள், புல்தரைகள், பூச்சிகள், புழுக்கள், வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், எல்லாம் அழிந்தன. பச்சைத்தாவரங்கள் அழியும்போது அதைச் சாப்பிட்டு வாழ்ந்த மான்கள், மிளாக்கள், முயல்கள், காட்டுப்பன்றி போன்றவையும் அழிந்தன. மிச்சம் மீதி இருந்ததையும் மனிதர்கள் வேட்டையாடிக் கொன்றார்கள். இப்போது அந்த மிருகங்களைச் சாப்பிடும் எங்களைப் போன்ற மாமிசப்பட்சிணிகளுக்கு உணவில்லை. நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறோம்.. கடைசி முயற்சியாகத்தான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கிராமங்களுக்கு வருகிறோம்.. காடுகள் இல்லையென்றால் மனிதர்களும் ரொம்ப நாட்களுக்கு உயிர் வாழமுடியாது….
லட்சுமிக்கு புலியின் கதையைக் கேட்டதும் வருத்தமாக இருந்தது. அவள் காட்டை அழிக்கவேண்டும் என்று நினைத்தாளே. ச்சே.. இயற்கையின் தொடர் சங்கிலியை மனிதர்கள் உணரவில்லையே. அவளுடைய கண்ணில் இப்போது நீர் துளிர்த்தது.
“ சாரிப்பா..”
புலி எழுந்து வாலை ஆட்டிக்கொண்டே, “ எதுக்கு..” எனறது. லட்சுமி பதில் சொல்லுவதற்கு முன்னால் கதவைத் தட்டுகிற சத்தம் கேட்டது. உடனே லட்சுமி,
“ போய் அந்தப்பெட்டிக்குப் பின்னால் ஒளிஞ்சிக்கோ..” என்று சொல்லிவிட்டு கதவைத் திறக்கப்போனாள். அம்மாவும் அப்பாவும் உள்ளே வந்தார்கள். அப்பா லட்சுமியிடம்,
“ லட்சுமிக்கண்ணு.. அப்பாவுக்கு நல்லபசி.. அந்தக்கேப்பைக்கூழையும் கருவாட்டுக்குழம்பையும் கொண்டுவா.. ஒரு பிடி பிடிப்போம்..” என்றார். லட்சுமி அப்பாவைப் பார்த்து திருதிருவென முழித்தபடி,
“ அப்பா.. கேப்பைக்கூழையும் கருவாட்டுக்குழம்பையும் பூனை வந்து சாப்பிட்டிருச்சிருச்சுப்பா..” என்றாள். அப்பா கோபத்துடன்,
“ எங்கே அந்தப்பூனை? “ என்று எழுந்தார். லட்சுமி பயத்துடன் பெட்டிக்குப் பின்னால் பார்த்தாள். அங்கே எதுவுமில்லை. முகங்கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்த அம்மா
“ அது எப்பயோ போயிருக்கும்.. பத்து நிமிசம் பொறு.. நான் கூழுகாய்ச்சி குழம்பு வச்சித்தாரேன்..” என்று சொல்லிவிட்டு அடுக்களை இருந்த மூலைக்குப் போனாள்.
லட்சுமி குழப்பத்துடன் மறுபடியும் படிக்க உட்கார்ந்தாள். அவள் கண்ணில் புலியின் பசித்த முகம் தெரிந்தது.


Friday 22 May 2020

கால்களில் ஒரு காடு


கால்களில் ஒரு காடு
உதயசங்கர்
பதினைந்து நாட்கள் முடிந்து விட்டன. கூட்டுப்புழு இன்னமும் கூட்டுக்குள்ளேயே இருந்தது. அதன் உடம்பு மாறிவிட்டது. கூட்டுப்புழுவாக மாறும் முன்னால் இருந்த உருவம் இப்போது இல்லை. இந்த ஒரு மாதத்துக்குள் எவ்வளவு மாற்றங்கள் ? முட்டையிலிருந்து வெளியே வரும்போது குட்டியூண்டாய் இருந்தது. அவ்வளவு குட்டியாய் இருந்தால் சித்தெறும்பே கடித்து இழுத்துக் கொண்டு போய் விடும். ஆனால் எப்படித்தான் வந்ததோ குட்டியூண்டுப் புழுவுக்கு அவ்வளவு பசி. புழு சாப்பிட்டது. சாப்பிட்டது. சாப்பிட்டுக்கொண்டேயிருந்தது. அது கறிவேப்பிலை மரமோ, எலுமிச்சை மரமோ, எருக்கம்செடியோ, எதுவாக இருந்தாலும் அந்த இலைகளைச் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தது. சாப்பிட்டு சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாகி விட்டது. இப்போது மெதுவாகத்தான் அசைய முடிந்தது. உடல் பருத்து மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது புழு. அப்படியே ஒரு இலையின் கீழ் கூட்டை உருவாக்கி உள்ளே இருந்துகொண்டு கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டது. அவ்வளவு தான் தெரியும். அப்புறம் நன்றாக உறங்கி விட்டது. தூக்கமென்றால் தூக்கம் அப்படியொரு தூக்கம்.
தனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே தெரியாத தூக்கம். அதன் கனவுகளில் எல்லாம் பச்சை இலைகள். சின்னச்சின்ன நரம்புகள் ஓடுகிற இலைகள். அந்த இலைகளின் ஓரங்கள் தான் என்ன ருசி! அதை விட இலைத்தளிர்கள் அப்படியே அல்வாவைச் சாப்பிடுவதைப்போல அத்தனை ருசி! அதைச் சாப்பிடும்போதே பச்சைச்சாறு வாயிலிருந்து வெளியே வழியும். சப்புக்கொட்டி சப்புக்கொட்டி சாப்பிட்ட ஞாபகங்கள் தான் வண்ணக்கனவுகளாய் கூட்டுப்புழுவின் கனவுகளில் வந்தன. எல்லாம் சுகமாக இருந்தது. அப்படியே உறங்கிக் கொண்டேயிருக்கலாம் என்று நினைத்தது கூட்டுப்புழு.
அதற்குச் சிறகுகள் முளைத்தது தெரியவில்லை. அந்தச் சிறகுகளில் வண்ணங்களால் ஓவியங்கள் இருப்பது தெரியவில்லை. உணர்கொம்பு வந்திருப்பது தெரியவில்லை. பெரியதாய் இரண்டு கூட்டுக்கண்கள் உருவானது தெரியவில்லை. கூட்டுப்புழுவாய் இருந்தபோது இருந்த தாத்தாவாய் இப்போது அழகான வாயாக மாறியது தெரியவில்லை. மொத்தமாய் உருண்டையாய், குண்டாய், அழகேயில்லாமல் சதைத்துண்டு மாதிரி இருந்த உடல், இப்போது கட்டழகாக, தலை, உடல், வயிறு, வெவ்வேறு வடிவத்தில் மாறி அழகாகி விட்டது தெரியவில்லை. உடலில் மெல்லிய ரோமங்கள் முளைத்தது தெரியவில்லை. அழகான நீண்ட ஆறுகால்கள் நிற்பதற்குத் தயாராய் இருப்பதை அறியவில்லை.
எதுவும் தெரியாமல் கூட்டுப்புழு உறங்கிக் கொண்டிருந்தது. இன்னமும் பச்சை இலை கனவுகளில் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. கண்களைத் திறக்க விருப்பமில்லாமல் இருந்த கூட்டுப்புழு அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. கூட்டுக்குள் இருந்த ஈரம் உலரத் தொடங்கிவிட்டது. இன்னும் கொஞ்சநேரத்தில் எறும்புகளோ குளவிகளோ வந்துவிட்டால் அப்படியே கூட்டுக்கு இழுத்துக் கொண்டு போய் விடும். மரப்பல்லிகளோ, ஓணான்களோ மோப்பம் பிடித்து வந்து விட்டால் ஒரே வாயில் லபக்கென்று முழுங்கிவிடும். உறக்கத்திலேயே கூட்டுப்புழு செத்து விடும். அதோ ஒரு கட்டெறும்பு மோப்பம்பிடித்து கீழேயிருந்து மேலே வந்து கொண்டிருக்கிறது. ஒரு ஓணானும் ஒரு பக்கக்கண்ணைச் சுழட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இரையைப் பார்த்த மகிழ்ச்சியில் மெல்ல முதுகைத் தூக்கி ஆடுகிறது. நாக்கைச் சுழட்டுகிறது. கூட்டுப்புழு இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறது. வரப்போகும் ஆபத்து தெரியாமல் பொய்க்கனவு கண்டு கொண்டிருக்கிறது.
யார் அதை எழுப்பப்போகிறார்கள்?
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த கூட்டுப்புழுவின் காதுகளுக்கருகில் ஒரு இனிமையான குரல் கேட்டது.
“ எழுந்திரு.. எழுந்திரு.. சீக்கிரம் எழுந்திரு..”
கூட்டுப்புழு கண்களைத் திறக்காமல்,
“ ம்ஹூம்.. மாட்டேன்.. எனக்குத் தூக்கம் வருது..” என்று சொன்னது.
“ உன்னுடைய தூக்கம் முடிந்து விட்டது.. இனி நீ எழுந்திரிக்கவேண்டிய நேரம்..”
“ இல்லை.. இன்னும் கொஞ்சநாள் தூங்கறேனே..”
“ கண்களைத் திறந்து பார்! உலகம் எவ்வளவு வெளிச்சமாக இருக்கிறது. வானம் எவ்வளவு அழகாக இருக்கிறது. இந்த வானம் முழுவதும் உனக்குத் தான்.. பார் எத்தனை விதமான பூக்கள்! எத்தனை விதமான நிறங்கள்! எத்தனை வடிவங்களில் பூக்கள்! எத்தனை விதமான நறுமணங்கள்! அத்தனை பூக்களும் உன்னை அழைப்பது கேட்கவில்லையா? அத்தனை பூக்களும் உனக்காகத்தான் காத்திருக்கின்றன. அத்தனை பூக்களின் மடிகளும் நீ உட்கார்ந்துகொள்ளத் தயாராக இருக்கின்றன. எத்தனை விதமான சுவைமிக்கத் தேன்துளிகள்! நீ சாப்பிடுவதற்காகத் தயாராக மகரந்தத்தூள்கள்! “
“ எனக்குப் பயமாக இருக்கிறது..” கூட்டுப்புழு முணுமுணுத்தது. எறும்பும் ஓணானும் நெருங்கிக் கொண்டிருந்தன. இன்னும் சற்றுதூரம்தான். கூட்டுப்புழுவின் இருபத்தியொரு நாள் தவம் முடிந்து விடும். அத்தனை உழைப்பும் வீணாகிவிடும். ஓணானின் நடையில் உற்சாகம் தெரிந்தது. கட்டெறும்பும் பரபரவென முன்னேறிக் கொண்டிருந்தது.
அப்போது மெல்ல ஒரு இறகு தடவுவதைப் போல கூட்டுப்புழுவின் உடலில் ஒரு சிலிர்ப்பு. அதைத் தொடர்ந்து,
“ பயமா? எதற்கு? இந்த உலகமே உனக்குத் தான். உனக்காகத் தான் காத்திருக்கிறது இந்த உலகம். நீயில்லாமல் இந்த உலகம் முழுமையடையாது.. உன் கால்களில் நீ ஒரு காட்டைச் சுமக்கப்போகிறாய்? இயற்கை அதற்காகவே உன்னைப் படைத்திருக்கிறது.. ஒரு காட்டையே உருவாக்கும் வல்லமை உனக்கு இருக்கிறது.. இனியும் காத்திருப்பது கூடாது. இப்போது இல்லையெனில் இனி ஒருபோதும் நீ விழிக்க முடியாது.. விழித்திடு..எழுந்திரு..முன்னேறு..”
அந்தக்குரலின் கம்பீரம் கூட்டுப்புழுவின் சோம்பலைத் துரத்தியது. உறக்கம் போன இடம் தெரியவில்லை. மெல்ல கண்விழித்தது. உடலை முறித்துக் கொடுத்தது. கூடு உடையத் தொடங்கியது. உடலோடு ஒட்டிக்கிடந்த சிறகுகள் காற்றில் உலர்ந்து விரியத் தொடங்கின. எழுந்து நின்றன கால்கள். உருண்ட கண்களுக்கெதிரே ஒளிச்சிறகுகளோடு வண்ணத்துப்பூச்சிதேவதை நின்றாள். அவள் முகத்தில் சிரிப்பு. சிவப்பும் கருப்பும் நீலமும் வரைந்திருந்த பெரிய சிறகுகளை விரித்து மூடிக்கொண்டு அந்த வண்ணத்துப்பூச்சி கம்பீரமாய் நடந்து காற்றில் பறக்கத் தயாரானது.
நெருங்கி வந்த ஓணான் வாயைத் திறந்தது. இன்னொரு திசையிலிருந்து வந்த கட்டெறும்பும் வண்ணத்துப்பூச்சியின் கால்களுக்கு அருகில் வந்து விட்டது.
வண்ணத்துப்பூச்சி தனக்கு முன்னால் விரிந்த வானத்தைப் பார்த்தது. ஒரு கணம் தான். கால்களை உந்தி சிறகுகளை அடித்து வானில் பறந்தது. வண்ணத்துப்பூச்சிதேவதை சிரித்தாள்.
இனி வண்ணத்துப்பூச்சியின் கால்களில் ஒரு காடு உருவாகும்.

நன்றி - கவிஞர். தேவதச்சன் - தலைப்புக்காக.Wednesday 20 May 2020

இயற்கை வழி


இயற்கை வழி

உதயசங்கர்

அம்மா காத்திருந்தாள். பள்ளிக்கூடத்திலிருந்து இன்னும் மதியழகன் வரவில்லை. இப்போது கொஞ்சநாட்களாக தாமதமாகவே வருகிறான். ஏன் என்று தெரியவில்லை. பள்ளிக்கூடம் புலிகுத்தியில் இருந்தது. அவர்களுடைய வீட்டிலிருந்து பள்ளி ரொம்பதூரமில்லை. ஒரு கிலோ மீட்டருக்குள் தான் இருக்கும். குறுக்குவழியில் நடந்தால் இன்னும் பக்கம். பள்ளிக்கூடத்தில் தாமதமாக விடுகிறார்களா? ஒருவேளை அவன் வேறு எங்காவது சுற்றிக்கொண்டிருந்து வருகிறானோ, இல்லை எங்காவது விளையாடி விட்டு வருகிறானோ அம்மா யோசித்தாள். கேட்டால் அதெல்லாம் இல்லை என்கிறான். நேரே பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குத் தான் வருகிறேன் என்கிறான். அரை மணிநேரத்தில் வரவேண்டியவன் இரண்டு மணிநேரம் கழித்து வருகிறான். சிலசமயம் இருட்டியபிறகு வந்து சேர்கிறான். என்ன காரணமாக இருக்கும்? அம்மாவுக்குப் புரியவில்லை.
அம்மா ஒரு முடிவு செய்தாள். நாளை பள்ளிக்கூடம் விடும் நேரம் அங்கே போய் அவன்கூடவே வரவேண்டும் என்று நினைத்தாள். மறுநாள் பள்ளிக்கூடம் விட்டு மதியழகன் வெளியே வரும்போது அம்மா வாசலில் நிற்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். அம்மா புலிகுத்தியில் உள்ள அவரது உறவினரைப் பார்ப்பதற்காக வந்ததாகச் சொன்னாள். சரி என்று இருவரும் நடந்தார்கள்.
சாலை வழியே போகாமல் மதியழகன் குறுக்குவழியில் அம்மாவைக் கூட்டிக்கொண்டு போனான். அது வண்டிப்பாதை. பாதையின் இரண்டு பக்கங்களிலும் சமவெளிக்காடு விரிந்திருந்தது. தும்பை, காட்டாமணக்கு, ஆவரம்பூச்செடி, இலந்தை, கொளுஞ்சி, குப்பைமேனி, ஓரிதழ் தாமரை, கண்டங்கத்தரி, காட்டுத்துளசி, எருக்கஞ்செடி, ஊமத்தைச்செடி, நொச்சி, போன்ற  புதர்ச்செடிகளும், ந முசுமுசுக்கை, தூதுவளை, போன்ற கொடிகளும் மஞ்சணத்தி, கருவை மரம், உடைமரம், வேலிக்கருவை, நுணா
போன்ற சிறிய மரங்களும் அடர்ந்திருந்தன. கீழே அருகம்புல் மெத்து மெத்து என்று விரிந்திருந்தது.
நடந்து கொண்டிருந்த மதியழகன் அப்படியே நின்றான். அம்மாவின் அருகில் வந்து காதில் கிசுகிசுத்தான்.
“ அங்கே பாரு கௌதாரிக்குஞ்சு! “
அம்மாவின் கண்ணுக்குத் தெரியவில்லை. அவன் கை காட்டிய திசையில் கூர்ந்து பார்த்தாள். புற்களுக்கு நடுவில் ஒரு சிறிய கௌதாரிக்குஞ்சு உட்கார்ந்திருந்தது. அம்மா இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறாள். அப்படியே அம்மாவின் கைபிடித்து அருகில் இருந்த மஞ்சணத்தி செடியின் அருகில் கூட்டிக்கொண்டு போனான். அதன் இலைகளின் அடியில் வண்ணத்திப்பூச்சிகளின் கூடுகள் தொங்கிக்கொண்டிருந்தன. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு கூட்டை உடைத்துக் கொண்டு மஞ்சள் நிறத்தில் கருப்புக்கோடுகள் போட்ட வண்ணத்துப்பூச்சி வந்து நின்றது. ஈரம் உலர்வதற்காக சில நிமிடங்கள் நின்ற வண்ணத்துப்பூச்சி சிறகுகளை விரித்துப் பறந்து போனது.
பாதையின் இடதுபுறத்திலிருந்து திடீரென இரண்டு காட்டுப்புறா விர்ரென பறந்தன. மாலைச்சூரியனின் ஒளியில் அவை மின்னி மறைந்தன. அப்போது கருவை மரத்திலிருந்து குக்கூகூக்கூ குக்கூக்க்கூகூகூ என்ற சத்தம் கேட்டது. இலைகளில் மறைந்துகொண்டு கருங்குயில் கத்திக் கொண்டிருந்தது. மதியழகன் அம்மாவிடம்,
“ அம்மா இங்கே எங்கேயோ பக்கத்தில இருக்கிற புதர்ல தவிட்டுக்குருவியோட கூடு இருக்கு.. அதில முட்டையிடத்தான் குயில் காத்துக்கிட்டிருக்கு…” என்று சொன்னான். அம்மாவுக்கு எல்லாமே புதிதாக இருந்தது. உடை மரத்தின் கிளையில் ஏறிய பச்சோந்தி உடனே கருஞ்சாம்பலாய் தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொண்டு அவர்களைப் பார்த்து கண்களை உருட்டி முதுகைத் தூக்கித் தூக்கி ஆடியது.
அடுத்த அடி எடுத்துவைக்கும்போது அம்மாவின் முன்னால் ஒரு பத்தடி தூரத்தில் இரண்டு சாம்பலும் மஞ்சளும் கலந்த இரண்டு காட்டு முயல்கள் பாய்ந்து சென்றன. அம்மா திடுக்கிட்டு நின்று விட்டாள். மதியழகன் சிரித்தான். பொழுது இருட்டத்தொடங்கியது. தூரத்தில் குள்ளநரியின் ஊளைச்சத்தம் கேட்டது. அடுத்த கணம் அவர்களுக்குப் பின்னால் அந்தச் சத்தம் கேட்டது. அம்மா பயந்து போய் விட்டாள். மதியழகன் அப்படியே அம்மாவை நிறுத்தினான். அவர்களுக்கு முன்னால் ஏழடி நீளத்தில் மஞ்சள் நிறத்தில் ஒரு சாரைப்பாம்பு வாயில் கவ்விய காட்டு எலியுடன் பாதையைக் கடந்து கொண்டிருந்தது.
அவன் மேலே கை நீட்டினான். படைகுருவிகள் கூட்டமாகப் பறந்து போய்க்கொண்டிருந்தன. அதன் பின்னால் மூன்று நாரைகள் போய்க்கொண்டிருந்தன. புதர்க்காட்டில் ஒரே சத்தமாக இருந்தது. வண்டுகளின் ரீங்காரம், பூச்சிகளின் கீச்சொலி, பறவைகளின் கெச்சட்டம், ஆந்தையின் கேவல், உயரமான விளா மரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டிருந்த ஆண்மயிலின் அகவல், குள்ளநரிகளின் ஊளை என்று கலவையான சத்தத்தில் காடு சிரித்துக் கொண்டிருந்தது. மதியழகன்,
“ அம்மா தினந்தினம் இந்த வழியில வரும்போது நிறையப் பார்ப்பேன்..நிறையக் கேட்பேன்.. நிறையத் தெரிஞ்சிக்கிடுவேன்..” என்று சொன்னான்.
இப்போது அம்மாவுக்குப் புரிந்து விட்டது. அவருக்கே இப்போது தான் நிறைய விஷயங்கள் தெரிந்தன. அவர் மதியழகனின் தலையைக் கோதி பாராட்டினாள். மதியழகன் சிரித்தான். இப்போது அவர்களுடைய வீடு தெரியத் தொடங்கியது.

Monday 11 May 2020

ஆறுதல் - சாதத் ஹசன் மண்ட்டோ


1.   ஆறுதல் 

சாதத் ஹசன் மண்ட்டோஎட்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தது. என்னுடைய நண்பன் விஸ்வேஷ்வரநாத்தின் திருமணவிருந்து இந்து சபை கல்லூரியின் முன்னாலிருந்த அழகான விருந்து மண்டபத்தில் நடந்தது. அந்த விருந்தில் முந்நூறு முந்நூற்றைம்பது விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் லாகூரின் மிகப்பிரபலமான பாடகிகளின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்தப்பாடகிகள் அந்த விருந்து மண்டபத்திலுள்ள பல்வேறு அறைகளில் அவர்களுடைய கட்டில்களில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
அதிகாலை நான்கு மணி. எனக்கு இன்னும் மயக்கமாக இருந்தது. சிறிய நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து குடித்த விஸ்கியின் வேலை. நான் கல்யாண மாப்பிள்ளையுடன் சேர்ந்து தனியாக ஒரு அறையில் குடித்தேன். ஹாலில் இருந்த வட்டக்கடிகாரத்தில் நான்கு மணி அடித்தபோது நான் என் கண்களைத் திறந்தேன். ஒருவேளை நான் கனவு கண்டு கொண்டிருந்திருக்கலாம் ஏனெனில் என்னுடைய கண்ணிமைகளில் ஏதோ குடியிருந்தது.
நான் ஒரு கண்ணைத் திறந்து ஹாலுக்குப் போகும் பாதையைப் பார்த்தேன். அப்போது மற்றொரு கண்ணை மூடியே வைத்திருந்தேன். அது இன்னும் கொஞ்சநேரம் தூங்கும். எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் குப்புறப்படுத்திருந்தார்கள், சிலர் மல்லாந்து படுத்திருந்தார்கள். சிலர் குண்டக்கமண்டக்க படுத்திருந்தார்கள். நான் என்னுடைய அடுத்த கண்ணையும் திறந்தேன். நேற்று ராத்திரி அஸ்கர் அலி பெரிய தலையணையில் படுக்கச்சொல்லி வற்புறுத்தியது நினைவு கூர்ந்தேன். அந்தத் தலையணை என்னுடைய தலையிலிருந்து நழுவி கொஞ்சதூரத்தில் கிடந்தது. ஆனால் அஸ்கர் அலி இருப்பதற்கான எந்த அறிகுறியுமில்லை.
ஒருவேளை இரவு முழுவதும் அவன் முழித்திருந்ததால், இப்போது ராம்பாக்கிலுள்ள மலிவான விபச்சாரியின் அழுக்கான படுக்கையில் தூங்கிக்கொண்டிருப்பான்.
விஸ்கி அது லோக்கலாக இருந்தாலும் சரி ஃபாரினாக இருந்தாலும் சரி ஆஸ்கரைப் பொறுத்தவரை விரைவு ரயிலைப்போல நேரே ஒரு பெண்ணிடம் போய் தான் நிற்கும். கிட்டத்தட்ட தொண்ணூற்றியொன்பது சதவீத மனிதர்களுக்கு இரண்டு பெக் உள்ளே இறங்கியவுடன் அழகான பொருட்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். அப்படியிருக்கும்போது அஸ்கர் – அவன் மிகச்சிறந்த ஓவியர் புகைப்படக்கலைஞர், அவனுக்கு எப்படி கோடுகளையும் நிறங்களையும் பயன்படுத்தவேண்டுமென்று தெரியும் – குடித்த பிறகு எப்போதும் மிக மோசமான படங்களையே வரைவான்.
கனவின் துண்டு துணுக்குகள் என்னுடைய கண்களிலிருந்து வெளியேறின. அஸ்கர் அலிக்கு கண்டிப்பாக கனவே இருக்காது என்று நான் நினைக்கத்தொடங்கினேன். என்னால், அவனுடைய கனத்த நீண்ட தலைமுடியுடனான உடலின் அடையாளத்தை தலையணையில் பார்க்க முடிகிறது.
அவனை மிக நெருக்கமாக கவனித்துக்கொண்டிருந்தாலும் கூட பல சமயங்களில் இரண்டு பெக் குடித்தவுடன் அஸ்கர் ஏன் முட்டாள் மாதிரி மாறி விடுகிறான் என்பதை என்னால் ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியவில்லை. முட்டாள் என்று கூடச் சொல்ல முடியாது அவன் உண்மையில் பயங்கர முரட்டுத்தனமாகவும், கீழ்த்தரமானவனாகவும் மாறி விடுவான். இருண்ட தெருக்களின் வழியாகவும், சந்துகளின் வழியாகவும் தன்னுடலை விற்கும் ஏதாவது ஒரு பெண்ணிருக்கும் இடத்தைத் தேடி தட்டுத்தடுமாறி ஓடுவான். அடுத்த நாள் காலை அவளுடைய அழுக்கான படுக்கையிலிருந்து எழுந்து வீட்டுக்குப் போவான். குளித்து விட்டு அவனுடைய ஸ்டுடியோவுக்குப் போய் அங்கே அழகான, நாகரிகமான இளம் பெண்களை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருப்பான். அப்போது முந்தைய இரவின் மிருகத்தனத்தின் சிறு தடயத்தைக் கூட பார்க்க முடியாது. ஆனால் அது குடிபோதையில் ரொம்ப வெளிப்படையாகத் தெரியும்.
என்னை நம்புங்கள். நான் சொல்கிறேன். அவன் குடிக்கும்போது பேய் பிடித்தவனைப் போலாகி விடுகிறான். சுருக்கமான குறுகிய நேரத்துக்கு அவனுடைய மூளை சிந்திக்கவும் உணரவுமான சக்தியை இழந்து விடுகிறது. ஒரு மனிதனால் எவ்வளவு குடிக்கமுடியும்? ஆறு, ஏழு, எட்டு பெக்குகள்? அவனைப் பொறுத்தவரை ஆறேழு தடவை உறிஞ்சினாலே போதும் அது அவனை ஆழமறிய முடியாத மறதியின் கடலுக்குள் தள்ளி விடும். நீங்கள் விஸ்கியை தண்ணீருடனோ, சோடாவுடனோ கலக்கலாம். ஆனால் ஒரு பெண்ணுடன் கலப்பது என்பது என்னுடைய புரிந்து கொள்ளலுக்கு அப்பாற்பட்டது. சில அவர்களுடைய சோகங்களை மறப்பதற்காகக் குடிப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணை சோகம் என்று சொல்லமுடியாது. சிலர் கூச்சல்,குழப்பம் போடவே குடிப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணைக் கூச்சல், குழப்பம் என்று சொல்லமுடியாது.
நேற்றிரவு அஸ்கர் பயங்கரமாகக் குடித்து விட்டு சத்தம்போட்டுக் கொண்டிருந்தான். பெரும்பாலான திருமணங்களே சத்தக்காடு தான் ஆகையால் அஸ்கரின் கூச்சல் பொதுவான இரைச்சலில் அமிழ்ந்து விட்டது. அப்படியில்லாமலிருந்தால் நரகத்தையே விலையாகக் கொடுக்கவேண்டியதிருந்திருக்கும். அந்த மாலைப்பொழுதின் ஒரு நேரத்தில் அவன் கிளாஸ் நிறைய விஸ்கியை ஊற்றியெடுத்து அறைக்கு வெளியே சென்று,
“ நான் உயர்ந்த மனிதன். அதற்கேத்தமாதிரி உயரமான இடத்தில் உட்கார்ந்து நான் குடிப்பேன்..” என்று சொன்னான்.
அவன் ராம்பாக்கில் எங்கேயோ அவனுக்குப் பொருத்தமான உயர்ந்த விபச்சாரியைத் தேடி அலைந்திருப்பான் என்று நான் நினைத்தேன். ஆனால் சிறிது நேரம் கழித்து, கதவு திறந்தது. அவன் அறைக்குள் ஒரு ஏணியைத் தூக்கிக் கொண்டு வந்தான். அதைச் சுவரில் சாய்த்துப் போட்டான். அதில் ஏறி உயரமான ஏணிப்படியில் உட்கார்ந்து கொண்டு விஸ்கியை உறிஞ்சினான். அப்போது அவனுடைய தலை கூரை முகட்டை நெருங்கித் தொட்டுக் கொண்டிருந்தது.
கொஞ்சம் சிரமப்பட்டு நானும் விஸ்வேஸ்வரும் அவனைச் சமாதானப்படுத்தி கீழே இறங்கிவரச் செய்தோம். அத்துடன் அவனிடம் இந்தமாதிரி கோணங்கித்தனமெல்லாம் சுற்றிலும் யாரும் இல்லாதபோது சரியாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். விருந்து மண்டபம் நிறைய விருந்தினர்கள் இருக்கிறார்கள். அதனால் அவன் அமைதியாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும். கடவுளுக்குத் தான் தெரியும் எங்களுடைய கெஞ்சல்கள் அவனுடைய மரமண்டைக்குள் எப்படி ஏறியதென்று. அதன்பிறகு விருந்து முழுவதும் அவன் அமைதியாக ஒரு மூலையில் அவனுடைய பங்கு விஸ்கியை உறிஞ்சிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
நேற்றிரவு நடந்த நிகழ்ச்சிகளை யோசித்துக் கொண்டே நான் எழுந்து வெளியிலிருந்த பால்கனியில் போய் நின்றேன். எனக்கு முன்னால் விடியலுக்கு முன்பிருந்த இருளில் சிவப்பு செங்கற்களால் கட்டபபட்டிருந்த இந்து சபைக்கல்லூரி அமைதியாக நின்று கொண்டிருந்தது. நான் வானத்தைப் பார்த்தேன். நட்சத்திரங்கள் குழம்பியிருந்த வானில் நடுங்கிக் கொண்டிருந்தன.
நான் நீண்ட அந்த வராண்டாவைக் கடந்து மாடிப்படியை அடைந்தேன். யாரோ கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். ஒரு சில நொடிகளுக்குப் பின்னர் அஸ்கர் பார்வையில் பட்டான். என்னைக்கடந்து வேகமாக என்பக்கம் பார்க்காதமாதிரியே போனான். இருட்டாக இருந்தது. நான் மெல்ல படியேறும்போது நினைத்தேன், ஒருவேளை அவன் என்னைப் பார்க்காமலிருந்திருக்கலாம்.
எப்பொழுதெல்லாம் நான் படியேறுகிறோனோ நான் படிகளை எண்ணுவேன். நான் இருபத்திநான்கு என்று வாய்க்குள் முணுமுணுத்தபோது, திடீரென கடைசிப்படியில் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் நடுங்கிப்போனேன். ஏனெனில் கிட்டத்தட்ட நான் ஒரு பெண்ணின் மீது மோதிவிடத் தெரிந்தேன்.
“ மன்னித்துக்கொள்ளுங்கள்.. ஓ.. நீயா? “
அந்தப் பெண் சாரதா. அவள் எங்களுக்குப் பழக்கமான ஹர்னாம் கவுரின் மூத்தமகள். அவள் திருமணமான ஒரு வருடத்திலேயே விதவையாகி விட்டாள். நான் எதுவும் கேட்பதற்கு முன்னால் அவள் அவசர அவசரமாகக் கேட்டாள்,
“ யாரு அந்த ஆள்? இப்ப கீழே இறங்கிப் போனது? “
“ யாரு? “
“ இப்ப படியிறங்கிப் போனானே.. அவனை உங்களுக்குத் தெரியுமா? “
“ ஆமாம். தெரியும்.”
“ யார் அவன்? “
“ அஸ்கர் “
“ அஸ்கர் “ அவள் கிட்டத்தட்ட பற்களைக் கடித்துக் கொண்டு அந்தப் பெயரைச் சொன்னாள். ஒரு கணத்தில் அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும் என்று எனக்குப் புரிந்து விட்டது.
“ அவன் ஏதாச்சும் மரியாதைக்குறைவா நடந்துக்கிட்டானா? “
“ மரியாதைக்குறைவா? “ அவளுடைய உடல் ஆத்திரத்தில் நடுங்கியது.
“ என்னை யாருன்னு நெனைச்சிக்கிட்டிருக்கான் அவன்? “  அவளுடைய சிறிய கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.
“ அவன்.. அவன்.. “ அவளுடைய தொண்டை இறுகி விட்டது. இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு சத்தமாக அழ ஆரம்பித்தாள். முழுமையாகக் கைவிடப்பட்டவளைப் போல.
நான் விசித்திரமான நெருக்கடியில் இருந்தேன். இப்போது யாராவது அவளுடைய அழுகையைக் கேட்டு மேலே வந்து விட்டால் பெரிய கலவரமாகி விடும். சாரதாவுக்கு நான்கு சகோதரர்கள். நான்குபேரும் அந்தக் கட்டிடத்தில் வேறு எங்கேயோ தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் இரண்டுபேர் வன்முறைச்சண்டைகளில் மிகவும் விருப்பமுள்ளவர்கள். நிச்சயமாக அஸ்கர் அலியை எதுவும் காப்பாற்றமுடியாது.
நான் அவளுக்குப் புத்தி சொல்ல ஆரம்பித்தேன்.
“ இங்க பாரு.. நான் சொல்றேன்.. அழுகையை நிறுத்து.. யாராவது கேட்டுருவாங்க..”
அவள் முகத்திலிருந்து கைகளை விலக்கினாள். கடுப்பான குரலில் சத்தமாக,
“ கேட்கட்டும்.. ஆட்கள் கேட்கட்டும்.. அவன் என்னை யாருன்னு நெனச்சுக்கிட்டான்? தேவடியான்னா? நான் நான் ..” என்று கத்தினாள்.
மறுபடியும் அவளுடைய குரல் தொண்டையில் இறுகிக்கொண்டது.
“ இங்கேயே இப்போதே இந்த விஷயத்தை புதைச்சிர்றது நல்லதுன்னு நினைக்கிறேன்..”
“ ஏன்? “
“ அது அவமானத்தைத் தரும்..”
“ யாருக்கு? அவனுக்கா? எனக்கா? “
“ அது அவனுக்குத் தான் அவமானம்.. ஆனாலும் சகதியில கை வைக்கிறது உனக்கும் நல்லதில்ல.... ” என்று சொல்லிக்கொண்டே என்னுடைய கைக்குட்டையை வெளியில் எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
“ இந்தா கண்ணீரைத் தொடைச்சுக்கோ..”
அவள் கைக்குட்டையை வீசி எறிந்து விட்டு அப்படியே தள்ளாடி மேல்படியில் உட்கார்ந்தாள். நான் என்னுடைய கைக்குட்டையை எடுத்து தூசி தட்டி மீண்டும் என்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.
“ சாரதா.. அஸ்கர் என்னுடைய நண்பன்.. அவன் என்ன தப்பு செய்ஞ்சிருந்தாலும் நான் உன்கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன்..”
“ நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கிறீங்க? “
“ ஏன்னா இந்த விஷயம் இங்கேயே முடிஞ்சிரணும்னு விரும்பறேன்.. ஒருவேளை நீ விரும்பினா நான் அவனை இஙே கூட்டிகிட்டு வாரேன்.. உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கச் சொல்றேன்..”
அவள் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“ வேண்டாம்..எனக்கு முன்னால அவனைக் கூட்டிட்டு வரவேண்டாம்.. அவன் என்னை மோசமா புண்படுத்திட்டான்..” மறுபடியும் அவளுடைய தொண்டை கட்டிக்கொண்டது. பளிங்குப் படியில் உட்கார்ந்திருந்த அவளுடைய முழங்கை குளிர்ந்த கல்தரையைத் தொட்டுக்கொண்டிருந்தது. அவளுக்குள் ஆழமாக ஊற்றெடுத்த வேதனையை அவள் அடக்கமுயற்சித்தும் பயனில்லை.
இந்த நேரத்தில் நான் கவலையினால் தன்வசமிழந்திருந்தேன். ஒரு கட்டுடல் கொண்ட இளம்பெண் என் முன்னால் அழுது கொண்டிருக்கிறாள். அவள் அழுகையை என்னால் நிறுத்தமுடியவில்லை. ஒரு தடவை நான் அதே அஸ்கரின் காரை ஓட்டிக்கொண்டு வரும்போது ஒரு நாயை விரட்ட ஹார்னை அடித்தேன். அந்த ஹார்ன் மாட்டிக்கொண்டது. அதன் ஒலி நிறுத்தவேமுடியாத அலறலாக மாறிவிட்டது. மக்கள் என்னை முறைத்துப்பார்த்தனர். நான் ஏலமாட்டதவனாக இருந்தேன்.
கடவுளுக்கு நன்றி என்னையும் சாரதாவையும் தவிர மேலே வேறு யாருமில்லை. ஹார்ன் சம்பவம் நடந்தபோது இருந்ததை விட இப்போது என் நிலைமை எதுவும் செய்ய முடியாமலிருந்தது. எனக்கு முன்னால் ஒரு பெண், மிக மோசமாக காயப்பட்ட பெண் அழுதுகொண்டிருக்கிறாள்.
வேறு யாராவது ஒரு பெண்ணாக இருந்தால் நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டு போயிருப்பேன். ஆனால் சாரதா எனக்குப் பழக்கமானவர்களின் மகள். அவளைக் குழந்தையிலிருந்தே எனக்குத் தெரியும்.
அவள் அருமையான பெண். அவளுடைய மூன்று சகோதரிகளை விட அழகில் கொஞ்சம் குறைவு என்றாலும் பெரிய புத்திசாலி.
அவள் வாசிப்பதிலும் தையல் தைப்பதிலும் கெட்டிக்காரி. போனவருடம், திருமணம் முடிந்து பதினொரு மாதங்களிலேயே அவள் கணவனை இழந்து விட்டாள் என்று கேள்விப்பட்டபோது எங்களுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. கணவனை இழந்த அவளுடைய துயரம் ஆழமானது. ஆனால் இப்போது உயிருள்ள நண்பனால் ஏற்பட்ட வேதனை வேறுவகையானது. அவளுடைய இத்தனை கடுந்துன்பத்துக்குக் காரணமாக இருப்பதை நான் பார்க்கிறேன்.
நான் மீண்டும் அவளை அமைதிப்படுத்த முயன்றேன். நானும் அவளுக்குப் பக்கமாக அந்தப்பளிங்குத் தரையில் உட்கார்ந்தேன்.
“ சாரதா தேவி! இப்படியே அழுதுகொண்டிருப்பதைப் பார்க்கமுடியவில்லை.. கீழே போ! என்ன நடந்திருந்தாலும் அதை மறப்பதற்கு முயற்சி செய்! அந்த ஈனப்பய குடித்திருந்தான்..இல்லைன்னா என்னை நம்பு.. அவன் அவ்வளவு மோசமானவனில்லை.. கடவுளுக்குத் தான் வெளிச்சம்! அவன் குடிச்சான்னா அவனுக்குள்ள என்ன நடக்குதுங்கிறது…”
சாரதாவின் கண்ணீர் நிற்கவில்லை.
அஸ்கர் என்ன செய்திருப்பான் என்று என்னால் யூகிக்கமுடிந்தது. ஆண்களுக்கு ஒரே ஒரு அணுகுமுறை தான் இருக்கிறது. உடலின் மூலம் தான். ஆனால் நான் சாரதாவின் வாயிலிருந்து கேட்க விரும்பினேன். அஸ்கர் அவள் மீது செய்த மிருகத்தனமான குற்றச்செயலின் தன்மையைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆகையால் நான் அநுதாபத்துடன்,
“ உண்மையில் அவன் என்ன மாதிரியான அவமானத்தை உனக்கு செய்ஞ்சான்னு எனக்குத் தெரியாது… ஆனால் என்னால் யூகிக்கமுடிகிறது.. நீ ஏன் மேலே வந்தே? “
சாரதா நடுங்கிய குரலில்,
“ நான் கீழேயுள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தேன்.. இரண்டு பெண்கள் என்னைப் பற்றி பேச ஆரம்பிச்சாங்க..”
அவளுடைய குரல் தொண்டையிலேயே திணறியது.
“ அவங்க உன்னைய பத்தி என்ன சொன்னாங்க? “ என்று நான் கேட்டேன்.
சாரதா அவளுடைய முகத்தை குளிர்ந்த பளிங்குத் திண்டில் சாய்த்து சத்தமாக அழுதாள். நான் அவளுடைய அகன்ற தோள்களில் தட்டினேன்.
“ ஷ்..ஷ்.. சாரதா.. அமைதியா இரு..ஷ்ஷ்ஷ்..”
இரண்டு பெரிய விக்கல்களுக்கிடையில் அவள் மூச்சுத்திணறியது.
“ அவங்க சொன்னாங்க.. ஏன் இந்த அமங்கலியைக் கூப்பிட்டாங்க? ‘ அவள் அமங்கலி என்ற வார்த்தையைச் சொல்லும் போது கண்ணீரில் நனைந்த துப்பட்டாவின் ஒரு முனையை அவளுடைய வாயில் திணித்துக் கொண்டாள்.
“ நான் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அறையை விட்டு வெளியேறி இங்கே மேலே வந்து விட்டேன்.. “
அவளுடைய வார்த்தைகள் என்னை வருத்தின. எப்படி பெண்கள் இவ்வளவு குரூரமாக இருக்கிறார்கள்? அதுவும் வயதான பெண்கள்! ஒருவருடைய காயம் புதிதாக இருந்தாலும் சரி  பழையதாக இருந்தாலும் சரி அதை பிறாண்டிப் பார்த்து இளிக்கிறார்கள். நான் சாரதாவின் கைகளை என் கையில் எடுத்துக்கொண்டேன். ஆழமான இதயபூர்வமான பரிவுடன் மெல்ல அழுத்திக் கொண்டு,
“ எப்பவும் இப்படிப்பட்ட விஷயங்களுக்குக் காது கொடுக்கக்கூடாது..”
அவள் ஒரு குழந்தையைப் போல இரைந்து அழ ஆரம்பித்தாள்.
“ நான் சரியாக அப்படியே தான் எனக்குள் சொல்லிக் கொண்டு மேலே தட்டடியில் வந்து உறங்கி விட்டேன்.. உங்களுடைய நண்பர் வந்து என்னுடைய துப்பட்டாவை இழுத்து, என்னுடைய குர்த்தாவின் பொத்தான்களை அவிழ்த்து….”
அவளுடைய குர்த்தாவின் பொத்தான்கள் இன்னும் அவிழ்ந்து கிடந்தன.
“ முடிஞ்சிருச்சு.. சாரதா.. என்ன நடந்திருந்தாலும் மறந்திரு..” என்னுடைய பையிலிருந்து கைக்குட்டையை உருவி அவளுடைய கண்ணீரைத் துடைத்தேன்.
துப்பட்டாவின் ஒரு முனை அவளுடைய வாயில் இன்னும் இருந்தது. அவள் பற்களினால் இறுகக்கடித்துக் கொண்டிருந்தாள். நான் அவளுடைய வாயிலிருந்து அதை இழுத்தேன். ஈரமான அந்த மூலையை விரல்களில் சுற்றிக் கொண்டு நிராதரவான குரலில்,
“ நான் அமங்கலிங்கிறதுனால தான் உங்க நண்பர் என்னை மானபங்கப்படுத்தினாரில்லையா? யாரு வந்து இந்தப்பொண்ணைக் காப்பாத்தப்போறாங்கன்னு நெனைச்சிருப்பார்..”
“ இல்லை சாரதா இல்லை.. “ நான் அவளுடைய தலையை இழுத்து என்னுடைய தோள்களில் சாய்த்துக் கொண்டேன்.
“ மறந்துரு! அவன் என்ன நெனச்சிருந்தாலும் சரி. என்ன செய்ஞ்சிருந்தாலும் சரி. இப்ப அமைதியா இரு..”
நான் அவளைத் தூங்கவைக்க தாலாட்டு பாடவிரும்பினேன்.
ஒரு நிமிடத்துக்கு முன்னால் தான் அவளுடைய கண்ணீரைத் துடைத்திருந்தேன். இப்போது புதிய கண்ணீர்த்துளிகளுடன் அந்தக் கண்கள் மின்னின. அவள் வாயில் திணித்திருந்த  துப்பட்டாவின் ஒரு முனையை இழுத்து மீண்டும் அவளுடைய கண்ணீரைத் துடைத்தேன். பிறகு மென்மையாக அவளுடைய கண்களில் முத்தமிட்டேன்.
“ போதும் இனி அழுகாதே “
அவள் தலையினால் என் நெஞ்சில் இடித்தாள். நான் அவளுடைய கன்னங்களில் மெல்லத்தட்டிக் கொண்டு,
“ போதும் போதும் போதும் “ என்று சொன்னேன்.
கொஞ்சநேரம் கழித்து நான் கீழே இறங்கி வரும்போது, மார்ச் மாத இறுதியில் காலைப்பொழுதில் வீசும் நறுமணமுள்ள காற்றில் மல்மல் துப்பட்டா அலைபாய சாரதா அந்தப் பளிங்குப் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தாள். அஸ்கரின் துர்நடத்தை முழுவதுமாக மறந்து விட்டது. அவள் ஒரு இறகைப்போல மிதந்தாள். அவளுடைய இதயத்திலிருந்த அதிர்ச்சியையும் வேதனையையும் இன்பமும் கிளர்ச்சியும் இடம் மாற்றிவிட்டன.

Wednesday 6 May 2020

மாடப்புறாவின் கனவு


மாடப்புறாவின் கனவு

உதயசங்கர்

மாடப்புறா விரித்த சிறகுகளை மடக்கியது. அப்படியே அந்த நகரத்தின் மிக உயர்ந்த கட்டிடத்தின் மாடத்தில் வந்து உட்கார்ந்தது.. நேற்று தான் அங்கே குடிவந்தது. அதற்கு முன்பு வரை தூரத்திலிருந்த ஒரு கிராமத்தில் குடியிருந்தது. பாழடைந்த ஒரு கிணற்றில் பொந்துக்குள் கூடு கட்டி மூன்று முட்டைகளிட்டு குஞ்சு பொரித்தது. ஒருநாள் ஆடு மேய்க்கும் பையன் அந்தக் கிணற்றில் இறங்கி கூட்டைக் கலைத்து குஞ்சுகளை எடுத்துக் கொண்டு போய் விட்டான். அதைப் பார்த்து பயந்த மாடப்புறா அங்கிருந்து பறந்தது. பறந்தது. பறந்து கொண்டேயிருந்தது. பல ஊர்களைத் தாண்டி இந்த நகரத்துக்கு வந்து சேர்ந்தது.
நகரம் பாலைவனம் போல இருந்தது. ஒரு மரமோ, செடியோ, புல்லோ, பூண்டோ, எதுவும் இல்லை. எங்கு பார்த்தாலும் ஒரே சத்தம். எப்போதும் பாம் பீம் தாம் தூம் கீச்ச் கிரீச்.. பௌ கௌ.. சௌ.. என்று விதவிதமான சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு சத்தத்துக்கும் திடுக் திடுக்கென்று மாடப்புறாவின் நெஞ்சு துடித்தது. முதலில் புரியவில்லை. இந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது? கொஞ்சநேரம் கழித்துத் தான் தெரிந்தது. சாலையில் புகையைக் கக்கிக்கொண்டே அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த லட்சக்கணக்கான. வண்டிகள் தான் அந்தச் சத்தம் போட்டன. அந்த வண்டிகளின் சத்தமும் கருப்பாய் கக்கிய புகையும் அப்படியே மேகங்களைப் போல எல்லோர் தலை மீதும் மிதந்து கொண்டிருந்தன.
மாடப்புறாவுக்கு வயிறு பசித்தது. ஏதாவது தானியங்கள் கிடைக்குமா என்று பார்ப்பதற்காகக் கீழே இறங்கியது. இறங்குவதற்கு இடமில்லை. அவ்வளவு கூட்டம். எல்லோரும் கூட்டம் கூட்டமாய் ஊரைக் காலி செய்வதைப்போல போய் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது தான் மாடப்புறா கவனித்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் முகம் வாயை மூடி முகமூடி அணிந்திருந்தார்கள். சிடுசிடுவென்றிருந்தார்கள். கீழே புகை அடர்ந்திருந்தது. காற்றே இல்லை. மாடத்தில் பரவாயில்லை. இந்த அளவுக்கு மோசமில்லை. மாடப்புறாவால் மூச்சுகூட விடமுடியவில்லை. தலை சுற்றியது. மேலே பறந்து போய் விடலாம் என்று சிறகுகளை அசைத்தது. இரண்டடிக்கு மேல் பறக்க முடியவில்லை. அப்படியே மயங்கிக்கீழே பொத்தென்று விழுந்தது. செத்துவிடுவோம் என்று நினைத்தது மாடப்புறா. நினைவு கொஞ்சம் கொஞ்சமாக மங்கியது.
அப்போது யாரோ அதைக்கையில் தூக்கினார்கள். அதன் முதுகில் பிஞ்சு விரல்கள் தடவிக்கொடுப்பதை மாடப்புறா உணர்ந்தது. திடீரென சுத்தமான காற்றை மாடப்புறா சுவாசித்தது. அதற்கு உணர்வு வந்தபோது ஒரு குழந்தையின் கையில் முகமூடியுடன் இருந்தது. அந்தக்குழந்தையின் அப்பா,
“ ஆதிரா… பேசாம அதை கீழே போட்டுட்டு வா.. ஆக்சிஜன் சிலிண்டர் ஒரு கிலோ இரண்டாயிரம் ரூபாய்… உனக்கே பத்தாது.. இதில புறா வேறையா? “ என்று சொன்னார். அதைக் கேட்டதும் இன்னும் இறுக்கமாக அந்தப் புறாவை இறுக்கிக் கொண்டது அந்தக்குழந்தை. மாடப்புறா கண்விழித்தபோது வீட்டுக்குள் ஆக்சிஜன் நிரம்பிய அறையில் ஒரு அட்டைப்பெட்டியில் இருந்தது. அந்த அறைக்குள் சில செடிகள் இருந்தன. அவை தான் காற்றைச் சுத்தம் செய்தன.
மாடப்புறா எழுந்து ஒயிலாக நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரா. அவள்,
“ பின்னாடி தோட்டத்தில ஒரு செடி நட்டு வைச்சிருக்கேன்.. அது பெரிசானதும் நீ அதில போய் இருந்துக்கோ..” என்று சொல்லி மாடப்புறாவுக்காக கையை நீட்டினாள். சிறு சிறகடிப்புடன் அந்தக்கையில் உட்கார்ந்தது மாடப்புறா. இப்போது மாடப்புறாவுக்கு நம்பிக்கை வந்தது. அது கண்களை மூடியது.
இப்போது நகரத்தில் மோட்டார் வண்டிகளே இல்லை. எல்லோரும் சைக்கிளில் போனார்கள். நடந்து போனார்கள். சாலையின் இரண்டு பக்கங்களிலும் மரங்கள் அடர்ந்து குடை மாதிரி நிழல் தந்து கொண்டிருந்தன. செடிகளும், கொடிகளும் நிறைந்திருந்தன. எல்லாவிதமான பறவைகளின் சத்தம் மட்டும் தான் கேட்டது. பூச்சிகளின் ரீங்காரம் மெல்லிசையாகக் கேட்டது. சுத்தமான காற்று வீசியது. குழந்தைகள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் சாலைகளில் போய்க் கொண்டிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி ததும்பியது.
ம்ம்க்குர்ர்ர் ம்ம்க்குர்ர் …. மாடப்புறா அங்கேயிருந்த உயர்ந்த கட்டிடத்தின் மாடத்தில் தன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தது. அந்தக் கனவு இனித்தது.