Sunday 24 May 2020

கேப்பைக்கூழும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிட்ட புலி


கேப்பைக்கூழும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிட்ட புலி
உதயசங்கர்
காட்டூர் மக்கள் எல்லோரும் பயந்து கொண்டிருந்தனர். நேற்று இரவு ஒரு புலி காட்டூருக்குள் வந்து ஒரு ஆட்டைக் கொன்று இழுத்துக் கொண்டு போய்விட்டது. இரவில் புலியின் உறுமல் சத்தத்தையும் ஆட்டின் கூப்பாட்டையும் எல்லோரும் கேட்டார்கள். யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. காலையில் தான் கொஞ்சம் தைரியமாக வெளியே வந்தார்கள். ஊர் எல்லையில் குடிசையில் உறங்கிக்கொண்டிருந்த லட்சுமியும் அந்தச் சத்தத்தைக் கேட்டாள். அவளுடைய அப்பா அருகிலிருந்த கரும்புத்தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சப்போயிருந்தார். அவள் முழித்தபோது அம்மா எழுந்து சன்னல்வழியே இருட்டுக்குள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. இந்தப் புலிகளை எல்லாம் கொன்றுவிட்டால் என்ன? எப்படியும் ஒவ்வொருவருடமும் கோடைகாலத்தில் புலியோ, சிறுத்தையோ, யானையோ, இறங்கி ஊருக்குள் வந்து விடுகிறது. ஆடு, மாடு, கோழி, என்று அடித்துத் தின்று விடுகிறது. தப்பித்தவறி மனிதர்கள் தென்பட்டால் அவ்வளவுதான்.
யானையோ வயல்களில் இறங்கி பயிர்களை நாசப்படுத்தி விடுகிறது. பேசாமல் காட்டையே அழித்து எல்லாவிலங்குகளையும் அழித்து விட்டால் மனிதர்கள் நிம்மதியாக இருக்கலாமே என்று நினைத்தாள் லட்சுமி. அவளுக்கு இப்போது அப்பா பத்திரமாய் வீடு திரும்பி வரவேண்டுமே என்று கவலைப்பட்டாள்.
மறுநாள் காலையில் வனவூரில் வனத்துறை அலுவலர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் வந்திறங்கிவிட்டன. புலியைப் பிடிக்கக் கூண்டு கொண்டுவரப்பட்டு தயாரானது. அன்று இரவு புலி வரவில்லை. மறுநாளும் வரவில்லை. அதற்கடுத்த நாளும் வரவில்லை. ஒரு வாரம் கழித்து புலி இறங்கிவந்தது. புலி இறங்கி லட்சுமியின் குடிசை இருந்த வழியாக வந்தது.
அம்மாவும் அப்பாவும் இன்னும் கரும்புத்தோட்டத்திலிருந்து வரவில்லை. லட்சுமி காடாவிளக்கு வெளிச்சத்தில் பாடம் படித்துக் கொண்டிருந்தாள். வெளியே பௌர்ணமி நிலவின் வெளிச்சம் பளீரென்று வீசியது. வெள்ளிமலையிலிருந்து காற்று விர்விர்ரென வீசியது. லட்சுமி சன்னல் வழியே வந்த காற்றுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு படித்துக் கொண்டிருந்தாள். அப்போது சன்னலில் ஏதோ நிழல் தெரிந்தது. திரும்பிப்பார்த்தாள். எதுவும் தெரியவில்லை. சில நிமிடம் கழித்து வாசல் கதவை யாரோ பிறாண்டுவது போலக் கேட்டது. லட்சுமி பயத்துடன் வாசல் கதவின் அருகில் போய் அதிலிருந்த ஓட்டையின்வழியே பார்த்தாள். ஒரு பூனை உட்கார்ந்து கதவையே பார்த்துக்கொண்டிருந்தது.
லட்சுமி கதவைத் திறந்தாள். அதற்குள் பூனை மாயமாய் மறைந்து விட்டது. வெளியே வந்து நின்று சுற்றிச் சுற்றிபார்த்தாள். பின்னர் வெள்ளிமலையைப் பார்த்தாள். மலையின் உச்சியில் மட்டுமே காடு இருந்தது. மற்ற இடங்கள் எல்லாம் வயல்களாகி விட்டன. பல இடங்களில் விளக்குகளின் வெளிச்சம் புள்ளிகளாய் தெரிந்தன. புலியின் உறுமல் சத்தம் கேட்கிறதா என்று கூர்மையாகக் கேட்டாள். எதுவும் இல்லை. மறுபடியும் வீட்டுக்குள் வந்து கதவைச் சாத்தி விட்டு விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்து படிக்கத்தொடங்கினாள்.
திடிரென நிமிர்ந்து பார்த்த லட்சுமி நடுநடுங்கி விட்டாள். எதிரே புலி பின்னங்கால்களில் உட்கார்ந்திருந்தது. லட்சுமியின் வாயிலிருந்து அலறல் வெளிவரும் முன்பாக,
“ பயப்படாதே.. குழந்தை.. எனக்கு ரொம்பப்பசிக்குது.. சாப்பிட ஏதாச்சும் கொடே.ன்..”
என்று பரிதாபமாக ஒரு குழந்தையைப் போல புலி கேட்டது. புலி பேசுமா? என்ற ஆச்சரியம் லட்சுமிக்கு வந்தது. ஆனால் பசியால் வாடிய அதன் உடலும், மூடி மூடித் திறந்த பஞ்சடைந்த அதன் கண்களும் அவளுக்குள் பரிதாபத்தை உண்டுபண்ணின. பயம் போய் விட்டது.
“ நீ கறி தானே சாப்பிடுவே? “
“ ஆமா அது ஒரு காலம்..ஆனால் இப்போ எது கிடைச்சாலும் சாப்பிடுவேன்.. உங்கவீட்டுல  இன்னிக்கு மத்தியானம் கருவாட்டுக்குழம்பு தானே..”
“ ஆமா எப்படித் தெரியும் உனக்கு? “
“ நான் இங்கேயே தான் சுத்திக்கிட்டிருக்கேன். எனக்குப் பசி கண்ணை அடைக்குது ப்ளீஸ் எதாச்சும் சாப்பிடக்கொடேன்...”
லட்சுமி உடனே எழுந்து போய் கேப்பைகூழை உருட்டி அதில் கருவாட்டுக்குழம்பை ஊற்றி அதில் நாலு துண்டு நெத்திலியைப் போட்டுக் கொண்டு வந்தாள். புலியின் முன்னால் தட்டை வைப்பதற்கு முன்னால் அது நாக்கை நீட்டி ஒரே விழுங்கு விழுங்கி விட்டது. பிறகு மறுபடியும்
“ ப்ளீஸ்..” என்றது. லட்சுமி பானையிலிருந்த அவ்வளவு கேப்பைக்கூழையும் கருவாட்டுக்குழம்பையும் ஊற்றிக் கொண்டு வந்தாள். புலி நாக்கைச் சப்புக்கொட்டி சப்புக்கொட்டி சாப்பிட்டது. சாப்பிட்டபிறகு சின்னதாக ஒரு ஏப்பம் விட்டது. லட்சுமியைப் பார்த்து “ ரொம்ப தேங்க்ஸ்..” என்றது.
” நீ ஏன் காட்டை விட்டு ஓடி கீழே வாரே? “
“ சாப்பாட்டுக்காகத்தான் குழந்தை.. நான் நல்லாச்சாப்பிட்டு ஒரு மாதம் ஆகப்போகுது..”
“ காட்டிலே சாப்பாடு இல்லையா? “
“ காடே இல்லையே..அப்புறம் ஏது சாப்பாடு..? “
” ஏன் அப்படி? “
” சொல்றேன் கேளு..”
வெள்ளிமலை முழுதும் ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது. அந்தக்காட்டில் புலி, சிறுத்தை, யானை, புள்ளிமான், மிளா,, முயல், காட்டெலி, காட்டு அணில், சிங்கவால் குரங்குகள், காட்டுப்பன்றி போன்ற மிருகங்களும், காட்டுப்புறா, பருந்து, வல்லூறு, மயில், கொம்பு ஆந்தை, சிலம்பன், சிட்டுக்குருவி, தேன்சிட்டு, குயில், கொண்டலாத்தி, பனங்காடை, மரங்கொத்தி போன்ற பறவைகளும் நல்லபாம்பு, ராஜநாகம், சாரைப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மரமேறிப்பாம்பு, பச்சைப்பாம்பு, போன்ற பாம்புவகைகளும், எல்லாவகையான பூச்சிகளும், வண்ணத்துப்பூச்சிகளும், தேனீக்களும், குளவிகளும் எறும்புகளும், எல்லாம் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அருவிகளும் நீரோடைகளும் ஆறுகளும் ஓடிக்கொண்டிருந்தன. கடுங்கோடையிலும் அந்தக்காட்டில் தண்ணீருக்குப் பஞ்சம் வந்ததில்லை. இயற்கையின் விதிப்படி எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம்.
அப்போது மனிதர்கள் வந்தார்கள். காட்டை அழித்தார்கள். காட்டை அழிக்கும்போது மரங்கள், செடிகள், கொடிகள், புல்தரைகள், பூச்சிகள், புழுக்கள், வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், எல்லாம் அழிந்தன. பச்சைத்தாவரங்கள் அழியும்போது அதைச் சாப்பிட்டு வாழ்ந்த மான்கள், மிளாக்கள், முயல்கள், காட்டுப்பன்றி போன்றவையும் அழிந்தன. மிச்சம் மீதி இருந்ததையும் மனிதர்கள் வேட்டையாடிக் கொன்றார்கள். இப்போது அந்த மிருகங்களைச் சாப்பிடும் எங்களைப் போன்ற மாமிசப்பட்சிணிகளுக்கு உணவில்லை. நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறோம்.. கடைசி முயற்சியாகத்தான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கிராமங்களுக்கு வருகிறோம்.. காடுகள் இல்லையென்றால் மனிதர்களும் ரொம்ப நாட்களுக்கு உயிர் வாழமுடியாது….
லட்சுமிக்கு புலியின் கதையைக் கேட்டதும் வருத்தமாக இருந்தது. அவள் காட்டை அழிக்கவேண்டும் என்று நினைத்தாளே. ச்சே.. இயற்கையின் தொடர் சங்கிலியை மனிதர்கள் உணரவில்லையே. அவளுடைய கண்ணில் இப்போது நீர் துளிர்த்தது.
“ சாரிப்பா..”
புலி எழுந்து வாலை ஆட்டிக்கொண்டே, “ எதுக்கு..” எனறது. லட்சுமி பதில் சொல்லுவதற்கு முன்னால் கதவைத் தட்டுகிற சத்தம் கேட்டது. உடனே லட்சுமி,
“ போய் அந்தப்பெட்டிக்குப் பின்னால் ஒளிஞ்சிக்கோ..” என்று சொல்லிவிட்டு கதவைத் திறக்கப்போனாள். அம்மாவும் அப்பாவும் உள்ளே வந்தார்கள். அப்பா லட்சுமியிடம்,
“ லட்சுமிக்கண்ணு.. அப்பாவுக்கு நல்லபசி.. அந்தக்கேப்பைக்கூழையும் கருவாட்டுக்குழம்பையும் கொண்டுவா.. ஒரு பிடி பிடிப்போம்..” என்றார். லட்சுமி அப்பாவைப் பார்த்து திருதிருவென முழித்தபடி,
“ அப்பா.. கேப்பைக்கூழையும் கருவாட்டுக்குழம்பையும் பூனை வந்து சாப்பிட்டிருச்சிருச்சுப்பா..” என்றாள். அப்பா கோபத்துடன்,
“ எங்கே அந்தப்பூனை? “ என்று எழுந்தார். லட்சுமி பயத்துடன் பெட்டிக்குப் பின்னால் பார்த்தாள். அங்கே எதுவுமில்லை. முகங்கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்த அம்மா
“ அது எப்பயோ போயிருக்கும்.. பத்து நிமிசம் பொறு.. நான் கூழுகாய்ச்சி குழம்பு வச்சித்தாரேன்..” என்று சொல்லிவிட்டு அடுக்களை இருந்த மூலைக்குப் போனாள்.
லட்சுமி குழப்பத்துடன் மறுபடியும் படிக்க உட்கார்ந்தாள். அவள் கண்ணில் புலியின் பசித்த முகம் தெரிந்தது.


No comments:

Post a Comment